கல்வியும் அறிஞர்களின் சிறப்பும் ()

ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான்

இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.

|

 கல்வியும்  அறிஞர்களின் சிறப்பும்

الحث على طلب العلم

 وبيان فضل العلماء

 கல்வியும்  அறிஞர்களின் சிறப்பும்

என்னுரை

அளவற்ற அருளாளனும் நிகற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்

     புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் நமது தூதர் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் கிளையார் தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.

     ஒரு சமூகம் உயர்வு பெற கல்வி அவசியம். கல்வியில்லாத சமூகம் உயர்வு பெறாது. உலகில் அடக்கி, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பின்னர் கல்வியின் மூலம் தலை நிமிர்ந்து நின்றதை வரலாறு நெடுகிலும் காணலாம். பெரும் குடி மக்கள் கல்வியறிவு இல்லாத போது ஒடுக்கப் படுகின்ற தலை கீழ் மாற்றத்தையும் காண முடி கின்றது. இது​வெல்லாம் உலக கல்வியின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் காட்டு கின்றன.

     ஆனால் முஸ்லிம் சமூகத்தைப் பொருத்த வரையில், மறு உலகத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் அவர்கள். எனவே இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸலிம்களின் மீதும் கடமை.

     எனவே மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், அது இல்லாது போனால் விளைவு என்னவாகும் என்பது பற்றியும் ஸஊதி அரேபியாவின் பிரசித்தி பெற்ற மாமேதை அஷ்ஷைக் ஸாலிஹ் பின் பௌஸான் அல் பௌஸான் அவர்கள் الحث على طلب العلم وبيان فضل العلماء என்ற யெரில்  கையேடொன்றை எழுதியுள்ளார். அதனையே அடியேன் “ கல்வியும்  அறிஞர்களின் சிறப்பும்” என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளேன். இதன் மூலம் பயன் பெற நம்மனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக. மேலும் இதன் மூல ஆசிரியருக்கும். இதனை மொழி பெயர்த்தோ னுக்கும் மற்றும் இதனை வெளியிட உதவிய யாவருக்கும் ஈருலகிலும் நற்பாக்கியத்தை அல்லாஹ் தந்தருள்வானாக.

 திக்குவல்லை இமாம் (ரஷாதி\பெங்களூர்)

 16\06\2015


 கல்வியும்  அறிஞர்களின் சிறப்பும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

   அகிலத்தார் யாவரையும் போசித்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே  புகழ்  யாவும் சொந்தம். மேலும் சிறந்த முடிவுகள் இறையச்ச​முடையோருக்கே​ உரித்தாகும். அநியாயக்காரர் மீதல்லாது வேறு எவரின் மீதும் நமக்கு பகைமை எதுவுமில்லை. ஆரம்ப கால, இறுதி கால மக்களின் இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குத் தகுதியானவன் ஒருவனும் இல்லை, அவன் ஒருவன், அவனுக்கு இணை எதுவும் இல்லை, என்று சாட்சி பகர்கின்றேன். மேலும் முஹம்மது(ஸல்) அவர்கள் அந்த அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என்றும் சாட்சி பகர்கின்றேன். அவர்களோ, அகிலத்தாருக் காக அனுப்பப் பட்ட  ஓர் அருட்கொடையாகும்.

·       அறிவின் அவசியம்​​

    முஆவியா இப்னு அபூ ஸுப்யான்(ரழி) அவர்கள் அறிவித்தாக இமாம் புகாரீ அவர்கள் தெரிவிக்கின் றார்கள் “مَنْ يُرِد اللهَ بِه خيرا يفقهه في الدين“ எவருக்கேனும் ஒரு நல்லதை வழங்க அல்லாஹ் விரும்பினால், அவருக்கு அல்லாஹ் மார்க்க விடயத்தில்​ தெளிவைக் கொடுப்பான். என்று நபிகள்  நாயகம் (ஸல்) அவர்  கூறினார்கள் (புகாரீ)

     இதுவோர் மகத்தான ஹதீஸாகும். அல்லாஹ் தன் அடியாருக்கு வழங்கும் ஒரு வரப்பிரசாதத்தின் அடையாளத்தைப் பற்றி இந்த ஹதீஸில் நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். அதுதான் மார்க்க விடயத்தில் அடியானுக்கு அல்லாஹ் வழங்கும் மார்க்க ஞானமும் அதன் ​தெளிவுமாகும்.

     இந்த ஹதீஸிலுள்ள الفقه என்ற சொல்  தெளிவு என்ற பொருளைத் தருகின்றது, இதன் படி الفقه في الدين என்றால் மார்க்கத்தைப் பற்றிய தெளிவு என்பது  அதன் விரிவான பொருளாகும். எனவே மார்க்கத்தின் தெளிவு கிடைக்கப்  பெற்ற  மனிதன் அல்லாஹ்வின்​ மார்க்கத்தைச் சரியாக விளங்கிக்  கொள்வான்.  மேலும்  எதனை  கட்டாயம்  செய்ய வேண்டும்  என்றும், எதனை  கட்டாயம் தவிர்ந்து  ​கொள்ள வேண்டுமென்றும்  அல்லாஹ் விதியாக்கி இருக்கின்றானோ, அதனையும் அவன்  தெளிவாகப்  புரிந்து  கொள்வான்.  ஆகையால்  அல்லாஹ்வுக்கென்ற உளத்தூய்மையுடன் அதன்  படி அவன்  கருமமாற்றி, அந்த மார்க்கத்தின் அறிவையும் அதன்  செயற் பாடுகளையும் நிலை  நிறுத்தி வருவான். எனவே  இந்த வரப்பிரசாதமே الفقه في الدين  மார்க்க விடயத்திலான  தெளிவு  எனப் படுகிறது.

     எனவே الفقه என்பதன் பொதுக் கருத்து, விளங்கிக் கொள்ளுதல், தெளிவு பெறுதல்  என்பதாகும். எனினும்  மார்க்கக்  கலைஞர்களின்  பரிபாசையின்  படி அதன் பொருள்  ஷரீஆவின் விரிவான  ஆதாரங்களின் ஊடாக  அதன்  சட்டங்ளை தெரிந்து  கொள்ளுதல்  என்பதாகும்.​​

     இதன்படி  இந்தக் கலையானது அல் குர்ஆனின்  மூலமும் ஸுன்னாவின்  மூலமும் அல்லாஹ் நமக்குத்   தந்துள்ள சகல  சட்டங்ளையும்  உள்ளடக்கும். இதன்  பிரகாரம்  இஸ்லாமிய  மார்க்கத்தின்  அடிப்டையான  அல்லாஹ்வையும்  அவனின்  திரு நாமங்கள், பண்புகள்  பற்றிய விடயங்ளை  அறிந்து  கொள்வதும் மற்றும் இஸ்லாத்தின் உப பிரிவுகளுடன் தொடர்புடைய, மனிதன் அல்லாஹ்வுக்காக  நிறைவேற்ற வேண்டிய  கடமைகள், மேலும் ஹலால்,  ஹராம்,  வாஜிபு போன்ற விடயங்ளைத் தெளிவாக  அறிந்து கொள்ளும்   விடயங்களும்  இதன்  கீழ் வரும். எனவே யாருக்கு இந்த வாய்ப்பை அல்லாஹ் வழங்குகிறானோ, அவருக்கு அல்லாஹ்  மார்க்கத்தின் தெளிவைக் கொடுப்பான். மேலும் இம்மை  மறுமை பாக்கியத்துடன்  தொடர்புடைய  மார்க்கத்தின்  அறிவையும்  அதன்  தெளிவையும்  அவனுக்குஅல்லாஹ் வழங்குவான்.

     எனவே இஸ்லாமிய  மார்க்கத்தைப் பற்றிய தெளிவான அறிவை  அடைந்து கொள்வ​​தே நோக்கங்களில் மேலானதும், இலட்சியங்களில்  மகத்தானதுமாகும். ஏனெனில் இது தான் ஒரு கருமத்தை விளங்கி அதனை  சரியாகச் செய்வதற்கு வழி வகுக்கும். அப்போது ஒரு அறிஞனாக மாறுகின்ற  மனிதன் தன்னுடைய  அறிவையும் செயலையும் அல்லாஹ்வுக்கு என்ற  தூய  எண்ணத்துடன்  முன்னெடுத்துச் செல்வான். இதற்காகத் தான்  முஹம்மது (ஸல்) அவர்களை  அல்லாஹ்  ரஸூலாக  அனுப்பி  வைத்தான்.  இதனையே  அல்லாஹ்  இவ்வாறு  குறிப்பிடுகின் றான் هُوَ الَّذى أَرسَلَ رَسولَهُ بِالهُدىٰ وَدينِ الحَقِّ“அவனே தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும் சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான்.” (48/28) இங்கு الهدى நேர் வழி என்பது பயனுள்ள அறிவையும், دين الحق – உண்மை மார்க்கம், என்பது நல்லறிவையும் குறிக்கின்றது

 பிக்ஹின் வகைகள்

மார்க்க  அறிஞர்களின்  பரி பாஷையில் பிக்ஹு இரு வகைப்படும்

 ஒன்று, அல் பிக்ஹுல் அக்பர், எனப் படுகிறது. இதில் அல்லாஹ், மற்றும்  அவனுடைய திரு நாமங்கள், அவனுடைய பண்புகள், அவனுக்காக  நிறைவேற்றப் படும்  வணக்க  வழிபாடுகள், உளத்தூய்மை, மற்றும் சகல  குறைபாடுகளை விட்டும்  அல்லாஹ்  தூய்மை யானவன் என்பவைப் பற்றி அறிய  வேண்டிய விடயங்கள்  அடங்கும்.

