வஸீலா ஒரு விளக்கம்
مفهوم الوسيلة
‘‘வஸீலா’’ ஒரு விளக்கம்
PART-01 - எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
அல்லாஹ் கூறுகிறான்: “விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவனிடத்திலே வஸீலா தேடுங்கள். அவனது பாதையிலே போர் புரியுங் கள். வெற்றியடைவீர்கள்.” (அல் குர் ஆன் 5:35)
இந்த வசனத்தில் விசுவாசிகளை அழைத்து முக்கியமான மூன்று கட்டளைகள் சொல்லப் படுகின்றன.
1. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழ வேண்டும்.
2. அல்லாஹ்விடத்தில் வஸீலா தேட வேண்டும்.
3. அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிய வேண்டும்.
தக்வா என்றால் என்ன? அதனை எப்படி செயலாற்ற வேண்டும்? என்பதும் அல்லாஹ்வின் பாதையில் ஏன், எதற்கு, எப்படி ஜிஹாத் (போர்) புரிய வேண்டும் என்பதும் நன்கு தெரியும். ஆனால், அல்லாஹ்விடத்தில் எப்படி வஸீலா தேடுவது என்பது பெரும்பாலான வர்களுக்குத் தெரியவில்லை.
வஸீலா என்ற இந்த வார்த்தைக்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் சொல்லும் போது, “அல்லாஹ் விடத்தில் நெருக்கத்தைப் பெறுதல்” என்பதாகக் கூறுகிறார்கள். அபூ கதாதா (ரஹ்) அவர்கள் கூறும்போது “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவனுக்கு உவப்பான முறையில் நடந்து, அவனது நெருக்கத்தைப் பெறுதல்” என்று கூறுகிறார்கள். (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்)
அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையில் நெருக்கத்தை பெறுவதற்கு எந்த நற்காரியம் துணையாக-இடைச் சாதனமாக- இருக்கின் றதோ அதுவே வஸீலா எனப்படும்.
ஒரு விசுவாசி அல்லாஹ் விரும்புகின்ற (திருப்தியடை கின்ற) பிரகாரம் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழி முறையில் இஹ்ஃலாஸு டன் (உள்ளச்சத்துடன்)அமல்கள் புரிய வேண்டும். இதுவே அமல்கள் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான முக்கிய நிபந்தனை களாகும். இந்நிபந்தனை களுக்குட்பட்டே காரியமாற்ற வேண்டும். அப்போது தான் அந்த அமல் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஒவ்வொரு வரும் தான் செய்கின்ற அமலுக்கு பொறுப்புத் தாரியாவார். அவர் புரிந்த அமல்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் நெருக்கத்தை, அன்பை, ரஹ்மத்தை பெற முயல வேண்டும்.
அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான காரியங்க ளில் முதன்மையானது ஈமானாகும். (இறை நம்பிக்கையாகும்) அந்த ஈமானினால் கிடைக்கும் பயனையும் ஈடேற்றத் தையும் அல்லாஹ் பின்வருமாறு தெளிவுப் படுத்துகிறான்.
رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَار رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى بَعْضُكُمْ مِنْ بَعْضٍ
உங்கள் இரட்சகனை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பால் அழைக்கும் ஓர் அழைப்பாளனின் அழைப்பை எங்கள் இரட்சகனே நிச்சயமாக நாம் செவியேற்று நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் இரட்சகனே! எமது பாவங்களை எமக்கு மன்னித்து எமது தீமைகளை எங்களை விட்டும் போக்கி நல்லவர்களுடன் எம்மை மரணிக்கச் செய்வாயாக.
எங்கள் இரட்சகனே! உமது தூதர்கள் மூலம் எமக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக. மேலும் மறுமை நாளில் எங்களை நீ இழிவு படுத்தி விடாதே. நிச்சயமாக நீ வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டாய். (என்றும் நம்பிக்கை கொண்டவர்கள்) கூறுவார்கள்.
