74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர் ()

|

(1) 1. (நபியே! வஹ்யின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

(2) 2. நீர் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக;

(3) 3. உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக;

(4) 4. உமது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக்கொள்வீராக;

(5) 5. அசுத்தங்களை வெறுத்துவிடுவீராக.

(6) 6. எவருக்கும் நீர் (நன்மை) உபகாரம் செய்து, (அதைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக்கொள்ளக் கருதாதீர்.

(7) 7. உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (சிரமங்களை) நீர் பொறுத்திருப்பீராக.

(8) 8. எக்காளத்தில் (மகா ஊதுகுழாயில்) ஊதப்படும் சமயத்தில்,

(9) 9. அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்.

(10) 10. (அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதானதல்ல.

(11) 11. (நபியே! நீர் சிபாரிசுக்கு வராது) என்னை(யும் அவனையும்) விட்டுவிடுவீராக. அவனை நான் தனியாகவே படைத்தேன்.

(12) 12. பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன்.

(13) 13. எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).

(14) 14. அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன்.

(15) 15. பிறகு, நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கிறான்.

(16) 16. அவ்வாறு ஆகக்கூடியதல்ல. ஏனென்றால், நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு எதிரியாக இருக்கிறான்.

(17) 17. அதிசீக்கிரத்தில் அவனை ஒரு சிரமமான சிகரத்தில் ஏற்றிவிடுவேன்.

(18) 18. நிச்சயமாக அவன் (இந்த குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான்.

(19) 19. அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்!

(20) 20. பின்னும், அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்! (ஒன்றுமில்லை.)

(21) 21. பின்னும், (அதைப் பற்றிக்) கவனித்தான்.

(22) 22. பின்னர், (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்.

(23) 23. பின்னர், புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான்.

(24) 24. ஆகவே, ‘‘இது மயக்கக்கூடிய சூனியமே தவிர வேறில்லை'' என்றும்

(25) 25. ‘‘இது மனிதர்களுடைய சொல்லே தவிர வேறில்லை'' என்றும் கூறினான்.

(26) 26. ஆகவே, நாம் அவனை ‘சகர்' நரகத்தில் எறிவோம்.

(27) 27. (நபியே!) அந்த ‘சகர்' நரகம் என்னவென்று நீர் அறிவீரா?

(28) 28. அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது.

(29) 29. அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்.

(30) 30. (அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.

(31) 31. நரகத்தின் காவலாளிகளாக வானவர்களையே தவிர (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு)இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். (நபியே!) உமது இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களே தவிர வேறில்லை.

(32) 32. அவ்வாறு அல்ல! நிச்சயமாக சந்திரன் மீது சத்தியமாக!

(33) 33. செல்கின்ற இரவின் மீது சத்தியமாக!

(34) 34. வெளிச்சமாகும் விடியற்காலை மீது சத்தியமாக!

(35) 35. நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும்.

(36) 36. அது, மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.

(37) 37. உங்களில் எவன் (அதனளவில்) முந்திச் செல்லவோ அல்லது (அதை விட்டும்) விலகிக் கொள்ளவோ விரும்புகிறானோ அவன் அவ்வாறு செய்யவும்.

(38) 38. ஒவ்வொரு மனிதனும், தான் செய்யும் செயலுக்கே பிணையாளியாக இருக்கிறான்.

(39) 39. ஆயினும், (எவர்களுடைய செயலேடு வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள்) வலது பக்கத்தில் இருப்பவர்கள்.

(40) 40-42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.

(41) 40-42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.

(42) 40-42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.

(43) 43. அதற்கவர்கள் கூறுவார்கள்: ‘‘நாங்கள் தொழவில்லை.

(44) 44. நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை.

(45) 45. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்.

(46) 46. கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம்.

(47) 47. (நாங்கள் மரணித்து) இதை உறுதியாகக் காணும் வரை (இவ்வாறே இருந்தோம்). ''(இவ்வாறு ‘சகர்' நரகவாசிகள் கூறுவார்கள்.)

(48) 48. ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காது.

(49) 49. அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர்.

(50) 50. வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப்போல் அவர்கள் இருக்கின்றனர்!

(51) 51. அதுவும், சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்).

(52) 52. (இதுமட்டுமா?) அவர்களில் ஒவ்வொருவனும், விரித்து ஓதப்படும் ஒரு வேதம் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறான்.

(53) 53. அவ்வாறு ஒருகாலும் நடக்கப்போவதில்லை. மாறாக இவர்கள் மறுமையைப் பற்றி பயப்படுவதேயில்லை.

(54) 54. அவ்வாறு ஒருகாலும் நடக்கப் போவதில்லை. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமே ஆகும்.

(55) 55. (நல்லுபதேசம் பெற) விரும்பியவன் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

(56) 56. அல்லாஹ் நாடினால் தவிர, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது.(படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்.