நோயுறும் உள்ளமும் இஸ்லாமிய சிகிச்சை முறையும்

விபரங்கள்

மனித உள்ளத்தில் ஏற்படும் நோய்களுக்கு இஸ்லாமிய கடமைகள் மூலம் சிகிச்சை கிடைக்கும்

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  நோயுறும் உள்ளமும் இஸ்லாமிய சிகிச்சை முறையும்

  ] Tamil – தமிழ் –[ تاميلي

  முஹம்மத் மக்தூம் பின்

  அப்துல் ஜப்பார்

  2014 - 1435

  القلب المريض والعلاج الإسلامي

  « باللغة التاميلية »

  محمد مخدوم بن عبد الجبار

  2014 - 1435

  நோயுறும் உள்ளமும் அதற்கான இஸ்லாமிய சிகிச்சை முறையும்

  A.J.M மக்தூம்

  محمد مخدوم بن عبد الجبار


  நமது உடம்பு நோயினால் பாதிப்புக்குள்ளாகுவது போன்று, நமது உள்ளங்களும் நோய் வாய்ப்படுகின்றன, முறையாக அதற்கான சிகிச்சைகள் வழங்கப் படாத போது, அவை சீரழிந்து விடும் வாய்ப்புள்ளது. உள்ளத்தில் நோய் உண்டாவதை பின்வரும் இறைவசனம் உறுதி செய்கிறது.

  فِي قُلُوبِهِم مَّرَضٌ …

  அவர்களுடைய இதயங்களில் நோயுள்ளது;…. 2:10

  இப்படியாக ஒருவனுடைய இதயம் அதிகளவில் நோயினால் பாதிக்கப் படும் போது, அவனுடைய செயல்கள் யாவும் தீயதாகவே அமைந்து விடும், அதற்கு மாறாக அவனது உள்ளம் எதுவித நோய்களுமின்றி தூய்மையானதாக இருந்தால் அவனுடைய செயற்பாடுகள் அனைத்தும் சீரானதாக அமைந்து விடும். இதனையே பின்வரும் நபி மொழி தெளிவு படுத்துகிறது:

  أَلاَ إِنَّ فِي الجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ أَلاَ وَهِيَ القَلْبُ

  ‘அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சீர்பெற்று விட்டால், உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது கெட்டு விட்டால் உடல் முழுவதும் கெட்டு விடும். அதுதான் உள்ளம்’ (புகாரி, முஸ்லிம்)

  அடிக்கடி நோயினால் பாதிக்கப்படும் உள்ளங்களை குணப்படுத்தும் வகையிலேயே ஐங்கால தொழுகைகள், ரமழான் மாத நோன்பு உட்பட அனைத்து இஸ்லாமிய கடமைகளும் அமைந்துள்ளன. அக்கடமைகளை முறையாக செயல்படுத்துவது முறையாக நேரத்திற்கு மாத்திரைகளை உட்கொள்வது போன்றாகும்.

  நோயுற்றவர்கள் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை ஒரு நாளைக்கு இரண்டு வேளையோ, மூன்று வேளையோ முறையாக உட்கொள்ளும் போதே பூரண குணமடைகின்றனர். இவ்வாறே எமது உள்ளங்களும், அதன் நோய்கள் குணமாக ஒரு நாளைக்கு ஐந்து நேரம் கட்டாயம் தொழுதாக வேண்டும், வருடத்திற்கு ஒரு மாதம் நோன்பு நோற்றாக வேண்டும், அளவுக்கு அதிகம் பணம் இருந்தால் அதற்குரிய அளவை ஏழை வரியாக உரியவர்களுக்கு வழங்க வேண்டும், வாழ் நாளில் ஒரு முறையாவது ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்றியாக வேண்டும். அப்போதுதான் மனித உள்ளம் பரிசுத்தம் அடைந்து, அவர்களது வாழ்வும் சீரானதாக, ஒழுக்கமுள்ளதாக அமையும். இப்படியே தனி மனிதனில் ஆரம்பமாகி முழு மனித சமூகமும் நிம்மதி, சந்தோசம் நிறைந்த வாழ்வை அடைந்து கொள்ள முடியுமாகிறது.