இரண்டாம் வகையில், வணக்க  வழிபாடுகள். அன்றாட நடவடிக்கைகள், குற்றவியல், திருமண விவகாரங்கள் போன்ற வற்றுடன்​  தொடர்புடைய சட்ட  விளக்கங்கள்  அடங்கும். மேலும் இது பிக்ஹின்  முதலாம் பிரிவைத் தழுவியதாகவும்  அதனை  நிறைவு  செய்யும் ஓர் அம்சமாகவும் கணிக்கப் படுகிறது.​

 கட்டாய அறிவின் வகைகள்

-1- சகல முஸ்லிம்களும் கட்டாயம் அறிய வேண்டியவை.

     சில விடயங்கள் பற்றி  அறிந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் தனி நபர்  மீதும் கடமை. அவ்விடயத்தில் அவனின்  அறியாமை​ அவனின்  தவறுக்கு  மன்னிப்பாக  அமையாது.  ஆகையால்  அத்தகைய  அறிவை  ஒவ்வொரு தனி  நபரும்  அறிந்திருப்பது ​ கடமை.  ஒரு அடியான், தான் கடைபிடித்து  வரும்  இஸ்லாமிய மார்க்கத்தின் கோட்பாடு பற்றிய சட்டங்களையும், தொழுகை,  நோன்பு, ஸகாத்,  ஹஜ்ஜு ஆகியவற்றின்  அடிப்படை  சட்டங்களையும்  அறியாமல்  இருக்க  முடியாது.  ஏனெனில் இவற்றின் மீதே  இஸ்லாம்  மார்க்கம்  நிறுவப்பட்டுள்ளது. ஆகையால்  இவற்றை ஒரு  முஸ்லிம் பூரணமாக  அறிந்து கொள்ளாது  போனால்  அவனின்  மார்க்கம்  சீர்  பெறாது.  மேலும்  இவை  பற்றி  அவன்  அறியாமல்  இருப்பது  இவ்விடயத்தில்  அவன்  விடும்  தவறுக்கு  மன்னிப்பாகவும்  அமையாது. எனவே  இவை பற்றிய  அத்தியவசிய  அறிவைப்  பெற்றிருப்பது எல்லா  முஸ்லிம்கள் மீதும் فرض عين தனிப்பட்ட கட்டாயக் கடமையாகும்.

         இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி இந்த அளவேனும் அறிவில்லாத ஒருவர், தன் இறைவனைப் பற்றி எப்படி அறிவார்? மேலும் தெழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் கடமைகளை நிறைவேற்றும் முறைகளை எவ்வாறு அறிந்து கொள்வார்? எனவே ஆணாயினும், பெண்ணாயினும், அடிமையாயினும்  ஆண்டானா யினும் அறிவின் இந்த இரண்டாம் வகையை அறியாமல் இருக்க எந்த நியாயமும் இல்லை. எனவே தான் ஷைகுல் இஸ்லாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் “நான்கு விடயங்களைக் கற்பதும் அதனை அமுல் படுத்துவதும் கடமை” என்றார்கள். அவையாவன

1.    அறிவைத் தேடுதல்

2.    அதன் படி செயற்படுதல்

3.    அதன் பக்கம் அழைத்தல்

4.    அதனால் ஏற்படும் துண்பங்களைப் சகித்துக் கொள்ளுதல்

இதனை  அல் குர்ஆன் அத்தாட்சிப் படுத்துகிறது.

وَالعَصرِ ﴿١﴾ إِنَّ الإِنسـٰنَ لَفى خُسرٍ ﴿٢﴾ إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّـٰلِحـٰتِ وَتَواصَوا بِالحَقِّ وَتَواصَوا بِالصَّبرِ ﴿٣﴾(العصر)

காலத்தின் மீது சத்தியமாக. மனிதன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். ஆயினும்  எவர்கள் நம்பிக்கை கொண்டு  நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர்  உபதேசம் செய்து, மேலும் சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக் கொருவர் உபதேசம் செய்தும் வந்தார்களோ, அவர்களைத்  தவிர (103\1-3)

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முதல் விடயம் ஈமான் - நம்பிக்கைப் பற்றியதாகும். அதாவது  உண்மை என்ன வென்பதை அறிந்து அதன் மீது விசுவாசம் கொள்வதாகும். எனவே ஈமானைப்  புரிந்து கொள்வதற்கு அறிவு அடிப்படையாக விளங்குகிறது.

      இரண்டாவது விடயம் நல்ல கருமங்களைச் செய்தல்.

மூன்றாவது விடயம் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தல். இதில் நன்மையைக் கொண்டு ஏவுதல்’ தீமையை விட்டும் விலக்குதல் மற்றும்  அல்லாஹ்வின்பால் அழைத்தல் ஆகிய பணிகள்  அடங்கும்.

நான்காவது விடயம் சகித்துக் கொள்ளுமாறு ஒருவருக்கொருவர் உபதேசம்  செய்து வருதல். நன்மையைக் கொண்டு ஏவும் போதும், தீமையை விட்டும் விலக்கும் போதும், மற்றும் அல்லாஹ்வின் பால் அழைக்கும் பணியில் ஈடுபடும் போதும் மனிதனை துண்பங்களும் சோதனைகளும் சூழ்ந்து கொள்ளும். அப்போது பொறுமையும் சகிப்புத் தன்மையும் தேவை, என்பதை​ இவ்வசனம் உணர்த்துகின்றது.

     அறிவின் இரண்டாம் வகை فَرْضُ كِفَايَة ஈடு செய்ய இயலுமான فَرْضُ - கடமையாகும். ஈடு செய்ய இயலுமான இந்தக் கட்டாயக் கல்வியை​ அல்லது அறிவை ஒவ்வொரு தனி மனுதனும் பெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஏனெனில் சமூகத்திலுல்ல சகலரும் அதனைப் பெறுவதென் பது சில வேலை அசாத்தியமாகலாம். எனினும் ஒரு  சமூகத்திற்கு  குறிப்பிடத்தக்க ஒரு கல்வியின் தேவை உணரப்படும் போது, அதன் பொருப்பு சமூகத்தின் சகல உருப்பினரையும் சாரும். எனினும்  குறித்த சமூகத்தைச் சார்ந்த ஒருவரோ, ஒரு சிலரோ அந்தத் தேவையை நிறைவேற்றி வைத்தால் சகலரின் பொருப்பும் நீங்கி விடும். எனினும் எவரும் அதனை நிறை வேற்றாத பட்சத்தில், அந்தப் பொறுப்பை நிறைவேற்றாத குற்றத்திற்கு சகலரும் இலக்காவார்கள்.

     கல்வியின் அல்லது அறிவின் முதலாம் வகையைச் சாராத ஏனைய கல்விகள் அனைத்தும் فرض كفاية - ஈடு செய்ய இயலுமான கடமை என்ற பிரிவைச் சார்ந்த வைகளாகும். இதன்படி கொடுக்கல், வாங்கள் விவகாரத்தில் அனுமதிக் கப்பட்டது எது, அனுமதிக்கப் படாதது எது, சரியானது எது, பிழையானது எது என்ற சட்டங்கள், வாரிசு உரிமைச் சட்டங்கள், உயில் எழுதுதல் தொடர்பான சட்டங்கள், திருமணம், விவாக ரத்து போன்ற சட்டங்கள், மற்றும்  குற்றவியல் தொடர்பாகவும் அதற்கான தண்டணை கள் போன்ற   சட்டங்களை விரிவாகக் கற்று அறிந்து கொள்வது, இந்த இரண்டாம் பிரிவில் அடங்கும்.  மக்கள் மத்தியில் எழும் பிரச்சினைக ளுக்கு நியாயமான  முறையில் தீர்ப்பு வழங்குவ தற்காக இவற்றை ஆழமாகக் கற்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே கரை காண முடியாத இந்தக் கல்வியின்  தேவையும், அவசியமும் இஸ்லாமிய சமூகத்திற்குண்டு. இந்த காரியத்தை சமூகத்திலுள்ள யாரேனும்  ஈடு செய்வாராகில் சமுதாயத்தின் ஏனையோர் மீதும் சுமத்தப்பட்டிருந்த பொறுப்பு நீங்கி விடும். ஆனால் இதனை யாரும் செய்யாது போனால், அந்தக் கருமத்தை எவரேனும் பொருப்பேற்காத வரை அதன் பாவம் சமுதாய மக்கள் யாவரையும் வந்தடையும்.

      எனவே பிக்ஹு ஞானத்தின் இவ்விரு பிரிவுகளில் فرض عين என்ற, தனியார் அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விடயங்களை அனைவரும் கற்றுக் கொள்வது கடமை. அல்லாது போனால் இவ்விடயத்தில் எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படாது. ஆனால் பிக்ஹின் இரண்டாம் பிரிவு فرض كفاية ஈடு செய்ய இயலுமான கடமையைப் பொருத்த மட்டில் அதனை  அறிந்திருப்பது யாவரின் மீதும் கடமையில்லை என்ற படியால் அதன் நோக்கம் யாரைக் கொண்டேனும்  நிறைவு செய்யப்படுமானால் யாவரின் மீதும் சுமத்தப்பட்டிருந்த பொருப்பு நீங்கி விடும்.

எவ்வாராயினும் பொதுவாக கல்வி என்ற கோணத்தில் நோக்கும் போது, கல்வியைத் தேடல் என்பது சகல முஸ்லிம்களின் மீதும் கட்டாயமான ஒரு விடயமாகும். ஏனெனில் அறிவு இல்லையெனில் மனித வாழ்வு என்பதே இல்லை. எனவே எவரேனும் அறிவுப் பாக்கியத்தையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் விளக்கத்தையும் பெற்றிருப்பாராகில்,  ஹதீஸில் குறிப்பிட்டிருப்பது போன்று, அது அவருக்கு அல்லாஹ் நல்லதைத் தர விரும்பியிருக்கின்றான் என்பதற்குரிய அத்தாட்சி யாகும். மேலும் ஹதீஸிலிருந்து தெரிய வரும் மற்றொரு கருத்தாவது, ‘அல்லாஹ் எவருக்காவது நல்லதைத் தர நாடவில்லை எனில் அவனுக்கு மார்க்க விடயத்தில் விளக்கத்தைத் தர மாட்டான்’ என்பதாகும்.

 அறிவு உள்ளத்தின் ஜீவ நாடி

    நபியவர்கள், தான் கெண்டு வந்த நேர் வழிக்கும், பிரகாசத்திற்கும் மழையை  உதாரணமாகச் சொன்னார்கள். எவ்வாறு அழிந்து போன பூமி மழை மூலம் உயிர் பெற்று எழுகின்றதோ, அவ்வாறு தான் அறிவின் மூலம் உள்ளமும், சிந்தனையும் எழுச்சி பெறுகின்றன. நிலமும், உடலும் எழுச்சி பெறுவதிலும் பார்க்க உள்ளங்களின் எழுச்சியே மகத்தானது. எனவே மனிதன் தன் உடலை விடவும் தன்னுடைய உள்ளத்தை எழுச்சி அடையச் செய்ய வேண்டியவனாக இருக்கின்றான். ஏனெனில் உயிருள்ள உள்ளமே இவ்வுலக மறுஉலகத்தின்  பாக்கியங்களைப் பெறுகின்றன. செத்துப் போன உள்ளம் ஈருலகிலும் துரதிஷ்டத்தையே அடைந்து கொள்கின்றது. மனிதன் எப்படி வாழ்ந்த போதிலும் அவன் மரணிக்கக் கூடியவன். ஆகையால் உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ (العنكبوت/57)

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான்” (29/57)

எனவே உடலைப் பார்க்கிலும், ஈருலகத்திலும் நல்ல பயனைப் பெற்றுத் தரும் உள்ளத்தை உயிருள்ளதாக வைத்துக் கொள்வதே மிகவும் அவசியமானது.

 தான் கொண்டு வந்த பயனுள்ள அறிவுக்கு, நிலத்தில் விழும் மழையை உவமானமாகச் சொன்ன நபியவர்கள், அதனை மூன்று பிரிவுகளாக வகைப் படுத்தினார்கள்.

 முதலாம் வகை பூமி

         தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்ட பூமி, பின்னர் அதிலிருந்து  பயிர்களும் புற்களும் முளைத்தன. அதுதான் பாக்கியம்  பெற்ற நல்ல  பூமி. அது  பிடித்து வைத்த தண்ணீரை மக்கள்  குடிக்வும், ​இரைக்கவும், நீர்ப்பாய்ச்சவும் பயன் படுத்திக்  கொண்டனர். மேலும் கால்நடைகளின் தீனிக்குத் தேவையான புற்களையும், மனிதர்களின் ஆகாரத்திற்குத் தேவையான பயிர்களையும் அந்த நிலம் உற்பத்தி செய்தது. அறிவை  பாதுகாத்து  அதனை விளங்கி சட்டங்ளை அதிலிருந்து தேடியெடுத்த உலமாக்களும் அப்படிப் பட்ட வர்கள் தான். அவர்களும் மழைத் நீரை தேக்கி  வைத்த  அந்த  பூமியைப்  போன்று,  குர்ஆனிலும் ஸுன்னாவிலும் உள்ள கூற்றுக்களைப்  பாதுகாத்து அதிலிருந்து பயன்  தரும் பல  சட்டங்களைப் பிளந்தெடுத்தனர். மேலும்  அவற்றை நன்றாக விளங்கி, அதன்  பொக்கிஷங்க ளையும், கருத்துக்களையும்  வெளியே கொண்டு வந்து  அவற்றைத் தெளிவு படுத்தினர்.

 இரண்டாம் வகைப்  பூமி

     இது இறுகிய திடமான  பூமி. இதில்  பயிர்கள் முளைக்கா விட்டாலும் அது  மக்களுக்காகத் தண்ணீரைத் தேக்கி  வைத்துக்  கொள்ளும். எனவே இந்தப்  பூமியிலும்  நிறைய  நன்மைகள்  இருக்கின்றன. ஏனெனில்  குளங்களிலும்,  ஏரிகளிலும் தேக்கி வைத்த நீரை மக்கள் குடிப்பதற்குப்  பயன்டுத்திக்  கொள்கின்றனர். இன்னும் நிலத்தைத் தோண்டி அதனடியில் சேமித்து வைத்துள்ள அதன் நீரை மக்கள்  வெளியே கொண்டு வந்து பயிர்களுக்கும் மரங்களுக்கும்   பயன்  படுத்திக்  கொள்கின்றனர். உலமாக்களும்  இப்படியானவர்கள் தான்  ஏனெனில்  அவர்கள், அடிப்படைக்    கூற்றுக்களை பாதுகாத்து வந்ததுடன் அதில் சரியானவை எது, பிழையானவை  எவை  என்பதை வேறு படுத்திக்  காட்டினர். மேலும் அதனுடன், போலிகளும் பொய்களும் கலந்து  விடாதவாறு,  பொய்களை யும், இடைச்  செறுகள்களையும் அதனுள் புகாத வாறு​  தடுத்தனர். இவ்வாறு இந்த ஷரீஆவை அவர்களின் மூலம்  அல்லாஹ்  பாதுகாத்தான். இப்படியான  உலமாக்களிடமும் ஏராளமான  நன்மைகள் இருக்கின்றன. இரண்டாம் பிரிவைச் சார்ந்த இந்த உலமாக்கள், முதலாம் பிரிவினரை விடவும் குறைந்த தொகையினராவர். மேலும் இவர்கள் ​علماء  الرواية தகவல்களை  நகல் பண்ணும் அறிஞர்கள்  என்றும், முதலாம் பிரிவினர். علماء الرواية والدراية தகவல்களை நகல் செய்து ஆய்வும் செய்கின்ற அறிஞர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்.

 மூன்றாம் வகைப் பூமி

இது தண்ணீரை  பிடித்துக் கொள்ளாத மேட்டுப் பூமி. இதில் பயிர்கள் எதுவும் முளைக்காது. அதில் மழை பெய்த போதிலும், அதில் மழைத் தண்ணீர் எதுவும் விழாதது போன்று காட்சியளிக்கும். அல்லாஹ்வின் ரஸூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேரான பாதையை  ஏற்றுக் கொள்ளாத, அதன் மூலம் தங்களின் தலையை  நிமிர்த்திக் கொள்ளாத மக்களின் நிலையும் இப்படிப்பட்டதுதான். அவர்கள் அல்லாஹ் வின் வேதத்தைக் கேட்டும் கேட்காதவர்கள். மேலும் அதனை​ அவர்கள் பாதுகாக்கவோ, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவோ இல்லை. ஆகையால் அவர்கள் மார்க்கத்தின் பக்கம் கவணம் செலுத்தவோ அதன் கூற்றுக்களைப் பாதுகாக்க வோ, அதனை விளங்கிக் கொள்ளவோ முன் வரவில்லை. அவர்களிடமிருந்து  நன்மை எதனையும் அல்லாஹ் நாடவில்லை. அப்படி நாடியிருந்தால்,  மார்க்கத்தின் விளக்கத்தை அவர்களுக்கு அவன் கொடுத்திருப்பான். எனவே நல்லறிவை யாருக்கும் அறியத்தராத, அதனை ஆய்வு செய்யாத,  அதனை விளங்கிக் கொள்ளாத, அதன் மீது கவணம் எதுவும் செலுத்தாத, பயனற்ற இந்த மூன்றாம் வகைக்கூட்டத்தாருடன் இணைந்து கொள்ளாதபடி சகல மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க  வேண்டும்.

 கல்வியைத் தேடிப் புறப்படுதல்

அல்லாஹ்வின் இந்த வாக்கைக் கவணியுங்கள்,

وَما كانَ المُؤمِنونَ لِيَنفِروا كافَّةً ۚ فَلَولا نَفَرَ مِن كُلِّ فِرقَةٍ مِنهُم طائِفَةٌ لِيَتَفَقَّهوا فِى الدّينِ وَلِيُنذِروا قَومَهُم إِذا رَجَعوا إِلَيهِم لَعَلَّهُم يَحذَرونَ ﴿١٢٢ /التوبة(

“நம்பிக்கையாளர்கள் அனைவருமே வெளிப் பட்டு விடுவது எப்பொழுதுமே தகாது. மார்க்க விஷயங்களை அறிந்து கொள்ள உங்களில்  ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா? அவர்கள் தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு அச்சமூட்டி, எச்சரிக்கையாக இருந்து கொள்வார்கள்.” (9/122)

            இத்திருவசனத்திற்கு இரண்டு விளக்கங்கள் தரப்படுகின்றன. மனிதர்களுக்குப் பல தேவைகளும், நோக்கங்களும், இலக்குகளும் இருக்கின்றபடியால் சகலரும் தங்களின் காலத்தை ஒதுக்கி கல்வியைத் தேடிப் பிரயாணம் மேற்​ கொள்ள முடியாது. ஆகயால் ஒவ்வொரு கூட்டத்திலும் சமூகத்திலும் இருந்து ஒருவரோ அல்லது ஒரு சிலரோ மார்கக் கல்வியைத் தேடுவதற்காக தங்களின் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்றும், பின்னர் அவர்கள் மார்கத் தீர்ப்பு வழங்குதல், நியாயத் தீர்ப்பு வழங்குதல், அல்லாஹ்வின் பால் அழைப்புப் பணியில் ஈடுபடுதல், தொழுகையை நடாத்துதல், குத்பா பேருரைகள் நிகழ்த்துதல் போன்ற ஈடு செய்ய இயலுமான இந்த ‘பர்ழு கிபாயா’ காரியங்களை மேற் கொள்ள வேண்டும். மேலும் உலகத்தின் பல திக்கிலும் எங்கெல்லாம் அல்லாஹ்வின் மார்க்க விடயத்தில் விளக்கங்கள் காணப்படுமோ அங்கு சென்று கல்வியைப் பெற வேண்டும், பின்னர் அதனை மக்களுக்குக் கற்றுக் கொடுத்து அதனைப் பரவச் செய்து, கல்வியின் நோக்கத்தை நிறைவு செய்ய வேண்டுமென அல்லாஹ் கூறுகிறான் என்பது இத்திரு வசனத்திற்குத் தரப்படும் ஒரு விளக்கமாகும். ​

மாணவர்களுக்கு இரண்டு கடமைகள் உள்ளன.

            இந்தக் கல்வியானது அல்லாஹ்வின் வழியைச் சார்ந்ததாகும் என்பதால் அந்த வழியில் என்ன சிரமங்கள் கஷ்டங்கள் வந்த போதிலும் அதனைப் பொருட் படுத்தாமல் கல்வியைத் தேடவும் அதற்காகப் பிரயாணம் மேற் கொள்ளவும் வேண்டும் என்பது ஒரு கடமை.

இரண்டாவது கடமை, கல்வியைத் தேடிய பின்னர் எதிர் கொள்ளக் கூடியது. அதுதான் கல்வியைப் பரப்புதல், அதன் பால் அழைப்பு விடுத்தல், மற்றும் ஜனங்களுக்குக் கற்றுக் கொடுத்தல் என்ற கடமையாகும். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

وَلِيُنْذِرُوْا قَوْمَهُمْ

     “அவர்கள் தங்களின் மக்களுக்கு எச்சரிக்கை செய்வார்கள்”(9\122)

திரு வசனத்தின் இரண்டாவது விளக்கம்,

இஸ்லாமிய அறப் போருக்காக எல்லா மக்களாலும் புறப்பட இயலாது. ஏனெனில் அவர்களுக்கு ‘ஜிஹாத்’ அல்லாத வேறு பல கோணங்களிலும் தேவைகள் இருக்கின்றன. எனவே அவர்கள் இரண்டு பிரிவினர் களாகப் பிரிதல் வேண்டும்.

·       ஜிஹாதுக்குத் தகுதியுள்ள வீரமும், பலமும், போர் தந்திரமும் தெரிந்த பிரிவினர் ஜிஹாதுக்காகப் புறப்படுவார்கள்.

·       இரண்டாம் பிரிவினர் கல்விக்காகத் தங்களின் நேர காலத்தை ஒதுக்கிக் கொள்வார்கள். பின்னர் அவர்கள் தங்களின் ஊரிலோ அல்லது வெளியூர்களுக்குப் பிரயாணம் மேற் கொண்டோ கல்வியைத் தேடுவார்கள். எவ்வாறாயினும்  அறப்போரில் ஈடுபடுகின்ற, மற்றும் கல்வியைத் தேடுகின்ற இரண்டு பிரிவினரின் பாலும் மக்கள் தேவையுடை யோராக இருக்கின்றனர். எனவே இவ்விரண்டு துறைகளும் தேவை. அல்லாஹ்வின் வாக்கை உயர்த்தவும், எதிர்ப்பைத் தடுக்கவும், அல்லாஹ் கடமையாக்கிய காரியங்களை நிலை நிறுத்தி, மார்க்கத்தையும் அறிவையும் பரப்புவதற்கா கவும் ஜிஹாத் தேவைப்படுகிறது. போரிலிருந்து முஜாஹிதீன்கள் திரும்பியதும் அவர்கள்  இல்லாத போது, கல்வியைத் தேடுகின்றவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டவைகளை, அவர் களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான், என சில அறிஞர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் தந்துள்ளனர். இதன் மூலமும் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திற்கும் ஒத்துழைப்பு கிடைக்கின் றது. ​மேலும் அடியார்களின் நலன்களும் பேணப்படுகின்றன.

ஆகையால் இந்த வசனத்திற்கு கல்விக்காகப் புறப்படுதல் அல்லது ஜிஹாதுக்காகப் புறப்படுதல் என்ற இரண்டு விளக்கங்களில் எந்த விளக்கத்தை எடுத்துக் கொண்ட போதிலும், அவ்விரு விளக்கங்களும் சரியானவையே, அவை இரண்டும் பொருத்தமானவையே.​

·       உலமாக்களின் சிறப்பு

அல்லாஹ் தனது கண்ணியமான வேதத்திலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது ஸுன்னாவிலும், அறிஞர்களை ஏற்றியும் போற்றியு முள்ளனர். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்,

شَهِدَ اللَّـهُ أَنَّهُ لا إِلـٰهَ إِلّا هُوَ وَالمَلـٰئِكَةُ وَأُولُوا العِلمِ قائِمًا بِالقِسطِ ۚ لا إِلـٰهَ إِلّا هُوَ العَزيزُ الحَكيمُ ﴿١٨﴾(ال عمران)

“அல்லாஹ் சாட்சி கூறுகின்றான். நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லை” அவ்வாறே மலக்குகளும் கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்ற னர். மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.”(3/18)

          ஏகத்துவத்திற்குத் தானும் தன்னுடைய மலக்குகளும் சாட்சியாக இருப்பதுடன், அதற்கு அறிவுடடைய வர்களும் சாட்சியாக இருக்கின்றனர் என்று அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது அறிவுடை யோரின் சிறப்புக்கோர் அத்தாட்சியாகும்.

     மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்,

قُلْ هَلْ يستوى الذين يعلمون والذين لايعلمون ( الزمر/9)

“நீங்கள் கேளுங்கள், கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா?” (39\ 9)

         கற்றவனுக்கும் கல்லாதவனுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. எனவேதான் அவர்கள் இருவரும் சமமாகமாட்டார்கள் என அல்லாஹ் மறுத்துரைத் துள்ளான். மேலும் அல்லாஹ்வின் இந்த வசனத்தையும் கவணியுங்கள்,

إِنَّمَا يَخْشَى اللَّـهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ (فاطر/28) 

 “நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில், அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் கல்விமான் கள் தாம்.” (35\28)

         அல்லாஹ் யார் என்பதும், அல்லாஹ்வின் மகத்துவம் என்னவென்பதும், அல்லாஹ்வின் திரு நாமங்களும் பண்புகளும் யாவை என்பதும், அறிவின் மூலம் தான் அறிய முடிகின்றது. அவ்வாறே அல்லாஹ் தரும் நற் கூலிகளையும், தண்டனைகளையும், மற்றும் வேறு பல மகத்தான விடயங்களையும் பற்றிய விளக்கம் அறிவின் மூலமே கிடைக்கின்றது.  அடியான் அல்லாஹ்வின் மீது அச்சம் கொள்ள இவை காரணமாக அமைகின்றன, ஏனெனில் அல்லாஹ்வைப் பற்றி யார் அதிகமாக அறிந்திருப்பாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகவும் அச்சமுடையவராக இருப்பார். ஆனால் அல்லாஹ்வைப் பற்றி அறியாதவன் வணக்கசாலியாகவும் பேணிப்புடை யவனாகவும இருந்த போதிலும் அவன் அல்லாஹ்வின் மீது அச்சம் குறைந்தவனாகவே இருப்பான். இதற்குக் காரணம் அல்லாஹ்வைப் பற்றிய அவனின் அறியாமையே. எனவே தான் அல்லாஹ்வின் மீது மிகவும் அச்சமுள்ளவர்கள் உலமாக்களே என்று அல்லாஹ் இங்கு விளம்பரப் படுத்தியுள்ளான்.

