71 - ஸூரா நூஹ் ()

|

(1) 1. நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) ‘‘நீர் உமது மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக'' என்று கட்டளையிட்டோம்.

(2) 2. (அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி) கூறினார்: ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.

(3) 3. அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள்.

(4) 4. (அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்கள் குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரை உங்களை (அமைதியாக வாழ) விட்டு வைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது (இதை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?''

(5) 5. (அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதை மறுத்து அவரைப் புறக்கணித்து விடவே, அவர் தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் மக்களை இரவு பகலாக அழைத்தேன்.

(6) 6. வெருண்டோடுவதையே தவிர, (வேறொன்றையும்) என் அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.

(7) 7. நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்த போதெல்லாம், தங்கள் காதுகளில் தங்கள் விரல்களைப் புகுத்தி அடைத்துக் கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள்.

(8) 8. பிறகு, நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமிட்டு (அதட்டியும்) அழைத்தேன்.

(9) 9. மேலும். நான் அவர்களுக்குப் பகிரங்கமாகவும் கூறினேன்; இரகசியமாகவும் அவர்களுக்குக் கூறினேன்.

(10) 10. ‘‘உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்'' என்றும் கூறினேன்.

(11) 11. (அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்.

(12) 12. பொருள்களையும், ஆண் மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் நதிகளையும் ஓட வைப்பான்.

(13) 13. உங்களுக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் நம்பவில்லை!

(14) 14. உங்களை விதவிதமாகவும் அவன் படைத்திருக்கிறான்.

(15) 15. ஏழு வானங்களையும், அடுக்கடுக்காக எவ்வாறு அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?

(16) 16. அவனே, அவற்றில் சந்திரனைப் பிரதிபலிக்கும் வெளிச்சமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அமைத்தான்.

(17) 17. அல்லாஹ்வே உங்களை (ஒரு செடியைப் போல்) பூமியில் வளரச் செய்தான் (வெளிப்படுத்தினான்).

(18) 18. பின்னர், அதில்தான் உங்களை (மரணிக்கவைத்து அதில்) சேர்த்துவிடுவான். (அதிலிருந்தே) மற்றொரு முறையும் உங்களை வெளிப்படுத்துவான்.

(19) 19. அல்லாஹ்தான் உங்களுக்குப் பூமியை விரிப்பாக அமைத்தான்.

(20) 20. அதில் (பல பாகங்களுக்கும்) நீங்கள் செல்வதற்காக, விரிவான பாதைகளையும் அமைத்தான்'' (என்றெல்லாம் அவர் தன் மக்களுக்குக் கூறினார்).''

(21) 21. (பின்னர் நூஹ் நபி தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர். பொருள்களும் சந்ததிகளும் எவர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவர்களையே பின்பற்றுகின்றனர்.

(22) 22. பெரும் பெரும் சூழ்ச்சிகளையும் (எனக்கெதிராக) செய்கின்றனர்.

(23) 23. (மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்' (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள். ‘ஸுவாஉ' ‘எகூஸ்' ‘யஊக்' ‘நஸ்ர்' (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்'' என்று கூறுகின்றனர்,

(24) 24. நிச்சயமாக பலரை வழிகெடுத்து விட்டனர். (ஆகவே, என் இறைவனே!) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!'' (என்றும் பிரார்த்தித்தார்).

(25) 25. ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக, (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் நரகத்திலும் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவர்கள் காணவில்லை.

(26) 26. இன்னும், நூஹ் பிரார்தித்தார்: ‘‘என் இறைவனே! பூமியில் இந்நிராகரிப்பவர்களில் ஒருவரையும் நீ வசித்திருக்க விட்டு வைக்காதே!

(27) 27. நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் (மற்ற) அடியார்களையும் வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் தவிர, (வேறொரு குழந்தையை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்.

(28) 28. என் இறைவனே! எனக்கும் என் தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என் வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர நீ அதிகப்படுத்தாதே!''