உளத்தூய்மை அதன் யதார்த்தம், மகிமை, பலாபலன்கள், அதை தேடும் வழிகள்
الإخلاصحقيقته، أهميته، ثمراته، وسائل اكتسابه
உளத்தூய்மை
அதன் யதார்த்தம், மகிமை, பலாபலன்கள், அதை தேடும் வழிகள்
தயாரிப்பு
மதாருல் வதன் அச்சகத்தின் கல்விப் பிரிவு
தமிழாக்கம்
மௌலவி: அப்துல் சத்தார் மதனி M.A in (Edu) Sudan.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்
புகழ் அனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன, அவன் தேவை களற்றவன் அவன் (யாரையும்) பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவு மில்லை, அவனுக்கு நிகராக யாருமில்லை, (ஸலாத் எனும்) கருணையும், (ஸலாம் எனும்) ஈடேற்றமும் ஆதமுடைய மக்களின் தலைவரும், எங்கள் நபியுமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களுடைய கிளையார்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு நல்லரங்கள் புரியுமாறு கட்டளையிட்டுள்ள தோடு அதற்கு (பிரதீயீடாக) சுவனத்தை வழங்குவதாகவும் வாக்களித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا (الكهف 110)
“தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்கஹ்ப் 110.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعملُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا (الكهف 107)
“நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன.” அல்கஹ்ப் 107.
அவ்வாராயின் அல்லாஹ்வையும், மறுமை யில் சுவனத்தையும் நோக்கமாக கொண்டு செய்யப் படும் நல்லமல்கள் யாவை?
அது சுய விருப்பத்தின் அடிப்படையில் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் வணக்கமா?
அல்லது அது, மனிதர்களின் புகழையும் திருப்தியையும் வேண்டி செய்யப்படும் வணக்கமா?
அல்லது அது, அல்லாஹ் மனிதன் ஆகிய இரு தரப்பினரின் திருப்பதியையும் வேண்டி செய்யப்படும் வணக்கமா?
அல்லது அது, (நிய்யத்) மனதால் எண்ணாமல் அல்லாஹ்வை வணங்கப்படும் ஒரு வணக்கமா?
மேலே கூறப்பட்ட அனைத்து வழிபாட்டு முறைகளும் அல்லாஹ் எங்களுக்கு திருமறை யின் வாயிலாக கற்றுத் தந்த நல்லரங்களுக்கு அப்பாற்பட்டவை. காரணம் (நாம் செய்யும்) அனைத்து நல்லறங்களிலும் இரண்டு நிபந்தனைகள் கட்டாயம் பேணப் பட வேண்டும். அவைகளாவன;
1- “அல்லாஹ்வுக்கு” என்ற தூய எண்ணம்.
2- நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறை பின்பற்றப்படல்.
மனிதன் புரியும் நல்லரங்களை ஒரு பறவைக் கும், இங்கு கூறப்பட்ட நிபந்தனைகளை அதன் இரு இறக்கைகளுக்கும் ஒப்பிடலாம். இரக்கை கள் இரண்டையும் அல்லது அதில் ஒன்றை இழந்த பறவையால் பறக்க முடியாது.
அல்லாஹ் கூறுகின்றான்;
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ (الملك 2)
“உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான்.” அல் முல்க் 2.
(இத்திரு வசனத்துக்கு விளக்கமளித்த) புலைல் இப்னு இயால் அவர்கள், “அழகிய செயல்” என்பது தூய எண்ணத்துடன் மிகச் சரியான முறையில் செய்யப்பட்ட அமல்களையே குறிக்கும் என்றார்கள், இதைக் கேட்ட சபையோர்கள் அபுல் புலல் அவர்களே மிகச்சரியான முறையில் செய்யப்பட்ட அமல்கள் என்றால் என்ன? என கேட்டார் கள். அதற்கவர்கள் உண்மையில், மனத் தூய்மையுடன் செய்யப்பட்ட அமல் மிகச் சரியானதாக இருக்கா விட்டாலோ அல்லது மிகச் சரியாக செய்யப்பட்ட செயலில் மனத் தூய்மை இருக்கவில்லையோ அவ்விரண்டை யும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான், “உளத்தூய்மை என்பது; அல்லாஹ்வுக்காக செய்யப்பட்ட செயலைக் குறிக்கும். மிகச் சரியனது என்பது; நபி வழியில் செய்யப் பட்ட செயலைக் குறிக்கும்.” எனக் கூறிவிட்டு பின் வரும் திருவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا (الكهف 110)
“தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக!” அல் கஹ்ப் 110.
உளத்தூய்மை, அதன் முக்கியத்துவம், சிறப்பு கள், பலாபலன்கள், அதை தேடும் வழிகள் போன்றவைகளை முதலில் நாம் இங்கு பார்ப்போம். பின்னர் மனத்தூய்மையின் எதிர்பக்கமான முகஸ்துதி குறித்தும், நபி வழியை பின்பற்றுவதின் முக்கியத்துவம் குறித்தும் பார்ப்போம்.
