20 - ஸூரா தாஹா ()

|

(1) 1. தா ஹா.

(2) 2. (நபியே!) நீர் சிரமப்படுவதற்காக இந்த குர்ஆனை நாம் உம் மீது இறக்கவில்லை.

(3) 3. ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறையச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதை இறக்கி வைத்தோம்).

(4) 4. உயர்ந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது.

(5) 5. (அவற்றைப் படைத்த) ரஹ்மான் (-அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.

(6) 6. வானங்களிலும், பூமியிலும், இவற்றுக்கு மத்தியிலும், இன்னும் பூமிக்குக் கீழ் புதைந்து கிடப்பவையும் அவனுக்கே சொந்தமானவை.

(7) 7. (நபியே!) நீர் (மெதுவாக அல்லது) சப்தமிட்டு கூறினால் (இரண்டும் அவனுக்குச் சமம்தான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அதைவிட மிக மறைவாக (மனதில்) இருப்பதையும் நன்கறிவான்.

(8) 8. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் இருக்கின்றன. (அவற்றில் எதைக் கொண்டேனும் அவனை அழையுங்கள்.)

(9) 9. (நபியே!) மூஸாவின் சரித்திரம் உம்மிடம் வந்திருக்கிறதா?

(10) 10. (அவர் தன் குடும்பத்தாருடன் சென்றபொழுது தான் செல்லவேண்டிய வழியை அறியாத நிலையில் தூர் என்னும் மலைமீது) அவர் நெருப்பைக் கண்ட சமயத்தில் தன் குடும்பத்தாரை நோக்கி ‘‘நீங்கள் (இங்கு சிறிது) தாமதித்திருங்கள். மெய்யாகவே நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஓர் எரி கொள்ளியை எடுத்துக்கொண்டு உங்களிடம் வருகிறேன். அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் (நாம் செல்லவேண்டிய) வழியை அறிந்து கொள்வேன்'' என்றார்.

(11) 11. அவர் அதனிடம் வரவே (அவரை நோக்கி) ‘‘மூஸாவே!'' என்று சப்தமிட்டழைத்து (நாம் கூறியதாவது):

(12) 12. ‘‘நிச்சயமாக நான்தான் உமது இறைவன். உமது காலணிகள் இரண்டையும் கழற்றி விடுவீராக. நிச்சயமாக நீர் ‘துவா' என்னும் பரிசுத்த இடத்தில் இருக்கிறீர்.

(13) 13. நான் உம்மை (என் தூதராகத்) தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆதலால், வஹ்யி மூலம் (உமக்கு) அறிவிக்கப்படுவதற்கு செவிசாய்ப்பீராக.

(14) 14. நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. என்னையே வணங்குவீராக. என்னை தியானித்துக்கொண்டே இருக்கும்பொருட்டு தொழுகையைக் கடைப்பிடிப்பீராக.

(15) 15. நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வோர் ஆத்மாவும் தன் செயலுக்குத் தக்க கூலியை அடையும் பொருட்டு அதை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க விரும்புகிறேன்.

(16) 16. ஆகவே, அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிந்து விடுவீர்.''

(17) 17. ‘‘மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' (என்று கேட்டான்.)

(18) 18. அதற்கவர் ‘‘இது என் கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு (பல) பயன்களும் இருக்கின்றன'' என்று கூறினார்.

(19) 19. அதற்கு (இறைவன்) ‘‘மூஸாவே! அதை(த் தரையில்) எறிவீராக'' எனக் கூறினான்.

(20) 20. அவர் அதை எறியவே அது ஒரு பெரிய பாம்பாகி ஓடிற்று.

(21) 21. அப்போது இறைவன் கூறினான்: (மூஸாவே!) ‘‘அதைப் பிடிப்பீராக; பயப்படாதீர். உடனே அதை (முன்பு போல் தடியாக) அதன் பழைய நிலைக்கு திருப்பி விடுவேன்.

(22) 22. உமது கையை உமது கக்கத்தில் சேர்த்து வைப்பீராக. (அதை எடுக்கும் போது) அது மிக்க ஒளியுடன் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இது) மற்றொரு அத்தாட்சியாகும்.

(23) 23. (இவ்வாறு இன்னும்) நமது பெரிய அத்தாட்சிகளை உமக்கு நாம் காண்பிப்போம்.

(24) 24. ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் மாறு செய்து கொண்டிருக்கிறான்''

(25) 25. அவர் கூறினார் ‘‘என் இறைவனே! என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு;

(26) 26. (நான் செய்ய வேண்டிய) என் காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை.

(27) 27. என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு;

(28) 28. என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்வார்கள்.

(29) 29. என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக (மந்திரியாக) ஆக்கிவை;

(30) 30. அவர் என் சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும்.

(31) 31. அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வை.

(32) 32. என் காரியங்களில் அவரையும் கூட்டா(ளியா)க்கி வை.

(33) 33. நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் துதித்து புகழ்வதற்காக,

(34) 34. மேலும் உன்னை அதிகமாகவே நினைவு கூர்வதற்காக.

(35) 35. (எங்கள் இறைவனே!) நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்'' (என்று மூஸா பிரார்த்தனை செய்தார்).

(36) 36. அதற்கு (இறைவன்) கூறினான், ‘‘மூஸாவே! நீர் கேட்ட அனைத்தும் நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டன.

(37) 37. (இதற்கு) முன்னரும் ஒருமுறை நிச்சயமாக நாம் உமக்குப் பேரருள் புரிந்திருக்கிறோம்.'' (அதாவது:)

(38) 38. வஹ்யில் அறிவிக்கப்படுபவற்றை நாம் உமது தாய்க்கு வஹ்யி அறிவித்தபோது, (அதாவது;)

(39) 39. ‘‘(உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உம்மைப் பற்றி உமது தாய் கவலை கொண்டாள். ஆகவே, உமது தாயை நோக்கி) ‘‘உம்மைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடு. அக்கடல் அதைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதை எடுத்துக்கொள்வான்'' (என்று உமது தாய்க்கு அறிவித்தோம்). நீர் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உம் மீது என் அன்பை சொரிந்(து உம்மைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம்.

(40) 40. உமது சகோதரி சென்று (உம்மை எடுத்தவர்களிடம்) ‘‘இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று கூறும்படிச் செய்து, உமது தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உமது தாயிடமே உம்மைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீர் ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீர் கொண்ட கவலையில் இருந்து உம்மைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். பின்னர், மத்யன்வாசிகளிடமும் நீர் பல வருடங்கள் தங்கியிருந்தீர். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீர் (நமது தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்.

(41) 41. இன்னும் எனக்காகவே நான் உம்மை(உருவாக்கி)த் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

(42) 42. ஆகவே, ‘‘நீர் உமது சகோதரருடன் என் அத்தாட்சிகளை எடுத்துக் கொண்டு செல்வீராக. நீங்கள் இருவரும் என்னை நினைவு கூர்வதில் சோர்வடைந்து விடாதீர்கள்.

(43) 43. நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான்.

(44) 44. நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்'' (என்றும் கூறினோம்.)

(45) 45. அதற்கு அவ்விருவரும் ‘‘எங்கள் இறைவனே! அவன் எங்கள் மீது (வரம்பு) மீறி கொடுமை செய்வானோ அல்லது விஷமம் செய்வானோ என்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று கூறினார்கள்.

(46) 46. (அதற்கு இறைவன்) கூறினான்: ‘‘நீங்கள் பயப்படவேண்டாம். நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பேன்.''

(47) 47. நீங்கள் இருவரும் அவனிடத்தில் சென்று சொல்லுங்கள்: ‘‘நாங்கள் உன் இறைவனின் தூதர்கள். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களை வேதனை செய்யாதே! மெய்யாகவே நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். நேரான வழியைப் பின்பற்றியவர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.

(48) 48. (எங்களை) பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது'' (என்பதை தெரிவியுங்கள்).

(49) 49. (அதற்கு) அவன் ‘‘மூஸாவே! உங்கள் (இருவரின்) இறைவன் யார்?'' என்றான்.

(50) 50. அதற்கு மூஸா ‘‘எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவற்றை பயன்படுத்தும்) வழியையும் (அவற்றுக்கு) அறிவித்தானோ அவன்தான் எங்கள் இறைவன்'' என்றார்.

(51) 51. அதற்கவன் ‘‘முன்னர் சென்றுபோன (சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த)வர்களின் கதி என்னவாகும்?'' என்று கேட்டான்.

(52) 52. அதற்கவர் கூறினார்: ‘‘அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடம் உள்ள பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் (அவர்கள் செய்து வந்ததில் எதையும்) தவறவிடவும் மாட்டான்; மறந்து விடவும் மாட்டான்.

(53) 53. அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (பயணத்திற்கான) வழிகளையும் அதில் உங்களுக்கு ஏற்படுத்தி மேகத்தில் இருந்து மழையையும் பொழியச் செய்கிறான்.'' (மேலும் என் இறைவன் கூறுகிறான்:) ‘‘நாம் இறக்கிவைக்கும் (ஒரே வித) மழை நீரைக்கொண்டு (குணத்திலும், ரசனையிலும் மாறுபட்ட) பல விதமான புற்பூண்டுகளில் (ஆண், பெண்) ஜோடிகளை வெளிப்படுத்துகிறோம்.

(54) 54. (ஆகவே, அவற்றை நீங்களும்) புசியுங்கள்; உங்கள் (ஆடு மாடு போன்ற) கால்நடைகளை(யும்) மேயவிடுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

(55) 55. பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே உங்களை மீண்டும் சேர்த்து விடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.'' (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்.)

(56) 56. நம் அத்தாட்சிகள் அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தோம். எனினும், அவனோ (இவை அனைத்தும்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ளாது) விலகிக்கொண்டான்.

(57) 57. ‘‘மூஸாவே! உமது சூனியத்தின் மூலம் எங்களை, எங்களின் ஊரை விட்டு வெளியேற்றவா எங்களிடம் வந்தீர்?

(58) 58. இதைப்போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குச் செய்து காண்பிப்போம். நாங்களோ அல்லது நீரோ தவறிவிடாதவாறு ஒரு சமமான பூமியில் (செய்து காண்பிக்க) எங்களுக்கும் உமக்குமிடையில் ஒரு தவணையைக் குறிப்பிடுவீராக!'' என்று கூறினான்.

(59) 59. அதற்கு மூஸா ‘‘(உங்கள்) பண்டிகை நாளே உங்களுக்குத் தவணையாகும். (ஆனால்,) மக்கள் அனைவரும் முற்பகலிலேயே கூட்டப்பட வேண்டும்'' என்று கூறினார்.

(60) 60. பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தனது எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்பு, (குறித்த நாளில், குறித்த இடத்திற்கு) வந்தான்.

(61) 61. மூஸா (அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி) ‘‘உங்களுக்கென்ன கேடு? அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய்யைக் கற்பனை செய்து கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால்) அவன் (தன்) வேதனையைக்கொண்டு உங்களை அழித்துவிடுவான். பொய் சொன்னவர்களெல்லாம் அழிந்தே போனார்கள்'' என்று கூறினார்.

(62) 62. (இதைக் கேட்ட) அவர்கள் தங்களுக்குள் இதைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டு இரகசியமாகவும் ஆலோசனை செய்து (ஒரு முடிவு கட்டிக்) கொண்டனர்.

(63) 63. அவர்கள் (மக்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்கள் சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றி விடவும், உங்கள் மேலான மார்க்கத்தை அழித்து விடவும் விரும்புகிறார்கள்.

(64) 64. ஆதலால் உங்கள் சூனியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பின்பு (அவரை எதிர்க்க) அணியணியாக வாருங்கள். இன்றைய தினம் எவருடைய காரியம் மேலோங்கியதோ அவரே நிச்சயமாக வெற்றி பெறுவார்'' என்று கூறினார்கள்.

(65) 65. பின்னர் (சூனியம் செய்ய வந்த) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (சூனியத்தை) நீர் எறிகிறீரா? அல்லது முதலாவதாக நாங்கள் எறியவா?'' என்று கேட்டார்கள்.

(66) 66. அதற்கவர், ‘‘இல்லை! நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்'' என்று கூறினார். (அவர்கள் எறியவே, எறியப்பட்ட) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவதுபோல் இவருக்குத் தோன்றின.

(67) 67. ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.

(68) 68. (அச்சமயம் நாம் அவரை நோக்கி) ‘‘பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தான் (இவர்களைவிட) மிக உயர்ந்தவர்'' என்று கூறினோம்.

(69) 69. இன்னும் உமது வலது கையில் இருப்பதை நீர் எறிவீராக! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே (தவிர உண்மையல்ல). சூனியக்காரன் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டான்'' (என்றும் கூறினோம்).

(70) 70. (மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு ‘‘மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்.

(71) 71. (இதைக் கண்ட ஃபிர்அவ்ன்) ‘‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கைகொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்கள் தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களை மாறுகை, மாறுகால் வெட்டிப் பேரீச்ச மரத்தின் கிளைகளில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையான வரும் நிலையானவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்'' என்று கூறினான்.

(72) 72. அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்.

(73) 73. நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்கள் குற்றங்களையும் உன் நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலையானவனும் ஆவான்'' என்று கூறினார்கள்.

(74) 74. உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் (கூலியாகும்). அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக்கொண்டு வாழவும் சாகவும் வழியில்லாமல் தவிப்பான்.)

(75) 75. எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகிறாரோ அவர்களுக்கு மேலான பதவிகள் இருக்கின்றன.

(76) 76. (மறுமையிலோ அவர்களுக்கு) ‘அத்ன்' என்ற நிலையான சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும்.

(77) 77. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். ‘நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுவீராக. (வழியில் குறுக்கிடும்) கடலில் (உமது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துவீராக. (உம்மை எதிரிகள்) அடைந்து விடுவார்கள் என்று நீர் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உமது மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீர் அஞ்சாதீர்'' (என்றும் அறிவித்தோம்).

(78) 78. (அவ்வாறே மூஸா நபி இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிடவே) ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின்பற்றிச் சென்றான். (அவன் கடலிலும் அவர்களைப் பின்பற்றிச் செல்லவே) கடலும் (இவர்களில் ஒருவரும் தப்பிவிடாதபடி) இவர்களை மூழ்கடிக்க வேண்டியவாறு மூழ்கடித்து விட்டது.

(79) 79. ஃபிர்அவ்ன் தன் மக்களை நேரான வழியில் செலுத்தாமல் தவறான வழியிலேயே செலுத்தினான்.

(80) 80. இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி ‘தூர்' என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு ‘மன்னு சல்வா'வையும் இறக்கிவைத்தோம்.

(81) 81. நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதைப் புசித்து வாருங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள். (மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக அழிந்தே விடுவான்.

(82) 82. எவர் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து நேரான வழியில் நிலைத்திருக்கிறாரோ அவரை நிச்சயமாக நான் மிக மன்னிப்பவன் ஆவேன்.

(83) 83. (மூஸா தூர் ஸீனாய் மலைக்கு விரைந்து வந்த சமயத்தில், அவரிடம்) ‘‘மூஸாவே! நீர் உமது மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்?'' (என்று இறைவன் கேட்டான்).

(84) 84. அதற்கவர் ‘‘அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! நீ திருப்திபடுவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்'' என்று கூறினார்.

(85) 85. அதற்கு (இறைவன்) ‘‘நீர் வந்த பின்னர் நாம் உமது மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். ‘ஸாமிரீ' (என்பவன்) அவர்களை வழிகெடுத்து விட்டான்'' என்று கூறினான்.

(86) 86. (உடனே) மூஸா பெரும் துக்கத்துடன் கோபம் கொண்டவராகத் தன் மக்களிடம் திரும்பி வந்து ‘‘என் மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு(த் தவ்றாத் என்னும் வேதத்தைத் தருவதாக) அழகான வாக்குறுதி அளிக்கவில்லையா? அவன் வாக்குறுதி அளித்து உங்களுக்கு அதிக நாட்களாகி விட்டனவா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனின் கோபம் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியே எனக்குச் செய்த வாக்குறுதிக்கு நீங்கள் மாறு செய்தீர்களா?'' என்று கேட்டார்.

(87) 87. அதற்கவர்கள் ‘‘நாங்கள் உமக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் இஷ்டப்படி மாறுசெய்யவில்லை. ஆனால், நாங்கள் சுமந்துகொண்டு வந்த (ஃபிர்அவ்னுடைய) மக்களின் நகைகளை (நெருப்பில் எறியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதில் அவற்றை) நாங்கள் எறிந்தோம். அவ்வாறே ஸாமிரீயும் (தன்னிடமிருந்த நகைகளை) எறிந்தான்.

(88) 88. பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். ஆனால் அவர் (இதை) மறந்து (விட்டு மலைக்குச் சென்று)விட்டார்'' என்று கூறினார்கள்.

(89) 89. (என்ன ஆச்சரியம்!) அவர்களு(டைய கேள்விகளு)க்கு அச்சிலை ஒரு பதில் கூறாமலிருப்பதையும், நன்மையோ தீமையோ (எதையும்) அவர்களுக்குச் செய்ய சக்தியற்று இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா?

(90) 90. இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி ‘‘என் மக்களே! (இச்சிலையை வணங்கி) இதன் மூலம் நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலை அல்ல!) என்னைப் பின்பற்றுங்கள்; என் கட்டளைக்கு கட்டுப்படுங்கள்'' என்று கூறினார்.

(91) 91. அதற்கவர்கள் ‘‘மூஸா நம்மிடம் திரும்ப வரும்வரை இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள்.

(92) 92. (மூஸா அவர்களிடம் வந்தபின், ஹாரூனை நோக்கி) ‘‘ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் (என்னை நீர் பின்பற்றி நடக்க) உம்மைத் தடை செய்தது எது?

(93) 93. நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? நீர் என் கட்டளைக்குமாறு செய்ய கருதினீரா?'' (என்று கூறி அவருடைய தாடியையும் தலை முடியையும் பிடித்து இழுத்தார்.)

(94) 94. அதற்கவர் ‘‘என் தாய் மகனே! என் தலையையும் என் தாடியையும் பிடி(த்திழு)க்காதீர். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளுக் கிடையில் நீ பிரிவினையை ஏற்படுத்தி விட்டாய். என் வார்த்தைகளை நீ கவனிக்கவில்லை என்று என்னை நீர் கடுகடுப்பீர் என நிச்சயமாக நான் பயந்(துதான் அவர்களுடன் இருந்)தேன்'' எனக் கூறினார்.

(95) 95. (பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) ‘‘ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)'' என்று கேட்டார்.

(96) 96. அதற்கவன் ‘‘அவர்கள் பார்க்காத ஒன்றை நான் பார்த்தேன். (வானவத்) தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது.) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது'' என்று கூறினான்.

(97) 97. அதற்கு மூஸா (அவனை நோக்கி ‘‘இங்கிருந்து) அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எவரைக் கண்டபோதிலும்) ‘‘என்னைத் தீண்டாதீர்கள்'' என்று கூறித்திரிவதுதான் இவ்வுலகத்தில் உனக்குரிய தண்டனை. (மறுமையிலோ) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட கொடிய வேதனையுண்டு. நீ அதிலிருந்து தப்பவே மாட்டாய். இதோ! நீ ஆராதனை செய்து கொண்டிருந்த தெய்வத்தைப் பார். நிச்சயமாக நான் அதை உருக்கி(ப் பஸ்பமாக்கி) கடலில் தூற்றி விடுவேன்'' என்றும் கூறினார்.

(98) 98. உங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறொருவன் இல்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடிய விசாலமான கல்வி ஞானமுடையவன்'' (என்றும் கூறினார்).

(99) 99. (நபியே!) இவ்வாறே உமக்கு முன்னர் சென்றுபோனவர்களின் சரித்திரத்தை (மேலும்) நாம் உமக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை(உடைய இவ்வேதத்தை) நிச்சயமாக நாம்தான் உமக்கு அளித்தோம்.

(100) 100. எவன் இதை (நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக்கிறானோ அவன் மறுமை நாளில் நிச்சயமாக(ப் பெரியதொரு) பாவத்தையே சுமப்பான்.

(101) 101. அதில் அவன் எந்நாளும் (அதைச் சுமந்து கொண்டே) இருப்பான். மறுமை நாளில் அவர்கள் சுமக்கும் இச்சுமை மிகக் கெட்டது.

(102) 102. எக்காளம் (சூர்) ஊதப்பட்டு குற்றவாளிகளை நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களுடைய கண்கள் (பயத்தினால்) நீலம் பூத்திருக்கும்.

(103) 103. அவர்கள் தங்களுக்குள் மெதுவாக(ப் பேசி) ‘‘நீங்கள் ஒரு பத்து (நாள்களு)க்கு அதிகமாக (உலகத்தில்) தங்கவில்லை'' (என்று கூறுவார்கள்).

(104) 104. அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்களில் மிக்க ஞானமுள்ளவன் (என்று கருதப்படுபவன் அவர்களை நோக்கி) ‘‘ஒரு நாளே தவிர நீங்கள் (அதிகம்) தங்கவில்லை'' என்று கூறுவான்.

(105) 105. (நபியே!) உம்மிடம் அவர்கள் மலைகளைப் பற்றி (அதன் கதி உலக முடிவின்போது என்னவாகும் என)க் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்கி(ப் பரப்பி) விடுவான்.

(106) 106. பூமியை சமமான வெட்டவெளியாக்கி விடுவான்.

(107) 107. அதில் ஒரு சிறிதும் மேடு பள்ளத்தை நீர் காணமாட்டீர்.

(108) 108. அந்நாளில் (அனைவரும் எக்காளத்தின் மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) நீர் கேட்கமாட்டீர்.

(109) 109. அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத்தவிர மற்ற எவருடைய சிபாரிசும் பயனளிக்காது.

(110) 110. அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான். எனினும், அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.

(111) 111. (அந்நாளில்) நிரந்தரமானவன், நிலையானவன் (அல்லாஹ்வின்) முன், அனைவருடைய (தலைகளும்) முகங்களும் குனிந்துவிடும். எவன் அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான்.

(112) 112. எவர் நம்பிக்கை கொண்டவராக இருந்து நற்செயல்களைச் செய்கிறாரோ அவர், (தன் நற்கூலி) அழிந்து விடுமென்றோ குறைந்து விடுமென்றோ பயப்படமாட்டார்.

(113) 113. இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். இது அவர்களுக்கு நல்லுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காகவும் இதில் (நாம் நம் வேதனையைப் பற்றி) எச்சரிக்கைகளை விவரித்தோம்.

(114) 114. உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உமக்கு வஹ்யி அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதை ஓத) நீர் அவசரப்படாதீர். ‘‘என் இறைவனே! என் கல்வி ஞானத்தை மேலும் அதிகப்படுத்து'' என்று நீர் பிரார்த்தனை செய்வீராக.

(115) 115. இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், (அதை) அவர் மறந்துவிட்டார். ஆனால், (மனமுரண்டாக அதற்கு மாறு செய்யும்) உறுதியான எண்ணத்தை நாம் அவரிடம் காணவில்லை.

(116) 116. வானவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (அவர்கள் அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் (சிரம் பணியாது) விலகிக் கொண்டான்.

(117) 117. ஆதலால், (நாம் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப்படுத்தி விடவேண்டாம். (எச்சரிக்கையாக இருப்பீராக!) இன்றேல் நீர் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்'' என்று கூறினோம்.

(118) 118. ‘‘நிச்சயமாக நீர் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.

(119) 119. நிச்சயமாக நீர் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்'' (என்று கூறினான்).

(120) 120. எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி ‘‘ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உமக்கு அறிவிக்கவா?'' என்று கூறினான்.

(121) 121. ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானம் அவ்விருவருக்கும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறுசெய்து வழி தவறிவிட்டார்.

(122) 122. பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் அவரை செலுத்தினான்.

(123) 123. ‘‘நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.'' என்றும் கூறினான்.

(124) 124. எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.

(125) 125. (அச்சமயம்) அவன் ‘‘என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேன்ன!'' என்று கேட்பான்.

(126) 126. அதற்கு (இறைவன்) ‘‘இவ்வாறே (குருடனைப்போன்றே உன் காரியங்கள் இருந்தன) நம்வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவற்றை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்'' என்று கூறுவான்.

(127) 127. எவன் வரம்பு மீறி, தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ள வில்லையோ அவனுக்கும் இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும்.

(128) 128. இவர்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்து விட்டோம் என்ற விஷயம் இவர்களை நேரான வழியில் செலுத்தவில்லையா? (அழிந்து போன) அவர்கள் வசித்திருந்த இடங்களுக்குச் சமீபமாகவே இவர்கள் செல்கின்றனர். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

(129) 129. (நபியே! அவர்களின் தண்டனைக்குரிய காலம் மறுமைதான் என்று) ஒரு தவணையைக் குறிப்பிட்டிருக்கும் உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிட்டால் (இச்சமயமே) வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்.

(130) 130. ஆகவே, அவர்கள் (உம்மைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீர் பொறுமையுடன் சகித்திருப்பீராக. சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) பகலின் இருமுனைகளிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருப்பீராக. (இதனால்) நீர் திருப்தி அடையலாம்.

(131) 131. (நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்தவற்றின் பக்கம் நீர் உமது பார்வையைச் செலுத்தாதீர். இவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவற்றை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உமது இறைவன் உமக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.

(132) 132. (நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. (இதற்காக) நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை இறையச்சத்திற்குத்தான்.

(133) 133. (‘‘இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) நம்மிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். முந்திய வேதங்களிலுள்ள தெளிவான ஆதாரங்கள் அவர்களிடம் வரவில்லையா? (வந்தே இருக்கிறது.)

(134) 134. (நம் தூதராகிய) இவர் வருவதற்கு முன்னதாகவே நாம் அவர்களை வேதனை செய்தால் “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்) நாங்கள் இந்த இழிவுக்கும் நிந்தனைக்கும் உள்ளாவதற்கு முன்னதாகவே உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போம்'' என்று கூறுவார்கள்.

(135) 135. (நபியே! நீர்) கூறுவீராக: ‘‘ஒவ்வொருவரும் (தங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்ப்பீராக. நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்து விட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்.