(1) 29.1. (الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
(2) 29.2. “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டோம்” என்று அவர்கள் கூறியதனால் மட்டும் அவர்கள் கூறியதன் எதார்த்தத்தை தெளிவுபடுத்தக்கூடிய அவர்கள் உண்மையான விசுவாசிகளா என்பதைச் சோதிக்காமல் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டார்களா? அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம்.
(3) 29.3. நாம் அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களைச் சோதித்தோம். வெளியில் தெரியும் விதத்தில் அல்லாஹ் அறிந்தே தீருவான். தங்களின் நம்பிக்கையில் உண்மையாளர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.
(4) 29.4. மாறாக இணைவைப்பு, அது போன்ற பாவங்களில் ஈடுபடுபவர்கள் நம் வேதனையைவிட்டும் தப்பிவிடலாம் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் எடுக்கும் தீர்மானம் மோசமானது. அல்லாஹ்விடமிருந்து அவர்கள் தப்ப முடியாது. அவர்கள் நிராகரித்த நிலையிலேயே மரணமடைந்தால் அவனது வேதனையிலிருந்து தப்பிவிட முடியாது.
(5) 29.5. கூலி பெறுவதற்காக மறுமை நாளில் அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் அறிந்துகொள்ளட்டும், அதற்கு அல்லாஹ் நிர்ணயித்த தவணை விரைவில் வந்துவிடும். அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவனாகவும் அவர்களின் செயல்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனை விட்டும் தவறாது. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(6) 29.6. யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கும் பாவங்களிலிருந்து விலகுவதற்கும் முயற்சி செய்கிறாரோ, அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறாரோ அவர் தமக்காகவே முயற்சி செய்கிறார். நிச்சயமாக அதன் பலன் அவருக்கே. படைப்புகள் அனைத்தையும் விட்டு அல்லாஹ் தேவையற்றவன். அவர்களின் வணக்கத்தினால் அவனுக்கு எதுவும் கூடுவதுமில்லை. அவர்களின் பாவத்தினால் எதுவும் குறைந்து விடுவதுமில்லை.
(7) 29.7. யார் நம்பிக்கைகொண்டு நாம் அவர்களுக்கு அளித்த சோதனையை பொறுமையாக எதிர்கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களின் நற்செயல்களுக்குப் பகரமாக நாம் அவர்களின் பாவங்களை மன்னித்திடுவோம். அவர்கள் இவ்வுலகில் செய்த செயல்களுக்கு மறுமையில் மிகச் சிறந்த கூலியை வழங்கிடுவோம்.
(8) 29.8. தாய், தந்தையருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளும்படி, அவர்களுக்கு உபகாரம் செய்யும்படி நாம் மனிதனுக்கு வஸிய்யத் செய்துள்ளோம். -மனிதனே!- உன் தாய், தந்தையர் -ஸஃத் இப்னு அபீ வக்காஸ் அவர்களுக்கு நிகழ்ந்தது போன்று- உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு இணையாக்குமாறு உன்னை வற்புறுத்தினால் அவர்கள் இருவருக்கும் கட்டுப்படாதே. ஏனெனில் நிச்சயமாக படைப்பாளனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு படைப்புகளுக்கு கட்டுப்படக்கூடாது. நீங்கள் மறுமை நாளில் என்பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்கள் அனைத்தையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவேன்.
(9) 29.9. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களை நாம் மறுமையில் நல்லவர்களில் சேர்த்து அவர்களுடனே எழுப்பி, அவர்களுடைய கூலியை வழங்குவோம்.
(10) 29.10. மக்களில் சிலர், “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டோம்“ என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் நிராகரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்டால் அவர்களின் வேதனையை அல்லாஹ்வின் வேதனையைப் போன்று ஆக்கி நிராகரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஈமானை விட்டும் பின்வாங்கி விடுகிறார்கள். -தூதரே!- உமக்கு உம் இறைவனிடமிருந்து ஏதேனும் வெற்றி கிடைத்தால், “நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக நாங்களும் உங்களுடன் நம்பிக்கையாளர்களாக இருந்தோம்” என்று கூறுகிறார்கள். மக்களின் உள்ளங்களிலுள்ளவற்றை அல்லாஹ் அறிந்தவனில்லையா? உள்ளங்களிலுள்ள நம்பிக்கை, நிராகரிப்பு எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உள்ளங்களிலுள்ளவற்றை அல்லாஹ்வே அவர்களை விட நன்கறிந்தவனாக இருக்கும் போது, அவற்றில் என்ன உள்ளது என அவர்கள் அல்லாஹ்வுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களா?.
(11) 29.11. உண்மையாகவே அவனை நம்பிக்கைகொண்டவர்களையும் நம்பிக்கையை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைக்கும் நயவஞ்சகர்களையும் அல்லாஹ் நிச்சயம் அறிவான்.