அல்லாஹ்வின் மீது அச்சமுள்ளவர்கள் ஷரீஆவின்  உலமாக்களே!

“அல்லாஹவின் அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்கள் கல்விமானகள் தாம்” என்ற வசனத்திலுள்ள “கல்விமான்கள்” எனும் சொல் ஷரீஆவின் உலமாக்களை  அறிஞர்களையே குறிக்கின்றது. ஏனெனில் அல்லாஹ்வை உரிய முறையில் அறிந்தவர்கள் இவர்களே. ஆகையால் அல்லாஹ்வின் கண்ணியத்தையும், பெருமையை யும், மற்றும் அவனின் கீர்த்தியையும் பற்றி  அறிந்துள்ள அவர்கள் அவனை உரிய முறையில் கண்ணியப் படத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.  ​

“உலமா” அறிஞர் என்ற சொல் இன்று தொழில் சார் அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வைத்தியர்கள், இரசாயன வியலாளர்கள், பௌதீக வியலாளர்கள் போன்ற விஞ்ஞானத்துடன் தொடர்புடைய அறிஞர்களைக் குறிப்பிடவும் மக்கள் பயன்படுத்து கின்றனர். அது மாத்திரமின்றி அமெரிக்க, ரஷ்ய ‘காபிர்’ அறிஞர்களையும் ‘உலமா’ என்ற வார்த்தை மூலம் அழைக்கின்றனர். ஆனால் இவர்கள் எல்லாம் உலமாக்களே அல்ல. ஏனெனில் அவர்களின் அறிவு அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது அச்சத்தை ஏற்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக கர்வமும் ஆணவமும் கொள்ளவும், எந்த உரிமையும் இன்றி  மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தவும் கூடிய மனப் பாங்கையே அவர்களின் அறிவு அவர்களுக்கு ஏற்படுத்தித் தருகின்றது.

அல்லாஹ்வை அறியாத இவர்கள் அல்லாஹ்வின் மீது எப்படி அச்சம் கொள்வாரகள்? கம்யூனிஸ வாதிகள் போன்று அல்லாஹ்வையே மறுக்கின்றவர்களும் இவர்களில் இருக்கின்றனர். எனவே இவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீது எப்படி அச்சம் கொள்வாரகள்? உண்மையில் இவர்கள் மனிதரில் மிகப் பெரிய அறிவிலிகள். எனினும் இந்த தொழில்சார் அறிஞர்களிடமும், கண்டு பிடிப்பாளர், வைத்தியர்கள், போன்றோரி டம் ஷரீஆவின் அறிவும் இருக்குமானால் அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பார்கள். ஆனால் அவர்கள் ஷரீஆவைப் பற்றி எதுவும் அறியாமல், உலக விவகாரங்களைப் பற்றி மாத்திரம் அறிந்திருப்பார் களாயின் அவர்களை  உலமாக்கள் என்று குறிப்பிட முடியாது. அந்த வழிகேடர்களான அறிவிலிகள் காபிர்களாவர், அவர்களில் இன்னும் அதிகமானோர் அல்லாஹ் வினதும் அவனின் தூதரினதும் மற்றும் இஸ்லாத்தினதும் பகைவர்களாவர். ​

‘உலமா’ எனும் சொல் கீர்த்தியும் சிறப்பும் மிக்க ஒரு சொல்லாகும். எனவே அதனை அவர்களுக்குப் பயன் படுத்தக் கூடாது. வேண்டுமானால் அவர்கள் சிறப்புப் பெற்றுள்ள கல்வியுடன் உலமா என்ற சொல்லை சேர்த்துப் பயன் படுத்திக்கொள்ளலாம். அப்போது அவர்கள் பெற்றுள்ள கல்வியைப் பொருத்து அவர்களை, علماء صناعة, علماء إختراع- தொழில் துரை அறிஞர், கண்டுபிடிப்புத் துரை அறிஞர் என்று அழைக்கலாம்.

ரஸூல் (ஸல்) அவர்கள் وَإِنما الْعُلَمَاءُ وَرَثَةُ الأنْبِيَاء “நிச்சயமாக உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகளாவர்” என்று  உலமாக்களை நபிமார் களின் வாரிசுகள் என்று குறிப்பிட்டுள்ளார் கள். ஆகையால் மகத்தான  இச்சொல்லை நபிமார் களின் வாரிசுகளான, ஷரீஆவின் உலமாக்கள் அல்லாத மற்ற அறிஞர்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் நேர்வழியைப் பெற்று ஷரீஆவின் அறிவையும் உலக அறிவையும் ஒன்று சேர்த்துக் கொண்ட​வர்கள் நீங்கலாக, உலமாக்களைத் தவிர்ந்த ஏனையோர் அனேகமாக ஷைத்தான்களின் வாரிசுகளாகவும் உலகத்தில் அகங்காரம் கொண்டவர்களின் வாரிசுகளாகவுமே இருக்கின்ற னர். எனவே இந்த விடயத்தில் எச்சரிக்கையாக இருப்பதும், இந்தச் சொல்லை எல்லா அறிஞர்களுக்கும் பொதுவான சொல்லாகப் பயன் படுத்தாமல் இருப்பதுவும் கடமை. உண்மையில் ஏனைய அறிஞர்களின் அறிவு அவர்களுக்கு உலகத்தில் அகந்தையையும், தற்பெருமையையுமே அதிகப் படுத்தியுள்ளது என்பதே யதார்த்தம். ஆனால் ஷரீஆவின் உலமாக்களோ, இதற்கு மாற்றமானவர்கள். அவர்கள் பணிவும், ​தெளிவான அறிவுமுடைய வர்கள். மேலும்  அல்லாஹ்வை உரிய முறையில் அறிந்து கொள்கின்ற வர்களும் அவர்கள்தாம்.  அல்லாஹ்வின் மீது அச்சம் கொள்ளக்கூடிவர்களும் அவர்கள் தாம். அல்லாஹ்வின் இந்த வசனத்தைக் கவணியுங்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّـهُ لَكُمْ ۖ وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْ‌فَعِ اللَّـهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَ‌جَاتٍ ۚ  ۚ(المجادلة/11)

“நம்பிக்கையாளர்களே! உங்களை நோக்கி “சபையில் அகன்று இடம் கொடுங்கள் என்று கூறினால் நீங்கள் அகன்று கொடுங்கள். இடத்தை அல்லாஹ் விசால மாக்கித் தருவான். “தவிர எழுந்து விடுங்கள்” என்று கூறப்பட்டால், அவ்வாறே எழுந்து விடுங்கள். உங்களிலுள்ள நம்பிக்கையாளர் களுக்கும் கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். (58\11)

 கல்விக்கு ஊக்கமளித்தலும் அதன் சிறப்பும்

عن أبي الدرداء رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة ومااجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله فيمن عنده 

அபூ தர்தா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார் கள்,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், “எவர் அறிவைத் தேடி பாதையில் செல்கின்றாரோ, அவருக்கு அதன் காரணமாக  சுவர்க்கத்தின் வழியை அல்லாஹ் இலகுவாக்கி விட்டான். மேலும் அல்லாஹ்வின் இல்லங்களில் ஏதேனும் ஒரு இல்லத்தில் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தைப் பாராயணம் செய்து கொண்டும், தம் மத்தியில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அதனை கற்றுக் கொண்டும் இருக்கின்ற ஒரு கூட்டத்தாரின் மீது அமைதி இறங்காமல் இருக்காது. மேலும் அல்லாஹ்வின் அருள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும், மலக்குகளும் அவர்களைச் சூழ்ந்து கொள்வார்கள், மேலும் தன்னிடம் இருப்பவர்களிடம் அவர்களைப் பற்றி அல்லாஹ் ஞாபகப் படுத்துவான்” 

கல்வியைத் தேடுதல், அதனை அடையும் பொருட்டு கூட்டங்களுக்குச் சென்று பரஸ்பரம் ஒருவருக் கொருவர் பாடங்களைக் கேட்டு அறிந்து கொள்ளுதல், மேலும் அதன் நிமித்தம் பாதைகளைத் தாண்டி பிரயாணம் மேற் கொள்ளுதல் ​போன்ற சிரமங்களைக் தாங்கிக் கொள்ளும் விடயத்தை சிறப்புக்குறியவை என இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.​ ஏனெனில் சிரமங்கள் இன்றியும், கால நேரத்தையும், ஓய்வையும், அர்ப்பணம் செய்யாமலும் உயர்வு பெற முடியாது. யாருக்கு உயர்ந்த அந்தஸ்து தேவையோ அவர் இரவில் விழித்திருக்க வேண்டும். இவை கல்வியைப் பெற உடலால் செய்யும் முயற்சிகள்.

