அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்

எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ்

மீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்

விபரங்கள்

குர்ஆனை முறையாக ஓதுவதில்லை, படிப்பதில்லை,
விளங்குவதில்லை, பின் பற்றுவதில்லை என்றால்
என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்

  ] Tamil – தமிழ் –[ تاميلي

  M.S.M.இம்தியாஸ் யூசுப்

  2014 - 1435

  أمة خُلقها القرآن الكريم

  « باللغة التاميلية »

  محمد إمتياز يوسف

  2014 - 1435

  அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்.

  M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

  மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் விளக்கங்கள் கூறி வாழ்வியல் வழிகாட்டியாக இறக்கப் பட்டது அல்குர்ஆன்.

  ஆன்மீக லௌகீக தெளிவுகளை எடுத்துக் காட்டி அவ்விரண்டுக்குமிடையில் சமாந்திர மான வழியை கடைப் பிடிக்கும் நேரிய மார்க்கத்தினை கூறிக் காட்டியது அல்குர்ஆன்.

  படிப்பதற்கு எளிமையாகவும் விளங்குவதற்கு இலகு வாகவும் ஓதுவதற்கு இனிமையாகவும் அருளப்பட்டது அல்குர்ஆன்.

  இக்குர்ஆனை அருளுவதற்கு அல்லாஹ் தேர்ந்த்தெடுத்த இடம் மக்கா நகரம். மக்காவில் வாழ்ந்த மக்கள் நாகரீகம் படித்தவர்களல்ல. பண்பாடுடையவர்களுமல்ல. மொத்த பாவங்களையும் குத்தகைக்கு எடுத்து இருண்ட யுகத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களை அரபியில் ஜாஹிலியா சமூகம் என அழைப்பர்.

  இருண்ட யுகத்தில் வாழ்ந்தவர்களை ஒளிவீசும் வாழ்வுக்கு கொண்டு வந்த பெருமையை பேசுகிறது அல்குர்ஆன்.

  ஆம்! ஜாஹிலியா சகதிக்குள்

  சிக்குண்டிருந்தவர்களை

  அறிவொளியின் பால் இட்டுச் சென்றது

  அல்குர்ஆன்.

  அறியாமையில் மூழ்கிக் கிடந்து

  மூடர்களாகவும் முரடர்களாகவும்

  கல்நெஞ்சம் படைத்தவர்களாகவும் வாழ்ந்த

  அன்றைய மக்களை

  மனிதர்களாகவும் புனிதர்களாகவும்

  சிறந்த சிந்தனையாளர்களாகவும்

  மாற்றியமைத்தது

  அல்குர்ஆன்.

  அகம்பாவம் ஆணவம் மற்றும் அரக்கத்தனத்துடன்

  ஆடித்திரிந்தவர்களை

  அன்பாளர்களாக பண்பாளர்களாக

  உருவாக்கியது

  அல்குர்ஆன்.

  பலவீனர்களை அடக்கி ஆண்டு

  பல்லாக்கில் பவனி வந்து

  அட்டகாசங்கள் புரிந்த சண்டாளர்களை

  ஆண்டவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு முன்

  சரணடையச் செய்தது

  அல்குர்ஆன்.

  உரிமைகளை பறித்தெடுத்து

  உண்மைகளுக்கு சாவு மணி அடித்து

  வஞ்சகம் புரிந்த புருஷர்களை

  உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும்

  உத்தமர்களாகவும்

  உண்மைக்குசாட்சிசொல்லும் நம்பிக்கையாளர்களாகவும்

  மாற்றியமைத்தது

  அல்குர்ஆன்.

  சுகபோக வாழ்க்கையில் சுழன்று

  உலக மோகத்தில் மூழ்கி

  குறிக்கோளின்றி சென்றவர்களை

  இப்பூமியில்

  அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டும்

  இலட்சிய புருஷர்களாக

  தியாக செம்மல்களாக உருவாக்கியது

  அல்குர்ஆன்.

  ஷைத்தானின் சுலோகங்களில் கட்டுண்டு

  காட்டுத் தர்பார் புரிந்தவர்களை

  காடேரிகளாக வாழ்ந்தவர்களை

  நாடாளும் மன்னர்களாக நம்பிக்கைவான்களாக உருவாக்கியது

  அல்குர்ஆன்.

  சடவாத சிந்தனைக்குள் சிக்குண்டு

  நாஸ்தீகபட்டறைக்குள் பதுங்கியிருந்தவர்களை

  ஒரே ஒரு கடவுளாகிய

  அல்லாஹ்வின் வல்லமைகளை

  எடுத்தோதும்

  அறிவாளர்களாக அழைப்பாளர்களாக

  நடமாடச் செய்தது

  அல்குர்ஆன்.

  உயிர் உடலை விட்டு பிரிந்து

  மண்ணறைக்குள் மறைந்ததன் பின்

  எல்லாம் முடிந்துவிட்டது என்ற

  மமதையில் ஓடித் திரிந்தவர்களை

  மறுமை நாளின் சிந்தனையுடையவர்களாக

  மனித விவகாரங்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக

  வாழச் செய்தது

  அல்குர்ஆன்.

  குலபேதம், நிறபேதம், மொழிபேதம், பிரதேச பேதம் பேசி

  இனவெறிப் போராட்டத்தில் ஈடுபட்டு

  ஆண்டாண்டு காலம் பிரிந்து கிடந்தவர்களை

  சகோதர நேசர்களாக

  சமாதானத்தின் தூதுவர்களாக

  காட்சியளிக்கச் செய்தது

  அல்குர்ஆன்.

  உயர்வு தாழ்வு பேசி

  உயிர்களை மாய்த்துக் கொண்டு

  பல காலம் பலி பீடத்தில் பயணித்தவர்களை

  தக்வா எனும் இறையச்சமுடையவர்களே

  அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையில்

  உறுதியுள்ளவர்களாக உருவாக்கியது

  அல்குர்ஆன்.

  கல்லையும் மண்ணையும்

  பூஜித்து

  ஒரு கோத்திரத்திற்கு ஒரு கடவுளை

  கஃபாவில் சமைத்து

  ஆடைகளை களைந்து

  நிர்வாண கோலத்தில்

  சுற்றி வந்தவர்களை

  அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கு

  அங்க தூய்மையுடன் அலங்கார அமைப்புடன்

  வழிபடச் செய்தது

  அல்குர்ஆன்.

  மதுவிலும் மங்கையர்களிலும் மயங்கி

  பாவங்களில் குதூகலித்து

  அநாகரீகமாக ஆடிக் கொண்டிருந்தவர்களை

  நாகரீகத்தின் காவலர்களாக மாற்றியது

  அல்குர்ஆன்.

  பொதுவுடமை பேசி

  பொதுமக்களின் சொத்துக்களை சூரையாடி

  நிலமானியம் பேசி நிலங்களை கொள்ளையடித்து

  அரசியல் பேசி அராஜகம் பண்ணி

  அரசாண்டவர்களை

  நீதியாளர்களாக

  உலகம் போற்றும் நீதிமான்களாக

  உயர்த்திக் காட்டியது

  அல்குர்ஆன்.

  பெண் குழந்தைகளை இழிவாகக் கருதி

  உயிருடன் புதைத்து

  பெண்களின் உரிமைகளை உரித்தெடுத்து

  உல்லாசபுரி வாழ்க்கையில் திளைத்திருந்தவர்களை

  நற்பண்புகளுக்கு நற்சய்தி சொல்லக் கூடிய

  ஒழுக்கச் சீலர்களாக மாற்றியது

  அல்குர்ஆன்.

  அனாதை பிள்ளைகளின் செல்வங்களை அபகரித்து

  சொத்துக்களுக்காக கட்டாயத்திருமணங்கள் செய்து

  வாரிசுகளின் அனந்தரங்களை பிடிங்கிக் கொண்டு

  அப்பாவின் மனைவியை தன் மனைவியாகிக் கொண்டு

  அசிங்கத்தில்

  அசுத்தத்தில்

  ஓடித்திரிந்தவர்களை

  தூயவர்களாக துயர் துடைக்கின்றவர்களாக

  மாற்றியது

  அல்குர்ஆன்.