உளத்தூய்மை என்றால் என்ன?
உளத்தூய்மை என்பது; “அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கிறேன்” என்ற தூய எண்ணத்துடன் அவனை வழிபடுவதாகும். அதாவது அல்லாஹ்வை தவிர, அவனுடைய படைப்புகளுக்காகவோ, அல்லது அவர் களின் புகழ், நேசம் போன்றவைகளை எதிர்பார்த்து பாசாங்கு செய்து அமல் செய்யாது அல்லாஹ்வுடைய நெருக்கத்தை மட்டுமே (மனதில்) எண்ணம் கொண்டு அமல் செய்வதாகும்.
சுருங்கக் கூறின், (மனிதன் செய்யும்) அமல் களை படைப்புகளுடைய அவதானத்தி லிருந்து தூய்மைப் படுத்துதே உளத்தூய்மை யாகும்.
வேறு சில அறிஞர்கள் கூறினார்கள்; உளத்தூய்மை என்பது படைப்புகளின் அவதானத்தை மறந்து, அல்லாஹ்வை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் எண்ணத்துடன் அமல் புரிவதாகும். ஏனெனில் பாசாங்கு செய்பவன் அல்லாஹ் வின் பார்வையிலிருந்து தூரமாகி விடுகிறான்.
அபூ உஸ்மான் ஸஈத் இப்ன் இஸ்மாஈல் என்பவர் கூறினார்; உளத்தூய்மை என்பது உன் இதயமும், செயல்களும், அறிவும் அல்லாஹ்வின் கோபத்தைப் பயந்து அவனுடைய திருப்தியை மட்டுமே விரும்பு வதும், உன்னுடைய இதயத்திலிருந்து முகஸ்துதி நீங்கி அறிவின் யதார்த்தத்தால் நீ அல்லாஹ்வை பார்த்துக் கொண்டிருப்பது போன்றும், அவனும் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்து டனும் அவனை வணங்குவதாகும். அவ்வாறு அவனை நீ வணங்கும் போது உன் இதயத்திலிந்த தீவிரமும் ஆணவமும் அழிந்து உன் செயல்களில் நளினத்தை கடைபிடிக்க அருள் புரிந்த இறைவனை நினைவு கூர்ந்து பார்.
இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் உளத்தூய்மை பற்றி குறிப்பிடுகையில்; ஒரு வணக்கசாலி (தன் அமல்களை) மக்களுக்கு காட்டுதல், அல்லது அவர்களின் புகழ், கெளரவம், சொத்துக்கள், சேவை, நேசம், தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளல், போன்ற இதயத்திலிருக்கும் சுய விருப்பங் களோடு கலந்து விட மாட்டான் என்றார்கள். அதாவது தன் செயல்கள் முழுவதையும் அல்லாஹ்வுக்காவே செய்வான்.
உளத்தூய்மை குறித்த அல் குர்ஆன் வசனங்கள்
1- அல்லாஹ் உளத் தூய்மையை வலியுறுத்தி (அல்குர்ஆனின் பல இடங்களில்) கட்டளை யிட்டுள்ளான், அல்லாஹ் கூறுகின்றான்;
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ (البينة 5)
“வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்ற தாக்கி வணங்குமாறே அன்றி அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை.” அல் பய்யினா 5.
வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரமே கலப்பற்றதாக்(கி வணங்)குவதை அல்லாஹ் இங்கு முக்கிய கடமையாக்கியுள்ளான்.
2- உளத் தூய்மை, அல்குர்ஆனை அருளிய சத்தியத்துடன் தொடர்புபட்டது, உளத் தூய்மையான வணக்கங்களை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ (الزمر 2،3)
(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உம்மிடம் நாம் அருளி யுள்ளோம். எனவே வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக! கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அல் ஜுமுர் 2,3.
3- அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள உளத் தூய்மை குறித்த கட்டளை, உலக வாழ்வின் சகல கட்டங்களையும் தாண்டி, மரணத் தருவாயில் கூட கடை பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ (الأنعام 162،163)
“எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் வுக்கே உரியன, அவனுக்கு நிகரானவன் இல்லை இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன் முஸ்லிம்களில் நான் முதலாமவன்”என்றும் கூறுவீராக! அல் அன்ஆம் 162,163
4- உளத்தூய்மையுடன் வணக்கம் புரிவதே எல்லா அமல்களுக்கும் அடிப்படை, ஆகவே அதன் பக்கம் பிறரை அழைப்பதும், அதன் எதிராளிகளிடமிருந்து விழகியிருப்பதும் அவசியமாகும். அதில் குறைவு செய்வதற்கும் பேரம் பேசுவதற்கும் இடமில்லை. அல்லாஹ் கூறுகின்றான்;
قُلِ اللَّهَ أَعْبُدُ مُخْلِصًا لَّهُ دِينِي * فَاعْبُدُوا مَا شِئْتُم مِّن دُونِهِ ۗ (الزمر 14،15)
உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன். அவனையன்றி நீங்கள் நாடியதை வணங்குங்கள்” எனக் கூறுவீராக! (அஸ்ஸுமுர் 14,15)
5- உளத்தூய்மையில் தவறிழைத்த இறை மறுப்பாளர்களை விட்டும் விழகி யிருக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதும் (அல் குர்ஆனில்) விளங்க முடிகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்;
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ َ* لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ َ* وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ َ* وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ َ* وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ َ* لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ َ (الكافرون 1-6)
(ஏக இறைவனை) மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோ ரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்கு பவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” எனக்கூறுவீராக! அல்காபிரூன் 1-6.