         இவ்வாறே கல்விக்காக உளரீதியாகச் செய்ய வேண்டிய முயற்சிகளும் இருக்கின்றன. அவை தான் சூத்திரங்களைப் பாடமிடுதல், முக்கியமான கூற்றுக்க ளின் பால் கவணம் செலுத்துதல்,  வகுப்புகளுக்கும், மஸ்ஜிதுகளில் நடை பெறும் கல்வி வட்டங்களுக்கும் சமூகமளித்தல், மேலும் புத்தகங்கள் வாங்குதல், அல்லது  அவற்றை பிரதி பண்ணுதல் போன்றவை. எனவே நல்லெண்ணத்து டன் நீங்கள் புத்தகங்களை வாங்குகின்றீர்கள் என்றால், நீங்கள் ஒரு கல்வி வட்டத்தில் அமருகின்றீர்கள் என்றால், அதன் பொருள் நீங்கள் கல்வியின் பாதையில் செல்கின்றீர்கள் என்பதே.   இதுவே சுவர்க்கத்தின் வழி. ஏனெனில் பயன் தரும் கல்வி, சுவர்க்கத்திற்குக் கொண்டு செல்லும் என நபியவர்கள் நவின்றுள்ளார்கள். நபியவர்களின் இந்தக் கூற்றைக் கவணியுங்கள்.​

 " سهل الله له به طريقا الى الجنة" "وان الملائكة لتضع أجنحتها لطالب العلم"

“அந்தக் கல்வியின் காரணமாக, அவனுக்கு சுவர்க்கத்தின் வழியை அல்லாஹ் இலகுவாக்கி விட்டான்” என்றும், கல்வியைத் தேடுபவனுக்காக மலக்குகள் தங்களின் இறக்கைகளைத் தாழ்த்து கின்றனர்” என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

 கல்வியைத் தேடுவோரின் செயலைக் கண்டு திருப்தி யடைந்த மலக்குகள் அவரைக் கண்ணியப் படுத்தும் முகமாக தங்களின் இறக்கைகளைத் தாழ்த்துகின்றனர். அவ்வாறாயின் ஏனையோர், அறிவுடையோரைக் கண்ணியப் படுத்துவது அதிலும் பெரும் கடமையாகும். ஏனெனில் தேடிச் செல்ல வேண்டிய, பிரயாசைப்பட வேண்டிய விடயங்களில் மிகவும் கண்ணியமான ஒரு காரியத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்,

"فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب"

“ஏனைய நட்சத்திரங்களை விடவும் சந்திரன் சிறப்புற்று விளங்குவது  போன்று,  ஆலிம் -  ஆபிதை – விட சிறந்தவனாவான்”

         இங்கு நபியவர்கள் ஆலிமை - அறிஞனை சந்திரனுக்கும், ஆபிதை - வணக்கசாலியை நட்சத்திரங்களுக்கும் உவமாணமாக் குறிப்பிட்டு உள்ளார்கள். ஏனெனில் சந்திரனின் ஒளி அதனுள் அடங்கியிருப்பதில்லை. அது தன் ஒளியை மற்றவர்களுக்குக் வழங்குகின்றது. அதுதன் ஒளியை பூமிக்கும் உலகின் மூலை முடுக்கு களுக்கும் தருகின்றது. ஆனால் நட்சத்திரங்கள் அப்படியானவ அல்ல. அது தன் ஒளியை எல்லா இடங்களுக்கும் பாய்ச்சுவதில்லை. என​வே​ ஆலிமும் சந்திரனைப் போன்றவன்தான். ஏனெனில் அவனின் அறிவின் மூலம் அவன் மாத்திரம் பயனடைவதில்லை, அவனைச் சூழ உள்ளவர்களும், உலகின் தூரப் பிரதேசங்களில் உள்ள மக்களும் அவனின் அறிவின் மூலம் பயன் அடைகின்றனர். அவன் உலகத்தை விட்டுப் பிரிந்து பல நூறு வருடங்கள் கழிந்த பின்னரும் அவனின் அறிவு பயனளித்துக் கொண்டிருக்கும். அறிஞர்களும், இமாம்களும் இறந்து நூற்றுக் கணக்கான வருடங்களாகப் பூமிக்கடியில்  இருந்த போதிலும் அவர்களின் அறிவின் மூலம் பயனடைந்து வரும் மக்கள், அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர், அவர்களின் மீது அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் வேண்டு கின்றனர்.

         ஆனால் ஆபிதின் நிலை அப்படியல்ல. இபாதத்- வணக்க வழிபாடுகளும் ஒரு வகைப் பிரகாசம்தான். ஆனால் அதன் பிரகாசம் ஆபிதுடன் சுருங்கிவிடுகிறது. எனவே அதன் பயன் அவனுக்கு மாத்திரம் உரியதாகும். எனவே மக்கள் சந்திரனிடமிருந்து தான் ஒளி பெற முடியுமே அல்லாது, ஏனைய நட்சத்திரங்களிடம் இருந்தல்ல. எனவேதான் நபியவர்கள் ஆலிமை சந்திரனுக்கும், ஆபிதை நட்சத்திரங்களுக்கும் உதாரணமாகச் சொன்னார்கள்.

         எனினும் கரையிலும் கடலிலும் இருளில் இருக்கும் மக்கள் நட்சத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு தங்களின் திசைகளை அறிந்து  கொள்கின்றனர். இதனையே,

وَعَلـٰمـٰتٍ ۚ وَبِالنَّجمِ هُم يَهتَدونَ ﴿١٦/النحل)

“அடையாளங்களைக் கொண்டும் நட்சத்திரங் களைக்​ கொண்டும் தங்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்” (16\16) என்றும்,

وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ لِتَهْتَدُوا بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ‌ وَالْبَحْرِ‌ ۗ (الأنعام/97)

“உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவைகளைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கின்றீர்கள். (6\97) என்றும் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

         ஆகையால் நபியவர்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் உலமாக்களை வழிகாட்டும் அந்த நட்சத்திரங்களுக்கு ஒப்பிட்டார்கள். அதன் கருத்தாவது இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது உலமாக்கள் அந்த நட்சத்திரங்களைப் போன்றவர்களும்தான். ஏனெனில் கடலிலும் தரையிலும் இருப்பவர்களுக்கு வழிகாட்ட நட்சத்திரங்கள் ஆதாரமாக இருப்பது போன்று உண்மையின் பால் வழிகாட்டும் ஆதாரங்களாக உலமாக்கள் விளங்குகின்றனர் என்பதினாலாகும்.

         எனவே பயணிகள் நட்சத்திரங்களின் மூலம் தங்களின் வழியை அறிந்து கொள்வது போன்று, உலகில் வாழும் மக்கள் உலமாக்களின் வழிகாட்டலின் மூலம்  தங்களின் காரியங்களை மேற் கொள்கின்றனர். இதன்படி உலமாக்கள் நட்சத்திரங்க​ளைப் போன்றவர்கள், என்றால் இன்னொரு வகையில் சந்திரனைப் போன்று அவர்களின் பிரகாசமும் விசாலமானது, அவர்களின் ஞான  ஒளி உலகின் சகல பாகங்களி லும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதன்படி பார்த்தால் அவர்கள் சந்திரனைப் போன்றவர்கள், எனலாம்.

நபியவர்கள் "وان العلماء ورثة الأنبياء"  உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்” என்று கூறியிருப்பது, உலமாக்களுக்கு மேலும் பெருமையைத் தருகின்றது. ஏனெனில் நபிமார்களின் வாரிசுகள் உலமாக்கள் மாத்திரமே. வியாபாரிகளூம், செல்வந்தர் களும் நபிமார்களின் வாரிசுகள் அல்ல. அவர்கள் எல்லாம் பணக்காரர்களின் வாரிசுகள். சில வேளை செல்வந்தனும் வியாபாரியும் ஒரு காபிருக்கோ அல்லது ஒரு முஃமினான நல்லடியாருக்கோ வாரிசாகலாம். எவ்வாறாயினும் பணத்தின் பயன் அறிவின் பயனை விடவும் சுருங்கியதாகும். எனவே ஷரீஆவின் அறிவை நபிமார்களிடமிருந்தே அல்லாது வேறு எவரிடமிருந்தும் அதனை வராஸத்தாகப் பெற முடியாது. நபியவர்களின் மணி மொழி இதனைத் தெளிவுபடுத்துகின்றது.

"اِن الأَنْبِيَاءَ لَمْ يُوَرثُوْا دِيناَرًا وَلَا دِرْهَمًا"

  “நிச்சயமாக நபிமார்கள் தீனாரையும் திர்ஹமையும் அனந்தரமாக விட்டுச் செல்ல வில்லை” என்று நபியவர்கள் நவின்றார்கள்.  

நபிமார்கள் உலகத்தைத் தேடிக் கொள்ள வரவில்லை. ஏனெனில் உலகின் செல்வமும் செல்வாக்கும் அவசரமாக அழியக்கூடியவை. எனவே வேகமாக அழிந்து போகும் உலக ஆசை அவர்களின் நோக்கம் அல்ல. அவர்களின் நோக்கம் அதை விடவும் மேலானது. அதுதான் அல்லாஹ்வைப் பற்றியும்  மற்றும் அவனுடைய சுவர்க்கம், அவனுடைய நேரிய பாதை என்ன வென்பதைப் பற்றியும் அறிவுறுத்துவதாகும். எனவே நபிமார்கள் அல்லாஹ்வின் பால் வழிகாட்டும் வழிகாட்டிகளாக இருப்பது போன்று அவர்களின் வாரிசுகளான உலமாக்களும் அல்லாஹ்வின் பால் வழிகாட்டும் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். இதில் அவர்களுக்கு சிறப்பும் பெருமையும் இருக்கின்றது.

ஒரு முறை சந்தையில் மக்கள் கொடுக்கல் வாங்கல்களிலும் வியாபாரத்திலும் ஈடுபட்டுக் கொணடிருக்கும் போது அபூ ஹுரைரா (ரழி) அவர்கள்  அந்தப் பக்கமாகச் சென்றார்கள். அப்போதவர் அவர்களிடம், “நீங்களோ, இங்கே இருக்கின்றீர்கள். அங்கு பள்ளிவாசலில்  ரஸூல் (ஸல்) அவர்களின் அனந்தர சொத்துக்கள் பகிரப் படுகின்றனவே, என்றார்கள். இதனைக் கேட்டு பீதியடைந்த மக்கள் அனந்தர சொத்துக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில்  பள்ளிவாசலை நோக்கி விரைந்தனர். ஆனால் பள்ளி வாசலுக்குள் பிரவேசித்த அவர்கள் அங்கு எதுவும் பகிர்ந்து கொடுக்கப்படுவதைக் காணவில்லை. எனினும் அங்கு சிலர் அல் குர்ஆன் கற்றுக் கொண்டிருப்பதையும், இன்னும் சிலர் பிக்ஹு சட்டங்களைப் படிப்பதையும், வேறு சிலர் நபியவர்களின் ஸுன்னாவைக் கற்று வருவதையும் அவர்கள் கண்டனர். எனவே அவர்கள்,  அபூ ஹுரைராவே! அங்கு எதுவும் பகிரப் படுவதை நாங்கள் காணவில்லையே என்றனர். அதற்கு அவர் நீங்கள் எதனைக் கண்டீர்கள்? என்றார். அப்போதவர்கள், சிலர் குர்ஆன் ஓதுவதையும், சிலர் பிக்ஹைக் கற்று வருதையும் தான் நாங்கள் கண்டோம், என்றனர். அதற்கு அபூ ஹுரா (ரழி) அவர்கள் “இதுதானே ரஸூல்(ஸல்) அவர்களின் வாரிசு சொத்து, நபிமார்கள் அறிவைத்தானே அனந்தரமாக விட்டுச் சென்றனர்” என்றார்கள்.

உண்மையில் இதுதான் சரியான வாரிசு சொத்து. ஏனெனில் இதன் பயன் நிலையனது, தொடரக் கூடியது. உலகமும் அதன் செல்வமும் அப்படியில்லை. அதனிடமும் பயன்கள் உள்ள போதிலும், அவை வரையரைக்கு உட்பட்டவை, அழியக் கூடியவை. எனினும் இவ்வுலக வளங்களை மறு உலகத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவரின் செல்வங்களைத் தவிர. ஏனெனில் அவர் அதனை அல்லாஹ்வுக்கு வழிப்படும் விடயத்துக்கு உதவியாகப் பயன் படுத்திக் கொண்டார். அது நல்லதுதான். ஆனால் இப்படியானவர்கள் குறைவு.​​ உலக விடயத்தில் ஈடுபாடுள்ள அநேகமானோர் மறு உலக விடயத்தில் ஆர்வம் காட்டுவது குறைவு. அல்லது மறு உலகத்தைப் புறக்கனித்து விட்டு உலகத்தின் பால் திரும்பி விடுகின்றனர். எனவே ஷரீஆ அறிவுடைய வர்கள்தான் உண்மையில் ஜெயசீலர்கள்.

நபியவர்கள், "فمن أخذه أخذ بحظ وافر"“ யார் அந்த அறிவை எடுத்துக் கொண்டாரோ, அவர் அதிர்ஷ்டத்தைத் தாரளமாக எடுத்துக் கொண்டார்” என்று இவர்களைப் பற்றி கூறினார்கள். எனவே அறிஞனிடம் உலக வசதியென்பது அறவே, அல்லது அற்ப அளவேனும் இல்லாத போதிலும்  தான் பெற்ற அறிவின் மூலம் அவர் இகம், பரம் இரண்டின் நன்மைகளையும் எடுத்துக் கொண்டார், என்பதை இந் நபி மொழி தெளிவு படுத்துகின்றது. இது உண்மைதான். ஏனெனில் ஆலிமின் அறிவு மூலம் பயன் பெறும் மக்களும், அதன் மூலம் அல்லாஹ்வைப் புரிந்து கொண்ட மக்களும் உலகத்தை உடையவர்களைக் கண்ணியப் படுத்துவதை விடவும் ஆலிம்களை அதிகமாக கௌரவிக்கின்றனர். இது மனிதர்களின் மனதில் அல்லாஹ் ஏற்படுத்திய விடயமாகும். அதனால் தான் அரசனையும், அமைச்சரையும், வியாபாரியை யும் விடவும் உலமாக்களை மனப்பூர்​வமாக உண்மையாக, மக்கள் கௌரவித்து வருவதை நீங்கள் கண்டு கொள்கிறீர்கள். இது அவர்களின் உள்ளங்களில் பிரதிபலிப்பாகும்.

ஆனால் உலக வாதிகளை அவர்கள் கௌரவிப்பது பெரும்பாலும் அவர்களைத் திருப்தி படுத்துவதற்காக, அல்லது அவர்களிடமிருந்து எதை​யேனும் எதிர் பார்ப்பதற்காகும். சில வேளை வெளிப்படையில் அவர்களை கௌரவிக்கும் மக்கள், மனதால் அவர்களை வெறுக்கின்றனர். ஆனால் கற்ற படி செயலாற்றுகின்ற உண்யான ஆலிமை, அவர்கள் விருப்பத்துடன் உண்மையாக கௌரவிக்கின்றனர். இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّـٰلِحـٰتِ سَيَجعَلُ لَهُمُ الرَّحمـٰنُ وُدًّا (مريم/96)

“நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல் களைச் செய்கின்றவர்களை (அனைவரும்)  நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான்.” (19\96)

அறிவின் சிறப்பையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் சட்ட விளக்கங்களின்  சிறப்புக்களை யும்  எடுத்துக் கூறும் இவ்வாறான கூற்றுக்கள் அல் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் வேறு கிரந்தங்களி லும்   ஏராளமாக  இருக்கின்றன. எனவே இந்த சிறப்புக்களை மேலும் அதிகமாக அறிய விரும்புவோர் அல்லாமா  இப்னுல் கையிம்    (ரஹ்)  அவர்களின் "مفتاح دار الَسعادة" என்ற புத்தகத்தைப் வாசிக்குமாறு பரிந்துரைக்கின்றேன். அதன் முதலாம் பாகத்தின் ஆரம்பத்தில் அறிவினதும், அறிஞர்களினதும் சிறப்புக்களைப் பற்றி ஆதார பூர்வமாக எழுதியுள்ளார்கள். அதற்காக இருநூற்றுக்கும் அதிகமான பக்கங்களை ஒதுக்கியுள்ளார்கள். அவ்வாறே இப்னு ரஜப் அவர்கள், தனது ரிஸாலாவில் அபூ தர்தா (ரழி) அவர்கள் அறிவிக்கும் من سلك طريقا...... என்ற ஹதீஸுக்கு விளக்கம் தரும் போது கல்வியின் சிறப்பைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள். பிரத்தியேகமான அந்த ‘ரிஸாலா’ வில் பெரும் பயன்கள் உள்ளன.

 கல்வியின் நோக்கம்

கல்வியின் நோக்கம், வெறுமனே  கற்பதல்ல. கற்ற படி செயலாற்றுவதே கல்வியின் நோக்கம். ஷரீஆ கல்வி அதன் படி செயலாற்றுவதற்கும், அல்லாஹ்வை அஞ்சி நடப்பதற்கும் வழிகாட்டும் ஒரு ஊடகம். எனவே ​அதுவே அந்தக் கல்வியின் நோக்கமுமாகும்.

 கல்வி அறிவு இரு வகைப்படும்

ஒன்று, வாயளவில் மட்டுப் படத்தப் பட்ட அறிவு. இந்த நிலையில் இருக்கும் ஒரு ஆலிம் சூத்திரங்களையும், கூற்றுக்களையும் மற்றும் ஏராளமான விடயங்களையும் பாதுகாத்து வைத்திருந்த போதிலும், அவர் கற்றபடி செயலாற்ற மாட்டார். அல்லாஹ்வுக்கு அஞ்சவும் மாட்டார். அவர் பெற்ற அறிவே வாயளவில் மட்டுப் படுத்தப் பட்ட அறிவாகக்  கருதப்படுகின்றது.​ இவருக்கு எதிராக அல்லாஹ் சாட்சியாக இருப்பான்.

