பெண்ணின் கற்பை பாதுகாக்கும் மார்க்கம் இஸ்லாம்

விபரங்கள்

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் மனைவி நடத்தை கெட்டவள் அல்லது கற்பிழந்தவள் என்று கணவன் குற்றம் சுமத்தும் போது அக்குற்றத்தை நிரூபிக்கக் கூடிய சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும் என கட்டளையிடுகிறது.

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  பெண்ணின் கற்பை பாதுகாக்கும் மார்க்கம் இஸ்லாம்.

  ] Tamil – தமிழ் –[ تاميلي

  M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

  2014 - 1435

  الإسلام دين يحفظ عفة المرأة

  « باللغة التاميلية »

  محمد إمتياز يوسف

  2014 - 1435

  பெண்ணின் கற்பை பாதுகாக்கும் மார்க்கம் இஸ்லாம்.

  M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி

  கன்னித் தன்மையை நிரூபிக்க அக்கினிப் பரீட்சை நடாத்தும் பைபிளின் போதனைக்கு மாற்றமாக கௌரவமாக, கண்ணியமாக இஸ்லாம் பெண்ணின் கற்பை போற்றுகிறது.

  இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் மனைவி நடத்தை கெட்டவள் அல்லது கற்பிழந்தவள் என்று கணவன் குற்றம் சுமத்தும் போது அக்குற்றத்தை நிரூபிக்கக் கூடிய சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும் என கட்டளையிடுகிறது.

  முதலிரவில் அவளோடு உறவு கொண்ட வேளை கன்னித் தன்மையை நிரூபிக்கக் கூடியதாக அவளிடமிருந்து இரத்தம் கசியவில்லை. அதனால் அவள் நடத்தை கெட்ட பெண் என்று கணவன் சொன்னால் அக்குற்றச்சாட்டை இஸ்லாம் ஏற்காது.

  காரணம் இது அறிவுக்குப் பொருத்தமற்ற வாதம். உடலுறவின் போது பெண்களிட மிருந்து இரத்தம் கசியலாம் அல்லது கசியாமலும் இருக்கலாம். பெண்களின் உடல் அமைப்பைப் பொறுத்து இது நடைபெறும். எனவே இக்குற்றச்சாட்டு அபத்தமானதாகும்.

  பெண்ணின் மர்ம உறுப்பில் காணப்படுகிற மெல்லிய தோல் ஹைமன் (Hyman) எனக் கூறப்படுகிறது. விளை யாட்டு, உடற் பயிறச்சி அல்லது கடின வேலைகள் போன்ற சந்தர்ப்பங்களில் இத்தோல் பகுதி விரிவடை யலாம் அல்லது கிழிந்து விடலாம். அப்போது இலேசாக இரத்தம் வெளிவரும். முதன் முறையான உடலுறவின் போது கூட இத்தோல் கிழிந்து விடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த ஹைமன் வித்தியாசப்படலாம்.

  ஒருவரது சந்தேகத்தை மாத்திரம் வைத்து இஸ்லாம் தீர்ப்பளிக்காது. அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்த தகுந்த சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். சாட்சிகள் முன்னி றுத்தப்படும் பட்சத்தில் விசாரித்த பின் தீர்ப்பு வழங்கும்.

  எந்தவொரு பெண்ணாவது கற்பை இழந்துவிட்டாள் அல்லது கள்ளத் தொடர்பை வைத்துக் கொண்டுள்ளாள் அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டாள் என்று குற்றம் சுமத்தப்படுவதாக இருந்தால், அதற்காக நேரில் கண்ட நான்கு சாட்சிகளைக் கொண்டு வருமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. நான்கு சாட்சிகளைக் கொண்டு வராது விட்டால் அக்குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படுவ தோடு அது அவதூற்றுக் குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்தைச் சுமத்தியவருக்கு 80 கசையடிகள் வழங்கப் படுவதோடு அவரது சாட்சிகள் எதுவும் இதற்குப் பின் ஏற்றுக் கொள்ளப் படவும் மாட்டாது.

  “எவர்கள் கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு எண்பது கசையடி அடியுங்கள். மேலும் (இதன்பின்) ஒருபோதும் அவர்களது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இன்னும் அவர்கள் தான் பாவிகள். (அல்குர்ஆன் 24:4)

  “நிச்சயமாக எவர்கள் இறை நம்பிக்கை யாளர்களான களங்கமற்ற கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப் பட்டுவிட்டனர். அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு.” (அல்குர்ஆன் 24:23)

  பெண்களின் மானத்தோடு, மரியாதை யோடு விளையாடுவதையும் அவர்களது கற்பின் மீது களங்கம் சுமத்துவதையும் இஸ்லாம் பெரும் பாவமாகக் பிரகடனப் படுத்துகிறது.

  'பேரழிவை ஏற்படுத்தும் ஏழுபெரும் பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்:

  1) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது;

  2) சூனியம் செய்வது;

  3) முறையற்ற முறையில் அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது;

  4) வட்டி உண்பது;

  5. அனாதைகளின் சொத்துக்களை உண்பது;

  6. போரின்போது புறமுதுகு காட்டி ஓடுவது; 7) இறை நம்பிக்கை கொண்ட பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது என்று கூறினார்கள்.

  அறிவிப்பவர் :அபூஹுரைரா(ரழி) (புகாரி: 6857, 2766)

  இஸ்லாத்தைத் தழுவ வருபவரிடம் ‘பெரும் பாவமான அவதூறு சொல்ல மாட்டேன்’ என்று சத்தியம் செய்து தர வேண்டும் என்று நபிமுஹம்மது (ஸல்) அவர்கள் உறுதி மொழி வாங்குவார்கள்.

  நான் ஒரு குழுவினருடன் நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் சென்று இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி மொழியளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணையாக்குவ தில்லை, திருடுவதில்லை, குழந்தைகளைக் கொல்வ தில்லை, உங்களிடையே அவதூறு கற்பித்து அதைப் பரப்பு வதில்லை, எந்த நற்செயலிலும் எனக்கு மாறு செய் வதில்லை” என்று உங்களிடம் உறுதிமொழி வாங்கு கிறேன் என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: உக்பத் இப்னு ஸாமித் (ரழி) (நூல்: புகாரி, 6801)

  ஆண்களிடம் இவ்வாறு உறுதிமொழி எடுப்பது போலவே பெண்களிடமும் உறுதி மொழி வாங்கினார்கள்.

  “நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு நாம் எதையும் இணை வைக்க மாட்டோம், திருட மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம், எமது குழந்தைகளைக் கொலை செய்ய மாட்டோம், நாங்கள் இட்டுக்கட்டி அவதூற்றை பரப்ப மாட்டோம், மேலும் நல்ல விடயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம் என்றும் உறுதி மொழி கொடுத்தால் நீர் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக. மேலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன்.” (அல்குர்ஆன் 60:12)

  தன்னை முஸ்லிம் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இஸ்லாத்தின் இந்த அடிப்படைக் கொள்கையின் மீது உறுதியாக இருக்க வேண்டும். எனவே மணம் முடிக்காத ஆணோ பெண்ணோ விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டார் என்று கண்ணால் கண்ட நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவ்விருவருக்கும் நூறு கசையடிகள் கொடுக்கப் படுவதோடு நாடு கடத்தப் படுவார்கள். திருமணம் முடித்தவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொல்லப்படுவர்.

  (திருமணம் முடிக்காத) விபச்சாரி, விபச்சாரன் ஆகிய இருவரில் ஒவ்வொரு வருக்கும் நூறு கசையடி அடியுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்வோராக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு கருணை ஏற்பட வேண்டாம். அவ்விருவரின் தண்டனையை விசுவாசம் கொண்டோரில் ஒரு சாரார் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.” (அல்குர்ஆன் 24:2)

  “இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் ‘அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு எங்களிடையே தீர்ப்பளியுங்கள்’ என்று கூற, மற்றவர் ‘ஆம் அல்லாஹ்வின் தூதரே! எங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளியுங்கள்’ என்றார்.

  பின்னர் முதலாவதாக பேசிய அந்த மனிதர் என்னைப் பேச அனுமதி அளியுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘பேசுங்கள்’ என்றார்கள். அவர், என் மகன் இவரிடம் கூலிக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபச்சாரம் செய்து விட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று மக்கள் என்னிடம் கூறினர். (இத் தண்டனைக்குப் பதிலாக) நூறு ஆடுகளையும் என்னுடைய அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன்.

  பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்த போது (திருமணம் முடிக்காத) என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும்தான் தண்டனை யாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதனின் மனைவி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள் என்று சொன்னார்.

  இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கி டையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக் கிறேன். உம்முடைய ஆடுகளும் உம்முடைய அடிமைப் பெண்ணும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும் என்று கூறி விட்டு அவருடைய மகனுக்கு நூறு கசையடி வழங்கினார்கள், ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தினார்கள்.

  அங்கிருந்த உனைஸ் அல்அஸ்ஸமீ (ரலி) என்ற சஹாபியிடம் ‘உனைஸே! இந்த மனிதனின் மனைவி யிடம் சென்று விசாரித்து அவள் (குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்கு கல்லெறிந்து தண்டனை கொடுங்கள்’ என்று சொன்னார்கள்.

  அவ்வாறே உனைஸ் (ரழி) அவர்கள்,அவளிடம் சென்று விசாரணை செய்த போது அவளும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டாள். ஆகவே, அவளுக்கு உனைஸ் (ரழி) அவர்கள் கல்லெறிந்து தண்டனை வழங்கினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரழி). (நூல்: புகாரி 6842, 6843, 6859,)

  மகன் செய்த குற்றத்திற்குத் தந்தை அபராதம் (பிணைத் தொகை) செலுத்தி விடுவித்துக் கொள்ள முனைந்த போது அதனை நிராகரித்து விட்டு சம்பந்தப்பட்ட இருவருக்கும் குற்றத்திற்குரிய தண்டனையை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நிறை வேற்றினார்கள்.

  குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்ற பின் அவளுக்குரிய தண்டனையை அமுல் நடாத்தி, ‘சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பித்து விட முடியாது’ என்பதைச் செயல்படுத்திக் காட்டினார்கள்.

  சமூகச் சீரழிவை உண்டாக்கும் கொடிய குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப் பட வேண்டுமே தவிர அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியை அனுமதிக்கக் கூடாது. அனுமானத்தின் அடிப்படை யிலான விசாரணைகளை விடுத்து சாட்சிகள் மூலம் குற்றங்கள் நிரூபிக்கப்படும் போது சட்டத்தை அமுல் நடாத்த வேண்டுமே தவிர வளைந்து கொடுக்கக் கூடாது, என்பது இஸ்லாத்தின் ஆணித்தரமான கொள்கையாகும்.

  அதே வேளை, மனைவி தவறான நடத்தையில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டதாக கணவன் குற்றம் சுமத்தும் போது அதற்கான நேரடி நான்கு சாட்சிகள் இல்லை என்றாலும் அதனை தான் கண்ணால் கண்டதாகக் கணவன் கூறும் பட்சத்தில் அக் குற்றச்சாட்டை மனைவி மறுக்கலாம். அல்லது ஏற்றுக் கொள்ளலாம். குற்றத்தை ஏற்றுக் கொண்டால் அவளுக்கு மரண தண்டனை வழங்கப்படும். ஏற்க மறுத்தால் கணவனும் மனைவியும் தங்கள் தரப்பை உறுதிப்படுத்த அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும்.

  அதாவது, கணவன் தன் மனைவி மீது சுமத்திய குற்றச் சாட்டில் தான் உண்மை யாளனே (உண்மையையே சொல்கிறேன்) என்று நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லிவிட்டு ஐந்தாவது முறையாக தான் பொய் சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும் என்று கூறவேண்டும்.

  குற்றச்சாட்டை மறுக்கும் மனைவி, தன் மீது சுமத்திய குற்றச் சாட்டில் கணவன் பொய் சொல்கிறான் என நான்கு முறை அல்லாஹ் வின் மீது சத்தியம் செய்து சொல்லி விட்டு ஐந்தாவது முறையாக ‘அவன் (கணவன்) உண்மை சொல்பவனாக இருந்தால் என் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும் எனக் கூற வேண்டும்.