  இவ்வாறு இஸ்லாத்தின் எல்லா வணக்கங்களையும் ஒருவன் சரிவர நிறைவேற்றி வந்தால் உளத் தூய்மைப் பெற்று பரிசுத்தவானாக மாறிவிடுகிறான் என்பதையே அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

  يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

  மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

  இஸ்லாத்தின் மாபெரும் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகள் பற்றி குறிப்பிடும் இறை வசனங்களை மற்றும் இறைத்தூதரின் செய்திகளை சற்று ஆழமாக நோக்கினால் நமக்கு இந்த விடயம் இன்னும் தெளிவாகும்.

  தொழுகை:


  وَأَقِمِ الصَّلَاةَ ۖ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ ۗ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

  இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல் குர்ஆன் 29:45)

  عنْ أَبي هُرَيْرةٍ رضي اللَّه عنْهُ قَال : سمِعْتُ رسُول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَقُولُ : « أَرأَيْتُمْ لَوْ أَنَّ نَهْراً بِباب أَحَدِكم يغْتَسِلُ مِنْه كُلَّ يَوْمٍ خَمْس مرَّاتٍ ، هلْ يبْقى مِنْ دَرَنِهِ شَيءٌ؟» قالُوا : لا يبْقَى مِنْ درنِهِ شَيْء ، قَال : « فذلكَ مَثَلُ الصَّلَواتِ الخَمْسِ ، يمْحُو اللَّه بهِنَّ الخطَايا » متفقٌ عليه

  ‘உங்களில் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் ஒரு ஆறு பெறுக்கெடுத்து ஓடுகின்றது, அவர் அதில் ஒரு நாளைக்கு ஐந்து தடவை குளிக்கின்றார் அவரது உடலில் அழுக்குகள் ஏதும் எஞ்சி இருக்குமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தனது தோழர்களிடம் கேட்டபோது, அவர்கள் அப்படி? எந்த அழுக்கும் அவரின் மீது எஞ்சியிருக்காது என பதிலளித்தனர். அப்போது இதே போன்று தான் ஐவேளை தொழுகையும் அதன் மூலம் இறைவன் பாவங்கள் அனைத்தையும் கழுவி விடுகிறான்’ என கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

  நோன்பு:

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

  ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் 2:183)

  والصِّيامُ جُنَّةٌ فإِذا كان يومُ صومِ أحدِكم فَلاَ يرفُثْ ولا يصْخَبْ فإِنْ سابَّهُ أَحدٌ أو قَاتله فَليقُلْ إِني صائِمٌ،

  நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் வேளையில் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி!” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளட்டும்! என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் . (புகாரி)

  ஸகாத்:


  خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

  (நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 9:103)

  تُخْرِجُ الزَّكَاةَ مِنْ مَالِكَ فَإِنَّهَا طُهْرَةٌ تُطَهِّرُكَ

  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உனது பணத்திலிருந்து (கடமையான) ஸகாத்தை நிறைவேற்றுவாயாக, அது உன்னைத் தூய்மைப் படுத்தி விடும். (அஹ்மத்)

  ஹஜ்:


  الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ ۗ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ

  ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது (நன்மையானது), தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:197)

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ

  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  “பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாதப் பாலகனாகத்) திரும்புவான்.” (புகாரி, முஸ்லிம்)

  تَابِعُوا بَيْنَ الْحِجِّ وَالْعُمْرَةِ ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ ، كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ

  நீங்கள் ஹஜ் செய்தால் உம்ராவும் செய்யுங்கள்; கொல்லனின் உலை இரும்பின் கரையை போக்குவது போன்று, நிச்சமாக அவை இரண்டும் வறுமையையும், பாவங்களையும் போக்கிவிடும் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அஹ்மத், திர்மிதி, நஸாஇ)

  தொழுகையைப் பொறுத்த வரையில் ஒரு நாளைக்கு ஐந்து வேளைகள் உள்ளத்திற்கு வழங்க வேண்டிய மாத்திரைகள் போன்றும், நோன்பு வருடத்திற்கு ஒரு முறை வழங்கும் தடுப்பூசியைப் போன்றும், ஸகாத் அவசியப் பட்டவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை வழங்கும் தடுப்பூசியைப் போன்றும், ஹஜ் மற்றும் உம்ரா அவசியப் பட்டவர்களுக்கு வாழ் நாளில் ஒரு முறை வழங்கும் மிகப் பெரிய தடுப்பூசி போன்றும், உபரி வணக்கங்களைப் பொறுத்தவரையில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மேலதிகமாக உள்ளத்திற்கு வழங்கும் விட்டமின்கள் போன்றும் விளங்குகின்றன.