46 - ஸூரா அல்அஹ்காப் ()

|

(1) 43.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

(2) 46.2. இது யாவற்றையும் மிகைத்தவனும் படைப்பிலும் நிர்ணயித்திலும் சட்டதிட்டத்திலும் ஞானம்மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட குர்ஆனாகும்.

(3) 46.3. வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடையிலுள்ளவற்றையும் நாம் வீணாகப் படைக்கவில்லை. மாறாக அவையனைத்தையும் நாம் ஓர் உயர்ந்த நோக்கத்துடன் உண்மையாகவே படைத்துள்ளோம். அவற்றுள் ஒன்று, அடியார்கள் அவற்றின் மூலம் அல்லாஹ்வை அறிந்து அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ் மாத்திரமே அறிந்த குறிப்பிட்ட தவணை வரையும் பூமியில் தனது பிரதிநிதித்துவத்தின் கடமைகளை நிறைவேற்றவதுமாகும். அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அவனுடைய வேதத்தில் தங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கிறார்கள்.

(4) 46.4. -தூதரே!- சத்தியத்தைப் புறக்கணிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் சிலைகளைக் குறித்து எனக்கு அறிவியுங்கள். அவை பூமியில் எந்தப் பகுதியைப் படைத்தன? அவை ஒரு மலையையாவது படைத்தனவா? ஒரு ஆறையாவது படைத்தனவா? அல்லது வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததில் அல்லாஹ்வுடன் அவற்றிற்கும் பங்கு இருக்கின்றதா? நிச்சயமாக சிலைகள் வணக்கத்திற்குத் தகுதியானவை என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் குர்ஆனுக்கு முன்னால் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள். அல்லது முன்னோர்கள் விட்டுச் சென்ற அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியை கொண்டுவாருங்கள்.

(5) 46.5. அல்லாஹ் அல்லாத தன்னுடைய அழைப்புக்கு மறுமை நாள் வரை பதிலளிக்காத சிலைகளை வணங்குபவனை விட வழிகெட்டவன் வேறு யாரும் இல்லை. அல்லாஹ் அல்லாத அவர்கள் வணங்கும் சிலைகள் அவர்களுக்குப் பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் எப்படிப்போனாலும் தம்மை வணங்குபவர்களின் பிரார்த்தனையைக் கூட அறியாமல் இருக்கிறது.

(6) 46.6. அவை உலகில் பலனளிக்காமல் இருப்பதோடு மறுமை நாளில் ஒன்றுதிரட்டப்படும்போது தம்மை வணங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை எதிரிகளாகிவிடும்; அவர்களை விட்டு அவை விலகிவிடும். அவர்கள் தங்களை வணங்கிக் கொண்டிருந்ததே தமக்குத் தெரியாது என மறுத்துவிடும்.

(7) 46.7. நாம் நம் தூதர் மீது இறக்கிய வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால், நிராகரிப்பாளர்கள், தூதரின் மூலம் தங்களிடம் வந்த குர்ஆனைப் பார்த்துக் கூறுகிறார்கள்: “இது தெளிவான சூனியமாகும். இது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி அல்ல.”

(8) 46.8. இந்த இணைவைப்பாளர்கள், “நிச்சயமாக முஹம்மது குர்ஆனை சுயமாகப் புனைந்து அதனை அல்லாஹ்வின்பால் இணைத்துள்ளார்” என்று கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் அதனை சுயமாகப் புனைந்துகொண்டால் உங்களால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தந்திரம் செய்து என்னைச் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. எனவே எவ்வாறு நான் அவன் மீது இட்டுக்கட்டி என்னை நான் வேதனையில் ஆழ்த்திக் கொள்வேன்? அவனுடைய குர்ஆனில் நீங்கள் செய்யும் ஆட்சேபனைகளையும் என்னை வசைபாடுவதையும் அல்லாஹ் நன்கறிவான். எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சிகூற அல்லாஹ்வே போதுமானவன். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.”

(9) 46.9. -தூதரே!- உமது நபித்துவத்தை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கான எனது அழைப்பை நீங்கள் அபூர்வமாகக் கருதுவதற்கு, நான் அல்லாஹ் அனுப்பிய தூதர்களில் முதலாமவன் அல்ல. எனக்கு முன்னர் பல தூதர்கள் கடந்து சென்றுள்ளார்கள். உலகில் அல்லாஹ் என்னுடன் எவ்வாறு நடந்துகொள்வான் என்றோ உங்களுடன் எவ்வாறு நடந்துகொள்வான் என்றோ எனக்குத் தெரியாது. அவன் எனக்கு வஹியாக அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் கூறுவதும் செயல்படுவதும் அவன் எனக்கு வஹி அறிவிப்பதன் அடிப்படையில்தான். நான் உங்களை அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தெளிவாக எச்சரிப்பவனே.

(10) 46.10. -தூதரே!- பொய்ப்பிக்கும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் எனக்குக் கூறுங்கள், இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து அதற்காக இஸ்ராயீலின் மக்களில் ஒருவர் அது சம்பந்தமாக தவ்ராத்தில் இடம்பெற்றதன் படி அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என சாட்சி கூறி அதன்மீது நம்பிக்கைகொண்டிருந்தும் நீங்கள் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொண்டு அதனை நிராகரித்தால் அப்போது நீங்கள் அநியாயக்காரர்கள் இல்லையா? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்ட மாட்டான்.”

(11) 46.11. குர்ஆனையும் தங்களின் தூதர் தங்களிடம் கொண்டுவந்தவற்றையும் நிராகரித்தவர்கள் நம்பிக்கைகொண்டவர்களைப் பார்த்துக் கூறினார்கள்: “முஹம்மது கொண்டுவந்துள்ளது நன்மையின்பால் வழிகாட்டும் சத்தியமாக இருந்திருந்தால் இந்த அடிமைகளும் ஏழைகளும் பலவீனர்களும் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள்.” நிச்சயமாக அவர்கள் தங்களின் தூதர் தம்மிடம் கொண்டுவந்ததன் மூலம் நேர்வழியடையவில்லை என்பதனால் அவர்கள் கூறுவார்கள்: “நம்மிடம் வந்துள்ளது பழமையான பொய்தான். நாங்கள் பொய்யைப் பின்பற்ற மாட்டோம்.”

(12) 46.12. இந்த குர்ஆனுக்கு முன்னர் அல்லாஹ் மூஸாவின் மீது இறக்கிய வேதமான தவ்ராத் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் நம்பிக்கைகொண்டு இஸ்ராயீலின் மக்களில் அதனைப் பின்பற்றியவர்களுக்கு அருட்கொடையாகவும் இருந்தது. முஹம்மது மீது இறக்கப்பட்ட அரபி மொழியிலான இந்த குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களை எச்சரிக்கை செய்யக்கூடியதாகவும் படைப்பாளனுடனும் அவனுடைய படைப்புகளுடனும் நல்ல முறையில் தொடர்பு வைத்துக்கொண்டவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது.

(13) 46.13. நிச்சயமாக யார் அல்லாஹ்தான் எங்களின் இறைவன். அவனைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் இல்லை’ என்று கூறி பின்னர் நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டு அதில் உறுதியாக இருக்கின்றார்களோ அவர்கள் மறுமையில் தாம் முன்னோக்கக்கூடியதை எண்ணி அச்சம்கொள்ள மாட்டார்கள். தமக்குத் தவறிய உலக பாக்கியங்களுக்காகவும் தமக்குப் பின் விட்டுச்செல்பவைக்காகவும் கவலைப்பட மாட்டார்கள்.

(14) 46.14. இந்த பண்புகளை உடையவர்கள்தாம் சுவனவாசிகளாவர். உலகில் அவர்கள் முற்படுத்தி வைத்த நற்செயல்களுக்குக் கூலியாக அதில் என்றென்றும் அவர்கள் நிலைத்திருப்பார்கள்.

(15) 46.15. தன் பெற்றோர் வாழும் போதும் மரணித்த பின்பும் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவர்களுக்கு உபகாரம் செய்யுமாறு நாம் மனிதனுக்கு கடுமையான முறையில் ஏவினோம். குறிப்பாக அவனை சிரமத்துடன் சுமந்து பெற்றெடுத்த அவனது தாயுடன். அவள் அவனை சுமந்த காலமும் பால்குடி மறக்கடிக்கும் காலமும் முப்பது மாதங்களாகும். அவன் தன்னுடைய அறிவு மற்றும் உடல் ரீதியான முழுமையான பலத்தைப் பெற நாற்பது வருடங்கள் ஆகிறது. அவன் கூறுகிறான்: “என் இறைவா! நீ என்மீதும் என் தாய், தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்கு நான் நன்றிசெலுத்துவதற்கும் நீ விரும்பும் நற்செயல்களைச் செய்வதற்கும் எனக்கு அருள்புரிவாயாக. என்னிடமிருந்து அதனை ஏற்றுக்கொள்வாயாக! என் பிள்ளைகளைச் சீர்படுத்துவாயாக. நிச்சயமாக நான் என் பாவங்களிலிருந்து உன் பக்கம் மீண்டு விட்டேன். உனக்கு வழிப்பட்டு உனது கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களில் ஒருவனாகிவிட்டேன்.

(16) 46.16. நாம் அவர்களிடமிருந்து அவர்களின் நற்செயல்களை ஏற்றுக் கொண்டு அவர்கள் செய்த தீய செயல்களை மன்னித்துவிடுகின்றோம். அவற்றிற்காக நாம் அவர்களைக் குற்றம் பிடிப்பதில்லை. அவர்கள்தாம் சுவனவாசிகளில் உள்ளவர்களாவர். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இந்த வாக்குறுதி உண்மையானதாகும். அது சந்தேகம் இல்லாமல் நிறைவேறியே தீரும்.

(17) 46.17. அந்த மனிதன் தன் பெற்றோரிடம் கூறினான்: “உங்கள் இருவருக்கும் கேடுதான். நான் மரணித்தபிறகு என் சவக்குழியிலிருந்து மீண்டும் வெளிப்படுத்தப்படுவேன் என்று மிரட்டுகிறீர்களா? பல தலைமுறைகள் கடந்துவிட்டன. அவற்றில் ஏராளமான மனிதர்கள் இறந்தனர். ஆனால் அவர்களில் யாரும் மீண்டும் உயிருடன் எழுப்பப்படவில்லையே!” அவனுடைய தாய், தந்தையரோ தங்கள் மகனுக்கு நம்பிக்கைகொள்வதற்கு நேர்வழிகாட்டுமாறு அல்லாஹ்விடம் உதவிதேடுகிறார்கள். அவர்கள் இருவரும் தங்கள் மகனிடம் கூறினார்கள்: “நீ உயிர்கொடுத்து மீண்டும் எழுப்பப்படுவதன் மீது நம்பிக்கைகொள்ளவில்லையெனில் உனக்கு அழிவுதான் உண்டாகும். எனவே அதன் மீது நம்பிக்கைகொள். நிச்சயமாக மீண்டும் எழுப்பும் அல்லாஹ்வின் வாக்குறுதி எவ்வித சந்தேகமுமற்ற உண்மையாகும்.” அவன் மீண்டும் அதேபோன்று மறுத்தவனாகக் கூறினான்: “மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோம் என்று கூறப்படும் விஷயம் முன்னோர்களின் புத்தகங்களிலிருந்து எடுத்து, எழுதப்பட்டு கூறப்பட்டதாகும். அது அல்லாஹ்விடமிருந்து உறுதியாக்கப்பட்ட ஒன்றல்ல.

(18) 46.18. இவர்களுக்கு முன்வாழ்ந்த மனித, ஜின் சமூகங்களோடு இவர்கள் மீதும் வேதனை உறுதியாகிவிட்டது. நிச்சயமாக நரகில் நுழைவதன் மூலம் அவர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாக இருந்தார்கள்.

(19) 46.19. -சுவனவாசிகள், நரகவாசிகள் என்ற- இருபிரிவினருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப படித்தரங்கள் உண்டு. சுவனவாசிகளின் படித்தரங்கள் உயர்ந்ததாக இருக்கும். நரகவாசிகளின் படித்தரங்கள் தாழ்ந்ததாக இருக்கும். அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை முழுமையாக வழங்கிடுவான். மறுமை நாளில் அவர்களின் நன்மைகள் குறைக்கப்பட்டோ, தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(20) 46.20. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர்களை பொய்ப்பித்தவர்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவதற்காக நரகத்தின் முன் நிறுத்தப்படும்போது அவர்களை இழிவுபடுத்தும்விதமாக அவர்களிடம் கூறப்படும்: “உலக வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த தூய்மையானவற்றையெல்லாம் நீங்கள் வீணடித்து அதிலுள்ள இன்பங்களை அனுபவித்தீர்கள். இன்றைய தினம் அநியாயமாக நீங்கள் பூமியில் கர்வம் கொண்டதனாலும் நிராகரித்து, பாவங்கள் புரிந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாததனாலும் உங்களை இழிவுபடுத்தும் வேதனையை உங்களுக்குக் கூலியாக வழங்கப்படும்.

(21) 46.21. -தூதரே!- ஆதின் வம்சாவளி சகோதரர் ஹூதை நினைவுகூர்வீராக. அவர் தம் சமூகத்தினரை அவர்களின் மீது அல்லாஹ்வின் வேதனை நிகழும் என எச்சரிக்கை செய்தார். அவர்கள் அரேபிய தீப கற்பத்தின் தெற்குப்பகுதியில் மணல்மேடுகளிலுள்ள அவர்களின் வசிப்பிடங்களில் இருந்தார்கள். ஹூதிற்கு முன்னரும் பின்னரும் தமது சமூகத்தை எச்சரிக்கை செய்யும் தூதர்கள் வந்துசென்றார்கள். அவர்கள் தங்கள் சமூக மக்களிடம் கூறினார்கள்: “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத்தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். என் சமூகமே! நிச்சயமாக உங்கள் மீது மாபெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகிறேன்.”

(22) 46.22. அவரது சமூகத்தார் கூறினார்கள்: “எங்கள் தெய்வங்களை வணங்குவதை விட்டும் எங்களைத் திசைதிருப்பிடவா நீர் எங்களிடம் வந்துள்ளீர்?! இது ஒருபோதும் நிகழாது. நீர் கூறுவதில் உண்மையாளராக இருந்தால் நீர் எச்சரிக்கும் வேதனையை எங்களிடம் கொண்டுவாரும்.

(23) 46.23. அவர் கூறினார்: “வேதனைக்குரிய நேரம் என்பது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. நான் எந்த தூதுச் செய்தியைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துரைக்கும் தூதர்தான். ஆயினும் நான் உங்களை அறியாத மக்களாகவே காண்கிறேன். அதனால்தான் உங்களுக்குப் பலனளிக்கும் விஷயங்களை விட்டுவிட்டு தீங்கிழைக்கும் விஷயங்களைச் செய்கிறீர்கள்.”

(24) 46.24. அவர்கள் அவசரப்பட்ட வேதனை அவர்களிடம் வந்ததும், வானில் ஒரு திசையில் தோன்றிய மேகம் தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதைக் கண்டபோது அவர்கள் கூறினார்கள்: “இது எங்களுக்கு மழை தரும் மேகமாகும்.” ஹூத் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் எண்ணுவதுபோல் இது மழை மேகமல்ல. மாறாக இது நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்த வேதனையாகும். அது வேதனைமிக்க தண்டனையை உள்ளடக்கிய காற்றாகும்.

(25) 46.25. அது அல்லாஹ் அழிக்குமாறு கட்டளையிட்ட தான் கடந்து செல்லும் ஒவ்வொன்றையும் அழித்துவிடக்கூடியது. அவர்கள் செத்து மடிந்தார்கள். அவர்கள் வசித்ததற்கு அடையாளமான அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. இவ்வாறான வேதனை மிக்க கூலியை நிராகரிப்பிலும் பாவங்களிலும் நிலைத்திருக்கும் குற்றவாளிகளுக்கு நாம் வழங்குகின்றோம்.

(26) 46.26. நாம் உங்களுக்கு வழங்காத வசதிகளையெல்லாம் ஹூதின் சமூகத்திற்கு வழங்கியிருந்தோம். அவர்கள் செவியேற்பதற்கு செவிகளையும் பார்ப்பதற்கு கண்களையும் விளங்கிக்கொள்வதற்கு உள்ளங்களையும் நாம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தோம். அவர்களின் செவிகளோ, பார்வைகளோ, உள்ளங்களோ அவர்களுக்கு எப்பயனையும் அளிக்கவில்லை. அவர்களிடம் வந்த அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றவில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த அவர்களின் நபியான ஹூத் எச்சரித்த வேதனையே அவர்களிடம் வந்தது.

(27) 46.27. -மக்காவாசிகளே!- உங்களைச் சுற்றியுள்ள ஊர்களையும் நாம் அழித்துள்ளோம். ஆத், ஸமூத், லூத்தின் சமூகம், மத்யன்வாசிகள் ஆகியோரை நாம் அழித்துள்ளோம். அவர்கள் நிராகரிப்பிலிருந்து திரும்பிவிடும்பொருட்டு பலவகையான ஆதாரங்களையும் சான்றுகளையும் நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.

(28) 46.28. அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தெய்வங்களாக ஏற்படுத்திக்கொண்டு வணக்கம் மற்றும் பலியிடுதல் மூலம் அவற்றை நெருங்கிக்கொண்டிருந்த சிலைகள் அவர்களுக்கு உதவி புரிந்திருக்கக்கூடாதா? அவை அவர்களுக்கு நிச்சயமாக உதவிபுரியவில்லை. மாறாக அவர்கள் அவைகளின் பக்கம் மிகத் தேவையுடையோராக இருந்த சமயத்தில் அவர்களைவிட்டும் மறைந்துவிட்டன. சிலைகள் தங்களுக்குப் பயனளிக்கும், அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்று அவர்கள் மேலெண்ணம் கொண்டமை யாவும் பொய்யும் இட்டுக்கட்டுமாகும்.

(29) 46.29. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனை செவிசாய்த்துக் கேட்கும் ஜின்களில் ஒரு பிரிவினரை நாம் உம் பக்கம் அனுப்பியதை நினைவு கூறுவீராக! அவர்கள் அதனைச் செவியேற்பதற்காக வந்தபோது அவர்களில் சிலர் சிலரிடம் கூறினார்கள்: “கவனமாக செவியேற்பதற்காக அமைதியாக இருங்கள்.” தூதர் ஓதிமுடித்த பிறகு அவர்கள் தங்களின் சமூகத்தவரிடம் இந்த குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளவில்லையெனில் ஏற்படப்போகும் அல்லாஹ்வின் வேதனையைக்குறித்து எச்சரித்தவர்களாகத் திரும்பினார்கள்.

(30) 46.30. அவர்கள் தமது சமூகத்திடம் கூறினார்கள்: “எம் சமூகமே! நாங்கள் ஒரு வேதத்தை செவியுற்றோம். அது அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக்கூடிய மூஸாவுக்கு பிறகு அல்லாஹ் இறக்கிய வேதமாகும். நாங்கள் செவியேற்ற இந்த வேதம் சத்தியத்தின்பால் வழிகாட்டுகிறது. இஸ்லாம் என்னும் நேரான பாதையின்பால் வழிகாட்டுகிறது.

(31) 46.31. எம் சமூகமே! முஹம்மது உங்களை அழைக்கும் சத்தியத்திற்குப் பதிலளித்து அவர் இறைவனிடமிருந்து வந்துள்ள தூதர் என்பதை நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிப்பான். மேலும் அவர் உங்களை அழைக்கும் சத்தியத்திற்குப் பதிலளிக்காமல் அவர் தனது இறைவனின் தூதர் என நீங்கள் நம்பிக்கைகொள்ளாத பட்சத்தில் உங்களுக்காக காத்திருக்கும் வேதனைமிக்க தண்டனையிலிருந்து அவன் உங்களைப் பாதுகாக்கிறான்.

(32) 46.32. யார் முஹம்மத் அழைக்கும் சத்தியத்திற்குப் பதிலளிக்கவில்லையோ அவர் பூமியில் எங்கு விரண்டோடியும் அல்லாஹ்விடமிருந்து தப்பிவிட முடியாது. அல்லாஹ்வை விடுத்து அவரை வேதனையிலிருந்து காப்பாற்றும் உதவியாளர்கள் யாரும் அவருக்கு இருக்க மாட்டார்கள். அவர்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.

(33) 46.33. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான். பிரமாண்டமானதாக, விசாலமானதாக அவற்றை படைப்பது அவனுக்கு இயலாததல்ல. இவ்வாறு ஆற்றலுடையவன் இறந்தவர்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் அறியவில்லையா? ஆம், நிச்சயமாக அவன் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கு ஆற்றலுடையவன். அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். எனவே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பது அவனுக்கு இயலாததல்ல.

(34) 46.34. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் பொய்ப்பித்தவர்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவதற்காக நரகத்தின் முன் நிறுத்தப்படும் நாளில் இழிவுபடுத்தும் விதமாக அவர்களிடம் கேட்கப்படும்: “நீங்கள் காணும் இந்த வேதனை உண்மையானதில்லையா? அல்லது நீங்கள் உலகில் கூறிக்கொண்டிருந்தவாறு இதுவும் பொய்யா?” அவர்கள் கூறுவார்கள்: “ஆம், எங்கள் இறைவனின் மீது சத்தியமாக, நிச்சயமாக இது உண்மையாகும்.” அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் வேதனையை அனுபவியுங்கள்.”

(35) 46.35. -தூதரே!- மனவுறுதிமிக்க தூதர்களான நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோர் பொறுத்துக் கொண்டது போன்று உம் சமூகத்தினரின் மறுப்பைப் பொறுத்துக் கொள்வீராக. அவர்களிடம் வேதனை விரைவாக வந்துவிட வேண்டும் என்று அவசரப்படாதீர். உம் சமூகத்தின் மறுப்பாளர்கள் மறுமையில் தாங்கள் எச்சரிக்கப்பட்ட வேதனையைக் காணும் நாளில் அவர்கள் அனுபவிக்கும் நீண்ட வேதனையினால் உலகில் பகலின் சில மணித்துளிகளே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும். முஹம்மது மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டதாகும். நிச்சயமாக நிராகரித்து, பாவங்கள் புரிந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத கூட்டத்தினர்கள்தாம் வேதனையால் அழிக்கப்படுவார்கள்.