37 - ஸூரா அஸ்ஸாபாத் ()

|

(2) கடுமையாக விரட்டுகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!

(3) வேதத்தை ஓதுபவர்கள் மீது சத்தியமாக!

(4) நிச்சயமாக உங்கள் கடவுள் ஒருவன்தான்.

(5) (அவன்தான்) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் (-அதிபதி) ஆவான். இன்னும் (அவன்) சூரியன் உதிக்கும் இடங்களையும் (அது மறையும் இடங்களையும்) நிர்வகிப்பவன் ஆவான்.

(6) நிச்சயமாக நாம் கீழுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அலங்கரித்துள்ளோம்.

(7) (இறைவனுக்கு) அடங்காத எல்லா ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் (நட்சத்திரங்களால் வானத்தை அலங்கரித்தோம்).

(8) மிக உயர்ந்த கூட்டத்தினரின் (-வானவர்களின்) பேச்சை அவர்களால் செவியுற முடியாது. (வானத்தை விட்டு தடுக்கப்படுவதற்காக) எல்லா பக்கங்களில் இருந்தும் அவர்கள் (-அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால்) எறியப்படுவார்கள்,

(9) (வனத்தை விட்டும்) தடுக்கப்படுவதற்காக (அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால் எறியப்படுவார்கள்). இன்னும், அவர்களுக்கு நிரந்தரமான வேதனை உண்டு.

(10) எனினும், (வானவர்களின் பேச்சை) யார் திருட்டுத்தனமாக திருடுகின்றாரோ (கள்ளத்தனமாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கின்றாரோ) எரிக்கின்ற நெருப்புக் கங்கு அவரை பின்தொடரும்.

(11) அவர்கள் (-மறுமையை மறுப்பவர்கள்) படைப்பால் பலமிக்கவர்களா அல்லது எவர்களை நாம் படைத்தோமோ (அவர்கள் பலமிக்கவர்களா? அதாவது வானம், பூமி, மலைகள், வானவர்கள் போன்ற படைப்புகளா)? என்று அவர் களிடம் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்.

(12) மாறாக, (நபியே!) நீர் (இந்த குர்ஆன் கொடுக்கப்பட்டபோது) ஆச்சரியப்பட்டீர். அவர்கள் (இதை) பரிகாசிக்கின்றனர்.

(13) அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்.

(14) அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) பரிகாசம் செய்கிறார்கள்.

(15) தெளிவான சூனியமே தவிர இது வேறில்லை என்று கூறுகின்றனர்.

(16) நாங்கள் இறந்து, எலும்புகளாகவும், (எங்கள் சதை) மண்ணாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா?

(17) இன்னும், எங்கள் முந்திய முன்னோர்களுமா (எழுப்பப்படுவார்கள்)?

(18) ஆம் (நீங்கள் அனைவரும் எழுப்பப்படுவீர்கள்). இன்னும், நீங்கள் மிகவும் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள் என்று கூறுவீராக!

(19) அதுவெல்லாம் (-மறுமை நிகழ்வதெல்லாம்) ஒரே ஒரு பலமான சப்தம்தான். அப்போது அவர்கள் (மறுமையின் காட்சிகளை கண்கூடாகப்) பார்ப்பார்கள்.

(20) எங்கள் நாசமே! என்று அவர்கள் கூறுவார்கள். (அப்போது அவர்களுக்குக் கூறப்படும் ஆம்!) இதுதான் கூலி கொடுக்கப்படும் நாள்.

(21) இதுதான் தீர்ப்பு நாள் ஆகும். இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.

(22) அநியாயம் செய்தவர்களையும் அவர்களின் இனத்தவர்களையும் (-நிராகரிப்பில் அவர்களைப் பின்பற்றியவர்களையும்) இன்னும் (அல்லாஹ்வை அன்றி) அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்,

(23) அல்லாஹ்வை அன்றி (அவர்கள் வணங்கிய பொய் தெய்வங்களையும் ஒன்று திரட்டி,) நரகத்துடைய பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

(24) அவர்களை நிறுத்துங்கள்! நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

(25) உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் உங்களுக்குள் உதவிக் கொள்ளவில்லை?

(26) மாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.

(27) அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (தங்கள் இறுதி தங்குமிடத்தைப் பற்றி) விசாரித்துக் கொள்வார்கள்.

(28) அவர்கள் (-வழிகெட்டவர்கள் வழிகெடுத்தவர்களை நோக்கி) கூறுவார்கள்: நன்மையை விட்டுத் தடுக்க நீங்கள் எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்.

(29) அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) கூறுவார்கள்: மாறாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.

(30) (உங்களை வழிகெடுக்க) எங்களுக்கு உங்கள் மீது எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் எல்லை மீறுகின்ற மக்களாக இருந்தீர்கள்.

(31) ஆகவே, நம் மீது நமது இறைவனுடைய (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விட்டது. நிச்சயமாக நாம் (தண்டனையை) சுவைப்பவர்கள்தான்.

(32) ஆக, நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நிச்சயமாக நாங்கள் வழி கெட்டவர்களாகவே இருந்தோம்.

(33) நிச்சயமாக அவர்கள் (வழிகெட்டவர்களும் வழிகெடுத்தவர்களும்) அந்நாளில் வேதனையில் (ஒன்றாக) கூட்டாகுவார்கள்.

(34) நிச்சயமாக நாம் இப்படித்தான் குற்றவாளிகளுடன் நடந்து கொள்வோம்.

(35) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமை அடி(த்து புறக்கணி)ப்பவர்களாக இருந்தனர்.

(36) பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை நிச்சயமாக நாங்கள் விட்டுவிடுவோமா? என்று அவர்கள் கூறுகின்றனர்.

(37) மாறாக, அவர் (-அந்தத் தூதர்) சத்தியத்தைக் கொண்டு வந்தார். இன்னும் தூதர்களை உண்மைப்படுத்தினார்.

(38) நிச்சயமாக நீங்கள் வலிதரும் வேதனையை சுவைப்பீர்கள்.

(39) நீங்கள் செய்து வந்ததற்கே அன்றி நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.

(40) அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள்.)

(41) அறியப்பட்ட உணவு அவர்களுக்கு உண்டு.

(42) (அதாவது) பழங்கள் (அவர்களுக்கு உண்டு). இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்,

(43) இன்பமிகு சொர்க்கங்களில். கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக (இருப்பார்கள்).

(44) கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக (இருப்பார்கள்).

(45) மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.

(46) (அவை) வெள்ளைநிறமாக இருக்கும். குடிப்பவர்களுக்கு (அந்த பானம்) மிக இன்பமாக இருக்கும்.

(47) அதில் (அறிவைப் போக்கக்கூடிய) போதையும் இருக்காது (தலைவலி, வயிற்று வலி இருக்காது.) அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்.

(48) அவர்களிடம் பார்வைகளை தாழ்த்திய கண்ணழகிகள் இருப்பார்கள்.

(49) அவர்கள் பாதுகாக்கப்பட்ட (-மறைக்கப்பட்ட தீகோழியின்) முட்டையைப் போன்று (-அதன் நிறத்தில்) இருப்பார்கள்.

(50) அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (நரகவாசிகளைப் பற்றி) விசாரிப்பார்கள்.

(51) நிச்சயமாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான் என்று அவர்களில் கூறக்கூடிய ஒருவர் கூறுவார்.

(52) நிச்சயமாக நீ (தூதர்களை) உண்மைப்படுத்துபவர்களில் இருக்கின்றாயா என்று (உலகில் வாழும் போது என்னிடம்) கூறுவான்.

(53) “நாம் இறந்துவிட்டால் (பின்னர்) எலும்புகளாகவும் மண்ணாகவும் மாறி விட்டால், நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்கு) கூலி கொடுக்கப்படுவோமா?” (என்று அவன் கூறுவான்)

(54) அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: நீங்கள் (நரகத்தில் உள்ளவர்களை) எட்டிப்பார்ப்பீர்களா? (அது முடியுமா?) என்று கூறுவார்.

(55) அவர் (-அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார்.

(56) அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை நாசமாக்குவதற்கு நெருக்கமாக இருந்தாய்.

(57) என் இறைவனின் அருள் இல்லாதிருந்தால் நானும் (நரகத்தில் தண்டனைக்காக) ஆஜர்படுத்தப்படுபவர்களில் ஆகி இருப்பேன்.

(58) (எங்கள் முதல் மரணத்தைத் தவிர) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லை தானே? (-மரணத்திற்குப் பிறகு எங்களுக்கு வாழ்க்கை இல்லை.)

(59) எங்கள் முதல் மரணத்தைத் தவிர (நாங்கள் மரணிப்பவர்களாக இல்லை தானே?) இன்னும் நாங்கள் வேதனை செய்யப்படுபவர்களாக இல்லை.

(60) நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.

(61) அமல் செய்பவர்கள் இது போன்றதற்காக (-இதுபோன்ற நன்மைகளை பெறுவதற்காக) அமல் செய்யட்டும்.

(62) அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா அல்லது ஸக்கூம் என்ற கள்ளி மரமா?

(63) நிச்சயமாக நாம் இணைவைப்பவர்களுக்கு அதை ஒரு சோதனையாக (தண்டனையாக) ஆக்கினோம்.

(64) நிச்சயமாக அது நரகத்தின் அடியில் முளைக்கின்ற ஒரு மரமாகும்.

(65) அதன் கனிகள் ஷைத்தான்களின் (-பாம்புகளின்) தலைகளைப் போல் (மிக விகாரமாக) இருக்கும்.

(66) நிச்சயமாக அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவார்கள். இன்னும் அதிலிருந்து (தங்கள்) வயிறுகளை நிரப்புவார்கள்.

(67) பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு அதற்கு மேல் கொதி நீரில் இருந்து கலக்கப்படும். (அவர்கள் உண்ணுகின்ற கள்ளிமர பழத்துடன் கடுமையான உஷ்ணமுள்ள நீரும் கலந்து கொடுக்கப்படும்.)

(68) (கள்ளிப்பழத்தை உண்டு கொதி நீரைக் குடித்த) பிறகு நிச்சயமாக அவர்களின் மீளுமிடம் நரக நெருப்பின் பக்கம்தான் இருக்கும்.

(69) நிச்சயமாக அவர்கள் (-இந்த இணைவைப்பவர்கள்) தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள்.

(70) அவர்களின் (-மூதாதைகளின்) அடிச்சுவடுகளில் (அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு) இவர்கள் விரைகின்றார்கள்.

(71) இவர்களுக்கு முன்னர் முன்னோரில் அதிகமானவர்கள் திட்டவட்டமாக வழி கெட்டுள்ளனர்.

(72) திட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்களை நாம் அனுப்பினோம்.

(73) ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே) நீர் பார்ப்பீராக!

(74) எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்கள் (இம்மையிலும் மறுமையிலும் இறை தண்டனையில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)

(75) திட்டவட்டமாக நூஹ் நம்மை அழைத்தார். பதில் தருபவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.

(76) மிகப் பெரிய துக்கத்தில் இருந்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாத்தோம்.

(77) அவரது சந்ததிகளைத்தான் (உலகில்) மீதமானவர்களாக நாம் ஆக்கினோம்.

(78) பின்வருபவர்களில் அவரைப் பற்றி நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.

(79) உலகத்தார்களில் (யாரும் அவரை பழித்துப் பேசாதவாறு) நூஹுக்கு ஸலாம் - பாதுகாப்பு உண்டாகட்டும்.

(80) நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.

(81) நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.

(82) பிறகு மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.

(83) நிச்சயமாக அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் உள்ளவர்தான் இப்ராஹீம்.

(84) அவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!

(85) தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் எதை நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!

(86) அல்லாஹ்வை அன்றி பல பொய்யான தெய்வங்களை (உங்கள் தேவைகளுக்கும் வழிபாடுகளுக்கும்) நீங்கள் நாடுகிறீர்களா?

(87) அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? (அவன் ஒருவனை மட்டும் நீங்கள் வணங்க மறுப்பது ஏன்?)

(88) அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்.

(89) அவர் கூறினார் நிச்சயமாக நான் ஒரு நோயாளி ஆவேன்.

(90) ஆகவே, அவர்கள் அவரை விட்டு பிரிந்து திரும்பிச் சென்றனர்.

(91) ஆக, அவர்களின் தெய்வங்கள் பக்கம் அவர் (மறைவாக) சென்று (அந்த தெய்வங்களிடம்) கூறினார்: “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?”

(92) "உங்களுக்கு என்ன ஏற்பட்டது நீங்கள் ஏன் பேசுவதில்லை?”

(93) வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்.

(94) ஆகவே, அவர்கள் விரைந்தவர்களாக அவரை நோக்கி வந்தனர்.

(95) அவர் கூறினார்: நீங்கள் செதுக்குகின்றவற்றை நீங்கள் வணங்குகிறீர்களா?

(96) "அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்வதையும் படைத்தான்."

(97) அவர்கள் கூறினர்: அவருக்கு ஒரு கட்டிடத்தை கட்டுங்கள். (அதில் விறகுகளை போட்டு நெருப்பு எறியுங்கள்!) அந்த நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்!

(98) ஆக, அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். நாம் அவர்களைத்தான் மிகத் தாழ்ந்தவர்களாக ஆக்கினோம்.

(99) அவர் கூறினார்: நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.

(100) என் இறைவா எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா!

(101) ஆகவே, மிக சகிப்பாளரான ஒரு குழந்தையைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.

(102) அது (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்த போது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” அவர் (மகனார்) கூறினார்: என் தந்தையே! உமக்கு ஏவப்படுவதை நீர் செய்வீராக! இன்ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால்) பொறுமையாளர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.

(103) அப்போது, அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார்.

(104) இப்ராஹீமே! என்று நாம் அவரை அழைத்தோம்.

(105) திட்டமாக நீர் கனவை உண்மைப்படுத்தினீர். நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.

(106) நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும்.

(107) மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம்.

(108) பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.

(109) இப்ராஹீமுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும்.

(110) இப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

(111) நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.

(112) நல்லவர்களில் ஒருவராகவும் நபியாகவும் இருக்கப்போகின்ற இஸ்ஹாக்கைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.

(113) அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள் வளம் புரிந்தோம். அவ்விருவரின் சந்ததியில் நல்லவரும் தனக்கு தெளிவாக தீங்கிழைத்தவரும் இருக்கின்றனர்.

(114) திட்டவட்டமாக மூசாவிற்கும் ஹாரூனுக்கும் அருள்புரிந்தோம்.

(115) அவ்விருவரையும் அவ்விருவரின் மக்களையும் பெரிய துக்கத்தில் இருந்து பாதுகாத்தோம்.

(116) அவர்களுக்கு நாம் உதவினோம். ஆகவே, அவர்கள்தான் வெற்றியாளர்களாக ஆனார்கள்.

(117) அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை கொடுத்தோம்.

(118) அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்.

(119) பின்னோரில் அவ்விருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தினோம்.

(120) மூசாவிற்கும் ஹாரூனுக்கும் ஈடேற்றம் உண்டாகட்டும்.

(121) நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.

(122) நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள் ஆவர்.

(123) இன்னும் நிச்சயமாக இல்யாஸ் (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.

(124) அவர் தனது மக்களுக்கு நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சிக்கொள்ள மாட்டீர்களா? என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!

(125) பஅல் சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா? படைப்பாள(ன் என்று அழைக்கப்படுபவ)ர்களில் மிக அழகியவனை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?

(126) உங்கள் இறைவனான, இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனுமான அல்லாஹ்வை (வணங்குவதை விட்டுவிடுகிறீர்களா)?

(127) அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவார்கள்.

(128) எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான (இணைவைக்காத) அடியார்கள் (சொர்க்கத்தில் இருப்பார்கள்).

(129) பின்னோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.

(130) இல்யாசுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும்.

(131) நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இப்படித்தான் கூலி கொடுப்போம்.

(132) நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.

(133) நிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.

(134) அவரையும் அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக!

(135) (தண்டனையில்) தங்கி விடுபவர்களில் ஒரு மூதாட்டியைத் தவிர (மற்றவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர்).

(136) ிறகு மற்றவர்களை நாம் அழித்தோம்.

(137) நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்களை கடந்து செல்கிறீர்கள்.

(138) இன்னும், இரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?

(139) நிச்சயமாக யூனுஸ், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.

(140) அவர் (பொருள்களால்) நிரம்பிய கப்பலை நோக்கி ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக!

(141) அவர் குலுக்கிப் போட்டார். குலுக்கலில் பெயர்வந்தவர்களில் அவர் ஆகிவிட்டார்.

(142) அவரை திமிங்கிலம் விழுங்கியது. அவர் பழிப்புக்குரியவர் (தவறு செய்தவர்) ஆவார்.

(143) நிச்சயமாக அவர் அல்லாஹ்வை துதிப்பவர்களில் (-தொழுபவர்களில்) இருந்திருக்கவில்லை என்றால்,

(144) அதனுடைய வயிற்றில் (மக்கள் மறுமையில்) எழுப்பப்படுகின்ற நாள் வரை தங்கி இருந்திருப்பார்.

(145) (அருகிலிருந்த) பெருவெளியில் அவரை எறிந்தோம். அவர் நோயுற்றவராக இருந்தார்.

(146) அவருக்கு அருகில் ஒரு சுரைக்காய் செடியை முளைக்க வைத்தோம்.

(147) ஒரு இலட்சம் அல்லது அதை விட அதிகமானவர்களுக்கு (தூதராக) அவரை அனுப்பினோம்.

(148) ஆக, அவர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆகவே, நாம் அவர்களுக்கு ஒரு காலம் வரை சுகமளித்தோம்.

(149) ஆகவே, (நபியே! நீர்) அவர்களிடம் (-இந்த மக்காவாசிகளிடம்) கேட்பீராக! உமது இறைவனுக்கு பெண் பிள்ளைகளும், அவர்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?

(150) வானவர்களை பெண்களாகவா நாம் படைத்தோம்? அவர்கள் (நாம் படைக்கும்போது) பார்த்துக் கொண்டு இருந்தார்களா?

(151) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்களது பெரும் பொய்களில் ஒன்றாக (பின்வருமாறு) கூறுகின்றனர்:

(152) “அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்” (என்று) நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் ஆவர்.

(153) ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை அவன் தேர்தெடுத்துக் கொண்டானா?

(154) உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வாறு) எப்படி தீர்ப்பளிக்கிறீர்கள்?

(155) நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?

(156) உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா?

(157) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தை கொண்டு வாருங்கள்.

(158) இன்னும், அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் ஓர் உறவை அவர்கள் ஏற்படுத்தினர். நிச்சயமாக தாங்கள் (நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவோம் என்று திட்டவட்டமாக ஜின்கள் அறிந்து கொண்டனர்.

(159) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.

(160) அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)

(161) நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,

(162) நீங்கள் அ(ந்த சிலை வணக்கத்)தைக் கொண்டு வழி கெடுப்பவர்களாக இல்லை,

(163) நரகத்தில் எரிந்து பொசுங்குகின்றவரைத் தவிர. (அவரைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)

(164) (வானவர்கள் கூறுவார்கள்:) "எங்களில் (யாரும்) இல்லை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருந்தே தவிர.

(165) இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் அணிவகுப்பவர்கள்.

(166) இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் துதித்து தொழுபவர்கள்."

(167) இந்த மக்கா நகர வாசிகள்) நிச்சயமாக (இவ்வாறு) கூறுகின்றவர்களாக இருந்தனர்:

(168) நிச்சயமாக எங்களிடம் முன்னோரிடம் இருந்த வேதம் இருந்திருந்தால்,

(169) நாங்களும் அல்லாஹ்வை மட்டும் வணங்குகின்ற பரிசுத்தமான அடியார்களாக ஆகியிருப்போம்.”

(170) ஆக, (அது வந்த பின்னர் இப்போது) அதை அவர்கள் நிராகரித்து விட்டனர். (தங்கள் முடிவை) அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.

(171) திட்டவட்டமாக நமது வாக்கு நமது இறைத்தூதர்களான அடியார்களுக்கு முந்திவிட்டது.

(172) நிச்சயமாக அவர்கள்தான் உதவி செய்யப்படுவார்கள்.

(173) இன்னும், நிச்சயமாக நமது இராணுவம், அவர்கள்தான் வெற்றி பெறுபவர்கள்.

(174) ஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை நீர் விலகி இருப்பீராக!

(175) இன்னும், நீர் அவர்களைப் பார்ப்பீராக! (அவர்களும் தங்களுக்கு இறங்கப் போகின்ற வேதனையை) விரைவில் பார்ப்பார்கள்.

(176) அவர்கள் நமது வேதனையை அவசரமாக வேண்டுகின்றனரா?

(177) ஆக, அது அவர்களின் முற்றத்தில் (அதிகாலையில்) இறங்கிவிட்டால் எச்சரிக்கப்பட்டவர்களின் (அந்த அதி)காலை மிக கெட்டதாக இருக்கும்.

(178) இன்னும், சிறிது காலம் வரை அவர்களை விட்டு விலகி இருப்பீராக!

(179) இன்னும் (அவர்களைப்) பார்ப்பீராக! அவர்களும் (தங்களுக்கு இறங்கப் போகின்ற வேதனையை) விரைவில் பார்ப்பார்கள்.

(180) கண்ணியத்தின் அதிபதியான உமது இறைவன் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக பரிசுத்தமானவன்.

(181) இறைத் தூதர்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!

(182) அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் உண்டாகுக!

(1) ஸாத், அறிவுரைகள் நிறைந்த அல்குர்ஆன் மீது சத்தியமாக!