36 - ஸூரா யாஸீன் ()

|

(1) 36.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

(2) 36.2. அல்லாஹ் குர்ஆனைக்கொண்டு சத்தியமிட்டுக் கூறுகிறான். அந்த குர்ஆன் எப்படிப்பட்டதென்றால் அதன் வசனங்கள் நுணுக்கமானவை. அதன் முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் அசத்தியம் அதனை அடைய முடியாது.

(3) 36.3. -தூதரே!- நிச்சயமாக நீர் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதன்பால் மனிதர்களை அழைப்பதற்காக அனுப்பப்பட்ட தூதர்களில் உள்ளவராவீர்.

(4) 36.4,5. நீர் நேரான வழிமுறையில் இருக்கின்றீர். இந்த நேரான வழிமுறை யாவற்றையும் மிகைத்த, யாராலும் அவனை மிகைக்க முடியாத, நம்பிக்கையாளர்களான தன் அடியார்கள் மீது மிகுந்த கருணை காட்டுகின்ற உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்.

(5) 36.4,5. நீர் நேரான வழிமுறையில் இருக்கின்றீர். இந்த நேரான வழிமுறை யாவற்றையும் மிகைத்த, நம்பிக்கைகொண்ட தன் அடியார்கள்மீது மிகுந்த கருணை காட்டுகின்ற உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்.

(6) 36.6. நாம் உம்மீது அதனை இறக்கியது, இதற்கு முன்னர் எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர்கள் எவரும் வந்திராத ஒரு சமூகமான அரேபிகளுக்கு நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் ஓரிறைக்கொள்கை மற்றும் ஈமானை விட்டும் அலட்சியமாக இருக்கிறார்கள். இவ்வாறே எச்சரிக்கை செய்யப்படாத ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுக்கு அதனை நினைவுபடுத்த தேவையான தூதர்களை ஏற்படுத்துகின்றோம்.

(7) 36.7. அல்லாஹ்விடமிருந்து தூதரின் நாவினால் சத்தியம் அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் நம்பிக்கைகொள்ளாமல் நிராகரிப்பில் நிலைத்திருக்கும் இவர்களில் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர் கொண்டுவந்த சத்தியத்தின்படி செயல்படுவதுமில்லை.

(8) 36.8. இதில் அவர்களுக்கான உதாரணம், தங்களின் கழுத்துகளில் விலங்குகளை மாட்டிக் கொண்டவர்களைப் போலாவர். அவர்களின் கைகள் முகவாய்க்கட்டைகளுக்குக் கீழே கழுத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் வானத்தின்பால் தங்களின் தலையை உயர்த்தி வைக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் அதனைத் தாழ்த்த முடியாது. இவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாதவாறு தடுக்கப்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் அவனுக்கு அடிபணிய மாட்டார்கள். அவனுக்காக வேண்டி அவர்கள் தங்கள் தலைகளை தாழ்த்தவும் மாட்டார்கள்.

(9) 36.9. அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவாறு அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும் பின்னால் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் சத்தியத்தை பார்க்க முடியாதவாறு அவர்களின் பார்வைகளை மூடியுள்ளோம். எனவே பயனடையும் விதத்தில் அவர்கள் பார்க்கமாட்டார்கள். நிராகரிப்பில் அவர்கள் பிடிவாதமாகவும் நிலையாகவும் இருப்பது நிரூபனமான பின்னால்தான் அது ஏற்பட்டது.

(10) 36.10. -முஹம்மதே!- பிடிவாதம் கொண்ட இந்த நிராகரிப்பாளர்களுக்கு நீர் சத்தியத்தை கொண்டு எச்சரிக்கை செய்தாலும் அல்லது எச்சரிக்கை செய்யாவிட்டாலும் சரியே. அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நீர் கொண்டுவந்ததை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

(11) 36.11. நிச்சயமாக இந்த குர்ஆனை ஏற்றுக்கொண்டு, அதிலுள்ளதைப் பின்பற்றி யாரும் பார்க்காதவாறு தனிமையில் தன் இறைவனை அஞ்சியவர்தான் உம்முடைய எச்சரிக்கையின் மூலம் உண்மையாகப் பயனடைவார்கள். இந்த பண்புகளைப் பெற்றவர்களுக்கு, அல்லாஹ் அவர்களின் பாவங்களை அழித்து அவர்களை மன்னிப்பதோடு மறுமையில் சுவனத்தில் நுழைதல் என்னும் அவர்கள் எதிர்பார்க்கும் மகத்தான வெகுமதி கிடைக்கும் என்ற நற்செய்தியைக் கூறுவீராக.

(12) 36.12. நிச்சயமாக மறுமை நாளில் விசாரணை செய்வதற்காக அவர்களை எழுப்புவதன் மூலம் மரணித்தவர்களை நாம் உயிர்ப்பிப்போம். அவர்கள் இவ்வுலக வாழ்வில் செய்கின்ற நற்செயல்களையும் தீய செயல்களையும் நாம் பதிவு செய்கின்றோம். அவர்கள் இவ்வுலக வாழ்வில் விட்டுச்செல்கின்ற நிரந்தர தர்மம் போன்ற நிலையான நற்செயல்களையும் அல்லது நிராகரிப்புப் போன்ற நிலையான தீய செயல்களையும் நாம் பதிவு செய்கின்றோம். நாம் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான புத்தகத்திலே அனைத்தையும் கணக்கிட்டு வைத்துள்ளோம்.

(13) 36.13. -தூதரே!- பிடிவாதம் கொண்ட இந்த பொய்ப்பிப்பவர்கள் படிப்பினை பெறும்பொருட்டு அவர்களுக்கு ஒரு உதாரணத்தை எடுத்துரைப்பீராக. அது தூதர்கள் வந்த ஒரு ஊர் மக்களைக் குறித்த சம்பவமாகும்.

(14) 36.14. நாம் அவர்களிடம் முதலில், அவர்களை அல்லாஹ்வை ஒருமைப்படுத்துமாறும் அவனை வணங்குமாறும் அழைக்கக்கூடிய இரு தூதர்களை அனுப்பியபோது அவர்கள் இருவரையும் அவர்கள் பொய்ப்பித்தார்கள். எனவே நாம் அவர்களுடன் மூன்றாவது ஒரு தூதரை அனுப்பி அவர்கள் இருவரையும் வலுப்படுத்தினோம். மூன்று தூதர்களும் அந்த ஊர் மக்களிடம் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் -மூவரும்- அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுடைய மார்க்கத்தையே பின்பற்ற வேண்டும் என்பதன் பக்கம் உங்களை அழைக்கக்கூடிய அல்லாஹ்வின் தூதர்களாவோம்.”

(15) 36.15. அந்த ஊர் மக்கள் தூதர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எங்களைவிட உங்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. அளவில்லாக் கருணையாளன் உங்கள் மீது எதையும் இறக்கி வைக்கவில்லை. உங்களது இக்கூற்றில் நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுபவர்களே அன்றி வேறில்லை.”

(16) 36.16. ஊர் மக்களின் பொய்ப்பித்தலுக்கு பதிலாக மூன்று தூதர்களும் கூறினார்கள்: “-ஊர்மக்களே!- நிச்சயமாக நாங்கள் உங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர்கள்தாம் என்பதை எங்களின் இறைவன் நன்கறிவான். எங்களுக்கு ஆதாரமாக அமைவதற்கு அதுவே போதுமானது.

(17) 36.17. எங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை உங்களிடம் தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர எங்கள் மீது வேறு எந்த கடமையும் இல்லை. உங்களுக்கு நேர்வழியளிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை.”

(18) 36.18. அந்த ஊர் மக்கள் தூதர்களிடம் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களை துர்ச்சகுனமாக கருதுகின்றோம். நீங்கள் ஓரிறைக் கொள்கையின்பால் எங்களை அழைப்பதை விட்டும் விலகிக் கொள்ளவில்லையெனில் கல்லால் அடித்து உங்களைக் கொன்று விடுவோம். திட்டமாக எங்களிடமிருந்து வேதனை மிக்க தண்டனையும் பெற்றுக்கொள்வீர்கள்.”

(19) 36.19. தூதர்கள் அவர்களுக்கு மறுப்பாகக் கூறினார்கள்: “உங்களின் துர்ச்சகுனம் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதர்களை பின்பற்றாமல் விட்ட காரணத்தினால் ஆகும். நாம் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுவதையா துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்? மாறாக நீங்கள் நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களில் ஈடுபட்டு வரம்புமீறும் மக்களாக இருக்கின்றீர்கள்.”

(20) 36.20. தனது சமூகம் தூதர்களை பொய்ப்பித்து அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் விபரீதத்தைப் பயந்ததனால் ஊரின் தூரமான இடத்திலிருந்து ஒருவர் விரைவாக வந்து கூறினார்: “என் சமூகத்தினரே! இத்தூதர்கள் கொண்டுவந்ததைப் பின்பற்றுங்கள்.

(21) 36.21. -என் சமூகத்தினரே!- தாம் கொண்டுவந்ததை கூறுவதற்காக உங்களிடம் எந்த கூலியையும் எதிர்பார்க்காத இந்த தூதர்களைப் பின்பற்றுங்கள். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹியின் மூலம் எடுத்துரைக்கும் விஷயங்களில் நேர்வழிபெற்றவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு இருப்பவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள்.”

(22) 36.22. நலம் நாடிய அந்த மனிதர் தொடர்ந்து கூறினார்: “என்னைப் படைத்த அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் என்னைத் தடுப்பது எது? உங்களைப் படைத்த இறைவனை வணங்குவதை விட்டும் உங்களைத் தடுப்பது எது? கூலி கொடுக்கப்படுவதற்காக மறுமை நாளில் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.

(23) 36.23. என்னைப் படைத்த அல்லாஹ்வை விடுத்து நான் அநியாயமாக மற்றவர்களை தெய்வங்களாக்கிக் கொள்வேனா? அளவிலாக் கருணையாளன் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்க நாடினால் இந்த தெய்வங்களின் பரிந்துரைகள் எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவை எனக்கு பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தி பெறாது. நான் நிராகரித்த நிலையிலேயே இறந்தால் அல்லாஹ் எனக்கு நாடியிருக்கும் தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்ற அவை சக்தி பெறாது.

(24) 36.24. நிச்சயமாக நான் அவற்றை அல்லாஹ் அல்லாத தெய்வங்களைாக எடுத்துக்கொண்டால், வணக்கத்திற்குத் தகுதியானவனை வணங்குவதை விட்டுவிட்டு தகுதியற்றவர்களை வணங்கி தெளிவான வழிகேட்டில் வீழ்ந்து விடுவேன்.

(25) 36.25. -என் சமூகமே!- நிச்சயமாக நான் என் இறைவனும் உங்கள் அனைவரின் இறைவனுமான அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டேன். எனவே நான் கூறுவதை காதுகொடுத்துக் கேளுங்கள். உங்களின் கொலை அச்சுறுத்தலை நான் பொருட்படுத்த மாட்டேன்.” அவர்கள் அந்த மனிதரைக் கொன்றுவிட்டார்கள். அல்லாஹ் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான்.

(26) 36.26,27. அவரது வீரமரணத்தின் பின் அந்த மனிதரைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு அவரிடம், “சுவனத்தில் நுழைந்து விடுவீராக” என்று கூறப்பட்டது. அவர் சுவனத்தில் நுழைந்து அதிலுள்ள அருட்கொடைகளைக் கண்டவுடன் ஆசை கொண்டவராகக் கூறினார்: “என்னை பொய்ப்பித்து கொலை செய்த என் சமூகம் எனக்குக் கிடைத்த பாவமன்னிப்பையும் என் இறைவன் அளித்த கண்ணியத்தையும் அறிந்திருக்க வேண்டுமே! நான் நம்பிக்கைகொண்டது போல அவர்களும் நம்பிக்கைகொண்டிருப்பார்களே! நான் பெற்ற வெகுமதியை அவர்களும் பெற்றிருப்பார்களே!

(27) 36.26,27. தம் சமூகத்தினரால் கொல்லப்பட்ட அந்த மனிதரைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு அவரிடம், “சுவனத்தில் நுழைந்து விடுவீராக” என்று கூறப்பட்டது. அவர் சுவனத்தில் நுழைந்து அதிலுள்ள அருட்கொடைகளைக் கண்டவுடன் ஆசை கொண்டவராகக் கூறினார்: “என்னை நிராகரித்து கொலை செய்த என் சமூகம் எனக்குக் கிடைத்த பாவமன்னிப்பையும் என் இறைவன் அளித்த கண்ணியத்தையும் அறிந்திருக்க வேண்டுமே! நான் நம்பிக்கைகொண்டதுபோல அவர்களும் நம்பிக்கைகொண்டிருப்பார்களே! நான் பெற்ற வெகுமதியை அவர்களும் பெற்றிருப்பார்களே!

(28) 36.28. அவரை பொய்ப்பித்து கொலை செய்த அந்த சமூகத்தை அழிப்பதற்கு வானத்திலிருந்து வானவர்களின் ஒரு படையை இறக்கவில்லை. முன்சென்ற சமுதாயங்களை அழித்த போதும் வானவர்களை நாம் இறக்குவோராக இருக்கவில்லை. அவர்களின் விவகாரம் நம்மிடத்தில் அதைவிட எளிதானது. எனவே தண்டிக்கும் வானவர்களை இறக்காமல் வானத்திலிருந்து ஒரு பெரும் சப்தத்தை இறக்கி அவர்கள் அழியவேண்டுமென நாம் முடிவுசெய்திருந்தோம்.

(29) 36.29. அவரது சமுதாயத்தின் அழிவின் வரலாறு நாம் அவர்கள் மீது அனுப்பிய ஒரு சப்தம் மாத்திரமே. அதனால் அவர்கள் அனைவரும் செத்து மடிந்தார்கள். அவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அவர்கள் எரிந்து பின்னர் அணைந்த நெருப்பைப் போன்று அடையாளமில்லாமல் ஆகிவிட்டார்கள்.

(30) 36.30. பொய்ப்பித்த அடியார்களின் மீது ஏற்பட்ட இழப்பே! மறுமை நாளில் அவர்கள் வேதனையைக் காணும்போதும் வருத்தப்படுவார்கள். இதற்கான காரணம், உலகில் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வரும் ஒவ்வொரு தூதரையும் அவர்கள் பரிகாசமும் கேலியும் செய்து கொண்டிருந்ததாகும். எனவேதான் அவர்கள் அல்லாஹ்வின் விடயத்தில் செய்த குறைகளுக்காக மறுமை நாளில் கைசேதப்படுவதே அவர்களது முடிவாகும்.

(31) 36.31. தூதர்களைப் பரிகாசம் செய்யும் இந்த பொய்ப்பிப்பவர்கள் தங்களுக்கு முந்தைய சமூகங்களைக் கொண்டு படிப்பினை பெறவில்லையா? அவர்கள் மரணித்துவிட்டார்கள். இனி மீண்டும் உலகத்தின் பக்கம் ஒருபோதும் திரும்ப மாட்டார்கள். மாறாக தாங்கள் செய்த செயல்களின் பக்கம் அவர்கள் சென்றுவிட்டார்கள். அவற்றிற்கேற்ப அல்லாஹ் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(32) 36.32. மறுமை நாளில் அனைத்து சமூகங்களும் விதிவிலக்கின்றி மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்ட பிறகு அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.

(33) 36.33. மறுமையில் மீண்டும் எழுப்பப்படுவதை பொய்ப்பிப்பவர்களுக்கு அது உண்மையே என்பதற்கான ஒரு சான்றுதான் இந்த வரண்ட பூமியாகும். அதன் மீது நாம் வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதில் பலவகையான தாவரங்களையும் மனிதர்கள் உண்பதற்காக தானியங்களையும் விளையச் செய்கின்றோம். மழையை இறக்கி தாவரங்களை முளைக்கச் செய்வதன் மூலம் இந்த பூமியை உயிர்ப்பித்தவன் இறந்தவர்களை உயிர்ப்பித்து, எழுப்புவதற்கு ஆற்றலுடையவன்.

(34) 36.34. நாம் மழையை இறக்கிய இந்த பூமியில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உருவாக்கினோம். அவற்றில் அவற்றுக்கு நீர்பாய்ச்சும் நீருற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம்.

(35) 36.35. அந்த தோட்டங்களின் கனிகளிலிருந்து அல்லாஹ் அளித்த அருட்கொடையை மனிதர்கள் உண்பதற்காகத்தான். அதில் அவர்களின் எந்த முயற்சியும் இருக்கவில்லை. இவையனைத்தும் அவர்களுக்கு அருட்கொடையாக அளித்த அல்லாஹ்வுக்கு, அவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர்கள் மீது நம்பிக்கைகொண்டு அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

(36) 36.36. பல வகையான தாவரங்களையும் மரங்களையும் மனிதர்களையும் நீரிலும் நிலத்திலும் மனிதர்கள் அறியாத வேறுபல படைப்பினங்களையும் ஆண், பெண் என இணைகளாகப் படைத்த இறைவன் பரிசுத்தமானவன்.

(37) 36.37. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதற்கான சான்றுகளில் ஒன்று: “நிச்சயமாக நாம் இரவிலிருந்து பகலைக் கழற்றி இரவு சென்று பகல் வருவதன் மூலம் நாம் வெளிச்சத்தைப் போக்கி விடுகின்றோம். பகல் சென்ற பிறகு இருளைக் கொண்டுவந்து விடுகின்றோம். மனிதர்கள் இருளில் நுழைந்துவிடுகிறார்கள்.”

(38) 36.38. அவர்களுக்கு அல்லாஹ்வின் ஒருமைக்கான சான்றுகளில் ஒன்றுதான்: இந்தச் சூரியன். அது தனக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு நிர்ணயிக்கப்பட்டதை அல்லாஹ்வே அறிவான். அது அதனை மீறாது. இது யாவற்றையும் மிகைத்த, அவனை யாரும் மிகைக்க முடியாத அறிந்தவனான அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட விதியாகும். தனது படைப்பினங்களின் எந்த விடயமும் அவனுக்கு மறைவானதல்ல”

(39) 36.39. அவர்களுக்கு அல்லாஹ்வின் ஒருமைக்கான சான்றுகளில் ஒன்றுதான் இந்த சந்திரனாகும். நாம் அதற்கு ஒவ்வொரு இரவும் ஒரு நிலையை நிர்ணயித்துள்ளோம். அது சிறியதாகத் தொடங்கி பின்னர் பெரிதாகி பின்னர் காய்ந்து வளைந்து பழமையடைந்த மஞ்சள் நிற பேரீச்சங் குலைத் தண்டைப் போன்று சிறியதாகி விடுகிறது.

(40) 36.40. சூரியன், சந்திரன், இரவு, பகல் ஆகிய சான்றுகள் அல்லாஹ்வின் நிர்ணயத்தைக்கொண்டு முடிவுசெய்யப்பட்டதாகும். அவை தமக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாது. சூரியன், சந்திரனின் பாதையை மாற்ற அல்லது அதன் ஒளியைப் போக்க சந்திரனைப் பிடிக்க முடியாது. இரவு பகலின் நேரம் முடிவடைவதற்கு முன்னரே அதில் நுழைந்து அதனை முந்த முடியாது. வசப்படுத்தப்பட்டுள்ள இந்த படைப்பினங்களுக்கும் ஏனைய கோள்களுக்கும் அல்லாஹ்வின் நிர்ணயத்தினாலும் பாதுகாப்பினாலும் ஏற்படுத்தப்பட்ட பிரத்யேகமான பாதைகள் உள்ளன.

