இஸ்லாமிய ஷரீஆவும் அதன் அநுகூலங்களும் அதன் பால் மனித குலத்தின் தேவையும் ()

அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ்

 

ஷரீஆ மகத்தானதாகவும், பரிபூரணமானதாகவும் விளங்குகிறது. எனவே இதனைப் பற்றிப் பிடிக்காத வரை மனிதனின் பிரச்சினைகளுக்குத் தீர்வுமில்லை. நற்பாக்கியமும் இல்லை. முஸ்லிம் சமூகம் இன்று சிக்குண்டுள்ள பிரிவினை, முரண்பாடு, பலவீனம், இழிவு என்பவற்றுக்கும் தீர்வும் இல்லை.

|

 இஸ்லாமிய ஷரீஆவும் அதன் அநுகூலங்களும் அதன் பால் மனித குலத்தின் தேவையும்

الشريعة الإسلامية ومحاسنها و ضرورة البشر إليها

 என்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன். புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் கிளையார், தோழர்கள் மீதும் உண்டாவதாக.

     இஸ்லாமிய சமூகம் முன் ஒரு போதும் இல்லாதவாறு இன்று பிளவு பட்டுச் சின்னாபின்ன மடைந்துள்ளது. முன்னர் பிற சமூக தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி வந்த முஸ்லிம் சமூகம் இன்று தங்களின் உட்பூசல்களின் காரணமாகவும், கொள்கைப் போரின் காரணமாகவும் தங்களைத் தாங்களே அழித்துக கொள்கின்றனர், ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரின் பள்ளிவாயல்களை உடைத்து ஒழிக்கின்றனர். இதில் அவர்கள் எந்தத் தயக்கமும்  காட்டவில்லை. தம் இனத்தை தாமே அழிக்கும் இந்த புண்ணிய கருமத்தைச் செய்து வரும் அந்த புண்ணியவான்கள், இதற்குத் தரும் பெயர் தான் ‘ஜிஹாத்’. இஸ்லாத்துடன் சம்பந்தமே இல்லாத தங்களின் பயங்ரவாத செயலுக்கு இப்படி ‘ஜிஹாத்’ என்று பெயர் வைத்துக் கொண்ட அவர்கள் உண்மையான ஜிஹாதையே  கொச்சைப்படுத்தி விட்டனர்.

       இன்னொரு புறம் எங்கு பார்த்தாலும் இஸ்லாமிய சமூகம் தோழ்வியையும் அவமானத்தை யுமே எதிர் நோக்கி வருகிறது. இந்த இழி நிலைக்குக் காரணம் வேறு யாரும் அல்ல. நாமேதான் என்பதை 1400 வருடங்களுக்கு முன்னரே,  தன் திரு மறையில் அல்லாஹ் சொல்லி விட்டான்.

     “நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்படுங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாராயின், நீங்கள் தோல்வி அடைவீர்கள். உங்களின் சக்தியும் போய்விடும்.” (08:46)

    எனவே இஸ்லாமிய சமூகத்தின் தோல்விக்கும் இழிவுக்கும் காரணம் அவர்களின் உட்பூசலும், பிளவும், ஒற்றுமையின்மையும்தான் என்பது இத்திரு வசனத்தில் இருந்து தெளிவாகிறது. ஆகையால் முஸ்லிம் சமூகம் தங்களின் கண்ணியத்தை மீண்டும் பெற்று தலை நிமிர்ந்து இருக்க வேண்டுமாயின், அவர்கள் இஸ்லாமிய ஷரீஆவின்  வழியின் பால் திரும்புவதும், தங்களின் சொந்த விருப்பு வெறுப்புக்களை மறந்து அல்லாஹ் கூறும் ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்வதும் அவசியம். இதனை வழியுறுத்தியும் தெளிவு படுத்தியும் உலக பிரசித்தி பெற்ற மாமேதை  ‘அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ்’ அவர்கள்,

الشريعة الإسلامية ومحاسنها و ضرورة البشر إليها  என்ற தலைப்பில் பிரசங்கம் ஒன்று நிகழ்த்தினார்கள். அதனையே அடியேன் "இஸ்லாமிய ஷரீஆவும் அதன் அநுகூலங்களும், அதன் பால் மனித இனத்தின் தேவையும்”  என்ற தழைப்பில் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்.  இதன் மூலம் அடியேனும் இதனை வாசிக்கும் வாசகர்களும் பயன்  பெற அல்லாஹ் அருள் புரிவானாக.

    இதன் மூல ஆசிரியர்  அப்துல் அஸீஸ் பின் பாஸ் அவர்கள் ஸஊதி அரேபியாவின் ரியாத் நகரில் 1910ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி பிறந்தார். அவர்களின் தந்தை அப்துல்லாஹ் என்பவராவார்.  பாஸ் கிளையைச் சேர்ந்த அவர், பிறக்கும் போது குருடராக பிறக்கவில்லை. அப்போது அவரின் பார்வை நன்றாகவே இருந்தன.  1927ம் ஆண்டு அவர் கண் வியாதிக்கு இலக்கானார். பின்னர் 1931ம் ஆண்டு அவரது 20வது வயதில்  அன்னாரின் பார்வை மேலும் மோசம் அடைந்தது, அதனால் அவரின் இரண்டு கண்களும்  முற்றாகப் பார்வையை இழந்தன.

    அவர் சிறுவராக இருக்கும் போதே அவரின் தந்தை வபாத்தாகி விட்டபடியால்  தாயின் பராமரிப்பிலேயே அவர் வளர்ந்து வந்தார். அவர் தனது பருவ வயதை அடையு முன்னரே அல் குர்ஆனை மனனமிட்டார். பின்னர் ரியாத் நகரில் அப்போதிருந்த   சில அறிஞர்களிடம் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார். வியாபார  குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்த அவரும் ஒரு வியாபாரியாகத் திகழ வேண்டுமென அவரின் குடும்பத்தினர் விரும்பிய போதிலும், அவர்  ஆய்வுத் துரையையும், கற்பித்தலையுமே வெகுவாக விரும்பினார். பின்னர் ஷரீஆ துறையிலும், மொழியிலும் தேர்ச்சி பெற்ற அவர், 1931ம் ஆண்டு நீதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். எனினும் அவர் ஆய்வுத் துரையிலும் கற்பித்தலிலும் தீவிர ஆர்வம் காட்டிவந்தார். இதன் பயனாக அந்த மேதை எழுதிய கிரந்தங்களும், நூல்களும் ஏராளம்.

       மேலும் 1992ம் ஆண்டு தன்னுடைய வபாத் வரையில் ஸஊதி அரேபியாவின் பொது முப்தியாக கடமையாற்றி வந்தார். ஷெய்க் அவர்கள் பொதுவாக தன்னுடைய நோய்கள் பற்றி யாரிடமும் முறையிட மாட்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு போதும் நீரிழிவு நோயுக்கோ, இரத்த அழுத்தத்திற்கோ  இலக்கான தில்லை.

     ஒரு தினம், வியாழக்கிழமை பின்னேரம் இஷாத் தொழுகைக்குப் பின்னர் மூச்சுத்திணரலுக்கு இலக்கான அவர் மன்னர் பைஸல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அன்று ஹிஜ்ரீ 1420  முஹர்ரம் மாதம் பிறை 28 வெள்ளிக்கிழமை  அதிகாலை மூன்று மணியளவில்  மாரடைப்பினால் அங்கு  அவர் காலமானார்.

انا لله وانا اليه راجعون  மக்கா  முகர்ரமா மஸ்ஜித் அல்ஹராமில்,  ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஜனாஸாத் தொழுகை நடாத்தப்பட்டது. பின்னர் அல் ‘அத்ல்’ மையவாடியில் அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்டார்.  ஜனாஸாத் தொழுகையில் வரலாறு காணாத பெரும் கூட்டத்தினர் கலந்து கொண்டனர். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து அவருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ்ஸை நஸீபாக்குவானாக. மேலும் அன்னாரின் இந்த பிரசங்கத்தை  மொழிபெயர்த்த அடியேனுக்கும், அதனை வெளியிட உதவிய சகலருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

மொழி பெயர்த்தோன்

திக்குவல்லை இமாம் (ரஷாதீ_பெங்களூர்)

10/05/2015

 ******************************

 “இஸ்லாமிய ஷரீஆவும் அதன் அனுகூலங்களும் அதன்பால் மனித குலத்தின் தேவையும்”

புகழ்   யாவும்  அல்லாஹ்வுக்கே  சொந்தம்.  இறுதித்  தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் மீதும் அல்லாஹ் வின் கருணையும் சாந்தியும் உண்டாவதாக! உண்மையை எடுத்துக் கூறவும், பிரசங்கத்தில் பொதிந்துள்ள அனுகூலங்களையும், பயன்களையும் தெளிவுபடுத்தவும் அது பற்றி சற்று விளக்கமாகப் பேசவும் அறிவு சார் சொற்பொழிவுகள் நல்லதோர் ஊடகமாகும். எனவே எனது இந்த சொற்பொழிவு.

الشريعة الإسلامية ومحاسنها وضرورة البشر إليها

இஸ்லாமிய ஷரீஆவும் அதன் அனுகூலங்களும் அதன்பால் மனிதனின் அவசியமும்” என்ற தலைப்பைத் தாங்கி வருகிறது. இதன் முக்கியமோ, ஒழிவு மறைவு இல்லாதது. மேலும் இஸ்லாமிய ஷரீஆ என்றால் யாது? அதன் மூலம் கிடைக்கும் அனுகூலங்களும், பயன்களும் என்ன? மனிதனின் அதன் மீதான அவசியம் யாது? என்ற விடயங்கள் குறித்து ஆய்வு செய்வதும் அது பற்றி மக்களுக்குத் தெளிவு படுத்துவதும் மிகவும் அவசியமான தோர் விடயமாகும். எனவேதான் இதனையெல்லாம் கருத்திற் கொண்டு இந்தத் தலையங்கத்தினை நான் தெரிவு செய்துள்ளேன். எனது இந்த பிரசங்கமானது இரண்டு பகுதிகளைக் கொண்டது என்பதை எனது சோதரர்கள் புரிந்து கொள்வார்கள்.

          ஒன்று இஸ்லாமிய ஷரீஆவையும் அதன் அநுகூலங்களையும் பற்றியது. இரண்டாவது அதன்பால் மனிதனின் தேவை என்ன என்பதைப் பற்றியது. இன்ஷா அல்லாஹ் இவ்விரு பகுதிகளைய பற்றியும் நான் பேசவுள்ளேன்.

 முதலாவது பகுதி:_

      இதில் இஸ்லாமிய ஷரீஆவுடனும், அதன் மூலம் கிடைக்கும் பயன்களுடனும் சம்பந்தப்பட்ட விடயங்கள் அடங்குகின்றன.

     நூஹ் (அலை) முதல் முஹம்மத் (ஸல்) வரையிலான சகல ரஸுல்மார்களுக்கும் ‘தீனுல் இஸ்லாம்’ என்ற மார்க்கத்தையே அல்லாஹ் வழங்கினான். அவர்கள் யாவரும் அதனையே பிரச்சாரம் செய்தும் வந்தனர். இதனைப் பொதுவாக முஸ்லிம்களும் மற்றும் கடந்த கால சமாச்சாரங்களை ஓரளவேனும் அறிந்து கொண்டவர்களும் அறிவார்கள். நமது பிதா ஆதம் (அலை) அவர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த மக்களும் பல நூற்றாண்டு காலமாக இஸ்லாமிய மார்க்கத்தின் பிரகாரமே வாழ்ந்து வந்தனர். எனினும் நூஹ் (அலை) அவர்களின் காலத்திலேயே ‘ஷிர்க் - இணை வைத்தல் தலை தூக்க ஆரம்பித்தது. 

முதலில் தூய இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்ந்து வந்த அவர்கள் காலப் போக்கில் வாத், ஸுவாஃ, யகூஸ், யஊக், நஸ்ரு என்ற நல்லடியார்களை நினைவு கூர்ந்து அவர்களை வணங்க ஆரம்பித்தனர். இவ்வாறு அவர்களின் மத்தியில் ‘ஷிர்க்’ எனும் இணை வைத்தல் பரவியது என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அந்த சமுதாயத்தினருக்கு வழிகாட்டும் முகமாக நூஹ் (அலை) அவர்களை தனது தூதராக அல்லாஹ் அனுப்பினான். இதன் பிரகாரம் அவர் இந்த உலகுக்கு அனுப்பப்பட்ட முதலாவது இறைத் தூதராக விளங்குகிறார். இதனை ஸஹீஹான ஹதீஸ்கள் உறுதி செய்கின்றன. மேலும் முதல் நபி தொடக்கம் இறுதி நபி வரையிலான சகல நபிமார்களுக்கும் இஸ்லாம் என்ற மார்க்கத்தையே அல்லாஹ் வழங்கினான் என்பதை பின்வரும் இறை வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

إنَّ الدِّيْنَ عِنْدَ اللهِ الإسلام   (ال عمران:19)

   “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப் பட்ட) மார்க்கம் இஸ்லாம் தான்.” (3:19)

      இந்த வசனத்தின் மூலம், தான் அங்கீகரித்த மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். மேலும்,

وَمَنْ يَبْتَغ غَيْرَ الاسلام دِيْنًا فَلَوْ يُقْبَلُ مِنْهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الخَاسِرِيْنَ. (ال عمران:85)  

   “இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவனிடமிருந்து அது அங்கீதரிக்கப்பட்ட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார்.” (3:85)

     இஸ்லாம் என்ற வழி நீங்கலாக ஏனைய வழிகள் யாவும் அடைக்கப்பட்டுள்ளன. எனவே இஸ்லாம் மார்க்கம் என்ற வழி மூலம் வந்ததையே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். ஏனைய வழிகளினூடாக வந்த எதனையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை இத்திரு வசனம் மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மேலும்,

اليَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِيْ وَرَضِيْتُ لَكُمُ الاسْلاَمَ دِيْنًا (المائدة:3) 

“இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டேன்.” (5:3)

       அல்லாஹ் தன் மார்க்கத்தையும், தன் அருளையும் இந்த சமுதாயத்தினருக்கு பூரணப்படுத்திக் கொடுத்தது மாத்திரமன்றி இஸ்லாம் என்ற மார்க்கம் ஒன்றையே தான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்த வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான். மேலும் இஸ்லாம் என்ற மார்க்கமே சகல நபிமார்களினதும் மார்க்கமாக இருந்தது. அவ்வாறே முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் அன்னாரின் சமுதாயத்தினரதும் மார்க்கம் இஸ்லாம் தான் என்பதையும் இத்திரு வசனம் தெளிவுபடுத்துகிறது. மேலும்,

شَرَعَ لَكُمْ مِنَ الدِّيْنِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي اَوْحَيْنَا اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ اِبْرَاهِيْمَ وَمُوسَى وَعِيْسَى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَلاَ تَتَفَرَّقُوا فِيْهِ. كَبُر عَلَى المُشْرِكِيْنَ مَا تَدْعُوهُمْ اِلَيْهِ اللهُ يَجْتَبِيْ اِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِيْ اِلَيْهِ مَنْ يُنِيْبُ   (الشورى:33)

  “நூஹ்வுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையும், மேலும் மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள். அதில் பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்று வஹியின் மூலம் உங்களுக்கு அறிவித்ததையும் மற்றும் எதனை இப்ராஹீம், மூஸா, ஈஸா என்போருக்கு அவன் உபதேசித்தானோ அதனையுமே உங்களுக்கு அவன் மார்க்கமாக்கி யிருக்கிறான். ஆகவே எதன் பக்கம் முஷ்ரிக்குகளை- இணை வைப்பவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அது அவர்களுக்கு பெரும் பளுவாக தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். மேலும் அவனை நோக்கி வருபவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்.” (42:13)

      இந்த வசனத்தின் மூலம் நூஹ்வுக்கு எதனை அல்லாஹ் உபதேசித்தானோ அதுவும், முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதனை வஹியின் மூலம் அறிவித்தானோ, அதுவும் தான் இந்த உம்மத்தினருக் குரிய மார்க்கமாகும் என்பதை அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான்.

        எனவே மார்க்க விடயத்தில் பிரிவினையை ஏற்படுத்தாமல் இஸ்லாமிய மார்க்கத்தை நிலை நிறுத்தி அதில் இஸ்திரமாக இருக்கும் படியாக நூஹ்வுக்கு அல்லாஹ் உபதேசம் செய்தான். ஆகவே முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்தினருக்கும் அதுவே மார்க்கமாக ஆக்கப்பட்டது. ஆகையால் அவர்களும் இந்த விடயத்தில் பிரிவினைகளை ஏற்படுத்தாமல் அந்த விடயத்தில் இஸ்திரமாக இருக்க வேண்டுமென முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹியின் மூலம் அறிவித்துள்ளான் என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகின்றது. இதனை பின்வரும் வசனங்கள் மேலும் தெளிவுபடுத்துகின்றன.

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللهِ جَمِيْعًا وَلاَ تَفَرَّقُوا (ال عمران:103) 

  “மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள்.” (3:109)

وَلاَ تَكُونُوا كَالَّذِيْنَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمْ البَيِّنَاتُ (ال عمران:105)

       “எவர்கள் தங்களிடம் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். (3:105)

          முந்திய நபிமார்களுக்கு எதனை அல்லாஹ் மார்க்கமாக்கினானோ அதனையே  நமக்கும் மார்க்கமாக்கியுள்ளான்  என்பதை  இந்த வசனங்களின் மூலம் அறிவுறுத்தும் அல்லாஹ் அதனை  மேலும் தெளிவு படுத்துகிறான்.

شَرَعَ لَكُمْ مِنَ الدِّيْنِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالذِي اَوْحَيْنَا اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ اِبْرَاهِيْمَ وَمُوسَى وَعِيْسَى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَلاَ تَتَفَرَّقُوا فِيْهِ. (الشورى:13)

        “நூஹ்வுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையும், மேலும் மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள். அதில் பிரிவினை செய்து கொள்ளாதீர்கள். என்று வஹியின் மூலம் உங்களுக்கு அறிவித்ததையும் மற்றும் எதனை இப்ராஹீம், மூஸா, ஈஸா என்போருக்கு அவன் உபதேசித்தானோ அதனையும் உங்களுக்கு அவன் மார்க்கமாக்கி இருக்கிறான்.” (42:13)

 وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ اِبْرَاهِيْمَ اِلاَّ مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْتَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإنَّهُ فِي الآخِرَةِ لَمِنِ الصَالِحِيْنَ. (البقرة:130)

                 தன்னைத் தானே மூடனாக்கிக் கொண்ட வனைத் தவிர இப்ராஹீமுடைய மார்க்கத்தை புறக்கணித்தவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இந்த உலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார்.” (2:130)

اِذْ قَالَ لَهُ رَبُّهُ اَسْلِمْ. قَالَ اَسْلَمْتُ لِرَبِّ العَالَمِيْنَ (البقرة:131) 

      “இப்ராஹீமை அவருடைய இறைவன் நீ வழிபடு, எனக் கூறிய சமயத்தில் அவர் அகிலத்தாரின் இறைவனுக்கு நான் வழிப்பட்டேன் எனக் கூறினார்.” (2:131)

وَوَصَّى بِها اِبْرَاهِيْمُ بَنِيْهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إنَّ اللهَ اصْطَفَى لَكُمُ الدِّيْنَ فَلاَ تَمُوتُنَّ اِلاَّ وَاَنْتُمْ مُسْلِمُونَ. (البقرة:132) 

        “அவ்வாறே இப்ராஹீமும் தன்னுடைய சந்ததிகளுக்கு உபதேசித்தார். யஃகூபும், என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இம்மார்க்கத்தையே தேர்ந்தெடுத்தி ருக்கின்றான். ஆதலால் உண்மையான முஸ்லிம்களாக அன்றி இறந்து விட வேண்டாம்.” என்று உபதேசித்தார். (2:132)

      இத்திரு வசனத்தின் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்களும், யஃகூப் (அலை) அவர்களும் தமது பிள்ளை களுக்கும், பரம்பரையினருக்கும் இஸ்லாம் மார்க்கத்தையே போதித்து வந்தனர், என்பதை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். மேலும் இதுவே நூஹ், மூஸா (அலை) ஆகியோரினதும் மற்றும் பல்கீஸ் மகா ராணியினதும் நிலைப்பாடாக இருந்தது. இதனை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. முதலில் நூஹ் (அலை) அவர்களின் வாக்குமூலத்தைக் கவனிப்போம்.

وَأُمِرْتُ اَنْ اَكُونَ مِنَ المُسْلِمِيْنَ. (يونس:72) 

   “நான் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டு நடக்கும் படியாக கட்டளையிடப்பட்டுள்ளேன்.” (10:72)

        அடுத்து மூஸா (அலை) அவர்களின் கூற்றைக் கவனிப்போம்.

يَا قَوْمِ اِنْ كُنْتُمْ آمَنْتُمْ بِاللهِ فَعَلَيْهِ تَوَكَّلُوا اِنْ كُنْتُمْ مُسْلِمِيْنَ. (يونس:84)

   “என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகின்றவர்களாகவும் இருந்தால் அவனையே நம்பி விடுங்கள்.” என்று மூஸா (அலை) அவர்கள் கூறினார். (10:84)

     இனி பல்கீஸ் ராணியின் பிரகடனத்தைப் பார்ப்போம்.

قَالَتْ رَبِّ إنِّي ظَلَمْتُ نَفْسِي وَاَسْلَمْتُ مَعَ سُلَيْمَانَ للهِ رَبِّ العَالَمِيْنَ. (النمل:44)

       “என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். (இப்போது) உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப் படுகிறேன்.” என்று (பலகீஸ்) கூறினார். (27:44)

     எனவே சகல நபிமார்களினதும், ரஸுல்மார்களினதும் மார்க்கம் உண்மையான இந்த மார்க்கம்தான் என்பதும் இதனைத் தவிர்ந்த வேறு எந்த மார்க்கத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதும், ஆகையால் இந்த மார்க்கத்தை நிலை நிறுத்தும் படி தன் தூதருக்கு அவன் கட்டளையிட்டான் என்பதும் மேற்படி வசனங்களின் மூலம் தெளிவாகிறது. எனவே அல்லாஹ் தன் ஆட்சி நிர்வாகத்திலும் தொழிற்பாடுகளிலும் தனித்துவமான வன் என ஏகத்துவப்படுத்துவது அவசியம். அவ்வாறே அவனை வழிப்படும் விடயத்திலும் அவனுடைய திருநாமம், பண்புகள் விடயத்திலும் அவன் ஏகன், அதிலும் அவனுக்கு இணை எதுவுமில்லை என்று ஏற்றுக் கொள்வதும் அவசியம். மேலும் அவனின் ஷரீஆ சட்டங்களுக்கு அடிபணிவதும் அவன் காட்டிய வழியின் பக்கம் மக்களை அழைப்பதும் அவசியம். அப்போதெல்லாம் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் அதே சமயம், பிளவு படாமல் ஒற்றுமையுடன் செயலாற்றுவதும் அவசியம். இதுவே இஸ்லாமிய மார்க்கத்தின் அடப்படையும், யதார்த்தமு மாகும். நபிமார்களும் அவர்களின்  சமூகங்களும் பின்பற்ற வேண்டுமென அல்லாஹ்வால் உத்தரவிடப் பட்ட இந்த மார்க்கத்தையே நாமும் நிலை நிறுத்த வேண்டுமென எமக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான். இதனை அல்லாஹ்வின் இந்த வசனம் உறுதிப் படுத்துகின்றது.

اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَلاَ تَفَرَّقُوا (الشورى:13)

       “தீனை-மார்க்கத்தை நிலை நிறுத்தி வாருங்கள். அதன் விடயத்தில் பிரிந்து விடாதீர்கள்.” (42:13)

       இஸ்லாமிய மார்க்கத்தை நிலை நிறுத்துதல் என்பதன் தாத்பரியமாவது, அதனை  ஏற்றுக் கொள்வதும், அதன் மீது இஸ்திரமாக இருப்தும் அதன் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வதும், மற்றும் அதனை பகிரங்கப்படுத்தி அதன் பால் அழைப்பு விடுப்பதுடன் அதன் விடயத்தில் பிளவு படாமல் சொல், செயல் சார்ந்த சகல நடவடிக்கைகளையும் ஒற்றுமையுடன் மேற்கொள்ள வேண்டு மென்பதே. இதன் மூலம்தான் முஸ்லிம் சமூகத்தின் வாக்கு ஒன்றுபட்ட ஒரு குரலாகவும் அவர்களின் அணி வலிமை மிக்கதாகவும் பரிணாமம் பெறும்.

     அல்லாஹ்வின் தூதர்கள் யாவரினதும் நடவடிக்கைகள் இப்படித்தான் இருந்தன. ஏனெனில் மார்க்க விவகாரத்தில் பிளவு படக்கூடாதென்பது அல்லாஹ்வின் உத்தரவு . எனவே அவர்கள்  ஒற்றுமையுடன் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். எனவே முஸ்ஸிம் சமூகம் மார்க்க விடயத்தில்  பிளவுபடாமல் ஒற்றுமையுடன் செயலாற்றி வந்தால்தான், அவர்களின் பலம் அதிகரிக்கும். மேலும்  எதிரிகளிடமிருந்து தங்களின் உரிமையையும், நீதியையும் பெற்றுக் கொள்வதற்குரிய வழியும் பிறக்கும். இது நுண்ணறிவுள்ள எவரும் அறியாத விடயமல்ல. மேலும் மார்க்கத்தை நிலை நிறுத்தும் விடயத்தில் முஸ்லிம் சமூகம் ஐக்கியத்துடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் ஒருவருக் கொருவர் உபதேசம் செய்து, ஐக்கியமாக இருக்கின்ற சக வாழ்க்கை யினைக் காணும் எதிரிகளுக்கு, முஸ்லிம்களைப் பற்றியதோர் அச்ச உணர்வு உண்டாக்கும். எனவே இம்மையிலும் மறுமையிலும் எந்தவொரு சமூகமும் வெற்றியையும் கண்ணியத்தையும் அடைந்து கொள்வதற் குரிய இரகசியம் சத்தியத்தின் மீதான உண்மையான ஐக்கியமும் ஒத்துழைப்பும்தான் என்பதில் ஐயப்பட வேண்டியதில்லை.

          மேலும் இதன் மூலம் இஸ்லாமிய மார்கத்த்தில் பிரவேசிக்கும் மக்களின் தொகை அதிகரிக்கும். மேலும் மார்க்க விடயங்களையும், இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர் களையும் அவர்கள் கண்ணியப்படுத்துவார்கள். அத்துடன் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான மார்க்கம் ‘இஸ்லாம்’ மார்க்கம் தான் என்பதையும் அதுதான் சத்திய மார்க்கம் என்பதையும் புரிந்து கொள்வார்கள். மேலும் ஐக்கியத்துடன் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள்தான் பலம் வாய்ந்தவர்கள். எனவே அவர்கள் தங்களின் ஒற்றுமையின் பயனாக வெற்றிகளை ஈட்டக் கூடியவர்கள் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

    எனவே நூஹ், ஹூத், ஸாலிஹ் (அலை) ஆகியோரினதும் அவர்களைத் தொடர்ந்து வந்த சகல நபிமார்களினதும் அகீதாவும்,மார்க்கமும் இஸ்லாம் ஒன்று தான். மேலும் அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் ஈமான் கொள்வதுதான் இஸ்லாம் மார்க்கத்தின் அகீதா--- கோட்பாடாகும். எனவே எல்லா சமூகமும் தம்மிடம் அனுப்பட்ட ரஸுலை ஏற்றுக் கொள்வது தான், அவரவர்களுக்குரிய  இஸ்லாமிய மார்க்கமாகும். மேலும் அவர்களின் ஈமான் என்பது அவர்களின் நபிமார்தளின் தூதை ஏற்றுக் கொள்வதும் அல்லாஹ்வை ஏக இறைவன் என ஏற்றுக் கொள்வதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஷரீஆ சட்டங்களுக்கு அடிபணிவதுடன் அந்த விடயங்களில் ஒற்றுமையுடன் செயல்படுவதும்தான். பொதுவாக எல்லா நபிமார்களினதும் மார்க்கம் இஸ்லாமே என்ற போதிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஷரீஆ சட்டங்கள் வேறுபட்டவையாகும். இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

لِكُلْ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا. (المائدة:48

    “உங்களில் ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒவ்வொரு சட்டத்தையும் வழியையும் நாமே ஏற்படுத்தினோம்.” (5:48)

     ஒவ்வொரு சமூகத்தினதும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும், பொருப்புகளை ஏற்றுக் கொள்ளும் விடயத்தில் அவர்களின் நிலவரங்களும், நோக்கத்தை அடைவதிலுள்ள அவர்களின் மனப்பாங்குகளும் மிகவும் வித்தியாசமானவை. இவையே ஒவ்வொரு சமூகத்தினதும் ஷரீஆ-சட்டங்கள் வேறுபடக் காரணமாக அமைந்தன. எல்லா காலத்திலும், மக்களின் சூழ்நிலைகளையும், ஆற்றலையும் மற்றும் உண்மையை ஏற்றுக் கொள்ளும் அவர்களின் மனோ நிலைமையையும், சிந்தனையையும், ஆற்றலையும் அல்லாஹ்வையும், உண்மையையும் ஏற்றுக் கொள்ளும் அவர்களின் மனோ நிலையின் விஸ்தீரனத்தையும், அல்லாஹ் ஒருவனே அறிவான். அவ்வாறே அவர்களுக்குப் பொருத்தமான சட்டங்கள் எவை என்பதையும் அவன் ஒருவனே அறிவான். ஆகவே அதன் அடிப்படையிலேயே அவர்களுக்குப் பொருத்தமான ஷரீஆவை அவர்களின் நபிமார்களின் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். இவை யாவும் அவனின் சூக்சும புத்திக்கும், அறிவுக்கும், அவனின் தயாளத் தன்மைக்கும் ஏற்ற வகையிலேயே நடைபெற்றன. உதாரணமாக   நூஹ் (அலை) அவர்களின் தூதை,  அவர்களின் சமூகம் ஏற்றுக் கொள்வதில் இருந்த மனப்பாங்கும், மூஸா (அலை) அவர்களின் தூதை ஏற்றுக் கொள்வதில் அன்னாரின் சமூகத்திடமிருந்த மனப்பாங்கும் ஒன்றாக இருக்கவில்லை. இவ்வாறு மனித சமுதாயங்களின் கால நேரங்களிலும் மனப்பாங்குகளிலும் சிந்தனையிலும் மொழியிலும் பழக்க வழக்கங்களிலும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.

      எனவே தான் மனித குலத்திற்கு அல்லாஹ் தந்த அடிப்படை மார்க்கம் இஸ்லாம் ஒன்றே ஆயினும் அவனின் சூக்சும புத்தியின் பிரகாரம் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவன் வழங்கிய ஷரீஆ சட்டங்கள் பல தரப்பட்டவையாகவும் வித்தியாசமான வையாகவும் இருப்பதைக் காண முடிகின்றது. எவ்வாராயினும் எல்லா சமுதாயத்திற்கும் அல்லாஹ் வழங்கி அடிப்படைகள் பொதுவானவை.  அல்லாஹ் ஒருவனையே வணங்குதல் வேண்டும், அவனை ஏகத்துவப் படுத்துதல் வேண்டும், அவனின் மீதும், அவனின் மலக்குகள், ரஸூல்மார்கள் மீதும், மற்றும் வேதங்கள், இறுதி நாள், விதி என்பவற்றின் மீதும் ஈமான் கொள்ளல் வேணடும்,   மேலும் மார்க்கத்தினை நிலை நிறுத்துவதுடன், ஒற்றுமை யுடன்  ஷரீஆவின் சட்டங்களை அமுல்படுத்தி வருதல் வேண்டும், அவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படல் வேண்டும்,  என்பவையே அந்தப் பொதுவான அடிப்படை களாகும். இவை எல்லா நபிமார்களுக்கும் பொதுவானவை. அவர்கள் யாவரும் மக்களை அதன் பக்கமே அழைத்தனர். இவ்வாறு அல்லாஹ்வின் பால் அழைப்பு விடுத்த அவர்கள், அல்லாஹ்வை அடையும் வழியையும் மற்றும் தொழுகை, நோன்பு, மற்றுமுண்டான சகல  வழிபாடுகளையும், அல்லாஹ் ஒருவனக்கே என்ற தூய எண்ணத்துடன்  நிறைவேற்ற வேண்டுமெனவும்,  மக்களுக்குத் தெளிவு படுத்தினர்.  இதனை பின் வரும் வசனங்கள் தெளிவு படுத்து கின்றன.

 وَلَقَدْ بَعَثْنا فِي كُلِّ اُمَّةٍ رَّسُوْلاً اَنِ اعْبُدُاللَّه وَاجْتَنِبُوْا الطَّاغُوْتَ (النحل:36)

   “ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.” என்று அத்தூதர்கள் தங்களின் சமூகத்தினரிடம் கூறினார்கள். (16:36)

وَمَا اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُولٍ الَّا نُوحِي اِلَيْهِ اَنَّهُ لاَ اِلَهَ الَّا اَنَا فَاعْبُذُونِ (الأنبياء:25)

   “உங்களுக்கு முன்னர் நாம் தூதர்களுக்கெல்லாம் "நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவனில்லை என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹி அறிவிக்காமலுமில்லை. (21:25)

وَاِذْ اَخَذَ اللهُ مِيْثَاقَ النَّبِيِّيْنَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ اِصْرِىْ قَالُوا اَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشَّاهِدِيْنَ (ال عمران:81)

    நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்கு கொடுத்திருக் கின்றேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்.” (என்று கூறி) “இதனை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என்னுடைய இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் (அதனை) அங்கீகரித்துக் கொண்டோம்.” என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் “இதற்கு) நீங்கள் சாட்சியாய் இருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கின்றேன்.” என்று கூறினான். (3:81)

قُولُوا آمَنَّا بِاللهِ وَمَا أنْزِلَ اِلَيْنَا وَمَا أُنْزِلَ اِلَى اِبْرَاهِيْمَ وَاِسْمَاعِيْلَ وَاِسْحَاقَ وَيَعْقُوبَ وَالأسْبَاطِ وَمَا اُوْتِيَ مُوسَى وَعِيْسَى وَمَآ اُوْتِيَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لاَ نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمِينَ. (البقرة:136)

   “நீங்களும் கூறுங்கள். அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோர்களுக்கும் இவர்களுடைய சந்ததிகளுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டிருந்த வற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் நாம் பிரித்து விடமாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம்.” (2:136)

         தூதர்கள் யாவரும் இந்த ஒரே மார்க்கத்தையே கொண்டு வந்தனர் என்பது இவற்றிலிருந்து அறிய முடிகின்றது. எனவே இந்த விடயத்தில் நபிமார்களுக்கு மத்தியில் வித்தியாசம் காணாது, இதன் மீது விசுவாசம் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் நமது கடமையாகும். இதனை அல்லாஹ் இவ்வாறு மேலும் தெளிவுபடுத்துகிறான்.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ اِلَيْهِ مِنْ رَبِّهِ والمُؤمِنُونَ  كُلٌ آمَنَ بِاللهِ وَمَلاَئِكَتِهِ وَكُتَبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِنْ رُّسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ المَصِيْرُ(البقرة:)285                                                                                              

    “தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார். அவ்வாறே மற்ற முஃமின்களும் அல்லாஹ்வையும் அவனுடைய மலக்கு களையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர அவனுடைய தூதர்களில் எவரையும் நாங்கள் பிரித்து விடமாட்டோம் என்றும் நாங்கள் செவியுற்றோம். நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடமே தான் நாங்கள் சேர வேண்டியிருக்கிறது. (2:285)

     அடியார்களின் நிலைமைக்கும் சமூகங்களின் கால நேரங்களுக்கும் ஏற்ற வகையில் தன் சூக்சும புத்தியின் பிரகாரம் அல்லாஹ் நபிமார்களுக்கு வழங்கியப ஷரீஆ-சட்டங்கள் வித்தியாசமானவை யாகவும், பலதரப்பட்டவையா கவும் இருக்கின்றன. எனவேதான் ஒரு சமூகத்திற்கு கட்டாயம் என்று கூறப்பட்ட விடயம் இன்னொரு சமூகத்திற்குக் கட்டாய காரியமாக இருப்பதில்லை. அவ்வாறே ஒரு சமூகத்திற்கு ஹராம் எனக் கூறப்பட்ட விடயம் இன்னொரு சமூகத்திற்கு ஹராமானதாக இருப்ப தில்லை. இதுவெல்லாம் அல்லாஹ்வின் மேலான ஹிக்மா—சூக்சும புத்தியினதும், அறிவினதும், வல்லமையினதும் மற்றும் அவனின் பரிபூரண உபகாரத்தினதும் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

     இவ்வாறு தான் சில ஷரீஆ சட்டங்கள் கடுமையான வையாகவும், சிரமமானவையாகவும் இருக்கின்றன.

    சில சமயங்களில் சில சமூகத்தினரின் பாவ காரியங்களும், மற்றும் அல்லாஹ்வின் சட்டத்திற்கு எதிரான அவர்களின் துணிவும், அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை பொருட்படுத்தாத அவர்களின் மனோ பாவமும், அவர்களுக்குச் சட்டங்கள் கடுமையாக அமைய காரணமாக அமைகின்றன. இதனை அல்லாஹ்வின் இத்திரு வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.

فَبِظُلْمٍ مِنَ الَّذِيْنَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيْلِ اللهِ كَثِيْرًا  وَاَخْذِهِمُ الرِّبَوا وَقَدْ نُهُوا عَنْهُ وَاَكْلِهِمْ اَمْوَالَ النَّاسِ بِالبَاطِلِ وَاَعْتَدْنَا لِلْكَافِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَلِيْمًا (النساء:161,160 )                         

 யூதர்களின் அநியாயங்களின் காரணமாகவும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் பலரை அவர்கள் தடுத்துக் கொண்டிருந்ததன் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவைகளில் நல்லவைகளை நாம் அவர்களுக்கு விலக்கி விட்டோம்.(4:160)

     “அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும் அதனை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் அவர்களில் நிராகரிக்கப்பட்டவர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம். (4:161)

      யூதர்களுக்கு நல்லவைகளை அல்லாஹ் ஹராமாக்கியதன் காரணம் அவர்களின் மோசமான நடவடிக்கைகளே என்பதை இத்திரு வசனம் மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

     ஆனால் நமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதராகவும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டங்கள் மற்றெல்லா சட்டங்களை விடவும் பூரணமானதாகவும் இறுதியானதாகவும், மற்றும் கியாமம் வரையிலும் அதுவே சகல சமுதாயத்தின ருக்குமான சட்டமாகவும் இருக்கின்ற படியால் மனு ஜின்களின் பொதுத் தூதராகவுள்ள  முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கிய ஷரீஆ-சட்டங்கள் பூரணமாகவும், அடியார்களின் இம்மை மறுமையின் நலன்களுக்கு மிகவும் பொருத்தமானவை யாகவும் இருக்க வேண்டுமென்பதை  அல்லாஹ்வின் ஹிக்மா - சூக்சும புத்தி நாடியது. எனவே அதன் பிரகாரம் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அந்த ஷரீஆவை அல்லாஹ் வழங்கினான். மேலும் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களே என்பதை, அல்குர்ஆனும் மற்றும் متواتر  ஆன ஹதீஸ்கள் பலவும் வழியுறுத்துகின்றன.

مَا كَانَ مُحَمَّدٌ اَبَا اَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَّسُولَ اللهِ وَخَاتَمَ النَبِيِّيْنَ. (الأحزاب:40)                                                               

    “உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. எனினும் அவர் அல்லாஹ் வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு முத்திரை யாகவும் இருக்கிறார்.” (33:40)

       எனவே பாராட்டுக்குரிய அல்லாஹ்வின் அருளால் இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையென்பது யாவரும் ஏற்றுக் கொண்ட விடயமாகும். எனவே நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் யாருக்காவது நுபுவ்வத்-நபித்துவம் இருப்பதாக யாரேனும் வாதிடுவானால்,  அவன் அல்லாஹ்வின் வாக்கைப் பொய்ப்படுத்திய ஒரு காபிர், பொய்யன். ஆகையால் அந்தத் தவறுக்காக அவன் பாவமன்னிப்புக் கேட்பது அவசியம் இல்லையெனில் அல்லாஹ்வின் சட்டத்தை நிராகரித்த காபிர் என்ற அடிப்படையில், அவன் சிறைச்சேதம் செய்யப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவாகும்.

      எனவே அரேபியருக்கும் அரேபியல்லாதோ ருக்கும், வெள்ளை இனத்தவருக்கும் கறுப்பு இனத்தவருக்கும், மற்றும் மனித சமூகத்திற்கும் ஜின் சமூகத்திற்கும் என சகலருக்குமான ஒரு பொது நபியாக முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். ஆகையால் அன்னல் நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டது முதல் இறுதி நாள் வரையிலும் சகல இனத்தவருக்கும் அவர்களே ரஸுலாவார்கள். இதனை அல்லாஹ்வின் வாக்கு உறுதிப்படுத்துகிறது.

    قُلْ يَااَيُّهَا النَّاسُ اِنِّي رَسُولُ اللهِ اِلَيْكُمْ جَمِيْعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاواتِ وَالأرْضِ لاَ اِلَهَ اِلاَّ هُوَ يُحْيِي وَيُمِيْتُ فَآمِنُوا بِاللهِ وَرَسُولِهِ النَّبِيِّ الأُمِّي الَّذِي يُؤْمِنُ بِاللهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ. (الأعراف:158) 

       நீங்கள் கூறுங்கள், “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பபட்ட ஒரு தூதர். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே.  அவனைத் தவிர இறைவன் வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கும் படி செய்கிறான். ஆகவே அந்த அல்லாஹ்வையும் எழுதப்படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நம்பிக்கை கொள்வீர் களாக! அவரும், அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே நீங்கள் நேரான வழியை அடைய அவரையே பினபற்றுங்கள்.” (7:158)

     ரஸுல் (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல், அவர்களின் மீது விசுவாசம் கொள்ளுதல் எனும் விடயத்துடன், நேர்வழியை அல்லாஹ் தொடர்பு படுத்தியுள்ளான். எனவே ரஸுல் அவர்களின் வழியைப் பின்பற்றாது போனால் நேர்வழியையும் ஈமானையும் அடைய வேறு எந்த வழியும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

  قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ (ال عمران:31)

    நீங்கள் கூறுங்கள், “நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான்.” (3:31)

    ரஸுல் (ஸல்) அவர்களைப் பின்பற்ற வில்லையெனில் அல்லாஹ்வின் நேசத்தையும் அவனின் மன்னிப்பையும் பெற முடியாது, என்பதை மக்களுக்கு அறிவித்து விடுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளான். மேலும் நபியவர்கள் சகல மக்களினதும் தூதர் என்பதை பின்வரும் வசனங்கள் வழியுறுத்துகின்றன.

وَماَ اَرْسَلْناكَ اِلاَّ كَافَّةً لِّلنَّاسِ بَشِيرًّا وَّنَذِيرًا (السبأ:28)

           “நாம் உங்களை எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூருபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம்.(34:28)

تَبارَكَ الَذِي نَزَلَ الْفُرْقانَ عَلى عَبْدِهِ لِيَكُونَ لِلْعالَمِينَ نَذِيْرًا (الفرقان:01)

        விபரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது. (25:01)

    இவ்வசனத்திலுல்ல 'العالمون' என்ற  சொல்லின் பொருள் உலக மக்கள் என்பதாகும்.  இதன்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் யாவரினதும் நபி என்பதையும், அன்னலாருக்கு அருளப்பட்டிருக்கும் புர்கான் வேதம் உலக மக்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்கிறது என்பதையும் இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் பிரகடனப் படுத்தியுள்ளான்.

       “ஏனைய நபிமார்கள் யாவரும் குறிப்பாகத் தமது சமூகத்தினருக்கென்று அனுப்பப் பட்டனர். நானோ சகல சமூகத்தினருக்குமாகப் பொதுவாக அனுப்பப் பட்டுள்ளேன்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று ஜாபிர் (ரழி) அறிவித்துள்ளார்கள்.(புகாரி,முஸ்லிம்)

   மேலும் “எவன் வசம் என் ஆத்மா இருக்கின்றதோ அவனின் மீது ஆணையாக இந்த சமுதாயத்தைச் சேர்ந்த யூதனும், கிரிஸ்தவனும், நான் சொல்வதைக் கேட்காமலும், எனக்குத் தரப்பட்டிருப்பதை விசுவாசம் கொள்ளாமலும் இறந்து விடுனாகில் அவன் ஒரு நரகவாதிதான்” என்று நபியவர்கள் கூறினாரகள், என அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.  (ஸஹீஹ் முஸ்லிம்)

        எனவே முஹம்மது (ஸல்) அவர்கள் மனு, ஜின் எனும் இரண்டு சமூகத்தினதும் நபி என்பது உறுதி செய்ப்பட்டு விட்டது. எனவே அன்னாரின் அழைப்பை யூதன், கிரிஸ்தவன், அரபீ, அஜமீ என்ற பாகுபாடின்றி சகல மனுக் குலமும் மற்றும் ஜின் இனமும் ஏற்றுக் கொள்வது கடமை. அதனால் அவனுக்கு மறு உலகில் நற்பாக்கியமும், பாவ மன்னிப்பும் கிடைக்கும். எவன் அவரின் வழியை விட்டும் விலகிக் கொண்டானோ, அவனுக்குத் தோழ்வியும், கவலையும், நரகமும்தான் கிடைக்கும். இதனையே அல்லாஹ்வின் வாக்குகள் தெளிவு படுத்துகின்றன.

تِلْكَ حُدُودُ الَّلهِ وَمَنْ يُطِعِ الَّله وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتِ تَجْرِي مِنْ تَحتِها الأنْهارُ خَالِدِينَ فِيْها وَذَلِكَ الْفَوزُ الْعَظِيْمُ(النساء:13)  

    இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவனபதிகளில் சேர்க்கின்றான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். அதிலேலயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.(04:13)       

وَمَنْ يَّعْصِ الَّلهَّ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْها وَلَهُ عذابٌ مُهِيْنٌ (النساء:14) 

எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து அவன் ஏற்படுத்திய வரம்புகளைக் கடக்கின்றானோ, அவனை நரகத்தில் புகுத்தி விடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கி  விடுவான். இழிவு படுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு.(04:14)

وَمَا ءَاتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهاكُمْ عَنْهُ فَانْتَهَوا وَاتَّقُوا اللَّهَ اِنَّ اللَّهَ شَدِيْدُ الْعِقابِ(الحشر:07)                                             

     “நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் அல்லாஹ் வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன்.”(59:07)

    மேலும்  “என் உம்மத்தைச் சேர்ந்த சகலரும் சுவர்க்கம் புகுவர்.  ஆனால் அதனுள் செல்ல மறுத்தவனைத் தவிர,” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதும், “அல்லாஹ்வின் தூதரே! சுவர்க்கம் செல்ல மறுப்பவர்களும் இருக்கின்றார் களா?” என்று நபித் தோழர்கள் வினவிய போது, “எவன் எனக்கு வழிப்பட்டானோ அவன் சுவர்க்கம் செல்வான். எவன் எனக்கு மாறு செய்தானோ அவனே சுவர்க்கம் செல்ல மறுத்தவன்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

     முஹம்மது (ஸல்) அவர்களின் தூது எல்லோருக்கும் பொதுவானது, மற்றும் அன்னாரே இறுதி நபி என்பதை இந்நபி மொழி தெளிவு படுத்துகின்றது. எனவே நபியவர்களின் ஷரீஆவே மற்றெல்லா ஷரீஆக்களையும் விட பரிபூரணமானது, அன்னாரின் உம்மத்தினரே மற்றெல்லா சமூகங்களை விடவும் மேலான சமூகம் என்பது தெளிவு. இதனை அல்லாஹ்வின் வாக்குகள் தெளிவு படுத்துகின்றன:

كُنْتُمْ خَيْرَ اُمًّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ (آل عمران(:110

    “நீங்கள்தான் மனிதர்களில் தோன்றிய வகுப்பார் களிலெல்லாம் மிக்க மேன்மையான வர்கள்.”(04:110)

اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيْتُ لَكُمُ الإِسْلاَمَ دِيْنًاة (المائدة:03)

   “இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாகாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டேன். உங்களுடைய இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தேன்.”(05:03)

      இந்த வசனத்தின் மூலம் ஒருமுக்கியமான செய்தியை அல்லாஹ் முன் வைக்கின்றான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கம் மற்றெல்லா மார்க்கங்களை விடவும் சம்பூரணமானது, என்பதே அந்த செய்தியாகும். அதன் பொருள் ஏனைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கம் யாவும் அரைகுறையானவை என்பதல்ல. மாறாக  அவர்களின் மார்க்கம் அக்கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ற வகையில் பரிபூரணமாக இருந்த போதிலும் அவை எக்காலத்திற்கும் பொருத்தமாக இல்லை என்பதே இதன் பொருள்.

      ஆனால் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய புர்கான் வேதமோ, எல்லா விதத்திலும் பூர்த்தியானது, எல்லா காலத்திற்கும் பொருத்தமானது. மேலும் இதுதான் இறுதி நாள் வரையில் ஏற்புடைய மார்க்கம், என்ற பாரிய செய்தியை இத்திரு வசனத்தின் மூலம் அல்லாஹ் பிரகடனப்படுத்தியுள்ளான்.

      இச்சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் ஒருசில அநுகூலங்களையும் அதன் மகத்தான சில இரகசிகளையும் எடுத்துக் கூற விரும்புகிறேன். எனினும் அவைகள் பற்றி முழுமையாக ஆய்வு செய்வதென்பது இயலாத காரியம். இதனை சொற்ப ஞானமுடையவரும் அறிவர். ஏனெனில் இந்த வேதமானது முக்காலத்தையும் பற்றி முற்றிலும் அறிந்த சர்வ ஞானம் பொருந்திய அல்லாஹ் தந்த மார்க்கமாகும். எனவே அதன் முழு சிறப்புக்களையும் அவனன்றி வேறு எவர்தான் அறியக் கூடும்? எனினும் அதன் ஒருசில அநுகூலங்களையும் சிறப்புக்களையும் குறிப்பிடுவது கல்வியைத் தேடும் ஒருவனுக்குப் போதுமானதாகும். இனி ஷரீஆவைப் பற்றி அல்லாஹ் சொல்வதைக் கவணியுங்கள்.

ثُمَّ جَعَلْناكَ علَى شَرِيْعَةٍ مِنَ الأَمْرِ فَاتَّبِعْها وَلا تَتَّعْ أهْوَاءَ الَّذِيْنَ لايَعْلَمُوْنَ (الجاثية:18)

   "மார்க்கத்தின் ஒரு நேரான வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக. கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பத்தை நீங்கள் பின்பற்றாதீர்கள்.(45:18)

إنَّهُمْ لَنْ يَغْنَوْا عَنْكَ مِنَ الَّلهِ شَيْئًّا .وَإنَّ الظًّالِمِيْنَ بَعْضُهُمْ أوْلِياءُ بَعْضٍ.وَالَّلهُ وَلِيُّ الْمُتَّقِيْنَ (الجاثية:19)

                 நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்கு யாதொரு உதவியும் செய்து விட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்களுள் சிலர், சிலருக்கு நண்பர்களாவர். அல்லாஹ்வோ, அச்சமுடைய பரிசுத்தவான்களுக்கு நண்பன்.(45:19)

      ரஸூல் (ஸல்) அவர்களை ஒரு தெளிவான வழியில் ஆக்கி வைத்துல்லதாகவும், அந்த வழியையே அவர்களும், நாமும் ஏற்று நடக்க வேண்டும் என்றும், அறியாத மக்களின் விருப்பத்தின் படி நாங்கள் செயலாற்றக் கூடாதென்றும்  இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் நமக்கு கட்டளை யிடுகின்றான். அறியாத மக்கள் என்றால், அவர்கள் யார்? வேதம் கூறும் சட்டங்களுக்கு மாறு செய்கின்ற அனைவருமே  அறியாதவர்கள். உண்மையைப் புரிந்து கொள்ளாதவர்களும் அவர்களேதான்.  மேலும் இந்த வசனத்தின் மூலம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் நேரடியாக உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், இது சகல மக்களுக்குமான பொதுக் கட்டளையாகும். ஏனெனில் அல்லாஹ்வின் கட்டளை எதுவும் ரஸூல் அவர்களுக்கென்று  பிரத்தியேகமாக எடுத்துக் காட்டப்படாத வரை அது சமூக மக்கள் அனைவருக்குமுரிய பொது விதியாகவே கொள்ளப்டும். இதன் படி இந்த வசனத்தின் மூலம் நபியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கட்டளை நம் அனைவருக்கும் பொதுவானதாகும்.

      மேலும் அனைத்தின் மீதும் வல்லமை யுள்ளவன் அல்லாஹ் ஒருவன்தான். ஆகையால் நபியவர்களுக்கு அவன் தர விரம்பும் எந்தவொரு வெற்றியையும், உதவியையும் யாராலும் தடை செய்ய முடியாது என்பதையும் மேன்மை மிகு அல்லாஹ் இங்கு தெளிவு படுத்தியுள்ளான்.

      நபியவர்களைப் பாதுகாக்கும் பொருப்பு அல்லாஹ் வுடையது.  எனவே மக்களிடம் என்னதான் பணமும், பலமும், செல்வாக்கும் இருந்த போதிலும் அதனைக் கொண்டு நபியவர்களுக்கு எந்த வொரு தீங்கையும் அவர்கள் செய்து விட முடியாது. எனவே நபியவர்கள் அந்த மக்களின் பக்கம் சாரவோ, அவர்களின் விருப்பத்திற்கு இனங்கிப் போகவோ வேண்டிய தேவையில்லை என்பதை தனது  நபிக்கு அல்லாஹ் இதன் மூலம் உணர்த்தியுள்ளான். எனவே உண்மையான பாக்கியம், வெற்றி, பலம், கண்ணியம், அமைதி, யாவற்றையும் அடைதல் என்பன ஷரீஆவைப் பின்பற்றுதல், அதன் படி செயற்படுதல், அதன் பால் அழைத்தல், மற்றும் அதனைப் பாதுகாத்தல் ஆகிய கருமங்களிலேயே  தங்கியுள்ளன, என்பதை எமக்குத் தெளிவு படுத்துவதே இந்த திரு வசனங்களின் நோக்கமாகும்.  

    " الشريعة "    பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்லும் ‘வழி ஷரீஆ’ எனப்படும். மேலும் தண்ணீர் வாழ்வாதரமாக விளங்குகின்ற படியால் அரபு மொழியில் நீர் வளமுல்ல இடத்திற்குச் செல்லும் வழியையும் ஷரீஆ என்பர். தண்ணீர் ஓர் வாழ்வாதாரம் என்பதை அல்லாஹ்வின் வாக்கு உருதி செய்கிறது.

وَجَعَلْنا مِنَ الْمَاءِ كُلَّ شَيْئٍ حَيًّ أفَلاَ يُؤْمِنُونَ (الأنبياء:30) 

       “நீரைக் கொண்டு ஒவ்வொன்றையும் வாழ்ந்திருக்கச் செய்தோம். இதைப் பார்த்தேனும் இந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?” (21:30)

     நபிமார்களின்  ஷரீஆவைப் பற்றிச் சிந்திக்கும் ஒருவன் அவை யாவும் தெளிவான பாதைகள் என்பதைத் தெரிந்து கொள்வான். எனவே எவர்கள் அந்தப் பாதைகளின் மீது இஸ்திரமாக இருந்து, அதன் படி ஒழுகி வந்தனரோ, அவை அவர்களைப் பாதுகாப்பும் பாக்கியமும் மிக்க இடத்தில் கொண்டு சேர்த்திருக்கும். மேலும் இம்மையிலும் மறுமையிலும் கண்ணியமான வாழக்கையையும் அவர்களுக்கு  பெற்றுக் கொடுத்திருக்கும். அதிலும் நமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கமோ, மிகவும் சிறப்பானதும் பூர்த்தியானதுமான மார்க்கமாகும். அதில் சிக்கல்களும் நெருக்கடிகளும் இல்லை. ஏனெனில் இந்த நபியையும் அன்னாரின் சமுதாயத்தையும் விட்டு சகல சிரமங்களையும் நெருக்கடிகளையும்  அல்லாஹ் நீக்கி விட்டான். எனவே இத்தகைய தாராளமான மார்க்கத்தை நமக்களித்த அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் சொந்தம்.

   بُعِثْتُ بِاالحَنِيْفِيَّةِ السَّمْحَة    

  “நேரிய தாராளமான மார்க்கத்தினைக் கொண்டு நான் அனுப்பப் பட்டுள்ளேன்.” என்றும்,

إنَّ هَذَا الدِّيْنَ يُسْرٌ وَلَنْ يُشَادَ هَذَا الدِّيْنَ أحَدٌ الَّا غَلَبَهُ 

    இந்த மார்க்கமானது இலகுவானது. யாரேனும் அதனை கடுமையாக்கிக் கொள்ள நினைத்தால் அது அவனை மிகைத்து விடும்.” என்றும், மூஆத், அபூமூஸா (ரழி) என்போரை யமன் தேசத்துக்கு அனுப்பிய நபியவர்கள், அவர்களிடம் மேலும்

يَسِّرَا وَلاَ تُعَسِّرُا وَبَشِّرَا وَلاَ تَنَفِّرَا وَتُطَاوِعَا وَلاَ تَخْتَلِفَا    

     “நீங்கள் இருவரும் காரியத்தை இலகு படுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள். மகிழ்ச்சியூட்டுங் கள். வெறுப்பூட்டாதீர்கள். நீங்கள் இருவரும் பரஸ்பரம் கட்டுப்பட்டு நடவுங்கள். முரண்பட்டுக் கொள்ளாதீர்கள்” என்றும் நபியவர்கள் நவின்றார்கள்.

       எனவே இந்த மார்க்கமானது மக்களின் இருலோக வாழ்வுக்கு ஏற்ற வகையில் இலகுவையும் வாய்ப்புக் களையும் தரக் கூடியது. மேலும் இது அடியார்களின் நலன்களின் மீதும்’ உபகாரத்தின் மீதும் அக்கறை கொண்ட  மாரக்கமாகும்.

       எனவே மேன்மை மிகு அல்லாஹ் நமது நபியும், தலைவருமாகிய முஹம்மத் (ஸல்) அவர்களிடம் அவசரமானதும், அவசரமில்லாததுமான சகல  நலன்களையும் உள்ளடக்கிய பூரணமான இந்த மார்க்கத்தைக் கொடுத்தனுப்பினான். இந்த மார்க்கத் தில் சகல தீமைகளையும் பற்றி எச்சரிக்கை செய்யக் கூடிய செய்திகளும், இம்மை மறுமையின் பாக்கியத்தையும் பாதுகாப்பையும் அனுகூலமாக்கிக் கொள்ளக் கூடிய வழி வகைகளையும் எடுத்துக் காட்டும் செய்திகளும், மற்றும் அடியார்களுக்கு அவர்களின் இரட்சகனின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் ஒழுங்கு முறைகளும் இருக்கின்றன.

       உள்ளத்தை சீர்திருத்தவும், அதன் மீது மக்கள் நிலையாக இருக்கவும், நல்ல காரியங்களைக் கட்டுப் பாட்டுடன் செயற்படுத்தவும், அழிவின் பாலும், தரக்குறைவான காரியங்களின் பாலும் இட்டுச் செல்லும் கருமங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்  விசுவாசம் நிரம்பிய மனக் காட்டுப்பாடு அவசியம். அதற்குத் தேவையான  மிகவும் முக்கியமான அம்சங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின்   பூரணமான இந்த ஷரீஆவில் உள்ளடக்கப் பட்டுள்ளன. எனவே மனதைத் தூய்மைப்படுத்தும் இந்தக் கருமங்களை கடைபிடித்து ஒழுகுமாறு தனது அடியார்களுக்கு, கண்ணியமான  இந்த வேதத்தின் மூலம் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். எனவே உளத்தூய்மை தான் மிகவும் முக்கியமான அடிப்படை என்ற படியால் அது பற்றி நபியவர்களும் ஏராளமான ஹதீஸ்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே நல்ல அமல்களைச் செய்யுவும்  தீயகாரியங்களை விட்டும் விலகவும்  ஈமானிய உளக் கட்டுப்பாடு அவசியம். யாரிடம் அது இல்லையோ, அல்லாஹ்வுடனான அவனின் நிலை உறுதியாகவும் இஸ்திரமாகவும் இருக்காது.

       ஆகவேதான் அல்லாஹ்வின் மீது அச்சம் கொள்ளுதல், அவனின் மீது கவனம் செலுத்துதல், அவனின் அன்பையும் அருளையும் எதிர்பார்த்தல் அவனின் மீது அன்பு வைத்து அவனின் மீது நம்பிக்கை வைத்தல்.  மற்றும் சகல காரியங்களையும் அவனுக்கென்று உளத்தூய்மையுடன் மேற்கொள்ளல் ஆகிய விடயங்கள் மீது ஆர்வமூட்டும்  வசனங்கள் அல்குர்ஆனில் இறக்கப்பட்டுள்ளன. ஒரு அடியான் இதன் படி தன் கருமங்களை செய்து வரும் போது, அல்லாஹ் அவனுக்கு பாவ மன்னிப்பையும், சுவர்க்கத்தையும், மற்றும் தனது திருப்பொருத்தத்தை யும் வழங்கி அவனை கண்ணியப்படுத்துவான். அதற்கு அல்லாஹ் உத்தரவாதமளித்துள்ளான்.  இவ்வாறு அடியானின் உள்ளம் இஸ்திரமாகவும் உறுதியாகவும் இருக்கும் போதுதான் அவன் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றவும் அவனின் தூதரின் வழிகாட்டளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவும் தீவிரமடைவான். இது பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,

إنَ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَاَجْرٌ كَبِيْرٌ (الملك:12) 

      “நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு.” (67:12)

 وَمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ (الرحمن:46)

  எவன் தன் இறைவனின் சந்திப்பை பற்றி பயப்படு கின்றானோ அவனுக்குச் சுவனபதியில் இரு சோலைகள் உண்டு.” (55:46)

فَاعْبُدِ اللهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَ اَلاَ لِلَّهِ الدِّيْنُ الخَالِصَ (الزمر:2,3) 

      “ஆகவே முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வாருங்கள்.” (39:2)

      “பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது.” (39:3)

فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا وَلاَ يُشْرِكْ بِعِبَادِةِ رَبِّهِ اَحَدًا (الكهف:110)

       “ஆகவே எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களை செய்து தன் இறைவனுக்கு, ஒருவரையும் இணையாக்காது வணங்கி வருவாராக!” (18:110)

      இந்த வசனங்கள் யாவும் ஹிஜ்ரத்துக்கு முன் அருளப்பட்ட மக்கீ வசனங்களாகும். இவற்றின் மூலம் தனக்கு அஞ்சி நடக்குமாறும் தன்னை மேன்மைபடுத்தி, தன் பக்கம் கவனம் செலுத்தி வருமாறும் தன் அடியார்களை அல்லாஹ் தூண்டுகிறான். மேலும் நற்கருமங்களை அல்லாஹ் வுக்கென்று உளத்தூய்மையுடனும், அவனின் மீது பூரண விசுவாசத்துடனும், அவனின் தண்டனையைப் பயந்தும், அவனின் அருளை எதிர்பார்த்தும் மேற்கொள்ள வேண்டுமெனவும் அல்லாஹ் தன் அடியார்களை வழியுறுத்துகின்றான்.

     மேலும், அல்லாஹ்வின் இந்த வசனங்களும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

 وَعَلَى اللهِ فَتَوَكَّلُوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ (المائدة:23) 

    “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ் வையே நம்புங்கள்.” (5:23)

 فَسَوْفَ يَأْتِي اللهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ (المائدة:54) 

    “வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான். அவர்களும் அவனை நேசிப்பார்கள்.“ (5:54)

 قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ (ال عمران:31)

    “நீங்கள் கூறுங்கள். நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கிறான்.” (3:31)

       அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டு அவனின் கண்ணியத்தை மனதில் இருத்தி  அவனை நம்புமாறும்,  சகல பொறுப்புக்களையும் அவனிடமே ஒப்படைத்து விடுமாறும் இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை  தூண்டுகிறான். ஏனெனில் அல்லாஹ்வையும் அவனின் திருநாமங்களையும் பண்புகளையும் மற்றும் அதன் மேன்மையையும் உரிய முறையில் அறிந்து கொண்ட ஒரு அடியான்தான் அல்லாஹ்வை பூரணமாக நம்புவான். தன்னுடைய காரியங்களையும் அவனிடம் ஒப்படைப்பான்.  அவ்வாறே அவனின் மீது நம்பிக்கை வைத்து  நற் காரியங்களில் தீவிர ஈடுபாடும் கொள்வான். மேலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றவும் அவனின் விலக்கல்களை தவிர்ந்து கொள்ளவும் முயலுவான். இவ்வாறு இந்த கடமைகளை அவன் நிறைவேற்றுவானாகில்  அல்லாஹ்வின் அன்பும் அவனைப் பற்றி பூரணமாக நம்புகின்ற மனநிலையும் அவனுக்குண்டாகும் .

   அல்லாஹ்வின் திருவசனம் இப்படி கூறுகின்றது.

ذَلِكَ وَمَنْ يَعْظّم حُرُمَاتِ اللهِ فَهُوَ خَيْرٌ لَهُ عِنْدَ رَبِّهِ (الحج:30) 

      “இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய, சிறப்பானவைகளை எவர் மகிமைப்படுத்துகின்றாரோ  அது  அவருக்கு,  அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மை யாகவே முடியும்.” (22:30)

ذَلِك وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللهِ فَإنَّهَا تَقْوَى القُلُوب (الحج:32)

     “எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ, அதுவே அவருடைய உள்ளத்திலிருக்கும் இறையச்சத்தை அறிவிக்கிறது.” (22:32)

        அல்லாஹ் அடையாளப்படுத்திய சின்னங்களை மேன்மைப்படுத்தக்கூடிய இந்த விடயங்கள், அடியானுக்கு மனக்கட்டுப்பாட்டை பெற்றுத் தரக்கூடியவை. இதன் காரணமாக அவன் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்ற ஒரு அடியானாக மாறி விடுவான். மேலும் அவன் தன்னுடைய ஈமானின் தூண்டுதலின் காரணமாக  கடமைகளை நிறைவேற்றவும், பாவ காரியங்களை விட்டு விடவும், நியாயமான முறையில் செயற்படவும், சகோதரர் களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் அவர் களின் உரிமைகளை நிறைவேற்றிக் கொடுக்கவும் கூடிய உயர்ந்த நிலையை  அடைவான்.

    மேலும் அடியார்கள் தன்னை நெருங்கி வரவும், அவர்களின் உள்ளத்தைத் தூய்மைப் படுத்தி அதில் தன் அன்பையும், நம்பிக்கையையும் பலப்படுத்திக் கொள்ளவும், அவர்கள் தனிமையில் இருந்து தன்னுடன் உரையாடவும், நினைவு கூறவும், மற்றும் இறைக் கட்டுப்பாட்டின் இன்பத்தை அவர்கள் அனுபவிக்கவும் என மேலும் சில இபாதத்துக் களையும் தன் அடியார்களுக்கு , அல்லாஹ் தந்துள்ளான்.

      மேலும் பாவங்களில் இருந்தும் அசுத்தங்களில் இருந்தும் உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும் அந்த அனுஷ்ட்டானங்களின் கண்ணியத்தை உணர்த்தும் பொருட்டு சிறிய, பெரிய தொடக்குகளில் இருந்து அடியார்கள் நீங்கி, தங்களின் மேனியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேன்டும் என அல்லாஹ் கடமையாக்கி யுள்ளான். மேலும் ‘ஷஹாதா’ கலிமாவை அடுத்து மிகவும் மேன்மையான ‘இபாதா’ வான தொழுகையின் திறவு கோலாக ‘வுழூ’  என்ற சுத்தத்தை கடமையாக்கியுள்ளான். மேலும் ஐம்பது நேரம் கடமயாக இருந்த தொழுகையை ஐந்து நேரத்தக்குள்  கட்டுப்படுத்திய போதிலும் அதற்கு ஐம்பது நேரத் தொழுகையின் நன்மையை அவன் தந்துள்ளான். இது தன் அடியார்களின் மீது அவன் காட்டியிருக்கும் அன்பை பகிரங்கப் படுத்துகின்றது.

      மேலும் இந்தத் தொழுகையை தினமும் பல நேரங்கில் நிறை வேற்ற  வேண்டியுள்ள படியால்,   அல்லாஹ்வின் சிந்தனை மனதில் இருந்து நீங்காமல், எப்போதும் அவனை நினைவில் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கின்றது.  காலையில் வெறும் மனதோடு துயில் எழும்பும் அடியான், இமாம் தொழுகையில் ஓதுகின்ற அல்குர்ஆன் வசனங்களைச் செவிமடுக்கவும், அதன் கருத்துக்களை உணரவும் அவனால் முடிகின்றது. அதனால்  அவனுடைய அன்றைய  கடமைகளை அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து ஆரம்பம் செய்யும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கும். இதன் பின்னர் அன்றாட சோலிகளில் அவன் ஈடுபாடு கொள்ளும் போது அவ்வப்போது அல்லாஹ்வின் நினைவு அவனின் சிந்தையை விட்டும் அகன்றாலும், அடுத்தடுத்து வரும் தொழுகையின் போது மீண்டும், மீண்டும் அல்லாஹ்வை  ஞாபகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை அவன் பெறுவான்.  அப்போதெல்லாம் தன்னைப் பற்றி அவன் சுய விசாரனை செய்யவும், அல்லாஹ்வுக்காக தன் மனதுடன் போராடி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறவும் அவனுக்கு அது நல்ல வாய்ப்பாக அமையும். 

     அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் மேலும் தேடித் தரும் வகையில் இத்தொழுகைகளுக் கிடையே வேறு சில தொழுகைகளையும்  அனுஷ்ட்டானங்களையும் அல்லாஹ் ஏற்படுத்தி யுள்ளான். உதாரணமாக கடமையான தொழுகைக ளுடன் சேர்ந்த ஸுன்னத்தான தொழுகைகள், மற்றும் நபிலான தொழுகைகள், அத்கார்கள், ஔராதுகள்,  இஸ்திஃபார்கள். துஆக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவையெல்லாம் அல்லாஹ்வின் பரோபகாரத்தின் வெளிப்பாடுகளாகும்.  

         மேலும் தொழுகையின் நேரத்தை அறியவும், அதன் பால் அழைக்கவும் ‘அதான்’ என்ற  அழைப்பு முறையை அல்லாஹ் ஏற்படத்தியுள்ளான். இதன் மூலம் அநுகூலமாகும் நலனையும், பயனையும் இனி கவனிப்போம்.  ‘அதான்’ என்ற அழைப்பு முறையில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்தி முஹம்மது (ஸல்) அவர்கள்     அல்லாஹ்வின் தூதர் என்பதை அத்தாட்சிப் படுத்தும் விடயமும், தொழுகையின் பால் விரைந்து வாருங்கள், வெற்றியின் பால் விரைந்து வாருங்கள் என்ற வார்த்தைகள் மூலம் தொழுகைக்கு அழைப்பு விடுத்தலும், அவ்வாரே لاإله الاالله  என்று அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி அவனை மேன்மை படுத்தும் விடயங்களும் அடங்கியுள்ளன. இவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தை ‘அதானின்’  அடிப்படையாக அல்லாஹ் ஆக்கி யுள்ளான். எனவே இந்த ‘அதானின்’ மூலமும் மற்றும் திக்ரின் மூலமும் அடியார்கள் தங்களின் இல்லங்களிலும், படுக்கைகளிலும், வாகனங்க ளிலும், மற்றும் எல்லா இடங்களிலும் இருந்த வாறே அல்லாஹ்வை நினைவு கூர்ந்து புத்துணர்ச்சி பெற முடியும். மேலும்  ‘அதானை’ செவியுறும் வீடு வாசல் களும், அந்த  அதானை சொல்லும் நபருக்குக்காக கியாமத் நாளில் சாட்சியாக இருக்கும், என ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஹதீஸகள் மூலம் அல்லாஹ்வின் உரிமையையும், கண்ணியத்தை யும் நபியவர்கள் வழியுறுத்தி இருக்கின்றார்கள்.

        மேலும் மனிதர்கள் தங்களின் செல்வத்தி லிருந்து ஸகாத் வழங்க வேண்டுமென்பதையும் அல்லாஹ் விதியாக்கியுள்ளான். இதன் மூலம் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் மத்தியில் நல்ல பிணைப்பையும் தொடர்பையும் அவன் ஏற்படுத்தி யுள்ளான். இவ்வாறு இன்னும் பல நன்மைகள் இதில் இருக்கின்றன. ஏழைகளுக்கும், பயணிகளுக்கும், நவ முஸ்லிம்களுக்கும்  உதவி உபகாரங்கள் வழங்கி ஈமானை பலம் பொருந்தியதாக ஆக்கவும், அவர்களை நல்ல காரியங்களின் பக்கம் அழைக்கவும் இதன் மூலம் வாய்ப்புகள் உண்டாகிறது. மேலும் இதன் மூலம் அடிமைகளுக்கும் கைதிகளுக்கும் விடுதலை பெற்றுத் தரவும் கடன்பட்டோரின் கடனை செலுத்தவும் உதவ முடிகின்றது. அவ்வாறே அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாதில் கலந்து கொள்ளும் போராளிகளுக்கும் உதவி செய்யும் வாயப்பு கிட்டுகிறது. அது மாத்திரமின்றி ஸகாத் கொடுக்கின்றவனை தூய்மைப்படுத்தி அவனின் செல்வத்தை வளர்க்கவும் ஸகாத் துணை புரிகிறது. மேலும் அவன் வழங்கும் ஸகாத்திற்குப் பதிலாக அதை விடவும் மேலான பிரதிபலனையும் அவனுக்கு அல்லாஹ் வழங்குகிறான். ஸகாத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

اِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالمَسَاكِيْنِ وَالعَامِلِيْنَ عَلَيْهَا وَالمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالغَارِمِيْنَ وَفِي سَبِيلِ اللهِ وَابْنِ السَّبِيلِ فَرِيْضَةً مِنَ اللهِ وَاللهُ عَلِيْمٌ حَلِيْمٌ   (التوبة:60)    

      “தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழை களுக்கும், தானத்தை வசூலிப்போருக்கும், புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியிருப்ப வர்களுக்கும்,  அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதென அல்லாஹ் ஏற்படுத்தி யதாகும். அல்லாஹ் மிக அறிந்தவனும் ஞானமுடையவனு மாகவும் இருக்கிறான்.” (9:60)

       எனவே இந்தக் கடமையை நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ் தமக்களித்த நிஃமத் - அருள்களுக்காக அவனுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாறே அல்லாஹ்வின் கட்டளைக்குத் தலை சாய்த்து தூய எண்ணத்துடன் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் தன் செல்வத்தைச் செலவு செய்வதன் காரணமாக அல்லாஹ்வின் முடுங்குதலையும் அடையும் வாய்ப்பு கிட்டும். மேலும் ஏக காலத்தில் அல்லாஹ்வின் அடியார்களுக்கு உதவி உபகாரம் செய்யவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கின்றது.

     இனி நோன்பை எடுத்துக் கொண்டால் அதிலுள்ள அபரிமிதமான நன்மைகளையும் நலன்களையும் நீங்கள் யாவரும் அறிவீர்கள். எடுத்துக் காட்டாக நோன்பின் மூலம் மனதிலுண்டாகும் அகங்காரம், செல்வச் செருக்கு, கருமித் தனம் போன்ற தீய குணங்களை விட்டும் மனதைத் தூய்மைப்படுத்த முடியும். மேலும் நோன்பின் மூலம் ஒரு நோன்பாளி தன்னுடைய தேவைகளையும் பலவீனத்தை அறிய முடிகிறது. அவ்வாறே அல்லாஹ் ஆகுமாக்கியுள்ள உணவு, குடித்தல் போன்ற விடயங்களில் தான் கடும் தேவையுள்ளவன் என்பதையும் அவன் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. அது மாத்திமன்றி நோன்பாளி தன்னுடைய ஏழைச் சகோதரர்களையும் அவர்களின் தேவைகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு உதவிகள் செய்து அவர்களுக்கு ஆறுதல் வழங்குவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. மேலும் மனோ இச்சைக்கு மாறு செய்வதற்கான பயிற்சியையும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டும் அவனின் திருப்தியை அடைந்து கொள்ளும் பயிற்சியையும் நோன்பாளி பெற்றுக் கொள்கிறான், இது போன்ற வேறும் சில பயன்களைக் இங்கு குறிப்பிடலாம்.

     இவ்வாறு நோன்பில் இன்னும் பல பயன்களும், நுட்பங்களும், இரகசியங்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம்  அல்லாஹ் ஒருவனால் அன்றி வேறு யாராலும் கணக்கிட முடியாது. நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் நோன்பைப் பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு கூறினார்கள்.

    “மனிதனின் எல்லா கருமங்களும் அவனுக்குரிய தாகும். அவன் புரியும் ஒரு நல்ல கருமத்திற்கு பிரதிபலனாக அதன் பத்து மடங்குகள் முதல் எழுநூறு மடங்குகள்  வரையிலான பலனைப் அவன் பெறுவான். எனினும் “நோன்பைத் தவிர அது எனக்குரியது. அதற்குரிய கூலியை நானே தருகின்றேன். ஏனெனில் அவன் தன்னுடைய இச்சையையும், உணவையும், குடிப்பையும் எனக்காகவே விட்டுக் கொடுத்தான்,” என்று அல்லாஹ் கூறுகிறான்.  மேலும் நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு. ஒன்று நோன்பு திறக்கும் நேரத்தில் அவனுக்குண்டாகும் மகிழ்ச்சி, மற்றையது தன்னுடைய இரட்சகனை அவன் சந்திக்கும் போது அவனுக்குண்டாகும் மகிழ்ச்சி. மேலும் நோன்பாளியின் வாயின் துர்மணம், அல்லாஹ்விடம் கஸ்தூரி வாசத்தை விடவும் மணம் பொருந்தியதாகும்.” என நபியவர்கள் நவின்றார்கள். இவ்வாறு நோன்பின் சிறப்பையும், மேன்மையையும் எடுத்துக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமுண்டு.

      இனி ஹஜ் கடமை மூலம் அனுகூலமாகும் பலன்கள் சிலவற்றை கவனிப்போம். இதன் மூலம் கிடைக்கும் பயன்களும் ஏராளம். எடுத்துக் காட்டாக அல்லாஹ்வுடன் தொடர்பையும், நெருங்குதலையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இதன் மூலம் வாய்ப்பேற்படுகிறது.  மேலும் தாய் நாட்டையும், குடும்ப கோத்திரங்களையும் பிரிந்து சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கும், அல்லாஹ்வின் புராதன இல்லத்தை தரிசிப்பதற்கும் இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இவ்வாறு வார்த்தைகளால் கணக்கிட முடியாத பல நன்மைகள் ஹஜ் கடமையில் பொதிந்துள்ளன.

     அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தும் அவனின் தண்டனைகளுக்குப் பயந்தும் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் ஒரு ஹாஜி பாலைவனம், மற்றும் ஆகாயம் போன்ற பயங்கரமான வழிகளைத் தாண்டி தன்னுடைய பிரயாணத்தை மேற் கொள்கிறான். இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில்  ஹஜ் கடமையை நிரைவேற்ற அவன் பிரயாசப்படுவது,   அருள் மிகு அல்லாஹ்விட மிருந்து அபரிமிதமான நன்மையையும், கூலியையும் அடைந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான்.

    ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது, இஹ்ராம் உடை அணிதல், தல்பியா சொல்லுதல், நடைமுறையிலுள்ள அனேகமான பழக்க வழக்கங்கங் களைத் தவிர்ந்து கொள்ளல். திறந்த தலையுடன் இருத்தல், வழமையான ஆடைகளைக் களைதல், அல்லாஹ்வின் இல்லத்தை வலம் வருதல், ஸபா மர்வாவுக்கிடையில் தொங்கோட்டம் ஓடுதல், அரபா மைதானத்தில் தரித்தல், ‘ஜம்ராக்களுக்கு’ கல் எறிதல், மேலும் பலிப்பிராணிகளை அறுத்தல், போன்ற  அல்லாஹ்வின்  நெருங்குதலை பெற்றுத் தரும் காரியங்களை ஹாஜிகள் மீது  அல்லாஹ் விதியாக்கி யுள்ளான். இப்படியான பல நல்ல காட்சிகளை ஹஜ்ஜின் போது காண முடிகின்றது. எனினும் இதன் தத்துவங்களை, இதையெல்லாம் தன்னுடைய அடியார்களின் விதியாக்கிய ஞானம் மிக்க அல்லாஹ்வைத் தவிர வேறு எரும் பூரணமாக அறிய முடியமாட்டார்கள்.

     மேலும்  முஸ்லிம்கள் பரஸ்பரத் தொடர்புகளை ஏற்படுத்தி தங்களின் விவகாரங்கள் பற்றி கலந்தாலோசிக்கவும், தங்களின் அவசரமானதும், எதிர் காலத்துக்குத் தேவையானதுமான நலன்களில் ஒத்துழைப்பு வழங்கவும், மற்றும் ஒருவர் இன்னொருவரிடமிருந்து பயன் பெறவும், ஹஜ் நல்ல வாய்ப்பாக அமைகிறது. ஹஜ்ஜின் மூலம் கிடைக்கும் இது போன்ற பயன்கள் யாவும், இதனை விதியாக்கிய அல்லாஹ் மகா கிருபையாளன், மேலான நீதிபதி என்பதற்கான அத்தாட்சிகளாகும். மேலும் இவற்றை பின் வரும் இறை வாக்கு சுட்டிக் காட்டுகின்றது.

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ  (الحج:28)  

     “தங்களின் பயன்களைக் கண்டு கொள்வதற்காக அவர்கள் வருவார்கள்.” (22:28)

        எனவே ‘ஹஜ்’ என்பது ஒரு மகத்தான இஸ்லாமிய மாநாடாகும். முஸ்லிம்கள் தங்களின் இவ்வுலக, மறு உலக நலன்களை அடைந்து கொள்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். எனவே இதனை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம். எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவும், நேரான வழியில் அவர்கள் ஒன்றுபடவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு வள்ள அல்லாஹ்வை வேண்டுகிறோம்.

     அல்லாஹ்வின் இந்த மார்க்கத்தை நிலை நிறுத்தும் படி சகல நபிமார்களுக்கும் அல்லாஹ் கட்டளையிட்டான். மேலும் அவனின் அந்த மார்க்கத்தை நிலை நிறுத்தும் அதே நோக்கத்துக் காகத்தான் நபிமார்களில் பரிபூரணமானவரும், அவர்களின் தலைவரும், இறுதி நபியுமாகிய முஹம்மத் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் அனுப்பினான் என்பதை நாம் முன்னர் குறிப்பிட்டோம்.

       எனவே இந்த வணக்க வழிபாடுகளும், அல்லாஹ்வின் ஏனைய வழிகாட்டல்களும் மார்க்கத்தை நிலைநிறுத்தவென்றே ஏற்படுத்தப்பட்ட வையாகும். ஆகையால் உங்களிடம் ஈமானிய கட்டுப்பாடு இருக்குமானால் நீங்கள் இந்தக் கடமைகளை நிறைவேற்றும் படி அது உங்களைப் பணிக்கும். மேலும் நீங்கள் உங்களின் சகோதரர்களுடன் நல்ல முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எல்லா கருமங்களையும் நாணயத்துடன் நிறைவேற்றவும், அல்லாஹ்வின் பக்கம் கவனம் செலுத்தவும் அது வழி வகுக்கும். அப்போது நீங்கள் உங்களின் ஆசாபாசங்களைப் பின்பற்றாமலும்,  உங்களின் சுய நலத்தின் மீது மாத்திரம் நீங்கள் நிலை கொள்ளாமல், அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு உதாரண புருஷனாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

      முன்னர் குறிப்பிட்ட இந்த விடயங்களுடன்  ரஸூல் (ஸல்) அவர்களின்  இந்த வாக்குகள்  சம்பந்தப் பட்டிருப்பதைக் காணலாம்.

الَا وَاِنَّ فِي الجَسَدِ مُضْغَةً اِذَا صَلُحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، واِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، الَا وَهِيَ القَلْبُ.   

    “உங்களின் உடம்பில் ஒரு மாமிசப் பிண்டம் இருக்கிறது. அது சீர் பெற்றால் உடல் முழுவதும் சீர் பெறும். அது கெட்டுவிட்டால் உடல் முழுவதும் கெட்டுவிடும். அதுதான் இதயம்.”

        அடியானின் சீர்திருத்தம், அவனின் இதயத்தின் சீர்திருத்தத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே சீர்திருந்திய மனமுள்ளவன் அல்லாஹ்வின் விடயத்திலும், அவனின் அடியார்களின் விடயத்திலும் நேர்மையுடன் நடந்து கொள்வான் என்பதையும், தீய மனம் உள்ளவன் ஒரு கெட்ட அடியானாக இருக்கின்ற படியால் அவனின் சகல நடவடிக்கைகளும் கெட்டுப் போயிருக்கும்  என்பதையும், ரஸுல் (ஸல்) அவர்கள், இந்த ஹதீஸின் மூலம் உணர்த்துகிறார்கள். மேலும் உள்ளத்தை சீர்திருத்தக் காரணமாகவுள்ள விடயங்களில், இஸ்லாமிய ஷரீஆ பாரிய அளவில் கவனம் செலுத்தி வருகின்றது என்பதும் இந்த நபி மொழியிலிருந்து  தெளிவாகிறது. மேலும்,

اِنَّ اللهَ لاَ يَنْظُرُ اِلَى صُوَرِكُمْ وَلاَ اِلَى اَمْوَالِكَمْ وَلَكِنْ يَنْظُرُ اِلَى قُلُوبِكُمْ وَاَعْمَالِكُمْ

      “உங்களின் தோற்றத்தையும் உங்களின் செல்வத்தையும் நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பதில்லை. எனினும் உங்களின் உள்ளத்தையும் உங்களின் செயலையுமே அவன் பார்க்கிறான்” என நபியவர்கள் நவின்றார்கள்.

     நமது உள்ளத்தையும் செயலையுமே அல்லாஹ் கவனிக்கிறான். எனவே எமது பணமும் உடலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படியவில்லை யெனில் அவையிரண்டும் அவனிடம் பெறுமதியை இழந்து விடும். எனவே அல்லாஹ் நமது உள்ளத்தையே கவனிக்கின்ற படியால் எமது உள்ளம் அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டும் அவனின் மீது கவனம் செலுத்தியும் வரும் நிலையில் அவனுக்கென்று தூய எண்ணத்துடன், கருமங்களை மேற்கொள்ளும் போதுதான், நமது செயல்கள் யாவும் சீர் பெறும். ஆனால் இதற்கு நேர்மாறாக இருந்தால் நமது சகல காரியமும் கெட்டு விடும் என்பதை, ரஸுல் (ஸல்) அவர்களின் கூற்று நன்கு தெளிவுபடுத்துகின்றது.

        மேலும், இன பந்துக்களுடனும், குடும்பங்க ளுடனும் நல்லினக்கத்தையும் தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த ஷரீஆ நல்ல ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. எனவே அல்லாஹ்வின் விதிமுறைகளின் படி, அவனின் திருப்தியை பெற்றுக் கொள்ளும் வகையில் இன பந்துக்களுடன் சேர்ந்து நடக்கவும், அவர்களுக்குச் சொத்துரிமைகளை பெற்றுக் கொடுக்கவும் குடும்பங்களுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்தி குடும்பக் கூட்டுறவை நிறுவிக் கொள்ளவும் வழியுண்டாகிறது. இவ்வாறு குடும்பங்களுக்கும் இனபந்துக்களுக்குமிடையில் நல்லிணக்கமும் பிணைப்பும் ஏற்பட அல்லாஹ்வின் பேரருளே காரணமாகிறது. எனவே தான் இனபந்துக்களுடன் சேர்ந்து நடப்பதை விதியாக்கிய அல்லாஹ் அதனைத் தவிர்ந்து நடப்பதை எச்சரிக்கை செய்துள்ளான். நபியவர்களின் வாக்கும், அல்லாஹ்வின் வேத வாக்கும் அதனை உறுதி செய்கின்றன.

لاَ يَدْخُلُ الجَنَّةَ قاَطِعٌ   

    “இனபந்தத்தை முறிப்பவன் சுவனம் நுழைய மாட்டான்” என்று நபியவர்கள் நவின்றுள்ளார்கள்.

فَهَلْ عَسَيْتُمْ اِنْ تَوَلَّيْتُمْ اَنْ تُفْسِدُوا فِي الأرْضِ وَتَقَطَّعُوا اَرْحَامَكُمْ (محمد:22)  

    “நீங்கள் (போருக்கு வராது) விலகிக் கொண்டதன் பின்னர் நீங்கள் பூமியில் சென்று விஷமம் செய்து இரத்த பந்தத்தை துண்டித்து விடப்பார்க்கிறீர்களா?” (47:22)

اُولئِكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللهُ فَأَصَمَّهُمْ وَاَعْمَى اَبْصَارَهُمْ  47:23

   “இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து அவர்களைச் செவிடாக்கி அவர்களுடைய பார்வைகளையும் போக்கி குருடாக்கி விட்டான்” (47:23)

مَنْ اَحَبَّ اَنْ يَبْسُطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي اَجْلِهِ فَلْيَصِلْ رَحِمَهُ  

     “தன்னுடைய உணவில் விஸ்தீரனம் ஏற்பட வேண்டுமென்பதையும், தன்னுடைய ஆயுள் நீள வேண்டு மென்பதையும் யார் விரும்புகிறானோ அவன் தன் இனபந்துக்களுடன் சேர்ந்து நடப்பாராக!” என்று நபியவர்கள் இன்னொரு ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள்.

      இவ்வாறு முஸ்லிம்களின் சகல நடவடிக்கை களிலும் நல்ல தொடர்புகளை அல்லாஹ் ஏற்படுத்த விரும்புகிறான். இதனால் அல்லாஹ்வின் விடயத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுகின்றவர்களாகவும் தங்களின் சகல விடயங்களிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குகின்றவர்களாகவும் இருக்க வேண்டு மென்பதை அவன் கடமையாக்கியுள்ளான். எனவே முஸ்லிம்களின் மகத்தான இந்த பிணைப்பும் இரத்த உறவும் ஒரு இஸ்லாமிய,  ஈமானிய சகோதரத்து வத்தின் அடையாளமாகும்.  எனவே இந்த ஈமானிய, இஸ்லாமிய இணைப்பானது இனபந்த, தான, தர்ம, மற்றும் ஏனைய மானிட தொடர்புகளை விடவும் மேலானது. ஏனெனில் இந்த இணைப்பின் மூலம், முஸ்லிம்களை சகோதரர்களாக ஆக்கிய அல்லாஹ், அவர்கள் ஒருவருக்கொருவர் நேசிப்பதையும், ஒருவர் இன்னொருவருக்கு நல்லதை விரும்புவதையும், மற்றும் தீயதை வெறுப்பதையும், அவர்கள் தமக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்புடன் உபதேசம் செய்து கொள்வதையும் அல்லாஹ் கடமையாக்கி யுள்ளான். இவ்வாறு அவர்கள் ஒரு குவியலாக, ஒரு குழுவாக ஒரு சமுதாயமாக ஆகி விட வேண்டுமென்பதையே அல்லாஹ் விரும்புகிறான் எனவே அதனை கட்டாயப்படுத்தியுள்ளான். பின்வரும் குர்ஆன் வசனங்களின் மூலம் இது துலாம்பரமாகினறது.

اِنَّ هَذِهِ اُمَّتُكُمْ اُمَّةً وَاحِدَةً وَاَنَا رَبُّكُمْ فَاعْبُدُونَ (الأنبياء:92) 

     நீங்கள் அனைவரும் ஒரே வகுப்பார்தான். உங்கள் அனைவருக்கும் இறைவன், நான் ஒருவனே! ஆகவே என்னையே நீங்கள் வணங்குங்கள்.” (21:92)

وَالمُؤْمِنُونَ وَالمُؤْمِنَاتُ بَعْضُهُمْ اَوْلِيَاءُ بَعْضٍ يَأمُرُونَ بِالمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ المُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلاَةَ وَيَؤْتُونَ الزَّكوةَ وَيُطِيْعُونَ اللهَ وَرَسُولَهُ اُولئِكَ سَيَرْحَمُهُمُ اللهُ اِنَّ الله عَزِيْزٌ حَكِيْمٌ (التوبة:71) 

       “நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் நன்மை செய்யும்படித் தூண்டியும் பாவம் செய்யாது தடுத்தும் தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தும் கொடுத்து வருவார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடப்பார்கள். இத்தகையவர் களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடைய வனுமாகவும் இருக்கிறான்.” (9:71)

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللهِ جَمِيْعًا وَلاَ تَفَرَّقُوا (ال عمران: 103) 

    “மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய கயிற்றைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விட வேண்டாம்.” (3:103)

 وَتَعَاوَنُوا عَلَى البِرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُوا عَلَى الإثْمِ وَالعُدْوَانِ. وَاتَّقُواللهَ اِنَّ الَّلهَ شَدِيْدُ العِقَابِ. (المائدة:2)

“நன்மைக்கும் இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறலுக்கும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன்.” (5:2)

      அல்லாஹ் இந்த வசனங்களின் மூலம் சகல முஸ்லிம்களும் நல்ல கர்மங்களுக்கும் இறையச்சத் திற்கும் ஒத்துழைப்பு வழங்குவதும் ஒருவரை யொருவர் பகைத்து பிரிந்து விடாமல் சோதரர்களாக இருப்பதும் கடமை என்பதை  தெளிவுபடுத்தியுள்ளான். அது மாத்திரமன்றி அவர்கள் தமக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்வதும் நல்ல காரியங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் கடமை யென்பதையும் தெளிவு படுத்தியுள்ளான்.

         சகல முஸ்லிம்களையும், மற்றும் இதய சுத்தியுடனும் தூய்மையுடனும் மார்க்க விடயத்தில்  ஈடுபடுகின்றவர்களையும்,  அவ்வாறே இஸ்லாமிய மார்க்கத்தின் மீது நேசமுள்ள அனைவரையும்  இந்த இஸ்லாமிய  ஒத்துழைப்பின் பக்கமே அல்லாஹ் அழைக்கிறான்.

       எனவே நன்மை,இறையச்சம், நல்ல காரியம்,  மற்றும் அல்லாஹ்வின் விடயங்களில் பரஸ்பரம் நல்லுபதேசம் செய்தல் , அவ்வாரே முஸ்லிம்களின் நலன் காக்கும் விடயங்களிலும், அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் விடயத்திலும் மற்றும் எதிரிகளின் தீமைகளை விட்டும் இஸ்லாமிய அரசாங்கத்தை உறுதி படுத்தி, அதனை பராமரிக்கக் கூடிய விடயங்களில் பொறுப்புகளை ஏற்கவும் , பாதுகாப்புகளை வழங்கவும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே ,  இந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவப்பட்டுள்ளது.

      எனவே இந்த ஒத்துழைப்பின் மூலம் இஸ்லாமிய அரசும், மக்களும் தங்களின் மார்க்கத்தை நிலை நிறுத்தவும், ஆட்சியைப் பாதுகாக்கவும், தங்களின் அணிகளை ஒரு முகப்படுத்தவும், தங்களின் குரலை ஐக்கியப்படுத்தவும், எதிரிகளிடமிருந்து தங்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும், அவர்களின் பரஸ்பர அன்பும்  உதவி  அவசியம்.

        முஸ்லிம் சமூகம் இவ்வாறு ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்கும் போதுதான், எதிரிகளின் தீமைகளையும் சூழ்ச்சிகளையும் விட்டும் அவர்களை அல்லாஹ் பாதுகாப்பான். மேலும் முஸ்லிம் சமூகம் தமது உரிமைகள், ஒத்துழைப்பு, தோல் கொடுத்தல்,அல்லாஹ்வின் திருப்தியொன்றை மாத்திரம் கருத்திற் கொண்டு தங்களின் மார்க்கத்தை நிலைநிறுத்த உதவி புரிதல், எனும் காரியங்களில் ஒன்றுபட்டிருப்பதைக் காணும் எதிரிகளின் உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய பயத்தையும் அல்லாஹ் ஏற்படுத்துவான். இதனை அல்லாஹ்வின் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

يَااَيُّهَا الَّذِيْنَ آمَنُوا اِنْ تَنْصُرُو اللهَ يَنْصُرُكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ (محمد:7) 

      “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால் அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கி விடுவான்.” (47:7)

 وَلَيَنْصُرَنَّ اللهُ مَنْ يَنْصُرُهُ اِنَّ اللهَ لَقَوِيٌّ عَزِيْزٌ (حج:40) 

 “அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். அல்லாஹ் மிகப் பலவானும் அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.” (22:40)

الَّذِيْنَ اِنْ مَكَّنّهُمْ فِي الأرْضِ اَقَامُو الصَّلاَةَ  وَآتُو الزَّكوةَ وَاَمَرَهُمْ بِالمَعْرُوفِ وَنَهَوْ عَنِ المُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الأمُورِ (حج:41)

    “இவர்கள் எத்தகையோரென்றால் நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைபிடித்துக் கொள்வார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையானவைகளை ஏவி பாவமானவைகளைத் தடை செய்வார்கள். மேலும் எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.” (22:41)

        முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கும் உதவியையும், பாதுகாப்பையும்,  தன்னுடைய மார்க்கத்திற்கு அவர்கள் வழங்கும் உதவியுடனும்,  அதன் மீது ஒற்றுமையாக இருந்து அதற்கு அவர்கள் தரும் ஒத்தழைப்புடனும்,  மார்க்கத்தை அவர்கள் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுதல் என்ற விடயங்களுடனும் அவன் சம்பந்தப்படுத்தியுள்ளான். எனவே முற்றும் முழுதும்  நற்கருமங்களின் மொத்த வடிவமே இஸ்லாமிய ஒத்துழைப்பும் அதன் கூட்டுறவுமாகும். . முஸ்லிம் சமூகம் இவ்விடயத்தில் உண்மையாக ஒத்துழைப்பு வழங்குமானால், இரு உலகிலும் அது அவர்களுக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

        ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்கு உபதேசம் செய்வது, அவனுக்கு நன்மைகள் கிட்டுவதை விரும்புவது, அவனுக்கு நன்மைகளை ஏவி தீமைகளை விட்டும் அவனைத் தடுப்பது போன்ற நல்ல காரியங்களின் மூலம் அவர்களை ஒருவருக்கொருவர் சகோதரர்களாக இருக்கும் படி இஸ்லாம் கட்டளை யிட்டிருப்பதானது,  இஸ்லாமிய ஷரீஆவின் அனுகூலங்களில் சிலவாகும். இதைத் தான் நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

لاَ يُؤْمِنُ اَحَدُكُمْ حَتَّى يُحِبُّ لِأخِيْهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ   

   “தனக்கு விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பாத வரை உங்களில் ஒருவனும் விசுவாசம் கொண்டவன் ஆகமாட்டான்.”

       மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

اِنَّمَا المُؤْمِنُونَ اِخْوَةٌ فَأصْلِحُوا بَيْنَ اَخَوَيْكُمْ (الحجرات:10)  

    “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே உங்கள் சகோதரர்களுக் கிடையில் ஒழுங்கை நிலை நிறுத்துங்கள்.” (49:10)

       எனவே ஒரு முஃமின் இன்னொரு முஃமினின் சகோதரன் எனில், அவன் தன் சகோதரனுக்கு  நன்மை கிடைக்க உதவி புரிதல் வேண்டும். அவனை நன்மையின் பக்கம் அழைத்து தீமைகளை விட்டும் அவனைத் தடுத்தல் வேண்டும் என்பதே, அதன் கருத்தாகும். எனவே தான் ரஸுல் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

اُنْصُرْ اَخَاكَ ظَالِمًا اَوْ مَظْلُومًا 

     “உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும், நீங்கள் அவனுக்கு உதவி செய்யுங்கள்.” என்று. அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அநீதி இழைக்கப்பட்டவனுக்கும், அநீதிக்கு இழக்கானவனுக்கு உதவி செய்வது வாஸ்தவம்தான். ஆனால் அநீதி இழைத்த அநியாயக்காரனுக்கு உதவி செய்வதென்றால் அது எப்படி? என்று நபியிடம் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் அநியாயம் செய்யாமல் அவனைத் தடுத்து விடுவதுதான் அவனுக்கு நீங்கள் செய்யும் உதவி என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். எனவே அநியாய காரியத்தை செய்ய விடாமல் அவனை தடுத்து விடுவதே அவனுக்கு செய்யும் உதவி என்ற படியால், முஸ்லிம்கள் யாவரும் அநியாயத்துக்கு எதிராக திடசங்கட்டம் பூணுவார்களாயின், அநியாயத்திற்கு எதிராக  ஒத்துழைப்பும் வழங்குவார்களா யின்,  அவர்களுக்கு மகத்தான நன்மையும் கண்ணியமும் கிடைக்கும். மேலும் அவர்களின் குரல் ஒன்றுபடும். எதிரிகளுக்கு அவர்களின் மீது அச்சமும் உண்டாகும். அவர்களின் சூழ்ச்சிகளை விட்டும் பாதுகாப்பும் கிடைக்கும்.

      மேலும் சொந்தம், பந்தம், தோழமை  என்ற தொடர்பினையும், நட்பையும் கருத்திற் கொள்ளாது தங்களுக்கிடையிலுள்ள கொடுக்கல் வாங்கல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் போது நீதி நியாயத்தை உள்ளடக்கிய நீதியான நிர்வாக முறை ஒன்றினையே இஸ்லாமிய ஷரீஆ ஏற்படுத்தித் தந்துள்ளது. அதுவும் இந்த ஷரீஆ வழங்கும் அனுகூலங்களில் ஒன்றுதான்.

      எனவே இந்த நீதியின் பிரகாரம் அனைவரும் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். சகலரும் அல்லாஹ்வின் ஷரீஆவின் சட்டத்தின்  பார்வையில் சமம். எனவே யாருடைய சொந்தங்களும், நட்பும், தொழில் அந்தஸ்து, மற்றும் செல்வம், வறுமை எதுவும் இதில் கவனிக்கப்பட மாட்டாது. ஆகையால் தங்களின் நடவடிக்கைகளின் போது சகலரும் நீதியைக் கையாள்வதும், பொறுப்புகளை நிறைவேற்றுவதும் கடமை. இது பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதாவது,

يَااَيُّهَا الَّذِيْنَ آمَنُوا كُونُوا قَوَّامِيْنَ لِلَّهِ شُهَدَاء بِالقِسْطِ وَلاَ يَجْرِمَنَّكُمْ شَنْئَانُ قَوْمٍ الَّا تَعْدِلُوا اِعْدِلُوا هُوَ اَقْرَبُ لِلتَّقْوَى (المائدة:8)  

     “நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதமாக சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும் படி உங்களைத் தீண்டாதிருக்கட்டும். நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.” (5:8)

    நீதியைப் பற்றி மேலும் அல்லாஹ் குறிப்பிடும் போது,

يَااَيُّهَا الَّذِيْنَ آمَنُوا كُونُوا قَوامِيْنَ بِالقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ  وَلَوْ عَلَى اَنْفُسِكُمْ اَوِ الوَالِدَيْنِ وَالأقْرَبِيْنَ اِنْ يَكُنْ غَنِيًا اَوْ فَقِيْرًا وَاللهُ اَوْلَى بِهِمَا فَلاَ تَتَّبِعُوا الهَوَى اَنْ تَعْدِلُوا (النساء:135)

     “நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். உங்களுக்கோ உங்களின் தாய் தந்தைக்கோ அல்லது உங்களின் உறவினர் களுக்கோ பாதகமாக இருந்த போதிலும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள். அவர் பணக்காரனாயினும் ஏழையாயினும் அவ்விருவருக்கும் அல்லாஹ்தான் பொறுப்பானவன். ஆசைகளைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்.” (4:135)

وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللهِ اَوْفُوا (الأنعام:152)  

    “நீங்கள் எதைக் கூறிய போதிலும் நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள்.” (6:152)

     சகலரும் தமது நடவடிக்கைகளை நீதி நியாயத்துடன் மேற்கொள்ள வேண்டுமென்பதை, அனைவருக்குமான ஒரு பொது விதியாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். எனவே தம் மத்தியில் உண்மையை நிலை நிறுத்தும் போது தனிப்பட்ட சொந்த பந்தங்களையோ, பெரியோர், சிறியோர் என்ற பாகுபாட்டையோ கவனத்திற் கொள்ளாமல் நீதியையே நிலை நிறுத்த வேண்டுமென்பதே அல்லாஹ்வின் கட்டளையாகும்.

      மக்களின் நடவடிக்கை அனைத்தையும் ஒருவகையான ஒப்ப்பந்தத்துடனும், வியாபாரம், குத்தகை போன்ற ஒப்பந்த விதிகளுடனும் அல்லாஹ் சம்பந்தப் படுத்தியிருப்பதும், ஷரீஆ வழங்கும் அனுகூலங்களையும், அதன் மேன்மையையும், அது எல்லா கால, தேச வர்த்தமானங்களுக்கும் பொருத்தமானது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன. மேலும் ஒவ்வொரு சமூகமும் தங்களின் பழக்க வழக்கங்களுக்கும், நோக்கங்களுக் கும், மொழிகளுக்கும் ஏற்ற வகையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒப்பந்த முறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள போதிலும் அவர்களின் வசதி கருதி அந்த ஒப்பந்தங்களை குறிப்பிடத் தக்க சொற்களைக் கொண்டு அவன் கட்டுப்படுத்தவில்லை.

      உதாரணமாக திருமணம், விவாகரத்து, குடும்பத்தின் பராமரிப்புச் செலவு என்பவற்றுடனும், மற்றும் சர்ச்சையின் போது முன்வைக்கும் வாதங்கள், வழக்குத் தொடருதல் போன்றவற்றுடனும் தொடர்புடைய ஒப்பந்தங்களைக் குறிப்பிடலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாருக்கும் அநீதி நிகழாதவாறு ஷரீஆவின் எல்லைக்கு உற்பட்டவாறு ஒவ்வொரு சமூகத்தினதும் தனிப்பட்ட பழக்க வழக்கங்களையும், பரிபாஷைகளையும், நோக்கங்க ளையும் கவனத்திற் கொண்டு நீதியையும், நியாயத்தையும் அமுல்படுத்த வேண்டுமென்பதையே இஸ்லாமிய ஷரீஆ வழியுறுத்து கின்றது. அல்லாஹ்வின் இந்த வசனங்களைக் கவனிப்போம்.

يَااَيُّهَا الَّذِيْنَ آمَنُوا اَوْفُوا بِالعُقُودِ (اللمائدة:01) 

   “நம்பிக்கையாளர்களே! நீங்கள் உடன்படிக்கைகளை முழுமுமையாக நிறைவேற்றுங்கள்.” (5:1)

      இங்கு العقود என்பதன் மூலம்  பொதுவாக உடன்படிக்கை என்பதையே  அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். மேலும்,

وَاَحَلَّ اللهُ البَيْعَ وَحَرَّمَ الرِّبَوا (البقرة:275)   

     “அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வட்டியைத் தடுத்து விட்டான்.” (2:275)

فَإنْ أرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ اُجُورَهُنَّ (الطلاق:6)     

      “பின்னர் உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அதற்குரிய கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.” (65:6)

       அல்குர்ஆனில் ஒப்பந்தம் பற்றி வந்துள்ள விடயங்களுக்கு ஏற்ற வகையில், நிலத்திற்கு நீர் பாய்ச்சுதல், கூட்டு விவசாயம், கூட்டு வர்த்தகம், ஒப்பந்த அடிப்படையில் வேதனம் பெறுதல், பிணையை ஏற்றுக் கொள்ளல், சொத்துக்களை வக்பு செய்தல், உயில் எழுதுதல், திருமணம், விவாகரத்து, குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்ற ஒப்பந்தங்கள் சம்பந்தமாகப பல ஹதீஸ்களில் வந்துள்ளன.

    எனவே அல்குர்ஆனிலும் ஸஹீஹான ஹதீஸ்களிலும் வந்துள்ள இந்த தெளிவான ஒழுங்கு முறைகள் மூலம் அடியார்களின் கருமங்களை சீர்படுத்த முடியும். மேலும், இந்த ஒழுங்கு முறையானது அவர்களின் எல்லா காலத்திற்கும், இடத்திற்கும் பொருத்தமானதாகும். எனவே இதன் மூலம் அவர்களின் நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் தங்களின் வர்த்தகம், திருமணம், விவாகரத்து, வக்புகள், உயில் எழுதுதல் போன்ற காரியங்கள் எதனையும் சிக்கல் எதுவுமின்றி மேற்கொள்ளலாம்.

      உதாரணமாக அல்லாஹ்வின் இந்த வசனங்களைக் கவனியுங்கள்.

وَعَلَى المَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالمَعْرُوفِ (البقرة:233) 

     “மேலும் (பாலூட்டும் தாய்மார்கள்) அவர்களுக்கு உணவும் ஆடையும் முறைப்படி கொடுத்து வருவது குழந்தையின் தந்தை மீது கடமையாகும்.” (2:233)

      இந்த வசனத்தில் المعروف என்ற சொல், வழக்கில் உள்ள முறைப்படி என்ற கருத்திலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை நபியவர்கள், ஹஜ்ஜத்துல் விதாவின் போது தெளிவு படுத்தினார்கள்.

.    மேலும் அடியார்கள்  தங்களின் தவறுகளுக்கு எதிர் வாதம் புரியவும், நியாயங்கள் சொல்லவும் முடியது, என்பதை  இந்த வசனத்தின்  மூலம் அல்லாஹ்  தெளிவுபடுத்துகிறான்.                                                                            

    وَمَا كُنَّا مُعَذَّبِيْنَ حَتَّى نَبْعَثَ رَسُولاً (الإسراء:15)  

    “ஒரு தூதரை நாம் அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.” (17:15)

وَمَا كَانَ اللهُ لِيُضِلَّ قَوْمًا بَعْدَ اِذْ هَدَاهُمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ مَا يَتَّقُونَ (التوبة:115)

     “ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்திய பின்னர், அவர்கள் தவறு இழைக்கும்படி அவன் விட மாட்டான். அவர்கள் விலகிக் கொள்ள வேண்டிய விடயங்கள் எவை என்பதை அவன் அவர்களுக்கு அறிவித்தி வருவான்.” (9:115)

وَاَنْزَلْنَا اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهُمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ (النحل:44) 

       “அவ்வாறே இந்த குர்ஆனையும் நாம் உங்களுக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக இறக்கப்பட்ட இதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பியுங்கள்.” (16:44)

        என்ற இந்த இறை வாக்குகளின் மூலம்,   அடியார்களுக்கு சட்டங்களை எல்லாம் தெளிவு படுத்துவது இன்றியமையாதது,  என்பதை அல்லாஹ் விளக்கியுள்ளான். எனவே யாரும் தங்களின் தவறுகளுக்காக எதிர்வாதம் செய்யவும், நியாயங்கள் கூறவும்  வாய்ப்பில்லை.

        மேலும் இஸ்லாமிய ஷரீஆவானது மக்களின் பழக்க வழக்கங்கள், பாரம்பரியம், மொழி என்பவற்றின் மீது கவனம் செலுத்துகிறது. எனவே சட்டங்களும், தீர்ப்புகளும் வெளியிடப்படும் போது அதனை கவனத்தில் கொள்வது அவசியம் என இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் اعلام الموقعين என்ற தனது நூலில் பிரத்தியேகமாக ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். ஏனெனில் சிலவேளை ஒரு நாட்டினதும் பிரதேசத்தினதும் பாரம்பரியம் இன்னொரு நாட்டினதும் பிரதேசத்தினதும் பாரம்பரியத்துக்கு வித்தியாச மாக இருக்கக் கூடும். அவ்வாறே மனிதர்களின் நோக்கங்களும், பழக்க வழக்கங்களும் பரஸ்பரம் வித்தியாச மானவையாக இருக்கலாம். அது மாத்திரமன்றி ஒரு காலத்திற்கு பொருத்தமானது, இன்னொரு காலத்திற்கும், இடத்திற்கும் பொருத்தமில்லாமல் இருக்கலாம். எனவே தீர்ப்பு வழங்கும் போது இவற்றையெல்லாம் கருத்திற் கொள்வது அவசியம்.

      உதாரணமாக நபியவர்களின் மக்கா கால பிரச்சார முறைக்கும், மதீனா கால பிரச்சார முறைக்கும் இடையில் இருந்த வேறுபாட்டைக் குறிப்பிடலாம். இதுவெல்லாம் கால, தேச வர்த்தமானங்களிலும், பலத்திலும், பலவீனத்திலும், நிலவிய வேறுபாடுகளின் காரணமாக நிலவியவையே.  அல்லாஹ் இவ்வாறு தன் அடியார்களின் நிலைமைகளின் மீது கவனம் செலுத்தியிருப்பது அவனின் பெரும் ஞானத்துக்கோர் எடுத்துக் காட்டாகும். ஏனெனில் ஒரு பிரதேசத்தில் வர்த்தகம், விவாகரத்து போன்ற உடன்படிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு பயன்படுத்தும் சொல் இன்னொரு பிரதேசத்தில் பிரிதொரு கருத்தில் பயன்படுத்தக் கூடும். அவ்வாறே ஒரு காலத்திற்கு சாத்தியமானது இன்னொரு காலத்திற்கு அசாத்தியமாகலாம். என்று தொடர்ந்து விளக்கமளித்த இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள், இதனை பல உதாரணங்களின் மூலம் தெளிவு படுத்தியுள்ளார்கள். அதில் ஒன்றுதான் “எதிரிகளின் பூமியில் இருக்கும் போது (கசையடி, மரண தண்டனை போன்ற) தண்டனைக்கு இலக்கான ஒரு முஸ்லிம் போராளிக்கு, எதிரியின் பூமியில் வைத்து அந்தத் தண்டனை வழங்குவதை நபியவர்கள் தடுத்தார்கள். என்ற உதாரணம். இது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர்கள் “ சில வேளை அதனால் அந்தப் போராளி சினம் கொள்ளக் கூடும். அப்போது அவன் மீது ஷைத்தான் ஆதிக்கம் கொள்வானாகில் எதிரியும் அவனுக்குப் பக்கத்தில் இருக்கின்ற படியால் அவன் இஸ்லாத்தை விட்டும் விலகி ஒரு முர்த்தத்தாகி விடலாம்” என்ற காரணமாக இருக்கலாம், என விளக்கம் தந்துள்ளார்கள்.

   இப்னுல் கையூம் (ரஹ்) இதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறார்கள். அதுதான் பட்டினி காலத்து நிலவரம். கடுமையான பஞ்சமும், பட்டினியும் தாண்டவமாடும் காலத்தில் ஒரு திருடன் தன்னுடைய பட்டினியையும், நெருக்கடியையும்  நீக்க வழியேதும் இல்லாத காரணத்தால், தான் திருட வேண்டி வந்தது என அவன் வாதிடும் போது அவனின் கையைத் துண்டிக்க சட்டம் இடம் தராது. ஏனெனில் அவனின் கையை வெட்ட அனுமதியளித்த சட்டமானது, நெறுக்கடியான இந்த சந்தர்ப்பத்தில் அவனுடைய விடயத்தை சந்தேகத்துடனும் நோக்கும். எனவே சந்தேகமானது "حَدٌّ" என்ற தண்டனையைத் தவிர்க்கும் என்பது நியதியாகும். இந்த நியதியின் படிதான் அனர்த்த காலத்தில் திருடியவனின் கையை வெட்ட வேண்டாம் என உமர் (ரழி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

       எனவே தீர்ப்பு வழங்கு முன்னர் அதன் விளைவு எப்படி அமையும் என்பதை கவனத்தில் எடுப்பது  அவசியம். ஒரு கருமத்தின் முடிவினைக் கவனிப்பது அவசியம் என்பதை அல்லாஹ்வின் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

فَاعْتَبِرُوا يَااُولِى الأبْصَارِ (الحشر:2)  

       “சிந்தனையுடையவர்களே! (இதனைக் கொண்டு) நீங்கள் உணர்ச்சி பெறுவீர்களாக!” (59:2)

اِنَّ العَاقِبَةَ لِلْمُتَّقِيْنَ (هود:49)

     “நிச்சயமாக முடிவான வெற்றி இறையச்சம் உடையவர்களுக்குத்தான்.” (11:49)

وَلاَ تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُونَ مِنْ دُونِ اللهِ فَيَسُبُّوا اللهَ عَدُوًا بِغَيْرِ عِلْمٍ (الأنعام:108)

     “அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள்” (6:108)

       எனவே ஒரு கருமத்தை மேற்கொள்ள முன்னர் அதன் விளைவு பற்றி கவனத்தில் கொள்வது அவசியம் என்பது இதிலிருந்து புலனாகிறது.

      இதனால் தான்  "الأمر بَالْمعرُوف والنهي عن المنكر" நன்மையை ஏவுதல், தீமை விட்டும் தடுத்தல் என்ற   காரியத்தில் ஈடுபாடுடைய ஒருவர், ஏதேனும்  தகாத காரியம் ஒன்றினை தடை செய்ய விளையும் போது, அது அவர் தடை செய்ய விரும்பும் காரியத்தைப் விடவும், இன்னொரு தகாத காரியத்தை  தோற்றுவிக்க இடமளிக்குமானால், அப்போதவர் தான் தடை செய்ய நினைத்த அந்த காரியத்தை தடுக்கக் கூடாது. ஏனெனில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தகாத அந்த கருமத்தை விட்டும் அவனைத் தடுக்க முயலுவது அதை விடவும் தகாத இன்னொரு செயலை அவன் செய்யும் படி ஆக்கிவிடும், என்பதால் அவனின் அந்தத் தகாத செயலை, அப்போது தடுக்கக் கூடாதெனவும், இது ஒரு கருமத்தின் முடிவை கருத்திற் கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கை என்றும் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

       உதாரணமாக ஒரு குடிகாரனை குடிக்க வேண்டாம் என நீங்கள் தடை செய்யும் போது, அவன் ஆத்திரமடைந்து யாரையேனும் கொலை செய்யக் கூடுமென கண்டால், அவ்வாறான சந்தர்ப்பத்தில் மதுபானம் அருந்தும் குற்றச் செயலை விட்டும் அவனைத் தடுக்காமல் இருப்பதே மேல். ஏனெனில் ஒரு மனித உயிரைக் கொல்வதைப் பார்க்கிலும் மது அருந்தும் குற்றம் சிறியதாகும். என்று இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் மேலும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

        இதன் நோக்கம் ஒரு கருமத்தின் விளைவை கவனத்தில் கொள்வது அவசியம் என்பதே. இவ்வாறே மக்களின் ஒப்பந்த விடயங்களிலும் நன்மையைக் கொண்டு ஏவுதல், தீமையை விட்டும் தடுத்தல் எனும் காரியங்களில் கவனம் செலுத்தும் போதும், அந்தந்த மக்களின் பழக்க வழக்கங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், எண்ணங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்வது அவசியம்.  அவ்வாறே இரண்டு தீமைகளை ஏக காலத்தில் தடை செய்ய பலம் இல்லாத போது, நாசங்களைத் தவிர்த்து நலன்களை அடைவதும், சார்பில்லாத பிரதிபலனை தவிர்த்து, சாதகமான பலனை அடைவதும்,  சிறிய தீமைக்கு  இடமளித்து பெரிய தீமைகளுக்கு இடமளிக்காது இருப்பதுமே இதன் நோக்கமாகும்.

    பரிபூரணமான இஸ்லாமிய ஷரீஆ, கொண்டு வந்த மகத்தான இந்த விடயங்கள் யாவும், அதன்  அனுகூலங்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொருப்பாக வுள்ள நீதிபதிகள், முப்திகள், அமைச்சர்கள், போன்றோர் இஸ்லாமிய மார்க்கத்தின் இந்த அனுகூலங்களின் மீது அக்கறை செலுத்துவது கடமையாகும். மேலும் ஷரீஆவின் வரையறை களுக்கு உட்பட்ட முறையில், சம்பாத்தியத்திலும், கொடுக்கல் வாங்கல்களிலும் சுதந்திரமாக ஈடுபாட,  இஸ்லாம் மார்க்கம் இடமளித்துள்ளது. அதுவும் இஸ்லாம் வழங்கும் மற்றுமொரு அனுகூலமாகும்.

     இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَاكْتَسَبَتْ (البقرة:286)  

      “அவை தேடிக் கொண்டதன் நன்மை அவைகளுக்கே உரியன. அவை தேடிக் கொண்டதன் தீமையும் அவைகளுக்கே உரியன.” (2:286)

       மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், யாசிப்பதை விட உழைப்பது மேல் என்ற படியால் அதனை ஊக்குவித்தார்கள். நபியவர்களின் இந்தக் கூற்றைக் கவணியுங்கள்.

لَأنْ يَأخُذَ اَحَدُكُمْ حَبْلَهُ فَيَأتِي بِحُزمَةِ حَطَبٍ عَلَى ظَهْرِهِ فَيَبِيْعُهَا فَيَكُفَّ بِهَا وَجْهَهُ خَيْرٌ لَهُ مِنْ سُؤالٍ النَّاسِ أعْطُوهُ أوْ مَنَعُوهُ  

    “உங்களில் எவரேனும் மனிதர்களிடம் சென்று யாசகம் கேட்க, அதனை அவனுக்கு அவர்கள் கொடுப்பதையோ, அல்லது அதனை அவனுக்கு கொடுக்க மறுப்பதையோ விட, அவன் கயிற்றை எடுத்துச் சென்று விறகுக் கட்டு ஒன்றைக் கட்டி யெடுத்து அதனை விற்பனை செய்வது, அவன் யாசிப்பதை விட மேலானது.” என்றார்கள்.

       மேலும் சிறந்த சம்பாத்தியம் எதுவென நபியவர்களிடம் விசாரிக்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் மனிதனின் கரத்தின் உழைப்பு என்றும், மற்றும் நியாயமான அனைத்து வியாபாரங்களும் என்று கூறினார்கள். மேலும்,

مَا اَكَلَ اَحَدٌ طَعَامًا اَفْضَلَ مِنْ اَنْ يَأكُلَ مِنْ عَمَلٍ يَدِهِ، وَكَانَ نَبِيُّ اللهِ دَاوُدُ عَلَيْهِ السَّلاَم يَأكُلَ مِنْ يَدِهِ 

     “தன் கரத்தால் சம்பாதித்து உண்ட உணவைத் விட சிறந்த  உணவு எதுவும் இல்லை, அல்லாஹ் வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தன்னுடைய கரத்தின் ஊழியத்தின் மூலமே சாப்பிட்டு வந்தார்கள்.” என்றும் நபியவர்கள் கூறனார்கள்.

       இவ்வாறு சம்பாத்தியத்திற்கும், தொழிலுக்கும் வாய்ப்பளித்துள்ள இஸ்லாமிய ஷரீஆ, அதன் பால் அழைப்பு விடுத்தும் வருகிறது. மேலும் தன் உழைப்பின் ஊழியத்துக்கு தொழிலாளியே அருகதை யுடையவன் என்பதையும் இஸ்லாம் உறுதி செய்கிறது. எனவே நியாயமின்றி யாரும் இன்னொரு சகோதரனின் உடல், பொருள், ஆவி எதனையும் எடுத்துக் கொள்வதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

           இவ்வாறு மனிதனின் உடல், பொருள், ஆவி என்பவற்றுக்குப் பாதுகாப்பு அளித்து மனிதனைத் தொழிலில் ஈடுபட்டு பொருளீட்டுமாறு அவனை இஸ்ஸாமிய மார்க்கம் ஊக்குவித்துள்ளதானது, இஸ்லாமிய ஷரீஆ அவனுக்குத் தந்துள்ள மிகப்பெரிய பொருதார அனுகூலமாகும்.

     இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸைக் கவனியுங்கள்.

اِحْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللهِ وَلاَ تَعْجِزْ فَإنْ اَصَابَكَ شَيْءٌ فَلاَ تَقُلْ لَوْ أنِّيْ فَعَلْتَ كَذَا أوْ كَذَا وَلَكِنْ قُلْ قَدَّرَ اللهُ وَمَا شَاءَ فَعَلَ فَإنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ 

     “அல்லாஹ்வின் உதவியை வேண்டியவனாக உனக்கு பயன் தரும் காரியத்தில் ஆர்வத்துடன் ஈடுபடு. இயலாது என்று ஒதுங்கி விடாதே! அப்போது உனக்கேதேனும் நிகழ்ந்து விட்டால், நான் இப்படி செய்திருந்தால் இன்னது இன்னது நடந்திருக்கும். என்று கூறாதே! பதிலாக அல்லாஹ்வோ, அவன் நிர்ணயித்தையும், நாடியதையும் செய்திருக்கின்றான். என்று கூறுங்கள். ஏனெனில் அப்படி செய்திருந்தால் இப்படி செய்திருந்தால் என்று சொல்வது ஷைத்தானின் காரியத்தைச் செய்ய வழிவகுக்கும் ” என்று நபியவர்கள் கூறினார்கள்.

        இவ்வாறு இஸ்லாமிய ஷரீஆ வழங்கும் அனுகூலங்களும், பயன்களும் ஏராளம். அதனுடன் தொடர்புள்ள விடயங்களை இன்னும் நான் சொல்லத் தொடங்கினால் இந்த சந்தர்ப்பம் மேலும் நீண்டு கொண்டே செல்லும். எனினும் நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும், அடியார்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும், நலன்களுக்கும் பொருத்தமான பல அனுகூலங்களை இஸ்லாமிய ஷரீஆ உள்ளடக்கியுள்ளது, என்பதைப் புரிந்து கொள்வதற்கு,  அறிவுள்ளவனுக்கு இந்த குறுகிய எடுத்துக்காட்டுகள் போதுமானது.

         எனினும் இச்சந்சர்ப்பத்தில் இஸ்லாமிய ஷரீஆ வழங்கும் இன்னொரு அனுகூலத்தையும், பலனையும் பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமான தாகும். அதுதான் பாவங்களுக்குப் பரிகாரமான தொளபா - பாவமன்னிப்பாகும். முந்திய சமூகத்தின ருக்கு இந்த வாய்ப்ப்ப தரப்படவில்லை. முன்னைய சில சமூகம் தங்களின் பாவ காரியத்தின் குற்றப் பரிகாரமாக தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டுமென்று அவர்களின் ஷரீஆ கூறியது. ஆனால் இந்த உம்மத்தின் மீது, தன் அருளை வாரி வழங்கிய அல்லாஹ் இந்த ஷரீஆவில் அப்படிச் செய்யவில்லை. அடியான் தன் குற்றத்தையும் பாவச் செயலையும் எண்ணி, பட்சாதாபப்பட்டு அதிலிருந்து மீட்சி பெற்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவது போதுமானது. இப்படி இதய சுத்தியுடன் உண்மையாக தொளபா - பாவமன்னிப்புக் கோரினால் அதன் மூலம், அவன் கடந்த காலத்தில் விட்ட தவறை சீர்திருத்திக் கொள்வதற்கும், தீமைகளைத் தடுத்துக் கொள்வதற்கும் அவனுக்கு வாய்ப்புண்டு. இது இந்த ஷரீஆ வழங்கும் விஷேசமான ஒரு வரப்பிராசாதமாகும்.

     எனவே இந்த ஷரீஆவின் அடிப்படைகளையும் அது வழங்கியிருக்கும் நீதியான மகத்தான சட்ட விதிகளையும், மற்றும் ஏழைகள், தேவைப்பட்டோர், சிறியோர், பெரியோர் என சகல மக்களினதும் நலனின் மீது அது அக்கறை கொண்டுள்ளதையும், அது மாத்திரமின்றி இந்த ஷரீஆ வானது மிருகங்களின் விடயத்திலும் அநியாயங்கள், அத்துமீறல்கள் நடக்காதவாறு கவனம் செலுத்தி யுள்ளது, என்பதையும் ஒருவன் கவனிப்பானாகில், தன் அடியார்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், அவர்களின் நலன்களையும் பற்றி மிகவும் அறிந்த வல்லமை மிக்க அல்லாஹ்விட மிருந்துதான்  இந்த ஷரீஆ வந்துள்ளது என்பதை அவன் புரிந்து கொள்வான்.

      மேலும் இந்த உறுதியான ஆதாரங்களின் மூலம் அல்லாஹ் ஒருவன் இருக்கிறான், என்பதையும் மற்றும் அவனின் வல்லமையும் ஞானமும் அறிவும் பரிபூரணமானது என்பதையும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான தூதர் என்பதையும் அவன் அறிந்து கொள்வான்.

      இவ்வாறே செல்வந்தர், வறியவர், முதலாளி, தொழிலாளி, ஆளுபவன், ஆளப்படுகின்றவன், தனி மனிதன், குழுக்கள் என்ற பாகுபாடின்றி எல்லா அடியார்களின் நிலைமைகளின் மீதும் இந்த ஷரீஆ கவனம் செலுத்தி யிருக்கின்றது என்பதையும், அவர்களின் நலன்களின் அடிப்படையில் அவர்களுக்கு சட்டங்களை அமைத்துத் தந்துள்ளது என்பதையும் கவனித்து வரும் ஒருவன் இந்த ஷரீஆ முற்றிலும் நலன்களைப் பேணக் கூடியது. அது முற்றிலும் ஞானங்களை உள்ளடக்கியது. அது முற்றிலும் நேர் வழியை உடையது. அது முற்றிலும் நேர்மையானது என்பதைக் கண்டு கொள்வான். ஆனால் என்னதான் விளக்கங்கள் கூறிய போதிலும் நீதிக்கு எதிரான அநீதியுடனும், நலனுக்கு எதிரான வீணான கருமத்துடனும், அன்புக்கு எதிரான அடக்கு முறையுடனும், இஸ்லாமிய ஷரீஆவுக்கு எந்தத் தொடர்புமில்லை. அவை யாவும் ஷரீஆவுக்கு அப்பாற்பட்டவையாகும். இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் இந்த ஷரீஆவைப் பற்றிக் குறிப்பிடும் போது , “ஷரீஆவானது முற்றிலும் அன்பையும், நீதியையும், ஞானத்தையும் உள்ளடக்கிய, முற்றிலும் அடியார்களின் நலனைப் பேணுவதில் அக்கறை கொண்ட,  சகல வீணான விடயங்களையும், அநீதிகளையும், சிரமங்களையும் விட்டும் தூரமான மார்க்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

   இது வரை கூறியதிலிருந்து இந்த ஷரீஆவில் எத்தனை  உயர்ந்த நலன்கள் பொதிந்துள்ளன என்பதைக் காண முடிந்தது. எனவே இவற்றைக் கவனமாகக் கவனித்து வந்த ஒருவனுக்கு,  இந்தத் தலைப்பின் இரண்டாவது பிரிவில் நான் சொல்ல நினைத்த ‘அதன் பால் மனிதனின் தேவை’ என்ற விடயம் தெளிவாகத் தெரிய வரும்.   நிச்சயமாக இந்த ஷரீஆவானது அடியார்களின் இவ்வுலக, மறு உலக விடயங்களில் கவனம் செலுத்துகிறது. மேலும் வெற்றியின் பக்கம்மும் நற்பாக்கியத்தின் பக்கமும் அவர்களைக் கொண்டு சேர்க்கத் தேவையான வழியையும் அவர்களுக்குச் சித்தப்படுத்தித் தந்துள்ளது. என்பதையும்,  அவனுடைய ஷரீஆ தான் நேரிய, தெளிவான, உறுதியான வழிமுறை என்பதையும்  அல்லாஹ் தன் வேதத்தில் தெளிவுபடுத்தி யுள்ளான். எனவே எவர் அந்த வழியில் உறுதியாக இருப்பாரோ அவர் ஈடேற்றம் பெறுவார். எவன் அதனை விட்டும் விலகிக் கொண்டானோ அவன் நாசமடைவான்.

       மேலும் இதன் பக்கம் கவனம் செலுத்தும் ஒருவன் இந்த ஷரீஆ நூஹ் (அலை) அவர்களின் கப்பலைப் போன்றது என்பதைத் தெரிந்து கொள்வான். அதில் யார் ஏறிக் கொண்டாரோ பிழைத்துக் கொண்டார். எவன் அதில் ஏறிக் கொள்ள பின்வாங்கினானோ அவன் வெள்ளத்தில் மூழ்கிப் போனான். இந்த மகத்தான ஷரீஆவும் அப்படித்தான். யார் அதனைப் பற்றிப் பிடித்து அதில் இஸ்திரமாக இருப்பாரோ அவர் ஈடேற்றம் பெறுவார். எவன் அதனை விட்டும் விலகிக் கொள்வானோ அவன் அழிந்து போவான்.

      இஸ்லாமிய ஷரீஆவில் அடியார்களின் பிரச்சினை களுக்குத் தீர்வும் நீதியான சட்டங்களும் இருக்கின்ற படியாலும்,  மார்க்கத்தை விமர்சிக்கின்ற, அதனை விட்டும் விலகிப் போன சோஷலிஸ - மாக்ஸிஸ வாதங்களுக்கும் அநியாயக்கார முதலாளித்துவத்திற்கும் மத்தியில் அது நடுநிலையாக இருக்கின்ற படியாலும் இஸ்லாமிய ஷரீஆதான் எல்லா விடயங்களிலும் நடுநிலையானது, மேலும் மார்க்கத்தை விட்டும் பிரிந்து போன சோஷலிஸத்தின் பொருளாதார, பொருள் முதல் வாதக் கொள்கைக்கும் எல்லையற்ற அநியாயக்கார முதலாளித் துவக் கொள்கைக்கும் மத்தியில் நடுநிலைமையானது. எனவே இது தான் அவ்விரண்டு அநீதிக்கும் மத்தியில் நடுநிலையான மார்க்கமாகமாகும் என்பதை ஒரு புத்திசாலி இதிலிருந்த தெளிவாகப் புரிந்து கொள்வான் . அவ்வாறே ஷரீஆ எந்தவொரு அநீதிக்கும், அநியாயத்திற்கும் சார்பில்லாத, சகல காரியங்களிலும் நடுநிலையான வழி என்பதும் அவருக்குத் தெளிவாகி விடும். எனவே இந்த ஷரீஆவில் வீண் விரயத்துக்கும், கருமித்தனத்துக்கும் இடமில்லை. அது செலவு செய்யும் விடயத்திலும் அதனைக் கட்டுப்படுத்துவதிலும் நடுநிலையான போக்கையே கையாள்கின்றது.

      இது பற்றி அல்லாஹ் கூறும் போது,

وَلاَ تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً اِلَى عُنُقِكَ وَلاَ تَبْسُطْهَا كُلَّ البَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَّحْسُورًا (الإسراء:29)

       “உங்களுடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அன்றி உங்களுடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்கள். அதனால் நீங்கள் நிந்திக்கப் பட்ட வராகவும், முடைப்பட்டவராகவும் தங்கி விடாதீர்கள்.” (17:29)

وَالَّذِيْنَ اِذَا اَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا (الفرقان:67)

      “அன்றி அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டர்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள்.” (25:67) என்று கூறுகிறான்.

           எனவே இதனைக் கவனமாக சிந்திக்கின்றவன் இந்த ஷரீஆவானது வெறுமனே மார்க்கம் மட்டுமல்ல, மாறாக அது மார்க்கமும், அரசுமாகும். வேத நூலும், வாளாயுதமுமாகும். வழிபாடும், மக்களுடனான சிறந்த நடவடிக்கைச் சாதனமாகும். போராட்டமும், நற்கிரியைகளு மாகும். தர்மமும், பரோபகாரமுமாகும். இறை வழிபாடும் மற்றும் கடந்த கால பாவங்களுக்குத் தொளபாவும், எதிர்காலத்துக்கான செயல்களுமாகும் என்பதைப் புரிந்து கொள்வான். இவ்வாறு இந்த மார்க்கத்தின்  அனைத்து கருமங்களும் நன்மை பயக்கக் கூடியவையே. எனவே நமது உலக வாழ்க்கையிலிருந்து நமது மார்க்கத்தையும்,  நமது மார்க்கத்திலிருந்து  நமது உலக வாழ்க்கையையும் பிரித்து விடக்கூடாது. ஏனெனில் இஸ்லாமிய சாஸனத்தின் படி நமது மார்க்கமும், நமது உலக வாழ்வும் இரண்டரக் கலந்தவையாகும். இனி அல்லாஹ்வின் இந்த திரு வசனத்தைப் படியுங்கள்.

إنَّ اللهَ يَأْمُرُكُمْ اَنْ تُؤدُوا الأمَانَاتِ اِلَى اَهْلِهَا وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوا بِالعَدْلِ، اِنَّ اللهَ نِعِمَّا يَعِضُكُمْ بِهِ اِنَّ اللهَ كَانَ سَمِيْعًا بَصِيْرًا (النساء:58)

      “உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும் மனிதர்களுக் கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாதவும் உற்று நோக்குகின்றவனாகவும் இருக்கின்றான். “ (4:58)

       எனவே இந்த ஷரீஆவானது அமைச்சர், அமைச்சரல்லாதோர், தனியாள், குழுக்கள் என்ற பாகுபாடின்றி சகலரின் மீதும் நீதி செலுத்துகின்றது. இதன் பிரகாரம் எல்லா விடயத்திலும் அவர்கள் யாவரும் அதன் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவர்களே. எனவே எவனாவது அரசிலிருந்து மார்க்கத்தைப் பிரிக்கவும், மார்க்கத்திற்குரிய இடம் பள்ளிவாசல் களும் வீடுகளும் என்றும், அரசு தான் விரும்பியதை செய்யவும் விரும்பிய படி ஆட்சி செய்யவும் முடியும் என்றும் கூறுவானாகில் அவன் அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் மகா அபவாதத்தையும், அபாண்டத்தையும் சுமத்தியவனாவான். மேலும் அவனின் அந்த காரியம் மிக்க மோசமான தவறு மாத்திரமல்ல. மாறாக அது குப்ரும், பெரிய வழிகேடுமாகும். எனவே அதிலிருந்து யாவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! எனவே வழிபாடுகளும்,  அவை அல்லாதவைகளும் என்ற வித்தியாசமின்றி ஷரீஆவின் சகல சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பது அடியார்கள் அனைவர் மீதும் கடமை. மேலும் அரசு தன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துவது அதன் கடமை. இவ்வாறு தான் எல்லா விடயங்களிலும் நபிய வர்களும் அன்னாரின் தோழர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த இஸ்லாமியத் தலைவர்களும், இமாம்களும் நடந்து கொண்டனர். இவ்வாறு இந்த ஷரீஆவை மக்களின் ஜீவ நாடியாகவும், ஒளியாகவும், மக்களின் வாழ்க்கையாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான்.

         எனவே இந்த ஷரீஆ உங்களுக்கும் மற்றும் முழு மனித சமூகத்திற்கும் கட்டாயத் தேவை என்பதை இதிலிருந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனெனில் இதுவே வாழ்வு, இதுவே பிரகாசம், இதுவே ஈடேற்றத்தின் பால் கொண்டு செல்லும் நேரிய பாதையுமாகும். இதுவல்லாத அனைத்தும் இருள் மயமானது. உயிரில்லாதது மற்றும் துர்ப்பாக்கியமு மாகும். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

اًوَ مَنْ كَانَ مَيْتًا فَأحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَّثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِّنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِيْنَ مَا كَانُوا يَعْمَلُونَ  (الأنعام:122)  

         “மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவ தற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவன் இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமல் இருப்பவனுக்குச் சமமாவானா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்க ளுடைய செயல்கள் அழகாக்கப்பட்டுவிட்டன.” (6:122)

      இவ்வாறு ஷரீஆவை விட்டும் வெளியேறிய வனை உயிரில்லாத பிணமாகவும், அதன் வழியில் சென்றவனை உயிருள்ள ஜீவனாகவும் அல்லாஹ் ஆக்கி விட்டான். மேலும் ஷரீஆவை ஏற்க மறுத்தவன் இருளில் இருக்கின்றான் என்றும் ஷரீஆவின் படி நடந்தவன் வெற்றியையும், நேர்வழியையும் அடைந்து கொண்டான் என்றும் அவன் கூறுகிறான்.

     மேலும் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

يَاَيُّهَا الَّذِيْنَ آمَنُوا اسْتَجِيْبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْ (الأنفال:24)

       “நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும் தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் அதற்குப் பதில் கூறுங்கள்.” (8:24)

        எனவே அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் ஏற்றுக் கொள்வதை உயிருள்ளது என்றும், அவர்களை ஏற்க மறுப்பதை உயிரில்லாத பிணம் என்றும் அல்லாஹ் ஆக்கி விட்டதை இங்கு காணலாம். இதிலிருந்து இந்த ஷரீஆவானது இந்த உம்மத்துக்கு பாக்கியத்தைப் பெற்றுத் தரக் கூடியது என்பது தெரிய வருகிறது. எனவே இதுவல்லாத வேறு எதிலும் அவர்களுக்கு உயிருமில்லை, பாக்கியமுமில்லை என்பது துலாம்பரமாகிறது.

     மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

  وَكَذَلِكَ اَوْحَيْنَا اِلَيْكَ رُوْحًا مِنْ اَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَالكِتَابُ وَلاَ الإيْمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِنْدِنَا وَاِنَّكَ لَتَهْدِيْ اِلَى صِرَاطٍ مُسْتَقِيْمٍ (الشورى:52)

       “இவ்வாறே உங்களுக்கு நம்முடைய கட்டளையை வஹியின் மூலமாக அறிவிக்கின்றோம். நீங்கள் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்திருக்க வில்லை. ஆயினும் அதனை நாம் ஒளியாக ஆக்கி நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதனைக் கொண்டு அவர்களை நேரான வழியில் செலுத்து கின்றோம். நிச்சயமாக நீங்கள் நேரான பாதைக்கு வழி காண்பிக்கின்றீர்கள்.” (42:52)

       இந்த வசனத்தில் ரஸுல் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய வேதத்தை روح – உயிர் என்றும், نور –ஒளி என்றும் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். எனவே அந்த உயிர் போன்ற மார்க்கத்தின் மூலம் அடியார்களின் வாழ்வு வளம் பெறும். அவ்வாறே அதன் ஒளியின் மூலம் அவர்களுக்கு நல்ல தெளிவும், ஈடேற்றமும் கிட்டும். மேலும் தங்கு தடையின்றி நேரிய பாதையில் அவர்கள் செல்லவும் முடியும். ஆகையால் இந்த உம்மத்தின் இருப்பையும் வெற்றியையும் தக்க வைத்துக் கொள்ளும் அவர்களின் உயிர், இந்த ஷரீஆ தான். மேலும் இதுதான் இந்த உம்மத்தின் ஒளியுமாகும். அதன் மூலம் தான் ஈடேற்றத்தின் காரணங்களைக் கண்டறிந்து அதன் பால் கொண்டு செல்லும் தெளிவான பாதையில் செல்ல முடியும். எனவே அந்த الصراط المستقيم என்ற நேரான பாதையில் எவன் சென்றானோ அவன் ஈடேற்றம் பெறுவான். எவன் அதனை விட்டும் விலகிக் கொண்டானோ அவன் நாசமடைவான்.

مَنْ عَمِلَ مِنْ ذَكَرٍ أوْ أُنْثَى وَهُوَ مُؤمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنُخْرِجَنَّهُمْ بِأحسَنِ ما كَانُوا يَعْمَلُوْنَ (النحل:97)     

     ஆணாயினும் பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயகைளை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். அன்றி அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே அவர்களுக்குக் கொடுப்போம்.(16:97)

      யார் ஈமானுடன் நற்செயல்களைச் செய்து வந்தாரோ, அவருக்கு நல் வாழ்வைத் தருவதாக அல்லாஹ் இங்கு வாக்களித்துள்ளான். மேலும் இஸ்லாமிய ஷரீஆவை விட்டும் விலகிய காபிர்களின் வாழ்வு நல் வாழ்வல்ல. அது துக்கம், துயரம், கவலை, சோதனை நிறைந்த வாழ்க்கை. மேலும் அவர்களின் வாழ்க்கை மிருக வாழ்க்கையை போன்று, ஆசையையும், அவசர பாக்கியங்களையும் அடைவதைக் குறிக்கோலாக்க கொண்டது. வேறு வார்த்தையில் சொல்வதானால் அவர்களின் வாழ்க்கை கால்நடைகளின் வாழ்க்கையை விட படு மோசமானது. அதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,

أَمْ تَحْسَبُ أنَّ أكْثَرَهُمْ يَسْمَعُونَ أوْ يَعْقِلُوْنَ إنْ هُمْ إلاَّ كَالأَنْعامِ بَلْ هُمْ أضَلُّ سَبِيْلا (الفرقان:44)

         அவர்களில் பெரும்பாலானவர்கள் (உம்முடைய கூற்றை)  கேட்கிறார்கள் என்றோ அல்லது உணர்ந்து கொள்கிறார்கள் என்றோ நீங்கள் எண்ணிக் கொண்டீர்களா? அன்று அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களே, அன்றி வேறில்லை. பின்னும் (அவற்றை விட) மிகவும் வழி கெட்டவர்களாகவும் இருக்கின்றனர்.(25:44) 

وَالّذِيْن كَفَرُوا يَتَمَتَّعُونَ  وَيَأكُلُونَ كَما تَأْكُلُ الأَنْعامُ  وَالنَّارُ مَثْوًى لَهُمْ (محمد:12) 

               எவர்கள் நிராகரிக்கன்றார்களோ அவர்கள் உலக சுகத்தை அனுபவித்துக் கொண்டும், கால் நடைகள் தின்பதைப் போன்று தின்று கொண்டும், சுகத்தை அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றனர். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்.(47:12)

    உண்மையில் ஷரீஆவை விட்டும்  விலகியோரின் வாழ்க்கை சாவுக்குச் சமமானது. ஏனெனில்  அவர்கள் தம் கடமை என்ன வென்பதை யும், தாங்கள் எதற்காகப் படைக்கப்பட்டோம் என்பதையும் உணரவில்லை. எனவே அவர்களின் வாழ்க்கை காநடைகளைப் போன்று, ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதையும்,  அவசர அதிஷ்ட்டங்களைத் அடைந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது. எனவேதான் ஈமானையும் நேர் வழியையும் பெற்றவர்களை செவி உள்ளவர்கள், பார்வை உள்ளவர்கள் என்றும், ஷரீஆவின் பாதையை விட்டும் விலகியவர்களை குருடர்கள், செவிடர்கள் என்றும் அல்லாஹ் ஒப்பிட்டுள்ளான்.

       எனவே சகோதரர்களே! இந்த ஷரீஆவிலே தான்  மனித சமூகத்தின் ஈருலக வாழ்வின் பாக்கியமும், ஈடேற்றமும் இருக்கின்ற படியாலும் இதிலே அநியாயக் காரனிடமிருந்து அநீதி இழைக்கப்பட்டவனுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கான வழியும் இருக்கின்ற படியாலும் இந்த ஷரீஆ ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயமாகத் தேவை என்பதை இதுவரை கூறியதிலிருந்து புரிந்து கொண்டோம். இதனால்தான் இந்த ஷரீஆ மகத்தானதாகவும், பரிபூரணமானதாகவும் விளங்கு கிறது. எனவே இதன்பால் திரும்பி இதனைப் பற்றிப் பிடிக்காத வரை மனிதனின் பிரச்சினைகளுக்குத் தீர்வுமில்லை. நற்பாக்கியமும் இல்லை. முஸ்லிம் சமூகம் இன்று சிக்குண்டுள்ள பிரிவினை, முரண்பாடு, பலவீனம், இழிவு என்பவற்றுக்கும் தீர்வும் இல்லை.

      எனவே இந்த ஷரீஆவை சரியாக விளங்கிக் கொள்ளவும் அதன்படி செயற்படவும் மேலும் நம் அனைவருக்கும், ஏனைய அடியார்களுக்கும் அதன் வழியில் செல்லவும் வழிகாட்டுமாறு அல்லாஹ்வை வேண்டுகிறேன். மேலும் இஸ்லாமிய ஆட்சியாளர் களினதும், அதிகாரிகளினதும் நிலைமையை சீர் செய்து அவர்கள் இந்த ஷரீஆவை பற்றிப் பிடித்து அதன்படி செயற்படவும் அதன் பிரகாரம் ஆட்சி புரியவும் வாய்ப்பளிக்குமாறும், சகல தீமைகளிருந்தும், வழிகேடர்களின் கெடுதிகளிலிருந்தும்  நம்மையும் அவர்களையும் பாதுகாக்குமாறும்  அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

وصلى الله وسلم علي عبده ورسوله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين

والسلام عليكم ورحمة الله وبركانه