2 - ஸூரா அல்பகரா ()

|

(1) அலிஃப் லாம் மீம்.

(2) இந்த வேதம்: இதில் அறவே சந்தேகம் இல்லை, (இது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நேர்வழி காட்டியாகும்.

(3) அவர்கள்: மறைவானதை நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் புரிவார்கள்;

(4) அவர்கள் உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்வார்கள்; மறுமையையும் அவர்கள் உறுதி கொள்வார்கள்.

(5) அவர்கள் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருக்கிறார்கள். அவர்கள்தான் வெற்றியாளர்கள்.

(6) நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் - அவர்களை நீர் எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லையென்றாலும் (அது) அவர்கள் மீது சமம்தான் - நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(7) அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் கேள்விப் புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்களின் பார்வைகள் மீதும் திரையிருக்கிறது. இன்னும் அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு.

(8) அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டோம் எனக் கூறுபவரும் மக்களில் உண்டு. அவர்களோ நம்பிக்கையாளர்களே இல்லை.

(9) (அவர்கள்) அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் வஞ்சிக்கின்றனர்.தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க மாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள்.

(10) அவர்களின் உள்ளங்களில் ஒரு நோய் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் நோயை அதிகப்படுத்தினான். அவர்கள் பொய் கூறுபவர்களாக இருந்த காரணத்தால் துன்புறுத்தக்கூடிய வேதனை அவர்களுக்கு உண்டு.

(11) பூமியில் விஷமம் (தீமை, கலகம்) செய்யாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், "நாங்களெல்லாம் சீர்திருத்தவாதிகள்தான்'' எனக் கூறுகிறார்கள்.

(12) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அவர்கள்தான் விஷமிகள். எனினும் (அவர்கள் அதை) உணர மாட்டார்கள்.

(13) "(நல்ல) மக்கள் நம்பிக்கை கொண்டது போன்று நம்பிக்கை கொள்ளுங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், "அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? எனக் கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள். எனினும், (அதை) அறிய மாட்டார்கள்.

(14) அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால் "நம்பிக்கை கொண்டோம்'' எனக் கூறுகிறார்கள். தங்கள் ஷைத்தான்களின் பக்கம் அவர்கள் தனித்தாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்; நாங்களெல்லாம் (அவர்களை) பரிகசிப்பவர்கள்தான்'' எனக் கூறுகிறார்கள்.

(15) அல்லாஹ் அவர்களை பரிகசிக்கிறான்; அவர்களுடைய அட்டூழியத்தில் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை விட்டு வைக்கிறான்.

(16) அவர்கள் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கியவர்கள். எனவே, அவர்களின் வியாபாரம் இலாபமடையவில்லை. அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.

(17) அவர்களின் உதாரணம் நெருப்பை மூட்டியவர்களின் உதாரணத்தைப் போலாகும். அது அவர்களைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கிய போது அல்லாஹ் அவர்களின் ஒளியைக் கொண்டு சென்றான். இன்னும் அவர்கள் பார்க்கமுடியாத இருள்களில் அவர்களை விட்டுவிட்டான்.

(18) (அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே, அவர்கள் (நேர்வழிக்கு) திரும்ப மாட்டார்கள்

(19) அல்லது வானத்திலிருந்து (பொழியும்) மழையைப் போலாகும். அதில் இருள்களும் இடியும் மின்னலும் இருக்கின்றன. இடி முழக்கங்களால் மரணத்தைப் பயந்து தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் வைக்கிறார்கள். இன்னும், அல்லாஹ் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கிறான்.

(20) மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. அது அவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அதில் அவர்கள் நடக்கிறார்கள். அவர்கள் மீது இருள் சூழ்ந்து கொண்டால் நிற்கிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களின் கேள்விப்புலனையும் அவர்களின் பார்வைகளையும் திட்டமாக கொண்டு சென்று விடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீது பேராற்றலுடையவன்.

(21) மக்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக.

(22) அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். இன்னும், வானத்திலிருந்து (மழை) நீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு கனிகளிலிருந்து உணவை உற்பத்தி செய்தான். ஆகவே, நீங்கள் அறிய, அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

(23) நம் அடிமை மீது நாம் இறக்கியதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ் அல்லாத உங்கள் ஆதரவாளர்களையும் (இதற்காக) அழையுங்கள்.

(24) நீங்கள் (அப்படி) செய்யவில்லையென்றால், - நீங்கள் செய்யவே மாட்டீர்கள் - மக்களும் கற்களும் அதன் எரிபொருளாக இருக்கிற (நரக) நெருப்பை அஞ்சுங்கள். அது நிராகரிப்பாளர்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

(25) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களுக்கு நிச்சயமாக சொர்க்கங்கள் உண்டு என்று நற்செய்தி கூறுவீராக. அவற்றின் கீழிருந்து ஆறுகள் ஓடும். அவற்றிலிருந்து (ஏதேனும்) ஒரு கனியின் உணவு அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம் "இது முன்னர் நமக்கு வழங்கப்பட்டதுதான்'' எனக் கூறுவார்கள். (பார்வைக்கு) ஒரே விதமாகத் தோன்றக்கூடியதாகவே அவர்களிடம் அதைக் கொண்டு வரப்படும். தூய்மையான மனைவிகளும் அவற்றில் அவர்களுக்கு உண்டு. அவர்கள் அவற்றில் நிரந்தரமானவர்கள்.

(26) கொசு இன்னும் (அற்பத்தில்) அதற்கு மேலுள்ளதையும் கூட உதாரணமாக கூறுவதற்கு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஆகவே, நம்பிக்கை யாளர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து (கூறப்பட்ட) உண்மைதான் என அறிவார்கள். ஆகவே, நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் இதன் மூலம் என்ன உதாரணத்தை நாடினான்? எனக் கூறுவார்கள். இதன் மூலம் அதிகமானோரை வழிகெடுக்கிறான். இன்னும் இதன் மூலம் அதிகமானோரை நேர்வழி நடத்துகிறான். பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதன் மூலம் வழிகெடுக்க மாட்டான்.

(27) (அந்தப் பாவிகள்) அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அது உறுதியாகி விட்ட பின்னர் முறிக்கின்றனர். இன்னும், எது சேர்க்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் ஏவினானோ அதை (-உறவுகளை)த் துண்டிக்கின்றனர். பூமியில் விஷமம் செய்கின்றனர். அவர்கள்தான் நஷ்டவாளிகள்!

(28) (நீங்கள்) அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? இறந்தவர்களாக இருந்தீர்களே! உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். பிறகு, அவனிடமே திருப்பப்படுவீர்கள்.

(29) அவன் பூமியிலுள்ளவற்றை உங்களுக்காகப் படைத்தான். பிறகு, வானத்தின் மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். அவன் எல்லாப் பொருளையும் நன்கறிந்தவன்.

(30) "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை படைக்கப்போகிறேன்'' என உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். "அதில் விஷமம் செய்து, இரத்தங்களைச் சிந்தக்கூடியவர்களை அதில் நீ படைக்கிறாயா? நாங்களோ உன் புகழைத் துதிக்கிறோம்; உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறோம்'' என்று கூறினார்கள். "நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்'' எனக் கூறினான்.

(31) (பொருள்களின்) பெயர்கள் எல்லாவற்றையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்கள் முன்வைத்து, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்'' எனக் கூறினான்.

(32) "நீ மகாத் தூயவன். நீ எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர வேறு அறிவு எங்களுக்கு அறவே இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன், மகா ஞானவான்'' எனக் கூறினார்கள்.

(33) "ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக'' எனக் கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் அறிவித்தபோது, "வானங்கள் இன்னும் பூமியின் மறைவானவற்றை நிச்சயமாக நான் அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்திருந்ததையும் அறிவேன்'' என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? எனக் கூறினான்.

(34) ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! ஆகவே, இப்லீஸைத் தவிர (அனைவரும்) சிரம் பணிந்தார்கள். (அவன்) மறுத்தான்; பெருமையடித்தான்; நிராகரிப்பாளர்களில் ஆகிவிட்டான்.

(35) "ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசிப்பீராக! இருவரும் அதில் நாடிய விதத்தில் தாராளமாக சாப்பிடுங்கள். இந்த மரத்தை இருவரும் நெருங்காதீர்கள். (நெருங்கினால்) இருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்'' எனக் கூறினோம்.

(36) ஷைத்தான் அவ்விருவரை அதிலிருந்து பிறழச் செய்தான்; அவ்விருவர் இருந்ததிலிருந்து அவ்விருவரை வெளியேற்றினான். "நீங்கள் இறங்குங்கள் உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். உங்களுக்குப் பூமியில் வசிக்குமிடமும் ஒரு காலம் வரை இன்பமும் உண்டு'' எனக் கூறினோம்.

(37) ஆதம் (சில) வாக்கியங்களைத் தம் இறைவனிடமிருந்து பெற்றார். ஆகவே, அவரை (அவன்) மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை அங்கீகரிப்பவன், பேரன்பாளன்.

(38) நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் அதிலிருந்து இறங்குங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும். எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் மீது அச்சமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

(39) எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ அவர்கள் நரகவாசிகள்! அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.

(40) இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மீது நான் அருள் புரிந்த என் அருளை நினைவு கூருங்கள்; என் வாக்கை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே பயப்படுங்கள்.

(41) உங்களிடமுள்ளதை உண்மைப்படுத்தக்கூடியதாக நான் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள்; அதை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக ஆகிவிடாதீர்கள்; என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள்; என்னையே அஞ்சுங்கள்.

(42) உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; நீங்கள் அறிய, உண்மையை மறைக்காதீர்கள்;

(43) தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள்; பணிபவர்களுடன் (சேர்ந்து) பணியுங்கள்.

(44) நீங்களோ வேதத்தை ஓதுகிறீர்கள். (அவ்வாறிருக்க), உங்களை மறந்து, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? சிந்தித்து புரியமாட்டீர்களா?

(45) நீங்கள் பொறுத்திருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். நிச்சயமாக அது பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர.

(46) (அவர்கள்) தங்கள் இறைவனை நிச்சயமாக தாங்கள் சந்திப்பவர்கள்; அவனிடமே நிச்சயமாக தாங்கள் திரும்புகிறவர்கள் என்று நம்புவார்கள்.

(47) இஸ்ராயீலின் சந்ததிகளே! நான் உங்கள் மீது அருள்புரிந்த என் அருளையும் நிச்சயமாக நான் உலகத்தார்களைவிட உங்களை மேன்மைப்படுத்தியதையும் நினைவு கூருங்கள்.

(48) ஒரு நாளை அஞ்சுங்கள்: (அதில்) ஓர் ஆன்மா (வேறு) ஓர் ஆன்மாவுக்கு ஒன்றையும் பலனளிக்காது; அதனிடமிருந்து பரிந்துரை ஏற்கப்படாது; அதனிடமிருந்து பரிகாரம் (பிணைத் தொகை) வாங்கப்படாது; அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.

(49) ஃபிர்அவ்னுடைய கூட்டத்திடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். உங்களுக்கு தீய வேதனையால் சிரமம் தந்தார்கள். உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்தார்கள். உங்கள் பெண் (பிள்ளை)களை வாழ விட்டார்கள். அதில் உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரிய சோதனை இருந்தது.

(50) உங்களுக்காக நாம் கடலை பிளந்த சமயத்தை நினைவு கூருங்கள். உங்களைக் காப்பாற்றினோம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க, ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை மூழ்கடித்தோம்.

(51) இன்னும் மூசாவிற்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்த சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, ஒரு காளைக்கன்றை அவருக்குப் பின்னர் (தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். நீங்கள் அநியாயக்காரர்கள்.

(52) பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அதன் பின்னர் உங்களை மன்னித்தோம்.

(53) நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூசாவிற்கு வேதத்தையும், பகுத்தறிவிக்கக் கூடிய (சட்டத்)தையும் நாம் கொடுத்த சமயத்தை நினைவு கூருங்கள்.

(54) மூசா தன் சமுதாயத்திற்கு, "என் சமுதாயமே! நீங்கள் காளைக்கன்றை(த்தெய்வமாக) எடுத்துக் கொண்டதினால், நிச்சயமாக நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்கு அநியாயம் செய்தீர்கள். எனவே, (பாவத்தை விட்டு விலகி) உங்களைப் படைத்தவனின் பக்கம் திரும்புங்கள்; உங்கள் உயிர்களைக் கொல்லுங்கள். அது உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். எனவே, (நீங்கள் உங்களைக் கொன்றவுடன்) (அல்லாஹ்) உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை அங்கீகரிப்பவன், பேரன்பாளன்.

(55) மூசாவே "அல்லாஹ்வை நாம் கண்கூடாக காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று நீங்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். எனவே, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க பெரும் சப்தம் உங்களைப் பிடித்தது.

(56) பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்கள் மரணத்திற்குப் பின்னர் உங்களை (உயிர்ப்பித்து) எழுப்பினோம்.

(57) இன்னும் உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். மன்னு, சல்வா (உண)வையும் உங்கள் மீது இறக்கினோம். "நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து புசியுங்கள்.'' அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை; எனினும், (அவர்கள்) தங்களுக்கே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.

(58) "நீங்கள் இந்த ஊரில் நுழையுங்கள்; அதில் நீங்கள் நாடிய விதத்தில் தாராளமாகப் புசியுங்கள்; (அதன்) வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்; (எங்கள்) பாவச்சுமை நீங்குக! எனக் கூறுங்கள்; உங்கள் குற்றங்களை உங்களுக்கு மன்னிப்போம், நல்லறம் புரிவோருக்கு (நன்மையை மேலும்) அதிகப்படுத்துவோம்'' என நாம் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.

(59) அநியாயக்காரர்கள் தங்களுக்குக் கூறப்பட்டது அல்லாத (வேறு) வார்த்தையாக மாற்றி(க் கூறி)னார்கள். எனவே, அவர்கள் பாவம் செய்பவர்களாக இருந்த காரணத்தால் (அந்த) அநியாயக்காரர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.

(60) மூசா தனது சமுதாயத்திற்குத் தண்ணீர் தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். "நீர் உம் தடியால் கல்லை அடிப்பீராக!'' எனக் கூறினோம். அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுகள் பீறிட்டன. மக்கள் எல்லாம் தங்கள் குடிக்குமிடத்தை திட்டமாக அறிந்தார்கள். அல்லாஹ்வின் உணவிலிருந்து புசியுங்கள்; பருகுங்கள். பூமியில் விஷமிகளாக இருந்து வரம்பு மீறி விஷமம் செய்யாதீர்கள்.

(61) "மூசாவே! ஒரே ஓர் உணவை சகிக்கவே மாட்டோம். ஆகவே, உம் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்திப்பீராக. பூமி விளைவிக்கும் அதன் கீரை, அதன் வெள்ளரிக்காய், அதன் கோதுமை, அதன் பருப்பு, அதன் வெங்காயத்தை எங்களுக்காக (அவன்) வெளிப்படுத்துவான்'' என நீங்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். "சிறந்ததற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக் கொள்கிறீர்களா? ஒரு நகரத்தில் இறங்குங்கள். நீங்கள் கேட்டது நிச்சயமாக உங்களுக்கு உண்டு'' எனக் கூறினார். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் சார்ந்து விட்டார்கள். அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிப்பவர்களாகவும், நியாயமின்றி நபிமார்களை கொலை செய்பவர்களாகவும் இருந்த காரணத்தாலாகும். அது, அவர்கள் பாவம் செய்து, வரம்பு மீறுபவர்களாக இருந்த காரணத்தாலாகும்.

(62) நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், கிறித்துவர்கள், ஸாபியிகள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு நன்மை செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

(63) உங்களுக்கு மேல் மலையை உயர்த்தி உங்கள் உறுதி மொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். "நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத்)தை பலமாகப் (பற்றிப்) பிடியுங்கள். அதில் உள்ளதை நினைவு கூருங்கள்.

(64) பிறகு, அதன் பின்னர் (வாக்கிலிருந்து புறக்கணித்து) திரும்பிவிட்டீர்கள். உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனின் கருணையும் இல்லையென்றால் நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகியிருப்பீர்கள்.

(65) சனிக்கிழமைகளில் உங்களில் (நமது கட்டளையை) மீறியவர்களையும் எனவே, "சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்!'' என அவர்களுக்கு நாம் கூறியதையும் திட்டமாக அறிந்து கொண்டீர்கள்.

(66) அதை (-அந்த தண்டனையை-) அதற்கு முந்திய பாவங்களுக்கும் (அதுபோன்ற) அதற்குப் பிந்திய பாவங்களுக்கும் ஓர் எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாகவும் ஆக்கினோம்.

(67) "ஒரு பசுவை நீங்கள் அறுப்பதற்கு நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஏவுகிறான்'' என மூசா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதற்கவர்கள் மூசாவே!) "எங்களை பரிகாசமாக எடுத்துக் கொள்கிறீரா?'' எனக் கூறினார்கள். "அறிவீனர்களில் நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' எனக் கூறினார் (மூசா).

(68) "எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அவன் விவரிப்பான்'' எனக் கூறினார்கள். "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. அதற்கு மத்தியில் நடுத்தரமான ஒரு பசு என நிச்சயமாக அவன் கூறுகிறான். எனவே, நீங்கள் ஏவப்படுவதைச் செய்யுங்கள்'' எனக் கூறினார்.

(69) "எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அதன் நிறம் என்னஎன்று விவரிப்பான்'' எனக் கூறினார்கள். நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசு; அதன் நிறம் தூய்மையானது (கலப்பற்றது); அது பார்ப்பவர்களை மகிழ்விக்கும்'' என நிச்சயமாக அவன் கூறுகிறான் என (மூசா) கூறினார்.

(70) "எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது (வேலைக்கு பயன்படுத்தப்பட்டதா இல்லையா)? என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் எங்களுக்கு குழப்பமாகிவிட்டன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம்'' எனக் கூறினார்கள்.

(71) "நிச்சயமாக அது நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படாத, (விளை) நிலத்திற்கு நீர் இறைக்காத பசு; குறையற்றது; அதில் வடு அறவே இல்லை'' என்று அவன் கூறுகிறான் என (மூசா) கூறினார். "இப்போதுதான் உண்மையைக் கொண்டு வந்தீர்'' எனக் கூறி அதை அறுத்தார்கள். அவர்கள் (அதை விரைவாக) செய்ய நெருங்கவில்லை.

(72) நீங்கள் ஓர் உயிரைக் கொன்று அதில் நீங்கள் தர்க்கித்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் மறைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கக் கூடியவன்.

(73) எனவே, "அதில் சில (பாகத்)தைக்கொண்டு அவரை அடியுங்கள்.'' எனக் கூறினோம். அப்படியே, இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். நீங்கள் சிந்தித்து புரிவதற்காக தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்.

(74) பிறகு, உங்கள் உள்ளங்கள் அதற்குப் பின்னர் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் அல்லது இறுக்கத்தால் (அவற்றைவிட) மிகக் கடினமானவையாக உள்ளன. நிச்சயமாக கற்களில் நதிகள் பீறிடக்கூடியவையும் திட்டமாக உண்டு. நிச்சயமாக பிளந்து அதிலிருந்து நீர் வெளியேறக் கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. நிச்சயமாக அல்லாஹ்வுடைய பயத்தால் (உருண்டு) விழக்கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பற்றி கவனமற்றவனாக இல்லை.

(75) உங்களுக்காக அவர்கள் நம்பிக்கை கொள்வதை ஆசைப்படுகிறீர்களா? திட்டமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுறுகின்றனர். பிறகு, அதை அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர் அவர்கள் அறிந்தே அதை மாற்றுகின்றனர்.

(76) அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால் "(நாங்களும்) நம்பிக்கை கொள்கிறோம்'' எனக் கூறுகிறார்கள். அவர்களில் சிலர் சிலருடன் தனித்து விட்டால், "உங்கள் இறைவன் முன் அதைக் கொண்டு அவர்கள் உங்களிடம் தர்க்கிப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு தெரிவித்ததை அவர்களுக்கு அறிவிக்கிறீர்களா?'' எனக் கூறுகிறார்கள். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

(77) அவர்கள் இரகசியமாகப் பேசுவதையும் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை (அவர்கள்) அறிய மாட்டார்களா?

(78) கல்வி இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வீண் நம்பிக்கைகளைத் தவிர வேதத்தை (அவர்கள்) அறியமாட்டார்கள். அவர்கள் (வீணாகச்) சந்தேகிக்கிறார்களே தவிர (வேறு கல்வி அவர்களுக்கு) இல்லை.

(79) தங்கள் கரங்களால் (கற்பனையாக) புத்தகத்தை எழுதி, பிறகு அதைக் கொண்டு சொற்பக் கிரயத்தை வாங்குவதற்காக "இது அல்லாஹ்விடமிருந்து (வந்த வேதம்)'' என்று கூறுபவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களின் கரங்கள் எழுதியதினாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் சம்பாதிப்பதினாலும் அவர்களுக்குக் கேடுதான்!

(80) "எண்ணப்பட்ட (சில) நாள்களைத் தவிர, நரக நெருப்பு எங்களை அறவே தீண்டாது'' எனக் கூறினர். (அதற்கு நபியே) கூறுவீராக: அல்லாஹ்விடம் (அவ்வாறு ஏதேனும்) ஓர் உறுதிமொழியை (நீங்கள்) எடுத்துக் கொண்டீர்களா? (அப்படியெனில்) அல்லாஹ் தன் உறுதிமொழியை மாற்றவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுகிறீர்களா?

(81) அவ்வாறன்று! எவர்கள் தீமையைச் சம்பாதித்து அவர்களுடைய பாவம் அவர்களைச் சூழ்ந்து கொண்டதோ அவர்கள் நரகவாசிகள் அதில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.

(82) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள் சொர்க்கவாசிகள்! அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.

(83) "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள்; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மக்களிடம் அழகியதைக் கூறுங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஸகாத்தை கொடுங்கள்'' என்று இஸ்ராயீலுடைய சந்ததிகளின் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் இந்த உறுதிமொழியிலிருந்து) திரும்பிவிட்டீர்கள். நீங்களோ புறக்கணிப்பவர்கள்.

(84) நீங்கள் உங்கள் (மக்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள்; உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மக்க)ளை வெளியேற்றாதீர்கள் என்று உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களே சாட்சிகளாக இருக்க (அதை) உறுதிப்படுத்தினீர்கள்.

(85) (இவ்வாறு உறுதிப்படுத்திய) இவர்களே! பிறகு நீங்கள் உங்(கள் மக்)களைக் கொல்கிறீர்கள்; உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் உதவுகிறீர்கள்; கைதிகளாக உங்களிடம் அவர்கள் வந்தால் அவர்களை ஈடுகொடுத்து மீட்கிறீர்கள். அவர்களை (அவர்களின் இல்லங்களிலிருந்து) வெளியேற்றுவதோ உங்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நீங்கள் வேதத்தில் சிலவற்றை நம்பிக்கை கொண்டு, சிலவற்றை நிராகரிக்கிறீர்களா? உங்களில் அதைச் செய்பவர்களின் கூலி இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர (வேறு) இல்லை. மறுமை நாளிலோ, (அவர்கள்) மிகக் கடுமையான வேதனையின் பக்கம் திருப்பப்படுவார்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.

(86) அவர்கள்(தான்) மறுமைக்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை வாங்கியவர்கள். எனவே, அவர்களைவிட்டு வேதனை இலேசாக்கப்படாது. இன்னும், அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

(87) திட்டவட்டமாக மூசாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின்னர் தொடர்ச்சியாக(ப் பல) தூதர்களை அனுப்பினோம். மர்யமுடைய மகன் ஈசாவிற்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவரை (ஜிப்ரயீல் எனும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு பலப்படுத்தினோம்; உங்கள் மனங்கள் விரும்பாததை (நம்) தூதர் எவரும் உங்களுக்குக் கொண்டு வந்த போதெல்லாம் நீங்கள் பெருமையடித்(து மறுத்)தீர்களல்லவா? (அத்தூதர்களில்) ஒரு பிரிவினரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள், ஒரு பிரிவினரைக் கொலை செய்கிறீர்கள்.

(88) "எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன'' என்று (பரிகாசமாகக்) கூறினார்கள். மாறாக, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். எனவே, மிகக் குறைவாகவே (அவர்கள்) நம்பிக்கை கொள்வார்கள்.

(89) அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, - நிராகரித்தவர்களுக்கு எதிராக (இந்த வேதத்தின் பொருட்டால் அல்லாஹ்விடம்) வெற்றியை தேடுபவர்களாக (இதற்கு) முன்னர் இருந்தார்கள் - (ஆனால்) அவர்கள் அறிந்த (இவ்வேதமான)து அவர்களிடம் (இப்போது) வந்தபோது அதை (அவர்கள்) நிராகரித்தார்கள். எனவே, நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக!

(90) அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளில் இருந்து இறக்குவதைப் பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நிராகரித்து அவர்கள் தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது (மிகக்) கெட்டது. (தவ்றாத்தை செயல்படுத்தாததால் அவர்கள் மீதிருந்த அல்லாஹ்வின்) கோபத்திற்கு மேல் (குர்ஆனையும் இந்த நபியையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்தார்கள். நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரக்கூடிய வேதனையுண்டு.

(91) "அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டதை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்'' எனக் கூறுகிறார்கள். அதற்கு அப்பால் உள்ளதை நிராகரிக்கிறார்கள். அதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையா(ன வேதமா)கும். (நபியே) கூறுவீராக: "(உங்கள் வேதத்தை உண்மையாகவே நம்பிய) நம்பிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால் அல்லாஹ்வுடைய தூதர்களை (இதற்கு) முன்னர் எதற்காகக் கொலை செய்தீர்கள்?

(92) திட்டவட்டமாக மூசா தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார். பிறகு, ஒரு காளைக்கன்றை(த் தெய்வமாக) அவருக்குப் பின்னர் எடுத்துக் கொண்டீர்கள். நீங்களோ அநியாயக்காரர்கள்.

(93) உங்களுக்கு மேல் மலையை நாம் உயர்த்தி, "உங்களுக்கு நாம் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள் (பின்பற்றுங்கள்); செவிசாயுங்கள்'' என உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். செவியுற்றோம் (என்று நாவாலும்); மாறுசெய்தோம் என்று (உள்ளத்தாலும் அவர்கள்) கூறினார்கள். அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்றை (வணங்கும் மோகம்) ஊட்டப்பட்டார்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது மிகக் கெட்டது என்று (நபியே!) கூறுவீராக!

(94) "(யூதர்களே) அல்லாஹ்விடம் (சொர்க்கமெனும்) மறுமை வீடு (மற்ற) மக்களுக்கு அன்றி உங்களுக்கு மட்டும் என்றிருந்தால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்'' என (நபியே) கூறுவீராக.

(95) அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவங்களின்) காரணத்தால் அதை அவர்கள் ஒருபோதும் விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.

(96) (நபியே!) மக்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் வாழ்க்கையின் மீது பேராசைக்காரர்களாக அவர்களை நிச்சயமாகக் காண்பீர்! அவர்களில் ஒருவர் "தான் ஆயிரம் ஆண்டு(கள்) வாழ்வு கொடுக்கப்பட வேண்டுமே?'' என்று விரும்புவார். (நீண்ட நாள்) வாழ்வு கொடுக்கப்படுவது வேதனையிலிருந்து அவரைத் தப்பிக்க வைத்துவிடக்கூடியதில்லை. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.

(97) "(உங்களில்) யார் ஜிப்ரீலுக்கு எதிரியாகி விட்டார்? நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அதை அதற்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாகவும், நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் உம் உள்ளத்தின் மீது இறக்கினார்'' எனக் கூறுவீராக!

(98) எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாலுக்கும் எதிரிகளாகி விட்டார்களோ, (அந்த) நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் எதிரி ஆவான்.

(99) (நபியே!) திட்டவட்டமாக தெளிவான வசனங்களை உமக்கு இறக்கினோம். பாவிகளைத் தவிர (மற்றவர்கள்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.

(100) இன்னும் அவர்கள் (தங்கள் நபியிடம்) ஓர் உடன்படிக்கையைச் செய்த போதெல்லாம் அவர்களில் ஒரு பிரிவினர் அதை (நிறைவேற்றாது) எறிய வில்லையா? மாறாக அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(101) அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தை - அவர்கள் அறியாதது போல் - தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தார்கள்.

(102) (யூதர்கள்) சுலைமானுடைய ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள் தான் நிராகரித்தார்கள். (அவர்கள்) மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் (என்ற இரு) வானவர்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்பித்தார்கள். அவ்விரு(வான)வர்கள், "நாங்களெல்லாம் ஒரு சோதனையாவோம். ஆகவே. (இதைக் கற்று) நிராகரிக்காதே!'' என்று கூறும் வரை (அதை) ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. எனவே, ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் எதன் மூலம் பிரிப்பார்களோ அதை அவ்விருவரிடமிருந்து கற்றார்கள். அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைப்பவர்களாக இல்லை. அவர்களுக்குப் பலனளிக்காத, அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியவற்றைத்தான் (அவர்கள்) கற்றார்கள். அதை எவர் விலைக்கு வாங்கினாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை திட்டவட்டமாக (அவர்கள்) அறிந்தார்கள். தங்களையே எதற்கு பகரமாக விற்றார்களோ அது திட்டமாக கெட்டது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

(103) நிச்சயமாக அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (சூனியத்தை விட்டு விலகி) அல்லாஹ்வை அஞ்சினால் அல்லாஹ்விடமிருந்து(அவர்களுக்கு) கிடைக்கும் சன்மானம் திட்டமாக மிகச் சிறந்ததாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

(104) நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) "ராஇனா' என்று கூறாதீர்கள். "உன்ளுர்னா' என்று கூறுங்கள். (நபியின் கூற்றை முழுமையாகச்) செவிமடுங்கள். நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனை உண்டு.

(105) (நம்பிக்கையாளர்களே!) வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் (தங்களிடம் உள்ளதைவிட) சிறந்தது எதுவும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்குத் தன் கருணையைச் சொந்தமாக்குகிறான். அல்லாஹ் பெரும் அருளுடையவன்.

(106) (நபியே!) ஒரு வசனத்தை நாம் மாற்றினாலும் அல்லது அதை மறக்கடித்தாலும் அதைவிடச் சிறந்ததை அல்லது அது போன்றதைக் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்(கள்) மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா?

(107) நிச்சயமாக அல்லாஹ், அவனுக்கே வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி உரியது என்பதை நீர் அறியவில்லையா? அல்லாஹ்வைத் தவிர அறவே உங்களுக்குப் பொறுப்பாளருமில்லை; உதவியாளருமில்லை.

(108) (இதற்கு) முன்னர் மூசா கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க நாடுகிறீர்களா? எவர் நம்பிக்கைக்குப் பகரமாக நிராகரிப்பை மாற்றுவாரோ அவர் திட்டமாக நேர்வழியைத் தவறினார்.

(109) வேதக்காரர்களில் அதிகமானவர்கள் அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவானதற்கு பின்னர் அவர்களுடைய உள்ளங்களில் (உங்கள் மீது) உள்ள பொறாமையினால் உங்கள் நம்பிக்கைக்குப் பின்னர் உங்களை நிராகரிப்பாளர்களாக திருப்பிவிட வேண்டுமே! என்று விரும்பினார்கள். ஆகவே, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டு வரும்வரை (அவர்களை) மன்னியுங்கள்; புறக்கணியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொரு(ட்க)ளின் மீதும் பேராற்றலுடையவன்.

(110) தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள். நன்மையில் எதை உங்களுக்காக முற்படுத்துவீர்களோ அல்லாஹ்விடம் (மறுமையில்) அதைப் பெறுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்.

(111) யூதர்களாக, அல்லது கிறித்துவர்களாக இருக்கிறவர்களைத் தவிர (மற்ற எவரும்) சொர்க்கத்தில் நுழையவே மாட்டார் என (அவர்கள்) கூறினார்கள். அவை அவர்களுடைய வீண் நம்பிக்கைகளாகும்! (நபியே) கூறுவீராக! "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள்.

(112) அவ்வாறன்று! எவர் அவர் நன்மை செய்பவராக தன் முகத்தை (முற்றிலும்) அல்லாஹ்வுக்குப் பணியவைத்தாரோ அவருக்கே அவருடைய கூலி அவருடைய இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

(113) கிறித்துவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை என யூதர்கள் கூறினார்கள். யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை எனக் கிறித்துவர்கள் கூறினார்கள். அவர்களுமோ (ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவர்களுடைய கூற்றைப் போன்றே (வேதத்தை) அறியாத (இணைவைத்து வணங்குப)வர்கள் (யூதர்களும் கிறித்துவர்களும் எம்மார்க்கத்திலும் இல்லை எனக்) கூறினார்கள். இவர்கள் தர்க்கித்துக் கொண்டு இருந்ததில் மறுமை நாளன்று அல்லாஹ் இவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான்.

(114) அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவை பாழாகுவதில் முயற்சித்தவனைவிட மகா அநியாயக்காரன் யார்? பயந்தவர்களாகவே தவிர அவற்றில் நுழைய அவர்களுக்கு அனுமதி இருக்கவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும். அவர்களுக்கு மறுமையில் பெரிய வேதனையுமுண்டு.

(115) கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே, ஆகவே, நீங்கள் எங்கெல்லாம் (முகத்தைத்) திருப்பினாலும் அங்கு அல்லாஹ்வுடைய முகம் இருக்கிறது! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.

(116) "அல்லாஹ் சந்ததியை எடுத்துக் கொண்டான்'' என்று கூறுகின்றனர். - அவனோ மிகப் பரிசுத்தமானவன் - மாறாக, வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனுக்குரியனவே! அவனுக்கு எல்லோரும் பணிந்தவர்கள்.

(117) (அவன்) வானங்கள் இன்னும் பூமியின் புதுமையான படைப்பாளன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்தால், அதற்கு அவன் கூறுவதெல்லாம் ‘ஆகு!' என்றுதான். உடனே அது ஆகிவிடும்.

(118) அறியாதவர்கள், "அல்லாஹ் நம்முடன் பேச வேண்டாமா? அல்லது ஒரு வசனம் நமக்கு வரவேண்டாமா?'' எனக் கூறினார்கள். இப்படியே இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும் இவர்களின் கூற்றைப் போன்றே கூறினார்கள். இவர்களுடைய உள்ளங்கள் (அனைத்தும் ஒன்றுக்கொன்று) ஒப்பாகிவிட்டன. (உண்மையை) உறுதி கொள்ளும் சமுதாயத்திற்கு வசனங்களை திட்டமாகத் தெளிவாக்கினோம்.

(119) (நபியே!) நிச்சயமாக நாம் உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும் உண்மையைக் கொண்டு அனுப்பினோம். நரகவாசிகளைப் பற்றி (நீர்) விசாரிக்கப்பட மாட்டீர்.

(120) (நபியே!) யூதர்கள் இன்னும் கிறித்துவர்கள் அவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மைப் பற்றி திருப்தியடையவே மாட்டார்கள். "அல்லாஹ்உடைய நேர்வழி(யாகிய இஸ்லாம்)தான் நேர்வழி. (அதையே பின்பற்றுவேன்)'' எனக் கூறுவீராக. ஞானத்தில் இருந்து உமக்கு வந்த பின்னர் அவர்களுடைய மன விருப்பங்களை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடம் உமக்கு பொறுப்பாளருமில்லை; உதவியாளருமில்லை.

(121) (நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓதுகிறார்கள். அவர்கள் அதை நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.

(122) இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள்புரிந்த என் அருளையும், நிச்சயமாக உங்களை (அக்கால) உலகத்தாரைவிட நான் மேன்மையாக்கியதையும் நினைவு கூருங்கள்.

(123) இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்; (அந்நாளில்) ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவிற்கு எதையும் பலனளிக்காது; அதனிடமிருந்து பரிகாரம் ஏற்கப்படாது; பரிந்துரை அதற்குப் பலனளிக்காது; அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

(124) இப்ராஹீமை அவருடைய இறைவன் (பல) கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தை நினைவு கூருங்கள். ஆகவே அவற்றை (அவர்) நிறைவு செய்தார். "நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டுகிற) தலைவராக ஆக்குகிறேன்'' எனக் கூறினான். என் சந்ததிகளிலிருந்தும் (ஆக்கு) என (இப்ராஹீம்) கூறினார். "அநியாயக்காரர்களை என் (இந்த) வாக்குறுதி அடையாது'' என (அல்லாஹ்) கூறினான்.

(125) கஅபாவை மனிதர்களுக்கு ஒரு திரும்புமிடமாகவும், பாதுகாப்பாகவும் நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தில் நீங்கள் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். "(அதை) தவாஃப் சுற்றுபவர்களுக்கும், (அல்லாஹ்வை வணங்க அதில்) தங்குபவர்களுக்கும், (தொழுகையில்) குனிபவர்களுக்கும், சிரம்பணிபவர்களுக்கும் என் வீட்டைச் சுத்தப்படுத்துங்கள்'' என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் கட்டளையிட்டோம்.

(126) இப்ராஹீம், "என் இறைவா! (மக்காவாகிய) இதைப் பாதுகாப்பளிக்கக் கூடிய ஒரு பட்டணமாக ஆக்கு! அதனுடையவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவருக்குக் கனிகளிலிருந்து உணவளி!'' எனக் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அல்லாஹ்) கூறினான்: "எவர் நிராகரிப்பாரோ அவரைக் கொஞ்சம் சுகமனுபவிக்க (விட்டு) வைப்பேன். பிறகு நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவரை நிர்ப்பந்திப்பேன். செல்லுமிடத்தால் அது மிகக் கெட்டது.''

(127) இப்ராஹீமும் இஸ்மாயீலும் (அவ்வீட்டின்) அஸ்திவாரங்களை உயர்த்திய சமயத்தை நினைவு கூருங்கள். "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து ஏற்றுக்கொள். நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன்; மிக அறிந்தவன்.

(128) எங்கள் இறைவா! எங்களிருவரையும் உனக்குப் பணிபவர்களாகவும் (முஸ்லிம்களாகவும்), எங்கள் சந்ததியிலிருந்தும் உனக்குப் பணியக்கூடிய (முஸ்லிம்) சமுதாயத்தை ஆக்கு! எங்கள் ஹஜ் கிரியைகளை எங்களுக்குக் காண்பித்துக் கொடு! எங்களை மன்னித்திடு! நிச்சயமாக நீதான் தவ்பாவை அங்கீகரிப்பவன், பேரன்பாளன்.

(129) "எங்கள் இறைவா! (என் சந்ததிகளாகிய) அவர்களில் உன் வசனங்களை அவர்களுக்கு ஓதி, வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்பித்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் ஒரு தூதரை அவர்களிலிருந்து அனுப்பு! நிச்சயமாக நீதான் மிகைத்தவன்; மகா ஞானவான்'' (என்று பிரார்த்தித்தனர்).

(130) மடையனாக ஆனவனைத் தவிர இப்ராஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தை (வேறு) யார் வெறுப்பார்? திட்டவட்டமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; மறுமையில் நிச்சயமாக அவர் நல்லோரில்தான் இருப்பார்.

(131) அவருடைய இறைவன், "(நீ எனக்குப் பணிந்து) முஸ்லிமாகிவிடு'' என அவருக்குக் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அவர்) "அகிலத்தார்களின் இறைவனுக்கு (நான் பணிந்து) முஸ்லிமாகி விட்டேன்'' எனக் கூறினார்.

(132) இப்ராஹீமும், யஅகூபும் அதையே தன் பிள்ளைகளுக்கு உபதேசித்தார்கள்: "என் பிள்ளைகளே! நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக (இஸ்லாம்) மார்க்கத்தை தேர்ந்தெடுத்தான். எனவே, நீங்கள் முஸ்லிம்களாக இருக்கவே தவிர கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்.''

(133) (யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்தபோது (நீங்கள் அங்கு) சாட்சிகளாக இருந்தீர்களா? அவர் தன் பிள்ளைகளை நோக்கி, "எனக்குப் பின்னர் யாரை வணங்குவீர்கள்?'' எனக் கூறியபோது (அவர்கள்) கூறினார்கள்: "நாம் உம் கடவுளை, இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய உம் மூதாதைகளின் கடவுளை - ஒரே ஒரு கடவுளை - வணங்குவோம். நாங்கள் அவனுக்கு -(முற்றிலும் பணிந்தவர்கள்)- முஸ்லிம்கள் ஆவோம்.''

(134) அது சென்றுவிட்ட சமுதாயம். அது செய்தது அதற்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி (நீங்கள்) விசாரிக்கப்படமாட்டீர்கள்.

(135) (முஸ்லிம்களை நோக்கி), "நீங்கள் யூதர்களாக அல்லது கிறித்துவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழி பெறுவீர்கள்'' எனக் கூறினார்கள். (நபியே) கூறுவீராக! "மாறாக, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.''

(136) (நம்பிக்கையாளர்களே!) கூறுங்கள்: "அல்லாஹ்வையும் எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களுடைய) சந்ததிகளுக்கு இறக்கப்பட்டதையும், மூசாவு(க்கு)ம், ஈசாவு(க்கு)ம் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவர் நபியல்ல என்று) பிரிக்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) ஆவோம்.''

(137) (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எதைக் கொண்டு நம்பிக்கை கொண்டீர்களோ அது போன்றே அவர்கள் நம்பிக்கை கொண்டால் திட்டமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் (புறக்கணித்து) திரும்பினால் அவர்களெல்லாம் (வீண்) முரண்பாட்டிலில்தான் இருக்கின்றனர். ஆக, அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.

(138) "அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அல்லாஹ்வைவிட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்கக் கூடியவர்கள்.''

(139) "நீங்கள் அல்லாஹ்வின் விசயத்தில் நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? அவன்(தான்) எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான்! எங்கள் செயல்கள் (அவற்றின் பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (அவற்றின் பலன்) உங்களுக்கே; நாங்கள் அவனுக்கே வழிபாட்டை கலப்பின்றி செய்பவர்கள்'' எனக் கூறுவீராக!

(140) "நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் (ஆகிய இவர்கள்) இன்னும் (இவர்களுடைய) சந்ததிகள் யூதர்களாக அல்லது கிறித்துவர்களாக இருந்தார்கள்'' எனக் கூறுகிறீர்களா? "(இதை) நீங்கள் மிக அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? என்று (நபியே) கூறுவீராக. (இதைப் பற்றி) தன்னிடத்திலிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைத்தவரை விட மகா அநியாயக்காரர் யார்? நீங்கள் செய்வது பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.''

(141) அது சென்றுவிட்ட ஒரு (நல்ல) சமுதாயம். அது செய்தது அதற்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி (நீங்கள்) விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

(142) "அவர்கள் (தொழுது கொண்டு) இருந்த அவர்களின் கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?'' என (முஸ்லிம்களைப் பற்றி) மக்களில் உள்ள அறிவீனர்கள் கூறுவார்கள். (அதற்கு) கூறுவீராக! "கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு நேர்வழி காட்டுகிறான்.''

(143) (நம்பிக்கையாளர்களே!) அவ்வாறுதான், நீங்கள் மக்களுக்கு சாட்சிகளாக இருப்பதற்காகவும், உங்களுக்கு தூதர் சாட்சியாக இருப்பதற்காகவும் நடுநிலைச் சமுதாயமாக உங்களை ஆக்கினோம். தம் குதிங்கால்கள் மீது திரும்பிவிடுவோரிலிருந்து தூதரைப் பின்பற்றுபவர் யார்? என்பதை நாம் அறிவதற்காகவே தவிர நீர் இருந்த (பைத்துல் முகத்தஸ்) கிப்லாவை நாம் ஆக்கவில்லை. அல்லாஹ் நேர்வழி நடத்தியவர்கள் மீதே தவிர (மற்றவர் களுக்கு) நிச்சயமாக அது பெரிதாகவே இருந்தது. உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்கி விடுபவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மிக இரக்கமுடையவன், மகா கருணையாளன்தான்.

(144) (நபியே!) உம் முகம் வானத்தின் பக்கம் திரும்புவதை திட்டமாக காண்கிறோம். ஆகவே, நீர் விரும்புகிற ஒரு கிப்லாவிற்கு உம்மை நிச்சயமாகத் திருப்புவோம். எனவே, நீர் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்' பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. (முஸ்லிம்களே!) நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். நிச்சயமாக வேதம் கொடுக்கப் பட்டவர்கள் "நிச்சயமாக இது தங்கள் இறைவனிடமிருந்து (வந்துள்ள) உண்மைதான்'' என திட்டமாக அறிவார்கள். அவர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.

(145) (நபியே!) வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் எல்லா அத்தாட்சியை (களை)யும் நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலும் சிலர் சிலரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்குக் கல்வி வந்த பின்னர் அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் உள்ளவர்தான்.

(146) நாம் எவர்களுக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை அறிவதைப் போன்று அதை அறிவார்கள். நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர், அவர்கள் அறிந்தே உண்மையை மறைக்கிறார்கள்.

(147) உண்மை உம் இறைவனிடமிருந்து (வந்துவிட்டது); எனவே, நீர் சந்தேகிப்பவர்களில் ஆகிவிட வேண்டாம்.

(148) ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவர் அதைத்தான் முன்னோக்கக் கூடியவர். நன்மைகளில் (நீங்கள் ஒருவரை ஒருவர்) முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.

(149) (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்' பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக! நிச்சயமாக இது (கட்டளை) உம் இறைவனிடமிருந்து (வந்த) உண்மைதான். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.

(150) இன்னும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்' பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் அநியாயக்காரர்களைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நேர்வழி அடைவதற்காகவும் நீங்கள் எங்கிருந்தாலும் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்' பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள்; என்னைப் பயப்படுங்கள்.

(151) ஒரு தூதரை உங்களுக்கு உங்களிலிருந்து நாம் அனுப்பியதற்காக (வும் என்னைப் பயப்படுங்கள்). அவர் உங்கள் மீது நம் வசனங்களை ஓதுகிறார்; உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்; உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார்; நீங்கள் அறிந்திருக்காதவற்றையும் உங்களுக்குக் கற்பிக்கிறார்.

(152) ஆகவே, என்னை நினைவு கூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

(153) நம்பிக்கையாளர்களே! பொறுமை இன்னும் தொழுகையைக் கொண்டு உதவி கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

(154) அல்லாஹ்வுடைய பாதையில் (எதிரிகளால்) கொல்லப்படுபவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிருள்ளவர்கள். எனினும், (நீங்கள்) அறியமாட்டீர்கள்.

(155) பயம், பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்களில் (சிறிது) நஷ்டத்தைக் கொண்டும் நிச்சயமாக உங்களைச் சோதிப்போம். (நபியே!) பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

(156) அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்புகிறவர்கள்'' எனக் கூறுவார்கள்.

(157) அவர்கள் மீதுதான் அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்புகளும் கருணையும் இறங்குகின்றன. இன்னும், அவர்கள்தான் நேர்வழிபெற்றவர்கள்.

(158) நிச்சயமாக ஸஃபா, மர்வா (மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. ஆகவே, கஅபாவை ஹஜ்ஜு அல்லது உம்றா செய்பவர் அவ்விரண்டையும் சுற்றி வருவது அவர் மீது அறவே குற்றமில்லை. எவர் நன்மையை உபரியாகச் செய்தாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன், நன்கறிந்தவன்.

(159) தெளிவான சான்றுகள் இன்னும் நேர்வழியிலிருந்து நாம் இறக்கி, அவற்றை மக்களுக்காக வேதத்தில் நாம் தெளிவுபடுத்திய பின்னர் எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கிறார்கள்.

(160) எவர்கள் மன்னிப்புக்கோரி, சீர்திருத்தி, (தாங்கள் மறைத்ததை) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர. அவர்களை மன்னிப்பேன். நான் மகா மன்னிப்பாளன்; மகா கருணையாளன்.

(161) எவர்கள் நிராகரித்து, அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தார்களோ, அவர்கள் மீதுதான் அல்லாஹ், வானவர்கள், மக்கள் (ஆகிய) அனைவரின் சாப(மு)ம் உண்டாகிறது.

(162) அ(ச்சாபத்)தில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். (மறுமையில்) அவர்களை விட்டு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் (மன்னிப்புக்கோர) அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்.

(163) (மனிதர்களே!) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவனே. பேரருளாளன், பேரன்பாளன் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் (வேறு யாரும்) அறவே இல்லை.

(164) நிச்சயமாக வானங்கள் இன்னும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறுவதிலும் மனிதர்களுக்கு பலன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் (மழை) நீரை இறக்கி, அதன் மூலம் பூமியை அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதிலும், எல்லாக் கால்நடைகளைப் பூமியில் பரப்பியதிலும், காற்றை(ப் பலகோணங்களில்) திருப்பி விடுவதிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்ட மேகத்திலும் சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு திட்டமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

(165) அல்லாஹ்வை அன்றி (பல) இணைகளை எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல, அவற்றை நேசிப்பவர்களும் மக்களில் இருக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக் கடுமையானவர்கள். அநியாயக்காரர்கள் பார்த்தால் அவர்கள் வேதனையைக் காணும்போது அனைத்து பலமும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது, வேதனை செய்வதில் அல்லாஹ் கடினமானவன் (என அறிவார்கள்).

(166) பின்பற்றப்பட்ட (தலை)வர்கள் பின்பற்றியவர்களை விட்டு (மறுமையில்) விலகி, அவர்கள் (அனைவரும்) வேதனையைக் கண்டு, அவர்களுக்கிடையில் (இருந்த) தொடர்புகள் அறுந்துவிடும்போது (பின்பற்றியவர்கள் தங்கள் செயலை நினைத்து துக்கப்படுவார்கள்).

(167) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: (உலகிற்கு ஒருமுறை) திரும்பச் செல்வது நமக்கு முடிந்தால் அவர்கள் எங்களைவிட்டு விலகிக் கொண்டதுபோல் நாங்களும் அவர்களைவிட்டு விலகிக் கொள்வோம். இவ்வாறே, அவர்களின் செயல்களை அவர்களுக்கு மனவேதனைகளாக அல்லாஹ் அவர்களுக்கு காண்பிப்பான். அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறுபவர்களாக இல்லை.

(168) மக்களே! பூமியிலுள்ளவற்றில் நல்ல அனுமதிக்கப்பட்டதையே உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.

(169) அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீமையையும், மானக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான்.

(170) அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப் பட்டால், "மாறாக, எங்கள் மூதாதைகளை எதன் மீது நாங்கள் பெற்றோமோ அதையே பின்பற்றுவோம்'' எனக் கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா?

(171) நிராகரிப்பாளர்களின் உதாரணம் அழைப்பையும் சப்தத்தையும் தவிர (வேறு எதையும்) கேட்காததைக் கூவி அழைப்பவரின் உதாரணத்தைப் போன்றாகும். (அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே, அவர்கள் (சிந்தித்து) புரியமாட்டார்கள்.

(172) நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்து உண்ணுங்கள், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள், அவனையே (நீங்கள்) வணங்குபவர்களாக இருந்தால்.

(173) அவன் உங்களுக்குத் தடுத்ததெல்லாம் (தாமாக) செத்தது. இரத்தம், பன்றியின் மாமிசம், (அறுக்கும் போது) அல்லாஹ் அல்லாதவருக்காகப் பெயர் கூறப்பட்டவற்றைத்தான். ஆகவே, எவர் பாவத்தை நாடாதவராக, வரம்பு மீறாதவராக இருக்கும் நிலையில் (தடுக்கப்பட்டதை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.

(174) நிச்சயமாக எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்து, அதற்குப் பகரமாக சொற்பத் தொகையை வாங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர (எதையும்) அவர்கள் சாப்பிடுவதில்லை. மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான். துன்புறுத்தக்கூடிய வேதனை அவர்களுக்கு உண்டு.

(175) இவர்கள்தான் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கியவர்கள். நரக நெருப்பின் மீது அவர்களைத் துணிவு கொள்ளும்படி செய்தது எது?

(176) அது, நிச்சயமாக அல்லாஹ் உண்மையுடன் வேதத்தை இறக்கியிருக்கும் காரணத்திலாகும். நிச்சயமாக வேதத்தில் முரண்பட்டவர்கள் (வெகு) தூரமான பகைமையில்தான் இருக்கிறார்கள்.

(177) இன்னும் மேற்கு கிழக்கு நோக்கி உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது நன்மை அல்ல. எனினும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்(கள்); இன்னும் செல்வத்தை அதன் விருப்பம் (தனக்கு) இருப்பதுடன் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளுக்கும் கொடுத்தவர்(கள்); தொழுகையை நிலைநிறுத்தியவர்(கள்); ஸகாத்தைக் கொடுத்தவர்(கள்); மேலும் ஒப்பந்தம் செய்தால் தங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றுபவர்கள்; கொடிய வறுமையிலும், நோயிலும், போர் சமயத்திலும் பொறுமையாளர்கள் (ஆகிய இவர்களின் செயல்கள்தான்) நன்மை. அவர்கள்தான் உண்மையாளர்கள். இன்னும் அவர்கள்தான் அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்!

(178) நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக (கொலையாளியான) சுதந்திரமானவனை, (கொல்லப்பட்ட) அடிமைக்குப் பதிலாக (கொலையாளியான) அடிமையை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்குப் பதிலாக (கொலையாளியான) பெண்ணைத்தான் (கொல்ல வேண்டும்). எவருக்கு தன் சகோதரனிடமிருந்து (பரிகாரத் தொகையில்) ஏதேனும் மன்னிக்கப்பட்டால், கண்ணியமான முறையில் (அதைப்) பின்பற்றுதல் வேண்டும். நன்றி அறிதலுடன் (பரிகாரத் தொகையை) அவரிடம் நிறைவேற்றுதல் வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து (வந்த) சலுகையும் அருளுமாகும். எவர் அதற்குப் பின்னர் வரம்பு மீறுவாரோ அவருக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனை உண்டு.

(179) அறிவாளிகளே! நீங்கள் (பழிவாங்கப்படுவதை) பயந்துகொள்ள வேண்டுமே! பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை(யின் பாதுகாப்பு) உண்டு.

(180) உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால்; (மேலும்) அவர் செல்வத்தை விட்டுச் சென்றால் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நல்ல முறையில் (நீங்கள்) மரணசாசனம் கூறுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டது. (இது) அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது அவசியமாகும்.

(181) எவர் அதைக் கேட்டதற்குப் பின்னர், அதை மாற்றுவாரோ அதன் பாவமெல்லாம் மாற்றுகிறவர்கள் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்.

(182) எவர் மரணசாசனம் கூறுபவரிடத்தில் அநீதி அல்லது தவறைப் பயந்து, அவர்களுக்கு மத்தியில் சீர்திருத்தத்தை செய்தாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.

(183) நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது.

(184) எண்ணப்பட்ட (ரமழான் மாத) நாட்களில் (நோன்பிருத்தல் கடமையாகும்). உங்களில் நோயாளியாக அல்லது பிரயாணத்தில் (பயணியாக) இருந்தவர் மற்ற நாட்களில் (விடுபட்ட நாட்களை) கணக்கிடவும். அதற்கு சிரமப்படுபவர்கள் மீது ஓர் ஏழையின் உணவு பரிகாரம் (கொடுத்தல்) கடமையாகும். எவர் நன்மையை உபரியாகச் செய்வாரோ அது அவருக்கு நன்மை. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

(185) ரமழான் மாதம்: அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழியாகவும் நேர்வழி மற்றும் பிரித்தறிவிப்பதின் தெளிவான சான்றுகளாகவும் அல் குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருந்தாரோ (அவர் அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுவான். சிரமத்தை நாடமாட்டான். (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும்; உங்களை நேர்வழி நடத்தியதற்காக அல்லாஹ்வை பெருமைப்படுத்துவதற்காகவும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (நோன்பிருங்கள்)!

(186) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமானவன்; என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் (எனக் கூறுவீராக). ஆகவே, அவர்கள் நேர்வழி அடைவதற்காக அவர்கள் எனக்குப் பதிலளிக்கவும் (கீழ்ப்படியவும்). என்னையே நம்பிக்கை கொள்ளவும்.

(187) நோன்புடைய இரவில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் சேர்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை ஆவர். நீங்கள் அவர்களுக்கு ஆடை ஆவீர்கள். நிச்சயமாக நீங்கள் உங்களை ஏமாற்றுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் பிழை பொறுப்பை ஏற்று உங்களை மன்னித்தான். ஆகவே, இப்போது நீங்கள் அதிகாலையில் கருப்பு நூலிருந்து வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை அவர்களுடன் சேருங்கள்; அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதைத் தேடுங்கள்; உண்ணுங்கள்; பருகுங்கள். பிறகு, இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள். நீங்கள் மஸ்ஜிதுகளில் (இஃதிகாஃப்) தங்கி இருக்கும்போது அவர்களுடன் (மனைவிகளுடன்) சேராதீர்கள். இவை அல்லாஹ்வுடைய (தடை) சட்டங்களாகும். எனவே, அவற்றை நெருங்காதீர்கள். அல்லாஹ் மனிதர்களுக்குத் தன் வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான், அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக.

(188) உங்களுக்கு மத்தியில் உங்கள் செல்வங்களைத் தவறாக உண்ணாதீர்கள் (அனுபவிக்காதீர்கள்). நீங்கள் (பாவம் என்று) அறிந்திருந்தும் மக்களுடைய செல்வங்களில் ஒரு பகுதியைப் பாவமாக நீங்கள் உண்பதற்காக அவற்றை அதிகாரிகளிடம் (லஞ்சமாக) கொடுக்காதீர்கள்.

(189) பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அவை மக்களுக்கும் ஹஜ்ஜுக்கும் காலங்களை அறிவிக்கக்கூடியவை.'' நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் பின்வழிகளில் இருந்து வருவது நன்மை இல்லை. எனினும், நன்மை அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்(களில்)தான் இருக்கிறது. நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களில் இருந்து வாருங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள், நீங்கள் வெற்றியடைவதற்காக.

(190) உங்களிடம் போர் புரிவோரிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் போர் புரியுங்கள். வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

(191) அவர்களை நீங்கள் பார்த்த இடத்தில் அவர்களைக் கொல்லுங்கள். உங்களை அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். இணைவைத்தல் கொலையைவிட மிகக் கடுமையானது. அல்மஸ்ஜிதுல் ஹராமின் அருகில் அவர்களிடம் போர் புரியாதீர்கள், அதில் அவர்கள், உங்களிடம் போர்புரியும் வரை. அவர்கள் உங்களிடம் போரிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இப்படித்தான் நிராகரிப்பவர்களின் கூலி.

(192) அவர்கள் விலகிக் கொண்டால் (விட்டுவிடுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.

(193) இணைவைத்தல் நீங்கி, வழிபாடு அல்லாஹ்விற்கு ஆகும் வரை அவர்களிடம் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் அநியாயக்காரர்கள் மீதே தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறல் இல்லை.

(194) புனித மாதம் புனித மாதத்திற்கு (பதிலாகும்). புனிதங்கள் (பாழ்படுத்தப் பட்டால்) பழிதீர்க்கப்பட வேண்டும். ஆகவே, யார் உங்கள் மீது வரம்பு மீறினாரோ, அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்றே (நீங்களும்) அவர் மீது வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

(195) அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் புரியுங்கள்; உங்கள் கரங்களை அழிவில் போடாதீர்கள்; நல்லறம் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.

(196) நீங்கள் ஹஜ்ஜையும் உம்றாவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் தடுக்கப்பட்டால் பலியில் சாத்தியமானது (பரிகாரமாகும்). பலி தன் இடத்தை அடையும் வரை உங்கள் தலைகளை சிரைக்காதீர்கள். உங்களில் எவர் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது அவருடைய தலையில் அவருக்கு இடையூறு இருக்குமோ ஆகவே, (அவர்) நோன்பு அல்லது தர்மம் அல்லது பலிகளிலிருந்து பரிகாரம் (செய்யவும்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் எவர் உம்றாவைக் கொண்டு ஹஜ்ஜு வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர்) பலியில் சாத்தியமானது (கொடுக்கவும்). எவர் (பலியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்கள் நோன்பும் நீங்கள் திரும்பியபின் ஏழும் (வைக்க வேண்டும்). அவை முழுமையான பத்தாகும். இது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

(197) ஹஜ்ஜு அறியப்பட்ட மாதங்களாகும். ஆகவே, அவற்றில் எவர் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கினாரோ (அவருக்கு) ஹஜ்ஜில் தாம்பத்திய உறவு அறவே (அனுமதி) இல்லை; தீச்சொல் பேசுதல் அறவே இல்லை; தர்க்கம் அறவே இல்லை. நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிவான். கட்டுச் சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாகக் கட்டுச் சாதத்தில் மிகச் சிறந்தது அல்லாஹ்வை அஞ்சுவதுதான். அறிவாளிகளே! நீங்கள் என்னை அஞ்சுங்கள்.

(198) நீங்கள் (ஹஜ்ஜில் வியாபாரம் செய்து) உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடிக்கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அரஃபாவிலிருந்து புறப்பட்டால் ‘அல் மஷ்அருல் ஹராம்' அருகில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். அவன் உங்களை நேர்வழிப்படுத்தியதற்காக அவனை நினைவு கூருங்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் நீங்கள் வழி தவறியவர்களில்தான் இருந்தீர்கள்.

(199) பிறகு மக்கள் புறப்படுகிற இடத்திலிருந்து புறப்படுங்கள்; அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.

(200) நீங்கள் உங்கள் ஹஜ்ஜு கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டுப் பெருமையாக) நினைவு கூர்ந்ததைப் போல அல்லது (அதைவிட) கடுமையாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள். "எங்கள் இறைவா! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையில் தா!'' என்று கூறுபவரும் மக்களில் உண்டு. (ஆனால்,) அவருக்கு மறுமையில் (யாதொரு) பாக்கியமுமில்லை.

(201) "எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் வேதனையி-ருந்தும் எங்களைக் காத்துக்கொள்'' எனக் கூறுபவரும் அவர்களில் உண்டு.

(202) அவர்கள் செய்ததிலிருந்து பங்கு அவர்களுக்கு உண்டு. அல்லாஹ் (கணக்கிடுவதில்) விசாரணையில் விரைவானவன்

(203) எண்ணப்பட்ட நாள்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். எவர் இரண்டு நாள்களில் (புறப்பட) அவசரப்பட்டாரோ அவர் மீது அறவே பாவமில்லை. எவர் தாமதித்தாரோ அவர் மீதும் அறவே பாவமில்லை. (அதாவது) அல்லாஹ்வை அஞ்சியவருக்கு (பாவமில்லை). அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

(204) (நபியே!) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி எவனுடைய பேச்சு உம்மை வியக்க வைக்குமோ அ(த்தகைய)வனும் மக்களில் இருக்கிறான். அவன் தன் உள்ளத்தில் உள்ளவற்றிற்கு அல்லாஹ்வைச் சாட்சியாக்குவான். அவன் வாதிகளில் கடுமையான வாதியாவான்.

(205) அவன் பூமியில் திரும்பிச் சென்றால் அதில் விஷமம் (கலகம்) செய்வதற்கும், விளைநிலம் இன்னும் கால்நடைகளை அழிப்பதற்கும் முயற்சிக்கிறான். விஷமத்தை அல்லாஹ் விரும்பமாட்டான்.

(206) "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்'' என அவனுக்குக் கூறப்பட்டால், பெருமை அவனைப் பாவத்தைக் கொண்டு பிடித்துக் கொள்கிறது. எனவே, அவனுக்கு நரகமே போதும். (அந்தத்) தங்குமிடம் திட்டமாக கெட்டுவிட்டது.

(207) அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி, (தன் செல்வத்தைக் கொடுத்து) தன் உயிரையே விற்பவரும் மக்களில் உண்டு. அல்லாஹ் அடியார்கள் மீது மிக இரக்கமுடையவன் ஆவான்.

(208) நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாமில் முழுமையாக நுழையுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.

(209) தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின்னர் நீங்கள் (இஸ்லாமை விட்டு) சறுகினால்... நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

(210) அல்லாஹ்வும் வானவர்களும் மேகங்களின் நிழல்களில் அவர்களிடம் வருவதையும் காரியம் முடிக்கப்படுவதையும் தவிர (வேறெதையும்) எதிர்பார்க்கிறார்களா? காரியங்கள் அல்லாஹ்வின் பக்கமே திருப்பப்படும்.

(211) எத்தனை தெளிவான அத்தாட்சியை அவர்களுக்குக் கொடுத்தோம் என இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக! எவர் அல்லாஹ்வின் அருட்கொடையை அது தம்மிடம் வந்த பின்னர் மாற்றுவாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரைத்) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.

(212) நிராகரிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்கள் மறுமை நாளில் அவர்களுக்கு மேல் இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான்.

(213) மக்கள் ஒரேஒரு சமுதாயமாக இருந்தனர். அல்லாஹ் நபிமார்களை நற்செய்தியாளர்களாகவும் (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாகவும் அனுப்பினான். மக்கள் மத்தியில் அவர்கள் கருத்து வேறுபட்டவற்றில் (வேதம்) தீர்ப்பளிப்பதற்காக அவர்களுடன் உண்மையான வேதத்தையும் இறக்கினான். தெளிவான சான்றுகள் தங்களுக்கு வந்த பின்னர் தங்களுக்கு மத்தியில் பொறாமையின் காரணமாக, அதை (வேதம்) கொடுக்கப்பட்டவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதில் கருத்து வேறுபடவில்லை. ஆகவே, அவர்கள் உண்மையிலிருந்து எதில் கருத்து வேறுபட்டார்களோ அதற்கு அல்லாஹ் தனது கட்டளையினால் நம்பிக்கையாளர்களை நேர்வழிப்படுத்தினான். அல்லாஹ், தான் நாடியவருக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறான்.

(214) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு (வந்தது) போன்று உங்களுக்கு வராத நிலையில் நீங்கள் சொர்க்கத்தில் நுழையலாமென்று நினைத்துக் கொண்டீர்களா? அவர்களை கொடிய வறுமையும் நோயும் பீடித்தன. "அல்லாஹ்வுடைய உதவி எப்போது...? ''என்று தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் வரை அவர்கள் (எதிரிகளால்) அச்சுறுத்தப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வுடைய உதவி சமீபமானதாகும்.''

(215) அவர்கள் "எதைத் தர்மம் புரியவேண்டும்?'' என்று உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "செல்வத்திலிருந்து நீங்கள் எதைத் தர்மம் செய்தாலும் (அது) பெற்றோர், உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்களுக்கு (செய்யவேண்டும்). நன்மையிலிருந்து நீங்கள் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை மிக அறிபவன் ஆவான்.''

(216) போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டது. அதுவோ உங்களுக்குச் சிரமமானது. நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; அதுவோ உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் ஒன்றை விரும்பலாம்; அதுவோ உங்களுக்கு தீமையாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.

(217) (இந்த) புனித மாதம் அதில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அதில் போர் புரிவது (பாவத்தால்) பெரியதாகும். அல்லாஹ்வுடைய பாதை இன்னும் அல்மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அவனை (அல்லாஹ்வை) நிராகரிப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (பாவத்தால் அதைவிட) மிகப்பெரியதாகும். இணைவைத்தல் (பாவத்தால்) கொலையைவிட மிகப் பெரியதாகும். அவர்கள் சக்தி பெற்றால் உங்களை உங்கள் மார்க்கத்தைவிட்டு அவர்கள் திருப்பிவிடும் வரை உங்களிடம் ஓயாது போர் புரிந்து கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர்கள் தமது மார்க்கத்தை விட்டு மாறி அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இறந்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.

(218) நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாது செய்தவர்கள் அவர்கள் அல்லாஹ்வுடைய கருணையை ஆதரவு வைக்கிறார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.

(219) மது இன்னும் சூதாட்டத்தைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அவ்விரண்டிலும் பெரும் பாவமும், மக்களுக்கு(ச் சில) பலன்களும் உள்ளன. அவ்விரண்டின் பாவம் அவ்விரண்டின் பலனைவிட மிகப் பெரிது.'' இன்னும் அவர்கள் எதைத் தர்மம் செய்யவேண்டுமென உம்மிடம் கேட்கிறார்கள். "மீதமுள்ளதை'' எனக் கூறுவீராக! நீங்கள் இம்மை, மறுமையி(ன் காரியத்தி)ல் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்.

(220) அநாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அவர்களைச் சீர்திருத்துவது மிக நன்றே! நீங்கள் அவர்களைச் சேர்த்துக் கொண்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே! சீர்செய்பவனிலிருந்து சீர்கெடுப்பவனை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் நாடினால் உங்களைச் சிரமப்படுத்தி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான் ஆவான்.

(221) இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப்பெண் இணை வைப்பவர்களைவிடச் சிறந்தவள், அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவர் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. அவர்கள் (இணைவைப்பவர்கள்) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ் தன் கட்டளைக் கொண்டு சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான்; மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் உபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான்.

(222) மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அது ஓர் இடையூறாகும். எனவே, மாதவிடாயில் பெண்களை விட்டு விலகிவிடுங்கள். அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். அவர்கள் முழுமையாகச் சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் வாருங்கள்.'' நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து மீளுபவர்களை நேசிக்கிறான்; பரிசுத்தமானவர்களை நேசிக்கிறான்.

(223) உங்கள் மனைவிகள் உங்களுக்கு விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் நாடியவாறு வாருங்கள். உங்களுக்காக (நன்மை களை) முற்படுத்துங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக்கூடியவர்கள் என்பதையும் அறியுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.

(224) நீங்கள் நன்மை செய்ய மாட்டீர்கள். அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள் மற்றும் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள் என்ற உங்கள் சத்தியங்களுக்கு வலுவாக அல்லாஹ்வை ஆக்காதீர்கள். அல்லாஹ் செவியுறுபவன், மிக அறிபவன்.

(225) உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்கமாட்டான். எனினும், உங்கள் உள்ளங்கள் செய்த(உறுதியான சத்தியத்)திற்காக கொண்டு (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன்.

(226) தங்கள் மனைவிகளிடம் ஈலா* செய்பவர்களுக்கு நான்கு மாதங்கள் எதிர்பார்ப்பது உண்டு. (அதற்குள்) அவர்கள் மீண்டுவிட்டால் (அது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன். *(மனைவியுடன் பேசமாட்டேன் என்று சத்தியம் செய்வது)

(227) அவர்கள் (ஈலாவினால்) விவாகரத்தை உறுதிப்படுத்தினால், (விவாகரத்து ஏற்பட்டுவிடும்.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன், மிக அறிபவன்.

(228) விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்களை எதிர்பார்ப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பைகளில் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதில்லை. அவர்களின் கணவர்கள் இணக்கத்தை விரும்பினால் அதில் (தவணைக்குள்) அவர்களை மீட்டிக்கொள்வதற்கு உரிமையுடையவர்கள். (பெண்களாகிய) அவர்கள் மீது (கடமை) இருப்பது போன்றே அவர்களுக்கு (உரிமையு)ம் உண்டு. ஆண்களுக்கு அவர்கள் மீது ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.

(229) விவாகரத்து இருமுறை ஆகும். (தவணைக்குள்) நல்ல முறையில் தடுத்து (மனைவிகளாக) வைத்தல் அல்லது அழகிய முறையில் விட்டுவிடுதல் (கடமையாகும்). நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து எதையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால்,) அல்லாஹ்வின் சட்டங்களை தாங்கள் நிலைநிறுத்த முடியாது என்று அவ்விருவரும் பயந்தாலே தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்தமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் பயந்தால், அவள் எதன் மூலம் (தன்னை) விடுவித்தாளோ அதில் அவ்விருவர் மீதும் குற்றமே இல்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். எனவே இவற்றை மீறாதீர்கள். எவர்(கள்) அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.

(230) அடுத்து (மூன்றாவதாக) அவளை அவன் விவாகரத்து செய்தால் (அதன்) பிறகு அவள் அவனுக்கு ஆகுமாக மாட்டாள், அவள் அவனல்லாத (வேறு) ஒரு கணவனை மணம் புரியும் வரை. அவனும் அவளை விவாகரத்து செய்தால் அவ்விருவரும் மீளுவது அவ்விருவர் மீதும் குற்றமே இல்லை, அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்துவோம் என்று அவ்விருவரும் எண்ணினால். இவைஅல்லாஹ்வின் சட்டங்களாகும். அறியும் மக்களுக்காக அவற்றை விவரிக்கிறான்.

(231) நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் தவணையை அடைந்தால் நல்ல முறையில் அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். அல்லது நல்ல முறையில் விட்டுவிடுங்கள். நீங்கள் தீங்கிழைத்து (அவர்கள் மீது) அநியாயம் செய்வதற்காக அவர்களைத் தடுக்காதீர்கள். எவர் அதைச் செய்வாரோ திட்டமாக அவர் தனக்கே தீங்கிழைத்தார். அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும் வேதத்திலிருந்தும் ஞானத்திலிருந்தும் உங்கள் மீது அவன் இறக்கியதையும் நினைவுகூருங்கள். அவன் இதன் மூலம் உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள்.

(232) நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் தவணையை (முழுமையாக) அடைந்தால் அவர்கள் தங்கள் கணவர்களை மணப்பதை தடுக்காதீர்கள், அவர்கள் தங்களுக்கு மத்தியில் (ஒருவருக்கொருவர்) திருப்தியடைந்தால். உங்களில் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் இதன் மூலம் உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானது; மிகப் பரிசுத்தமானது. அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.

(233) எவர் (எந்த தந்தை) பாலூட்டுவதை முழுமைப்படுத்த விரும்புகிறாரோ அவருக்காக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையான ஈராண்டுகள் பாலூட்டுவார்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப்பதும் ஆடை கொடுப்பதும் எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை) மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் வசதிக்கு மேல் நிர்பந்திக்கப்படாது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக துன்புறுத்தப்பட மாட்டாள். இன்னும் தந்தையும் தன் குழந்தைக்காக (துன்புறுத்தப்பட மாட்டார்). அது போன்றே வாரிசு தாரர் மீதும் (கடமையாகும்).அவ்விருவரும் தங்கள் பரஸ்பர திருப்தியுடனும் பரஸ்பர ஆலோசனையுடனும் பால்குடியை நிறுத்த நாடினால் அவ்விருவர் மீது(ம்) குற்றமே இல்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு (பிற பெண் மூலம்) பாலூட்டுவதை விரும்பினால் நீங்கள் கொடுப்பதை நல்ல முறையில் ஒப்படைத்தால் (அது) உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் என்பதையும் அறியுங்கள்.

(234) உங்களில் மனைவிகளை விட்டு விட்டு இறப்பவர்கள் அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதங்கள், பத்து (நாள்கள்) தங்களுக்கு (இத்தா) எதிர்பார்ப்பார்கள். அவர்கள் தங்கள் தவணையை அடைந்து விட்டால் நல்ல முறையில் அவர்கள் தங்களுக்கு (எதையும்) செய்வதில் உங்கள் மீது குற்றமே இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.

(235) அப்பெண்களை திருமணம் பேசுவதற்காக நீங்கள் சூசகமாக எடுத்துக் கூறியதில் அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்(து வைத்)ததில் உங்கள் மீது குற்றமே இல்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். நல்ல கூற்றைக் கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில்) அவர்களுக்கு இரகசியமாக வாக்குறுதி அளிக்காதீர்கள். விதிக்கப்பட்ட சட்டம் அதன் தவணையை அடையும் வரை திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை அறியுங்கள். எனவே, அவனைப் பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் என்பதையும் அறியுங்கள்.

(236) பெண்களை நீங்கள் விவாகரத்து செய்தால் - அவர்களை நீங்கள் தொடாமல் இருக்கும்போது அல்லது அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமல் இருக்கும்போது - (அது) உங்கள் மீது குற்றமே இல்லை. அவர்களுக்கு நல்ல முறையில் பொருள் கொடுங்கள். செல்வந்தர் மீது அவருடைய அளவு(க்கு)ம் ஏழை மீது அவருடைய அளவு(க்கு)ம் கடமையாகும். நல்லறம் புரிவோர் மீது (இது) கடமையாகும்.

(237) அவர்களுக்கு மஹ்ரை நீங்கள் நிர்ணயித்து விட்டிருக்க, அவர்களைத் தொடுவதற்கு முன்னதாகவே அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் பாதி (அப்பெண்களுக்கு கொடுக்க வேண்டும்). அவர்கள் (மனைவிகள்) மன்னித்தால் அல்லது எவனுடைய கையில் திருமண ஒப்பந்தம் இருக்கிறதோ அவன் (கணவன்) மன்னித்தால் தவிர. (கணவன் முழு மஹ்ரையும் கொடுக்கலாம் அல்லது மனைவி பாதி மஹ்ரையும் வாங்காமல் விடலாம்.) ஆயினும், நீங்கள் (ஆண்கள்) மன்னிப்பது அல்லாஹ்வை அஞ்சுவதற்கு மிக நெருக்கமானதாகும். உங்களுக்கு மத்தியில் உபகாரம் செய்வதை மறக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன்.

(238) (எல்லாத்) தொழுகைகளையும், (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணுங்கள். (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள்.

(239) நீங்கள் பயந்தால், நடந்தவர்களாக அல்லது வாகனித்தவர்களாக (தொழுங்கள்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் நீங்கள் அறிந்திருக்காதவற்றை அவன் உங்களுக்குக் கற்பித்ததற்காக அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.

(240) உங்களில் எவர்கள் மனைவிகளை விட்டுவிட்டு மரணிக்கிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு ஓராண்டு வரை (அவர்களை) வெளியேற்றாமல் பொருள் வழங்குமாறு (வாரிசுகளுக்கு) மரணசாசனம் கூறவும். அவர்கள் (தாமாகவே) வெளியேறினால், (பிறகு) ஏதேனும் நல்லதைத் தங்களுக்குச் செய்வதில் உங்கள் மீது குற்றமே இல்லை. அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான் ஆவான்.

(241) விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கு நல்ல முறையில் பொருள் உண்டு. அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது (அது) கடமையாகும்.

(242) நீங்கள் அறிந்துகொள்வதற்காக தன் வசனங்களை அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான்.

(243) மரணத்தின் பயத்தால் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ பல ஆயிரங்கள் இருந்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களை நோக்கி, ‘இறந்து விடுங்கள்' எனக் கூறினான். பிறகு அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது அருளுடையவனே. எனினும், மக்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்த மாட்டார்கள்.

(244) அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன். மிக அறிபவன் என்பதையும் அறியுங்கள்.

(245) அழகிய கடனாக அல்லாஹ்விற்குக் கடன் கொடுப்பவர் யார்? (அல்லாஹ்) அவருக்கு அதைப் பலமடங்குகளாக பெருக்குவான். அல்லாஹ் சுருக்கியும் கொடுக்கிறான், விசாலமாகவும் கொடுக்கிறான். அவனிடமே மீட்கப்படுவீர்கள்.

(246) மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீ-ன் சந்ததிகளைச் சேர்ந்த தலைவர்களை நீர் கவனிக்கவில்லையா? "எங்களுக்கு ஓர் அரசரை அனுப்புவீராக! அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிவோம்'' என்று தங்களுக்குரிய நபிக்கு அவர்கள் கூறியபோது. "போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால் நீங்கள் போர் புரியாமல் இருக்கக்கூடுமா?'' என்று கூறினார். "அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரியாதிருக்க எங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நாங்கள் எங்கள் இல்லங்கள் இன்னும் எங்கள் சந்ததிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம்'' என்று கூறினார்கள். போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் போரை விட்டு) விலகினார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.

(247) அவர்களுடைய நபி, "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்'' என்று அவர்களுக்குக் கூறினார்.”எங்கள் மீது ஆட்சி (செலுத்த) அவருக்கு (தகுதி) எப்படி இருக்கும்? அவரைவிட நாங்கள் ஆட்சிக்கு மிகவும் தகுதியுடையவர்கள். அவர் செல்வத்தின் வசதி கொடுக்கப்படவில்லையே'' என்று (அம்மக்கள்) கூறினார்கள். "நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்தான். (போர்க்) கல்வியிலும், உடலிலும் ஆற்றலை அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான். "அல்லாஹ், தான் நாடியவருக்கே தனது ஆட்சியைத் தருவான். அல்லாஹ் விசாலமானவன். மிக அறிபவன்'' என்று (தூதர்) கூறினார்.

(248) "நிச்சயமாக அவருடைய ஆட்சிக்கு அத்தாட்சி பேழை உங்களிடம் வருவதாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து ஆறுதலும் மூசாவின் குடும்பத்தார் மற்றும் ஹாரூனுடைய குடும்பத்தார் விட்டுச் சென்றதிலிருந்து மீதப்பொருட்களும் இருக்கும். அதை வானவர்கள் சுமப்பார்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி திட்டமாக உண்டு'' என்று அவர்களுடைய நபி அவர்களுக்குக் கூறினார்.

(249) தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது, "நிச்சயமாக அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். ஆகவே, எவர் அதிலிருந்து குடித்தாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை. எவர் அதைச் சுவைக்கவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சேர்ந்தவர். தன் கரத்தால் கையளவு நீர் அள்ளியவரைத் தவிர. (அந்தளவு குடிப்பது அவர் மீது குற்றமில்லை.) அவர்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதிலிருந்து குடித்தார்கள். அவரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அதைக் கடந்தபோது, (அதிகம் பருகியவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் (போர்புரிய) இன்று எங்களுக்கு அறவே சக்தியில்லை என்று கூறி (விலகி)னார்கள். நிச்சயமாக தாங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பவர்கள் என அறிந்தவர்கள், "அதிகமான கூட்டத்தை எத்தனையோ குறைவான கூட்டம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு வென்றுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள்.

(250) அவர்கள் ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் வந்தபோது, "எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு'' என்று கூறினார்கள்.

(251) ஆகவே அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அவர்களைத் தோற்கடித்தார்கள். ஜாலூத்தை தாவூது கொன்றார். அவருக்கு அல்லாஹ் ஆட்சியையும் ஞானத்தையும் கொடுத்தான். தான் நாடியதிலிருந்து அவருக்கு அவன் கற்பித்தான். மக்களை அவர்களில் சிலரைக் கொண்டு சிலரைவிட்டுஅல்லாஹ் (தனது தண்டனையை) தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்துவிடும். எனினும், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்கள் மீது அருளுடையவன்.

(252) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். இவற்றை உம் மீது உண்மையுடன் ஓதுகிறோம். நிச்சயமாக நீர் தூதர்களில் உள்ளவர்தான்.

(253) அத்தூதர்கள், அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கினோம். அல்லாஹ் பேசியவரும் அவர்களில் இருக்கிறார். அவர்களில் சிலரைப் பதவிகளால் அவன் உயர்த்தினான். மர்யமுடைய மகன் ஈசாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவருக்கு உதவினோம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் உள்ளவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அவர்கள் (தங்களுக்குள்) வேறுபட்டார்கள். அவர்களில் நம்பிக்கை கொண்டவரும் உண்டு. அவர்களில் நிராகரித்தவரும் உண்டு. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் தான் நாடுவதைச் செய்தே ஆவான்.

(254) நம்பிக்கையாளர்களே! ஒரு நாள் வருவதற்கு முன்னர் உங்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் வியாபாரமும் நட்பும், பரிந்துரையும் இல்லை. நிராகரிப்பவர்கள்தான் அநியாயக்காரர்கள்.

(255) அல்லாஹ், அவனைத் தவிர (வணக்கத்திற்குத் தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் (என்றும்) உயிருள்ளவன்; (தன்னில்) நிலையானவன்; (படைப்புகளை நிர்வகிப்பவன்.) அவனைச் சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் பீடிக்காது; வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குரியனவே; அவனுடைய அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்குப் பின்னுள்ளதையும் அவன் அறிவான்; அவன் நாடியதைத் தவிர அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழமாட்டார்கள்; (அறிய மாட்டார்கள்.) அவனுடைய பாதத்தலம் வானங்களையும் பூமியையும் விட விசாலமாக இருக்கிறது; (அது அவற்றைவிட பெரியது.) அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது; அவன் மிக உயர்வானவன், மிக மகத்தானவன்.

(256) இஸ்லாமில் (இணைவதில்) அறவே நிர்பந்தமில்லை. வழிகேட்டிலிருந்து சத்தியவழி தெளிவாகி விட்டது. எனவே, எவர் ஷைத்தானை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப் பிடித்துக் கொண்டார். அறவே அதற்குத் துண்டிப்பு இல்லை. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்.

(257) அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பொறுப்பாளன். அவர்களை இருள்களிலிருந்து ஒளியை நோக்கி வெளியேற்றுகிறான். நிராகரிப்பவர்கள்,அவர்களின் தோழர்கள் ஷைத்தான்(கள்)தான். அவர்கள் அவர்களை ஒளியிலிருந்து இருள்களை நோக்கி வெளியேற்றுகிறார்கள். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.

(258) (நபியே!) அல்லாஹ், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்தால் இப்றாஹீமிடம் அவருடைய இறைவன் விசயத்தில் தர்க்கித்தவனை நீர் கவனிக்கவில்லையா? "என் இறைவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான்'' என்று இப்றாஹீம் கூறியபோது, அவன் "நான் உயிர்ப்பிப்பேன், மரணிக்கச் செய்வேன்'' என்று கூறினான். இப்றாஹீம் கூறினார்: "நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். எனவே அதை மேற்கிலிருந்து நீ கொண்டு வா.'' ஆகவே நிராகரித்தவன் வாயடைக்கப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.

(259) அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்தவரைப் போன்று. (அவரை நீர் பார்த்தீரா?) "இதை அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?'' என்றார் (அவர்). அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டு(கள்) வரை மரணத்தைக் கொடுத்து பிறகு அவரை உயிர்ப்பித்து, "நீர் எத்தனை (காலம்) தங்கினீர்?'' எனக் கேட்க, "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்'' எனக் கூறினார். "மாறாக! நீ நூறு ஆண்டு(கள்) தங்கினாய். உன் உணவையும், உன் பானத்தையும் பார். அவை கெட்டுப் போகவில்லை. உன் கழுதையைப் பார். (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). (கழுதையின்) எலும்புகளைப் பார்; எவ்வாறு அவற்றை அசைத்து (சிலதிற்கு மேல் சிலதை) உயர்த்துகிறோம்; பிறகு அதற்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்'' என்று கூறினான். அவருக்கு (இது) தெளிவானபோது, "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) அறிகிறேன்'' என்று கூறினார்.

(260) இப்றாஹீம் "என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டு'' எனக் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' எனக் கூறினான். அவ்வாறில்லை. "(நான் நம்பியே இருக்கிறேன்.) எனினும், என் உள்ளம் நிம்மதி பெறுவதற்காக (அதைக் காட்டு)'' எனக் கூறினார். பறவைகளில் நான்கைப் பிடித்து, அவற்றை உம் பக்கம் பழக்குவீராக! பிறகு (அவற்றைப் பல துண்டுகளாக்கி) அவற்றிலிருந்து ஒரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் ஆக்குவீராக! பிறகு அவற்றைக் கூப்பிடுவீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான் என்பதை அறிந்து கொள்வீராக!'' என்று கூறினான்.

(261) அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றதாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதை(கள் வந்தன). அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், மிக அறிந்தவன்.

(262) தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் புரிந்து, பிறகு தாங்கள் புரிந்த தர்மத்தைத் தொடர்ந்து சொல்லிக்காட்டுவதையும் துன்புறுத்துவதையும் செய்யாதவர்கள் அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் துக்கப்படமாட்டார்கள்.

(263) துன்புறுத்துவது தொடர்கிற தர்மத்தைவிட நல்ல சொல்லும் மன்னிப்பும் சிறந்ததாகும். அல்லாஹ் மகா செல்வன், பெரும் சகிப்பாளன்.

(264) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், மக்களுக்கு காட்டுவதற்காகத் தனது செல்வத்தைத் தர்மம் செய்பவனைப் போன்று சொல்லிக் காட்டுவதாலும் துன்புறுத்துவதாலும் உங்கள் தர்மங்களைப் பாழாக்காதீர்கள். அவனின் உதாரணம், அதன் மீது மண் உள்ள வழுக்கைப் பாறையின் உதாரணத்தைப் போன்றாகும். அடை மழை அதை அடைந்தது. அதை(க் கழுவி) வெறும் பாறையாக விட்டுவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தர்மத்தை அவனின் தீயசெயல் அழித்துவிடும்.) அவர்கள் (தர்மம்) செய்ததில் (நற்கூலி) எதையும் (அடைய) ஆற்றல் பெற மாட்டார்கள். நிராகரிக்கும் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.

(265) தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடியும் தங்கள் உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் தர்மம் புரிகிறவர்களின் (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை)யிலுள்ள ஒரு தோட்டத்தின் உதாரணத்தைப் போன்றாகும். அதை அடைமழை அடைந்தது. ஆகவே, அது இரு மடங்குகளாக தன் பலனைத் தந்தது. அதைப் பெருமழை அடையாவிட்டாலும் சிறு தூறல் (அடைவது போதும்). அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்.

(266) உங்களில் ஒருவர் தமக்கு பேரிச்சங்கனிகள் இன்னும் திராட்சைகளின் ஒரு தோட்டம் இருந்து, அதன் கீழ் ஆறுகள் ஓட, அதில் எல்லாப் பழங்களும் அவருக்கு இருக்க, முதுமை அவரை அடைந்து, இயலாத குழந்தைகளும் அவருக்கு இருக்க, நெருப்புள்ள புயல் காற்று அதை அடைந்து அது எரித்து விடுவதை விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக, அல்லாஹ் அத்தாட்சிகளை உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான்.

(267) நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்ததிலும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளியாக்கியதிலும் உள்ள நல்லவற்றிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் கெட்டதை தர்மம் புரிய நாடாதீர்கள். (கெட்டது உங்களுக்கு கொடுக்கப்பட்டால்) கண் மூடியவர்களாகவே தவிர நீங்கள் அதை வாங்குபவர்கள் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா செல்வன், பெரும் புகழாளன் என்பதை அறியுங்கள்.

(268) ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சுறுத்தி, மானக்கேடான (கஞ்சத்தனத்)தை உங்களுக்கு ஏவுகிறான். அல்லாஹ் (உங்கள் தர்மத்திற்கு) தன்னிடமிருந்து மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், மிக அறிந்தவன்.

(269) அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு ஞானத்தை தருகிறான். ஞானம் தரப்படுகிறவர் திட்டமாக அதிக நன்மை தரப்பட்டார். அறிவாளிகளைத் தவிர (பிறர்) உபதேசம் பெறமாட்டார்.

(270) தர்மத்தில் எதை நீங்கள் தர்மம் புரிந்தாலும் அல்லது நேர்ச்சையில் எதை நேர்ந்து கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் ஒருவருமே இல்லை.

(271) தர்மங்களை நீங்கள் வெளிப்படுத்தினால் அவை நன்றே. அவற்றை நீங்கள் மறைத்து, அவற்றை ஏழைகளுக்குத் தருவது அதுவும் உங்களுக்குச் சிறந்ததுதான். உங்கள் பாவங்களில் சிலவற்றை உங்களை விட்டு அது அகற்றி விடும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன்.

(272) (நபியே) அவர்களை நேர்வழி செலுத்துவது உம் மீது (பொறுப்பு) அல்ல. என்றாலும் அல்லாஹ், தான் நாடியவரை நேர்வழி செலுத்துகிறான். செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் (அது) உங்களுக்கே (நன்மை). அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர, (புகழுக்காக) நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். (புகழை நாடாமல்) செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் அது உங்களுக்கு முழு (நன்)மையாக நிறைவேற்றப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

(273) அல்லாஹ்வின் பாதையில் தடுக்கப்பட்ட ஏழைகளுக்கு (தர்மம் கொடுப்பது ஏற்றமானது). அவர்கள் (செல்வத்தைத் தேடி) பூமியில் பயணிக்க இயல மாட்டார்கள். அறியாதவர் (அவர்களின்) ஒழுக்கத்தால் (கையேந்தாமையால்) அவர்களைச் செல்வந்தர்கள் என நினைக்கிறார். (ஆனால்) அவர்களின் அடையாளத்தால் நீர் அவர்களை (தேவையுடையோர் என)ப் புரியலாம். அவர்கள் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்க மாட்டார்கள். நீங்கள் செல்வத்திலிருந்து எதை தர்மம் புரிந்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன் ஆவான்.

(274) தங்கள் செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் புரிபவர்கள், அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.

(275) வட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தாக்கி பைத்தியம் பிடித்தவன் எழுவதுபோன்றே தவிர எழமாட்டார்கள். அது, "வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றுதான்'' என நிச்சயமாக அவர்கள் கூறிய காரணத்தினாலாகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடுத்தான். யார் தம் இறைவனிடமிருந்து உபதேசம் தமக்கு வர, (வட்டியை விட்டு) விலகினால், (வட்டியில்) முன்சென்றது அவருக்குரியது. அவருடைய காரியம் அல்லாஹ்வின் பக்கம் உள்ளது. (அல்லாஹ் அவரை மன்னிப்பான்.) யார் (உபதேசத்திற்கு பின்னாலும் வட்டியின் பக்கம்) திரும்புவார்களோ அவர்கள் நரகவாசிகள்தான் அதில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.

(276) அல்லாஹ் வட்டியை அழிப்பான். தர்மங்களை வளர்ப்பான். பெரும் பாவியான மகா நிராகரிப்பாளரான எல்லோரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

(277) நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தவர்கள், அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.

(278) நம்பிக்கையாளர்களே! (உண்மையில்) நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; வட்டியில் மீதமானதை விடுங்கள்.

(279) (இவ்வாறு) நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து (உங்கள் மீது நிகழப்போகும்) போரை அறியுங்கள். நீங்கள் திருந்தினால், உங்கள் செல்வங்களின் முதல்கள் உங்களுக்கு உண்டு. (நீங்கள்) அநீதி இழைக்க மாட்டீர்கள்; அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

(280) வறியவன் (கடன் வாங்கி) இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசமளித்தல் வேண்டும். (நன்மையை) நீங்கள் அறிந்திருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தர்மம் செய்வது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

(281) ஒரு நாளை அஞ்சுங்கள். அதில் அல்லாஹ்வின் பக்கம் மீட்கப்படுவீர்கள். பிறகு, எல்லா ஆன்மாக்களுக்கும் அவை செய்தவற்றை முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(282) நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (ஒருவர் மற்றவருடன்) கடனுக்கு வியாபாரம் செய்தால் அதை எழுதுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதியாக எழுதவும். எழுதுபவர் அல்லாஹ் அவருக்கு கற்பித்துள்ளதால் எழுத மறுக்க வேண்டாம். ஆகவே, அவர் எழுதவும். கடன் வாங்கியவர் வாசகம் கூறவும்; தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்; அதில் எதையும் குறைக்க வேண்டாம். கடன் வாங்கியவர், அறிவு முதிர்ச்சியற்றவராக அல்லது பலவீனராக அல்லது வாசகம் கூற இயலாதவராக இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதியாக வாசகம் கூறவும். உங்கள் ஆண்களில் இரு சாட்சிகளை சாட்சியாக்கத் தேடுங்கள். இருவரும் ஆண்களாக இல்லையென்றால் ஓர் ஆண், இரு பெண்கள் (இருக்க வேண்டும்). ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி மறந்தால் மற்றவள் அவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சிகளில் நீங்கள் திருப்தியடைபவர்களிலிருந்து (சாட்சிகளை அமையுங்கள்). சாட்சிகள் (சாட்சி கூற) அழைக்கப்படும் போது அவர்கள் மறுக்க வேண்டாம். (கடன்) சிறிதோ பெரிதோ அதன் தவணை வரை அதை எழுத சோம்பல் படாதீர்கள். இது அல்லாஹ்விடம் மிக நீதியானதாகவும், சாட்சியத்திற்கு அதிகம் உறுதியானதாகவும், (கடன் தொகை அல்லது தவணையைப் பற்றி) நீங்கள் சந்தேகிக்காமல் இருக்க மிக நெருக்கமாகவும் இருக்கும். (ஆனால்,) நீங்கள் உங்களுக்கிடையில் அதை ரொக்கமாக நடத்துகிற வியாபாரமாயிருந்தால் தவிர, அதை நீங்கள் எழுதாமலிருப்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வியாபாரம் செய்தால் சாட்சி ஏற்படுத்துங்கள். எழுத்தாளரோ சாட்சியோ துன்புறுத்தப்பட மாட்டார். நீங்கள் (துன்புறுத்தும் செயலைச்) செய்தால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்பிப்பான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.

(283) பயணத்தில் நீங்கள் இருந்து, (கடன் பத்திரம்) எழுதுபவரை பெறா விட்டால் கைப்பற்றப்பட்ட அடமானங்கள் (அதற்கு பகரமாகும்). உங்களில் சிலர் சிலரை நம்பினால், நம்பப்பட்டவர் தம் நம்பிக்கையை நிறைவேற்றவும்! தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்! சாட்சியத்தை மறைக்காதீர்கள்! யார் அதை மறைப்பாரோ நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவியாகிவிடும். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(284) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்)! உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு (கணக்கிட்டுக்) கூலி கொடுப்பான். அவன் நாடுகிறவரை மன்னிப்பான்; அவன் நாடுகிறவரை வேதனை செய்வான். அல்லாஹ் எல்லாப்பொருள் மீதும் பேராற்றலுடையவன்.

(285) தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டார், நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொண்டனர்). எல்லோரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: அவனுடைய தூதர்களில் எவருக்கு மத்தியிலும் பிரிவினை காட்டமாட்டோம்; செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்; எங்கள் இறைவா! உன் மன்னிப்பை(க் கேட்கிறோம்). உன் பக்கமே (எங்கள்) மீளுமிடம் இருக்கிறது.

(286) அல்லாஹ் ஓர் ஆன்மாவை அதன் வசதிக்கு மேல் (சக்திக்கு மேல்) சிரமப்படுத்த மாட்டான். அது செய்த (நல்ல)து அதற்கே. அது செய்த(கெட்ட)து அதன் மீதே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்தால் அல்லது தவறிழைத்தால் எங்களைத் தண்டிக்காதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ அதைச் சுமத்தியது போன்று எங்கள் மீது கடினமான (ஒப்பந்த) சுமையைச் சுமத்தாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு அறவே ஆற்றல் இல்லாததை எங்களைச் சுமக்க வைக்காதே! எங்களை விட்டு (பிழைகளை) அழித்தருள்! எங்களுக்கு (எங்கள் குற்றங்களை) மன்னித்தருள்! எங்களுக்கு கருணைபுரி! நீதான் எங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாளிப்பவன், ஆதரவாளன், அரசன்)! ஆகவே நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு!