(1) 5.1. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கும் உங்கள் படைப்பாளனுக்குமிடையே இருக்கும் உறுதியான ஒப்பந்தங்களையும் உங்களுக்கும் ஏனைய அடியார்களுக்குமிடையே செய்துகொண்ட ஒப்பந்தங்களையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது கருணை செலுத்தும் பொருட்டு ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை உங்களுக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான். ஆயினும் வசனங்கள் மூலம் குர்ஆனில் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர. ஹஜ் அல்லது உம்ராவுக்காக நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் போது தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. தனது ஞானத்திற்கு ஏற்ப அல்லாஹ் தான் நாடியதை ஹலாலாகவும் ஹராமாகவும் தீர்மானிக்கிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. அவனுடைய தீர்மானத்தை யாரும் ஆட்சேபிக்கவும் முடியாது.
(2) 5.2. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு மதிக்குமாறு கட்டளையிட்ட புனிதங்களை அவமதித்துவிடாதீர்கள். தைத்த ஆடைகளை அணிவது போன்ற இஹ்ராம் அணிந்த நிலையில் தடைசெய்யப்பட்டவற்றை விட்டும் வேட்டையாடுவது போன்ற புனிதப் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்டவற்றையும் தவிர்ந்துகொள்ளுங்கள். புனிதமான மாதங்களில் போர் புரியாதீர்கள். (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகியவை புனித மாதங்களாகும்) புனிதப்பிரதேச எல்லையில் அல்லாஹ்வுக்காக பலியிடுவதற்கு வழங்கப்பட்ட கால்நடைகளை அபகரிப்பதன் மூலமோ அது அடையவேண்டிய இடத்தைவிட்டுத் தடுப்பதன் மூலமோ அதனை ஆகுமாக்கிக்கொள்ளாதீர்கள். பலிப்பிராணி என்று உணர்த்தப்படுவதற்காக கழுத்தில் பட்டை கட்டப்பட்ட பிராணியையும், அல்லாஹ்வின் திருப்தியையும் வியாபார நலனையும் கருத்தில்கொண்டு கஃபா என்றும் இறையில்லத்தை நாடி வருவோரையும் ஆகுமாக்கிக்கொள்ளாதீர்கள். இஹ்ராமிலிருந்து நீங்கள் விடுபட்டு, புனிதப் பிரதேச எல்லையிலிருந்து நீங்கள் வெளியேறிவிட்டால் நீங்கள் நாடினால் வேட்டையாடிக் கொள்ளலாம். மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பு அவர்களுடன் நீதமாக நடந்துகொள்ளாது அநியாயம் இழைப்பதற்கு உங்களைத் தூண்டிவிட வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஏவப்பட்ட நல்லவற்றைச் செய்வதற்கும் தடுக்கப்பட்ட தீயவற்றை விட்டுத் தவிர்ந்திருப்பதற்கும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவங்களில் ஈடுபடவும் மக்களின் உயிர் உடமை மானம் ஆகியவற்றில் அத்துமீறுவதற்கும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து, அவனுக்கு மாறுசெய்வதிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன். எனவே அவனது தண்டனையிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.
(3) 5.3. அறுக்கப்படாமல் தாமாகச் செத்த பிராணி, வழிந்தோடிய இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயரில் அறுக்கப்பட்டது, கழுத்து நெறிபட்டு செத்தது, அடிபட்டு செத்தது, உயரமான இடத்திலிருந்து விழுந்து செத்தது, கொம்பால் முட்டப்பட்டு செத்தது ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். சிங்கம், புலி, ஓநாய் போன்ற மிருகங்களால் கடித்து குதறப்பட்டு செத்தவையும் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை சாவதற்கு முன்னரே நீங்கள் அவற்றை முறையாக அறுத்துவிட்டால் அவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். சிலைகளுக்காக பலியிடப்பட்டவற்றையும் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். ''செய்யவும்'' அல்லது ''செய்ய வேண்டாம்'' என்று எழுதப்பட்ட கற்கள் அல்லது அம்புகளின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் உங்களுக்குப் பங்கீடு செய்யப்பட்ட மறைவானவற்றை அறிந்துகொள்ள முயற்சிப்பதையும் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். தடைசெய்யப்பட்ட இந்த காரியங்களில் ஈடுபடுவது அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதாகும். இன்று இஸ்லாத்தின் பலத்தைக் கண்ட நிராகரிப்பாளர்கள் உங்களை அதனை விட்டும் திருப்பிவிட முடியும் என்பதில் நம்பிக்கையிழந்து விட்டார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள். இன்றைய தினம் உங்களின் மார்க்கமான இஸ்லாத்தை நான் பரிபூரணப்படுத்திவிட்டேன். உங்கள்மீது பொழிந்த வெளிப்படையான, அந்தரங்கமான அருட்கொடையையும் முழுமைப்படுத்திவிட்டேன். உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன். எனவே இதைத்தவிர வேறு மார்க்கத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எவரேனும் பசியின் காரணமாக நிர்ப்பந்திக்கப்பட்டு பாவம்செய்ய விரும்பாமல் இறந்தவற்றை உண்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(4) 5.4. தூதரே! உம் தோழர்கள் உம்மிடம், ‘உண்பதற்குத் தமக்கு அனுமதிக்கப்பட்டவை எவை?’ என்று கேட்கிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக: “தூய்மையான அனைத்து உணவுகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. பயிற்றுவிக்கப்பட்ட கூரிய பற்களையுடைய நாய், சிறுத்தை, கூரிய நகங்களுடைய கழுகு போன்றவை வேட்டையாடியவற்றையும் நீங்கள் உண்ணலாம். நீங்கள்தாம் அவற்றிற்கு வேட்டையாடக் கற்றுக் கொடுக்கிறீர்கள். வேட்டையாடும் ஒழுங்குகளைப் பற்றிய அறிவை அல்லாஹ்தான் உங்களுக்கு வழங்கினான். அவ்வேட்டைப் பிராணிகள், சொல்வதைச் செயற்படுத்தி தடுப்பதைத் தவிர்க்குமளவு பயிற்சி பெற்றுவிட்டால் அவை வேட்டையாடுபவை இறந்து விட்டாலும் அதனை நீங்கள் உண்ணுங்கள். அவற்றை வேட்டைக்கு அனுப்பும்போது அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் செயல்களுக்கு விரைவாக கணக்கு தீர்ப்பவன்.
(5) 5.5. இன்றைய தினம் சுவையானவற்றை உண்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களால் அறுக்கப்பட்டவற்றை நீங்களும் நீங்கள் அறுத்தவற்றை அவர்களும் உண்ணலாம். நீங்கள் மணக்கொடை அளித்து விபச்சாரத்தில் ஈடுபடாமலும் வைப்பாட்டிகள் வைத்துக்கொள்ளாமலும் இருந்தால் சுதந்திரமான கற்பொழுக்கமுள்ள, முஃமினான பெண்களையும் உங்களுக்கு முன்னால் வேதம் வழங்கப்பட்ட யூத மற்றும் கிருஸ்தவப் பெண்களில் சுதந்திரமான, கற்பொழுக்கமுள்ளவர்களையும் மணமுடித்துக்கொள்ளலாம். அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கிய சட்டங்களை நிராகரிப்பவரின் அமல்கள் யாவும், அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையான ஈமானை இழந்ததனால் வீணாகிவிடும். அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க வேண்டும் என்பதனால் மறுமை நாளில் நஷ்டமடைந்தவராவார்.
(6) 5.6. நம்பிக்கை கொண்டவர்களே! சிறுதொடக்கு உள்ள நிலையில் நீங்கள் தொழுகையை நிறைவேற்ற எழுந்தால் உங்கள் முகங்களையும் முழங்கைகள் வரை கைகளையும் கழுவி, தலைகளை தடவி இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவி வுழூ செய்துகொள்ளுங்கள். உங்கள் மீது குளிப்பு அவசியமாகிவிட்டால் குளித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளிகளாக இருந்து நோய் அதிகமாகிவிடும் என்றோ அல்லது நிவாரணம் தாமதமடையும் என்றோ அஞ்சினால் அல்லது ஆரோக்கியமாக நீங்கள் பயணத்தில் இருந்தால் அல்லது நீங்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவது போன்றவற்றின் மூலம் சிறுதொடக்கு உள்ள நிலமையில் இருந்து அல்லது உங்கள் மனைவியருடன் உடலுறவு கொண்டு பெருந்தொடக்கு உடையவராக இருந்து சுத்தம் செய்வதற்காக தண்ணீரைத் தேடியும் கிடைக்காத பட்சத்தில், பூமியின் மேல் உங்கள் இருகைகளால் அடித்து உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். பாதிப்பு ஏற்பட்டாலும் தண்ணீரை கண்டிப்பாக பயன்படுத்தியே தீர வேண்டும் என்று அல்லாஹ் தன் சட்டங்களில் சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. தண்ணீர் இல்லாத அல்லது பயன்படுத்த முடியாத சமயத்தில் அல்லாஹ் அதற்கான பதிலீட்டை அனுமதித்துள்ளான். இது அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை முழுமைப்படுத்துவதற்காகவும் அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை மறுக்காது நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காகவும்தான்.
(7) 5.7. இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்டி அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். “மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் நாங்கள் நீர் கூறும் விஷயத்தை செவியுறுவோம், உம் கட்டளைக்குக் கீழ்ப்படிவோம்” என்று நீங்கள் தூதரிடம் உடன்படிக்கை செய்து கூறிய சமயத்தில் அவன் உங்களிடம் பெற்ற வாக்குறுதியை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
(8) 5.8. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தியவர்களே! அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக அவன் உங்கள் மீது விதித்த கடமைகளை நிறைவேற்றுபவர்களாகவும், அநீதியின்றி நீதமாகவே சாட்சி கூறக்கூடியவர்களாகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமூகத்தின் மீதுள்ள பகைமை அவர்கள் மீது நீதி தவற வைத்துவிட வேண்டாம். நண்பர்கள், எதிரிகள் என அனைவருடனும் நீதி கடைபிடிக்கப்படுவது அவசியமாகும். எனவே இரு சாராருடனும் நீதமாக நடந்துகொள்ளுங்கள். நீதி செலுத்துதல் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அநீதி இழைத்தல் இறைவனுக்கு எதிரான செயல்பாடாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன். நீங்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(9) 5.9. தான் அளித்த வாக்குறுதிக்கு மாறுசெய்யாத அல்லாஹ் தன் மீதும் தன் தூதர்கள் மீதும் நம்பிக்கைகொண்டு நற்காரியம் புரிந்தவர்களின் பாவங்களை மன்னித்துவிடுவதாகவும் அவர்களுக்கு சுவனம் என்னும் மகத்தான கூலியைத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.
(10) 5.10. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய சான்றுகளை பொய்யெனக் கூறியவர்கள்தாம் நரகவாசிகளாவர். தங்களின் நிராகரிப்பிற்குத் தண்டனையாக நரகத்திற்குரிவர்களாக ஆகிவிடுவர்.
(11) 5.11. விசுவாசம் கொண்டவர்களே! உங்கள் உள்ளத்தாலும் நாவாலும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். எதிரிகள் உங்களைத் தாக்க நாடியபோது உங்களுக்கு அமைதியை அளித்து உங்கள் எதிரிகளின் உள்ளத்தில் பயத்தினை உண்டாக்கினான். உங்களை விட்டும் அவர்களைத் திருப்பி உங்களைக் காப்பாற்றினான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நம்பிக்கையாளர்கள் தங்களின் உலக மற்றும் மார்க்க விவகாரங்களில் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
(12) 5.12. பின்வரும் விடயங்களுக்காக இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதியான வாக்குறுதி வாங்கினான். அவர்களுக்கு பன்னிரண்டு தலைவர்களை ஏற்படுத்தினான். ஒவ்வொருவரும் தம் பொறுப்பிலுள்ளவர்களைக் கண்காணிப்பவர்களாக இருந்தார்கள். அவன் இஸ்ராயீலின் மக்களிடம் கூறினான், “நீங்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து, உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத் வழங்கி, என் தூதர்கள் அனைவரையும் பாகுபாடின்றி உண்மைப்படுத்தி, அவர்களைக் கண்ணியப்படுத்தி அவர்களுக்கு உதவியும் செய்தால் நான் உங்களுடனே இருந்து உதவியும் ஆதரவும் வழங்குவேன். மேற்குறிப்பிட்ட அனைத்தையும் நீங்கள் நிறைவேற்றினால் நீங்கள் செய்த பாவங்களை நான் மன்னித்துவிடுவேன். மறுமைநாளில் சுவனங்களில் உங்களை பிரவேசிக்கச் செய்வேன். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். உறுதிப்படுத்தப்பட்ட இந்த வாக்குறுதியை யாரேனும் மீறிவிட்டால் அவர் சத்தியப்பாதையை அறிந்துகொண்டே வேண்டுமென்றே அதிலிருந்து நெறிபிறழ்ந்து விட்டவராவார்.
(13) 5.13. அவர்கள் தம்மிடம் எடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறியதனால் நாம் அவர்களை நம் அருளிலிருந்து தூரமாக்கி, கடின மனம் கொண்டவர்களாக ஆக்கிவிட்டோம். எனவே எந்த நன்மையான விஷயமும் அவர்களை அடையாது. அறிவுரையும் அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் வார்த்தைகளை மாற்றுவது மற்றும் தங்களின் மனஇச்சைக்கேற்ப தவறான பொருள் கற்பிப்பது ஆகியவற்றின் மூலம் வசனங்களை திரிக்கிறார்கள்; தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளில் சிலவற்றைச் செயல்படுத்துவதை அவர்கள் விட்டுவிட்டார்கள். தூதரே! அவர்கள் அல்லாஹ்வுக்கும் நம்பிக்கைகொண்ட அவனது அடியார்களுக்கும் மோசடி செய்வதை நீர் கண்டுகொண்டே இருக்கிறீர். ஆனாலும் அவர்களில் சிலர் தம்மிடம் எடுக்கப்பட்ட வாக்குறுதியைப் பூர்த்திசெய்தனர். நீர் அவர்களைப் புறக்கணித்து கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீராக. இவ்வாறு செய்வதே நன்மையாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்யக்கூடியவர்களை நேசிக்கிறான்.
(14) 5.14. யூதர்களிடம் உறுதியான வாக்குறுதியைப் பெற்றதைப் போன்றே தங்களைத் தாங்களே தூய்மையானவர்கள் என்று கூறிக் கொண்ட ஈஸாவைப் பின்பற்றியவர்களிடமும் உறுதியான வாக்குறுதி வாங்கினோம். யூதர்கள் செய்ததைப் போன்றே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரையில் ஒரு பகுதியின்படி செயல்படுவதை இவர்களும் விட்டுவிட்டார்கள். நாம் அவர்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்தினோம். அவர்கள் ஒருவர் மற்றவரை காஃபிர் என்று கூறி சண்டையிடக்கூடியவர்களாகி விட்டார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை விரைவில் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(15) 5.15. தவ்ராத் என்னும் வேதம் வழங்கப்பட்ட யூதர்களே! இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களே! நம்முடைய தூதர் முஹம்மது உங்களிடம் வந்துள்ளார்; நீங்கள் மறைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களிலுள்ள பெரும்பாலான விஷயங்களை அவர் தெளிவுபடுத்துகிறார்; உங்களை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லாத பல விஷயங்களை அவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்; அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் என்னும் வேதம் உங்களிடம் வந்துள்ளது. அது ஒளிரும் பிரகாசமாகவும் மக்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக விவகாரங்களுக்குத் தேவையானவற்றைத் தெளிவுபடுத்தும் வேதமாகவும் இருக்கின்றது.
(16) 5.16. அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் தனக்கு விருப்பமான ஈமான் மற்றும் நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தனது வேதனையிலிருந்து ஈடேற்றம் பெறும் வழிகளைக் காட்டுகிறான். அது சுவனத்தின்பால் கொண்டு சேர்க்கக்கூடிய வழிகளாகும். நிராகரிப்பு, தீமை ஆகிய இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அவனை நம்புதல், அவனுக்குக் கீழ்படிதல் ஆகிய ஒளியின் பக்கம் செல்வதற்கு அனுமதிக்கிறான். மேலும் இஸ்லாம் என்னும் நேரான பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறான்.
(17) 5.17. ‘மர்யமின் மகன் ஈஸாதான் இறைவன்’ என்று கூறிய கிருஸ்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “ஈஸாவையும் அவருடைய அன்னையையும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடிவிட்டால் யாரால் அதனைத் தடுக்க முடியும்? அவனைத் தடுப்பவர் யாருமில்லை என்பதே அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, மர்யமின் மகன் ஈஸாவும் அவரது தாய் மர்யமும் பூமியிலுள்ள அனைவரும் அல்லாஹ்வின் படைப்புகள்தாம் என்பதற்கான சான்றாகும். வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான் நாடியதை படைக்கிறான், அவ்வாறு அவன் படைப்பதற்கு நாடியவற்றில் ஒருவரே ஈஸா (அலை) அவர்கள். அவர் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.
(18) 5.18. யூதர்களும் கிறிஸ்தவர்களும், ‘தாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், அவனுடைய நேசர்கள்’ என்று வாதிடுகின்றனர். தூதரே! நீர் கூறுவீராக: “அப்படியென்றால் நீங்கள் செய்த பாவங்களின் காரணமாக அவன் ஏன் உங்களைத் தண்டிக்கிறான்? நீங்கள் கூறியவாறு நீங்கள் அவனுடைய நேசர்களாக இருந்தால் இவ்வுலகில் கொலை, உருமாற்றுதல் ஆகிய வேதனைகளாலும் மறுமையில் நெருப்பினாலும் தண்டித்திருக்கமாட்டான். ஏனெனில் அவன் தான் நேசிப்பவர்களை தண்டிக்கமாட்டான். மாறாக மற்ற மனிதர்களைப் போல நீங்களும் மனிதர்கள்தாம். நன்மை செய்தோருக்கு அவன் சுவனத்தை கூலியாக வழங்குகிறான். தீமை செய்தோருக்கு அவன் நரகத்தை தண்டனையாக வழங்குகிறான். தான் நாடியவர்களைத் தன் அருளால் மன்னிக்கிறான்; தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடைப்பட்டுள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் பக்கமே திரும்ப வேண்டும்.
(19) 5.19. வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே! தூதர்கள் அற்ற ஒரு இடைவெளிக்குப் பிறகு, ஓரு தூதர் அனுப்பப்படுவதற்கான கடும் தேவை நிலவியதன் பின்னால் நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உங்களிடம் வந்துள்ளார். ஏனெனில், நன்மையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடிய தண்டனையைக் கொண்டு எச்சரிக்கை செய்யக்கூடிய எந்தத் தூதரும் எங்களிடம் வரவில்லை என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காகத்தான். உங்களிடம் நன்மையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியவராகவும் தண்டனையைக் கொண்டு எச்சரிக்கை செய்யக்கூடியவராகவும் முஹம்மது வந்துவிட்டார். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனைவிட்டுத் தப்பிவிட முடியாது. தூதர்களை அனுப்புவதும் தூதுத்துவத்தை முஹம்மதைக் கொண்டு நிறைவு செய்வதும் அவனது ஆற்றலில் உள்ளடங்கியவைதான்.
(20) 5.20. தூதரே! மூஸா இஸ்லாஈலின் சந்ததியான தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “என் சமூகமே! உங்கள் உள்ளத்தாலும் நாவாலும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். அவன் உங்களிடையே நேர்வழியின் பக்கம் அழைக்கும் தூதர்களை ஏற்படுத்தினான். நீங்கள் அடிமைப்பட்டு ஆளப்படுவோராக இருந்த பின்னர் உங்களை நீங்களே ஆளுவோராக ஆக்கினான். உங்களின் காலகட்டத்தில் யாருக்கும் வழங்காத அருட்கொடைகளையெல்லாம் உங்களுக்கு வழங்கினான்.”
(21) 5.21. மூஸா கூறினார்: “எனது கூட்டமே! புனித பூமியில் (பைத்துல் முகத்தசும் அதைச் சுற்றியுள்ள பகுதியில்) நுழையுங்கள். அங்கு நுழைவீர்கள், அங்கிருக்கும் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவீர்கள் என்பதையும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்துள்ளான். அநியாயக்காரர்களுக்கு முன்னால் புறங்காட்டி ஓடிவிடாதீர்கள். இல்லாவிட்டால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் இழப்பையே சந்திப்பீர்கள்.”
(22) 5.22. அவரது சமூகத்தார் கூறினார்கள்: “மூஸாவே! புனித பூமியில் பலம் பொருந்திய கடுமையாகப் போர் புரியும் ஒரு சமூகத்தார் இருக்கிறார்கள். இதனால் நாம் உள்ளே செல்ல முடியவில்லை. அவர்கள் அங்கிருக்கும் வரை நாங்கள் அங்கு நுழைய மாட்டோம். ஏனெனில் அவர்களுடன் போரிடுவதற்கு எங்களிடம் எந்தப் பலமும் இல்லை. அவர்கள் வெளியேறி விட்டால் நாங்கள் அங்கு நுழைவோம்.
(23) 5.23. மூஸாவின் தோழர்களில் அல்லாஹ்வையும் அவனது தண்டனையையும் அஞ்சிய இரு மனிதர்கள் இருந்தார்கள் - அவர்கள் இருவருக்கும் அல்லாஹ் தனக்குக் கட்டுப்படும் பாக்கியத்தை அளித்து அருள்புரிந்திருந்தான் - அவர்கள் தங்கள் சமூகத்தாருக்கு மூஸா (அலை) அவர்களது ஏவலுக்குக் கட்டுப்படுமாறு ஆர்வமூட்டியவர்களாக கூறினார்கள், “நகரின் வாயிலில் அநியாயக்காரர்களுக்கு எதிராக நுழைந்துவிடுங்கள். நீங்கள் நுழைந்துவிட்டால் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு நீங்கள்தாம் வெற்றியடைவீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு வெளிப்படையான காரணிகளைக் கடைப்பிடிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதே இறைவன் அமைத்த நியதியாகும். நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வையுங்கள். அல்லாஹ்வை ஈமான் கொள்வது அவனை முழுமையாக நம்புவதை வேண்டிநிற்கின்றது.
(24) 5.24. இஸ்ராயீலின் மக்களில் மூஸா அலை அவர்களது கூட்டம் தமது தூதரின் கட்டளைக்கு தொடர்ந்து மாறுசெய்தவர்களாகக் கூறினார்கள்: “அந்த அநியாயக்காரர்கள் அங்கிருக்கும் வரை நாங்கள் ஒருபோதும் அந்நகரில் நுழைய மாட்டோம். நீரும் உம் இறைவனும் சென்று அந்த அநியாயக்காரர்களுடன் போரிடுங்கள். ஆனால் நாம் உங்கள் இருவருடனும் சேர்ந்து போருக்குச் செல்லாமல் நமது இடத்திலேயே அமர்ந்திருப்போம்.
(25) 5.25. மூஸா தம் இறைவனிடம் கூறினார்: “என் இறைவா! என்னையும் என் சகோதரர் ஹாரூனையும் தவிர யார் மீதும் எனக்கு அதிகாரமில்லை. எனவே எங்களுக்கும், உனக்கும் உன் தூதருக்கும் கட்டுப்படாத இந்தக் கூட்டத்திற்குமிடையே தீர்ப்பளிப்பாயாக”
(26) 5.26. அல்லாஹ் தன் தூதரான மூஸாவிடம் கூறினான்: “இஸ்ராயீலின் மக்களின் மீது நாற்பது வருடங்கள் வரை புனித பூமியில் நுழைவதை அல்லாஹ் தடைசெய்துவிட்டான். இக்காலத்தில் அவர்கள் பாலைவனத்தில் வழிதெரியாமல் தடுமாறித்திரிவார்கள். மூஸாவே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத இந்த மக்களுக்காக கவலைகொள்ளாதீர். ஏனெனில் இவர்கள் தாம் சம்பாதித்த பாவங்களின் காரணமாகத்தான் தண்டிக்கப்படுவார்கள்.
