9 - ஸூரா அத்தவ்பா ()

|

(1) 1. (நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்!

(2) 2. ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இன்றிலிருந்து) நான்கு மாதங்கள் வரை (மக்காவின்) பூமியில் (எங்கும்) சுற்றித் திரியலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க மாட்டீர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்'' (என்று நபியே! நீர் கூறுவீராக.)

(3) 3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களுடன் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்ற விஷயத்தை இம்மாபெரும் ஹஜ்ஜூடைய நாளில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்கின்றனர். ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே! இணைவைப்பதிலிருந்தும் நிராகரிப்பதில் இருந்தும்) நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்குத்தான் மிக்க நன்று. (இல்லையெனில்,) நீங்கள் புறக்கணித்தாலோ நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (நபியே! இந்) நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீர் நற்செய்தி கூறுவீராக.

(4) 4. ஆயினும், நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்ட இந்த இணைவைத்து வணங்குபவர்களில் எவர்கள் (தங்கள் உடன்படிக்கையில்) எதையும் உங்களுக்குக் குறைவு செய்யாதும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றனரோ அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அதன் தவணை வரை (ஒரு குறைவுமின்றி) முழுமைப்படுத்தி வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்.

(5) 5. (ஒவ்வொரு வருடத்திலும் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சிறப்புற்ற இந்நான்கு மாதங்களிலும் போர்புரிவது ஆகாது.) சிறப்புற்ற (இந்நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்கள் வரவை எதிர்பார்த்து) அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பிலிருந்தும்) பாவத்திலிருந்து(ம்) விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.

(6) 6. (நபியே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவனும் உம்மிடம் பாதுகாப்பைக் கோரினால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவன் செவியுறும்வரை அவனுக்கு பாதுகாப்பு அளிப்பீராக. (அவன் அதை செவியுற்றும் நம்பிக்கை கொள்ளாவிட்டால்) அவனை அவனுக்கு பாதுகாப்புள்ள (வேறு) இடத்திற்கு அனுப்பிவிடுவீராக! ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அறிவில்லாத மக்கள் ஆவர்.

(7) 7. அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைத்து வணங்குபவர்களின் உடன்படிக்கைக்கு எவ்வாறு மதிப்பிருக்க முடியும்? ஆயினும், சிறப்புற்ற மஸ்ஜிதின் முன் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் (தங்கள் உடன்படிக்கையின்படி) உங்களுடன் உறுதியாக இருக்கும் வரை, நீங்களும் அவர்களுடன் உறுதியாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்.

(8) 8. (எனினும் அவர்களின் உடன்படிக்கையையும்) எவ்வாறு (நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டாலோ (நீங்கள் அவர்களுக்கு) உறவினர்கள் என்பதையும் (உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. தங்கள் வார்த்தைகளைக் கொண்டு (மட்டும்) உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ (உங்களிடமிருந்து) விலகிக் கொள்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளே ஆவர்.

(9) 9. அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு (மக்கள்) அவனுடைய பாதையில் செல்வதையும் தடுக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் செய்யும் காரியம் மிகவும் கெட்டது.

(10) 10. அவர்கள் எந்த நம்பிக்கையாளரைப் பற்றியும் (அவர் தமது) உறவினர் என்பதையும், (அவர்களுடன் செய்திருக்கும்) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. நிச்சயமாக இவர்கள்தான் வரம்பு மீறியவர்கள் ஆவர்.

(11) 11. அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கிறோம்.

(12) 12. (சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்டதன் பின்னரும், அவர்கள் தங்கள் சத்தியங்களை முறித்து உங்கள் மார்க்கத்தைப் பற்றியும் தவறான குற்றங்குறைகள் கூறிக்கொண்டிருந்தால், நிச்சயமாக நிராகரிக்கும் (இத்தகைய) மக்களின் வாக்குறுதிகள் முறிந்துவிட்டன. ஆகவே, (இத்தகைய விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொள்வதற்காக நீங்கள் நிராகரிப்பை உடைய (அந்த) தலைவர்களிடம் போர் புரியுங்கள்.

(13) 13. தங்கள் சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் விரும்பி (அதற்காக) முயற்சித்த மக்களிடம் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். அவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் பயப்படத் தகுதியானவன் அல்லாஹ் (ஒருவன்)தான்.

(14) 14. நீங்கள் அவர்களிடம் போர் புரியுங்கள். உங்கள் கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனை கொடுத்து, அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை நீங்கள் வெற்றிபெற உங்களுக்கு உதவியும் புரிந்து, நம்பிக்கை கொண்ட மக்களின் உள்ளங்களுக்குத் திருப்தியுமளிப்பான்.

