புனித முஹர்ரம் மாதமும் பித்ஆக்களும்

விபரங்கள்

முஹர்ரம் மாதத்தில் நடைபெறும் விழாக்கள்,சோக அனுஷ்டானங்கள் ஆகிய பித்ஆக்களை தவிர்த்து, நல் அமல்,நோன்பு ஆகியவைகளில் ஈடுபடுதல்.

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  புனித முஹர்ரம் மாதமும் பித்ஆக்களும்

  ] தமிழ் – Tamil –[تاميلي

  ஜாசிம் இப்ன் தஇயான்

  2013 - 1435

  البدع المنتشرة في شهر الله محرم

  « باللغة التاميلية »

  جاسم بن دعيان

  2013 - 1435

  புனித முஹர்ரம் மாதமும் பித்ஆக்களும்

  அல்லாஹ்வை மகிழ்வு படுத்தி அவன் அன்பை பெறவும், எல்லை மீறாமல் கவனமாக நடந்துக் கொள்ளவும் இறைபக்தியுள்ள முஸ்லிம்கள் எப்போதும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து இருப்பது போல் முஹர்ரம் மாதத்திலும் நாம் நடந்துக்கொள்ள எம்மை தயார் படுத்திககொள்ள வேண்டும்.

  அல்லாஹ்வின் முன்னிலையில் முஹர்ரம் புனித மாதங்களில் ஒன்றாக கருதப் படுவதே இதன் காரணமாகும்.

  “உண்மையிலேயே மாதங்களின் எண்ணிக்கை (ஒரு வருடத்தில்) பண்ணிரண்டு தான். அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த போது அவ்வாறே நிர்ணயிக்கப்பட்டது. அவைகளில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. அது தான் சரியான மார்க்கமாகும்.. . சூரா 9; 36

  நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி, அவை துல் கஅதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும். அறிவிப்பவர் இமாம் புஹாரி.

  இம் மாதத்தில் பாவங்கள் புரிவது பற்றி மிக்க கவனமாக இருக்கவேண்டும்.

  இம்மாதத்தின் புனிதத் தன்மையின் காரணமாக இம்மாதத்தில் பாவமான காரியங்களில் ஈடுபடுவது மற்றைய மாதங்களில் செய்வதை விட மோசமான தாகும்.

  “இதில் உங்களுக்கே தவறிழைத்துக் கொள்ளா தீர்கள்” என்ற குர்ஆன் வசனத்தைப் பற்றி கத்தாதா (ரலி) குறிப்பிடும் போது ‘புனிதமான மாதங்களில் குற்றங்கள் புரிவது, மற்ற காலங்களில் புரியும் குற்றங்களை விட பாவமானது, மோசமானது. எந்த நேரத்திலும் குற்றம் புரிவது பாவமான செயலாகும். ஆனால் அல்லாஹ் தன் கட்டளைகளில் தான் நாடியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பான்.” தப்ஸூர் இப்னு கதீர்.

  இம் மாதத்தில் கூடுதலாக நல்அமல்கள் செய்யவும்

  அதே போன்று இம் மாதத்தில் செய்யும் நல்அமல்களுக்கு மற்றைய மாதங்களை விட அதிகமான கூலியுண்டு. மேற் குறிப்பிட்ட வசனத்தைப் பற்றி கூறும்போது புனிதமான நான்கு மாதங்களில் செய்யும் நல் அமல்களுக்கு மற்றைய மாதங்களில் கிடைப்பதை விட மேலதிகமான கூலி உண்டு என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். இப்னு கதீர்.

  நோன்பு நோற்பதில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

  முஹர்ரம் மாத்த்தில் நோன்பு நோற்பதற்கு விஷேச காரணம் உண்டு என்பதால், நபி (ஸல்) அவர்கள் அதனைப் பற்றி அதிகமாக ஊக்கம் கொடுத்தனர்.

  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். “ரமதான் மாத்த்தின் நோன்புக்கு அடுத்ததாக அல்லாஹ்வின் முஹர்ரம் மாத நோன்பு சிறந்தது.” ஆதாரம் முஸ்லிம்.

  முஹர்ரம் 10ம் நாள் ஆஷூரா தினத்தில் நோன்பு பிடிப்பது.

  இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். “நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து ஆஷூரா தினத்தில் யூதர்கள் நோன்பு நோற்பதை கண்டார்கள். ‘இது என்ன? என்று வினவினார்கள்.’ அவற்கு அவர்கள் ‘இது நன்மைகள் நிறைந்த தினமாகும். இஸ்ராயிலின் மக்களை எதிரிகளி லிருந்து அல்லாஹ் காப்பாற்றிய தினமாகும். அதனால் மூஸா (அலை) இத்தினத்தில் நோன்பு நோற்றார்கள்.’ என்று அவர்கள் பதிலளித்தார்கள். அன்னார் (ஸல்) அவர்கள் ‘மூஸாவின் மீது எங்களுக்கு அதிகமான உரிமை இருக்கிறது.’ என்று கூறி, அன்றைய தினம் நோன்பு நோற்று, அன்றைய தினம் நோன்பு பிடிக்கும் படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவு கொடுத்தார்கள்.” ஆதாரம் புஹாரி.

  யாரேனும் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு நோற்றால் அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்று நபி (ஸல்) இல்வாறு அறிவித்தார்கள்.

  “ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றால், அல்லாஹ் அதனை ஏற்றுக்கொண்டு, அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு மன்னிப்பளிப்பான் என்று நம்புகிறேன்.” ஆதாரம் இமாம் முஸ்லிம்.

  இப்னு அப்பாஸ் இவ்வாறு அறிவிக்கிறார்கள். “அல்லாஹ்வின் ரசூல் (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தின் நோன்பை விட வேறு எந்த நோன்பு நோற்றலுக்கும் ஆர்வம் காட்டியதையோ, முக்கியத்துவம் கொடுத்ததையோ நான் ஒரு போதும் கண்டதில்லை.” ஆதாரம் புஹாரி.

  முஹர்ரம் 9ம் நாள் நோன்பு நோற்பது முஸ்தஹப் ஆகும்.

  இம்மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது முஸ்தஹப் ஆகும். காரணம், நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் நோன்பு நோற்று, ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பதற்கு ஆர்வம் காட்டினார்கள். எனினும் பத்தாம் நாள் மாத்திரம் நோன்பு நோற்பதில் எவ்விதத் தவறுமில்லை.

  இப்னு இப்பாஸ் இவ்வாறு அறிவிக்கிறார்கள். “அல்லாஹ்வின் ரசூல் (ஸல்) ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று முஸ்லிம்களுக்கும் அதனை ஏவிய போது, ‘அல்லாஹ்வின் ரசூல் (ஸல்) அவர்களே, அது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கொண்டாடும் தினமாகும்.’ என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் அடுத்த வருடம் உயிருடன் இருந்தால் இன்ஷா அல்லாஹ், ஒன்பதாம் நாளும் நாம் நோன்பு நோற்போம்.’ என்று அறிவித்தார்கள். ஆனால் அடுத்த வருடம் வருவதற்கு முன்பே அல்லாஹ்வின் ரசூல் (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள்.” ஆதாரம் முஸ்லிம்.

  ஆஷூரா பற்றி பிழையான கருத்துக்களும் ஆதாரமற்ற சம்பிரதாயங்களும்

  1. இமாம் ஹுசைன் (ரலி) ஷஹீதான காரணத்தால் ஆஷூரா தினம் புனிதத்துவம் பெற்றது என்று சிலர் காரணம் காட்டு கின்றானர். முஸ்லிம்களின் சரித்திரத்தில் ஹுசைன் (ரலி) அவர்களின் வாழ்க்கை மிகவும் சோகமான சம்பவம் என்பதை எந்த முஸ்லிமும் மறுக்க முடியாது. எனினும், இந்த சம்பவத்தின் காரணமாக ஆஷூராவை புனித தினமாக கருத வேண்டும் என்று கூற முடியாது. ஏனென்றால் அன்னாரின் ஷஹீதுக்கு அதிக காலத்துக்கு முன்பே ஆஷூரா தினத்தின் விஷேசத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள்.

  2. ஹுசைன் (ரலி) அவர்களின் ஷஹீதின் காரணமாக இந்த மாதத்தை தீமை நிறைந்த, துர் அதிஷ்டம் கொண்ட மாதமாக சிலர் கருதுகிறார் கள். இதன் அடிப்படையில் இம் மாதத்தில் கல்யாணம், விஷேச வைபவங்கள் எதுவும் அவர்கள் நடத்துவதில்லை. இதுவும் குர்ஆனுக்கும் சுன்னாஹ்வுக்கும் மாற்றமான ஆதரமற்ற சிந்தனை யாகும். இப்படிப்பட்ட ஆதாரமற்ற நம்பிக்கைகள் ஒரு வகையான ஷிர்க்கை சார்ந்தது. தான் நாடிய சகலவற்றையும் செய்யக்கூடிய சக்தி அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியதாக இருக்கும் போது ஒரு சம்பவம் அல்லது ஒரு மனிதரின் காரணத்தால் நன்மையோ, தீமையோ ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்வது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாகும்.

  3. ஆஷூரா தினத்தில் விஷேச உணவுகள் தயாரிப்பது சுன்னாவாகும் என சிலர் கருதுகின்றனர். அதோடு மக்களை கூட்டி விருந்துகளும் கொடுக்கிறார்கள். இந்த செயலுக்கு ஷரீஆவில் எந்த ஆதாரமும் கிடையாது.

  4. ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணத்தை நினைவு படுத்தி துக்கம் அனுஷ்டிக்கவும், அதற்காக விஷேச வைபவங்களும் நடத்துகிறார்கள்.

  எனினும், மரித்தவருக்காக இப்படிப்பட்ட துக்கம் அனுஷ்டிக்கும் வைபவங்கள், மரண அஞ்சலி செய்வது ஜாஹிலிய்யா மக்களின் வழக்கம் என நபி (ஸல்) அவர்கள் அவற்றை தடுத்துள்ளார்கள்.

  “தன் கன்னங்களில் அடித்துக் கொண்டு, ஆடைகளை கிழித்துக் கொண்டு, ஒப்பாரியிட்டு அழுது ஜாஹிலிய்யா மக்களை போல் நடந்துக் கொள்ளும் மனிதன் எனது சமூகத்தை சேர்ந்தவனல்ல.” ஆதாரம் புஹாரி.

  உண்மையிலேயே இதனை பற்றி சிந்திக்கும் போது, அல்லாஹ்வுக்காக புனித ஷஹீத் எனும் உயிர் தியாகத்தை புரிந்த​ ஹுஸைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்தையும், வெகுமதியும் பெற்றுக் கொண்டார்கள் என்பது எவரும் புரிந்துக்கொள்வார்கள்.

  5. மற்றும் சில மக்கள் 10வது தினத்தில், புத்தாடை அணிந்து, இனிப்பு பலகாரங்கள் தயாரித்து, இத்தினத்தை ஒரு பெருநாளை போல் கொண்டாடுகிறார்கள். இச்செயலும் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் பொருத்தமற்றதொன்றாகும்.

  6. மேலும் சில மக்கள், முஹர்ரம் 10வது தினத்தில், விஷேச மதச் சடங்குகள் நடத்தி, குர்பான் கொடுத்து அல்லது இறந்தவர்களின் கப்ருகளை தரிசிக்கவும் போகிறார்கள். இதன் மூலம் விஷேட நன்மைகள் கிடைக்கும் அல்லது விஷேச காரணம் உள்ளது என்றும், இதற்கு ஷரீஆவில் இடமிருப்பதாகவும் நினைக்கின்றனர். இதுவும் பித்ஆ என்பதால், இவற்றை விட்டு நீங்க வேண்டும்.

  இறுதியாக;-

  இந்த சிறப்புற்ற மாதத்தில் எங்களுடைய செயல் முறைகள், சஹாபாக்களின் செயல் முறைகளை போல அமைந்திருக்க வேண்டும். சஹாபாக்கள், மரண அஞ்சலி செய்யவோ, வைபவங்கள் நடத்தவோ இல்லை. மாறாக, அல்லாஹ்வின் புனிதமான மாதங்களில் ஒன்றான முஹர்ரம் மாதத்துக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். இம் மாதத்தில் அதிகமாக நற் கருமங்களை செய்து, பாவங்களை விட்டும் தூரமாக இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதத்தில் நோன்பு நோற்க, விஷேசமாக 9வது 10வது தினங்களில் முயற்சி செய்ய வேண்டும். இந்த மாதத்தைப் பற்றியும் இந்த விஷயத்திலும் ஆதாரமற்ற நம்பிக்கை வைப்பதை விட்டும் நீங்க வேண்டும். இம்மாதங்களில் யாரேனும் விவாகம் புரிய நாடினால் அவர்கள் அதனை செய்துக் கொள்ளட்டும். 10வது தினத்தில் விஷேச உணவுகள் தயாரிப்பதை விட்டும் நீங்கிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வைபவங்களில் கலந்துக் கொள்ள அழைப்பு கிடைத்தால், அவற்றில் கலந்துக் கொள்ளாது ஒதுங்கிவிட வேண்டும்.

  எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

  அறிவியல் வகைகள்: