(1) 15.1. (الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. உயர்ந்த அந்தஸ்துகளுடைய, அல்லாஹ்விடமிருந்து இறங்கியுள்ளது என்பதை அறிவிக்கக்கூடிய இந்த வசனங்கள், ஏகத்துவத்தையும் சட்ட திட்டங்களையும் தெளிவுபடுத்தும் குர்ஆனின் வசனங்களாகும்.
(2) 15.2. தமக்கு உண்மை புரிந்து, உலகில் நிராகரிப்பில் இருந்தமை தவறு என்பது அவர்களுக்குப் புரியும் போது நாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கக் கூடாதா என்று மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் ஏங்குவார்கள்.
(3) 15.3. -தூதரே!- இந்த நிராகரிப்பாளர்களை விட்டு விடுவீராக. அவர்கள் கால்நடைகளைப் போன்று உண்ணட்டும்; அழியக்கூடிய இன்பங்களை அனுபவிக்கட்டும்; நீண்ட ஆசைகள் அவர்களை ஈமானை விட்டும், நற்செயல்களை விட்டும் திசைதிருப்பட்டும். மறுமை நாளில் அல்லாஹ்விடம் அவர்கள் சென்றால் அவர்கள் எவ்வளவு நஷ்டத்தில் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்.
(4) 15.4. எந்தவொரு அநியாயக்கார ஊர் மீதும் அல்லாஹ்வின் அறிவில் உள்ள அதற்கென குறிக்கப்பட்ட தவணையிலன்றி நாம் அழிவை இறக்கவில்லை. அதனை விட்டு முந்தவும் முடியாது; பிந்தவும் முடியாது.
(5) 15.5. எந்தவொரு சமூகத்திற்கும் அதற்கான தவணை வருவதற்கு முன்னர் அழிவு வராது. அதற்கான தவணை வந்து விட்டால் தாமதிக்கவும் மாட்டாது. அநியாயக்காரர்கள் அல்லாஹ் அளிக்கும் அவகாசத்தைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது.
(6) 15.6. மக்காவைச் சார்ந்த நிராகரிப்பாளர்கள் தூதரிடம் கூறுகிறார்கள்: “அறிவுரை தன் மீது இறக்கப்பட்ட(தாக எண்ணிக்கொண்டிருப்ப)வரே! நிச்சயமாக உமது இந்த அழைப்பின் மூலம் நீர் பைத்தியக்காரர்களில் ஒருவராக இருக்கின்றீர். பைத்தியக்காரர்கள் செயல்படுவதைப் போன்றே நீர் செயல்படுகின்றீர்.
(7) நீர் உண்மையாளராக இருந்தால் நீர் இறைத்தூதர்தான் என சாட்சி கூறும் வானவர்களைக் கூட்டிவரக்கூடாதா?
(8) 15.8. மலக்குமார்கள் வரவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை மறுத்துரைத்தவாறு அல்லாஹ் கூறுகிறான்: “உங்களை வேதனையைக் கொண்டு அழிக்கும் சமயத்தில் ஒரு நோக்கத்திற்கேற்பவே தவிர நாம் வானவர்களை இறக்கமாட்டோம். - அவர்கள் நம்பிக்கை கொள்ளாத நிலையில் வானவர்களை நாம் இறக்கினால்- அவர்களுக்கு நாம் அவகாசம் அளிக்க மாட்டோம். மாறாக அவர்கள் உடனே தண்டிக்கப்படுவார்கள்.
(9) 15.9. மனிதர்களுக்கு அறிவுரையாக அமையும் பொருட்டு நாம்தான் இந்த குர்ஆனை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் இறக்கினோம். நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை கூடுதல், குறைவு, சிதைவு, திரிபு ஆகியவற்றிலிருந்து நாமே பாதுகாப்போம்.
(10) 15.10. -தூதரே!- உமக்கு முன்னர் நாம் தூதர்களை நிராகரித்த கூட்டங்களின்பால் அனுப்பினோம். அவர்கள் தூதர்களை நிராகரித்து விட்டார்கள். உமது சமுதாயத்தினால் மறுக்கப்படுவதில் நீர் புதுமையான ஒரு தூதர் அல்ல.