6- உளத்தூய்மை யுடையவரின் வணக்கம் “அழகானது” என அல்லாஹ் விபரிக்கிறான்.
وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۗ وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا (النساء 125)
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின் பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத் திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். அன்னிஸா 125
இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறினார்கள்; “தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்தல்” என்பது உளத் தூய்மையுடன் அல்லாஹ்வை வணங்குவதையே குரிக்கும். “நல்லறம் செய்தல்” என்பது நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை பின்பற்று வதைக் குறிக்கும்.
7- உளத்தூய்மையில் குறைவு செய்பவர்களுக்கு வழங்கப் படும் கூலி குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்;
وَقَدِمْنَا إِلَىٰ مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا (الفرقان 23)
அவர்கள் செய்து வந்த செயல்களைக் கவனித்து அவற்றைப் பரப்பப் பட்ட புழுதியாக ஆக்கு வோம். அல் புர்கான் 23.
இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறினார்கள்; நபி வழிக்கு மாற்றமாக செய்யப்பட்ட செயல் களையும், உளத் தூய்மை இன்றி செய்யப்பட்ட செயல்களையுமே இவ்வசனம் குறிக்கிறது.
8- உளத்தூய்மை இறையச்சத்தை ஏற்ப டுத்துவதுடன், நிறப்பமான கூலியையும் ஈட்டித்தரும் ஒரு வணக்கமாகும் என அல்லாஹ் எமக்கு வாக்களித்துள்ளான்.
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى َ* الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ َ* وما لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ* َ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ َ* وَلَسَوْفَ يَرْضَىٰ * (الليل 17-21)
இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப் படுவார்.
அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மை யடைந்தவர்.
மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது. அல் லைல் 17-21.
உளத்தூய்மை குறித்த நபி மொழிகள்
உளத்தூய்மையின் மகத்துவத்தையும், அதன் அவசியத்தையும், எடுத்துரைக்கும் நபி மொழிகள் நிறையவே வந்துள்ளன.
1- செயல்கள் அனைத்தும் நோக்கங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு வரும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக் கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோகமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர் இப்னு கத்தாப் (ரலி) மேடையிலிருந்து அறிவித் தார்கள். (நூற்கள்; புகாரி முஸ்லிம்)
இந்நபிமொழிக்கு இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கையில் உண்மையில் மனிதர்க ளுடைய எண்ணங்களைப் பொருத்தே (அல்லாஹ்வினால்) அவர்களுடைய செயல்கள் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. அல்லது “செயல்கள் அனைத்தும் எண்ணங் களைப் பொறுத்தே” என்பது நட்செயல்கள், தீய செயல்கள், ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல்கள், மறுக்கப்பட்ட செயல்கள், கூலி வழங்கப் படும் செயல்கள், கூலி வழங்கப் படாத செயல்கள் என வகைப் படுத்தப் படுவது (அதைச் செய்தவர் களுடைய) எண்ணங்களைப் பொருத்தாகும். சுறுங்கக் கூறின் நட்செயலுக்கு நல்ல எண்ணமும் தீய செயலுக்கு தீய எண்ணமும் அடிப்படையாக அமைகின்றன எனக் கூறினார்கள்.
2- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “விடைபெறும்” ஹஜ்ஜின் போது (நான் மக்காவிலிருந்த சமயம் எனக்கு ஏற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்கை எதிர் நோக்கியிருந்தேன். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! செல்வந்தனாகிய எனக்கு, என் ஒரே மகளைத் தவிர வேறு வாரிசு எவரும் இல்லாத நிலையில், நீங்கள் காணும் நோய் என்னைப் பீடித்துள்ளது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பாகங்கைளத் தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்றார்கள். நான், “அவ்வாறாயின், என் சொத்தில் பாதியைத் தர்மம் செய்யட்டுமா?” என்று கேட்டேன். அதற்கும் “வேண்டாம்” என்று சொன்ன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூன்றில் ஒரு பாகம் (வேண்டுமானால் தர்மம் செய்யலாம்). மூன்றில் ஒரு பாகம் கூட அதிகம்தான். நீங்கள் உங்களுடைய வாரிசுகைள மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச் செல்வைத விட அவர்களைத் தன்னிறைவு டையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை விரும்பிச் செய்கின்ற தர்மம் எதுவாயினும் அதற்குப் பதிலாக உங்களுக்குப் பிரதி பலன் வழங்கப்படும். எந்த அளவுக் கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாய்க்குள் இடுகின்ற ஒரு கவளம் உணவும் கூட (உங்களுக்குப் பிரதிபலன் அளிக்கப் படும்)” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்கள் அனைவரும் மதீனாவுக்குச் சென்று விடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) என் தோழர்கைள விட்டுப் பின் தங்கியவனாக ஆகி விடுவேனா? “என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் இங்கு இருந்த போதிலும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உங்கள் தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் எனக் கூறினார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.