(12) 29.12. நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வை மட்டும் நம்பிக்கைகொண்டவர்களிடம் கூறுகிறார்கள்: “நாங்கள் பின்பற்றும் எங்களின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். உங்களின் பாவங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம். நாங்கள் அவற்றிற்காக தண்டனையை பெற்றுக்கொள்கிறோம்.” அவர்கள் இவர்களின் பாவங்களிலிருந்து எதையும் சுமப்பவர்களல்ல. நிச்சயமாக தங்களின் இந்த கூற்றில் அவர்கள் பொய்யர்களே.
(13) 29.13. அசத்தியத்தின்பால் அழைக்கும் இந்த இணைவைப்பாளர்கள் தான் செய்த பாவங்களை சுமப்பார்கள், தங்களின் அழைப்பை ஏற்று பின்பற்றியவர்களின் பாவங்களையும் சுமப்பார்கள். ஆனால் பின்பற்றியவர்களின் பாவத்தில் எதுவும் குறைந்துவிடாது. அவர்கள் இவ்வுலகில் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த பொய்களைக் குறித்து மறுமை நாளில் விசாரிக்கப்படுவார்கள்.
(14) 29.14. நாம் நூஹை அவரது சமூகத்தின்பால் தூதராக அனுப்பினோம். அவர் தொள்ளாயிரத்து ஐம்பது வருடங்கள் அவர்களிடையே தங்கியிருந்து அவர்களை ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்தார். அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள். தொடர்ந்தும் தமது நிராகரிப்பிலேயே இருந்தார்கள். அல்லாஹ்வை நிராகரித்து தூதர்களைப் பொய்ப்பித்து அநியாயக்காரர்களாகிவிட்ட நிலையில் வெள்ளப் பிரளயம் அவர்களைத் தாக்கியது. எனவே மூழ்கி அவர்கள் அழிந்தார்கள்.
(15) 29.15. நாம் நூஹையும் அவருடன் கப்பலில் இருந்த நம்பிக்கைகொண்டவர்களையும் வெள்ளத்தில் மூழ்கி அழிவதிலிருந்து காப்பாற்றினோம். நாம் அந்தக் கப்பலை படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினையாக ஆக்கினோம்.
(16) 29.16. -தூதரே!- இப்ராஹீமின் சம்பவத்தை, அவர் தம் சமூகத்திடம் கூறிய வேளையை நினைவுகூர்வீராக. : “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனுடைய வேதனையை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் மேலே கட்டளையிடப்பட்டதே உங்களுக்குச் சிறந்தாகும்.
(17) 29.17. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தியற்ற சிலைகளைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள். அவற்றை வணக்கத்திற்குத் தகுதியானவை என்று எண்ணி நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்கள் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க சக்தி பெறாது. அல்லாஹ்விடமே வாழ்வாதாரம் தேடுங்கள். அவனே வாழ்வாதாரம் அளிக்கக்கூடியவன். அவனை மட்டுமே வணங்குங்கள். அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துங்கள். நீங்கள் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் அவனிடமே திரும்ப வேண்டும். உங்களின் சிலைகளிடம் அல்ல.
(18) 29.18. -இணைவைப்பாளர்களே!- நீங்கள் முஹம்மது கொண்டுவந்ததை பொய்ப்பித்தால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த நூஹின் சமுதாயம், ஆத், சமூத் போன்ற சமூகங்களும் பொய்ப்பித்துள்ளன. தெளிவாக எடுத்துரைப்பதுதான் தூதர் மீதுள்ள கடமையாகும். தம் இறைவன் உங்களுக்கு எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை அவர் உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார்.
(19) 29.19. அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தொடங்குகிறான், பின்னர் அவை அழிந்த பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கிறான் என்பதை இந்த பொய்ப்பிப்பவர்கள் பாரக்கவில்லையா?! நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அது இலகுவானதாகும். அவன் ஆற்றலுள்ளவன். அவனுக்கு எதுவும் இயலாததல்ல.
(20) 29.20. -தூதரே!- மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவர்களிடம் கூறுவீராக: “பூமியில் சுற்றித் திரிந்து அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தொடங்கினான் என்பதையும் பின்னர் அவன் மனிதர்கள் மரணித்த பிறகு விசாரணைக்காக எவ்வாறு அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது. முதலில் எப்படி அவனுக்கு மக்களைப் படைக்க முடியாமல் இருக்கவில்லையோ அது போன்றே அவர்களை எழுப்பவும் அவன் முடியாதவனல்ல.
(21) 29.21. அவன் தன் படைப்புகளில் தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். தான் நாடியோர் மீது தன் அருளால் கருணை காட்டுகிறான். உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து உயிருடன் உங்களை அவன் எழுப்பும் போது மறுமை நாளில் விசாரணைக்காக அவனிடம் மட்டுமே செல்ல வேண்டும்.
