இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ()

முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன்

 

இஸ்லாத்தில் அனுஷ்டானங்கள் போலவே அதன் கொள்கையும், கோட்பாடும் மிகவும் முக்கிய மானவை. ஏனைய மதத்தை பின்பற்றும் ஒருவர் இன்னொரு மதம் சார்ந்த மதபீடங்களுக்குச் சென்று அங்கு சில வழிபாடுகளையும், காணிக்கைகளையும் சமர்ப்பித்து வருவதைத் தவறாகவோ அல்லது தங்களின் மதத்திற்கு விரோதமான செயலாகவோ காண்பதில்லை. அதனால் அவர்கள் வேற்று மத குருக்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கூட ஒரு புண்ணிய கருமமாக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை.

|

 இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்

نبذة في العقيدة الإسلامية

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்

ஆக்கயோன்

முஹம்மத் அஸ்ஸாலிஹ் அல் உஸைமீன்

என்னுரை

         அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

     சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அல்லாஹ்வின் கருணையும், சாந்தியும் எமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் கிளையார் தோழர்கள் மீதும் உண்டாவதாக!

        இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் அனுஷ்டானங்கள் போலவே அதன் கொள்கையும், கோட்பாடும் மிகவும் முக்கிய மானவை. ஏனைய மதங்களோ கோட்பாட்டை விடவும் அனுஷ்டானங்களுக்கும், சடங்குகளுக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கின்றன. எனவேதான் ஒரு மதத்தை பின்பற்றும் ஒருவர் இன்னொரு மதம் சார்ந்த மதபீடங்களுக்குச் சென்று அங்கு சில வழிபாடுகளையும், காணிக்கைகளையும் சமர்ப்பித்து வருவதைத் தவறாகவோ அல்லது தங்களின் மதத்திற்கு விரோதமான செயலாகவோ அவர்கள் காண்பதில்லை. அதனால் அவர்கள் வேற்று மத ஸாதுக்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கூட ஒரு புண்ணிய காரியமாக கருதுகின்றனர்

            ஆனால் இஸ்லாம் மார்க்கம் அப்படியானதல்ல. அதற்கென தனித்துவமான கொள்கையும் கோட்பாடும் உண்டு. அதனை உடைத்துக் கொண்டு செல்லும் எவரையும் உண்மை முஸ்லிமாகக் கொள்ள முடியாது. சில சந்தர்ப்பங்களில் இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு எதிரான ஒரு செயல், ஒரு முஸ்லிமை இஸ்லாத்தை விட்டே வெளியே  தள்ளி விடவும் கூடும். இப்படியான செயல் رِدَّةٌ - மதமாற்றத்திற்கான செயல் எனப்படுகிறது. எனவே ஒரு முஸ்லிமைப் பொருத்த வரை அவர் தன்னுடைய ஈமானைப் பாதுகாத்துக் கொள்வது  மிகவும் கட்டாயமான  விடயமாகும். ஈமானின் கோட்பாடுகள் என்னவென்பதை அறிந்து கொள்ளாத வரை தங்களின் ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதென்பது கடின காரியமாகும்.

        எனவே சகல முஸ்லிம்களும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்பவர்களும், பாமர முஸ்லிம்களும் இஸ்லாமிய அகீதாவை-கொள்கையை அறிந்த கொள்ளும் பொருட்டு ‘அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்’ அவர்கள் “عَقِيْدَةُ أهْل السُّنَّةِ وَالجَمَاعَةِ” என்ற பெயரில் இஸ்லாத்தின் கோட்பாடுகள் பற்றி ஒரு கைநூலை வெளியிட்டுள்ளார்கள். அதன் மூலம் ஈமானின் ஆறு அடிப்படைகளையும் அல்குர்ஆன், அல் ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். மேலும் இந்த நூலுக்கு மாமேதை ‘அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் பின் பாஸ்’ அவர்கள் அணிந்துரை தந்திருப்பது மற்றுமொரு விஷேசமாகும். இதனை அடியேன் “இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளேன்.

         மூல ஆசிரியர் அஷ்ஷெய்க் அல் உஸைமீன் அவர்கள் பார் போற்றும் மாபெரும் அறிஞர். இவர் ஸஊதி அரேபியாவின் அல் கஸீமை சூழவுள்ள நகரங்களில் ஒன்றான ‘உனைஸா’ என்ற நகரத்தில் ரமழான் மாதம் 27ம் அன்று இரவு, ஹிஜ்ரி 1347ம் ஆண்டு பிறந்தார். அவரின் தந்தையின் பெயர் முஹம்மத் இப்னு ஸுலைமான் என்பதாகும்.

           அஷ்ஷெய்க் அல் உஸைமீன் அவர்கள் தன்னுடைய தாய் வழி பாட்டன் அப்துர் ரஹ்மான் இப்னு ஸுலைமான் அத்தாமிக் என்பவரிடம் அல்குர்ஆனை ஓதக் கற்றுக் கொண்டார். மேலும் தனது 14வது வயதில் அல்குர்ஆனை மழுமையாக மனனம் செய்து அவரிடம் ஒப்புவித்தார். பின்னர் அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ்ஸஃதி அவர்களிடம் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் உயர் கல்வியையும் முடித்துக் கொண்ட அவர் ‘உனைஸா’ ஜும்ஆ பள்ளிவாசலில் தனது அந்திம காலம் வரை பிரதம இமாமாக சேவையாற்றினார். ஏக காலத்தில் கலாபீட விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்தார். மேலும் எழுத்துத் துரையில் ஆர்வமுள்ள இவர் 85 க்கும் மேற்பட்ட பல பாரிய நூல்களையும், கைநூல்களையும் எழுதியுள்ளார். நாம் மொழி பெயர்த்துள்ள இந்தக் கைநூலும் அதன் வரிசையில் வந்த ஒன்றே.

       ஹிஜ்ரி 1421ஷவ்வால் மாதம் 15ம் திகதி புதன் கிழமை மஃரிபுக்குச் சற்று முன் அன்னார் காலமானார்.انا لله وانا اليه راجعون மறு நாள் அஸர் தொழுகையின் பின் மஸ்ஜிதுல் ஹராமில் அன்னாரின் ஜனாஸா தொழுகை நடாத்தப் பட்டது. அதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவரின் ஜனாஸா மக்காவில் நல்லடக்கம் செய்யப் பட்டது. மறு நாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை அடுத்து ஸஊதி அரேபியாவின் எல்லா நகர பள்ளி வாசலிலும் ‘காஇப்’ ஜனாஸாத் தொழுகை நடாத்தப்பட்டது. அல்லாஹ் அன்னாரின் கப்ரை விசாலமாகவும் ஒளிமயமாவும் ஆக்கி அவருக்கு ஜன்னதுல் பிரதவ்ஸை நஸீபாக்கு வானாக.

அன்னாரின் இந்த நூலின் மூலம் நாமும் வாசகர்களும் பயன் பெற எல்லாம் வல்ல நாயன் அருள் புரிவானாக! மேலும் இதன் மூல ஆசிரியருக்கும் இதனை மொழி பெயர்த்தோனுக் கும் மற்றும் இதனை வெளியிட உதவிய சகலருக்கும் ஈருலகிலும் அல்லாஹ் அருள் புரிவானாக! மேலும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் நமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மொழிபெயர்த்தோன்.

திக்குவல்லை இமாம் (ரஷாதி -  பெங்களூர்)

15/4/2015

 அணிந்துரை

அளவற்றஅருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன். புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் கிளையார், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

நம் சகோதரர் மாமேதை மதிப்பிற்குரிய அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின் அவர்கள், இஸ்லாமிய அகீதா- கோட்பாடு பற்றி சுறுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு தொகுப்பை வெயிட்டுள்ளார். அவரின் பெறுமதி மிக்க அந்தத் தொகுப்புப் பற்றி எனக்கு அறியக் கிடைத்தது. மேலும் அதனை முழுமையாகச் செவிமடுக்கும்   வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அவர் அதில்

أَهْلُ السُنَّةِ والجَمَاعَةِ” இனரின்  அகீதா- நம்பிக்கைக் கோட்பாடு என்னவென்பதை தெளிவு படுத்தியுள்ளார். அல்லாஹ்வின் யதார்த்தம் மற்றும் அவனின் திருநாமங்கள் பண்புகள் என்ற அத்தியாயத்தின் மூலமும் அல்லாஹ்வின் மலக்குகள், ரஸுல்மார்கள், மற்றும் அவனின் வேதங்கள், இறுதி நாள் என்ற அத்தியாயங்களின் மூலமும் மற்றும் “القَضَاءُ والقَدْرُ - சகல காரியங்களும் அல்லாஹ்வின் விதிப்படியே நடைபெறுகின்றன” என்ற அத்தியாயத்தின் மூலமும் அவர் அதனைத் தெளிவுபடுத்திள்ளார். மேலும் அதனூடாக மாணவர்களுக்கும், மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் அவசியமான பல விடயங்களையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். அது மாத்திரமன்றி பல நூல்களில் இடம் பெறாத அகீதா பற்றிய பல விடயங்களையும் அவர் அதில் இணைத்துள்ளார்.

       அல்லாஹ் அவருக்கு நற்கூலியைத் தந்தருள்வானாக! மேலும் அவரின் அறிவை விருத்தி செய்து அவருக்கு மேலும் நல்வழியைக் காட்டியருள் வானாக! மேலும் அவரின் இந்த நூலின் மூலமும் அவ்வாறே இஸ்லாத்தின் அவரின் ஏனைய தொகுப்புக்கள் மூலமும் யாவரும் பயனடையவும் அருள் புரிவானாக! மேலும் நம்மையும், அன்னாரையும் மற்றும் ஏனைய சகோதரர்களையும் நேர் வழியைப் பெற்றவர் களாகவும், மேலும் தஃவாப் பணியை தெளிவான அறிவுடன்  முன்னெடுத்துச் செல்லும் தாஇகளாக வும் ஆக்கியருள்வானாக!  நிச்சயமாக எல்லாவற்றையும் செவிமடுப்போனும் நமக்கு அருகில் உள்ளோனும் அவனே. அவனின் அருளும் சாந்தியும் நமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அல்லாஹ்வின் பால் தேட்டமுள்ள அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸீஸ் பின் பாஸ் (அவரின் குற்றங்களை அல்லாஹ் மன்னித்தருள்வானாக)

****************

 முன்னுரை

        சர்வ உலகையும் பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் சொந்தம். மேலும் சிறந்த முடிவு அல்லாஹ்வை அஞ்சி நடக்கும் முத்தகீன்களுக்கு உரியதாகும். அநியாயக் காரர் அல்லாத மற்றவர்கள் மீது நமக்கு எந்தப் பகையுமில்லை. உண்மையான அரசன் அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் எவனுமில்லை, எதுவுமில்லை. அவன் ஒருவன். அவனுக்கு இணை ஒன்றுமில்லை என சாட்சி பகர்கின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியானும் தூதரும் மற்றும் நபிமார்களில் இறுதியானவரும், முத்தகீன்களின் - இறைபக்தர்களின் இமாமும் ஆவார்கள் என்றும் சாட்சி பகர்கிறேன். அன்னாரின் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் மீதும்  மற்றும் இறுதி நாள் வரையில் அவர்களைப் பின்பற்றி நடக்கின்ற நல்லவர்கள் மீதும் என்றென்றும் அல்லாஹ்வின் அருள் உண்டாவதாக!

       நிச்சயமாக அல்லாஹ் தன் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை உலகத்தாருக்கோர் அருட் கொடையாகவும் இறை பக்தர்களின் தலைவராக வும் ஆக்கி நேர்வழியையும், உண்மையான வேதத்தையும் அன்னாரிடம் கொடுத்து அவரை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தான். மேலும் அன்னாரின் மூலமும் அன்னவருக்கு அருளப்பட்ட வேதம் மற்றும் இறை ஞானத்தின் மூலமும் இஸ்லாமிய மார்க்கத்தின் சரியான கோட்பாடுகள், செய்திகள், நற்பண்புகள், மற்றும் மேலான நல்லொழுக்கம் ஆகிய நன்மை பயக்கும் சகல கர்மங்களையும் அல்லாஹ் தெளிவு படுத்தி யுள்ளான். அதன் பிரகாரம் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தெளிவான ஒரு வழியின் மீது தன் உம்மத்தினரை விட்டுச் சென்றார்கள். அந்த வழியானது பகலைப் போன்று இரவிலும் பிரகாசமானது.

         அழிவைத் தேடிக் கொண்டவர்களல்லாது வேறு எவரும் அந்தப் பாதையை விட்டும் விலகிப் போகவில்லை. நபியவர்களின் சிரேஷ்ட புருஷர்களான ஸஹாபாக்களும், தாபிஈன்களும், அவர்களைப் பின் தொடர்ந்த தபஉத் தாபிஈன்களும் அந்த வழியில் தொடர்ந்து சென்றனர். மேலும் அவர்கள் நபியவர்களின் ஷரீஆவையும், ஸுன்னாவையும் கடை பிடித்து அதனை நடைமுறைப் படுத்தியும் வந்தனர்.

      மேலும் அதன் மூலம் உறுதிப் படுத்தப்பட்ட அகீதாவையும், அனுஷ்டானங்களையும், நற்பண்பு களையும் மற்றும் நல்லொழுக்கங்களையும் அவர்கள் தம் பற்களால் இறுகப் பிடித்துக் கொண்டனர். இவ்வாறு ஒளிவு மறைவின்றி உண்மையான அந்தக் கொள்கையை அவர்கள் முன்னெடுத்துச் சென்றனர். அப்போதெல்லாம் அவர்களை நிராகித்து வந்தவர்களாலும் எதிர்த்து வந்தவர்களாலும் அவர்களின் நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. இவ்வாறு அவர்களின் இறுதி மூச்சு வரையில் அதே வழியில் அவர்கள் போய்க் கொண்டிருந்தனர்.

       அல்லாஹ்வின் அருளால் அவர்களின் அடிச்சுவட்டை நாமும் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். அல்குர்ஆன் மூலமும் ஸுன்னாவின் மூலமும் உறுதி செய்யப்பட்ட வாழ்க்கை முறையை ஏற்று நடந்த அவர்களின் வழிகாட்டலின் மூலமும் நாம் நேர்வழியை அடைந்து கொண்டோம். இதன் புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் الحمد لله மேலும் நமக்கு அல்லாஹ் அருளிய அவனின் நிஃமத்துக்களை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற் காகவும், விசுவாசிகள் யாவரும் தங்களின் கடமை என்னவென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்பதற்தாகவுமே இதனை நாம் குறிப்பிடு கிறோம். மேலும் நாமும் நம் முஸ்லிம் சகோதரர்களும்  لا إاله إلا الله محمد رسول لله என்ற உறுதியான கலிமாவின் மீது ஈருலகிலும் ஸ்திரமாக இருக்க அருள் புரியுமாறு நாம் அல்லாஹ்வை வேண்டுகிறோம். மேலும் கொடை வள்ளலான அவனிடம் அவனின் அருளை நம்மீது சொரியுமாறும் வேண்டுகிறோம்.

