(1) மறுமை நாளின் மீது சத்தியம் செய்கிறேன்!
(2) இன்னும், பழிக்கிற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!
(3) மனிதன் எண்ணுகிறானா, அவனுடைய எலும்புகளை - (அவை உக்கிப்போன பின்னர்) - அறவே நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் (-அது நமக்கு முடியாது) என்று?
(4) ஏன் முடியாது! அவனுடைய விரல்களை (அவை பிரிந்தில்லாமல், ஒட்டகத்தின் குளம்பைப் போல் ஒன்றோடு ஒன்று சேர்ந்த நிலையில்) சமமாக ஆக்கிவிடுவதற்கு நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கிறோம்.
(5) மாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகிறான்.
(6) மறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்.
(7) ஆக, பார்வை (திடுக்கிட்டு) திகைத்துவிட்டால்,
(8) இன்னும், சந்திரன் ஒளி இழந்து விட்டால்,
(9) இன்னும், சூரியனும் சந்திரனும் (ஒளி இல்லாமல்) ஒன்று சேர்க்கப்ப(ட்டு பூமியில் எறியப்ப)ட்டால்,
(10) அந்நாளில் மனிதன் கூறுவான்: “தப்பிக்குமிடம் எங்கே?”
(11) அவ்வாறல்ல! தப்பித்து ஓட அறவே முடியாது (-பாவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க பாதுகாப்பான இடம் ஏதும் இருக்காது).
(12) அந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது.
(13) மனிதன் அந்நாளில், தான் முந்தி செய்ததையும் பிந்தி செய்ததையும் (பழைய, புதிய செயல்கள் அனைத்தையும்) அறிவிக்கப்படுவான்.
(14) மாறாக, மனிதன் அவனுக்கே சாட்சியாக இருப்பான். (அவன் செய்த செயல்களுக்கு அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.)
(15) அவன் தனது வருத்தங்களை (சாக்கு போக்குகளை எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).
(16) (நபியே!) இதை நீர் அவசரமாக (மனனம்) செய்வதற்காக இ(தை ஓதுவ)தற்கு உமது நாவை அசைக்காதீர்.
(17) நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் (பிறகு) அதை (நீர்) ஓதும்படி செய்வதும் நம்மீது கடமையாகும்.
(18) ஆக, இதை நாம் ஓதினால் அது ஓதப்படுவதை நீர் பின்தொடர்வீராக! (-செவிதாழ்த்தி கேட்ப்பீராக!)
(19) பிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்.
(20) அவ்வாறல்ல, (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை நேசிக்கிறீர்கள்.
(21) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
(22) அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக) இருக்கும்.
(23) தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும்.
(24) இன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் இருக்கும்.
(25) அதற்கு கடுமையான ஒரு பிரச்சனை நிகழப்போகிறது என்று அறிந்துகொள்ளும்.
(26) அவ்வாறல்ல! (-தங்களின் இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்று இணைவைப்பவர்கள் எண்ணுவது போல் அல்ல. பாவியின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,
(27) ஓதிப்பார்ப்பவர் யாரும் இருக்கின்றாரா என்று கேட்கப்பட்டால்,
(28) நிச்சயமாக இது (உலகை விட்டு நாம் பிரியப் போகின்ற) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,
(29) (மறுமையின்) கெண்டைக் காலுடன் (உலகத்தின்) கெண்டைக் கால் பின்னிக்கொண்டால், (உலகத்தின் கடுமையான இறுதி நிலையும் மறுமையின் பயங்கரமான முதல் நிலையும் மனிதனுக்குள் அப்போது ஒன்று சேரும்.)
(30) அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.)
(31) அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை.
(32) எனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்.
(33) பிறகு, தனது குடும்பத்தாரிடம் கர்வம் கொண்டவனாக (திரும்பி) சென்றான்.
(34) உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.
(35) பிறகும், உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.
(36) மனிதன் தான் சும்மா விட்டுவிடப்படுவான் என்று எண்ணுகின்றானா?
(37) அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா?
(38) பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். அவன்(தான்) (அவனைப்) படைத்தான், இன்னும் செம்மையாக ஆக்கினான்.
(39) அதிலிருந்து ஆண், பெண் ஜோடிகளை அவன்தான் ஆக்கினான்.
(40) இ(த்தகைய)வன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றல் உள்ளவனாக இல்லையா?