56 - ஸூரா அல்வாகிஆ ()

|

(1) 56.1. மறுமை சந்தேகமின்றி நிகழ்ந்துவிடும்போது

(2) 56.2. உலகில் பொய்ப்பித்துக்கொண்டிருந்ததைப் போல எவரும் அதனை பொய்ப்பிப்தை காண முடியாது.

(3) 56.3. அது பாவம் செய்த நிராகரிப்பாளர்களை நரகத்தில் பிரவேசிக்கச் செய்து தாழ்த்தக்கூடியது, இறையச்சம்கொண்ட நம்பிக்கையாளர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து உயர்த்தக்கூடியது.

(4) 56.4. பூமி பலமாக அசைக்கப்படும்போது,

(5) 56.5. மலைகள் தூள்தூளாக்கப்படும்போது

(6) 56.6. தூளாக்கப்பட்டதனால் அது உறுதி இழந்து பறக்கும் புழுதியாகிவிடும்.

(7) 56.7. அந்த நாளில் நீங்கள் மூன்று பிரிவினராக ஆகிவிடுவீர்கள்.

(8) 56.8. தங்களின் பதிவேடுகளை வலக்கையால் வாங்கக்கூடிய வலப்புறத்தினர். அவர்களின் அந்தஸ்து எத்துணை உயர்ந்தது, கண்ணியமானது!

(9) 56.9. தங்களின் பதிவேடுகளை இடக்கையால் வாங்கக்கூடிய இடப்புறத்தினர். அவர்களின் நிலை எவ்வளவு மோசமானது!

(10) 56.10. உலகில் நன்மைகளைச் செய்து முந்தியவர்கள்தாம் மறுமையிலும் சுவனத்தில் நுழைவதில் முந்தியவர்களாக இருப்பார்கள்.

(11) 56.11. அவர்கள்தாம் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெற்றவர்கள்.

(12) 56.12. இன்பம் நிறைந்த சுவனங்களில் பலவகையான இன்பங்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்,

(13) 56.13. இந்த சமூகத்திலிருந்தும் இதற்கு முந்தைய சமூகங்களிலிருந்தும் ஒரு கூட்டத்தினர்.

(14) 56.14. இறுதிக் காலத்தில் குறைவான மக்களே முந்தியவர்களாகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்களாகவும் இருப்பார்கள்.

(15) 56.15. தங்க இழைகளால் நெய்யப்பட்ட கட்டில்களில்

(16) 56.16. சாய்ந்த வண்ணம் ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக அந்த கட்டில்களில் சாய்ந்திருப்பார்கள். அவர்களில் யாரும் மற்றவரின் பிடரியைப் பார்க்க மாட்டார்கள்.

(17) 56.17. அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்காக என்றும் நிலையான, இளமையாக இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

(18) 56.18. அவர்கள் கைப்பிடிகளற்ற கோப்பைகளையும் கைப்பிடியுள்ள குவளைகளையும் சுவனத்தில் நிலையாக ஓடக்கூடிய மதுவினால் நிரப்பப்பட்ட கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

(19) 56.19. அது உலகில் காணப்படும் மதுவைப்போன்று இருக்காது. அதைக் குடிப்பவர் தலைவலிக்கோ, புத்தி பேதலிப்புக்கோ உள்ளாகமாட்டார்.

(20) 56.20. அந்தச் சிறுவர்கள் அவர்கள் விரும்பும் பழங்களையும் ஏந்திக் கொண்டு அவர்களிடம் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

(21) 56.21. அவர்கள் விரும்பும் பறவைகளின் இறைச்சியையும் ஏந்திக் கொண்டு அவர்களிடம் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

(22) 56.22. அவர்களுக்காக சுவனத்தில் அழகில் விரிந்த விழிகளையுடைய பெண்கள் இருப்பார்கள்.

(23) 56.23. அந்த பெண்கள் சிப்பிக்குள் வைக்கப்பட்டுள்ள முத்துகளைப்போன்று இருப்பார்கள்.

(24) 56.24. இது அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நற்செயல்களுக்கான கூலியாகும்.

(25) 56.25. அவர்கள் சுவனத்தில் கெட்ட வார்த்தையையோ, பாவமானவற்றையோ செவியுறமாட்டார்கள்.

(26) 56.26. ஆயினும் வானவர்கள் அவர்களுக்கு சலாம் கூறுவதையும் அவர்கள் ஒருவருக்கொருவர் சலாம் கூறிக்கொள்வதையும் செவியுறுவார்கள்.

(27) தமது வலது கையில் பட்டோலை வழங்கப்படும் வலப்புறத்தினர் அல்லாஹ்விடத்தில் எவ்வளவு பெரும் அந்தஸ்தும் மதிப்புமுடையவர்கள்

(28) 56.28. அவர்கள் முள்ளில்லாத தீங்கற்ற இலந்த மரங்களின் கீழும்,

(29) 56.29. ஒன்றோடொன்று இணைந்த அடர்த்தியான வாழை மரத்தின் கீழும்,

(30) 56.30. என்றும் முடிவடையாத தொடரான பரந்துவிரிந்த நிழலிலும்,

(31) 56.31. நிற்காமல் ஓடக்கூடிய நீரின் அருகிலும்,

(32) 56.32. மட்டிட முடியாத அளவு ஏராளமான பழங்கள் ஆகியவற்றில் இருப்பார்கள்.

(33) 56.33. அவை என்றும் அவர்களை விட்டும் முடிவடையாதவை. அவற்றுக்கு பருவம் என்று ஒன்று இல்லை. அவர்கள் அவற்றை விரும்பும் சமயத்தில் அவற்றுக்கு எத்தடையும் இருக்காது.

(34) 56.34. கட்டில்களில் விரிக்கப்பட்டுள்ள உயர்ந்த விரிப்புகள் ஆகியவற்றில் இருப்பார்கள்.

(35) 56.35. நிச்சயமாக நாம் மேற்குறிப்பிட்ட அழகிய பெண்களை புதிதாக படைத்துள்ளோம்.

(36) 56.36. நாம் அவர்களை கன்னிப் பெண்களாக ஆக்கியுள்ளோம். இதற்கு முன்னர் அவர்கள் எவராலும் தொடப்படாதவர்கள்.

(37) 56.37. அவர்கள் தங்களின் கணவர்களுக்குப் பிரியமானவர்களாக, சம வயதுடையவர்களாக இருப்பார்கள்.

(38) 56.38. நற்பாக்கியத்திற்கு அடையாளமாக வலப்பக்கம் கொண்டுசெல்லப்படும் வலப்புறத்தில் உள்ளவர்களுக்காக, நாம் அவர்களை படைத்துள்ளோம்.

(39) 56.39. அவர்கள் முந்தைய தூதர்களின் சமூகங்களிலுள்ள ஒரு பிரிவினராகவும் இருப்பார்கள்.

(40) 56.40. இறுதி சமூகமான முஹம்மதின் சமூகத்திலுள்ள ஒரு பிரிவினராகவும் இருப்பார்கள்.

(41) தமது .இடது கையில் பட்டோலை வழங்கப்படும் இடப்புறத்தினர் எவ்வளவு மோசமான தீய நிலையையும் ஒதுங்குமிடத்தையும் உடையவர்கள்!

(42) 56.42. அவர்கள் கடும் சூடான காற்றிலும், நீரிலும்

(43) 56.43. கரும்புகையுடைய நிழலிலும் இருப்பார்கள்.

(44) 56.44. அது நல்ல காற்றும் அல்ல, நல்ல காட்சியும் அல்ல.

(45) 56.45. நிச்சயமாக அவர்கள் இவ்வாறு வேதனைக்குள்ளாவதற்கு முன்னர் உலகில் தமது மன இச்சைகளைத் தவிர வேறு எந்தக் கவலைகளுமின்றி இன்பம் அனுபவித்தவர்களாக இருந்தார்கள்.

(46) 56.46. அவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதில், அவனை விடுத்து சிலைகளை வணங்குவதில் பிடிவாதமாக நிலைத்திருந்தார்கள்.

(47) 56.47. அவர்கள் மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்து பரிகாசமாகவும் சாத்தியமற்றதாகக் கருதியும் பின்வருமாறு கூறிக் கொண்டிருந்தார்கள்: “நாங்கள் இறந்து மண்ணாகவும் உக்கிய எலும்புகளாகவும் ஆகிவிட்டாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா?

(48) 56.48. எங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட எங்களின் முன்னோர்களுமா எழுப்பப்படுவார்கள்?”

(49) 56.49. -தூதரே!- மீண்டும் எழுப்புவதை நிராகரிக்கும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நிச்சயமாக மனிதர்களில் முந்தியவர்களும் பிந்தியவர்களும்

(50) 56.50. மறுமை நாளில் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் சந்தேகமின்றி ஒன்றுதிரட்டப்படுவார்கள்.”

(51) மறுமையில் எழுப்புவதை மறுத்து நேரான பாதையை விட்டும் வழிதவறிய நீங்கள்தான் மறுமைநாளில் ஸக்கூம் என்ற மிகத் தீய மோசமான மரத்திலிருந்து உண்ணுவீர்கள்.

(52) மறுமையில் எழுப்புவதை மறுத்து நேரான பாதையை விட்டும் வழிதவறிய நீங்கள்தான் மறுமைநாளில் ஸக்கூம் என்ற மிகத் தீய மோசமான மரத்திலிருந்து உண்ணுபவர்கள்.

(53) 56.53. அந்த கசப்பான மரத்திலிருந்தே உங்களின் வெற்று வயிறுகளை நிரப்பிக் கொள்வீர்கள்.

(54) 56.54. அதன்பின் கடும் சூடான நீரை அருந்துவீர்கள்.

(55) 56.55. தாகிக்கும் நோயின் காரணமாக அதிக நீரறுந்தும் ஒட்டகத்தைப் போன்று அதனை அதிகமாக அருந்துவீர்கள்.

(56) 56.56. மேற்கூறப்பட்ட இந்த கசப்பான உணவையும் சூடான நீரையும் கொண்டே அவர்கள் கூலி கொடுக்கப்படும் நாளில் வரவேற்கப்பட்டு விருந்தளிக்கப்படுவார்கள்.

(57) 56.57. -பொய்ப்பிப்பாளர்களே!- ஒன்றும் இல்லாமல் இருந்த உங்களை நாமே படைத்தோம். நீங்கள் இறந்தபிறகு நிச்சயமாக நாம் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவோம் என்பதை நீங்கள் உண்மைப்படுத்தியிருக்கவேண்டாமா?

(58) 56.58. -மனிதர்களே!- நீங்கள் உங்கள் மனைவியரின் கர்ப்பப்பையில் செலுத்தும் விந்தைக் குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா?

(59) 56.59. அந்த விந்தை நீங்கள் படைத்தீர்களா? அல்லது அதனை நாம் படைத்தோமா?

(60) 56.60. நாம் உங்களிடையே மரணத்தை விதித்துள்ளோம். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணை இருக்கின்றது. அது முந்தவோ, பிந்தவோ மாட்டாது. நாம் இயலாதவர்கள் அல்ல.

(61) 56.61. நீங்கள் அறிந்த உங்களின் படைப்பையும் வடிவத்தையும் மாற்றி நீங்கள் அறியாத படைப்பையும் வடிவத்தையும் உங்களுக்கு அளிப்பதற்கு (நாம் இயலாதவர்கள் அல்ல).

(62) 56.62. நாம் உங்களை முதன்முதலில் எவ்வாறு படைத்துள்ளோம் என்பதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். எனவே நீங்கள் படிப்பினை பெற மாட்டீர்களா? உங்களை முதன்முதலில் படைத்ததற்கு ஆற்றலுடையவன் நீங்கள் மரணித்ததன் பின் மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்பவும் ஆற்றல் பெற்றவன் என்பதை அறிந்துகொள்ள மாட்டீர்களா?

(63) 56.63. நீங்கள் பூமியில் விதைக்கும் விதையைக் கவனித்தீர்களா?

(64) 56.64. அந்த விதையை நீங்கள் முளைக்க வைக்கிறீர்களா? அல்லது நாம் அதனை முளைக்க வைக்கிறோமா?

(65) 56.65. நாம் அந்த விதையை கூளமாக ஆக்க நாடியிருந்தால் அது முளையும் நிலையை அடைந்த பின்னர் கூளமாக ஆக்கியிருப்போம். பின்னர் அதற்கு ஏற்பட்டதைக்கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

(66) 56.66. நீங்கள் கூறுவீர்கள்: “நிச்சயமாக நாம் செய்த செலவை இழந்து வேதனைக்குள்ளாகிவிட்டோம்.”

(67) 56.67. மாறாக நாம் வாழ்வாதாரத்தைவிட்டும் தடுக்கப்பட்டு விட்டோம்.”

(68) 56.68. உங்களுக்கு தாகம் வரும்போது நீங்கள் பருகும் நீரைக்குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா?

(69) 56.69. வானத்திலிருக்கும் மேகத்திலிருந்து நீங்கள் அதனை இறக்கி வைக்கிறீர்களா? அல்லது நாம் அதனை இறக்கி வைக்கிறோமா?

(70) 56.70. நாம் நாடியிருந்தால் பருகவோ, நீர்ப்பாய்ச்சவோ நீங்கள் பயன்படுத்த முடியாதபடி அந்த நீரை கடும் உப்பு நீராக ஆக்க நாடியிருந்தால் அவாறு ஆக்கியிருப்போம். உங்கள்மீது கருணை காட்டும்பொருட்டு சுவையான நீரை இறக்கியதற்கு அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

(71) 56.71. நீங்கள் உங்களின் பயன்பாட்டிற்காக மூட்டும் நெருப்பைக் கவனித்துப் பார்த்தீர்களா?

(72) 56.72. எந்த மரத்திலிருந்து நெருப்பை நீங்கள் மூட்டுகிறீர்களோ அதனை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது உங்கள்மீது கருணை காட்டும்பொருட்டு நாம் அதனை உருவாக்கினோமா?

(73) 56.73. இந்த நெருப்பை நாம் உங்களுக்கு மறுமையின் நெருப்பை நினைவூட்டக்கூடியதாகவும் உங்களின் பயணிகளுக்குக் பயனளிக்கக்கூடியதாகவும் ஆக்கியுள்ளோம்.

(74) 56.74. -தூதரே!- கண்ணியமிக்க உம் இறைவனுக்குப் பொருத்தமற்றவற்றிலிருந்து அவனைத் தூய்மைப்படுத்துவீராக.

(75) 56.75. நட்சத்திரங்கள் உதிக்குமிடங்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

(76) 56.76. நிச்சயமாக இந்த இடங்களைக்கொண்டு செய்யப்படும் சத்தியம் -அவற்றின் கண்ணியத்தை அறிவார்களானால்- அவற்றில் காணப்படும் எண்ணற்ற சான்றுகள் மற்றும் படிப்பினைகளால் அது மகத்தானதாகும்.

(77) 56.77. -மனிதர்களே!- நிச்சயமாக உங்களிடம் எடுத்துரைக்கப்படும் இந்தக் குர்ஆன் தன்னுள் உள்ளடக்கியுள்ள பெரும் நன்மைகளினால் கண்ணியமிக்க குர்ஆனாகும்.

(78) 56.78. அது மக்களின் பார்வையைவிட்டும் பாதுகாப்பட்ட லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் உள்ளது.

(79) 56.79. பாவங்கள் மற்றும் குறைகளைவிட்டும் தூய்மையான வானவர்கள்தாம் அதனைத் தொடுவார்கள்.

(80) 56.80. அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து அவனுடைய நபி முஹம்மதுமீது இறக்கப்பட்டதாகும்.

(81) 56.81. -இணைவைப்பாளர்களே!- இந்த செய்தியையா நீங்கள் உண்மைப்படுத்தாமல் பொய்யெனக் கூறுகிறீர்கள்?

(82) 56.82. அல்லாஹ்வை பொய்ப்பிப்பதுதான் உங்களுக்கு அவன் வழங்கிய அருட்கொடைகளுக்காக நீங்கள் நன்றி செலுத்தும் முறையா? எனவேதான் “இன்னஇன்ன நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது” என்று மழையை நட்சத்திரங்களின்பால் இணைத்துக் கூறுகிறீர்களா?

(83) 56.83. உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டால்

(84) 56.84. அப்போது நீங்கள் மரண மயக்கத்தில் கிடப்பவனை உங்களுக்கு முன்னால் காண்பீர்கள்.

(85) 56.85. நமது அறிவு, ஆற்றல், வானவர்கள் சகிதம் உங்களைவிட மரணிப்பவருக்கு அருகில் நாமிருப்போம். ஆயினும் உங்களால் இந்த வானவர்களைக் காண முடியாது.

(86) 56.86. -நீங்கள் எண்ணுவதுபோல உங்களின் செயல்களுக்குக் கூலி வழங்கப்படுவதற்காக நீங்கள் மீண்டும் எழுப்பப்படாதவர்களாக- இருந்திருக்கலாமே!

(87) 56.87,88. அந்தக் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களில் இறப்பவரிடமிருந்து வெளிப்படும் இந்த ஆன்மாவை உங்களால் ஏன் திரும்பக் கொண்டுவர முடிவதில்லை? நீங்கள் ஒருபோதும் அதற்கு சக்திபெற மாட்டீர்கள்.

(88) 56.88. இறப்பவர் நன்மைகளின்பால் முந்திக் கொண்டு செயல்படக்கூடியவராக இருந்தால்.

(89) 56.89. அவருக்கு ஓய்வு கிடைக்கும். அதன் பின்னர் அவர் களைப்படைய மாட்டார். நல்ல வாழ்வாதாரமும் அருளும் மனம் விரும்பியதை அனுபவிக்கும் சுவனமும் அவருக்கு உண்டு.

(90) 56.90. இறப்பவர் வலப்புறத்தில் உள்ளவராக இருந்தால் அவர்களின் விடயங்களை குறித்து நீர் கவலைப்படாதீர். அவர்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் உண்டு.

(91) 56.91. இறப்பவர் வலப்புறத்தில் உள்ளவராக இருந்தால் அவர்களின் விடயங்களை குறித்து நீர் கவலைப்படாதீர். அவர்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் உண்டு.

(92) 56.92. இறப்பவர் தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பிப்பவர்களில், நேரான வழியைவிட்டும் தவறியவர்களில் உள்ளவராக இருந்தால்

(93) 56.93. அவரை வரவேற்கும் விருந்து கடும் சூடான கொதி நீராகும்.

(94) 56.94. அவரை நரக நெருப்பு எரிக்கும்.

(95) 56.95. -தூதரே!- நாம் உமக்கு எடுத்துரைத்த இவைகளே சந்தேகமற்ற உறுதியான உண்மையாகும்.

(96) 56.96. மகத்தான உம் இறைவனின் பெயரைத் தூய்மைப்படுத்துவீராக. குறைகளைவிட்டும் அதனைத் தூய்மைப்படுத்துவீராக.