(22) 29.22. பூமியிலோ, வானத்திலோ நீங்கள் உங்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியாது. அல்லாஹ்வைத் தவிர உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் பொறுப்பாளன் யாரும் இல்லை. அவனைத் தவிர அவனது வேதனையை உங்களை விட்டும் அகற்றும் எந்த உதவியாளரும் இல்லை.
(23) 29.23. அல்லாஹ்வின் வசனங்களையும் மறுமை நாளில் அவனை சந்திப்பதையும் நிராகரித்தவர்கள் என் அருளை விட்டும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அவர்கள் தங்களின் நிராகரிப்பினால் சுவனத்தில் ஒருபோதும் நுழைய மாட்டார்கள். மறுமையில் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.
(24) 29.24. இப்ராஹீம் தனது சமூகத்தை அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி ஏனைய தெய்வங்களை வணங்குவதை விட்டுவிடும் படி ஏவியதற்கு அவரது சமூகம் அளித்த பதில் இதுதான்: “உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவரைக் கொன்றுவிடுங்கள் அல்லது நெருப்பில் போட்டுவிடுங்கள்.” அல்லாஹ் நெருப்பிலிருந்து அவரைப் பாதுகாத்தான். அவர்கள் நெருப்பில் போட்ட பிறகும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றியதில், நம்பிக்கைகொள்ளும் மக்களுக்குப் படிப்பினைகள் இருக்கின்றன. ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் படிப்பினைகளைக் கொண்டு பயனடைவார்கள்.
(25) 29.25. இப்ராஹீம் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நீங்கள் சிலைகளை வணங்கும் தெய்வங்களாக எடுத்திருப்பது, உலக வாழ்வில் அவற்றை வணங்குவதில் உள்ள பற்று மற்றும் பழக்கத்தினால்தான். பின்னர் மறுமை நாளில் உங்களிடையேயுள்ள பற்று அறுபட்டுப்போகும். வேதனையைக் காணும்போது உங்களில் ஒருவர் மற்றவரை விட்டும் விலகிவிடுவார். ஒருவரையொருவர் சபிப்பார்கள். உங்களின் இருப்பிடம் நரகமாகும். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைப் தடுக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார்கள். நீங்கள் வணங்கிய சிலைகளாலோ, மற்றவர்களாலோ உங்களுக்கு உதவ முடியாது.
(26) 29.26. லூத் அவரை ஏற்றுக் கொண்டார். இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் அருள் வளமிக்க ஷாம் தேசத்தை நோக்கி புலம்பெயர்ந்து செல்கின்றேன். திட்டமாக அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. அவன் தன் பக்கம் புலம்பெயர்பவர்களை இழிவுபடுத்த மாட்டான். தனது நிர்ணயத்திலும் திட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.
(27) 29.27. நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் அவரது மகன் யஅகூபையும் வழங்கினோம். அவருடைய சந்ததியில் நபித்துவத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் வழங்கினோம். அவர் சத்தியத்தில் உறுதியாக இருந்ததற்கான கூலியை இவ்வுலகில் நல்ல பிள்ளைகள், அழகிய புகழ் மூலம் அவருக்கு வழங்கினோம். நிச்சயமாக மறுமையில் அவருக்கு நல்லவர்களுக்கு கூலி வழங்கப்படுவதுபோன்றே வழங்கப்படும். உலகில் அவருக்கு வழங்கப்பட்டதனால் மறுமையில் அவருக்காக தயார்படுத்தப்பட்டுள்ள சங்கையான கூலியில் எவ்வித குறைவும் செய்யப்படாது.
(28) 29.28. -தூதரே!- லூத்தையும், அவர் தம் சமூகத்திடம் கூறிய வேளையை நினைவுகூர்வீராக. “உலக மக்களில் உங்களுக்கு முன்னர் நிச்சயமாக யாரும் செய்திராத மோசமான பாவத்தைச் செய்கிறீர்கள். ஆரோக்கியமான இயல்புகள் மறுக்கும் இந்த பாவத்தை நீங்கள்தாம் முதலாவதாக ஆரம்பித்துள்ளீர்கள்.
(29) 29.29. நிச்சயமாக நீங்கள் உங்களின் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்காக ஆண்களின் பின்புறத்தில் வருகிறீர்களா? பயணிகளுக்கு பாதையில் தடையாக இருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் மானக்கேடான செயலுக்குப் பயந்து நீங்கள் இருக்கும் ஊர் வழியாக எவரும் கடந்துசெல்வதில்லை. உங்களின் அவைகளில் வைத்தே நிர்வாணம், வார்த்தையினாலும் செயலினாலும் உங்களைக் கடந்து செல்வோரை துன்புறுத்தல் போன்ற மோசமான காரியங்களில் ஈடுபடுகிறீர்களா?” மோசமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர் அவர்களைத் தடுத்ததற்கு அவரது சமூகத்தினர் கூறிய பதில் இதுதான்: “நீர் கூறும் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் நீர் எச்சரிக்கும் வேதனையை எங்களிடம் கொண்டுவாரும்.”
