(தவக்குல் வைத்தல்)
التوكل
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன, (ஸலாத்) எனும் கருணையும், (ஸலாம்) எனும் ஈடேற்றமும் இறைத் தூதர்களுக்கும் நபிமார் களுக்கும் இறுதியாக வந்துதித்த எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
எங்கும் சடவாதம் தலைக்கேறி, ரூஹானிய்யத் நளிவடைந்து, வீண் விளையாட்டுக்களும் அதிகரித்து, மக்கள் தங்கம் வெள்ளி போன்ற நாணயங்களில் முழு நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதை எவரும் அறிவர். மக்கள் உலகத்தில் நம்பிக்கை வைத்து, அதை அடைந்து கொள்ள சகல யுக்திகளையும் கையாள்கிறார்கள். அதாவது, அதை தேடிப் பெற்றுக் கொள்வதற் கான (வழிகளில்) காரணிகளில் மட்டும் முழு நம்பிக்கை வைத்து, அந்த (வழிகளை) காரணிகளை ஏற்படுத்திய தூய இறைவனை முற்றாக மறந்து விட்டார்கள். இதனால் அவர்களிடத்தில் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுதல் வெகுவாகக் குறைவடைந்து, பலஹீனத்துக்கு மேல் பலஹீனத்தையும், இழிவுக்கு மேல் இழிவையும் அவர்கள் அதிகரித்துக் கொண்டார்கள்.
சிலர் தமக்கு கிடைத்த சொத்து செல்வங்களோடு நாம் நிம்மதியாக இருந்தால் போதும், இவை யனைத்தும் (“என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது” அல் கஸ்ஸ் 78) ஏன் அதை நான் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்? என எண்ணி அவர்களுடைய சொத்துகளில் அல்லாஹ் வுக்குரிய பங்கை மறந்து வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.
வேறு சிலர் தமக்குக் கிடைக்கும் ஸகாத், ஸதகா போன்ற தர்மங்களைப் பெற்றுக் கொண்டு, தொழில் முயற்சிகளில் ஈடுபடாது சதாவும் வெட்டியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்க விரும்புகின்றனர்.
மற்றும் சிலர் மக்களை சீர்திருத்துவது போன்ற சமூக பொறுப்புகளில் ஈடுபட்டால் தமக்குள்ள அந்தஸ்தை இழக்க நேரிடலாம், அதனால் பிறருக்கும் அசௌகரியம் உண்டாகலாம் என எண்ணி அப்பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றாது பொறுப்பற்ற நிலையில் செயல்படுகின்றனர்.
பிரிதோர் பிரிவினர் பகைவர்களை எதிர் கொள்ளப் பயந்து யானை வரு முன்னே மணியோசைக்குப் பயந்து ஓடுகின்றனர், இவர்கள் தப்பினோம் பிழைத்தோம் என எண்ணி, நியமங்களையும் விட்டுக் கொடுத்து அசத்தியத்துக்கு தலை சாய்க்கின்றனர். இத்தகை யோர் ஆபத்தின் விளிம்பில் இருப்பதையும், அழிவை நோக்கிச் செல்வதையும் அறிவதில்லை.
உண்மையில் (சகல காரியங்களையும்) அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவது ஒவ்வொரு மனிதனுக்கும் நிம்மதியையும், உயர்வையும், மறுமையில் வெற்றியையும் தரக்கூடிய, இதயத்தால் செய்யும் மகத்துவம் மிக்க ஒரு இபாதத்தாகும்.
சமூக ரீதியாக நோக்குமிடத்து, அதன் எழுச்சிக்கும், வலிமைக்கும், உறுதியான தன்மைக்கும், அச்சமூகம் நிலைத்திருக்கவும், எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ளவும் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவதே சிறந்த வழியாகும்.
உண்மையில் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவது மனதுக்கு உறுதியளிக்கும், பயங்களைப் போக்கும், இதயத்துக்கு வலிமை சேர்க்கும், கஷ்டங்களை எதிர் கொள்வதற்குரிய சக்தியை கொடுக்கும்.
அல் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் பொறுப்புச் சாட்டுவது குறித்து வந்துள்ள ஆதாரங்கள்.
(சகல காரியங்களையும்) அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுமாறு அல்லாஹ் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளான், மேலும் பொறுப்புச் சாட்டுவது முஃமின்களின் விஷேட பண்புகளை சேர்ந்தது என்றும், அத்தகையோரை அவன் நேசிப்பதாகவும், அவர்களுக்கு மகத்தான கூலிகளை சித்தப்படுத்தி வைத்துள்ளதாகவும் தெளிவு படுத்தியுள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ المائدة 23
“நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்விடமே பொறுப்புச் சாட்டுங்கள்!” அல் மாஇதா 23
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
وَعَلَى اللّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ آل عمران122
“நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்விடமே பொறுப்புச்சாட்ட வேண்டும்.” ஆலு இம்ரான் 122.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ الطلاق 3
“அல்லாஹ்விடம் பொறுப்புச்சாட்டுவோருக்கு அவன் போதுமானவன்.” அத்தலாக் 3.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ آل عمران 159
“(முஹம்மதே! நீர்) உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவீராக! பொறுப்புச் சாட்டுவோரை அல்லாஹ் நேசிக்கிறான்.” ஆலு இம்ரான். 159.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
وَمَا لَنَا أَلَّا نَتَوَكَّلَ عَلَى اللَّهِ وَقَدْ هَدَانَا سُبُلَنَا ۚ إبراهيم 12.
“அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டாதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான்.” இப்ராஹீம் 12.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الأنفال 2.
“நம்பிக்கை கொண்டோர் யாரெனில் (அவர் களிடம்) அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப் பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனிடமே பொறுப்புச் சாட்டுவார்கள்.” அல் அன்பால் 2.
அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவதன் சிறப்புகள் குறித்து வந்துள்ள நபி மொழிகளைப் பொருத்த வரை எந்தக் கேள்வி கணக்கும் வேதனையும் இன்றி சுவனம் செல்லும் எழுபதாயிரம் பேர் பற்றிய நபி மொழி குறிப்பிடத்தக்கது.
عن عمران بن حصين أن النبي صلى الله عليه وسلم قال:إنه يدخل الجنة من أمتي سبعون ألفا بغير حساب ولا عذاب فسأله الصحابة عنهم فقال: هم الذين لا يسترقون ولا يكتوون ولا يتطيرون وعلى ربهم يتوكلون متفق عليه
நபி (ஸல்) அவர்கள் அருளியதாக இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரைணயும் இன்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு மக்கள், “அவர்கள் யார் அல்லாஹ்வின் தூரே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள், ஓதிப்பார்க்க மாட்டார்கள் தங்கள் இறைவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்கள்” என்று கூறினார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.
عن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:" لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا "رواه الإمام أحمد والترمذي والنسائي وابن ماجه وابن حبان والحاكم, وقال الترمذي: حسن صحيح.
நபி (ஸல்) அவர்கள் அருளியதாக உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “நீங்கள் உண்மை யான முறையில் இறைவன் மீது பொறுப்புச் சாட்டினால் காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூட்டுக்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று (அல்லாஹ்) உங்களுக்கும் உணவு அளிப்பான்” என்றார்கள். (ஆதாரம் அஹ்மத், திரிமிதி, நஸாஈ, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான், ஹாகிம்)
عن عبد الله بن عباس رضي الله عنهما قال:حَسْبُنَا اللهُ وَنِعْمَ الوَكِيلُ : قَالَهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ حِينَ أُلْقِي فِي النَّارِ ، وَقَالَهَا مُحَمَّدٌ صلى الله عليه وسلم حِينَ قَالُوا : ( إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَاناً وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ) رواه البخاري.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்; (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது ‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவனே பொறுப்பு ஏற்றுக் கொள்வோரில் சிறந்தவன்’ என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத்(ஸல்) அவர்கள்,
الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُواْ لَكُمْ فَاخْشَوْهُمْ- آل عمران 173.
“நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கு எதிராக அணிதிரண்டுள்ளனர் எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்”
என மக்கள் (சிலர்) கூறிய போது கூறினார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. ‘எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன், அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்’ என்றும் அவர்கள் கூறினார்கள். நூல் புகாரி
عن جابر بن عبد الله رضي الله عنهما أنه غزا مع رسول الله صلى الله عليه وسلم قبل نجد فلما قفل رسول الله صلى الله عليه وسلم قفل معه فأدركتهم القائلة في واد كثير العضاه فنزل رسول الله صلى الله عليه وسلم وتفرق الناس في العضاه يستظلون بالشجر ونزل رسول الله صلى الله عليه وسلم تحت سمرة فعلق بها سيفه قال جابر فنمنا نومة ثم إذا رسول الله صلى الله عليه وسلم يدعونا فجئناه فإذا عنده أعرابي جالس فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا اخترط سيفي وأنا نائم فاستيقظت وهو في يده صلتا فقال لي من يمنعك مني قلت الله فها هو ذا جالس ثم لم يعاقبه رسول الله صلى الله عليه وسلم- متفق عليه
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்கள்; “நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பிய போது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள் மரங்கள் நிறைந்த பள்ளத் தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்த போது) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், ‘என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்று வார்?’ என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்று முறை) கூறினேன்" என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை. நூற்கள் புகாரி முஸ்லிம்.
பிரிதொரு அறிவிப்பில் கவ்ரத் என்ற யூத இளைஞன் ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்லும் நோக்கத்தில் வாளுடன் வந்தான். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார் கள். அவர்கள் மீது கவ்ரத் பாய்ந்தான். சத்தம் கேட்டு சுதாரித்துக் கொண்ட அண்ணலார், தன் எதிரே வாளுடன் ஒருவன் நிற்பதைக் கண்டார். அந்த வாலிபன் நபிகளிடம் “இப்போது உம்மை என்னிடமிருந்து யார் காப்பாற்றுவார்?” என ஆணவத்துடன் கேட்டான். அதற்கு இறைத்தூதர் அவர்கள், “அல்லாஹ்” என உரக்க பதில் சொன்னார்கள். உடனே அந்த வாலிபனின் கை நடுங்கி வாள் கீழே விழுந்தது. இப்போது நாயகம் (ஸல்) அவர்கள் வாளை தன் கையில் ஏந்தியவாறு, “இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்கள்?”என்றார்கள்.
அவன் நடுங்கிக் கொண்டே, “வாள் ஏந்திய வர்களில் சிறந்த ஒருவராக நீர் இருப்பீராக” என்றான், “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை, நான் அல்லாஹ் வின் திருத்தூதர் என சாட்சி கூறுவாயா?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்த வாலிபன் “முடியாது, ஆயினும் உங்களுடனோ, உங்களுடைய எதிரி களுடனோ சேர்ந்து போரிடமாட்டேன் என உறுதியளிக்கிறேன்” என்றான். உடனே நபியவர் கள் அவனை கருணையுடன் விடுதலை செய்தார்கள். பிறகு அவன் தன் கூட்டத்திடம் திரும்பிச் சென்று “மனிதர்களில் மிகச் சிறந்தவரிடமிந்து நான் திரும்பி வந்துள்ளேன் என்றான்.
இப்னுல்கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவது, மார்க்கத்தின் அரைப் பகுதியாகவும், (அல்லாஹ் வின் பக்கம்) மீழ்வது எஞ்சிய அரைப்பகுதி யாகவும் நோக்கப்படும். காரணம் மார்க்கம் என்பது உதவிதேடுதல், வணக்கம் செய்தல் ஆகிய இரண்டு பிரிவுகளைக் கொண்டது, பொறுப்புச் சாட்டுவது அல்லாஹ்விடம் உதவி தேடுவதாகும், வணக்கம் செய்தல் அவன் பக்கம் மீழ்வதாகும்.
