(1) 35.1. வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் தான் விதித்த கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக வானவர்களை தூதுவர்களாக ஆக்கியுள்ளான். அவர்களில் சிலர் நபிமார்களுக்கு வஹியை - இறைச்செய்தியை- கொண்டு சேர்க்கிறார்கள். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ் அவர்களை ஆற்றல்மிக்கவர்களாக ஆக்கியுள்ளான். அவர்களில் சிலர் இரண்டு இறக்கைகள், மூன்று இறக்கைகள், நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றார்கள். அவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் அவற்றினால் பறந்து செல்கின்றார்கள். அல்லாஹ் படைப்பில் தான் நாடிய உறுப்பை அல்லது அழகை அல்லது குரலை அதிகப்படுத்துகிறான். நிச்சயமாக அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனுக்கு இயலாததல்ல.
(2) 35.2. நிச்சயமாக ஒவ்வொரு பொருளின் திறவுகோலும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது. அவன் மனிதர்களுக்கு அளிக்கும் வாழ்வாதாரம், வழிகாட்டுதல், நற்பாக்கியம், அவையல்லாத இன்னும் அருட்கொடைகளை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுத்ததை அதற்குப்பிறகு யாராலும் கொண்டு வர முடியாது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைத்த படைப்புகளில், அமைத்த விதிகளில், தன் நிர்வாகத்தில் அவன் ஞானம் மிக்கவன்.
(3) 35.3. மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை உள்ளத்தாலும் நாவாலும் உறுப்புக்களின் செயல்களாலும் நினைவுகூருங்கள். மழையை இறக்குவதன் மூலம் வானிலிருந்தும், தாவரங்கள், பயிர்கள் இன்னும் பலவற்றை முளைக்கச் செய்வதன் மூலம் பூமியிலிருந்தும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வாழ்வாதாரம் அளித்துக்கொண்டிருக்க, எவ்வாறு இந்த உண்மையை விட்டும் நீங்கள் திசைதிருப்பப்பட்டு, அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என்று கூறுவீர்கள்?
(4) 35.4. -தூதரே!- உம் சமூகம் உம்மை பொய்ப்பித்தால் பொறுமையாக இருப்பீராக. ஏனெனில் நீர் தன் சமூகம் பொய்ப்பிக்கும் முதலாவது தூதரல்ல. உமக்கு முன்னிருந்த ஆத், ஸமூத், லூதின் சமூகம் போன்ற சமூகங்கள் தமது தூதர்களை பொய்ப்பித்தார்கள். விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கமே திரும்புகின்றன. அவன் பொய்ப்பிப்பவர்களை அழிக்கிறான். தன் தூதர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவி புரிகிறான்.
(5) 35.5. மனிதர்களே! -மறுமை நாளில் மீண்டும் எழுப்பப்பட்டு கூலி வழங்கப்படும் என்ற- அல்லாஹ்வின் வாக்குறுதி சந்தேகமற்ற உண்மையாகும். அந்த நாளுக்காக நற்செயல்களால் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்வதிலிருந்து உலக இன்பங்களும் இச்சைகளும் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அசத்தியத்தை அலங்கரித்துக்காட்டி உலக வாழ்க்கையின்பால் மோகம்கொள்ள வைத்து ஷைத்தானும் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.
(6) 35.6. -மனிதர்களே!- நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு நிரந்தர எதிரியாவான். எனவே தொடர்ந்து அவனுடன் போரிட்டு அவனைப் பகைவனாக்கிக் கொள்ளுங்கள். தன்னைப் பின்பற்றக்கூடியவர்கள் மறுமை நாளில் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் நுழைவதற்காகவே அவன் அவர்களை அல்லாஹ்வை நிராகரிப்பதன் பக்கம் அழைக்கின்றான்.
(7) 35.7. ஷைத்தானைப் பின்பற்றி அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ்விடம் பாவங்களில் இருந்து மன்னிப்பும் சுவனம் என்னும் மகத்தான கூலியும் உண்டு.