  சத்தியம் செய்யும் இம்முறைக்கு அரபியில் ‘லிஆன்’ எனக் கூறப்படும். கணவன் மனைவியின் மீது குற்றம் சுமத்துவதால் முதலில் கணவன் தான் மக்கள் முன்னிலையில் (நீதி மன்றத்தில்) சத்தியம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

  உண்மையிலேயே மனைவி தப்புச் செய்தாளா? அல்லது மனைவி மீது கொண்ட வெறுப்பினால் கணவன் குற்றம் சுமத்து கிறானா என்பது யாருக்கும் தெரியாது. எனவே தான், சம்பந்தப் பட்ட இருவரும் ‘லிஆன்’ செய்ய வேண்டும் என வேண்டப் படுகிறார்கள். அதன் மூலமாக சமுதாயத்தில் குறித்த அப்பெண் தவறாக விமர்சிக்கப் படுவது தடுக்கப்படுகிறது.

  உண்மையான குற்றவாளி யார் என்பது உறுதியாக சமூகத்திற்குத் தெரியாத போது பெண்ணை மாத்திரம் வஞ்சிக்கும் சமூகக் கொடுமையிலிருந்து அவளை இஸ்லாம் காக்கிறது.

  இந்த இடத்தில் கூட பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்திற்கு அடிமையாகி விடக் கூடாது என்பதில் இஸ்லாம் உரிய கவனம் செலுத்துகிறது.

  ‘லிஆன்’ செய்த பின்பு அவர்கள் இருவருக்கும் இடையிலான கணவன் மனைவி என்ற உறவு முறிவ டைந்து விடுகிறது. அதன் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து கொள்ள (திருமணம் செய்து கொள்ள) முடியாது என்றும் இஸ்லாம் கூறுகிறது.

  ஒருமுறை நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடத்தில் அவரது தோழர் ஹிலால் இப்னு உமையா(ரழி) என்பவர், தனது மனைவி ‘ஷரீக் பின் சஹ்மா’ என்பவருடன் இணைந்து இருந்ததாக குற்றம் சுமத்தி நீதி கேட்டு வந்தார்.

  அப்போது நபி(ஸல்) அவர்கள் உன் குற்றச் சாட்டுக்கு ஆதாரத்தைக் (சாட்சியங் களை) கொண்டுவா, இல்லையெனில் உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும் என்று சொன்னார்கள்.

  அதற்கு அவர், எங்களில் ஒருவர் தன் மனைவியுடன் அன்னிய மனிதன் இருப்பதைக் கண்டாலுமா? எனக் கேட்டார்.

  ஆம். நீ உன் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரத்தைக் கொண்டு வா. இல்லையெனில் உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார் கள்.

  உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பி வைத்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உண்மையே சொல் கிறேன். எனது முதுகைக் கசையடியிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான் என்று அவர் சொன்னார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான்.

  ‘தங்களைத் தவிர அவர்களுக்கு வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் எவர்கள் தமது மனைவியர் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்களில் ஒருவரின் சாட்சியமாவது, நிச்சயமாக தான் உண்மையாளர்களில் உள்ளவன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து (சாட்சிகூறு) வதாகும். ஐந்தாவதாக தான் பொய்யர்களில் உள்ளவனாக இருப்பின் அல்லாஹ் வின் சாபம் தன்மீது உண்டாகட்டும் என அவன் சத்தியம் செய்வதாகும்.

  நிச்சயமாக அவன் பொய்யர்களில் உள்ளவன் என்று அல்லாஹ்வின் மீது அவள் நான்கு முறை சத்தியம் செய்து சாட்சி கூறுவது அவளை விட்டும் தண்டனையைத் தடுத்து விடும்.மேலும் ஐந்தாவதாக அவன் உண்மையாளர்களில் உள்ளவனாக இருப்பின் அல்லாஹ்வின் கோபம் தன் மீது உண்டாகட்டும் என்று அவள் சத்தியம் செய்வ தாகும். உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் இல்லாதிருப்பின் (உங்களுக்கு தண்டனை ஏற்பட்டிருக்கும்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப் பவன் ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 24:6-9)

  இவ்வசனங்கள் அருளப்பெற்றதும் நபி(ஸல்) அவர்கள் ஹிலால் இப்னு உமையா (ரழி) அவர்களையும் அவர்களுடைய மனைவி யையும் வரவழைத்தார்கள். அல்லாஹ் கூறிய பிரகாரம் சத்தியம் செய்யுமாறு இருவருக்கும் கூறினார்கள். அப்போது ஹிலால்(ரழி) அவர்கள் தான் சொன்னது உண்மையே என நான்கு முறை சத்தியம் செய்து ஐந்தாவது முறையாக நான் பொய் சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என்மீது உண்டாகட்டும் எனக் கூறினார்.

  அப்போது நபி(ஸல்) அவர்கள், உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக் கோரி தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றவர் யார் என்று கேட்டுக் கொண் டிருந்தார்கள்.

  பிறகு ஹிலால்(ரழி) அவர்களின் மனைவி எழுந்து நின்று நான்கு முறை சத்தியம் செய்துவிட்டு ஐந்தாவது முறையாக சத்தியம் செய்ய முனைந்த போது, அங்கிருந்த மக்கள் அவரை நிறுத்தி இது பொய்யான சத்தியமாக இருந்தால் அல்லாஹ்வின் தண்டனை உறுதியாகி விடும் என்று கூறினார்கள். அப்பெண் சற்றே தாமதித்து சத்தியம் செய்யத் தயங்கினார்.

  அவள் சத்தியத்திலிருந்து வாபஸ் பெற்று விடுவாளோ என்று மக்கள் கருதினர். ஆனால், அப்பெண் ‘காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக் குள்ளாக்கப் போவதில்லை’ என்று கூறி சத்தியம் செய்து முடித்தாள்.

  அப்போது நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெ டுத்தால் அது (அவளது கணவன் குற்றம் சாட்டிய) ஷரீக் பின் ஸஹ்மாவுக்கே உரியதாகும் என்று சொன்னார்கள்.

  அப்பெண் நபி(ஸல்) வர்ணித்தவாறே குழந்தையைப் பெற்றெடுத்தாள். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள், லிஆன் பற்றிய இறை சட்டம் வந்திராது விட்டால் அவளுக்குத் தண்டனை விதித்திருப்பேன் எனக் கூறினார்கள்.

  நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் கணவன் மனைவி என்ற பந்தத்திலிருந்து பிரித்து வைத்தார்கள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை அவளையே சாரும் என்றும் தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பவர்:இப்னு உமர்(ரழி) (நூல்:புகாரி 4748,4746,5309,5311)

  மனைவி நடத்தைக் கெட்டவள், கற்பை இழந்தவள் என்று கணவன் குற்றம் சுமத்திய பின் மீண்டும் அவனோடு அவள் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறினால் கணவன் சொன்ன குற்றச்சாட்டு உண்மையாகி விடும். எனவே தான் அவ்விருவரையும் மணப்பந்தத்திலிருந்து நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிரித்து விடுகிறார்கள்.

  ‘லிஆன்’ செய்தவர் தனது மனைவியை மணம் முடிக்கும் போது கொடுத்த மஹர் எனும் மணக்கொடையைப் பற்றி நபிமுஹம்மது (ஸல்) அவர்களிடம் முறையிட்டு அதனைத் திருப்பிப் பெற்றுத் தருமாறு கேட்டார். அதற்கு நபியவர்கள் நீர் உம்முடைய மனைவி மீது சுமத்திய குற்றச்சாட்டில் உண்மையாளராக இருந்தால் அவளுடன் நீர் ஏற்கனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர். அதற்கு அது நிகராகிவிடும். நீர் பொய் சொல்லியிருந்தால் அதன் காரணமாக அச்செல்வம் உம்மை விட்டு வெகுதொலைவில் இருக்கிறது (மனைவிக்கு உரியதாகிவிட்டது) என்று கூறினார்கள். (நூல்:புகாரி 5311)

  கணவன் மனைவிக்கிடையில் ‘லிஆன்’ மூலம் விவாகரத்து நடைபெற்ற பின்பும் கூட கணவன் மனைவிக்குக் கொடுத்த செல்வத்தி லிருந்து ஒரு சதத்தைக் கூட திரும்பப் பெற முடியாது. அச்செல்வம் முழுவதும் மனைவியையே சாரும் என நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். பெண்ணுடைய மானத்தை ஏலம் போட்டிட இஸ்லாம் ஒருபோதும் இடம் தரவில்லை. விசாரணை என்ற பெயரில் ஏளனப் படுத்தவோ எள்ளி நகையாடவோ களம் அமைக்கவு மில்லை.

  எனவே, பைபிள் வழங்கும் தீர்ப்பை விட அல்குர்ஆன் வழங்கிய தீர்ப்பே பெண்ணின் வாழ்வுரிமையைப் பாதுகாத்து கௌரவிப்ப துடன் அறிவு பூர்வமாகவும் திகழ்கின்றது.

  அடுத்து, கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐம்பது வெள்ளிக் காசுகளை அபராதமாகக் கொடுத்துக் கற்பழித்தவன் அவளையே மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற பைபிள் தீர்ப்பைப் பற்றி கவனிப்போம்.

  இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் கற்பழிக்கப்பட்ட பெண் தன்னை கற்பழித்த காமுகனையே கணவனாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு போதும் அனுமதிக்க வில்லை. அவ்வாறு அனுமதிப்பது ஒவ்வொரு இளம் பெண்ணுடைய கற்பும் பறிக்கப் பட்டு சூறையாடப் படுவதற்கு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்குவது போன்றாகிவிடும். அதற்கு மாற்றமாக கற்பழித்தவனுக்கு இஸ்லாம் தண்டனையை வழங்குகிறது. அதன் மூலம் காமுகர்களின் அட்டகாசத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, பெண்கள் தலை நிமிர்ந்து கற்புடன் சுதந்திரத்துடன் வாழவழி வகுக்கிறது.

  நபிமுஹம்மத்(ஸல்) அவர்களது காலத்தில் ஒரு பெண்மணி தொழுவதற்காகப் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டார். அப்பெண்ணை ஒருவர் போர்வையால் போர்த்திக் கற்பழித்துவிட்டார். அவள் சப்தமிட்டதும் அவன் ஓடி விட்டான்.

  (சப்தத்தைக்கேட்ட) வேறொருவர், அவளருகே ஓடி வர அவர் தான் தன்னை கற்பழித்ததாக எண்ணி அப்பெண் ‘இவர் என்னைக் கற்பழித்து விட்டார்’ என்று மக்களிடம் கூறினாள்.

  அப்பெண் அடையாளம் காட்டிய அந்நபரை மக்கள் பிடித்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரவே அவருக்கு கல்லெறிந்து தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.

  அப்போது அப்பெண்ணைத் தீண்டிய நபர் எழுந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தான் அவளைத் தீண்டியவன்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் பாதிக்கப் பட்ட அப்பெண்ணிடம் ‘நீ போய் விடு. அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்’ எனக் கூறி அனுப்பிவிட்டு தவறாகப் பிடித்து வரப்பட்ட அம்மனிதரிடமும் அழகிய வார்த்தைகளைக் கூறினார்கள்.அப்பெண்ணைக் கெடுத்த வரைக் கல்லெறிந்து கொல்லுமாறு கட்டளை யிட்டார்கள். (நூல்: திர்மிதி 1477)

  ‘கல்லெறிந்து கொல்லுதல்’ என்ற சட்டம் காட்டு மிராண்டித் தனமானது என்று மேற்கத்திய (யூத, கிறிஸ்தவ) உலகம் விகாரமாக விமர்சனம் செய்து வருகிறது.

  ஆனால் இஸ்லாத்திற்கு முன்பே பைபிளில் இச்சட்டம் சொல்லப்பட்டு நடை முறைப் படுத்தப்பட் டுள்ளது. இச்சட்டத்தை இப்போதாவது செயல் படுத்தியாக வேண்டிய கடமை அவர்களுக்குண்டு என்பதை மறக்கக் கூடாது.