(1) 28.1. (طسٓمٓ)இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
(2) 28.2. இவை தெளிவான குர்ஆனின் வசனங்களாகும்.
(3) 28.3. நம்பிக்கைகொண்ட மக்களுக்காக மூஸா மற்றும் ஃபிர்அவ்னின் செய்தியை நாம் உமக்கு சந்தேகமற்ற உண்மையோடு எடுத்துரைக்கின்றோம். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் அதிலுள்ளதைக் கொண்டு பயனடைவார்கள்.
(4) 28.4. நிச்சயமாக ஃபிர்அவ்ன் எகிப்தில் வரம்புமீறினான். அங்குள்ளவர்களை பல பிரிவினராக்கி அவர்களில் இஸ்ராயீலின் மக்களை அடக்கி ஒடுக்கினான். அவர்களின் ஆண்மக்களைக் கொலை செய்து அவர்களை மென்மேலும் இழிவபடுத்தும் விதமாக அவர்களின் பெண்மக்களை பணிவிடை செய்வதற்காக உயிரோடு விட்டுவைத்திருந்தான். நிச்சயமாக அவன் பூமியில் அநியாயம் செய்து, வரம்பு மீறி, கர்வம்கொண்டு குழப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாக இருந்தான்.
(5) 28.5. நாம் எகிப்தில் ஃபிர்அவ்னால் ஒடுக்கப்பட்ட இஸ்ராயீலின் மக்களின் மீது கிருபை செய்து அவர்களின் எதிரிகளை அழித்து, அவர்களை விட்டும் பலவீனத்தைப் போக்கவும், அவர்களை சத்தியத்திற்கு வழிகாட்டும் தலைவர்களாக ஆக்கவும் ஃபிர்அவ்னை அழித்த பிறகு அபிவிருத்தி மிக்க ஷாம் தேசத்திற்கு அவர்களை வாரிசாக்கவும் நாம் நாடினோம். அல்லாஹ் கூறுகிறான்: (பலவீனமானவர்களாகக் கருதப்பட்டுக்கொண்டிருந்த சமூகத்தாரை நாம் அருள் செய்த பூமியின் கிழக்கு மற்றும் அதன் மேற்குப் பகுதிகளுக்கு உரித்துடையோர் களாக்கினோம்).
(6) 28.6. பூமியில் அவர்களை ஆட்சிசெய்பவர்களாக ஆக்கி, ஃபிர்அவ்னுக்கும் அவனது ஆட்சியில் பெரிய உதவியாளனான ஹாமானுக்கும் அவர்கள் இருவருக்கும் ஆட்சிபுரிய உதவும் படையினருக்கும் அவர்கள் அஞ்சிக்கொண்டிருந்த, இஸ்ராயீலின் மக்களில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையால் தங்களின் ஆட்சியதிகாரம் அழிவதைக் காட்ட நாடுகின்றோம்.
(7) 28.7. நாம் மூஸாவின் தாயாருக்குப் பின்வருமாறு உள்ளுதிப்பு ஏற்படுத்தினோம்: “நீர் அவருக்குப் பாலூட்டும். ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகமும் அவரைக் கொன்றுவிடுவார்கள் என்று நீர் அஞ்சினால் அவரை ஒரு பெட்டியில் வைத்து நைல் நதியில் போட்டு விடும். அவர் மூழ்கிவிடுவார் என்றோ ஃபிர்அவ்ன் அவரைக் கொன்றுவிடுவான் என்றோ நீர் அஞ்சாதீர். அவரது பிரிவால் கவலைப்படாதீர். நிச்சயமாக நாம் அவரை உம்மிடம் உயிருடன் திரும்பக் கொண்டு வருவோம். அவரை அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அனுப்பும் தூதர்களில் ஒருவராக ஆக்குவோம்.”
(8) 28.8. நாம் அவருக்கு ஏற்படுத்திய உள்ளுதிப்பை அவள் செயல்படுத்தினாள். ஒரு பெட்டியில் வைத்து அவரைக் நதியில் போட்டுவிட்டார். ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் அவரைக் கண்டெடுத்தனர். அது அவர் ஃபிர்அவ்னுக்கு எதிரியாகி அவனது ஆட்சியதிகாரத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவும் அவனது கவலைக்குக் காரணமாக இருந்து அல்லாஹ் நாடியவாறு நிகழ வேண்டும் என்பதற்காகவும்தான். நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனுடைய அமைச்சர் ஹாமானும் அவர்களுடைய படையினரும் நிராகரிப்பினாலும் அக்கிரமத்தினாலும் பூமியில் குழப்பம் விளைவித்ததனாலும் பாவிகளாக இருந்தார்கள்.
(9) 28.9. ஃபிர்அவ்ன் அந்தக் குழந்தையைக் கொல்ல நாடியபோது அவனுடைய மனைவி அவனிடம் கூறினாள்: “இந்தக் குழந்தை உங்களுக்கும் எனக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கலாம். இதனைக் கொன்று விடாதீர்கள். இது உதவி புரிந்து நமக்குப் பயனளிக்கலாம் அல்லது இதனை நம் மகனாக தத்தெடுத்துக் கொள்ளலாம்.” அவர்கள் அவரால் தங்களின் ஆட்சியதிகாரத்திற்கு நிகழப் போவதை அறியாதவர்களாக இருந்தார்கள்.
(10) 28.10. மூஸாவுடைய தாயாரின் உள்ளம் அவரைப்பற்றிய விஷயத்தைத் தவிர மற்ற எல்லா உலக விஷயங்களை விட்டு வெறுமையாகிவிட்டது. அவரால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனை மட்டுமே சார்ந்து, அவனது விதியை பொறுமையுடன் தாங்குவோரில் ஒருவராகிவிட வேண்டும் என்பதற்காக நாம் அவரது உள்ளத்தை உறுதிப்படுத்தியிருக்கவில்லையென்றால் மூஸாவின் மீதுள்ள பாசத்தினால் நிச்சயமாக அது தனது குழந்தையே என்று அவர் வெளிப்படுத்த முனைந்தார்.
(11) 28.11. மூஸாவின் தாய் அவரைக் கடலில் போட்டபிறகு மூஸாவின் சகோதரியிடம் கூறினார்: “இந்தக் குழந்தைக்கு என்ன நிகழும் என்பதை அறிந்துகொள்வதற்காக இதனைப் பின்தொடர்ந்து செல்.” அவள் ஃபிர்அவ்னும் அவனது சமூகமும் நிச்சயமாக தான் மூஸாவின் தகவலைத் தேடும் அவரது சகோதரி என்பதை அறியாதவண்ணம் தூரத்திலிருந்தே அக்குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
(12) 28.12. அல்லாஹ்வின் திட்டத்தால் மூஸா தனது தாயிடம் திரும்பிச் செல்வதற்கு முன் பாலூட்டும் எந்தப் பெண்ணிடமும் பால்குடிக்கவில்லை. அவருக்கு பாலூட்டுவதில் அவர்களின் ஆர்வத்தைக் கண்ட மூஸாவின் சகோதரி அவர்களிடம் கூறினாள்: “நான் உங்களுக்கு இக்குழந்தைக்கு சிறந்த முறையில் பாலூட்டி, வளர்க்கும் ஒரு குடும்பத்தாரைக்குறித்து அறிவிக்கட்டுமா? அவர்கள் இக்குழந்தைக்கு விசுவாசமானவர்கள்.”