       இவ்விடயம் முக்கியம் வாய்ந்தது என்பதாலும் இவ்விடயத்தில் மக்களின் ஆசை பரவலாகக் காணப் படுவதாலும் சுருக்கமாக நமது اهل السنة والجماعة இன் – அகீதா கோட்பாடு பற்றி எழுத ஆசைப்பட்டேன். அதாவது அல்லாஹ் பற்றியும், அவனின் மலக்குகள், ரஸுல்மார்கள் இறுதி நாள், மற்றும் சகல கர்மங்களும்,  அவை நல்லவையோ தீயவையோ எதுவானாலும் அல்லாஹ்வின் நியதிப்படியே நடைபெறுகின்றன என்பது பற்றியும்  اهل السنة والجماعة  இனரின் அகீதா - கோட்பாடு யாது என்பதைத் தெளிவு படுத்த  விரும்பினேன். எனவே இதனை அல்லாஹ்வுக்கென்ற தூய எண்ணத்துடன் அவனுடைய திருப்திற்கு ஏற்றாப் போல் அவனுடைய அடியார்கள் பயன்பெறத் தக்கதாக ஆக்கியருளுமாறு அவனிடம் வேண்டியவனாக இக்காரியத்தை ஆரம்பம் செய்கிறேன்.

முஹம்மத் அஸ்ஸாலிஹ் அல் உஸைமீன்

***********

 நமது அகீதா கோட்பாடு:-

         அல்லாஹ்வின் மீதும் அவனின் மலக்குகள் மீதும் இறுதி நாள் மீதும் மற்றும் நன்மை தீமை எனும் சகல காரியங்களும் அல்லாஹ்வின் நியதிப்படி நடைபெறுகின்றன எனும் நமது அகீதா-கோட்பாடானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டதாகும்.

1.     அல்லாஹ்வின் ‘ருபூபியத்தின்’ மீது நம்பிக்கை வைத்தல். அதாவது சிருஷ்டிகர்த்தாவும், அரசனும் சகல கர்மங்களையும் திட்டமிட்டுச் செயற்படுத்து பவனும், யாவற்றையும் பரிபாலிப்பவனும் அல்லாஹ்  ஒருவனே என்று நம்புவது. இதுவே  الإيمان بربوبية الله எனப்படுகிறது.

2.     அல்லாஹ்வின் தெய்வீகத்தின் மீது நம்பிக்கை கொள்வது. உண்மையாகவே வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே. அவனைத் தவிர்ந்த அனைத்து கடவுள்களும் பொய்யான வை என்று நம்புவது.

இது الإيمان بألوهية الله எனப்படும்

3.      الايمان بأسمائه وصفاتهஅல்லாஹ்வின் திருநாமங்க ளையும் அவனின் பண்புகளையும் கொண்டு ஈமான் கொள்ளுதல்.   

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்களும் பரிபூரணமான பண்புகளும் இருக்கின்றன என்று நம்புது الإيمان بأسمائه وصفاته எனப்படும்.

4.    الإيمان بوحدانية الله تعالى  

தன்மைக்கு ஒப்பான எவரையும் நீங்கள் அறிவீர்களா?”  (19:65) எனும் அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் மீது நம்பிக்கை கொள்ளுதல்.

அல்லாஹ் தன்னுடைய படைத்தல், காத்தல், அழித்தல் எனும் கருமங்களிலும் மற்றும் தன்னுடைய தெய்வீகத்திலும், தன்னுடைய திருநாமங்கள், பண்புகளில் ஏகன் என்றும், இவை எதிலும் அவனுக்கு இணை எதுவும் இல்லை யெனவும் நம்புவது;

இது الإيمان بوحدانية الله எனப்படும்.

"رَبُّ السَّماوَاتِ وَالأرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهِ هل تعلَم لَهُ سَمِيَّا"   (مريم:65)               

“வானங்களையும் பூமியையும் இவற்றிற்கு மத்தியில் உள்ளவைகளையும் படைத்து வளர்ப்ப வனும் அவனே! ஆதலால் அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு வழிப்படுவதில் (உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும்) நீங்கள் சகித்துக் கொள்ளுங்கள்.” எனும் அவனுடைய வசனம் இங்கு கவனிக்கத் தக்கதாகும்.

‘அல்லாஹ்’ என்ற சொல் குறிக்கும் கருப்பொருள் யாது? அவனின் பண்புகள், திருநாமங்கள் யாவை? அவனைப் பற்றி எவ்வாறு நம்பிக்கை கொள்வது? போன்ற அல்லாஹ்வைப் பற்றிய சகல விடயங் களையும் அல்குர்ஆனும் ஸுன்னாவும் தெளிவு படுத்துகிறன. எனவே நமது ஈமான் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுவது போன்று அமைதல் வேண்டும். அதற்கு மாறாக நமது நம்பிக்கைகள் இருந்தால் நாம் உண்மையான முஃமின்களாக இருக்க முடியாது. அந்த வசனங்கள் வருமாறு:

الله لاَ اِلَه إلَّا هُوَ الحَيُّ القَيُّمُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إلاَّ بِإذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاواتِ وَالأرْضَ وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ العَلِيُّ العَظِيْمُ. (البقرة:255

    “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்துத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை, அவன் உயிருள்ளவன், என்றும் நிலையானவன், அவனை சிறு உறக்கமும் பீடிக்காது, பெரும் நித்திரையும் பீடிக்காது, வானங்கள் பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே, அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யார் தான் பரிந்து பேசக் கூடும்? அவர்களுக்கு முன் இருப்ப வற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுடைய அறிவிலிருந்து யாதொன்றையும் அறிந்து கொள்ள முடியாது. அவனுடைய ‘குர்ஸீ’ வானங்கள் பூமியை விடவும் விசாலமானது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. மேலும் அவன்தான் மிக உயர்ந்தவன்.  மிக மகத்தானவன்.” (2:255)

      பின்வரும் வசனங்களில் அல்லாஹ்வின் சில பண்புகளும், சில திருநாமங்களும், மற்றும் அவனுடைய அதிகாரங்களும் தெளிவு படுத்தப் பட்டுள்ளன. இவற்றின் மீதும்  ஈமான் கொள்வது நமது கடமை.

هُوَ الله الَّذِي لاَ إلَهَ إلَّا هُوَ عَالِمُ الغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمنُ الرَّحِيمُ.

   “அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயன் இல்லை, மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்தவன், அவனே அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். (59:22)

هُوَ الله الَّذِي لاَ إلَهَ إلاَّ هُوَ المَلِكُ القُدُّوسُ السَّلاَمُ المُؤْمِنُ المُهَيْمِنُ العَزِيزُ الجَبَّارُ المُتَكَبِّرُ سُبْحَانَ الله عَمَّا يُشْرِكُون

"அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனுமில்லை. அவன் தான் மெய்யான அரசன். பரிசுத்தமானவன். சாந்தியும் சமாதானமும் அளிப்பவன். அபயமளிப்பவன். பாதுகாவலன். மிகைத்தவன். அடக்கி ஆளுபவன். பெருமைக்குரியவன். அவர்கள் (காபிர்கள்) கூறும் இணை துணைகளை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். (59:23)

  هُوَ اللهُ الخَالِقُ البَارِئُ المُصَوِّرُ لَهُ الأسْمَاءُ الحُسْنَى يُسَبِّحُ لَهُ مَافِي السَّمَاواتِ والأرْضِ وَهُوَ العزيزالحَكِيم

“அந்த அல்லாஹ்தான் படைப்பவன். படைப்புகளை ஒழுங்கு செய்பவன். படைப்புகளை உருவமைப்பவன். அவனுக்கு அழகான பல திருப்பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனைத் துதி செய்கின்றன. அவனே மிகைத்தவன். மிக ஞானமுடையவன். (59:24)

     மேலும் குழந்தை பாக்கியத்தை கொடுப்பவனும் சிருஷ்டிகள் அனைத்துக்கும் உணவளிப்பவனும் அல்லாஹ்தான். அவனுக்கு ஒப்பாக யாருமில்லை. மறைவான விடயங்கள் பற்றிய அறிவும் அவனிடமே உண்டென நம்புவதும் அவசியம். அதனை இந்த திருவசனங்கள் தெளிவு படுத்துகின்றன. 

لِلَّهِ مُلْكُ السَّمَاواتِ وَالأرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ

    “வானங்கள் பூமி ஆகியவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. இவற்றைத் தவிர அவன் விரும்பியதையும் படைக்கின்றான். ஆகவே அவன் விரும்பியவர்களுக்கு பெண் சந்ததியை  மட்டும் கொடுக்கிறான். மேலும் அவன் விரும்பியவர் களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான். (42:49)

اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّإنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا اِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ

 "அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கிறான். அன்றி அவன் விரும்பியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவனும் ஆற்றலுடையவனுமாக இருக்கிறான்.” (42:50) 

لَيْسَ كَمِثْلِهِ شَيئٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ

“அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் செவியுறுபவனாகவும் உற்று நோக்கக் கூடியவனாகவும் இருக்கிறான்.” (42:11)

  لَهُ مَقَالِيدُ السَّمَاواتِ وَالأرْضِ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ اِنَّهُ بِكُلِّ شَيْئٍ عَلِيم

“வானங்கள் பூமியின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். இன்னும் சுருக்கியும் விடுகிறான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் நன்கறிந்தவன்.” (42:12)

وَمَا من دَابَّةٍ فِي الأرْضِ الَّا عَلَى اللهِ رِزْقُهَا وَيَعلَم مُسْتَقَرَّهَا وَمُسْتَوْعَدَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ

“உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை. அவை வாழும் இடத்தையும் அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிவான். இவை அனைத்தும் தெளிவான பதிவுப் புத்தகத்தில் பதிவாகியுள்ளன.” (11:6)

وَعِنْدَهُ مَفَاتِحُ الغَيْبِ لاَ يَعْلَمُهَاالَّا هُوَ وَيَعْلَمُ مَافِي البَرِّ وَالبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ الَّا يَعْلَمُهَا وَلاَ حَبَّةٍ فِي ظُلُمَاتِ الأرْضِ ولاَ رَطْبٍ ولَا يَابِسٍ الَّا فِي كِتَابٍ مُبِينٍ.

“மறைவைனவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்றில் உள்ளவற்றை அவனையன்றி வேறெவரும் அறிய மாட்டார். நிலத்திலும் நீரிலும் உள்ளவற்றை நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிருவதில்லை. பூமியில் அடர்ந்த இருளில் கிடக்கும் வித்தும், பசுமையானதும் உளர்ந்ததும் அவனுடைய தெளிவான புத்தகத்தில் பதியப்படாமல் இல்லை.” (6:59)

اِنَّ اللهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَة وَيُنَزِّلُ الغَيْثَ وَيَعْلَمُ مَافِي الأرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأيِّ أرْضٍ تَمُوتُ إنَّ الله عَلِيمٌ خَبِير  

“நிச்சயமாக காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் இருக்கிறது. அவனே மழையை இறக்கி வைக்கிறான். அவனே கர்ப்பங்களில் தரிப்பதையும் அறிவான். எவரும் நாளைக்கு அவன் என்ன செய்வான் என்பதை அறிய மாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் எவரும் அறிய மாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிந்தவனும் தெரிந்தவனுமாக இருக்கிறான்.” (31:34)

     மேலும் அல்லாஹ் அவன் விரும்பியதை விரும்பியவாறு விரும்பிய நேரத்தில் பேசும் ஆற்றல் படைத்தவன், அவனுடைய வாக்குகள் எல்லை இல்லாதவை, எழுதி முடிக்க முடியாதவை, அவை பரிபூரணமானவை, உயர்வானவை. மேலும் அல்குர்ஆன் அவனின் உண்மையான வாக்குகள், அதனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஹம்மத் நபியவர்களின் உள்ளத்தில் போட்டார்கள் என்று நம்புவது கடமை. அது பற்றிய வசனங்கள் சில வருமாறு:

وَكَلَّمَ اللهُ مُوسَى تَكْلِيمًا

“மூஸாவுடன் அல்லாஹ் பேசியுமிருக்கிறான்.” (4:164)

وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَ‌بُّهُ

   “நாம் குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்த பொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான்.” (7:143)

وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّورِ الأيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا

  “தூர் மலையின் வலது பக்கத்தில் இருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை நெருக்கமாக்கினோம்.” (19:52)

لَوْ كَانَ البَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ البَحْرَ قَبْلَ أنْ تَنْفَدَ كَلِمَاتِ رَبِّي

“கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால் என் இறைவனின் வாக்கியங்கள் முடிவுறுவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் மை அனைத்தும் செலவாகிவிடும்.” (16:109)

وَلَوْ أنَّمَا فِي الأرْضِ مِنْ شَجَرَةٍ أقْلاَمٌ وَالبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللهِ إنَّ اللهَ عَزِيزٌ حَكيمٌ

      “பூமியிலுள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து பின்னும் ஏழு கடல் நீரையும் மையாக வைத்து எழுதிய போதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும்  இருக்கிறான்.” (31:27)

وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا

 “உங்களது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகிவிட்டது.” (6:115)

 وَمَنْ أصْدَقُ مِنَ اللهِ حَدِيثًا

     “அல்லாஹ்வை விட உண்மை சொல்பவர் யார்?” (4:87)

قُلْ نَزَّلَهُ رُوحُ القُدُسِ مِنْ رَبِّكَ بِاالحَقِّ

   “மெய்யாகவே இதை உங்கள் இறைவனிட மிருந்து ரூஹுல் குத்ஸ் எனும் ஜிப்ரீல் தான் இறக்கி வைத்தார்.” (16:102)

وَإنَّهُ لَتَنْزِيلَ رَبِّ العَالَمِينَ

     “நிச்சயமாக இது (அல்குர்ஆன்) அகிலத்தாரின் இறைவனால் தான் அருளப்பட்டது.” (26:192)

نَزَلَ بِهِ الرُّوحُ الأمِينُ عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ المُنْذِرِينَ

     “ருஹுல் அமீன் (என்னும் ஜிப்ரீல்) இதனை உங்களது உள்ளத்தில் இறக்கி வைத்தார்.” “நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததற்காக” (26:193,194)

بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ

    “தெளிவான அரபி மொழியில்” (26:195)

    மேலும் அல்லாஹ்வின் யதார்த்தமும் பண்புகளும், அவனின் அனைத்து   சிருஷ்டி களையும் விட   மேலானது, என்றும் தன் கீர்த்திக்கு ஏற்றால் போல் அதற்குப் பங்கமில்லாமலும் சிருஷ்டிகளுக்கு ஒப்புவமை இல்லாதவாறும் அவன் அர்ஷுக்கு மேல் ஆகிவிட்டான் என்றும், அவன் அர்ஷுக்கு மேல் உயர்ந்து விட்ட போதிலும் அவன் தன் சிருஷ்டிகளுடன் இருக்கிறான். எனவே அவர்களின் நிலைமைகளை அறியக் கூடியவனாகவும் அவர்கள் சொல்வதைக் கேட்ப வனாகவும் அவர்களின் செயலைப் பார்ப்ப வனாகவும் மேலும் அவர்களின் கருமங்களை நிர்வகிக்கின்றவனாகவும் இருக்கின்றான் என்றும் நம்புவது அவசியம். ஆனால் ஜஹ்மியாக்களும், அவதாரக் கொள்கை வாதிகளும் சொல்வது போன்று அல்லாஹ் பூமியில் தன் சிருஷ்டிகளுடன் இருக்கிறான் என்று நாம் சொல்லவும் இல்லை. சொல்லவும் மாட்டோம். ஏனெனில் இப்படிச் சொல்வது அல்லாஹ்வின் விடயத்தில் இழுக்கை ஏற்படுத்தும். மேலும் அப்படிச் சொல்கிறவன் வழி கெட்டவனும் காபிருமாவான். இதனை வழியுறுத்தும் திருவசனங்களை இங்கு கவனிப்போம்.

