31 - ஸூரா லுக்மான் ()

|

(1) 1. அலிஃப் லாம் மீம்.

(2) 2. இவை ஞானம் நிறைந்த இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும்.

(3) 3. (இது) நன்மை செய்பவர்களுக்கு ஒரு நேர்வழி காட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது.

(4) 4. அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுவார்கள். ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். இறுதி நாளையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.

(5) 5. இவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருப்பவர்கள். இவர்கள்தான் வெற்றி அடைவார்கள்.

(6) 6. (இவர்களைத் தவிர) மனிதரில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக்கதைகள் முதலிய) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து அதைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.

(7) 7. இவர்களில் எவருக்கும் நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை அவன் கேட்காதவனைப் போலும், தன் இரு காதுகளிலும் செவிடு உள்ளவனைப் போலும் கர்வம்கொண்டு விலகிவிடுகிறான். ஆகவே, (நபியே!) அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீர் நற்செய்தி கூறுவீராக!

(8) 8. ஆயினும், (இவர்களில்) எவர்கள் (நம் வசனங்களுக்குச் செவி சாய்த்து) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மிக்க இன்பம் தரும் சொர்க்கங்கள் உள்ளன.

(9) 9. அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி உண்மையானதே! அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.

(10) 10. அவனே வானங்களைத் தூண்கள் இன்றியே படைத்திருக்கிறான். அதை நீங்களும் பார்க்கிறீர்கள். பூமி உங்களைக் கவிழ்த்து விடாதிருப்பதற்காக (பளுவான) மலைகளை (அதில்) நிறுத்திவைத்து விதவிதமான உயிரினங்களையும் அதில் பரப்பினான். (மனிதர்களே! அல்லாஹ்வாகிய) நாமே மேகத்தில் இருந்து மழையை பொழியச்செய்து அதிலிருந்தே நேர்த்தியான ஒவ்வொரு வகைப் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாக முளைப்பிக்கச் செய்கிறோம்.

(11) 11. (ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கிக் கூறுவீராக) ‘‘ இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவையாகும். அவனையன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவை எதை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.

(12) 12. லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் நிராகரிக்கிறானோ (அவன் தனக்கே தீங்கு தேடிக்கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுடையவனும் ஆவான்.

(13) 13. லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி ‘‘ என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்'' என்று கூறினார்.

(14) 14. ‘‘ தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன் தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது.

(15) 15. எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத ஒரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்'' (என்று கூறினோம்).

(16) 16. (மேலும், லுக்மான் தனது மகனை நோக்கி) ‘‘ என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும் போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனும் ஆவான்.

(17) 17. என்னருமை மகனே! ‘‘ தொழுகையை நிலைநிறுத்து, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும்.

(18) 18. (பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

(19) 19. உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!'' (என்று கூறினார்).

(20) 20. (மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான் என்பதையும், அவன் தன் அருட் கொடைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கிறான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (இவ்வாறெல்லாமிருந்தும்) மனிதர்களில் பலர் ஒரு கல்வியும், (தர்க்க ரீதியான) வழிகாட்டலும், தெளிவான வேத நூலின் ஆதாரமுமின்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றனர்.

(21) 21. அவர்களை நோக்கி, ‘‘அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்'' எனக் கூறினால், அதற்கு அவர்கள் ‘‘ இல்லை, எங்கள் மூதாதைகள் எதன் மீது இருக்க நாங்கள் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். (என்னே!) அவர்கள் மூதாதைகளை ஷைத்தான் நரக வேதனையின் பக்கம் அழைத்து (அவர்களும் சென்று) இருந்தாலுமா? (இவர்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வார்கள்!)

(22) 22. எவர் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி, பணிந்து நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு வளயத்தைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.

(23) 23. (நபியே!) எவரேனும் (உம்மை) நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டும். அச்சமயம் அவர்களுடைய (இச்)செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.

(24) 24. அவர்களை (இச்சமயம்) சிறிது சுகமனுபவிக்கும்படி நாம் விட்டு வைப்போம். பின்னர், கடுமையான வேதனையின் பக்கம் (செல்லும்படி) நாம் அவர்களை நிர்ப்பந்தித்து விடுவோம்.

(25) 25. (நபியே!) ‘‘ வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?'' என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு, ‘‘ இவ்வளவேனும் உங்களுக்கு அறிவு இருப்பது பற்றி) அல்லாஹ்வை நான் புகழ்கிறேன்'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இறைவனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்.

(26) 26. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. எனினும், நிச்சயமாக அல்லாஹ் (இவற்றின்) தேவையற்றவனும் மிகப் புகழுடையவனும் ஆவான்.

(27) 27. பூமியிலுள்ள மரங்கள் (செடிகள் என) அனைத்தையும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல்களின் நீரையும் மையாக வைத்து எழுதிய போதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.

(28) 28. மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு, உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவே தவிர வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்.

(29) 29. (நபியே!) அல்லாஹ்தான் இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைய வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி வைத்திருக்கிறான் என்பதையும் நீர் பார்க்கவில்லையா? இவற்றில் ஒவ்வொன்றும் (அவற்றுக்கு அவன்) குறிப்பிட்ட திட்டப்படியே நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.

(30) 30. இவையனைத்தும் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்'' என்பதற்கும் அத்தாட்சிகளாக இருக்கின்றன.

(31) 31. அல்லாஹ்வுடைய அருட்கொடைகளைச் சுமந்துகொண்டு கடலில் செல்லும் கப்பலும் அவனுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவிக்கக் கூடியதாக இருப்பதை நீர் கவனிக்கவில்லையா? பொறுமையுடன் (சிரமங்களைச்) சகித்திருந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

(32) 32. (கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! அவன் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தான் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலானவர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள்.

(33) 33. மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப்பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவமாட்டார்; பிள்ளையும் தந்தைக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டான். (ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்ற நாளாகும் அது.) நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.

(34) 34. நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். அவனே கர்ப்பங்களில் (கரு) தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனும் தெரிந்தவனும் ஆவான்.