(13) 28.13. இவ்வாறு மூஸாவை அவரது தாயாரிடமே கொண்டு சேர்த்தோம். அது அருகிலிருந்து அவரைப் பார்த்து கண் குளிர்ச்சியடைவதற்காகவும் பிரிவால் அவர் கவலைகொள்ளாமல் இருப்பதற்காகவும் மீண்டும் அவரை அவளிடம் சேர்ப்போம் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி சந்தேகம் இல்லாமல் உண்மையானது என்பதை அறிந்துகொள்வதற்காகவும்தான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் இந்த வாக்குறுதியைக்குறித்து அறியவில்லை. நிச்சயமாக அவர்தான் மூஸாவின் தாய் என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.
(14) 28.14. -அவர் இளமைப் பருவத்தை அடைந்து பலம் பெற்றபோது- நாம் நபித்துவத்திற்கு முன் அவருக்கு இஸ்ரவேலர்களின் மக்களின் மார்க்கத்தில் புரிதலையும் ஞானத்தையும் வழங்கினோம். மூஸாவுக்கு அவரது கீழ்ப்படிதலுக்கேற்ப நாம் கூலி வழங்கியதுபோன்றே ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குகின்றோம்.
(15) 28.15. மக்கள் தமது வீடுகளில் ஓய்வெடுக்கும் நேரத்தில் மூஸா நகரத்தில் நுழைந்தார். அங்கு இரு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். ஒருவர் அவரது சமூகமான இஸ்ரவேலர்களின் மக்களைச் சேர்ந்தவர். மற்றொருவர் மூஸாவின் எதிரியான ஃபிர்அவ்னின் கிப்தி குலத்தைச் சேர்ந்தவர். அவரது சமூகத்தைச் சேர்ந்தவர் எதிரி சமூகமான கிப்தி குலத்தை சேர்ந்தவருக்கு எதிராக மூஸாவிடம் உதவி கோரினார். மூஸா கிப்தி குலத்தைச் சேர்ந்தவனை தம் கையால் ஒரு குத்து குத்தினார். அந்த பலமான குத்தினால் அவர் செத்து மடிந்தார். மூஸா கூறினார்: “நிச்சயமாக இது ஷைத்தானின் அழகுபடுத்திய, ஏமாற்றமான செயலாகும். நிச்சயமாக அவன் தன்னைப் பின்பற்றுபவர்களை வழிகெடுப்பவனாகவும் பகிரங்கமான பகைவனாகவும் இருக்கின்றான். அவனது பகைமையின் காரணத்தாலும் அவன் என்னை வழிகெடுக்க நினைக்கும் வழிகேடன் என்பதுமே என்னிடமிருந்து இச்செயல் நிகழ்ந்ததற்கான காரணமாகும்.
(16) 28.16. தன் மூலமாக நிகழ்ந்ததை ஒப்புக் கொண்டவராக மூஸா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நிச்சயமாக அந்த கிப்தியைக் கொலை செய்து எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். எனவே என் பாவத்தை மன்னித்துவிடுவாயாக.” அல்லாஹ் அவரை மன்னித்ததை நமக்குத் தெளிவுபடுத்துகிறான். நிச்சயமாக அவன் தன்அடியார்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(17) 28.17. தொடர்ந்தும் மூஸாவின் பிரார்த்தனையைப் பற்றி இடம்பெறுகிறது, மூஸா தனது பிரார்த்தனையில் மேலும் கூறினார்: “என் இறைவா! நீர் எனக்கு அருட்கொடையாக வழங்கிய பலம், ஞானம், அறிவு ஆகியவற்றினால் நான் ஒருபோதும் குற்றவாளிகளின் குற்றங்களுக்கு உதவியாளனாக இருக்கவேமாட்டேன்.
(18) 28.18. கிப்தி குலத்தைச் சேர்ந்தவனை கொன்றதனால் என்ன நிகழுமோ என எதிர்பார்த்தவராக நகரத்தில் பயத்துடன் காணப்பட்டார். அப்போது நேற்று கிப்தி குலத்தைச் சேர்ந்தவனுக்கு எதிராக உதவிதேடிய அதே மனிதன் இன்றும் மற்றொரு கிப்தி மனிதனுக்கு எதிராக உதவி தேடிக் கொண்டிருப்பதைக் கண்டார். மூஸா அவனிடம் கூறினார்: “நிச்சயமாக நீ கலகக்காரனாய் பகிரங்கமான வழிகேட்டில் உள்ளவன்.”
(19) 28.19. மூஸா, தனக்கும் இஸ்ரவேலர்களைச் சேர்ந்த அந்த மனிதனுக்கும் எதிரியாக இருந்த கிப்தியைப் பிடிக்க நாடியபோது இஸ்ரேலிய குலத்தைச் சேர்ந்த அந்த மனிதன், மூஸா தன்னைப் பார்த்து (நீ தெளிவான கலகக்காரன்) எனக் கூறியதால், மூஸா தன்னைத்தான் தாக்கப் போகிறார் என எண்ணியவனாகக் கூறினான்: “நேற்று ஒரு மனிதனைக் கொன்றவாறு என்னையும் கொல்ல நினைக்கிறீரா? நீர் மக்களைக் கொலை செய்து அநியாயக்காரனாக விரும்புகின்றாய். சண்டையிடும் இரு மனிதர்களிடையே சமாதானம் செய்பவனாக இருக்க விரும்பவில்லை.”
(20) 28.20. தகவல் பரவியதும் மூஸா மீது கொண்ட அன்பினால் அவர் பிடிபட்டுவிடுவார் என்பதால் நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் ஓடோடி வந்து அவரிடம் கூறினார்: “மூஸாவே! நிச்சயமாக ஃபிர்அவ்னின் சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்தவர்கள் உம்மைக் கொல்வதற்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நீர் ஊரிலிருந்து வெளியேறி விடுவீராக. அவர்கள் உம்மைப் பிடித்துக் கொன்றுவிடக்கூடாது என்பதால் நிச்சயமாக நான் உமக்கு அறிவுரை வழங்குபவராக இருக்கிறேன்.”
(21) 28.21. மூஸா நன்மையை நாடும் அந்த மனிதரின் கட்டளையைச் செயல்படுத்தினார். தனக்கு என்ன நேருமோ என கண்காணித்துக்கொண்டு பயந்தவராக ஊரைவிட்டு வெளியேறிவிட்டார். மூஸா தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “என் இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக. அவர்கள் எனக்கு எந்த தீங்கும் இழைத்துவிடக்கூடாது.”