(30) 29.30. தனது சமூகம் பிடிவாதமாக, தன்னை மதிக்காமல் தங்கள் மீது வேதனையை இறக்குமாறு திமிராக பதில் கூறியபோது அவர் தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்: “இறைவா! நிராகரிப்பு மற்றும் அருவருப்பான செயல்களைப் பரப்புவதன் மூலம் பூமியில் குழப்பம் செய்யும் சமூகத்துக்கு எதிராக எனக்கு உதவி புரிவாயாக.”
(31) 29.31. நாம் அனுப்பிய தூதர்கள் இப்ராஹீமிடம் வந்து இஸ்ஹாக்கையும் அவருக்குப் பின்னர் யஅகூபையும் கொண்டு நற்செய்தியை கூறினார்கள். பின்னர் அவரிடம், “நிச்சயமாக நாங்கள் லூத்தின் சமூகத்தினர் வசிக்கும் சதூம் என்ற ஊரை அழிக்கப் போகின்றோம். நிச்சயமாக அங்கு வசிப்பவர்கள் தங்களின் மானக்கேடான செயல்களினால் அநியாயக்காரர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.
(32) 29.32. இப்ராஹீம் வானவர்களிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் அழிக்க நாடும் அந்த ஊரில் லூத்தும் இருக்கின்றாரே! அவர் அநியாயக்காரர் அல்லவே!” வானவர்கள் கூறினார்கள்: “அங்கு வசிப்பவர்களை நாம் நன்கறிவோம். அந்த சமூகத்தின் மீது இறக்கும் வேதனையில் இருந்து அவரையும் அவரது - மனைவியைத் தவிர - குடும்பத்தினரையும் நாம் காப்பாற்றுவோம். அவள் எஞ்சியிருந்து அழிபவர்களில் ஒருத்தியாக இருப்பாள். பின்பு அவர்களோடு அவளையும் அளித்து விடுவோம்.
(33) 29.33. நாம் லூத்தின் சமூகத்தை அழிக்க அனுப்பிய வானவர்கள் லூத்திடம் வந்தபோது தனது சமூகத்தின் கேடுகெட்ட பழக்கத்தை பயந்து அவர்களின் வருகை அவரை கவலை கொள்ளச் செய்தது. தூதர்கள் அவரிடம் ஆண்களின் உருவில் வந்தார்கள். அவரது சமூகமோ பெண்களைவிடுத்து ஆண்களிடம் தங்களின் காம இச்சையைத் தணித்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “பயப்படாதீர். உங்களின் சமூகம் உமக்கு தீங்கிழைக்க முடியாது. அவர்களை நாம் அழித்துவிடுவோம் என்று நாம் கூறியதற்காக கவலை கொள்ளாதீர். நிச்சயமாக நாம் உம்மையும் உம் மனைவியைத் தவிர உன்குடும்பத்தினரையும் காப்பாற்றி விடுவோம். அவள் எஞ்சியிருந்து அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருப்பாள். பின்பு அவர்களுடன் சேர்த்து அவளையும் அழித்துவிடுவோம்.
(34) 29.34. நிச்சயமாக மானக்கேடான காரியத்தை செய்துகொண்டிருக்கும் இந்த ஊர்வாசிகள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்குவோம். அது சுடப்பட்ட கல்மழையாகும். அது அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் கெட்ட மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும். அந்த மானக்கேடான காரியம் தங்களின் இச்சையை தணிக்க பெண்களை விடுத்து ஆண்களிடம் வருவதாகும்.
(35) 29.35. நாம் அழித்த இந்த ஊரிலே அறிந்துகொள்ளும் மக்களுக்கு தெளிவான ஆதாரத்தை விட்டுவைத்துள்ளோம். ஏனெனில் அவர்கள்தாம் ஆதாரங்களைக் கொண்டு படிப்பினை பெறுவார்கள்.
(36) 29.36. மத்யனை நோக்கி அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுடைய வணக்கத்தின் மூலம் மறுமையில் கூலி வழங்கப்படுவதை எதிர்பாருங்கள். பாவங்கள் புரிந்தும், அவற்றைப் பரப்பியும் பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்கள்.
(37) 29.37. அவரது சமூகத்தினர் அவரைப் பொய்ப்பித்தார்கள். ஆகவே பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. தங்களின் வீடுகளில் தங்களின் முகங்களில் மண் ஒட்டுமளவு முகம்குப்புற அசைவின்றி அதிகாலையில் வீழ்ந்து கிடந்தார்கள்.
(38) 29.38. ஹூத் உடைய மக்கள் ஆதையும், ஸாலிஹின் மக்கள் ஸமூதையும் நாம் அழித்துள்ளோம். -மக்காவாசிகளே!- ஹழ்ரமௌத்தின் ஷிஹ்ரிலும், ஹிஜ்ரிலும் உள்ள அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து அவர்கள் அழிக்கப்பட்ட அடையாளங்கள் உங்களுக்குத் தெளிவாகிவிட்டன. பாழடைந்த அவர்களின் வசிப்பிடங்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. அவர்கள் செய்து கொண்டிருந்த நிராகரிப்பான மற்றும் ஏனைய பாவமான காரியங்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டினான். அவர்களை நேரான வழியை விட்டும் திருப்பிவிட்டான். அவர்களது தூதர்கள் கற்றுக்கொடுத்தன் மூலம் சத்தியத்தையும் வழிகேட்டையும் நேர்வழியையும் தெளிவாக அறிந்தவர்களாக இருந்தார்கள். ஆயினும் அவர்கள் நேர்வழியைப் பின்பற்றாமல் தங்களின் மனோ இச்சையைப் பின்பற்றுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
(39) 29.39. காரூன் மூஸாவின் சமூகத்திற்கு எதிராக வரம்புமீறியபோது நாம் அவனையும் அவனது வீட்டையும் பூமியில் புதையச் செய்துவிட்டோம். ஃபிர்அவ்னையும் அவனுடைய அமைச்சர் ஹாமானையும் கடலில் மூழ்கடித்து அழித்தோம். மூஸா அவர்களிடம் தெளிவான தனது நம்பகத் தன்மைக்கான சான்றுகளைக் கொண்டு வந்தார். ஆனால் அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் எகிப்தில் கர்வம் கொண்டார்கள். அவர்களால் நம் வேதனையிலிருந்து தப்ப முடியவில்லை.
(40) 29.40. முன்பு கூறப்பட்ட ஒவ்வொருவரையும் நம் அழிக்கும் வேதனையால் நாம் தண்டித்தோம். அவர்களில் லூத்துடைய சமூகத்தின் மீது சுடப்பட்ட கல்மழையைப் பொழியச் செய்தோம். அவர்களில் ஸாலிஹ் மற்றும் ஷுஐபின் சமூகங்களைப் பேரிடி தாக்கியது. அவர்களில் காரூனை பூமியில் புதையச் செய்தோம். அவர்களில் நூஹின் சமூகம், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியவர்களை மூழ்கடித்து அழித்தோம். பாவமின்றி அவர்களைத் தண்டித்து அல்லாஹ் அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள், தண்டனைக்கு உரியவர்களாக ஆனார்கள்.
(41) 29.41. தங்களுக்குப் பயனளிக்கும் அல்லது பரிந்துரை செய்யும் என்ற எண்ணத்தில் அல்லாஹ்வை விடுத்து, சிலைகளை வணங்கும் இணைவைப்பாளர்களுக்கு உதாரணம் சிலந்தியைப் போன்றதாகும். தன் மீதான அத்துமீறலில் இருந்து அது தன்னைக் காத்துக்கொள்வதற்காக ஒரு வீட்டை அமைத்துக்கொண்டது. வீடுகளில் மிகவும் பலவீனமானது சிலந்தியின் வீடுதான். அது சிலந்தியை விட்டும் எந்தவொரு எதிரியையும் தடுக்காது. அவ்வாறுதான் அவர்களின் சிலைகள் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ, பரிந்துரை செய்யவோ சக்தி பெறாது. இணைவைப்பாளர்கள் இதனை அறிந்திருந்தால் அல்லாஹ்வைவிடுத்து சிலைகளைத் தாம் வணங்கும் தெய்வங்களாக ஆக்கியிருக்க மாட்டார்கள்.
(42) 29.42. நிச்சயமாக அல்லாஹ் அவனை விடுத்து அவர்கள் வணங்கக்கூடியவற்றை அறிவான். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், நிர்ணயத்தில், திட்டத்தில் அவன் ஞானம் மிக்கவன்.
(43) 29.43. மக்களை விழிப்பூட்டி அவர்களுக்கு சத்தியத்தை காண்பித்து அதன்பக்கம் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உதாரணங்களை நாம் அவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றோம். அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதன் நோக்கங்களையும் அறிந்தவர்கள்தாம் அதனை மிகச்சரியாக புரிந்து கொள்வார்கள்.
(44) 29.44. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்துள்ளான். அவற்றை அவன் வீணாக, அசத்தியத்திற்காக படைக்கவில்லை. நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன. ஏனெனில் திட்டமாக அவர்கள்தாம் படைப்புகளைக்கொண்டு படைப்பாளனை அறிந்துகொள்வார்கள். நிச்சயமாக நிராகரிப்பாளர்களோ பிரபஞ்சத்திலும் தங்களுக்குள்ளும் காணப்படும் சான்றுகளை, படைப்பாளனின் வல்லமையை, மகத்துவத்தை கண்டுகொள்ளாமல் கடந்துவிடுகிறார்கள்.
