48 - ஸூரா அல்பத்ஹ் ()

|

(1) 48.1. -தூதரே!- நிச்சயமாக நாம் உமக்கு ஹுதைபிய்யா உடன்படிக்கை மூலம் தெளிவான வெற்றியை அளித்தோம்.

(2) 48.2. இது, இந்த வெற்றிக்கு முன்னால் நீர் செய்த பாவங்களுக்காகவும் அதற்குப் பின் நீர் செய்த பாவங்களுக்காகவும் உம்மை மன்னிப்பதற்காகவும் உமது மார்க்கத்திற்கு உதவிசெய்து உம்மீது பொழிந்த அருட்கொடைகளை நிறைவு செய்வதற்காகவும் உமக்கு எவ்வித கோணலுமற்ற இஸ்லாம் என்னும் நேரான வழியைக் காட்டுவதற்காகவும்தான்.

(3) 48.3. உம் எதிரிகளுக்கு எதிராக அல்லாஹ் உமக்கு எவராலும் தடுக்க முடியாத பலமான உதவி செய்வதற்காகவும்தான்.

(4) 48.4. அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காக அவர்களின் உள்ளங்களில் உறுதியையும் நிம்மதியையும் இறக்கினான். வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் அவற்றின் மூலம் தன் அடியார்களில் தான் நாடியோரை வலுப்படுத்துகிறான். அவன் தன் அடியார்களுக்கு நன்மை தரக்கூடியவற்றை நன்கறிந்தவன். அவன் நிகழ்த்தும் உதவியில் ஞானம் மிக்கவன்.

(5) 48.5. இது அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் மரங்களுக்கும் மாளிகைகளுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காகவும் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவற்றிற்காக அவன் அவர்களைக் குற்றம்பிடிக்காமலிருப்பதற்காகவும்தான். மேற்கூறப்பட்ட இக்கூலி -சுவனம் என்னும் இலட்சியத்தை அடைந்து அஞ்சும் விடயமான பாவங்களினால் தண்டிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தல்- அல்லாஹ்விடத்தில் ஈடிணையற்ற மகத்தான வெற்றியாகும்.

(6) 48.6. தன் மார்க்கத்திற்கு அல்லாஹ் உதவிசெய்து தனது வாக்கை மேலோங்கச்செய்யமாட்டான் என்று எண்ணும் நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஆண்களையும் பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும்தான். அவர்கள்தாம் காலத்தின் தீய சுழற்சியில் சிக்குவார்கள். அவர்களின் நிராகரிப்பினாலும் தீய எண்ணங்களினாலும் அல்லாஹ் அவர்கள்மீது கோபம்கொண்டு தன் அருளிலிருந்து அவர்களை விரட்டிவிட்டான். மறுமையில் அவர்களுக்காக நரகத்தை தயார்படுத்தி வைத்துள்ளான். அதில் நுழைந்து அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். நரகம் அவர்களின் மோசமான சேருமிடமாகும். அதன்பால் அவர்கள் மீண்டு செல்வார்கள்.

(7) 48.7. வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் அவற்றின் மூலம் தன் அடியார்களில் தான் நாடியோரை வலுப்படுத்துகிறான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், திட்டமிடலிலும் அவன் ஞானம் மிக்கவன்.

(8) 48.8. -தூதரே!- நிச்சயமாக நாம் உம்மை மறுமை நாளில் உம் சமூகத்திற்கு சாட்சி கூறக்கூடியவராகவும் நம்பிக்கையாளர்களுக்கு உலகில் வெற்றியும் உதவியும் மறுமையில் அருட்கொடைகளைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்கள் இவ்வுலகில் நம்பிக்கையாளர்களின் கைகளால் அவர்களுக்கு ஏற்படும் இழிவு மற்றும் தோல்வியைக் கொண்டும், மறுமையில் அவர்களுக்குக் காத்திருக்கும் வேதனைமிக்க தண்டனையைக் கொண்டும் எச்சரிக்கை செய்யகூடியவராகவும் அனுப்பியுள்ளோம்.

(9) 48.9. இது நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டு தூதரைக் கண்ணியப்படுத்தி காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதிபாட வேண்டும் என்பதற்காகத்தான்.

(10) 48.10. -தூதரே!- மக்காவின் இணைவைப்பாளர்களுடன் போரிடுவோம் என்று உம்மிடம் பைஅது ரிழ்வானில் உறுதிமொழி அளித்தவர்கள் அல்லாஹ்விடமே உறுதிமொழி அளித்தவர்களாவர். ஏனெனில் அவன்தான் இணைவைப்பாளர்களுடன் போரிடும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவனே அவர்களுக்குக் கூலியளிப்பான். உறுதிமொழியின்போது அவர்களின் கைகளுக்கு மேல் அல்லாஹ்வின் கை இருந்தது. அவன் அவர்களைக்குறித்து நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. யாரேனும் உறுதிமொழியை மீறி அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வதாக வழங்கிய வாக்குறுதியை, உடன்படிக்கையை முறித்து அதனை நிறைவேற்றவில்லையோ அவ்வாறு வாக்குறுதியை, உடன்படிக்கையை முறித்ததனால் ஏற்படும் தீங்கு அவரையே சாரும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படப்போவதில்லை. யாரெல்லாம் அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வதாக வழங்கிய உறுதிமொழியை முழுமையாக நிறைவேற்றினார்களோ அல்லாஹ் அவர்களுக்கு சுவனம் என்னும் மகத்தான கூலியை வழங்கிடுவான்.

(11) 48.11. -தூதரே!- உம்முடன் மக்காவுக்கு போருக்குப் புறப்படாமல் அல்லாஹ் பின்தங்க வைத்த நாட்டுப்புற அரபிகளில் சிலரை நீர் கண்டித்தால் “எங்கள் செல்வங்களையும் பிள்ளைகளையும் பராமரிப்பது உம்முடன் புறப்படுவதைவிட்டும் எங்களைத் திருப்பிவிட்டன. எனவே எங்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக” என்று அவர்கள் உம்மிடம் கூறுவார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றை தூதரிடம் பாவமன்னிப்புக் கோருமாறு வேண்டி தம் நாவினால் கூறுகிறார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரவில்லை. நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் உங்களுக்கு நன்மையளிக்க நாடினாலோ அல்லது தீங்கிழைக்க நாடினாலோ யாராலும் அதனைத் தடுக்க முடியாது. மாறாக நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் அவை எவ்வளவுதான் மறைத்தாலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(12) 48.12. நீங்கள் கூறுவது போல் செல்வங்களையும் பிள்ளைகளையும் பராமரிப்பதில் ஈடுபட்டமை, அவருடன் நீங்கள் புறப்படாமல் பின்தங்குவதற்கான காரணமல்ல. மாறாக தூதரும் அவருடைய தோழர்கள் அனைவரும் அழிந்துவிடுவார்கள், மதீனாவில் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிவர மாட்டார்கள் என்ற எண்ணமே அதற்குக் காரணமாகும். இவ்வாறு எண்ணுவதை ஷைத்தான் உங்களின் உள்ளங்களில் அலங்கரித்துக் காட்டி விட்டான். இறைவன் தன் தூதருக்கு உதவிசெய்ய மாட்டான் என்று அவனைக்குறித்து தீய எண்ணம் கொண்டீர்கள். அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் கொண்ட தீய எண்ணம் மற்றும் அவனுடைய தூதரைவிட்டும் பின்தங்கிய காரணத்தால் நீங்கள் அழியக்கூடிய மக்களாகி விட்டீர்கள்.

(13) 48.13. யார் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்ளவில்லையோ அவர் நிராகரிப்பாளராவார். நாம் மறுமை நாளில் நிராகரிப்பாளர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை தயார்படுத்தி வைத்துள்ளோம். அதில் அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள்.

(14) 48.14. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான் நாடிய அடியார்களின் பாவங்களை மன்னிக்கிறான். அவர்களை தன் அருளால் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்கிறான். தான் நாடிய அடியார்களை தன் நீதியால் தண்டிக்கிறான். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(15) 48.15. -நம்பிக்கையாளர்களே!- ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த கைபரின் போர்ச் செல்வங்களை நீங்கள் பெறுவதற்காக புறப்பட்டால் அல்லாஹ் யாரை பின்தங்கச் செய்தானோ அவர்கள் கூறுவார்கள்: “நாங்களும் அதிலிருந்து பங்கைப் பெற உங்களுடன் புறப்படுவதற்கு எங்களுக்கு அனுமதியளியுங்கள்.” பின்தங்கிய இவர்கள் இவ்வாறு வேண்டுவதன் மூலம் நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே கைபரின் போர்ச்செல்வங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியை மாற்ற விரும்புகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறும்: “இந்த போர்ச் செல்வங்களுக்காக நீங்கள் எங்களை ஒருபோதும் பின்தொடராதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் கைபரின் போர்ச் செல்வங்களை ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்துகொண்டவர்களுக்காக மட்டும் உரித்தாக்கி விட்டான். அவர்கள் கூறுவார்கள்: “கைபருக்கு உங்களைப் பின்தொடர வேண்டாம் என நீங்கள் எம்மைத் தடுப்பது அல்லாஹ்வின் கட்டளையினால் அல்ல. மாறாக எங்கள்மீதுள்ள பொறாமையே காரணமாகும்.” பின்தங்கிய இவர்கள் கூறுவது போலல்ல விடயம். மாறாக அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தடுத்துள்ளவற்றையும் குறைவாகவே புரிந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் பாவத்தில் வீழ்ந்து விட்டார்கள்.

(16) 48.16. -தூதரே!- உம்முடன் மக்காவிற்குப் புறப்பட்டு வராமல் பின்தங்கிய நாட்டுப்புற அரபிகளிடம் நீர் பரீட்சிக்கும் விதமாகக் கூறும்: “நீங்கள் பலமான சமூகத்தினருடன் போரிடுவதற்கு அழைக்கப்படுவீர்கள். நீங்கள் அவர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். அல்லது அவர்கள் போர் புரியாமல் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுடன் போர் புரியுமாறு அல்லாஹ் உங்களை அழைக்கும்போது நீங்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் உங்களுக்கு சுவனம் என்னும் நற்கூலியை வழங்கிடுவான். -அவருடன் மக்காவுக்குப் புறப்படாமல் பின்தங்கி அதனைப் புறக்கணித்தது போன்று- அவனுக்குக் கட்டுப்படாமல் நீங்கள் புறக்கணித்தால் அவன் உங்களை வேதனைமிக்க தண்டனையால் தண்டிப்பான்.

(17) 48.17. பார்வையற்றவர், ஊனமுற்றவர், நோயாளி ஆகியோர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாமல் பின்தங்குவதால் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவாரோ அல்லாஹ் அவரை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். யார் அவர்கள் இருவருக்கும் கட்டுப்படாமல் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் அவரை வேதனைமிக்க தண்டனையால் தண்டிப்பான்.

(18) 48.18. ஹுதைபிய்யா உடன்படிகையின்போது மரத்திற்குக் கீழே உம்மிடம் உறுதிமொழி அளித்த நம்பிக்கையாளர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களில் நம்பிக்கையும் உளத்தூய்மையும் உண்மையும் உள்ளது என்பதை அவன் அறிந்துகொண்டான். எனவேதான் அவர்களின் உள்ளங்களில் அமைதியை இறக்கினான். மக்காவில் நுழைவது அவர்களுக்குத் தவறியதற்குப் பகரமாக அல்லாஹ் அவர்களுக்கு கைபர் வெற்றி என்னும் நெருக்கமான ஒரு வெற்றியைக் கூலியாக வழங்கினான்.

(19) 48.19. அவன் அவர்களுக்கு ஏராளனமான போர்ச் செல்வங்களை அளித்தான். அவர்கள் அவற்றை கைபர்வாசிகளிடமிருந்து கைப்பற்றினார்கள். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், திட்டமிடலிலும் அவன் ஞானம் மிக்கவன்.

(20) 48.20. -நம்பிக்கையாளர்களே!- எதிர்காலத்தில் இஸ்லாமிய வெற்றிகளில் ஏராளமான போர்ச் செல்வங்களை நீங்கள் பெறுவீர்கள் என அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான். உங்களுக்கு கைபரின் போர்ச் செல்வங்களை விரைவாக வழங்கியுள்ளான். நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் குடும்பத்தாருக்கு தீங்கிழைக்க நாடிய யூதர்களை அவன் தடுத்தான். இது, அவசரமான இந்த போர்ச் செல்வங்கள் உங்களுக்கு இறை உதவியின் அடையாளமாக இருக்கும்பொருட்டும் உங்களுக்கு எவ்வித கோணலுமற்ற நேரான வழியைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும்தான்.

(21) 48.21. தற்சமயம் நீங்கள் அடைய முடியாத வேறுவகையான போர்ச் செல்வங்களையும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான். அல்லாஹ் மட்டுமே அதற்கு ஆற்றலுடையவன். அது அவனுடைய அறிவிலும் திட்டத்திலும் இருக்கின்றது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்தி விடாது.

(22) 48.22. -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரிப்பவர்கள் உங்களுடன் போரிட்டாலும் உங்களுக்கு முன்னால் நிற்க முடியாமல் புறங்காட்டி ஓடிவிடுவார்கள். பின்னர் அவர்கள் தங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் பொறுப்பாளனையோ உங்களுடன் போராடுவதற்கு தங்களுக்கு உதவி செய்யும் உதவியாளனையோ காண மாட்டார்கள்.

(23) 48.23. நம்பிக்கையாளர்கள் வெற்றி பெறுவதும் நிராகரிப்பாளர்கள் தோல்வியடைவதும் எல்லா காலகட்டத்திலும் இடங்களிலும் நிகழக்கூடிய உறுதியான ஒன்றாகும். இதுதான் இந்த பொய்ப்பிப்பாளர்களுக்கு முன்னர் கடந்துவிட்ட சமூகங்களில் அல்லாஹ்வின் நியதியாகும். -தூதரே!- அல்லாஹ்வின் நியதியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காண மாட்டீர்.

(24) 48.24. ஹுதைபிய்யாவில் இணைவைப்பாளர்களில் எண்பதுக்கு அதிகமானவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடியவர்களாக வந்த போது அல்லாஹ்வே அவர்களின் கரங்களை உங்களைவிட்டும் தடுத்தான். உங்களின் கரங்களை அவர்களைவிட்டும் தடுத்தான். நீங்கள் அவர்களுடன் போரிடவோ, நோவினையோ அளிக்கவில்லை. மாறாக நீங்கள் அவர்களைக் கைது செய்ய சக்தி பெற்றிருந்தும் அவர்களை விட்டுவிட்டீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(25) 48.25. அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமைவிட்டும் விட்டும் உங்களைத் தடுத்து, பலிப்பிராணியை அதன் பலிபீடமான ஹரம் எல்லையை அடைய விடாமல் தடுத்தனர். உங்களுக்குத் தெரியாத அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் நிராகரிப்பாளர்களுடன் சேர்த்து நீங்கள் கொன்று, உங்களை அறியாமலே உங்கள் மீது பாவமும் தண்டப்பணமும் விதியாகும் என்றில்லாவிட்டால், மக்காவை வெற்றி கொள்வதற்கு அவன் உங்களுக்கு அனுமதியளித்திருப்பான். இது மக்காவில் உள்ள நம்பிக்கையாளர்களைப் போன்ற அல்லாஹ் நாடியவர்களை தன் அருளில் பிரவேசிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். மக்காவில் நம்பிக்கையாளர்களைவிட்டும் நிராகரிப்பாளர்கள் தனித்திருந்தால் நாம் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரிப்பவர்களை வேதனைமிக்க தண்டனையால் தண்டித்திருப்போம்.

(26) 48.26. அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரித்தவர்கள் தமது உள்ளங்களில் அறியாமைக்கால வைராக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அது சத்தியத்திற்காக இயங்கக்கூடியது அல்ல. மன இச்சையின்படி இயங்கக்கூடியது. எனவேதான் தூதர் தங்களை மிகைத்துவிட்டார் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டியேற்படும் என்ற அச்சத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்த வருடம் அல்லாஹ்வின் தூதரை மக்காவில் நுழைவதை வெறுத்தார்கள். அல்லாஹ் தன் தூதரின்மீதும் நம்பிக்கையாளர்களின்மீதும் நிம்மதியை இறக்கினான். கோபத்தினால் இணைவைப்பாளர்களை அவர்களின் செயலைப்போன்று எதிர்கொள்ள நம்பிக்கையாளர்கள் செல்லவில்லை. அல்லாஹ் நம்பிக்கையாளர்களை ”அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை” என்ற சத்திய வார்த்தையில் உறுதிப்படுத்தி அதற்குரிய கடமையை நிலைநாட்ட வைத்தான். அவர்கள் அதனை நிலைநாட்டினார்கள். மற்றவர்களைவிட இந்த வார்த்தைக்கு நம்பிக்கையாளர்களே அதிக உரிமையுடையவர்களாவர். அவர்களின் உள்ளங்களில் நன்மை இருக்கின்றது என்பதை அல்லாஹ் அறிந்துள்ளதனால் அவர்களே அதற்குத் தகுதியானவர்களாக இருக்கின்றார்கள். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

(27) 48.27. அல்லாஹ் தன் தூதரின் உறக்கத்தில் கனவைக் காட்டி தனது தூதருக்கு அதில் உண்மையையே கூறினான். தூதரும் அதனைத் தன் தோழர்களுக்கு அறிவித்தார். நிச்சயமாக அவரும் அவருடைய தோழர்களும் அல்லாஹ்வின் புனித இல்லத்தில் எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் நுழைவார்கள். கிரிகைகளை பூர்த்திசெய்ததன் அடையாளமாக அவர்களில் சிலர் தலைமுடியை மழித்தவர்களாவும் சிலர் குறைத்தவர்களாகவும் இருப்பார்கள் என்பதே அக்கனவாகும். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களுக்குத் தெரியாத உங்கள் நலவுகளையும் அறிந்துவைத்துள்ளான். எனவேதான் அந்த வருடமே மக்காவில் நுழைந்து, கனவு நிறைவேறாமல் இருந்ததன் மூலம் அவசரமான ஒரு வெற்றியை அளித்தான். அதுதான் அல்லாஹ் நிகழவைத்த ஹுதைபிய்யா உடன்படிக்கையும், அதனைத் தொடர்ந்து ஹுதைபிய்யாவில் கலந்துகொண்ட நம்பிக்கையாளர்களுக்குக் கிடைத்த கைபர் வெற்றியுமாகும்.

(28) 48.28. அல்லாஹ்வே தன் தூதர் முஹம்மதை தெளிவான விளக்கத்துடனும் இஸ்லாம் என்னும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். அதற்கு முரணான அனைத்து மார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச் செய்வதற்காகத்தான் அல்லாஹ்வே இதற்கு சாட்சி கூறுகிறான். சாட்சியாளனாக இருப்பதற்கு அவனே போதுமானவனாவான்.

(29) 48.29. முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருக்கும் தோழர்கள் போரிடும் நிராகரிப்பாளர்களின்மீது கடுமையானவர்களாகவும் தங்களிடையே கருணையாளர்களாகவும் அன்பானவர்களாவும் இருப்பார்கள். -பார்க்கக்கூடியவனே!- நீ அவர்களை அல்லாஹ்வுக்காக ருகூஃ செய்தவர்களாக, சிரம்பணிந்தவர்களாக காண்பாய். அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பையும் கண்ணியமான கூலியையும் அவர்களைக்குறித்து அவன் திருப்தியடைய வேண்டும் என்றும் வேண்டுகிறார்கள். அவர்களின் முகங்களில் அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்ததற்கான அடையாளங்களாக வெளிப்படும் நேர்வழி, அமைதி, அவர்களின் முகங்களில் தொழுகையின் பிரகாசம் என்பவற்றை நீ காண்பாய். அவ்வாறுதான் அவர்களை வர்ணித்து மூஸாவின்மீது இறக்கப்பட்ட தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஈஸாவின்மீது இறக்கப்பட்ட இன்ஜீலில் அவர்கள் குறித்து பின்வருமாறு உதாரணமாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதிலே, பரிபூரணத்துவத்திலே ஒரு பயிரைப் போன்றதாகும். அது அதன் குருத்தை வெளிப்படுத்தி கடுமையாகி வலுவாகிறது. பிறகு தன் தண்டின்மீது நிற்கிறது. அதன் வலிமையும் பரிபூரணமும் பயிரிட்டவனைக் கவர்கிறது. நம்பிக்கையாளர்களிடையே காணப்படும் பலம், பரிபூரணத்துவம், ஒற்றுமை ஆகியவற்றைப் பார்க்கும் நிராகரிப்பாளர்களை அல்லாஹ் கோபம் கொள்ளச் செய்கிறான். அல்லாஹ் தன்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்த தோழர்களுக்கு மன்னிப்பையும் சுவனம் என்னும் தன்னிமிடமுள்ள மகத்தான கூலியையும் வாக்களிக்கிறான். அவன் அவர்களின் பாவங்களுக்காக அவர்களைக் குற்றம்பிடிக்க மாட்டான்.