(22) 28.22. அவர் மத்யனை முன்னோக்கிச் சென்றபோது கூறினார்: “என் இறைவன் நான் வழிதவறிவிடாமல் இருக்க எனக்கு சிறந்த வழியைக் காட்டுவான்.”
(23) 28.23. அவர், நீர் புகட்டும் மத்யனின் நீர் நிலையை அடைந்தபோது அங்கு தங்களின் கால்நடைகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்த மக்கள் கூட்டமொன்றைக் கண்டார். அவர்களுக்கு முன்னால் இரண்டு பெண்கள் தங்களின் ஆடுகளை மக்கள் புகட்டும் வரை நீர் நிலையைவிட்டுத் தடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மூஸா அவர்களிடம் கேட்டார்: “உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் நீங்களும் மக்களுடன் சேர்ந்து உங்கள் கால்நடைகளுக்கு நீர் புகட்டவில்லை?” அவர்கள் இருவரும் கூறினார்கள்: “தாமதிப்பது எமது வழமை, ஏனெனில் மேய்ப்பாளர்களுடன் கலந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் செல்லும் வரை நாங்கள் எங்களின் ஆடுகளுக்கு நீர் புகட்ட முடியாது. எங்களின் தந்தை வயது முதிர்ந்தவராக இருக்கின்றார். அவரால் நீர் புகட்ட முடியாது. எனவே எங்களின் கால்நடைகளுக்கு நாங்கள் நீர் புகட்ட வேண்டிய நிர்ப்பந்தமாயிற்று.
(24) 28.24. மூஸா அவர்களின் மீது இரக்கம் கொண்டு அவர்களின் கால்நடைகளுக்கு நீர் புகட்டினார். பின்னர் நிழலின்பால் ஒதுங்கி ஓய்வெடுத்தார். இறைவனிடம் தன் தேவையை சூசகமாகக் கூறி அவர் பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நிச்சயமாக நீ எனக்கு வழங்கும் எந்த நலவுக்கும் நிச்சயமாக நான் தேவையுடையவனே.”
(25) 28.25. அவர்கள் இருவரும் சென்று தங்களின் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார்கள். அவர் அவர்களில் ஒருத்தியைமூஸாவை அழைத்து வருமாறு அனுப்பினார். அவள் வெட்கத்தோடு வந்து மூஸாவிடம் கூறினாள்: “நிச்சயமாக நீர் எங்களின் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டியதற்குக் கூலி வழங்குவதற்காக என் தந்தை உங்களை அழைக்கின்றார்.” மூஸா அந்தப் பெண்களின் தந்தையிடம் வந்தபோது நடந்த எல்லா சம்பவங்களையும் கூறினார். அதற்கு அவர் அவரை அமைதிப்படுத்தி கூறினார்: “பயப்படாதீர். நீர் அநியாயக்கார மக்களான ஃபிர்அவ்னிடமிருந்து அவனுடைய சமூகத்தினரிடமிருந்தும் தப்பிவிட்டீர். ஏனெனில் மத்யன் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இங்கு அவர்களால் உமக்குத் தீங்கிழைக்க முடியாது.”
(26) 28.26. இரு பெண்களில் ஒருத்தி கூறினாள்: “நம் ஆடுகளை மேய்ப்பதற்கு இவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். பலத்தையும் அமானிதத்தையும் ஒருசேர பெற்றுள்ள இவரே நீங்கள் வேலைக்கு அமர்த்துவதற்கு மிகவும் தகுதியானவர். பலத்தினால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்வார். அமானிதத்தினால் நம்பி ஒப்படைப்பதைப் பாதுகாப்பார்.
(27) 28.27. அவர்களின் தந்தை மூஸாவிடம் கூறினார்: “நீர் எட்டு ஆண்டுகள் என் ஆடுகளை மேய்க்க வேண்டும் என்பதை மஹராக -மணக்கொடையாக- ஆக்கி இரு பெண்களில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். நீர் பத்து ஆண்டுகள் நிறைவு செய்தால் அது நீர் செய்யும் உபகாரமாகும். உமக்கு கட்டாயம் அல்ல. நிச்சயமாக உடன்படிக்கை எட்டு ஆண்டுகள் தான். அதற்கு மேல் உள்ளவை விரும்பத்தக்கதுதான். உனக்கு சிரமமாக இருப்பதை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் ஒப்பந்தங்களை முறிக்காமல் நிறைவேற்றும் நல்லவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.
(28) 28.28. மூஸா அவரிடம் கூறினார்: “இதுதான் உமக்கும் எனக்குமுள்ள ஒப்பந்தமாகும். இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினாலும் நான் என்னிடமுள்ள ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றியவனாவேன். எனவே என்னிடம் அதிகமாக வேண்டாதீர். நம்முடைய ஒப்பந்தத்திற்கு அல்லாஹ்வே பொறுப்பாளனாகவும் கண்காணிப்பாளனாகவும் இருக்கின்றான்.
(29) 28.29. மூஸா இரு தவணைகளில் அதிகபட்ச தவணையான பத்து வருடங்களை நிறைவுசெய்து தம் குடும்பத்தாருடன் மத்யனிலிருந்து எகிப்தை நோக்கி புறப்பட்டார். அப்போது தூர் மலைக்கு அருகில் நெருப்பைக் கண்டார். தம் குடும்பத்தாரிடம் கூறினார்: “இங்கேயே இருங்கள். நான் நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து நான் ஏதேனும் செய்தியைக் கொண்டு வருகிறேன் அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு நெருப்பை மூட்டுவதற்காக அங்கிருந்து ஏதேனும் எரிகொள்ளியைக் கொண்டு வருகிறேன்.
(30) 28.30. மூஸா தான் கண்ட நெருப்பை நோக்கி வந்தபோது அவரின் வலதுபுறம் அமைந்த அந்தப் பகுதியின் மூஸாவுடன் பேசுவதன் மூலம் அருள் வளமிக்க இடத்திலுள்ள (ஒரு) மரத்திலிருந்து இறைவன் அவரை அழைத்துக் கூறினான்: “மூஸாவே! நிச்சயமாக நான்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்.”
(31) 28.31. ”உமது கைத்தடியைப் போடுவீராக.” இறைவனின் கட்டளைக்கேற்ப அவர் தம் கைத்தடியைப் போட்டார். நிச்சயமாக அது பாம்பைப் போன்று வேகமாக அசைந்து ஓடுவதைக் கண்டதும் திரும்பிப் பார்க்காமல் பயந்து வெருண்டோடிவிட்டார். பயத்தினால் திரும்பி வரவும் இல்லை. இறைவன் அழைத்தான்: “மூஸாவே! முன்னால் வாரும். அதற்குப் பயப்பட வேண்டாம். நிச்சயமாக நீர் அதிலிருந்தும் நீர் பயப்படும் ஏனையவற்றிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவராக இருக்கின்றீர்.”