(41) 36.41. அவர்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதற்கும் அடியார்களின் மீது பொழிந்த அருட்கொடைக்குமான சான்றுகளில் ஒன்று : நாம் ஆதமுடைய சந்ததியினரை நூஹின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்திலிருந்து அல்லாஹ்வின் படைப்பினங்களால் நிரம்பிய கப்பலில் ஏற்றி காப்பாற்றினோம். அல்லாஹ் ஒவ்வொரு உயிரினத்திலிருந்தும் ஒரு ஜோடியை அதில் ஏறச் செய்தான்.

(42) 36.42. அவர்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதற்கும் தன் அடியார்களின் மீது பொழிந்த அருட்கொடைக்குமான சான்றுகளில் ஒன்று: “நிச்சயமாக நாம் அவர்களுக்காக நூஹின் கப்பலைப் போன்று வாகனங்களையும் படைத்துள்ளோம்.”

(43) 36.43. நாம் அவர்களை மூழ்கடிக்க நாடியிருந்தால் மூழ்கடித்திருப்போம். நாம் மூழ்கடிக்க நாடினால் யாராலும் அவர்களுக்கு உதவ முடியாது. நமது கட்டளை மற்றும் விதிப்பிரகாரம் அவர்கள் மூழ்கினால் யாரும் அவர்களைக் காப்பாற்ற முடியாது.

(44) 36.44. ஆயினும் அவர்கள் படிப்பினை பெற்று நம்பிக்கைகொள்ளும் பொருட்டு அவர்கள் குறிப்பிட்ட தவணை வரை தாண்டாமல் அனுபவிப்பதற்காக நாம் அவர்களை மூழ்கடிக்காமல் காப்பாற்றி அவர்களை மீளச் செய்து கருணை காட்டினாலே அன்றி.

(45) 36.45. புறக்கணிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம், “அல்லாஹ் உங்களின் மீது கருணை காட்டும் பொருட்டு வரப்போகும் மறுமை விடயங்களையும் அதன் பயங்கரங்களையும் நீங்கள் விட்டுச்செல்லும் உலகத்தையும் அஞ்சிக்கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டால் அதன்படி செயல்படாமல் இருக்கிறார்கள். மாறாக அதனைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்து விடுகிறார்கள்.

(46) 36.46. பிடிவாதம் கொண்ட இந்த இணைவைப்பாளர்களிடம் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை அறிவிக்கக்கூடிய சான்றுகள் வரும்போதெல்லாம் அவற்றைக்கொண்டு படிப்பினை பெறாமல் புறக்கணித்து விடுகிறார்கள்.

(47) 36.47. இந்த பிடிவாதக்காரர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவி செய்யுங்கள்” என்று கூறப்பட்டால் “நாங்கள் அவர்களுக்கு உணவளிப்பதா? அல்லாஹ் அவர்களுக்கு உணவளிக்க நாடியிருந்தால் உணவளித்திருக்க மாட்டானா? நாங்கள் அவனுடைய விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட மாட்டோம். -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் சத்தியத்தைவிட்டும் வெகுதூரமாகி தெளிவான தவறிலே இருக்கிறீர்கள்” என்று மறுத்துக் கூறுகிறார்கள்.

(48) 36.48. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை சாத்தியமற்றதாகக் கருதி அதனை பொய்ப்பித்து அதனை மறுக்கும் நிராகரிப்பாளர்கள் கேட்கிறார்கள்: “-நம்பிக்கையாளர்களே!- நீங்கள் உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நிச்சயமாக அவ்வாறு எழுப்பப்படுவது எப்போது நிகழும்? என்று கூறுங்கள்.”

(49) 36.49. மீண்டும் எழுப்பப்படுவதை சாத்தியமற்றதாகக் கருதும் இந்த பொய்ப்பிப்பாளர்கள் சூர் ஊதப்படுவதில் முதலாவது முறையாக ஊதப்படுவதையே எதிர்பார்க்கிறார்கள். விற்றல், வாங்குதல் நீர்ப்பாய்ச்சுதல், மேய்த்தல் போன்ற தங்களின் உலக அலுவல்களில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே இந்தப் பேரொலி அவர்களைத் தாக்கிவிடும்.

(50) 36.50. இந்தப் பேரொலியை திடீரென எதிர்கொள்ளும் அவர்களால் ஒருவருக்கொருவர் வஸிய்யத் செய்து கொள்ளவோ, தங்களின் வீடுகளுக்கு, குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல முடியாது. மாறாக தங்களின் இந்த காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்கள் மரணித்துவிடுவார்கள்.