(15) 15. (அவர்கள் மீது) இவர்கள் உள்ளங்களில் (குமுறிக் கொண்டு) உள்ள கோபங்களையும் போக்கிவிடுவான். அல்லாஹ் (அவர்களிலும்) தான் விரும்பியவர்களின் மன்னிப்புக்கோருதலை அங்கீகரிக்கிறான். ஏனென்றால், அல்லாஹ் மிக அறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்.

(16) 16. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (உண்மையாகவே மனம் விரும்பி) போர் புரிந்தவர்கள் யாரென்பதையும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் தவிர (மற்றெவரையும் தங்கள்) அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்கள் யார் என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறிவிக்காமல், நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று எண்ணிக் கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.

(17) 17. இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தான் என்று (பகிரங்கமாக) கூறிக் கொண்டிருக்கும் வரை, அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கி விடுவார்கள்.

(18) 18. எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இவர்கள்தான் நேரான வழியில் இருப்பவர்கள்.

(19) 19. (நம்பிக்கை கொள்ளாமல் இருந்துகொண்டு) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுபவர் களையும், சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு ஊழியம் செய்பவர்களையும் அல்லாஹ்வை இன்னும் இறுதிநாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிபவர்களுக்குச் சமமாக நீங்கள் ஆக்கி விட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.

(20) 20. எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். இவர்கள்தான் வெற்றி அடைந்தவர்கள்.

(21) 21. அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன் அன்பையும், திருப்பொருத்தத்தையும் அளித்து சொர்க்கங்களையும் தருவதாக நற்செய்தி கூறுகிறான். அவர்களுக்கு அவற்றில் என்றென்றும் நிலையான சுகபோகங்கள் உண்டு.

(22) 22. என்றென்றும் அவற்றில் அவர்கள் நிலை பெற்றிருப்பார்கள். அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அவர்களுக்கு மேலும்) மகத்தான கூலி உண்டு.

(23) 23. நம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தைகளும், சகோதரர்களும் நம்பிக்கையை விட்டு நிராகரிப்பை விரும்பினால், நீங்கள் அவர்களை (உங்கள்) பாதுகாப்பாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அவர்கள்தான் வரம்பு மீறியவர்கள்.

(24) 24. (நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீர் கூறுவீராக: உங்கள் தந்தைகளும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரை நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (இப்படிப்பட்ட) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.

(25) 25. பல போர்க்களங்களில் (உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்கள் அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி (குறுகி) விட்டது. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்.

(26) 26. (இதன்) பின்னர், அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன் அமைதியை இறக்கி அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத படைகளையும் (உங்கள் உதவிக்காக) இறக்கி வைத்து நிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும்.

(27) 27. இதன் பின்னரும் (அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவர்களில்) அல்லாஹ் விரும்பியவர்களை மன்னித்து அங்கீகரித்துக் கொள்கிறான். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன்.

(28) 28. நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே, அவர்கள் இந்த ஆண்டுக்குப் பின்னர் இனி சிறப்புற்ற இந்த மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். (அவர்களைத் தடை செய்தால் அவர்களால் கிடைத்து வந்த செல்வம் நின்று உங்களுக்கு) வறுமை வந்துவிடுமோ என்று நீங்கள் பயந்தால் (அதைப் பற்றி பாதகமில்லை.) அல்லாஹ் நாடினால், அதிசீக்கிரத்தில் தன் அருளைக் கொண்டு உங்களை செல்வந்தர்களாக்கி விடுவான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.

(29) 29. (நம்பிக்கையாளர்களே!) வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடையாகக் கருதாமல், மேலும், இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றனரோ அவர்கள், (தங்கள்) கையால் பணிவுடன் ‘ஜிஸ்யா' (என்னும் கப்பம்) கட்டும் வரை நீங்கள் அவர்களிடம் போர் புரியுங்கள்.

(30) 30. யூதர்கள் (நபி) ‘உஜைரை' அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். (இவ்வாறே) கிறிஸ்தவர்கள் ‘மஸீஹை' அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பவர்களின் கூற்றையே ஒத்திருக்கிறது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான். (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?

(31) 31. இவர்கள் அல்லாஹ்வைத் தவிர்த்து தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவற்றைவிட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்.

(32) 32. இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது பிரகாசத்தை முழுமைப்படுத்தி வைக்காமல் இருக்கப்போவதில்லை.

(33) 33. அவன்தான் தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் (அதை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் வென்றுவிடும்படி அவன் செய்வான்.

(34) 34. நம்பிக்கையாளர்களே! (வேதக்காரர்களின்) பாதிரிகளிலும், (சிலை வணங்கிகளின்) சந்நியாசிகளிலும் பலர் மக்களின் செல்வங்களைத் தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் (மக்கள்) செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுவீராக.

(35) 35. (தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு ‘‘உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைதான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக).

(36) 36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

(37) 37. (போர் செய்யக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் இஷ்டப்படி) முன் பினோக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனென்றால், (அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பினோக்கி) ஓர் ஆண்டில் (அம்மாதங்களில் போர் புரிவதை) ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றோர் ஆண்டில் (அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று) தடுத்து விடுகின்றனர். (இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். அவர்களுடைய இத்தீயச் செயல்கள், (ஷைத்தானால்) அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன. நிராகரிக்கும் (இந்த) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.

(38) 38. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போர் புரிய) நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணம் என்ன? மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே!

(39) 39. (உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லாவிட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (மேலும், உங்களைப் போக்கி) உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது. ஏனென்றால், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்.

(40) 40. (நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கு ஏதும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கிறான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி ‘‘நீர் கவலைப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன் புறத்திலிருந்து மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங்களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்)தான் மிக உயர்வானது. இன்னும், அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.

(41) 41. நீங்கள் சொற்ப ஆயுதமுடையவர்களாக இருந்தாலும் சரி, முழு ஆயுத பாணிகளாக இருந்தாலும் சரி, நீங்கள் (கால்நடையாகவோ குதிரைமீதேறியோ) புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் உங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாய் இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று.

(42) 42. (நபியே!) எளிதில் ஏதும் பொருள் கிடைக்கக் கூடியதாயிருந்து (நீங்கள் சென்ற இடம்) சமீபத்திலும் இருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்பற்றி வந்தே இருப்பார்கள். எனினும் (நீர் சென்ற இடம் அவர்களுக்கு) வெகு தூரமாகி பெரும் சிரமமாகத் தோன்றியது. (ஆதலால்தான் அவர்கள் உம்மைப் பின்பற்றி வரவில்லை. ஆகவே, நீர் அவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஏன் வரவில்லை'' எனக் கேட்பீராயின் அதற்கவர்கள்) ‘‘எங்களுக்குச் சாத்தியப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களுடன் வந்திருப்போம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து கூறு)வார்கள். (இவ்வாறு பொய் சத்தியம் செய்யும்) அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்.

(43) 43. (நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (அவர்கள் உம்முடன் போருக்கு வராது தங்கிவிட உங்களிடம் அனுமதி கோரிய சமயத்தில்) நீர் ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்? (அனுமதி அளிக்காது இருந்திருந்தால் அவர்களில்) உண்மை சொல்பவர்கள் (யார் என்று) உமக்குத் தெளிவாகி, (அவர்களில்) பொய் சொல்பவர்களை (அவர்கள் யார் என்பதையும்) நீர் நன்கு அறிந்திருப்பீர்.

(44) 44. அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கோரவே மாட்டார்கள். இறையச்சம் உடைய (இ)வர்களை அல்லாஹ் நன்கறிவான்.

(45) 45. (போருக்கு வராதிருக்க) உம்மிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்துவிட்டன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்திலேயே சிக்கித் தடுமாறுகின்றனர்.

(46) 46. அவர்கள் (உங்களுடன் போருக்கு) புறப்பட (உண்மையாகவே) எண்ணியிருந்தால் அதற்கு வேண்டிய தயாரிப்புகளை (முன்னதாகவே) அவர்கள் செய்திருப்பார்கள். எனினும் (உங்களுடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து அவர்கள் புறப்படாது தடை செய்து விட்டான். ஆகவே, (முதியோர் சிறியோர் பெண்கள் போன்ற, போருக்கு வரமுடியாது வீட்டில்) தங்குபவர்களுடன் நீங்களும் தங்கி விடுங்கள் என்று (அவர்களுக்குக்) கூறப்பட்டு விட்டது.

(47) 47. அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டு பண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்.

(48) 48. (உங்களுக்கு) வெற்றி கிடைக்கும் வரை இதற்கு முன்னரும் அவர்கள் விஷமம் செய்யக் கருதி உங்கள் காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டிக்கொண்டே இருந்தனர். (உங்கள் வெற்றியை) அவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்வுடைய கட்டளையே வெற்றியடைந்தது.

(49) 49. (நபியே! ‘‘போருக்கு அழைத்து) நீர் என்னைச் சோதனைக் குள்ளாக்காமலே (வீட்டில் நான் தங்கியிருக்க) எனக்கு அனுமதி தருவீராக'' என்று கோருபவர்களும் அவர்களில் சிலர் இருக்கின்றனர். (எனினும் இவ்வாறு கோரும்) அவர்கள் (கஷ்டமான பல) சோதனைகளிலேயே மூழ்கிக் கிடக்கவில்லையா? நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

(50) 50. (நபியே!) உமக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களுக்குத் துன்பத்தைத் தருகிறது. உமக்கு ஒரு தீங்கேற்பட்டாலோ ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் காரியத்தில் (உங்களைச் சம்பந்தப்படுத்தாது) ஏற்கனவே எச்சரிக்கையாய் இருந்து கொண்டோம்'' என்று கூறி மிக்க மகிழ்ச்சியுடன் உம்மை விட்டு) விலகிச் செல்கின்றனர்.

(51) 51. (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் இறைவன்'' என்று நீர் கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.

(52) 52. (நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் தீங்கையும்) நீங்கள் எங்களுக்கு எதிர்பார்க்க முடியுமா? (ஆகவே, இந்த இரண்டில் எது கிடைத்த போதிலும் எங்களுக்கு நன்மையே ஆகும்.) எனினும், உங்களுக்கோ அல்லாஹ் தன் வேதனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்குக் கஷ்டம் உண்டாக்குவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீங்கள் (எங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) உங்களுடன் எதிர்பார்க்கிறோம்.

(53) 53. ‘‘நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்த போதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்'' என்றும் (நபியே!) நீர் கூறிவிடுவீராக.

(54) 54. அவர்கள் செய்யும் தானம் அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று (இறைவன்) தடுத்திருப்பதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். மேலும், அவர்கள் மிகச் சடைந்தவர்களாகவே தவிர தொழுவதில்லை; வெறுப்புடனே தவிர அவர்கள் தானம் செய்வதுமில்லை.

(55) 55. (நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் (பெருகியிருப்பது) உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் (அவற்றை அவர்களுக்குக் கொடுத்து) அவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலக வாழ்விலேயே வேதனை செய்ய நிச்சயமாக நாடுகிறான். இன்னும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களுடைய உயிர் போவதையும் நாடுகிறான்.

(56) 56. ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள்தான்'' என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களல்ல. அவர்கள் (தங்கள் உண்மைக் கோலத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள்.

(57) 57. தப்பித்துக்கொள்ளக்கூடிய ஓர் இடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் காண்பார்களேயானால் (உங்களிடமிருந்து விலகி) அவற்றின் பக்கம் அல்லோலமாக விரைந்து ஓடுவார்கள்.

(58) 58. (நபியே!) நீர் தானங்களைப் பங்கிடுவதில் பாரபட்சமுடையவர் என்று உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அவர்கள் விருப்பப்படி) அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் திருப்தியடைகின்றனர். அதிலிருந்து (அவர்கள் விருப்பப்படி) கொடுக்கப்படாவிட்டாலோ ஆத்திரம் கொள்கின்றனர்.

(59) 59. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி திருப்தியடைந்து, ‘‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இன்னும் நமக்கு அருள்புரியக் கூடும்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்'' என்று அவர்கள் கூற வேண்டாமா?

(60) 60. (‘ஜகாத்து' மார்க்கவரியாகிய) தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கட்டாய கடமையாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.

(61) 61. (‘‘இந்த நபியிடம் எவர் எதைக் கூறியபோதிலும் அதற்குச்) செவி கொடுக்கக் கூடியவராக அவர் இருக்கிறார்'' என்று கூறி (நம்) நபியைத் துன்புறுத்துபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘(அவ்வாறு அவர்) நன்மைக்கு செவி கொடுப்பது உங்களுக்கே நன்று. அவர் அல்லாஹ்வையும் நம்புகிறார்; நம்பிக்கையாளர்களையும் நம்புகிறார். இன்னும், உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கிறார்.'' ஆகவே, (உங்களில்) எவர்கள் (இவ்வாறு கூறி) அல்லாஹ்வுடைய தூதரைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

(62) 62. (நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மெய்யாகவே நம்பிக்கையாளர்களாயிருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அறிந்துகொள்வர்).

(63) 63. எவன் உண்மையாகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் கிடைக்கும். அதில் அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வில்லையா? இதுதான் மகத்தான இழிவாகும்.

(64) 64. நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் நயவஞ்சகர்கள் நடித்து பரிகசிக்கின்)றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறும்: ‘‘நீங்கள் பரிகசித்துக் கொண்டே இருங்கள். ஆயினும், நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கியே தீருவான்.''

(65) 65. (இதைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் ‘‘விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கிறீர்கள்?'' என்று நீர் கேட்பீராக.

(66) 66. நீங்கள் (செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு) வீண் புகழ் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதை) நிராகரித்துவிட்டீர்கள். ஆகவே, உங்களில் ஒரு கூட்டத்தினரை நாம் மன்னித்த போதிலும் மற்றொரு கூட்டத்தினர் நிச்சயமாக குற்றவாளிகளாகவே இருப்பதனால், நாம் அவர்களை வேதனை செய்தே தீருவோம் (என்றும் நபியே! நீர் கூறுவீராக.)

(67) 67. ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆதலால், அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் தான் (சதி செய்யும்) கொடிய பாவிகள்.

(68) 68. நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமா(ன கூலியா)கும். இன்னும், அல்லாஹ் அவர்களை சபித்தும் இருக்கிறான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.

(69) 69. (நயவஞ்சகர்களே! உங்கள் நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது. அவர்கள் உங்களைவிட பலசாலிகளாகவும், (உங்களை விட) அதிக பொருளுடையவர்களாகவும், அதிக சந்ததியுடையவர்களாகவும் இருந்து (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த இப்பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னிருந்த இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக்கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தவாறே, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்து விட்டீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. (அதனால்) அவர்கள் பெரும் நஷ்டமடைந்து விட்டார்கள். (அவ்வாறே நீங்களும் நஷ்டமடைவீர்கள்.)

(70) 70. இவர்களுக்கு முன்னிருந்த நூஹ் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், ஆத், ஸமூத் (என்பவர்களின்) சரித்திரமும், இப்றாஹீம் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், மத்யன் (என்னும்) ஊராரின் சரித்திரமும், தலைகீழாகப் புரண்டுபோன ஊர்களின் சரித்திரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? (நம்மால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைத்தான் அவர்களிடம் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருந்தும் அந்த தூதர்களை அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். இதில்) அல்லாஹ் அவர்களுக்கு (ஒரு) தீங்கும் இழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்(டு அழிந்து விட்)டனர்.

(71) 71. நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். இவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.

(72) 72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சொர்க்கங்களை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே (என்றென்றும்) தங்கியும் விடுவார்கள். (அந்த) நிரந்தரமான சொர்க்கங்களில் நல்ல (அழகிய உயர்ந்த) மாளிகைகளையும் (வாக்களித்திருக்கிறான். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.) ஆனால் (இவை அனைத்தையும்விட) அல்லாஹ்வின் திருப்பொருத்தம் மிகப் பெரியது. (அதுவும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அனைத்தையும் விட) இது மகத்தான பெரும் பாக்கியமாகும்.

(73) 73. நபியே! நிராகரிப்பவர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீர் போர் செய்வீராக. அவர்களை (தாட்சண்யமின்றி) கண்டிப்பாக நடத்துவீராக. அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.

(74) 74. (நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிராகரிப்பான வார்த்தையை மெய்யாகவே கூறியிருந்தும் (அதைத்) தாங்கள் கூறவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். மேலும், இவர்கள் இஸ்லாமில் சேர்ந்த பின்னர் (அதை) நிராகரித்தும் இருக்கின்றனர். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் அவர்கள் முயற்சித்தனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், தங்கள் அருளைக் கொண்டு இவர்களை சீமான்களாக ஆக்கியதற்காகவா (முஸ்லிம்களாகிய உங்களை) அவர்கள் வெறுக்கின்றனர். இனியேனும் அவர்கள் கைசேதப்பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரி விலகிக் கொண்டால் (அது) அவர்களுக்கே நன்மையாகும். மேலும், அவர்கள் புறக்கணித்தாலோ இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். அவர்களை பாதுகாப்பவர்களோ உதவி செய்பவர்களோ இவ்வுலகில் (ஒருவரும்) இல்லை.

(75) 75. அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள், ‘‘அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் (அதை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்து, நிச்சயமாக நாம் நல்லவர்களாகவும் ஆகிவிடுவோம்'' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர்.

(76) 76. அவன் (அவ்வாறு) அவர்களுக்குத் தன் அருட்கொடையை அளித்த பொழுது, அவர்கள் கஞ்சத்தனம் செய்து (தங்கள் வாக்குறுதியிலிருந்து) திரும்பி விட்டனர். அவ்வாறு புறக்கணிப்பது அவர்கள் வழக்கமாகவும் இருந்து வருகிறது.

(77) 77. ஆகவே, அவனை சந்திக்கும் (இறுதி)நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் வஞ்சகத்தை ஏற்படுத்தி விட்டான். இதன் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்குச் செய்த வாக்குறுதிகளுக்கு மாறு செய்துகொண்டும், பொய் சொல்லிக் கொண்டும் இருந்ததாகும்.

(78) 78. அவர்கள் (தங்கள் உள்ளத்தில்) மறைத்து வைத்திருப்பதையும் (தங்களுக்குள்) அவர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்வதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதுடன், நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய மற்ற) இரகசியங்கள் அனைத்தையும் நன்கறிகிறான் என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா?

(79) 79. அவர்கள் நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருள்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றியும் (குறிப்பாக,) கூலிவேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் குற்றம் கூறி அவர்களைப் பரிகசிக்கின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களை அல்லாஹ் பரிகசிக்கிறான். மேலும், (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

(80) 80. (நபியே!) நீர் அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கோரினாலும் அல்லது நீர் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோராவிட்டாலும் (இரண்டும்) சமம்தான். (ஏனென்றால்), அவர்களை மன்னிக்கும்படி நீர் எழுபது முறை மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மனமுரண்டாக) நிராகரித்ததுதான் இதற்குக் காரணமாகும். அல்லாஹ், பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.

(81) 81. (போருக்குச் செல்லாது) பின் தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதரு(டைய கட்டளை)க்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி சந்தோஷ மடைகின்றனர். இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து போர் செய்வதை வெறுத்து (மற்றவர்களை நோக்கி) ‘‘இந்த வெப்பகாலத்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது'' என்று நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

(82) 82. (இம்மையில்) அவர்கள் வெகு குறைவாகவே சிரிக்கவும். அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குப் பிரதிபலனாக (மறுமையில்) அதிகமாகவே அழுது கொள்ளட்டும்!

(83) 83. (நபியே!) நீர் (போரில் வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்ப வரும்படி அல்லாஹ் செய்து (உங்கள் வெற்றியையும், நீங்கள் கொண்டு வந்த பொருள்களையும் அவர்கள் கண்டு, உங்களுடன் மற்றொரு போருக்குப்) புறப்பட உங்களிடம் அனுமதி கோரினால் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (போருக்கு) ஒருக்காலத்திலும் என்னுடன் புறப்படவேண்டாம். என்னுடன் சேர்ந்து எந்த எதிரியிடமும் நீங்கள் போர்புரிய வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் முதன் முறையில் (வீட்டில்) தங்கிவிடுவதையே விரும்பினீர்கள். ஆதலால், (இப்பொழுதும்) நீங்கள் (வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் இருந்து விடுங்கள்'' என்று (நபியே! நீர்) கூறுவீராக.

(84) 84. மேலும், அவர்களில் எவர் இறந்துவிட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர். அவர்களுடைய கப்ரில் (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டதுடன் பாவிகளாகவே இறந்தும் இருக்கின்றனர்.

(85) 85. அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய சந்ததிகளும் (அதிகரித்திருப்பது) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். (ஏனென்றால்) அவற்றைக்கொண்டு இவ்வுலகிலேயே அவர்களைத் துன்புறுத்துவதையும், அவர்கள் (கர்வம்கொண்டு) நிராகரித்த வண்ணமே அவர்களின் உயிர் போவதையும்தான் அல்லாஹ் விரும்புகிறான்.

(86) 86. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுமாறு ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களிலுள்ள பணக்காரர்கள் (போர் புரிய வராதிருக்க) உங்களிடம் அனுமதிகோரி ‘‘எங்களை விட்டுவிடுங்கள்; (வீட்டில்) தங்கி இருப்பவர்களுடன் நாங்களும் தங்கிவிடுகிறோம்'' என்று கூறுகின்றனர்.

(87) 87. (சிறியோர், முதியோர், பெண்கள் போன்ற போருக்கு வரமுடியாமல் வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிடவே விரும்புகின்றனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. (ஆதலால் இதிலுள்ள இழிவை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.

(88) 88. எனினும் (அல்லாஹ்வுடைய) தூதரும், அவருடனுள்ள நம்பிக்கையாளர்களும் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். (இம்மை, மறுமையின்) நன்மைகள் அனைத்தும் இவர்களுக்குத்தான் உரியன. நிச்சயமாக இவர்கள்தான் வெற்றியாளர்கள்.

(89) 89. அல்லாஹ், அவர்களுக்காக சொர்க்கங்களை தயார் செய்துவைத்திருக்கிறான் அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுவோ மாபெரும் பாக்கியமாகும்.

(90) 90. கிராமத்து அரபிகளில் சிலர், (போருக்குச் செல்லாதிருக்க) அனுமதிகோரி (உங்களிடம்) வந்து காரணம் கூறுகின்றனர். எனினும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பொய்யாக்கியவர்களோ (அனுமதி கோராமலேயே வீட்டில்) உட்கார்ந்து கொண்டனர். ஆகவே, இவர்களிலுள்ள (இந்)நிராகரிப்பவர்களை அதிசீக்கிரத்தில் மிகத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.

(91) 91. பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதைப் பற்றி) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இத்தகைய) நல்லவர்கள் மீது (குற்றம் கூற) ஒரு வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுள்ளவன் ஆவான்.

(92) 92. எவர்கள் (போருக்குரிய) வாகனத்தை நீர் தருவீர் என உம்மிடம் வந்து, ‘‘உங்களை நான் ஏற்றி அனுப்பக்கூடிய வாகனம் என்னிடம் இல்லையே'' என்று நீர் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாதுபோன துக்கத்தினால் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி ஒரு குற்றமும் இல்லை.)

(93) 93. (எனினும்,) எவர்கள் பணக்காரர்களாகவும் இருந்து (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதி கோரி (போருக்குச் செல்லாது வீட்டில்) தங்கி விடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களோ அவர்கள் மீதுதான் குற்றம். இவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, அவர்கள் (இதனால் ஏற்படும் இழிவை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.

(94) 94. (நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து போருக்கு வராததைப் பற்றி மன்னிப்பைத் தேடி) காரணம் சொல்கின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி நபியே!) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் காரணம் கூறாதீர்கள். நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதிசீக்கிரத்தில் உங்கள் செயலை அறிந்து கொள்வார்கள். முடிவில், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்த (அ)வனிடம் தான் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அது சமயம் அவனே உங்களுக்கு அறிவிப்பான்.

(95) 95. (நம்பிக்கையாளர்களே! போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்ப வந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து (விட்டு)விட, அவர்கள் அல்லாஹ்வின் மீது உங்கள் முன் சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்களும் அவர்களை புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். (அதுவே) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குரிய தண்டனையாகும்.

(96) 96. (நம்பிக்கையாளர்களே!) அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தி அடைவதற்காக அவர்கள் உங்களிடம் (இவ்வாறு பொய்) சத்தியம் செய்கின்றனர். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இந்த மக்களைப் பற்றி திருப்தி அடையவே மாட்டான்.

(97) 97. நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கி இருக்கும் (வேதத்தின்) சட்ட வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.

(98) 98. (கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை)மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.

(99) 99. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப்புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைகளுக்கு வழியாகவும் எடுத்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கருணை செய்பவன் ஆவான்.

(100) 100. முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும், நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். மேலும், தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.

(101) 101. (நம்பிக்கையாளர்களே!) உங்களைச் சூழவுள்ள (கிராமங்களில் வசிக்கும்) கிராமத்து அரபிகளில் நயவஞ்சகர்கள் (பலர்) இருக்கின்றனர். (அதிலும்) மதீனாவிலுள்ள பலர் வஞ்சகத்திலேயே ஊறிக் கிடக்கின்றனர். (நபியே!) நீர் அவர்களை அறியமாட்டீர்; நாம் அவர்களை நன்கு அறிவோம். அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள்.

(102) 102. வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தையும் மற்ற (சில) கெட்ட(காரியத்)தையும் கலந்து செய்துவிட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிகக் கருணையாளன் ஆவான்.

(103) 103. (நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தர்மத்தை நீர் எடுத்துக் கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்வீராக. உங்கள் (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்.

(104) 104. நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கிறான் என்பதையும், தர்மங்களை அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கருணை காட்டுபவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?

(105) 105. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலும், மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.

(106) 106. அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னித்துவிடலாம். அல்லாஹ் (அவர்களுடைய செயல்களை) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.

(107) 107. எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கை யாளர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக, முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு மஸ்ஜிதைக் கட்டி இருக்கிறார்களோ அவர்கள், (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) ‘‘நிச்சயமாக நாங்கள் நன்மையைத் தவிர (தீமையைக்) கருதவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகிறான்.

(108) 108. ஆகவே, (நபியே!) நீர் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழ(வும் தொழவைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கிறான்.

(109) 109. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, பரிசுத்த(மான எண்ண)த்தின் மீதே மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? அல்லது (சரிந்துவிடக் கூடியவாறு) ஓடையின் அருகில் அதுவும் சரிந்து அவனுடன் நரக நெருப்பில் விழக்கூடியவாறு மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? (இத்தகைய) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.

(110) 110. தங்கள் உள்ளங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய இக்கட்டடம் அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டாகும் வரை (முள்ளைப் போல் தைத்துக் கொண்டே) இருக்கும். அல்லாஹ் (இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.

(111) 111. அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் கண்டிப்பாக அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளை) கொல்வார்கள்; (அல்லது) கொல்லப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றி.

(112) 112. பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும், (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும், (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும், நோன்பு நோற்பவர்களும், (மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பிரயாணம் செய்பவர்களும், குனிந்து சிரம் பணி(ந்து தொழு)பவர்களும் நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும், பாவமான காரியங்களை விலக்குபவர்களும், அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே!) நற்செய்தி கூறுவீராக.

(113) 113. இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?)

(114) 114. இப்றாஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே தவிர வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்றாஹீம் அதிகம் பிரார்த்திப்பவரும் மிக இரக்கமும் அடக்கமும் உடையவரும் ஆவார்.

(115) 115. ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்திய பின்னர், அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான், - அவர்கள் விலகிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை என்பதை அவன் அவர்களுக்கு தெளிவாக அறிவிக்கின்ற வரை. நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.

(116) 116. வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படியும் செய்கிறான். ஆகவே, அல்லாஹ்வை தவிர்த்து உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை.

(117) 117. நபியின் மீது நிச்சயமாக அல்லாஹ் மன்னித்தருள் புரிந்தான். (அவ்வாறே) கஷ்டகாலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும், அன்ஸாரிகள் மீதும் (மன்னித்தருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து, அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது மிக இரக்கமும் மிக்க கருணையும் உடையவன் ஆவான்.

(118) 118. (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்). பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வை விட்டுத் தப்புமிடம் அவனிடமே தவிர வேறு அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்துகொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.

(119) 119. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாக இருப்பவர்களுடன் இருங்கள்.

(120) 120. மதீனாவாசிகள் இன்னும் அவர்களைச் சூழ்ந்து வசிக்கும் கிராமத்து அரபிகள் ஆகிய இவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் (பிரிந்து) பின் தங்குவதும்; (அல்லாஹ்வுடைய) தூதரின் உயிரைவிட தங்கள் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுமானதல்ல. ஏனென்றால், அல்லாஹ்வுடைய பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், கலைப்பு, பசி (ஆகியவையும்), நிராகரிப்பவர்களைக் கோபமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து, அதனால் எதிரியிடமிருந்து ஒரு துன்பத்தை அடைதல் ஆகிய இவையனைத்தும் அவர்களுக்கு நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்பவர்களின் (அழகிய பண்பாளர்களின்) கூலியை வீணாக்கி விடுவதில்லை.

(121) 121. இவர்கள் சிறிதோ பெரிதோ (அல்லாஹ்வுடைய பாதையில்) எதைச் செலவு செய்தபோதிலும் (அவ்வாறே அல்லாஹ்வுடைய பாதையில்) எந்த பூமியைக் கடந்தபோதிலும் அவர்களுக்காக அது பதிவு செய்யப்படுகிறது. ஏனெனில், அவர்கள் செய்த இவற்றைவிட மிக அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான்.

(122) 122. (உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால்) நம்பிக்கையாளர்கள் அனைவருமே (தங்கள் ஊரை விட்டு) வெளிப்பட்டு விடுவது எப்பொழுதுமே தகாது. மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ள(க் கருதினாலும் அதற்காக) உங்களில் ஒவ்வொரு கூட்டத்தில் இருந்தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா? (அவர்கள் மார்க்க விஷயத்தைக் கற்று) தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு(த் தாங்கள் கற்றதைக் கூறி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள். (ஊரில் இருப்பவர்கள்) எச்சரிக்கையாக இருந்து (தங்கள் மக்களைக் காத்துக்) கொள்வார்கள்.

(123) 123. நம்பிக்கையாளர்களே! பகைமையையும், விஷமத்தனத்தையும் வெளிப்படுத்துகின்ற உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

(124) 124. ஒரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் ‘‘உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?'' என்று கேட்கக்கூடியவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். மெய்யாகவே எவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை (இது) அதிகப்படுத்தியே விட்டது. இதைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

(125) 125. ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அதிகரித்து விட்டது! அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தும் விட்டனர்.

(126) 126. ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இருமுறைகளோ அவர்கள் சிரமத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விட்டுவிடுவதுமில்லை; நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.

(127) 127. (புதிய) அத்தியாயம் ஒன்று அருளப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை விரைக்கப் பார்த்து (கண்ணால் ஜாடை செய்து) ‘‘உங்களை யாரும் பார்த்துக் கொண்டார்களோ?'' என்று (கேட்டு) பின்னர் (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத மக்களாக இருப்பதனால், அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களையும் திருப்பிவிட்டான்.

(128) 128. (நம்பிக்கையாளர்களே! நம்) தூதர் ஒருவர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) உங்கள் நன்மையையே பெரிதும் விரும்புகிறவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க இரக்கமும் கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கிறார்.

(129) 129. (நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி) கூறுவீராக ‘‘அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான ‘அர்ஷின்' அதிபதி ஆவான்.