(32) 28.32. “உம் வலது கையை சட்டையின் கழுத்துப் பக்கமாக உள்ள இடைவெளிக்குள் நுழைப்பீராக. அது வெண்குஷ்டம் இன்றி வெண்மையாக வெளிப்படும்.” மூஸா தம் கையை நுழைத்தார். அது பனிக்கட்டியைப்போன்று வெண்மையாகத் தோன்றியது. “அச்சம் நீங்குவதற்காக உம் கையை உம் பக்கம் ஒடுக்கிக் கொள்ளும்.” அவர் தம் கையை தம் பக்கம் ஒடுக்கிக் கொண்டார். அச்சம் நீங்கியது. ஃபிர்அவனிடமும் அவன் சமூகத்தின் செல்வாக்கு மிகுந்தவர்களிடம் செல்வதற்காக இவையிரண்டும் -கை, கைத்தடி- உம் இறைவனிடமிருந்து உமக்கு வழங்கப்பட்ட சான்றுகளாகும். நிச்சயமாக அவர்கள் நிராகரித்து பாவங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வுக்கு அடிபணியாதவதை விட்டும் வெளியேறியவர்களாக இருக்கிறார்கள்.
(33) 28.33. மூஸா தம் இறைவனிடம் உதவி தேடியவராக கூறினார்: “நிச்சயமாக நான் அவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டேன். எனவே எனக்கு அனுப்பப்பட்ட தூதை எடுத்துரைப்பதற்காக அவர்களிடம் சென்றால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.
(34) 28.34. என் சகோதரர் ஹாரூன் என்னைவிட நாவன்மை உடையவர். எனவே அவரையும் என்னுடன் உதவியாளராக அனுப்புவாயாக. பிர்அவ்னும் அவன் சமுதாயமும் என்னை மறுத்தால் அவர் எனது பேச்சில் உடன்படுவார். முந்தைய சமூகங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் அந்த மக்களால் நிராகரிக்கப்பட்டது போன்று ஃபிர்அவ்னும் அவனது சமூகமும் என்னை நிராகரித்துவிடுவார்கள் என்று நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்.
(35) 28.35. அல்லாஹ் மூஸாவின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தவாறு கூறினான்: “-மூஸாவே!- உம் சகோதரர் ஹாரூனையும் தூதராக்கி, உதவியாளராக்கி உம்மை நாம் வலுப்படுத்துவோம். உங்கள் இருவருக்கும் சான்றையும் ஆதரவையும் வழங்குவோம். எனவே அவர்கள் உங்களுக்கு நீங்கள் விரும்பாத எந்த தீங்கும் இழைக்க முடியாது. நாம் உங்களுக்கு வழங்கி அனுப்பிய அத்தாட்சிகளின் காரணமாக நீங்களும் உங்களைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களும்தாம் வெற்றி பெறுவார்கள்.
(36) 28.36. மூஸா நம்முடைய தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இது மூஸாவால் புனைந்து கூறப்பட்ட பொய்யே அன்றி வேறில்லை. இதனை நமது முன்னோர்களிடம் நாம் கேள்விப்படவில்லை.
(37) 28.37. மூஸா ஃபிர்அவ்னிடம் கூறினார்: “தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்துள்ள உண்மையாளரையும் மறுமையில் யாருடைய முடிவு புகழத்தக்கதாக அமையும் என்பதையும் என் இறைவன் அறிவான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் தாங்கள் வேண்டுவதை பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து பாதுகாவல் பெற்று வெற்றியடைய மாட்டார்கள்.
(38) 28.38. ஃபிர்அவ்ன் தன் சமூகத்து செல்வாக்கு உள்ளவர்களிடம் கூறினான்: “அவையோரே! நான் உங்களுக்கு என்னைத் தவிர வேறு இறைவனை அறிந்திருக்கவில்லை. ஹாமானே! நான் மூஸாவின் இறைவனைக் கண்டு அவருக்கு முன்னால் நிற்கும் பொருட்டு உறுதியாக இருப்பதற்காக தீயை மூட்டி களிமண்ணால் (செங்கற்கள்) செய்து எனக்காக ஒரு உயர்ந்த கட்டடத்தை எழுப்புவீராக. என்னிடமும் எனது சமூகத்திடமும் நிச்சயமாக தன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியுள்ளான் என்று சொல்லிக் கொள்ளும் மூஸாவை திட்டமாக நான் பொய்யர் என்றே கருதுகிறேன்.”
(39) 28.39. ஃபிர்அவ்ன் மற்றும் அவனது படையினரின் கர்வம் அதிகரித்து எகிப்து மண்ணில் உண்மையான நியாயம் எதுவமின்றி பெருமையடித்தார்கள். மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்தார்கள். நிச்சயமாக மறுமை நாளில் விசாரணைக்கும் தண்டனை பெறவும் நம்மிடம் திரும்பி வர மாட்டார்கள் என்றே அவர்கள் எண்ணினார்கள்.
(40) 28.40. நாம் அவனையும் அவனது படையினரையும் தண்டித்து கடலில் வீசியெறிந்து மூழ்கடித்து அனைவரையும் அழித்துவிட்டோம். -தூதரே!- அநியாயக்காரர்களின் முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அழிவே அவர்களின் முடிவாக இருந்தது.
(41) 28.41. அவர்களை நிராகரிப்பையும் வழிகேட்டையும் பரப்பி நரகத்தின்பால் அழைப்பு விடுக்கும் வழிகேடர்களுக்கும், அநியாயக்காரர்களுக்கும் முன்மாதிரிகளாக ஆக்கினோம். மறுமை நாளில் வேதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு உதவி செய்யப்பட மாட்டார்கள். மாறாக அவர்கள் ஏற்படுத்திய தீய வழிமுறையினால், வழிகேட்டின்பால் அழைப்பு விடுத்ததனால் அவர்களுக்குப் பல மடங்கு வேதனையளிக்கப்படும். அவர்களின் வழிகெட்ட செயல்கள், அவற்றில் அவர்களைப் பின்பற்றியவர்களின் செயல்களின் பாவங்களும் அவர்களின் கணக்கில் எழுதப்படும்.
(42) 28.42. இவ்வுலகிலும் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையோடு இழிவும் சாபமும் அதிகரித்ததாக அவர்களைப் பின்தொடரச் செய்தோம். மறுமை நாளில் இழிவாக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர்கள் தூரமாக்கப்படுவார்கள்.
(43) 28.43. தங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர்களை பொய்ப்பித்த சமூகங்களை அழித்த பிறகு நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அது மனிதர்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய பயனுள்ள விஷயங்களையும் விட்டுவிட வேண்டிய தீங்குதரும் விஷயங்களையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் அவர்களுக்கு நன்மையின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளை உள்ளடக்கிய அருளாகவும் திகழ்ந்தது. அதன் மூலம் அவர்கள்அல்லாஹ் தங்களுக்கு நல்கிய அருட்கொடைகளை நினைவுபடுத்தி அவனுக்கு நன்றிசெலுத்தி அவன் மீது நம்பிக்கைகொள்ளலாம்.
(44) 28.44. -தூதரே!- நாம் பிர்அவ்னிடமும் அவனுடைய அவையோரிடமும் அனுப்பும் கட்டளையைப் பிறப்பித்த சமயம் மூஸாவிற்கு மேற்குத் திசையிலிருந்த மலைக்கு அருகில் நீர் இருக்கவில்லை. நீர் இவற்றையெல்லாம் அறிந்து மக்களிடம் கூறுவதற்கு அப்போது அங்கு இருக்கவில்லை. எனவே அவர்களுக்கு நீர் கூறுவதெல்லாம் அல்லாஹ் உமக்கு வஹி அறிவித்ததே.
(45) 28.45. ஆயினும் நாம் மூஸாவிற்குப் பிறகு பல சமூகங்களை உருவாக்கினோம். அவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிடுமளவு பல்லாண்டுகள் கடந்தன. நீர் நம்முடைய வசனங்களை அவர்களிடம் எடுத்துரைப்பதற்கு நீர் மத்யன்வாசிகளுடன் வசிக்கவில்லை. மாறாக நாம் உம்மை நம் புறத்திலிருந்து தூதராக அனுப்பியுள்ளோம்.மூஸாவின் செய்தியையும் மத்யனில் அவர் தங்கியதையும் நாம் வஹியின் மூலம் உமக்கு அறிவித்தோம். அல்லாஹ் உமக்கு வஹியின் மூலம் அறிவித்ததை நீர் மக்களிடம் அறிவித்தீர்.
(46) 28.46. நாம் மூஸாவை அழைத்து அவருக்கு வஹி அறிவித்த தகவலை நீர் கூறுவதற்கு நீர் தூர் மலைக்கு அருகிலம் இருக்கவில்லை. ஆனால் நாம் உம்மை மக்கள் அனைவருக்கும் உமது இறைவனின் அருளாகவே அனுப்பியுள்ளோம். உமக்கு முன்னர் எச்சரிக்கும் எந்தத் தூதரும் வராத ஒரு சமூகத்தை எச்சரிப்பதற்கே நாம் இவற்றை உமக்கு அறிவித்துள்ளோம். அதனால் அவர்கள் படிப்பினை பெற்று, அல்லாஹ்விடமிருந்து நீர் கொண்டுவந்ததை நம்பிக்கைகொள்ளலாம்.
(47) 28.47. அவர்களின் நிராகரிப்பு மற்றும் பாவங்களினால் இறைவேதனை அவர்களைத் தாக்கிவிட்டால் தங்களிடம் தூதர்களை வராததை ஆதாரமாகக் காட்டி அவர்கள் கூறுவார்கள்: “நீ எங்களின்பால் ஒரு தூதரை அனுப்பியிருக்கக் கூடாதா? நாங்கள் உன் வசனங்களைப் பின்பற்றி அவற்றின்படி செயல்பட்டிருப்போமே! தங்கள் இறைவனின் கட்டளையின்படி செயல்படும் நம்பிக்கையாளர்களாக நாங்கள் ஆகியிருப்போமே!” இவ்வாறு மட்டும் இல்லையெனில் நாம் அவர்களை உடனடியாகத் தண்டித்திருப்போம். ஆயினும் அவர்களுக்கு நாம் தூதர்களை அனுப்பி காரணத்தை நீக்கும் வரை அதனை அவர்களை விட்டும் தாமதப்படுத்துகின்றோம்.
(48) 28.48. குறைஷிகளிடம் முஹம்மது தம் இறைவனிடமிருந்துதூதைக் கொண்டு வந்தபோது அவர்கள் அவரைப் பற்றி யூதர்களிடம் விசாரித்தனர். அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக முஹம்மது தம் இறைவனிடமிருந்து வந்த தூதர் என்பதற்கு அடையாளமாக மூஸாவுக்கு வழங்கப்பட்ட கை, கைத்தடி போன்ற அற்புதங்கள் அவருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டாமா?” தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “இதற்கு முன்னர் மூஸாவுக்கு வழங்கப்பட்டதை யூதர்கள் நிராகரிக்கவில்லையா? அவர்கள் குர்ஆனுக்கும் தவ்ராத்துக்கும் கூறினார்கள்: “ நிச்சயமாக இரண்டுமே ஒன்றையொன்று பலப்படுத்தும் சூனியமே என்று. இன்னும் நிச்சயமாக நாங்கள் அவையிரண்டையும் நிராகரிக்கின்றோம் என்று கூறினார்கள்.”
(49) 28.49. -தூதரே!- நீர் இவர்களிடம் கூறுவீராக: “குர்ஆனையும் தவ்ராத்தையும் சூனியம் என்று கூறும் நீங்கள் உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமிருந்து ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள். அது தவ்ராத்தையும் குர்ஆனையும் விட நேர்வழிகாட்டக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு நிச்சயமாக கொண்டுவந்தால் நான் அதனைப் பின்பற்றுகிறேன்.
(50) 28.50. தவ்ராதையும் குர்ஆனையும் விட நேர்வழிமிக்க ஒரு நூலைக் கொண்டுவருவதற்கான உமது அழைப்புக்கு குறைஷிகள் பதிலளிக்கவில்லையெனில் நிச்சயமாக அவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் நிராகரிக்கவில்லை, திட்டமாக தங்களின் மன இச்சையின்படியே நிராகரிக்கிறார்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்வீராக. அல்லாஹ்விடமிருந்துள்ள வழிகாட்டுதல் இன்றி தங்களின் மன இச்சையைப் பின்பற்றுபவர்களைவிட வழிகெட்டவர்கள் வேறு யாருமில்லை. நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரித்து தங்களுக்குத்தாங்களே அநீதி இழைத்துக் கொள்ளும், அநியாயக்காரர்களுக்கு நேர்வழிபெற அல்லாஹ் உதவுவதில்லை.
(51) 28.51. இணைவைப்பாளர்களுக்கும் யூதர்களுக்கும் இஸ்ரேவேலர்களின் மக்களான முந்தைய சமூகங்களின் சம்பவங்களை கூறியும், தமது தூதர்களை நிராகரித்த போது அவர்களுக்கு இறக்கிய வேதனையையும் நாம் சென்றடையச் செய்தோம். அதன் மூலம் அவர்கள் படிப்பினை பெற்று, நம்பிக்கைகொண்டு முன்னோர்களுக்கு நேர்ந்தது போல் அவர்களுக்கும் நேர்ந்துவிடுவதைத் தவிர்ப்பதற்காகத்தான்.
(52) 28.52. அல்குர்ஆன் இறங்குவதற்கு முன்னரே தவ்ராத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தவர்கள்தாம் தங்களின் வேதங்களில் குர்ஆனின் செய்திகளை, பண்புகளைக் குறித்து காண்பதால் குர்ஆனின்மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.
(53) 28.53. அவர்களிடம் இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் அதனை நம்பிக்கைகொண்டோம். இது எங்கள் இறைவனிடமிருந்து இறங்கிய சந்தேகமற்ற உண்மையாகும். நாங்கள் இந்தக் குர்ஆனுக்கு முன்னரே அவருக்கு முன்னர் தூதர்கள் கொண்டுவந்ததன் மீது நம்பிக்கைகொண்டு முஸ்லிம்களாக -கட்டுப்பட்டவர்களாக- இருந்தோம்.
(54) 28.54. மேற்கூறப்பட்ட பண்புகளை உடையவர்கள் தங்களின் வேதத்தின் மீது நம்பிக்கைகொண்டு பொறுமையாக இருந்ததனாலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதும் அவரை நம்பிக்கைகொண்டதனாலும் அவர்களின் செயல்களுக்கு அல்லாஹ் இருதடவை அவர்களுக்கு கூலியை வழங்குவான். அவர்கள் தாங்கள் செய்யும் நற்செயல்களின் நன்மைகளால் தாங்கள் சம்பாதித்த பாவங்களை அழிக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நன்மையான விஷயங்களில் செலவும் செய்கிறார்கள்.
(55) 28.55. நம்பிக்கைகொண்ட இந்த வேதக்காரர்கள் வீணான வார்த்தைகளைச் செவியுற்றால் அவற்றைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிடுகிறார்கள். அவர்கள் அவ்வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்களிடம் கூறுகிறார்கள்: “நாங்கள் செய்த செயல்களுக்கான கூலி எங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் செய்த செயல்களுக்கான கூலி உங்களுக்குக் கிடைக்கும். நாங்கள் உங்களை ஏசவோ, துன்புறுத்தவோ மாட்டோம். மார்க்கத்துக்கும் உலகுக்கும் பாதிப்பு, தீங்கு ஏற்படும் என்பதால் மூடர்களுடன் நட்பு கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை.
(56) 28.56. -தூதரே!- அபூ தாலிப் போன்ற நீர் விரும்பியவர்களுக்கு நிச்சயமாக உம்மால் ஈமானின்பால் நேர்வழியை அடையவைக்க முடியாது. ஆனால் அல்லாஹ் மட்டுமே தான் நாடியோருக்கு நேர்வழியை அடையவைக்கிறான். நேரானபாதையின் பால் நேர்வழிபெற்றவர்கள் என தனது அறிவில் ஏற்கனவே முடிவாகியுள்ளவர்களைப் பற்றி அவன் நன்கறிந்தவன்.
(57) 28.57. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் நம்பிக்கைகொள்ளாமல், இஸ்லாத்தை பின்பற்றாமல் இருப்பதற்கு பின்வருமாறு சாக்குப்போக்குக் கூறுகிறார்கள்: “நாங்கள் நீர் கொண்டுவந்த இஸ்லாத்தைப் பின்பற்றினால் எங்களின் நாட்டிலிருந்து எதிரிகள் எம்மை விரைவாக தூக்கிஎறிந்து விடுவார்கள்.” இந்த இணைவைப்பாளர்களுக்கு பாதுகாப்பான பூமியை நாம் வழங்கவில்லையா? அங்கு அநியாயம் செய்வதோ இரத்தம் ஓட்டுவதோ தடுக்கப்பட்டுள்ளது. ஏனையவர்கள் அவர்களைத் தாக்குவார்கள் என்ற பயமின்றி உள்ளார்கள். நம்மிடமிருந்துள்ள வாழ்வாதாரமாக எல்லாவற்றின் விளைச்சல்களையும் அங்கு நாம் கொண்டு வரவில்லையா? அவர்களில் பெரும்பாலானோர் அவனுக்கு நன்றி செலுத்துவதற்கு அல்லாஹ் அவர்களின் மீது பொழிந்த அருட்கொடைகளை அறியாமல் இருக்கிறார்கள்.
(58) 28.58. அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்துகொண்டு வரம்புமீறி பாவங்களில் ஈடுபட்ட எத்தனையோ ஊர்கள் உள்ளன. அதன் மீது வேதனையை அனுப்பி அதனை அழித்துவிட்டோம். அவை அவர்களின் பாழடைந்த வசிப்பிடங்கள். அவர்களுக்குப் பிறகு அதனை கடந்து செல்லக்கூடியவர்களைத் தவிர அதில் யாரும் பெரிதாக வசிக்கவில்லை. நாமே வானங்கள் பூமி அவற்றில் உள்ளவர்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றோம்.
(59) 28.59. -தூதரே!- உம் இறைவன் ஊர்களை அதன் பெரிய ஊர்களுக்கு சாக்குபோக்கு சொல்லாமல் இருப்பதற்காகவேண்டி ஒரு தூதரை, உம்மை மக்காவில் அனுப்பியது போன்று, அனுப்பாதவரை அழிக்கக்கூடியவனாக இல்லை. அங்குள்ளவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கும் வரை நாம் அவர்களை அழிக்க மாட்டோம். நிச்சயமாக நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களின் மூலம் அநியாயம் செய்யக்கூடியவர்களைத்தான் அழிக்கின்றோம்.
(60) 28.60. உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த பொருட்கள் யாவும் இவ்வுலக வாழ்வின் நீங்கள் அனுபவிக்கும் இன்பங்களும் அதன் அலங்காரமும்தான். பின்னர் அவை அழிந்துவிடும். மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் மகத்தான கூலியே அற்ப உலக இன்பங்கள், அலங்காரங்களை விடச் சிறந்தது, நிலையானது. நீங்கள் இதனை விளங்கிக் கொண்டு நிலையான இன்பங்களுக்கு அழியக்கூடியவற்றைவிட முன்னுரிமை அளிக்க மாட்டீர்களா?
(61) 28.61. நாம் யாருக்கு மறுமையில் சுவனத்தையும் அதிலுள்ள நிலையான இன்பங்களையும் அளிப்பேன் என்று வாக்களித்து அதனை உறுதியாக அடைய இருப்போர், நாம் யாருக்கு இவ்வுலக வாழ்க்கையில் செல்வங்களையும் அலங்காரத்தையும் அளித்து பின்னர் மறுமை நாளில் நரக நெருப்பின்பால் நிறுத்தப்படுவோருடன் சமமாவார்களா என்ன?
(62) 28.62. அந்த நாளில் அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கேட்பான்: “எனக்கு இணையானவர்கள் என எண்ணிக்கொண்டு என்னை விடுத்து எனக்கு இணையாக நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்கே?”
(63) 28.63. வேதனை உறுதியாகி விட்ட நிராகரிப்பைப் பிரச்சாரம் செய்தோர் கூறுவார்கள்: “நாங்கள் வழிகெட்டவாறே இவர்களையும் வழிகெடுத்தோம். நாங்கள் இவர்களைவிட்டு விலகிக் கொள்கிறோம். இவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக நிச்சயமாக அவர்கள் ஷைத்தான்களைத்தான் வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
(64) 28.64. அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் இருக்கும் இந்த இழிவிலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக உங்களின் இணைதெய்வங்களை அழையுங்கள். அவர்கள் தங்களின் இணைதெய்வங்களை அழைப்பார்கள். ஆனால் அவை அவர்களின் அழைப்புக்குப் பதிலளிக்க மாட்டாது. தங்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ள வேதனையை அவர்கள் காண்பார்கள். அப்போது இவ்வுலகில் அவர்கள் சத்தியத்தின்பால் நேர்வழி அடைந்தவர்களாக இருந்திருக்கலாமே என ஆசைவைப்பார்கள்.
(65) 28.65. அந்த நாளில் அவர்களின் இறைவன் அவர்களை அழைத்து கேட்பான்: “நான் உங்களின்பால் அனுப்பிய என் தூதர்களுக்கு என்ன பதிலளித்தீர்கள்?”
(66) 28.66. அவர்கள் வாதிட்டுக்கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டும் மறைந்துவிடும். எதையும் அவர்கள் நினைவுகூர மாட்டார்கள். அவர்கள் வேதனையில் விழக்கூடியவர்கள் என்பதை உறுதியாக அறிந்திருப்பதனால் ஏற்பட்ட அதிர்ச்சியின் பயங்கரத்தினால் ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
(67) 28.67. ஆயினும் இந்த இணைவைப்பாளர்களில் தனது நிராகரிப்பை விட்டு மீண்டு அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்கள், தாங்கள் வேண்டியதை பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து வெற்றியடையலாம்.
(68) 28.68. -தூதரே!- உம் இறைவன் தான் படைக்க நாடியதைப் படைக்கிறான். தன் நபித்துவத்திற்காகவும் கீழ்ப்டிதலுக்காகவும் தான் நாடியவர்களைத் தேர்ந்தெடுக்கிறான். அல்லாஹ்வின் மீது ஆட்சேபனை செய்வதற்கு இணைவைப்பாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் அவனுடன் சேர்த்து வணங்கும் இணைதெய்வங்களைவிட்டும் அவன் தூய்மையானவன்.
(69) 28.69. அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதையும் வெளிப்படுத்துவதையும் உம் இறைவன் அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(70) 28.70. அவனே அல்லாஹ். அவனைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியது. தடையின்றி செல்லுபடியாகும் விதி அவனுக்கே உரியது. மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலிக்காகவும் அவனிடமே நீங்கள் மீண்டு வருவீர்கள்.
(71) 28.71. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் மறுமை நாள் வரை முடிவின்றி இரவை உங்கள் மீது நிரந்தரமாக்கிவிட்டால் அல்லாஹ்வைத் தவிர எந்த இறைவனால் உங்களுக்கு பகலின் ஒளியைப் போன்ற ஓர் ஒளியைக் கொண்டுவர முடியும்? என்பதை எனக்கு அறிவியுங்கள். நீங்கள் இந்த ஆதாரங்களை செவியேற்று, அதனைக் கொண்டுவர அல்லாஹ்வைத் தவிரவுள்ள வேறு எந்த இறைவனும் இல்லை என்பதை அறிய மாட்டீர்களா?”
(72) 28.72. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் உங்கள் மீது மறுமை நாள் வரை பகலை நிரந்தரமாக்கிவிட்டால் அல்லாஹ்வைத் தவிர எந்த இறைவனால் நீங்கள் பகல் நேரத் தொழில் களைப்பிலிருந்து ஓய்வெடுக்கக்கூடிய இரவைக் கொண்டுவர முடியும் என்பதை எனக்கு அறிவியுங்கள். நீங்கள் இந்த சான்றுகளைக் கண்டுணர்ந்து, அது அனைத்தையும் கொண்டுவர அல்லாஹ்வைத் தவிரவுள்ள வேறு எந்த இறைவனும் இல்லை என்பதை அறிய மாட்டீர்களா?”
(73) 28.73. -மனிதர்களே!- பகலில் ஏற்பட்ட களைப்பிலிருந்து ஓய்வெடுப்பதற்காக இரவை இருளானதாகவும் நீங்கள் வாழ்வாதாரம் தேடுவதற்காக பகலைப் பிரகாசமானதாகவும் அவன் ஆக்கியுள்ளமை அவனுடைய அருளே. அது நீங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தி, நன்றி மறக்காதவர்களாகத் திகழ வேண்டும் என்பதற்காகத்தான்.
(74) 28.74. அந்நாளில் அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கேட்பான்: “நிச்சயமாக அவர்கள் எனக்கு இணையானவர்கள் எனக் எண்ணிக்கொண்டு என்னை விடுத்து எனக்கு இணையாக நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்கே?”
(75) 28.75. நாம் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் அவர்களின் பொய்ப்பித்தலுக்கு, நிராகரிப்பிற்கு எதிராக சாட்சி கூறுவதற்காக அதன் நபியை கொண்டு வருவோம். அப்போது அந்த சமூகங்களில் பொய்ப்பிப்பவர்களிடம் கூறுவோம்: “உங்களின் பொய், நிராகரிப்பிற்கு ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள். அவர்களின் ஆதாரங்கள் அனைத்தும் பயனற்றுப்போகும். சந்தேகமற்ற சத்தியம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நிச்சயமாக அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் அவனுக்கு பொய்யாகச் சித்தரித்துக்கொண்டிருந்த இணைத்தெய்வங்களெல்லாம் அவர்களைவிட்டு மறைந்துவிடும்.
(76) 28.76. நிச்சயமாக காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். அவர்கள் மீது அவன் கர்வம் கொண்டான். நாம் அவனுக்கு ஏராளமான செல்வங்களை வழங்கியிருந்தோம். எந்த அளவுக்கெனில், பலம்பொருந்திய மக்கள் கூட்டம்கூட அவற்றின் சாவிகளை சிரமத்துடனே சுமக்கும். அவனது சமூகத்தினர் அவனிடம் கூறிய போது: “கர்வம் கொள்ளாதே. நிச்சயமாக அல்லாஹ் கர்வம் கொள்வோரை நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான். அதனால் அவர்களை தண்டிக்கிறான்.
(77) 28.77. அல்லாஹ் உமக்கு வழங்கிய செல்வங்களை நன்மையான வழியில் செலவு செய்து மறுமையின் வீட்டுக்கான நன்மைகளைத் தேடிக்கொள். இவ்வுலகில் வீண்விரயமின்றியும் பெருமையின்றியும் உண்ணல், குடித்தல், ஆடை போன்ற அருள்களான உனது பங்கையும் மறந்துவிடாதே. அல்லாஹ் உனக்கு நன்மை செய்தவாறே நீயும் அவனுடனும் அவனுடைய அடியார்களுடனும் நல்லமுறையில் நடந்துகொள். அவனுக்குக் கீழ்ப்படியாமல் பாவங்கள் செய்து பூமியில் குழப்பம் விளைவிக்காதே. நிச்சயமாக அல்லாஹ் பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களை நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான்.