(45) 29.45. -தூதரே!- அல்லாஹ் உமக்கு வஹியின் மூலம் அறிவிக்கும் குர்ஆனை மக்களுக்குப் படித்துக் காட்டுவீராக. தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவீராக. பரிபூரணமான முறையில் நிறைவேற்றப்படும் தொழுகை தொழக்கூடியவனை பாவங்கள் மற்றும் தீய காரியங்களில் விழுந்துவிடாமல் தடுக்கிறது ஏனெனில் அது உள்ளங்களில் ஏற்படுத்தும் ஒளி மனிதனை பாவங்களைவிட்டும் தடுக்கிறது, நற்செயல்களின்பால் வழிகாட்டுகிறது அனைத்தையும்விட அல்லாஹ்வை நினைவுகூர்வதே பெரிதானதாகும். நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். நிச்சயமாக நலவாக இருந்தால் நன்மையையும் தீமையாக இருந்தால் தீமையையும் வழங்குவான்.
(46) 29.46. -நம்பிக்கையாளர்களே!- வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் அறிவுரை மற்றும் தெளிவான ஆதாரங்களைக்கொண்டு அவர்களை அழைத்தல், உரையாடல் ஆகிய அழகிய முறையில் அன்றி விவாதம் செய்யாதீர்கள். ஆயினும் அவர்களில் பிடிவாதம் கொண்டு அநீதியிழைத்து உங்களுக்கு எதிராக போரை அறிவித்தவர்களைத்தவிர. அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் வரை அல்லது இழிவடைந்து தங்களின் கைகளால் ஜிஸ்யா வரி கட்டும்வரை அவர்களுடன் போரிடுங்கள். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் கூறுங்கள்: “அல்லாஹ் எங்கள் மீது இறக்கிய குர்ஆனின் மீதும், உங்கள் மீது இறக்கிய தவ்ராத் மற்றும் இன்ஜீலின் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். எங்களின் இறைவனும் உங்களின் இறைவனும் ஒருவன்தான். அவனை வணங்குவதிலும் அவனது இறைவல்லமையிலும் பூரணத்தன்மையிலும் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. நாங்கள் அவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாகவும் அடிபணிந்தவர்களாகவும் இருக்கின்றோம்.
(47) 29.47. உமக்கு முன்னுள்ளவர்கள் மீது வேதங்களை இறக்கியவாறே நாம் உம்மீதும் குர்ஆனை இறக்கினோம். அவர்களில் தவ்ராத்தைப் படிக்கும் சிலர் - அப்துல்லாஹ் இப்னு சலாம் போன்றோர் - தங்களின் வேதங்களில் குர்ஆனைக்குறித்து வர்ணிக்கப்பட்டிருப்பதைக் காண்பதால் அதன் மீது நம்பிக்கைகொள்கிறார்கள். இணைவைப்பாளர்களில் சிலரும் அதன் மீது நம்பிக்கைகொள்கிறார்கள். சத்தியம் தெளிவான பின்னரும் மறுப்பதையும் நிராகரிப்பதையும் வழமையாகக் கொண்டோரே நம்முடைய வசனங்களை மறுக்கிறார்கள்.
(48) 29.48. -தூதரே!- குர்ஆனுக்கு முன்னர் நீர் எந்த வேதத்தையும் படித்துக் கொண்டிருக்கவில்லை. உம் வலக்கரத்தால் எழுதக்கூடியவராக நீர் இருந்ததில்லை. நிச்சயமாக நீர் எழுதவோ படிக்கவோ தெரியாத உம்மீயாக இருந்தீர். நீர் படிக்கக்கூடியவராக, எழுதக்கூடியவராக இருந்திருந்தால் மக்களில் மூடர்கள் உம் தூதுத்துவத்தில் சந்தேகம் கொண்டிருப்பார்கள்; நீர் முந்தைய வேதங்களிலிருந்துதான் எடுத்து எழுதுகின்றீர் என்று கூறியிருப்பார்கள்.
(49) 29.49. மாறாக உம்மீது இறக்கப்பட்ட குர்ஆன் அறிவு வழங்கப்பட்ட நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் தெளிவான சான்றுகளாகத் திகழ்கின்றது. அல்லாஹ்வை நிராகரித்து, அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள்தாம் நம்முடைய சான்றுகளை மறுப்பார்கள்.
(50) 29.50. இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “முந்தைய தூதர்களின் மீது இறக்கப்பட்டது போன்று இறைவனிடமிருந்து முஹம்மதின் மீதும் அற்புதங்கள் இறக்கப்பட வேண்டாமா?” -தூதரே!- இவ்வாறு ஆலோசனை கூறும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நிச்சயமாக அற்புதங்கள் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. அவன் அவற்றை நாடியபோது இறக்குகின்றான். என்னால் அவற்றை கொண்டுவர முடியாது. மாறாக நிச்சயமாக நான் உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனையைக்குறித்து தெளிவாக எச்சரிப்பவன் மாத்திரமே.”
(51) 29.51. -தூதரே!- அவர்களிடம் ஓதிக்காட்டப்படக்கூடிய குர்ஆனை நாம் உம்மீது இறக்கியிருப்பது அற்புதங்களைக் கோருவோருக்கு போதுமானதில்லையா? நிச்சயமாக அவர்கள் மீது இறக்கப்பட்ட குர்ஆன் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு அருளாகவும் அறிவுரையாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் அதிலுள்ளதன் மூலம் பயனடைவார்கள். முன்னைய தூதர்கள் மீது இறக்கப்பட்டது போன்ற அவர்கள் கோரும் அற்புதங்களை விட அவர்கள் மீது இறக்கப்பட்டது சிறந்ததாகும்.
(52) 29.52. -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் கொண்டுவந்தது உண்மையானது என்பதற்கும் அதனை நீங்கள் மறுத்ததற்கும் சாட்சிகூற அல்லாஹ்வே போதுமானவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிவான். அவை இரண்டிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் அசத்தியத்தின் மீது நம்பிக்கைகொண்டு வணக்கத்திற்குத் தகுதியான அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள்தாம் ஈமானுக்குப் பகரமாக நிராகரிப்பை மாற்றிக்கொண்டதனால் நஷ்டமடைந்தவர்களாவர்.
(53) 29.53. -தூதரே!- இணைவைப்பாளர்கள் நீர் எச்சரிக்கும் வேதனையை விரைவாக வேண்டுகிறார்கள். அவர்களைத் தண்டிப்பதற்கு முந்தாத, பிந்தாத ஒரு நேரத்தை அல்லாஹ் நிர்ணயித்திருக்காவிட்டால் அவர்கள் வேண்டும் வேதனை வந்திருக்கும். அது அவர்கள் எதிர்பார்க்காதபோது திடீரென அவர்களிடம் வந்தே தீரும்.
(54) 29.54. நீர் எச்சரித்த அந்த வேதனைக்கு அவர்கள் அவசரப்படுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு வாக்களித்த நரகமானது அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். அவர்கள் அதன் வேதனையிலிருந்து தப்பியோட முடியாது.
(55) 29.55. அவர்களுக்கு மேலிருந்தும் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்தும் வேதனை அவர்களைச் விரிப்பாக சூழ்ந்துகொள்ளும் நாளில் அவர்களைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் அவர்களிடம் கூறுவான்: “நீங்கள் செய்து கொண்டிருந்த இணைவைப்பான, பாவமான காரியங்களுக்குக் கூலியாக இவ்வேதனையை அனுபவியுங்கள்.”
(56) 29.56. என்னை நம்பிய அடியார்களே! என்னை வணங்கி நிலைபெற்று இருக்க முடியாத இடங்களிலிருந்து புலம்பெயர்ந்து செல்லுங்கள். நிச்சயமாக என்னுடைய பூமி விசாலமானது. எனவே என்னை மட்டுமே வணங்குங்கள். எனக்கு இணையாக யாரையும் ஆக்கிவிடாதீர்கள்.
(57) 29.57. மரண பயம் உங்களை புலம்பெயர்வதை விட்டும் தடுத்துவிட வேண்டாம். ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். பின்னர் விசாரணைக்காகவும் கூலிபெறுவதற்காகவும் மறுமை நாளில் நம்மிடம் மட்டுமே நீங்கள் திரும்பிவர வேண்டும்
(58) 29.58. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவன் பக்கம் நெருக்கி வைக்கும் நற்செயல்களில் ஈடுபட்டவர்களை நாம் சுவனத்தில் உயர்வான இல்லங்களில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அழிவு ஏற்படாது. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படக்கூடியவர்களுக்கு வழங்கப்படும் இந்தக் கூலி சிறப்பானதாகும்.
(59) 29.59. அவர்கள் வழிப்படுவதிலும் பாவத்தை விட்டும் விலகியிருப்பதிலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படக்கூடியவர்களுக்கு வழங்கப்படும் கூலி சிறப்பானதாகும். தங்கள் இறைவனை மட்டுமே தங்களின் எல்லா விவகாரங்களிலும் சார்ந்திருப்பார்கள்.
(60) 29.60. தமது உணவை சேமித்து வைக்கவோ, சுமந்து செல்லவோ சக்தியற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் -அவை அதிகமானவை- உங்களுக்கும் அல்லாஹ்வே உணவளிக்கிறான். எனவே பசிக்குப் பயந்து புலம் பெயராமல் இருக்க உங்களுக்கு அனுமதியில்லை. அவன் உங்களின் பேச்சுகளை செவியேற்கக்கூடியவன்; உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(61) 29.61. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம், “வானங்களைப் படைத்தது யார்? பூமியைப் படைத்தது யார்? மாறி மாறி வரும் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்தவன் யார்?” என்று நீர் கேட்டால், “அல்லாஹ்தான் அவற்றைப் படைத்தான்” என்று கூறுவார்கள். பின்னர் எவ்வாறு அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவனை விடுத்து பலனளிக்கவோ, தீங்களிக்கவோ சக்தியற்ற சிலைகளை வணங்குகிறார்கள்?
(62) 29.62. அல்லாஹ் தான் அறிந்த ஒரு நோக்கத்தின்படி தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகவும், தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகின்றான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனுக்கு மறைவானதல்ல. தனது அடியார்களுக்குப் பொருத்தமான ஏற்பாடுகளும் அவனை விட்டு மறையாது.
(63) 29.63. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம், “வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் வறண்ட பூமியை செழிப்பாக்கியவன் யார்?” என்று நீர் கேட்டால், “வானத்திலிருந்து மழையை இறக்கி பூமியை செழிப்பாக்கியவன் அல்லாஹ்தான்” என்று நிச்சயம் கூறுவார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: “உங்களுக்கு எதிராக ஆதாரத்தை வெளிப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.” அவர்களில் பெரும்பாலானோர் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனம். அவர்கள் விளங்கியிருந்தால் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற சிலைகளை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கியிருக்க மாட்டார்கள்.
(64) 29.64. இந்த உலக வாழ்க்கை -இதிலுள்ள இன்பங்கள்- அதன் மீது உள்ளம் மோகம் கொண்டவர்களுக்கு வீணும் விளையாட்டுமேயாகும். அது மிக விரைவில் முடிந்துவிடும். நிலையாக இருக்காது. நிச்சயமாக மறுமையின் வீடே நிலைத்திருக்கக்கூடிய உண்மையான வாழ்க்கையாகும். அவர்கள் அறிந்திருந்தால் நிலையானதை விட்டுவிட்டு அழியக்கூடியதை முற்படுத்தியிருக்க மாட்டார்கள்.
(65) 29.65. இணைவைப்பாளர்கள் கடலில் கப்பல்களில் பயணம் செய்தால் மூழ்கிவிடாமல் தங்களைக் காப்பாற்றுமாறு அல்லாஹ் ஒருவனிடமே மனத்தூய்மையுடன் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் அவன் அவர்களைக் மூழ்குவதில் இருந்து காப்பாற்றிவிட்டால் அவனுடன் சேர்த்து அவர்களது தெய்வங்களை வணங்கி இணைவைப்பாளர்களாக மாறிவிடுகின்றனர்.
(66) 29.66. நாம் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்வதற்காகவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உலக வாழ்வின் இன்பங்களை அனுபவிப்பதற்காகவும் அவர்கள் இணைவைப்பாளர்களாகி மாறிவிட்டார்கள். பின்பு இதன் தீய விளைவை மரணிக்கும் வேளையில் அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
(67) 29.67. கடலில் மூழ்கிவிடாமல் அவர்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வின் அருட்கொடையை மறுப்பவர்கள் நாம் அவர்களுக்கு வழங்கிய மற்றொரு அருட்கொடையை நினைத்துப் பார்க்க வேண்டாமா? அது நாம் அவர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பான பூமியை அளித்துள்ளோம், அவர்கள் அல்லாதவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவர்களது பெண்கள், பிள்ளைகள் ஆகியோர் சிறைபிடிக்கப்படுகின்றனர். சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன. போலியாக எண்ணிய அசத்திய தெய்வங்களின் மீது நம்பிக்கைகொண்டு, அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தாமல் நிராகரிக்கிறார்களா?
(68) 29.68. அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று அவனோடு இணைத்து பொய்யாக இட்டுக்கட்டுபவனைவிட அல்லது தூதர் கொண்டுவந்த சத்தியத்தை பொய் என்று கூறுபவனைவிட மிகப்பெரும் அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிராகரிப்பாளர்களுக்கும் அவர்களைப் போன்றவர்களுக்கும் நரகத்தில் இருப்பிடம் இருக்கின்றது.
(69) 29.69. யார் நம்முடைய திருப்தியை நாடி தமது ஆன்மாவுடன் போராடுவார்களோ நாம் அவர்களுக்கு நேரான வழியை அடையும் பாக்கியத்தை அளிப்போம். நிச்சயமாக அல்லாஹ் உதவி செய்து வழிகாட்டுவதன் மூலம் நன்மை செய்வோருடன் இருக்கின்றான்.