(27) 5.27. தூதரே! பொறாமை மிகுந்த இந்த அநியாயக்கார யூதர்களிடம், ஆதமின் இரு மகன்களான காபீல், ஹாபீல் பற்றிய செய்தியை உண்மையுடன் எடுத்துரைப்பீராக. இருவரும் அல்லாஹ்விடம் ஒரு காணிக்கையை முன்வைத்த போது இறையச்சமுடைய ஹாபீலின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறையச்சமற்ற காபீலின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. காபீல் பொறாமையில் ஹாபீலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை வெறுத்தான். “ஹாபீலே, நான் உன்னை நிச்சயம் கொன்றுவிடுவேன்” என்று கூறினான். அதற்கு ஹாபீல், “அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களிடமிருந்தே அவன் ஏற்றுக்கொள்கிறான்” என்று கூறினார்.
(28) 5.28. “நீ என்னைக் கொல்வதற்காக உன் கையை நீட்டினாலும் நான் உன்னைப் பழிவாங்கப்போவதில்லை. நான் கோழை என்பதனாலல்ல. ஆனாலும் நான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்.”
(29) 5.29. மேலும் அச்சமூட்டியவராகக் கூறினார்: நீ என்னை அநியாயமாக, வரம்புமீறிக் கொலைசெய்த பாவத்தோடும் உனது முந்தைய பாங்களோடும் திரும்பி மறுமை நாளில் நிரந்தர நரகவாசிகளில் ஒருவனாக வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். இதுதான் வரம்புமீறுபவர்களுக்கான தண்டனையாகும். நான் உன்னைக் கொலைசெய்து அந்த பாவத்தோடு செல்ல விரும்பவில்லை.
(30) 5.30. காபீலின் மனம் தன் சகோதரன் ஹாபீலை அநியாயமாகக் கொலை செய்வதை அவனுக்கு அழகாக்கிக் காட்டியது. எனவே அவன் கொலை செய்துவிட்டான். இதன் காரணமாக அவன் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாகிவிட்டான்.
(31) தனது சகோதரனின் சடலத்தை எவ்வாறு புதைப்பது என்பதை அவனுக்கு கற்பிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பிவைத்தான். அது இறந்துபோன ஒரு காகத்தை புதைப்பதற்காக அவனுக்கு முன்னால் மண்ணைக் கிளறியது. அப்போது தன் சகோதரனைக் கொன்றவன் கூறினான் கைசேதமே! இறந்த காகத்தைப் புதைத்த இந்த காகத்தைப் போன்று கூட என் சகோதரனின் சடலத்தைப் புதைக்க இயலாமலாகிவிட்டேனே! பின்னர் அவனைப் புதைத்துவிட்டு கைசேதப்பட்டவனாகிவிட்டான்.
(32) 5.32. காபீல் தன் சகோதரனைக் கொலை செய்ததனால் இஸ்ராயீலின் மக்களுக்கு அறிவித்தோம்: “பழிவாங்குதல் அல்லது நிராகரிப்போ வழிப்பறிக்கொள்ளை மூலமோ பூமியில் குழப்பம் விளைவித்தல் ஆகிய காரணத்திற்காக அன்றி ஒரு மனிதனைக் கொலை செய்பவர் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவரைப் போன்றவராவார். ஏனெனில் அவன் அப்பாவிக்கும் குற்றவாளிக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணவில்லை. யார் அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதற்காக ஒரு உயிரைக் கொலைசெய்யாமல் தவிர்ந்துகொண்டாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போலாவார். ஏனெனில் அவரது செயலால் அனைவருக்கும் அமைதி கிடைக்கிறது. எமது தூதர்கள் இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். இருந்தும் அவர்களில் பெரும்பாலானோர் பாவங்கள் புரிந்து தங்கள் தூதர்களுக்கு மாறுசெய்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களாகவே இருந்தார்கள்.
(33) 5.33. அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போரிட்டு, கொலை, சொத்தபகரிப்பு, வழிப்பறிக்கொள்ளை ஆகிய செயல்களின் மூலம் பூமியில் குழப்பத்தையும் வெறுப்பையும் விளைவிக்க விரைபவர்களின் கூலி இதுதான்: “அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு அல்லது அறையப்படாமல் கொல்லப்பட வேண்டும் அல்லது அவர்களின் வலது கையையும் இடது காலையும் வெட்ட வேண்டும் அத்தவறில் மீண்டும் ஈடுபட்டால் இடது கையுடன் வலது காலும் துண்டிக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இந்த தண்டனை அவர்களுக்கு இவ்வுலகில் கிடைக்கும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
(34) 5.34. ஆட்சியாளர்களே! ஆயினும் இந்த வழிப்பறிக்கொள்ளையர்கள் உங்களிடம் பிடிபடுவதற்கு முன்னரே பாவமன்னிப்புக் கோரிக்கொண்டாலே தவிர. அறிந்துகொள்ளுங்கள், பாவமன்னிப்புக்கோரியதன் பின் அவர்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அவர்களைத் தண்டிக்காமல் விட்டு விடுவதும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.
(35) 5.35. அல்லாஹ்வை நம்பியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனது நெருக்கத்தையும் தேடுங்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடி நிராகரிப்பாளர்களுடன் போர் செய்யுங்கள். நீங்கள் இவ்வாறு செய்தால் நீங்கள் வேண்டுவதைப் பெற்று பயப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
(36) 5.36. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களுக்கு பூமியிலுள்ளவை அனைத்தும் அது போன்ற இன்னொரு மடங்கும் சொந்தமாக இருந்தாலும், மறுமைநாளில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க அவற்றை அவர்கள் ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனையுண்டு.
(37) 5.37. அவர்கள் நரகத்தில் நுழைந்துவிட்டபிறகு அதிலிருந்து வெளியேற நாடுகிறார்கள். அவர்களால் அது எவ்வாறு முடியும்? அதிலிருந்து அவர்களால் ஒருபோதும் வெளியேற முடியாது. அங்கு அவர்களுக்கு நிலையான வேதனையும் உண்டு.
(38) 5.38. ஆட்சியாளர்களே! மக்களின் செல்வங்களை உரிமையின்றி பறித்ததற்குக் கூலியாகவும் அல்லாஹ்வின் தண்டனையாகவும் திருடன் மற்றும் திருடியின் வலது கையை வெட்டிவிடுங்கள். இது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அச்சமூட்டலாக அமையும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தனது நிர்ணயத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.
(39) 5.39. யார் திருட்டிலிருந்து திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி தம் செயலை சீர்படுத்திக் கொண்டார்களோ அல்லாஹ் தனது அருளால் அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். ஆனாலும் விவகாரம் ஆட்சித் தலைவர் வரை சென்றுவிட்டால் அவன் பாவமன்னிப்புக் கோரினாலும் அதன் காரணமாக அவனுக்கு வழங்கப்படும் தண்டனை தளர்த்தப்படாது.
(40) 5.40. தூதரே! பின்வரும் விஷயத்தை நீர் அறிந்துள்ளீர், வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவற்றில் தான் நாடியவாறு செயல்படுகிறான். தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். தான் நாடியவர்களை தன் கருணையால் மன்னிக்கிறான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். அவனுக்கு எதுவும் இயலாததல்ல.
(41) 5.41. தூதரே! உம்மைக் கோபமூட்டுவதற்காக நிராகரிப்பான செயல்களில் மும்முரமாக ஈடுபடும் ஈமானை வெளிப்படுத்திக் கொண்டு நிராகரிப்பை மறைத்துவைத்துள்ள நயவஞ்சகர்களும், தமது தலைவர்களின் பொய்யை அதிகமாக செவிமடுத்து அதனை ஏற்கக்கூடிய யூதர்களும் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் உம்மைப் புறக்கணித்து உம்மிடம் சமூகம் தராத தங்களின் தலைவர்களை குருட்டுத்தனமாக பின்பற்றுவோராக உள்ளனர். அந்த யூதத் தலைவர்கள் தவ்ராத்திலுள்ள அல்லாஹ்வின் வார்த்தையை தங்களின் மனோஇச்சைக்கேற்ப மாற்றிவிடுகிறார்கள். அவர்கள் தங்களைப் பின்பற்றுவோரிடம் கூறுகிறார்கள், “முஹம்மது கூறுவது உங்களின் மனவிருப்பங்களுக்கு ஒத்ததாக இருந்தால் அவரைப் பின்பற்றுங்கள். அது உங்களின் விருப்பங்களுக்கு எதிரானதாக இருந்தால் அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.” தூதரே! யாரை அல்லாஹ் வழிகெடுக்க நாடிவிட்டானோ யாராலும் அவருக்கு நேரான வழியைக் காட்டிவிட முடியாது. இந்த பண்புகளையுடைய நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்கள் ஆகியோரின் உள்ளங்களை அல்லாஹ் நிராகரிப்பிலிருந்து பரிசுத்தப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும் கேவலமும் மறுமையில் நரக வேதனையான கடுமையான வேதனையும் உண்டு.
(42) 5.42. இந்த யூதர்கள் பொய்யை அதிகமாக செவியேற்கக்கூடியவர்கள்; வட்டி போன்ற தடுக்கப்பட்ட செல்வங்களை அதிகமாக உண்ணக்கூடியவர்கள். தூதரே!அவர்கள் உம்மிடம் தீர்ப்புக்கேட்டு வந்தால் நீர் விரும்பினால் தீர்ப்பளிப்பீராக அல்லது அவர்களை தீர்ப்பளிக்காது விட்டுவிடுவீராக. இரண்டில் எதை வேண்டுமானாலும் நீர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீர் அவர்களிடையே தீர்ப்பளிக்காமல் விட்டுவிட்டால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கையும் இழைத்துவிட முடியாது. அவர்கள் அக்கிரமக்காரர்களாவும் எதிரிகளாகவும் இருந்தாலும் நீர் அவர்களிடையே தீர்ப்பளித்தால் நீதியுடன் தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்தக்கூடியவர்களை நேசிக்கிறான். தீர்ப்புக்கேட்பவர்கள் நீதிபதிக்கு எதிரிகளாக இருந்தாலும் சரியே.
(43) 5.43. இவர்களின் விவகாரம் மிகவும் ஆச்சரியமானது! ஏனெனில் தாங்கள் நம்பிக்கைகொண்டிருப்பதாக கூறும் அல்லாஹ்வின் தீர்ப்பை உள்ளடக்கிய தவ்ராத் அவர்களிடம் உள்ள நிலமையிலும், உம்மை நிராகரித்துவிட்டு நீர் வழங்கும் தீர்ப்பு அவர்களின் மனவிருப்பங்களுக்கு ஒத்ததாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் உம்மிடம் தீர்ப்புக்கேட்கின்றனர். பின்னர் உமது தீர்ப்பு அவர்களின் மனவிருப்பங்களுக்கு ஒத்ததாக அமையவில்லையெனில் அதனைப் புறக்கணித்துவிடுகிறார்கள். தம் வேதத்தில் உள்ளதையும் நிராகரித்து, உமது தீர்ப்பையும் புறக்கணித்துவிடுகிறார்கள். இவர்களது இச்செயல் நம்பிக்கையாளர்களின் செயலல்ல. எனவே இவர்கள் உம்மீதும் நீர் கொண்டுவந்ததன் மீதும் நம்பிக்கைகொண்டவர்களல்ல.
(44) 5.44. நாம் மூஸாவின்மீது தவ்ராத்தை இறக்கினோம். அதில் நன்மையான விஷயங்களின்பால் வழிகாட்டுதலும் வெளிச்சம் பெறக்கூடிய ஒளியும் இருந்தன. இஸ்ராயீலின் மக்களில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்த தூதர்கள் அந்த வேதத்தின்படியே தீர்ப்பளித்தார்கள். திரிவுபடுத்தல் மாற்றுதல் ஆகியவற்றை விட்டும் வேதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியதனால், மக்களை வழிநடத்தும் அறிஞர்களும் சட்டவல்லுனர்களும் அதன்படியே தீர்ப்பளித்தார்கள். அது உண்மையானது என்பதற்கு அவர்களே சாட்சியாளர்களாக இருந்தார்கள். மக்கள் தங்கள் விவகாரங்களை அவர்களிடமே கொண்டு செல்கின்றனர். யூதர்களே! நீங்கள் மக்களுக்குப் பயப்படாதீர்கள். அல்லாஹ்வாகிய எனக்கே பயப்படுங்கள். அல்லாஹ் வேதத்தில் இறக்கிய கட்டளைக்குப் பகரமாக தலைமைத்துவம், அந்தஸ்து, சொத்து போன்ற அற்ப ஆதாயத்தைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். யார் அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காமல் இருப்பதை சரியெனக் கருதுகிறாரோ அல்லது அதனைவிடுத்து வேறு சட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறாரோ அல்லது அதனை பிற சட்டங்களுக்குச் சமமாகக் கருதுகிறாரோ அவர்கள்தாம் உண்மையில் நிராகரிப்பாளர்கள்.
(45) 5.45. நாம் தவ்ராத்தில் யூதர்கள் மீது பின்வரும் விஷயத்தை கடமையாக்கினோம்: “வேண்டுமென்றே ஒரு மனிதரைக் கொலை செய்பவர் அதற்குப் பகரமாக கொலை செய்யப்படுவார். வேண்டுமென்றே கண்ணை நோண்டி எடுத்தவரின் கண்ணும் நோண்டி எடுக்கப்படும். வேண்டுமென்றே மூக்கை அறுத்தவரின் மூக்கும் அறுக்கப்படும். வேண்டுமென்றே காதை வெட்டியவரின் காதும் வெட்டப்படும். வேண்டுமென்றே பல்லை பிடுங்கியவரின் பல்லும் பிடுங்கப்படும். காயங்களுக்கு சமமான அளவு காயப்படுத்தப்படுவார்கள். யாரேனும் குற்றவாளியை மன்னித்துவிட்டால் அநியாயம் இழைத்தவரை மன்னித்ததனால் அது மன்னித்தவரின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைந்துவிடும். பழிவாங்குவதிலும் ஏனைய விடயங்களிலும் அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காதவர்கள்தாம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்கள்.
(46) 5.46. இஸ்ராயீலின் மக்களிலுள்ள தூதர்களைத் தொடர்ந்து மர்யமின் மகன் ஈஸாவை தவ்ராத்திலுள்ளவற்றை நம்பியவராகவும் அதன்படி தீர்ப்பளிக்கக்கூடியவராகவும் நாம் அனுப்பினோம். சத்தியத்திற்கான வழிகாட்டலையும், சந்தேகங்களைப் போக்கக்கூடிய ஆதாரங்களையும், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சட்டங்களையும் உள்ளடக்கிய இன்ஜீலை நாம் அவருக்கு வழங்கினோம். அது அதற்கு முன் இறங்கிய தவ்ராத்தின் சில சட்டங்களை மாத்திரம் மாற்றியமைத்தாலும் ஏனைய விடயங்களில் அதனுடன் உடன்படக்கூடியதாகவும் இருந்தது. நாம் அதனை வழிகாட்டியாகவும், தடை செய்யப்பட்ட பாவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் எச்சரிக்கையாகவும் ஆக்கினோம்.
(47) 5.47. இன்ஜீலில் அல்லாஹ் இறக்கியதை கிறிஸ்தவர்கள் நம்பட்டும். அவர்களிடம் - முஹம்மத் (ஸல்) அவர்கள் வருவதற்கு முன் - அதில் கூறப்பட்டுள்ளதன்படி தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காதவர்கள்தாம் அவனுக்குக் கட்டுப்பட மறுப்பவர்கள், சத்தியத்தை விட்டுவிட்டு அசத்தியத்தின்பால் சாய்ந்தவர்கள்.
(48) 5.48. தூதரே! நாம் உம்மீது சந்தேகமின்றி உண்மையைக் கொண்டுள்ள குர்ஆனை இறக்கியுள்ளோம். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததது என்பதில் ஒரு சிறு சந்தேகமேனும் இல்லை. தனக்கு முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் அவற்றை நம்பத்தகுந்ததாக ஆக்குவதாகவும் இருக்கின்றது. அவற்றில் குர்ஆனோடு ஒத்துப்போகக்கூடியது உண்மையானதாகும், அதனோடு மாறுபடக்கூடியது பொய்யானதாகும். அதில் அல்லாஹ் உமக்கு இறக்கியதன்படி நீர் மக்களிடையே தீர்ப்பளிப்பீராக. உமக்கு இறக்கப்பட்ட சந்தேகமற்ற சத்தியத்தை விட்டுவிட்டு அவர்கள் பின்பற்றுகின்ற அவர்களின் மனவிருப்பங்களைப் பின்பற்றாதீர். ஒவ்வொரு சமூகத்திற்கும் செயன்முறை சட்டதிட்ட முறையையும் நேர்வழி நடப்பதற்கான தெளிவான பாதையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ், அனைவருக்கும் ஒரே வழிமுறையை ஏற்படுத்த நாடியிருந்தால் ஒரே வழிமுறையை ஏற்படுத்தியிருப்பான். ஆயினும் அவன் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு வழிமுறையை ஏற்படுத்தியுள்ளான், அனைவரையும் சோதித்து கீழ்ப்படிபவர் யார்? மாறுசெய்பவர் யார்? என்பது தெளிவாவதற்காக. எனவே நன்மையான செயல்களின் பக்கம், பாவங்களை விட்டொழிப்பதன் பக்கம் விரையுங்கள். மறுமைநாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்ப வேண்டும். நீங்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். நீங்கள் முற்படுத்தி அனுப்பிவைத்த செயல்களின் அடிப்படையில் அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(49) 5.49. தூதரே! அல்லாஹ் உமக்கு இறக்கியதன்படி அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக. மனஇச்சையைப் பின்பற்றியதால் தோன்றும் அவர்களின் கருத்துகளைப் பின்பற்றாதீர். அல்லாஹ் உமக்கு இறக்கிய சிலவற்றைவிட்டும் அவர்கள் உம்மை வழிகெடுத்துவிடுவதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பீராக. இந்த முயற்சியில் அவர்கள் கொஞ்சமும் சோர்வடைந்துவிட மாட்டார்கள். அல்லாஹ் உம்மீது இறக்கியதன் படி தீர்ப்புச் செய்வதை அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களின் சில பாவங்களுக்குத் தண்டனையை இவ்வுலகிலும், அனைத்துப் பாவங்களுக்கான தண்டனையை மறுமையிலும் வழங்க விரும்புகிறான் என்பதை அறிந்துகொள்வீராக. மனிதர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
(50) 5.50. தங்கள் மனஇச்சைப்படி தீர்ப்பளிக்கும் சிலை வணங்கிகளான அறியாமைக் கால மக்களின் தீர்ப்பை வேண்டியவர்களாக உம்முடைய தீர்ப்பை புறக்கணிக்கின்றனரா?! அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியதை புரிந்துகொள்ளும் உறுதியான நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வைவிட சிறந்த நீதிபதி யாரும் இல்லை. அசத்தியமாக இருந்தாலும் தங்களின் மனஇச்சைக்கு ஒத்ததை மாத்திரமே ஏற்றுக்கொள்ளும் மூடர்களுக்கல்ல.
(51) 5.51. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் தமது மார்க்கத்தைச் சார்ந்தவர்களைத்தான் உற்ற தோழர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். இருபிரிவினரும் உங்களை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். உங்களில் அவர்களுடன் நட்புகொள்பவர் அவர்களைச் சார்ந்தவர்தாம். நிராகரிப்பாளர்களுடன் நட்புகொள்ளும் அநியாயக்கார மக்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.
(52) 5.52. தூதரே! பலவீனமான நம்பிக்கையுடைய நயவஞ்சகர்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நேசிப்பதற்கு முன்வருவதை நீர் காண்பீர். அவர்கள் கூறுகிறார்கள், “இவர்கள் நம்மை மிகைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டால் நமக்குத் தீங்கிழைக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.” அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் வெற்றியளிக்கக்கூடும் அல்லது யூதர்களின் அதிகாரத்தை இல்லாமலாக்கக்கூடிய ஏதேனும் ஒன்றை கொண்டுவரக்கூடும். அப்போது அவர்களை நேசிப்பதற்கு முந்திக்கொண்டு சென்றோர் தாம் கூறிவந்த பலமற்ற காரணங்கள் பிழைத்துவிட்டதனால் தம் உள்ளங்களில் தாம் மறைத்துவைத்திருந்த நயவஞ்சகத்திற்காக கைசேதப்படுவார்கள்.
(53) 5.53. அப்போது நம்பிக்கையாளர்கள் இந்த நயவஞ்சகர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்களாகக் கூறுவார்கள், “நம்பிக்கையாளர்களே! நம்பிக்கைகொள்வதிலும் உதவிசெய்வதிலும் தோழமைகொள்வதிலும் உங்களுடன் இருக்கின்றோம்” என்று இவர்கள்தாம் உறுதியான சத்தியம் செய்து கூறினார்களா?” அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. தங்களின் குறிக்கோள் தவறியதனாலும், அல்லாஹ் அவர்களுக்கு வேதனையைத் தயார்படுத்தி வைத்திருப்பதனாலும் அவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.
(54) 5.54. நம்பிக்கைக் கொண்டவர்களே! உங்களில் யாரேனும் தம் மார்க்கத்தை விட்டு நிராகரிப்பின் பக்கம் திரும்பிச் சென்றால் - அல்லாஹ் அவர்களுக்குப் பதிலாக ஒரு சமூகத்தைக் கொண்டுவருவான். அவர்களது சிறந்த நடத்தையினால் அவர்கள் அவனை நேசிப்பார்கள், அவனும் அவர்களை நேசிப்பான். அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் கருணையாளர்களாகவும் நிராகரிப்பாளர்களுடன் கடினமானவர்களாவும் இருப்பார்கள். தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போர் செய்வார்கள். படைப்பினங்களின் திருப்தியை விட அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னுரிமை வழங்குவதால் அவர்கள் பழிப்பவர்களின் பழிப்புக்கு அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ் தான் நாடிய அடியார்களுக்கு வழங்கும் அருளாகும். அல்லாஹ் அருள்புரிவதில் தாராளமானவன். அதற்குத் தகுதியானவர்களை நன்கறிந்து அவர்களுக்கு வழங்கக்கூடியவன் தகுதியற்றவர்களுக்கு அவன் அதனை வழங்குவதில்லை.
(55) 5.55. யூதர்களோ கிறிஸ்தவர்களோ ஏனைய நிராகரிப்பாளர்களோ உங்களின் நண்பர்கள் அல்ல. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களுமே உங்களின் நண்பர்களாவர். அந்த நம்பிக்கையாளர்கள் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்குவார்கள்.
(56) 5.56. அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் நம்பிக்கையாளர்களுடன் உதவியின் மூலமும் நட்புக்கொள்பவர்கள்தாம் அல்லாஹ்வின் அணியினராவர். அல்லாஹ்வின் அணியினர்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். ஏனெனில் அல்லாஹ்வே அவர்களது உதவியாளனாக உள்ளான்.
(57) 5.57. நம்பிக்கையாளர்களே! உங்களின் மார்க்கத்தை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக்கொள்ளும் வேதம் வழங்கப்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களை நேசர்களாகவும் கூட்டாளிகளாகவும் ஆக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வைவும் அவன் உங்கள் மீது இறக்கியதையும் நம்பியவர்களாக இருந்தால் அவன் தடுத்துள்ள அவர்களின் நட்பைத் தவிர்த்து அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.
(58) 5.58. இவ்வாறே, மிக முக்கியத்துவமிக்க வணக்கமான தொழுகைக்கு நீங்கள் பாங்கு சொன்னால் அவர்கள் பரிகாசம் செய்கிறார்கள். விளையாட்டில் ஈடுபடுகின்றனர். அல்லாஹ் தன்னை வணங்குவதிலும், அவன் மக்களுக்கு விதியாக்கிய சட்டதிட்டங்களின் தாப்பரியத்தையும் புரியாத கூட்டமாக அவர்கள் இருப்பதே இதற்கான காரணமாகும்.
(59) 5.59. தூதரே! பரிகாசம் செய்யும் வேதக்காரர்களிடம் கூறுவீராக, “நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் எங்களுக்கு இறக்கியதன் மீதும் எங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது இறக்கப்பட்டதன் மீதும், உங்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ளாமலும் கட்டளைகளைச் செயற்படுத்தாமலும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் என்பதன் மீதும் நம்பிக்கை கொண்டதற்காகவா எங்களைக் குறைகூறுகிறீர்கள்? நீங்கள் எந்த காரணத்திற்காக எங்களைக் குறைகூறுகிறீர்களோ அது எங்களுக்குப் புகழேயன்றி இகழல்ல.”
(60) 5.60. தூதரே! நீர் கூறுவீராக: “இவர்களை விட குறை கூறுவதற்கு தகுதியானவர்களையும் கடுமையான வேதனைக்கு உரியவர்களையும் நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் தனது அருளிலிருந்து தூரமாக்கி, குரங்குகளாவும் பன்றிகளாகவும் உருமாற்றிய உங்களின் முன்னோர்கள்தாம். அவர்களில் சிலரை அல்லாஹ் தாகூத்தை வணங்குபவர்களாகவும் மாற்றினான். அல்லாஹ்வைத் தவிர மனமுவந்து வணங்கப்படக்கூடியவை அனைத்தும் தாகூத்களே. இவர்கள்தாம் மறுமைநாளில் மோசமான இடத்தைப் பெற்றவர்களும் நேரான பாதையை விட்டும் மிகவும் வழிகெட்டவர்களும் ஆவார்கள்.
(61) 5.61. நம்பிக்கையாளர்களே! அவர்களிலுள்ள நயவஞ்சகர்கள் உங்களிடம் வந்தால் தமது நயவஞ்சகத்தனத்தின் காரணமாக உங்களிடம் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் அவர்கள் உங்களிடம் வந்தபோதும் உங்களைவிட்டுச் சென்றபோதும் நிராகரிப்பிலே உள்ளனர். அவர்கள் உங்களிடம் ஈமானை வெளிப்படுத்திய போதும் அவர்கள் மறைத்து வைத்திருந்த நிராகரிப்பை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்கேற்ப அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.
(62) 5.62. தூதரே! யூதர்களிலும் நயவஞ்சகர்களிலும் பெரும்பாலானோர் பொய் கூறுதல், அநியாயம் இழைத்தல் தடுக்கப்பட்ட விதத்தில் மக்களின் சொத்துக்களை உண்ணுதல் ஆகிய செயல்களினால் மற்றவர்களின் மீது அத்துமீறல் போன்ற பெரும்பாவங்களைச் செய்வதற்கு விரைகிறார்கள். அவர்கள் செய்வது மிகவும் மோசமான செயலாகும்.
(63) 5.63. அவர்களின் தலைவர்களும், அறிஞர்களும், பொய், பொய்சாட்சி, மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுதல் ஆகிய அவர்கள் மும்முரமாகச் செய்யும் பாவங்களை விட்டும், அவர்களைத் தடுக்க வேண்டாமா? அவர்களின் தலைவர்களும், அறிஞர்களும் தீமைகளைத் தடுக்காமல் செய்துகொண்டிருப்பது மிகவும் மோசமான காரியமாகும்.
(64) 5.64. யூதர்கள் தங்களுக்கு பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டபோது, “நலவு மற்றும் நன்கொடையை விட்டும் அல்லாஹ்வின் கை தடுக்கப்பட்டுள்ளது. தன்னிடத்தில் இருப்பதை எம்மை விட்டும் அவன் தடுத்துக்கொண்டான்.” எனக் கூறினார்கள். அறிந்துகொள்ளுங்கள், அவர்களின் கைகள்தான் நற்காரியத்தையும், நன்கொடையையும் விட்டுத் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியதனால் அல்லாஹ்வின் அருளிலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். அல்லாஹ்வின் கரங்கள் நலவையும் நன்கொடையையும் அள்ளிவழங்குபவை. அவன் தான் நாடியவாறு செலவு செய்கிறான். அவன் அள்ளியும் கொடுக்கிறான் குறைத்தும் கொடுக்கிறான். அவனைத் தடுப்பவரோ நிர்ப்பந்திப்பவரோ யாரும் இல்லை. தூதரே! அல்லாஹ் உம்மீது இறக்கியது யூதர்களுக்கு - அவர்களின் பொறாமையினால் - வரம்புமீறலையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்தும். நாம் அவர்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்திவிட்டோம். அவர்கள் ஒன்றிணைந்து போருக்கான முன்னேற்பாடுகளை செய்யும் போதெல்லாம் அல்லது போர்மூட்டுவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபடும் போதெல்லாம் நாம் அவர்களின் ஒன்றிணைவை சிதைத்து பலத்தைப் போக்கிவிடுகின்றோம். அவர்கள் இஸ்லாத்தை அழிப்பதற்கான பணிகளிலும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்டு பூமியில் குழப்பம் விளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். குழப்பக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
(65) 5.65. யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஹம்மது கொண்டு வந்ததை உண்மைப்படுத்தி பாவங்களை விட்டும் தவிர்ந்து அல்லாஹ்வை அஞ்சினால் அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் - அவை அதிகமாக இருந்தாலும் - நாம் போக்கிவிடுவோம். மறுமைநாளில் அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வோம். அங்கு என்றும் முடிவடையாத நிலையான அருட்கொடைகளை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
(66) 5.66. யூதர்கள் தவ்ராத்தில் உள்ளதன்படியும் கிறிஸ்தவர்கள் இன்ஜீலில் உள்ளதன்படியும் செயல்பட்டு, அனைவரும் குர்ஆனில் உள்ளதன்படியும் செயல்பட்டிருந்தால் நாம் மேலிருந்து மழையைப் பொழியவைத்து பூமியிலிருந்து தாவரங்களை முளைக்கச் செய்து வாழ்வாதாரத்துக்கான வழிகளை நான் அவர்களுக்கு இலகுபடுத்தியிருப்பேன். வேதக்காரர்களில் சத்தியத்தின் மீது நிலைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலானோரது செயல்கள் நம்பிக்கைகொள்ளாததால் மேசாமாகவே உள்ளது.
(67) 5.67. தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை முழுமையாக எடுத்துரைத்துவிடுவீராக. எதையும் மறைத்துவிடாதீர். நீர் எதையேனும் மறைத்தால் உமது இறைவனின் தூதுச் செய்தியை முழுமையாக எடுத்தரைத்தவராக ஆகமாட்டீர். (நபியவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தூதுச் செய்தியை முழுமையாக எடுத்துரைத்து விட்டார்கள். யாரேனும் இதற்கு எதிராகக் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பெரும் அபாண்டத்தைக் கூறியவராவார்). இன்றைய தினத்திற்குப் பிறகு அல்லாஹ்வே உம்மைப் பாதுகாப்பான். எவரும் தீய நோக்கோடு உம்மை நெருங்கிவிட முடியாது. எடுத்துரைப்பது மட்டுமே உம்மீதுள்ள பணியாகும். நேர்வழியை விரும்பாத நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டமாட்டான்.
(68) 5.68. தூதரே! நீர் கூறுவீராக: “யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே! தவ்ராத்தின்படியும் இன்ஜீலின்படியும் அல்லாஹ் உங்களுக்கு இறக்கிய குர்ஆனின்படியும் நீங்கள் செயல்படும் வரை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க எந்த மார்க்கத்திலும் இல்லை. அல்குர்ஆனை நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயற்படாவிட்டால் உங்களது நம்பிக்கை செல்லுபடியாகாது. உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை வேதக்காரர்களில் பெரும்பாலானோருக்கு - அவர்களின் பொறாமையினால்- வரம்பு மீறலையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்துகிறது. இந்த நிராகரிப்பாளர்களுக்காக நீர் கவலை கொள்ளாதீர். உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களே உமக்குப் போதுமானவர்கள்.
(69) 5.69. நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள்-அவர்கள்தான் சில நபிமார்களின் விசுவாசிகள்- கிறிஸ்தவர்கள் ஆகியோரில் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மைப்படுத்தி நற்செயல்கள் செய்தார்களோ அவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சம்கொள்ளமாட்டார்கள். உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணியும் அவர்கள் கவலை கொள்ளமாட்டார்கள்.
(70) 5.70. நாம் இஸ்ராயீலின் மக்களிடம் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காக உறுதியான வாக்குறுதிகளை வாங்கினோம். அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காக அவர்களிடம் பல தூதர்களை அனுப்பியும் வைத்தோம். ஆயினும் அவர்கள் அந்த வாக்குறுதிகளை மீறி தங்களின் தூதர்கள் கொண்டுவந்ததைப் புறக்கணித்தல், சிலரை மறுத்தல், சிலரை கொலை செய்தல் என தங்களின் மனோஇச்சைக் கூறுபவற்றையே அவர்கள் பின்பற்றினார்கள்.
(71) 5.71. வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் மீறியது, தூதர்களை நிராகரித்தது, அவர்களைக் கொலைசெய்தது ஆகிய செயல்களால் தங்களுக்கு எந்த தீங்கும் நேராது என்று அவர்கள் எண்ணினார்கள். மாறாக அவர்கள் எண்ணிப்பார்க்காத விளைவு அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் சத்தியத்தை விட்டும் குருடாகிவிட்டனர். எனவே அவர்களால் நேர்வழியை அடையமுடியவில்லை. சத்தியத்தைக் கேட்பதை விட்டும் அவர்கள் செவிடாகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் மீது அருள்செய்தான். அதன் பின்னரும் அவர்கள் சத்தியத்தை விட்டும் குருடாகிவிட்டார்கள். அதனைச் செவியேற்பதை விட்டும் செவிடாகிவிட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு இவ்வாறு நிகழ்ந்தது. அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவர்களைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(72) 5.72. மர்யமின் மகன் ஈஸாதான் அல்லாஹ் என்று கூறி தெய்வீகத் தன்மையை அல்லாஹ் அல்லாதவருக்கு வழங்கியதனால் கிறிஸ்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள். மாறாக ஈஸாவே இஸ்ராயீலின் மக்களிடம் பின்வருமாறுதான் கூறினார்: “இஸ்ராயீலின் மக்களே, அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனே என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். அடிமைத்துவத்தில் நாம் அனைவரும் சமமானவர்கள்தாம். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியவர் நிரந்தரமாக சுவனத்தை விட்டுத் தடுக்கப்படுவார். அவரது தங்குமிடம் நரகமாகும். அல்லாஹ்விடத்தில் அவருக்கு உதவிபெற்றுக்கொடுப்பவர் யாரும் இல்லை. காத்திருக்கும் வேதனையிலிருந்து காப்பாற்றக்கூடியவர் எவரும் இருக்கமாட்டார்கள்.
(73) 5.73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் - பிதா, மகன், பரிசுத்த ஆவி - ஒன்றிணைந்தவன் என்று கூறிய கிறிஸ்தவர்கள் நிராகரித்து விட்டார்கள். அவர்களின் இந்தக் கூற்றை விட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன். அல்லாஹ் பலர் அல்ல. அவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. அவர்களின் இந்த மோசமான கூற்றிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளவில்லையெனில் வேதனைமிக்க தண்டனை அவர்களை அடைந்தே தீரும்.
(74) 5.74. அவர்களின் இந்த வார்த்தையிலிருந்து பாவமன்னிப்புக் கோரியவர்களாக அல்லாஹ்வின்பால் அவர்கள் மீள வேண்டாமா? தமது இணைவைப்பிலிருந்து அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோர வேண்டாமா? என்ன பாவம் செய்திருந்தாலும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன், அது அவனை நிராகரிப்பதாக இருந்தாலும் சரியே. அவன் நம்பிக்கையாளர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
(75) 5.75. மர்யமின் மகன் ஈஸா தூதர்களில் ஒரு தூதர் மாத்திரமே. அவர்கள் மரணித்தது போலவே இவரும் மரணிப்பவரே. அவரது தாய் மர்யம் அதிகமாக உண்மையுரைக்கும் உண்மைப்படுத்தும் பெண்மணியாக இருந்தார். இருவருக்கும் உணவுத் தேவை இருப்பதனால் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தார்கள். உணவுத் தேவை உள்ளவர்கள் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும்? தூதரே! ஏகத்துவத்தை அறிவிக்கக்கூடிய, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தெய்வீகத் தன்மையை வழங்கும் அவர்களின் எல்லைமீறல் தவறு என நிருபிக்கக்கூடிய, அத்தாட்சிகளை எவ்வாறு தெளிவுபடுத்துகின்றோம் என்பதை கவனமாகப் பார்ப்பீராக, இருந்தும் அவர்கள் இந்த அத்தாட்சிகளை மறுக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான அத்தாட்சிகளை அவர்கள் கண்ட பின்னரும் எவ்வாறு அவர்கள் சத்தியத்தை விட்டும் திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனித்துப் பார்ப்பீராக.
(76) 5.76. தூதரே! அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதை மறுத்துக் கூறுவீராக: “உங்களுக்குப் பலனளிக்காத உங்களை விட்டும் தீங்கை அகற்ற முடியாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்? அவை இயலாதவையாயிற்றே? இயலாமையை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அல்லாஹ் மாத்திரமே நீங்கள் கூறுவதைச் செவியேற்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு தப்பமுடியாது. உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(77) 5.77. தூதரே! கிறிஸ்தவர்களிடம் கூறுவீராக: உங்களுக்கு ஏவப்பட்ட சத்தியத்தைப் பின்பற்றுவதில் வரம்பு மீறிவிடாதீர்கள். நேர்வழியை விட்டுத் தானும் வழிதவறி அதிகமான மக்களையும் வழிகெடுத்த வழிகேடர்களான உங்களது முன்னோர்களைப் பின்பற்றி மர்யமின் மகன் ஈஸாவுடன் நீங்கள் நடந்து கொண்டது போன்று கண்ணிப்படுத்துமாறு ஏவப்பட்ட தூதர்களைக் கண்ணியப்படுத்துவதில் எல்லையைத் தாண்டி அவர்களுக்கு தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பிவிடாதீர்கள்.
(78) 5.78. இஸ்ராயீலின் மக்களிலுள்ள நிராகரிப்பாளர்களை தன் அருளிலிருந்து தூரமாக்கிவிட்டதாக அல்லாஹ் தாவூதுக்கு இறக்கிய சபூர் என்னும் வேதத்திலும் மர்யமின் மகன் ஈசாவுக்கு இறக்கிய இன்ஜீல் என்னும் வேதத்திலும் கூறுகிறான். அவர்கள் அல்லாஹ் தடைசெய்ததில் வரம்புமீறியதனாலும் பாவங்கள் புரிந்ததனாலும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்டார்கள்.
(79) 5.79. அவர்கள் பாவங்கள் புரிவதைவிட்டும் மக்களைத் தடுக்கவில்லை. மாறாக தங்களைத் தடுப்பவர்கள் யாரும் இல்லாததால் பாவங்கள் புரிபவர்கள் வெளிப்படையாகவே பாவங்கள் புரிந்தார்கள். பாவங்களைத் தடுக்காமல் அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகவும் மோசமான காரியமாகும்.
(80) 5.80. தூதரே! யூதர்களிலுள்ள இந்த நிராகரிப்பாளர்களில் பெரும்பாலோர் இணைவைப்பாளர்களை நேசிப்பவர்களாகவும் அவர்களின் பக்கம் சாய்வோராகவும் உம்மையும் ஓரிறைவனை வணங்குபவர்களையும் எதிர்ப்பவர்களாகவும் நீர் காண்பீர். நிராகரிப்பாளர்களுடன் நட்புக்கொள்வதற்கு அவர்கள் முன்வருவது மோசமானதாகும். அதுவே அல்லாஹ் அவர்கள் மீது கோபம்கொண்டு அவர்களை நரகத்தில் நுழைவிப்பதற்கான காரணமாகும். அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேறவே முடியாது. அங்கு அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அதிலிருந்து அவர்கள் ஒரு போதும் வெளியேற முடியாது.
(81) 5.81. இந்த யூதர்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டிருந்தால் நம்பிக்கையாளர்களை விடுத்து இணைவைப்பாளர்களை நேசிப்பவர்களாகவும் அவர்களின் பக்கம் சாய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பாளர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த யூதர்களில் அதிகமானோர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவது அவனையும் விசுவாசிகளையும் நேசித்தல் ஆகியவற்றை விட்டும் வெளியேறியவர்களே.
(82) 5.82. தூதரே! உம்மீதும் நீர் கொண்டுவந்ததன் மீதும் நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளர்களுக்கு மற்ற மக்களைவிட யூதர்களும், சிலை வணங்கிகளும் ஏனைய இணைவைப்பாளர்களுமே கடும் பகைவர்களாக இருப்பதை நீர் காண்பீர். காரணம், அந்த யூதர்களிடம் காணப்படும் கர்வமும் பொறாமையும் குரோதமுமேயாகும். உம்மீது நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமானவர்களாகத் தம்மை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களை நீர் காண்பீர். நம்பிக்கையாளர்களுடன் அவர்கள் நெருக்கமாயிருப்பதற்குக் காரணம் அவர்களில் அறிஞர்களும் வணக்கசாலிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பணிவானவர்கள். கர்வம் கொள்வதில்லை. ஏனெனில் கர்வம்கொள்பவனின் உள்ளத்தை சத்தியம் சென்றடையாது.
(83) 5.83. நஜாசியையும் அவரது தோழர்களையும் போன்ற இவர்கள் இளகியமனம் கொண்டவர்கள். ஈஸா (அலை) அவர்கள் கொண்டுவந்ததை அவர்கள் அறிந்து வைத்திருந்ததனால் குர்ஆனிலிருந்து இறக்கப்பட்டதைச் செவியுற்று அது சத்தியமே என அறிந்துகொண்டபோது உள்ளச்சத்தால் அழுகிறார்கள். “எங்கள் இறைவா! உன் தூதர் முஹம்மது மீது நீ இறக்கியதை நாங்கள் நம்பிவிட்டோம். எனவே மறுமைநாளில் சாட்சிகூறும் இந்த சமூகமான முஹம்மது (ஸல்) அவர்களது சமுதாயத்துடன் எங்களையும் பதிவுசெய்வாயாக” என்று கூறுகிறார்கள்.
(84) 5.84. அல்லாஹ்வையும், அவன் இறக்கிய, முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்தியத்தையும் நம்பிக்கைகொள்வதற்கும் நமக்குமிடையில் தடையாக என்ன இருக்க முடியும்? நாங்கள் தூதர்களுடனும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனது தண்டனையை அஞ்சிய அவர்களைப் பின்பற்றுபவர்களுடனும் சேர்ந்து சுவனம் செல்லவே விரும்புகிறோம்.
(85) 5.85. அவர்கள் நம்பிக்கை கொண்டு சத்தியத்தையும் ஏற்றுக் கொண்டதனால் அல்லாஹ் அவர்களுக்குச் சுவனங்களைக் கூலியாகக் கொடுத்தான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுதான் சத்தியத்தைப் பின்பற்றுவதிலும் எவ்வித கட்டுப்பாடும் நிபந்தனையுமின்றி சத்தியத்திற்கு சிறந்த முறையில் கட்டுப்படுபவர்களுக்கான கூலியாகும்.
(86) 5.86. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து அவன் தன் தூதர்மீது இறக்கிய வசனங்களை பொய்யெனக் கூறியவர்கள்தாம் நரகவாசிகள். அவர்களே எரியும் நெருப்பிற்கு உரியவர்கள். அங்கிருந்து ஒருபோதும் அவர்களால் வெளியேறவே முடியாது.
(87) 5.87. அல்லாஹ்வை நம்பியவர்களே! உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உணவுகள், குடிபானங்கள், திருமணம் ஆகிய இன்பங்களை தடைசெய்துவிடாதீர்கள். துறவரம், வழிபாடு எனக் கருதி அவற்றைத் தடைசெய்துவிடாதீர்கள். அல்லாஹ் தடைசெய்தவற்றின் வரம்புகளை மீறிவிடாதீர்கள். தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான்.
(88) 5.88. அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அபகரிக்கப்பட்ட அல்லது அறுவறுக்கத்தக்கது போன்ற தடைசெய்யப்பட்டவற்றை உண்ணாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் மீதுதான் நீங்கள் நம்பிக்கைகொண்டுள்ளீர்கள். அவன் மீதான உங்களின் நம்பிக்கை அவனை அஞ்சுவதைக் கட்டாயமாக்கிவிடுகிறது.
(89) 5.89. நம்பிக்கையாளர்களே! சத்தியம் செய்வதை நாடாது உங்களின் நாவில் வெளிப்பட்டுவிடும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களிடம் கணக்குக் கேட்க மாட்டான். நீங்கள் உறுதியான நோக்கத்துடன் செய்யும் சத்தியங்களை முறித்து விட்டால்தான் அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான். நீங்கள் உள்ளத்தில் உறுதிகொண்டு நாவினால் மொழிந்த சத்தியங்களை முறித்துவிட்டால் பின்வரும் மூன்றில் நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்தால் சத்தியத்தை முறித்த பாவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். உங்களின் ஊரிலுள்ள நடுநிலையான உணவிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் (ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு அளவு உணவுப்பொருள் கொடுக்கப்பட வேண்டும்) அல்லது அவர்களுக்கு தகுந்த ஆடை வழங்க வேண்டும் அல்லது நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். தனது சத்தியத்திற்குப் பரிகாரம் செய்வதற்கு மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் எதையும் பெறாதவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்று பரிகாரம் செய்யட்டும். இதுதான் நீங்கள் முறித்துவிட்ட சத்தியங்களுக்கான பரிகாரமாகும். அல்லாஹ்வின் மீது பொய்ச்சத்தியம் செய்வது, அதிகமாக சத்தியம் செய்வது, சத்தியத்தின் படி செயற்படாமை ஆகியவற்றை விட்டும் உங்களது சத்தியங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். சத்தியத்தின் படி செயற்படாமை சிறந்ததாக இருந்தால் அதனை முறித்துவிடுங்கள். சிறந்ததைச் செய்து உங்களது சத்தியங்களுக்குப் பரிகாரம் செய்து விடுங்கள். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்ததற்காக நீங்கள் அவனுக்கு நன்றிசெலுத்தும்பொருட்டு சத்தியங்களுக்குப் பரிகாரத்தைத் தெளிவுபடுத்தியது போன்று ஹலால், ஹராம் பற்றிய தெளிவான தன் சட்டங்களை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
(90) 5.90. அல்லாஹ்வை நம்பியவர்களே! அறிவை மழுங்கடிக்கும் மதுவும் இருதரப்பும் பணயம் வைத்து ஆடுகின்ற சூதாட்டமும் இணைவைப்பாளர்கள் புனிதமாகக் கருதி பலிபீடத்திற்காக அல்லது வணங்குவதற்காக நட்டுவைத்திருக்கும் கல்லும் அவர்களுக்காக மறைவில் பங்குவைக்கப்பட்டிருப்பதை அறிவதற்காக பயன்படுத்தப்படும் அம்பும் ஷைத்தான் அழகுபடுத்தியுள்ள பாவமான செயல்களாகும். எனவே அவற்றிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். இவ்வுலகில் கண்ணியமான வாழ்வையும் மறுமையில் சுவன இன்பத்தையும் அடைவீர்கள்.
(91) 5.91. போதை மற்றும் சூதாட்டத்தை ஷைத்தான் அலங்கரித்துக்காட்டுவதன் மூலம் உள்ளங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தவும் இறைநினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் திருப்பிவிடுவதையுமே நாடுகின்றான். நம்பிக்கையாளர்களே! இந்த பாவமான காரியங்களை நீங்கள் விட்டு விடுவீர்களா என்ன? அதுவே உங்களுக்கு உகந்ததாகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனவே நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.
(92) 5.92. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். மாறுசெய்வதிலிருந்து விலகியிருங்கள். நீங்கள் இதனைப் புறக்கணித்தால் அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துரைப்பதுதான் நம் தூதர் மீதுள்ள கடமையாகும். அவர் எடுத்துரைத்துவிட்டார். நீங்கள் நேர்வழி அடைந்தால் அது உங்களுக்குத்தான் நல்லது. நீங்கள் தீங்கிழைத்தால் அதன் கேடு உங்களையே சாரும்.