(11) 15.11. முன்னர் நிராகரித்த அந்த கூட்டங்களிடம் யாரேனும் தூதர் வந்தபோதெல்லாம் அவரை அவர்கள் நிராகரித்தார்கள்; அவரை பரிகாசம் செய்தார்கள்.
(12) 15.12. அந்த சமூக மக்களின் உள்ளங்களில் நாம் நிராகரிப்பை நுழைவித்தது போலவே மக்காவில் வசிக்கும் இந்த இணைவைப்பாளர்களின் உள்ளங்களிலும் அவர்களின் பிடிவாதத்தினாலும் புறக்கணிப்பினாலும் நாம் நிராகரிப்பை நுழைவித்துவிட்டோம்.
(13) 15.13. அவர்கள் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். தூதர்கள் கொண்டு வந்ததை நிராகரித்த சமூகங்களை அழிக்கும் அல்லாஹ்வின் வழிமுறை நடந்தேயிருக்கின்றன. எனவே உம்மை நிராகரிப்பவர்கள் படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும்.
(14) 15.14. இந்த நிராகரிப்பாளர்களுக்கு தெளிவான ஆதாரங்களின் மூலம் சத்தியம் தெளிவாகி விட்டாலும், அவர்கள் பிடிவாதங்கொண்டவர்களாகவே உள்ளனர். எனவேதான் நாம் அவர்களுக்காக வானத்தின் கதவைத் திறந்து அதில் அவர்கள் ஏறிப் பார்த்தாலும் (நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்).
(15) 15.15. நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். மாறாக “எங்களின் பார்வைகள் தடுக்கப்பட்டு உள்ளது. நாம் காண்பது சூனியத்தின் தாக்கமாகும். நாங்கள் சூனியம் செய்யப்பட்டுள்ளோம்” என்று கூறுவார்கள்.
(16) 15.16. தரை மற்றும் கடலின் இருள்களில் மக்கள் பயணம் செய்யும் போது அவர்கள் வழிகாட்டலைப் பெறுவதற்காக நாம் வானத்தில் பிரமாண்டமான நட்சத்திரங்களை ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ்வின் வல்லமையை அறிந்துகொள்ளும் பொருட்டு அவற்றைப் பார்ப்போருக்கு நாம் அலங்கரித்துள்ளோம்.
(17) 15.17. அல்லாஹ்வின் அருளில் இருந்து விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் வானத்தை பாதுகாத்துள்ளோம்.
(18) 15.18. ஆனால் யாரேனும் வானவர்களின் உரையாடலை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்டால் பிரகாசமான எரிநட்சத்திரம் அவனைப் பின்தொடர்ந்து பொசுக்கி விடும்.
(19) 15.19. மனிதர்கள் தங்குவதற்காக நாம் பூமியை விரித்துள்ளோம். அது அவர்களைக் கொண்டு ஆட்டம் காணாமல் இருப்பதற்காக உறுதியான மலைகளை அதில் ஏற்படுத்தியுள்ளோம். அதில் எல்லாவகையான தாவரங்களைிலும் நிர்ணயிக்கப்பட்ட ஞானத்திற்கேற்றவற்றை முளைக்கச் செய்தோம்.
(20) 15.20. -மனிதர்களே!- பூமியில் நீங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உணவுப்பொருள்கள், பானங்கள் போன்றவை ஏற்படுத்தியுள்ளோம். உங்களைத் தவிர நீங்கள் வாழ்வாதாரம் அளிக்காத மனிதர்கள், மிருகங்கள் ஆகிய ஏனையோருக்கும் தேவையான வாழ்வாதாரத்தையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
(21) 15.21. மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பயனளிக்கக்கூடிய அனைத்தையும் உருவாக்குவதற்கு நாம் ஆற்றல் பெற்றவர்களாவோம். நாம் அனைத்தையும் நம் ஞானத்திற்கும் நாட்டத்திற்கும் ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவோடுதான் உருவாக்குகின்றோம்.
(22) 15.22. நாம் காற்றை மேகங்களை சூல்கொள்ளச் செய்யக்கூடியதாக அனுப்புகின்றோம். சூல்கொண்ட மேகங்களிலிந்து மழையை இறக்குகின்றோம். மழை நீரை உங்களுக்குப் புகட்டுகின்றோம். -மனிதர்களே!- ஊற்றுகளாகவும்,கிணறுகளாவும் ஆகும் விதத்தில் இந்த நீரை உங்களால் சேகரிக்க முடியாது. அல்லாஹ்வே அதனை அதில் சேகரிக்கின்றான்.
(23) 15.23. நிச்சயமாக நாமே உயிரற்றவைகளை இல்லாமையிலிருந்து உருவாக்குவதன் மூலமும் மரணத்தின் பின் எழுப்புவதன் மூலமும் உயிர்ப்பிக்கின்றோம். அவற்றின் தவணைகள் நிறைவடைந்துவிட்டால் உயிருள்ளவற்றை மரணிக்கச் செய்கின்றோம். நாமே நிலைத்திருந்து பூமிக்கும் அதிலுள்ளோருக்கும் உரிமையாளர்களாவோம்.
(24) 15.24. பிறப்பு மற்றும் இறப்பின் அடிப்படையில் உங்களில் முந்தியவர்கள் யார் பிந்தியவர்கள் யார் என்பதையும் நாம் அறிவோம். அதில் எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை.
(25) 15.25. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன்தான் மறுமை நாளில் நற்செயல்புரிந்தவர்களுக்கு நற்கூலி வழங்குவதற்காகவும் தீயசெயல் புரிந்தவர்களைத் தண்டிப்பதற்காகவும் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். நிச்சயமாக அவன் தன் நிர்வாகத்தில் ஞானம் மிக்கவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
(26) 15.26. நாம் மனிதனை தட்டினால் சப்தமுண்டாகும் காய்ந்த களி மண்ணிலிருந்து படைத்தோம். அந்த மண் கருப்பானதாகவும் நீண்ட காலம் இருந்ததனால் மாறக்கூடிய வாசனையுடையதாகவும் இருந்தது.
(27) 15.27. ஆதமைப் படைப்பதற்கு முன்னரே ஜின்களின் தந்தையை கடும் வெப்பமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.
(28) 15.28. -தூதரே!- உம் இறைவன் வானவர்களிடமும் -அவர்களுடன் இருந்த- இப்லீஸிடமும் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “தட்டினால் சப்தமுண்டாகும் காய்ந்த நிறம் மாறிய கருப்புக் களிமண்ணிலிருந்து நான் மனிதனைப் படைக்கப் போகின்றேன்.
(29) 15.29. நான் அவரை செம்மையாகப் படைத்து வடிவம் கொடுத்து முழுமையாக்கியவுடன் என் கட்டளையைச் செயல்படுத்தும் பொருட்டு, அவருக்கு முகமன் கூறும் பொருட்டு நீங்கள் அவருக்குச் சிரம்பணிய வேண்டும்.
(30) 15.30. வானவர்கள் அனைவரும் தங்கள் இறைவனின் கட்டளைப்படி அவருக்குச் சிரம்பணிந்தார்கள்.
(31) 15.31. ஆனால் -வானவர்களுடன் இருந்த வானவர் அல்லாத- இப்லீஸ் வானவர்களுடன் சேர்ந்து ஆதமுக்குச் சிரம்பணியாமல் தவிர்ந்து கொண்டான்.
(32) 15.32. ஆதமுக்கு சிரம்பணிய மறுத்த இப்லீஸிடம் அல்லாஹ் கூறினான்: “என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிந்த வானவர்களுடன் சேர்ந்து சிரம்பணியாமல் உன்னைத் தடுத்தது எது?
(33) 15.33. இப்லீஸ் கர்வத்துடன் கூறினான்: “நீ காய்ந்த மாற்றமடைந்த கருப்பான களிமண்ணால் படைத்த மனிதனுக்கு சிரம்பணிவது எனக்கு உகந்ததல்ல.
(34) 15.34. அல்லாஹ் இப்லீஸிடம் கூறினான்: “சொர்க்கத்திலிருந்து வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்.”
(35) 15.35. உன்மீது சாபம் உண்டு. நீ மறுமை நாள் வரை என் அருளை விட்டும் தூரமாகி விட்டாய்.
(36) 15.36. இப்லீஸ் கூறினான்: “இறைவா! படைப்புகள் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக. என்னை மரணிக்கச் செய்துவிடாதே.”
(37) 15.37. அவனிடம் அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக தவணைகள் பிற்படுத்தப்பட்டு அவகாசம் வழங்கப்பட்டோரில் நீ உள்ளாய்.
(38) 15.38. முதல் சூர் ஊதப்பட்டு படைப்புகள் அனைத்தும் மரணிக்கும் நேரம் வரை.
(39) 15.39. இப்லீஸ் கூறினான்: “இறைவா! நீ என்னை வழிகெடுத்ததனால் பூமியில் பாவம் செய்வதை நான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டுவேன். நேரான வழியை விட்டும் அவர்கள் அனைவரையும் கெடுப்பேன்.
(40) 15.40. ஆயினும் உன்னை வணங்குவதற்காக நீ தேர்ந்தெடுத்துக்கொண்ட உன் அடியார்களைத் தவிர.
(41) 15.41. அல்லாஹ் கூறினான்: இது என் பக்கம் கொண்டு சேர்க்கக்கூடிய நேரான பாதையாகும்.
(42) 15.42. உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர நிச்சயமாக என்னை மட்டுமே உளத் தூய்மையுடன் வணங்கக்கூடிய என் அடியார்களை வழிகெடுப்பதற்கு உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
(43) 15.43. இப்லீஸூக்கும் அவனைப் பின்பற்றிய வழிகெட்டவர்கள் அனைவருக்கும் நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
(44) 15.44. அந்த நரகத்திற்கு ஏழு வாயில்கள் உண்டு. அவற்றின் வழியாக அவர்கள் நுழைவார்கள். ஒவ்வொரு வாயில் வழியாகவும் இப்லீஸைப் பின்பற்றிய குறிப்பிட்ட தொகையினர் நுழைவார்கள்.
(45) 15.45. தங்கள் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் சுவனங்களிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
(46) 15.46. அவர்கள் அவற்றில் நுழையும் போது அவர்களிடம் கூறப்படும்: “துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களாக, பயத்திலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாக நீங்கள் இவற்றில் நுழையுங்கள்.”
(47) 15.47. அவர்களின் உள்ளங்களிலிருக்கும் குரோதத்தையும் பகைமையையும் நாம் நீக்கி விடுவோம். அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கும் சகோதரர்களாக, ஒருவரையொருவர் பார்த்தவாறு கட்டில்களில் அமர்ந்திருப்பார்கள்.
(48) 15.48. அங்கு அவர்களுக்கு களைப்பு ஏற்படாது. அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள். மாறாக என்றென்றும் அங்கு தங்கியிருப்பார்கள்.
(49) 15.49. -தூதரே!- என் அடியார்களுக்கு அறிவித்து விடுவீராக: “நிச்சயமாக நான் அவர்களில் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களை மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தின் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றேன்.”
(50) 15.50. நிச்சயமாக நான் அளிக்கும் தண்டனையே வேதனை மிக்க தண்டனையாகும் என்பதையும் அறிவித்து விடுவீராக. எனவே அவர்கள் என்னுடைய மன்னிப்பைப் பெறுவதற்காக, என் தண்டனையிலிருந்து பாதுகாவல் பெறுவதற்காக பாவமன்னிப்புக் கோரிக் கொள்ளட்டும்.
(51) 15.51. இப்ராஹீமின் விருந்தினர்களாக வருகை தந்த வானவர்களின் தகவலை அவர்களுக்கு அறிவிப்பீராக. அவர்கள் அவருக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறவும் லூத்தின் சமூகத்தினருடைய அழிவைக் கொண்டு அறிவிக்கவும் வந்தவர்களாவர்.
(52) 15.52. அவர்கள் அவரிடம் வந்த போது அவருக்கு சலாம் கூறினர். அவர்களது வாழ்த்து முறையை விட அழகிய முறையில் அவர்களுக்கு அவர் பதில் கூறினார். அவர்கள் உண்பதற்காக பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார். ஏனெனில் அவர் அவர்களை மனிதர்கள் என்று எண்ணினார். அவர்கள் அதிலிருந்து உண்ணாததைக் கண்ட அவர், “நாங்கள் உங்களைக் கண்டு அஞ்சுகிறோம்” என்று கூறினார்.
(53) 15.53. தூதர்களாக வந்த வானவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக உமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக விரைவில் உமக்கு அறிவு மிக்க ஆண்மகன் பிறப்பான்.”
(54) 15.54. பிள்ளை கிடைக்கும் என்ற அவர்களின் நற்செய்தியைக் கேட்டு ஆச்சரியப்பட்ட இப்ராஹீம் அவர்களிடம் கூறினார்: “இந்த தள்ளாத வயதிலும் எனக்கு குழந்தை பிறக்கும் என்று நற்செய்தி கூறுகிறீர்களா? எந்த அடிப்படையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்கள்?
(55) 15.55. தூதர்களாக வந்த வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “நாங்கள் சந்தேகமற்ற சத்தியத்தைக் கொண்டு உமக்கு நற்செய்தி கூறுகின்றோம். எனவே நாம் உமக்குக் கூறிய நற்செய்தியை விட்டும் நம்பிக்கையிழந்தவர்களில் ஒருவராகிவிடாதீர்.
(56) 15.56. இப்ராஹீம் கூறினார்: “தன் இறைவனின் அருளிலிருந்து நேரான பாதையை விட்டும் விலகி விட்டவர்கள்தாம் நம்பிக்கை இழப்பார்கள்.”
(57) 15.57. அவர் கேட்டார்: “அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்களே! எதற்காக நீங்கள் வந்துள்ளீர்கள்?”
(58) 15.58. தூதர்களாக வந்த வானவர்கள் கூறினார்கள்: “பெரும் குழப்பக்காரர்களும், பெரும் தீயவர்களுமான லூத்தின் சமூகத்தை அழிப்பதற்காக எம்மை அல்லாஹ் அனுப்பியுள்ளான்.”
(59) 15.59. ஆயினும் லூத்தின் குடும்பத்தினரையும் நம்பிக்கைகொண்டு அவரைப் பின்பற்றியவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் பாதுகாத்திடுவோம். அவர்கள் அழிக்கப்பட மாட்டார்கள்.
(60) 15.60. ஆனால் அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவளும் அழிக்கப்படுபவர்களுடன் சேர்ந்து அழிக்கப்படுவாள் என்று நாம் தீர்மானித்துவிட்டோம்.
(61) 15.61. தூதர்களாக அனுப்பப்பட்ட வானவர்கள் மனித உருவில் லூத்தின் குடும்பத்தாரிடம் வந்த போது
(62) 15.62. லூத் அவர்களிடம் “அறிமுகமற்ற கூட்டமாக உள்ளீர்களே.” எனக் கூறினார்.
(63) 15.63. தூதர்களாக வந்த வானவர்கள் லூத்திடம் கூறினார்கள்: “பயப்படாதீர். -லூத்தே!- உம் சமூகம் சந்தேகிக்கக்கூடியஅவர்களை அழிக்கும் வேதனையை நாங்கள் உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.
(64) 15.64. நாங்கள் வேடிக்கையற்ற சத்தியத்தைக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாவோம்.
(65) 15.65. இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் உம்முடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு செல்வீராக. நீர் அவர்களுக்குப் பின்னால் செல்வீராக. உங்களில் யாரும் தம் சமூகத்தினருக்கு என்ன நிகழப் போகிறது என்பதை திரும்பிப் பார்க்கக் கூடாது. அல்லாஹ் உங்களை செல்லுமாறு ஏவிய இடத்துக்கு செல்லுங்கள்.
(66) 15.66. அதிகாலையில் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவார்கள் என்று நாம் விதித்த விஷயத்தை லுதுக்கு வஹி மூலம் அறிவித்தோம்.
(67) 15.67. சதூம் வாசிகள் லூத்தின் விருந்தினரைக் கண்டு மகிழ்ச்சியடைந்து மானக்கேடான காரியத்தில் மோகம் கொண்டவர்களாக வந்தார்கள்.
(68) 68. லூத் அவர்களிடம் கூறினார்: “இவர்கள் என் விருந்தினர்கள். எனவே அவர்களிடம் நீங்கள் விரும்புவதைத் தெரிவித்து என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்.
(69) 15.69. மானக்கேடான காரியத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களின் இந்த மோசமான காரியத்தால் என்னை இழிவுபடுத்திவிடாதீர்கள்.
(70) 15.70. அவர்களின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “மக்களில் யாருக்கும் விருந்தளிக்கக் கூடாது என்று நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?
(71) 15.71. லூத் தனது விருந்தாளிகளுக்கு முன்னால் மன்னிப்பு கேட்டவராக தனது கூட்டத்தாருக்கு கூறினார்: “இவர்கள் உங்கள் பெண்களைச் சார்ந்த என் புதல்விகள். நீங்கள் உங்களின் இச்சைகளைத் தணித்துக்கொள்ள விரும்பினால் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.
(72) 15.72. தூதரே! உம் வாழ்க்கையின் மீது சத்தியமாக லூதுடைய சமூகம் தம் எல்லை மீறிய இச்சையினால் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.
(73) 15.73. சூரியன் உதிக்கும் சமயத்தில் அழிவை ஏற்படுத்தும் பாரியதொரு சத்தம் அவர்களைத் தாக்கியது.
(74) 15.74. நாம் அவர்களின் ஊர்களை தலை கீழாகப் புரட்டி விட்டோம். களிமண் கற்களை அவர்கள் மீது பொழியச் செய்தோம்.
(75) 15.75. மேற்கூறப்பட்ட லூத்தின் சமூகத்திற்கு ஏற்பட்ட அழிவில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன.
(76) 15.76. லூத் சமூகத்தின் ஊர்கள் எல்லோராலும் காணமுடியுமான பாதையில்தான் அமைந்துள்ளன. கடந்து செல்லக்கூடிய பயணிகள் அவற்றைப் பார்த்துக் கொண்டுதான் செல்கிறார்கள்.
(77) 15.77. நிச்சயமாக நடந்து முடிந்த இந்த விடயத்தில் படிப்பினைபெறக்கூடிய நம்பிக்கையாளர்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
(78) 15.78. அடர்ந்த தோப்புகளுடைய ஷுஐபின் ஊர்வாசிகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் ஷுஐபையும் நிராகரித்ததனால் அக்கிரமக்காரர்களாக இருந்தார்கள்.
(79) 15.79. நாம் அவர்களை வேதனையால் தண்டித்தோம். லூத்தின் சமூகம் வசித்த ஊர்களும் ஷுஐபின் சமூகம் வசித்த இடங்களும் கடந்து செல்லக்கூடியவர்களுக்கு தெளிவான பாதையில்தான் அமைந்துள்ளன.
(80) 15.80. ஹிஜ்ர் வாசிகளான (ஹிஜாஸ் மற்றும் ஷாம் ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான பகுதி) ஸமூத் சமூகத்தினரும் தமது தூதர் ஸாலிஹை நிராகரித்ததனால் அனைத்து தூதர்களையும் நிராகரித்தவர்களாக ஆகிவிட்டனர்.
(81) 15.81. அவர் தம் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததன் உண்மைத் தன்மைக்கு ஆதாரங்களையும் சான்றுகளையும் நாம் அவர்களுக்கு வழங்கினோம். அவற்றுள் நாம் வழங்கிய பெண் ஒட்டகமும் அடங்கும். அவர்கள் அந்த ஆதாரங்களைக் கொண்டு படிப்பினை பெறவுமில்லை; அவற்றைப் பொருட்படுத்தவுமில்லை.
(82) 15.82. அவர்கள் மலைகளிலுள்ள பாறைகளைக் குடைந்து தாங்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்காக வீடுகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
(83) 15.83. அதிகாலையை அவர்கள் அடைந்த போது பயங்கர சப்தத்தை உள்ளடக்கிய வேதனை அவர்களைத் தாக்கியது.
(84) 15.84. அவர்கள் சம்பாதித்த செல்வங்களும், கட்டிய வசிப்பிடங்களும் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைக் காப்பாற்றவில்லை.
(85) 15.85. வானங்களையும் பூமியையையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் நாம் நோக்கமின்றி வீணாகப் படைக்கவில்லை. நாம் அவையனைத்தையும் உண்மையாகவே படைத்துள்ளோம். நிச்சயமாக மறுமை நாள் வந்தே தீரும். -தூதரே!- உம்மை பொய்ப்பித்தவர்களை புறக்கணித்து விடும். அவர்களை அழகிய முறையில் மன்னித்து கண்டுகொள்ளாமல் விட்டு விடும்.
(86) 15.86. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் எல்லாவற்றையும் படைத்தவன்; அவற்றைக் குறித்து நன்கறிந்தவன்.
(87) 15.87. நாம் உமக்கு ஏழு வசனங்களுடைய ஃபாத்திஹா என்னும் அத்தியாயத்தை வழங்கியுள்ளோம். அதுவே மகத்தான குர்ஆனாகும்.
(88) 15.88. நிராகரிப்பாளர்களில் பலதரப்பட்டவர்களுக்கு நாம் வழங்கிய அழியக்கூடிய இன்பங்களை ஏறெடுத்தும் பார்க்காதீர். அவர்களின் நிராகரிப்பிற்காக கவலை கொள்ளாதீர். நம்பிக்கையாளர்களுடன் பணிவாக நடந்து கொள்வீராக.
(89) 15.89. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் வேதனையைக் கொண்டு கடுமையாக எச்சரிக்கை செய்யக்கூடியவன்.
(90) 15.90. வேதத்தில் சிலதை ஏற்றுக்கொண்டு சிலதை மறுத்து அல்லாஹ்வின் வேதங்களை பல பகுதிகளாக கூறுபோட்டவர்கள் மீது அல்லாஹ் இறக்கியது போன்ற வேதனை உங்களுக்கும் ஏற்படும் என்பதை நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன்.
(91) 15.91. அவர்கள் குர்ஆனை பல பிரிவுகளாக மாற்றினார்கள். இவை சூனியம், இவை ஜோதிடம், இவை கவிதை என்றும் அவர்கள் கூறினார்கள்.
(92) 15.92. -தூதரே!- உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக மறுமை நாளில் அதனைக் கூறுபோட்ட அனைவரிடமும் கேட்டே தீருவோம்.
(93) 15.93. அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவை குறித்தும் அவர்களிடம் நாம் விசாரித்தே ஆகுவோம்.
(94) 15.94. -தூதரே!- எதன் பக்கத் அழைப்பு விடுக்குமாறு அல்லாஹ் உமக்கு கட்டளையிட்டானோ அதனை எடுத்துரைப்பீராக. இணைவைப்பாளர்கள் கூறுவதையும் செய்வதையும் பொருட்படுத்தாதீர்.
(95) 15.95. அவர்களைக் கண்டு நீர் அஞ்சாதீர். பரிகாசம் செய்யக்கூடிய நிராகரிக்கும் குறைஷித் தலைவர்கள் விஷயத்தில் நாமே உமக்குப் போதுமானவர்கள்.
(96) 15.96. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் இணைவைப்பின் மோசமான விளைவை அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
(97) 15.97. -தூதரே!- அவர்கள் உம்மை பொய்பிப்பதனால், பரிகாசம் செய்வதனால் நிச்சயமாக உமது உள்ளம் நெருக்கடிக்குள்ளாவதை நாம் நன்கு அறிவோம்.
(98) 15.98. அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை விட்டும் அவனை தூய்மைப்படுத்தி, அவனுடைய பரிபூரணமான பண்புகளைக் கொண்டு அவனைப் புகழ்ந்து அவன் பக்கமே தஞ்சம் புகுந்து கொள்வீராக. அல்லாஹ்வை வணங்கி தொழுகையில் ஈடுபடுபவர்களில் ஒருவராக ஆகிவிடுவீராக. இதனால் உமது உள்ளம் உணரும் நெருக்கடியிலிருந்து நீர் விடுபடலாம்.
(99) 15.99. மரணம் உம்மை அடையும் வரை உம் இறைவனை வணங்குவதில் நிலைத்திருப்பீராக.