“உங்களில் ஆணாயினும் பெண்ணாயினும் (சரி) நற்செயல் புரிவோரின் எச்செயலையும் நான் வீணாக்கி விட மாட்டேன்” என அவர்களின் இரட்சகன் அவர்களுக்குப் பதிலளித்தான். (3:193-195)
தான் கொண்ட ஈமானை முன்னிறுத்தி அதன் பொருட்டால் பாவமன்னிப்புக் கோரி நல்லவர்களுக்குண்டான மரணத்தை வேண்டி பிரார்த்திக்கும் போது அப்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு பதிலளிக்கிறான். எந்தவொரு நன்மையையும் வீணாக்கி விட மாட்டேன் என்றும் உத்தரவாதப் படுத்துகிறான்.
இறை விசுவாசியின் எந்தவொரு நற்காரியத்திற் கும் இம்மையிலும், மறுமையிலும் நன்மை கிடைக்கக் கூடியதாக அல்லாஹ் ஆக்கிவிடு கிறான். அதன் பலனை அனுபவிக்கவும் செய்கிறான்.
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
ஆணோ அல்லது பெண்னோ நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறம் புரிந்தால் அவருக்கு நல்வாழ்வளிப்போம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிருக்காக அவர் களது கூலியை நாம் அவர்களுக்கு வழங்கு வோம்.(16:97)
إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا [الفرقان: 70
யார் பாவமன்னிப்புக் கோரி ஈமான் கொண்டு நல்லறமும் புரிகின்றாரோ அவர்களுக்கு அவர்களின் தீமைகளை அல்லாஹ் நன்மை களாக மாற்றுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்ப வனும் நிகரற்ற அன்புடையவனுமாவான். (25:70)
مَنْ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَمَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْر حِسَابٍ} [غافر: 40
எவன் ஒரு தீமையை செய்கின்றானோ அது போன்ற தையே தவிர வேறெதுவும் அவனுக்கு கூலியாக வழங் கப்பட மாட்டாது. இன்னும் ஆணோ பெண்ணோ எவர்கள் ஈமான் கொண்ட நிலையில் நல்லறம் புரிகின்றார்களோ அவர்களே சுவர்க்கத்தில் நுழைவார்கள். அதில் அவர்கள் உணவளிக்கப்படுவார்கள். (40:40)
ஈமான் கொண்டு நல்லறம் புரிபவர்களது வாழ்வை இம்மை யிலும் மறுமையிலும் நல்வாழ்வாக மாற்றும் பொறுப் பையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுடன் அவர்களது பாவங்களை போக்கி சுவர்க்கத்திலும் நுழைத்து விடு கிறான்
எனவே இறை விசுவாசியான ஆணும் பெண்ணும் அல்லாஹ்வின் பால் நெருக்கத் திற்குக் காரணமாகின்ற தங்களுடைய நல்ல அமல்களை வணக்கங்களை முன் வைத்து தங்களுடைய தேவைகளை நிறை வேற்றிக் கொள்ளவும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும் அல்லாஹ்விடமே மன்றாட வேண்டும். அதற்கான வழிகாட்டலையே இங்கு தெளிவுப்படுத்துகிறான்.
உதவி புரியும் நல்லமல்கள்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
விசுவாசம் கொண்டவர்களே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களு டன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)
தொழக் கூடிய ஒவ்வொரு தொழுகையாளியும் தன்னுடைய தொழுகையை முன் வைத்து தனக்குத் தேவையான உதவிகளை அல்லாஹ் விடம் கேட்க வேண்டும்.
யாஅல்லாஹ்! இந்த தொழுகையை உனக்காகத் தொழுதேன். உன் திருப்தியை நாடித் தொழுதேன். எனது இந்த தேவையை நிறைவேற்றிக் கொடு என்று தான் தொழுத தொழுகையை முற்படுத்தி பிரார்த்திக்க வேண்டும்.
இவ்வாறே ஒவ்வொரு வணக்கங்களை இபாதத்களை முன்வைத்து பிரார்த்திக்க வேண்டும். பசித்த ஒரு ஜீவனுக்கு உணவ ளித்திருந்தாலும், தாகித்த ஒரு மிருகத்துக்கு தண்ணீர் புகட்டிருந்தாலும், மிஸ்கீன் ஒருவருக்கு ஸதகா கொடுத்தி ருந்தாலும் அந்த நல்ல காரியத்தை முன் வைத்து பிரார்த்திக்க வேண்டும்.