(51) 36.51. மீண்டும் எழுப்பப்படுவதற்காக இரண்டாவது முறை சூர் ஊதப்படும் போது அவர்கள் தங்களின் மண்ணறைகளிலிருந்து விசாரணைக்காகவும் கூலிபெறுவதற்காகவும் விரைவாக வெளிப்பட்டு வருவார்கள்.

(52) 36.52. மீணடும் எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இந்த நிராகரிப்பாளர்கள் வருத்தப்பட்டுக் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட இழப்பே! எங்களின் மண்ணறைகளிலிருந்து எங்களை உயிர்பித்தவன் யார்?” அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கப்படும்: “இதுதான் அல்லாஹ் அளித்த வாக்குறுதியாகும். நிச்சயமாக அது நிகழ்ந்தே தீரும். அதைப்பற்றி தூதர்கள் எடுத்துரைத்ததில் அவர்கள் உண்மையே கூறினார்கள்.

(53) 36.53. மண்ணறைகளிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது இரண்டாவது முறையாக சூர் ஊதப்பட்டதன் அடையாளமாக நிகழும். அப்போது படைப்புகள் அனைத்தும் விசாரணைக்காக நம்மிடம் கொண்டு வரப்படுவார்கள்.

(54) 36.54. அந்த நாளில் நியாயமாக தீர்ப்பளிக்கப்படும். -அடியார்களே!- உங்களின் தீமைகள் அதிகரிக்கப்பட்டோ, நன்மைகள் குறைக்கப்பட்டோ நீங்கள் சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களுக்கு நிறைவாக கூலி வழங்கப்படுவீர்கள்.

(55) 36.55. நிச்சயமாக சுவனவாசிகள் அந்த நாளில் தாங்கள் காணும் நிலையான அருட்கொடை மற்றும் மகத்தான வெற்றியினால் மற்றவர்களைப் பற்றி சிந்திக்க நேரமற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்தோராக அதில் திளைத்திருப்பார்கள்.

(56) 36.56. அவர்களும் அவர்களின் மனைவியரும் பசுமையான சுவனத்தின் நிழலில் கட்டிலின் மீது சாய்ந்திருப்பார்கள்.

(57) 36.57. அந்த சுவனத்தில் அவர்களுக்கு திராட்சை, அத்தி, மாதுளம் ஆகிய நல்ல பலவகையான பழங்களும் அவர்கள் விரும்பும் சுவையான அத்தனை இன்பங்களும் உண்டு. அவர்கள் வேண்டுவதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும்.

(58) 36.58. அந்த அருட்கொடைகளுக்கு மேலாக கருணை மிகுந்த இறைவனிடமிருந்து அவர்களுக்கு சலாமும் கூறப்படும். அவன் அவர்களுக்கு சலாம் கூறிவிட்டால் அவர்கள் அமைதியின் அனைத்து வடிவங்களையும் பெற்றுவிடுவார்கள். அவர்கள் மிக உயர்ந்த முகமனைப் பெறுவார்கள். அதற்கு மேலாக எந்த முகமனும் இல்லை.

(59) 36.59. மறுமை நாளில் இணைவைப்பாளர்களிடம் கூறப்படும்: “நம்பிக்கையாளர்களை விட்டு தனித்து நில்லுங்கள். அவர்களின் பண்புகளும் உங்களின் பண்புகளும் அவர்கள் பெறும் கூலியும் நீங்கள் பெறும் கூலியும் வேறுவேறாக இருப்பதால் அவர்கள் உங்களுடன் நிற்பது தகுதியற்றதாகும்.

(60) 36.60. ”ஆதமின் மக்களே! நீங்கள் நிராகரித்து பல வகையான பாவங்கள் புரிந்து ஷைத்தானுக்குக் கட்டுப்படாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகிரங்கமான பகைவனாவான்” என்று என் தூதர்களின் மூலம் ஏவி நான் உங்களுக்கு உறுதிமொழி வழங்கவில்லையா? தனது பகைமையைத் தெளிவாக வெளிப்படுத்தும் தனது எதிரிக்கு ஒரு அறிவாளி எவ்வாறு கட்டுப்படலாம்?!

(61) 36.61. -ஆதமின் மக்களே!- நீங்கள் என்னை மட்டுமே வணங்குங்கள். எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள். என்று உங்களுக்கு நான் ஏவியிருந்தேன். ஏனெனில் என்னை மட்டுமே வணங்கி எனக்குக் கட்டுப்படுவதுதான் என் திருப்தியின் பக்கமும் , சுவனத்தின் பக்கமும் கொண்டு செல்லும் நேரான வழியாகும். ஆயினும் நான் ஏவியபடி, உங்களிடம் உறுதிமொழி எடுத்தபடி நீங்கள் செயல்படவில்லை.

(62) 36.62. ஷைத்தான் உங்களில் அதிகமானோரை வழிகெடுத்துவிட்டான். இறைவனை மட்டுமே வணங்குமாறும் அவனுக்கு மட்டுமே கட்டுப்படுமாறும் உங்களின் பகிரங்க எதிரியான ஷைத்தானுக்குக் கட்டுப்படாமல் எச்சரிக்கையாக இருக்குமாறும் உங்களுக்குக் கட்டளையிடும் அறிவு உங்களுக்கு இருக்கவில்லையா?

(63) 36.63. நிராகரிப்பின் காரணமாக உலகில் உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம் இதுதான். அது உங்களை விட்டும் மறைவாக இருந்தது. இன்றைய தினம் நீங்கள் அதனை நேரடியாகக் காண்கிறீர்கள்.

(64) 36.64. உங்களின் உலக வாழ்வில் அல்லாஹ்வை நிராகரித்ததனால் இன்றைய தினம் அதில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவியுங்கள்.

(65) 36.65. இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிட்டு விடுவோம். தங்களின் நிராகரிப்பான செயல்கள் மற்றும் அவர்கள் செய்த பாவங்களை மறுத்து பேச முடியாத ஊமைகளாகி விடுவார்கள். அவர்கள் உலகில் செய்து கொண்டிருந்தது குறித்து அவர்களின் கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்து கொண்டிருந்த பாவங்கள், அதன்பால் நடந்து சென்றவைகள் குறித்து அவர்களின் கால்கள் நம்மிடம் சாட்சி கூறும்.

(66) 36.66. அவர்களின் பார்வையை நாம் போக்க நாடியிருந்தால் அதனைப் போக்கியிருப்போம். அவர்கள் பார்க்க முடியாமல் சென்றிருப்பார்கள். அவர்கள் சுவனத்தின்பால் செல்லும் பாதையைக் கடந்து செல்ல போட்டி போடுவார்கள் . அவர்களின் பார்வை பறிபோன நிலையில் அவர்களால் அதனை கடக்க முடியாது.

(67) 36.67. நாம் அவர்களின் தோற்றத்தை மாற்றி அவர்களை அவர்களின் இடத்திலேயே ஆக்க நாடியிருந்தால் அவர்களின் தோற்றத்தை மாற்றி அவர்களை அவர்களுடையே இடத்திலே ஆக்கியிருப்போம். அப்போது முன்னால் அல்லது பின்னால் செல்ல முடியாமல் அதே இடத்திலேயே இருந்துவிடுவார்கள்.

(68) 36.68. நாம் மனிதர்களில் யாருடைய வாழ்நாளை நீடிக்கிறோமோ அவர்களை பலவீனமான நிலைக்கு திரும்பச் செய்கின்றோம். அவர்கள் தமது சிந்தனைகளால் சிந்தித்து, நிச்சயமாக இந்த உலகம் நிரந்தரமானதல்ல. மறுமையின் வீடே நிரந்தரமான வீடு என்பதை உணர்ந்து கொள்ள மாட்டார்களா?

(69) 36.69. நாம் முஹம்மதுக்கு கவிதையை கற்றுக்கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதன்று. நிச்சயமாக அவர் கவிஞர் என நீங்கள் வாதிடுவது சரி என்பதற்கு கவிதை அவரது இயல்பு அல்ல. அவரது இயல்புக்கு அவசியமானதும் அல்ல. அவருக்கு நாம் கற்றுக்கொடுத்தது நினைவூட்டலும் சிந்திக்கக்கூடியவர்களுக்குத் தெளிவான குர்ஆனுமாகும்.

(70) 36.70. அது யாருடைய உள்ளம் அகவொளி பெற்று உயிருடன் உள்ளதோ அவருக்கு எச்சரிக்கை செய்வதற்காக. அவர் தான் அதனைக்கொண்டு பயனடைவார். (அது) நிராகரிப்பாளர்களின் மீது வேதனையை உறுதிப்படுத்துவதற்காகவும்தான். ஏனெனில், தூதர் அனுப்பப்பட்டு, அழைப்பு அவர்களை சென்றடைந்து அவர்களுக்கு எதிராக ஆதாரம் நிலைநாட்டப்பட்டுவிட்டது. சாட்டுப்போக்குக் கூறுவதற்கு எக்காரணமும் இல்லை.

(71) 36.71. நிச்சயமாக நாம் அவர்களுக்காக கால்நடைகளைப் படைத்துள்ளோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அந்த கால்நடைகளுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். தங்களின் நலன்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

(72) 36.72. நாம் அவற்றை அவர்களுக்கு வசப்படுத்தி கட்டுப்பட்டவையாக ஆக்கியுள்ளோம். அவற்றில் சிலவற்றின் முதுகுகளில் அவர்கள் சவாரி செய்கிறார்கள். தங்களின் சுமைகளை ஏற்றிச்செல்கிறார்கள். சிலவற்றின் மாமிசத்தை உண்கிறார்கள்.

(73) 36.73. அவற்றின் முதுகுகளில் சவாரி செய்வது, அவற்றின் இறைச்சியை உண்பது என்பவற்றைத் தவிர அவர்களுக்கு அவற்றில் இன்னும் பல பயன்களும் இருக்கின்றன. உதாரணமாக அவற்றின் தோல்கள், உரோமங்கள், முடி, பெறுமதி. அதிலிருந்து அவர்கள் விரிப்புகளையும் ஆடைகளையும் செய்கிறார்கள். அதிலே அவர்களுக்கு குடிபானமும் இருக்கிறது. அவற்றின் பாலை அருந்தவும் செய்கிறார்கள். அல்லாஹ் அவர்கள் மீது பொழிந்த இந்த அருட்கொடைகளுக்கும் இது அல்லாத எனையவற்றுக்கும் அவர்கள் நன்றிசெலுத்த மாட்டார்களா?

(74) 36.74. இணைவைப்பாளர்கள் தங்களுக்கு உதவி செய்யும்பொருட்டு அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை தெய்வங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவை அவர்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாத்து உதவும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் அவற்றை வணங்கி வழிபடுகின்றனர்.

(75) 36.75. அவர்கள் ஏற்படுத்திய அந்த தெய்வங்கள் தமக்குத் தாமே உதவிசெய்து கொள்ளவோ, தங்களை வணங்குபவர்களுக்கு உதவிசெய்யவோ சக்தி பெற மாட்டா. அவர்களும், அவர்கள் வணங்கிய சிலைகளும் வேதனையில் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் மற்றவர்களை விட்டு விலகி விடுவார்கள்.

(76) 36.76. -தூதரே!- “நிச்சயமாக நீர் தூதர் அல்ல, அல்லது நிச்சயமாக நீர் ஒரு கவிஞர்” என்று அவர்களின் கூறும் வார்த்தைகளும் எனைய அவதூறுகளும் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அவற்றில் மறைத்து வைத்திருப்பதையும் வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம். அவற்றில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை. அதற்கேற்ப நாம் அவர்களுக்குக் கூலி வழங்குவோம்.

(77) 36.77. மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் மனிதன் நிச்சயமாக நாம் அவனை விந்திலிருந்து படைத்தோம் என்பதைக் கவனிக்கவில்லையா? பின்னர் அவன் பல நிலைகளைக் கடந்து குழந்தையாகி வளர்ச்சியடைகிறான். பின்னர் அவன் கடும் தர்க்கம் புரிபவனாகி விடுகிறான். இதனை அவன் மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது சாத்தியம் என்பதற்கான ஆதாரமாகக் கருதவில்லையா?

(78) 36.78. உக்கிப்போன எலும்புகளை வைத்து, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை சாத்தியமற்றதாகக் கருதும் இந்த நிராகரிப்பாளன் அறியாமையில் ஆழ்ந்துவிட்டான். ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து படைக்கப்பட்டதை மறந்த நிலையில் அவன், ”இந்த எலும்புகளை மீண்டும் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.

(79) 36.79. -தூதரே!- நீர் அவனிடம் பதில் கூறுவீராக: “அந்த உக்கிப்போன எலும்புகளை முதன் முறையாகப் படைத்தவனே அவற்றை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். முதன் முறையாகப் படைத்தவனுக்கு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது இயலாத ஒன்றல்ல. அவன் தன் ஒவ்வொரு படைப்பைக் குறித்தும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(80) 36.80. -மனிதர்களே!- அவனே உங்களுக்காக ஈரமான, பச்சை நிற மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கினான். அதிலிருந்து நீங்கள் தீயை மூட்டுகிறீர்கள். -பச்சை மர நீரின் ஈரம் அதில் உள்ள எரியும் நெருப்பு- ஆகியவற்றுக்கிடையில் இந்த இரண்டு எதிரெதிர் விஷயங்களையும் ஒன்றிணைத்தவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்.

(81) 36.81. பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் படைத்தவன் மரணிக்கச் செய்ததன் பின் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன் இல்லையா? ஆம் நிச்சயமாக அவன் இதற்கு ஆற்றலுடையவன்தான். அவன்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்தவன். அவற்றைக் குறித்து நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(82) 36.82. நிச்சயமாக அல்லாஹ் ஏதேனும் ஒன்றை உருவாக்க நாடினால் ஆகு என்றுதான் கூறுகிறான். அவன் நாடிய அந்த விடயம் ஆகிவிடுகிறது. இவ்வாறுதான் அவன் நாடியவர்களை உயிர்ப்பிக்கிறான், மரணிக்கச் செய்கிறான், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். இவை அல்லாதவற்றையும் செய்கிறான்.

(83) 36.83. அல்லாஹ் இயலாதவன் என இணைவைப்பாளர்கள் இணைத்து கூறுவதை விட்டும் அவன் பரிசுத்தமானவன். படைப்புகள் அனைத்தின் அதிகாரமும் அவன் கைவசமே உள்ளது. அவன் தான் நாடியவாறு அவற்றைச் செயல்படுத்துகிறான். ஒவ்வொரு பொருளின் திறவுகோலும் அவன் கைவசமே உள்ளது. மறுமை நாளில் நீங்கள் அவன் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.