(அல்லாஹ்வின் மீது) பொறுப்புச் சாட்டுவது மிக உயர்ந்த நிலையாகும், அடியார்கள் பல் வேறு தேவையுடையவர்கள், அல்லாஹ்வோ எல்லை யற்ற அருளாளன், ஆகவே அல்லாஹ்வின் நேசர்களும் விசேடமானவர்களும், இறை நம்பிக்கை, அவனுடைய மார்க்கத்துக்கு உதவு தல், கலிமாவை உயர்த்துதல், எதிரிகளுடன் போராடுதல், அவனுடைய கட்டளைகளை பின்பற்றுதல் முதலிய விடயங்களில் அல்லாஹ் விடம் பொறுப்புச் சாட்டுவார்கள்.
மற்றுமொரு சாரார் பிற மனிதர்களிடமிருந்து ஒதுங்கி, சுய ஆத்மாவின் ஸ்திரத்துக்காகவும், தான் அல்லாஹ்வுடன் கொண்டிருக்கும் நிலையை பாதுகாத்துக் கொள்ளவும் அவனிடம் பொறுப்புச் சாட்டுவார்கள்.
வேறு ஒரு சாரார் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெற்ற (ரிஸ்க்) உணவு, சுகம், வெற்றி, மனைவி, பிள்ளை முதலிய இலாபங்களுக்காக அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவார்கள்.
அல்லாஹ்வுக்கும், அவனது படைப்புகளுக்கும், தன் ஆத்மாவுக்கும் உரிய கடமைகளில் அல்லாஹ்வுக்கு பொறுப்புச் சாட்டுவதே பொறுப்புச் சாட்டுதில் மிகச் சிறந்த நிலையாகும்.
அதிலும் மார்க்கத்துக்கு ஒரு நலனை ஏற்படுத்த வல்ல, அல்லது தீமையை தடுக்க வல்ல பொறுப்புச் சாட்டுதலே மிகவும் பயனுள்ள தாகும். கண்ணியமிக்க நபிமார்களும், அவர் களின் தலைமுறையினரும், பூமியில் குழப்பங் களை நீக்கி, சன்மார்க்கத்தை நிலை பெறச் செய்ய பொறுப்புச் சாட்டிய முறை இதுவாகும்.
மனிதர்களுடைய ஊக்கத்தையும், நோக்கத்தை யும் பொருத்து பொறுப்புச் சாட்ட(ல் நிலைகளி) லில் அவர்கள் வித்தியாசப் படுகிறார்கள். அதாவது சிலர் ஆட்சி அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்காக (அல்லாஹ்வின் மீது அசையாத நம்பிக்கை கொண்டு) அவனிடம் பொறுப்புச் சாட்டுவார்கள். மற்றும் சிலரோ வெறும் ரொட்டித் துண்டை பெற்றுக் கொள்வதற்காக பொறுப்புச் சாட்டுவார்கள்.
எது எவ்வாராயினும், எந்த மனிதரும் ஒரு விடயத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் அல்லாஹ்விடம் உண்மையான முறையில் பொறுப்புச் சாட்டினால், அதை அவர் பெற்றுக் கொள்வார். அதற்குரிய நன்மை தீமை போன்ற விளைவுகளையும் அவரே எதிர்கொள்வார்.
அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவது குறித்து வந்துள்ள இமாம்களின் கருத்துகள்.
1- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வை நம்புவதே அவன் மீது பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
2- இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், படைப்புகள் மீது நம்பிக்கை இழப்பதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
3- ஹஸன் (ரலி) கூறினார்கள்; அல்லாஹ்வை திருப்தி கொள்ளச் செய்வதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
4- ஹம்தூன் அல் கஸ்ஸார் கூறினார்கள்; அல்லாஹ்வை பற்றிப் பிடிப்பதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
5- சகீக் அல் பல்கீ அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து, மன நிம்மதியாக இருப்பதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
6- வேறு சிலர்; சகல நிலைகளிலும் அல்லாஹ் வுடன் தொடர்பு பட்டிருப்பதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும் என்பர்.
7- மற்றும் சிலர்; அல்லாஹ்வின் கட்டளை களை யும் அவனுடைய விதியையும் ஏற்றுக் கொள்வதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும் என்பர்.
8- இப்னு ரஜப் அல் ஹன்பலி அவர்கள் கூறினார்கள்; (இம்மை, மறுமை) ஈருல காரியங்களிலும் நன்மை செய்பவனும் தீங்கைத் தடுப்பவனும் அல்லாஹ் தான், என மன உறுதி கொள்வதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; பொறுப்புச் சாட்டுவதன் யாதார்த்தம் யாதெனில், அது பல விடயங்களை உள்ளடக்கிய ஒரு நிலையாகும், அதன் யதார்த்த நிலையை அடைய விரும்புபவர் (பொறுப்புச் சாட்டுதல் உள்ளடக்கும்) சகல விடயங்களையும் ஒருங்கே பின்பற்றக் கடமைப் பட்டுள்ளார். (ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல்) அதை அடையாளப்படுத்த முற்பட்டவர்கள் அதன் ஓரிரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருத்துக் களை மாத்திரம் கவணத்தில் கொண்டார்கள் எனக் கூறினார்கள். பின்னர் பொறுப்புச் சாட்டுவதன் நிலைகளை பின் வருமாறு விளக்கினார்கள்;
முதலாவது நிலை; இரட்சகனையும் அவனது பண்புகளையும் அறிதல். அதாவது அல்லாஹ் சக்தியுள்ளவன், அவன் தேவையற்றவன், நிலைத்திருப்பவன், யாவற்றையும் அறிந்தவன் முதலிய விடயங்களை அறிவதே பொறுப்புச் சாட்டலின் முதலாவது நிலையாகும்.
இரண்டாவது நிலை; (பொறுப்புச் சாட்டு வதுடன் இணைந்த முயற்சி) காரணிகளை ஏற்றுக் கொள்ளுதல். அவைகளை ஏற்றுக் கொள்ளாதவருடைய பொறுப்புச் சாட்டல் சீராகாது, ஏனெனில் ஒரு மனிதனுடைய தீமைகள் அகன்று, இலட்சியங்கள் நிறைவேற (அல்லாஹ்விடம்) “பொறுப்புச் சாட்டுவதே” பலம் மிக்க (முயற்சி) காரணியாகும்.
அதாவது மனிதன் (முயற்சி) காரணிகளில் ஈடுபட்டாலும் அவை மேல் உள்ள நம்பிக்கையை முற்றாக அகற்றி அல்லாஹ்வின் பக்கம் அதை திருப்புவதே பொறுப்புச் சாட்டுவதின் பூரண நிலையாகும்.
மூன்றாவது நிலை; ஏகத்துவ நம்பிக்கை இதயத்தில் அழுத்தமாக பதிந்திருத்தல். சீர் குழைந்த மனிதனுடைய பொறுப்புச் சாட்டல் சீராகாது, காரணம் பொறுப்புச் சாட்டலின் யதார்த்தமே இதயத்திலுள்ள ஏகத்துவத்தை அடிப்படையாக கொண்டது. எனவே (சிர்க்) அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கரை பதிந்த உள்ளத்தில் ஆரோக்கியமற்ற பொறுப்புச் சாட்டலே குடிகொள்ளும்.
நான்காவது நிலை; அல்லாஹ்வை மாத்திரம் இதயத்தால் நம்புதல், அவனிடமே ஒதுங்குதல், (முயற்சி) காரணிகளில் முற்றாக நம்பிக்கை இழந்து அல்லாஹ்வுடைய நிர்வாகத்தில் மட்டும் நம்பிக்கை வைத்தல், கைக்குழந்தை தாயின் மார்பகத்தை மட்டும் நம்பி உயிர் வாழ்வது போல், பொறுப்புச் சாட்டுபவரும் அல்லாஹ் விடம் சரணடைய கடமைப் பட்டுள்ளார்.
ஐந்தாவது நிலை; அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தல், ஒருவர் அல்லாஹ் வின் மீது நல்லெண்ணமும் ஆதரவும் வைக்கும் அளவுக்கே அவருடைய பொறுப்புச் சாட்டல் நிலையும் மதிப்பிடப்படுகிறது. காரணம் நல்லெண்ணமும் ஆதரவும் வைக்கப் படாத வரிடம் பொறுப்புச் சாட்டுவது சாத்தியமற்றது.
ஆறாவது நிலை; இதயம் அல்லாஹ்விடம் சரணடைதல். அதாவது மரணித்த ஒருவர் குளிப்பாட்டுபவருக்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்றும், தன் சகல விருப்பு வெறுப்புகளையும் துறந்து எஜமானுக்கு ஒரு அடிமை கட்டுப் படுவது போன்றும் பொறுப்புச் சாட்டுபவர் அல்லாஹ்விடம் சரணடைந்து அவனுக்கு அடிபணிய கடமைப் பட்டுள்ளார்.
ஏழாவது நிலை; பொறுப்புச் சாட்டுதல். அதுவே பொறுப்புச் சாட்டலின் மூல மந்திரமும் யதார்த்தமும் ஆகும். அதாவது பொறுப்புச் சாட்டுபவர் எத்தகைய நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாது சுயமாகவே தனது சகல காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைக்க வேண்டும்.
(முயற்சி) காரணிகளை ஏற்றுக் கொள்வது பொறுப்புச் சாட்டலின் படித்தரங்களைச் சேர்ந்தது, அவைகளை மறுப்பவரின் பொறுப்புச் சாட்டல் மறுக்கப்படும் என நாம் முன்னர் பார்ததோம். ஆகவே தான் “(முயற்சி) காரணிகளில் ஈடுபடுவது எந்த வகையிலும் பொறுப்புச் சாட்டலுடன் முரண் படுவதில்லை” என அனைவரும் ஏகோபித்துக் கூறியுள்ளார் கள். வெட்டியாக இருப்பவரே முயற்சி (காரணி)களில் ஈடுபடாதவர். அவருடைய பொறுப்புச் சாட்டலும் மறுக்கப்பட்டது, ஆனால் அல்லாஹ்வை மறந்து (முயற்சி) காரணிகளில் மட்டும் நம்பிக்கை வைப்பதே இங்கு தடுக்கப்பட்ட விடயமாகும்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் “நீங்கள் உண்மையான முறையில் இறைவனிடம் பொறுப்புச் சாட்டினால் காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூட்டுக்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று (அல்லாஹ்) உங்களுக்கும் உணவு அளிப்பான்” என்ற நபி மொழிக்கு விளக்கம் அளிக்கையில் “தொழில் முயற்சிகளில் ஈடுபடாது வெட்டியாக இருப்பதை இந்த நபி மொழி ஆதரிக்கவில்லை, மாறாக இந் நபிமொழியும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுமாறு எங்களைத் தூண்டு கின்றது. காரணம் குறித்த பறவைகள் உணவை தேடியே வெளியே செல்கின்றன. அவ்வாறு நீங்களும் வெளியே செல்லும் போதும், திரும்பி வரும் போதும், உங்களுடைய ஏனைய நடவடிக்கைகளிலும், அல்லாஹ்விடமே சகல நலன்களும் தங்கியுள்ளன, என அவனிடம் பெறுப்புச் சாட்டுவீர்களாயின், பறவைகள் வயிறு நிரம்பி வீடு திரும்புவது போல் நீங்களும் வெற்றியுடனே திரும்புவீர்கள் மாறாக உங்களுடைய பலம், வலிமைகளில் நம்பிக்கை வைத்து, பொய், மோசடி முதலியவைகளில் ஈடுபட்டு வீடு திரும்பு வீர்களாயின் அது முற்றிலும் பொறுப்புச் சாட்டலுக்கு புறம்பான செயலாகும். என்பதே இதன் கருத்தாகும் எனக் கூறியுள்ளார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
قال النبي صلى الله عليه وسلم: لا تستبطئوا الرزق، فإنه لم يكن عبد ليموت حتى يبلغ آخر رزق هو له، فأجملوا في الطلب أخذ الحلال وترك الحرام – رواه الحاكم وصححه الألباني.
இன்னும் (ரிஸ்க்) உணவு வந்து சேரவில்லையே என ஆதங்கப்படாதீர்கள், எந்த ஒரு அடியானும் தனக்குரிய அனைத்து (ரிஸ்க்) உணவுகளையும் பெற்றுக் கொள்ளாது மரணிக்க மாட்டான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், ஹராமா னவைகளை ஒதுக்கி ஹலாலானவைகளை ஆகுமான வழிகளில் தேடிக் கொள்ளுங்கள். நூல் ஹாகிம்.
“சுஅபுல் ஈமான்” கிரந்தத்தில் இமாம் பைஹகி கூறினார்கள்; தனது பலத்திலும், தந்திரோபாய வழிகளிலும் தங்கியிருக்காது, அல்லாஹ்விடம் மாத்திரம் நம்பிக்கை வைத்து ஆகுமான வழிகளில் ஹலாலான உணவை தேடிக் கொள்ளுமாறு இந்த ஹதீஸில் எமக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்; ஒரு அடியான் (விதியில் எழுதப் பட்ட) எல்லா இடங்களுக்கும் செல்வான், உணவுகளையும் உண்பான், ஆயுலையும் கழிப்பான், பிராணிகளையும் கொல்வான், மரணத்துக்குப் பயந்தவனை எவ்வாறு அது துரத்திச் செல்கிறதோ அவ்வாரே ஒரு அடியானுடைய (ரிஸ்கை) உணவைப் பறித்துச் சென்றவனையும் அவன் துரத்திச் செல்வான். ஆகவே அல்லாஹ்வைப் பயந்து உணவை நல்ல வழிகளில் தேடிக் கொள்ளுங்கள்.
இமாம் பைஹகி அவர்கள் கூறினார்கள்; (உணவை) நல்ல வழிகளில் தேடிக் கொள்ளு மாறு கட்ளையிட்ட (இறை)வன் ஒரு போதும் சம்பாத்தியத்தை தடை செய்ய வில்லை. அல்லாஹ்வின் நிர்ணயம் இன்றி தன் முயற்சியா லும் உழைப்பாலும் மட்டுமே உணவை பெற்றுக் கொள்ளலாம் என எண்ணி அதற்கே முழுக் கவணத்தையும் செலுத்தி பேராசை கொள்வதையே அல்லாஹ் தடை செய்துள்ளான்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், யமன் வாசிகள் கட்டுச்சாதனங்களை எடுக்காது ஹஜ் பயணத்தை மேற்கொண்டார்கள். பிறகு அவர்கள் “நாம் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டியுள்ளோம்” எனக் கூறியவர்களாக மக்காவை நோக்கி வந்து மக்களிடம் யாசித்தார்கள், அப்போது அல்லாஹ் பின் வரும் வசனத்தை இறக்கினான்.
وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى-البقرة: الآية197
“(ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது.” சூரா பகரா 2;197.
ஹுலைமி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; (ஹஜ்ஜுக்கு வரும்) மனிதர்களுடைய பொருட்களில் நம்பிக்கை வைத்து அவர்களுக்கு அசௌகரியத்தையும் துன்பத்தையும் கொடுக்க வேண்டாம் என அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளான். கட்டுச் சாதனங்களை எடுக்காமல் (அல்லாஹ்விடம்) பொறுப்புச் சாட்டுவது, காட்டுக்குச் செல்லும் மனிதர் வேறு ஒருவரின் கட்டுச்சாதனங்களை நம்பியே அவ்வாறு புறப்படுகிறார். இதனையே மேல் கூறப்பட்ட வசனம் தடை செய்துள்ளது. எனவே (ஹஜ்ஜுக்குச் செல்பவர்) கட்டுச் சாதனத்தை எடுத்துச் செல்வதும், அதை பெற்றுக் கொள்ளாதவர் கிடைக்கும் வரை காத்திருப்ப தும் அவசியமாகும்.
(அல்லாஹ்விடம்) பொறுப்புச் சாட்டுவதின் பலன்கள்
அல் குர்ஆனிலும், நபி மொழிகளிலும், இமாம்களின் கருத்துக்கள் வாயிலாகவும் பொறுப்புச் சாட்டுவோறுக்கு பல்வேறு நன்மைகள் கூறப்பட்டுள்ளன. அவைகளில் சிலதை நாம் இங்கு நோக்குவோம்.
