சூனியமும் பரிகாரமும் ()

செய்வினை என்பதை தமிழில் பில்லி, ஏவல், சூனியம் என்று குறிப்பிடுவது போன்று அறபு மொழியில் ஸிஹ்ர், நுஷ்ரா, திப் என பல சொற்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. சூனியம் என ஒன்றுண்டா?அதன் மூலம் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியுமா? பிணியையும் குணத்தை யும் உண்டாக்க முடியுமா? எனும் விடயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றைக் கருத்து காணப்படவில்லை..

|

 சூனியமும் பரிகாரமும்

الُّنشْرَةُ  اَوْ عِلَاجُ الِّسحْرِ بِاالسِحْرِ

 என்னுரை

       அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

       எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் நம் உயிரிலும் மேலான நமது அன்புக்குரிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் கிளையார், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

       செய்வினை என்பதை தமிழில் பில்லி, ஏவல், சூனியம் என்று குறிப்பிடுவது போன்று அறபு மொழியில் ஸிஹ்ர், நுஷ்ரா, திப் என பல சொற்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.

      சூனியம் என ஒன்றுண்டா?அதன் மூலம் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியுமா? பிணியையும் குணத்தையும் உண்டாக்க முடியுமா? எனும் விடயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றைக் கருத்து காணப்படவில்லை. ஏனைய பல விடயங் களைப் போன்று இவ்விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் வாதப்பிரதி வாதங்க ளும், சர்ச்சைகளும் இருந்து வருகின்றன.

      எனினும் இந்தக் கருத்து வேறுபாடுகள் வேற்றுமைக்கும், பிளவுக்கும் இலக்காகாத வரை அது ஆரோக்கியமானதுதான். ஆனால் இன்று துரதிஷ்டவசமாக  சமூகப் பிளவுக்கு மாத்திரமன்றி சமூக அழிவுக்கும், கருத்து முரண்பாடுகள் காரணமாகியுள்ளன. இதனைத் தவிர்க்க முயற்சி எடுப்பது புத்தி ஜீவிகள், அறிஞர்கள் யாவரினதும் கடமையாகும்.

     இனி சூனியத்தைப் பற்றிக் குறிப்பிடுவதா னால் அது பல வகைப்படும். சூனியத்தின் நோக்கத்தைப் பொருத்து பில்லி, ஏவல், செய்வினை என்று அதன் பெயர் விரிவடைந்து செல்கிறது. அவ்வாறு தான் சூனியம் என்பது அறபு மொழியிலும் பல சொற்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. அது அல் குர்ஆனில் ‘ஸிஹ்ர்’ என்றும் நபிமொழியில் ஸிஹ்ர், திப் எனும் சொற்கள் மாத்திமன்றி நுஷ்ரா போன்ற சொற்களும் இடம் பெற்றுள்ளன.

        ஸிஹ்ர் என்ற சொல்லைப் போன்று நுஷ்ரா எனும் சொல்லும் இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலியாக் காலம் தொட்டு புழக்கத்தில் இருந்து வருகின்றது. எனவே நுஷ்ரா என்னும் போது சில சந்தர்ப்பத்தில் சூனியத்தின் மூலம் பாதிக்கப்பட்டவனின் சூனியத்தை விடுவித்தல் என்றும், இன்னொரு சந்தர்ப்பத்தில் பாதிக்கப் பட்டவனை பிரிதொரு சூனியம் கொண்டு விடுவித்தல் என்றும் கருதப்படும். இதில் முந்தியதை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக் கிறது. ஆனால் பிந்தியதை இஸ்லாம் தடை செய்கிறது என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து. எனவே தான் நபியவர்களிடம் நுஷ்ராவைப் பற்றிப் பொதுவாக விசாரிக்கப் பட்ட போது, அதனை வினவியவரின் நோக்கத்தைப் புரிந்து  நபியவர்கள் அதற்குப் பதில் தந்திருக்கி றார்கள். அதன் பிரகாரம் ஒரு சமயத்தில் அதனை ஆகாது என நபியவர்கள் கூறினார்கள் என்றால்,இன்னொரு சமயத்தில் அதனை அங்கீகரித்துள்ளதைக் காண முடிகின்றது.

      எனவே சூனியம் பற்றிய இப்படியான பல ஐயங்களைத் தெளிவுபடுத்தி அஷ்ஷெய்க் அபாபத்தீன் அவர்கள் “الُّنشْرَةُ  اَوْ عِلَاجُ الِّسحْرِ بِاالسِحْرِ” எனும் பெயரில் நூலொன்றை எழுதியுள்ளார். அதனையே அடியேன் “சூனியமும் பரிகாரமும்” எனும் பெயரில் மொழிபெயர்த் துள்ளேன். எனவே சூனியம் சம்பந்தமான சந்தேகங்களையும் மற்றும் அதன் தெளிவை யும் உள்ளடக்கியிருக்கும் இந்நூலின் மூலம் தமிழ் உலகம் பயனடையும் என்பது என் எண்ணம். எனவே இதிலிருந்து பயன் பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப் பானாக! மேலும் இதன் மூல ஆசிரியருக் கும், மொழிபெயர்ப்பாளனுக்கும், இதனை வெளியிட ஒத்துழைப்பு வழங்கிய சகலருக் கும் ஈருலகிலும் நற்பாக்கியத்தையும் நல்லருளையும் தந்தருளு மாறு அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

மொழி பெயர்ப்பாளன்

திக்குவல்லை இமாம்.  (ரஷாதி பெங்களூர்)

*********

 அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மான் அல் ஜிப்ரீன் அவர்களின் அணிந்துரை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

     தன் கட்டளைக்குக் கீழ்படிந்து தன் மீது அச்சம் கொள்வோரை கன்னியப்படுத்துபவனும் தன் கட்டளைக்கு மாறு செய்வோரை இழிவு படுத்து வோனுமாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் சொந்தம். மேலும் அவனின் இனிமையான அருள் கிட்டும் போதும் கசப்பான சோதனைகளை எதிர் கொள்ளும் போதும் அவனை நான் போற்று கிறேன். வணக்கத் திற்குத் தகுதியானவன் அவனையன்றி வேறு யாருமில்லை. ஆகையால் அவனையல்லாது வேறு எவரையும் நாம் வணங்குவதில்லை என நான் சாட்சி பகர்கின் றேன். மேலும் அல்லாஹ்வின் தூதை எத்தி வைத்து அவனுக்குக் கட்டுப் பட்டு அவனின் வழிகாட்டலின் படி நேர்வழியை அடைந்து கொண்ட முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ் வின் அடியாரும் தூதருமாவார் என்றும் சாட்சி பகர்கின்றேன். மேலும் அன்னாரின் மீதும் அன்னாரின் கோபத்தை தங்களின் கோபமாகவும், அன்னாரின் திருப்தியை தங்களின் திருப்தியாக வும் ஆக்கிக் கொண்ட அன்னாரின் கிளையார், தோழர்கள் யாவர் மீதும் அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் உண்டாவதாக!

       சகோதரன் “அப்துல் அழீம் அபாபத்தீன்” அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிந்து அவரின் தவறுகளையும் இல்லாதொழிப்பானாக! அவர் எழுதிய “نُشْرَةٌ” எனும் இந்நிரூபத்தில் சூனியக்காரர்கள் பற்றியும் அவர்களைத் தேடி வருதல், அவர்களிடம் சிகிச்சை பெறுதல் தொடர்பாகவும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான விடயங்களைச் சுருக்கமாக அவர் உள்ளடக்கியுள்ளார். மேலும் சூனியக்காரன் காபிர் என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு என்ற படியாலும் நபி வாக்குகளில் சூனியக் காரனைக் கொலை செய்து விடும் படியும் அவனைப் பூண்டோடு அழித்து விடும்படியும் கட்டளை வந்துள்ள படியாலும் அவர்களை அங்கீகரிப்பதானது “ஹராம்” என்ற கருத்தே சரியானது என்பதை அவர் இந்நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

      சூனியக்காரனின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்நாளில் அவர்களின் செல்வாக்கும், அக்கிரமங்களும், விஷமித்தனங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. எனவே, அவர்களின் மாயா ஜாலங்கள், பகட்டு நடவடிக்கைகள், கற்பனைக் காட்சி என்பவற்றைக் கண்டு ஏமாந்து போன பொது ஜனங்கள் அவர்கள் சம்பந்தமான தீர்ப்பு யாதென்பதைப் புரிந்து கொள்ளாத நிலையில் உள்ளனர். ஆகையால் அவர்களில் சிலர் தொழில் வாய்ப்புக்கான வழிகளைத் தேடியும், இன்னும் சிலர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை தேடியும் மற்றும் சிலர் அவர்களின் மாணவர்களாகக் கற்றுக் கொள்ளவும் படை யெடுத்து வருகின்றனர்.

         உண்மையில் சூனியக்காரர் பயன் படுத்தி வரும் ஷைத்தான்கள் மற்றும் ஜின்களின் விஷமத்தனத்திலிருந்து பாதுகாப்புப் பெறவும் அவர்களின் கெடுபிடிகளைப் பூண்டோடு அழித்தொழிக்கவும் சிறந்த காரணிகளாகவும் பாதுகாப்புக் கோட்டையாகவும் இருப்பது அல்லாஹ்வை நினைவு கூறுவதும் அவனிடம் பிரார்த்தனை புரிவதும், அல்குர்ஆனை ஓதுவதும், அவனின் கட்டளைப்படி ஒழுகுதலும், மற்றும் நபிகளாரின் நடைமுறைகளையும், அன்னாரின் வழியையும் பின் பற்றிய சான்றோர்களைப் பின்பற்றுவதும் தான். ஆனால் சூனியக்காரரைத் தேடிச் செல்லும் ஜனங்கள் அதனை அறியாதவர் களாக இருக்கின்றனர். எனவே தான் இவற்றை யெல்லாம் அவர்கள் புறம் தள்ளி விட்டு சூனியக் காரர்களைப் பின் தொடர ஆரம்பித்து விட்டனர்.

         இந்நிலையில் சூனியக்காரரிடம் வருவதும் அவர்களிடம் சிகிச்சை பெறுவதும் சரியென்று’ சிலர் அதனை அனுமதித்து வருகின்ற னர். எனவே அவர்கள் மூலம் எழுப்பப்படும் ஐயங்களைக் கொண்டு வந்து அதற்கான பதிலையும் மற்றும் சூனியக்காரரிடம் வருவதை நியாயப் படுத்துவதற்காக அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் பிழையானவை என்பதையும் நூலாசிரியர் தெளிவு படுத்தி யுள்ளார். மேலும் சூனியக்காரர்களின் விடயத்தில் ஹதீஸில் வந்துள்ள அச்சுறுத்தல்கள், எச்சரிக்கைகள் பற்றியும் அவர் தனது நூலில் தெளிவு படுத்தி யுள்ளார். அவரின் இந்த அனுகு முறையானது பாரட்டத்தக்கதாகும்.

        எனவே தன் மார்க்கத்தைப் பாதுகாப்ப தும், தனது நம்பிக்கையை கெடுத்து விடும் காரியங்களை விட்டும் பேணுதலாக இருப்பதும் மற்றும் இஸ்லாமியப் போதனையையும் அதன் ஸுன்னாவையும் கடைபிடித்து நடத்தலும் சகல முஸ்லிம் மக்களினதும் கடமையாகும். அதிகப் படியான மக்கள் இவற்றைப் புறக்கணித்த போதிலும் பின்பற்றத் தக்கது உண்மை ஒன்றே என்றபடியால் உண்மையைப் பற்களால் கடித்துப் பலமாகப் பிடித்துக் கொள்வது அவசியம்.

       வழி தவறிய மற்றும் தட்டழிந்து போன முஸ்லிம் மக்களுக்கு நேர்வழியைத் தந்து, மீண்டும் அவர்களை சரியான இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் திரும்பிட வழிவகுக்கு மாறும் மேலும் நமது அதிகாரிகளும் நிர்வாகி களும் சூனியக்காரர்களைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுத்தமைக்காக அவர்களுக்கு இரட்டிப்புக் கூலி வழங்குமாறும், இப்புவியில் அல்லாஹ்வுக்கு இணை ஏற்படா வண்ணம் அவன் ஒருவனையே வணங்குவதற்கான சூழலை ஏற்படுத்து முகமாக அந்த அதிகாரிக ளின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்துமாறும் அல்லாஹ்வை நாம் வேண்டுகிறோம். “எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. மேலும் அல்லாஹ்வின் கருணையும், சாந்தியும் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் மீதும் உண்டாவதாக!”

 அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மான் அல்ஜிப்ரீன்

 ஹிஜ்ரி:- 1415/20/12

***********

 முன்னுரை

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனைப் புகழ்ந்து அவனிடமே உதவியும் தேடுகிறேன். மேலும் அவனிடமே பிழையைப் பொருத்தருளும் படியும் நேரான வழியைக் காட்டுமாறும் வேண்டுகிறோம். மேலும் நமது மனதில் தோன்றும் சகல தீய எண்ணங் களையும், மற்றும் நமது சகல தீய செயல்களை யும் விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அவன்  யாருக்கு நேர்வழியைக் கொடுத்தானோ அவரை யாராலும் வழி கெடுக்க இயலாது. மேலும் அவன் யாரை தவறான வழியில் செல்ல விட்டு வைத்தானோ அவனுக்கு யாராலும் நேரான வழியைத் தரவும் இயலாது. மேலும் வணக்கத்துக்குத் தகுதியான வன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவனும் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை எதுவு மில்லை என சாட்சி பகரகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என சாட்சி பகர்கின்றேன்.

       இந்நாளில் ஷைத்தான்களுக்கும் ஜின் களுக்கும் அடிமைப்பட்ட சூனியக்காரரும் சோதிடர்களு மான மாயாஜாலக்கார தஜ்ஜால்களினதும், மூட நம்பிக்கையாளர்களின தும் வீட்டு வாயலின் முன்னால் பெருந்திரளான இஸ்லாமிய ஆண் களும் பெண்களும் போய் குவிகின்றனர். அவர்களின் இந்தக் காட்சி அதிகமான முஸ்லிம் களின் ஈமானும் அல்லாஹ்விடம் தம் கருமங்களின் பொறுப்பைச் சாட்டுகின்ற தவக்குலின் தன்மையையும் பலவீனமடைந்துள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

          அந்தச்  சூனியக்காரிடம் நீங்கள் ஏன் செல்கின்றீர்கள் என்று இவர்களிடம் வினவினால் அதற்கு அவர்கள் தரும் பதிலைக் கேட்க உங்களுக்கு வியப்பாக இருக்கும். அதற்கு அவர் களின் பதில் இதுதான். “தங்களுக்குச் செய்துள்ள செய்வினையை நீக்கிட, அல்லது சூனியம் ஒன்றை செய்விக்க, அல்லது செல்வந்தனாக்கும் காரியம் ஒன்றை செய்து கொள்ள, அல்லது கண்ணேறு, ஏற்படாமல் தடுத்துக் கொள்ள, அல்லது எதிர்கால வாழ்க்கை பற்றித் தெரிந்துக் கொள்ள, அல்லது நோய் நிவாரணத்திற்கு மருந்தொன்றைப் பெற்றுக் கொள்ள, அல்லது இது போன்ற ஏதேனும் ஒரு தேவையை நிவர்த்தி செய்து கொள்ளவே” தாங்கள் சூனியக்கார்களிடம் செல்வதாக அவர்கள் பதில் தருவார்கள்.

    எனவே அவர்களின் நம்பிக்கையின் பிரகாரம் தங்களின் இத்தகைய தேவைகளை நிறை வேற்றித் தருகின்ற சூனியக்காரர்களுக்குத் தம்மால் இயன்ற மட்டும் செலவு செய்வதில் தவறேதுமில்லை என அவர்கள் துணிந்து கூறுவர். ஆனால் சூனியக்காரரின் இந்தப் பித்தலாட்டம் எங்கெல்லாம் நடை பெறுகின்ற னவோ அதுவெல்லாம் அந்தந்த நாட்டின் மதத் தலைவர்களின் பார்வைக்கும், கேள்விக்கும் முன்னிலையில் அவர்களின் எந்தவொரு எதிர்ப்பும் அச்சுறுத்தலும் இன்றி தாரளமாக அரங்கேறுகின்றன.