(8) 35.8. நிச்சயமாக ஷைத்தான் யாருடைய தீய செயலை அலங்கரித்துக் காட்டி அவர் அதனை நற்செயல் என்று எண்ணுகிறாரோ அவரும் யாருக்கு அல்லாஹ் சத்தியத்தை அலங்கரித்துக் காட்டி அவர் அதனை சத்தியம் என்று எண்ணுகிறாரோ அவரும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகெடுக்கிறான். தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான். யாரும் அவனை நிர்ப்பந்திக்க முடியாது. -தூதரே!- வழிகெட்டவர்களின் வழிகேடுகளுக்காக கவலைப்பட்டு உம்மை நீரே அழித்துக் கொள்ளாதீர். நிச்சயமாக அவர்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(9) 35.9. அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அவை மேகங்களை நகர்த்துகின்றன. நாம் அந்த மேகங்களை தாவரங்களற்ற வறண்ட பூமியை நோக்கி இழுத்துச் செல்கிறோம். அதன் நீர் மூலம் பூமி வறண்டதன் பின் அதில் நாம் முளைக்கச் செய்யும் தாவரங்களைக் கொண்டு மீண்டும் உயிர்ப்பிக்கிறோம். வறண்ட இந்த பூமியை தாவரங்களைக் கொண்டு உயிர்ப்பித்து மீட்டியது போன்றே மறுமை நாளில் இறந்தவர்கள் எழுப்பப்படுவார்கள்.
(10) 35.10. இவ்வுலகிலோ அல்லது மறுவுலகிலோ கண்ணியத்தை நாடுபவர் அதனை அல்லாஹ்விடமே தேடட்டும். இவ்வுலகிலும் மறுவுலகிலும் கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனை நல்லமுறையில் நினைவுகூர்வது அவன் பக்கமே உயர்ந்து செல்கிறது. அடியார்களின் நற்செயல்கள் அவன் பக்கமே உயர்கின்றன. -தூதரைக் கொல்வதற்கான முயற்சி போன்ற- தீய திட்டங்கள் தீட்டுவோருக்கு கடுமையான தண்டனை காத்திருக்கின்றது. இந்த நிராகரிப்பாளர்களின் திட்டங்கள் அனைத்தும் அழிந்து விடும். அவர்களால் தங்களின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது.
(11) 35.11. அல்லாஹ்தான் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் உங்களை விந்திலிருந்து படைத்தான். பின்னர் உங்களை ஆண்களாவும் பெண்களாவும் ஆக்கி உங்களிடையே ஜோடிகளை ஏற்படுத்தினான். அவனுக்குத் தெரியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனது படைப்பில் ஒருவரின் வயது அதிகரிக்கப்படுவதும் குறைக்கப்படுவதும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக மேற்கூறப்பட்ட, -உங்களை மண்ணிலிருந்து படைத்தல், பல நிலைகளாகப் படைத்தல், லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் உங்களின் வாழ்நாட்களைப் பதிவுசெய்தல் ஆகியன- அல்லாஹ்வுக்கு மிக எளிதானவையாகும்.
(12) 35.12. இரு கடல்களும் சமமாகி விடாது. அவற்றில் ஒன்று நன்கு சுவையான நீரை உடையது. அதன் சுவையினால் அதனைக் குடிப்பது இலகுவானது. மற்றொன்று உப்பும் கசப்பும் உடையது. அதன் கடுமையான உவர்ப்பின் காரணமாக அதனைப் பருக முடியாது. மேற்கூறப்பட்ட இரு கடல்களிலிருந்தும் நீங்கள் புத்தம் புது (இறைச்சியான) மீனை உண்கிறீர்கள். அவற்றிலிருந்து முத்து, பவளம் போன்ற அலங்காரத்துக்காக அணியும் ஆபரணங்களை எடுக்கின்றீர்கள். -பார்க்கக்கூடியவனே!- வியாபாரத்தின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதற்காக கடலில் கப்பல்கள் முன்னோக்கியவாறும் பின்னோக்கியவாறும் கடல்களை பிளந்தவாறு செல்வதை நீ பார்க்கின்றாய். அவன் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தலாம் என்பதற்காகத்தான்.