நோய், வறுமை, இழப்புக்கள் போன்ற ஏதேனும் சோத னையைக் கொண்டு அல்லாஹ் சோதிக்கின்ற போது பொறுமை காத்து அப்பொறுமையின் பொருட்டால் பிரார்த்திக்க வேண்டும். சோதனைகள் என்பது ஈமானுக்கு பலம் சேர்ப்பதோடு பாவங்களுக்கு பரிகாரங்க ளாகவும் நன்மைக்களுக்கான சேமிப்புகளா கவும் அல்லாஹ் ஆக்கியிருக்கிறான் என்பதை மறந்து விடக் கூடாது.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ]
சிறிதளவு பயத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளை பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தி யும் நிச்சயமாக உங்களை நாம் சோதிப்போம். (இந் நிலைகளில்) பொறுமை யை மேற் கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீ நற்செய்தி கூறுவீராக. அவர்கள் (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் பொழுது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பச் செல்வோராய் இருக்கிறோம் என்று கூறுவார் கள். அத்தகையோர் மீது அவர்களின் இரட்சக னிடமிருந்து நல் வாழ்த்துகளும் நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகை யோர் தாம் நேர்வழி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 2:155)
இச்சோதனைகள் என்பது ஒரு முஃமினுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுவதற்கான வழியே யல்லாமல் தண்டனை யல்ல. சோதனைகள் இல்லாத வாழ்வை அல்லாஹ் எவருக்கும் ஏற்படுத்தவே இல்லை.
அல்லாஹ்வின் இந்நியதியை ஏற்றுக் கொண்டு சோதனை களின் போது பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும். “அல்லாஹ்வுக்காக வாழும் நாம் அவன் பால் திரும்பிச் செல்லக் கூடியவர்களாகவும் உள்ளோம்” என்று ஆறுதல் கூறிக் கொள்ள வேண்டும். இத்தகைய உயர் பண்புகளைக் கொண்ட மக்களுக்கு அல்லாஹ் நல் வாழத்துகளை தெரிவிக்கின்றான். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் அருளை பெற்றவர் களாகவும் நேர்வழிப் பெற்றவர்களாக வும் உறுதிப்படுத்துகிறான்.
பெரிய இழப்பானாலும் சிறிய இழப்பானாலும் மனம் தளராது அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து கையேந்தினால் அதற்கு அல்லாஹ் பதிலளிக்கிறான் என்பதனை காணமுடிகிறது.
‘‘ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் நேரும் போது
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
“நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காக வாழ்கிறோம். அவன் பால் மீளுபவர்களாக உள்ளோம். யா அல்லாஹ்! எனக்கு ஏற்பட்ட துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு பதிலாக எனக்கு நன்மையை வழங்கு வாயாக”
என்று கூறினால் அவருடைய துன்பத்தி லிருந்து அவரை அல்லாஹ் காப்பதோடு அந்த துன்பத்திற்கு மாற்றமாக சிறந்த தொன்றை வழங்காமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். அவ்வாறே எனது கணவர் அபூ சலமா (ரலி) அவர்கள் இறந்த போது நான் கூறினேன். அவரை விடச் சிறந்தவரான அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்கு (துணைவராக) வழங்கினான் என உம்மு ஸலமா (ரல) கூறினார்கள் (நூல்: முஸ்லிம்)
தன்னுடைய துன்பங்களை அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டி நன்மையை எதிர் பார்த் திடும் போது அத்துன்பத்திற்கு பதிலாக சிறந்ததொன்றை மாற்றீடாக அல்லாஹ் வழங்குகிறான்.
உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்கு முன்) இறந்தும் அப்பெண் (தாய்) நன்மையை எதிர்பார்(த்து பொறுமைகா) த்தால் அவர் சுவர்க்கத்தில் நுழை யாமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களிடம் கூறினார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! இரு பிள்ளைகள் இறந்தாலுமா? என்று கேட்டார். இரு பிள்ளைகள் இறந்தாலும் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
மூன்று குழந்தைகளை மரணிக்கச் செய்து சோதனைக்கு ஆளாக்கும் போது அச் சோதனையை பொறுமையாக ஏற்று அல்லாஹ் விடம் நன்மையை எதிர்பார்க்கும் பெண்ணுக்கு சுவனத்தை அல்லாஹ் கொடுக்கிறான்.
ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் சிரமம், நோய், கவலை, துக்கம், நோவினை, மயக்கம், மற்றும் அவன் காலில் குத்தி விடும் முள்ளின் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்ப வர்:அபூஹூரைரா (ரலி) நூல்:புகாரி முஸ்லிம்
குற்றங்களுக்கு பரிகாரங்களாக துன்பங்கள் தொடர் கின்றன என்று புரியும் போது மன அமைதியும் முழுமையான நன்மைகளும் கிடைக்கின்றன. இப்பாக்கியம் இறை விசுவாசி களுக்குத் தவிர வேறு யாருக்கும் கிடைக்காது.
ஆகவே நாம் காய்ச்சலினால் பீடிக்கப் படும் போதும் அல்லது ஏதேனும் நோயினால் பீடிக்கப் படும் போதும் செய்த நல்லமல்களை கூறி பாதுகாப்பும் நிவாரணமும் நன்மையையும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.
சோதனைகளைக் கண்டு துவண்டு விடாமல் படைத்த வனான அல்லாஹ்வின் பக்கம் மீண்டு விட வேண்டும். நாம் கையாளுகின்ற பொறுமை, எமது அமல்கள், எம்மை பாதுகாக் கும் சாதனங்களாகும் (வஸீலாவாகும்) என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
இதனை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவாக கூறுகிறார்கள்.
உங்களுக்கு முன் வாழ்ந்தோரில் மூன்று நபர்கள் (வெளியூர்) சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு குகையில் இரவு தங்கும் படியான (சூழல்) ஏற்பட்டு, அதில் அவர்கள் நுழைந்தார்கள். (அப்போது) மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து, அவர்கள் இருந்த குகையின் வாசலை அடைத்து விட்டது. அப்பொழுது அவர்கள், நாம் செய்த செயல் களில் நல்லதைக் கூறி அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்தாலே தவிர, இந்தப் பாறை யிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலாது என்று (தங்களுக்குள்) பேசிக் கொண்டார்கள். (பின்னர் ஒவ்வொருவராக தாங்கள் செய்த அமலை முன் வைத்து உதவி தேடி பிரார்த்திக்க லானார்கள்.)
இறைவா! எனக்கு வயதான பெற்றோர் உள்ளனர். அவ் விருவரும் உணவு உண்ணுவதற்கு முன் குடும்பதாருக்கோ, ஊழியர்களுக்கோ நான் பால் தரமாட்டேன். ஒரு நாள் விறகு தேடி வெகு தூரம் சென்று விட்டேன். இரவு கடந்து விட்டது. என் பெற்றோருக்காக நான் பாலைக் கறந்து எடுத்து வந்தேன். இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். எழுப்ப மனமில்லாமல் அவர்கள் விழிக்கும் வரை காத்திருந்தேன். அவர்களுக்கு கொடுப்ப தற்கு முன் என் குடும்பத்தினருக்கு அதனைக் கொடுக்க விரும்ப மில்லை.
இறுதியில் காலை நேரமும் வந்து விட்டது. குழந்தைகள் என் காலடியில் பசியுடன் தூங்கி விட்டார்கள். என் பெற் றோர் விழித்தனர். இருவரும் பாலை அருந்தினார்கள். இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந் தால் இந்தப் பாறை மூலம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடையை நீக்குவாயாக என்று அவர்களில் ஒருவர் பிரார்த்தித்தார். உடனே அதிலிருந்து வெளியே வர இயலாத அளவுக்கு பாறை சிறிது விலகியது.