1-இறை விசுவாசம் கிடைத்தல். அல்லாஹ் கூறுகின்றான்;
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ المائدة 23
2- “நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்விடமே பொறுப்புச் சாட்டுங்கள்!” அல் மாஇதா 23
3- நல்லுதவி கிடைத்தல்; அல்லாஹ் கூறுகின்றான்;
وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ هود: 88
எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனிடமே பொறுப்புச் சாட்டி யுள்ளேன். அவனிடமே மீளுகிறேன் ஹுத் 88.
4- சைத்தானின் குழப்பங்களிலிருந்து வெற்றி கிடைத்தல். அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُواْ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ النحل 99
நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவோரிடமும் அவனுக்கு அதிகாரம் இல்லை. அன்னஹ்ல் 99.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّمَا النَّجْوَىٰ مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ الَّذِينَ آمَنُوا وَلَيْسَ بِضَارِّهِمْ شَيْئًا إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ -ا لمجادلة 10
இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிட மிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் விருப்ப மின்றி அவர்களுக்குச் சிறிதளவும் அவனால் தீங்கு இழைக்க முடியாது. முஃமின்கள் அல்லாஹ்விடமே பொறுப்புச் சாட்ட வேண்டும். அல் முஜாதலா 10.
5- அல்லாஹ்வின் நட்பு கிடைத்தல்.
அல்லாஹ் கூறுகின்றான்;
فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ- آل عمران 159.
உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவீராக! அவனிடம் பொறுப்புச் சாட்டுவோரை அல்லாஹ் நேசிக்கிறான். ஆலு இமரான் 159.
6- சகல வழிகளிலும் அல்லாஹ்வின் பராமரிப்பு கிடைத்தல். அல்லாஹ் கூறுகின்றான்;
وَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا الأحزاب 3.
அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். அல் அஹ்ஸாப் 3.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ الطلاق 3
அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவோறுக்கு அவன் போதுமானவன். அத்தலாக் 3.
7- (மன) உறுதி கிடைத்தல். அல்லாஹ் கூறுகின்றான்:
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ التوبة 51
“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்விடமே பொறுப்புச் சாட்டுவார்கள்” என்று கூறுவீராக! அத்தவ்பா 51.
8- வெற்றியும் ஆட்சி அதிகாரமும் கிடைத்தல். அல்லாஹ் கூறுகின்றான்.
إِنْ يَنْصُرْكُمُ الله فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى الله فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ آل عمران 160.
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்விடமே பொறுப்புச் சாட்ட வேண்டும். ஆலு இம்ரான் 160.
9- சகல தீமைகளில் இருந்தும் தப்பிக்க வழி கிடைத்தல். அல்லாஹ் கூறுகின்றான்:
الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُواْ لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَاناً وَقَالُواْ حَسْبُنَا اللّهُ وَنِعْمَ الْوَكِيلُ - فَانقَلَبُواْ بِنِعْمَةٍ مِّنَ اللّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُواْ رِضْوَانَ اللّهِ وَاللّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ آل عمران 174
“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். ஆலு இம்ரான் 173,174
10- அறியாத புறத்திலிருந்து (ரிஸ்க்) உணவு கிடைத்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
عن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:" لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا "رواه الإمام أحمد والترمذي والنسائي وابن ماجه وابن حبان والحاكم, وقال الترمذي: حسن صحيح.
நபி (ஸல்) அவர்கள் அருளியதாக உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “நீங்கள் உண்மையான முறையில் இறைவனிடம் பொறுப்புச் சாட்டினால் காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூட்டுக்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று (அல்லாஹ்) உங்களுக்கும் உணவு அளிப்பான்”என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், திரிமிதி, நஸாஈ, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான், ஹாகிம்)
11- அல்லாஹ்வை பற்றிய நம்பிக்கை ஏற்படல்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வை நம்புவதே அவன் மீது பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் ஸலாத்தும், ஸலாமும் சொல்வானாக.
உங்கள் கருத்துக்களை எமக்கு அறிவிக்கவும்.