67 - ஸூரா அல்முல்க் ()

|

(1) 67.1. அல்லாஹ்வின் நன்மைகள் அதிகரித்துவிட்டன. அவன் கைவசம் மட்டுமே ஆட்சியதிகாரம் உள்ளது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவனை எதுவும் இயலாமையில் ஆழ்த்திவிடாது.

(2) 67.2. மனிதர்களே! உங்களில் சிறந்த முறையில் செயல்படுபவர்கள் யார் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்துள்ளான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன்.

(3) 67.3. அவனே ஏழு வானங்களையும் படைத்தான். ஒவ்வொரு வானமும் தனக்கு மேலுள்ளதை தொடாமல் அடுக்கடுக்காக இருக்கின்றன. -பார்க்கக்கூடியவனே!- அல்லாஹ் படைத்தவற்றில் எந்த ஏற்றத்தாழ்வையும் பொருத்தமின்மையையும் காணமாட்டாய். மீண்டும் பார். நீ ஏதேனும் ஓட்டை அல்லது வெடிப்பைக் காண்கிறாயா? அதனை நீ ஒருபோதும் காணமுடியாது. நிச்சயமாக உறுதியான, மிகச்சிறந்த படைப்புகளாகவே நீ அவற்றைக் காண்பாய்.

(4) 67.4. பின்னர் மீண்டும் மீண்டும் உன் பார்வையை செலுத்திப் பார். வானத்தைப் படைத்ததில் உன் பார்வை எந்த குறைபாட்டையும் காணாமல், பார்த்துக் களைத்துப் போனவையாக இழிவடைந்து உன் பக்கம் திரும்பும்.

(5) 67.5. நாம் கீழ் வானத்தை பிரகாசமான நட்சத்திரங்களைக் கொண்டு அலங்கரித்துள்ளோம். அந்த நட்சத்திரங்களை திருட்டுத்தனமாக ஒட்டுக்கேட்கும் ஷைத்தான்களை நோக்கி எறியப்படும் தீப்பந்தங்களாகவும் ஆக்கினோம். அவை அந்த ஷைத்தான்களை எறித்துவிடுகிறது. மறுமையில் கொழுந்து விட்டெரியும் நரக வேதனையை நாம் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ளோம்.

(6) 67.6. தங்கள் இறைவனை நிராகரித்தவர்களுக்கு மறுமை நாளில் எரிந்துகொண்டிருக்கும் நரக வேதனை காத்திருக்கின்றது. அவர்கள் திரும்பும் இடம் மிகவும் மோசமான திரும்புமிடமாகும்.

(7) 67.7. அவர்கள் நரகத்தில் வீசப்பட்டால் பானை கொதிப்பது போன்று கொதித்துக் கொண்டிருக்கும் பயங்கரமான கர்ஜனையை அதில் செவியுறுவார்கள்.

(8) 67.8. அது தன்னில் பிரவேசிப்பவர்களின் மீதுள்ள கடுமையான கோபத்தால் தனித்தனியாகிவிடுவது போலத் தோன்றும். அதற்குரியவர்களில் ஒரு கூட்டம் அதில் எறியப்படும்போதெல்லாம் அங்கு நியமிக்கப்பட்டுள்ள வானவர்கள் அவர்களிடம் பரிகாசமாக கேட்பார்கள்: “உலகில் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு அச்சுறுத்தக்கூடிய ஒரு தூதர் உங்களிடம் வரவில்லையா?”

(9) 67.9. நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “ஆம். அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு அச்சுறுத்தக்கூடிய தூதர் எங்களிடம் வந்தார். நாங்கள் அவரைப் பொய்ப்பித்தோம். நாங்கள் அவரிடம் கூறினோம்: “அல்லாஹ் எந்த வஹியையும் இறக்கவில்லை. -தூதர்களே!- நீங்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள்.”

(10) 67.10. மேலும் நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “நாங்கள் பயன்பெறும் நோக்கத்துடன் அதனை செவியேற்றிருந்தால் அல்லது அசத்தியத்திலிருந்து சத்தியத்தைப் பிரித்துப் பார்ப்பவர்களைப் போன்று அதனை விளங்கியிருந்தால் நாங்கள் நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம். மாறாக நாங்கள் தூதர்களின்மீது நம்பிக்கைகொண்டு அவர்கள் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தி சுவனவாசிகளில் ஆகியிருப்போம்.

(11) 67.11. அவர்கள் தாங்கள் நிராகரித்ததையும் பொய்ப்பித்ததையும் ஒத்துக்கொள்வார்கள். அவர்கள் நரகத்திற்கு உரியவர்களாகிவிடுவார்கள். ஆகவே நரகவாசிகள் (அல்லாஹ்வின் அருளைவிட்டும்) தூரமாகட்டும்.

(12) 67.12. நிச்சயமாக அல்லாஹ்வை தனது தனிமைகளின் போது அஞ்சுவர்களுக்கு பாவமன்னிப்பும் சுவனம் என்னும் மகத்தான கூலியும் உண்டு.

(13) 67.13. -மனிதர்களே!- நீங்கள் மறைமுகமாகப் பேசுங்கள் அல்லது வெளிப்படையாகப் பேசுங்கள். அல்லாஹ் அவற்றை அறிவான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் உள்ளங்களிலுள்ளவற்றையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(14) 67.14. படைப்புகள் அனைத்தையும் படைத்தவன் இரகசியத்தையும் அதைவிட மறைவானதையும் அறிய மாட்டானா என்ன? அவன் தன் அடியார்களைக் குறித்து நுட்பமாக அறிந்தவன். அவர்களின் விவகாரங்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(15) 67.15. அவனே உங்களுக்காக பூமியை வசிப்பதற்கேற்ப இடமாக ஆக்கியுள்ளான். அதன் ஓரங்களில் செல்லுங்கள். அதில் அவன் உங்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள உணவை உண்ணுங்கள். நீங்கள் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் அவன் பக்கம் மட்டுமே மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள்.

(16) 67.16. மேலே இருக்கும் அல்லாஹ் வாழ்வதற்கு ஏற்றதாக இருந்த பூமியை காரூனுக்குக் கீழ் பிளந்தது போன்று உங்களுக்குக் கீழும் பூமியைப் பிளந்துவிடுவான் என்பதைக் குறித்து நீங்கள் அச்சமற்று இருக்கின்றீர்களா? அப்போது உறுதியாக இருந்த பூமி ஆட்டம் கண்டுவிடும்.

(17) 67.17. அல்லது வானத்தில் இருக்கும் அல்லாஹ் லூத்தின் சமூகத்தின்மீது அனுப்பியதுபோன்று உங்கள்மீதும் கல்மழையைப் பொழியச் செய்வான் என்பதைக்குறித்து அச்சமற்று இருக்கின்றீர்களா? என் வேதனையைக் கண்ணால் காணும்போது உங்களை நான் எச்சரித்ததை அறிந்துகொள்வீர்கள். ஆனால் வேதனையைக் கண்ட பிறகு அதன் மூலம் உங்களால் பயன்பெறவே முடியாது.

(18) 67.18. இந்த இணைவைப்பாளர்களுக்கு முன்னரும் பல சமூகங்கள் நிராகரித்தன. அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தபோது அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது இறங்கியது. அவர்களுக்கு எனது எச்சரிக்கை எவ்வாறு இருந்தது? அது மிகவும் கடுமையான எச்சரிக்கையாக இருந்தது.

(19) 67.19. இந்த பொய்ப்பிப்பாளர்கள் தங்களுக்கு மேலே அணிஅணியாக சில வேளை தனது இறக்கைகளை விரித்தும் மறுதடவை சேர்த்தும் பறந்துகொண்டிருக்கும் பறவைகளைப் பார்க்கவில்லையா? அவற்றை பூமியில் விழுந்துவிடாமல் அல்லாஹ்தான் தடுத்துவைத்துள்ளான். நிச்சயமாக அவன் ஒவ்வொன்றையும் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(20) 67.20. -நிராகரிப்பாளர்களே!- அல்லாஹ் உங்களைத் தண்டிக்க நாடினால் அவனுடைய வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் எந்த படையும் உங்களுக்கு இல்லை. நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஷைத்தான் அவர்களை ஏமாற்றிவிட்டான். அவனால் அவர்களும் ஏமாந்து விட்டனர்.

(21) 67.21. அல்லாஹ் உங்களுக்கு அளிக்கும் வாழ்வாதாரத்தைத் தடுத்துவிட்டால் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவர் யாரும் இல்லை. ஆனாலும் நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் பிடிவாதத்திலும் கர்வத்திலும் சத்தியத்தை விட்டும் தவிர்ந்து கொள்வோராகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

(22) 67.22. முகங்குப்புற நடந்து செல்பவன் -இணைவைப்பாளன்- நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான வழியில் சீராகச் செல்லும் நம்பிக்கையாளனா?

(23) 67.23. -தூதரே!- நீர் இந்த பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். நீங்கள் செவியேற்பதற்கு செவிகளையும் பார்ப்பதற்கு கண்களையும் விளங்கிக் கொள்வற்கு உள்ளங்களையும் அவன் உங்களுக்கு அமைத்துள்ளான். ஆயினும் அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

(24) 67.24. -தூதரே!- இந்த பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் பூமியில் உங்களைப் பரவச் செய்தான். உங்களின் சிலைகள் எதையும் படைக்கவில்லை. மறுமை நாளில் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் நீங்கள் அவனிடம் மட்டுமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள். உங்கள் சிலைகளிடமல்ல. எனவே நீங்கள் அவனையே அஞ்சுங்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்.

(25) 67.25. மீண்டும் எழுப்பப்படுவதை பொய்ப்பிப்பவர்கள் அது சாத்தியமற்றது என நினைத்து கூறுகிறார்கள்: “-முஹம்மதே!- நீரும் உம் தோழர்களும் நிச்சயமாக அந்த நாள் வரும் என்ற உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் வாக்களிக்கும் (மறுமை) எப்போது எங்களிடம் வரும்?

(26) 67.26. -தூதரே!- நீர் கூறுவீராக: “மறுமை குறித்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அது எப்போது நிகழும் என்பதை அவனைத்தவிர வேறு யாரும் அறிய மாட்டார். நான் உங்களுக்கு தெளிவாக எச்சரிப்பவன்தான்.”

(27) 67.27. அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிறைவேறி அவர்கள் மறுமை நாளில் வேதனையை அருகில் காணும்போது அல்லாஹ்வை நிராகரித்தவர்களின் முகங்கள் கருத்து மாற்றமடைந்து விடும். அவர்களிடம் கூறப்படும்: “இதைத்தான் நீங்கள் உலகில் விரைவாக வேண்டிக் கொண்டிருந்தீர்கள்.”

(28) 67.28. -தூதரே!- பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு மறுப்பாகக் கூறுவீராக: “எனக்குக் கூறுங்கள், அல்லாஹ் எனக்கு மரணத்தை அளித்துவிட்டால் அல்லது என்னுடன் இருக்கும் நம்பிக்கையாளர்களை மரணிக்கச் செய்துவிட்டால் அல்லது எங்கள் மீது கருணைகொண்டு எமது தவணைகளைப் பிற்படுத்தினால், நிராகரிப்பாளர்களை வேதனைமிக்க தண்டனையிலிருந்து யார்தான் காப்பாற்ற முடியும்? ஒருவரும் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற முடியாது.

(29) 67.29. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களைத் தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று அழைப்பவன் அளவிலாக் கருணையாளன். நாங்கள் அவன் மீதே நம்பிக்கைகொண்டோம். எங்களின் எல்லா விவகாரங்களிலும் நாங்கள் அவனை மட்டுமே சார்ந்துள்ளோம். நிச்சயமாக நீங்கள் யார் நேரான வழியில் யார் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார்கள் என்பதை விரைவில் -சந்தேகம் இல்லாமல்-அறிந்துகொள்வீர்கள்.

(30) 67.30. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: நீங்கள் எனக்குக் கூறுங்கள், நீங்கள் பருகும் நீர் நீங்கள் எடுக்க முடியாத அளவு பூமியின் ஆழத்திற்குச் சென்றுவிட்டால் அதிகமாக ஓடக்கூடிய நீரை உங்களுக்கு வேறு யார் கொண்டுவருவார்? அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.