(13) 35.13. அல்லாஹ் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்து அதனை நீளமாக்குகிறான். பகலை இரவில் பிரவேசிக்கச் செய்பிரவேசிக்கச் செய்து அதனை நீளமாக்குகிறான். சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தித் தந்துள்ளான். அவற்றில் ஒவ்வொன்றும் அல்லாஹ் அறிந்த தவணையின்படி சென்று கொண்டிருக்கும். அந்த தவணை மறுமை நாளாகும். இவையனைத்தையும் நிர்ணயம் செய்து இயங்கச் செய்பவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவனை விடுத்து அவர்கள் வணங்கும் சிலைகள் பேரீச்சம் பழக்கொட்டையின் மேலுள்ள தோலளவுக்குக் கூட உரிமையுடையவைகளல்ல. எனவே என்னை விடுத்து அவற்றை எவ்வாறுதான் நீங்கள் வணங்குகிறீர்களோ?!
(14) 35.14. நீங்கள் உங்களின் தெய்வங்களை அழைத்தால் அவை உங்களின் அழைப்புக்குச் செவியேற்க மாட்டா. ஏனெனில் அவை உயிரற்ற, கேட்கமுடியாத ஜடப்பொருள்கள். -ஒரு வேளை- அவை உங்களின் அழைப்பை செவியுற்றாலும் அவை உங்களுக்குப் பதிலளிக்க மாட்டாது. மறுமை நாளில் உங்களின் இணைவைப்பைவிட்டும், நீங்கள் அவற்றை வணங்கியதைவிட்டும் விலகிவிடும். -தூதரே!- அல்லாஹ்வைவிட உமக்கு உண்மையான செய்தியை அறிவிப்பவர் வேறு யாருமில்லை.
(15) 35.15. -மனிதர்களே!- உங்களின் எல்லா விவகாரங்களிலும் நிலைகளிலும் நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். அவன் உங்களிடம் எந்த வகையிலும் தேவையற்றவனாகவும் தனது அடியார்களுக்கு நிர்ணயிப்பவற்றுக்காக இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.
(16) 35.16. அவன் உங்களை அழிக்க நாடினால் உங்களை அழித்துவிட்டு உங்களுக்குப் பதிலாக அவனை மட்டுமே வணங்கக்கூடிய, அவனுக்கு யாரையும் இணையாக்காத புதிய படைப்பைக் கொண்டு வருவான்.
(17) 35.17. உங்களை அழிப்பதும் உங்களுக்குப் பதிலாக புதிய படைப்பைக் கொண்டு வருவதும் அல்லாஹ்வுக்குக் இயலாத ஒன்றல்ல.
(18) 35.18. பாவம் செய்த ஒருவர் பாவம் செய்த இன்னொருவரின் பாவச்சுமையை சுமக்க மாட்டார். மாறாக ஒவ்வொருவரும் தன் பாவத்தையே சுமப்பார்கள். கனமான பாவச் சுமையுடையவர் தன் பாவங்களில் எதையேனும் சுமந்து கொள்ளுமாறு மற்றவர்களை அழைத்தாலும் அவற்றில் எதையும் அவரால் சுமக்க முடியாது, அழைக்கப்பட்டவர் நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே. -தூதரே!- தங்கள் இறைவனைக் காணாமலேயே அவனை அஞ்சி, தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றக்கூடியவர்களுக்குத்தான் உம்மால் அவனுடைய வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்ய முடியும். அவர்கள்தாம் உம்முடைய எச்சரிக்கையால் பயனடைவார்கள். யார் பாவங்களிலிருந்து -அதிலும் பெரியது இணைவைப்பிலிருந்து- தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டாரோ நிச்சயமாக அவர் தனக்காகவே தூய்மைப்படுத்திக் கொண்டார். திட்டமாக அதனால் ஏற்படும் பலன் அவரையே சாரும். அவரின் கீழ்ப்படிதலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலியைப் பெறவும் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.
(19) 35.19. குருடனும் பார்வையுடையவனும் எவ்வாறு சமமாக மாட்டார்களோ அவ்வாறே நிராகரிப்பாளனும் நம்பிக்கையாளனும் பதவியில் சமமாக மாட்டார்கள்.
(20) 35.20. இருள்களும் ஒளியும் எவ்வாறு சமமாகாதோ அவ்வாறே நிராகரிப்பும் ஈமானும் சமமாகாது.
(21) 35.21. நிழலும் சூடான காற்றும் எவ்வாறு சமமாகாதோ அவ்வாறே சுவனமும் நரகமும் பாதிப்பில் சமமாகாது.
(22) 35.22. இறந்தவர்களும் உயிருள்ளவர்களும் எவ்வாறு சமமாக மாட்டார்களோ அவ்வாறே நிராகரிப்பாளர்களும் நம்பிக்கையாளர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் யாருக்கு நேர்வழியளிக்க நாடுகிறானோ அவரை செவியேற்கச் செய்கிறான். -தூதரே!-அடக்கஸ்த்தலத்தில் உள்ள மரணித்தவர்களைப் போன்று காணப்படும் நிராகரிப்பாளர்களுக்கு உம்மால் செவியேற்கச் செய்ய முடியாது.
(23) 35.23. நீர் அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து அவர்களை எச்சரிக்கை செய்பவர்தாம்.
(24) 35.24. -தூதரே!- நாம் உம்மை சந்தேகம் இல்லாத உறுதியான சத்தியத்தைக் கொண்டும், நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கண்ணியமான கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று நற்செய்தி கூறுபவராகவும் நிராகரிப்பாளர்களுக்கு அவன் வேதனை மிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான் என்று எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியுள்ளோம். அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர் அனுப்பப்படாத, கடந்துபோன எந்த சமூகமும் இல்லை.
(25) 35.25. தூதரே! உம் சமூகம் உம்மை பொய்ப்பித்தால் பொறுமையாக இருப்பீராக. ஏனெனில் நீர் தன் சமூகம் பொய்ப்பிக்கும் முதலாவது தூதரல்ல. இவர்களுக்கு முன்னிருந்த ஆத், ஸமூத், லூதின் சமூகம் போன்ற சமூகங்களும் தமது தூதர்களை பொய்ப்பித்தார்கள். தூதர்கள் அவர்களிடம் தங்களின் நம்பகத்தன்மையை அறிவிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்களை அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்தார்கள். அவர்கள் சிந்திக்கக்கூடியவர்களுக்காக ஆகமங்களையும் ஒளிவீசும் வேதங்களையும் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்தார்கள்.
(26) 35.26. இருந்தும் அவர்கள் அல்லாஹ்வையும் அவனிடமிருந்து கொண்டுவந்ததையும் அவனுடைய தூதர்களையும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தார்கள். நிராகரித்தவர்களை நான் அழித்துவிட்டேன். -தூதரே!- அவர்களை அழித்த எனது தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக.
(27) 35.27. -தூதரே!- நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழை நீரை இறக்கி அதன் மூலம் மரங்களுக்கு நீரூட்டி அதன் மூலம் சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஏனைய நிறங்களுடைய பழங்களை வெளிப்படுத்துகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மலைகளிலும் வெண்மை, சிவப்பு மற்றும் கடும் கருப்பு நிறமுடைய பாதைகள் காணப்படுகின்றன.
(28) 35.28. மனிதர்கள், உயிரினங்கள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) ஆகியவற்றிலும் அவ்வாறு மேற்கூறப்பட்டது போன்று பல நிறங்கள் காணப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ்வைக் குறித்து அறிந்தவர்கள்தாம் அவனை கண்ணியப்படுத்துவார்கள், அஞ்சுவார்கள். ஏனெனில் அவர்கள்தாம் அவனுடைய பண்புகளையும் அவன் விதித்த சட்டங்களையும் அவனுடைய வல்லமையின் ஆதாரங்களையும் அறிந்தவர்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன்.
(29) 35.29. நிச்சயமாக யாரெல்லாம் நாம் நம் தூதர் மீது இறக்கிய வேதத்தைப் படித்து அதனடிப்படையில் செயல்பட்டு, தொழுகையைப் பரிபூரணமான முறையில் நிறைவேற்றி, நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து ஸகாத்தை கொடுத்து அது அல்லாது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செலவும் செய்கிறார்களோ அவர்கள்தாம் இந்த செயல்களின் மூலம் அல்லாஹ்விடம் என்றும் நஷ்டமடையாத வியாபாரத்தை எதிர்பார்க்கிறார்கள்.
(30) 35.30. அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை முழுமையாக வழங்கிடுவான். அவர்களுக்கு தன் அருளிலிருந்து மேலதிகமாகவும் வழங்குவான். அவன் அதற்குத் தகுதியானவன். இந்த பண்புகளைப் பெற்றவர்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் நற்செயல்களுக்கு நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்.
(31) 35.31. -தூதரே!- நாம் உமக்கு வஹியாக அறிவித்த வேதம் சந்தேகமற்ற உண்மையாகும். முந்தைய வான வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக அதனை அல்லாஹ் இறக்கியுள்ளான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். ஒவ்வொரு சமூகத்தின் தூதருக்கும் அக்காலத்தில் அவர்களுக்குத் தேவையானவற்றை அவன் வஹியாக அறிவிக்கிறான்.
(32) 35.32. பின்னர் எல்லா சமூகங்களைவிடவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகமான முஹம்மதின் சமூகத்திற்கு குர்ஆனை நாம் வழங்கினோம். அவர்களில் கடமையானவற்றை விட்டுவிட்டு தடுக்கப்பட்டவற்றில் ஈடுபட்டு தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் கடமையானவற்றைச் செய்து தடுக்கப்பட்டுள்ளவற்றை விட்டும் விலகி ஆனால் இறைவனுக்கு விருப்பமான சில காரியங்களைச் செய்யாமல் அவன் வெறுக்கும் சில காரியங்களில் ஈடுபட்ட நடுநிலையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு நன்மையின்பால் முந்தக்கூடியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு கடமையான மற்றும் இறைவனுக்கு கடமையான, விருப்பமான செயல்களைச் செய்தார்கள். தடுக்கப்பட்ட மற்றும் இறைவன் வெறுக்கக்கூடிய செயல்களை விட்டும் தவிர்ந்திருந்தார்கள். மேற்கூறப்பட்ட -இச்சமுதாயத்தின் தேர்வு, அதற்குக் குர்ஆன் வழங்கப்பட்டமை ஆகிய- அனைத்தும் அல்லாஹ்வின் மாபெரும் பாக்கியமாகும். அதற்கு இணையான வேறு அருட்கொடை எதுவும் இல்லை.
(33) 35.33. தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் நிலையான சுவனங்களில் பிரவேசிப்பார்கள். அங்கு அவர்களுக்கு தங்கக் காப்புகளும் முத்தும் அணிவிக்கப்படும். அவர்களின் ஆடை பட்டாக இருக்கும்.
(34) 35.34. அவர்கள் சுவனத்தில் நுழைந்த பிறகு கூறுவார்கள்: “நரகத்தில் நுழைந்து விடுவோமோ என்று எங்களுக்கு ஏற்பட்ட பயத்தினால் உண்டான கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எங்களின் இறைவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்.
(35) 35.35. அவனே தன் அருளால் எங்களின் எந்த சக்தி, ஆற்றலுமின்றி நிலையான வீட்டில் எங்களைத் தங்க வைத்தான். -இனி அங்கிருந்து எங்கும் செல்ல வேண்டியதில்லை-. அங்கு சிரமமோ, களைப்போ எங்களுக்கு ஏற்படாது.
(36) 35.36. தேர்ந்தெடுக்கப்பட்ட தன் அடியார்களுக்கு வழங்கப்படும் வெகுமதியை குறிப்பிட்ட இறைவன் அவர்களில் இழிவடைந்தவர்களான நிராகரிப்பாளர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையைக் குறித்து கூறுகிறான்: அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்கள் மரணித்து வேதனையிலிருந்து விடுதலை பெறக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு மரணம் ஏற்படாது. நரக வேதனையிலும் சிறிதளவும் அவர்களுக்குக் குறைக்கப்படாது. இவ்வாறு இறைவனின் அருட்கொடையை மறுக்கும் ஒவ்வொருவருக்கும் மறுமை நாளில் கூலி கொடுக்கிறோம்.
(37) 35.37. அவர்கள் உயர்ந்த தொனியில் கத்துவார்கள், உதவி தேடுவார்கள். “எங்கள் இறைவா! நரகத்திலிருந்து எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் உலகில் செய்து கொண்டிருந்ததற்கு மாறாக உன் திருப்தியை பெற்று உனது தண்டனையிலிருந்து தப்பும் நோக்கில் நற்செயல்கள் செய்கின்றோம்” என்று அவர்கள் கூக்குரலிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு விடையளிப்பான்: “படிப்பினை பெறக்கூடியவர்கள் படிப்பினை பெறும் அளவுக்கு, அல்லாஹ்வின் பக்கம் திரும்பி நற்செயல் புரியும் அளவுக்கு நாம் உங்களுக்கு வாழ்நாளை வழங்கவில்லையா? அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரித்தவர்களாக தூதர்கள் உங்களிடம் வந்தனர்? இனி உங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இனி இதற்குப் பிறகு நீங்கள் எந்தச் சாக்குப்போக்கும் கூற முடியாது. நரக வேதனையை அனுபவியுங்கள். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனையை விட்டும் காப்பாற்றும் அல்லது அவர்களை விட்டும் அதனைக் குறைக்கும் உதவியாளர்கள் யாரும் இல்லை.
(38) 35.38. நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள மறைவான விஷயங்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டுத் தப்ப முடியாது. திட்டமாக அவன் தன் அடியார்கள் தன் உள்ளங்களில் மறைத்து வைத்திருக்கும் நன்மையையும் தீமையையும் நன்கறிந்தவன்.
(39) 35.39. -மனிதர்களே!- அவனே உலகில் உங்களில் சிலரை சிலரின் வழித்தோன்றல்களாக ஆக்கியுள்ளான், நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதைச் சோதிக்கும்பொருட்டு. யார் அல்லாஹ்வையும் தூதர்கள் கொண்டு வந்ததையும் நிராகரித்தார்களோ அதனால் ஏற்படும் பாவமும் தண்டனையும் அவரையே சாரும். நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடத்தில் கடும் வெறுப்பையே அதிகப்படுத்துகிறது. அவர்களின் நிராகரிப்பு இழப்பையே அதிகப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் நம்பிக்கைகொண்டால் கிடைக்கும் அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள சுவனத்தை அவர்கள் இழந்துவிடுகிறார்கள்.
(40) 35.40. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் உங்களின் இணைதெய்வங்களைக் குறித்து எனக்குக் கூறுங்கள். அவை பூமியில் எதைப் படைத்தன? அதன் மலைகளையோ, ஆறுகளையோ, உயிரினங்களையோ அவை படைத்தனவா? அல்லது வானங்களைப் படைத்ததில் அவற்றிற்கு பங்கு இருக்கின்றதா? அல்லது நாம் உங்களுக்கு ஒரு வேதம் வழங்கி அதில் உங்களின் இணைதெய்வங்களை வணங்குவதற்கு அதில் தகுந்த ஆதாரத்தை வழங்கியுள்ளோமா? முடிவாக இவற்றில் எதுவும் இல்லை. மாறாக இறைவனை நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்ட அநியாயக்காரர்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றத்தையே வாக்குறுதிகளாக அளிக்கிறார்கள்.
(41) 35.41. நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் விலகிவிடாதவாறு தடுத்து வைத்திருக்கிறான். -ஒருவேளை- அவை விலகிவிட்டால் அல்லாஹ்வுக்குப் பின் யாராலும் அவை விலகிச் செல்லாமல் தடுக்க முடியாது. திட்டமாக அவன் சகிப்புத் தன்மை மிக்கவனாக இருக்கின்றான். அடியார்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
(42) 35.42. இந்த நிராகரித்து பொய்ப்பிப்பவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியமிட்டுக் கூறினார்கள்: “அல்லாஹ்விடமிருந்து அவனது வேதனையை எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர் எங்களிடம் வந்தால் நாங்கள் யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் மற்ற சமூகங்களைவிட சத்தியத்தை பின்பற்றக்கூடியவர்களாகவும் உறுதியானவர்களாகவும் இருப்போம்.” ஆனால் முஹம்மது இறைவனிடமிருந்து அவர்களிடம் அவனுடைய வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்யக்கூடியவராக வந்தபோது அவர்கள் சத்தியத்தைவிட்டு தூரமாகி அசத்தியத்திற்கு இன்னும் நெருக்கமாகி விட்டார்கள். முன்புள்ள சமுதாயங்களை விட நேர்வழி பெற்றவர்களாக நாம் இருப்போம் என தாங்கள் உறுதியாக செய்த சத்தியத்தை அவர்கள் நிறைவேற்றவில்லை.
(43) 35.43. அவர்கள் நல்லெண்ணத்தோடும் நல்ல நோக்கத்தோடும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறவில்லை. மாறாக பூமியில் கர்வம்கொள்வதற்காகவும் மக்களை ஏமாற்றுவதற்காகவுமே அவ்வாறு செய்தார்கள். தீய சூழ்ச்சி அதில் ஈடுபட்டவர்களையே தாக்கும். கர்வம் கொண்ட, சூழ்ச்சி செய்யக்கூடிய இவர்கள் உறுதியான அல்லாஹ்வின் வழிமுறையைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அது முந்தைய சமூகங்கள் அழிக்கப்பட்டது போன்று அவர்களும் அழிக்கப்படுவார்கள் என்பதாகும். கர்வமுள்ளவர்களை அழிக்காமல் விடுதல், கர்வமற்றவர்களை அழித்தல் என அல்லாஹ்வின் வழிமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காண மாட்டீர். ஏனெனில் அல்லாஹ்வின் வழிமுறை மாறாததாகும்.
(44) 35.44. உம்மை மறுக்கும் இந்தக் குறைஷிப் பொய்யர்கள் பூமியில் பயணம் செய்து முன்னர் பொய்ப்பித்த சமூகங்களின் முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் அவர்களை அழித்து அவர்களின் முடிவை தீயதாக ஆக்கவில்லையா? அவர்கள் குறைஷிகளை விட பலம் மிக்கவர்களாக இருக்கவில்லையா? வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வை விட்டு எதுவும் தப்பிவிட முடியாது. நிச்சயமாக அவன் இந்த பொய்ப்பிப்பவர்களின் செயல்களைக் குறித்து நன்கறிந்தவன். இவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை, ஒன்றும் தப்பிவிடவும் முடியாது. தான் விரும்பிய சமயத்தில் அவர்களை அழிப்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.
(45) 35.45. மனிதர்கள் செய்யும் பாவங்களுக்காக அவன் அவர்களை உடனுக்குடன் தண்டிப்பதாக இருந்தால் அந்நேரத்தில் பூமியிலுள்ள அனைவரையும் அவர்களுக்குச் சொந்தமான உயிரினங்களையும் சொத்துக்களையும் அழித்திருப்பான். ஆயினும் அவன் அறிந்த குறிப்பிட்ட தவணை வரை அவகாசம் அளிக்கிறான். அது மறுமை நாளாகும். அந்த நாள் வந்துவிட்டால், நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். நலவாக இருந்தால் நன்மையும் தீயதாக இருந்தால் தீமையும் கிடைக்கும்.