69 - ஸூரா அல்ஹாக்கா ()

|

(1) 1. (நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்)

(2) 2. அந்த உண்மை(ச் சம்பவம்) எது?

(3) 3. (நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீர் அறிவீரா?

(4) 4. ‘ஸமூத்' என்னும் மக்களும் ‘ஆத்' என்னும் மக்களும் (மரணித்தவர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)(த்)தைப் பொய்யாக்கினர்.

(5) 5. ஆகவே, ‘ஸமூத்' மக்கள் பெரும் சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.

(6) 6. ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.

(7) 7. ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்.

(8) 8. (இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீர் காண்கிறீரா?

(9) 9. ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்.

(10) 10. இன்னும் அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான்.

(11) 11. (நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்தபோது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம்.

(12) 12. அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்).

(13) 13. (பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு,

(14) 14. பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிக்கப்பட்டால்,

(15) 15. அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்.

(16) 16. அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகி விடும்.

(17) 17. (நபியே!) வானவர்கள் அதன் கோடிகளிலிருப்பார்கள். மேலும், அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை, எட்டு வானவர்கள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள்.

(18) 18. (மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

(19) 19. எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுகிறாரோ அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள்,

(20) 20. நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்.''

(21) 21. ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில்,

(22) 22. மேலான சொர்க்கத்தில் இருப்பார்.

(23) 23. அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்.

(24) 24. (இவர்களை நோக்கி) ‘‘சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, மிக்க தாராளமாக இவற்றைப் புசியுங்கள்! அருந்துங்கள்'' (என்று கூறப்படும்).

(25) 25. எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான்.

(26) 26. மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே!

(27) 27. நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே!

(28) 28. என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!

(29) 29. என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்).

(30) 30. (பின்னர் நாம்) ‘‘அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்;

(31) 31. அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்,

(32) 32. எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' என்றும் (கூறுவோம்).

(33) 33. நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கை கொள்ளவில்லை.

(34) 34. ஏழைகளுக்கு (தானும் உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை.

(35) 35. ‘‘ஆகவே, இன்று அவனுக்கு (இங்கு) ஒரு நண்பனும் இல்லை.

(36) 36. (புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை'' (என்றும் கூறப்படும்).

(37) 37. அதைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள்.

(38) 38. (மக்களே!) நீங்கள் பார்ப்பவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவற்றின் மீதும்,)

(39) 39. நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவற்றின் மீதும்) சத்தியமாக!

(40) 40. இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடியே) மிக்க கண்ணியமான ஒரு தூதரால் கூறப்பட்டதாகும்.

(41) 41. இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.

(42) 42. (இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.

(43) 43. அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது.

(44) 44. ஒரு சில வார்த்தைகளை அவர் நம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினாலும்,

(45) 45. அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு,

(46) 46. பிறகு, அவருடைய உயிர் நாடியை நாம் தறித்து விடுவோம்.

(47) 47. உங்களில் எவருமே அவரை விட்டும் அதைத் தடுத்துவிட முடியாது.

(48) 48. நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கிறது.

(49) 49. (எனினும்,) உங்களில் அதைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

(50) 50. நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கிறது.

(51) 51. (எனினும்) நிச்சயமாக இது, ஒரு சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும்.

(52) 52. ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரை துதிசெய்து கொண்டிருப்பீராக!