(78) 28.78. காரூன் கூறினான்: “நிச்சயமாக என் அறிவால், ஆற்றலால்தான் இந்த செல்வங்களெல்லாம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இதற்குத் தகுதியானவன்தான்.” காரூனைவிட அதிக செல்வங்களும் பலமும் உடைய எத்தனையோ சமூகங்களை அல்லாஹ் அழித்துள்ளான் என்பதை அவன் அறியவில்லையா? அவர்களின் செல்வங்களோ ஆற்றலோ அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. குற்றவாளிகளின் பாவங்களைக் குறித்து அல்லாஹ் அறிந்துவைத்திருப்பதால் அறியவேண்டும் என்று அவர்களிடம் கேட்கப்படமாட்டார்கள். கண்டிக்கும் விதமாகவே அவர்களிடம் கேள்வி கேட்கப்படும்.
(79) 28.79. அவன் தன் முழு அலங்காரத்துடன் ஆடம்பரமாக வெளிப்பட்டான். உலக வாழ்வின் அலங்காரத்தை விரும்பிய அவனது தோழர்கள் கூறினார்கள்: “உலக அலங்காரங்களில் காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று எங்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பாக்கியசாலி.”
(80) 28.80. கல்வியறிவு வழங்கப்பட்டவர்கள் காரூனின் அலங்காரத்தைக் கண்டபோது, அவனது தோழர்களின் ஏங்குதலைச் செவியுற்றபோது கூறினார்கள்: “உங்களுக்குக் கேடுதான். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் வழங்கும் கூலி காரூனுக்கு வழங்கப்பட்ட உலக அலங்காரத்தைவிட சிறந்ததாகும். அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களை விட அல்லாஹ்விடம் இருக்கும் நிலையான இன்பங்களைத் தேர்ந்தெடுத்த பொறுமையாளர்களே இந்த வார்த்தையைக் கூறுவதற்கும் அதன்படி செயல்படுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவார்கள்.
(81) 28.81. பின்னர் அவனைத் தண்டிக்கும்பொருட்டு அவனையும் அவனது வீட்டையும் அதிலுள்ளோருடன் சேர்த்து பூமியில் புதையச் செய்துவிட்டோம். அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு உதவி செய்யக்கூடிய எந்தக் கூட்டமும் இருக்கவில்லை. அவனால் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளக்கூடியவனாகவும் இருக்கவில்லை.
(82) 28.82. புதைவதற்கு முன்னால் அவனைப்போன்று செல்வந்தனாகவும் அலங்காரம் மிக்கவனாகவும் ஆக வேண்டுமே என்று ஏங்கியவர்கள் கைசேதப்பட்டு படிப்பினை பெற்றவர்களாக கூறலானார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். அவர்களில் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகின்றான் என்பதை நாம் அறியவில்லையா? நாங்கள் கூறியதற்காக எங்களைத் தண்டிக்காமல் திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது அருள்புரியவில்லையெனில் காரூன் புதைக்கப்பட்டது போன்று நாமும் புதைக்கப்பட்டிருப்போம். நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றிபெற மாட்டார்கள். மாறாக ஈருகிலும் நிச்சயமாக அவர்களின் முடிவு இழப்பாகவே அமையும்.
(83) 28.83. நாம் நிலையான அந்த மறுமையின் வீட்டை பூமியில் சத்தியத்தை நம்பிக்கை கொள்வதை விட்டும் அதனை பின்பற்றுவதை விட்டும் கர்வம் கொள்ளவோ, அதில் குழப்பம் செய்யவோ விரும்பாதவர்களுக்கு இன்பமும் கண்ணியமும் உள்ள வீடாக ஆக்கியுள்ளோம். அருட்கொடைகள் நிறைந்த சுவனமும், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அங்கு கிடைக்கும் அல்லாஹ்வின் திருப்தியுமே புகழத்தக்க முடிவாகும்.
(84) 28.84. மறுமை நாளில் யார் -தொழுகை, ஸகாத், நோன்பு, போன்ற ஏனைய- நன்மைகளைக் கொண்டு வருவாரோ அவருக்கு அந்த நன்மைகளை விட சிறந்த கூலி உண்டு. அவரது நன்மைக்கு பத்து மடங்கு கூலி வழங்கப்படும். யார் -நிராகரிப்பு, வட்டி உண்ணுதல், விபச்சாரம், மற்றும் ஏனைய- தீமையைக் கொண்டுவருவாரோ எவ்வித அதிகரிப்புமின்றி அவர்கள் செய்த தீய செயல்களுக்கேற்பவே அவர்களுக்குத் தண்டனையளிக்கப்படும்.
(85) 28.85. நிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கி கட்டாயமாக அதனை எடுத்துரைக்கும்படியும் அதன்படி செயல்படும்படியும் கூறியவன் உம்மை மக்காவின்பால் வெற்றி பெற்றவராக திரும்பச் செய்வான். -தூதரே!- நீர் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “யார் நேர்வழியைக் கொண்டு வந்துள்ளார், யார் சத்தியத்தை விட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார் என்பதை என் இறைவன் நன்கறிவான்.
(86) 28.86. -தூதரே!- உமக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்னர் உம்மீது குர்ஆன் வஹியாக இறக்கப்படும் என்று நீர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆயினும் தன் அருளால் உம்மீது குர்ஆனை இறக்கினான். எனவே நீர் ஒருபோதும் நிராகரிப்பாளர்களின் வழிகேடுகளுக்கு உதவியாளராக ஆகிவிடாதீர்.
(87) 28.87. அல்லாஹ்வின் வசனங்கள் உம்மீது இறங்கிய பின்னரும் இந்த இணைவைப்பாளர்கள் அவற்றைவிட்டும் உம்மைத் திசை திருப்பிவிட வேண்டாம். நீர் அவற்றை ஓதுவதையோ எடுத்துரைப்பதையோ விட்டுவிடாதீர். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளும்படியும் அவனை ஒருமைப்படுத்தும்படியும் அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படும்படியும் மக்களை அழைப்பீராக. அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் வணங்கும் இணைவைப்பாளர்களில் ஒருவராகிவிடாதீர். மாறாக அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் ஓரிறைக்கொள்கையுடையவராக இருப்பீராக.
(88) 28.88. அல்லாஹ்வுடன் வேறு இறைவனை வணங்காதீர். உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனுடைய முகத்தைத் தவிர அனைத்தும் அழிந்துவிடக்கூடியவையே. தீர்ப்பளிக்கும் அதிகாரம் அவனிடம் மட்டுமே உள்ளது. அவன் தான் நாடியவாறு தீர்ப்பளிக்கிறான். நீங்கள் அனைவரும் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலிபெறுவதற்காகவும் அவனிடம் மட்டுமே திரும்ப வேண்டும்.