(1) 40.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
(2) 41.2. இந்த குர்ஆன் அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும்.
(3) 41.3. இதன் வசனங்கள் முழுமையாக தெளிவுபடுத்தப்பட்டு அறிந்துகொள்ளும் மக்களுக்காக அரபி மொழியிலான குர்ஆனாக ஆக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள்தாம் அதன் கருத்துக்களைக் கொண்டும் அதிலுள்ள சத்தியத்துக்கான நேர்வழியைக் கொண்டும் பயனடைவார்கள்.
(4) 41.4. அது நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார்படுத்திவைத்துள்ளான் என்று நற்செய்தி கூறுவதாகவும் நிராகரிப்பாளர்களுக்கு அவன் வேதனைமிக்க தண்டனையை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று எச்சரிக்கை செய்வதாகவும் உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் அதனைப் புறக்கணித்துவிட்டார்கள். அவர்கள் அதிலுள்ள வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்க மாட்டார்கள்.
(5) 41.5. அவர்கள் கூறினார்கள்: “எங்களின் உள்ளங்கள் உறையிடப்பட்டுள்ளன. நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கின்றீரோ அதனை அவற்றால் விளங்கிக் கொள்ள முடியாது. எங்களின் செவிகளில் அடைப்பு உள்ளது. எனவே அவற்றால் செவியேற்க முடியாது. எங்களுக்கும் உமக்கும் இடையே திரை உள்ளது. எனவே நீர் கூறும் எதுவும் எங்களை அடையாது. நீர் உம் வழியில் செயல்படும். நிச்சயமாக நாங்களும் எங்களின் வழியில் செயல்படுகின்றோம். நாங்கள் உம்மை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம்.”
(6) 41.6. -தூதரே!- பிடிவாதம் கொண்ட இவர்களிடம் நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதன்தான். ஆயினும் ‘வணக்கத்திற்குரிய உண்மையான உங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவன்தான்’ என்று அல்லாஹ் எனக்கு வஹி அறிவிக்கிறான். எனவே அவனின்பால் செல்லும் வழிகளில் பயணியுங்கள். அவனிடமே பாவங்களுக்கு மன்னிப்புக் கோருங்கள். அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவோர் அல்லது யாரையாவது அவனுக்கு இணையாக்குவோருக்கு அழிவும் வேதனையும் உண்டு.”
(7) 41.7. அவர்கள் தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்க மாட்டார்கள். அவர்கள் -மறுமையையும் அங்கு வழங்கப்படும் நிலையான அருட்கொடையையும் வேதனைமிக்க தண்டனையையும்- மறுக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
(8) 41.8. நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களுக்கு என்றும் முடிவடையாத நிரந்தரமான சுவனம் என்னும் கூலி இருக்கின்றது.
(9) 41.9. -தூதரே!- இணைவைப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக நீர் அவர்களிடம் கேட்பீராக: “பூமியை ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களில் படைத்த அல்லாஹ்வை ஏன் நிராகரிக்கிறீர்கள்? அவனுக்கு இணைகளை ஏற்படுத்தி ஏன் அவனைத் தவிர மற்றவர்களை வணங்குகிறீர்கள்? அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாவான்.
(10) 41.10. அது ஆட்டம் காணாமல் இருப்பதற்காக அதற்கு மேலே அதனை உறுதிப்படுத்தும் உறுதியான மலைகளையும் அமைத்துள்ளான். அதில் அபிவிருத்தி செய்து அதிலுள்ளவர்களுக்கு எப்போதும் நலவு வழங்குதாக ஆக்கியுள்ளான். முந்தைய இரண்டு நாட்களையும் முழுமைப்படுத்தும் செவ்வாய், புதன் ஆகிய நாட்களையும் சேர்த்து சரியாக நான்கு நாட்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான உணவுகளை சீராக அதில் நிர்ணயித்தான். இது குறித்து கேட்க நாடுபவர்களுக்கு (விடை இதுதான்).
