(2) (பெரும்) சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
(3) மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
(4) (அல்லாஹ்வின்) கட்டளைகளை (அவனது படைப்புகளில்) பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!
(5) நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மைதான்.
(6) நிச்சயமாக (விசாரணையும்) கூலி கொடுக்கப்படுவது(ம்) நிகழ்ந்தே தீரும்.
(7) அழகிய தோற்றமுடைய (நட்சத்திரங்கள் செல்லும் பாதைகளை உடைய) வானத்தின் மீது சத்தியமாக!
(8) நிச்சயமாக நீங்கள் (இந்த குர்ஆன் விஷயத்தில் ஒருவருக்கொருவர்) மாறுபட்ட பேச்சில் (-மாறுபட்ட கருத்தைக் கூறுவதில்) இருக்கிறீர்கள்.
(9) திருப்பப்படுபவர் இ(ந்த தூதரை விட்டும் இந்த வேதத்)தை விட்டும் திருப்பப்படுகிறார்.
(10) பொய்யை கற்பனை செய்பவர்கள் அழிந்து போகட்டும்.
(11) அவர்கள் (சுகபோக வாழ்க்கையின்) மயக்கத்தில் மறதியாளர்களாக (மறுமையை அலட்சியம் செய்தவர்களாக) இருக்கிறார்கள்.
(12) “கூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும்” என்று அவர்கள் (கேலியாக) கேட்கிறார்கள்.
(13) அவர்கள் நெருப்பின் மீது கிடத்தப்பட்டு தண்டனை செய்யப்படுகின்ற நாளில்,
(14) உங்கள் தண்டனையை சுவையுங்கள்! இது(தான்), நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்ததாகும் (என்று கூறப்படும்).
(15) நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் சொர்க்கங்களில்; இன்னும், (அவற்றில் உள்ள) நீரூற்றுகளில் இருப்பார்கள்.
(16) அவர்களின் இறைவன் அவர்களுக்கு கொடுத்ததை (மகிழ்ச்சியுடன்) பெற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நல்லறம் புரிபவர்களாக இருந்தார்கள்.
(17) அவர்கள் இரவில் (அல்லாஹ்வை வணங்குவதில் அதிக நேரம் கழிப்பார்கள். ஆகவே,) மிகக் குறைவாகவே தூங்குகிறவர்களாக இருந்தார்கள்.
(18) இன்னும், (நீண்ட நேரம் இரவில் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடு(வதில் ஈடுபடு)வார்கள்.
(19) இன்னும், யாசிப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் அவர்களது செல்வங்களில் உரிமை உண்டு.
(20) உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு (அல்லாஹ்வின் வல்லமையை உணர்த்துகின்ற) பல அத்தாட்சிகள் பூமியில் உள்ளன.
(21) இன்னும் (மனிதர்களே!) உங்களுக்குள்ளும் (பல அத்தாட்சிகள் உள்ளன.) ஆக, நீங்கள் (எப்படி படைக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை) உற்று நோக்க மாட்டீர்களா?
(22) இன்னும் உங்கள் உணவும் (-உங்கள் வாழ்வாதாரத்தின் மூலமாகிய மழையும் நன்மை, தீமையில்) எது உங்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோ அதுவும் வானத்தில்தான் (அல்லாஹ்விடம்) இருக்கிறது.
(23) ஆக, வானம், பூமியுடைய அதிபதியின் மீது சத்தியமாக! நீங்கள் (உங்கள் வாய்களால்) பேசுவது (என்பது கண்கூடாக பார்க்கப்படும் உண்மையாக இருப்பது) போன்றே நிச்சயமாக (உங்கள் இறைவன் கூறுகிற) இதுவும் உண்மைதான்.
(24) இப்ராஹீமுடைய கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
(25) அவர்கள் அவரிடம் (வீட்டில்) நுழைந்தபோது, “ஸலாம்” கூறினார்கள். (பதிலுக்கு) அவரும், “ஸலாம்!” (என்று கூறி, சற்று தாமதித்துவிட்டு நீங்கள் என்னிடம்) “அறியப்படாத மக்கள்” என்று கூறினார்.
(26) ஆக, தனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, கொழுத்த காளைக் கன்றை (அறுத்து நெருப்பில் சுட்டு) கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்.
(27) ஆக, அதை அவர்கள் பக்கம் நெருக்கமாக்கி வைத்தார். (அவர்கள் சாப்பிடாமல் இருக்கவே, அவர்களை நோக்கி) நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கூறினார்.
(28) (ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை.) ஆகவே, அவர்களினால் அவர் பயத்தை உணர்ந்தார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்!” இன்னும், கல்வியாளரான ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு அவருக்கு அவர்கள் நற்செய்தி கூறினார்கள்.
(29) ஆக, (இதை செவிமடுத்த) அவருடைய மனைவி சத்தத்தோடு முன்னோக்கி வந்தார். ஆக, தனது முகத்தை அறைந்தார். இன்னும், “(நான் ஒரு) மலடியான கிழவி ஆயிற்றே” என்று கூறினாள்.
(30) “அவ்வாறுதான் உமது இறைவன் கூறினான். நிச்சயமாக அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன்” என்று (நபி இப்ராஹீமின் மனைவிக்கு வானவர்கள் பதில்) கூறினார்கள்.
(31) (இப்ராஹீம்) கூறினார்: “(வானவத்) தூதர்களே! உங்கள் காரியம்தான் என்ன? (நீங்கள் வந்த வேலை என்ன?)”
(32) (வானவர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள், குற்றவாளிகளான மக்கள் பக்கம் (அவர்களை அழிக்க) அனுப்பப்பட்டுள்ளோம்.”
(33) களிமண்ணினால் ஆன கல்லை அவர்கள் மீது எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்).
(34) (எல்லை மீறிய) பாவிகளுக்காக உமது இறைவனிடம் (அந்த கல்) அடையாளமிடப்பட்டதாகும்.
(35) ஆக, அதில் நம்பிக்கையாளர்களாக இருந்தவர்களை நாம் (அந்த ஊரில் இருந்து) வெளியேற்றி விட்டோம்.
(36) ஆக, அதில் (-அந்த ஊரில்) முஸ்லிம்களுடைய ஒரு வீட்டைத் தவிர நாம் (அங்கு) காணவில்லை.
(37) துன்புறுத்தும் தண்டனையைப் பயப்படக் கூடியவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டுவைத்துள்ளோம்.
(38) இன்னும் மூஸாவி(ன் சரித்திரத்தி)லும் - நாம் அவரை ஃபிர்அவ்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு அனுப்பியபோது - பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(39) ஆக, அவன் தனது பலத்தினால் (பெருமை கொண்டவனாக நமது அத்தாட்சிகளை) புறக்கணித்து விலகினான். இன்னும், (மூஸா, இறைவனின் தூதர் அல்ல. அவர்) ஒரு சூனியக்காரர்; அல்லது, ஒரு பைத்தியக்காரர் ஆவார் என்று அவன் கூறினான்.
(40) ஆக, அவனையும் அவனுடைய இராணுவங்களையும் நாம் (கடும் தண்டனையால்) பிடித்தோம். ஆக, அவர்களை கடலில் எறிந்தோம். அவனோ பழிப்புக்குறியவன் ஆவான்.
(41) இன்னும், ஆது சமுதாயத்தி(ன் சரித்திரத்தி)லும் - அவர்கள் மீது நாம் மலட்டுக் காற்றை (-எவ்வித நன்மையுமில்லாத, அழிவை ஏற்படுத்தும் காற்றை) அனுப்பியபோது - பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(42) அ(ந்த காற்றான)து எதன் மீது (கடந்து) செல்கிறதோ அதை பழைய மக்கிப்போன பொருளைப் போன்று ஆக்காமல் விட்டுவிடாது.
(43) இன்னும், ஸமூது சமுதாயத்தி(ன் சரித்திரத்தி)லும் - சிறிது காலம் வரை சுகமாக இருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டபோது - பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(44) ஆக, அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை ஏற்காமல் பெருமை அடித்(து மாறு செய்)தனர். ஆக, அவர்களை இடிமுழக்கம் பிடித்தது. அவர்களோ (அந்த தண்டனையை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
(45) ஆக, (அல்லாஹ்வின் தண்டனைக்கு முன் எதிர்த்து) நிற்பதற்கு அவர்கள் ஆற்றல் பெறவில்லை. அவர்கள் (நம்மிடம்) பழிதீர்ப்பவர்களாகவும் இருக்கவில்லை.
(46) இன்னும், இதற்கு முன்னர் நூஹுடைய மக்களையும் தண்டனை பிடித்தது. நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.
(47) வானத்தை - அதை (நமது மிகப் பெரிய) சக்தியினால் (முகடாக) - நாம் உயர்த்தினோம். இன்னும், நிச்சயமாக நாம் (அவ்வாறு செய்வதற்கு) மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்.
(48) இன்னும், பூமியை, நாம் அதை விரித்தோம். விரிப்பவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.
(49) இன்னும், ஒவ்வொன்றிலும் இரண்டு ஜோடிகளை படைத்தோம், நீங்கள் (அல்லாஹ்வின் படைப்புகளை சிந்தித்து) நல்லுணர்வு பெறுவதற்காக.
(50) ஆக, நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் விரண்டு ஓடுங்கள்! நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.
(51) இன்னும், அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு (அனுப்பப்பட்ட) தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.
(52) இவ்வாறுதான், இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வரவில்லை, அவர்கள் (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர்; அல்லது, ஒரு பைத்தியக்காரர் என்று கூறியே தவிர.
(53) (முற்கால நிராகரிப்பாளர்கள், இக்கால நிராகரிப்பாளர்கள்) இவர்கள் (எல்லோரும்) தங்களுக்குள் இ(றைத்தூதர்களை பொய்ப்பிக்க வேண்டும் என்ற விஷயத்)தை உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று.) மாறாக, இவர்கள் எல்லை மீறிய மக்கள் ஆவார்கள்.
(54) ஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! ஆக, நீர் பழிக்கப்பட்டவர் இல்லை.
(55) இன்னும், (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்.
(56) ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை.
(57) நான் அவர்களிடம் (அவர்கள் எனது படைப்புகளுக்கு) வாழ்வாதாரம் எதையும் (கொடுக்க வேண்டுமென்று) நாடவில்லை. இன்னும், அவர்கள் என(து படைப்புகளு)க்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
(58) நிச்சயமாக அல்லாஹ்தான் உணவளிப்பவன் (-எல்லோருக்கும் வாழ்வாதாரத்தையும் எல்லா தேவைகளையும் வழங்குபவன்), வலிமை உடையவன், மிக உறுதியானவன்.
(59) ஆக, நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனையில்) பெரிய பங்குண்டு, அவர்களின் கூட்டாளிகளுடைய பெரிய பங்கைப் போன்று. ஆகவே, அவர்கள் (தண்டனையை) அவசரமாகத் தேடவேண்டாம்.
(60) ஆக, நிராகரித்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனை எந்த நாளில் இறங்கும் என்று) – அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்களோ – அந்த அவர்களுடைய நாளில் கேடுதான்.
(1) வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!