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إلاَّ بِاالله العَلِيِّ العَظِيم    

       இஸ்லாமிய மார்க்கம் உதயமானதும் ஜாஹிலியாக் காலத்து மூட நம்பிக்கைகள் அணைத்தும் துடைத்தெறியப்பட்டன. இதுவும் அப்படியான ஒன்றுதான். சில சந்தர்ப்பங்களில் இத்தகைய கர்மங்களைச் செய்து வந்தவர்கள் அதை விட்டும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இன்னொரு சமயத்தில் அவர்கள் எச்சரிக்கப் பட்டனர்.  மற்றொரு நேரத்தில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அந்தக் கருமங்களைத் தீர்த்துக் கட்ட இஸ்லாமிய மார்க்கம் பல வழிகளையும் கையாண்டது. அதன் காரணமாக ஏகத்துவத்தின் சூரியன் மேலோங்கி பிரகாசித்தது. மேலும் சூனியக்காரர்களினதும் சோதிடர்களினதும் மற்றும் பித்அத் வாதிகள், வழிகேடர்களினதும் முகத் திரையை அது கிழித்தெறிந்தது.

எனினும் இந்நாளில் அதிகமான முஸ்லிம் களிடம் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் சட்டங்களையும் மற்றும் அகீதா – கோட்பாடு களையும் பற்றிய அறிவு  இல்லாத தாலும், அல்லது அது பற்றி  அவர்கள் மிகவும் குறைந்த ஞானமுள்ளவர்களாக இருப்பதாலும் சூனியக் காரர்களினதும், மந்திரவாதி களினதும் ஆதிக்கம் வலுவடைந்து விட்டது. இதனால் அவர்களைப் பின்பற்றும் மக்களும் அதிகரித்து விட்டனர். மேலும் அவர்களின் வெறுக்கத்தக்க காரியங்களும் எல்லா இடங்களிலும் பரவி விட்டன. எனவே, ஒரு காலத்தில் தோற்றுப் போன, விரட்டியடிக்கப்பட்ட சூனியக்காரர் இன்று மதிப்புக்கும் கௌரவத்துக்கும் உரியவர் களாக மாறி விட்டனர். இதனை அல்லாஹ்விடம் தான் முறையிட வேண்டும் போலிருக்கிறது.

எது எவ்வாறாயினும் இஸ்லாமிய சமூகம் தங்களின் கற்கையிலும், அனுஷ்டானத்திலும், வாக்கிலும், வாழ்விலும் அல்லாஹ்வின் வேதத்தையும் அவன் தூதரின் வழி முறைகளை யும் ஏற்று அதன்படி ஒழுகுவார்களேயானால் அத்துடன் அவனிடம் தஞ்சமடைந்து அவனின் பாதுகாப்பையும் பெற்று அவனை அதிகமாக நினைவும் கூறுவார்களேயானால் அது மாத்திர மன்றி அவனின் வேதத்தை ஓதுவதில் ஆர்வமும் காட்டி ஷைத்தான்களையும்   அவற்றின் படைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பும் தேடி வருவார்களேயானால் இன்ஷா அல்லாஹ் ஷைத்தான்களுக்கு ஒரு வழியும் பிறக்காது. மேலும் சூனியக்காரர்களும் மந்திர வாதிகளும் மற்றும் அவர்கள் போன்ற ஏனைய மாயாஜாலக் கார தஜ்ஜால்களின் வாயலில் வந்து கூடும் ஜனக் கூட்டமும் இல்லாமல் போகும்.

     என் வாசகச் சோதரனே! இந்த நிரூபமானது சூனியக்காரர்களிடமும், மந்திரவாதிகளிடமும் அவர்களைப் போன்ற இன்னுமுள்ளோர்களிடமும் வருவதைப் பற்றிய உண்மையான நிலையைத் தெளிவு படுத்தும் ஒரு சீர்திருத்த முயற்சியாகும். எனவே சூனியக்காரர், மந்திர வாதிகள் ஆகியோரின் தீமைகளை அகற்றி விடுமாறும் அவர்களிடமிருந்து இஸ்லாமிய நாடுகளைத் தூய்மைப்படுத்துமாறும் அல்லாஹ்வின் வேதத்தை பற்றி பிடித்துக் கொள்ளவும் அவன் நபியின் வழியின் பிரகாரம் காரியமாற்றவும் நமக்கு வாய்ப்பளிக்குமாறும் நான் அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

நுலைவாயில்.

சூனியக்காரன், சூனியம் கற்றல் தொடர்பான சட்டம்.

தங்களின் விவகாரங்களையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு ஷைத்தான் களின் உதவியைத் தேடி அவைகளிடம் தஞ்ச மடைகிறவனே சூனியக்காரன்.  ஷைத்தான்களின் நெருக்கத்தை அடைந்து கொள்வதற்காக தன்  சொல்லாலும், செயலாலும் அவற்றுக்குப் பல வகையான காணிக்கைகளை அவன் சமர்ப்பணம் செய்வான். மேலும் ஷைத்தன்களைத் திருப்திப் படுத்தும் முகமாக அவன் சகல தீய காரியங் களையும் செய்வான். இதுவெல்லாம் தங்களின் தேவைகளை அவர்களைக் கொண்டு நிறை வேற்றிக் கொள்வதற்காகத் தான். உண்மையில் சூனியக்காரரும் அவர்களைப் போன்றோரும் காபிர்கள் என்பது அல்லாஹ்வின் தீர்ப்பாகும்.  “ஸுலைமானோ நிராகரிப்பவராக இருக்க வில்லை. அந்த ஷைத்தான்கள்தான் உண்மையா கவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்து வந்தார்கள்.” (2:102)

ஷைத்தான்களைச் சூனியக்காரர்கள் என்பதற்குக காரணம் அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததுதான்,  என்பதை இத்திரு வசனம் தெளிவுபடுத்துகிறது.

மேலும் பின்வரும் அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸும் சூனியக்காரர் காபிர்கள் என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றன.

      “அவ்விரு மலக்குகளோ சூனியத்தைக் கற்கச் சென்ற மனிதர்களை நோக்கி நாங்கள் ஒரு சோதனையாக இருக்கிறோம். (ஆதலால்) நீங்கள் இதனைக் கற்று நீங்கள் நிராகரிப்பாளர்களாகி விட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதே யில்லை.” (2:102)

 “மேலும் அச்சூனியத்தை எவன் விலைக்கு வாங்கிக் கொள்கிறானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கி றார்கள்.” (2:112)

        உண்மைக்குப் பதிலாக எவன்  சூனியத்தை மாற்றிக் கொண்டானோ அவன் மறுமையில் பாக்கியமில்லாதவன், என்பதைத் தெளிவுபடுத்தும் ஒரு கூற்றாக இவ்வசனம் விளங்குகிறது. மேலும், மறு உலகில் பாக்கிய முள்ளவன் முஸ்லிம் என்ற படியால், அங்கு  பாக்கியமில்லாதவன் காபிரே என்பதும்  இதிலிருந்து புலனாகிறது.

       மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் , “யாரேனும் சூனியக்காரனிடம் வந்து, பின்னர் அவன் கூறியதையும் உண்மைப்படுத்துவானாகில் அவன் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீது அருள் பட்டதை நிராகரித்தவனாவான்.” என்று கூறினார் கள்.  தனது விவகாரம் பற்றிச் சூனியக்காரனிடம்’ கேட்டவனின் நிலை இது எனில் சூனியக்காரனின் நிலை என்னவாகும்?

       வாசகச் சோதரனே! சூனியம் செய்தல், அதனைக் கற்றல், கற்றுக் கொடுத்தல் என்பது இரு வகைப்படும். அதனையும்  அறிந்து கொள்ளுங்கள்.

முதலாவது:

      குப்ரை - நிராகரிப்பை ஏற்படுத்தவல்லது. இந்த வகைச் சூனியமானது அதனை மேற் கொள்ளகின்றவனை இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேற்றி விடும். இதில் ஜின்களிடமும், ஷைத்தான்களிடமும் உதவி தேடல், அவற்றின் விருப்பத்தின்படி பல வகையான அனுஷ்டானங்களையும் வழிபாடு களையும் மேற்கொள்ளுதல், இணையை ஏற்படுத்தும் படியான அவற்றின் வேண்டுகோல் களுக்கு அடிபணிதல் போன்ற காரியங்கள் அடங்கும். இவற்றைச் செய்வதன் மூலம் தான் ஷைத்தான்களை திருப்பதியடையச் செய்ய முடியும். அப்பொழுது தான் சூனியக்காரன் ஷைத்தான்களின் உதவியுடன், தான் விரும்பும் விஷமத்தனத்தையும் சூழ்ச்சியையும் செய்ய முடியும். எனவே இக்காரியங்களைச் செய்ய அவன் நிர்பந்திக்கப்பட்டுள்ளான்.

எவன் இத்தகைய சூனியத்தை மேற் கொள்கிறானோ அவன் மரண தண்டனை பெற வேண்டிய காபிர் என்பது உலமாக்களின் ஏகோபித்த முடிவாகும். அதன் ஆதாரம் ஸஹாபாக்களின் நடைமுறைகளில் காணப்படு கின்றன. “எல்லா சூனியக்காரனையும் கொலை செய்யுங்கள்.” என்பது உமர் (ரழி) அவர்களின் வாக்கு. (இமாம் அஹ்மத்:1/190-191,அபூதாவூத் 3043,பைஹகீ:8/136)

        மேலும் ஹப்ஸா (ரழி) அவர்களுக்கு அவரின் ஒரு அடிமைப் பெண் சூனியம் செய்தாள். பின்னர் அவள் அதனை ஏற்றுக் கொள்ளவே அவளைக் கொலை செய்யும் படி ஹப்ஸா (ரழி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன் படி அந்தப் பெண் அடிமை சிரைச் சேதம் செய்யப்பட்டாள். இது ஸஹீஹான ஒரு ஹதீஸ் குறிப்பிடும் தகவலாகும்.

    மேலும் அல் வலீது இப்னு உக்பாவின் முன்னிலையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சூனியக்காரனை ஜுன்துப் இப்னு கைர் என்பவர் கொலை செய்தார். அப்போதவர் “நீங்கள் பார்த்துக் கொண்டே சூனியத்தில் சிக்க வருகின்றீர்களா? என்ற வசனத்தை ஓதினார்கள். இதுவும் உறுதிப் படுத்தப்பட்ட ஒரு சம்பவமா கும். (தாரகுத்னி 3/114,அல் ஹாகிம்:4/361,அல் பைஹகீ:8/136)

மந்திரித்து நூலில் முடிச்சு போடுதல், ஷரீஆ அனுமதிக்காத மருந்துகளைப் பாவித்தல் என்பன இரண்டாம் வகை சூனியத்தைச் சாரும். இந்த வகைச் சூனியத்தை செய்யும் ஒருவன் காபிராகி விடமாட்டான். ஆயினும் அவன் மரண தண்டனைக்கு உரியவன் என்பது இமாம் அபூ ஹனீபா,இமாம் மாலிக் (ரஹ்)  போன்ற பெரும் பாண்மை இமாம்களின் முடிவாகும். மேலும் முன்னர் குறிப்பிட்டது போன்று சூனியக் காரனைக் கொலை செய்ய வேண்டுமென்பதே  ஸஹாபாக்க ளிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள பொதுவான தகவல்கள் என்ற அடிப்படையில் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களும் அந்தக் கருத்தையே ஆதரித்தார்கள் என்பதே பிரசித்தம். 

     எனவே பெரும் பாவங்களில் ஒன்றான குப்ரின் பக்கம் இட்டுச் செல்லும் சூனியத்தைக் கற்பதும், கற்றுக் கொடுப்பதும் ஹராம் என்பதே ஏகோபித்த முடிவாகும். இதில் அறிஞர்கள் மத்தியில் மாற்றுக் கருத்து ஏதும் இருப்பதை நாம் அறியோம் என்று இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் “சூனியம் கற்பவ னும், அமுல்படுத்துபவனும் அதனை ஆகுமான காரியமா அல்லவா என்று எப்படி நம்பினாலும் அவ்விருவரும் காபிர்களாகி விட்டனர் என்பதே நமது சகாபாக்களின் கூற்றாகும்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.                   

          சூனியம் பற்றி இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது “சூனியம் ஒரு ஹராமான செயலும் பெரும் பாவமும் ஆகும்” என்பது ஏகோபித்த முடிவாகும். ஏனெனில் அதனை நபிய வர்கள் பெரும் பாவங்களில் ஒன்றாக கணக்கிட் டுள்ளார்கள். மேலும் சூனியம் குப்ரானது,  அல்லாதது  என  இருவகைகள் இருந்த போதிலும், இரண்டு வகையும் பெரும் பாவத்தைச் சேர்ந்தவை என்பதில் வித்தியாசம் இல்லை. குப்ரான வாசகம் அல்லது செயல் உள்வாங்கப் பட்ட சூனியம் குப்ரானதாகும். அப்படி இல்லை யெனில்  அது குப்ராகாது, எனினும்   சூனியம் எதுவாக இருந்தாலும்  அதனைக் கற்பதும் கற்றுக் கொடுப்பதும் ஹராமானதே. மேலும் அதில் குப்ரின் பால் இட்டுச் செல்லும் விடயம் ஏதுமி ருந்தால் அதனை மேற்கொண்டவன் காபிராகி விடுவான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஷரஹ் முஸ்லிம்:14/176)

இது சூனியம் கற்றல், கற்றுக் கொடுத்தல் சம்பந்தமாக சில அறிஞர்களின் கூற்றுக்கள். இவற்றையெல்லாம் நீங்கள் அறிந்து கொண்ட பின்னரும் சூனியக்காரன், மந்திரவாதி, மாயா ஜாலக்காரன், மற்றும் அவர்களின் வழியில் செல்வோரிடம் போவதும் அவர்களிடம் தங்களின் பிரச்சினைகளை முறையிடுவதும், அவர்களின் மருந்துகளையும் மந்திரங்களையும் கொண்டு சிகிச்சை செய்வதும் ஆகுமான காரியம்தானா?

      எனவே இந்த நிரூபத்தின் ஊடாக இப்படியான கேள்விகளுக்கு விடையளிப்பதே என் நோக்கம். ஏனெனில் பொதுவாக சூனியக்காரன் பற்றியும், சூனியம் தொடர்பான சட்டம் பற்றியும் சில சந்தர்ப்பங்களில் பேசப் பட்டு வருகின்ற போதிலும், இது சம்பந்தமாக ஆதார பூர்வமாகவும், பகுப்பாய்வு செய்தும் தனிப்பட்ட நூல் எதுவும் எழுதப்பட்டிருப்பதை நான் பார்த்ததில்லை. மேலும் பொதுவாக இன்று சூனியக்காரரும், மாயா ஜாலக்காரரும்  எல்லா நாடுகளிலும் வியாபித்து விட்டனர். மேலும் இந் நாளில் சூனியம் பற்றிய மார்க்கச் சட்டம் யாது என்பதை விளங்கிக் கொள்ளும் நோக்கில் பெரிய அளவில் கேள்விகளும் விடுக்கப்பட்டு வருகின்றன, என்றால் இன்னொரு புறம் சூனியக்காரனோ, அதிகமான முஸ்லிம்களின் சிந்தனையிலும், உள்ளத்திலும் செல்வாக்குப் பெற்று வருகின்றான். யாவற்றுக்கும் அல்லாஹ் விடமே உதவி கோர வேண்டியுள்ளது. எனவே இதனை எழுதி முடிக்க அல்லாஹ் துணை புரிய வேண்டுமென அவனின் உதவியை வேண்டிய வனாக இதனை எழுதுகிறேன்.

**************

  நுஷ்ரா- சூனியம் அகற்றுதல்:-

        நஷர என்ற அடிச் சொல்லில் இருந்து பிறந்ததே ‘நுஷ்ரா.இதன் பொருள் பிரித்தல் -வெளிப்படுத்துதல் என்பது. அதற்கு விரித்தல் என்ற பொருளும் உண்டு.  ‘نَشَرَ الثَّوْبَ’ என்றால் ஆடையை விரித்தான் என்பது பொருள்.

       மேலும் இதுவொரு கலைச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி ‘நுஷ்ரா’ என்பது நோயாளிகளுக்கும் பைத்தியம் பிடித்தவர்களுக்கும் மற்றும் அது போன்ற நோயாளிகளுக்கும் மாந்திரித்தல், தாயத்துகள் மூலம் சிகிச்சை அளித்தல் என்று பொருள்  தரும்.

         இப்னு அஸீர் என்று பிரசித்தி பெற்ற அல் முபாரக் இப்னு முஹம்மத் அல் ஜஸரீ (ரஹ்) அவர்கள் “நுஷ்ரா’ என்பது ஒரு வகை மந்திரமும் சிகிச்சையுமாகும். இதன் மூலம் ஜின் பிடித்தவனுக்கு சிகிச்சை செய்வர். மேலும் இதன் மூலம் நோயாளியிடம் மறைந்திருக்கும் நோய் வெளியே எடுக்கப்படுகின்ற படியால் இதனை நுஷ்ரா என்பர்.” என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இப்னு மன்ழூர் என்பவர் “நுஷ்ரா என்பது பைத்தியம் பிடித்தவர்களுக்கும்,நோயாளிகளுக்கும் பரிகாரம் செய்யும் ஒரு மாந்திரீக முறை” என்று கூறியுள்ளார்.

       இது ‘நுஷ்ரா’ என்பதன் பொதுக் கருத்தா கும். இதன் பிரத்தியேகக் கருத்து, சூனியத்தை விடுவித்தல் என்பது. மேலும் ‘நுஷ்ரா, தன்ஷீர் என்பது தாயத்தையும், மந்திரித்தலையும் போன்றது என இப்னு மன்ழூர் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “கட்டி வைத்த ஒட்டகம் விடுவிக்கப் பட்டது போன்று மந்திரம் ஓதப்பட்ட பைத்தியக்காரனிடமிருந்து சூனியம் நீங்கி விடும்” என்று அல்கிபாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஸுல் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப் பட்டிருந்த போது, அவரிடம் ஆயிஷா (ரழி) அவர்கள் “هَلاَّ تَنَشَّرْتَ” மந்திரம் ஓதி இதனை நீங்கள் விடுவித்துக் கொள்ள வேண்டாமா?” என்றார்கள்.

சூனியம் பற்றிய விதி:-

    சூனியத்திற்கு இலக்கானவனுக்கு இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முதலாவது: ஸஹீஹான ஹதீஸிலுள்ள மந்திரித்தல், பாதுகாப்பு முறைகள், துஆக்கள் ,அனுமதிக்கப்பட்ட மருந்துகள் மூலம் சூனியத்தை விடுவித்தல் எனும் முறை. இது அதற்குரிய நிபந்தனைகளின் படி மேற்கொள்ளப் படுமானால் அதற்கு அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும், இஜ்மாஃவிலும்  அனுமதி இருக்கின்றது. அந்த நிபந்தனைகளாவன:-

 1.சூனியத்தை விடுவிப்பதற்காக பிரயோகிக்கும் வார்த்தைகள் அல்லாஹ்வின் வேத வாக்கு களாகவும், அவனின் திருநாமங்கள், பண்புகளாக வும், மற்றும் ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ள துஆக்கள், திக்ருகளாகவும் இருத்தல் வேண்டும்.

2.அந்த வாக்கியங்கள் அறபு மொழியில் இருத்தல் வேண்டும். அது வேறு மொழியில் இருந்தால் பொருள் புரியக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

3.அல்லாஹ்வின் ஏற்பாடும், நாட்டமும் இருந்தா லன்றி நுஷ்ராவாலும் மந்திரம் ஓதுவதாலும் எந்தத் தாக்கத்தையும் விளைவிக்க முடியாது. மேலும் அல்லாஹ்விடமிருந்து நிவாரணம் கிடைக்க அதுவொரு காரணம் மாத்திரமே என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

      “நோய் நீக்கக் காரணியான எல்லா கருமங்களும், துஆவும் அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் உள்ள சொற்றொடர்களாகவும் மற்றும் ஸாலிஹான முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஷிர்க்கை விட்டும் நீங்கிய அறபு மொழியைக் கொண்ட பெயர்களாகவும், பண்புகளாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அது ஹராமானது. நிராகரிக்கப் பட்டது என ஸித்தீக் ஹஸன் கான் என்பவர் கூறியுள்ளார்கள்.

    எனவே நுஷ்ராவும் அது போன்ற காரியங் களும் இந்த நிபந்தனைகளின் படி இருந்தால் அவை சரியானவை. ஏற்புடையவை. மேலும் அல்லாஹ்வின் நாட்டத்தின் பிரகாரம் அதன் மூலம் பயனும் கிடைக்கும். ‘நுஷ்ரா அதாவது சூனியத்தை அகற்றுதல் சம்பந்தமாக ஹதீஸ் கிரந்தங்களில் போதியளவு கூறப்பட்டுள்ள  படியாலும் “كِتَابُ الطِبِّ” என்ற பெயரில் தனி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளமையாலும் நுஷ்ரா எனும் சூனியம் அகற்றும் முறை அனுமதிக்கப் பட்டுள்ளதற்கான ஆதாரங்களை இங்கு சொல்வது நமது நோக்கமல்ல. எனினும் நுஷ்ரா எனும் சூனியம் அகற்றுதலின் இரண்டாவது முறையைப் பற்றி விளக்குவதே நமது இந்த நிரூபத்தின் நோக்கமும் குறிக்கோலுமாகும்.

நுஷ்ராவின் இரண்டாவது வழி முறை:

இதன் படி. சூனியத்திற்கு உள்ளானவனின் சூனியத்தை அகற்றும் பொருட்டு அவனை சூனியக்காரனிடம் அழைத்துச்  செல்வர். அப்போது சூனியத்தை அகற்றும் சூனியக்காரன் அல்லது மந்திரவாதி பின்வரும் வழிமுறைகளில் ஒரு வழியைக் கையாள்வான்.

1.சூனியக்காரன் முதலில் ஷைத்தான்களிடம் உதவி கோருவான். பின்னர் எங்கு எதன் மூலம் யார் மூலம் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஷைத்தான்களின் மூலம் அறிந்து கொள்வான். அதனை சூனியம் செய்யப்பட்ட வனுக்கு அவன் அறிவிப்பான். பின்னர் சூனியக் காரனின் அறிவுறுத்தலின்படி சூனியத்தால் பாதிக்கப்பட்ட வன், சூனியம் புதைக்கப் பட்டிருக்கும் இடத்திற்குச் சென்று அதனை அப்புறப்படுத்துவான். அப்போது அவன் மீது ஏவப்பட்டுள்ள சூனியம் அகன்று விடும். அவன் குணமடைவான்.

2.சூனியக்காரன் ஷைத்தான்களிடம் உதவி தேடிய பின் அவன், தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு சூனியம் வைத்துள்ள இடத்தில் இருந்து அதனைக் எடுத்து வரச் செய்து  அதனை மற்றவர் களுக்குக் காட்டுவான். இவ்விரு காரியங்களில் எதைச் செய்த போதிலும் தன் கைங்காரியத்தை அவன் வடிவாகச் சோடித்துக் காட்டுவான். மேலும் பாதிக்கப்பட்டவனைக் குழப்பி அவன் மனதை ஆறுதல் படுத்தும்படி, சில அல்குர்ஆன் வசனங்க ளையும் துஆக்களையும் ஜபித்து அவன் மீது ஊதி விடுவான்.

3. பாதிக்கப்பட்டவனிடமிருந்து செய்வினையை அகற்றும் பொருட்டு ஆடு, மாடுகளையோ அல்லது வேரேதும் பிராணியையோ அறுத்துப் பலியிடுமாறு சூனியக்காரன் கட்டளையிடுவான். மேலும் அதனைப் பலியிடும் போது தன் மீது ஏவப் பட்டுள்ள சூனியம் அகல வேண்டும் என்றும், இன்ன சூனியக்காரனின் பெயரால், அல்லது இன்ன ஜின்னின் பெயரால் இதனை அறுத்துப் பலியிடுகிறேன் என்று கூற வேண்டும் என்றும், அறுத்த பலிப்பிராணியைத் தன்னிடம் கொண்டு வருமாறும் சூனியக்காரன் அறிவிப்பான். அல்லது சூனியக்காரன் மற்றும் ஷைத்தான்களின் நெருக்கத்தைப் பெறும் பொருட்டு ஷிர்க்கை உண்டு பண்ணும் வேறு ஏதேனும் வாசகங்களை ஜெபிக்கும் படி அல்லது கருமங்களைச் செய்யும் படி அவன் கட்டளை பிறப்பிப்பான்.

4.பொருள் புரியாத சில வாசகங்களை சூனியக் காரன் எழுதி அதனைக் கொண்டு தாயத்துக்கள் செய்து அதனை நோயாளியின் மேனியில் அல்லது தன் பிராணியின் மீது அல்லது தன் வீட்டிலோ, படுக்கையிலோ தொங்க விடும் படியோ வைத்து விடும் படியோ அல்லது வேறேதேனும் கர்மம் ஒன்றைச் செய்யும் படியோ அவன் கட்டளையிடுவான். மேலும் அவன் எழுதித் தருகின்ற அந்த வாசகங்கள் சில சந்தர்ப்பங்களில் ஷிர்க்கை ஏற்படுத்தும் வாசகங்களாகவும் இருக்கும். இன்னும் சில வேளை அவன் எழுதித் தரும் வாசகங்கள் சிறுநீர், இரத்தம் போன்ற அசுத்தமான திரவங்களாலும் எழுதப்படுவதுண்டு.

       ஜின் வசியம் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் சில சூனியக்காரர், அவர்கள் தாயத்துக்களைத் தயாரிக்கும் போது அதில் அல்லாஹ்வின் திக்ருகளையும், பெயர்களையும், பண்புகளையும் எழுதி அதனுடன் ஷைத்தான் களையும் மற்றும் கலகக்கார ஷைத்தான் களையும் நினைவு கூர்ந்து அவையிடம் பாதுகாவல் தேடும் வாசகங்களையும் கலந்து குழப்பியடிப்பர்.

     எனினும் நிவாரணம் அளிப்பவன் அல்லாஹ் ஒருவனே என்ற படியால் இவ்வழிமுறைகளில் எதை மேற்கொண்டாலும் சில வேளை நோயாளிக்கு குணம் கிடைக்க வாய்ப்புண்டு. எனினும் நுஷ்ராவின் இந்த வழிமுறையும் இது போன்ற ஏனைய வழிமுறையும் ஆபத்தானவை. அது பல எச்சரிக்கைகளுக்கும் இலக்கானது.

அவையாவன:

ஆபத்து 1: சூனியக்காரர் மற்றும் மந்திரவாதிகளிடம் செல்லுதல்,

அவர்களிடம் தங்களின் பிரச்சினைகளை முறையிடுதலும் அதற்கு அவர்களிடம் உதவி தேடுதலும், மற்றும் அவர்களிடம் தஞ்சமடைதல்.

ஆபத்து 2: சூனியக்காரர்களையும் அவர்களின் வழியில் இருப்போரையும் அங்கீகரித்தல், ஆட்சேபனை எதுவுமின்றி அவர்களைப் பற்றி திருப்தியடைதல்.

ஆபத்து 3: பாதிப்படைந்தவனின் மீதுள்ள சூனியத்தை அகற்றும் பொருட்டு தனக்கு உதவும் ஜின்களின் கட்டளைகளுக்கு சூனியக்காரன் கட்டுப் படுதல். மேலும் தன் மீதுள்ள சூனியத்தை விலக்கித் தரும் சூனியக்காரன் தனக்கிடும் கட்டளைகளுக்கு பாதிக்கப்பட்ட நோயாளி கட்டுப்படுதல். இதன்படி பாதிக்கப்பட்டவனின் மீதுள்ள சூனியத்தை அழிக்க  ஷைத்தானின் கட்டளைக்கு அடிபணிந்ததன்  மூலம் சூனியக் காரனும், செய்வினைக்கு இலக்கானவனும் ஆகிய இருவரும் ஷைத்தானிடம் நெருங்கியவர் என்ற ஸ்தானத்துக்கு ஆளாகுவர்.

   ஆபத்து 4 : சூனியக்காரனிடமும், மந்திர வாதியிடம் செல்வதும் அவர்களிடம் பிரச்சினை கள் பற்றி முறையீடு செய்வதும் ஹராம் என்ற படியால் அவர்களிடம் போய் சிகிச்சை பெறுவதானது அல்லாஹ் ஹராமாக்கிய காரியம் ஒன்றைக் கொண்டு சிகிச்சை செய்ததாகக் கருதப்படும். எனவே அவர்களிடம் சிகிச்சைக் காகச் செல்வதும் அதுவல்லாத வேறு விடயத்துக்காகச் செல்வதும் சமம். இன்ஷா அல்லாஹ் பின்னர் இது பற்றி விளக்கம் தரப்படும்.

  ஆபத்து 5: தன் மீது ஏவப்பட்டுள்ள சூனியத்தை நீக்கும் விடயத்தில் தன்னிடம் சூனியக்காரன் சொல்லும் விடயங்களை உண்மையென செய் வினைக்கு இலக்கான நோயாளி ஏற்றுக் கொள்வது.

ஆபத்து 6: ஜாஹிலியாக் கால சமூகத்தைப் போன்று விபத்துகளும், திடீர் சம்பவங்களும் நிகழும் போது சூனியக்காரர்களைத் தேடிச் செல்லும் நிலை ஏற்படல்.

ஆபத்து 7: அடிப்படையேதுமின்றி சூனியக்காரர் களுக்கும், மந்திரவாதிகளுக்குமாக நிறைய பணம் செலவிடுதல்.

       இந்த விடயங்களை எல்லாம் நீங்கள் அறிந்து கொண்டதன் பின் நுஷ்ரா எனும் ‘சூனியத்தை இன்னொரு சூனியம் கொண்டு நீக்குதல்’ எனும் விடயத்தில் உலமாக்களிடையே பிரச்சித்தமான இரண்டு கருத்துக்கள் நிலவி வருகின்றன என்பதையும் நீங்கள் அறிதல் வேண்டும்.

  1: தேவை ஏற்படுமிடத்து நுஷ்ரா எனும் ஒரு ‘சூனியத்தை இன்னொரு சூனியத்தைக் கொண்டு அகற்றுதல்’ என்ற முறையைப் பயன்படுத்தலாம் என்பது அவ்விரு கருத்துக்களில் ஒன்றாகும். இக்கருத்தினை அனேகமான ஹன்பலி மத்ஹபு மார்க்க மேதைகள் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளும் சிலர் இக்கட்டான நெருக்கடியான சந்தர்ப்பத்தில் மாத்திரமே நுஷ்ரா முறையைக் கையாளலாம் என நிபந்தனையிட்டுள்ளனர் என்று சம்சுத்தீன் இப்னு முப்லிஹ் என்பவர் “الفُرُوعُ” மற்றும் “الإنْصَافُ” இலும், முர்தாவி “تصحيح الفروع” இலும், இப்னு நஜ்ஜார் “منتهى الإرادات” இலும் குறிப்பிட்டுள்ளனர்.

     இன்னும் சிலரோ இவ்விடயத்தில் நிபந்தனை எதுவும் இடவில்லை. அது பற்றி இப்னு அல் ஜவ்ஸியின் “غربب الحديث”,இலும், இப்னு குதாமாவின் “المغنى” இலும், இப்னு பறஜ் அப்துர் ரஹ்மான் இப்னு அபூ அம்ர் அல் மக்திஸியின் “الشرح الكبير” இலும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் கருத்தானது ஸஈத் இப்னு அல் முஸய்யப் அவர்களுடையது என்றும் அதே கருத்தினை அல் முஸ்னி அவர்களும் சார்திருந்தார் என்றும் ‘அல் குர்துபீ’ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தக் கருத்தை ஆதரிப்போர் முன் வைக்கும் ஆதாரங்கள் வருமாறு:

 இவ்விடயத்தில் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் மௌனமே ஆதாரம் என்பர். இதன் விவரத்தை அல் அஸ்ரம் (ரஹ்) என்பவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். ஒருவன் சூனியம் அகற்றும் காரியத்தைச் செய்து  வந்தான். அவனைப் பற்றி அபூ அப்துல்லாஹ் விடம் - இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் சிலர் விசாரித்தனர். நானும் அதைச் செவிமடுத் தேன். அப்போது அவரிடம் வந்தவர்கள் அவன் “இந்தக் கருமத்தைச் செய்வதற்கு தனக்கு சிலர் அனுமதி தந்ததுள்ளனர் என்று கூறுகிறான் என்றும் மேலும் அவன் ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி அதனுள் மறைந்து விடுகிறான் என்றும் கூறினர். இதைக் கேட்ட அபூ அப்துல்லாஹ் அதனை வெறுப்பது போன்று தன் கையை உதரினார்கள். அதன் பின் இவனைப் போன்ற ஒருவன் சூனியம் அகற்றுவது பற்றி தாங்களின் அபிப்ராயம் என்ன? என அவரிடம் வந்தவர்கள் கேட்டனர். அதற்கு அவர் இது என்னவோ நான் அறியமாட்டேன் என்றார்கள்” என்று அல் அஸ்ரம் அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள். “المغني مع الشرح 10/117” 

     எனவே ஒரு சூனியத்தை இன்னொரு சூனியம் கொண்டு அகற்றலாம் என்ற கருத்தை ஆதரிக்கும் கூட்டத்தினர் இந்த சம்பவத்தை ஆதாரமாகத் தருகின்றனர். ஏனெனில் இந்தக் கர்மம் ஆகாது என்பது இமாம் அஹ்மத் அவர்களின் கருத்தெனில் அப்படியான காரியம் ஒன்றைச் செய்து வந்த ஒருவனைப் பற்றி அவரிடம் விசாரித்த சமயத்தில் அது தகாத காரியம் என்பதை அவர் தெளிவாக சொல்லியிருப்பார் என்பது அவர்களின் வாதம்.

ஸஈத் இப்னு அல் முஸய்யிப் (ரஹ்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட செய்தியாவது:- “ஒருவன் தன் மனைவியுடன் உறவு கொள்ள முடியாதபடி சூனியம் செய்யப்பட்டிருந்தான். அவனைப் பற்றி ஸஈத் இப்னு முஸையிப் (ரஹ்) அவர்களிடம் நான் எடுத்துக் கூறி அவனுடைய சூனியத்தை அகற்றி விடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் பரவாயில்லை. ஏனெனில் அவர்கள் இதன் மூலம் ஒரு நல்ல காரியத்தையே செய்ய விரும்புகின்றர். பயனுள்ள காரியம் தடை செய்யப் படவில்லை.” என்று கூறினார்கள் என கதாதா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ( புஹாரி, பத்ஹுல் பாரி 10/243) இன்னொரு அறிவிப்பில் சூனியத்தால் பாதிக்கப்பட்ட மனிதன் அதனை அகற்றும் பொருட்டு இன்னொருவரிடம் போவது தீயதென அவர் காணவில்லை என்றும் அதுவொரு தயாளத் தன்மையாகும் என்றும் கூறினார்கள், எனக் காணப்படுகிறது. மேலும்  அதனை வெறுத்த ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் இந்த விடயத்தை ஒரு சூனியக்காரனே  அறிவான் என்று கூறினார்கள், என கதாதா (ரஹ்) அறிவிக்கின்றார்கள். மேலும் “சூனியத்தை விடுவிப்பதில் தவறில்லை. தீமை விளைவிக்கும் கர்மத்தையே அல்லாஹ் தடுத்துள்ளான், நன்மை தரும் கருமத்தை அவன் தடை செய்யவில்லை என்றும் ஸஈத் இப்னு முஸையிப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.” என கதாதா (ரஹ்) அவர்கள் மேலும் கூறினார்கள். (அத்தபரி)

உங்களில் எவரேனும் தன் சகோதரனுக்கு நன்மை செய்ய முடியுமெனில் அதை அவர் செய்யட்டும். என்ற நபிமொழி, பொதுவாக நல்ல கருமம் எதுவாக இருந்தாலும் அதைச் செய்யும் படி கூறுகின்றது. சூனியம் பொதுவாக தடை செய்யப் பட்ட ஒரு காரியம். எனினும் சூனியத்தை விடுவிப்பதன் மூலம் பாதிக்கப் பட்டவனுக்கு நன்மை ஏற்படுகிறது என்ற படியால் தடை செய்யப்பட்ட ஒரு மந்திரமா யினும், அனுபவத்தில் அதன் பயன் கண்டறியப் பட்டிருக்குமாயின் தேவையைப் பொருத்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்ற நியதிப்படி நுஷ்ராவும் தேவையைப் பொருத்து அனுமதிக்கப்படுகிறது என்பது அவர்களின் இன்னொரு வாதம்.

மார்க்கத்தில் விலக்கப்பட்ட ஒரு காரியம் நிர்ப்பந்தம் ஏற்படும் போது அதை விட மோசமான ஒரு காரியம் நிகழ்வதை தடுப்பதற்காக அனுமதிக் கப்பட்டுள்ளது என்ற கோட்பாட்டின்படி உயிரைத் தப்ப வைத்துக் கொள்வதற்காக நிர்ப்பந்தம் ஏற்படும் போது செத்த பிராணியின் மாமிசத்தையும் சாப்பிடலாம் என்பது போல, உயிரையும் புத்தியையும் அமைதியடையச் செய்யவும், கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை களை நீக்கி அவர்களிடை யே அன்பையும் பரஸ்பர அன்னியொன்னியத்தை யும் மற்றும் இது போன்ற உளமார்ந்த நலன்களை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படும் போது அதற்காக சூனியக்காரர்களிடம் போவதும் அவர்களிட மிருந்து மருந்தைப் பெறுவதும் ஆகும் எனும் நிலை உண்டாகும் என்பது அவர்களின் இன்னுமொரு வாதம்.

ஆயிஷா (ரழி) அவர்கள் தன் ஆயுளின் பிறகு தனது அடிமைப் பெண்ணுக்கு விடுதலை என்றார்கள். அதன் பின் அவள் ஆயிஷா (ரழி) அவர்களுக்கு சூனியம் செய்தாள். இதனால் அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் பிரகாரம் சில காலம் நோயால் அவதிப்பட்டார்கள். அவரின் சகோதரனின் புதல்வர்கள் ஒரு சூனியக் காரனிடம் போய்  இதைப் பற்றி அவனிடம் முறையிட்டனர்.

       அப்பொழுது அவன் “நீங்கள் குறிப்பிடுவது சூனியம் செய்யப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி யாகும். அவருக்கு அவரின் அடிமைப் பெண் சூனியம் செய்திருக்கின்றாள். இப்போது அவளின் மடியில் ஒரு சிறுவன் சிறுநீர் கழித்துவிட்டான் என்று கூறினான்.” இத்தகவலை அறிந்து கொண்ட ஆயிஷா (ரழி) அவர்கள் அவளை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். அவளை அவரிடம் அழைத்து வர, “எனக்கு நீ சூனியம் செய்தாயா?” என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அவளிடம் கேட்டார். அதற்கு அவளோ ஆம் என்றாள். அப்போது ஏன் அப்படிச் செய்தாய் என்றார் ஆயிஷா (ரழி) அவர்கள். அதற்கு அவள் நான் விரைவாக விடுதலை பெற விரும்பினேன் என்றாள். அப்போது தீமை செய்கின்ற ஒரு நாட்டுப் புறத்து அறபிக்கு அவளை விற்று விடும் படி ஆயிஷா (ரழி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவளும் அப்படியே விற்கப் பட்டாள். இன்னொரு அறிவிப்பில் அந்த சூனியக்காரனே ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து இந்தத் தகவலை அறிவித்ததாக வந்துள்ளது.

      ஆயிஷா (ரழி) அவர்களிடமும் அவரின் சகோதரனின் புதல்வர்களிடமும் சூனியக்காரன் அறிவித்த மறைமுகமான செய்தியில், அவனிடம் வந்தவர்கள் நோயாளியைப் பற்றிக் குறிப்பிட்ட அடையாளங்களை வைத்து அவன் அந்த நோயாளிக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதனைச் செய்தவள் நோயாளியின் அடிமைப் பெண் என்றும், அவன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்தத் தருவாயில் அவளின் மடியில்  ஒரு சிறுவன் சிறுநீர் கழித்து விட்டான் என்ற  செய்தியையும் கூறினான். இப்படியான மறைவான செய்தியை ஷைத்தா னுடன் தொடர்பு உள்ளவனால்தான் சொல்ல முடியும். எனவே இப்படியான சூனியகக்காரர் களிடம் போவது கூடாது என்றிருந்தால் தன் சகோதரனின் புதல் வர்கள் அவனிடம் செல்ல ஆயிஷா (ரழி) அவர்கள் அங்கீகரித்திருக்க மாட்டார்கள். மாறாக அவர்களைக் கண்டிருப்பார் கள். என்பதும் அவர்கள் முன்வைக்கும் மற்றுமொரு வாதமாகும்.

   நுஷ்ரா பற்றிய இரண்டாம் கருத்து

      இந்த கருத்தின் பக்கம் சார்புடையோர் எக்காரணம் கொண்டும் நிர்ப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ‘ஒரு சூனியத்தை இன்னொரு சூனியம் கொண்டு அகற்றும் முறையை’ அனுமதிக்க முடியாது என்கின்றனர். அவ்வாறே கருத்து புரியாத மந்திரங் கள் மற்றும் தாயத்துக்கள் கொண்டும் சூனியம் விடுவிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது என்கின்றனர். மேலும் இஸ்லாமிய சமூகத்தில் பெரும்பாண்மை உலமாக்கள் இந்தக் கருத்தையே சார்ந்துள்ளனர். அவர்கள் இது சம்பந்தமாக  வெளியிட்டுள்ள கருத்துக்களை ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா, ஹாபிழ் இப்னு ஹஜர், ஹன்பலி மத்ஹபின் இப்னு அபுல் இஸ் போன்ற அறிஞர்கள் நகல் பண்ணி தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.

       பொதுவாக மக்கள் வசமுள்ள தாயத்துக்க ளிலும், மந்திரங்களிலும் அறபு மொழியிலல்லாத கருத்துப் புரியாத வாசகங்களும் இருக்கின்றன. இவற்றில் ஜின்களுக்கு இணை வைக்கும் சுலோகங்களும் அடங்கும்.  கருத்துப் புரியாத இந்த சுலோகங்களைக் கொண்டு மந்திரம் ஓதுகிறவனுக்கு உண்மையில்  அதில் ஷிர்க் உண்டா என்பது தெரியாமல் இருந்தாலும் அதில் ஷிர்க்கின் வாசகங்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு  என்ற படியால் கருத்துப் புரியாத அப்படியான மந்திரங்களைப் பிரயோகிக்க வேண்டாம் என உலமாக்கள் தடுத்துள்ளனர் என்று இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (مجموع الفتاوى 19/13)

         மேலும் வலிப்பு நோயாளிக்குப் பயன் படுத்தும் சில தாயத்துக்களிலும் இணை சம்பந்தப்பட்ட வாசகங்கள் இருக்கின்ற படியால் அதனையும் உபயோகிக்கக் கூடாது என அறிஞர் கள் தடை செய்துள்ளனர். அது மாத்திர மன்றி ஷரீஆ அனுமதித்துள்ள மந்திரங்கள் தவிர்ந்த ஏனைய மந்திரங்களில் ஷிர்க்கின் விடயங்கள் இருக்கலாம் என்ற அச்சம் இருக்கின்ற படியால் பொதுவாக கருத்துப் புரியாத சகல மந்திரங்களை யும் உபயோகிக்கக் கூடாதெனவும் உலமாக்கள் தடை செய்துள்ளனர் என இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள். (مجموع الفتاوى 1/336)

      எனவே நம் நாட்டிலும் ஏனைய நாடுகளி லும் உள்ள உலமாக்கள் இதனடிப்படையிலேயே மார்க்கத் தீர்ப்பு வழங்கி வருகின்றனர். குறிப்பாக முஜத்தித் அஷ்ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் காலம் முதல் இதன்படியே பத்வா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடயத்தைத் தெளிவு படுத்து வதற்காக தனது (كتاب التوحيد) என்ற நூலில்  தனி அத்தியாயம் ஒன்றையே அவர் எழுதியுள்ளார். அதிலே இவ்விடயம் கூடாதென் பதை ஆதாரங்களுடன் அவர் தெளிவுபடுத்தி யுள்ளார். அவரின் மறைவுக்குப் பின் அவரின் வழியை அன்னாரின் மாணவர்களும், பேரர்களும் தொடர்ந்தனர்.

     அது மாத்திரமன்றி அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் ஹஸன், அஷ்ஷெய்க் ஸுலைமான் இப்னு அப்துர் ரஹ்மான் போன்ற அறிஞர்கள் அன்னாரின் நூலுக்கு வியாக்கியானங்கள் எழுதி இந்த விடயத்தை மேலும் தெளிவு படுத்தி யுள்ளனர்.

    மேலும் இவர்களிடம் கல்வி பயின்ற அஷ்ஷெய்க் ஹம்து இப்னு அதீக் போன்றவர் களும் மற்றவர்களும் நமது இந்தக் காலம் வரையில் அதே வழியிலேயே காரியத்தை தொடர்ந்து வருகின்றனர். இதன்  புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். மேலும் ஸஊதி அரசாங்கத்தின் முப்திகளாகச் சேவை செய்த  அஷ்ஷெய்க் அல்லாமா ஹாபிழ் ஹிகமி அவர்களும், அஷ்ஷெய்க் அல்லாமா முஹம்மது இப்னு இப்ராஹீம்  (ரஹ்) அவர்களும் இது பற்றி ஹராம் என்றே தீர்ப்பு வழங்கினர். மேலும்  அஷ் ஷெய்க் அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ், அஷ்ஷெய்க் அல்லாமா முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன், நமது ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் அல் ஜிப்ரீன் அவர்களும், மற்றும் நம் நாட்டின் ஏனைய உலமாக்களும் மஷாஇஃமார்களும் இதன் படியே தீர்ப்பு வழங்கி வந்தனர். வருகின்றனர். யாவருக் கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக! மேலும் ஈருலகிலும் அவர்களின் முடிவை நல்லதாகவும் ஆக்கியருள்வானாக!

இக்கருத்தை ஆதரிக்கும் கூட்டத்தினரின் பொது வானதும் பிரத்தியேகமானதுமான ஆதாரங்கள்.

ஆதாரம் 1:

         மறைவான விடயங்களைத் தாம் அறிவோம் என்று வாதிட்டு வருவோரும், ஜின் களிடம் உதவி தேடி வருவதுடன் தங்களின் விவகாரங்களில் அவர்களுக்கு அஞ்சி நடப்போரு மாகிய சூனியக்காரர், மந்திரவாதிகள், சோதிடர்கள் போன்றோரிடம் செல்வதும் அவர்களிடம் தங்களின் பிரச்சினைகள் பற்றி முறையிடுவதும் அவர்கள் சொல்லும் விடயங்களை உண்மையென நம்புவதும் கூடாது. அப்படி செய்தவன் மூலம் இரண்டு எச்சரிக்கை களையும் மற்றும் இரண்டு பெரும் பாவங்களையும் ஒன்று சேர்த்துக் கொண்ட குற்றத்திற்கு ஆளாக நேரிடும். மேலும் ரஸுல் (ஸல்) அவர்கள் தடை விதித்த காரியத்தில் இறங்கியதாகவும் கருதப்படும்.

அந்த எச்சரிக்கைகளில் ஒன்று: சாஸ்திரக்காரனி டம் செல்வதும், அவன் சொல்வதை நம்புவதும் 40 நாள் தொழுகையை பாழாக்கி விடும் என்பது. இதன் விவரம் வருமாறு: முஆவியா இப்னு ஹகம் அஸ்ஸுல்லமீ என்ற நபித்தோழர் நபியவர்களிடம் வந்து ஜாஹிலியாக் காலத்தில் இருந்த சில நடைமுறைகள் பற்றி விசாரித்தார் கள். அப்போது சோதிடர்களிடம் போய் வருவதைப் பற்றியும் குறிப்பிட்டார்கள். அதைக் கேட்ட நபிய வர்கள் “சோதிடர்களிடம் நீங்கள் செல்ல வேண்டாம்.” என்று கூறினார்கள். (முஸ்லிம்) மேலும் இன்னொரு ஹதீஸில் “எவன் சோதிடர் களிடம் சென்று அவனிடம் விசாரிப்பானோ அவனின் 40 நாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.” என பதிவாகியுள்ளது. (முஸ்லிம்)

      இந்த நபிமொழிகளைக் கவனிக்குமிடத்து சாஸ்திரக்காரனிடம் போகும் ஒருவன் அவன் சொல்வதை உண்மையென ஒப்புக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் அவன் அங்கு சென்ற ஒரேயொரு குற்றத்திற்காக  நபியவர்கள் விடுத்துள்ள இந்த எச்சரிக்கைக்குள் அவனும் வந்து விடுவான் என்பது புலனாகிறது. மேலும் சாஸ்திரக்காரர்களிடம் செல்வோர், அவர்களிடம் எதைப் பற்றியாவது விசாரிக்க அல்லது தம் மீது ஏவப்பட்டுள்ள சூனியத்தை அகற்ற அல்லது மறைவான விடயம் பற்றித் தெரிந்து கொள்ள என்று பல தரப்பட்ட நோக்கங்கங்களுக்காகவே செல்கின்றனர் என்ற படியால் அவர்களிடம் செல்லும் யாவரும் எந்தப் பாகுபாடுமின்றி இந்த எச்சரிக்கைக்கு உட்படுவர் என்பதும் துலாம்பர மாகிறது. ஏனெனில் இந்நபி மொழி ஒரு பொது அறிவிப்பைத் தாங்கி நிற்கிறது என்ற படியால் அது சாஸ்திரக்காரர்களிடம் செல்லும் அனைவ ரையும் இந்த அச்சுறுத்தலில் உள்ளடக்கிக் கொள்ளும்.

இரண்டாவது எச்சரிக்கை: சூனியக்காரனிடம் சூனியத்தை விடுவிக்கும் படி வேண்டுதல், அவன் சொல்வதை உண்மையென ஏற்றுக் கொள்ளல், அவன் சொல்வதை நம்பி நிவாரணம் பெற வென அவன் வழங்கும் மருந்துகளை ஏற்றுக் கொள்ளுதல் எனும் விடயங்கள் இதில் அடங்கும். இவை மிகவும் அபாயகரமான காரியத்தில் சிக்க வைக்கக் கூடியவை. சில சமயத்தில் இஸ்லாத்தை விட்டே வெளியில் தள்ளக் கூடியவை.

      இதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மணிமொழிகள் மூலம் அறிய முடியும்.

       “எவன் ஒருவன் சாஸ்திரக்காரனிடம் அல்லது மந்திரவாதியிடம் வந்து அவன் சொல்வதை உண்மையெனவும் நம்புவானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியதை, நிகாகரித்தவனாவான்” என்றும் “எவன் ஒரு சாஸ்திரக்காரனிடம் அல்லது சூனியக்காரனிடம் வந்து அவனிடம் எதை யேனும் விசாரித்து விட்டு அவன் சொல்வதை உண்மையென நம்புவானாகில் அவன் முஹம்மத்  (ஸல்) அவர்களுக்கு அருளியதை மறுத்தவனாவான்.” என்றும் ரஸுல் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)

   இந்த நபிமொழிகளில் “முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியதை” என்ற சொற்றொடர் இடம்பெற்றுள்ளது. எனவே (ரஸுல்) அவர்க ளுக்கு அருளப்பட்டது அல்குர்ஆன் ஒன்றே என்ற படியால் அல்லாஹ், தன் வேதமாம் அல் குர்ஆனில் “நீங்கள் கூறுங்கள் வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்.” (27:65) என்றும் “மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன” (6:59)  என்றும் கூறியுள்ளான். இவ்விரு வசனங்களும் மறைவானவற்றை யாரும் அறியமாட்டார்கள் அதனை அல்லாஹ் ஒருவனே அறிவான் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. அப்படி யிருக்க யாரேனும் மந்திர வாதிகளிடமும் சூனியக்காரனிடமும் சென்று அவன் தனக்கு மறைவானவற்றின் மீது அறிவு இருக்கின்றது என்று சொல்வதையும் நம்புவானா கில் அவன் அல்குர்ஆனை நம்பாதவனும் அதனை பொய்யாக்கியவனுமாவான். எனவே நபியவர் களின் கூற்றின் பிரகாரம் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய காபிராவான்.

ஆதாரம் 2: “சகுனம் பார்ப்பவனும், சகுனம் கேட்பவனும், சாஸ்திரம் சொல்பவனும் சாஸ்திரம் கேட்பவனும், சூனியம் செய்பவனும், ஏவப்பட் டுள்ள சூனியத்தை அகற்றுவதற்காக இன்னொரு சூனியம் செய்து கொள்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தபரானீ:18/162)

      இந்நபி மொழி ஒரு பொது அறிவித்தலைத் தாங்கி நிற்கிறது. இதன்படி ஏவப்பட்டுள்ள சூனியத்தை நீக்குவதற்காக சூனியக்காரனிடம் வருகின்றவனும் இந்தப் பொது அறிவித்தலில் அடங்குவான் என்பதில் சந்தேகமே இல்லை என்பதை “சூனியத்தை அகற்றுவதற்காக” என்னும் சொற்றொடர் உணர்த்துகிறது. மேலும் சூனியக் காரன் சூனியம் ஒன்றை அகற்றும் தருவாயில் சூனியத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு யார் மூலம் எதைக் கொண்டு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று, அவனுக்கு ஜின்கள் தரும் தகவலின் படியே அவன் காரியத்தை மேற் கொள்வான். அப்போதவன் அதனை நீக்க இன்னொரு சூனியத்தைச் செய்வான்.  அதுவோ, தடுக்கப் பட்டதாகும். எனவே எவ்வகையிலும் சூனியக் காரனிடம் போகக் கூடாது என்பதற்கு இந்த ஹதீஸ் ஒரு சிறந்த ஆதாரமாகும்.

  மேலும் நபி வாக்கு “நம்மைச் தார்ந்தவனல்ல” என்பது ஒரு கடுமையான அச்சுறுத்தலாகும். ஏனெனில் இந்தக் கூற்றின் விளக்கமாவது: இவன் சூனிய விடயத்தில் நம் வழி நடந்து நேர்வழி பெற்றவர்களையும் நமது செயல் முறைகளையும் மற்றும் நம் வழியைப் பின்பற்றியவர்களையும் சார்ந்தவனல்ல. மாறாக அவன் ஜாஹிலியாக் கால சமூகத்தையும் அவர்களின் வழியையும் ஏற்று நடப்பவன் என்பதாகும்.

ஆதாரம் 3: “நன்மைக்கும் இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திறகும் அத்து மீறுதலுக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்.” (5:2) என்ற அல்லாஹ்வின் வாக்கும், சாஸ்திரக்காரனுக்கும் சூனியக்காரனுக்கும் பணம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டாம் என்ற நபியவர்களின் தடை உத்தரவும், தீய காரியங்க ளுக்கும் மற்றும் சூனியக்காரர்களுக்கும் எந்த ஒத்துழைப்பும் வழங்கக் கூடாதென்பதை தெளிவுபடுத்துகின்றன.

    ஆனால் சூனியக்காரனும், மந்திரவாதியும் தங்களின் இலக்கை அடைந்து கொள்வதற்கு அவர்களிடம் ஜனங்கள் போவதும் அவர்களின் விடயத்தில் மௌனமாக இருப்பதும் காரணமாக அமைந்துள்ளன. அவ்வாறே அவர்களின் நிராகரிக்கத் தக்க விடயங்களையும் தவறான காரியங்களையும் அனுமதிக்கும் வகையில் பணம், பொருள் கொடுப்பதும் மற்றொரு காரண மாகும். மேலும் அவர்களின் விஷமத்தனங் களையும் தீய காரியங்களையும் பரப்புவதற்காக ஒத்துழைப்பு வழங்குவது இன்னமொரு காரணமாகும். அது மாத்திரமன்றி அவர்களின் வழியைப் பின்பற்றுவதன் மூலமும் அவர்களை ஏற்றுக் கொளவதன் மூலமும் மற்றவர்களும் ஏமாற வழியேற்படுகின்ற படியால் அதுவும் அவர்கள் தங்களின் இலக்கை அடைய காரணமாக அமைந்துள்ளன.

இதன் காரணமாக அவர்களைப் பின்பற்றுவோர் அதிகரித்து விட்டனர். அவர்களின் ஆபத்துகளும் பூதாகாரமடைந்து வருகின்றன. அது மாத்திர மன்றி அவர்களின் குளருபடிகளும் மென்மேலும் பரவத் தொடங்கி விட்டன. இந்நிலையில் அவர்களை அடக்கியொடுக்குவது என்பதும் சிரம காரியமாகி விட்டது. ஒட்டு மொத்தமாக இவை யாவும் பாவ காரியத்துக்கு ஒத்தூழைப்பு வழங்கும் கருமங்கள் என்ற படியால் இவை யாவும் முன்னர் குறிப்பிட்ட அல்லாஹ்வின் வாக்கிற்கும் நபியவர்களின் தடை உத்தரவிற்கும் மாறு செய்யும் கருமங்களாகவே இருக்கின்றன.

       இனி ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள். “சூனியக் காரன் பெற்றுக் கொண்ட பணம் தவறான ஒரு காரியத்திற்குப் பதிலாக அவன் பெற்றுக் கொண்ட தாகும். எனவே அவன் பெற்றுக் கொண்ட அந்தப் பணம் இஜ்மாஃ - ஏகோபித்த முடிவின் படி ஹராமாகும். (பத்ஹுல் பாரி:4/498)

   மேலும் “சூனியக்காரனைத் தடுத்து நிறுத்த வாய்ப்பும் வல்லமையும் இல்லாத போது அதிகமான சூனியக்காரர் தனக்கு விருப்ப முள்ளவன், இல்லாதவன் என்ற பாகுபாடின்றி பலவந்தமாக சகல மக்களையும் நிர்ப்பந்தத்திற் குள்ளாக்கி சூனியத்தின் மூலம் அவர்களின் பணத்தைப் பெறவும் அதனைத் தங்களின் உடைமையாக்கிக் கொள்ளவும் திட்டமிட்டு வருவதை நீங்கள் கண்டு வருகிறீர்கள். எனவே இத்தீய காரியத்தை தடுத்து நிறுத்த அல்லாஹ் விடம் வேண்டுவோம்.” என்று ஹாபிழ் அல் ஹிகமீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (معارج القبول)

    எனவே சூனியக்காரர்களின் நிலை என்ன என்பதை அறிந்தவர்களின் மீதும் அவர்களுக்கு எதிரானவர்கள் மீதும் அந்தச் சூனியக்காரர்களை யும் அவர்களிடம் வருவோரையும் கண்டிப்பது கடமை. மேலும் அவர்களை அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்து தக்க தண்டணையைப் பெற்றுக் கொடுப்பதும் கடமை. ஏனெனில் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்  இவ்வாறு கூறினார்கள். “வெறுக்கத்தக்க காரியம் எதையே னும் கண்டால் அதைத் தன் கரத்தால் தடுத்து நிறுத்தல் வேண்டும். அப்படி முடியாது போனால் தன் நாவால் தடுத்து நிறுத்தல் வேண்டும். அதுவும் முடியாது போனால் தன் உள்ளத்தால் வெறுத்து ஒதுக்க வேண்டும்.” என்றார்கள். (முஸ்லிம்)

   எனவே சூனியக்காரர்களைத் தடுத்து நிறுத்தும் பலம் தங்களிடம் இல்லாத போது அவர்களை அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுப்பது, அவர்களைத் தம் நாவால் கண்டிப்பதற்கு ஈடாகும். மேலும் இது நன்மையான காரியத்துக் கும் தக்வாவின் விடயத்துக்கும் ஒத்துழைக்கும் காரியமாகவும் அமையும்  என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

    அகீதா தஹாவிய்யாவின் ஆசிரியருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! அவர் கூறுவதைக் கவனியுங்கள். “சோதிடர்களையும், சாஸ்திரம் கூறுவோரையும், மற்றும் மணலாலும் கூலாங் கல்லாலும் கோடுகள் கிழித்தும், அட்டைகளைப் பயன்படுத்தியும் குறி சொல்வோரையும் ஒழிப்பது, பலமுள்ளோர் மீதும் அதிகாரிகள் மீதும் கடமை. அவ்வாறே அவர்களை கடைகளிலும், வீதியோரங்களிலும் அமர விடாமலும், குடி மக்களின் வீடுகளுக்குப் போகாமலும்  தடுப்பதும் கடமை. இந்தக் கருமங்கள் யாவும் ஹராமானவை என்பது ஒருவனுக்குத் தெரிந்திருந்தும் அதனைத் தடுக்க அவன் நடவடிக்கை எடுக்காதிருந்தால் அல்லாஹ்வின் இந்த வசனம் ஒன்றே அவனுக்குப் போதுமானது. “அவர்கள் செய்து வந்த பாவத்தை ஒருவருக்கொருவர் தடுத்துக் கொள்ளாதவர்களாக இருந்தனர். அவர்கள் அப்படிச் செய்து வந்தது மிகத் தீயவையாகும். (5:79)

   எனவே பாவ காரியங்களைக் கூறி வரும், சாபத்திற்குரிய அவர்கள் சாப்பிடுவதெல்லாம்  அநியாயமாகத் தேடியவையே என்பது முஸ்லிம் களின் ஏகோபித்த முடிவாகும். 

    ரஸுல் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூபகர் ஸித்தீக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “பாவச் செயல் எதையும் காணும் மக்கள் அதனைத் தடுக்காது இருந்தால் அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் தண்டனையை அவர்களுக்கும் பொதுவானதாக ஆக்கி விடுவான்”

(شرح العقيدة الطحاوية:504,திர்மிதி:3057)

சூனியக்காரர்களிடம் வருவதும் அவர்களிடம் பிரச்சினைகளை முறையிடுவதும், அவர்கள் சொல்வதை உண்மையென நம்புவதும். மேலும் அவர்களின் மருந்துகளைப் பாவிப்பதும் ஹராம். இதனைத் தெளிவுபடுத்த பொதுவான இந்த ஆதாரங்கள் போதுமானவை. ஆயினும் இதனையும் மற்றும் ஒரு சூனியத்தை இன்னொரு சூனியம் கொண்டு அகற்றுவது ஹராம் என்பதை யும் மேலும் தெளிவு படுத்துகின்ற பிரத்தியேகமான தனிப்பட்ட ஆதாரங்களும் உண்டு. அவையாவன:

முதலாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நுஷ்ராவைப் பற்றி-ஒரு சூனியத்தை இன்னொரு சூனியம் கொண்டு அகற்றுவது பற்றி விசாரிக்கப் பட்டது. அதற்கு நபியவர்கள், “அது ஷைத்தானின் வேலை” என்றார்கள். (இமாம் அஹ்மத்:3/294)

   நுஷ்ரா என்பதன் பொதுப் பொருள் சூனியத்தை அகற்றுதல் என்பதாகும். எனினும் இரண்டு முறைகளில் ‘நுஷ்ரா’ மேற்கொள்ளப் படுகிறது. அவற்றில் ஒன்று, ஒரு சூனியத்தை இன்னொரு சூனியம் கொண்டு அகற்றுவது. மற்றொன்று, ஷரீஆ அனுமதித் துள்ள ‘رُقي’ எனும் மந்திரம் ஓதல் மூலம் மேற்கொள்ளல். அதாவது அல்குர்ஆன் வாசகங்களை ஓதுதல், திக்ருகளை ஜபித்தல் போன்ற காரியங்கள் மூலம் சூனியத்தை விடுவித்தல். இது பற்றி முன்னர் விளக்கப்பட்டது.  அது அனுமதிக்கப் பட்ட நுஷ்ரா வாகும். ஆனால் ரஸுல் (ஸல்) அவர்கள் ”அது ஷைத்தானின் வேலை” என்று கூறியது இந்த நுஷ்ராவைப் பற்றியல்ல. அது ஜாஹிலியாக் கால நுஷ்ராவைப் பற்றியதாகும். ஏனெனில் நபியவர்களிடம் ஒரு நபித்தோழர் ஜாஹிலியாக் காலத்து நடைமுறை கள் பற்றி எடுத்துக் கூறிய போது, அக்காலத்தில் இருந்து வந்த நுஷ்ராவைப் பற்றியும் அவர் ரஸுலுல்லாஹ்விடம்  விசாரித்தார். அதற்குத் தான் நபியவர்கள் “அது ஷைத்தானின் வேலை” என்று கூறினார்கள்.

       முஹம்மத் (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்படு முன் ஜாஹிலிய்யாக் கால சமூகம், ஷைத்தான்களிடம் பிரார்த்தனை செய்தல், அவற்றின் பெயரை ஜபித்தல், கருத்துப் புரியாத தாயத்துக்களையும் இன்னும் பல காரியங்களை யும்  செய்து வந்தது. இதன் மூலம் ஷைத்தான் களின் நெருங்குதலையும் பெற்று வந்த அந்த சமூகம் ஷைத்தான்களின் உதவிகளைக் கொண்டு ‘நுஷ்ரா’ என்ற சூனியம் அகற்றும் கருமத்தையும்  செய்து வந்தது. இது பற்றிய சட்ட விதியைத் தெளிவுபடுத்தும் போது தான் நபியவர்கள் “அது ஷைத்தானின் வேலை” என்றார்கள். அதுவன்றி அல்லாஹ்வின் வாசகங்கள் கொண்டும் ‘مأثورة’ வான துஆக்களைக் கொண்டும் ‘رقي’ எனும் அனுமதிக்கப்பட்ட மந்திரம் ஓதல் முறைகளைக் கொண்ட நுஷ்ராவை  “ஷைத்தானின் வேலை” என்று நபியவர்கள் குறிப்ப்டவில்லை. எனவே ஜாஹிலியாக் காலத்து சமூகம் சூனியத்தை விடுவிக்க பயன்படுத்தி வந்த இன்னொரு சூனியமும்,  நுஷ்ரா என்றே வழங்கப் பட்டு வந்தது. எனவே ஹராமாக்கப்பட்ட நுஷ்ரா அது என்பதையே நபியவர்களின் வாக்கு தெளிவு படுத்துகிறது.

   நபியவர்களின் அந்த ஹதீஸில் நுஷ்ராவைப் பற்றிக் குறிப்பிடும் போது தடை என்ற வார்த்தைப் பிரயோகம் பயன்படவில்லை. என்றாலும் ஒரு கருமம் தடை என்பதை உணர்த்துவதற்கு பல வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின் றன. சில வேளை தடை என்பதை உணர்த்த அதற்கே உரிய தெளிவான சொற்றொடர் பயன் படுத்தப்பட, இன்னொரு சந்தர்ப்பத்தில் குறித்த கருமம் ஒன்றைச் செய்வோனை இழிவுபடுத்தும் படியான சொற்றொடர் பயன்படுத்தப்படும். குறித்த ஹதீஸிலும் அந்த அணுகு முறையினையே நபியவர்கள் கையாண்டுள்ளார்கள்.

     ஒப்பீட்டளவில் ஜாஹிலியாக் கால சூனியக் காரனின் செயலுக்கும் தற்காலத்து சூனியக்காரர் கள் கையாண்டு வரும் சந்தேகத்திற்கு இடமான மந்திரம் ஓதல்கள், துஆக்கள், பாதுகாப்பு முறைகள் என்பவற்றுக்கு மிடையில் பாரிய வித்தியாசம் எதுவுமில்லை. ஆனால் அவர்களை விடவும் இவர்கள் அபாயமானவர்கள். எளவே இஸ்லாமிய சமூகத்தின் மீதான இவர்களின் சோதனைகள் பாரியவை. ஏனெனில் இவர்கள் அறியாத மக்களை குழப்பவும் ஏமாற்றவும் கூடிய வகையில் தங்களின் ஷிர்க்கானதும் வழி கேடானதுமான மந்திரங்களுக்கிடையே அல் குர்ஆன் வாசகங்களையும் அனுமதிக்கப்பட்ட திக்ரு துஆக்களையும் கலந்து விடுகின்றனர். இதனால் இவர்களின் அபாயம் மிகவும் பாரியவை என்பது தெளிவு.

  இரண்டாவது: பரிகாரமாகப் பயன் படுத்தப் படும் அந்த மந்திரங்களும் நுஷ்றாவும், இணையுடன் அல்லது ஷைத்தானிய செயலுடன் அல்லது தாயத்துகளுடன் அல்லது மூட நம்பிக்கைகளுடன் அல்லது அது போன்ற  காரியங்களுடன் சம்பந்தப் பட்டிருக்குமாயின் அதுவெல்லாம் ஷரீஆ ஹராம் எனவும்,  எதனைக் கொண்டு சிகிச்சை செய்ய வேண்டாம் என்றும் தடை வந்துள்ளதோ, அந்தப் பொதுவான தடையின் கீழ் வந்து விடும்.

      “ஹராமானதைக் கொண்டு நீங்கள் சிகிச்சை செய்யாதீர்கள்.” என்றும் “நிச்சயமாக அல்லாஹ் உங்களின் நிவாரணத்தை  தடை விதித்துள்ள காரியத்தில்  வைக்கவில்லை.” என்றும் ரஸுல் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார் கள். (இமாம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னு மாஜா, அல் பைஹகீ, அல் ஹாகிம், இப்னு அபுத் துன்யா, இப்னு ஹிப்பான்)

  எனவே இவ்வாறான மந்திரங்கள் மூலமும் நுஷ்ரா மூலமும் சிகிச்சை செய்வது ஹராம் என்பதற்கு இத்தகைய கூற்றுக்கள் தெளிவான ஆதாரங்கள். எனவே இந்தக் காரியங்களை மேற் கொள்வோர் ஷரீஆ அனுமதித்துள்ள சிகிச்சை முறைகளை விட்டும் நீங்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்பால் சென்றுள்ளனர் என்பதற்கும் இந்தக் கூற்றுக்கள் நல்ல அத்தாட்சிகளாகும்.

      எனவே சகோதர வாசகனே! இந்த விவகாரத்தில் சூனியக்காரர்களிடமும் அவர்க ளைப் போன்றோரிடமும் போவதும், சூனியத்தை அகற்றித் தரும்படி அவர்களிடம் வேண்டுவதும் அவர்களின் மருந்துகளையும், நுஷ்ராக்களையும் கொண்டு சிகிச்சை பெறுவதும் ஹராம். அதனை அனுமதிக்க முடியாது. அது பெரும் பாவத்தைச் சேர்ந்தது. அதன் மூலம் ஏகத்துவத்திற்கும் பங்கம் ஏற்படுகிறது என்ற சொல்லே இவ்விடத்தில்  சரியானது என்பது இதுவரை கூறியதிலிருந்து தெளிவாகி விட்டது. எனவே இதன் தீமைகளை நீக்கி விடுமாறும், அழிவை யுண்டாக்கும் பாவங்களை விட்டும் பாதுகாக்கு மாறும் அல்லாஹ்விடம் வேண்டுவோம்.

****************

 நுஷ்ராவை ஆதாரிக்கும் ஆதாரங்களின் பதில்:-

மார்க்க விவகாரகங்ளில் அறிஞர்கள் மத்தியில் முரண்பாடுகள் எழுகின்ற போது அவர்கள் தங்களின் கூற்றை நியாயப்படுத்தும் ஆதாரங்களை முன்வைப்பார்கள். பொதுவாக அவர்கள் அனைவரின் நோக்கமும் உண்மையை அறிந்து கொள்வதும், தங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சட்டத்தை அறிந்து கொள்வதும் தான் என்பதை  நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர்களின் ஆய்வின் முடிவு சரியாக இருப்பின் அவர்களுக்கு இரண்டு கூலிகள் கிடைக்கும். பிழை எனில் ஒரு கூலி கிடைக்கும். சில சந்தர்ப்பத்தில் குறித்த ஒரு சட்டத்தின் ஆதாரம் ஒரு அறிஞனுக்கு தெரியாமல் இருக்கும் போது அது இன்னொரு அறிஞனுக்கு தெரிய வரலாம்.

அப்போது குறித்த சட்டம் சம்பந்தமான ஆதாரங்களை அல்லாஹ்வின் வேதத்துடனும் ஸுன்னாவுடனும் உரசிப் பார்க்க வேண்டும். அப்போது இவ்விரண்டிற்கும் நேர்பட்டதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றுக்கு முரண் பட்டிருந் தால் தங்களின் முடிவை எறிந்து விட வேண்டும். அல்லாஹ்வின் கட்டளையும் அதுதான். “உங்களுக்கு யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டு மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அதனை அல்லாஹ்விடமும் அவனின் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் உங்களுக்கு நன்மையாகவும் அழகான முடிவாகவும் இருக்கும். (4:59)

முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொண்ட ஒருவன் அவர் பணித்துள்ள விடயத்திற்கு கட்டுப் பட்டு ஒழுக வேண்டும் என்பதும், அவர்கள் விலக்கிய காரியங்களை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்பதும் யாவரும் அறிந்ததே. எனவே இதற்கு மாறாக செயற்படுவது அவனின் ஈமானுக்கும் பங்கம் விளைவிக்கும்.

எனவே மார்க்க சட்டத்தையும் அதன் ஆதாரங்களையும் தெரிந்த கொண்ட ஒருவனுக்கு ஏதேனும் ஒரு விடயத்தில் ரஸுல் (ஸல்) அவர்களின் ஸுன்னா இன்னதுதான் என்பது தெரிய வந்ததும் அவன்  அதனை விட்டும் விலகிச் செல்லவோ அதற்கு மாறாக வேறு எவரையும் பின்தொடரவோ கூடாது. ஏனெனில் சொல் யாருடையதாக இருந்தாலும், அது ஒரு சாதாரண மனிதனின் சொல்லாக இருந்தாலும் ஸஹாபி ஒருவரின் சொல்லாக இருந்தாலும் அவை யாவற்றையும் விட  அல்லாஹ்வின்  வாக்கே தீர்ப்பு வழங்க மேலானது, தகுதியானது. எல்லா சந்தர்ப்பத்திலும் யாரையும் விட தன் தூதருக்கே கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றே அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

      மேலும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் “சர்ச்சைக்குரிய விடயங்களில் எந்தவொரு தனி மனிதனின் வாக்கையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. மாறாக அல்லாஹ்வினதும் ஸுன்னாவினதும், இஜ்மாவினதும் கூற்றையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும். மேலும் சர்ச்சைகள் விடயத்தில் முன் வைக்கும் ஆதாரங்கள் ஷரீஆவின் சட்டதிட்டங்களைக் கொண்டு உறுதிப்படுத்தப்பட வேண்டுமேயல்லாது, அறிஞர்களின் கூற்றுகளின் மூலம் அல்ல. ஏனெனில் அறிஞர்களின் கருத்துக்கள் ஷரீஆவின் அத்தாட்சிகளைக் கொண்டு உறுதிப் படுத்தப்பட வேண்டுமேயல்லாது ஷரீஆவின் ஆதாரங்கள் அறிஞர்களின் வாக்குகளைக் கொண்டு உறுதிப் படுத்த வேண்டிய ஒன்றல்ல.” என்று கூறியுள்ளார்கள்.

    இங்கு நுஷ்ரா விடயத்தில் சரியான கருத்துக் களைச் சொல்வதுடன் சேர்த்து  இஸ்லாமிய அறிஞர்களின் பிழையான  கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன. அதன் நோக்கம் விவரம் தெரியாதவர்கள் ஏமாந்து விடாமலும் மற்றும் முகல்லிதுகள் அதாவது தாண்தோடித்தனமாக பிறரைப் பின்பற்று கின்றவர்களின்  நிலைமை முதன்மை அடையாமலும் இருக்க வேண்டு மென்பதற்காகத் தான். அல்லாது போனால் இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இவ்விடயத்தில் உண்மை யாதென்பது தெட்டத் தெளிவாகி விட்டது. மேலும் சூனியக்காரர்களிடம் போகத் தேவையில்லாதவாறு அதற்கான சகல வழிகளையும் ஸுன்னா அறுத்து விட்டது. அடைத்து விட்டது. அது மாத்திரமன்றி சூனியக்காரனின் இறுதி முடிவு அவன் கழுத்தில் வாளைப் பாய்ச்சுவது தான் என்பதும் தெளிவாகி விட்டது. எனவே அதிகமான நாடுகளில் சூனியக்காரனின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்பதையும் ஈசல் கூட்டம் நெருப்பில் போய் விழ்வது போல்,  மக்கள் கூட்டம் இவர்களிடம் போய் மொய்த்துக் கொள்கின்றது என்பதையும் கண்டு ஏமாந்து விடாதீர்கள். ஏனெனில் சட்ட விரோத கர்மங்களை அதிகமான மக்கள் செய்கின்ற போதிலும் சொற்பமான மக்கள் செய்கின்ற போதிலும் அவ்விடயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுவாக அதிகமான மக்கள் செய்து வரும் சட்ட விரோத விடயங்கள் பிரசித்த மடைந்து பின்னர் அதனை இன்னும் அதிகமான  மக்கள் செய்யத் தொடங்கி விடுகின்றனர். என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். எனவே இவர்களின் விடயத்தைக் தெரிந்து கொண்டவர்கள் மீது தங்களின் சொல்லாலும் செயலாலும் அவர் களுக்கு மாறாக செயல்படுவது கடமையாகும். மேலும் இவ்விடயத்தில் நீங்கள் தனித்துப் போராட வேண்டியிருக்கிறது என்பதற்காகவும் இவ்விடயத் தில் தங்களுக்குத் தோழர்கள் குறைவாக இருக்கின்றனர் என்பதற்காகவும் சோர்ந்து விடக் கூடாதென அல்லாமா முப்லிஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (الآداب الشرعية-1/263)

*************

 நுஷ்ராவை ஆதாரிப்போரின் ஆதரங்களுக்குப் பதில்:-

இதனை ஆதரிப்போரின் ஆதாரங்களில் ஒன்று அது பற்றி இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் அதற்குப் பதில் சொல்லாமல் இருந்தார் என்பதாகும்.

ஆனால் அவர்களின் இந்த வாதம் பிழை யானது. ஏனெனில் சூனியக்காரனிடம் போவதும் அவனிடம் தங்களின் பிரச்சினைகளை முறையிடு வதும் அவர்கள் தரும் மருந்துகளைப் பாவிப்பதும் கூடாதென ஸஹீஹான ஹதீஸ் களில் பலவாறு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதன் விளக்கம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது. எனவே ஒரு அறிஞனோ அல்லது ஒரு இமாமோ குறித்த பிரச்சினை சம்பந்தமாகப் பதில் சொல்லவில்லை என்பது அவர் அதை அங்கீகரித்தார் என்பதற்கு ஆதாரமாகும் என்று யாரும் கூற முடியாது.

இது இவ்வாறிருக்க சூனியக்காரன் போன்றோரிடம் போவதும் அவர்களின் மருந்துகளையும் நுஷ்ராவையும் கொண்டு சிகிச்சை பெறுவதும் கூடாது என்பதே இமாம் அவர்களின் நிலைப்பாடு, என்பதை நாம் பின்னர் விளக்கவுள்ளோம். இது இவ்வாறிருக்க இமாம் அவர்களிடம் ஒருவனைப் பற்றி விசாரித்த போது, நுஷ்ராவுடன் சம்பந்தப்பட்ட அவனுடைய விவகாரத்தில் இமாம் அவர்கள் நுஷ்ராவை அனுமதித்தார்கள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால் குறித்த மனிதன்  ஒரு தண்ணீர் பானையில் இறங்கி மறைந்து விட்டான் என்றும் இப்படியான ஒருவன் சூனியம் அகற்றுவதைக் குறித்து தாங்களின் அபிப்பிராயம் என்ன? என்றும் ஒருவர் இமாம் அவர்களிடம் விசாரித்தார். அதற்குத் தன் வெறுப்பைக் காட்டும் வகையில் இமாம் அவர்கள் தன் கையை உதரினார்கள். மேலும் இது என்னவோ நான் அறிய மாட்டேன் என்றும் கூறினார்கள். எனவே இதனை வைத்து இமாம் அவர்கள் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்கள் என்று எப்படி வாதிடுவது?

ஏனெனில் “அது ஷைத்தானின் வேலை” என்ற ஹதீஸை அறிவித்தவரும் இமாம் அவர்கள் தான். எனவேதான் அவரிடம் அது பற்றி விசாரித்த போது  அதனை அவர்கள் வெறுத்தார் கள், அதனைத் தடை செய்தார்கள் என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது. நுஷ்ரா எனும் சொல் அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்படாத இரண்டிற்கும் பொதுவான சொல் என்ற படியால் இமாம் அவர்களிடம் அது பற்றி வினவப்பட்ட போது அவர்கள், ஷரீஆ அங்கீகரித்திருக்கும் நுஷ்ராவையே அனுமதித்தார் கள். எனினும் சிலர் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு ஷைத்தானின் வேலை எனக் கருதப்படும் நுஷ்ராவையும் இமாம் அவர்கள் அனுமதித்திருக்கிறார்கள் என்று விளங்கிக் கொண்டனர்.” என்று ஸுலைமான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் (تَيْسِيرُ العَزِيزِ الحَمِيد) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

      மேலும் இமாம் அஹ்மத் அவர்கள் வெறுத்து ஒதுக்கிய விடயமே இது என்று அல் பறஜ் இப்னு அஸ்ஸபாஹ் அவர்களும் அறிவித்துள்ளார்கள். மேலும் ‘ஜல பீதி’ நோய்க்கு மந்திரங்கள் மூலம் சிகிச்சை அளித்து வந்த ஒருவன் தான் ஜின்களுடன் உரையாடுவதாகக் கூறி வந்தான். அவனைப் பற்றி இமாம் அவர்களி டம் விசாரித்த போது “இக்காரியத்தை எவரும் செய்வதை நான் விரும்பவில்லை” என்று கூறினார்கள்.

   எனவே சூனியக்காரனிடம் செல்வது பற்றிய சட்ட விவகாரத்தில் இமாம் அவர்கள் மௌனமாக இருந்தார்கள் என்று நினைப்பது தவறு.

முதலில் இவ்விடயத்தில் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் தொடர்பாக கொடுக்கப்பட்ட பதிலே ஸஈத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்) அவர்களின் தொடர்பாகவும் போதுமானது. எனினும் தடை விதிக்கப்பட்டுள்ள நுஷ்ராவானது ஸஈத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் அனுமதித்தார்கள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதை விட்டும் அவர்கள் வெகு தூரமானவர். மேலும் அவர்கள் தொடர்பாக சகல அறிவிப்புக்களையும் ஒன்று திரட்டி உரிய முறையில் சிந்தித்தால். அவர்கள் ஷரீஆ அனுமதித்திருக்கும் நுஷ்ராவை அனுமதித்துள் ளார்களேயன்றி தடை விதித்த ஒன்றையல்ல என்பது உங்களுக்கு நன்றாகத் தெளிவாகும். எனினும் பாதிக்கப்பட்டவனை, சூனியம் அகற்றுப வனிடம் அழைத்துச் செல்ல அனுமதித்த அவர்களின் சில சகாபாக்களும், மாணவர்களும் நல்லவர்கள் என்றும் மார்க்க விடயத்தில் உறுதியானவர்கள் என்றும் அறிமுகமான நல்ல மனிதர்களிடமே அவர்களை அழைத்துச் செல்ல வேண்டுமெனக் கூறினர்.

      இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் சில அறிவுப்புகள் வருமாறு:

கதாதா (ரஹ்) அவர்கள் ஸஈத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்) அவர்களிடம், ஒருவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அவரின் சூனியத்தை அகற்றலாமா? என்று வினவினார். அதற்கு ஆம் என்று பதில் கூறிய ஸஈத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் “யார் தன் சகோதர னுக்கு நன்மை எதையும் செய்ய முடியுமோ, அவர் அதனை செய்யட்டும்” என்றார்கள். இன்னொரு அறிவிப்பில் “உமது சகோதரனுக்கு ஏதேனும் நன்மை செய்ய முடியும் என்றால் அதனை செய்யுங்கள்” என்றும் மற்றொரு அறிவிப்பில் “அப்படி செய்வதில் தவறில்லை அதன் மூலம் நீங்கள் ஒரு சீர்திருத்தத்தையே செய்ய விரும்புகிறீர்கள்” என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் கதாதா (ரஹ்) அவர்கள் ஸஈத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்) அவர்களிடம் நுஷ்ராவைப் பற்றிக் கேட்ட போது அதனைச் செய்யும் படி அவர்கள் பணித்தார்கள். அப்போது அவரிடம், இதனை நீங்கள் அறிவித்ததாக நான் கூறட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம் என்றார்கள். என கதாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என பிரிதொரு அறிவிப்பில் பதிவாகியுள்ளது.

இது போன்ற ஒரு விடயம் அதா அல் குராஸானி அவர்கள் தொடர்பாகவும் பதிவாகி யுள்ளது. “சூனியத்தால் பாதிக்கபட்ட ஒருவர் தன் மனைவியுடன் சேர முடியாதவாறு தடுக்கப் பட்டிருந்தார். எனவே அவரின் சூனியத்தை விடுவிக்க அவரிடம் நாம் போகலாமா? என்று அல் குராஸானி அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர் “அப்படி ஒரு இக்கட்டான நிலையாக இருந்தால் பரவாயில்லை” என்று கூறினார்கள் என இஸ்மாயில் இப்னு ஐயாஷ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். مصنف ابن شيبة)-3573)

இராக் பிரதேச முதன்மை புகஹாக்களான  ஹஸனுல் பஸரி, இப்ராஹீம் அந்நகவீ உட்பட அனைத்து அறிஞர்களும் பலதரப்பட்ட மந்திரங் கள், தாவீஸ்கள் மற்றும் நுஷ்ரா ஆகியவற்றை வெறுத்தனர், என்பதை நீங்கள் அறிவீர்கள் எனினும் ஹிஜாஸ் வாசிகளோ வித்தியாசம் எதுவுமின்றி ஷரீஆ அனுமதித்த, அனுமதிக்காத சகல மந்திரங்களையும் அனுமதித்து வந்தனர். இது கதாதா (ரஹ்) அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. எனவே இதனைப் பற்றி அவர் ஸஈத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்) அவர்களிடம் விசாரித்தார். அதற்கு அவர் தீமை பயக்கும் விடயத்தைத் தான் அல்லாஹ் தடை செய்துள்ளான். நன்மை பயக்கும் விடயத்தை அவன் தடுக்கவில்லை என்று பதிலளித்தார்கள்.

ஆம். ஸஈத் இப்னுல் முஸையிப் (ரஹ்) அவர்கள் சொல்வது உண்மை தான். ஷரீஆ அனுமதித்த நுஷ்ராவெனில் அல்லாஹ்வின் உதவியால் அது பயனளிக்கும். அது தீமை விளைவிக்காது. ஆனால் ஸஈத் இப்னுல் முஸையிப் (ரஹ்) அவர்களின் வாக்கின் மூலம்  தடை செய்யப்பட்ட நுஷ்ராவையும், சூனியக் காரனிடம் செல்வதையும் அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார்கள், என்று கூறப்படுமானால் அது இவ்விடயத்தில் அவர்கள் அளித்துள்ள தீர்ப்புக்கே முரண்பட்டதாகும். ஏனெனில் “தீமை பயக்கும் கர்மத்தையே அல்லாஹ் தடை செய்துள்ளான்” என்ற அவர்களின் வாக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நுஷ்ரா ஹராம் என்பதையே குறிக்கின்றது என்பது துலாம்பர மாகும். ஏனெனில் அல்குர்ஆனைப் பொய்மைப் படுத்துவதையும், 40 நாள் தொழுகையை பாழ்படுத்துவதையும், விட ஒரு அடியானுக்கு தீமை விளைவிக்கும் கருமம் வேறு என்னதான் இருக்க முடியும்? மேலும் சூனியம் ஒன்று செய்ததை சூனியக்காரன் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவனைக் கொலை செய்ய வேண்டுமென தீர்ப்பளித்திருக்கும் ஸஈத் இப்னுல் முஸையிப் (ரஹ்) அவர்கள் சூனியக்காரனிடம் செல்வதை எப்படி அனுமதிப்பார்?   உண்மை இப்படியிருக்க அதனை அவர் அனுமதித்தார் என்று கூறுவது அவர் சொல்லாத ஒன்றை அவர் கூறியதாகப் புணைந்து கூறுவதாகும். அல்லது அவர் கூறியதைப் புரிந்து கொள்ளாமல் பிழையாக நகல் பண்ணியதாகும்.

மேலும் ரஸுல் (ஸல்) அவர்களின் வாக்கு, “உங்களில் எவரேனும் தன் சகோதரனுக்கு நன்மை எதனையும் செய்ய முடியுமாயின் அவர் அதனை செய்யட்டும்” என்பது, பயன் பெற அனுமதி தரப்பட்டுள்ள ஒரு கருமத்தின் மூலம் பயன் தரும் காரியம் எதனையும் செய்யட்டும் என்பதையே உணர்த்து கின்றது. எனவே பொதுவான இந்த ஹதீஸின் மூலம் தனிப்பட்ட ஒரு விடயம் கருதப்பட்டுள்ளது. அது தான் “பயன் பெற அனுமதிக்கப்பட்ட கர்மம்” என்பது. எனவே பொதுவாக எல்லா வகையான நுஷ்ராவும் அனுமதிக்கப்பட்டது என வாதிடுவோருக்கு எவ்வகையிலும் இந்த பொது ஹதீஸ் ஆதாரமாக அமையாது.

மேலும் ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இது பற்றி குறிப்பிடும் போது “மந்திரங்களின் பொருள் யாதென்று புரியாது போனாலும் அனுபவத்தின் மூலம் அதன் பயன் தெரிய வருமானால் அப்படியான சகல மந்திர முறைகளையும் பயன்படுத்தலாம் என்பதற்கு, இந்த ஹதீஸின் பொதுத் தன்மையை சிலர் ஆதாரமாக எடுத்துள்ளனர். ஆனால் ஷிர்க்கின் பால் இட்டுச் செல்லும் மந்திரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கருத்துப் புரியாத மந்திரங்கள் ஷிர்க்கின்பால் இட்டுச் செல்லாது என்பதற்கு எந்த உத்தரவாதமில்லை. எனவே அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அத்தகைய மந்திரங்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். என்பதையே அவ்ப் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புலப்படுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்கள். (فَتْحُ البَارِي-10/385,387)

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அவ்ப் (ரழி) அவர்கள், ஜாஹிலியாக் காலத்து மந்திரங்கள் பற்றி ரஸுல் (ஸல்) அவர்களிடம் விசாரித்த விடயத்தையே இங்கு குறிப்பிடுகிறார்கள். அவ்ப் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: “ஜாஹிலியாக் காலத்தில் நாங்கள் மந்திரங்கள் ஓதி வந்தோம், என்று நபியவர்களிடம் கூறினோம். அதற்கு நபியவர்கள் நீங்கள் ஓதி வந்த மந்திரங்களைக் காட்டுங்கள் என்றார்கள். பின்னர் அதில் இணையைக் கற்பிக்கும் விடயம் ஏதுமில்லை யென்றால் அதில் தவறில்லை” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

முன்னர் குறிப்பிட்ட ஹதீஸ் ஒரு பிரத்தி யேகமான விடயத்தையே குறித்து நிற்கிறது என்பதை பின்வரும் ஹதீஸும் உறுதிப்படுத்து கிறது.

“ஹராமான விடயத்தைக் கொண்டு சிகிச்சை செய்ய வேண்டாம்” என்றும் “அல்லாஹ் ஹராமாக்கிய எதிலும் உங்களின் சுகத்தை அவன் வைக்கவில்லை” என்றும் நபியவர்கள் கூறினார்கள்.

எனவே ஹராமான மந்திரங்கள் மூலமும் நுஷ்ராவின் மூலமும் பயன் பெற அனுமதி தரப்படவில்லை என்பது இவற்றிலிருந்து தெளிவாகிறது. மேலும் இவை யாவும் நோய்களேயன்றி மருந்துகள் அல்ல. மேலும் ஹதீஸில் “உங்களில் எவரேனும் தன் சகோதரனுக்கு ஏதேனும் நன்மை செய்ய முடியுமாயின் அவர் அதனைச் செய்யட்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சூனியக் காரனிடமும் மந்திரவாதியிடமும் போவதிலும் சந்தேகத்திற்கு இடமான அவர்களின் நுஷ்ராவின் மூலம்  சிகிச்சை பெறுவதிலும் என்ன தான் நன்மை இருக்கப் போகிறது?

“நிர்ப்பந்தம் வரும் போது தடை செய்யப் பட்ட விடயமும் அனுமதிக்கப்படும்” என்பது ஒரு விதி. இந்த விதியின் அடிப்படையில் பட்டினியில் இருக்கும் ஒருவனுக்கு ஆகாரம் எதுவும் கிடைக்காத போது அவன் தன் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் நிர்ப்பந்தம் வந்தால் செத்த பிராணியின் மாமிசம் தடை செய்யப்பட்ட ஒன்றேயாயினும்  அவன் அந்த மாமிசத்தை சாப்பிடுவதற்கு ஷரீஆ அனுமதிக்கின் றது. இது போன்று சூனியத்துக்கு இலக்கான ஒருவன் தன் மீதுள்ள சூனியத்தை நீக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றபடியால் அதற்காக அவன் சூனியக் காரனிடம் போகலாம் என்று வாதிட முடியாது.

ஏனெனில் ஷரீஆவின் பிரகாரம் நோய்க்காக சிகிச்சை செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆனால் நோய் வந்தால் அதற்காக சிகிச்சை செய்வது சிறந்ததா, சிகிச்சை செய்யாமல் இருப்பது சிறந்ததா என்ற விடயத்தி லேயே அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கின்றது. மேலும் நோய்களுக்கு பல வகையான மருந்துகள் இருக்கின்றன. எனவே ஹராமான மருந்துகளைப் பயன்படுத்த வேண்டு மென்ற கட்டாயமோ நிர்ப்பந்தமோ கிடையாது. அவ்வாறே சூனியத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு சிகிச்சையளிக்க சூனியக்காரனிடம் போக வேண்டு மென்ற நிர்ப்பந்தமும் இல்லை. ஏனெனில் ஷரீஆ அனுமதித்துள்ள திக்ருகளைக் கொண்ட மந்திரங்கள் மூலம் அதனை அகற்ற முடியும்.

ஆனால் பசியின் நிலை அவ்வாறல்ல. பசி வந்தால் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால்தான் பசி நீங்கும். எனவே பசி வந்தவனுக்கு உண்ண உணவில்லாத போது செத்த பிராணியின் மாமிசம் ஒன்றுதான் இருக்கிறது என்றால் அதை அவன் சாப்பிடாது போனால் அவனின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை வரும் போது அவன் அதனை சாப்பிடுவது வாஜிபு. அதனை அவன் சாப்பிடாமல் இருந்து அவனின் உயிர் பிரிந்து விட்டால் அவன் செல்லும் இடம் நரகம் தான் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து என்பதை இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார் கள். எனவே வைத்தியம் என்ற விடயத்தையும், நிர்ப்பந்தத் திற்காக செத்த பிராணியை சாப்பிட வேண்டு மென்ற விடயத்தையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு நோக்க முடியாது என்றும் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் மேலும் விளக்க மளித்துள்ளார்கள். (مَجْمُوعُ الفَتَاوَى-24/268)

      இவ்விடயத்தில் இப்னுல் அரபி அவர்கள் குறிப்பிடுவதாவது:

“நோயாளிக்கு வைத்தியம் செய்ய வேண்டு மென்ற நிர்ப்பந்தம் இருக்கின்றது. எனவே நியதிப் படி ஹராமானதைக் கொண்டு அவன் வைத்தியம் செய்து கொள்ளலாம் அல்லவா? என்று கேட்டால் அதற்கு நாம் சொல்லும் பதிலாவது நோயாளி வைத்தியம் செய்து கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பசியின் காரணமாக ஒருவனின் உயிர் போய்விடும் என்ற அச்சம் வரும் போதுதான் நிர்ப்பந்தம் உண்டாகும். ஆனால் அடிப்படையில் நோயாளிக்கு வைத்தியம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. என்றபடியால் ஹராமானதைக் கொண்டு வைத்தியம் செய்யலாம் என்று கூற முடியாது . என்று இப்னுல் அரபி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

تُحْفَةُ الأحْوَذِي-6/202

இனி ஆயிஷா (ரழி) அவர்களின் சூனியம் தொடர்பாக பல பதில்கள் உள்ளன. அவையாவன:

1.                இந்த சம்பவத்தில் குறிப்பிட்டுள்ள அந்த மனிதன் ஒரு சூனியக்காரன் என்றோ அல்லது ஒரு மந்திரவாதி என்றோ தெளிவாகக் கூறப்பட வில்லை. ஆனால் சில அறிவிப்புக்களில் அவர் ‘ஸிந்து’ நாட்டைச் சேர்ந்தவர் என்றும் ஸூடான் இனத்தைச் சேர்ந்த ஒருவர் என்றும் மேலும் மருத்துவம் செய்வதற்காக அவர் மதீனாவுக்கு வந்திருந்தார் என்றும் பலவாறு குறிப்பிடப்பட் டுள்ளது. இது அந்த மனிதன் பற்றிய வெளிப் படையான தகவல்கள். ஆனால் அவரின் அந்தரங்கம் என்னவென்று தெரியவில்லை. எனவே ஆயிஷா (ரழி) அவர்களைப் பற்றி அவர் தெரிவித்த தவல்களை வைத்து அவர் ஒரு சூனியக்காரன் என்றோ மந்திரவாதி என்றோ சொல்லி விட முடியாது. ஏனெனில் அவர் கூறிய தகவல்கள், நோயாளி பற்றி அவருக்கு விவரிக்கப் பட்ட செய்திகள்,அடையாளங்கள் என்பவற்றிலி ருந்து அவர் புரிந்து கொண்டதாகும். இத்துரையில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு அது தெரியும்.

இன்னும் சில அறிவிப்புக்களில் அந்த மனிதனிடம் ஆயிஷா (ரழி) அவர்களின் சகோதரனின் புதல்வர்கள்,  அவரின் அவஸ்தை பற்றி  விளக்கமாகக் கூறினர். அதன் மூலம் ஆயிஷா (ரழி) அவர்களுக்கு சூனியம் செய்யப் பட்டுள்ளது என்பதை அவர் புரிந்த கொண்டார். எனவே தன்னிடம் வந்தவர்களை நோக்கி அவர் “சூனியத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்” என்று கூறினார். ஆகையால் இதனை ஆதாரமாக வைத்து அந்த மனிதனை ஒரு சூனியக்காரன் என்று கூறி விட முடியாது. ஆகையால் அவன் ஒரு சூனியக்காரன் என்று கூறுவோர் அதற்குரிய சரியான ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்.

மேலும் அம்மனிதனின் பதிலில் இருந்து அவர் ஒரு சூனியக்காரன் என்பது அவர்களுக்குப் பின்னர் தெளிவாகி விட்டது. அப்படி இருந்தும் அவரின் செயலை இவர்கள் அங்கீகரித்தது ஏன் என்று கூறுமிடத்து ஆயிஷா (ரழி) அவர்களும் அவரின் சகோதரனின் புதல்வர்களும் அதனை ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்ற படியால் அம்மனிதனி டம் அவர்கள் சென்றதைக் குற்றம் என்று சொல்வ தற்தில்லை. மேலும் அம்மனிதன் பற்றிய உண்மை யாதென்று ஏற்கெனவே அறிந்திருந்தால் இந்த சம்பவத்தை அறிவித்த ‘அம்ரா பின்த் அப்துர் ரஹ்மான்’ என்ற பெண் அதனை விபரிக்கும் போது “ஆயிஷா (ரழி) அவர்களின் இல்லத்திற்கு வந்த மனிதனை அல்லது ஆயிஷா (ரழி) அவர்களின் சகோதரனின் புதல்வர்கள் சந்தித்த அந்த மனிதனைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘ஸிந்து நாட்டிலிருந்து வைத்தியம் செய்வதற்காக வந்த மனிதன்” என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ஸிந்து நாட்டிலிருந்து வந்த ஒரு சூனியக்காரன் அல்லது மந்திரவாதி என்று குறிப்பிட்டிருப்பார்.

      மேலும் அம்மனிதன் சூனியக்காரன் என்பது, அவர் ஆயிஷா (ரழி) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று  கூறியதிலி ருந்து தெளிவாகிவிட்டது என்றால் அதன் பின்னர் சூனியத்தை விடுவித்துத் தரும்படி அவரிடம் அவர்கள் கேட்டார்களா? என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. ஆனால் அப்படி எதுவும் அங்கு நிகழவில்லை. எனவே சூனியத்தை நீக்குவதற்காக சூனியக்காரனிடம் செல்ல அனுமதி உண்டு என வாதிடுவோருக்கு இந்த சம்பவத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பது மிகவும் தெளிவு.

உண்மையில் சூனியக்காரனிடம் செல்வதை ஆயிஷா (ரழி) அவர்கள் அங்கீகரித்தார்கள். அல்லது அனுமதித்தார்கள் என்ற வாதத்தை  இந்த சம்பவம் தகர்க்கக் கூடியதாகவே இருக்கின்றது. ஏனெனில் தன்னுடைய அடிமைப் பெண் தனக்கு சூனியம் செய்து விட்டாள் என்பதை அறிந்து கொண்ட ஆயிஷா (ரழி) அவர்கள் தன் மீதுள்ள சூனியத்தை விடுவிக்க  மிகவும் பொருத்தமானவள் தனக்கு சூனியம் செய்த அந்த அடிமைப் பெண்ணாக இருந்த போதிலும், அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் சூனியத்தை விடுவிக்கும் படி அவளிடம் கேட்க வில்லை. மாறாக அவளை விற்று விடும் படி உத்தரவிட்டார்கள். இதனால் இன்னும் சில காலம் நோயால் வாடிய அவருக்கு, ஒன்றுக் கொன்று சற்று தொலைவில் இருக்கும் ஏழு கிணற்று தண்ணீரால் நீராடும் படி, கனவின் மூலம் கூறப்பட்டது. அதற்கிணங்க அவர்கள் நீராடினார்கள். அதனையடுத்து அவர்கள் நல்லாரோக்கியமடைந்தார்கள்.

2.                இந்த சம்பவம் வாதிகளின் வாதத்திற்கு எந்த வகையிலும்ஆதாரமாக அமையாது. மாறாக அவர்களின் வாதத்திற்கு அது எதிரானது என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். அது மாத்திரமன்றி நபியவர்களின் சொல், செயலுக்கு எதிராக யாருடைய செயலும் குறுக்கிட முடியாது என்ற படியால் இவ்விடயத்தில் நபியவர்களின் சொல்லுக்கு எதிரான ஆயிஷா (ரழி) அவர்களின் செயலை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

எனவே சூனியக்காரனிடம் வருவதையும் அவனிடம் பிரச்சினைகளை முறையிடுவதையும் அவர்களின் மருந்துகள், மந்திரங்கள் கொண்டு வைத்தியம் செய்வதையும் அவர்களின் கருமங் களை உண்மைப்படுத்துவதையும், நியாயப் படுத்துகின்ற சகல அத்தாட்சிகளும் இதன் மூலம் நிர்மூலமாகிவிட்டன.

வாசகச் சகோதரனே! ஷரீஆவின் ஆதாரங்கள் மிகவும் தெளிவானவை. அதற்கு எதிராக எதுவும் வர முடியாது. மேலும் அந்த சூனியக்காரர்களிடம் செல்வதும் மற்றும் அவர்களை ஏற்றுக் கொள்வ தும் சம்பந்தமாக பலத்த எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது என்பதும் உங்களுக்கு மிகவும் தெளிவாகி விட்டது. எனவே அந்த விடயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறும் உங்களை வேண்டுகிறேன். மேலும் அவர்களின் தொகை கூடி விட்டதையும், சில நாடுகளில் அவர்கள் பரவிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் மற்றும் அறியாமையில் இருக்கும் மக்களின் எளிமையான தன்மையை அவர்கள் தம் வசப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டு ஏமாந்து விடாதீர்கள். எனவே இந்தக் கேடுகளை விட்டும் பாதுகாக்குமாறு நாம் அல்லாஹ்வை வேண்டுவோம்.

  மேலும் இந்த சோதிடர்களும், மாயா ஜாலக் காரர்களுமான சூனியக்காரர்களுக்கும் மந்திர வாதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதும் அவர்களைத் தடுத்து நிறுத்துவதும் அவர்களுக்கு எதிராக நெருக்கடிகளை ஏற்படுத்து வதும் அவர்களின் வழிகேடான கருமங்களைத் தடுத்து  நிறுத்துவதும் அவர்களின் செயற்பாடுகள் பற்றி சமூகத்தினருக்கு எச்சரிக்கை செய்வதும் மற்றும் அவர்களிடம் வருவோரை கண்டிப்பதும் இஸ்லாமிய ஆட்சியாளர் மீதும் காவல் துறையினர் மீதும் மற்றும் இதற்காகப் பலமும் அதிகாரமும் உள்ளவர்கள் மீதும் கடமையாகும்.

   மேலும்  விஷமிகளை விட்டும் இஸ்லாமிய நாடுகளை பரிசுத்தப்படுத்துமாறும் அவர்களின் தீமைகளையும் தொல்லைகளையும் விட்டும் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு வழிகாட்டுமாறும் அல்லாஹ் விடம் வேண்டுகிறோம். மேலும் நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் கிளையார் தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் உண்டாவதாக!

******************

 பாதுகாப்பு வழிகள்:-

சூனியத்தில் மாட்டிக் கொள்ளு முன்னரும், பின்னரும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஷரீஆ அனுமதித்துள்ள சில வழி முறைகளை யும், காரணிகளையும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ள னர். அவற்றை இங்கு குறிப்பிடுவது நல்லதென நினைக்கின்றேன். மேலும் சூனியத்தில் மாட்டிக் கொள்ளு முன்னர் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதே சிறந்தது, என்பதில் ஐயமில்லை. மேலும் ஷைத்தான்களையும் மற்றும் தங்களின் கெட்ட நோக்கங்களையும் விஷமத்தனங்களை யும் உறுதிப் படுத்திக் கொள்ள ஷைத்தான் களிடம் உதவி தேடும் அவற்றின் உதவியாள ரும், அவற்றைப் பினபற்றுவோரு மாகிய சூனியக்காரர், மந்திரவாதிகளின் தீமைகளை விட்டும் ஒரு முஸ்லிம் எப்படி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நமக்கு அல் குர்ஆன் தெளிவு படுத்தியுள்ளது. இனி சூனியத்தில் மாட்டிக் கொள்ளு முன்னரும், பின்னரும் பாதுகாப்புத் தரும் சில பாதுகாப்புக் காரணிகளைக் கவனிப்போம்.

(1)ஷைத்தானின் ஊசலாட்டம், தூண்டுதல் மற்றும் ஆபத்துக்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடல். இது பற்றி அல் குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

“ஷைத்தான் யாதொரு எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து உங்களைத் தூண்டினால் உடனே நீங்கள் காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கேளுங்கள்.”(7:200)

“என் இறைவனே! ஷைத்தானுடைய தூண்டுதல் களிலிருந்தும் என்னைக் காப்பாற்றும் படி உன்னிடம் கோருகிறேன்,என்றும் கூறுங்கள்.”(23:-97)

“ என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வரமலிருக்கவும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன், என்றும் கூறுங்கள்.” (23:98) என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

     மேலும்    قل أعوذ برب الفلق ، قل أعوذ برالناس ஆகியன, பாதுகாப்புத் தேட மிகச் சிறந்த இரண்டு ஸூராக்களாகும். ஏனெனில் ஜின்களை விட்டும் பாதுகாப்புத் தேடி வந்த நபியவர்கள், இவ்விரு ஸூராக்களும் அருளப்பட்டதும் அதுவல்லாத அனைத்துப் பாதுகாப்பு முறைகளையும் தவிர்த்துக் கொண்டார்கள், என்று ஸஹீஹான ஹதீஸில் பதிவாகியுள்ளது. (ابن ماجه:3511,ترمذي :2058

(2) அல்லாஹ்வுக்குப் பயந்தும் அவனின் கட்டளைக ளுக்கு அடிபணிந்தும் நடத்தல்.

  ஏனெனில் எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பானோ,அவனை அல்லாஹ் பொருப் பேற்றுக் கொள்வான்.அவனை வேறு யாரிடமும் சாட்டிவிடவும் மாட்டான். “நீங்கள் பொறுமை யுடன் இருந்து அல்லாஹ்வுக்கு அஞ்சியும் நடப்பீர்களாயின் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது.(3:120)

     “எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றார்களோ, அவர்களுக்கு அவன் ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான்.”(65:2) என்று அல்லாஹ் திரு மறையில் கூறியுள்ளான். மேலும் நபிகளார், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் “நீங்கள் அல்லாஹ் வின் கட்டளையைப் பேணி நடவுங்கள், அவன் உங்களைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் கட்டளையைப் பேணி நடவுங்கள்,அவன் உங்களுக்கு முன்னால் இருக்கக் காண்பீர்கள்” என்று கூறினார்கள். (رواه أحمد:293/307)

தனிமையிலும் வெளியிலும் யார் அல்லாஹ்வின் கட்டளையைக் கவணமாக பேணி பாதுகாத்து வருகின்றாறோ, சகல தீங்குகளையும் சோதனைகளை விட்டும் அவரை அல்லாஹ் பாதுகாப்பான், என்பதை இத்திரு வசனம் உணர்த்துகின்றது.

(3)பாவ மன்னிப்புக் கோருதல். நமது துன்பங்களுக் கும், சோதனைகளுக்கும் காரணம் நமது பாவங்களும் குற்றங்களுமே, என்ற படியால் சகல விதமான தீமைகளை விட்டும் பாதுகாப்பு பெறுவதற்கு توبة  எனும் பாவ மன்னிப்புக் கோரல் அவசியம். “உங்களை வந்தடையும் துன்பம் உங்களின் கரங்கள் சம்பாதித்தவை” என்ற இறை வசனமும் இதனை உணர்த்துகிறது.

(4) அல்லாஹ்வின் மீது ‘தவக்குல்’ வைத்தல் -அல்லாஹ்வை முற்றிலும் நம்புதல். “எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகின்றார்களோ, அவர்களுக்கு அவனே போதுமானவன்.”(65:3) என்பது இறை வாக்கு.

(5) அதிகமாக தான தர்மம் செய்தல்.

(6) இரவிலும் மற்றும் பகலின் இரு மருங்கிலும் அல் குர்ஆனை அதிகமாக ஓதி வருதல். மேலும் திக்ருகளையும்,ஔராதுகளையும் மற்றும் مأثورة வான துஆக்களையும் அதிகமாக ஓதி வருதல். இவையாவும் ஷைத்தானின் ஊசலாட்டம், தூண்டுதல் என்பவற்றுக்கு எதிரான பலமான கோட்டைகள். ஔராதுகள், அத்காருகள் போன்ற நல்ல கருமங்கள் உள்ளத்தில் நிறம்பும் போது அங்கு ஷைத்தானுக்கு இடமில்லை. மேலும் சூனியத்தைத் தடுக்கவும், அதனை விடுவிக்கவும் வல்ல மகத்தான நிவாரணிகளாகவும் அவை விளங்குகின்றன. 

     பலவீனமான உள்ளத்திலும், இச்சையும் பாவமும் குடிகொண்ட உள்ளத்திலுமே சைத்தான் குடியிருப்பான். இதனால்தான் பெரும்பாலும் பெண்களும் சிறுவர்களும் மற்றும் கிராமத்து மக்களும் சைத்தானின் தாக்குதலுக்கு இலக்கா கின்றனர்.அவ்வாறே மார்க்கத்தில் ஈடுபாடில்லாத, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லாத, ஏகத்துவத்தில் உறுதி இல்லாதவர்களின் மீதும்  மற்றும் ஔராதுகளிலும், துஆ- பிரார்த்தனை களிலும், அல்லாஹ்வின் தூதரின் பாதுகாப்பு வழி முறைகளிலும் ஈடுபாடு இல்லாதவர்களின் மீதும் தான் ஷைத்தான் மிகவும் இலகுவாக ஆதிக்கம் செலுத்துகிறான்.

     மேலும் சூனியத்தை விட்டும் பாதுகாப்புத் தரக்கூடிய ஸூராக்கள் வருமாறு:

     *قل أعوذ برب الفلق، قل أعوذ برب الناس

ஸூராக்களை காலையிலும் மாலையிலும் மூன்று தடவைகள் ஓதி வந்தால் அது எல்லா சோதனைகளுக்கும் போதுமானது.(ترمذي/3575 )

     *ஸூரதுல் பகராவை ஓதி வருதல். “உங்களின் இல்லங்களை மையவாடிகளாக ஆக்கி விடாதீர்கள்.ஸூரதுல் பகரா ஓதப்படும் வீட்டிலிருந்து சைத்தான் விரண்டோடுவான்.” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  (مسلم -1/539)

      *ஆயதுல் குர்ஸியை ஓதி வருதல். “யார் படுக்கைக்குச் சென்றதும் ஆயதுல் குர்ஸியை ஓதுவருவாரோ, அல்லாஹ்வின் புரத்திலிருந்து ஒரு பாதுகாவலர் அவரிடம் இருந்து கொண்டே இருப்பார். காலை வரை அவனிடம் சைத்தான் நெருங்கவும் மாட்டான்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி:2311)

    *ஸுரதுல் பகராவின் இறுதி இரண்டு ஆயத்துக்களையும் ஓதுதல். இரவு நேரத்தில் “யார் ஸுரதுல் பகராவின் இறுதி இரண்டு ஆயத்துக் களையும் ஓதுவாரோ அது அவருக்கு (ஷைத்தானை விட்டும் பாதுகாத்துக் கொள்ள) போதுமானது.” என்று ரஸுல் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (புஹாரி:5009,முஸ்லிம்:1/554)

*لا اله الا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير.

     என்ற கலிமாவை தினமும் 100 தடவைகள் ஓதி வருதல். ஏனெனில் “யார் இதனை ஓதி வந்தாரோ அது அவரை அன்றைய தினத்தில் ஷைத்தானை விட்டும் பாதுகாக்கும். (புஹாரி:3293), (முஸ்லிம்:4/2071)

*நேமமாக ஒளராதுகளை ஓதி வருதல்,குறிப்பாக காலை, மாலை அத்கார்களை ஓதி வருதல்.

(7) தினமும் காலையில் ஏழு ‘அஜ்வா’ பேரீத்தம் பழங்கள் சாப்பிடுதல். “யார் காலையில் ஏழு அஜ்வா பேரீத்தம் பழம் சாப்பிடுவாரோ அன்றைய தினத்தில் அவரை நஞ்சும் தீண்டாது, சூனியமும் தீண்டாது.” என்று ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:5769)

(8) சகல வித சிந்தனைகளையும் விட்டு நீங்கி அனைத்துக்கும் காரண கர்த்தாவாகவுள்ள அல்லாஹ்வின் பக்கம் சிந்தனையைச் செலுத்தி ஏகத்துவத்திற்காக உள்ளத்தை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் முன் கூறிய அனைத்தையும் உள்ளடக்கக் கூடியது. எனவே அல்லாஹ்வின் இயக்கத்தின் மூலமே எல்லாம் செயற்படுகின்றன என்றும் அவனின் அனுமதி யின்றி எந்தவொரு தீங்கோ நன்மையோ ஏற்படப் போவதில்லை என்றும் அவன்தான் தன் அடியானைப் பாதுகாக்கிறான் என்றும் பூரணமாக நம்ப வேண்டும். ஒரு அடியான் இவ்வாறு சிந்திக்கின்ற போது அவனுடைய உள்ளத்தில் அல்லாஹ் ஒருவனைப் பற்றிய அச்சத்தைத் தவிர ஏனைய எல்லா அச்சமும் நீங்கி விடும். இவ்வாறு உண்மையான ஈமான் உள்ள முஃமினை அல்லாஹ் பாதுகாப்பான். ஏகத்துவமானது அல்லாஹ்வின் மகத்தான பாதுகாப்புக் கோட்டையாகும். அதில் பிரவேசித்த வனுக்கு அச்சம் என்பதே இருக்காது. “எவன் அல்லாஹ்வைப் பயப்படுகிறானோ அவனுக்கு மற்றைய அனைத்தும் பயப்படும். எவன் அல்லாஹ்வைப் பயப்படவில்லையோ அவனை மற்றைய அனைத்தும் பயமுறுத்தும்.” என்று இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள். அது ஈண்டு கவனிக்கத்தக்கது.

    وصلى الله وسلم على نبينا محمد البشير النذير وعلى آله وصحبه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان الى يوم الدين