وَهُوَ القَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَهُوَ الحَكِيمُ الخَبِيرُ

    “அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அன்றி அவன்தான் மிக்க ஞானமுடையவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.” (6:18)

 خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ فِي سِتَّةِ أيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى العَرْشِ يُدَبِّرُ الأمْر

    “அந்த அல்லாஹ்தான் வானங்களையும் ஆறு நாள்களில் படைத்து அர்ஷின் மேல் உயர்ந்து விட்டான். எல்லா காரியங்களையும் அவனே திட்டமிட்டு வருகிறான்.” (10:3)

لَيْسَ كَمِثْلِهِ شَيْئٌ وَهُوَ السَّمِيعُ البَصِيْرُ

  “அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் செவியேற்பவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்.” (42:11)

   மேலும் அல்லாஹ் இவ்வுலக வானில் தினமும் இரவின் எஞ்சிய மூன்றிலொரு நேரம் வரை அடியார்களின் மூறையீடுகளுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்றும் இறுதி நாளில் மக்களிடம் தீர்ப்பு வழங்குவதற்காக அவன் வருவான் என்றும் நம்புவதும் நமது கடமை. இதனை பின்வரும் இறை வசனங்கள் உறுதி செய்கின்றன.

كَلَّا إذَا دُكَّتِ الأرْضُ دَكًّا دَكًّا   

“ஆகவே பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்...” (89:21)

وَجَاءَ رَبُّكَ وَالمَلَكُ صَفًّا صَفًّا 

  “உங்களது இறைவனும் வருவான். மலக்குகளும் அணி அணியாக வருவார்கள்.” (89:22)

وَجِيئَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الإنْسَانُ وَأنَّى لَهُ الذِّكْرَى

   “அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும் அச்சமயம் அறிவால் அவனுக்கு என்ன பயன்?” (89:23)

 إنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا يُرِيدُ  

    “நிச்சயமாக உங்களது இறைவன், தான் விரும்பியவற்றை செய்து முடிப்பான்.” (11:107)

அல்லாஹ்வின் إرَادَةُ - நாட்டம் இரு வகைப்படும். ஒன்று اِرَدةٌ كَوْنِيَةٌ - ஆக்கல் நாட்டம் அதாவது உருவாக்கல் பற்றிய நாட்டம் அல்லது எண்ணம்.

 இரண்டாவது, اِرَادَةٌ شَرَعِيَّةٌ – நீதி அல்லது நன்நெறி பற்றிய நாட்டம். இதில் முந்தியது இவ்வுலகில் அல்லாஹ் உருவாக்க நினைக்கும் சகல காரியங்களும் அடங்கும். அதில் நல்லது தீயது என்ற பாகுபாடில்லாமல் இறைவனின் எண்ணத்தின் பிரகாரம் அவை அனைத்தும் கட்டாயமாக நடந்தேறும். ஆனால் அவை அல்லாஹ்வின் விருப்பத்திற் குரியனவாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. அவற்றில் அல்லாஹ்வுக்கு விருப்பமானவையும் இருக்கலாம். விருப்பமற்றவையும் இருக்கலாம்.

اِرَادَةٌ شَرَعِيَّةٌ  என்பது சமூக நீதியுடனும் நன்நெறியுடனும் சம்பந்தப்பட்டவை. இவை அல்லாஹ்வுக்கு விருப்பமானவை. உதாரணமாக தொழுகை நோன்பு மற்றுமுண்டான நற்காரியங்கள்.

     இவற்றை அல்லாஹ் நாடுகிறான் என்றால் அதன் பொருள் அதனை அவன் விரும்புகிறான் என்பதாகும். எனினும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய اَرَادةٌ شَرَعِيَّةٌ   வை அவன் விரும்பிய போதிலும் அது செயல் வடிவம் பெற வேண்டுமென்ற கட்டாயமில்லை என்றும் நம்பிக்கை கொள்வதும் அவசியம். இதனை தெளிவுபடுத்தும் சில வசனங்கள் வருமாறு:

இராதா கௌனியாவுக்கு உதாரணம்:

وَلَوْ شَاءَ اللهُ ماَاقْتَتَلُوا وَلَكِنَّ اللهَ يَفْعَلُ مَا يُرِيْدُ 

“அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ் தான் நாடியவைகளையே செய்வான்.” (2:253)

اِنْ كَانَ اللهُ يُرِيْدُ أنْ يُغْوِيكُمْ هُوَ رَبُّكُمْ 

“உங்களை வழிகேட்டிலேயே விட்டு விட வேண்டும். என்று அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. அவன்தான் உங்களைப் படைத்துக் காப்பவன்.” (11:34)

இராதா ஷரஈய்யாவுக்கு உதாரணம்:

وَاللهُ يُرِيدُ اَنْ يَتُوبَ عَلَيكُمْ  

    “அல்லாஹ்வோ நீங்கள் பாவத்திலிருந்து மீளுவதையே விரும்புகிறான்.” (4:27)

    மேலும் அல்லாஹ்வின் இராதாவை நாம் அறிந்து கொண்டாலும், அறியாமல் இருந்தாலும், அல்லது அதனைப் புரிந்து கொள்வதில் நம் சிந்தனையில் குறைபாடுகள் இருந்தாலும் அல்லாஹ்வின் இரண்டு வகை இராதாவும் அவனின் சூட்சும புத்தியின் பிரகாரம் நடைபெறுகின்றன என்று நாம் ஈமான் கொள்வது அவசியம்.

اَلَيْسَ اللهُ بِأحْكَمِ الحَاكِمِينَ

       “தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?” (95:8)

மேலும் அல்லாஹ் தன் நேசர்களை விரும்புகிறான்,     அவர்களும் அவனை  நேசிக்கின்றனர், மேலும் தான் கூறிய  நற்கருமங் களையும் நல்ல வாக்குகளையும் அவன் விரும்புகிறான், மற்றும் தான் தடை செய்துள்ள காரியங்களை அவன் வெறுக்கிறான், மற்றும் விசுவாசிகளையும் நற்காரியங்கள் புரிவோரையும் அவன் ஏற்றுக் கொள்கிறான் , அவனின் கோபத்துக்குள்ளான காபிர்களின் மீதும் ஏனையோர் மீதும் அவன் கோபம் கொள்கிறான் என்று நாம் விசுவாசம் கொள்வது கடமை. பின்வரும் வசனங்கள் இதனை உறுதி செய்கின்றன.

  قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ الله

“நீங்கள் கூறுங்கள். நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்.” (3:31)

  فَسَوْفَ يَأْتِ اللهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ

  “வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான். அவர்களும் அவனை நேசிப்பார்கள்.” (5:54)

  وَاَقْسِطُوا إنَّ اللهَ يُحِبُّ المُقْسِطِينَ

“நீதமாகத் தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.” (49:9)

وَاللهُ يُحِبُّ المُحْسِنِين

அல்லாஹ் நல்லவர்களையே நேசிக்கிறான். (5:93)

اِنْ تَكْفُرُوا فَإنَّ اللهَ غَنِيٌّ عَنْكُمْ وَلاَ يَرْضَى لِعِبَادِهِ الكُفْرَ وَإنْ تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ

            “அவனை நீங்கள் நிராகரித்து விட்ட போதிலும் நிச்சயமாக அல்லாஹ் உங்களின் மீது தேவையற்றவனாக இருக்கின்றான். எனினும் தன் அடியார்கள் நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்.” (39:7)

وَلَكِنْ كَرِهَ اللهُ انْبِعَاثَهُمْ فَثَبَّطُوا وَقِيلَ اقْعُدُوا مَعَ القَاعِدِينَ

            “அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாது தடை செய்து விட்டான். ஆகவே தங்குபவர்களுடன் நீங்களும் தங்கிவிடுங்கள்.” என்று கூறப்பட்டது. (9:46)

رَضِيَ اللهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَالِكَ لِمَنَ خَشِيَ رَبَّهُ

“அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைவர். எவன் தன் இறைவனுக்குப் பயப்படுகிறானோ அவனுக்குத் தான் இத்தகைய பாக்கியம் கிடைக்கும்.” (99:8)

وَلَكِنْ مَنْ شَرَحَ بِالكُفْرِ صَدْرًا فَعَلَيهِمْ غَضَبٌ مِّنَ اللهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ 

     “எனினும் எவனுடைய உள்ளத்திலாவது நிராகரிப்பு நிறைந்திருந்தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம் தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனை தான் உண்டு.” (16:106)

     மேலும் அல்லாஹ்வின் முகம், கண், கை, எனும்   வர்ணனைகள் யாவும் நிஜமானவை, எனினும் அவன் தன் சிருஷ்டிகள் எதற்கும் ஒப்பானவனல்ல என்றும் மேலும் அவனின் ஜீவனும், நிலையான தன்மையும் பரிபூரண மானவை என்ற படியால் அவனுக்கு சிறு தூக்கமும் வராது என்றும் அவன் எத்தனை பாரிய கருமங்களையும் நொடிப் பொழுதில் செய்ய வல்லவன். ஆனாலும் அவனுக்கு களைப்பு எதுவும் வராது என்றும், அல்லாஹ்வும் அவனின் தூதரும்  உறுதிப்படுத்தியுள்ள அவனின் திரு நாமங்களும் பண்புகளும் வாஸ்தவமானவை, ஆனால் இவை எதனையும் சிருஷ்டிகளுடன் ஒப்புநோக்கக் கூடாது என்றும் விசுவாசம் கொள்வது அவசியம். அவ்வாறே அல்லாஹ்வும் அவனின் தூதரும் அல்லாஹ்வின் விடயத்தில் நிராகரித்துள்ள பண்புகளை நாமும் நிராகரிப்பது கடமை. இனி இவற்றைத் தெளிவுபடுத்தும் சில திருவசனங் களைக் கவனிப்போம்.

وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُوالجَلاَلِ وَالإكْرَامِ

“மிக்க கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் நிலைத்திருக்கும்.” (55:27)

بَلْ يَداهُ مَبْسُوطَتانِ يُنْفِقُ كَيْفَ يَشَاءُ

“அல்லாஹ்வுடைய இரு கைகளோ விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாரெல்லாம் அள்ளிக் கொடுக்கிறான்.” (5:64)

وَمَا قَدَرُ اللهَ حَقَّ قَدْرِهِ وَالأرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ القِيَامَةِ والسَّمَاواتُ مَطْوِيَّاتُ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ   

     “அல்லாஹ்வின் தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக மேலானவன். அவன் மிக பரிசுத்தமானவன்.” (39:67)

وَاصْنَعِ الفُلْكَ بِأعيُنِنَا وَوَحْيِنَا

     “நாம் அறிவிக்கின்ற படி நம்முடைய கண் முன்னாகவே ஒரு கப்பலை நீங்கள் செய்யுங்கள்.” (11:37)

     மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “ஒளியே, அல்லாஹ்வின் திரையாகும். அதனை அவன் வெளிப்படுத்துவானாகில்  அவனின் பார்வை சிருஷ்டிகளில் எதன் மீதெல்லாம் விழுமோ அதுவெல்லாம் அவன் முகத்தின் ஒளிப் பிரவாகத்தால் எரிந்து விடும்.” என்று கூறினார்கள். அவ்வாறே அல்லாஹ்வுக்கு இரண்டு கண்கள் இருக்கின்றன என்பது அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் கொள்கையாகும். அதனை தஜ்ஜால் சம்பந்தமான இந்த ஹதீஸ் உறுதிப் படுத்துகிறது. “நிச்சயமாக அவன் ஒற்றைக் கண்ணன். உங்கள் இறைவனோ ஒற்றைக் கண்ணன் அல்ல.” என்று நபியவர்கள் நவின்றார்கள்.

     அல்லாஹ்வின் நிலைமைகளை வர்ணிக்கும் இன்னும் சில திரு வசனங்கள் வருமாறு:

لاَ تُدْرِكُهُ الأبْصَارُ  وَهُوَ يُدْرِكُ الأبْصَارَ وَهُوَ اللَّطِيْفُ الخَبِيرُ

   “பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றான். அவன் மிக நுட்பமானவன். மிக்க அறிந்தவன்.” (6:103)

وُجُوهٌ يَّوْمَئِذٍ نَاضِرَةٌ - إلَى رَبِّهَا نَاظِرَةٌ

    “அந்நாளில் சில முகங்கள் மகிழ்ச்சியுடைய வையாக இருக்கும். (அவை) தங்களின் இரட்சகனை நோக்கிய வண்ணமாக இருக்கும்.” (75:22,23)

لَيْسَ كَمِثْلِهِ شَيْئٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ

     “அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் செவியுறுபவனாகவும் உற்று நோக்குப வனாகவும் இருக்கிறான்.” (42:11)

لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ

       “அவனை சிறு தூக்கமும் பீடிக்காது. பெரும் நித்திரையும் பீடிக்காது.” (2:255)

إذَا اَرَاد شَيْئًا اَنْ يَقُوَلَ  لَهُ كُنْ فَيَكُونَ

     “அவன் யாதொரு பொருளைக் கருதினால் அதனை ‘ஆகுக’ எனக் கூறியதும் உடனே அது ஆகிவிடும்.” (37:82)

وَلَقَدْ خَلَقْنَا السَّمَاواتِ والأرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أيَّامٍ وَمَا مَسَّنَا مِنْ لُغُوبٍ

“நிச்சயமாக நாம்தான் வானங்களையும் பூமியையும் அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறே நாட்களில் படைத்தோம். அதனால் நமக்கு யாதொரு களைப்பும் ஏற்பட்டுவிடவில்லை.” (50:38)

அல்லாஹ்தான் தன்னைப் பற்றி நன்கு அறிவான். எனவே அவன் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள விடயங்களை அப்படி அப்படியே ஏற்றுக்கொள்வதும் மற்றும் தன்னுடைய விடயத்தில் எதையெல்லாம் அவன் நிராகரித்துள் ளானோ அதனை நாமும் நிராகரித்து விடுவதும் அவசியம். மேலும் மனிதர்களில் அல்லாஹ்வைப் பற்றி நன்கு அறிந்தவர் முஹம்மத் (ஸல்) அவர்களே என்ற படியால் அல்லாஹ்வின் விடயத்தில் அவர் குறிப்பிட்டுள்ள விடயங்களை ஏற்றுக் கொள்வதும், அன்னார் எதனை மறுத்தார்களோ அதனை நாமும் மறுத்துரைப்பதும் நமது கடமையாகும். இவ்விடயத்தில் எந்த  மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அவ்வாறே இவ்விடயத்தில் தடுமாற்றம் அடைய வேண்டிய தேவையும் இல்லை. எனவே இதுவரை குறிப்பிட்ட முறைப்படி அல்லாஹ்வின் மீது நாம் விசுவாசம் கொள்வது கடமை என்பது  நன்கு தெளிவு.

********************

அத்தியாயம்-1

           நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் ஸுன்னாவையும், மற்றும் அதன் வழி நடந்த முன்னோர்களினதும் இமாம்களினதும் வழிமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டே  அல்லாஹ்வின் பண்புகளில் சிலதை விரிவாகவும் இன்னும் சிலதை சுருக்கமாகவும் அவ்வாறே சில பண்புகள் அல்லாஹ்வுக்கு உடன்பாடானவை என்றும் இன்னும் சில உடன்பாடில்லாதவை என்றும் இதுவரை கூறினோம். 

மேலும் இவ்விடயத்தில் அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் உள்ள கூற்றுக்களை அதன் வெளிப்படையான கருத்திலேயே கவனித்தல் வேண்டும் என்பதும் மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதன் மூலம் கருதும் உண்மையான யதார்த்தமான பொருளை விட்டு விலகிச் சென்ற வழி தவறிய கூட்டத்தினர் போலல்லாது அல்லாஹ்வுக்குப் பொருத்தமான அதன் யதார்த்த கருத்தினையே வழியுறுத்த வேண்டும், என்பதே நமது நிலைப்பாடாகும்.

           மேலும் அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் வந்துள்ள விடயம் யாவும் உண்மையானவை. அவை ஒன்றோடொன்று முரண்பட முடியாதவை என்பதையும் நாம் உறுதியாக அறிவோம். இதனை அல்லாஹ்வின் வாக்கு உறுதிப்படுத்துகிறது.

اَفَلاَ يَتَدَبَّرُونَ القُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللهِ لَوَجَدُوا فِيْهِ اخْتِلاَفًا كَثِيْرًا 

“இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல முரண்பாடுகளை அவர்கள் காண்பார்கள்.” (4:82)

எனவே செய்திகள் ஒன்றோடொன்று முரண்படும் பட்சத்தில் அவற்றில் சில செய்திகள் பொய்யானது, அல்லது பிழையானது என்பதையே அது உணர்த்தும். ஆனால் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவிக்கும் செய்தியில் அது அசாத்தியமானதாகும். எனவே அல்லாஹ்வின் வேதத்திலும் ரஸுலின் ஸுன்னாவிலும் முரண் பட்ட செய்திகள் இருப்பதாக யாரேனும் வாதிடு வாரானால் அது அவரின் கெட்ட எண்ணத்தையும், சறுகிய மனநிலையையுமே பறைசாட்டும். எனவே அவர் தனது தவறான எண்ணத்தைக் களைந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவது கடமை. மேலும் எவரேனும் அல்லாஹ்வின் வேதத்திலும், ஸுன்னாவிலும் முரண்பாடிருப்பதாக ஊகிப்போராகில் அது அவரின் அறிவு குறைவை அல்லது அவரின் ஆய்வுத் திறனில் இருக்கும் குறைபாட்டை எடுத்துக் காட்டுவதாகவே அமையும். எனவே உண்மையை விளங்கிக் கொள்ளும் பொருட்டு அறிவைத் தேடுவதும், அதற்காக முயற்சி செய்வதும் அவரின் கடமையாகும். அப்போதும் உண்மை புரியவில்லை எனில் அது பற்றி மேலும் ஊகம் கொள்ளாமல் அந்த விடயத்தை கற்ற அறிஞர்களிடம் ஒப்படைத்து விடவேண்டும். மேலும் அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் முரண்பட்ட கருத்துக்கள் இல்லை யென்பதால் அது பற்றிய தெளிவு இல்லாத   போது கற்றறிந்த மேதைகள் சொல்வது போன்று “آمَنَّا بِهِ كُلٌ مِّنْ عِنْدِ رَبِّنَا இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான்.” (3:7) என்று கூறவேண்டும்.

************************

அத்தியாயம்-2 மலக்குகள் மீது ஈமான் கொள்ளல்.

         மலக்குகள் அல்லாஹ்வின் கண்ணியமான அடியார்கள்.  தன்னை வணங்குவதற்காகவே இவர்களை அல்லாஹ் படைத்தான். எனவே இவர்கள் எப்போதும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டும் அவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து கொண்டுமிருப்பார்கள் என்பதே மலக்குகளைப் பற்றிய நமது விசுவாசமாகும். இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,

عِبَادٌ مُكْرَمُونَ-

அவர்கள் அவனுடைய கண்ணிய மிக்க அடியார்கள். (21:26)

لاَ يَسْبِقُونَهُ بِاالقَوّلِ وَهُمْ بِأمْرِهِ يَعْمَلُونَ

      “இவர்கள் அவனை மீறி யாதொரு வார்த்தையையும்  பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டிருப் பார்கள்.” (21:27) என்று கூறுகிறான்.

நாம் இவர்களைக்  காண முடியாதவாறு நம்மை விட்டும் இவர்களை அல்லாஹ் மறைத்துள்ளான். எனினும் அவர்களை தன்னுடைய சில அடியார்களுக்கு அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டியுமிருக்கிறான்.

          நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பார்க்கும் போது அவர் தன்னுடைய அறுநூறு இறக்கைகளாலும் அடி வானத்தை மறைத்துக் கொண்டிக்கக் கண்டார்கள். ஒரு மனிதனின் தோற்றத்தில் மர்யம் (அலை) அவர்களிடம் வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் அன்னாருடன் உரையாடினார்கள். ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்கள் சகிதம் வீற்றிருக்கும் போது அங்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு மனிதனின் தோற்றத்தில் வந்தார்கள். எனினும் அவர் யாரென்பதை நபித் தோழர்களால் இனங்காண முடியவில்லை. அப்போதவர் வெண்நிற ஆடை அணிந்திருந்தார். அவரின் தலை முடி கருமையாக இருந்தது. அவரிடம் பிராயணத் தின் அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. அவர் தன் முழங்காலை நபியவர்களின் முழங்காலுடன் சேர்த்து அமர்ந்து கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் பரஸ்பரம் உரையாடினர். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அங்கிருந்து திரும்பியதும், தோழர்களிடம் அவர் தான் ஜிப்ரீல் என்று நபியவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் மலக்குகளுகளிடம் குறிப்பிடத்தக்க சில பொறுப்புக்கள் ஒப்படைக் கப்பட்டுள்ளன, என்பதை நாம் விசுவாசிக்கின் றோம். அல்லாஹ்விடமிருந்து நபிமார்களுக்கும் ரஸுல்மார்களுக்கும் வஹி கொண்டு வரும் பொறுப்பு ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அவ்வாறே உலகம் முடியும் தருவாயிலும் இறந்தவர்களை மீண்டும் எழுப்பும் போதும் ஸூர் ஊதும் பொறுப்பு இஸ்ராபீல் (அலை) இடமும், மழையின் பொறுப்பு மீகாஈல் (அலை) இடமும், உயிரைக் கைப்பற்றும் பொறுப்பு மலக்குல் மௌத்திடமும், நரகத்தின் பாதுகாப்புப் பொறுப்புக்கள் மாலிக் (அலை) அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவ்வாறே மலைகளின் பாதுகாப்புக்கெனவும் மற்றும் கர்ப்பத்திலிருக்கும் கருக்களின் பாதுகாப்புக் கெனவும், மனிதர்களின் பாதுகாப்புக்கெனவும் மற்றும் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைளைப் பதிவு செய்யவென அவர்களின் வலதிலும் இடதிலும் இரண்டு மலக்குகள் எனவும் பல்வேறுபட்ட மலக்குகளிடம் பிரத்தியேகமான பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

اِذْ يَتَلَقَّى المُتَلَقِّيَانِ عَنِ اليَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ

 “வலது புறத்தில் ஒருவரும் இடது புறத்தில் ஒருவருமாக இருவர் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர். (50:17)

 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ الاَّ لَدَيْهِ رَقِيْبٌ وعَتِيْدٌ

    “எதைக் கூறிய போதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை.” (50:18)

இவ்வாறே இறந்தவர்களை கப்ரில் வைத்த பின்னர் அவர்களிடம் கேள்விகள் கேட்பதற் காகவும் சில மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இறைவனைப் பற்றியும், மார்க்கத்தைப் பற்றியும், மற்றும் நபியைப் பற்றியும் அவர்கள் விசாரிப்பர். அவன் ஒரு நல்ல விசுவாசியாக இருந்தால் அவனுக்கு அங்கு ஆறுதல் அளிக்கப்படும். மேலும் சுவர்க்கத்தைக் கவனிக்கவெனவும் மலக்குகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

يُثَبِّتُ اللهُ الَّذِيْنَ آمَنُوا بِاالقَوْلِ الثَّابِتِ فِي الحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ وَيُضِلُّ اللهُ الظَّالِمِيْنَ وَيَفْعَلُ اللهُ مَا يَشَاءُ

     “மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் (கலிமா தையிப் எனும்) உறுதி மிக்க வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் அவர்களை உறுதிப் படுத்துகிறான். அநியாயக்காரர்களை தவறான வழியில் அல்லாஹ் விட்டு விடுகிறான். அல்லாஹ் நினைத்ததைச் செய்கிறான். (14:27)

وَالمَلاَئكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ

(சுவர்க்கத்தின்) ஒவ்வொரு வாசலிலிருந்தும் மலக்குகள் இவர்களிடம் வந்து” (13:23)

سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ 

     “நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். (இந்த) இறுதி வீடு நல்லதாயிற்று.” (13:24) என்று கூறுவார்கள்.

        மேலும் ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலக்குகளைப் பற்றிக் குறிப்பிடும் போது “வானத்திலுள்ள البَيْتُ المَعْمُور இல் தினமும் மலக்குகள் பிரவேசித்துக் கொண்டிருப்பர்.” என்று கூறினார்கள். இன்னொரு அறிவிப்பில் “தினமும் அதனுள் எழுபதாயிரம் மலக்குகள் தொழுது கொண்டிருப்பர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

*********************

அத்தியாயம்-3 நபிமார்கள் மீது விசுவாசம் கொள்ளல்.

                அல்லாஹ் சிலரை தூதர்களாகத் தெரிவு செய்து அவர்களைத் தன் சிருஷ்டிகளின் பால் அனுப்பி வைத்தான். இந்தத் தூதர்களில் முதலாமவர் நூஹ் (அலை) அவர்களும் இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களுமாவார் எனவும்நாம் விசுவாசம் கொள்கிறோம். 

رُسُلاً مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لَئَلاَّ يَكُونَ لِلنَّاسِ عَلَى اللهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللهُ عَزِيْزًا حَكِيْمًا

 “அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு யாதொரு வழியும் இல்லாதிருக்க இத்தூதர்க ளுக்குப் பின்னரும் பல தூதர்களை நற்செய்தி கூறுகின்றவர் களாகவும் அச்சமூட்டி எச்சரிக்கின்ற வர்களாவும் அனுப்பி வைத்தோம். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (4:165)

مَا كَانَ مُحَمَّدٌ اَبَا اَحَدٍ مِنْ رِّجَالِكُمْ وَلَكِنْ رَّسُولَ اللهِ وَخَاتَمَ النَّبِيِّيْنَ 

    “உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மத் தந்தையாக இருக்கவில்லை. எனினும் அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்க ளுக்கு முத்திரையாகவும், நபியாகவும் இருக்கின்றார். (33:40)

        மேலும் நபிமார்களில் மிகவும் சிறப்புக்குரியவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவார். அதன் பின் இப்ராஹீம், மூஸா, நூஹ், மர்யமின் மகன் ஈஸா ஆகியோர் சிறப்புக்குரியவர்களாவர். இவர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் போது அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

         “நபிமார்களிடமும் (சிறப்பாக) உங்களிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்துக் கொண்டி ருக்கிறோம். (என்பதை இவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்) (33:7)

     மேலும் சிறப்புக்குரிய அந்தத் தூதர்களின் ஷரீஆவிலுள்ள சகல சிறப்பம்சங்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஷரீஆவில் பொதிந்துள்ளது எனவும் நாம் நம்புகிறோம். ஏனெனில் அதனை அல்லாஹ்வின் இந்த வசனம் வழியுறுத்துகின்றது.

شَرَعَ لَكُمْ مِنَ الدِّيْنِ مَا وَصَّى بِهِ نُوحًا والَّذِي أوْحَيْنَا اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ اِبْرَاهِيْمَ وَمُوسَى وَعِيْسَى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَلاَ تَتَفَرَّقُوا فَيْهِ

     “நூஹ்வுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே நாம் உங்களுக்கு வஹியின் மூலம் அறிவிப்பதும் இப்ராஹீம், மூஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும், மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள் அதில் பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். (42:13)

         மேலும் ரஸுல்மார்கள் அனைவரும் சிருஷ்டிகள் என்பதும், அவர்களிடம் விசேடமான தெய்வீகத் தன்மைகள் எதுவுமில்லை என்பதும் நமது நம்பிக்கையாகும். இது பற்றி நூஹ் (அலை) அவர்கள் கூறியதை அல்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

وَلاَ اَقُولُ لَكُمْ عِنْدِيْ خَزَائِنُ اللهِ وَلاَ أعْلَمُ الغَيْبَ وَلاَ اَقُولُ إنِّي مَلَكٌ

 “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்றும் நான் உங்களிடம் கூறவில்லை. நான் மறைவானவற்றை அறிந்தவனும் அல்லன். (11:31)

மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்,

قُلْ لا اَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللهِ ولاَ أعْلَمُ الغَيْبَ وَلاَ اَقُولُ إنِّيْ مَلَكٌ

     (நபியே!) நீங்கள் அவர்களை நோக்கி, அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு மலக்கு என்றும் நான் கூறவில்லை.” என்று கூறுங்கள். (6:50) எனவும்,

  قُلْ لاَ اَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَّلاَ ضَرًّا إلَّا مَا شَاءَ اللهُ

   “அல்லாஹ் நாடிலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையையோ தீமையையோ செய்து கொள்ள எனக்கு சக்தி இல்லை” என்று நீங்கள் கூறுங்கள் (7:188) என்றும்,

قُلْ إنِّيْ لاَ اَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلاَ رَشَدًا

    “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையோ, தீமையையோ செய்ய ஒரு சிறிதும் சக்தியற்றவன்” என்றும் கூறுங்கள் (72:21) என முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான்.

தனது அந்த அடியார்களை, அல்லாஹ் தூதர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கண்ணியப்படுத்தினான். மேலும் அவர்களின் அந்தஸ்தையும் உயர்த்தி அவர்களைப் பாராட்டினான். எனவே ரஸுல்மார்களில் முதலாமவரான நூஹ் (அலை) அவர்களைப் பாராட்டும் போது அல்லாஹ் இப்படிக் குறிப்பிடுகின்றான்.

ذُرِّيَةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا

   “நாம் நூஹ் உடன் சுமந்து பாதுகாத்துக் கொண்ட அந்த மூதாதையினரின் சந்ததிகளே! அவர் (நூஹ்) நிச்சயமாக மிக்க நன்றி செலுத்தும் அடியானாகவே இருந்தார்.” (17:3)

     மேலும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் இவ்வாறு பாராட்டுகிறான்.

تَبَارَكَ الَّذِي نَزَّلَ الفرقان عَلَى عَبْدِهِ لَيَكُونَ لِلْعَالَمِيْنَ نَذِيْرًا

     “உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியாருக்கு இறக்கி வைத்தவன், மிகவும் அருள் மிக்கவன்.” (25:01)

    மேலும் ஏனைய ரஸுல்மார்களைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

وَاذْكُرْ عِبَادَنَا اِبْرَاهِيْمَ وَاِسْحَاقَ وَيَعْقُوبَ اُوْلِى الأيْدِي وَالأبْصَار

      “நமது அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூபை நினைத்துப் பாருங்கள். இவர்கள் கொடையாளிகளாகவும் அகப்பார்வை உடைய வர்களாகவும் இருந்தார்கள்.” (38:45)

وَاذْكُرْ عَبْدَنَا دَاوُدَ ذَا الأيدِ إنَّهُ اَوَّابٌ

    “பலசாலியான நமது அடியார் தாவூதை நினைத்துப் பாருங்கள். நிச்சயமாக அவர் நம்மையே நோக்கி நின்றார்.” (38:17)

وَوَهَبْنَا لِدَاوُدَ سُلَيْمَانَ نِعْمَ العَبْدُ إنَّهُ اَوَّابٌ  

     “தாவூதுக்கு ஸுலைமானை நாம் மகனாகத் தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் நம்மையே நோக்கி நின்றார். (38:30) என்று குறிப்பிட்டுள்ளான். மேலும் மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,

اِنْ هُوَ الَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلاً لَبَنِي اِسْرَائِيْلَ

       (ஈஸாவாகிய), அவர் நம்முடைய அடிமையே தவிர வேறில்லை. ஆயினும் அவர் மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அவரை உதாரண மாக்கினோம்.” (43:59)

           மேலும் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களோ முழு மனித சமூகத்தினருக்குமான ஒரு நபி என்றும் அன்னாருடன் தூதுத்துவம் நிறைவு பெறுகின்றது என்றும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் ஒன்றே. ஆகையால் வேறு எந்தவொரு மார்க்கத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றும் நாம் விசுவாசம் கொள்கிறோம்.

        எனவே, முஹம்மத் (ஸல்) அவர்கள் கடைசி நபி என்பதை யாரேனும் மறுத்தால்  அவர் சகல நபிமார்களையும் மறுத்தவராகவே கணிக்கப் படுவார் என்பதும் நமது நம்பிக்கையாகும். இதற்கு மாறான நம்பிக்கையுள்ள அனைவரும் مُرْتَدٌّ  – மதம் மாறியவராவார். எனவே தன்னுடைய இந்தப் பாவச் செயலுக்காக அவர் பாவமன்னிப்புக் கோருவது அவசியம். அப்படி செய்யத் தவறும் பட்சத்தில் அவர் சிறைச்சேதம் செய்யப்படல் வேண்டும் என்பதே நமது கொள்கையாகும். பின்வரும் வசனங்கள் இவற்றைத் தெளிவு படுத்துகின்றன.

كَذَّبَتْ قَوْمُ نُوحٍ المُرْسَلِيْنَ 

 “நூஹுடைய சமூகம் நம்முடைய தூதர்களைப் பொயாக்கினார்கள்.” (26:104)

            நூஹ் (அலை) அவர்களுக்கு முன்னர் ரஸுல்மார்கள் எவரும் அனுப்பப்படவில்லை. ஆயினும் அன்னாரை அவர்களின் சமூகம் ஏற்றுக் கொள்ள மறுத்தது, அது அன்னாருக்குப் பின்னர் வந்த சகல ரஸுல்மார்களையும் அவர்கள் மறுத்ததற்குச் சமம் என்பதையே இந்த வசனம் தெளிவு படுத்துகின்றது. எனவே அல்லாஹ்வின் நபியொருவரை ஏற்றுக் கொண்ட ஒரு சமூகம் இன்னொரு நபியை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர், தான் ஏற்றுக் கொண்ட நபியையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருதப்படுவார் என்பது இந்த வசனத்தில் இருந்து துலாம்பரமாகிறது.

اِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ اَنْ يُفَرِّقُوا بَيْنَ اللهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ اَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيْلاً

           “நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து விட்டு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்து விடக் கருதி சிலரை நம்பிக்கை கொள்வோம், சிலரை நிராகரிப்போம் எனவும் கூறி அவற்றுக்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார்களோ (4:150)

  اُولائِكَ هُمُ الكَافِرُونَ حَقًّا وَاَعْتَدْنَا لِلْكَافِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا

     “இத்தகையவர்கள் நிச்சயமாக நிராகரிப்ப வர்கள்தான். நிராகரிப்பவர்களுக்கு நாம் இழிவு தரும் வேதனையையே தயார்படுத்தி வைத்தி ருக்கிறோம். (4:151)

எனவே மூஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொண்ட யூதர்களாயினும், ஈஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர் களாயினும், இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை நபியென ஏற்றுக் கொள்வது கடமை. இல்லாது போனால் அவர்களின் அந்த ஈமான் பயன் தராது. அவர்களும் நரகத்திற்கு உரித்தான காபிர்களே என்பது இந்த திருவசனத்தின் மூலம் தெரிய வருகிறது.

            மேலும் நபியவர்களுக்குப் பின்னர் அன்னாரின் உம்மத்தினர் மத்தியில் அறிவையும், மற்றும் பிரச்சாரப் பணியையும் ஆட்சி அதிகாரத்தையும் முன்னெடுத்துச் சென்ற நேர்வழி பெற்ற கலீபாக்கள் இருந்தனர் என்பதையும் நாம் விசுவாசம் கொள்கிறோம். எனவே இஸ்லாமிய கிலாபத்தை பொறுப்பேற்றுக் கொண்டவர்களில் மிகவும் சிரேஷ்டமானவரும், தகுதி வாய்ந்தவரும் அபூபக்ர் ஸித்தீக் (ரழி) அவர்களாவர். அவர்களை அடுத்து உமர், உஸ்மான், அலி (ரழி) ஆகியோர் சிறந்த கலீபாக்கள் என்பதே நமது நம்பிக்கையும் நிலைப்பாடுமாகும். மேலும் இந்த நான்கு கலீபாக்களும் ஏனைய விடயங்களில் சிறப்புக்கு உரியவர்களாக இருந்ததைப் போன்று ஆட்சி நிர்வாகத்தில் அவர்கள் சிறந்தவர்கள் என்பதே நமது நம்பிக்கை. ஏனெனில் சிறப்புக்குரிய ஸஹாபாக்களின் காலத்தில் சிறப்பு குறைந்த ஒருவரை ஆட்சியாளராக அல்லாஹ் நியமிக்க மாட்டான் என்பது தெளிவு. எனவே அக்காலத்தில் அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை அல்லாஹ்  ஒப்படைத்ததானது அவர்கள் அவ்விடயத்தில் சிறந்தவர்கள் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

மேலும் ஆட்சி அதிகார விடயத்தில் சிலரைப் பார்க்கிலும் சிலருக்கு முதல் உரிமை வழங்கப் பட்டதானது, குறித்த விடயத்தில் ஒருவரை விட மற்றொருவர் சிறந்து விளங்கினார் என்ற அடிப்படையிலாகும். அவ்வாறன்றி சகல விடயத்திலும் ஒரு கலீபா இன்னொருவரைப் பார்க்கிலும் சிறப்புற்று விளங்கினார் என்பது அதன் பொருளன்று. ஏனெனில் பரஸ்பரம் ஒவ்வொருவரும் மற்றவரைப் பார்க்கிலும் இன்னொரு விடயத்தில் சிறப்புற்று விளங்கினார் என்பது தெளிவு. எனவே குலபா உர்ராஷிதீன்களின் விடயத்தில் இதுவே நமது நம்பிக்கையாகும்.

    மேலும் அல்லாஹ்,

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِاالمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ المُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللهِ

       “நீங்கள்தான் மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தினரிலெல்லாம் மிக்க மேன்மை யானவர்கள். நீங்கள் நன்மையான காரியங்களை ஏவி பாவமான காரியங்களிலிருந்து விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள்.” (3:110)

மற்றெல்லா சமூகங்களையும் விட சிறந்த சமூகம், அல்லாஹ்விடமிருந்து கண்ணியத்தைப் பெற்றுக் கொண்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகமே என்பது நமது மற்றுமொரு நம்பிக்கையாகும். அவ்வாறே இந்த சமூகத்தில் மிகவும் சிறப்புக்குரியவர்கள் ஸஹாபாக்களும் தாபிஈன்களும் தபஉத்தாபீஈன்களுமாவர் என்றும் விசுவாசம் கொள்கிறோம். மேலும் இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம் உண்மையின் மீது கியாமம் பரியந்தம் எப்போதும் இருந்து கொண்டே இருப்பர். அவர்களை எதிர்ப்பவர் களால் அவர்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் நா ம் நம்புகிறோம்.

       மேலும் ஸஹாபாக்கள் மத்தியில் நிகழ்ந்த முரண்பாடுகளுக்கும், குழப்பங்களுக்கும் காரணம் அவர்களின்  பலதரப்பட்ட  வித்தியாசமான ஆய்வுகளாகும். எனவே அவர்களின் ஆய்வுகளின் முடிவு சரியானவையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இரண்டு நன்மைகளும் அவை பிழையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு ஒரு நன்மையும் கிடைக்கும் என்றும் நாம் நம்புகிறோம்.

எனவே அவர்களின் தவறுகளைப் பற்றிப் பேசாமல் அவர்களின் நல்ல விடயங்களைப் பற்றி பேசுவதே நமது கடமை என்பதே நமது நிலைப்பாடாகும். எனவே அந்த நபித் தோழர்களைப் பற்றி குரோதம் கொள்ளாமலும், பொறாமை கொள்ளாமலும், நமகு உள்ளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறியுள்ள இந்த வாக்குகளை நாம் கவனத்தில் வைத்துக் கொள்வது மிக மிக கட்டாயமாகும்.

لاَ يَسْتَوِي مِنْكُمْ مَنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الفَتْحِ وَقَاتَلَ اُولَائِكَ أعْظَمُ دَرَجَةً مِنَ الَّذِيْنَ اَنْفَقُوا مِنْ بَعْدُ وَقَاتَلُوا وَكُلًّا وَعَدَ اللهُ الحُسْنَى

          “உங்களில் எவர் (மக்காவை) வெற்றி கொள்வதற்கு முன்னர் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தாரோ, அவர் மகத்தான பதவி உடையவர். ஆகவே அதற்குப் பின்னர் தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர் அவருக்குச் சமமாகமாட்டார். எனினும் இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையையே வாக்களித்திருக்கிறான்.” (57:10)

وَالَّذِينَ جَآءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْلَنَا وَإخْوَانَنَا الَّذِينَ سَبَقُونَا بِالإيْمَانِ وَلاَ تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِيْنَ آمَنُوا رَبَّناَإنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

 “எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ அவர்கள் “எங்கள்       இறைவா! எங்களையும் நீ மன்னித்தருள் எங்களுக்கு முன் நம்பிக்கை கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள். நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே. எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க கிருபையுடைவனாகவும் இரக்க முடையவனாகவும் இருக்கின்றாய்” என்று பிரார்த்தணை செய்து கொண்டே இருக்கின்றனர். (59:10)

*******************

 அத்தியாயம் – 5

 இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்ளுதல்

இறுதி நாள் உண்டென நம்புவதும் கடமை. உலகில் வாழ்ந்து இறந்து போன மனித குலம் இவ்வுலகம் முற்றாக அழிந்து போனதன் பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப்படுவர். அதன் பின் சுகபோகம் நிறைந்த சுவர்க்கத்திலோ அல்லது தண்டனைகள் நிறைந்த நரகிலோ அவர்கள் இருப்பர். இனி யௌமுல்கியாமா’ எனும் இறுதி நாளுடன் தொடர்புடைய மற்றும் பல விடயங்களைக் கவணிப்போம். அவையாவன:-

    البعث*     மீண்டும் எழுப்புதல்:-

இஸ்ராபீல் (அலை) ஸூர் எனும் ஊது குழலை இரண்டாம் தடவையாக ஊதியதும் மரணமடைந்த யாவரும் உயிர் பெற்று எழுவர். அப்போது அவர்கள் யாவரும் பிறந்த மேனியுடனும் வெற்றுக்காலோடும் சர்வ லோக இரட்சகனின் தீர்ப்பை எதிர்பார்த்த வண்ணம் இருப்பர். இது பற்றி அல்லாஹ் சொல்வதைக் கவணியுங்கள்.

وَنُفِخَ فِي الصُّورِ‌ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْ‌ضِ إِلَّا مَن شَاءَ اللَّـهُ ۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَ‌ىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُ‌ونَ ٦٨) الزمر( 

“ஸூர் ஊதப்பட்டால் வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர மூர்ச்சித்து மதி இழந்து விடுவார்கள். மறு முறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர் நோக்கி நிற்பார்கள்”. (39:68)

كَمَا بَدَأْنَا اَوَّلَ خَلْقٍ نُعِيْدُهُ.وَعْدًا عَلَيْنَا اِنَّا كُنَّا فَاعِليْنَ. (الانبياء:104)

      “முதல் தடைவ நாம் அவர்களைப் படைத்தது போன்றே நாம் அவர்கைள மீள வைப்போம்.இது நம் நீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம்” (21:104)

صُحُفُ الأعمال*பதிவேடு:-

 ஒவ்வொருவரும் தத்தமது கிரியைகளைப் பார்த்துக் கொள்வதற்காக அவரவரின் பதிவேடு அவர்களின் கையில் கொடுக்கப்படும். அப்போது சிலரின் வலது கரத்திலும் இன்னும் சிலரின் இடது கரத்திலும் அவை வழங்கப்படும். இவை யாவும் நிஜம் என்பதே நமது நம்பிக்கை.

فَأمَّا مَنْ اُوْتِيَ كِتَابَهُ بيمينه فسوف يحاسب حسابا يسيرا (الإنشقاق:7,8)   

       “ஆகவே எவருடைய வலது கையில் அவருடைய ஏடு கொடுக்கப் படுகின்றதோ, அவன் மிக்க இலகுவாக கேள்வி கணக்குக் கேட்கப்படுவான்” (84:7’8)

  وينقلب الى اهله مسرورا (الإنشقاق:9(

  அவன் சந்தோசப் பட்டவனாகத் தன்னுடைய குடும்பத்தார்களிடம் திரும்புவான்”(84:9)

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَ‌اءَ ظَهْرِ‌هِ ﴿١٠﴾ فَسَوْفَ يَدْعُو ثُبُورً‌ا ﴿١١﴾ وَيَصْلَىٰ سَعِيرً‌ا ﴿١٢﴾ (الإنشقا84:10,11,112)

   எவனுடைய ஏடு அவனுடைய முதுகுக்குப் புறம் கொடுக்கப்பட்டதோ, அவன் கேடுதான் என்று சப்தமிட்டுக் கொண்டே, நரகத்தில் நுழைவான்” (84:10,11,12)

وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَ‌هُ فِي عُنُقِهِ ۖ وَنُخْرِ‌جُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورً‌ا ﴿١٣﴾  (الإسراء:13)  

     “ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய குறிப்பை அவனுடைய கழுத்தில் நாம் மாட்டயிருக்கின்றோம். மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம்.அவன் அதனை விரித்துப் பார்ப்பான்.” (17:13)

اقْرَ‌أْ كِتَابَكَ كَفَىٰ بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا ﴿١٤﴾  (الإسراء:14)

“அவனை நோக்கி “இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே உன் புத்தகத்தை நீ படித்துப் பார் என்று கூறுவோம்” ( 17:14)

      நாளை மறுமை நாளில் எந்தவொரு ஆத்மாவுக்கும் அநீதி நிகழா வண்ணம் ஒவ்வொருவரின் செயலும் நிறுத்து சரிபார்க்கப் படும் என்ற விடயத்தையும் நாம் நம்புகிறோம். இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ(الزلزلة:7)

ஆகவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அதனைக்கண்டு கொள்வார். (99:7)

  وَمَنْ يَعْمَلْ مِثْقالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ (الزلزلة:8)

எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் கண்டு கொள்வான்.” (99:8)

فَمَنْ ثَقٌلَتْ مَوَازِيْنُهُ فَأُلَئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ (المؤمنون :102) 

எவருடைய நன்மையின் எடை கணக்கின்றதோ அவர்கள் தாம் வெற்றி அடைவார்கள்” (23:102)

وَمَنْ خَفَّتْ  مَوَازِيْنُهُ فَألَئِكَ الَّذِيْنَ خَسِرُوْا أَنْفُسَهُمْ فِيْ جَهَنَّمَ خَالِدُوْنَ (المؤنون:103)

எவர்களுடைய (நன்மையின்) எடை குறைகின்றதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டு எந்நாளுமே நரக்தில் தங்கிவிடுவார்கள்”(23:103)

تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَاكَالِحُوْنَ ( المؤمنون :104)

“அவர்களுடைய முகங்களை நெருப்புப் பொசுக்கும். அதனால் அங்கு அவர்களின் முகம் விகாரமாக இருக்கும” (23:104)

مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَيِّئَةِ فَلاَ يُجْزَى إِلاَّ مِثْلَهَا وَهُمْ لاَيُظْلَمُوْنَ (الأنعام:160)

"எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றேயன்றி அவருக்கு கூலி கொடுக்கப்பட மாட்டாது. அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.” (6:160)

     *ஷபாஅத்:-

      கியாமத்துடைய நாளில் மக்கள், தங்களை துக்கமும் துயரமும் சூழ அந்த வெட்ட வெளியில் குழுமி இருப்பார்கள்.  அதிலிருந்து விடுதலை பெற அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள் அதற்காக அல்லாஹ் விடம் பரிந்து பேசுமாறு ஆதம், நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகிய ரஸூல்மார்களிடம் வேண்டுவார்கள். ஆனால் யாருக்கும் அனுமதி கிடைக்காது. ஈற்றில் முஹம்மது  (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் அனுமதி கிடைக்கும். எனவே நபியவர்கள் எல்லா மக்களுக்குமாக அல்லாஹ்விடம் ஷபாஅத் செய்வார்கள். இதுவே 'الشفاعة الكبرى'  எனப்படுகிறது. ரஸூல் ( ஸல்) அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் சிறப்பு மிகு இந்த ஷபாஅத்த உண்மையென நாம் நம்புகிறோம்.

     இவ்வாறே  நரகில் போடப்பட்ட சில முஃமின்களை விடுவிப்பதற்காக ரஸூல் (ஸல்) அவர்களுக்கு மாத்திரமன்றி ஏனைய நபிமார்கள், முஃமின்கள் மற்றும் மலக்குகள் சிலருக்கும் சபாஅத் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும். மேலும் அல்லாஹ் தன் அருளால் ஷபாஅத் எதுவும் இல்லாமலும் சில முஃமின்களை நரகில் இருந்து விடுதலை செய்வான்.

     எனவே இத்தகைய ஷபாஅத்துக்கள் யாவும் உண்மை யென்பதே நமது நம்பிக்கையும் நிலைப்பாடு மாகும்.

*ஹவ்ழுல் கௌஸர்:-

இறுதி நாளில், மறுமையில், கடும் வெயிலில் நீரின்றி மக்கள் தாகத்தால் தகிப்பர். ‘ஹவ்ழுல் கௌஸர்’ எனும் நீர் தடாகத்தை தவிர வேறு நீர் வளம் எதுவும் அங்கு இருக்காது. அதன் நீள அகலம் ஒரு மாத பயணத்தின் தூரமாகும். அதன் நீர், பாலை விட வெண்மையாகவும், தேனை விட இனிமையாகவும், கஸ்தூரியை விட வாசமாகவும் இருக்கும். முஃமின்களுக்கு அதிலிருந்து தண்ணீர் வழங்கப்படும். எவர் அதிலிருந்து ஒரு தடவை தண்ணீர் அருந்தினாரோ அவருக்கு அதன் பின்னர் தாகமே வராது.

الصراط المستقيم*   :- சிராத்

      இது நரகின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலத்தின் பெயர்.  இதனைத் தாண்டியே சுவர்க்கம் செல்ல வேண்டும். தவறினால் நரகம் தான் தஞ்சம். நற் கருமங்களின் பரிமானத்தின் படி அதனை சிலர் வேகமாகவும் இன்னும் சிலர் மெதுவாகவும் கடந்து செல்வர். இதன் பிரகாரம் சிலர் மின்னல் வேகத்திலும் இன்னும் சிலர் காற்றின் வேகத்திலும் மற்றும் சிலர் பறவையின் வேகத்திலும், பயணிகளின் வேகத்திலும் அதனை கடப்பர். அவ்வமயம் நபியவர்கள் அங்கு நிற்பார்கள். அப்போதவர்கள் “என் இரட்சகனே! பாதுகாப்பா யாக! பாதுகாப்பாயாக!” என்று மன்றாடுவார்கள். அப்போது நற்கிகரியைகள் குறைந்தவர்களும் அதனைக் கடக்க அங்கு வருவார்கள். அப்போது அதன் இரு மறுங்கிலும் மாட்டப் பட்டிருக்கும் கொக்கிகள் செயற்பட ஆரம்பிக்கும். யார் அதன் சிறாய்ப்புக்கு இலக்காக வில்லையோ அவர் தப்பித்துக் கொள்வார். ஆனால் அதில் சிக்குண்டவர் நரகில் விழுவார். இவ்வாறு மறுமை நாள் குறித்தும் அதன் பயங்கர நிலவரம் குறித்தும் ஸஹீஹான ஹதீஸ்களில் வந்துள்ள சகல செய்திகளையும் நாம் நம்புகிறோம். அதன் அபாயங்களிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக. மேலும் நபியவர்களுக்குப் பிரத்தியேகமாக வழங்கப் பட்டிருக்கும் மற்றுமொரு ஷபாஅத்தின் மூலம் சுவர்க்கவாசிகளை சுவர்க்கத்தில் பிரவேசிக்க அனுமதிக்கு மாறு பரிந்து பேசுவார்கள் என்றும், எந்த ஒரு கண்ணும் பார்த்திராத, எந்த ஒரு செவியும் கேட்டிராத, எந்த ஒரு உள்ளமும் கற்பனை செய்ய முடியாத அருள் நிறைந்த சுவர்க்கம் முஃமின்களுக்காகவும், தண்டனைகள் நிறைந்த நரகம் காபிர்களுக்காக வும், பாவிகளுக்காகவும் அல்லாஹ் தயார்ப்படுத்தி வைத்துள்ளான் என்றும் நாம் நம்புகிறோம். இதனை வழியுறுத்தும் சில திருவசனங்கள் வருமாறு:

فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِي لَهُمْ مِنْ قُرَّةِ أعْيُنٍ جَزَاءًا بِمَا كَانُوا يَعْمَلُونَ

 “அவர்கள் செய்த காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக் கூடிய (உன்னதமான)தை எவராலும் அறிந்து கொள்ள முடியாது.” (32:17)

اِنَّا اَعْتَدْنَا لِلظَّالِمِيْنَ نَارًا اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا وَاِنْ يَسْتَغِيْسُوا بِمَاءٍ كَالمُهْلِ يَشْوِي الوُجُوهَ بِئْسَ الشَّرابُ وَسَاءَتْ مُرْتَفَقًا

   “அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தை தான் தயார்ப்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜுவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகத்தைச் சுட்டுக் கருக்கி விடும். அன்றி அது மிக்க கெட்ட குடிபானமாகும். மேலும் அவர்கள் இளைப்பாறும் இடம் மிகக் கெட்டது.” (18:29)

وَمَنْ يُؤْمِنُ بِاللهِ وَيَعْمَلْ صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيْهَا اَبَدًا قَدْ اَحْسَنَ اللهُ لَهُ رِزْقًا 

    “எவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டு நற்செயல்கள் செய்கின்றார் களோ அவர்களை சுவனபதிகளில் (அல்லாஹ்) புகச் செய்வான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகான அருளே புரிவான்.” (65:11)

إنَّ اللهَ لَعَنَ الكَفِرِيْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِيْرًا  

                                                                                       “மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பாளர்களைச் சபித்து விட்டான். மேலும் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்குத் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.” (33:64)

خَالِدِيْنَ فِيْهَا اَبَدًا لاَ يَجِدُونَ وَلِيًّا وَلاَ نَصِيْرًا

 “அவர்கள் என்றென்றும் அதில் தான் தங்கிவிடுவார்கள். பாதுகாப்புத் தரக் கூடிய வர்களையும், உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காண மாட்டார்கள்” (33:65)

  يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فَي النَّارِ يَقُولُونَ يَالَيْتَنَا آطَعْنَا اللهَ وَاَطَعْنَا الرَّسُولَا

   “நரகில் அவர்களுடைய முகங்கள் புரட்டிப் புரட்டி எடுக்கப்படும் நாளில் அவர்கள் ‘எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா?’ என்று கதறுவார்கள்.” (33:66)

     யாரெல்லாம் அவர்களின் பெயர் கொண்டு அல்லது குணம் கொண்டு சுவர்க்கத்திற்குப் பாத்தியதை உடையவர்கள் என்று அல்குர்ஆன் மூலம் அல்லது ஸுன்னா மூலம் அத்தாட்சிப் படுத்தப்பட்டுள்ளனரோ அவர்கள் யாவரும் சுவர்க்கவாசிகள் என்று நாமும் உறுதிப் பட சாட்சி பகர்கிறோம். அவ்வாறே யாரெல்லாம் நரகத்திற்கு உரித்தானவர் என்று சாட்சி பகரப் பட்டுள்ளனரோ அவர்களை நாமும் நரகவாசிகள் என்றே சாட்சி பகர்கிறோம். சுவர்க்கவாசிகள் என குறிப்பிட்டு சாட்சி அளிக்கப்பட்டவர்களுக்கு உதாரணமாக அபூபக்ர், உமர், உஸ்மான்,அலி (ரழி) அன்ஹும் போன்றவர் களையும், நரவாசிகள் என குறிப்பிட்டு சாட்சி அளிக்கப்பட்டவர்களுக்கு உதாரணமாக அபூ

லஹப், அம்ர் இப்னு லுஹை அல் குஸாஈ போன்றோரையும் குறிப்பிடலாம். 

         மேலும் தங்களின் இரட்சகனும், ரஸுலும் யார் என்பது பற்றியும் தங்களின் மார்க்கம் யாது என்பது பற்றியும் கப்ரில் வைத்து கேட்கப்படும் கேள்விகளும் அது போன்ற ஏனைய சோதனை களும் உண்மையென்றும் அப்பொழுது ஒரு முஃமின்,  என்னுடைய மார்க்கம் இஸ்லாம், என்னுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களாவார் என்று பதிலளிப்பான். அவன் ஒரு காபிராகவோ, முனாபிக்காகவோ  இருந்தால் அது பற்றி எனக்கொன்றும் தெரியாது. ஆனால் மக்கள் எதனையோ சொல்ல நானும் கேட்டேன். அதனையே நானும் சொன்னேன் என்பான். இப்படியான நிகழ்வுகளும் உண்மையென்பதே நமது நம்பிக்கை. இது பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,

  يُثَبّتُ اللهُ الَّذِيْنَ آمَنُوا بِالقَوْلِ الثَّابِتِ فِي الحَيَاةِ الدُّنْيَا وَفِي الأخِرَةِ

“மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை இம்மையிலும், மறுமையிலும் (கலிமா தையிப் எனும்) உறுதி மிக்க இவ் வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்துகிறான்.” (14:27)

        மேலும் கப்ரில் முஃமின்கள் சுகமாகவும், காபிர்களும் அநியாயக்காரர்களும் துன்புறுத்தலு க்கு மத்தியிலும் இருப்பார்கள் என்பதையும் நாம் நம்புகிறோம். இதனை அல்லாஹ்வின் இந்த வசனங்கள் உறுதி செய்கின்றன.

   الَّذِيْنَ تَتَوَفَّانُمُ المَلاَئِكَةُ طَيّبِيْنَ يَقُولُونَ سَلاَمٌ عَلَيْكُمْ اُدْخُلُوا الجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْلَمُونَ     

        “நல்ல நிலையில் இருந்தவாறு இவர்களின் உயிரைக் கைப்பற்றும் மலக்குகள் அவர்களிடம் سَلاَمٌ عَلَيْكُمْ  – உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நீங்கள் செய்து கொண்டிருக்கும் நல்ல காரியங்களின் காரணமாக சுவனத்திற்குச் சொல்லுங்கள்” என்று கூறுவார்கள். (16:31)

 وَلَوْ تَرَى اِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ المَوْتِ وَالمَلاَئِكَةُ بَاسِطُوا اَيْدِيْهِمْ اَخْرِجُوا اَنْفُسَكُمْ اَليَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الهَوْنِ بِمَا كُنْتُمْ تَقُولُونَ عَلَى اللهِ غَيْرَ الحَقِّ وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ

      இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீங்கள் அவர்களைப் பார்ப்பீர்களாயின் மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி “உங்களுடைய உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் அவனுடைய வசனங்களயும் பெருமை கொண்டு புறக்கணித்தும் வந்தீர்கள். அதன் பலனே இது” என்று அவர்கள் கூறுவதை நீங்கள் காண்பீர்கள். (6:93)

          இது சமபந்தமாக  ஏராளமான தகவல்களை ஹதீஸ்களில் காணலாம். எனவே மறைவான இத்தகைய விடயங்கள் பற்றி அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் வந்துள்ள சகல விடயங்கள் மீதும் விசுவாசம் கொள்வது எல்லா முஃமின்கள் மீதும் கடமையாகும். மேலும் இவ்வுலக விடயங்களுக் கும், மறு உலக விடயங்களுக்கும் மத்தியில் பெரிய வேறுபாடு உண்டென்ற படியால் மறு உலகத்தின் விவகாரங்களை இவ்வுலக விவகாரங்களுடன் ஒப்பு நோக்கலாகாது என்பதையும் புரிந்து கொள்வது அவசியம்.

**************

 அத்தியாயம்-5–

 விதியை ஏற்றுக் கொள்ளுதல்.

القَدْرُ  என்றால் அதன் பொருள் விதி என்பதாகும். பிரபஞ்சத்தில் நிகழும் நல்ல தீய காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பூர்விக அறிவினதும், சூக்சும புத்தியினதும் அடிப்படை யிலேயே நடை பெறுகின்றன என்ற நம்பிக்கை الإيْمَانُ بِالقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ எனப்படுகிறது. இந்த விதியையும் நாம் நம்புகிறோம். இந்த விதியானது நான்கு படித்தரங்களைக் கொண்டது.

விதி யாவும் அல்லாஹ்வின் அறிவிக்குட்பட்டது என்று நம்புதல். அதாவது பிரபஞ்சத்தில் நடந்து முடிந்தவையும் நடக்க இருப்பவையும், அவை எப்படி நடைபெற இருக்கின்றன என்பதையும் அல்லாஹ் பூர்வீகத்திலேயே அறிவான் என்பதாகும். அவனுடைய அறிவானது அவன் ஒன்றை அறியாமல் இருந்து பின்னர் அதனைப் பற்றிப் புதிதாக அறிந்து கொண்டான் என்றும் அவன் முன்னர் அறிந்திருந்த ஒன்றை மறந்து விடக் கூடியவன் என்றும் சொல்வதற்கில்லை. ஆகையால் அவனுடைய அறிவோ பூர்வீகமானது. நிலையானது. மாற்றமில்லாதது என்று நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.

1)   விதி பதியப்பட்டுள்ளது என நம்புதல்: அதாவது இறுதி நாள் வரையில் நடை பெற விருக்கும் சகல கர்மங்களும் ‘,اللوح المحفوظ என்ற பாதுகாப்பான பதிவேட்டில் பதிவு செய்யப் பட்டுள்ளன என்று நம்புதல். இது பற்றி அல்லாஹ் கூறுவதாவது,

اَلَمْ تَعْلَمْ اَنَّ الَله يَعْلَمُ ما فِي الَّسماواتِ والأرْضِ ، اِنَّ ذلك في كِتابٍ، اِنَّ ذلك عَلى اللهِ يسِيرٌ (الحج:70)

    வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ்  நன்கறிவான், என்பதை நீங்கள் அறியவில்லையா? நிச்சயமாக இவை யாவும் அவனுடைய ‘லவ்ஹுல் மஹ்பூழில்’ இருக்கின்றன. (22:70)

2) المَشيئة, எனும் அல்லாஹவின் நாட்டத்தின் பிரகாரமே யாவும் நடை பெருகின்றன என்று நம்புதல்:

    இதன் படி வானம் பூமியில் நிகழும் சகல கர்மங்களும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படியே நடை பெறுகின்றன எனும் நம்பிக்கை உறுதி செய்யப் படுகிறது. ஆகையால் அவன் நாடியதே ஆகும், அவன் நாடாத எதுவும் ஆகாது என்பதே நமது நம்பிக்கையாகும்.

3)الخَلْق , வடிவமைத்தல்:

   4)       சகல கருமங்களும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படியே செயல் வடிவம் பெறுகின்றன என்பதை இது உறுதி செய்கிறது. இவ்விடயத்தில் நமது நிலைப்பாடும் இதுவே. இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

اللَه خالِقُ كُلِّ شَيْئٍ وهو علَى كُلِّ شَيئٍ وَكِيْلٌ (الزمر:62)  

2)   அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன். அவனே எல்லா பொருள்களின் பொருப்பாளன்.  (39:62)

لَه‘ مَقاليدُ السَّماوات وَالأرضِ (الزمر:63)

3)     வானங்கள் பூமியிலுள்ளவைகளின் சாவி அவனிடமே இருக்கிறது. (39:63)

எனவே அல்லாஹ்விடமிருந்தும் அவனின் சிறுஷ்டிகளிட மிருந்தும் நிகழும் சகல கருமங்களும் இந்நான்கு படித்தரங்களுக்குற் பட்டைவயாகும். எனவே அடியார்களின் சொல், செயல் சார்ந்த சகல நடவடிக்கைகளும் அல்லாஹ் அறிந்தவை, அவனின் ஏட்டில் எழுதப்பட்டவை, அவன் நாடியவை, அவன் சிருஷ்டித்தவை என்பதே நமது நிலைப்பாடு. இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,

لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيْمَ (التكوير :28)

ஆகவே உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவன் (இந்த வேத்தைக் கொண்டு நல்லுனர்ச்சி பெறுவான்) (82:28)

وَمَا تَشَاءُوْنَ اِلاَّ اَنْ يَشَاءَ اللهُ رَبُّ الَعالَمِيْنَ (التكوير:29)

  “எனினும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.” (82:29)

وَلَوْ شَاءَ اللهُ مَاقْتَتَلُوا وَلكِنَّ اللهَ يَفْعَلُ مَا يُرِيْدُ (البقرة:253)

   “அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ், தான் நாடியவைகளையே செய்வான்.” (2:253)

وَلَوْ شَاءَ اللهُ مَافَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ (الأنعام:137)

    “அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே நீங்கள் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுக்களையும் விட்டு விடுங்கள்.” (6:137)

وَاللهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ (الصّافّات:96)

 “உங்களையும் நீங்கள் சித்தரித்த அவைகளையும் அல்லாஹ்வே படைத்தான்.” (37:96)

        எனவே ‘கத்ரின்’ இந்த நிலை வாஸ்தவமானது. நிஜமானது. எனினும் காரியத்தைத் தெரிவு செய்யும் சுதந்திரத்தையும் அதனை மேற்கொள்ளும் ஆற்றலையும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்பதையும் நாம் நம்புகிறோம். எனவே அடியானின் செயல் அவனின் தெரிவின் பிரகாரமும், ஆற்றலின் பிரகாரமும் நடைபெறுகின்றன என்பதற்கான ஆதாரங்கள்:   وَلَوْ اَرَادُوا الخُرُوجَ لَاَعَدُّوا لَهُ عُدَّةً (التوبة:46)

1.    “அவர்கள் புறப்பட எண்ணியிருந்தால் அதற்கு வேண்டிய தயாரிப்புகளை அவர்கள் செய்திருப்பார்கள்.” (9:46)

       அடியான் தன்னுடைய நாட்டத்தின் பிரகாரமும், விருப்பத்தின் படியும் தயாரிப்புகளை மேற் கொள்ள முடியும் என்பதை இந்த திருவசனம் உறுதி செய்கிறது.

2. ஒரு கருமத்தை செய்யும் படி அல்லது அதனைத் தவிர்ந்து கொள்ளும் படி அடியானுக்கு அறிவுறுத்துதல். ஒரு கருமத்தை தெரிவு செய்யும் சுதந்திரமும், அதனை மேற் கொள்ளும் ஆற்றலும் அடியானிடம் இல்லையெனில் அத்தகைய கருமத்தைப் பற்றி அவனுக்கு அறிவுறுத்துவதன் மூலம் இயலாத கருமத்தை மேற் கொள்ளும் படி அவனிடம் நிர்பந்திப்பதாகவே அது அமையும். அப்படியாயின் அது அல்லாஹ்வின் ஹிக்மா -சூக்சும புத்திக்கும் அவனுடைய அருளுக்கும் எதிரானது. அவ்வாறே,

لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا (البقرة:286)

   “அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.” (2:286) என்ற அல்லாஹ்வின் வாக்குக்கும் எதிரானது.

3. நற்கருமம் புரிந்தவனை பாராட்டுதல், தீய கருமம் புரிந்தவனை இகழுதல், மேலும் வெகுமதி வழங்குதல். அடியானின் செயல் அவனின் விருப்பத்தினதும் தெரிவினதும் அடிப்படையில் நிகழ்வு பெறாத பட்சத்தில் அவன் செய்த நல்ல கருமத்துக்காக அவனைப் பாராட்டுவதில் அர்த்த மில்லை. மேலும் அவனின் தீய காரியத்துக்காக அவனைத் தண்டிப்பதோ அநீதியாகும். ஆனால் அல்லாஹ்விடமிருந்து அர்த்தமற்ற காரியமும், அநீதியான செயலும் நிகழ்வதென்பது அசாத்திய மான விடயம். அதனை விட்டும் அவன் தூய்மையானவன்.

4.  ரஸுல்மார்களை அல்லாஹ் அனுப்பியதன் நோக்கம் மனிதர்களுக்கு சுவர்க்கம் பற்றி நற்செய்தி கூறவும், நரகம் பற்றி எச்சரிக்கை செய்யவும் தான். ஆனால் மனிதர்களுக்கு தங்களின் செயலை தெரிவு செய்வதற்கான சுதந்திரமும் அதனை செய்வதற்கான ஆற்றலும் இல்லையெனில் ரஸுல்மார்களின் வருகை அர்த்தமற்றதாகி விடும்.

5. எல்லா காரியவான்களும் எழும்புதல், அமருதல், உள்ளே செல்லல், வெளியே வருதல், ஊரிலே தங்கியிருத்தல், பிரயாணம் செய்தல் போன்ற தன்னுடைய கருமங்களை யாருடைய நிர்ப்பந்தமும் இன்றி மேற்கொள்ளும் போது தனது அந்த விடயத்தில் யாருடைய தலையீடும் இல்லை என்பதை அவனால் உணர முடிகின்றது. இப்படி அவன் தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் மேற் கொள்ளும் கருமத்திற்கும், இன்னொருவனின் நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யும் கருமத்திற்கும் இடையே பாரிய வேறுபாடு இருக்கின்றது. இதனால் தான் நிர்ப்பந்தத்திற்கு இலக்கான ஒருவன் செய்த காரியத்தில் ஷரீஆ சட்ட ரீதியான வேறுபாட்டை ஏற்படுத்தித் தந்துள்ளது. எனவே தான் எவரேனும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி அதன் காரணமாகக் குற்றச் செயல் எதனையும் செய்யும் பட்சத்தில் அவனைக் குற்றவாளியாகக் காண முடியாது, என சட்டம் கூறுகின்றது.

           இது இவ்வாறு இருக்க ஒரு பாவி தனது குற்றச் செயலை அல்லாஹ்வின் விதியின் மீது சுமத்துவதில் எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் அந்தப் பாவ காரியத்தைப் புரியும் ஒரு பாவி தனது அந்தக் குற்றச் செயலை அல்லாஹ் நாடியிருந்தானா இல்லையா என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை. ஆகையால், தான் அறிந்திராத அந்த விடயத்தை எவ்வாறு அல்லாஹ்வின் விதியின் மீது அவன் சாட்டிவிட முடியும்? மேலும் ஒரு காரியம் நடந்தேரிய பின்னரே அதனை விதி என்று சொல்லலாமே அன்றி நடைபெற முன்னர் அதனை விதி என்று சொல்ல முடியாது. எனவே,

وَمَا تَدْرِيْ نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا (لقمان:34)

   “எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறிய மாட்டார்” (31:34) என்ற அல்லாஹ்வின் இந்த வாக்கு இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

    மேலும் தங்களின் செயலை அல்லாஹ்வின் மீது சுமத்துகின்ற இந்த வாதத்தை அல்லாஹ் இவ்வாறு தள்ளுபடி செய்கிறான்.

سَيَقُولُ الَّذِيْنَ اَشْرَكُوا لَوْ شَاءَ اللهُ مَا اَشْرَكْنَا وَلاِ آبَاؤُنَا وَلاَ حَرَّمْنَا مِنْ شَيْئٍ كَذَالِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ حَتَّى ذَاقُوا بَأْسَنَا قُلْ هَلْ عِنْدَكُمْ مِنْ عِلْمٍ فَتُخْرِجُوهُ لَنَا اِنْ تَتَّبِعُونَ الَّا الظَّنَّ وَاِنْ كُنْتُمْ اِلَّا تَخْرُصُونَ (الأنعام:148)

    “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்களுடைய மூதாதைகளும் இணை வைத்திருக்க மாட்டோம். யாதொன்றையும் தடுத்திருக்கவும் மாட்டோம்.” என்று இணை வைத்து வணங்கும் இவர்கள் கூறக் கூடும். இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம்முடைய வேதனையை சுவைக்கும் வரையில் பொய்யாக்கி வந்தனர். ஆகவே (இதற்கு) உங்களிடம் ஏதும் ஆதாரமிருந்தால் அதனை நம்மிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் சுயமாகவே கற்பனை செய்து கொண்ட வீண் எண்ணத்தில் மூழ்கிக் கிடப்பவர்களேயன்றி வேறில்லை. என்று கூறுங்கள். (6:148)

   மேலும் விதியில் பதியப்பட்டுள்ளது நற்செயலா அல்லது தீய செயலா என்பது தெரியாது என்ற விடயத்தில் இரண்டும் சமம் என்ற படியால் தன்னுடைய தலைவிதி பாவ காரியம் செய்வது தான் என்று குதர்க்கவாதம் புரியும், அல்லாஹ் வின் விதியை ஆட்சேபிக்கும் அந்தப் பாவியிடம் இதே வாதத்தின் பிரகாரம் நற்கருமம் ஒன்றை ஏன் செய்யக் கூடாதென கேட்க விரும்புகிறோம். ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம் “சுவனபதியில் இன்னாருக்குரிய இடம் இது வென்றும் நரகத்தில் இன்னாருக்குரிய இடம் இது வென்றும் ஒவ்வொரு மனிதருக்குமுரிய இடம் குறிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் “அப்படியாயின் நாம் இதன் மீது சார்ந்து அனுஷ்டானங்களை விட்டு விடலாமா?” என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள், இல்லை நீங்கள் அனுஷ்டானங் களைச் செய்து வாருங்கள்.  ஒருவனுக்காக எது சிருஷ்டிக்கப்பட்டுள்ளதோ அது அவனுக்கு இலகுபடுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

     மேலும் மக்காவுக்குச் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன என்றும்  அதில் ஒன்று பயங்கரமானது, கஷ்டமானது என்றும் மற்றையது பாதுகாப்பானது, இலகுவானது என்றும் விசுவாசமான ஒருவன் உன்னிடம் கூறினால், நீ இலகுவான பாதுகாப்பான வழியை விட்டு கஷ்டமான பயங்கரமான வழியைத் தெரிவு செய்ய மாட்டாய். அப்படி செய்தால் உன்னை ஜனங்கள் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள் அல்லவா?

     மேலும் உனக்கு இரண்டு உத்தியோகங்கள் காட்டப்படுகின்றன. அதில் ஒன்று நல்ல சம்பளமும் வாய்ப்பு வசதிகளும் உள்ளது என்றால் நீ அதனையே தெரிவு செய்து கொள்வாய். அப்படியாயின் மறு உலக விவகாரத்தில் மட்டும் பொறுப்புகளை விதியின் மேல் சுமத்தி விட்டு கீழ்த்தரமான விடயத்தை தெரிவு செய்து கொள்கின்றாய் என்றால் அது என்ன நியாயம்?

        அது மாத்திரமல்ல. உன் உடம்பில் நோய் பிடித்துக் கொண்டது. அப்பொழுது நீ என்ன செய்கிறாய்? உனது நோய்க்கு பரிகாரம் தேடி வைத்தியரின் வாயல்களை யெல்லாம் தட்டுகிறாய். சத்திர சிகிச்சையால் உனக்கு ஏற்பட்ட துன்பங்களையும் மருந்திலுள்ள கசப்பையும் தாங்கிக் கொள்கிறாய். அது போன்று பாவ காரியங்களால் உன் மனதை பீடித்துள்ள உள நோயைத் தீர்த்துக் கொள்ள நீ ஏன் ஒரு நல்ல வழியைக் காணக் கூடாது? இதுவெல்லாம் விதியை மறுக்கின்ற மற்றும் ஆட்சேபிக்கின்ற ஒரு பாவியிடம் நாம் கேட்கும் கேள்விகள்.

        இது இவ்வாறிருக்க, அல்லாஹ்வின் அன்பும், அருளும், சூக்சும புத்தியும் பரிபூரணமானவை. எனவே தீமை எதனையும் அவனின் பக்கம் சாட்டக் கூடாது என்பதே நமது நம்பிக்கை. இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸில் “இறைவா! தீமை எதுவும் உன்னைச் சாராது” என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தீய கருமம் ஒன்று ஏற்படுவதும் அல்லாஹ்வின் அன்பினதும் சூட்சும புத்தியினதும் அடிப்படையிலே யாகும். ஆகையால் அல்லாஹ்வின் தீர்ப்பின், விதியின் பிரகாரம் ஏற்படும் காரியம் எதுவும் வாஸ்த்தவத்தில் தீயவையன்று. ஏனெனில் தீய கருமங்களும் தேவையைப் பொருத்தே நிகழ்வு பெறுகின்றன. நபியவர்கள் ஹஸன் (ரழி) அவர்களுக்கு குனூத்துடைய துஆவைக் கற்றுக் கொடுக்கும் போது وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ “நீ ஏற்படுத்தியவையில் உள்ள தீமைகளை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!” என்று சொல்லிக் கொடுத்தார்கள். எனவே தேவையைப் பொருத்து நிகழும் தீமை எதுவும் அடிப்படையில் தீமையான தல்ல. எனினும் அது நிகழும் இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொருத்தே அது தீயதெனக் கணிக்கப்படுகிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கும் போது அது நல்லதாகவும் காணப்படுகிறது. எனவே பூமியில் ஏற்படுகின்ற வரட்சி, நோய், வறுமை, பயம் யாவும் தீயவையே, ஆயினும் இன்னோர் இடத்தில் இவை சிறந்தவைகளாக மாறுகின்றன. இது பற்றி அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்.

ظَهَرَ الفَسَادُ فِي البَرِّ وَالبحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِي النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ  (الروم:41)

   “மனிதர்களின் கைகள் தேடிக் கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு பரவி விட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் சுவைக்கும் படி அவன் செய்ய  வேண்டியதாகிறது. (30:41)

 இவ்வாறே திருடனையும், விபச்சாரியையும் பொருத்த வரையில் கையைத் துண்டிப்பதும், கல் எரிந்து கொலை செய்வதும் அவர்களுக்கு தீமையை விளைக்கின்றன என்பது உண்மையே. எனினும் அவர்களின் குற்றச் செயலுக்குரிய தண்டனை இவ்வுலகத்தில் கிடைக்கப் பெற்றதன் காரணமாக மறு உலகத்தின் தண்டனை இல்லாமல் போவது, அவர்களுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அது மாத்திரமன்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் இந்தத் தண்டனை மக்களின் பொருளையும் அவர்களின் பரம்பரையையும் பாதுகாக்கும் ஒரு நல்ல காரியமாகவும் அமைகிறது.

அத்தியாயம்-6

     மகத்தான அடிப்படைகளை உள்ளடக்கிய மேலான இந்த இஸ்லாமியக் கோட்பாட்டின் மூலம் பல பயன்கள் அநுகூலமாகின்றன.  அந்தப் பயன்கள் யாவை என்பதை இனி கவனிப்போம்.

·        முதலில் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய திருநாமங்கள், பண்புகள் மீதும் விசுவாசம் கொள்ளும் விடயம்.

 இந்த நம்பிக்கை யாருடைய உள்ளத்தில் இருக்கிறதோ அதன் மூலம் அவருக்கு அல்லாஹ்வின் மீது அன்பும், அவனை கண்ணியப்படுத்தும் மன நிலையும் ஏற்படுகிறது. அப்போது அவர் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றவும் அவனின் விலக்கல்களை தவிர்ந்து கொள்ளவும் சித்தமாகிறார். இதனால் அவரும், சமூகமும் இம்மையிலும் மறுமையிலும் பூரணமான பாக்கியத்தைப் பெறுவர். இதனை அல்லாஹ்வின் வாக்கு உறுதி செய்கிறது.

مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ اَوْ اُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَوةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَاكَانُوا يَعْمَلُونَ (النمل:97)

        “ஆணாயினும் பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். அன்றி அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். (16:97)

·        இரண்டாவது, மலக்குகளின் மீது நம்பிக்கை வைத்தல். இதன் மூலம் முக்கியமாக மூன்று பலன்கள் அநுகூலமாகின்றன.

01) இவர்களைப் படைத்த அல்லாஹ் மகத்துவம் மிக்கவன். அவ்வாறே அவனின் பலமும், அதிகாரமும் மகத்துவமானவை என்பதை அறியும் வாயப்பு.

02) அல்லாஹ்வை மலக்குகள் பரிபூரணமாக வணங்கி வருவதாலும் தங்களுக்காக அவர்கள் பாவமன்னிப்புக் கோரி வருவதாலும் அவர்களின் மீதான அன்பு அதிகரிக்கிறது.

03) நம்மைப் பாதுகாக்கும் பொறுப்புகளை மலக்குகளிடம் கொடுத்து அல்லாஹ் நம்மீது விசேட கவனம் எடுத்துள்ளபடியால் அல்லாஹ்வுக்கு மென்மேலும் நன்றி செலுத்தும் வாய்ப்புண்டாதல்.

·        மூன்றாவது, வேதங்களின் மீது நம்பிக்கை கொள்ளல். இதன் மூலமும் பல பயன்கள் அநுகூலமாகின்றன.

01) எல்லா சமூகத்தாரிடமும் அந்தந்த சமுகங்களுக்கு வழிகாட்டும் பொருட்டு வேதங்களை அந்த சமூகங்களுக்கு அல்லாஹ் இறக்கியதன் மூலமும் அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

02) ஒவ்வொரு சமூகத்திற்கும் பொருத்தமான வேதங்களை அல்லாஹ் வழங்கியதன் மூலமும் ஈற்றில் எல்லா சமூகத்தினருக்கும், காலத்திற்கும் பொருத்தமான இறுதி வேதம் அல்குர்ஆனை அருளியதன் மூலமும் அல்லாஹ்வின் حِكْمَةٌ- சூக்சும புத்தி துலாம்பரமாகிறது.

03) அல்லாஹ்வின் இந்த நிஃமத்துக்களுக்காக அவனுக்கு மென்மேலும் நன்றி கூறும் வாய்ப்பு உண்டாகிறது.

·        நான்காவது, ரஸுல்மார்களின் மீது நம்பிக்கை கொள்ளல். இதன் மூலமும் மூன்று வகையான பயன்கள் அநுகூலமாகின்றன.

01) மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக நபிமார்களை அல்லாஹ் தங்களிடம் அனுப்பி தம்மீது காட்டியுள்ள அக்கறையையும், அன்பையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தல்.

02) அல்லாஹ்வின் இந்த அளப்பரிய நிஃமத்துக்காக அவனுக்கு நன்றி செலுத்தல்.

03) அந்த நபிமார்கள் அல்லாஹ்வின் தூதர்கள் என்பதாலும் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வந்ததுடன், அல்லாஹ்வின் தூதை மக்களிடம் கொண்டு சென்று அவர்களுக்கு நல்லுபதேசங்கள் செய்து வந்த படியாலும் அவர்களை கண்ணியப்படுத்தவும், மேண்மைப்படுத்தவும் மற்றும் உரிய முறையில் அவர்களைப் பாராட்டவும் கூடிய வாய்ப்பு கிடைத்தல்.

·        ஐந்தாவது, இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்ளல். இதன் மூலம் அநுகூலமாகும் பயன்கள்.

01) தங்களின் நற்கிரியைகளுக்கு நாளை  மறுமை நாளில் நற்கூலி கிடைக்க வேண்டுமென்பதற்காக நல்ல காரியங்களில் ஈடுபாடு கொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தல். மேலும் பாவ காரியங்களுக்கு மறுமையில் கிடைக்கவிருக்கும் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பாவ காரியங்களை விட்டும் தூரமாக வேண்டுமென்ற ஆவலும் அதிகரித்தல்.

02) இவ்வுலகின் சுகபோகங்கள் தனக்குக் கிடைக்காத போதிலும் நாளை மறுமையில் கிடைக்கவிருக்கும் சுகபோகத்தை நினைத்து முஃமினின் உள்ளம் ஆறுதல் அடைதல்.

·        ஆறாவது, விதியின் மீது நம்பிக்கை வைத்தல். இதன் மூலம் ஏற்படும் பலன்கள்.

01) ஒரு கருமத்தின் காரணமும், காரண கர்த்தாவும் அல்லாஹ்வே என்றபடியால் அந்த கருமத்தை செய்யும் போது அது குறித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் ஒரு நிலை இதன் மூலம் ஏற்படுகிறது.

02) ஐயத்துக்கு இடமின்றி மனம் விரும்பாத காரியங்கள் பலவும் நிகழ்கின்றன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் இவை யாவும் அல்லாஹ்வின் விதிப்படியே நடைபெறுகின்றன என்ற படியால் அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும், அதன் மூலம் மன அமைதியும் ஏற்படுகிறது. எனவே அல்லாஹ்வின் விதியை ஏற்றுக் கொள்கிறவனைத் தவிர பலமான மன அமைதியடைந்த எவரையும் காண முடியாது.

03) நோக்கம் நிறைவேறும் போது மனதில் ஏற்படும் அகந்தையை நீக்கும் வாய்ப்புண்டாகிறது. ஏனெனில் விதியின் மீது நம்பிக்கை உள்ள ஒருவன் எல்லாமே அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கிறது என நினைக்கின்ற படியால் அவன் மனதில் எழும் அகந்தை நீங்கி விடுகிறது.

04) தன் நோக்கம் நிறைவேறாத போதும், மனம் விரும்பாத காரியம் ஏதும் நிகழும் போதும் எல்லாமே விதியின்படியே நடக்கின்றன எனும் எண்ணம் தோன்றும் போது தோல்வியால் அவனுக்கேற்பட்ட கவலை நீங்கிவிடுகிறது. இதனை அல்லாஹ்வின் இந்த வாக்கியம் சுட்டிக் காட்டுகிறது.

مَآاَصَابَ مِنْ مُصِيْبَةٍ وَلاَ فِي اَنْفُسِكُمْ الَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ اَنْ نَبْرَأَهَا إنَّ ذَالِكَ عَلَى اللهِ يَسِيْرٌ (الحديد:22)          

“பூமியிலோ அல்லது உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமும் அது ஏற்படுவதற்கு முன்னதாகவே பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது.” (57:22)

لِكَيْلاَ تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلاَ تَفْرَحُوا بِمَا آتَاكُمْ واللهُ لاَ يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (الحديد:23)

“உங்களை விட்டும் தப்பிப் போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் உங்களுக்கு கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளா திருக்கவும், (இதனை உங்களுக்கு அறிவிக்கின் றான்) அல்லாஹ் கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை.” (57:33)

எனவே இந்தக் கோட்பாட்டின் மீது நாம் நிலைத்திருக்கவும் அதன் பயனை நாம் அடைந்து கொள்ளவும் மேலும் அதிகமான அதன் அருளை அடைந்து கொள்ளவும், மேலும் நமக்கு நேரான பாதையைக் காட்டியதன் பின் அதை விட்டு நாம் விலகிவிடாமல் அவனின் அருளையும் அன்பையும் நமக்கு சொரியுமாறும் நாம் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம். நிச்சயமாக அவனே மகா கொடையாளன். சர்வ புகழும் சர்வலோக இரட்சகனான அல்லாஹ்வுக்கே சொந்தம்.  சாந்தியும். சமாதானமும் நமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரின் கிளையார், தோழர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்த நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!

ஷவ்வால் 30, ஹிஜ்ரி 1404