  பாவையர்களை பந்தாடி

  பார்ப்பவர்களின் பார்வைக்கு விருந்தாக்கி

  சில்லரைகளுக்கு விலைமாதுகளாக்கி

  வியாபார சந்தையில் பன்டமாக்கி

  அடக்கி ஒடுக்கி ஓரம் கட்டி வாழ்ந்த

  பெண்களை கொளரவப் பிரஜைகளாக

  மானம்முள்ள ஆன்மாவுள்ள ஜீவன்களாக

  கற்பை காக்கும் சீதேவிகளாக

  சிறப்புறச் செய்தது

  அல்குர்ஆன்.

  ஆக மொத்தத்தில்

  ஆணுக்கும் பெண்ணுக்கும்

  அர்த்தமுள்ள சம அந்தஸ்தினை வழங்கி

  உரிமைகளை, கடமைகளை பகிர்ந்து கொடுத்து

  தனிமனித குடும்ப சமூக வாழ்க்கையை பண்படுத்தி

  ஒழுக்க விழுமியங்களுடன் வாழச் செய்தது

  அல்குர்ஆன்.

  நரக படுகுழியின் பக்கத்தில்

  பயணித்தவர்களை

  சுவனத்துப் பூங்காவில் நிழல் பெறும் சமூகமாக

  மாற்றிக் காட்டியது

  அல்குர்ஆன்.

  நான்கு பக்கங்களும் பாறைகளால் சூழ்ந்த பகுதியில்

  பெரும் பாராங்கற்களை விட

  கடின சுபாவம் கொண்ட

  அம்மக்களின் இருண்ட உள்ளங்களை

  அல்லாஹ்வின் வசனங்கள் கேட்டு

  உள்ளம் உருகி கண்ணீர் வடிக்கச் செய்தது

  அல்குர்ஆன்.

  மனித சமூகத்தில் தனிப் பெரும்

  செல்வாக்கை செலுத்தக் கூடியதாக

  முத்திரை பதித்தது

  அல்குர்ஆன்.

  மக்கா மதீனா எனும் நகரங்களை கடந்து

  அரபு தீபகங்களை கடந்து

  உலகின் மத்திய கடற்கரை வரை

  தூதுத்துவ செய்திகளை கொண்டு சேர்க்கும்

  பணியின் தூதர்களாக மாற்றியது

  அல்குர்ஆன்.

  உலக மக்கள்

  தங்களுடைய விடிவுக்காகவும்

  விடுதலைக்காகவும்

  சுதந்திரத்திற் காகவும் இவர்களை தேடி

  தூது அனுப்பக் கூடியதாக

  எடுத்துக் காட்டியது

  அல்குர்ஆன்.

  ஒரு காலத்தில் இவர்களை கண்டு அஞ்சி

  ஒதுங்கியிருந்து ஓரக்கண்பார்வையால்

  உலகம் பார்த்திருந்த நிலையை மாற்றி

  எட்டி வந்து ஒட்டிக் கொள்ளும் தன்மையை

  கொடுத்தது அல்குர்ஆன்.

  குறுகிய காலத்தில்

  நெருங்கிய வேகத்தில்

  நாகரீகத்தையும்

  அறிவியலையும்

  இவர் களிடமிருந்தே

  உலகம் கற்றுக் கொண்டது.

  இருண்ட ஐரோப்பாவிற்கு

  நாகரீகங்களின் தொட்டில்களை

  உருவாக்கி

  கல்வி அறிவின் கலாபீடங்களை

  தோற்றுவித்து

  ஆய்விலும் ஆராய்ச்சியிலும்

  அறிஞர்களை உலகிற்கு கொடுத்தது

  இக்குர்ஆன்

  இந்த மாபெரும் அதிசயத்தை ஆற்றிய பெருமை

  மாமறை அல்குர்ஆனுக்கே உண்டு.

  மனித தோற்றத்தில்

  மிருகங்களாக நடமாடிக் கொண்டு,

  உலக வரலாற்றில்

  இதுபோன்ற சமூகம் இருந்ததில்லை

  என்று இழிந்துரைக்கப்பட்ட இச்சமூகத்தை

  முற்றிலுமாக மாற்றி

  இப்படியும் ஒரு சமூகமா என மயிர்சிலிக்கச் செய்தது

  அல்குர்ஆன்.

  இறைத்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின்

  23 வருட கால உழைப்பில்

  குர்ஆனிய போதனைகளின் அடிப் படையில்

  தோற்றுவித்த சமுதாயம் இது.

  இச் சமூகம் மாற்றியமைக்கப்பட்ட அடிப்படை முறையினை அல்லாஹ் கூறும் போது

  هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ

  அவன் தான் (எழுத்தறிவற்ற) உம்மிகளிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவனது வசனங்களை அவர் அவர்களுக்கு ஓதிக்காட்டி அவர்களைப் பரிசுத்தப் படுத்துவார்.மேலும் வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார். அவர்களோ இதற்கு முன் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர். (62;2)

  மூன்று அடிப்படைகளை முன்வைத்து இந்த சமூகத்தின் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

  · குர்ஆனிய வசனங்களை ஓதிக்காண்பித்தல்

  · அதன் மூலம் அவர்களை பரிசுத்தப்படுத்தி பண்படுத்தல்

  · வேதத்தையும் ஞானத்தையும் (சுன்னவையும்) கற்றுக் கொடுத்தல்.

  இந்த அடிப்படைகளுக்கு அப்பால் வேறொரு வழிமுறை யால் அந்த சமூகம் மாற்றி யமைக்கப்படவில்லை.

  சாத்தானின் சவால்களை முறியடித்து

  அல்லாஹ் வின் கட்டளைகளை

  அகிலத்திற்கு எடுத்தோதும் அடிப்படைகளே இவை.

  இக்குர்ஆன் நெஞ்சங்களில் நிழலாடும் காலமெல்லாம்

  அல்லாஹ்வின் உதவிகள் தங்குதடைகளின்றி

  வந்துகொண்டே இருக்கும்.

  அல்குர்ஆனை பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் இச்சமூகம் லேலோங்கியிருக்கும் குர்ஆனை புறக்கனிக்கும் போதெல்லாம் இழிவை சந்தித்துக் கொண்டிருக்கும். இது அல்லாஹ் ஏற்படுத்திய நியதி.

  அல்லாஹ் இப்படி எச்சரிக்கிறான்:

  وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ عمران:

  நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த போது உங்களது உள்ளங்களுக் கிடையில் இணைப்பை ஏற்படுத்தி அவனது அருளால் நீங்கள் சகோதரர்காளக மாறியதையும் நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது அதை விட்டும் உங்களை அவன் காப்பாற்றி உங்கள் மீது அருள் புரிந்ததையும் எண்ணிப் பாருங்கள். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறு தனது வசனங்களை அல்லாஹ் உங்களுக்குகுத் தெளிவுப்படுத்துகிறான். (3:103)

  குர்ஆனையும் நபிகளாரின் வழிகாட்டலையும் ஓரம் கட்டி

  ஒற்றுமையை இழந்து

  பிரிந்து வாழும் போது

  ஓநாய்கள்

  ஆடுகளை வேட்டையாடுவது போல்

  இச்சமூகம் வேட்டையாடப்படும்.

  மாபெரும் புரட்சியை உருவாக்கி

  உலகிற்கு அமைதியை கொடுத்த

  அல்குர்ஆன்

  இன்னும் எம் கரங்களில் உள்ளது.

  ஆனாலும் எந்த மாறுதல்களும் எங்களுக்குள் உருவாக வில்லை என்றால்

  அது அல்குர்ஆனின் கோளாறு அல்ல.

  எங்களது கோளாறு.

  குர்ஆனை முறையாக ஓதுவதில்லை,

  படிப்பதில்லை,

  விளங்குவதில்லை,

  பின் பற்றுவதில்லை என்றால்

  என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?

  உங்கள் கருத்துக்களை தெரிவிக்க

  [email protected]