(93) 5.93. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு, அவனை நெருங்குவதற்காக நற்செயல்கள் புரிந்தவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை அஞ்சியோராகவும் அவன் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்களாகவும் இருந்துகொண்டு தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர்ந்துகொண்டால் மது அருந்துவது தடைசெய்யப்படுவதற்கு முன் அருந்தியதற்கு அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அதன் பின் ‘அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கிறான்’ என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கி அவனைப் பார்ப்பது போன்றே அவனை வணங்க ஆரம்பித்தார்கள். தன்னைப் பார்ப்பது போன்றே தன்னை வணங்கக்கூடியவர்கள், எப்பொழுதுமே அல்லாஹ் தம்மைக் கண்காணிக்கின்றான் என்ற உணர்வுடன் இருப்பதனால் அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். இதுதான் ஒரு நம்பிக்கையாளனை தனது செயற்பாடுகளை அழகிய முறையிலும் திறமையாகவும் செய்வதற்குத் தூண்டுகிறது.
(94) 5.94. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் போது ஏதாவது தரை வேட்டைப் பிராணியை அனுப்பி வைத்து அவன் உங்களைச் சோதிப்பான். அவற்றில் சிறியதை உங்களின் கைகளால் பிடித்துவிடலாம், பெரியதை உங்களின் ஈட்டியால் வேட்டையாடிவிடலாம். அல்லாஹ்வின் அறிவைப் பரிபூரணமாக நம்பிக்கைகொண்டதனால், மறைவில் தன்னை அஞ்சுவோர் யார் என்பதை அடையாளப்படுத்தி விசாரணை செய்வதற்காகவே அல்லாஹ் இவ்வாறான விஷயங்களை ஏற்படுத்துகிறான். தனது செயல்கள் மறைய முடியாத தன்னைப் படைத்தவனுக்கு அஞ்சியதனால் வேட்டையாடாமல் தவிர்ந்து கொள்கிறான். யார் வரம்புமீறி இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடி விடுவாரோ - அல்லாஹ் தடுத்த செயல்களைச் செய்ததனால் - அவருக்கு மறுமைநாளில் வேதனைமிக்க தண்டனை உண்டு.
(95) 5.95. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் போது தரை மிருகங்களை வேட்டையாடாதீர்கள். யார் வேண்டுமென்றே வேட்டையாடிக் கொன்றுவிடுவாரோ அவர் அதுபோன்ற ஒட்டகத்தையோ ஆட்டையோ மாட்டையோ பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். முஸ்லிம்களிடையே நீதிமிக்க இரு மனிதர்கள் இதை முடிவுசெய்ய வேண்டும். அவர்கள் இருவரின் தீர்ப்பில் முடிவாவதை மக்காவிற்கு அனுப்பப்பட்டு ஹரமில் பலியிடப்படும் அல்லது ஹரமிலுள்ள சில ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக அதற்கான தொகையைக் கொடுத்துவிட வேண்டும் (ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு அளவு உணவு அளிக்கப்பட வேண்டும்) அல்லது அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். இவையனைத்தும் வேட்டையாடியவர் தாம் செய்த செயலின் விளைவை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். தடைஉத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னால், புனித எல்லையில் வேட்டையாடியது இஹ்ராம் அணிந்த நிலையில் தரைவாழ் மிருகங்களை வேட்டையாடியது ஆகியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அவ்வாறு செய்பவரை அல்லாஹ் தண்டித்துப் பழிவாங்குவான். அவன் வல்லமைமிக்கவன். தான் நாடினால் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவர்களை தண்டிப்பதும் அவனது வல்லமையில் உள்ளவைதான். அதிலிருந்து அவனை யாராலும் தடுக்கமுடியாது.
(96) 5.96. நீரிலுள்ள பிராணிகளை வேட்டையாடுவதும் கடல் உங்களுக்காக கரை ஒதுக்கிவிடும் - உயிருள்ள அல்லது இறந்த - பிராணிகளும் உங்களில் ஊரில் இருப்பவர்களுக்கும் பயணிகளாக இருப்பவர்களுக்கும் பயன்பெறும் பொருட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் வரை நிலத்தில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். மறுமைநாளில் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(97) 5.97. கஃபா என்னும் ஆலயத்தை அல்லாஹ் மக்களின் மார்க்கத்தை சீர்ப்படுத்துவதாகவும் வாழ்விற்குப் பாதுகாப்பாகவும் அமைத்துள்ளான். இதனை மையப்படுத்தியே அவர்களின் மார்க்க நலன்களான தொழுகை, ஹஜ், உம்ரா ஆகியவையும் புனித பூமியில் அமைதி, அனைத்து வகையான கனிகளும் கிடைத்தல் போன்ற உலக நலன்களும் நிகழ்கின்றன. (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப்) ஆகிய புனித மாதங்களில் மற்றவர்கள் அவர்களுடன் போரிடுவதிலிருந்து அபயமளிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளான். பலிப்பிராணியையும் ஹரமை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கு அடையாளமாக கழுத்தில் பட்டைகட்டப்பட்ட பிராணியையும் அதைக்கொண்டு செல்லக்கூடியவர்களுக்கு எந்தத் தீங்கிழைப்பதிலிருந்து அபயமளிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளான். அவ்வாறான அருளை அல்லாஹ் உங்கள் மீது சொரிந்திருப்பது, வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான், அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். உங்களுக்கு நலன்கள் ஏற்படுவதற்கும் தீங்குகள் நிகழ முன் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குமுரிய அச்சட்டங்களை அவன் விதியாக்கியமை தனது அடியார்களுக்குப் பொருத்தமானவற்றை அவன் அறிந்துள்ளான் என்பதற்குரிய சான்றாகும்.
(98) 5.98. மனிதர்களே! தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதையும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மிகவும் மன்னிக்கக்கூடியவன், அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
(99) 5.99. அல்லாஹ் கட்டளையிட்டதை எடுத்துரைப்பதைத் தவிர தூதர் மீது எந்தக் கடமையும் இல்லை. மக்களுக்கு நேர்வழி அளிக்கும் அதிகாரம் அவரிடம் இல்லை. அது அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. நீங்கள் வெளிப்படுத்தும், மறைத்துவைக்கும் நேர்வழியையும் வழிகேட்டையும் அவன் அறிவான். அதற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(100) 100. தூதரே! நீர் கூறுவீராக: “ஒவ்வொரு பொருளிலும் நல்லவையும் தீயவையும் சமமாக முடியாது” தீயவற்றின் பெருக்கம் உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே. பெருக்கம் சிறப்பிற்கான அடையாளம் அல்ல. அறிவுடையோரே! தீயவற்றை விட்டு விட்டு நல்லவற்றில் ஈடுபட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் நரகத்திலிருந்து தப்பித்து சுவனத்தைப் பெறுவீர்கள்.
(101) 5.101. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்குத் தேவையில்லாத, உங்களின் மார்க்க விவகாரங்களுக்குப் பயனளிக்காத விஷயங்களை உங்கள் தூதரிடம் கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்பட்டால் அவற்றின் சிரமத்தினால் உங்களுக்குக் கவலையே ஏற்படும். உங்கள் தூதருக்கு வஹி இறங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கேட்பதற்குத் தடுக்கப்பட்டவற்றைக் குறித்து நீங்கள் கேட்டால் அவை உங்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுவிடும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் இலகுவானது. எவற்றைக் குறித்து குர்ஆன் எதுவும் கூறவில்லையோ அவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். எனவே அவற்றைக் குறித்து கேட்காதீர்கள். நீங்கள் அவை குறித்து கேட்டால் அவற்றைக் குறித்த சட்டங்கள் உங்களுக்குத் இறக்கப்பட்டுவிடும். அடியார்கள் திருந்தும் பட்சத்தில் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், அவற்றிற்காக தண்டனையளிக்காமல் பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான்.
(102) 5.102. உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் இது போன்றவைக் குறித்து கேட்டார்கள். அவர்களுக்கு அவை விதியாக்கப்பட்டவுடன் அதன்படி செயல்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் நிராகரிப்பாளர்களாகிவிட்டார்கள்.
(103) 5.103. அல்லாஹ் உங்களுக்கு கால்நடைகளை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கியுள்ளான். இணைவைப்பாளர்கள் தமது சிலைகளுக்காக தங்களுக்குத் தாங்களே தடைசெய்து கொண்டவற்றை அவன் தடைசெய்யவில்லை. பஹீரா - குறிப்பிட்ட குட்டிகளை ஈன்ற பின்னர் காது அறுக்கப்பட்ட பெண் ஒட்டகம், சாயிபா - குறிப்பிட்ட வயதினை அடைந்த, சிலைகளுக்காக நேர்ந்துவிடப்பட்ட பெண் ஒட்டகம், வஸீலா - தொடர்ந்து பெண் குட்டிகளை ஈன்ற ஒட்டகம், ஹாமீ - பல ஒட்டகங்கள் உருவாவதற்குக் காரணமான ஆண் ஒட்டகம் இவையனைத்தையும் அல்லாஹ் தடைசெய்துவிட்டதாக இணைவைப்பாளர்கள் அபாண்டமாகக் கூறினார்கள். நிராகரிப்பாளர்களில் பெரும்பாலோர் சத்தியத்தையும் அசத்தியத்தையும் அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
(104) 5.104. சில கால்நடைகளைத் தடைசெய்வதன் மூலம் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறும் இவர்களிடம், “அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் அறிந்துகொள்வதற்காக அல்லாஹ் இறக்கிய குர்ஆனின் பக்கமும் தூதரின் நடைமுறையின் பக்கமும் வாருங்கள்” என்று கூறப்பட்டால், “எங்கள் முன்னோர்களிடமிருந்து நாங்கள் அனந்தரமாகப் பெற்ற கொள்கைகளும், வார்த்தைகளும் நடைமுறைகளுமே, எங்களுக்குப் போதுமானவை” என்று கூறுகிறார்கள். அவை எவ்வாறு அவர்களுக்குப் போதுமானதாக இருக்க முடியும்? அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவுமல்லவா இருந்தனர்! எனவே அவர்களையும் விட மூடர்களாகவும் வழிகெட்டவர்களாகவும் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அவர்களைப் பின்பற்றமாட்டார்கள். அவர்கள் மூடர்களாகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.
(105) 5.105. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்; உங்களை நீங்கள் சீர்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியில் இருந்தால் மக்களின் வழிகேட்டால் உங்களுக்குத் தீங்கு நேராது. நீங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளிகள் அல்ல. நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நீங்களை நேர்வழியில் இருப்பதற்கான அடையாளமேயாகும். மறுமைநாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்ப வேண்டும். இவ்வுலகில் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(106) 5.106. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு மரணத்திற்கான அறிகுறிகள் தென்பட்டுவிட்டால் உயில் எழுதும்போது முஸ்லிம்களில் நீதியுடன் சாட்சிசொல்லக்கூடிய இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பயணத்தில் இருந்து மரணம் சமீபித்து இரு முஸ்லிமான சாட்சிகள் கிடைக்காவிட்டால் நிராகரிப்பாளர்களிலிருந்து இரு ஆண்களைச் சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்விருவரின் சாட்சியங்களில் சந்தேகம் ஏற்பட்டால் ஒரு தொழுகைக்குப் பின் அவர்களை அமரவைத்து “தங்களின் சாட்சியத்தை எதற்குப் பதிலாகவும் நாங்கள் விற்றுவிட மாட்டோம், எந்த உறவினருக்குச் சார்பாகவும் நடக்கமாட்டோம் தம்மிடமுள்ள அல்லாஹ்வுக்குரிய எந்தவொரு சாட்சியத்தையும் நாங்கள் மறைத்துவிட மாட்டோம், அவ்வாறு செயல்பட்டால் நாம் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட பாவிகள்” என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து வாக்குறுதி பெற்றுக் கொள்ளுங்கள்.
(107) 5.107. சத்தியம் பெற்ற பின்னர் அவர்கள் பொய் சாட்சி அல்லது பொய்ச் சத்தியம் செய்ததாக அல்லது தமது சாட்சியில் மோசடி இழைத்துள்ளதாகத் தெரியவந்தால் அவர்களுக்குப் பகரமாக இறந்தவரின் நெருங்கிய சொந்தங்களிலிருந்து வேறு இருவர் உண்மையான விடயத்துக்கு சாட்சி கூறட்டும் அல்லது சத்தியம் செய்யட்டும். அவர்கள், ‘அவ்விருவரும் தாம் உண்மையாளர்கள் நம்பிக்கையானவர்கள் எனக் கூறிய சாட்சியத்தை விடவும் அவர்கள் பொய்யர்கள் மோசடிசெய்பவர்கள் என்ற நமது சாட்சியே சிறந்தது நாம் பொய்ச் சத்தியம் செய்யவில்லை.நாம் பொய் சாட்சி கூறினால் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய அக்கிரமக்காரர்களாகிவிடுவோம்” என அவர்கள் சத்தியம் செய்யட்டும்.
(108) 108. சாட்சியத்தில் சந்தேகம் ஏற்படும் போது தொழுகைக்குப் பிறகு இரு சாட்சிகளிடமும் சத்தியம் பெறுவது இருவரின் சாட்சியங்களை மறுப்பது ஆகியவையே அவ்விருவரும் மார்க்க முறைப்படி சாட்சியம் கூறுவதற்கு வழிவகுக்கும். எனவே அவர்கள் சாட்சியத்தை திரித்துவிடவோ மாற்றிவிடவோ அதில் துரோகமிழைத்துவிடவோ மாட்டார்கள். அனந்தரக்காரர்களின் சத்தியங்களினால் தங்களின் சத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுவிடுமோ தாங்கள் இழிவுபடுத்தப்பட்டுவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சுவதற்கும் இதுதான் சிறந்த வழிமுறையாகும். சாட்சியத்திலும் சத்தியத்திலும் பொய் கூறுவதையும் மோசடி செய்வதையும் தவிர்த்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏவப்பட்ட விஷயங்களைச் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவிசாய்த்துக் கேளுங்கள். தனக்குக் கட்டுப்பட மறுப்பவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.
(109) 5.109. மனிதர்களே! மறுமைநாளை நினைவுகூருங்கள். அந்த நாளில் தூதர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டி, “நீங்கள் அனுப்பப்பட்ட உங்களின் சமூகங்கள் உங்களுக்கு என்ன பதில் கூறின” என்று கேட்பான். அவர்கள் பதிலை அல்லாஹ்விடம் ஒப்படைத்தவர்களாக, “எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்கள் இறைவா! அனைத்து அறிவும் உன்னிடமே உள்ளன, மறைவானவை, அனைத்தையும் நீதான் நன்கறிந்தவன்” என்று கூறுவார்கள்.
(110) 5.110. அல்லாஹ் ஈஸாவிடம் பின்வருமாறு உரையாடிய சந்தர்ப்பத்தை நினைவுகூர்வீராக: “மர்யமின் மகன் ஈஸாவே, நான் உம்மை தந்தையின்றி படைத்தபோது உம்மீது பொழிந்த அருட்கொடையை நினைத்துப் பார்ப்பீராக. உமது தாய் மர்யமை அக்காலப் பெண்களை விட சிறப்பாக்கி அவர் மீது செய்த அருளையும் நினைவுகூர்வீராக! ஜிப்ரீலைக் கொண்டு நாம் உம்மை வலுப்படுத்தியபோது - நீர் கைக்குழந்தையாக இருந்த போது மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து உரையாடினீர். மேலும் வாலிபப் பருவத்திலும் நான் உமக்கு வழங்கிய தூதை அவர்களுக்கு எடுத்துரைத்து உரையாடினீர். உமக்கு எழுதவும் மூஸாவுக்கு இறக்கிய தவ்ராத், உம்மீது இறக்கிய இன்ஜீல், மார்க்க சட்டங்களின் இரகசியங்களையும், பயன்களையும், நோக்கங்களையும் உமக்கு நான் கற்பித்ததும் நான் உமக்கு அளித்த அருட்கொடைகளே. மேலும் நாம் உமக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, நீர் மண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப்போல் செய்து பின்னர் அதில் ஊதியதும் அது பறவையாயிற்று. நீர் பிறவிக் குருடனை குருட்டுத்தன்மையிலிருந்து குணப்படுத்துகிறீர். தொழுநோயாளியையும் குணப்படுத்துகிறீர். அதனால் அவர் ஆரோக்கியமான தோல் உடையவராக மாறிவிடுகிறார். உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறீர். இவையனைத்தும் என் அனுமதியால் நடந்தவையாகும். நாம் உமக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, நீர் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது ‘ஈஸா கொண்டு வந்தது தெளிவான சூனியத்தைத் தவிர வேறொன்றுமில்லை’ என்று கூறி அவற்றை நிராகரித்து இஸ்ராயீலின் மக்கள் உம்மைக் கொல்ல நாடியபோது நாம் உம்மை இஸ்ரவேலர்களிடமிருந்து காப்பாற்றியதாகும்.
(111) 5.111. நாம் உமக்கு அளித்த பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப் பார்ப்பீராக: நாம் உமக்கு உதவியாளர்களை ஏற்படுத்தினோம். அவர்களின் உள்ளத்தில் என்மீதும் உம்மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள் என்று உள்ளுதிப்பை ஏற்படுத்தினோம். எனவே அவர்கள் கட்டுப்பட்டார்கள். உம்முடைய அழைப்புக்கு செவிசாய்த்தார்கள். “நாங்கள் நம்பிக்கைகொண்டோம். எங்கள் இறைவா, நாங்கள் உனக்குக் கட்டுப்பட்டவர்கள், அடிபணிந்தவர்கள் என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பீராக” என்று கூறினார்கள்.
(112) 5.112. ஹவாரிய்யீன்கள் பின்வருமாறு கூறியதை நினைத்துப் பார்ப்பீராக: “நீர் பிரார்த்தனை செய்தால், உமது இறைவன் வானத்திலிருந்து ஓர் உணவுத்தட்டை இறக்க முடியுமா?” அதற்கு ஈஸா, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறும் அவர்களுக்கு அது சோதனையாக அமையலாம் என்பதனால் இதுபோன்ற கேள்விகளை விட்டுவிடுமாறும் அவர்களிடம் கூறினார். “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் வாழ்வாதாரம் வேண்டுவதில் உங்கள் இறைவனின் மீது முழுமையாக நம்பிக்கை வையுங்கள்” என்றும் அவர் கூறினார்.
(113) 5.113. ஹவாரிய்யீன்கள் ஈஸாவிடம் கூறினார்கள்: “நாங்கள் அந்த உணவுத்தட்டிலிருந்து உண்ணவும் அல்லாஹ்வின் முழுமையான ஆற்றலையும் நீர் அவனது தூதர் என்பதையும் எங்கள் உள்ளங்கள் உணரவும் விரும்புகின்றோம். நீர் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததில் உண்மையாளர் என்பதை உறுதியாக அறிந்து, அதனைக் காணாதவர்களிடம் சாட்சி கூறுபவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்.”
(114) 5.114. ஈஸா(அலை) அவர்களின் வேண்டுதலுக்குப் பதிலளித்தவாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்: “எங்கள் இறைவா, எங்கள் மீது உணவுத்தட்டை இறக்குவாயாக. எங்களில் தற்போது வாழ்வோரும் பின்னர் வருவோரும் உனக்கு நன்றி செலுத்தும் விதமாக அதனைப் பெருநாளாக ஆக்கிக் கொள்வோம். அது நீ ஒருவனே என்பதற்கும், எனது தூதுத்துவத்துவம் உண்மை என்பதற்கும் சான்றாக அமையும். உன்னை வழிபடுவதற்கு உதவி செய்யும் வாழ்வாதாரத்தை எங்களுக்கு வழங்குவாயாக. எங்கள் இறைவா, நிச்சயமாக நீ வாழ்வாதாரம் அளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”
(115) 5.115. ஈஸாவின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அவன் கூறினான்: “நீங்கள் வேண்டிய உணவுத்தட்டை நான் உங்கள் மீது இறக்குவேன். நான் இறக்கிய பிறகு யாரேனும் நிராகரித்தால் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும். உலகில் யாருக்கும் வழங்காத கடும் தண்டனையை நான் அவருக்கு வழங்குவேன். ஏனெனில் அவன் தெளிவான சான்றினைக் கண்ட பின்னரும் பிடிவாதத்தினால் அதனை நிராகரித்தான். அல்லாஹ் தன் வாக்குறுதியை நிரூபித்து அவர்கள் மீது உணவுத்தட்டை இறக்கினான்.
(116) 5.116. மறுமை நாளில் மர்யமின் மகன் ஈஸாவிடம், “மர்யமின் மகன் ஈஸாவே, “என்னையையும் என் தாயையும் அல்லாஹ்வை விடுத்து வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நீர் கூறினீரா?” என அல்லாஹ் கூறுவதை நினைத்துப் பார்ப்பீராக: அதற்கு ஈஸா தம் இறைவனின் தூய்மையை உறுதிப்படுத்தியவராகக் கூறுவார், “சத்தியத்தைத் தவிர வேறு எதைக்கூறுவதற்கும் எனக்கு உரிமை இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நீ அதனை அறிந்திருப்பாய். ஏனெனில் எதுவும் உன்னை விட்டு மறைவாக இல்லை. நான் என் மனதில் மறைத்துவைப்பதையும் நீ அறிவாய். உன் மனதில் உள்ளவற்றை நான் அறியமாட்டேன். நீ மட்டுமே வெளிப்படையானதையும் மறைவானதையும் நன்கறிந்தவன்.
(117) 5.117. ஈஸா தம் இறைவனிடம் கூறுவார்: “உன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுமாறு நீ எனக்கு கட்டளையிட்டதைத்தான் நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடையே இருந்த வரை அவர்கள் கூறுவதை கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என் தவணையை நிறைவுசெய்து என்னை உயிரோடு வானத்தின்பால் உயர்த்திய பின்னர் நீயே அவர்களின் செயல்களை கண்காணிப்பவனாக இருக்கின்றாய். நீ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எதுவும் உன்னை விட்டு மறைய முடியாது. நான் அவர்களிடம் கூறியது, எனக்குப் பிறகு அவர்கள் கூறியது எதுவும் உன்னைவிட்டு மறைவாக இல்லை.
(118) 5.118. இறைவா, நீ அவர்களை தண்டித்தால் அவர்கள் உன் அடியார்கள்தாம் அவர்களின் விஷயத்தில் நீ நாடியதைச் செய்கின்றாய். நீ அவர்களில் நம்பிக்கைகொண்டவர்கள் மீது அருள்புரிந்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. நீ யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் உன்னை மிகைக்க முடியாது. உன்னுடைய திட்டங்களில் நீ ஞானம்மிக்கவன்.
(119) 5.119. அல்லாஹ் ஈஸாவிடம் கூறினான்: “இந்த நாள் எண்ணங்களிலும் செயல்களிலும் வார்த்தைகளிலும் உண்மையானவர்களுக்கு அவர்களது வாய்மை பயனளிக்கக்கூடிய நாளாகும். அவர்களுக்குச் சுவனங்கள் உண்டு. அவற்றின் மரங்களுக்கும் மாளிகைகளுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். மரணம் அவர்களுக்கு ஏற்படாது. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொண்டான். இனி அவன் ஒருபோதும் அவர்கள் மீது கோபம் கொள்ள மாட்டான். அவர்களும் தங்களுக்குக் கிடைத்த நிலையான அருட்கொடைகளின் காரணமாக அவனைப் பொருந்திக்கொண்டனர். இந்தக் கூலியும் இறை திருப்தியுமே மிகப் பெரிய வெற்றியாகும். இதற்கு இணையான வேறு எதுவும் இல்லை.
(120) 5.120. வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவன்தான் அவையிரண்டையும் படைத்து நிர்வகித்து வருகிறான். அவையிரண்டிலுமுள்ள படைப்புகள் அனைத்தும் அவனது அதிகாரத்திற்கே உட்பட்டவையாக இருக்கின்றன. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது.