22 - ஸூரா அல்ஹஜ் ()

|

(1) 1. மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி மிக்க கடுமையானது.

(2) 2. அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினால் அல்ல. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்.)

(3) 3. மனிதர்களில் பலர் ஏதும் அறியாமலிருந்து கொண்டே அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கித்து வரம்பு மீறும் ஷைத்தான்களையே பின்பற்றுகின்றனர்.

(4) 4. எவன் (ஷைத்தானாகிய) அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் அவனை நிச்சயமாக வழிகெடுத்துக் கொடிய வேதனையின் பக்கமே செலுத்தி விடுவான் என்று விதிக்கப்பட்டு விட்டது.

(5) 5. மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால், (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்து (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதை) குறை வடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம் வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரை தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்துவிடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய தள்ளாத வயது வரை விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

(6) 6. நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன். நிச்சயமாக அவன் மரணித்தவர்களை உயிர் கொடுத்து எழுப்புவான். நிச்சயமாக அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன் என்பதற்கு இதுவே போதுமான (அத்தாட்சியாக இருக்கிற)து.

(7) 7. விசாரணைக் காலம் நிச்சயமாக வரக்கூடியது. அதில் சந்தேகமேயில்லை. (அந்நாளில்) சமாதிகளில் (புதைந்து) கிடப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.

(8) 8. மனிதர்களில் பலர் (இருக்கின்றனர். அவர்கள்) எந்தவித கல்வியும், தர்க்கரீதியான ஆதாரமும், வேத நூலின் தெளிவான ஆதாரமும் இல்லாமலே அவர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்.

(9) 9. அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்). இம்மையில் அவர்களுக்கு இழிவுதான். மறுமை நாளிலோ சுட்டெரிக்கும் நெருப்பின் வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.

(10) 10. (அங்கு அவர்களை நோக்கிக் கூறப்படும்:) இவை ஏற்கனவே உங்கள் கைகள் செய்து அனுப்பிய செயல்களின் பலன்தான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் எவருக்கும் (தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்பவனல்ல.

(11) 11. மனிதரில் பலர் (மதில்மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்களை ஒரு நன்மை அடைந்தால் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும்.

(12) 12. இவர்கள் தங்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற, அல்லாஹ் அல்லாதவற்றை (உதவிக்கு) அழைக்கின்றனர். இதுதான் வெகுதூரமான வழிகேடாகும்.

(13) 13. நன்மை ஏற்படுவதைவிட தீங்கு ஏற்படுவது எவர்களால் அதிகம் சாத்தியமாக இருக்கிறதோ அவர்களைத்தான் இவர்கள் (தங்கள் பாதுகாவலர்கள் என) அழைக்கின்றனர். (இவர்களுடைய) அந்த பாதுகாவலர்களும் கெட்டார்கள்; அவர்களை அண்டி நிற்கும் இவர்களும் கெட்டார்கள்.

(14) 14. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கங்களுக்குள் புகச்செய்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான்.

(15) 15. எவன் (நம் தூதர் மீது பொறாமை கொண்டு) அவருக்கு அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக உதவி செய்யமாட்டான் என்று (தன் பொறாமையின் காரணமாக) எண்ணுகிறானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிற்றைக் கட்டி(ச் சுருக்குப் போட்டு அதில் கழுத்தை மாட்டி) நெரித்துக் கொள்ளட்டும். தான் பொறாமை கொண்ட (அல்லாஹ்வின் உதவியை) தன் சூழ்ச்சி மெய்யாகவே போக்கிவிட்டதா? என்று பார்க்கவும்.

(16) 16. இவ்வாறு தெளிவான வசனங்களாகவே நாம் (குர்ஆனாகிய) இதை இறக்கி வைத்தோம். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களை (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகிறான்.

(17) 17. நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணைவைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தான் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், யார் நேரான வழியில் இருக்கிறார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்(த்துக்கொண்டே இரு)க்கிறான்.

(18) 18. (நபியே!) வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் ஒரு பெரும் தொகையினரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீர் காணவில்லையா? எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் மீது வேதனையே விதிக்கப்பட்டு விட்டது. எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதையே செய்கிறான்.

(19) 19. (இறைவனுக்கு கட்டுப்படுபவர்கள், இறைவனுக்கு மாறு செய்பவர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, அவர்களில் எவர்கள் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. (அக்னியைப் போல்) கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்.

(20) 20. அவர்களுடைய வயிற்றினுள் இருக்கும் குடல்களும் (தேகத்தின் மேல் இருக்கும்) தோல்களும் அதனால் உருகிவிடும்.

(21) 21. அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகள் உண்டு. (அதைக் கொண்டு அவர்களை அடிக்கப்படும்.)

(22) 22. இத்துயர(மான நரக)த்திலிருந்து அவர்கள் வெளிப்படக் கருதி முயற்சிக்கும் போதெல்லாம் அதில் அவர்கள் தள்ளப்பட்டு “எரிக்கும் (நெருப்பு) வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்'' (எனவும் கூறப்படும்).

(23) 23. நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். (பின்னும்) பொற்கடகமும், முத்து ஆபரணமும் (விருதுகளாக) அவர்களுக்கு அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளோ மிருதுவான பட்டினால் ஆனதாக இருக்கும்.

(24) 24. பரிசுத்த வாக்கியம் (ஆகிய கலிமா தய்யிப்) அவர்களுக்கு (இம்மையில்) கற்பிக்கப்பட்டு மிக்க புகழுக்குரிய இறைவனின் பாதையிலும் அவர்கள் செலுத்தப்படுவார்கள்.

(25) 25. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், வெளியிலிருந்து வருபவர்கள் ஆயினும், மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமையுள்ளதாக நாம் ஏற்படுத்திய சிறப்புற்ற மஸ்ஜிதை விட்டும் தடை செய்து கொண்டு இருக்கிறார்களோ, (அவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள்.) எவராவது அதில் மார்க்கத்திற்கு விரோதமாக அநியாயம் செய்ய விரும்பினால், அவர்களை, துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்க வைப்போம்.

(26) 26. (நபியே!) இப்றாஹீமை நம் வீட்டின் சமீபமாக வசிக்கும்படிச் செய்து (அவரை நோக்கி) “நீர் எனக்கு எவரையும் இணையாக்காதீர். என் (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து தொழுபவர்களுக்கும் அதைப் பரிசுத்தமாக்கி வைப்பீராக'' என்று நாம் கூறிய சமயத்தில்,

(27) 27. (அவரை நோக்கி) “ஹஜ்ஜூக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிக்கையிடுவீராக. (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த (ஒட்டக) வாகனங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள்.

(28) 28. (வர்த்தகத்தின் மூலம்) தங்கள் பயனை நாடியும் (அங்கு வருவார்கள்). குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பிராணிகள் மீது அவனது திருப்பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் அ(ங்கு வருவார்கள். ஆகவே, அவ்வாறு அறுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள்; சிரமப்படும் ஏழைகளுக்கும் புசிக்கக் கொடுங்கள்.

(29) 29. பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்கள் நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள்.

(30) 30. இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பானவற்றை எவர் மகிமைப்படுத்துகிறாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே முடியும். (நீங்கள் புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளைப் பற்றி உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட (செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட)வற்றைத் தவிர மற்றவை ஆகுமாக்கப்பட்டு விட்டன. (அவற்றை நீங்கள் புசிக்கலாம்.) ஆகவே, சிலை வணக்க அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும், பொய்யான வார்த்தைகளில் இருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்.''

(31) 31. அல்லாஹ்வுக்கு இணைவைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து (தலைகீழாக) விழுந்தவனைப் போலாவான். அவனை (கழுகு போன்ற) பறவைகள் இறாஞ்சி (கொத்தி)க் கொண்டு போய்விடும் அல்லது காற்று வெகு தூரத்திற்கு அடித்துக் கொண்டு சென்றுவிடும்.

(32) 32. இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தை அறிவிக்கிறது.

(33) 33. (குர்பானிக்காக உள்ள ஆடு, மாடு, ஒட்டகங்களின் பாலை அருந்தலாம்; சவாரி செய்யலாம். இவ்வாறு) ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அவற்றைக் கொண்டு பயனடையலாம். பின்னர், அவற்றை கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்திடம் சேர்ப்பித்து விட வேண்டும்.

(34) 34. குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.

(35) 35. அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றில் தானமும் செய்வார்கள்.

(36) 36. குர்பானியின் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்குத் தான் பெரும் நன்மை இருக்கிறது. ஆகவே, (அதன் இடப்பக்க முன் காலைக்கட்டி மற்ற மூன்று கால்களில்) நிறுத்தி வைத்து அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுங்கள். அது கீழே விழுந்து (உயிர்)விட்டால் அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்.

(37) 37. (இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம்தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை அறிவித்ததற்காக (அவனுக்கு நீங்கள் குர்பானி கொடுத்து) அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறு அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (நபியே! இவ்வாறு குர்பானி கொடுத்து) நன்மை செய்பவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.

(38) 38. நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை (நிராகரிப்பவர்களின்) தீங்கிலிருந்து தடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மோசக்காரர்களையும் நன்றி கெட்டவர்களையும் விரும்புவதில்லை.

(39) 39. (நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவன் ஆவான்.

(40) 40. இவர்கள், தங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும், (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.

(41) 41. இவர்கள் எத்தகையோர் என்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.

(42) 42. (நபியே! நிராகரிக்கும்) இவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்) இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய மக்களும், ஆது, ஸமூது என்னும் மக்களும் (தங்கள் நபிமார்களை) நிச்சயமாக பொய்யாக்கியே இருந்தனர்.

(43) 43. (இவ்வாறே) இப்றாஹீமுடைய மக்கள் (இப்றாஹீமையும்), லூத்துடைய மக்கள் (லூத்தையும்) பொய்யாக்கினார்கள்.

(44) 44. (அவ்வாறே) மத்யன்வாசிகளும் (தங்கள் நபியைப் பொய்யாக்கினர்). (இவ்வாறே) மூஸாவும் (தன் மக்களால்) பொய்ப்பிக்கப்பட்டார். ஆகவே, நிராகரித்த இவர்கள் அனைவருக்கும் நான் சிறிது அவகாசம் கொடுத்து பின்னர் நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். என் வேதனை எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனித்தீரா)?

(45) 45. அநியாயக்காரர்கள் வசித்திருந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம். அவற்றுடைய முகடுகள் இடிந்து குட்டிச் சுவராகிக் கிடக்கின்றன. அவற்றின் (எத்தனையோ) கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றின் மாட மாளிகைகள் (மக்கள் வசிக்காது) பாழாய் கிடக்கின்றன.

(46) 46. ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவற்றைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய செவிகள் அவர்களுக்கு உண்டாகிவிடும். நிச்சயமாக அவர்களுடைய (புறக்) கண்கள் குருடாகிவிடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக் கண்களான) உள்ளங்கள் தான் குருடாகிவிட்டன.

(47) 47. (நபியே!) அவர்கள் வேதனையைத் தேடி உம்மிடம் அவசரப்படுகின்றனர். (நீர் கூறுவீராக: உங்கள் மீது வேதனையை இறக்குவதாக) அல்லாஹ் செய்த வாக்குறுதியை அவன் மாற்றமாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடத்தில் ஒரு நாள் நீங்கள் எண்ணும் (உங்கள்) ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.

(48) 48. நாம் எத்தனையோ ஊரார்களுக்கு அவகாசமளித்தோம். (திருந்தாது) மேலும், அவர்கள் அநியாயம் செய்யவே முற்பட்டார்கள். ஆதலால், நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். அவர்கள் (இறந்த பின்னரும்) நம்மிடம்தான் வரவேண்டியது இருக்கிறது.

(49) 49. (நபியே!) கூறுவீராக: “மனிதர்களே நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.''

(50) 50. ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு.

(51) 51. மேலும் எவர்கள் நம் வசனங்களைத் தோற்கடிக்க முயற்சிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே!

(52) 52. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபியும், ரசூலும் (வேதத்தை) ஓதிய சமயத்தில் அவருடைய ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தை உண்டுபண்ண முயற்சிக்காமல் இருக்கவில்லை. (அவர்களுடைய ஓதுதலில்) ஷைத்தான் உண்டுபண்ணிய (தப்பான)தை அல்லாஹ் நீக்கிய பின்னர் தன் வசனங்களை உறுதிப்படுத்திவிடுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.

(53) 53. (இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு ஒரு காரணமாகவும் (அல்லாஹ்) ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர்.

(54) 54. எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய உள்ளங்கள் பணிந்து அவனுக்கு கட்டுப்பட்டுவிடும். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களைத்தான், அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.

(55) 55. (எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரை அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற நாள் அவர்களிடம் வரும்வரை இதைப் பற்றிச் சந்தேகத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள்.

(56) 56. அந்நாளில், ஆட்சி, அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் மிக்க சுகமளிக்கும் சொர்க்கங்களில் தங்கி விடுவார்கள்.

(57) 57. எவர்கள் (நம் வேதத்தை) நிராகரித்து, நம் வசனங்களை பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக இழிவு தரும் வேதனை உண்டு.

(58) 58. எவர்கள் (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய வழியில் புறப்பட்டு பின்னர் (போரில்) கொல்லப்படுகிறார்களோ அல்லது இறந்துவிடுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் மிக்க அழகான (முறையில்) உணவளிக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், உணவளிப்பவர்களில் எல்லாம் மிக்க மேலானவன்.

(59) 59. ஆகவே, நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பக்கூடிய இடத்தில் அவர்களை சேர்த்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும், மிக்க பொறுமையுடையவனும் ஆவான்.

(60) 60. இவ்வாறே (காரியம் நடைபெறும்). எவரேனும் தான் துன்புறுத்தப்பட்ட அதே அளவுக்கு பழி வாங்கிய பிறகு, மீண்டும் (முதல் துன்புறுத்திய) அவன் மீது அதிகம் அநியாயம் செய்யப்பட்டால் நிச்சயமாக அல்லாஹ் அ(நீதி இழைக்கப்பட்ட)வனுக்கு உதவி புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான்.

(61) 61. இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைய வைக்(க ஆற்றலுடையவனாக இருக்)கிறான். (அதைப் போன்றே துன்புறுத்தும் கெட்டவனை நல்லவனாகவும், துன்பத்திற்குள்ளான நல்லவனைக் கெட்டவனாகவும் ஆக்கி விடுகிறான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.

(62) 62. இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை அனைத்தும் பொய்யானவைதான். நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன்.

(63) 63. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான். (அதனால்) பூமி பசுமையாகி விடுகிறது. நிச்சயமாக அல்லாஹ் அதிக நுட்பமுடையவனும் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஆவான்.

(64) 64. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! நிச்சயமாக அல்லாஹ்தான் (பிறரின் உதவி) தேவை அற்றவனும் புகழுக்குரியவனும் ஆவான்.

(65) 65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கிறான். கப்பல் அவனுடைய கட்டளைப்படி கடலில் செல்கிறது. தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழாது அவன் தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமுடையவன், கருணையுடையவன் ஆவான்.

(66) 66. அவன்தான் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, அவன்தான் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவனே உங்களை உயிர்ப்பிப்பான். எனினும், நிச்சயமாக மனிதன் மிக நன்றி கெட்டவன் ஆவான்.

(67) 67. (நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் என்னை வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி இருந்தோம். ஆகவே, (உமது காலத்தில் உமக்கு) நாம் ஏற்படுத்தியிருக்கும் வழியைப் பற்றி அவர்கள் உம்முடன் தர்க்கம் செய்ய வேண்டாம். மேலும் நீர் அவர்களை உமது இறைவன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழைப்பீராக. நிச்சயமாக நீர் நேரான வழியில்தான் இருக்கிறீர்.

(68) 68. (நபியே!) அவர்கள் உம்முடன் தர்க்கித்தாலோ (அவர்களை நோக்கி) கூறுவீராக: “நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்;

(69) 69. நீங்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதைப் பற்றி மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்''

(70) 70. (நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை அனைத்தும் அவனுடைய (நிகழ்ச்சிக் குறிப்பாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!

(71) 71. (நபியே! நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவர்களிடம் (அல்லாஹ்) அத்தாட்சி எதையும் இறக்கவில்லை; அவர்களிடம் அது பற்றி கல்வியும் இல்லை. இந்த அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்.

(72) 72. அவர்கள் மீது தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை நிராகரிக்கும் இவர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் காண்பீர். நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போலும்! (ஆகவே, இவர்களை நோக்கி) நீர் கூறுவீராக! நான் உங்களுக்கு இதைவிட கொடியதொரு விஷயத்தை அறிவிக்கவா? (அது நரக) நெருப்புதான். அதையே (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்து இருக்கிறான். (அது) சேருமிடங்களிலெல்லாம் மிகக் கெட்டது.

(73) 73. மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதைசெவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்கள் என) அழைக்கிறீர்களோ அவை அனைத்தும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஈ ஒன்று அவற்றினுடைய ஒரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (அவர்கள் தெய்வங்கள் என) அழைக்கும் அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்கள் என) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே!

(74) 74. அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்த வில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான்.

(75) 75. வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அல்லாஹ் (தன்) தூதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்.

(76) 76. அவர்களுக்கு முன்(னர் சென்று) இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்(னர் வர) இருப்பவற்றையும் அவன் நன்கறிந்தவன். எல்லா விஷயங்களும் அல்லாஹ்விடமே திரும்ப கொண்டு வரப்படும்.

(77) 77. நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். (மார்க்கத்திற்கும் மக்களுக்கும்) நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்.

(78) 78. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தேர்ந்தெடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு ஒரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம் இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். ஆகவே, தொழுகையை கடைப்பிடியுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன்தான் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்). அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.