(11) 41.11. பின்னர் அல்லாஹ் வானத்தை படைப்பதன்பால் கவனம் செலுத்தினான். அப்போது அது புகையாக இருந்தது. அவன் வானத்திடமும் பூமியிடமும் கூறினான்: “விரும்பியோ அல்லது நிர்பந்தமாகவோ என் கட்டளைக்குக் கட்டுப்படுங்கள். அதைத் தவிர வேறு வழி உங்களுக்கு இல்லை” அவை கூறின: “நாங்கள் விரும்பியே உனக்குக் கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உன் விருப்பத்திற்கு மாற்றாக எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை.”
(12) 41.12. வானங்களை இருநாட்களில் (வியாழன், வெள்ளி) படைத்தான். அத்தோடு வானங்களையும் பூமியையும் ஆறுநாட்களின் உருவாக்கம் நிறைவுபெற்றது. ஒவ்வொரு வானத்திற்கும் அதற்கு நிர்ணயிக்கப்பட்டதையும் அதற்கு வணக்கம், வழிப்படுதல் போன்ற கட்டளையையும் அவன் அறிவித்தான். கீழ் வானத்தை நாம் நட்சத்திரங்களால் அலங்கரித்துள்ளோம். அவற்றின் மூலம் திருட்டுத்தனமாக ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்பதைவிட்டும் அதனைப் பாதுகாத்துள்ளோம். மேற்கூறப்பட்ட இவையனைத்தும் யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத தன் படைப்புகளைக் குறித்து நன்கறிந்தவனின் நிர்ணயமாகும்.
(13) 41.13. -தூதரே!- நீர் கொண்டுவந்ததை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் புறக்கணித்தால் அவர்களிடம் கூறுவீராக: “ஆத், ஹூதின் சமூகம் ஸ்மூத், ஸாலிஹின் சமூகம் அவ்விருவரையும் பொய்ப்பித்த போது அவர்களுக்கு ஏற்பட்ட வேதனையைப் போன்று உங்களுக்கும் வேதனை ஏற்பட்டுவிடும் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன்.”
(14) 41.14. ஒரே அழைப்போடு ஒருவர் பின் ஒருவராக தூதர்கள் அவர்களிடம் வந்து “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்” என்று கட்டளையிட்டபோது நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு வானவர்களை தூதர்களாக இறக்க நாடியிருந்தால் அவ்வாறு இறக்கி இருப்பான். உங்களின் தூதுச் செய்தியை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏனெனில் திட்டமாக நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்கள்தாம்.”
(15) 41.15. ஹூதின் கூட்டமான ஆத் சமூகத்தினர் அல்லாஹ்வை நிராகரித்ததோடு பூமியில் அநியாயமாக ஆணவம் கொண்டார்கள். தங்களைச் சுற்றிள்ளவர்கள் மீது அநியாயம் செய்தார்கள். தங்களின் பலத்தால் மெய்மறதியில் ஆழ்த்தப்பட்ட அவர்கள் கூறினார்கள்: “எங்களைவிட பலமானவர் யார்?” அவர்களின் எண்ணப்படி அவர்களைவிட பலமானவர்கள் யாரும் இருக்கவில்லை. அல்லாஹ் அவர்களுக்குப் பதிலளித்தான்: “நிச்சயமாக அவர்களைப் படைத்து அவர்களைத் திமிரில் ஆழ்த்திய பலத்தை அவர்களுக்கு அளித்த அல்லாஹ் அவர்களை விட வல்லமை மிக்கவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லையா, பார்க்கவில்லையா? அவர்கள் ஹூத் கொண்டுவந்த அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.
(16) 41.16. ஆகவே நாம் அவர்களை உலக வாழ்க்கையில் இழிவுமிக்க வேதனையை அனுபவிக்கச் செய்வதற்காக அவர்களின் மீது துர்பாக்கியமான நாட்களில் இன்னல்களுக்கு உள்ளாக்கக்கூடிய பயங்கரமான சப்தத்தை உள்ளடக்கிய காற்றை அனுப்பினோம். அவர்களுக்காக காத்திருக்கும் மறுமை வேதனையோ அதைவிட இழிவானது. வேதனையிலிருந்து தங்களைக் காப்பாற்றக்கூடிய உதவியாளர்களை அவர்கள் பெற மாட்டார்கள்.
(17) 41.17. ஸாலிஹின் கூட்டமான ஸமூத் சமூகத்திற்கு சத்தியப் பாதையை தெளிவுபடுத்தி நேர்வழி காட்டினோம். அவர்கள் சத்தியத்தின் நேர்வழியை விட்டுவிட்டு வழிகேட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். எனவே அவர்கள் செய்துகொண்டிருந்த நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களினால் இழிவுமிக்க வேதனைமிக்க பேரிடி அவர்களைத் தாக்கியது.
(18) 41.18. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் நம்பிக்கைகொண்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அவர்களின் சமூகத்தைத் தாக்கிய வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றினோம்.
(19) 41.19. அல்லாஹ் தன் எதிரிகளை நரகத்தின்பால் ஒன்றுதிரட்டும்போது அவர்களில் முந்தியவர்கள், பிந்தியவர்கள் அனைவரையும் நரகத்தின் காவலர்கள் நரகத்தில் தள்ளுவார்கள். அவர்கள் நரகிலிருந்து தப்பிச் செல்ல முடியாது.
(20) 41.20. அவர்கள் இழுத்துச் செல்லப்பட்ட நரகத்திற்கு வந்தவுடன் உலகில் தாங்கள் செய்துகொண்டிருந்த செயல்களை அவர்கள் மறுப்பார்கள். அவர்களின் செவிகளும் பார்வைகளும் தோல்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்களைக் குறித்து சாட்சி கூறும்.
(21) 41.21. நிராகரிப்பாளர்கள் தங்களின் தோல்களிடம் கேட்பார்கள்: “எங்களுக்கு எதிராக நாங்கள் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து ஏன் சாட்சி கூறினீர்கள்?” தோல்கள் கூறும்: “எல்லா பொருள்களையும் பேச வைத்தவன்தான் எங்களையும் பேச வைத்தான். அவன்தான் முதன்முதலாக உங்களைப் படைத்தான். மறுமைநாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.
(22) 41.22. உங்களின் செவிகளும் பார்வைகளும் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சி கூறாமலிருப்பதற்கு நீங்கள் பாவங்கள் செய்துகொண்டிருந்தபோது அவைகளுக்குத் தெரியாமல் மறைந்து செய்யவில்லை. ஏனெனில் மரணத்திற்குப் பின் விசாரணை செய்யப்பட்டு கூலி வழங்கப்படுவதையோ தண்டனை வழங்கப்படுவதையோ நீங்கள் நம்பாமல் இருந்தீர்கள். மாறாக நீங்கள் செய்யக்கூடியவற்றில் பலதை அல்லாஹ் அறியமாட்டான், அது அவனை விட்டும் மறைந்துவிடும் என்று எண்ணினீர்கள். அதனால் ஏமாற்றமடைந்தீர்கள்.
(23) 41.23. உங்கள் இறைவனைக் குறித்து நீங்கள் கொண்ட அத்தீய எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. இதன் காரணமாக நீங்கள் இவ்வுலகையும் மறுவுலகையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாகிவிட்டீர்கள்.
(24) 41.24. யாருக்கு எதிராக அவர்களின் செவிகளும் பார்வைகளும் தோல்களும் சாட்சி கூறியதோ அவர்கள் பொறுமையாக இருந்தாலும் நரகமே அவர்களின் தங்குமிடமாகும், ஒதுங்குமிடமுமாகும். தண்டனையை அகற்றி அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டும் என நாடினாலும் அவனது திருப்தியை அவர்கள் பெறவோ சுவனத்தில் நுழையவோமாட்டார்கள்.
(25) 41.25. இந்த நிராகரிப்பாளர்களின் மீது எப்போதும் அவர்களுடனேயே இருக்க ஷைத்தானியத் தோழர்களை தயார்படுத்தியுள்ளோம். உலகில் அவர்களின் தீய செயல்களையும் அவர்களுக்குப் பின்னாலுள்ள மறுமையின் விடயத்தையும் இவர்களுக்கு அலங்கரித்துக் காட்டுகிறார்கள். மறுமை நாளை நினைவுபடுத்தாமலும் அதற்காக அமல்கள் செய்யாமலும் அவர்களை மறக்கடிக்கச் செய்வார்கள். முன்சென்ற மனித, ஜின்களின் மீது உறுதியான அதே வேதனை இவர்களின் மீதும் உறுதியாகிவிட்டது. நிச்சயமாக அவர்கள் நரகில் நுழைந்து மறுமை நாளில் தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாகிவிடுவார்கள்.
(26) 41.26. ஆதாரத்தை ஆதாரத்தால் எதிர்கொள்ள முடியாமல் போனபோது நிராகரிப்பாளர்கள் தங்களிடையே உபதேசித்தவர்களாகக் கூறினார்கள்: “முஹம்மது உங்களுக்குப் படித்துக் காட்டும் இந்த குர்ஆனை செவியேற்காதீர்கள். அதிலுள்ளவற்றிற்குக் கட்டுப்படாதீர். நீங்கள் மிகைக்கும்பொருட்டு, அவர் அதனை ஓதும்போது கூச்சலிடுங்கள். அதனால் அதனை ஓதுவதையும் அதன் பக்கம் அழைப்பதையும் அவர் விட்டுவிடுவார். நாம் அவரிலிருந்து விடுதலை பெறலாம்.
(27) 41.27. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர்களை பொய்ப்பிப்பவர்களை நாம் மறுமை நாளில் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்வோம். அவர்கள் செய்துகொண்டிருந்த நிராகரிப்பான, பாவமான காரியங்களுக்குத் தண்டனையாக மிக மோசமாக கூலியை நிச்சயம் நாம் வழங்கிடுவோம்.
(28) 41.28. மேற்கூறப்பட்டதுதான் அல்லாஹ்வை நிராகரித்த, தூதர்களை பொய்ப்பித்த அவனுடைய எதிரிகளுக்கு வழங்கப்படும் கூலியாகும். அது நரகமாகும். அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்ததற்கும் தெளிவான பலமான அவனது அத்தாட்சிகளை நம்பிக்கைகொள்ளாததற்கும் கூலியாக அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.
(29) 41.29. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! மனிதர்கள் மற்றும் ஜின்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காட்டுவாயாக. (இப்லீஸ்: இவன்தான் நிராகரிப்பை முதன்முதலில் தொடங்கி அதற்கு அழைப்பு விடுத்தவன். ஆதமின் மகன்: இவன்தான் கொலை செய்வதை முதலில் ஆரம்பித்தவன்) நரகவாசிகளில் கடும் வேதனையை அனுபவித்து தாழ்ந்தவர்களாகும் பொருட்டு அவர்கள் இருவரையும் எங்கள் பாதங்களுக்குக் கீழே வைத்து நசுக்கி விடுகின்றோம்.”
(30) 41.30. நிச்சயமாக எங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர எங்களுக்கு வேறு இறைவன் இல்லை என்று கூறி அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி உறுதியாக இருந்தவர்களின் மீது அவர்கள் மரணிக்கும்வேளையில் வானவர்கள் இறங்கி அவர்களிடம் கூறுகிறார்கள்: “மரணத்தைக் கண்டோ அதற்குப்பின் நிகழப்போவதை எண்ணியோ அஞ்சாதீர்கள். உலகில் நீங்கள் விட்டுவிட்டு வந்ததற்காக கவலைப்படாதீர்கள். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்ததற்காக உலகில் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுக்கொண்டிருந்த சுவனத்தைக் கொண்டு நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்.
(31) 41.31. நாங்கள் உலக வாழ்க்கையில் உங்களின் உதவியாளர்கள். உங்களுக்கு நேரான வழியைக் காட்டி உங்களைப் பாதுகாத்துக்கொண்டிருந்தோம். மறுமையிலும் நாங்களே உங்களின் உதவியாளர்கள். உங்களுக்கு எங்களின் உதவி தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும். சுவனத்தில் உங்களின் மனம் விரும்பும் இன்பங்கள் அனைத்தும் கிடைக்கும். அங்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் அத்தனையும் கிடைக்கும்.
(32) 41.32. அது தன் பக்கம் திரும்பக்கூடிய அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடிய, அவர்களோடு மிகுந்த கருணையுடைய இறைவனிடமிருந்து உங்களுக்காக தயார்படுத்தப்பட்ட விருந்தாகும்.
(33) 41.33. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதன் பக்கமும் அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படுவதன் பக்கமும் அழைத்து, அவன் விரும்பக்கூடிய நற்செயல்களில் ஈடுபட்டு “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களில் உள்ளவனாவேன்” என்று கூறுபவரைவிட அழகிய சொல் உடையவர் வேறுயாரும் இல்லை. அவை அனைத்தையும் செய்பவர்தான் மக்களில் சிறந்த வார்த்தையை பேசுபவர்.
(34) 41.34. அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் நன்மையான செயல்களும் அவனைக் கோபத்திற்குள்ளாக்கும் தீமையான செயல்களும் சமமாகாது. மக்களில் உமக்கு தீங்கிழைத்தவர்களை சிறந்த பண்பால் எதிர்கொள்வீராக. அப்போது முன்னர் உம்முடன் கடுமையான பகைமை கொண்டிருந்தவர்கூட -தீயதை நன்மையால் எதிர்கொள்ளும்- உம்முடைய இந்த செயலால் திட்டமாக நெருங்கிய நண்பரைப்போலாகி விடுவார்.
(35) 41.35. மக்களால் தாம் சந்திக்கும் துன்பங்களையும் தொல்லைகளையும் பொறுமையுடன் சகித்துக்கொள்பவர்கள்தாம் சிறப்பிற்குரிய இந்த பண்பினைப் பெற பாக்கியம் பெறுவார்கள். பெரும் பாக்கியம் வழங்கப்பட்டவர்கள்தாம் பெரும் நன்மைகளை, பூரணமான பயன்களை உள்ளடக்கியுள்ள இந்த பண்பினைப் பெற பாக்கியம் பெறுவார்கள்.
(36) 41.36. ஷைத்தான் உமக்கு தீங்கினைக்கொண்டு ஊசலாட்டத்தை எப்போது ஏற்படுத்தினாலும் அல்லாஹ்வைப் பற்றிக்கொள்வீராக, அவனிடம் தஞ்சமடைந்து விடுவீராக. நிச்சயமாக நீர் கூறுவதை அவன் செவியேற்கக்கூடியவன்; உமது நிலையைக் குறித்து நன்கறிந்தவன்.
(37) 41.37. இரவும் பகலும் அவை ஒன்றன்பின் ஒன்றாக வருவதும் சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் ஒருவனே என்பதையும் அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவையாகும். -மனிதர்களே!- சூரியனுக்கோ, சந்திரனுக்கோ சிரம்பணியாதீர்கள். நீங்கள் உண்மையாகவே அவனை வணங்கக்கூடியவர்களாக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம்பணியுங்கள்.
(38) 41.38. அவர்கள் கர்வம் கொண்டு அவனை புறக்கணித்து படைப்பாளனான அல்லாஹ்வுக்கு சிரம்பணியவில்லையெனில் அல்லாஹ்விடம் இருக்கும் வானவர்கள் இரவிலும் பகலிலும் வணங்குவதை விட்டும் சோர்வடையாமல் அல்லாஹ்வைத் துதிசெய்துகொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.
(39) 41.39. அவனுடைய கண்ணியத்தையும் வல்லமையையும் அவன் ஒருவனே என்பதையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதையும் அறிவிக்கும் சான்றுகளில் ஒன்று, தாவரங்களற்ற பூமியை நீர் காணுவதாகும். நாம் அதன்மீது மழை நீரை இறக்கியவுடன் மறைந்திருந்த விதைகள் வெளிப்பட்டு செழித்து உயர்ந்து வளர்கிறது. நிச்சயமாக இந்த இறந்த பூமியை தாவரங்களைக் கொண்டு உயிர்ப்பித்தவன் இறந்தவர்களை விசாரணைக்காகவும், கூலி வழங்கவும் உயிர்ப்பிக்கக்கூடியவன். நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். வறண்ட பூமியை உயிர்பெறச் செய்வதும் அடக்கஸ்த்தளத்திலிருந்து இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு இயலாத ஒன்றல்ல.
(40) 41.40. நிச்சயமாக அல்லாஹ்வின் வசனங்களில் தவறிழைப்பவர்கள் அவற்றை நிராகரிப்பவர்கள், பொய்ப்பிப்பவர்கள் அவற்றிற்கு தவறான பொருள் கற்பிக்கின்றவர்கள் நம்மைவிட்டும் மறைவாக இல்லை. நாம் அவர்களை நன்கறிவோம். நரகத்தில் வீசி எறியப்படுபவர் சிறந்தவரா? அல்லது வேதனையிலிருந்து பாதுகாவல் பெற்றவராக மறுமை நாளில் வருபவர் சிறந்தவரா? -மக்களே!- நீங்கள் விரும்பியபடி நன்மையையோ, தீமையையோ செய்யுங்கள். ஏனெனில் நாம் உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தெளிவுபடுத்தி விட்டோம். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் அவற்றில் எதனைச் செய்கிறீர்கள் என்பதைப் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(41) 41.41. நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து தங்களிடம் வந்த குர்ஆனை நிராகரிப்பவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள்.
(42) 41.42. அதனை யாராலும் திரிக்கவோ மாற்றவோ முடியாது. கூட்டியோ குறைத்தோ திரித்தோ மாற்றியோ எவ்விதமான அசத்தியமும் அதன் முன்னாலிருந்தோ பின்னாலிருந்தோ வர முடியாது. அது படைப்பிலும் நிர்ணயத்திலும் சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்க, எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.
(43) 41.43. வேதத்தை மறுப்பவர்களின் நிலையைக் குறிப்பிட்ட பிறகு, தனது தூதர் முஹம்மதுக்கு முன்னால் வந்துசென்ற அவரது சகோதரர்களான முந்தைய தூதர்கள் எதிர்கொண்ட நிராகரிப்பு, பரிகாசம், அவதூறு ஆகிவற்றை எடுத்துக்கூறி அவருக்கு ஆறுதல் அளிக்கிறான். அவன் கூறுகிறான்: -தூதரே!- உமக்கு முன்னர் தூதர்களுக்கு கூறப்பட்டது போன்ற நிராகரிப்பே உமக்கும் கூறப்படுகிறது. ஆகவே நீர் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. நிச்சயமாக உம் இறைவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் பாவமன்னிப்புக் கோராமல் பாவங்களில் நிலைத்திருப்பவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.
(44) 41.44. நாம் இந்த குர்ஆனை அரபி அல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால் அவர்களில் நிராகரிப்பாளர்கள், “நாங்கள் புரிந்துகொள்வதற்காக இதன் வசனங்கள் தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டாமா? என்றும் கொண்டுவந்தவர் அரபியாக இருக்கும் நிலையில் வேதமோ வேறு மொழியில் இருக்கலாமா?! என்றும் கூறியிருப்பார்கள். -தூதரே!- இவர்களிடம் நீர் கூறுவீராக: “இந்த அல்குர்ஆன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர்களைப் உண்மைப்படுத்துவோருக்கு வழிகேட்டை விட்டும் நேர்வழிகாட்டக்கூடியதாகவும் உள்ளங்களிலுள்ள அறியாமை, அதனை தொடர்ந்து வரும் நோய்களுக்கு நிவாரணியாகவும் இருக்கின்றது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களின் செவிகளில் அடைப்பு உள்ளது. அவர்(கண்)களில் குருட்டுத்தனமும் உள்ளது. அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். இந்த பண்புகளால் வர்ணிக்கப்படுபவர்கள் தூரமான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்களைப் போன்றவர்கள். எனவே எவ்வாறு அவர்களால் அழைப்பவரின் சத்தத்தை செவியுற முடியும்?
(45) 41.45. நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர் அதன்மீது நம்பிக்கைகொண்டார்கள். சிலர் அதனை நிராகரித்தார்கள். ‘மறுமை நாளில் அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளவற்றில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான்’ என்ற வாக்குறுதி இருக்காவிட்டால் அவன் தவ்ராத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்களிடையே தீர்ப்பளித்திருப்பான். சத்திய வாதிகளையும் அசத்தியவாதிகளையும் தெளிவுபடுத்தி சத்தியவாதிகளைக் கண்ணியப்படுத்தி அசத்தியவாதிகளை இழிவுபடுத்தியிருப்பான். நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் குர்ஆனைக் குறித்து சந்தேகத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.
(46) 41.46. யார் நற்செயல் புரிவாரோ அதனால் ஏற்படும் நன்மை அவரையே சாரும். எவருடைய நற்செயலினாலும் அல்லாஹ்வுக்கு எந்தப் பயனும் இல்லை. யார் தீயசெயல் புரிவாரோ அதனால் ஏற்படும் தீங்கு அவரையே சாரும். அவனுடைய படைப்பினங்களில் எவருடைய தீயசெயலினாலும் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. அவன் ஒவ்வொருவருக்கும் தகுந்த கூலியை வழங்கிடுவான். -தூதரே!- உம் இறைவன் தன் அடியார்களின் மீது அநீதி இழைப்பவன் அல்ல. ஒரு போதும் அவர்களின் நன்மைகளை குறைத்துவிடவோ, தீமைகளை அதிகரித்துவிடவோ மாட்டான்.
(47) 41.47. மறுமை குறித்த அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அது எப்போது நிகழும் என்பதை அவன் மட்டுமே அறிவான். அவனைத் தவிர யாரும் அதனை அறியமாட்டார்கள். அவனுக்குத் தெரியாமல் எந்தக் கனியும் தன்னைப் பாதுகாக்கும் பாளையிலிருந்து வெளிப்படுவதுமில்லை; எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை. பிரசவிப்பதுமில்லை. இவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அல்லாஹ்வுடன் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த இணைவைப்பாளர்களை அவன் அழைக்கும் நாளில் அவர்கள் வணங்கியதன்பால் அவர்களைப் பழிக்கும் விதமாக அவர்களிடம், “எனக்கு இணையானவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணினீர்களே அவர்கள் எங்கே?” என்று கேட்பான். அதற்கு இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “உனக்கு இணை உண்டு என்று சாட்சி கூறக்கூடியவர் இப்போது எங்களில் யாரும் இல்லை என உனக்கு முன்னால் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.”
(48) 41.48. அவர்கள் அழைத்துக்கொண்டிருந்த சிலைகள் அனைத்தும் அவர்களைவிட்டு மறைந்துவிடும். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எங்கும் தப்பிச் செல்ல முடியாது என்பதை நிச்சயமாக அவர்கள் உறுதியாக அறிந்துகொள்வார்கள்.
(49) 41.49. மனிதன் ஆரோக்கியம், செல்வம், பிள்ளை போன்ற அருட்கொடைகளை வேண்டுவதில் சோர்வடைவதில்லை. ஆனால் வறுமை, நோய் போன்ற துன்பங்கள் அவனுக்கு ஏற்பட்டுவிட்டால் அவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் மிகவும் நிராசையடைபவனாக உள்ளான்.
(50) 41.50. அவனுக்கு ஏற்பட்ட துன்பம் மற்றும் நோயின் பின்னர் நாம் அவனுக்கு எமது புறத்திலிருந்து ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் சுவைக்கச் செய்தால், “இது எனக்குரியது. நிச்சயமாக நான் இதற்குத் தகுதியானவன்தான். மறுமை நாள் ஏற்படும் என்று நான் எண்ணவில்லை. ஒரு வேளை மறுமை ஏற்பட்டாலும் அல்லாஹ்விடம் எனக்கு செல்வம், சொத்து கிடைக்கும். நான் தகுதியானவன் என்பதால் அவன் எனக்கு உலகில் வழங்கியது போன்றே மறுமையிலும் அருட்கொடைகளை வழங்குவான்” என்று திட்டமாக கூறுகிறான். நிச்சயமாக நிராகரிப்பாளனுக்கு அவன் செய்த நிராகரிப்பான, பாவமான செயல்களைக்குறித்து அறிவித்திடுவோம். அவர்களைக் கடும் வேதனையை அனுபவிக்கச் செய்வோம்.
(51) 41.51. நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற அருட்கொடைகளை வழங்கினால் அவன் அல்லாஹ்வை நினைவுகூராமல், அவனுக்குக் கட்டுப்படாமல் அலட்சியமாக இருக்கின்றான். கர்வத்தினால் புறக்கணித்து விலகிச் செல்கிறான். வறுமையோ, நோயோ வேறு ஏதேனும் துன்பமோ அவனைப் பீடித்துவிட்டால் அவன் அல்லாஹ்விடம் அதிகமாக பிரார்த்தனை செய்பவனாகி விடுகிறான். தன்னைப் பீடித்த துன்பத்தை போக்குமாறு அவனிடம் முறையிடுகிறான். அருட்கொடைகள் வழங்கும்போது அவன் தன் இறைவனுக்கு நன்றிசெலுத்துவதுமில்லை. அவனை சோதித்தால் அந்த சோதனையில் பொறுமையைக் கடைப்பிடிப்பதுமில்லை.
(52) 41.52. -தூதரே!- பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும் நீங்கள் அதனை நிராகரித்து பொய்ப்பித்தீர்களானால் உங்களின் நிலைமை என்னவாகும் என்பதைக் குறித்து எனக்கு அறிவியுங்கள். சத்தியம் தெளிவாகவும் பலமான ஆதாரமிக்கதாகவும் உள்ள நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதத்தில் இருப்பவனை விட வழிகேடன் யார் இருக்கிறான்?!
(53) 41.53. அவர்களுக்கு குர்ஆன்தான் சத்தியமானது என்பது சந்தேகமில்லாமல் தெளிவாகும்பொருட்டு முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கும் பூமியின் பல்வேறு பகுதிகளிலும், மக்கா வெற்றியின் மூலம் அவர்களிலும் நம் சான்றுகளை குறைஷிக் காபிர்களுக்கு காட்டுவோம். நிச்சயமாக குர்ஆன் தன்னிடமிருந்து இறங்கியது என்று அல்லாஹ் கூறிய சாட்சி இந்த இணைவைப்பாளர்களுக்குப் போதுமானதில்லையா? அல்லாஹ்வின் சாட்சியத்தை விட யாருடைய சாட்சியம் பெரியது? அவர்கள் சத்தியத்தை விரும்பியிருந்தால் தங்கள் இறைவனின் சாட்சியை போதுமாக்கிக் கொண்டிருப்பார்கள்.
(54) 41.54. அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இணைவைப்பாளர்கள் மீண்டும் எழுப்பப்படுவதை நிராகரிப்பதனால் மறுமையில் தம் இறைவனைச் சந்திப்பதில் சந்தேகத்திலே உள்ளனர். எனவே அவர்கள் மறுமையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால் நற்காரியம் செய்து அதற்காகத் தயாராகமாட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்து விடயங்களையும் தன் அறிவாலும் ஆற்றலாலும் சூழ்ந்துள்ளான்.