(1) ஹா, மீம்.
(2) தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
(3) நிச்சயமாக நாம் அருள்நிறைந்த ஓர் இரவில் இதை இறக்கினோம். நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக இருந்தோம்.
(4) இதில்தான் ஞானமிக்க எல்லாக் காரியங்களும் முடிவு செய்யப்படுகின்றன,
(5) நம்மிடமிருந்து வருகின்ற கட்டளையின்படி. நிச்சயமாக நாம் (அவரை) தூதராக அனுப்பக் கூடியவர்களாகவே இருந்தோம்,
(6) (அவர்) உமது இறைவனின் ஓர் அருளாக இருக்கவேண்டும் என்பதற்காக. நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
(7) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் அதிபதி(யிடமிருந்து அவர் அருளாக அனுப்பப்பட்டு இருக்கிறார்). நீங்கள் (உண்மைகளை) உறுதியாக நம்பக் கூடியவர்களாக இருந்தால் (இதை உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்)!
(8) வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர (வேறு யாரும்) அறவே இல்லை. அவன்தான் உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்க வைக்கின்றான். அவன்தான் உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான மூதாதைகளின் இறைவனும் ஆவான்.
(9) மாறாக, அவர்கள் (இந்த வேதத்தை நம்பாமல்) சந்தேகத்தில் இருக்கின்றனர்; விளையாடுகின்றனர்.
(10) ஆக, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வருகின்ற நாளை எதிர்பார்ப்பீராக!
(11) அது மக்களை சூழ்ந்துகொள்ளும். இது துன்புறுத்தும் தண்டனையாகும்.
(12) எங்கள் இறைவா! எங்களை விட்டு வேதனையை அகற்றி விடுவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்கள் ஆவோம்.
(13) (வேதனை வந்த பின்னர்) நல்லறிவு பெறுவது அவர்களுக்கு எப்படி (பலன் தரும்)? திட்டமாக அவர்களிடம் தெளிவான ஒரு தூதர் வந்தார்.
(14) பிறகு, அவர்கள் அவரை விட்டு விலகிவிட்டனர். இன்னும், அவர் (பிறரால் இந்த வேதத்தை) கற்பிக்கப்பட்டவர், பைத்தியக்காரர் என்று கூறினர்.
(15) நிச்சயமாக நாம் இந்த வேதனையை கொஞ்சம் நீக்குவோம். (ஆனால்,) நிச்சயமாக நீங்கள் (உங்கள் வழிகேட்டுக்குத்தான்) திரும்புவீர்கள்.
(16) பெரிய தாக்குதலாக (அவர்களை) நாம் தாக்குகின்ற நாளில் (அவர்களிடம்) நிச்சயமாக நாம் பழி வாங்குவோம்.
(17) இவர்களுக்கு முன்னர் நாம் ஃபிர்அவ்னுடைய மக்களை திட்டவட்டமாக சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான ஒரு தூதர் வந்தார்.
(18) (அவர் கூறினார்:) அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.
(19) அல்லாஹ்விற்கு முன் அழிச்சாட்டியம் செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வருவேன்.
(20) “இன்னும், நிச்சயமாக நான் எனது இறைவனிடம்; இன்னும், உங்கள் இறைவனிடம் நீங்கள் என்னைக் கொல்வதில் இருந்து பாதுகாவல் தேடினேன்.”
(21) “நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் என்னை விட்டு விலகி சென்று விடுங்கள்.”
(22) ஆக, அவர் தனது இறைவனை அழைத்தார்: “நிச்சயமாக இவர்கள் (உனக்கு எதிராக) குற்றம் செய்கின்ற மக்கள் ஆவார்கள்.”
(23) (இறைவன் கூறினான்:) “ஆக, என் அடியார்களை இரவில் நீர் அழைத்துச் செல்வீராக. நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.”
(24) இன்னும், கடலை (அது) அமைதியாக (இருக்கின்ற நிலையில் அப்படியே) விட்டுவிடுங்கள்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுகின்ற ராணுவம் ஆவார்கள்.
(25) அவர்கள் எத்தனையோ தோட்டங்களையும் ஊற்றுகளையும் விட்டுச்சென்றார்கள்.
(26) இன்னும், விவசாய நிலங்களையும் கண்ணியமான இடங்களையும் (-மாட மாளிகைகளையும்) விட்டுச்சென்றார்கள்.
(27) இன்னும், அவர்கள் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்த வசதிகளையும் விட்டுச்சென்றார்கள்.
(28) இப்படித்தான் (உமது இறைவனின் தண்டனை வந்தால் பாவிகளின் நிலை இருக்கும்). இவற்றை (எல்லாம்) வேறு மக்களுக்கு நாம் சொந்தமாக்கினோம்.
(29) அவர்கள் மீது வானமும் பூமியும் அழவில்லை. அவர்கள் தவணைத் தரப்படுபவர்களாகவும் இருக்கவில்லை.
(30) இழிவுபடுத்தும் தண்டனையிலிருந்து இஸ்ரவேலர்களை திட்டவட்டமாக நாம் காப்பாற்றினோம்.
(31) ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களை பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் பெருமை அடிப்பவனாக (-அழிச்சாட்டியம் செய்பவனாக), வரம்புமீறிகளில் ஒருவனாக இருந்தான்.
(32) (-இஸ்ரவேலர்களை அவர்களின் தகுதியை) அறிந்தே அகிலத்தாரை விட அவர்களை திட்டவட்டமாக நாம் தேர்ந்தெடுத்தோம்.
(33) அத்தாட்சிகளில் தெளிவான சோதனை உள்ளதை அவர்களுக்கு நாம் கொடுத்தோம்.
(34) (நபியே!) நிச்சயமாக (உமது மக்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்:
(35) “இது நமது முதல் மரணமாகவே தவிர இல்லை. இன்னும், நாங்கள் (மரணித்த பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து) எழுப்பப்படுபவர்களாக இல்லை.”
(36) (முஹம்மதே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்து)க் கொண்டு வாருங்கள்!
(37) இவர்கள் சிறந்தவர்களா அல்லது துப்பஃ உடைய மக்களா? இன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்தனர்.
(38) வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் நாம் விளையாட்டாக படைக்கவில்லை.
(39) நாம் அவ்விரண்டையும் உண்மையான காரணத்திற்கே தவிர படைக்கவில்லை. என்றாலும் அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.
(40) நிச்சயமாக தீர்ப்பு நாள் இவர்கள் அனைவரின் (தண்டனைக்காக) நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்.
(41) அந்நாளில் நண்பன் (உறவுக்காரன்) நண்பனை (உறவுக்காரனை) விட்டு (வேதனையில்) எதையும் தடுக்க மாட்டான். அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
(42) அல்லாஹ் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்களைத் தவிர (யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது). நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன்.
(43) நிச்சயமாக ஸக்கூம் மரம்
(44) பாவிகளின் உணவாகும்.
(45) உருக்கப்பட்ட செம்பைப் போல், வயிறுகளில் அது கொதித்துக் கொண்டிருக்கும்,
(46) கடுமையாக கொதிக்கின்ற தண்ணீர் கொதிப்பதைப் போல்.
(47) அவனைப் பிடியுங்கள்! ஆக, நரகத்தின் நடுவில் அவனை இழுத்து வாருங்கள்!
(48) பிறகு, (அவனை) வேதனை செய்வதற்காக அவனது தலைக்கு மேல் கடுமையாக கொதிக்கின்ற நீரிலிருந்து ஊற்றுங்கள்.
(49) நீ (இந்த தண்டனைகளை) சுவை! நிச்சயமாக நீதான் கண்ணியமானவன் மதிப்பிற்குரியவன்.
(50) நிச்சயமாக, நீங்கள் சந்தேகிப்பவர்களாக இருந்தது இதுதான்.
(51) நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில்,
(52) சொர்க்கங்களில், ஊற்றுகளில் இருப்பார்கள்.
(53) அவர்கள் மென்மையான, தடிப்பமான பட்டு ஆடைகளை அணிவார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
(54) இவ்வாறுதான் (அவர்கள் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்). இன்னும், நாம் அவர்களுக்கு கண்ணழகிகளான வெண்மையான கன்னிகளை மணமுடித்து வைப்போம்.
(55) அதில் அவர்கள் நிம்மதியானவர்களாக (-பாதுகாப்புப் பெற்றவர்களாக) எல்லாப் பழங்களையும் (அவர்கள் உண்பதற்கு அவர்களின் பணியாளர்களிடம்) கேட்பார்கள்.
(56) அதில் மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள், (உலகத்தில் அவர்கள் மரணித்த) முதல் மரணத்தைத் தவிர. (சொர்க்கத்தில் மரணம் இருக்காது.) இன்னும், நரகத்தின் தண்டனையை விட்டும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்.
(57) உமது இறைவனின் அருளினால் (இவை எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும்). இதுதான் மகத்தான வெற்றியாகும்.
(58) ஆக, உமது (அரபி) மொழியில் இ(ந்த வேதத்)தை (கற்பதையும் கற்பிப்பதையும்) நாம் இலகுவாக்கி வைத்ததெல்லாம் அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகத்தான்.
(59) ஆக, நீர் எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.