மேற் கூறப்பட்ட நபிமொழியில், ஒருவரின் “செயல்களுக்கு நன்மை கிடைக்கவும் அவருடைய அந்தஸ்துகள் அதிகரிக்கவும் அவர் “அல்லாஹ்வுக்காக செய்கிறேன்” எனும் உளத்தூய்மையுடன் அமல் செய்வது நிபந்தனையிட்டுள்ளது.
3- அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்; ஒரு முஸ்லிமிடம் மூன்று அம்சங்கள் இருக்கும் வரை அவருடைய இதயத்தில் குரோதம், குடிகொள்ளது. “அல்லாஹ்வுக்காக செய்கிறேன்” எனும் உளத்தூய்மையுடன் அமல் செய்தல், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்தல், முஸ்லிம்களுடைய கூட்டத்து டன் சேர்ந்திருத்தல். ஆதாரம் அஹ்மத்.
இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; மேற்கூறப்பட்ட மூன்று அம்சங்கள் உடையவர்களுடைய இதயத் தில் குரோதம் குடிகொள்ளாது. காரணம் இம்மூன்று அம்சங்களும் இதயத்திலிருந்து குரோதத்தை அகற்றி விடும். இவற்றின் எதிர்மரை அம்சங்களால் சோதிக்கப் பட்டவர் இம்மூன்று அம்சங்களை எடுத்து நடப்பதன் மூலம் அவைகளை நீக்கிக் கொள்வார்.
4- அபூ மூஸா (ரலி) அறிவித்தார்கள்; நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே, ஒருவர் இனமாச் சரியத்துக்காகப் போராடுகிறார், மற்றொருவர் வீரத்தை வெளிக் காட்டப் போரிடுகிறார், இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார். இவர்களில் இறை வழியில் போராடு கிறவர் யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கலிமாவே மேலோங்கிய தாக இருக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகிறவரே இறைவழியில் போராடுபவராவார் என்று பதில் அளித்தார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.
ஒருவருடைய போராட்டத்துக்கான தூண்டு தல் உளத்தூய்மையாக இருந்தால் மட்டுமே அது ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை மேற்கூறிய நபிமொழியிலிருந்து விளங்கிக் கொண்டோம்,
5- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (உங்களுக்கு முன் வாழ்ந்த வர்களில்) மூன்று பேர் நடந்து சென்று கொண்டிந்த போது (திடீரென) மழை பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்கள் மலைக் குகையொன்றில் ஓதுங்கி னார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை குகை வாசலை அடைத்துக் கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) அப்போது தமக்குள், “நாம் (வேறு ஒருவருடைய திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக் காக (என்று தூய்மையான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன் வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் நம்மை விட்டு இதை அகற்றி விடக் கூடும்” என்று பேசிக் கொண்டனர்.
எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்.இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருவரும் மனைவியும் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்ப தற்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டி ருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து, என் குழந்தை களுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். ஒரு நாள் இலை தழைககைளத் தேடியபடி வெகு தூரம் சென்று விட்டேன். அதனால் அந்திப் பொழுதி லேயே (வீட்டுக்கு) வர முடிந்தது. அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும் போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பி விட மனமில் லாமல் அவர்கள் இருவருடைய தலை மாட்டில் நின்றுக் கொண்டேன். அவர்கள் இருவருக்கு முன் குழந்தை களுக்கு ஊட்டுவதையும் நான் விரும்ப வில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பால் கேட்டுக்) கூச்சலிட்டுக் கொண்டிந்த னர். இதே நிலையில் நானும் அவர்களும் இருந்து கொண்டிருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச் செயலை உனது உவப்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்துவாயாக. அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம். அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் பாறையைச் சற்றே நகர்த்திக் கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.
இரண்டாமவர் பின்வருமாறு வேண்டி னார்: இறைவா! எனக்கு என் தந்தை யின் சேகாதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டு வந்து கொடுத்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறுத்து விட்டாள். நான் கடுமையாக உழைத்து, (அந்த) நூறு பொற்காசுகைளச் சேகரித் தேன். அவற்றை எடுத்துக் கொண்டு சென்று அவைளச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்த போது அவள், “அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள். முத்திரையை அதற்குரிய (சட்டபூர்வ) உரிமை (யான திருமணம்) இன்றித் திறவாதே” என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டு விட்டு எழுந்து விட்டேன். (இறைவா!) இதை உனது உவப்பைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக இன்னும் சற்று நகர்த்து வாயாக! அவ்வாறே அவர்க ளுக்கு (அல்லாஹ் இன்னும்) சற்றே நகர்த்தினான்.
மற்றெருவர் (பின்வருமாறு) வேண்டி னார்: இறைவா! நான் ஒரு ‘ஃபரக்’ அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவைர பணியமர்த்தினேன். அவர் தமது வேலையை முடித்து விட்டு. “என் உரிமையை (கூலியை)க் கொடு” என்று கேட்டார். நான் ஒரு ‘ஃபரக்’ அளவு நெல்லை அவர் முன் வைத்த போது அதை அவர் (பெற்றுக் கொள்ளாமல்) புறக்கணித்து(ச் சென்று) விட்டார். பின்னர் நான் அதை நிலத்தில் விதைத்துத் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகைளயும் அவற்றுக்கான இடையர் களையும் நான் சேகரித்து விட்டேன். பின்னர் (ஒரு நாள்) அவர் என்னிடம் வந்து, “அல்லாஹ்வை அஞ்சு! எனது உரிமையில் எனக்கு அநீதி இழைக்காதே” என்று கூறினார். அதற்கு நான், “அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர் களிடத்திலும் நீ சென்று, அவற்றை எடுத்துக்கொள். (அவை உனக்கே உரியவை)” என்று சொன்னேன். அதற்கு அந்த மனிதர், “அல்லாஹ்வை அஞ்சு. என்னைப் பரிகாசம் செய்யாதே” என்றார். நான், “உன்னை நான் பரிகாசம் செய்ய வில்லை. இந்த மாடுகளையும் இடையர் களையும் நீயே எடுத்துக் கொள்” என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்துக் கொண்டு சென்றார். (இறைவா!) நான் இந்த (நற்)செயலை உன் உவப்பைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதி யிருந்தால் மீதியுள்ள அடைப்பையும் நீ அகற்று வாயாக. அவ்வாறே மீதியிருந்த அடைப்பையும் அல்லாஹ் அகற்றி (அவர்களை வெளியேற்றி) விட்டான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.
உளத்தூய்மை குறித்த சில படிப்பினைகள் இந்த நபி மொழியில் வந்துள்ளன. அவைகளாவன;
1- உளத் தூய்மை மூலம் அல்லாஹ் விடத்தில் உதவி தேடலாம்.
2- உளத் தூய்மை இக்கட்டான நிலைகளிலிருந்து தப்பிக்க வழி வகுக்கும்.
3- உளத்தூய்மை பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு காரண மாகும்.
4- எல்லா செயல்களிலும் உளத்தூய்மை நிபந்தனையிடப்படும்.
உன்னுடைய ஆத்மாவுடன் போராடு
எத்தகைய போராட்டமும் இன்றி இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளப்படும் ஒரு விடயமாகவே உளத்தூய்மையை சிலர் பார்க்கிறார்கள். ஆனால் உண்மை அவ்வாறு அல்ல, அதைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர் செயல்களின் ஆரம்பத்திலும், இடையிலும், ஏன் இறுதியிலும் கூட போராடக் கடமைப் பட்டுள்ளார்.
அமல்கள் செய்யு முன்னால்; அல்லாஹ்வுக் காகவே செய்கிறேன் என்ற நோக்கத்துடன் அமல் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
அமல்களுக்கு இடையில்; அமல்களுக்கு இடையில் உளத்தூய்மையை தொடர்ந்தும் பேணிக்கொள்ள வேண்டும், ஏனெனில் ஒரு அடியான் உளத்தூய்மையுடன் வணக்கத்தை ஆரம்பித்தாலும் அதன் இடையில் “மனிதர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” எனும் ஊசலாட்டத்தை சைத்தான் அவனு டைய மனதில் விதைப்பான். அப்போது சைத்தானிட மிருந்து பாதுகாப்புத் தேடியவாறு, ஆத்மா வுடன் போராடி குறித்த அமலை தொடர்வான்.
அமல்களின் இறுதியில்; தான் செய்த அமல்களில் ஏதும் குறை நிகழ்ந்திருக்குமோ? என்ற எண்ணத்துடன் அவைகளை போற்றிப் பெருமை கொள்ளாது இருப்பது அவசியமாகும்.
சில முன்னோர்கள் கூறினார்கள்; ஒரு அடியான் தனது செயல்கள் அனைத்தும் சரியானதே என திருப்தி கொள்வது மிக ஆபத்தானது. தன்னிடமுள்ள ஒரு அமலை யாவது திருப்தியோடு நோக்கியவன் நாசம டைந்து விட்டான், எப்பொழுதும் தன் அமல்களை சந்தேகத்துடன் நோக்காதவன் ஏமாற்றமடைந்த மனிதனாவான்.
ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் என்பவரிடம் “(வணக்கசாலி) ஒருவருக்கு மிகவும் ஆபத்தான விடயம் எது?” என வினவப் பட்டது அதற்கு “உளத் தூய்மை” என்றே பதிலுரைத்தார்கள், காரணம் உளத்தூய்மை (எனும் அதிர்ஷ்டம்) ஆத்மாவுக்கு எப்பொழுதும் கிட்டுவதில்லை என்றார்கள்.
துன்னூன் அல் பஸரி கூறினார்; உளத் தூய்மையின் அடையாளங்கள் மூன்றாகும், அவையாவன;
1. மக்கள் புகழ்வதும் இகழ்வதும் நடு நிலையாக இருத்தல்;
2.மக்கள் நோக்குவதை மறந்து அமல் செய்தல்.
3.மறுமையின் கூலியை மறந்து அமல் செய்தல்.
அபூ யஃகூப் அஸ்ஸூஸி கூறினார்கள்; உளத் தூய்மையுடன் அடியார்கள் கலிமாவை சாட்சியம் கூறியது முதல், உளத்தூய்மை யுடனே வணக்கம் புரியுமாறு அவர்கள் கட்டாயப் படுத்தப் பட்டார்கள்.
யூஸுப் இப்னுல் ஹுஸைன் கூறினார்; உளத்தூய்மையே உலகில் மிகவும் சுமையா னது. என் இதயத்திலிருந்து முகஸ்துதியை அகற்ற நான் எவ்வளவு முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும், நான் அறியாத வழிகளில் அது என் இதயத்தில் இடம் பிடித்துக் கொள்கிறது.
உளத்தூய்மையும், வாய்மையும்
உளத்தூய்மையும் வாய்மையும் மூன்று வழி களில் தொடர்பு படுகின்றன. அவையாவன;
ஒன்று; உளத்தூய்மையும், வாய்மையும் வேறு பட்ட கருத்துகளில் கூறப்பட்டாலும் இரண்டும் ஒரே நோக்கத்தை கொண்டதாகும் என இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறினார்கள்.
இரண்டு; உளத்தூய்மை என்பது ஒருவர் தன்னையும் தனது வணக்கங்களையும் படைப்புகளுடைய அவதானிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதாகும். அதாவது உண்மையாளன் தற்பெருமையிலிருந்தும், உளத்தூய்மையாளன் முகஸ்துதியிலிருந்தும் தங்களுடைய வணக்கங்களை காப்பாற்றிக் கொள்வார்கள். முடிவாக ஒரு வணக்கசாலி யிடம் உண்மையின்றி உளத் தூய்மையோ, உளத்தூய்மையின்றி உண்மையோ, பொறுமை யின்றி இவ்விரண்டுமோ, பூரண மடைய முடியாது.
மூன்று; அகத்தாலும் புறத்தாலும் ஒருவருடைய அமல்கள் சீராக இருப்பின் அதை உளத்தூய்மை என்றும், அகத்தை விட புறம் அழகியதாயின் அதை முகஸ்துதி என்றும், புறத்தை விட அகம் பராமரிக்கப் படின் உண்மையான உளத்தூய்மை என்றும் வேறுபடுத்தப்படும்.
உளத்தூய்மையின் பயன்கள்
உளத்தூய்மை அனைத்து அமல்களுக்கு அடிப்படையாகவும், பல சிறப்புகளுக்கும் காரணமாக இருப்பதால், அதன் பயன்களும் நிறையவே உள்ளன. இந்த வகையில் அல்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் உளத் தூய்மை குறித்து வந்துள்ள எல்லா சிறப்பு களும் அதன் பயன்களாகவே பார்க்கப்படும். அவற்றை பின் வருமாறு சுருக்கமாக நோக்கலாம்;
1- உளத்தூய்மையே அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய அடிப்படைக் காரணியாகும்.
2- பல உயர்ந்த அந்தஸ்துகளை ஈட்டித்தரும்.
3- கஷ்டம், துன்பம் போன்றவைகளிலிருந்து மீள வழிவகுக்கும்.
4- பிரார்த்தணைகள் ஏற்கப்படும்.
5- அல்லாஹ்வின் நேசத்தை உண்டாக்கும்.
6- இறையச்சத்தை ஏற்படுத்தும்.
7- துறவரம் கொள்ளவும், போதும் என்ற எண்ணத்துடன் (திருப்தியுடன்) வாழவும் வழி வகுக்கும்.
8- சைத்தானை தோழ்வி அடையச் செய்ய வும், அவனுடைய ஊசலாட்டங்ளிலிருந்து வெற்றி பெறவும் உதவும். ஆகவே தான் இறைவன் உளத்தூய்மையாளர்களின் பட்டியலில் இருந்து இப்லீஸை நீக்கயுள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ
அதற்கவன் "என் இறைவனே! நீ என் வழியைத் தடுத்துக் கொண்டதன் காரணமாக பூமியிலுள்ள பொருள்களை நான் அவர்க ளுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்.
إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ
அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்” (என்று இப்லீஸ் கூறினான்). அல்ஹிஜர் 40.
அபூ ஸுலைமான் அத்தாரானி கூறினார்கள்; ஒரு அடியான் உளத்தூய்மையுடன் அமல் செய்யும் போது அவனிடமிருக்கும் முகஸ்துதி யும், மற்றும் பல மன ஊசலாட்டங்களும் அகன்று விடும்.
9- இணைவைப்பு, முகஸ்துதி ஆகிவைகளிலி ருந்து தப்பிக்க வழிவகுக்கும். புலைல் இப்னு இயால் கூறினார்கள்; மனிதர்கள் பார்ப்ப தற்காக வணக்கம் செய்வது, அல்லது அவர்கள் பார்த்துக் கொண்டிருப் பதை அஞ்சி வணக்கம் செய்யாமலி ருப்பது ஆகிய இரண்டும் முகஸ்துதி யாகும். குறிப்பிட்ட இரண்டிலிருந்தும் பாதுகாப்புத் தேடுவ தற்கே உளத் தூய்மை எனப்படும்.
10- முஸ்லிம்கள் அவர்களுடைய எதிரிகளிட மிருந்து தப்பிக்க வழிவகுக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; இந்த சமூகத்தில் உள்ள சக்தியற்றவர்களின் பிரார்த்தணை, தொழுகை, உளத்தூய்மை போன்றவை கள் மூலமே அச்சமூகத்துக்கு வெற்றி யளிப் பான். நூல் ஸஹீஹ் அத்தர்கீப்.
11- கப்ரிலும், மறுமையிலும் உள்ள வேதனை களில் இருந்து தப்பிக்க வழிவகுக்கும்.
12- வழிகேட்டிலிருந்து மீண்டு, நேர்வழி பெற உதவும்.
13- அல்லாஹ்வுடைய நேசத்துக்கும், அவனு டைய படைப்புகளுடைய நேசத்துக்கும் காரணமாக அமையும்.
14- உளச்சாந்தியுடன் கூடிய நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
15- நட்செயல்கள் அதிகரிக்கவும், பன்மடங்கு கூலிகள் கிடைக்கவும் காரணமாகும்.
16- உள்ளத்தின் நோய்களில் இருந்தும், வழி கேட்டிலிருந்தும் அதைக் காக்க உதவும்.
17- வழக்கங்களை வணக்கங்களாக மாற்றி நட்கூலிகளை பெற்றுக் கொள்ள வழி வகுக்கும்.
18- உண்மைக்கு வழிகாட்டும். மக்ஹூல் என்பவர் கூறினார்; நாட்பது இரவுகளுக்கு உளத்தூய்மையுடன் அமல் செய்தவரின் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் ஞானம் அவருடைய நாவினால் வெளியாகும்.
19- நபி வழியில் மரணிப்பதற்கு வழிவகுக்கும்.
எவ்வாறு நீ உளத்தூய்மை உடையவனாக மாறலாம்?.
பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய அறியாமை, கவணயீனம் போன்றவை காரணமாக உளத் தூய்மையடைய முயற்சிப் பதை ஒரு சுமையாக கருதுவதில்லை. வேறு சிலரோ வணக்கங்களின் முன்னும், பின்னும், மத்தியிலும், முழுமையான உளத்தூய்மையை பெறுவது அசாத்தியம் என்றும் கருது கின்றனர். இவையனைத்தும் ஆதாரமற்ற தவறான கருத்துக்களாகும். காரணம் எங்களுக்கு பூரணமாக செய்ய முடியாத எந்த ஒரு விடயத்தையும் அல்லாஹ் ஒரு போதும் எங்களுக்கு கட்டளையிடுவதில்லை. அல்லாஹ் கூறுகின்றான்;
وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ
இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. அல் ஹஜ் 78.
உளத்தூய்மை அல்லாஹ்வினால் கட்டளை யிடப் பட்ட ஒரு விடயம், ஆகவே அமல்களின் போது அதை எங்களுடைய உள்ளங்களில் ஏற்படுத்திக் கொள்வதற்கு பின்வரும் உத்திகளை கையாளலாம்;
1- அல்லாஹ்வை, அவனுடைய திருநாமங் கள், பண்புகள் சகிதம் அறிந்து வைத்திருத் தல். இத்தகைய அறிவுடைய ஆத்மா அல்லாஹ்வையும், அவனுடைய மகத்துவத்தையும் விளங்கிக் கொள்வ துடன் அவனே உளத்தூய்மையுடன் வணங்கு வதற்கு தகுதியுடையவன் என்ற உண்மையையும் அறிந்து கொள்ளும்.
2- ஏழ்மை, பலவீனம் சகிதம் அல்லாஹ் வினால் படைக்கப்பட்டவர்களே மனிதர் கள் என்ற உண்மையை அறிந்து, அவர் களின் புகழ் அவதானிப்பு போன்றவைக ளுக்காக ஒரு வணக்கசாலி தன் நட்செயல்ளை வீணாக்கி விட மாட்டான்.
3- எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படையான ஆத்மாவை அறிந்து கொள்ளல். மேலும் அதிலிருந்து பிறக்கும் அனைத்து நட் செயல்களுக்கும் நேர்வழிக்கும் காரணமாக இருப்பவன் ஏக இறைவன் அல்லாஹ்வேயாகும். ஆகவே அந்த ஆத்மா உளத் தூய்மையின் வரம்புகளை மீறாதிருக்க அவனிடமே உதவி கோர வேண்டும்.
4- உளத்தூய்மையின் சிறப்புகள், மற்றும் உளத்தூய்மையாளர்களின் உயர்ந்த அந்தஸ்துகள் குறித்து சிந்தித்தல்.
5- முகஸ்துதியின் தீமைகளையும், முகஸ்து திக்காரர்களின் அவல நிலைகள் குறித்தும் சிந்தித்தல்.
6- அல்லாஹ்விடம் இருக்கும் நட்கூலிகளில் பேராவல் கொள்ளல்.
7- முகஸ்துதிக்காரர்களுக்கு அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கும் தண்டனை களுக்கு அஞ்சுதல்.
8- அல்லாஹ்வின் (அருள்) பார்வையில் இருந்து தூரமாகுவதற்கு பயப்படுதல்.
9- மோசமான, உள்ளச்சம் கொள்ளாத நிலையில் மரணமடைவதற்கு பயப்படல்.
10- உளத்தூய்மையாளர்களின் சம்பவங்கள், அவர்களுக்கு அல்லாஹ் வழங்க இருக்கும் அந்தஸ்துகள், முகஸ்துதிக்காரர்களுக்கு அவன் வழங்க இருக்கும் தண்டனைகள் போன்ற செய்திகளை வாசித்தல்.
உளத்தூய்மையின் கூலி
அல்லாஹ் கூறுகின்றான்;
وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا * إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا * إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا * فَوَقَاهُمُ اللَّهُ شَرَّ ذَٰلِكَ الْيَوْمِ وَلَقَّاهُمْ نَضْرَةً وَسُرُورًا *وَجَزَاهُم بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا *مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا * وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا* وَيُطَافُ عَلَيْهِم بِآنِيَةٍ مِّن فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرَا* قَوَارِيرَ مِن فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا* وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا* عَيْنًا فِيهَا تُسَمَّىٰ سَلْسَبِيلًا* وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنثُورًا* وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا * عَالِيَهُمْ ثِيَابُ سُندُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ ۖ وَحُلُّوا أَسَاوِرَ مِن فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا* إِنَّ هَٰذَا كَانَ لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيُكُم مَّشْكُورًا* إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تَنزِيلًا*
8. அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவ ளிப்பார்கள்.
9. அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிட மிருந்து பிரதி பலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை
10. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்” (எனக் கூறுவார்கள்.)
11. எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர் களுக்கு முகமலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.
12. அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர் களுக்கு வழங்கினான்.
13. அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காணமாட்டார்கள்.
14. அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.
15. வெள்ளிப் பாத்திரங்களும், பளிங்கு போன்ற கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.
16. அது வெள்ளி போன்ற பளிங்குகளால் ஆன கிண்ணங்கள்! அவற்றைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வார்கள்.
17. அங்கே குவளையிலிருந்து புகட்டப் படுவார்கள். அதில் இஞ்சி கலந்திருக்கும்.
18. அங்குள்ள ஸல்ஸபீல் எனப்படும் நீரூற்றிலிருந்து புகட்டப்படுவார்கள்.
19. இளமை மாறாச் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்களை நீர் பார்த்தால் உதிர்க்கப்பட்ட முத்துக்களாகக் கருதுவீர்!
20. நீர் காணும் போது அங்கே சொகுசான இன்பத்தையும், பெரிய ஆட்சியையும் காண்பீர்!
21. அவர்கள் மீது பச்சை நிற ஸுந்துஸ் எனும் பட்டும், இஸ்தப்ரக் எனும் பட்டும் இருக்கும். வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படுவார்கள். அவர்களின் இறைவன் தூய பானத்தை அவர்களுக்குப் பருகத் தருவான்.
22. இதுவே உங்களுக்குரிய கூலி. உங்கள் உழைப்புக்கு நன்றி செலுத்தப்படும்.
23. (முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம். அத்தஹ்ர் 8-23
இது தான் அழகிய கூலியும், அழியாத இன்பமும் சந்தோசமும், தலைமைத்துவமும், செல்வமு மாகும். இது அல்லாஹ்வின் அடியார்களில் உளத்தூய்மையாளர்களுக்கே உரியது, அவர்கள் கொடுப்பதும், தடுப்பதும், நேசம் கொள்வதும், கோபம் கொள்வதும், அல்லாஹ்வுக்காகவே இருக்கும். மேலும் அவர்கள் பேசுவதும், செய லாற்றுவதும் அல்லாஹ்வுக்காகவே இருக்கும். இத்தகை யோர் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.
எங்களையும் உளத்தூய்மையாளர்களோடு சேர்த்து விடுமாறும், பிறரை வணக்கம் செய்வதை விட்டும் காக்குமாறும், அல்லாஹ் விடம் இறைஞ்சுகிறோம், நிச்சயமாக அவன் அதற்குச் சக்தி பெற்றவனும், அதிகாரமுள்ள வனுமாவான். மேலும் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் ஸலாத்தும் ஸலாமும் சொல்வானாக.
உங்கள் கருத்துக்களை எமக்கு அறிவிக்கவும்.