(1) 10.1. (الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கப்படும் வசனங்கள் ஞானத்தையும் சட்டதிட்டங்களையும் உள்ளடக்கிய உறுதியான குர்ஆனின் வசனங்களாகும்.
(2) 10.2. அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து மனிதர்களை எச்சரிக்கை செய்யுமாறு கூறி நாம் அவர்களிலிருந்தே ஒரு மனிதர் மீது வஹி இறக்கியது மனிதர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதா? -தூதரே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்கள் செய்த நற்செயல்களின் காரணமாக இறைவனிடத்தில் உயர்ந்த அந்தஸ்து உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக. நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “இந்த சான்றுகளைக் கொண்டு வந்துள்ள இந்த மனிதர் வெளிப்படையான சூனியக்காரரே.”
(3) 10.3. -ஆச்சரியப்படக்கூடியவர்களே!- அல்லாஹ்வே உங்கள் இறைவன். அவன் பிரமாண்டமான வானங்களையும் பரந்து விரிந்த பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். உங்கள் இனத்திலிருந்தே ஒரு மனிதரை தூதராக அவன் அனுப்பியதையிட்டு எவ்வாறு ஆச்சரியப்படலாம்? பரந்து விரிந்த தன் ஆட்சியில் அவனே விதிகளை நிர்ணயம் செய்கிறான், நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றியும் பரிந்துரை செய்பவரைப் அவன் பொருந்திக் கொள்ளாமலும் யாரும் அவனிடம் பரிந்துரை செய்ய முடியாது. இந்த பண்புகளை உடையவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ் ஆவான். எனவே வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே உரித்தாக்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கும் இந்த ஆதாரங்களையும் சான்றுகளையும் கண்ட பின்னரும் நீங்கள் அறிவுரைபெற மாட்டீர்களா? ஏனெனில் சிறிதளவு புரிதல் உள்ளவர் கூட இந்த உண்மையை அறிந்து கொள்வார், அதன் மீது நம்பிக்கை கொள்வார்.
(4) 10.4. அவன் உங்களின் செயல்களுக்குக் கூலி வழங்கும் பொருட்டு மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அல்லாஹ் மனிதர்களுக்கு உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். அதனை அவன் மீறுவதில்லை. நிச்சயமாக அவன் இதற்கு ஆற்றலுடையவன். அவன் படைப்பினங்களை எவ்வித முன்மாதிரியுமின்றி முதன் முதலில் உருவாக்குகிறான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அவர்களின் நன்மைகளைக் குறைக்காமலும் தீமைகளை அதிகரிக்காமலும் நியாயமாக கூலி வழங்குவதற்காக படைப்பினங்கள் மரணித்த பின்னரும் திரும்பவும் அவற்றை உருவாக்குவான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களுக்கு கொதிக்கும் நீர் குடிப்பதற்காகக் கொடுக்கப்படும். அதன் சூட்டினால் அவர்களின் குடல்கள் துண்டுதுண்டாகிவிடும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்ததனால் அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு.
(5) 10.5. அவனே சூரியனை ஒளி வீசக்கூடியதாகவும் சந்திரனை பிரகாசமளிக்கக் கூடியதாகவும் ஆக்கினான். அதன் ஓட்டத்தை இருபத்து எட்டு நிலைகளாக நிர்ணயித்துள்ளான். ஒரு நிலை என்பது ஒரு நாளில் அது கடக்கும் தொலைவாகும். -மனிதர்களே- சூரியனைக் கொண்டு நீங்கள் நாட்களின் எண்ணிக்கையையும் சந்திரனைக் கொண்டு மாதங்கள் மற்றும் வருடங்களின் எண்ணிக்கையையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவற்றை இவ்வாறு அமைத்துள்ளான். வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் அவன் ஒரு நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். இதன் மூலம் தன்னுடைய வல்லமையை, ஆற்றலை அவன் மக்களுக்கு வெளிப்படுத்துகிறான். தான் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் அறிந்து கொள்ளும் மக்களுக்காக அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
(6) 10.6. நிச்சயமாக இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அதனோடு வரக்கூடிய இருளிலும், ஒளியிலும் ஒன்று குறுகியதாகவும் மற்றொன்று நீளமாகவும் இருப்பதிலும், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள படைப்பினங்களிலும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சும் மக்களுக்கு அவனுடைய வல்லமையை, ஆற்றலை அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.
(7) 10.7. அல்லாஹ்வை அஞ்சவோ ஆசை வைக்கவோ அவனது சந்திப்பை எதிர்பார்க்காத, நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்குப் பகரமாக அழியக் கூடிய இவ்வுலக இன்பங்களை விரும்பி அவற்றின் மூலம் மகிழ்வடைந்து உள்ளங்கள் அதன்பக்கம் சாய்ந்துவிட்ட நிராகரிப்பாளர்களும், அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் சான்றுகளையும் புறக்கணித்தவர்களும்
(8) 10.8. மறுமையை பொய்பித்து, மறுத்ததன் காரணமாக இப்பண்புகளை உடையவர்களின் தங்குமிடம் நரகமாகும்.
(9) 10.9. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களுக்கு அவர்களின் நம்பிக்கையினால் தன் திருப்தியைப் பெற்றுத்தரக்கூடிய செயல்களின்பால் வழிகாட்டுவான். பின்னர் மறுமை நாளில் நிரந்தரமான இன்பங்களுடைய சுவனங்களில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்.
(10) 10.10. சுவனத்தில் அவர்களின் பிரார்த்தனை, அல்லாஹ்வைத் துதிப்பதும் புனிதப்படுத்துவதுமேயாகும். அல்லாஹ், வானவர்கள் ஆகியோரின் முகமனும் அவர்கள் தமக்கு மத்தியில் பரிமாறிக் கொள்ளும் முகமனும் சலாம் (சாந்தி) என்பதாகும். படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்பதே அவர்களின் பிரார்த்தனையின் முடிவாக இருக்கும்.
(11) 10.11. மனிதர்கள் செய்யும் நன்மையான பிரார்த்தனைகளை அல்லாஹ் உடனுக்குடன் ஏற்றுக் கொள்வதைப் போல அவர்கள் கோபத்தின் போது தங்களுக்கோ தங்கள் பிள்ளைகளுக்கோ செல்வங்களுக்கோ எதிராக செய்யும் பிரார்த்தனையும் அவன் உடனுக்குடன் ஏற்றுக்கொண்டால் அவர்கள் அழிந்து விடுவார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான். தன் சந்திப்பை நம்பாதவர்களை அவன் விட்டு விடுகிறான். ஏனெனில் அவர்கள் தண்டனையை அஞ்சுவதுமில்லை, நன்மையை எதிர்பார்ப்பதுமில்லை. கணக்கு தீர்க்கப்படும் நாளில் சந்தேகம் கொண்டு தடுமாறித்திரிபவர்களாக அவர்களை விட்டுவிடுகிறான்.
(12) 10.12. தன் மீதே அநீதியிழைக்கும் மனிதனுக்கு ஏதேனும் நோயோ தீங்கோ ஏற்பட்டு விட்டால் பணிவாக ஒருக்களித்துப் படுத்தவனாக அல்லது அமர்ந்தவனாக அல்லது நின்றவனாக தனக்கு ஏற்பட்ட தீங்கை அகற்றும்படி நம்மிடம் மன்றாடுகிறான். நாம் அவனது பிரார்த்தனைக்குப் பதிலளித்து அவனுக்கு ஏற்பட்ட தீங்கை அகற்றி விட்டால் தனக்கு ஏற்பட்ட தீங்கை அகற்றுவதற்கு நம்மை அழைக்காதவனைப் போன்று தனது பழைய நிலைக்கே சென்று விடுகிறான். புறக்கணிக்கும் இவனுக்கு தனது வழிகேட்டில் நிலைத்திருப்பது அழகாக்கப்பட்டதைப் போன்றே அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் பாவங்கள் அழகாக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் அதனை விடமாட்டார்கள்.
(13) 10.13. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்கள் இறைத் தூதர்களை நிராகரித்து பாவங்கள் புரிந்ததனால் நாம் அவர்களை அழித்துவிட்டோம். அவர்களிடம் நாம் அனுப்பிய தூதர்கள் தமது இறைவனிடமிருந்து கொண்டுவந்தவற்றில் தாம் உண்மையாளர்களே என்பதை நிருபிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் நம்பிக்கைகொள்ளத் தயாராக இல்லாததால் அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை. எனவே அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழிகாட்டாமல் கைவிட்டு விட்டான். அக்கிரமக்கார அந்த சமூகங்களை தண்டித்தது போலவே நாம் ஒவ்வொரு கால கட்டத்திலும், இடத்திலும் அவர்களைப் போன்றவர்களைத் தண்டிக்கிறோம்.
(14) 10.14. அதன் பின்னர், -மனிதர்களே!- நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள், நன்மை செய்து கூலியைப் பெறுகிறீர்களா? தீமை செய்து தண்டனையைப் பெறுகிறீர்களா? என்று பார்ப்பதற்காக நாம் அழித்த நிராகரித்த சமூகங்களுக்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக ஆக்கினோம்.
(15) 10.15. அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய குர்ஆனின் தெளிவான வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் நற்கூலியை விரும்பாத, தண்டனையை அஞ்சாத மறுமையை மறுப்பவர்கள், -“முஹம்மதே!- சிலை வணக்கத்தைக் குறைகூறும் இந்தக் குர்ஆன் அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டுவாரும். அல்லது எங்களின் மனவிருப்பங்களுக்கு உடன்படும் விதத்தில் இதில் சிலதை அல்லது முழுதையும் மாற்றிவிடுவீராக” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என்னால் மாற்றவே முடியாது -என்றிருக்கும் பொழுது- வேறொன்றை என்னால் கொண்டு வருவதும் சாத்தியமற்றதாகும். மாறாக அல்லாஹ்வே தான் நாடியதை மாற்றுகிறான். எனக்கு அல்லாஹ் அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் உங்களின் கோரிக்கையை ஏற்று அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் மிகப் பெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகிறேன்.”
(16) 10.16. -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் உங்களுக்குக் குர்ஆனை எடுத்துரைக்கக் கூடாது என்று அல்லாஹ் நாடியிருந்தால் நான் உங்களுக்கு அதனை உங்களிடம் ஓதியிருக்கவும் மாட்டேன். அதனை உங்களுக்கு எடுத்துரைத்திருக்கவும் மாட்டேன். அவன் நாடியிருந்தால் என் மூலமாக குர்ஆனை உங்களுக்குக் கற்றுத் தந்திருக்க மாட்டான். நான் உங்களிடையே நீண்ட காலம் - நாற்பது வருடம் - தங்கியுள்ளேன். எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. நாம் இப்பொழுது பெற்றிருக்கும் இந்த பணியையும் நான் தேடவில்லை. நான் உங்களிடம் கொண்டு வந்துள்ளது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான், எனக்கு அதில் எந்த தலையீடும் இல்லை என்பதை உங்களின் அறிவைக் கொண்டு அறிந்துகொள்ள மாட்டீர்களா?
(17) 10.17. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட அநியாயக்காரன் வேறு யாருமில்லை. எனவே நான் எவ்வாறு புதிதாகப் புனைந்து குர்ஆனை மாற்றிக் கொண்டுவர முடியும்? அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி வரம்புமீறக்கூடியவர்கள் அவர்கள் எதிர்பார்க்கும் விடயத்தில் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்.
(18) 10.18. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்களுக்கு பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியாத கற்பனைக் கடவுள்களை வணங்குகிறார்கள். வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவனால் மட்டுமே தான் நாடிய போது பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியும். அவர்கள் தங்களின் தெய்வங்களைக் குறித்துக் கூறுகிறார்கள்: “இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக பரிந்துரை செய்யும் தரகர்களாகும். அதனால் அவன் எங்களின் பாவங்களினால் எங்களைத் தண்டிக்கமாட்டான். -”தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “வானங்களிலும் பூமியிலும் அவன் அறியாத ஒரு இணை உண்டு என்பதை அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்களா ? இணைவைப்பாளர்கள் கூறும் பொய்களையும், அசத்தியத்தையும் விட்டு அவன் பரிசுத்தமானவன்.
(19) 10.19. மனிதர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட ஒரே சமூகமாக இருந்தார்கள். பின்னர் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கையில் நிலைத்திருந்தார்கள். சிலர் நிராகரித்துவிட்டார்கள். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் இவ்வுலகில் அவர்களிடையே தீர்ப்பளிக்க மாட்டான், மறுமை நாளில்தான் தீர்ப்பளிப்பான் என்ற அல்லாஹ்வின் விதி முந்தியிராவிட்டால் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் இவ்வுலகிலேயே தீர்ப்பளித்திருப்பான், நேர்வழி பெற்றவர் யார் வழிகெட்டவர் யார் என்பது தெளிவாகியிருக்கும்.
(20) 10.20. “முஹம்மதின்மீது அவரது நம்பகத் தன்மையை நிருபிக்கக்கூடிய ஏதேனும் சான்று இறக்கப்பட வேண்டாமா” என்று இணைவைப்பாளர்கள் கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “சான்றுகள் இறங்குவது மறைவான ஒன்றாகும். அதை அல்லாஹ் மட்டுமே அறிவான். எனவே நீங்கள் பரிந்துரைத்த வெளிரங்கமான சான்றுகளை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் அதனை எதிர்பார்ப்பவர்களில் ஒருவனே.
(21) 10.21. இணைவைப்பாளர்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்திற்கும் ஏழ்மைக்கும் பிறகு மழை, செழிப்பு ஆகிய அருள்களை அவர்கள் அனுபவிக்குமாறு செய்தால் அவர்களோ நம்முடைய சான்றுகளை நிராகரித்து சூழ்ச்சி செய்கிறார்கள். -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “சூழ்ச்சியிலும், உங்களை விட்டுப் பிடிப்பதிலும், தண்டிப்பதிலும் அல்லாஹ் மிக விரைவானவன். நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளை உங்களைக் கண்காணிக்கும் வானவர்கள் எழுதுகிறார்கள். எதுவும் அவர்களை விட்டுத் தப்பிவிட முடியாது எனும் போது எவ்வாறு அவர்களின் படைப்பாளனை விட்டுத் தப்பிவிட முடியும்? உங்களின் சூழ்ச்சிகளுக்கு அல்லாஹ் தண்டனை வழங்குவான்.
(22) 10.22. -மனிதர்களே!- அவனே நிலத்தில் உங்கள் பாதங்களாலும் வாகனங்களிலும் உங்களை நகரச் செய்கிறான். அவனே கடலில் கப்பல்களில் உங்களை பயணிக்கச் செய்கிறான். நீங்கள் கடலில் கப்பல்களில் இருக்கும் போது சாதகமான காற்று வீசினால் அக்காற்றினால் பயணிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் அவ்வாறு சந்தோசத்தில் திளைத்திருக்கும் போது திடீரென்று புயல் காற்று வீசி, நாலாபுறமும் கடலலைகள் அவர்களைச் சூழ்ந்து, தாம் பெரும்பாலும் அழிந்து விடுவோம் என்று அவர்கள் எண்ணும் போது அல்லாஹ்வை மட்டுமே அழைத்து, அவனுக்கு வேறு எதையும் இணையாக்காது கூறுவார்கள்: “இறைவா, அழிவை ஏற்படுத்தும் இந்த சோதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நீ எங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்காக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துவோராக ஆகிவிடுவோம்”.
(23) 10.23. அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்று அவர்களை அச்சோதனையிலிருந்து காப்பாற்றினால் அவர்களோ அல்லாஹ்வை நிராகரித்து, பாவங்கள் செய்து உலகில் குழப்பம் விளைவிக்கிறார்கள். -மனிதர்களே!- விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தீய செயல்களின் மோசமான விளைவை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அதன் மூலம் அழியக்கூடிய இவ்வுலக வாழ்க்கையில் நீங்கள் சுகத்தை அனுபவிக்கிறீர்கள். பின்னர் மறுமை நாளில் நம் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். நீங்கள் செய்துகொண்டிருந்த பாவங்கள் குறித்து நாம் உங்களுக்கு அறிவிப்போம். அவற்றிற்கேற்ப நாம் உங்களுக்குத் தண்டனையளிப்போம்.
(24) 10.24. நீங்கள் அனுபவிக்கக்கூடிய இவ்வுலக வாழ்க்கை விரைவாக அழிந்துவிடுவதற்கு உதாரணம் மழையைப் போன்றதாகும். அதன் மூலம் மனிதர்கள் உண்ணும் தானியங்கள், பழங்கள், விலங்குகள் உண்ணும் புற்பூண்டுகள் போன்ற பல்வேறு விதமான தாவரங்கள் செழித்து வளர்கின்றன. பூமி தன் அழகிய நிறத்தைப் பெற்று மழையின் மூலம் விளையும் பல்வேறு தாவரங்களின் மூலம் பொலிவுற்று, அவற்றின் உரிமையாளர்கள் அவற்றின் விளைச்சல்களை அறுவடைசெய்ய முடியும் என எண்ணிக்கொண்டிருக்கும் போது அவை அழிய வேண்டும் என்ற நம்முடைய விதி அவற்றுக்கு ஏற்படுகிறது. எனவே அண்மையில் தாவரங்களாலும், மரங்களாலும் செழிப்புற்று காணப்படாதது போன்று அறுவடை செய்யப்பட்டதாக அவற்றை ஆக்கி விடுகின்றோம். இவ்வுலகத்தின் நிலையையும் விரைவாக அது அழிந்துவிடுவதையும் நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியது போன்றே சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, படிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய மக்களுக்கு நாம் ஆதாரங்களையும் சான்றுகளையும் தெளிவுபடுத்துகிறோம்.
(25) 10.25. அல்லாஹ் மனிதர்கள் அனைவரையும் அமைதியின் இல்லமான சுவனத்தின் பக்கம் அழைக்கிறான். அங்கு மக்கள் கவலைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் மரணத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு இந்த அமைதியின் இல்லத்திற்குக் கொண்டு செல்லும் இஸ்லாம் என்னும் மார்க்கத்தின்பால் வழிகாட்டுகிறான்.
(26) 10.26. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ள பாவங்களிலிருந்து விலகி சிறந்த முறையில் செயல்படுபவர்களுக்கு சுவனம் என்னும் மிகச் சிறந்த வெகுமதி இருக்கின்றது. இன்னும் மேலதிகமாக அவனுடைய திருமுகத்தைக் காணும் பாக்கியத்தையும் அவன் அவர்களுக்கு அளிப்பான். அவர்களின் முகங்களில் புழுதியோ அவமானமோ இழிவோ படர்ந்திருக்காது. சிறந்த முறையில் செயல்படக்கூடியவர்கள் என்று வர்ணிக்கப்பட்ட இவர்களே சுவனவாசிகளாவர். அங்கு என்றென்றும் அவர்கள் தங்கியிருப்பார்கள்.
(27) 10.27. அல்லாஹ்வை நிராகரித்தல், பாவங்கள் புரிதல் போன்ற தீயசெயல்களில் ஈடுபடுபவர்கள் மறுமை நாளில் அவர்கள் செய்த தீமைக்கேற்ப தண்டிக்கப்படுவார்கள். அவர்களின் முகங்களில் இழிவும் அவமானமும் படர்ந்திருக்கும். அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது இறங்கிவிட்டால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. அவர்களின் முகங்களைச் சூழ்ந்திருக்கும் நரக நெருப்பின் புகையாலும் கருமையாலும் இருளான இரவின் கருமையால் அவை மூடப்பட்டுள்ளதைப் போல் தோன்றும். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் நரகவாசிகளாவர். அங்கு என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள்.
(28) 10.28. -தூதரே!- நாம் படைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக. பின்னர் உலகில் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியவர்களிடம் நாம் கூறுவோம்: “இணைவைப்பாளர்களே! நீங்களும் அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கிய தெய்வங்களும் உங்களின் இடத்திலேயே நில்லுங்கள். நாம் வணங்கியவர்களுக்கும் வணங்கப்பட்டவர்களுக்குமிடையே பிரிவினை ஏற்படுத்தி விடுவோம். வணங்கப்பட்டவர்கள் தங்களை வணங்கியவர்களை நோக்கி, “நீங்கள் உலகில் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை” என்று கூறி அவர்களை விட்டும் விலகி விடுவார்கள்.
(29) 10.29. அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கிய எல்லா தெய்வங்களும், “நீங்கள் எங்களை வணங்கியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் எங்களை வணங்குமாறு உங்களுக்குக் கட்டளையிடவும் இல்லை. நாங்கள் உங்களின் வணக்கத்தையே அறியாதிருந்தோம் என்பதற்கு சாட்சிகூற அல்லாஹ்வே போதுமானவன்” என்று கூறி அவர்களை விட்டும் நீங்கி விடுவார்கள்.
(30) 10.30. பயங்கரமான இந்த சூழலில் ஒவ்வொரு ஆன்மாவும் தான் இவ்வுலக வாழ்வில் செய்திருந்த செயல்களைக் பரிசோதித்துக்கொள்ளும். இணைவைப்பாளர்கள் தங்களின் உண்மையான இறைவனான அல்லாஹ்வின் பக்கம் கொண்டுவரப்படுவார்கள். அவனே அவர்களின் கேள்வி கணக்குக்குப் பொறுப்பாளனாவான். தமது சிலைகள் பரிந்துரை செய்வார்கள் என்று அவர்கள் கூறிய அவதூறு அவர்களை விட்டும் சென்று விடும்.
(31) 10.31. தூதரே! அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் இவர்களிடம் நீர் கேட்பீராக: “வானத்திலிருந்து உங்கள் மீது மழையை இறக்கி உங்களுக்கு உணவளிப்பவன் யார்? பூமியிலிருந்து தாவரங்களையும் இன்னபிற கனிமங்களையும் வெளிப்படுத்தி உங்களுக்கு உணவளிப்பவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை விந்திலிருந்து மனிதனை, முட்டையிலிருந்து பறவையை வெளிப்படுத்துபவன் யார்? உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை உதாரணமாக மிருகத்திலிருந்து விந்தை பறவயிலிருந்து முட்டையை வெளிப்படுத்துபவன் யார்? வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிலுமுள்ள எல்லா படைப்புகளையும் பராமரித்து நிர்வகிப்பவன் யார்? இவையனைத்தையும் செய்பவன் அல்லாஹ்தான் என்று அவர்கள் பதில் கூறுவார்கள். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் இவற்றை அறிய மாட்டீர்களா? அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?”
(32) 10.32. -மனிதர்களே!- இவையனைத்தையும் செய்பவனே உங்களைப் படைத்த, உங்களின் விவகாரங்களை நிர்வகிக்கின்ற உண்மையான இறைவனான அல்லாஹ் ஆவான். சத்தியத்திற்குப் பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? தெளிவான இச்சத்தியத்திலிருந்து உங்களுடைய சிந்தனைகள் எங்கு செல்கின்றன?
(33) 10.33. -தூதரே!- அல்லாஹ் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன் என்பது உறுதியானது போல பிடிவாதத்தினால் சத்தியத்தை விட்டும் வெளியேறிவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்ற உம் இறைவனின் விதி ரீதியான வார்த்தையும் உறுதியாகி விட்டது.
(34) 10.34. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் உங்களின் இணைத் தெய்வங்களில் யாராவது முன்மாதிரியின்றி படைப்பைப் படைத்து பின்னர் அவை இறந்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவார்களா?” நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே முன்மாதிரியின்றி ஆரம்பத்தில் படைத்தான். பின்னர் அவனே அவை இறந்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். -இணைவைப்பாளர்களே!- சத்தியத்தை விட்டு விட்டு அசத்தியத்தின் பக்கம் எவ்வாறு நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்?”
(35) 10.35. -தூதரே!- அவர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் உங்கள் இணைத்தெய்வங்களில் யாராவது உங்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவார்களா? நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே சத்தியத்தின்பால் வழிகாட்டுகிறான். மனிதர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுபவன், அதன்பால் அவர்களை அழைப்பவன் பின்பற்றத்தகுதியானவனா? அல்லது மற்றவர்கள் வழிகாட்டா விட்டால் நேர்வழியடைய இயலாத உங்கள் தெய்வங்களா? உங்களுக்கு என்னவாயிற்று? அவை அல்லாஹ்வுக்கு இணையானவை என்பதாக எவ்வாறு தவறாக தீர்ப்பளிக்கிறீர்கள்? உங்களது கூற்றை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்து விட்டான்.
(36) 10.36. இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர் தங்களுக்கு எது குறித்து அறிவில்லையோ அதனையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் யூகங்களையும் சந்தேகங்களையுமே பின்பற்றுகிறார்கள். ஐயம் அறிவுக்கு சமனாகாது, அறிவுக்கு முன்னால் யூகம் எப்பயனையும் அளிக்காது. அவர்கள் செய்யக் கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அல்லாஹ்வை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(37) 10.37. இந்த அற்புதமான குர்ஆன் புனைந்துரைக்கப்படவோ அல்லாஹ்வைத் தவிர உள்ள யாருக்கும் சேர்க்கப்படவோ முடியாது. ஏனெனில் அது போன்ற ஒன்றை மனிதர்களால் கொண்டுவரவே முடியாது. ஆயினும் இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் அவற்றில் சுருக்கமாக கூறப்பட்ட சட்டதிட்டங்களை சிறந்த முறையில் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. எனவே அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து இறங்கியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
(38) 10.38. நிச்சயமாக “முஹம்மது இந்த குர்ஆனை சுயமாகப் புனைந்து கொண்டு அல்லாஹ்வின் வார்த்தை என்று பொய் கூறுகிறார்” என்று இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களுக்கு மறுப்பாக கூறுவீராக: “நான் இதனை சுயமாகப் புனைந்து கொண்டுவந்திருந்தால் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; எனவே இதுபோன்ற ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். குர்ஆன் புனைந்து கூறப்பட்டது என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களால் அழைக்க முடிந்தவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு அதனைச் செய்யுங்கள். உங்களால் ஒருபோதும் இவ்வாறு செய்ய முடியாது. நீங்கள் மொழிச் சொந்தக்காரர்களாகவும் இலக்கிய ஜாம்பவான்களாகவும் இருந்தும் உங்களால் அவ்வாறு கொண்டுவர முடியாமை குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது என்பதற்கான சான்றாகும்.
(39) 10.39. அவர்கள் பதிலளிக்கவில்லை. மாறாக இந்த குர்ஆனை புரிந்து, சிந்திப்பதற்கு முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை நிகழ்வதற்கு முன்னர் விரைந்து அவர்கள் அதனை மறுத்து விட்டார்கள். அது வருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இதுபோன்றே முந்தைய சமூகத்தினரும் நிராகரித்தார்கள். வேதனை அவர்கள் மீது இறங்கியது. -தூதரே!- பொய்ப்பித்த சமூகங்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான்.
(40) 10.40. இணைவைப்பாளர்களில் சிலர் மரணிப்பதற்கு முன்னர் இந்த குர்ஆனின் மீது நம்பிக்கை கொண்டு விடுவார்கள். சிலர் பிடிவாதத்தினாலும் கர்வத்தினாலும் இந்த குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ளாமலேயே மரணித்துவிடுவார்கள். -தூதரே!- நிராகரிப்பில் நிலைத்திருப்பவர்களை உம் இறைவன் நன்கறிவான். அவர்களின் நிராகரிப்பினால் அவர்களுக்குத் தண்டனையளிப்பான்.
(41) 10.41. -தூதரே!- உம் சமூகத்தினர் உம்மை பொய்யர் என்று கூறினால் அவர்களிடம் நீர் கூறுவீராக: “என் செயலுக்கான கூலியை நான் பெறுவேன். என் செயலுக்கான பொறுப்பை நான் சுமப்பேன். உங்களின் செயலுக்கான கூலியையும் தண்டனையையும் நீங்கள்தாம் பெறுவீர்கள். நான் செய்யும் செயல்களுக்கு நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்யும் செயல்களுக்கு நான் தண்டிக்கப்படவும் மாட்டேன்.
(42) 10.42. -தூதரே!- நீர் குர்ஆனை ஓதும் போது இணைவைப்பாளர்களில் சிலர் அதனை ஏற்றுக்கொள்ளும், கீழ்ப்படியும் எண்ணமின்றி உம் பக்கம் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். உம்மால் செவிடர்களுக்குச் செவியுறச் செய்ய முடியுமா? அதுபோன்று சத்தியத்தை செவியேற்பதை விட்டும் செவிடர்களாக இருப்பர்களுக்கு உம்மால் நேர்வழிகாட்ட முடியாது. ஏனெனில் அவர்கள் அதனை விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
(43) 10.43. -தூதரே!- இணைவைப்பாளர்களில் சிலர் வெளிப்படையான பார்வையால் உம்மைப் பார்க்கிறார்கள். அவர்கள் அகப் பார்வையால் உம்மைப் பார்ப்பதில்லை. உம்மால் பார்வைகள் பறிக்கப்பட்டவனைப் பார்க்க வைக்க முடியுமா என்ன? நிச்சயமாக அது உம்மால் முடியாது. அது போன்று அகப் பார்வையை இழந்தவர்களுக்கு உம்மால் நேர்வழிகாட்ட முடியாது.
(44) 10.44. அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநீதியிழைப்பதை விட்டும் தூய்மையானவன். அணுவளவு கூட அவன் அவர்களுக்கு அநீதியிழைக்க மாட்டான். ஆயினும் அவர்கள் தாம் அசத்தியத்தில் உள்ள பிடிவாதத்தினால் அழிவிற்கான காரணிகளைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.
(45) 10.45. மனிதர்களை விசாரணை செய்வதற்காக அல்லாஹ் அவர்களை ஒன்று திரட்டும் மறுமை நாளில் இந்த உலக வாழ்விலும் மண்ணறை வாழ்விலும் பகலின் சில பொழுதே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வார்கள். பின்னர் மறுமை நாளில் பயங்கரமான காட்சிகளைக் கண்டதனால் அவர்களது அறிமுகம் அறுபட்டுப் போகும். மறுமை நாளில் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரித்தவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள். அவர்கள் இழப்பிலிருந்து தப்பிப்பதற்கு உலக வாழ்வில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் நாளை நம்பிக்கைகொள்பவர்களாக இருக்கவில்லை.
(46) 10.46. -தூதரே!- நீர் மரணிப்பதற்கு முன்பே நாம் அவர்களுக்கு வாக்களித்த வேதனையில் சிலவற்றை உமக்குக் காட்டுவோம். அல்லது அதற்கு முன்பே உம்மை மரணிக்கச் செய்வோம். இந்த இரண்டு நிலைமைகளும் எவ்வாறு இருந்தாலும் மறுமை நாளில் அவர்கள் நம் பக்கமே திரும்ப வேண்டும். பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களை அல்லாஹ் கவனித்தவனாகவே உள்ளான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(47) 10.47. முந்தைய ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தூதர் அனுப்பப்பட்டார். அவருக்கு ஏவப்பட்டதை அவர் நிறைவேற்றிய பிறகு அவர்கள் அவரை நிராகரித்துவிட்டால் அவருக்கும் அவர்களுக்குமிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்பட்டு விடும். அல்லாஹ் தன் அருளால் அவரைக் காப்பாற்றுவான். தன் நீதியால் அவர்களை அழிப்பான். அவர்களின் செயல்களுக்கான கூலியில் அவர்கள் சிறிதும் அநீதி இழைக்கப்படவில்லை.
(48) 10.48. இந்த நிராகரிப்பாளர்கள் பிடிவாதமாகவும் சவால் விடுத்தவர்களாவும் கேட்கிறார்கள்: ”நீங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் எங்களை எச்சரித்த வேதனை எப்போது வரும்?”
(49) 10.49. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “எனக்கு நானே தீங்கிழைக்கவோ அதனைத் தடுக்கவோ சக்திபெற மாட்டேன் எனும் போது எவ்வாறு மற்றவர்களுக்கு என்னால் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியும்? ஆயினும் அல்லாஹ் நாடியதைத் தவிர. நான் எவ்வாறு அவன் மறைவாக வைத்திருக்கும் விஷயங்களை அறிய முடியும்? அல்லாஹ் அழிப்பதாக எச்சரித்த ஒவ்வொரு சமூகத்திற்கும் அழிவதற்கான குறிப்பிட்ட நேரம் உண்டு. அதனை அல்லாஹ் மட்டுமே அறிவான். அழியும் நேரம் வந்துவிட்டால் அது சிறிது நேரம் கூட முந்தவோ பிந்தவோ செய்யாது.
(50) 10.50. -தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ்வின் வேதனை இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்களிடம் வந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்பதைக் கூறுங்கள். இந்த வேதனையிலிருந்து எதனை அவசரமாக எதிர்பார்க்கிறீர்கள்?
(51) 10.51. உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை உங்களிடம் வந்த பிறகு இதற்கு முன்பு நம்பிக்கை கொள்ளாமல், நம்பிக்கை பயனளிக்காத சமயத்தில்தான் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்களா? இப்பொழுதுதான் நீங்கள் நம்பிக்கைகொள்கிறீர்களா? வேதனையை நிராகரிக்கும் வண்ணம் இதற்கு முன்னர் அதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களே!
(52) 10.52. பின்னர் அவர்களை வேதனையில் ஆழ்த்திய பிறகு அதிலிருந்து வெளியேற விரும்பும் அவர்களிடம் கூறப்படும்: “மறுமையில் நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள். நீங்கள் செய்த நிராகரிப்பு மற்றும் பாவங்களுக்கே தவிர கூலி கொடுக்கப்படவில்லை.
(53) 10.53. -தூதரே!- இணைவைப்பாளர்கள், “எங்களுக்கு வாக்களிப்படும் வேதனை உண்மையானதா?” என்று உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “ஆம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது உண்மையாகும். நீங்கள் அதிலிருந்து தப்பமுடியாது.”
(54) 10.54. அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஒவ்வொருவருக்கும் பூமி நிறைய பெறுமதியான செல்வங்கள் இருந்தாலும், ஈட்டுத் தொகை கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்தையும் ஈடாக அளித்துவிடுவார். மறுமை நாளில் தங்களின் நிராகரிப்பினால் இணைவைப்பாளர்கள் வேதனையைக் காணும் போது கைசேதத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களிடையே அல்லாஹ் நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். தங்களின் செயல்களுக்குத்தான் அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.
(55) 10.55. அறிந்து கொள்ளுங்கள், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அறிந்து கொள்ளுங்கள், நிராகரிப்பாளர்களுக்கு வேதனை அளிப்பேன் என்று அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேறியே தீரும். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்ள மாட்டார்கள். எனவே சந்தேகம் கொள்கிறார்கள்.
(56) 10.56. அவனே இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறான். உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி அளிப்பான்.
(57) 10.57. மனிதர்களே! உங்களிடம் குர்ஆன் வந்துள்ளது. அதில் அறிவுரையும் ஆர்வமூட்டலும் அச்சமூட்டலும் அடங்கியுள்ளது. அது உள்ளங்களிலுள்ள சந்தேகம் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக இருக்கின்றது; சத்தியப் பாதையின் பக்கம் வழிகாட்டுகிறது. அது நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் இதைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள்.
(58) 10.58. தூதரே! நீர் மக்களிடம் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்துள்ள குர்ஆன், அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருளாகவும் கருணையாகவும் இருக்கின்றது. குர்ஆனை உங்களுக்கு இறக்கி அல்லாஹ் உங்கள் மீது புரியும் அருளையும் கருணையையும் கொண்டே நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள். வேறொன்றைக் கொண்டுமல்ல. முஹம்மது தம் இறைவனிடமிருந்து அவர்களிடம் கொண்டு வந்தது, அழிந்து விடும் உலகில் அவர்கள் சேர்த்துவைப்பவற்றை விட சிறந்தது.
(59) 10.59. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் வாழ்வாதாரங்களை இறக்கி உங்கள் மீது அருள் புரிந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அவற்றில் உங்களுடைய மனஇச்சைகளைக் கொண்டு சிலவற்றை தடைசெய்யப்பட்டதாகவும் சிலவற்றை அனுமதிக்கப்பட்டதாகவும் ஆக்கிவிட்டீர்கள்.” நீர் அவர்களிடம் கேட்பீராக: நீங்கள் நினைத்ததைத் தடைசெய்யும் அதிகாரத்தையும் அனுமதியளிக்கும் அதிகாரத்தையும் அல்லாஹ்தான் உங்களுக்கு அளித்தானா? அல்லது நீங்களாகவே அவன் மீது பொய்யாக புனைந்து கொண்டீர்களா?
(60) 10.60. பொய்யை புனைபவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு என்ன நிகழும் என்று எண்ணுகிறார்கள்? அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று எண்ணுகிறார்களா? சாத்தியமேயில்லை. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் அவர்களுக்கு அவகாசம் அளித்து அவர்கள் மீது அருள்புரியக் கூடியவனாவான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.
(61) 10.61. -தூதரே!- நீர் ஏதேனும் ஒரு காரியத்தில் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதைப் படித்தாலும் -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் எந்த செயலைச் செய்தாலும் நீங்கள் அதனைச் செய்வதற்கு முன்வந்து அதனை ஆரம்பிக்கும் போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டும், அறிந்து கொண்டும், செவியேற்றுக் கொண்டும் இருக்கிறோம். வானத்திலோ பூமியிலோ அணுவளவும், அதைவிட சிறியதும் பெரியதும் உம் இறைவனின் அறிவை விட்டும் மறையாது. அவைகள் எதுவும் தெளிவான பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை. சிறியது, பெரியது என எதையும் பாதுகாக்காது அவன் விட்டு விடமாட்டான்.
(62) 10.62. அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் நேசர்களுக்கு, அவர்கள் மறுமை நாளில் எதிர்கொள்ளும் பயங்கரங்களால் எந்த அச்சமும் இல்லை. அவர்களுக்குத் தவறிவிட்ட உலக பாக்கியங்களை எண்ணியும் அவர்கள் கவலைகொள்ள மாட்டார்கள்.
(63) 10.63. இந்த இறைநேசர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்களும் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுபவர்களாக இருந்தவர்களுமேயாவர்.
(64) 10.64. அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் நல்ல கனவின் மூலம், மக்கள் அவர்களைப் புகழ்வதன் மூலம் நற்செய்தி உண்டு; அவர்களின் உயிர்களைக் கைப்பற்றப்படும் போதும், மரணித்த பின்னரும், ஒன்று திரட்டப்படும் போதும் வானவர்களிடமிருந்து அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த வெகுமதியே மாபெரும் வெற்றியாகும். ஏனெனில் அதில்தான் எதிர்பார்த்தது கிடைத்து அச்சப்பட்டதில் இருந்து பாதுகாப்பு உண்டு.
(65) 10.65. -தூதரே!- உம் மார்க்கத்தைக் குறைகூறி இவர்கள் கூறும் கருத்துகளால் நீர் கவலையடைய வேண்டாம். நிச்சயமாக ஆதிக்கமும் வெற்றியும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. யாரும் அவனை மிகைத்துவிட முடியாது. அவர்கள் பேசுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(66) 10.66. அறிந்துகொள்ளுங்கள், வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அல்லாஹ்வைத் தவிர இணைத் தெய்வங்களை வணங்கும் இணைவைப்பாளர்கள் எதைப் பின்பற்றுகிறார்கள்? உண்மையில் அவர்கள் யூகங்களையே பின்பற்றுகிறார்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியதில் அவர்கள் பொய்யே கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்துவிட்டான்.
(67) 10.67. -மனிதர்களே!- நீங்கள் களைப்பிலிருந்து ஓய்வெடுப்பதற்காக இரவை அவனே உண்டாக்கினான். நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதை உழைத்துக் கொள்வதற்காக பகலை அவனே பிரகாசமானதாக ஆக்கியுள்ளான். நிச்சயமாக இதில் படிப்பினை பெற்று கீழ்ப்படியும் எண்ணத்துடன் செவியேற்கக் கூடியவர்களுக்கு தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
(68) 10.68. இணைவைப்பாளர்களில் ஒரு பிரிவினர், “அல்லாஹ் வானவர்களை மகள்களாக எடுத்துக் கொண்டான்” என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவன் படைப்புகள் அனைத்தையும் விட்டு தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியன. -இணைவைப்பாளர்களே!- உங்களது இக்கூற்றுக்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அல்லாஹ்வுக்கு பிள்ளை உண்டு என்ற மிகப் பெரும் கருத்தை அதன் யதார்த்தத்தைப் புரியாமல் ஆதாரமின்றி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?
(69) 10.69. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கு பிள்ளை உள்ளதாக அவன் மீது பொய்யை இட்டுக்கட்டிக் கூறுபவர்கள் தாங்கள் விரும்பும் விஷயத்தைப் பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து தப்பித்து ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்.
(70) 10.70. அவர்கள் அனுபவிக்கும் இவ்வுலக இன்பங்களைக் கொண்டு அவர்கள் ஏமாந்துவிட வேண்டாம். அவை அழியக்கூடிய அற்ப இன்பமே. பின்னர் மறுமை நாளில் நம்மிடமே அவர்கள் திரும்பிவர வேண்டும். பின்னர், அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதரை பொய்யர் என்று கூறியதனாலும் நாம் அவர்களை கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்வோம்.
(71) 10.71. -தூதரே!- நிராகரிக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு நூஹின் செய்தியை எடுத்துரைப்பீராக. அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “என் சமூகமே, நான் உங்களிடையே இருப்பதும் அல்லாஹ்வின் சான்றுகளைக் கொண்டு உங்களை அறிவுறுத்துவதும் உங்களுக்குப் பாரமாகத் தோன்றி, நீங்கள் என்னைக் கொல்ல நாடினால் உங்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே உறுதியான திட்டம் தீட்டி என்னை அழிக்க முடிவுசெய்யுங்கள். அதற்கு உங்களின் தெய்வங்களையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களின் திட்டம் புரியாத இரகசியமாக இருக்க வேண்டாம். என்னை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிறகு அதனைச் செயல்படுத்துங்கள். ஒரு வினாடி கூட எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்.
(72) 10.72. நீங்கள் எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் என் இறைவனின் தூதை எடுத்துரைப்பதற்காக உங்களிடம் எந்த கூலியையும் நான் எதிர்பார்க்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் என் மீது நம்பிக்கை கொண்டாலும் என்னை நிராகரித்தாலும் எனது கூலி அல்லாஹ்விடமே இருக்கின்றது. நான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரியக்கூடியவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்று அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.
(73) 10.73. அவருடைய சமூகம் அவரை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது. நாம் அவரையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் கப்பலில் காப்பாற்றினோம். அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் வழித்தோன்றல்களாக அவர்களை ஆக்கினோம். அவர் கொண்டு வந்த சான்றுகளையும் ஆதாரங்களையும் நிராகரித்தவர்களை வெள்ளத்தால் அழித்து விட்டோம். -தூதரே!- நூஹ் எச்சரித்தும் நம்பிக்கை கொள்ளாத மக்களின் கதி என்னாவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக.
(74) 10.74. நூஹுக்கு சில காலத்திற்குப் பிறகு பல தூதர்களை அவர்களது சமூகங்களின்பால் அனுப்பினோம். தூதர்கள் தங்களின் சமூகங்களிடம் சான்றுகளையும் அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் தூதர்களை நிராகரிப்பதில் முன்பு உறுதியாக இருந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை கொள்ளும் எண்ணம் இருக்கவில்லை. எனவே அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். முந்தைய தூதர்களை நிராகரித்த அந்த மக்கள் மீது முத்திரையிட்டது போன்றே எல்லா கால கட்டங்களிலும் இடங்களிலும் நிராகரிப்பின் மூலம் இறைவரம்பை மீறக்கூடிய நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களின் மீதும் முத்திரையிட்டு விடுகின்றோம்.
(75) 10.75. இந்த தூதர்கள் அனுப்பப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் எகிப்தின் அரசன் பிர்அவ்னிடமும் அவன் சமூகத்து தலைவர்களிடமும் அனுப்பினோம். அவர்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய சான்றுகளைக் கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்பினோம். ஆனால் பிர்அவ்னும் அவன் சமூகத்தினரும் அவர்கள் இருவரும் கொண்டு வந்ததை ஏற்றுக் கொள்ளாமல் கர்வம் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதர்களை மறுத்ததனாலும் குற்றவாளிகளாக இருந்தார்கள்.
(76) 10.76. பிர்அவ்னிடமும் அவன் சமூகத்து பெரியவர்களிடமும் மூஸாவும் ஹாரூனும் கொண்டு வந்த சத்திய மார்க்கம் வந்த போது மூஸா கொண்டு வந்த இறை அத்தாட்சிகளைப் பற்றி அவர்கள் “நிச்சயமாக இவை தெளிவான சூனியமே. அவை உண்மையல்ல.” என்று கூறினார்கள்.
(77) 10.77. மூஸா, அவர்கள் கூறியதை மறுத்தவராக கூறினார்: “உங்களிடம் வந்துள்ள சத்தியத்தையா சூனியம் என்று கூறுகிறீர்கள்? இது ஒருபோதும் சூனியமாக முடியாது. சூனியக்காரன் ஒரு போதும் வெற்றிபெற மாட்டான் என்பதை நான் நன்கு அறிவேன். பிறகு எவ்வாறு நான் அதில் ஈடுபட முடியும்?
(78) 10.78. பிர்அவ்னின் சமூகத்தார் மூஸாவிடம் விடையளித்தவாறு கூறினார்கள்: “எங்கள் முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு எம்மைத் திசை திருப்பவும் உமக்கும் உமது சகோதரருக்கும் அதிகாரம் கிடைக்கவுமா இந்த சூனியத்தை எம்மிடம் எடுத்து வந்துள்ளீர்கள்? -மூஸாவே ஹாரூனே- நீங்கள் இருவரும் எங்களிடம் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்பவர்களாக இல்லை.
(79) 10.79. பிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் கூறினான்: “கைதேர்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்.”
(80) 10.80. பிர்அவ்னிடம் சூனியக்காரர்களை அவர்கள் கொண்டு வந்த போது அவர்களை வென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் மூஸா அவர்களிடம் கூறினார்: -“சூனியக்காரர்களே-, நீங்கள் எறிய வேண்டியதை எறியுங்கள்.”
(81) 10.81. சூனியக்காரர்கள் தங்களிடமுள்ள சூனியத்தை எறிந்த போது மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் வெளிப்படுத்தியவை சூனியமே. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்ததை எந்தத் தாக்கமுமற்ற வீணானதாக ஆக்கிவிடுவான். நீங்கள் உங்களுடைய சூனியத்தின் மூலம் உலகில் குழப்பம் விளைவிக்கிறீர்கள். குழப்பம் விளைவிப்பவர்களின் செயல்களை அல்லாஹ் சீராக்க மாட்டான்.
(82) 10.82. அல்லாஹ் சத்தியத்தை உறுதிப்படுத்துகிறான். விதிரீதியான தன் வார்த்தைகளாலும் மார்க்க ரீதியான தன் வார்த்தைகளில் காணப்படும் ஆதாரங்கள் மற்றும் சான்றுகளாலும் அதனை ஸ்திரப்படுததுகிறான். அதனை பிர்அவ்னின் சமூகத்தைச் சார்ந்த பாவிகளான நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே.
(83) 10.83. அச்சமுதாயம் புறக்கணிப்பதாக தீர்மானித்திருந்தனர். அதனால் மூஸா -தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும்- கொண்டு வந்தும் அவர்கள் அவரை நம்பவில்லை. ஆயினும் இஸ்ராயீலின் மக்களில் சில இளைஞர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டார்கள். அவர்களும் தங்களின் விஷயம் வெளிப்பட்டுவிட்டால் பிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் தங்களை வேதனைக்குட்படுத்தி ஈமானை விட்டும் திசைதிருப்பி விடுவார்களோ என்ற பயத்தில்தான் இருந்தார்கள். நிச்சயமாக பிர்அவ்ன் எகிப்திய மக்களின் மீது அடக்குமுறையாளன். மேலும் அவன் நிராகரிப்பிலும், இஸ்ராயீலின் மக்களைக் கொல்வதிலும் வேதனைக்குட்படுத்துவதிலும் வரம்புமீறுபவன்.
(84) 10.84. மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: “என் சமூகமே! நீங்கள் அல்லாஹ்வின் மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால், நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தால் அவனையே முழுவதுமாக சார்ந்திருங்கள். அல்லாஹ்வை முழுமையாக சார்ந்திருப்பது உங்களை விட்டும் தீங்கினை அகற்றும், உங்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரும்.”
(85) 10.85. அவர்கள் மூஸாவிடம் விடையளித்தவாறு கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே முழுமையாக நம்பியுள்ளோம். எங்கள் இறைவா! எங்கள் மீது அநியாயக்காரர்களை சாட்டிவிடாதே. அவர்கள் வேதனையளித்தும் கொலை செய்தும் ஆசை காட்டியும் எங்களை எங்கள் மார்க்கத்தை விட்டும் திருப்பி விடுவார்கள்.
(86) 10.86. -எங்கள் இறைவா!- உன் அருளால் நிராகரிக்கும் பிர்அவ்னின் சமூகத்தாரிடமிருந்து எங்களுக்கு விடுதலையளிப்பாயாக. அவர்கள் எங்களை அடிமைகளாக்கி வேதனை செய்தும் கொலை செய்தும் எம்மை தொல்லைக்குட்படுத்தினர்.
(87) 10.87. நாம் மூஸாவுக்கும் அவருடைய சகோதரர் ஹாரூனுக்கும் வஹி அறிவித்தோம்: “அல்லாஹ் ஒருவனையே வணங்குவதற்கு உங்கள் சமூகத்துக்கு சில வீடுகளை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது வீடுகளை கிப்லாவான (பைதுல் முகத்தஸின்) பக்கம் முன்னோக்கியதாக அமைத்துக் கொள்ளுங்கள். தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். -மூஸாவே!- நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்தும் அல்லாஹ்வின் உதவி, எதிரிகளின் அழிவு, பூமியில் அவர்களை வழித்தோன்றல்களாக ஆக்குதல் ஆகிய விஷயங்களைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.
(88) 10.88. மூஸா கூறினார்: “எங்கள் இறைவா! இவ்வுலக வாழ்வில் நீ பிர்அவ்னுக்கும் அவனுடைய சமூகத்தின் தலைவர்களுக்கும் உலகத்தின் அலங்காரங்களையும் இந்த உலக வாழ்கையில் செல்வங்களையும் வழங்கியுள்ளாய். நீ அவர்களுக்கு அளித்தவற்றிற்காக அவர்கள் உனக்கு நன்றி செலுத்தவில்லை. மாறாக அவற்றைக் கொண்டு மக்களை உன் வழியை விட்டும் நெறிபிறழச் செய்தார்கள். எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை நீ அழித்து விடுவாயாக. அவர்களின் உள்ளங்களை கடினமாக்கி விடுவாயாக. எனெனில் அவர்கள் நம்பிக்கை கொள்வது பயனளிக்காத, வேதனை மிக்க தண்டனையை அவர்கள் காணும் நேரம் அன்றி அவர்கள் நம்பிக்கைகொள்ளமாட்டார்கள்.
(89) 10.89. அல்லாஹ் கூறினான்: -மூஸா மற்றும் ஹாரூனே!- பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தின் தலைவர்களுக்கு எதிராக நீங்கள் செய்த பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. உங்களின் மார்க்கத்தில் உறுதியாக இருங்கள். அதிலிருந்து நெறிபிறழ்ந்து சத்திய பாதையை அறியாத மூடர்களின் பாதையைப் பின்பற்றி விடாதீர்கள்.
(90) 10.90. கடலைப் பிளந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அதனைக் கடப்பதை நாம் எளிதாக்கினோம். அவர்கள் பாதுகாப்பாக அதனைக் கடந்தார்கள். பிர்அவ்னும் அவனுடைய படைகளும் அநியாயமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். கடல் அவனை மூடி, மூழ்கடித்து, தப்புவதில் விரக்தியடைந்து அவன் கூறினான்: “இஸ்ராயீலின் மக்கள் யார் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான எந்த இறைவனும் இல்லை என்று நான் நம்பிக்கை கொள்கிறேன். கட்டளைகளை கொண்டு நான் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களில் ஒருவனாகி விட்டேன்.”
(91) 10.91. இப்பொழுது, வாழ்க்கையிலிருந்து விரக்தியடைந்த பிறகுதானா நம்பிக்கைகொள்கிறாய்? -பிர்அவ்னே- வேதனை இறங்குவதற்கு முன்னர் அல்லாஹ்வை நிராகரித்து, அவனது பாதையை விட்டும் தடுத்து; அவனுக்கு மாறாகச் செயல்பட்டாய்; நீயும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்ததனால் நீ குழப்பவாதிகளில் ஒருவனாக இருந்தாய்.
(92) 10.92. -பிர்அவ்னே!- உனக்குப் பின்னர் வரக்கூடியவர்கள் படிப்பினை பெறும் பொருட்டு இன்றைய தினம் கடலிலிருந்து உன்னை வெளிப்படுத்தி பூமியின் உயர்ந்த நிலப்பரப்பு ஒன்றில் உன்னை வைப்போம். மக்களில் பெரும்பாலோர் நம்முடைய சான்றுகளையும் ஆதாரங்களையும் விட்டு அலட்சியமாகவே இருக்கிறார்கள். அவற்றில் அவர்கள் சிந்தனை செலுத்துவதில்லை.
(93) 10.93. நாம் இஸ்ராயீலின் மக்களை அருள்வளம்மிக்க ஷாம் தேசத்திலுள்ள சிறந்த, விரும்பத்தக்க ஓர் இடத்தில், இறங்கச் செய்தோம். அவர்களுக்குத் தூய்மையான, அனுமதிக்கப்பட்ட பொருள்களை வழங்கினோம். தவ்ராத்தில் அவர்கள் படித்த முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணணையை உண்மைப்படுத்தக்கூடியதாக அல்குர்ஆன் அவர்களிடம் வரும் வரை அவர்கள் தமது மார்க்க விடயத்தில் முரண்படவில்லை. அவர்கள் அதனை நிராகரித்த போது அவர்களின் நாடுகள் கைப்பற்றப்பட்டன. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் முரண்பட்டுள்ளவற்றில் மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். அவர்களில் சத்தியத்தில் இருந்தவர்களுக்கும் அசத்தியத்தில் இருந்தவர்களுக்கும் தகுந்த கூலியை அவன் வழங்குவான்.
(94) 10.94. -தூதரே!- நாம் உம்மீது இறக்கிய குர்ஆனின் உண்மை நிலையைக் குறித்து நீர் சந்தேகத்தில் இருந்தீரானால் தவ்ராத்தையும் இன்ஜீலையும் படித்துக் கொண்டிருந்த யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் தங்களின் வேதங்களில் உம்மீது இறக்கப்பட்டதைக் குறித்து கூறப்பட்டுள்ளதைக் கண்டதனால் உம்மீது இறக்கப்பட்டது சத்தியமே என்பதை அவர்கள் உமக்கு கூறுவார்கள். சந்தேகமற்ற சத்தியம் உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்துள்ளது. எனவே சந்தேகம் கொள்வோரில் ஒருவராகிவிடாதீர்.
(95) 10.95. அல்லாஹ்வின் சான்றுகளையும் ஆதாரங்களையும் பொய் எனக்கூறி மறுத்தவர்களில் ஒருவராகிவிடாதீர். அவ்வாறு செய்தால் நிராகரித்து தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்தியவர்களில் ஒருவராகி விடுவீர். இவையனைத்தும் பொய்பித்தல், சந்தேகம் என்னும் ஆபத்தைக் குறித்து எச்சரிப்பதற்காகத்தான். மற்றபடி இது போன்ற சந்தேகம் ஏற்படுவதை விட்டும் நிச்சயமாக நபியவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.
(96) 10.96. நிச்சயமாக, நிராகரிப்பில் நிலைத்திருந்ததனால் நிராகரித்த நிலையிலேயே மரணிப்பார்கள் என்று அல்லாஹ்வின் விதி யார் மீது தீர்மானமாகி விட்டதோ அவர்கள் ஒருபோதும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
(97) 10.97. அவர்களிடம் மார்க்க ரீதியான அல்லது பிரபஞ்ச ரீதியான சான்றுகள் அனைத்தும் வந்தாலும் வேதனை மிக்க தண்டனையைக் காணும் வரை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அப்போது அவர்கள் கொள்ளும் நம்பிக்கையினால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலை வரும் போது ஈமான் கொள்வார்கள்.
(98) 10.98. யூனுஸ் உடைய சமூகத்தாரைத் தவிர நாம் தூதர்களை அனுப்பிய எந்த ஊர்வாசிகளும் வேதனையைக் காண்பதற்கு முன்னால் தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லை. யூனுஸின் சமூகத்தார் உண்மையாகவே நம்பிக்கை கொண்டதனால் நாம் இவ்வுலக வாழ்வில் அவர்களை விட்டு இழிவு, அவமானம் ஆகிய வேதனையை அகற்றினோம். அவர்களின் தவணை முடியும் வரை அவர்களை அனுபவிக்கச் செய்தோம்.
(99) 10.99. -தூதரே!- உம் இறைவன் பூமியிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொள்வதை நாடியிருந்தால் அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆயினும் அவன் ஒரு நோக்கத்திற்காக அவ்வாறு நாடவில்லை. தான் நாடியவர்களை தன் நீதியால் அவன் வழிதவறச் செய்கிறான். தான் நாடியவர்களுக்குத் தன் அருளால் அவன் நேர்வழி காட்டுகிறான். உம்மால் மக்களை நம்பிக்கை கொள்ளும்படி நிர்ப்பந்திக்க முடியாது. ஈமான் கொள்வதற்கு பாக்கியமளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.
(100) 10.100. அல்லாஹ்வின் அனுமதியின்றி எவராலும் நம்பிக்கை கொண்டுவிட முடியாது. அவனது நாட்டமின்றி நம்பிக்கை ஏற்படாது. எனவே நீர் அவர்களுக்காக வருத்தப்படாதீர். அல்லாஹ்வின் ஆதாரங்களையும், ஏவல்களையும், விலக்கல்களையும் விளங்கிக் கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் வேதனையையும் இழிவையும் சாட்டிவிடுகிறான்.
(101) 10.101. -தூதரே!- உம்மிடம் சான்றுகளை வேண்டும் இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் என்னென்ன இருக்கின்றன என்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நிராகரிப்பில் நிலைத்திருந்து நம்பிக்கை கொள்வதற்கு தயாரற்ற சமூகத்திற்கு அத்தாட்சிகளையும் சான்றுகளையும் இறக்குவதும், தூதர்களை அனுப்புவதும் பயனளிக்கப் போவதில்லை.
(102) 10.102. இந்த நிராகரிப்பாளர்கள் தங்களுக்கு முந்தைய பொய்பித்த சமூகங்களின் மீது அல்லாஹ் இறக்கிய வேதனையைப் போன்றல்லாத ஒன்றையா எதிர்பார்க்கிறார்கள்?! -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வின் வேதனையை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் என் இறைவனின் வாக்குறுதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
(103) 10.103. பின்னர் அவர்கள் மீது வேதனையை இறக்கி நம்முடைய தூதர்களையும் அவர்களுடன் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றுகின்றோம். அவர்களின் சமூகத்திற்கு ஏற்பட்டது அவர்களுக்கு ஏற்படுவதில்லை. நாம் அந்த தூதர்களையும் அவர்களுடன் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றியது போன்றே அல்லாஹ்வின் தூதரையும் அவருடன் உள்ள நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுவது நம்மீது நாம் விதித்துக் கொண்ட கடமையாகும்.
(104) 10.104. -தூதரே!- நீர் கூறுவீராக: “மக்களே! நான் உங்களை அழைக்கும் ஓரிறைக் கொள்கை என்னும் என் மார்க்கத்தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தாலும் உங்களின் மார்க்கம் அசத்தியம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எனவே நான் அதனைப் பின்பற்றமாட்டேன். அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் எதையும் நான் வணங்க மாட்டேன். ஆனாலும் உங்களை மரணிக்கச் செய்பவனான அல்லாஹ்வையே நான் வணங்குவேன். நான் வணக்கத்தை அவனுக்கு மட்டுமே உரித்தாக்க வேண்டும் என்று அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.
(105) 10.105. அவ்வாறே நான் எல்லா மார்க்கங்களையும் விட்டு விட்டு உண்மையான மார்க்கத்தில் நிலைத்திருக்குமாறு ஏவியுள்ளான். இணைவைப்பாளர்களில் ஒருவனாகி விடுவதை விட்டும் அவன் என்னைத் தடுத்துள்ளான்.
(106) 10.106. -தூதரே!- அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கும் சிலைகளை நீர் வணங்காதீர். அவை பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெற மாட்டாது. நீர் அவற்றை வணங்கினால் அல்லாஹ்வின் விஷயத்திலும் தங்களின் விஷயத்திலும் வரம்புமீறிய அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர்.
(107) 10.107. -தூதரே!- அல்லாஹ் உமக்கு எதேனும் துன்பத்தை அளித்து அது நீங்க வேண்டுமென நீர் வேண்டினால் அவனைத் தவிர யாராலும் அதனை நீக்க முடியாது. அவன் உமக்கு வளமான வாழ்க்கையை நாடினால் அவனது அருளை ஒருவராலும் தடுக்க முடியாது. அவன் தன் அடியார்களில் தான் நாடுவோருக்கு தன் அருளை வழங்குகிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
(108) 10.108. -தூதரே!- நீர் கூறுவீராக: “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட குர்ஆன் உங்களிடம் வந்துள்ளது. யார் நேர்வழி பெற்று அதன் மீது நம்பிக்கை கொண்டாரோ அதன் பயன் அவருக்கே. ஏனெனில் அடியார்களின் கீழ்ப்படிதலை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யாரேனும் வழிதவறினால் அதன் கேடு அவரை மட்டுமே சாரும். அடியார்களின் பாவங்களால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை. நான் உங்களின் செயல்களைக் கணக்கிட்டு பாதுகாப்பவன் அல்ல.”
(109) 10.109. -தூதரே!- உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக. அதன்படி செயல்படுவீராக. உம்மை எதிர்ப்பவர்களின் தொல்லைகளின் போதும் உமக்கு ஏவப்பட்டதை நீர் எடுத்துரைப்பதிலும் பொறுமையைக் கையாளவீராக! இவ்வுலகில் அவர்களுக்கு எதிராக உமக்கு உதவி செய்வதன் மூலமும் நிராகரித்த நிலையிலேயே அவர்கள் மரணித்தால் மறுமையில் அவர்களைத் தண்டிப்பதன் மூலமும் அல்லாஹ் அவர்கள் விடயத்தில் தீர்ப்பளிக்கும் வரை அதே நிலையிலேயே நிலைத்திருப்பீராக.