4 - ஸூரா அந்நிஸா ()

|

(1) மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அவன்) உங்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதனுடைய மனைவியைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரப்பினான். அல்லாஹ்வையும் இரத்த பந்தங்களையும் அஞ்சுங்கள். அவனைக் கொண்டே உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பாளனாக இருக்கிறான்.

(2) அநாதைகளுக்கு அவர்களுடைய செல்வங்களை கொடுங்கள். (அதிலுள்ள) நல்லதிற்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் (சேர்த்து) விழுங்காதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.

(3) அநாதை(ப் பெண்களை திருமணம் செய்து கொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டீர்கள் என நீங்கள் பயந்தால், (மற்ற) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணம் புரியுங்கள். (பல மனைவிகளுக்கிடையில்) நீதமாக நடக்கமாட்டீர்கள் என பயந்தால் ஒருத்தியை (மணம் புரியுங்கள்). அல்லது உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களை (கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள்). நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.

(4) பெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடைகளைக் கடமையாக (மகிழ்வுடன்) கொடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் உங்களுக்கு (விட்டுக் கொடுக்க) மனதால் விரும்பினால் மகிழ்ச்சியாக, இன்பமாக அதை புசியுங்கள்.

(5) (அநாதைகளின் பொறுப்பாளர்களே!) உங்களுக்கு வாழ்வாதாரமாக அல்லாஹ் ஆக்கிய உங்கள் செல்வங்களை புத்திக் குறைவானவர்களுக்கு கொடுக்காதீர்கள். அவற்றில் அவர்களுக்கு உணவளியுங்கள், அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள், அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லைக் கூறுங்கள்!

(6) இறுதியாக அநாதைகளைச் சோதியுங்கள், அவர்கள் திருமண (பருவ)த்தை அடைந்தால் (செல்வத்தை நிர்வகிக்கக்கூடிய) தெளிவான அறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களை திரும்பப் பெற்று) விடுவார்கள் என்பதற்காக, அவற்றை அளவு கடந்தும் அவசர அவசரமாகவும் சாப்பிடாதீர்கள். (அநாதையின் காப்பாளர்களில்) எவர் செல்வந்தராக இருக்கிறாரோ (அநாதையின் செல்வத்திலிருந்து தான் பயன் பெறுவதை) அவர் தவிர்க்கவும். எவர் ஏழையாக இருக்கிறாரோ அவர் (நீதமாக) முறையுடன் (அதிலிருந்து) புசிக்கவும். அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் மீது சாட்சியாக்குங்கள். துல்லியமாக கணக்கெடுப்பவனாக அல்லாஹ் போதுமானவன்.

(7) பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து ஆண்களுக்கு ஒரு பாகமுண்டு. இன்னும் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து, அது குறைந்திருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும் அதில் கடமையாக்கப்பட்ட பாகமாக பெண்களுக்கு ஒரு பாகமுண்டு.

(8) பங்கு வைக்கும்போது உறவினர்கள், அனாதைகள், ஏழைகள் வந்தால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுங்கள். இன்னும் அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லைக் கூறுங்கள்.

(9) எவர்கள் தங்களுக்குப் பின் பலவீனமான ஒரு சந்ததியை விட்டால் அவர்கள் மீது பயப்படுவார்களோ அ(த்தகைய)வர்கள் (மற்றவர்களின் அநாதை சந்ததிகளையும்) பயந்து கொள்ளட்டும்; அவர்கள் அல்லாஹ்வை அஞ்சட்டும்; நேர்மையான சொல்லைச் சொல்லட்டும்.

(10) நிச்சயமாக, எவர்கள் அநாதைகளின் செல்வங்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பையே. (மறுமையில்) நரக ஜுவாலையில் எரிவார்கள்.

(11) உங்கள் பிள்ளைகளில் (சொத்து பங்கிடுதல் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். ஆணுக்கு இரு பெண்களின் பங்கு போன்று (பாகம்) உண்டு. (ஆண் பிள்ளைகள் இன்றி) இரண்டிற்கும் மேலான பெண்களாக இருந்தால் (தாய் தந்தை) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு. (பிள்ளை) ஒருத்தியாக இருந்தால் அவளுக்கு (சொத்தில்) பாதி (பங்கு)உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இருந்தால் அவருடைய தாய், தந்தைக்கு (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இல்லாமல் அவருக்கு அவருடைய தாய், தந்தை வாரிசானால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு. (ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு.) (இவை அனைத்தும் வஸிய்யத் எனும்) அவர் கூறும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர் (கொடுக்கப்படும்). உங்கள் தந்தைகள் இன்னும் உங்கள் ஆண் பிள்ளைகளில் யார் உங்களுக்குப் பலனளிப்பதில் மிக நெருங்கியவர் என்பதை அறியமாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வின் சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட பங்காகவும் ஆக்கப்பட்டுள்ளன). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

(12) உங்கள் மனைவி விட்டுச் சென்ற (சொத்)தில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் - உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் (பாகம்) உண்டு அவர்கள் செய்கின்ற மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். உங்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் கால் (பாகம்) அவர்களுக்கு உண்டு. உங்களுக்குப் பிள்ளை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் எட்டில் ஒன்று அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்யும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஓர் ஆண் அல்லது ஒரு பெண் (மரணித்து) இருந்தால் இன்னும் அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால், அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் சொத்தில்) ஆறில் ஒன்று உண்டு. இதைவிட அதிகமாக அவர்கள் இருந்தால் அவர்கள் மூன்றில் ஒன்றில் (சமமான) பங்குதாரர்கள் ஆவர். செய்யப்படும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். (இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தாலும் வாரிசுகளில் எவருக்கும் இறந்தவர்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக (இருக்க வேண்டும்). அல்லாஹ்விடமிருந்து நல்லுபதேசமாக (இந்த சட்டங்கள் உங்களுக்கு உபதேசிக்கப்படுகின்றன). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா சகிப்பாளன்.

(13) இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.

(14) எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, அவனுடைய சட்டங்களை மீறுகிறாரோ அவரை (அல்லாஹ்) நரகத்தில் நுழைப்பான். அதில் (அவர்) நிரந்தரமானவராக (தங்குவார்). இழிவுபடுத்தும் வேதனையும் அவருக்கு உண்டு.

(15) உங்கள் பெண்களில் மானக்கேடானதை செய்பவர்கள் அவர்கள் மீது உங்களிலிருந்து நான்கு நபர்களை சாட்சியாக கொண்டு வாருங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியளித்தால் மரணம் அவர்களை கைப்பற்றும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை (சட்டத்தை) ஆக்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.

(16) உங்களிலிருந்து இரு ஆண்கள் அதைச் செய்தால் அவ்விருவரையும் துன்புறுத்துங்கள். அவ்விருவரும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி (தங்களை) திருத்திக்கொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

(17) அல்லாஹ்விடம் மன்னிப்பெல்லாம் அறியாமையினால் தீமையைச் செய்து பிறகு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்புகிறவர்களுக்குத்தான். அல்லாஹ் அவர்கள் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

(18) கெட்டவைகளைச் செய்பவர்கள், அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் "இப்போது நிச்சயமாக நான் (அவற்றை விட்டு) திருந்தி (மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பி) விடுகிறேன்'' என்று கூறுபவருக்கும், நிராகரிப்பாளர்களாக இறந்து விடுபவர்களுக்கும் பிழைபொறுப்பு இல்லை. இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை ஏற்படுத்தினோம்.

(19) நம்பிக்கையாளர்களே! (இறந்தவரின் சொத்துடன் அவரின்) பெண்களை(யும்) பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஹலால் ஆகாது. பகிரங்கமான ஒரு மானக்கேடானதை அவர்கள் செய்தால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலதை நீங்கள் கொண்டு செல்வதற்காக அவர்களை தடுத்து வைக்காதீர்கள். அவர்களுடன் நல்ல முறையில் வாழுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தால், நீங்கள் ஒன்றை வெறுக்க, அதில் அல்லாஹ் அதிகமான நன்மையை ஆக்கலாம்.

(20) ஒரு மனைவியின் இடத்தில் (வேறு) ஒரு மனைவியை மாற்ற நாடினால், அவர்களில் (விவாகரத்து செய்யப்படும்) ஒருத்திக்கு (தங்கக்) குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுக்காதீர்கள். (அதுவோ) அபாண்டமாகவும் பகிரங்கமான பாவமாகவும் (இருக்க) அதை நீங்கள் எடுக்கிறீர்களா?

(21) உங்களில் சிலர் சிலருடன் கலந்து விட்(டு உறவு கொண்)டிருக்க, (அப்பெண்கள்) உங்களிடம் உறுதியான வாக்குறுதியையும் வாங்கி இருக்க அதை எவ்வாறு எடுப்பீர்கள்?

(22) முன்னர் நடந்த (திருமணத்)தைத் தவிர உங்கள் தந்தைகள் மணம் புரிந்தவர்களை மணம் புரியாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கப்பட்டதாகவும் இருக்கிறது, இன்னும் அது கெட்ட பழக்கமாகும்.

(23) உங்கள் தாய்களும், உங்கள் மகள்களும், உங்கள் சகோதரிகளும், உங்கள் மாமிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்) சகோதரனின் மகள்களும், (உங்கள்) சகோதரியின் மகள்களும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்களும், பால் குடியினால் ஆன சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்களும் நீங்கள் உறவு கொண்டுவிட்ட உங்கள் மனைவிகளிலிருந்து உங்கள் மடிகளில் வளர்க்கப்படும் பெண் பிள்ளைகளும் உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அவர்களுடன் உறவு கொண்டிருக்கவில்லையென்றால் (அவர்களை விவாகரத்து செய்தபின் அவர்களின் மகள்களை மணப்பது) உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் முதுகந்தண்டிலிருந்து (பிறந்த) உங்கள் சொந்த மகன்களின் மனைவிகளும், இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது). இதற்கு முன்னர் நடந்ததைத் தவிர (அதை அல்லாஹ் மன்னிப்பான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.

(24) பெண்களில் மணமானவர்களும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர்).உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர. (இவர்களை திருமணம் செய்யலாம்.) (இவை) உங்கள் மீது (விதிக்கப்பட்ட) அல்லாஹ்வின் சட்டமாகும். (மேல் விவரிக்கப்பட்ட) இவர்களைத் தவிர உள்ளவர்களை உங்கள் செல்வங்கள் மூலம் (‘மஹர்Õ கொடுத்து மணம்புரியத்) தேடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது, (நீங்களோ) விபசாரர்களாக இல்லாமல் ஒழுக்கமுள்ளவர்களாக (இருக்கவேண்டும்). அவர்களில் எவரிடம் நீங்கள் (மணமுடித்து) சுகம் அனுபவித்தீர்களோ அவர்களுக்கு அவர்களுடைய மஹர்களை கடமையாக கொடுத்து விடுங்கள். கடமை(யான மஹரு)க்குப் பின்னர் நீங்கள் விரும்பி (குறைத்து)க் கொள்வதில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கின்றான்.

(25) உங்களில் எவர் நம்பிக்கையாளரான, சுதந்திரமான பெண்களை மணம் முடிக்க பொருளாதார சக்தி பெறவில்லையோ, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிய நம்பிக்கையாளரான உங்கள் அடிமைப் பெண்களிலிருந்து (அவர் மணம் புரியலாம்). அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை மிக அறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவரே. ஆகவே (அடிமைகளை) அவர்களுடைய உரிமையாளரின் அனுமதியுடன் மணமுடியுங்கள், நல்ல முறையில் அவர்களுடைய மஹர்களைக் கொடுங்கள், (அப்பெண்கள்) விபசாரிகளாக இல்லாமல், பத்தினிகளாக, ரகசிய நண்பர்களை ஆக்கிக் கொள்ளாதவர்களாக (இருக்கவேண்டும்). (அடிமைப் பெண்கள்) மணம் முடிக்கப்பட்டு, அவர்கள் மானக்கேடானதை செய்தால் (குற்றம் செய்த) சுதந்திரமான பெண்கள் மீது (விதிக்கப்பட்டு)ள்ள தண்டனையில் பாதி அவர்கள் மீது (நிறைவேற்றப்படும்). உங்களில் பாவத்தை பயந்தவருக்கு இது (சலுகையாகும்). நீங்கள் சகித்திருப்பது உங்களுக்கு நன்று. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.

(26) அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்களுடைய வழிகளில் உங்களை நேர்வழி நடத்துவதற்கும், உங்கள் மீது பிழைபொறுப்பதற்கும் நாடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.

(27) அல்லாஹ்வோ, உங்களை மன்னிக்க நாடுகிறான். அற்ப ஆசைகளை பின்பற்றுபவர்கள், நீங்கள் (நேர்வழியிிலிருந்து) முற்றிலும் சாய்வதையே நாடுகிறார்கள்.

(28) அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு இலகுவாக்க நாடுகிறான். மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டுள்ளான்.

(29) நம்பிக்கையாளர்களே! உங்களின் பரஸ்பர விருப்பத்துடன் (நடைபெறும்) வர்த்தகமாக இருந்தால் தவிர, நீங்கள் உங்கள் செல்வங்களை உங்களுக்கு மத்தியில் தவறான முறையில் புசிக்காதீர்கள். உங்கள் உயிர்களை கொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

(30) எவர் அ(ல்லாஹ் தடுத்த)தை வரம்பை மீறியும், அநியாயமாகவும் செய்தால், அவரை (மறுமையில்) நரகத்தில் எரிப்போம். அது அல்லாஹ்வின் மீது சுலபமாக இருக்கிறது!

(31) நீங்கள் தடுக்கப்படுபவற்றில் பெரும்பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால், உங்களை விட்டும் உங்கள் சிறு பாவங்களை அகற்றிவிடுவோம். இன்னும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைப்போம்.

(32) உங்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியதை (கண்டு) ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு பங்குண்டு. அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

(33) தாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் (அவர்களில்) ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஆக்கினோம். உங்கள் சத்தியங்கள் (மூலம் நீங்கள்) ஒப்பந்தம் செய்தவர்கள், அவர்களுக்கு அவர்களின் பங்கை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.

(34) அவர்களில் சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு)ச் செலவு செய்வதாலும் பெண்களை ஆண்கள் நிர்வகிப்பவர்கள் ஆவர். ஆகவே, நல்லபெண்கள் (அல்லாஹ்வுக்கும் கணவனுக்கும்) பணிந்தவர்கள், (கணவனின்) மறைவில் அல்லாஹ் பாதுகாத்ததைக் கொண்டு (தங்களையும் கணவனின் செல்வத்தையும்) பாதுகாப்பவர்கள் ஆவர். (பெண்களில்) எவர்கள் மாறுபாடு செய்வதை நீங்கள் பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசியுங்கள். (அவர்கள் திருந்தாவிடில்) படுக்கைகளில் அவர்களை அப்புறப்படுத்துங்கள். (அதிலும் திருந்தாவிடில்) அவர்களை (காயமின்றி) அடியுங்கள். அதனால் அவர்கள் உங்களுக்கு கீழ்ப்படிந்தால் அவர்கள் மீது ஒரு வழியை (குற்றத்தை)த் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனாக, பெரியவனாக இருக்கிறான்.

(35) அந்த (கணவன் மனைவி) இருவருக்குள் பிளவை நீங்கள் பயந்தால் அவனின் உறவினரில் ஒரு தீர்ப்பாளரையும், அவளின் உறவினரில் ஒரு தீர்ப்பாளரையும் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சீர்திருத்தத்தை நாடினால் அந்த (கணவன் மனைவி) இருவருக்கிடையில் அல்லாஹ் ஒற்றுமை ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.

(36) அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டைவீட்டாருக்கும், அந்நியரான அண்டை வீட்டாருக்கும், அருகில் இருக்கும் நண்பருக்கும், பயணிக்கும், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். கர்வமுடையவனாக, பெருமையுடையவனாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.

(37) (அவர்கள்) கருமித்தனம் செய்பவர்கள், மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுபவர்கள், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததை மறைப்பவர்கள். (இத்தகைய நன்றிகெட்ட) நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை தயார்படுத்தினோம்.

(38) இன்னும் (அவர்கள்) மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்பவர்கள், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் நண்பனால் மிகக் கெட்டுவிட்டான்.

(39) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்தால் அவர்கள் மீது என்னதான் (பாதிப்பு ஏற்படும்)? அல்லாஹ் அவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

(40) நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான். நன்மையாக இருந்தால் அதை பன்மடங்காக்குவான். தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் கொடுப்பான்.

(41) (நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வந்தால் இன்னும் உம்மை இவர்கள் மீது சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களின் நிலைமை) எவ்வாறிருக்கும்?

(42) (அல்லாஹ்வை) நிராகரித்து, தூதருக்கு மாறு செய்தவர்கள் அவர்களுடன் பூமி சமமாக்கப்பட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு செய்தியையும் மறைக்கமாட்டார்கள்.

(43) நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவதை அறியும் வரை நீங்கள் போதை ஏறியவர்களாக இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள். இன்னும் (நீங்கள்) முழுக்காளிகளாக இருக்கும் போதும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). (ஆனால்) பயணிகளாக இருந்தால் தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாக அல்லது பயணத்தில் இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் (கழித்து) வந்தால் அல்லது பெண்களோடு நீங்கள் உறவு கொண்டால், (அப்போது சுத்தம் செய்ய) நீங்கள் தண்ணீரை பெற்றுக்கொள்ள வில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பிழைபொறுப்பவனாக, அதிகம் மன்னிப்பவனாக இருக்கிறான்.

(44) (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை பார்க்கவில்லையா? வழிகேட்டை விலைக்கு வாங்குகிறார்கள்; நீங்கள் (நேர்)வழி தவறுவதை நாடுகின்றனர்.

(45) உங்கள் எதிரிகளை அல்லாஹ் மிக அறிந்தவன். பாதுகாவலனாக (இருப்பதற்கு) அல்லாஹ்தான் போதுமானவன், பேருதவியாளனாக (இருப்பதற்கு) அல்லாஹ்தான் போதுமானவன்.

(46) யூதர்களில் (சிலர்) வசனங்களை அதன் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். "(நபியே!) செவியுற்றோம். (எனினும்) (அதற்கு) மாறு செய்தோம். (நீர்) கேட்கப்படாதவராக கேட்பீராக. இன்னும் தங்கள் நாவுகளை வளைத்தும் மார்க்கத்தில் குற்றம் சொல்வதற்காகவும் (உன்ளுர்னா என்று கூறாமல்) ராயினா என்று கூறுகின்றனர். செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்றும் ‘இஸ்மஃÕ, (கேட்பீராக) ‘உன்ளுர்னாÕ (எங்களைப் பார்ப்பீராக) என்றும் நிச்சயமாக அவர்கள் கூறி இருந்தால் (அது) அவர்களுக்கு மிக நன்றாகவும், மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

(47) வேதம் கொடுக்கப்பட்டவர்களே! முகங்களை மாற்றி அவற்றை அவற்றின் பின்புறங்களில் திருப்பிவிடுவதற்கு முன்னர் அல்லது சனிக்கிழமையுடையோரை நாம் சபித்ததுபோல் அவர்களை நாம் சபிப்பதற்கு முன்னர் உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாக நாம் இறக்கிய(வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் கட்டளையிட்டது நிறைவேற்றப்பட்டே ஆகும்.

(48) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இதைத் தவிர உள்ளதை தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ (அவர்) திட்டமாக பெரும் பாவத்தை புனைந்துவிட்டார்.

(49) (நபியே!) தங்களை (தாமே) பரிசுத்தப்படுத்துபவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? மாறாக, அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) (பேரீத்தங்கொட்டையின் சிறிய) வெள்ளை நூலளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.

(50) (நபியே!) பார்ப்பீராக! அல்லாஹ்வின் மீது எவ்வாறு பொய்யைக் கற்பனை செய்கின்றனர். பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமாகும்.

(51) (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? (அவர்கள்) ஷைத்தானையும், சிலையையும் நம்பிக்கை கொள்கின்றனர். நிராகரிப்பாளர்களை நோக்கி "இவர்கள்தான் நம்பிக்கையாளர்களை விட பாதையால் (மார்க்கத்தால்) மிக நேர்வழியாளர்கள்” என்று கூறுகின்றனர்.

(52) இவர்களை அல்லாஹ் சபித்தான். எவரை அல்லாஹ் சபிப்பானோ அவருக்கு உதவியாளரை (நீர்) காணவே மாட்டீர்.

(53) இவர்களுக்கு ஆட்சியில் பங்கு ஏதும் இருக்கிறதா? அவ்வாறிருந்தால் (பேரீத்தங்கொட்டையின் நடுவில் உள்ள ஒரு) கீறல் அளவு(ள்ள பொருளையு)ம் மக்களுக்கு (தானமாக) கொடுக்க மாட்டார்கள்.

(54) அல்லது மக்களைப் பற்றி அல்லாஹ் அவர்களுக்கு தன் அருளிலிருந்து கொடுத்ததின் மீது பொறாமை கொள்கிறார்களா? திட்டமாக இப்ராஹீமுடைய குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். பெரிய ஆட்சியையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.

(55) அவர்களில் அ(வ்வேதத்)தை நம்பிக்கைகொண்டவரும் உண்டு. அவர்களில் அதைவிட்டு (பிறரைத்) தடுத்தவரும் உண்டு. கொழுந்து விட்டெரியும் நெருப்பால் நரகமே போதுமாகும்.

(56) நிச்சயமாக, நம் வசனங்களை நிராகரித்தவர்களை நரக நெருப்பில் எரிப்போம். அவர்கள் வேதனையைத் (தொடர்ந்து) சுவைப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கனிந்து விடும்போதெல்லாம் அவர்களுக்கு அவை அல்லாத (வேறு) தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.

(57) நம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை சொர்க்கங்களில் நுழைப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றும் நிரந்தரமானவர்கள். பரிசுத்தமான மனைவிகளும் அதில் அவர்களுக்கு உண்டு. அடர்ந்த நிழலிலும் அவர்களை நுழைப்போம்.

(58) (நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அதன் சொந்தக்காரரிடம் நீங்கள் ஒப்படைத்து விடுவதற்கும், மக்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளித்தால் (பாரபட்சமின்றி) நீதமாக தீர்ப்பளிப்பதற்கும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் உபதேசிப்பது மிக சிறந்ததாகும்! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

(59) நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால், (மெய்யாகவே) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் திருப்பிவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை திருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு சிறந்ததாகவும், மிக அழகான முடிவும் ஆகும்.

(60) (நபியே!) உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டனர் என்று எண்ணுபவர்களை நீர் பார்க்கவில்லையா? தீயவனிடமே அவர்கள் தீர்ப்புத் தேடிச் செல்ல நாடுகின்றனர். அவர்கள் அ(ந்த தீய)வனை புறக்கணிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளனர். ஷைத்தான் அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுக்கவே நாடுகிறான்.

(61) "(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள். (அந்த தீயவனிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்களை அவர்கள் உம்மைவிட்டு முற்றிலும் புறக்கணிப்பதையே நீர் காண்பீர்.

(62) (நபியே!) (தீமைகளில்) அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டால் (அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள முடியாமல்போன அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக.) பிறகு அவர்கள் உம்மிடம் வந்து "(அந்த தீயவனிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் அன்றி, (வேறொன்றையும்) நாங்கள் நாடவில்லை" என்று அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்கின்றனர்.

(63) இ(த்தகைய)வர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் அறிவான். ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து அவர்களுக்கு உபதேசிப்பீராக. அவர்களுடைய உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூற்றை அவர்களுக்குக் கூறுவீராக.

(64) நாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை. அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டு அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், (அத்துடன்) அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், பிழை பொறுப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வைக் கண்டிருப்பார்கள்.

(65) ஆகவே, (உண்மை அவ்வாறு) இல்லை. உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டதில் உம்மை தீர்ப்பாளராக்கி, பிறகு, நீர் தீர்ப்பளித்ததில் தங்கள் உள்ளங்களில் (எத்தகைய) அதிருப்தி காணாமல் முழுமையாக (உமக்கு) பணியும் வரை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.

(66) நாம் அவர்கள் மீது உங்களைக் கொல்லுங்கள், அல்லது உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறுங்கள் என்று விதித்திருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் உபதேசிக்கப்பட்டதை செய்திருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும் (நம்பிக்கையில் அவர்களை) உறுதிப்படுத்துவதில் மிக வலுவானதாகவும் ஆகி இருக்கும்.

(67) இன்னும் நம்மிடமிருந்து மகத்தான கூலியை அப்போது நாம் அவர்களுக்கு கொடுத்திருப்போம்.

(68) இன்னும், நேரான பாதையில் அவர்களை நேர்வழி செலுத்தியிருப்போம்.

(69) எவர்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள், சத்தியவான்கள், (சன்மார்க்கப்போரில்) உயிர்நீத்த தியாகிகள், நல்லவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) இருப்பார்கள். இவர்கள் அழகிய தோழர்கள்.

(70) இந்த அருள் அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். நன்கறிபவனாக அல்லாஹ்வே போதுமானவன்.

(71) நம்பிக்கையாளர்களே! உங்கள் எச்சரிக்கையைப் பற்றிப்பிடியுங்கள். (தற்காப்புகளை உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.) சிறு சிறு கூட்டங்களாக அல்லது அனைவருமாக (போருக்கு)ப் புறப்படுங்கள்.

(72) (போருக்கு செல்லாமல்) பின்தங்கிவிடுபவனும் நிச்சயமாக உங்களில் இருக்கிறான். உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் “திட்டமாக அல்லாஹ் என்மீது அருள் புரிந்தான். ஏனெனில் நான் அவர்களுடன் பிரசன்னமாகி இருக்கவில்லை” என்று கூறுகிறான்.

(73) அல்லாஹ்விடமிருந்து ஓர் அருள் உங்களை அடைந்தால் “நான் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமே? (அவ்வாறு இருந்திருப்பின்) மகத்தான வெற்றி பெற்றிருப்பேனே!” என்று உங்களுக்கிடையிலும் அவனுக்கிடையிலும் எந்த நட்பும் இல்லாததைப் போன்று நிச்சயமாகக் கூறுகிறான்.

(74) மறுமைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும். எவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவாரோ (அவர்) கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் அவருக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.

(75) அல்லாஹ்வுடைய பாதையிலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகிய பலவீனர்களின் பாதையிலும் நீங்கள் போரிடாமல் இருக்க உங்களுக்கென்ன (நேர்ந்தது)? “எங்கள் இறைவா! எங்களை இவ்வூரிலிருந்து வெளியேற்று, இந்த ஊர்வாசிகள் அநியாயக்காரர்கள்; எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஏற்படுத்து! எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஓர் உதவியாளரை ஏற்படுத்து!” என்று (அவர்கள்) கூறுகின்றனர்.

(76) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். நிராகரிப்பாளர்கள் ஷைத்தானின் பாதையில் போரிடுவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களிடம் போரிடுங்கள். நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி மிக பலவீனமாக இருக்கிறது!

(77) உங்கள் கைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள், தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஜகாத்தை கொடுங்கள் என்று கூறப்பட்டவர்களை நீர் பார்க்க வில்லையா? போர் அவர்கள் மீது விதிக்கப்பட்டபோது, அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வை பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் (அதைவிட) மிகக் கடுமையாக மக்களைப் பயப்படுகின்றனர். “எங்கள் இறைவா! ஏன் எங்கள் மீது போரை விதித்தாய்? இன்னும் சமீபமான ஒரு தவணை வரை எங்களை நீ பிற்படுத்த வேண்டாமா?” என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “உலகத்தின் இன்பம் அற்பமானது! அல்லாஹ்வை அஞ்சியவருக்கு மறுமை மேலானது. (அங்கு நீங்கள்) ஒரு நூலும் (அதன் அளவுகூட) அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.

(78) நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடையும்; பலமான கோபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரியே! அவர்களை ஒரு நன்மை அடைந்தால் “இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது” எனக் கூறுகின்றனர். அவர்களை ஒரு தீங்கு அடைந்தால் (நபியே!) இது உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது” எனக் கூறுகின்றனர். (நபியே) நீர் கூறுவீராக: எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (ஏற்பட்டன). இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? ஒரு பேச்சையும் அவர்கள் விரைவாக விளங்குவதில்லையே!

(79) “நன்மையில் எது உம்மை அடைந்ததோ (அது) அல்லாஹ்வின் புறத்திலிருந்து (அடைந்தது).” “தீமையில் எது உம்மை அடைந்ததோ (அது) உன் (தவறி)னால் அடைந்தது.” (நபியே!) உம்மை மக்களுக்கு ஒரு தூதராகவே அனுப்பினோம். சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்.

(80) எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் (புறக்கணித்து) திரும்பினார்களோ அவர்கள் மீது பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை.

(81) (நபியே! “உமக்கு எங்கள்) கீழ்ப்படிதல்” எனக் கூறுகின்றனர். உம்மிடமிருந்து வெளியேறினால் அவர்களில் ஒரு கூட்டம் (நீர்) கூறுவதற்கு மாறாக இரவில் சதி செய்கின்றனர். அவர்கள் இரவில் சதிசெய்வதை அல்லாஹ் பதிவுசெய்கிறான். ஆகவே, (நீர்) அவர்களைப் புறக்கணிப்பீராக! அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக. பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.

(82) குர்ஆனை அவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து (வந்ததாக) இருந்திருந்தால் இதில் பல முரண்பாட்டை அவர்கள் கண்டிருப்பார்கள்.

(83) பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய ஒரு செய்தி அவர்களிடம் வந்தால் அதை பரப்புகின்றனர். அதை தூதரிடமும், அவர்களில் உள்ள அதிகாரிகளிடமும் அவர்கள் கொண்டு சென்றால் அதை யூகிக்கக்கூடியவர்கள் அதை நன்கறிந்து கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர (நீங்கள் அனைவரும்) ஷைத்தானை பின்பற்றி இருப்பீர்கள்.

(84) (நபியே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக! உம்மைத் தவிர நீர் பணிக்கப்படமாட்டீர். (இறைகட்டளையை நீர் ஏற்று நடப்பீராக. பிறரை ஏற்று நடக்க வைப்பது உமது கடமையல்ல). நம்பிக்கையாளர்களை (போருக்கு) தூண்டுங்கள். நிராகரிப்பாளர்களின் ஆற்றலை அல்லாஹ் தடுக்கக்கூடும். அல்லாஹ் ஆற்றலால் மிகக் கடுமையானவன், தண்டிப்பதாலும் மிகக் கடுமையானவன்.

(85) எவர் நல்ல சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு பங்கு இருக்கும். எவர் தீய சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு குற்றம் இருக்கும். அல்லாஹ் எல்லாவற்றின் மீது கண்காணிப்பவனாக இருக்கிறான்.

(86) உங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதைக் கொண்டு முகமன் கூறுங்கள். அல்லது அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பாதுகாவலனாக இருக்கிறான்.

(87) அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. (அவன்) நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகம் இல்லை. பேச்சால் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?

(88) (நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்கள் விஷயத்தில் (நீங்கள் முரண்பட்ட) இரு பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்ததின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தாழ்த்தினான். அல்லாஹ் வழிகெடுத்தவரை நீங்கள் நேர்வழிப்படுத்த நாடுகிறீர்களா? எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு வழியையும் அறவே காணமாட்டீர்!

(89) அவர்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் நிராகரித்து (அவர்களுக்கு) நீங்கள் சமமாக ஆகுவதை (அவர்கள்) விரும்புகிறார்கள். ஆகவே, அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் ஹிஜ்ரா செல்லும் வரை அவர்களில் (உங்களுக்கு) பொறுப்பாளர்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (ஹிஜ்ரா செல்லாமல்) அவர்கள் விலகினால் அவர்களை (சிறைப்) பிடியுங்கள்! (அவர்கள் எதிர்த்தால்) அவர்களை நீங்கள் கண்ட இடமெல்லாம் அவர்களைக் கொல்லுங்கள்; (உங்களுக்கு) அவர்களிலிருந்து பொறுப்பாளரையும் உதவியாளரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

(90) உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் (சமாதான) உடன்படிக்கை உள்ள சமுதாயத்திடம் சேர்ந்தவர்கள்; அல்லது உங்களிடம் போர்புரிய அல்லது தங்கள் சமுதாயத்திடம் போர்புரிய தங்கள் உள்ளங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில் உங்களிடம் வந்தவர்களைத் தவிர. (அவர்களைக் கொல்லாதீர்கள்; சிறைப் பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களைச் சாட்டியிருப்பான், உங்களிடம் அவர்கள் போரிட்டிருப்பார்கள். ஆகவே, (இவர்கள்) உங்களை விட்டு விலகி உங்களிடம் போரிடாமல் உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பித்தால் (ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போரிட) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் (ஒரு காரணத்தையும்) ஆக்கவில்லை.

(91) (இவர்களல்லாத) மற்றவர்களை (நீங்கள்) காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்புப் பெறவும் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் சமுதாயத்திடம் பாதுகாப்புப் பெறவும் நாடுகிறார்கள். குழப்பம் விளைவிப்பதற்கு அவர்கள் திருப்பப்படும் போதெல்லாம் அதில் குப்புற விழுந்து விடுகிறார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகாமலும், உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பிக்காமலும், தங்கள் கைகளை (தீங்கிலிருந்து) தடுக்காமலும் இருந்தால், அவர்களை (சிறைப்) பிடியுங்கள். (தப்பிச் செல்பவர்களை) நீங்கள் எங்கு அவர்களைப் பெற்றாலும் அவர்களைக் கொல்லுங்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை ஆக்கிவிட்டோம்.

(92) தவறுதலாகவே தவிர, ஒரு நம்பிக்கையாளரை கொல்வது ஒரு நம்பிக்கையாளருக்கு ஆகுமானதல்ல. எவராவது ஒரு நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொன்றால் (அதற்குப் பரிகாரம்) நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிடவேண்டும், (இறந்த) அவருடைய குடும்பத்தாரிடம் (அதற்குரிய) நஷ்ட ஈட்டை ஒப்படைக்க வேண்டும். (ஆனால், குடும்பத்தினர் நஷ்டஈட்டுத் தொகையை கொலையாளிக்கு) தானமாக்கினால் தவிர. (கொல்லப்பட்ட) அவன் உங்கள் எதிரி சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்து அவர் நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை (மட்டும்) உரிமையிடவேண்டும். (கொல்லப்பட்ட) அவர் உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் உடன்படிக்கை உள்ள சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் நஷ்டஈடும் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிடவேண்டும். (நஷ்டஈடு வழங்க வசதியை) எவர் அடையவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பிருத்தல் வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.

(93) எவர் ஒரு நம்பிக்கையாளரை நாடியவராகவே (வேண்டுமென்றே) கொல்வாரோ அவருக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவர் நிரந்தரமானவர். அவரை அல்லாஹ் கோபிப்பான், அவரைச் சபிப்பான். பெரிய வேதனையையும் அவருக்கு தயார்படுத்துவான்.

(94) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் பயணித்தால் (எதிர்வருபவர்களைத்) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சலாம் கூறியவரை உலக வாழ்க்கையின் பொருளை நீங்கள் தேடியவர்களாக “நீ நம்பிக்கையாளர் இல்லை” என்று கூறாதீர்கள். அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (இதற்கு) முன்னர் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். ஆகவே (சந்திப்பவரை) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.

(95) நம்பிக்கையாளர்களில் குறையுடையோர் அல்லாத (போருக்குச் செல்லாமல் வீடுகளில்) தங்கியவர்களும், தங்கள் செல்வங்களைக் கொண்டும், தங்கள் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுபவர்களும் சமமாக மாட்டார்கள். தங்கள் செல்வங்களைக் கொண்டும் தங்கள் உயிர்களைக் கொண்டும் போரிடுபவர்களை (போருக்குச் செல்லாமல்) தங்கியவர்களை விட பதவியால் அல்லாஹ் மேன்மையாக்கினான். அனைவருக்கும் சொர்க்கத்தையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். போராளிகளை மகத்தான கூலியால் தங்கியவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கினான்.

(96) (போரிடுபவர்களுக்கு) தன்னிடமிருந்து (பல) பதவிகளையும், மன்னிப்பையும், கருணையையும் (அருளுகிறான்). அல்லாஹ், மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

(97) நிச்சயமாக தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக எவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, (அவர்களிடம் “மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கூற, (அதற்கவர்கள்) “இந்த பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? நீங்கள் (இருந்த இடத்தை விட்டு) அதில் ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது மீளுமிடத்தால் (மிகக்) கெட்டுவிட்டது!

(98) ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் (ஹிஜ்ரத் செய்ய முடியாமல்) பலவீனர்களாக இருந்தவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்பட்டவர்கள்.) இவர்கள் (ஹிஜ்ரத் செல்வதற்கு தேவையான) யுக்திகளை மேற்கொள்ள சக்தி பெறாமல் இருந்தார்கள். இன்னும், இவர்கள், (தப்பித்துச் செல்ல) ஒரு வழியையும் பெறாமல் இருந்தார்கள்.

(99) அல்லாஹ் இத்தகையவர்களை மன்னிக்கக்கூடும். அல்லாஹ் முற்றிலும் பிழைபொறுப்பவனாக, அதிகம் மன்னிப்பவனாக இருக்கிறான்.

(100) அல்லாஹ்வுடைய பாதையில் எவர் ஹிஜ்ரா செல்கிறாரோ, அவர் பூமியில் (வசதியான) பல புகலிடங்களையும், (பொருளாதார) வசதியையும் பெறுவார். எவர் தன் இல்லத்திலிருந்து அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் பக்கம் ஹிஜ்ரா செல்பவராக வெளியேறி, பிறகு அவரை மரணம் அடைந்தால் அவருடைய கூலி திட்டமாக அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகிறது. அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

(101) (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணித்தால், நிராகரிப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவதை நீங்கள் பயந்தால், தொழுகையைச் சுருக்குவது உங்கள் மீது குற்றமில்லை. நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்.

(102) (நபியே! போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும். அவர்கள் தங்கள் ஆயுதங்களை (கைகளில்) எடுக்கவும். அவர்கள் (உம்முடன் தொழுது) சஜ்தா செய்துவிட்டால் (தொழுகையிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இருக்கவும். தொழாமலிருந்த மற்றொரு பிரிவு வரவும், உம்முடன் அவர்கள் தொழவும். அவர்களும் தங்கள் தற்காப்பையும், தங்கள் ஆயுதங்களையும் எடுக்கவும். நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் பொருள்களிலிருந்து கவனமற்றுவிட வேண்டுமே! என்று நிராகரிப்பாளர்கள் விரும்பினர். (அப்படி கவனமற்றால்) உடனே உங்கள் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து விடுவார்கள். மழையின் காரணமாக சிரமம் உங்களுக்கு இருந்தால் அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களை (கீழே) வைப்பது உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் தற்காப்பை எடுங்கள் (உஷாராக இருங்கள்). நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை ஏற்படுத்தினான்.

(103) நீங்கள் தொழுகையை முடித்தால் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், உங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) நீங்கள் நிம்மதி அடைந்தால் தொழுகையை (முறைப்படி) நிலைநிறுத்துங்கள். நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

(104) (எதிரி) கூட்டத்தைத் தேடுவதில் (நீங்கள் சிறிதும்) சோர்வடையாதீர்கள். நீங்கள் (காயத்தினால்) வேதனைப்படுபவர்களாக இருந்தால் நீங்கள் வேதனைப்படுவது போன்று நிச்சயமாக அவர்களும் வேதனைப்படுகிறார்கள். அவர்கள் ஆதரவு வைக்காத (வெற்றி, நற்கூலி அனைத்)தை(யும்) அல்லாஹ்விடம் நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.

(105) (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உம்மீது இறக்கினோம். நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக ஆகிவிடாதீர்.

(106) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

(107) (மக்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே மோசடி செய்பவர்கள் சார்பாக வாதிடாதீர். சதிகாரனாக, பாவியாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(108) (இவர்கள் தம் குற்றத்தை) மக்களிடம் மறைக்கத் தேடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மறைக்கத்தேடுவதில்லை. பேச்சில் (அல்லாஹ்) விரும்பாததை இவர்கள் இரவில் சதித்திட்டம் செய்யும்போது அவன் அவர்களுடன் இருக்கிறான். அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்(தறிந்)தவனாக இருக்கிறான்.

(109) (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இவர்கள் சார்பாக இவ்வுலக வாழ்க்கையில் வாதிடுகிறீர்களா? மறுமை நாளில் இவர்கள் சார்பாக அல்லாஹ்விடம் யார் வாதிடுவார்? அல்லது இவர்கள் மீது பொறுப்பாளராக யார் இருப்பார்?

(110) எவர், ஒரு தீமையைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்து விட்டு, பிறகு (அதிலிருந்து விலகி, கைசேதப்பட்டு) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாகக் காண்பார்.

(111) எவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கிறாரோ அவர் அதைச் சம்பாதிப்பதெல்லாம் தனக்கெதிராகத்தான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.

(112) எவர், ஒரு குற்றத்தை அல்லது ஒரு பாவத்தை செய்து, அதை ஒரு நிரபராதி மீது எறிந்தால், திட்டமாக அவர் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் (தன்மீது) சுமந்து கொண்டார்.

(113) (நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனின் கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் உம்மை வழி கெடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு திட்டமாக நாடியிருக்கும். அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்கமாட்டார்கள். அவர்கள் உமக்கு எதையும் தீங்கிழைக்க மாட்டார்கள். அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கினான். நீர் அறிந்திராதவற்றை உமக்குக் கற்பித்தான். உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கிறது.

(114) (நபியே!) அவர்களின் இரகசியங்களில் அதிகமானவற்றில் அறவே நன்மை இல்லை, தர்மத்தை அல்லது நன்மையை அல்லது மக்களுக்கிடையில் சமாதானத்தை ஏவியவரைத் தவிர. எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி (மேற்கூறப்பட்ட) அதை செய்வாரோ நாம் அவருக்கு மகத்தான கூலியைத் தருவோம்.

(115) எவர் தனக்கு நேரான வழி தெளிவானதன் பின்னர் இத்தூதருக்கு முரண்பட்டு நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுவாரோ அவரை அவர் திரும்பியதிலேயே திருப்பிவிடுவோம். இன்னும் அவரை நரகத்தில் எரிப்போம். அது மீளுமிடத்தால் (மிகக்) கெட்டுவிட்டது.

(116) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். அது அல்லாததை தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ திட்டமாக அவர் தூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார்.

(117) அவர்கள் அவனையன்றி பெண் (சிலை)களிடமே தவிர பிரார்த்திப்பதில்லை. கீழ்ப்படியாத ஷைத்தானிடமே தவிர பிரார்த்திப்பதில்லை.

(118) அல்லாஹ் அவனை சபித்தான். “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக்கொள்வேன்” என்று (ஷைத்தான்) கூறினான்.

(119) “நிச்சயம் அவர்களை வழி கெடுப்பேன். நிச்சயம் அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை ஊட்டுவேன்; நிச்சயம் அவர்களுக்கு (தீமையை) ஏவுவேன். ஆகவே, (சிலைகளுக்கு நேர்ச்சை செய்யப்பட்ட) கால்நடைகளின் காதுகளை நிச்சயம் அறுப்பார்கள். நிச்சயம் அவர்களுக்கு ஏவுவேன். ஆகவே, அல்லாஹ்வின் படைப்பு(களின் கோலங்)களை நிச்சயமாக மாற்றுவார்கள்” (என்று கூறினான்). எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை நண்பனாக எடுத்துக் கொள்வானோ அவன் திட்டமாக பகிரங்கமான நஷ்டமடைந்தான்.

(120) (ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்கு வீண் நம்பிக்கையூட்டுகிறான். (அவன்) அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு ஒன்றையும்) வாக்களிக்க மாட்டான்.

(121) அவர்களுடைய ஒதுங்குமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து (தப்பிக்க) ஒரு மீளுமிடத்தையும் பெறமாட்டார்கள்.

(122) (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள், அவர்களை (மறுமையில்) சொர்க்கங்களில் நுழைப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றென்றும் நிரந்தரமானவர்கள். அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். சொல்லில் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?

(123) (நம்பிக்கையாளர்களே! வெற்றி) உங்கள் விருப்பங்களைக் கொண்டும் இல்லை, வேதக்காரர்களின் விருப்பங்களைக் கொண்டுமில்லை. எவன் ஒரு தீமையைச் செய்வானோ அவன் அதற்கு கூலி கொடுக்கப்படுவான். அல்லாஹ்வையன்றி தனக்கு ஒரு பாதுகாவலரையோ ஓர் உதவியாளரையோ பெறமாட்டான்.

(124) எவர் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் நம்பிக்கை கொண்டு நன்மைகளில் இருந்து (முடிந்தளவு) செய்வார்களோ, அவர்கள்தான் சொர்க்கத்தில் நுழைவார்கள். ஒரு (பேரீத்தக் கொட்டையின்) கீறல் அளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.

(125) அல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைத்து, அவர் நற்குணமுடையவராக இருக்க, இப்ராஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியுடையவராக பின்பற்றியவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை நண்பராக எடுத்துக் கொண்டான்.

(126) வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.

(127) (நபியே!) உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கத் தீர்ப்பு கோருகின்றனர். (நீர்) கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான். இன்னும் வேதத்தில் உங்களுக்கு எது ஓதப்படுகிறதோ அதுவும் (தீர்ப்பளிக்கிறது). “அநாதைப் பெண்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்காமல் அவர்களை மணமுடிக்க விரும்புகிறீர்கள், (இது தவறு என்றும்) பலவீனமான சிறுவர்களுக்கு (அவர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டுமென்றும்), அநாதைகளுக்கு (மஹர் இன்னும் சொத்தில்) நீதத்தை நீங்கள் நிலை நிறுத்துவதையும்” (அல்லாஹ் தீர்ப்பளிக்கிறான்). நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

(128) ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பை அல்லது புறக்கணிப்பை பயந்தால், அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை செய்வது அவ்விருவர் மீதும் குற்றமே இல்லை. சமாதான (ஒப்பந்த)ம் சிறந்ததாகும். ஆன்மாக்கள் கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் நன்மை செய்தால், அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.

(129) நீங்கள் ஆசைப்பட்டாலும் மனைவிகளுக்கிடையில் நீதமாக நடப்பதற்கு அறவே இயலமாட்டீர்கள். (ஒருத்தியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து விடாதீர்கள் (சாய்ந்து விட்டால் மற்ற) அவளை தொங்கவிடப்பட்டவளைப் போன்று விட்டு விடுவீர்கள்! நீங்கள் சமாதானம் செய்து, அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

(130) அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையினால் ஒவ்வொருவரையும் நிறைவடையச் செய்வான். அல்லாஹ் விசாலமானவனாக, ஞானவானாக இருக்கிறான்.

(131) வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்குரியனவே! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் “அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று திட்டவட்டமாக உபதேசித்தோம். நீங்கள் நிராகரித்தால் (அவனுக்கு நஷ்டமில்லை), வானங்களிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும் நிச்சயமாக அல்லாஹ்விற்கு உரியன. அல்லாஹ் முற்றிலும் நிறைவானவனாக, புகழுக்குரியவனாக இருக்கிறான்.

(132) வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.

(133) மனிதர்களே! அவன் நாடினால் உங்களை போக்கிவிடுவான், மற்றவர்களைக் கொண்டுவருவான். அல்லாஹ் அதன் மீது பேராற்றலுடையவனாக இருக்கிறான்.

(134) இவ்வுலகத்தின் பலனை மட்டும் எவர் நாடிக்கொண்டிருந்தாரோ (அவர் அறிந்து கொள்ளவும்), அல்லாஹ்விடம் இவ்வுலகம் இன்னும் மறுமையின் பலன் இருக்கிறது (எனவே இரண்டையும் நாடட்டும்). அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

(135) நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தை நிலைநிறுத்துபவர்களாக; அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள், உங்களுக்கு அல்லது பெற்றோருக்கு அல்லது உறவினர்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே. (சாட்சி கூறப்படுகின்ற) அவர் செல்வந்தனாக அல்லது ஏழையாக இருந்தால் அல்லாஹ் அவ்விருவருக்கும் மிக ஏற்றமானவன். ஆகவே, நீங்கள் நீதி செலுத்துவதில் ஆசைகளை பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தை) மாற்றினால் அல்லது (சாட்சியத்தை) புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.

(136) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும், அவனின் தூதரையும், அவன் தன் தூதர் மீது இறக்கிய வேதத்தையும், (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவர் அல்லாஹ்வையும், அவனின் வானவர்களையும், அவனின் வேதங்களையும், அவனின் தூதர்களையும், மறுமை நாளையும் நிராகரிப்பாரோ (அவர்), திட்டமாக தூரமான வழிகேடாக வழிகெட்டார்.

(137) நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து பிறகு நிராகரிப்பை அதிகப்படுத்தினார்களோ (அவர்கள் மரணித்துவிட்டால்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பதற்கில்லை. (வேதனையிலிருந்து தப்பிக்க) அவர்களுக்கு ஒரு வழியையும் காட்டுவதற்கில்லை.

(138) நயவஞ்சகர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! நிச்சயமாக அவர்களுக்கு துன்புறுத்துகின்ற வேதனை உண்டு என்று.

(139) (இவர்கள்) நம்பிக்கையாளர்களை அன்றி நிராகரிப்பாளர்களை பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் அவர்களிடம் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே.

(140) அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் செவியுற்றால் (அவ்வாறு செய்யும்) அவர்கள் அது அல்லாத வேறு பேச்சில் ஈடுபடும்வரை அவர்களுடன் உட்காராதீர்கள். (அவ்வாறு உட்கார்ந்தால்) அப்போது நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்) என்று (அல்லாஹ்) உங்கள் மீது வேதத்தில் (சட்டத்தை) இறக்கி விட்டான். நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்கள், நிராகரிப்பவர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பான்.

(141) இவர்கள் உங்களுக்கு (சோதனையை) எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு வெற்றி (கிடைத்து) இருந்தால், நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர். நிராகரிப்பாளர்களுக்கு (வெற்றியில்) ஓர் அளவு (கிடைத்து) இருந்தால் “நாங்கள் உங்களை (வெல்ல ஆற்றல் பெற்றிருந்தும்) வெற்றி கொள்ளவில்லையே! உங்களை நம்பிக்கையாளர்களிடமிருந்து பாதுகாக்கவில்லையா?” என்று கூறுகின்றனர். உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்கள் மீது (வெற்றி கொள்ள) நிராகரிப்பாளர்களுக்கு ஒரு வழியையும் அல்லாஹ் அறவே ஆக்கமாட்டான்.

(142) நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்கின்றனர். அவன் அவர்களை வஞ்சிப்பவன் ஆவான். அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக நிற்கின்றனர். மனிதர்களுக்குக் காண்பிக்கின்றனர். குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைவு கூரமாட்டார்கள்.

(143) அதற்கிடையில் தடுமாறியவர்களாக இருக்கின்றனர். (முஸ்லிம்களாகிய) இவர்களுடனும் இல்லை, (காஃபிர்களாகிய) இவர்களுடனுமில்லை. எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு (நல்ல) வழியையும் (நீர்) அறவே பெறமாட்டீர்.

(144) நம்பிக்கையாளர்களே! நம்பிக்கையாளர்கள் அன்றி நிராகரிப்பாளர்களை (உங்கள் காரியங்களுக்கு) பொறுப்பாளர்களாக ஆக்காதீர்கள். உங்களுக்கு எதிராக அல்லாஹ்விற்கு ஒரு தெளிவான சான்றை நீங்கள் ஆக்கிவிட நாடுகிறீர்களா?

(145) நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகக் கீழ் அடுக்கில் இருப்பார்கள். அவர்களுக்கு ஓர் உதவியாளரை (நீர்) காணமாட்டீர்.

(146) (தங்கள் நயவஞ்சகத்தை விட்டு) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி) பாவமன்னிப்புக்கோரி, (தங்கள் செயல்களை) சீர்திருத்தி, அல்லாஹ்வை (உறுதியாகப்) பற்றிப்பிடித்து, தங்கள் வழிபாட்டை(யும் மார்க்கத்தையும்) அல்லாஹ்விற்கு தூய்மைப்படுத்தினார்களே அவர்களைத் தவிர. அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் இருப்பார்கள். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியைக் கொடுப்பான்.

(147) நீங்கள் நன்றி செலுத்தி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டால், உங்களை வேதனை செய்வது கொண்டு (அவன்) என்ன செய்வான்? அல்லாஹ் நன்றியாளனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.

(148) அநீதியிழைக்கப்பட்டவரைத் தவிர (மற்றவர் எவரும் தனக்கு இழைக்கப்பட்ட) பேச்சில் தீமையைப் பகிரங்கப்படுத்தி பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, நன்கறிபவனாக இருக்கிறான்.

(149) நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அல்லது ஒரு கெடுதியை நீங்கள் மன்னித்தாலும் (அது நன்றே). நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் பிழைபொறுப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.

(150) நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்து, (தூதர்களில்) “சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" எனக் கூறி அதற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த நாடுகிறார்களோ,

(151) அவர்கள்தான் உண்மையில் நிராகரிப்பாளர்கள். நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளோம்.

(152) எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களில் ஒருவருக்கிடையிலும் பிரிவினை செய்யவில்லையோ அவர்களுக்கு அவர்களுடைய கூலிகளை (அல்லாஹ்) கொடுப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

(153) (நபியே!) வேதக்காரர்கள் வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை நீர் இறக்கும்படி உம்மிடம் கேட்கிறார்கள். திட்டமாக இதைவிட மிகப் பெரியதை மூஸாவிடம் (அவர்கள்) கேட்டனர். “அல்லாஹ்வை கண்கூடாக எங்களுக்குக் காண்பி” என்று கூறினர். ஆகவே, அவர்களின் அநியாயத்தினால் அவர்களை இடி முழக்கம் பிடித்தது. பிறகு, அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். அதை மன்னித்தோம். மூஸாவிற்கு தெளிவான சான்றையும் கொடுத்தோம்.

(154) அவர்களுடைய வாக்குறுதியின் காரணமாக மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம். “வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். “சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்குக் கூறினோம். அவர்களிடம் உறுதியான வாக்குறுதியை எடுத்தோம்.

(155) ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும் எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியதாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). மாறாக, அல்லாஹ் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது முத்திரையிட்டான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(156) அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்).

(157) “அல்லாஹ்வின் தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவில்லை. எனினும், அவர்களுக்கு (அவரைப் போன்று ஒருவன்) தோற்றமாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விசயத்தில் (உண்மைக்கு) முரண்பட்டவர்கள் அதில் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். சந்தேகத்தைப் பின்பற்றுவது தவிர அதில் அவர்களுக்கு வேறு ஓர் அறிவும் இல்லை. உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவில்லை.

(158) மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்தினான். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

(159) அவர் இறப்பதற்கு முன்னர் நிச்சயமாக அவரை நம்பிக்கை கொண்டே தவிர வேதக்காரர்களில் எவரும் இல்லை (இருக்க மாட்டார்). மறுமை நாளில் இவர்களுக்கு எதிராக சாட்சி கூறுபவராக அவர் இருப்பார்.

(160) ஆக, யூதர்களின் அநியாயத்தின் காரணமாகவும் அல்லாஹ்வின் பாதையை விட்டு அதிகமானவர்களை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட (சில) நல்லவற்றை அவர்களுக்கு தடுக்கப்பட்டதாக ஆக்கினோம்.

(161) இன்னும், அவர்கள் வட்டி வாங்கியதன் காரணமாகவும்; - அவர்களோ அதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள். - இன்னும், மக்களின் செல்வங்களை அவர்கள் தப்பான வழியில் (தீர்ப்புக்கு லஞ்சம் வாங்கி) சாப்பிட்டதன் காரணமாகவும் (அவர்களை சபித்தோம்). இன்னும், நிராகரிக்கின்ற அவர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனையை தயார் செய்து இருக்கிறோம்.

(162) எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்கள் இன்னும் நம்பிக்கையாளர்கள் உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையை நிலைநிறுத்துபவர்கள்; ஸகாத்தைக் கொடுப்பவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள், (ஆகிய) இவர்களுக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.

(163) (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் (வந்த) நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தது போன்றே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (அவர்களுடைய) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் வஹ்யி அறிவித்தோம். தாவூதுக்கு ‘ஸபூர்’ ஐ கொடுத்தோம்.

(164) (பல) தூதர்களை (அனுப்பினோம்.) அவர்களை முன்னர் உமக்கு விவரித்தோம். இன்னும் பல தூதர்களை (அனுப்பினோம்.) அவர்களை உமக்கு விவரிக்கவில்லை. மூஸாவுடன் அல்லாஹ் பேசினான்.

(165) தூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மக்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க, நற்செய்தி கூறுபவர்களாக, (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாக (பல) தூதர்களை (அனுப்பினோம்). அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

(166) (நபியே!) அல்லாஹ் சாட்சி கூறுகிறான் உம்மீது அவன் இறக்கியதற்கு, அதை அவனுடைய அறிவைக் கொண்டே இறக்கினான் என்று. (அவ்வாறே) வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.

(167) நிச்சயமாக, நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தவர்கள் வெகுதூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டனர்.

(168) நிச்சயமாக, எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும் அநியாயம் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. இன்னும், (நரகத்தின் வழியைத் தவிர வேறு) வழியை அவர்களுக்கு வழி காட்டுபவனாக இல்லை. (அவர்கள் சொர்க்கப் பாதையில் செல்ல மாட்டார்கள். அவர்கள் மன முரண்டாக நிராகரித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை கைவிட்டுவிட்டான்.)

(169) நரகத்தின் வழியைத் தவிர (வேறு வழியை அவர்களுக்கு அல்லாஹ் காட்ட மாட்டான். அ(ந்த நரகத்)தில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். இது (-அவர்களை நரகத்தில் தள்ளுவது) அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது.

(170) மக்களே! இத்தூதர் உங்களிடம் உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்தைக் கொண்டு வந்துவிட்டார். ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கு மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்தால், வானங்களிலும், பூமியிலுமுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்குரியனவே! அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

(171) வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் அளவு கடக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (எதையும்) கூறாதீர்கள். மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய (‘குன்’ என்ற) வார்த்தையும், -அ(ந்த வார்த்)தை(யை) மர்யமுக்கு சேர்ப்பித்தான்- அவனிலிருந்து (படைக்கப்பட்ட) ஓர் உயிரும்தான் ஆவார். ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்) ‘மூவர்’ என்று கூறாதீர்கள். (இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) உங்களுக்கு மிக நன்று. அல்லாஹ் எல்லாம் (வணக்கத்திற்குரிய) ஒரே ஒரு கடவுள்தான். அவனுக்கு குழந்தை இருப்பதை விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனுக்கே வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.

(172) ஈஸாவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்விற்கு அடிமையாக இருப்பதை விட்டு அறவே திமிரு கொள்ளமாட்டார்கள். எவர்கள் அவனை வணங்குவதை விட்டு திமிரு கொள்வார்களோ இன்னும் பெருமை கொள்வார்களோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன் பக்கம் ஒன்று திரட்டுவான்.

(173) ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான், இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் திமிருபிடித்து பெருமையடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு (வேறு) பாதுகாவலரையும் உதவியாளரையும் (அங்கு) காண மாட்டார்கள்.

(174) மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்துள்ளது. தெளிவான ஓர் ஒளியை உங்களுக்கு இறக்கினோம்.

(175) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனைப் (பலமாகப்) பற்றிப் பிடித்தார்களோ அவர்களை தன் புறத்திலிருந்து கருணையிலும், அருளிலும் நுழைப்பான். இன்னும், தன் பக்கம் நேரான வழியையும் அவர்களுக்கு வழிகாட்டுவான்.

(176) (நபியே!) ‘கலாலா’ (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாதவர்) பற்றி உம்மிடம் தீர்ப்பு கேட்கிறார்கள். கூறுவீராக! “அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதில் பாதி கிடைக்கும். (ஒரு பெண் இறந்து) அவளுக்கு சந்ததி இல்லையென்றால் (அவளுடைய சகோதரன்) அவளுக்கு (அனைத்து சொத்திற்கும்) வாரிசாக ஆவான். (உடன் பிறந்த சகோதரிகள்) இரு பெண்களாக இருந்தால், (இறந்தவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவ்விருவருக்கும் உண்டு. (இறந்தவருக்கு) உடன் பிறந்தவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்தால், இரு பெண்களின் பங்கு ஓர் ஆணுக்கு உண்டு. நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு விவரிக்கிறான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.