இரண்டாவது உள்ளத்தில் இருக்கும் அறிவு. இது அல்லாஹ்வின் மீது பயமுள்ளவனின் அறிவைக் குறிக்கும். இதனைத்தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,

إِنَّمَا يَخْشَى اللَّـهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ ۗ(28/فاطر)

“நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் கல்விமான் கள் தாம்  (35\28)

இந்த இரண்டாம் வகை அறிவை உடையவன்தான் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பதுடன்,  அவனுக்கு  வழிப்படும் கருமங்களி லும் ஈடுபடுவான். மேலும்  அவனுக்கு மாறு செய்யும் காரியங்களை விட்டும் ஒதுங்கிக் கொள்வான். அத்துடன் அவனின் உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய அன்பும் விருப்பமும் இருக்கும்.

·       உலக அந்திம காலத்தில் அறிவு கைப்பற்றப்படுதல்

உலகத்தின் முடிவு காலம் நெருங்கும் போது உலகிலிருந்து அறிவு உயர்த்தப்பட்டு விடும். இது இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று என ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவு உயர்த்தப்படும் போது, முதலில் உள்ளத்திலிருந்து அல்லாஹ்வைப் பற்றிய பயம் இல்லாமல் போகும். அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய அந்த அறிவு ஒரு சிலரின் உள்ளத்தில்தான் இருக்கும். அநேகமான உலமாக்களின் மனதிலும் அல்லாஹ் வின் பயம் இருக்காது. இந்த அறிவு அவர்களின் உள்ளங்களிலிருந்து  உயர்த்தப்பட்டதும் அது அவர்களின் வாயளவில் நின்று விடும். அப்போதும், உண்மையின் மீது உறுதியுள்ள ஒரு கூட்டத்தினர் இருப்பர். ஆயினும் பெரும்பாண்மை மக்களின் உள்ளத்திலிருந்து​ அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும்  அறிவு நீங்கி விட்டபடியால், இறுதி காலத்தில் அல்லாஹ்வைப் பற்றிய பயம் ஒரு சில மக்களின் உள்ளங்களிலேயே எஞ்சியிருக்கும்.

பின்னர் வாயளவில் அறிவை வைத்துக் கொண்டிருந்த, இரண்டாம் வகை அறிவைப் பெற்றவர் களின் அறிவும் நீக்கப்படும். அப்போது உலமாக்களும், புகஹாக்களும் குறைந்து விடுவார்கள். மடையர்களும், அறிவீனர்களும் பெருகி விடுவார்கள். இதனையே நபியவர்களின் வாக்கு தெளிவு படுத்துகின்றது.

"إن الله لاينزع هذا العلم إنتزاعا من صدور الرجال ولكن يقبض العلم بموت العلماء  فإذا لم يبق عالم إتخذ الناس رؤوسا جهالا فأفتوا بغير علم فضلوا وأضلوا"

“இந்த அறிவை மனிதர்களின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் பிடிங்கி எடுப்பதில்லை. எனினும் உலமாக்களின் மரணத்தின் மூலமே இந்த அறிவை அவன் கைப்பற்றுகின்றான். அறிஞர்கள் இல்லாத அந்த வேளையில் மக்கள், மடையர்களை தங்களின் தலைவர்களாக எடுத்துக் கொள்வார்கள். அப்போதவர்கள் அறிவில்லாமலே தீர்ப்புக்கள் வழங்குவார்கள். இதனால் அவர்கள், தாங்களும் வழி தவறி மற்றவர்களையும் வழி கெடுத்து விடுவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

 அறிவு பறிக்கப்படும் கட்டங்கள்

மூன்று கட்டங்களில் அறிவு கைப்பற்றப்படும்.

     முதலாம் கட்டம்- உலமாக்களின் உள்ளங்களில் அல்லாஹ்வைப் பற்றிய பயம் இல்லாமல் போதல். அப்போது அவர்களின் உள்ளத்தில் இருந்த உண்மையான அறிவு பறிக்கப்பட்டு,  அது அவர்களின் வாயளவில்  தங்கி விடும்.

இரண்டாம் கட்டம்- உலமாக்களுக்கு மரணம் சம்பவிப்பதன் மூலமாக அறிவு கைப்பற்றப்படுதல். இவ்வாறு மரணங்கள் அதிகமாக சம்பவிக்கும் போது, இந்த அறிவைப் பாதுகாக்கும் மக்கள் இருக்க மாட்டார்கள். எல்லோரும் உலக விவகாரத்திலும் அதன் நலன்களையும் பயன்களையும் அடைந்து கொள்வ திலுமே அக்கறையாக இருப்பார்கள். அப்போது ஷரீஆ கல்வியைத் தேடக்கூடியவர்களும், உலமாக்களும் குறுகி விடுவாரகள். மேலும் தங்களின் வீடுகளிலும், வாசிகசாலைகளிலும், புத்தகங்களைச் சேமித்து வைப்பவர்களும், புத்தகங்களை வாசிக்கின்ற வாசகர்களும் அதிகரித்து விடுவார்கள். எனினும் அதனை சரியாக விளங்கக் கூடியவர்கள் ஒரு சிலரே இருப்பர். ஏனெனில் இஸ்லாமிய அறிவை விளங்கிக் கொள்வதாயின் அதற்குரிய வழி முறைகளை அனுசரிப்பது அவசியம். உலமாக்களுடன் கலந்திருந்து அவர்களிடமிருந்து விளக்கம் பெறுவதுதான் அதற்கான வழி.

ஆனால் இறுதி காலத்தில் இந்த நிலை குறைந்து,  வெறும் வாசகர்கள் அதிகரித்து விடுவார்கள். எனினும் சட்டங்களை விளங்கிய புகஹாக்களோ குறைந்து விடுவார்கள். உண்மையில் இது பெரிய சோதனையும், ஆபத்துமாகும். ஏனெனில் தங்களை உலமாக்கள் என நினைக்கின்ற அந்த வாசகர்கள் போதிய அறிவும் விளக்கமும் இல்லாமல் மக்களுக்குத் தீர்ப்புக்களை வழங்குவார்கள். அப்போதவர்கள் பிழையான தீர்ப்புக்களையும் வெளியிடுவார்கள். இதனையே நபியவர்களின் “மனிதர்கள், மடையர்களைத் தங்களின் தலைவர்களாக எடுத்துக் கொள்வார்கள்......” என்ற ஹதீஸ்  வலியுருத்துகின்றது.

     மூன்றாம் கட்டம்-​

         ஷரீஆ அறிவின் அடிப்படையும், மூலமுமான அல் குர்ஆன் மனிதர்களின் உள்ளங்களிலிருந்து நீங்கி விடும், அல் குர்ஆன் ஏடுகளும் இல்லாமல் போகும். அப்பொழுது உலகில் குர்ஆன் இருக்காது. எனவே ஷரீஆவின் அறிவும், உலமாக்களும் இல்லாத போது மனிதன வாழ்வும், மனிதனுக்குரிய நேர்வழியும் இருக்காது. எனவே உண்மை வாழ்க்கை என்பது  பயன் தரும் அறிவின் பிரகாரம் செயற்படுவதுதான். பிரகாசமும் அதுதான். எனவே இவ்விடயத்தில் கவணம் செலுத்துவதும், அதற்கு வழி காட்டுவதும் கடமை. குறிப்பாக கல்வியைத் தேட வழி காட்டுவது பெற்றோர் மீதும் பாதுகாவலர் மீதும் உலமாக்கள் மீதும் கடமையாகும். மேலும் இவ்விடயத்தில் ஆர்வமூட்டு வதும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவதும் அவர்களின் கடமையாகும். மேலும் இஸ்லாமிய கல்வி ஞானமெனும் நல்ல காரியம் முற்றாக ஒழிந்து போகும் என்று நாம் கூறவில்லை. ஆனால் நாம் அதன் விடயத்தில் கவணம் இல்லாமல் இருந்தால் அது நம்மை விட்டும் மற்றவர்களிடம் கைமாறி விடும். இதனை அல்லாஹ்வின் இந்த வாக்கு தெளிவு படுத்துகின்றது.

وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَ‌كُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم ﴿٣٨﴾ محمد

          “நீங்கள் புறக்கணித்தால், உங்களை அல்லாத மக்களை மாற்றி விடுவான் பின்னர் அவர்கள் உங்களைப் போல இருக்க மாட்டார்கள்.(47\38)

    எனவே இந்த நல்ல காரியம் எங்களிடமிருந்து பிடிங்கி, நம்மை விட்டும் மற்றவர்களிடம் செல்வதை யிட்டு நாங்கள் அஞ்ச வேண்டும். ஏனெனில் ஒரு சமூகம் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணிக்கும் போது, தன்னுடைய மார்க்கம் வீனாகி விடாதவாறு அதனை வேறொரு சமுகத்திடம் அல்லாஹ் ஒப்படைத்து விடுவான். அப்போதவர்கள் இந்த உண்மை மார்க்கமும் அல்லாஹ்வின் அருளும் உலகில் நிலைத்திருக்கும் படி செயலாற்றுவார்கள். எனவே நாங்கள் அல்லாஹ்வின் கட்டளையையும், ஷரீஆவின் அறிவையும் பாழாக்கி விடுவோமாயின் நாங்கள் நாசமடைந்து விடுவோம் என்பதை எண்ணி நாம் பயப்பட வேண்டும்.

எனவே நமது துயரங்களை நீக்கி, நமக்கு அமைதியையும் சாந்தியையும் தந்தருளுமாறு அல்லாஹ்வை வேண்டுகிறோம்.

وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه