14 - ஸூரா இப்ராஹீம் ()

|

(1) 14.1. (الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. -தூதரே!- அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் உதவியைப் பெற்று நீர் மக்களை நிராகரிப்பு, அறியாமை, வழிகேடு ஆகியவற்றிலிருந்து வெளியேற்றி ஈமான், அறிவு, இஸ்லாமிய மார்க்கத்திற்கான வழிகாட்டல் ஆகியவற்றின் பக்கம் கொண்டு வருவதற்காகவே நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம். இஸ்லாமிய மார்க்கமே யாவற்றையும் மிகைத்த அல்லாஹ்வின் பாதையாகும். அவனை யாராலும் மிகைக்க முடியாது. எல்லாவற்றிலும் அவன் புகழுக்குரியவன்.

(2) 14.2. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனுடைய படைப்பில் எதுவும் அவனுக்கு இணையாக்கப்படக் கூடாது. நிராகரித்தவர்களை கடும் வேதனை வந்தடையும்.

(3) 14.3. நிராகரிப்பாளர்கள் மறுமை, அதன் நிலையான இன்பங்களுக்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கை, அதன் அழியக்கூடிய இன்பங்களை விரும்புகிறார்கள். மக்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள். அதில் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக அது மோசமானதாகவும் சத்தியத்தை விட்டும் நெறிபிறழ்ந்தும் கோணலாகவும் இருக்க வேண்டும் என நாடுகிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள் சரியானவை, சத்தியத்தை விட்டும் தூரமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.

(4) 14.4. நாம் அனுப்பிய தூதர்கள் அனைவரையும் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்த தூதை மக்கள் இலகுவாக புரிந்துகொள்ளும் பொருட்டு அவரவர் சமூகம் பேசுகிற மொழியிலேயே அனுப்பினோம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும் என்று அவர்களை நிர்ப்பந்திப்பதற்காக நாம் அவர்களை அனுப்பவில்லை. அல்லாஹ் தான் நாடியவர்களை தன் நீதியால் வழிதவறச் செய்கிறான். தான் நாடியவர்களுக்கு தன் அருளால் நேர்வழி காட்டுகிறான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், ஏற்பாட்டில் அவன் ஞானம்மிக்கவன்.

(5) 14.5. நாம் மூஸாவை அனுப்பினோம். அவரது நம்பகத் தன்மையையும், அவர் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை அறிவிக்கும் சான்றுகளைக் கொண்டு அவரை வலுப்படுத்தினோம். அவருடைய சமூகத்தை நிராகரிப்பு, அறியாமை என்பவற்றிலிருந்து ஈமான், அறிவு ஆகியவற்றின் பக்கம் வெளியேற்றுமாறு நாம் அவருக்குக் கட்டளையிட்டோம். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்த நாட்களை அவர்களுக்கு நினைவூட்டுமாறு நாம் அவருக்குக் கட்டளையிட்டோம். நிச்சயமாக இந்த நாட்களில், அல்லாஹ்வின் ஏகத்துவத்தையும், அவனுடைய மகத்தான வல்லமையையும், நம்பிக்கையாளர்களின் மீது அவனது அருள் புரிதலையும் அறிவிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுடைய அத்தாட்சி, அருட்கொடைகளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்தும் பொறுமையாளர்கள்தாம் இந்த நாட்களைக் கொண்டு பயனடைவார்கள்.

(6) 14.6. -தூதரே!- மூஸா தம் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி, தம் சமூகத்தினரான இஸ்ராயீலின் மக்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்களிடம் கூறியதை நினைவு கூர்வீராக. அவர் கூறினார்: “ சமூகமே! உங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள்: பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அவன் உங்களைக் காப்பாற்றி, அவர்களின் தீங்குகளிலிருந்து உங்களைப் பாதுகாத்தான். அவர்கள் உங்களை கொடிய வேதனையில் ஆழ்த்தியிருந்தார்கள். பிர்அவ்னின் ஆட்சியைப் பிடித்துக்கொள்ளும் ஒருவன் உங்களிடையே பிறந்துவிடக் கூடாது என்பதற்காக அவன் உங்களின் ஆண் மக்களைக் கொலை செய்து கொண்டும் உங்களை இழிவுபடுத்தவும் அவமானப்படுத்தவும் உங்களின் பெண் மக்களை உயிருடன் விட்டுவைத்துக் கொண்டும் இருந்தான். அவர்களின் இந்த செயல்களில் உங்களின் பொறுமைக்கு மாபெரும் சோதனை இருந்தது. நீங்கள் இந்த சோதனையில் பொறுமையாக இருந்ததால் பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அவன் உங்களைக் காப்பாற்றி உங்களுக்கு வெகுமதியளித்தான்.

(7) 14.7.மூஸா அவர்களிடம் கூறினார்: “உங்கள் இறைவன் உங்களுக்கு உறுதியாக அறிவித்ததை நினைவுகூருங்கள்: “அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றிசெலுத்தினால் அவன் தன் அருட்கொடைகளையும் சிறப்பையும் உங்களுக்கு இன்னும் அதிகமாக வழங்குவான். நீங்கள் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டால் நிச்சயமாக தனது அருள்களை மறுத்து அவற்றுக்கு நன்றி செலுத்தாதோருக்கு அவனுடைய வேதனை கடுமையானது.”

(8) 14.8. மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: சமூகமே, “நீங்களும் உங்களுடன் சேர்ந்து பூமியிலுள்ள அனைவரும் அல்லாஹ்வை நிராகரித்தாலும் அதனால் நீங்கள்தாம் பாதிக்கப்படுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைவரையும் விட்டு தேவையற்றவன்; தன் உள்ளமையை கொண்டு புகழுக்குரியவன். நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை அவனுக்கு எந்த பயனையும் அளித்து விடுவதில்லை; நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவனுக்கு எந்த தீங்கையும் அளித்து விடுவதில்லை.”

(9) 14.9. -நிராகரிப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் நிராகரித்த நூஹின் சமூகம், ஹூத் உடைய சமூகம் ஆத், ஸாலிஹின் சமூகம், ஸமூத் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வந்த சமூகங்கள் அவற்றின் எண்ணிக்கையை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான் - ஆகியவை அழிக்கப்பட்ட செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தங்கள் தூதர்களின் மீதுள்ள வெறுப்பினால் தமது கரங்களை வாயிலிட்டு விரல்களைக் கடித்துக் கொண்டனர். மேலும் தங்களின் தூதர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் கொண்டு வந்ததை நாங்கள் நிராகரித்து விட்டோம். நீங்கள் எங்களை அழைக்கும் விஷயத்தில் நாங்கள் கடும் சந்தேகத்தில் இருக்கின்றோம்.”

(10) 14.10. அவர்களின் தூதர்கள் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்கள்: “அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்திருக்கும் நிலையில், அவனை மட்டுமே வணக்கத்தில் ஏகத்துவப்படுத்த வேண்டும் என்பதிலும் சந்தேகமா? உங்களின் முந்தைய பாவங்களை மன்னிப்பதற்காகவும் உங்களது உலக வாழ்வில் குறிக்கப்பட்ட உங்கள் தவணைகளைப் பூர்த்தி செய்யும் வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவும், தன்னை நம்பிக்கை கொள்ளுமாறு உங்களை அவன் அழைக்கின்றான்.” அவர்களின் சமூகத்தினர் அவர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எங்களை விட உங்களுக்கு எந்த சிறப்பும் இல்லை. எங்கள் முன்னோர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களை திசைதிருப்பப் பார்க்கிறீர்கள். “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமிருந்து எங்களின் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள்” என்ற உங்கள் கூற்றில் உண்மையாளர்கள் என்பதற்கான தெளிவான ஆதாரத்தை எங்களிடம் கொண்டு வாருங்கள்.”

(11) 14.11. அவர்களின் தூதர் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்கள்: “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எல்லா விஷயங்களிலும் நாங்கள் உங்களைப் போன்று இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு பிரத்யேகமான அருளை வழங்கி, அவர்களை மக்களுக்குத் தூதர்களாகத் தேர்ந்தெடுக்கிறான். அல்லாஹ்வின் நாட்டமின்றி நீங்கள் வேண்டும் ஆதாரங்களை எங்களால் கொண்டுவர முடியாது. அதற்கு எமக்கு ஆற்றலும் இல்லை. மாறாக அல்லாஹ் மட்டுமே அதற்கு ஆற்றலுடையவன். அவனை நம்பிக்கை கொண்டோர் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

(12) 14.12. நாங்கள் அல்லாஹ்வை சார்ந்திருப்பதற்கு எதுதான் நமக்குத் தடையாக அமையமுடியும்? அவன்தானே எங்களுக்கு சரியான, தெளிவான பாதையின்பால் எங்களுக்கு வழிகாட்டினான். மறுத்து, பரிகாசம் செய்து நீங்கள் எங்களுக்குத் தரும் தொல்லைகளை நிச்சயமாக நாங்கள் பொறுத்துக் கொள்வோம். சார்ந்திருப்பவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.

(13) 14.13. தங்களின் தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களுடன் விவாதிக்க இயலாமல் அவர்களிடம் கூறினார்கள்: “நாங்கள் உங்களை எங்களின் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம் அல்லது நீங்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு விட்டு எங்கள் மார்க்கத்தின்பால் திரும்பிவிட வேண்டும்.” அல்லாஹ் தூதர்களை உறுதிப்படுத்தியவாறு வஹி அறிவித்தான்: “அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்த அநியாயக்காரர்களை நிச்சயம் நாம் அழித்தே தீருவோம்.”

(14) 14.14. -தூதர்களே!, உங்களைப் பின்பற்றியோரே- அவர்களை அழித்த பிறகு பூமியில் நாம் உங்களை வசிக்கச் செய்வோம். மறுப்பவர்களான நிராகரிப்பாளர்களை அழித்து, அதன் பிறகு தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் அந்தப் பூமியில் நாம் வசிக்கச் செய்வது, எனது கண்ணியத்தையும் கண்காணிப்பையும் கவனத்தில் கொண்டு, வேதனை ஏற்படும் என்ற எனது எச்சரிக்கையை அஞ்சியவருக்கேயாகும்.

(15) 14.15. தூதர்கள் தங்கள் இறைவனிடம் எதிரிகளுக்கு எதிராக தங்களுக்கு உதவி புரியும்படி வேண்டினார்கள். கர்வம் கொண்ட சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதம் மிக்க ஒவ்வொருவரும் நஷ்டமடைந்து விட்டார்கள். அது தெளிவாக இருந்தும் அவர்கள் அதனைப் பின்பற்றுவதில்லை.

(16) 14.16. மறுமையில் இந்த கர்வம் கொண்டவர்களுக்கு முன்னால் நரகமே இருக்கின்றது. அது அவர்களுக்காக காத்திருக்கின்றது. அங்கு நரகவாசிகளின் உடல்களிலிருந்து வழியும் சீழ்களிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அது அவர்களின் தாகத்தை தணிக்காது. தாகத்தாலும் இன்னபிற வேதனைகளாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

(17) 14.17. அதன் கசப்பு, சூடு, துர்நாற்றம் ஆகியவற்றின் காரணமாக தொடராக அதனைப் பருகுவதற்கு சிரமப்படுவார்கள். அவர்களால் அதனை விழுங்க முடியாது. அவர்களை சுற்றி காணப்படும் கடுமையான வேதனையினால், மரணம் எல்லா புறங்களிலிருந்தும் அவர்களை வந்தடையும். அவன் ஓய்வு பெறுவதற்கு மரணிக்கவும் மாட்டான். மாறாக உயிரோடு இருந்து வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு முன்னால் வேறொரு கடுமையான வேதனையும் காத்திருக்கின்றது.

(18) 14.18. தர்மம் செய்தல், உபகாரம் செய்தல், பலவீனர்கள் மீது இரக்கம் காட்டுதல் போன்ற நிராகரிப்பாளர்கள் செய்யும் நற்செயல்கள், புயல் வீசும் நாளில் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட சாம்பலைப் போன்றதாகும். அது அதனை தூக்கி வீசி நாலா புறமும் அடையாளம் தெரியாதவாறு சிதறடித்து விட்டது. இது போன்று நிராகரிப்பாளர்களின் செயல்களை நிராகரிப்பு ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டது. மறுமை நாளில் அவர்களுக்கு அவை பலனளிக்காது. ஈமானின் அடிப்படையில் அமையாத அச்செயல்கள் சத்திய பாதையை விட்டும் தூரமான வழிகேடாகும்.

(19) 14.19. அல்லாஹ் வானங்களையும் பூமியையையும் ஒரு நோக்கத்துடன் படைத்துள்ளான். அவையிரண்டையும் வீணாகப் படைக்கவில்லை என்பதை நீர் பார்க்கவில்லையா? -மனிதர்களே!- அவன் உங்களை அழித்துவிட்டு, அவனை வணங்கி, வழிபடும் வேறொரு படைப்பை கொண்டு வர அவன் நாடினால் உங்களை அழித்துவிட்டு, அவனை வணங்கி, வழிபடும் வேறொரு படைப்பை கொண்டு வருவான். இவ்வாறு செய்வது அவனுக்கு இலகுவான காரியமாகும்.

(20) 14.20. உங்களை அழிப்பதும், நீங்கள் அல்லாத வேறொரு படைப்பைக் கொண்டு வருவதும் அவனால் முடியாததல்ல. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.

(21) 14.21. மறுமை நாளில் படைப்புகள் அனைத்தும் தங்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கம் வருவார்கள். தலைவர்களைப் பின்பற்றிய பலவீனர்கள் தாங்கள் பின்பற்றிய தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: -தலைவர்களே- “நாங்கள் உங்களைப் பின்பற்றக்கூடியவர்களாக இருந்தோம். உங்களின் ஏவல்களை ஏற்றும் விலக்கல்களை விலகியும் நடந்தோம். உங்களால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்தும் சிறிதளவேனும் எங்களைக் காப்பாற்ற முடியுமா?” பின்பற்றப்பட்ட தலைவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிருந்தால் நாங்கள் உங்களுக்கும் நேர்வழி காட்டியிருப்போம். நாம் அனைவரும் அவனுடைய வேதனையிலிருந்து தப்பியிருப்போம். ஆனால் நாமும் வழிகெட்டு. உங்களையும் வழிகெடுத்து விட்டோம். நாம் வேதனையை சகித்துக் கொண்டாலும் அல்லது பொறுமையடைந்தாலும் இரண்டுமே நமக்கு ஒன்றுதான். நாம் வேதனையிலிருந்து தப்ப முடியாது.”

(22) 14.22. சுவனவாசிகள் சுவனத்தில் நுழையும் போதும், நரகவாசிகள் நரகத்தில் நுழையும் போதும் இப்லீஸ் கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளித்தான். தான் அளித்த வாக்குறுதியை அவன் நிறைவேற்றினான். நான் உங்களுக்குப் பொய்யான வாக்குறுதி அளித்தேன். நான் அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றவில்லை. உலகில் உங்களை நிராகரிப்பின் பக்கமும், வழிகேட்டின் பக்கமும் தள்ளுவதற்கு நான் உங்கள் மீது ஆதிக்கம் பெற்றிருக்கவில்லை. ஆனால் நிராகரிப்பின் பக்கம் நான் உங்களை அழைத்தேன்; பாவங்களை உங்களுக்கு அலங்கரித்துக் காட்டினேன். நீங்கள் விரைந்து என்னைப் பின்பற்றினீர்கள். எனவே உங்களது வழிகேட்டுக்கு என்னைப் பழிக்காதீர்கள். உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். நீங்கள்தாம் பழிப்பிற்குத் தகுதியானவர்கள். உங்களின் வேதனையை அகற்றுவதற்கு நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. என்னை விட்டு வேதனையை அகற்றுவதற்கு நீங்களும் எனக்கு உதவ முடியாது. நீங்கள் வணக்கத்திலே அல்லாஹ்வுக்கு இணையாக என்னை வணங்கியதை நான் நிராகரித்து விட்டேன். -இவ்வுலகில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்திய, அவனை நிராகரித்த- அநியாயக்காரர்களுக்கு மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.

(23) 14.23. அநியாயக்காரர்களுக்கு மாறாக நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்கள் சுவனங்களில் நுழைவிக்கப்படுவார்கள். அவற்றின் மாளிகைகள் மற்றும் மரங்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் தங்கள் இறைவனின் அனுமதியோடு என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறுவார்கள். வானவர்களும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவார்கள். அவர்களின் இறைவன் அவர்களுக்கு சலாம் கூறுவான்.

(24) 14.24. -தூதரே!- “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஓரிறைக் கொள்கையின் வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அது பேரீச்சை மரமாகும். அது அதன் நல்ல வேர்களின் மூலமாக நீரை உறிஞ்சி அதன் தண்டு பூமியில் நிலையாக இருக்கிறது. அதன் கிளைகள் வானத்தின்பால் உயர்ந்து மழைத் துளிகளிலிருந்து நீரை உறிஞ்சுகிறது; நல்ல காற்றையும் சுவாசிக்கிறது.

(25) 14.25. இந்த நல்ல மரம் தன் இறைவனின் கட்டளைப்படி எல்லா நேரங்களிலும் நல்ல பழத்தைத் தருகிறது. மக்கள் படிப்பினை பெறும் பொருட்டு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.

(26) 14.26. இணைவைப்பான தீய வார்த்தை வேரோடு பிடுங்கி எறியப்பட்ட தீய கள்ளிச் செடியைப் போன்றதாகும். அதற்கு பூமியில் எந்த உறுதியும் இல்லை. வானத்தின் பக்கம் உயர்ந்த கிளைகளும் இல்லை. அது இறந்து காற்றோடு அடித்துச் செல்லப்படுகிறது. எனவே நிராகரிப்பைத் தாங்கிய வார்த்தையின் முடிவு அழிவே. அவனது எந்த நல்லறமும் அல்லாஹ்விடம் செல்லாது.

(27) 14.27. நிலையான ஏகத்துவ வார்த்தையை இவ்வுலகில் பூரணமாக நம்பிக்கை கொண்ட முஃமீன்களுக்கு அவர்கள் நம்பிக்கையுடன் மரணிக்கும் பொருட்டு உறுதியை வழங்குகிறான். அதேபோன்று மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் அவர்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கிய அநியாயக்காரர்களை, அவனை நிராகரிப்பவர்களை அவன் நேரான பாதையை விட்டும் நெறிபிறழச் செய்து விடுகிறான். அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். தன் நீதியால் தான் நாடுபவர்களை வழிதவறச் செய்கிறான். தன் அருளால் தான் நாடுபவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான். அவனை நிர்ப்பந்திக்கும் எவரும் இல்லை.

(28) 14.28. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த குறைஷிகளை நீர் பார்க்கவில்லையா? ஹரமில் பாதுகாப்பு அளித்து, அவர்களிடையே முஹம்மத் என்ற தூதரை ஏற்படுத்தி அல்லாஹ் அவர்கள் மீது புரிந்து அருட்கொடைகளுக்குப் பகரமாக நபியவர்கள் கொண்டு வந்தததை மறுத்து அவனது அருள்களை நிராகரித்தார்கள். தங்கள் சமூகத்தில் நிராகரிப்பில் அவர்களைப் பின்பற்றியோரை அழிவில் தள்ளவிட்டார்கள்.

(29) 14.29. அந்த அழிவின் வீடு நரகமாகும். அதன் வெப்பத்தில் சுழன்றுகொண்டே அதில் அவர்கள் நுழைவார்கள். அது அவர்களின் தங்குமிடங்களில் மோசமான தங்குமிடமாகும்.

(30) 14.30. இணைவைப்பாளர்கள் தாங்கள் வழிகெட்ட பிறகு தங்களைப் பின்பற்றுபவர்களையும் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “இவ்வுலக வாழ்வில் இச்சைகளினாலும் சந்தேகங்களைப் பரப்பியும் அனுபவித்துக் கொள்ளுங்கள். ஆனால் மறுமை நாளில் நீங்கள் நரகத்தின் பக்கமே திரும்ப வேண்டும். உங்களுக்கு அதைத் தவிர வேறு திரும்புமிடம் இல்லை.

(31) 14.31. -தூதரே!- நீர் நம்பிக்கையாளர்களிடம் கூறுவீராக: “நம்பிக்கையாளர்களே! எவ்வித வியாபாரமோ, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து விமோசனமளிக்கும் ஈடோ, ஒரு நண்பன் தன்னுடைய இன்னொரு நண்பனுக்கு பரிந்துரை செய்யும் உற்ற நட்போ இல்லாத அந்த நாள் வருவதற்கு முன்னரே தொழுகையை சிறந்த முறையில் நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து கடமையாக்கப்பட்ட தர்மங்களையும் உபரியான தர்மங்களையும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமையும் பொருட்டு வெளிப்படையாகவோ முஹஸ்துதியிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இரகசியமாகவோ வழங்குங்கள்.

(32) 14.32. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். -மனிதர்களே!- உங்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் பொருட்டு வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் பல்வேறு வகையான பழங்களை வெளிப்படுத்துகிறான். அவன்தான் அவனுடைய ஏற்பாட்டின் மூலம் நீரில் செல்லக்கூடிய கப்பல்களையும் நீங்கள் நீர் அருந்துவதற்காகவும் உங்கள் கால்நடைகளுக்கு நீர்ப் புகட்டுவதற்காகவும் உங்கள் பயிர்களுக்கு நீர்பாய்ச்சுவதற்காகவும் ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்.

(33) 14.33. அவனே சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இரவையும் பகலையும் பின்தொடர்ந்துவரக்கூடியதாக உங்களுக்கு ஆக்கித் தந்துள்ளான். இரவை நீங்கள் உறங்குவதற்காகவும் ஓய்வெடுப்பதற்காகவும் பகலை உங்கள் செயல்பாட்டுக்காகவும் தொழிலுக்காகவும் அவன் ஆக்கித் தந்துள்ளான்.

(34) 14.34. நீங்கள் வேண்டிய, வேண்டாத அனைத்திலிருந்தும் அவன் உங்களுக்குத் தந்துள்ளான். அதன் அதிகரிப்பினால் அவனுடைய அருட்கொடைகளை எண்ணினால் அவற்றை எண்ணி முடிக்க நீங்கள் ஆற்றல் பெறமாட்டீர்கள். அவற்றுள் சில உதாரணங்கள்தான் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளன. நிச்சயமாக மனிதன் தன்மீதே மிகவும் அநீதி இழைப்பவனாகவும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு அதிகமாக நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்ளக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

(35) 14.35. -தூதரே!- இப்ராஹீம் தம் மகன் இஸ்மாயீலையும் அவரது தாய் ஹாஜரையும் மக்காவிலுள்ள பள்ளத்தாக்கில் குடியமர்த்திய போது கூறியதை நினைவுகூர்வீராக. அவர் கூறினார்: “இறைவா! என் குடும்பத்தினரைக் குடியமர்த்தும் இந்த -மக்கா- நகரத்தை பாதுகாப்பானதாக ஆக்குவாயாக. இங்கு இரத்தம் சிந்தப்படக் கூடாது. எவர் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது. என்னையும் என் சந்ததியினரையும் சிலை வழிபாட்டிலிருந்து தூரமாக்குவாயாக.

(36) 14.36. இறைவா! நிச்சயமாக சிலைகள் மக்களில் ஏராளமானோரை வழிகெடுத்து விட்டன. அவை அவர்களுக்காகப் பரிந்துரை செய்யும் என்று அவர்கள் எண்ணி அதனால் சோதனைக்குள்ளாகி அல்லாஹ் அல்லாத அவற்றையும் அவர்கள் வணங்கினார்கள். அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதிலும் அவனுக்குக் கட்டுப்படுவதிலும் மக்களில் என்னைப் பின்பற்றியவர் என்னைச் சார்ந்தவர்களில் ஒருவர் ஆவார். எனக்கு மாறுசெய்து, அல்லாஹ் ஒருவனையே வணங்குவதிலும், அவனுக்குக் கட்டுப்படுவதிலும் என்னைப் பின்பற்றாதவர் ஆவர், -இறைவா!- நிச்சயமாக நீ நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றாய்.

(37) 14.37. எங்கள் இறைவா! நான் எனது சந்ததியினரில் சிலரை என் மகன் இஸ்மாயீல் மற்றும் அவருடைய பிள்ளைகள் பயிரோ தண்ணீரோ அற்ற புனிதமான உன் இல்லத்திற்கு அருகில் (மக்காவில்) உள்ள பள்ளத்தாக்கில் குடியமர்த்தியுள்ளேன். எம் இறைவா! அவர்கள் அங்கு தொழுகையை நிலைநாட்டவே புனித ஆலயத்துக்கு அருகாமையில் அவர்களைக் குடியிருத்தினேன். -இறைவா- மக்களின் உள்ளங்களை அவர்களின் பக்கமும் இந்த நகரத்தின் பக்கமும் பாசமுடையதாக ஆக்குவாயாக. அவர்கள் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு கனி வகைகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக.

(38) 14.38. எங்கள் இறைவா! நாங்கள் இரகசியமாகச் செய்வதையும், வெளிப்படையாகச் செய்வதையும் நீ அறிவாய். வானத்திலோ பூமியிலோ எதுவும் அல்லாஹ்வை விட்டு மறைவாக இல்லை. மாறாக அனைத்தையும் அவன் அறிவான். நம்முடைய வறுமையும், தேவையும் அவனை விட்டு மறைவாக இல்லை.

(39) 14.39. நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நற்குழந்தைகளை வழங்குமாறு கேட்ட என் பிரார்த்தனைக்கு அவனே பதிலளித்து, தள்ளாத வயதிலும் எனக்கு ஹாஜரின் மூலம் இஸ்மாயீலையும் சாராவின் மூலம் இஸ்ஹாக்கையும் எனக்கு வழங்கினான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கக் கூடியவன்.

(40) 14.40. இறைவா! என்னையும் என் சந்ததியினரையும் சிறந்த முறையில் தொழுகையை நிறைவேற்றக் கூடியவர்களாக ஆக்குவாயாக. எங்கள் இறைவா! என் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பாயாக. அதனை உன்னிடத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக ஆக்குவாயாக.

(41) 14.41. எங்கள் இறைவா! என் பாவங்களை மன்னித்து விடுவாயாக. என் தாய் தந்தையரின் பாவங்களையும் விசாரணை செய்ய தங்களின் இரட்சகனுக்கு முன்னால் நிற்கும் நாளில் நம்பிக்கையாளர்களின் பாவங்களையும் மன்னித்து விடுவாயாக. (இது அவருடைய தந்தை அல்லாஹ்வின் எதிரி என்பதை அறிவதற்கு முன்னர் அவர் செய்த பிரார்த்தனையாகும். அவருடைய தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவான பின்னர் அவரை விட்டும் நீங்கிவிட்டார்).

(42) 14.42. -தூதரே!- அநியாயக்காரர்களின் தண்டனையை அல்லாஹ் தாமதப்படுத்துவதால் அவர்கள் செய்யும் நிராகரிப்பு, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல், இன்னும் ஏனைய செயல்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான் என்று மட்டும் ஒரு போதும் எண்ணிவிடாதீர். மாறாக அவற்றை அவன் நன்கறிவான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் வேதனையை மறுமை நாள் வரை அவன் தாமதப்படுத்துகிறான். அந்நாளில் பார்வைகள் காணும் பயங்கரங்களால் நிலைகுத்தி நின்று விடும்.

(43) 14.43. மக்கள் தங்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து எழுந்து அழைப்பவரின்பக்கம் விரையும் போது பதற்றத்தால் அவர்களின் தலைகள் வானத்தின்பால் உயர்ந்தவையாக இருக்கும். அவர்களின் பார்வைகள் அவர்களின்பால் திரும்ப வராது. மாறாக அவை காணும் பயங்கரங்களால் நிலைகுத்தி நின்று விடும். புத்தியில்லாமல் அவர்களின் உள்ளங்கள் வெறுமையாக இருக்கும். அந்த நாளில் பதற்றத்தினால் எதையும் அவற்றால் புரிந்துகொள்ள முடியாது.

(44) 14.44. -தூதரே!- மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து உம் சமூகத்தினரை அச்சமூட்டுவீராக. அப்போது அல்லாஹ்வை நிராகரித்து, அவனுக்கு இணைவைத்து தமக்குத் தாமே அநீதியிழைத்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக. எங்களை விட்டும் வேதனையைத் தாமதப்படுத்துவாயாக. கொஞ்ச நாள் வரை எங்களை இவ்வுலகின்பால் திருப்பி அனுப்புவாயாக. நாங்கள் உன்மீது நம்பிக்கை கொண்டு நீ எங்களின் பக்கம் அனுப்பிய தூதர்களைப் பின்பற்றுகிறோம்.” அவர்களைக் கண்டித்தவாறு அவர்களுக்குப் பதிலளிக்கப்படும்: “மரணித்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்தவாறு நிச்சயமாக இவ்வுலகத்திலிருந்து மறுமையின்பால் எந்த இடம்பெயர்வும் இல்லை என்று நீங்கள் சத்தியமிட்டுக் கூறவில்லையா?!

(45) 14.45. அல்லாஹ்வை நிராகரித்து தமக்குத்தாமே அநீதியிழைத்துக்கொண்ட ஹூத் நபியின் சமூகம், ஸாலிஹ் நபியின் சமூகம் போன்ற உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமூகங்கள் வசித்த இடங்களில்தான் நீங்கள் வசிக்கிறீர்கள். அவர்களுக்கு நாம் ஏற்படுத்திய அழிவு உங்களுக்குத் தெரியும். நீங்கள் படிப்பினை பெறும் பொருட்டு அல்லாஹ்வின் வேதத்தில் நாம் உதாரணங்களைக் கூறினோம். ஆனால் நீங்கள் படிப்பினை பெறவில்லை.

(46) 14.46. முன்னர் அநியாயக்கார சமூகங்கள் வாழ்ந்த வசிப்பிடங்களில் வசிக்கும் இவர்கள் முஹம்மது நபியைக் கொல்வதற்கும், அவருடைய அழைப்புப் பணியை நிறுத்துவதற்கும் இரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். அவர்களின் இரகசியத் திட்டங்களை அல்லாஹ் அறிவான். அதில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. இவர்களின் திட்டம் பலவீனமானது. அதன் பலவீனத்தினால் மலைகளையோ எனையவற்றையோ அது அகற்றாது. ஆனால் அல்லாஹ் அவர்களுக்குச் செய்யும் சூழ்ச்சி அதற்கு மாற்றமானது.

(47) 14.47. -தூதரே!- அல்லாஹ் தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதாக தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுவான் என்று ஒருபோதும் நீர் எண்ணிவிடாதீர். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைத்துவிட முடியாது. அவன் தன் நேசர்களை மேலோங்கச் செய்கிறான். தன் எதிரிகளையும் தனது தூதர்களின் எதிரிகளையும் கடுமையாக பழி தீர்ப்பவன்.

(48) 14.48. மறுமைநாள் நிகழும்போது, இந்த பூமி தூய்மையான, வெண்மையான வெறொரு பூமியாக, வானங்கள் வேறு வானங்களாக மாற்றப்படும் நாளில் நிராகரிப்பாளர்கள் தண்டிக்கப்படுவார்கள். மக்கள் தங்கள் அடக்கத்தலங்களிலிருந்து வெளிப்பட்டு தங்கள் உடல்களோடும் செயல்களோடும் அனைவரையும் அடக்கியாளும் ஏகனான அல்லாஹ்வின் முன்னால் நிற்பார்கள்.

(49) 14.49,50. தூதரே! பூமி வேறு பூமியாக வானங்கள் வேறு வானங்களாக மாற்றப்படும் நாளில் நிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும் ஒருவருக்கொருவர் விலங்குகளால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர். அவர்களின் கைகளும் கால்களும் அவர்களின் கழுத்தோடு சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கும். அவர்களின் ஆடைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். அவர்களின் முகங்களை நெருப்பு மூடியிருக்கும்.

(50) 14.49,50. தூதரே! பூமி வேறு பூமியாக வானங்கள் வேறு வானங்களாக மாற்றப்படும் நாளில் நிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும் ஒருவருக்கொருவர் விலங்குகளால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர். அவர்களின் கைகளும் கால்களும் அவர்களின் கழுத்தோடு சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கும். அவர்களின் ஆடைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். அவர்களின் முகங்களை நெருப்பு மூடியிருக்கும்.

(51) 14.51. இது ஒவ்வொரு ஆன்மாவும் செய்த நற்செயல்கள் அல்லது தீய செயல்களுக்கு கூலி வழங்குவதற்காகவேயாகும். நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் விரைவானவன். அவன் அனைவரையும் ஒரேநாளில் விசாரணை செய்துவிடுவான். ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரிப்பதில் அவனுக்கு எந்த சிரமமும் இல்லை.

(52) 14.52. முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து மக்களுக்கு வந்த அறிவிப்பாகும். இதிலுள்ள கடுமையான எச்சரிக்கைகளைக் கொண்டு அவர்களை அச்சமூட்டுவதற்காகவும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் என்பதை அறிந்து அவனுக்கு யாரையும் இணையாக்காது அவனை வணங்க வேண்டும் என்பதற்காகவும் நேர்த்தியான அறிவுடையவர்கள் அறிவுரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இது வந்துள்ளது. ஏனெனில் அவர்களே உபதேசங்களையும், படிப்பினைகளையும் கொண்டு பயனடைவார்கள்.