இறைவா! எனக்குச் சிறிய தந்தையின் மகள் இருந்தாள். அவள் எனக்கு மிகப் பிரியமானவளாக இருந்தாள். (மற்றொரு அறிவிப்பில், ஆண்கள் பெண்களை விரும்பு வதில் கூடுதல் நிலை இருப்பது போலவே.) அவளை அடைய நான் விரும்பினேன். (என் ஆசைக்கு இணங்க மறுத்தவளாக) என்னிட மிருந்து விலகி விட்டாள். பிறகு பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் ஒரு ஆண்டின் போது அவள் என்னிடம் உதவி கேட்டு வந்தாள். அவளும் நானும் தனியே இருப்பது என்ற நிபந்தனையின் பேரில் அவளிடம் நூற்றி இருபது தீனார்களைக் கொடுத்தேன். அவளும் சம்மதித்தாள். அவளை நான் நெருங்கினேன். (மற்றொரு அறிவிப்பில், அவளின் இரண்டு கால்களுக்கிடையே(உட்கார்ந்தேன்) அப்போது அவள், “அல்லாஹ்வை அஞ்சுவீராக, உரிமை யின்றி முத்திரையை நீக்கி விடாதீர்” என்று கூறினாள். அவள் எனக்கு மற்றவர்களை விட மிகப் பிரியமானவளாக இருந்தும், நான் அவளை விட்டும் நீங்கி விட்டேன். அவளுக்கு நான் கொடுத்த தங்கக் காசுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால், இந்தச் சிரமத்தை எங்களை விட்டும் நீக்கு வாயாக என்று மற்றொருவர் பிரார்த்தித்தார். இருப்பினும் அவர்களால் வெளியே வர இயலாத அளவுக்கு பாறை சற்று விலகியது.
இறைவா! பல கூலியாட்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தேன். அவர்களின் கூலியை ஒருவரைத் தவிர அனைவருக்கும் கொடுத்து விட்டேன். தனக்குரியதை எடுக்காமல் விட்டு அவர் சென்று விட்டார். அவரது கூலியை தொழிலில் பயன் படுத்தினேன். அதிலிருந்து லாபம் பெருகியது. சில காலம் கழிந்தது. என்னிடம் அவர் வந்தார். “அல்லாஹ்வின் அடியாரே! என் கூலியை எனக்குத் தந்திடுவீராக” என்று கூறினார். நீ பார்க்கும் இந்தச் (சொத்து) அனைத்தம் உன்னுடையது தான். ஒட்டகம், மாடு, ஆடு, அடிமை அனைத்தும் உமக்கே என்று கூறி னேன். உன்னை நான் கேலி செய்யவில்லை என்று விஷயத்தைக் கூறினேன். உடனே அவர் அனைத்தையும் எடுத்துக் கொண்டார். அதிலிருந்து எதையும் அவர் விட்டுச் செல்ல வில்லை. இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால், நாங்கள் இப்பொழுது உள்ள இந்த நிலைமையை எங்களை விட்டும் நீக்குவாயாக என்று மூன்றாவது நபர் பிரார்த்தித்தார். உடனே பாறை விலகியது. மூவரும் குகையை விட்டு வெளியேறினார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) (புகாரி: 2215, 2272, முஸ்லிம் 2743)
குகையில் சிக்குண்டு தப்பிக்க வழியின்றி சப்தமிட்டு கூவினாலும் வந்து காப்பாற்ற ஆளின்றி அல்லல்பட்ட மூன்று பேருடைய நிலையை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.
இந்த இக்கட்டான நிலையில் அல்லாஹ் எங்களை காப்பாற்றுவான் என்ற உறுதியான நம்பிக்கையில் மனம் தளராது தாங்கள் செய்த நல்லமல்ளை முன் வைத்து பிரார்த்திக் கிறார்கள்.
நிச்சயமாக எமது நல்லமல்கள் எம்மை இந்நெருக்கடி யிலிருந்து காப்பாற்றும் என்ற உறுதியோடு பிரார்த்திக் கிறார்கள்.
ஒருவர் தன்னுடைய தாய்க்கும், தகப்பனுக்கும் செய்த பணிவிடையை முன் வைத்து பிரார்த்திக்கிறார்.
அடுத்தவர், தவறான உறவை (விபச்சாரத்தை) அணுகும் போது அல்லாஹ்வின் மீது ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக விலகிக் கொண்டதை முன் வைத்து பிரார்த்திக்கிறார்.
மற்றவர், தன்னுடைய தொழிலாளியின் கூலிப் பணத்தால் உருவான முதலீடுகளில் எக் குறைவையும் மோசடியையும் மேற்கொள்ளாது முழுமையாக ஒப்படைத்ததை முன் வைத்து பிரார்த்திக்கிறார்.
இம்மூன்று பேருடைய அமல்களையும் துஆக்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அவர்களது நம்பிக்கை வீண் போக வில்லை.
இப்பாக்கியம் ஒவ்வொரு முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் கியாமத் நாளை வரை உண்டு. எனவே எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை அஞ்சி அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நிபந்தனைகளை கவனத்தில் கொண்டு அமல்கள் புரிய வேண்டும் நாம் சம்பாதித்த அமல்களை கொண்டே அல்லாஹ்விடம் வஸீலாவை -உதவியை - தேட வேண்டும்.
‘‘வஸீலா’’ ஒரு விளக்கம்
PART-02 - எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி
அல்லாஹ்வின் அழகிய பெயர்களைக் கூறி வஸீலா தேடுதல்
ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் மட்டுமே துஆ கேட்க கடமைப் பட்டிருக்கிறான். அல்லாஹ் விடமே தன்னுடைய தேவைகளைக் கேட்கவும், கஷ்டங்களை முறையிடவும், பாதுகாப்புத் தேடவும், சகல விடயங்களையும் தவக்குல் வைக்கவும் ஏவப்பட்டிருக்கிறான். அல்லாஹ் விடம் வஸீலா தேடும் போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கு தக்க வாறு போற்றிப் புகழ்ந்து அவனது உயர்ந்த பண்புகள் மற்றும் அழகிய பெயர்களை கூறி பிரார்த்திக்க .வேண்டும்.
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உண்டு. அதைக் கொண்டே அவனிடம் பிரார்த்தி யுங்கள். (7:180)
قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى
அல்லாஹ் என்று அழையுங்கள். அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எவ்வாறு அழைத்தாலும் அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன என்று (நபியே) நீர் கூறுவீராக. (17:110)
அல்லாஹ்வின் அழகிய பெயர்களை அஸ்மாஉல் ஹுஸ்னா எனக் கூறப்படும். அல்லாஹ் தனக்கென சூட்டிக் கொண்ட இவ்வழகிய பெயர்களை முன்மொழிந்து பிரார்த்தித்து வேண்டுதல்களை கேட்குமாறு கூறுகிறான்.
அல்லாஹ்வின் பெயர்களை மற்றும் பண்பு களை முன் மொழிந்து சிறப்பித்துக் கூறும் வசனங்களைக் குர்ஆன் பின்வருமாறு கற்றுத் தருகிறது.
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ
அவன்தான் அல்லாஹ். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன். அவனையன்றி வேறு யாரும் இல்லை. (அவன்) மறைவான வற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்க றிபவன். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையவன். (59:22)
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ
அவன்தான் அல்லாஹ். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன். அவனையன்றி வேறு யாருமில்லை. (அவனே) ஆட்சியாளன். பரிசுத்தமானவன். சாந்தியளிப்பவன், பாதுகாப் பவன், கண்காணிப்பவன், யாவற்றையும் மிகைத்தவனும் அடக்கி யாள்பவனும் பெருமைக் குரியவனு மாவான். அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மை யானவன். (59:23)
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
அவனே அல்லாஹ். (அவனே) படைப்பவனும் தோற்றுவிப்பவனும் உருவமைப்பவனுமா வான். அவனுக்கு அழகிய பெயர்கள் இருக் கின்றன. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள வைகள் அவனைத் துதிக்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். நானமிக்கவன். (59:24)
இவவ்சனங்களில் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் பண்புகள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளதுடன் அல்லாஹ்வின் வல்லமைகளும் விபரிக்கப்படுகின்றன. அல்லாஹ் எத்தகையவன், எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பதும் தெளிவுபடுத்தப் படுகின்றன. இத்தனை சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கப்படுவது கண்டிக்கப் படுகிறது. இணையை விட்டும் பரிசுத்தமானவன்தான் அல்லாஹ் என்பதை தெளிவு படுத்தப் பட்டுள்ளதுடன் பிரார்த்தனை புரியும்போது அல்லாஹ்வின் திரு நாமங்கள் போற்றப்பட வேண்டும் என்ற பாடம் இவ் வசனங்களினூடாகப் போதிக்கப்படுகின்றன.
அல்குர்ஆனில் பொதுவாகக் கூறப்பட்டுள்ள பிரார்த்தனைகளிலும் நபிமார்கள் கேட்ட பிரார்த்தனைகளிலும் இந்த அம்சங்கள் அல்லது தன்மைகள் மேலும் விபரிக்கப்பட் டுள்ளன.
இப்றாஹீம் நபியின் பிரார்த்தனை:
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ (128
எங்கள் இரட்சகனே! எம் இருவரையும் உனக்குக் கட்டுப் பட்டவர்களாக ஆக்கி, எமது சந்ததியிலிருந்து உனக்குக் கட்டுப் படும் ஒரு சமுதாயத்தையும் உருவாக்குவாயாக. எமக்கு ரிய (ஹஜ்) வணக்க முறைகளை எமக்குக் காண்பித்துத் தருவாயாக. நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடைய வனுமாவாய். (2:128)
الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ
முதுமைப் பருவத்தில் இஸ்மாஈலையும், இஸ்ஹாக்கையும் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எனது இரட்சகன் பிரார்த்தனையைச் செவி யேற்பவன் என (இப்றாஹீம் பிரார்த்தித்துக்) கூறினார். (14:39)
மூஸா நபியின் பிரார்த்தனை:
தன்னால் நடந்த தவறை எண்ணி வருந்தி மூஸா நபி கவலைப் பட்டு பச்சாதபப் பட்டு அல்லாஹ்விடம் பின் வருமாறு பிரார்த்தனை புரிந் தார்.
قَالَ هَذَا مِنْ عَمَلِ الشَّيْطَانِ إِنَّهُ عَدُوٌّ مُضِلٌّ مُبِينٌ .قَالَ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ قَالَ رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِلْمُجْرِمِينَ
இது ஷைத்தானின் வேலை. நிச்சயமாக அவன் தெளிவாக வழிகெடுக்கின்ற எதிரியாவான் என (மூஸா) கூறினார். எனது இரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே அநியாயம் செய்து கொண்டேன். எனவே நீ என்னை மன்னிப்பாயாக என்று (பிரார்த்தித்து) கூறினர். எனவே அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப் பவன். நிகரற்ற அன்புடையோன். எனது இரட்சகனே! நீ எனக்கு அருள் புரிந்த காரணத்தினால் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்ப வனாக நான் இருக்க மாட் டேன் என்று (மூஸா) கூறினார். (28:15-17)
சுலைமான் நபியின் பிரார்த்தனை
قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
என் இரட்சகனே! என்னை மன்னிப்பாயாக. எனக்குப் பின் எவருக்கும் கிடைக்காத ஓர் ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக. நிச்சயமாக நீ மிகப் பெரும் கொடையாளனாவாய் என (பிரார்த்தித்து) க் கூறினார். (38:35)
அய்யூப் நபியின் பிரார்த்தனை
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
அய்யூப் தனது இரட்சகனிடம் நிச்சயமாக துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது. கருணையாளர்களில் நீயே மிக்க கருணை யாளன் என (பிரார்த்தித்து) அழைத்ததை (நபியே நீர் எண்ணிப் பார்ப்பீராக) (21:83)
யூசுப் நபியின் பிரார்த்தனை:
رَبِّ قَدْ آَتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآَخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
என் இரட்சகனே! எனக்கு நீ ஆட்சியில் சிறிதளவு வழங்கி கனவுகளின் விளக்கத்தையும் கற்றுத் தந்தாய். வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவனே! இம்மையிலும் மறுமை யிலும் நீயே எனது பாதுகாவலன். என்னை முஸ்லி மாக மரணிக்கச் செய்து நல்லடியார்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக (என்றும் அவர் பிரார்த்தித்தார்.) (12:101)
ஸகரிய்யா நபியின் பிரார்த்தனை
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
ஸகரிய்யா தன் இரட்சகனிடம் பிரார்த்தித்து என் இரட்சக னே! உன்னிடமிருந்து எனக்கு ஒரு பரிசுத்தமான சந்ததியைத் தந்தருள்வாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனையை செவியுறுப வனாவாய் எனக் கூறினார். (3:38)
யூனுஸ் நபியின் பிரார்த்தனை:
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
(யூனுஸ் ஆகிய) மீனுடையவரையும் (நபியே நீர் எண்ணிப் பார்ப்பீராக) அவர் கோபத்துடன் சென்ற போது நாம் அவரை நெருக்கடிக் குள்ளாக்க மாட்டோம் என அவர் எண்ணிக் கொண்டார். எனவே அவர் இருள்களில் இருந்து கொண்டு (உண்மையாக) வணங்கப் படத் தகுதியானவன் உன்னையன்றி வேறு யாருமில்லை. நீயே தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஆகி விட்டேன் என (பிரார்த்தித்து) அழைத்தார். (21:87)
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை:
நபி (ஸல்) அவர்கள் துன்பம் ஏற்படும் போது பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்.
لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَرَبُّ العَرْشِ العَظِيمِ
மகத்துவமிக்கவனும், இரக்கமுள்ளவனுமான, வணக்கத் திற்கு தகுதியானவன் அல்லாஹ் வைத் தவிர வேறு இரட்சகன் இல்லை. மகத்தான அர்சின் அதிபதியான வணக்கத்திற்கு தகுதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இரட்சகன் இல்லை. வானங்களின் இறைவ னும், பூமியின் இரட்சகனும், கண்ணியமான அர்சின் இரட்சகனுமான வணக்கத்திற்கு தகுதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இரட்சகன் இல்லை.
ஒவ்வொரு நபிமார்களும் தங்களுடைய வேண்டுதல்களை அல்லாஹ்வின் முன் வைக்கும் போதும் பிரார்த்திக்கும் போதும் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றி அழகிய பெயர்களால் புகழ்ந்து பிரார்த்தித் துள்ளார்கள் என்பதைக் காண முடிகிறது.
நல்லவர்கள் முஃமின்கள் பிரார்த்திக்கும்போதும் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள், பண்புகள் கூறி பிரார்த்திப்பார்கள் என்பதையும் அதன் வசன அமைப்புகளையும் பின்வரு மாறு அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ إِنَّكَ
எங்கள் இரட்சகனே! நிராகரித்தோரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களாக நீ எங்களை ஆக்கி விடாதே. மேலும் எங்களை நீ மன்னித்தருள் வாயாக. எங்கள் இரட் சகனே நீ யாவற்றையும் மிகைத்தவன் ஞானமிக்கவன்.
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
எங்கள் இரட்சகனே! நாம் மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எம்மை குற்றம் பிடித்து விடாதே. எங்கள் இரட்சகனே! எதில் எமக்கு சக்தி இல்லையோ, அதை எம்மீது சுமத்தி விடாதே. எங்கள் பாவங்களை அழித்து எம்மை மன்னித்து விடுவாயாக. மேலும் எங் களுக்கு அருள் புரிவாயாக. நீயே எங்கள் பாதுகாவலன். எனவே நிராகரிப்பாளர்களான கூட்டத்திற்கு எதிராக எமக்கு உதவி புரிவாயாக. (2:286)
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آَمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
எங்கள் இரட்சகனே! நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்தி விட்ட எமது சகோதரர்களை யும் மன்னிப்பாயாக. இன்னும் நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே. எமது இரட்சகனே நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவ னும் நிகரற்ற அன்புடையோனுமாவாய்.(59:10)
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
எங்கள் இரட்சகனே! எங்கள் ஒளியை எங்களுக்கு பூரணப் படுத்துவாயாக. மேலும் எங்களை மன்னிப்பாயாக. நிச்சயமாக நீ யாவற் றின் மீதும் பேராற்றலுடையவன். (66:8)
ஒரு நபித் தோழர் தன்னுடைய துஆவில் பின்வருமாறு கூறி பிரார்த்தித்தார்
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اَللَّهُ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ،
இப்பிரார்த்னையை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் இவருடைய பிரார்த்தனை ஏற்கப் பட்டு மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது என்று கூறினார்கள் (நால்:அபூதாவுத்) ஆகவே பிரார்த்தனைகளின் போது ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களைக் கூறி போற்றிப் பிரார்த்திக்கவும் வஸீலா தேடவும் வேண்டும்.