(2) இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
(3) (நபியே!) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக மாறாததால் உம்மை நீர் அழித்துக் கொள்வீரோ!
(4) நாம் நாடினால் வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு அத்தாட்சியை இறக்குவோம். ஆக, அவர்களது கழுத்துகள் அதற்கு பணிந்தவையாக ஆகிவிடும்.
(5) ரஹ்மானிடமிருந்து புதிதாக இறக்கப்பட்ட அறிவுரை எதுவும் அவர்களிடம் வந்தால் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
(6) ஆக, திட்டமாக இவர்கள் (நமது தூதரையும் அவர் கொண்டு வந்ததையும்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் எதை கேலி செய்பவர்களாக இருந்தனரோ அதன் (நிகழ்வதுடைய) செய்திகள் அவர்களிடம் விரைவில் வரும்.
(7) பூமியை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? “அதில் நாம் எத்தனை அழகிய தாவர ஜோடிகளை முளைக்க வைத்திருக்கிறோம்” என்று.
(8) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
(9) இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
(10) அந்நேரத்தை நினைவு கூருங்கள்! உமது இறைவன் மூஸாவை அழைத்து, நீர் அநியாயக்கார மக்களிடம் வருவீராக! என்று கூறினான்.
(11) ஃபிர்அவ்னின் மக்களிடம் (வருவீராக!). அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச வேண்டாமா!
(12) (மூஸா) கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்.”
(13) “இன்னும், என் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிடும்; என் நாவு பேசாமல் ஆகிவிடும். ஆகவே, நீ ஹாரூனுக்கு (அவர் எனக்கு உதவும்படி) வஹ்யி அனுப்புவாயாக!”
(14) இன்னும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றம் இருக்கிறது. ஆகவே. அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்.
(15) (அல்லாஹ்) கூறினான்: “அவ்வாறல்ல! ஆக, நீங்கள் இருவரும் எனது அத்தாட்சிகளை (அவர்களிடம்) கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நாம் உங்களுடன் (அனைத்தையும்) செவியேற்பவர்களாக (இன்னும் பார்ப்பவர்களாக) இருக்கிறோம்.
(16) ஆக, நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் வாருங்கள்! இன்னும், “நிச்சயமாக நாங்கள் அகிலங்களின் இறைவனுடைய தூதராக இருக்கிறோம்” என்று (அவனிடம்) கூறுங்கள்!
(17) நிச்சயமாக, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடு!
(18) (ஃபிர்அவ்ன்) கூறினான்: “நாம் உம்மை (நீ) குழந்தையாக (இருந்தபோது) எங்களிடம் வளர்க்கவில்லையா? இன்னும், எங்களுக்கு மத்தியில் உமது வாழ்க்கையில் (பல) ஆண்டுகள் தங்கியிருந்தாய் (அல்லவா)!”
(19) “இன்னும், (மூஸாவே!) நீ உனது (ஒரு கெட்ட) செயலை செய்து விட்டாய். நீ நன்றி கெட்டவர்களில் ஒருவராக இருக்கிறாயே.”
(20) (மூஸா) கூறினார்: (ஆம்,) அ(ந்த கெட்ட காரியத்)தை நான் செய்தேன், அப்போது, நானோ (அல்லாஹ்வின் மார்க்கத்தை) அறியாதவர்களில் (ஒருவனாக) இருந்தேன்.
(21) ஆக, உங்களை நான் பயந்தபோது உங்களை விட்டு ஓடிவிட்டேன். ஆக, என் இறைவன் எனக்கு (நபித்துவ) ஞானத்தை வழங்கினான். இன்னும், என்னை இறைத்தூதர்களில் ஒருவராக ஆக்கினான்.
(22) இன்னும், அ(ப்படி என்னை நீ வளர்த்த)து நீ என் மீது சொல்லிக் காட்டுகிற ஓர் உபகாரம்தான். அதாவது, நீ (என் சமுதாயமான) இஸ்ரவேலர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறாய். (ஆனால், என்னை அடிமையாக்கவில்லை. அதற்காக நான் உன்னை சத்தியத்தின் பக்கம் அழைப்பதை விட முடியாது.)
(23) ஃபிர்அவ்ன் கூறினான்: “அகிலங்களின் இறைவன் யார்?”
(24) (மூஸா) கூறினார்: வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் அகிலங்களின் இறைவன் ஆவான். நீங்கள் (கண்ணால் பார்ப்பதை) உறுதியாக நம்பக்கூடியவர்களாக இருந்தால் (அதுபோன்றே படைப்பாளன் அல்லாஹ்தான். அவனே வணங்கத் தகுதியானவன் என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்.)
(25) அவன் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கூறினான்: (இவர் கற்பனையாக கூறுவதை) நீங்கள் செவியுறுகிறீர்களா?
(26) (மூஸா) கூறினார்: அவன்தான் உங்கள் இறைவன், இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவன் ஆவான்.
(27) (ஃபிர்அவ்ன்) கூறினான்: “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்ட உங்கள் இந்த தூதர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.”
(28) (மூஸா) கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளு)க்கும், (சூரியன் மறைகிற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளு)க்கும் இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான், நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிந்து கொள்வீர்கள்).
(29) (ஃபிர்அவ்ன்) கூறினான்: “என்னை அன்றி வேறு ஒரு கடவுளை நீர் எடுத்துக் கொண்டால் (எனது சிறையில்) சிறைப்படுத்தப்பட்டவர்களில் உம்மையும் ஆக்கி விடுவேன்.”
(30) (மூஸா) கூறினார்: (அத்தாட்சிகளில்) தெளிவான ஒன்றை உம்மிடம் நான் கொண்டு வந்தாலுமா? (அல்லாஹ்வை நம்பிக்கைகொள்ள மறுப்பாய்!)
(31) (ஃபிர்அவ்ன்) கூறினான்: ஆக, நீர் உண்மையாளர்களில் இருந்தால் (என்னிடம்) அதைக் கொண்டுவாரீர்.
(32) ஆக, அவர் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது தெளிவான (உண்மையான) பெரிய மலைப் பாம்பாக ஆகிவிட்டது.
(33) இன்னும், அவர் தனது கையை (சட்டையின் முன் பக்க துவாரத்திலிருந்து) வெளியே எடுக்க, உடனே அது பார்ப்பவர்களுக்கு (மின்னும்) வெண்மையானதாக ஆகிவிட்டது.
(34) அவன், தன்னை சுற்றியுள்ள பிரமுகர்களிடம் கூறினான்: “நிச்சயமாக இவர் (சூனியத்தை) நன்கறிந்த (திறமையான) ஒரு சூனியக்காரர்தான்.”
(35) “இவர் உங்க(ள் அடிமைகளாகிய இஸ்ரவேலர்க)ளை தனது மந்திர சக்தியால் உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, (இவர் விஷயத்தில்) நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?”
(36) (அந்த பிரமுகர்கள்) கூறினார்கள்: “அவருக்கும் அவரது சகோதரருக்கும் நீ அவகாசம் அளி! இன்னும், (எகிப்தின் எல்லா) நகரங்களில் (இருக்கிற சூனியக்காரர்களை) ஒன்றுதிரட்டி அழைத்து வருபவர்களை அனுப்பிவை!”
(37) “(சூனியத்தை) நன்கறிந்த பெரிய சூனியக்காரர்கள் எல்லோரையும் அவர்கள் உன்னிடம் அழைத்து வருவார்கள்.”
(38) ஆக, அறியப்பட்ட ஒரு நாளுடைய குறிப்பிட்ட தவணையில் சூனியக்காரர்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர்.
(39) இன்னும், மக்களுக்கு அறிவிக்கப்பட்டது: “(மூஸாவும் சூனியக்காரர்களும் போட்டியிடும்போது யார் வெற்றியாளர் என்று பார்ப்பதற்கு) நீங்கள் ஒன்று சேருவீர்களா?”
(40) “சூனியக்காரர்களை நாம் பின்பற்றலாம், அவர்கள் வெற்றி பெற்றவர்களாக ஆகிவிட்டால்”
(41) ஆக, சூனியக்காரர்கள் வந்தபோது, அவர்கள் ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்: “நாங்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு கூலி உண்டா?”
(42) அவன் கூறினான்: “ஆம். (கூலி உண்டு)! இன்னும், நிச்சயமாக (உங்களுக்கு பதவிகள் கொடுக்கப்பட்டு) நீங்கள் அப்போது (எனக்கு) மிக நெருக்கமானவர்களில் ஆகிவிடுவீர்கள்.”
(43) அவர்களுக்கு மூஸா கூறினார்: “நீங்கள் எதை எறியப் போகிறீர்களோ அதை (நீங்கள் முதலில்) எறியுங்கள்.”
(44) ஆக, அவர்கள் தங்கள் கயிறுகளையும் தங்கள் தடிகளையும் எறிந்தனர். இன்னும், ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக! “நிச்சயமாக நாங்கள்தான் வெற்றியாளர்கள்” என்று அவர்கள் கூறினார்கள்.
(45) ஆக, மூஸா தனது தடியை எறிந்தார். ஆக, அது உடனே அவர்கள் பொய்யாக வித்தை காட்டிய அனைத்தையும் விழுங்கியது.
(46) உடனே, சூனியக்காரர்கள் (நம்பிக்கை கொண்டு) சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர்.
(47) அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அகிலங்களின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்.”
(48) “மூஸா இன்னும் ஹாரூனுடைய இறைவனை (நம்பிக்கை கொண்டோம்).”
(49) (ஃபிர்அவ்ன்) கூறினான்: “அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா - நான் உங்களுக்கு (அது பற்றி) அனுமதி தருவதற்கு முன்? நிச்சயமாக அவர் உங்களுக்கு சூனியத்தை கற்பித்த உங்கள் பெரிய (தலை)வர் ஆவார். ஆகவே, நீங்கள் (நான் உங்களை தண்டிக்கும்போது உங்கள் தவறை) விரைவில் அறிவீர்கள். திட்டமாக நான் உங்கள் கைகளை, உங்கள் கால்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். இன்னும், உங்கள் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றுவேன்.”
(50) அவர்கள் கூறினார்கள்: “பிரச்சனை இல்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்.”
(51) “நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களில் முதலாமவர்களாக இருப்பதால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னிப்பதை நாங்கள் மிகவும் ஆசைப்படுகிறோம்.”
(52) இன்னும், நாம் மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம், அதாவது “எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.”
(53) ஆக, (இஸ்ரவேலர்களை தடுப்பதற்காக) ஃபிர்அவ்ன் நகரங்களில் (தனது படைகளை) ஒன்று திரட்டி கொண்டு வருபவர்களை அனுப்பி வைத்தான்.
(54) “நிச்சயமாக இவர்கள் குறைவான கூட்டம்தான்.”
(55) “இன்னும், நிச்சயமாக இவர்கள் நமக்கு ஆத்திரமூட்டுகிறார்கள்.”
(56) “இன்னும், நிச்சயமாக நாம் அனைவரும் தயாரிப்புடன் உஷார் நிலையில் இருக்கிறோம்.” (இவ்வாறு, ஃபிர்அவ்ன் கூறி முடித்தான்.)
(57) ஆக, நாம் அவர்களை தோட்டங்கள் இன்னும் ஊற்றுகளில் இருந்து வெளியேற்றினோம்.
(58) இன்னும், பொக்கிஷங்களிலிருந்தும் கண்ணியமான இடத்திலிருந்தும் (வெளியேற்றினோம்).
(59) இப்படித்தான் (அவர்களை வெளியேற்றினோம்). இன்னும், அவற்றை இஸ்ரவேலர்களுக்கு சொந்தமாக்கினோம்.
(60) ஆக, (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) காலைப் பொழுதில் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
(61) ஆக, இரண்டு படைகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபோது மூஸாவின் தோழர்கள், “நிச்சயமாக நாங்கள் பிடிக்கப்பட்டோம்” என்று கூறினார்கள்.
(62) (மூஸா) கூறினார்: அவ்வாறல்ல. நிச்சயமாக என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு (விரைவில்) வழிகாட்டுவான்.
(63) ஆக, “உமது தடியினால் கடலை அடிப்பீராக!” என்று மூஸாவிற்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆக, அது பிளந்தது. ஆக, ஒவ்வொரு பிளவும் பெரிய மலைப் போன்று இருந்தது.
(64) இன்னும், அங்கு மற்றவர்களை (-ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலுக்கு) நாம் நெருக்கமாக்கினோம்.
(65) இன்னும், மூஸாவையும் அவருடன் இருந்தவர்கள் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.
(66) பிறகு, மற்றவர்களை மூழ்கடித்தோம்.
(67) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
(68) இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
(69) அவர்களுக்கு இப்ராஹீமுடைய செய்தியை ஓதி காட்டுவீராக!
(70) அவர் தனது தந்தை இன்னும் தனது மக்களை நோக்கி, நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்? என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!)
(71) அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வழிபட்டவர்களாகவே நாங்கள் தொடர்ந்து இருப்போம்.”
(72) அவர் கூறினார்: “நீங்கள் (அவற்றை) அழைக்கும்போது, அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?”
(73) “அல்லது, (நீங்கள் அவற்றை வணங்கினால் உங்களுக்கு) அவை நன்மை தருமா? அல்லது (நீங்கள் அவற்றை வணங்கவில்லை என்றால் உங்களுக்கு) அவை தீங்கு விளைவிக்குமா?”
(74) அவர்கள் கூறினார்கள்: “அவ்வாறல்ல! எங்கள் மூதாதைகளை அவ்வாறு செய்பவர்களாக கண்டோம். (ஆகவே, நாங்களும் அவற்றை வணங்குகிறோம்.)”
(75) அவர் கூறினார்: “நீங்கள் வணங்கிக் கொண்டு இருக்கின்ற சிலைகள் பற்றி (எனக்கு) சொல்லுங்கள்.”
(76) “நீங்களும் உங்கள் முந்திய மூதாதைகளும் (வணங்குகின்ற சிலைகள் பற்றி சொல்லுங்கள்.)”
(77) “ஏனெனில், நிச்சயமாக அவை எனக்கு எதிரிகள் ஆவார்கள். ஆனால், அகிலங்களின் இறைவனைத் தவிர. (அவன்தான் எனது நேசன், நான் வணங்கும் கடவுள்)”
(78) “அவன்தான் என்னைப் படைத்தான். ஆகவே, அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”
(79) “இன்னும், அவன்தான் எனக்கு உணவளிக்கிறான். இன்னும், எனக்கு நீர் புகட்டுகிறான்.”
(80) “இன்னும், நான் நோயுற்றால் அவன்தான் எனக்கு சுகமளிக்கிறான்.”
(81) “இன்னும், அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான். பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்.”
(82) “இன்னும், விசாரணை நாளில் என் பாவங்களை எனக்கு அவன் மன்னிக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன்.”
(83) “என் இறைவா! எனக்கு தூதுத்துவ ஞானத்தை வழங்குவாயாக! இன்னும், என்னை நல்லவர்களுடன் சேர்ப்பாயாக!”
(84) “இன்னும், பின்வருவோர்களில் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!”
(85) “இன்னும், என்னை நயீம் சொர்க்கத்தின் வாரிசுகளில் ஆக்கிவிடுவாயாக!”
(86) “இன்னும், என் தந்தைக்கு மன்னிப்பளிப்பாயாக! நிச்சயமாக அவர் வழி தவறியவர்களில் இருக்கிறார்.”
(87) “இன்னும், மக்கள் எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!”
(88) “செல்வமும் ஆண் பிள்ளைகளும் பலனளிக்காத (அந்த மறுமை) நாளில்.”
(89) “எனினும், யார் (சந்தேகமில்லாத) பாதுகாப்பான (நம்பிக்கை உள்ள) உள்ளத்தோடு அல்லாஹ்விடம் வந்தாரோ (அவர் தனது செல்வம் இன்னும் பிள்ளைகள் மூலம் பயன் பெறுவார்).”
(90) இன்னும், சொர்க்கம் இறையச்சம் உள்ளவர்களுக்கு சமீபமாக்கப்படும்.
(91) இன்னும், வழிகேடர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.
(92) இன்னும், அவர்களிடம் கேட்கப்படும்: “(அல்லாஹ்வை அன்றி) நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே?”
(93) அல்லாஹ்வை அன்றி, (நீங்கள் வணங்கிய) அவை உங்களுக்கு உதவுமா? அல்லது, தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளுமா?
(94) ஆக, அவையும் (-அந்த சிலைகளும் அவற்றை வணங்கிய) வழிகேடர்களும் ஒருவர் மேல் ஒருவர் அ(ந்த நரகத்)தில் எறியப்படுவார்கள்.
(95) இன்னும், இப்லீஸின் இராணுவங்கள் அனைவரும் (அதில் தூக்கி எறியப்படுவார்கள்).
(96) அவர்கள் அதில் தர்க்கித்தவர்களாக கூறுவார்கள்:
(97) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நாம் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தோம்,
(98) உங்களை அகிலங்களின் இறைவனுக்கு சமமாக ஆக்கி (வணங்கி)யபோது.
(99) எங்களை வழி கெடுக்கவில்லை குற்றவாளிகளைத் தவிர.
(100) ஆக, பரிந்துரைப்பவர்களில் யாரும் எங்களுக்கு இல்லை.
(101) இன்னும், உற்ற நண்பர்களில் யாரும் (எங்களுக்கு) இல்லை.
(102) ஆக, (உலகத்திற்கு) ஒருமுறை திரும்பச்செல்வது எங்களுக்கு முடியுமாயின் நாங்கள் (அங்கு சென்று) நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்.”
(103) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
(104) இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
(105) நூஹுடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
(106) அவர்களது சகோதரராகிய நூஹ் அவர்களுக்கு கூறியபோது, “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச மாட்டீர்களா?”
(107) “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.”
(108) “ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!”
(109) “இன்னும், இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (மக்களிடம்) என் கூலி இல்லை.”
(110) “ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!”
(111) அவர்கள் கூறினார்கள்: “சாதாரணமானவர்கள் (மட்டும்) உம்மை பின்பற்றி இருக்க, நாம் உம்மை நம்பிக்கை கொள்வோமா?”
(112) அவர் கூறினார்: “அவர்கள் (-நம்பிக்கையாளர்கள்) செய்துகொண்டு இருப்பது பற்றி எனக்கு ஞானம் இல்லை.
(113) அவர்களது விசாரணை என் இறைவன் மீதே தவிர (என் மீதோ உங்கள் மீதோ) இல்லை. நீங்கள் (இதை) உணர வேண்டுமே!
(114) நான் நம்பிக்கையாளர்களை (என் சபையை விட்டு) விரட்டக் கூடியவன் இல்லை.
(115) நான் தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர இல்லை.”
(116) அவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (எங்களை அழைப்பதைவிட்டு) விலகவில்லை என்றால் நிச்சயமாக நீர் ஏசப்படுபவர்களில் (அல்லது, கொல்லப்படுபவர்களில்) ஆகிவிடுவீர்.”
(117) அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக என் மக்கள் என்னை பொய்ப்பித்து விட்டனர்.
(118) ஆகவே, எனக்கும் அவர்களுக்கும் இடையில் நீ தீர்ப்பளி! இன்னும், என்னையும் என்னுடன் இருக்கின்ற நம்பிக்கையாளர்களையும் பாதுகாத்துக்கொள்!”
(119) ஆக, அவரையும் அவருடன் உள்ளவர்களையும் (உயிரிணங்களால்) நிரப்பப்பட்ட கப்பலில் (ஏற்றி) பாதுகாத்தோம்.
(120) பிறகு, மீதம் இருந்தவர்களை பின்னர் நாம் அழித்துவிட்டோம்.
(121) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
(122) இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
(123) ஆது சமுதாய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
(124) அவர்களது சகோதரரான ஹூது அவர்களுக்கு (பின் வருமாறு) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) பயந்துகொள்ள மாட்டீர்களா?
(125) நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குறிய தூதர் ஆவேன்.
(126) ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
(127) இன்னும், இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை.
(128) உயரமான ஒவ்வோர் இடத்திலும் பிரமாண்டமான கட்டடத்தை வீணாக கட்டுகிறீர்களா?
(129) இன்னும், பெரிய கோட்டைகளை(யும் நீர் துறைகளையும்) நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள், நீங்கள் நிரந்தரமாக (இந்த உலகத்தில்) இருக்கப்போவதைப் போன்று.
(130) இன்னும், நீங்கள் யாரையும் தாக்கினால் கருணையின்றி அநியாயக்காரர்களாக தாக்குகிறீர்கள்.
(131) ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
(132) இன்னும், நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு உங்களுக்கு உதவிய (உங்கள் இறை)வனை அஞ்சுங்கள்!
(133) கால்நடைகள்; இன்னும், ஆண் பிள்ளைகள் மூலம் உங்களுக்கு அவன் உதவினான்.
(134) இன்னும், தோட்டங்களைக் கொண்டும் ஊற்றுகளைக் கொண்டும் (உதவினான்).
(135) நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய (மறுமை) நாளின் தண்டனையைப் பயப்படுகிறேன்.
(136) அவர்கள் கூறினார்கள்: நீர் உபதேசிப்பதும்; அல்லது, உபதேசிக்காமல் இருப்பதும் எங்களுக்கு சமம்தான்.
(137) (செயல்களில் நாங்கள் செய்கிற) இவை முன்னோரின் குணமாக (பழக்கமாக, வழிமுறையாக)வே தவிர இல்லை.
(138) இன்னும், நாங்கள் (இதற்காக) தண்டிக்கப்படுபவர்களாக இல்லை.
(139) ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களை நாம் அழித்தோம். நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
(140) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன்.
(141) சமூது மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
(142) அவர்களது சகோதரர் ஸாலிஹ், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா? என்று அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்!
(143) நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.
(144) ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
(145) இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை.
(146) இங்கு (இந்த உலகத்தில்) இருப்பவற்றில் (சுகம் அனுபவித்து) நிம்மதியானவர்களாக இருக்கும்படி நீங்கள் விடப்படுவீர்களா?
(147) தோட்டங்களிலும் ஊற்றுகளிலும் (நீங்கள் நிரந்தரமாக தங்கிவிடுவீர்களா)?
(148) இன்னும், விவசாய விளைச்சல்களிலும் (பழுத்த பழங்களால்) குலைகள் மென்மையாக தொங்கும் பேரீச்ச மரங்க(ள் நிறைந்த தோட்டங்க)ளிலும் (நீங்கள் நிரந்தரமாக தங்கிவிடுவீர்களா)?
(149) இன்னும், நீங்கள் மலைகளில் வீடுகளை மதிநுட்ப மிக்கவர்களாக (நுணுக்கத்துடன் எங்கு எப்படி குடைய வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப) குடைந்து கொள்கிறீர்கள்.
(150) ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
(151) இன்னும், எல்லை மீறியவர்களின் கட்டளைக்கு கீழ்ப்படியாதீர்கள்!
(152) அவர்கள் பூமியில் தீமைகளை செய்கிறார்கள். இன்னும், அவர்கள் நல்லது எதையும் செய்வதில்லை.
(153) அவர்கள் கூறினார்கள்: “நீர் எல்லாம் (உண்பது, குடிப்பதால் நோயுறக்கூடிய) மனிதர்களில் ஒருவர்தான்.
(154) (முஹம்மதே!) நீர் எங்களைப் போன்ற மனிதராகவே தவிர இல்லை. ஆகவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால் (எங்களிடம்) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரீர்.
(155) அவர் கூறினார்: “இது ஒரு பெண் ஒட்டகை. இதற்கு நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு (-அளவு) உள்ளது. இன்னும், குறிப்பிட்ட நாளில் உங்களுக்கும் நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது.”
(156) “இன்னும், அதற்கு தீங்கு செய்து விடாதீர்கள்! உங்களை பெரிய (மறுமை) நாளின் தண்டனை பிடித்துக் கொள்ளும்.”
(157) ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் கைசேதப்பட்டவர்களாக ஆகிவிட்டனர்.
(158) ஆக, அவர்களை தண்டனை பிடித்தது. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
(159) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்.
(160) லூத்துடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
(161) அவர்களது சகோதரர் லூத்து (பின் வருமாறு) அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா?
(162) நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.
(163) ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
(164) இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை.
(165) படைப்பினங்களில் (பெண்களை விட்டுவிட்டு) ஆண்களிடம் நீங்கள் உறவு வைக்கிறீர்களா?
(166) இன்னும், உங்களுக்கு உங்கள் இறைவன் படைத்த உங்கள் மனைவிகளை விட்டுவிடுகிறீர்கள்! இது மட்டுமல்ல, நீங்கள் எல்லை மீறி பாவம் செய்கிற மக்கள் ஆவீர்கள்.”
(167) அவர்கள் கூறினார்கள்: “லூத்தே! நீர் (எங்களைக் கண்டிப்பதிலிருந்து) விலகவில்லை என்றால் நிச்சயமாக (எங்கள் ஊரிலிருந்து) வெளியேற்றப்பட்டவர்களில் நீர் ஆகிவிடுவீர்.”
(168) அவர் கூறினார்: “நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுப்பவர்களில் உள்ளவன் ஆவேன்.
(169) என் இறைவா! என்னையும் என் குடும்பத்தாரையும் அவர்கள் செய்(யும் பா)வ(த்)திலிருந்து(ம் அதன் தண்டனையிலிருந்தும்) பாதுகாத்துக்கொள்!”
(170) ஆக, அவரையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.
(171) மிஞ்சியவர்களில் (அவரின் மனைவியான) ஒரு கிழவியைத் தவிர. (அவளும் பின்னர் அழிக்கப்பட்டாள்.)
(172) பிறகு, மற்றவர்களை நாம் (தரை மட்டமாக) அழித்தோம்.
(173) இன்னும், அவர்கள் மீது ஒரு மழையை பொழிவித்தோம். ஆக, எச்சரிக்கப்பட்டவர்களுடைய மழை மிக கெட்டதாகும்.
(174) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
(175) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்.
(176) தோட்டக்காரர்கள் (என்று அறியப்பட்ட மத்யன் வாசிகள்) தூதர்களை பொய்ப்பித்தனர்.
(177) அவர்களது சகோதரர் ஷுஐபு (பின் வருமாறு) அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா?
(178) நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.
(179) ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
(180) இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை.
(181) (நீங்கள் அளந்து கொடுக்கும்) அளவையை முழுமைப்படுத்துங்கள். இன்னும், (மக்களுக்கு) நஷ்டம் ஏற்படுத்துபவர்களில் ஆகிவிடாதீர்கள்.
(182) இன்னும், நேரான (சரியான, நீதமான) தராசினால் நிறுங்கள்!
(183) இன்னும், (அளந்து அல்லது நிறுத்துக் கொடுக்கும்போது) மக்களுக்கு அவர்களுடைய பொருள்களை குறைக்காதீர்கள்! இன்னும், பூமியில் கலகம் (பாவம்) செய்தவர்களாக கடும் குழப்பம் (தீமை) செய்யாதீர்கள்!
(184) இன்னும், உங்களையும் (உங்களுக்கு) முன்சென்ற சமுதாயத்தினரையும் படைத்தவனை அஞ்சுங்கள்!”
(185) அவர்கள் கூறினார்கள்: “நீரெல்லாம் (உண்பது, குடிப்பதால் நோயுறக்கூடிய) மனிதர்களில் ஒருவர்தான்.
(186) இன்னும், எங்களைப் போன்ற மனிதராகவே தவிர நீர் இல்லை. நிச்சயமாக பொய்யர்களில் ஒருவராகவே நாங்கள் உம்மைக் கருதுகிறோம்.
(187) ஆகவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால் வானத்தில் இருந்து (துண்டிக்கப்பட்ட) சில துண்டுகளை எங்கள் மீது விழ வைப்பீராக!”
(188) அவர் கூறினார்: “நீங்கள் (சொல்வதையும் செய்வதையும்) என் இறைவன் மிக அறிந்தவன்.”
(189) ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, (அடர்த்தியான நிழலுடைய) மேக நாளின் தண்டனை அவர்களைப் பிடித்தது. நிச்சயமாக அது ஒரு பெரிய நாளின் தண்டனையாக இருந்தது.
(190) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
(191) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்.
(192) இன்னும், நிச்சயமாக இது அகிலங்களின் இறைவனால் இறக்கப்பட்ட வேதமாகும்.
(193) நம்பிக்கைக்குரியவரான ரூஹ் (என்ற ஜிப்ரீல், அல்லாஹ்விடமிருந்து) இதை இறக்கினார்.
(194) உமது உள்ளத்தில் (இது இறக்கப்பட்டது), நீர் (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பவர்களில் ஆகவேண்டும் என்பதற்காக.
(195) தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டது).
(196) இன்னும், நிச்சயமாக இ(ந்த வேதத்தைப் பற்றிய முன்னறிவிப்பான)து முன்னோர்களுடைய வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
(197) இஸ்ரவேலர்களின் அறிஞர்கள் இதை அறிவதே இவர்களுக்கு ஓர் (போதுமான) அத்தாட்சியாக இல்லையா?
(198) இ(ந்த வேதத்)தை வாயற்ற பிராணிகள் சிலவற்றின் மீது நாம் இறக்கி இருந்தால்,
(199) ஆக, அவை இவர்கள் மீது இதை ஓதி(க் காண்பித்து) இருந்தாலும் இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக ஆகி இருக்க மாட்டார்கள்.
(200) இவ்வாறுதான் குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இ(ந்த வேதத்தை நிராகரிப்ப)தை நுழைத்து விட்டோம்.
(201) அவர்கள் இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், வலி தரும் தண்டனையை அவர்கள் பார்க்கின்ற வரை.
(202) ஆக, அது அவர்களிடம் திடீரென வரும், அவர்களோ (அதை) உணராதவர்களாக இருக்கும் நிலையில்.
(203) ஆக, அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?” (அப்படி அவகாசம் அளிக்கப்பட்டால் நாங்கள் திருந்தி விடுவோமே.)
(204) ஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக கேட்கிறார்களா?
(205) ஆக, (நபியே!) அறிவிப்பீராக! நாம் அவர்களுக்கு (இன்னும்) பல ஆண்டுகள் (வாழ்வதற்கு) சுகமளித்தால்,
(206) பிறகு, அவர்கள் எதைப் பற்றி எச்சரிக்கப்பட்டார்களோ அ(ந்த தண்டனையான)து அவர்களிடம் வந்தால்,
(207) அவர்களுக்கு சுகமளிக்கப்பட்டுக் கொண்டிருந்த (வசதியான உலக வாழ்க்கையான)து அவர்களை விட்டும் (தண்டனையை) தடுக்காது.
(208) நாம் எந்த ஊரையும் அழித்ததில்லை, எச்சரிப்பாளர்கள் அதற்கு (அனுப்பப்பட்டு) இருந்தே தவிர.
(209) இது அறிவுரையாகும். நாம் அநியாயக்காரர்களாக இல்லை.
(210) இ(ந்த வேதத்)தை (நபியின் உள்ளத்தில்) ஷைத்தான்கள் இறக்கவில்லை.
(211) அது அவர்களுக்குத் தகுதியானதும் இல்லை. இன்னும், (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.
(212) நிச்சயமாக அவர்கள் (வானத்தில் குர்ஆன் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து அந்த குர்ஆன் ஓதி காட்டப்படும்போது அதை) செவியுறுவதிலிருந்து தூரமாக்கப்பட்டவர்கள். (ஆகவே, அதன் பக்கம் அவர்கள் நெருங்கவே முடியாது.)
(213) ஆக, அல்லாஹுடன் வேறு ஒரு கடவுளை அழைக்காதீர்! அப்படி அழைத்தால் தண்டிக்கப்படுபவர்களில் நீர் ஆகிவிடுவீர்.
(214) இன்னும், உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!
(215) இன்னும், உம்மை பின்பற்றிய நம்பிக்கையாளர்களுக்கு உமது புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் பணிவுடன் பழகுவீராக!)
(216) ஆக, (-உமது உறவினர்கள்) உமக்கு மாறு செய்தால், “நிச்சயமாக நான் நீங்கள் செய்வதிலிருந்து நீங்கியவன்” என்று கூறுவீராக!
(217) இன்னும் மிகைத்தவன், மகா கருணையாளன் மீது நம்பிக்கை வைப்பீராக!
(218) அவன்தான் (தொழுகைக்கு) நீர் நிற்கின்றபோது உம்மை பார்க்கிறான்.
(219) இன்னும், (உம்மை பின்பற்றி) சிரம் பணி(ந்து தொழு)பவர்களுடன் (ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு) நீர் மாறுவதையும் (அவன் பார்க்கிறான்).
(220) நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன் ஆவான். (ஆகவே, அழகிய முறையில் அதில் குர்ஆனை ஓதுவீராக! ஒவ்வொரு ருக்னுகளையும் முழுமையாக செய்வீராக! நாம் உம்மை பார்க்கிறோம் என்பதை நினைவில் வைப்பீராக!)
(221) (மக்களில்) யார் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்று உங்களுக்கு நான் அறிவிக்கவா?
(222) பெரும் பொய்யர்கள், பெரும் பாவிகள் எல்லோர் மீதும் (ஷைத்தான்கள்) இறங்குகிறார்கள்.
(223) (திருட்டுத்தனமாக) கேட்டதை (அந்த பாவிகளிடம் ஷைத்தான்கள்) கூறுகிறார்கள். இன்னும் (பாவிகளான) அவர்களில் அதிகமானவர்கள் பொய்யர்கள்.
(224) இன்னும் (இணைவைப்பவர்களான, பாவிகளான) கவிஞர்களை (மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள) வழிகேடர்கள்தான் பின்பற்றுவார்கள்.
(225) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (-வீண் பேச்சுகளிலும் பொய் கற்பனைகளிலும் திசையின்றி) அலைகிறார்கள்.
(226) இன்னும், நிச்சயமாக அவர்கள் தாங்கள் செய்யாததை (செய்ததாக) கூறுகிறார்கள்.
(227) (எனினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (அல்லாஹ்வின் எதிரிகளிடம்) பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் பழிப்புக்கு உரியவர்கள் அல்லர்.) (இணைவைத்து) அநியாயம் செய்தவர்கள் தாங்கள் எந்த திரும்பும் இடத்திற்கு திரும்புவார்கள் என்பதை விரைவில் அறிவார்கள்.
(1) தா, சீம், மீம்.