(1) 1.1. அல்லாஹ்விடம் உதவிதேடியவராகவும் அவனது பெயரைக் கூறுவதன் மூலம் அருள்வளத்தை எதிர்பார்த்தவராகவும் குர்ஆன் ஓதுவதை ஆரம்பம் செய்கிறேன். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் அல்லாஹ்வின் மூன்று அழகிய பெயர்களை உள்ளடக்கியுள்ளது. 1. அல்லாஹ்: வணங்கப்படுவதற்கு உண்மையில் தகுதியானவன். இது வேறு யாருக்கும் சூட்டப்பட முடியாத, அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தமான பெயராகும். 2. அர்ரஹ்மான்: அளவற்ற அன்பாளன். 3. அர்ரஹீம்: தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அன்பு காட்டுபவன். குறிப்பாக, தனது அடியார்களில் அவனையே வணங்கி வாழும் விசுவாசிகளுக்கு அன்பு காட்டுபவன்.
(2) 1.2. முழுமையான புகழும், பெருமை மற்றும் பரிபூரணம் என்ற அனைத்து விதமான புகழ்களும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே. ஏனெனில், அவன்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்தவன்;அவற்றைப் பராமரிப்பவன், நிர்வகிப்பவன், ஆலமீன் எனப்படும் அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்துக்கும் இரட்சகன்.
(3) முந்திய வசனத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் மீண்டும் அவனைப் புகழப்பட்டுள்ளது.
(4) 1.4.கூலி வழங்கப்படும், கணக்குகள் தீர்க்கப்படும் யவ்முத்தீன் என்ற மறுமை நாளில் நடைபெற உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே என்று அல்லாஹ்வைப் புகழ்வோம். அந்த நாளில் எந்த ஆத்மாவும் இன்னொருவருக்கு எதுவும் செய்ய முடியாது.
(5) 1.5. அனைத்து வகையான வணக்கங்களையும் கீழ்ப்படிதலையும் உனக்கு மாத்திரமே நிறைவேற்றுவோம். உனக்கு இணையாக யாரையும் ஆக்கமாட்டோம்.எங்களுடைய எல்லா விஷயங்களிலும் உன்னிடம் மாத்திரமே நாங்கள் உதவி தேடுகிறோம்.உன் கைவசமே நன்மைகள் அனைத்தும் உள்ளன. உன்னைத்தவிர வேறு உதவியாளன் இல்லை.
(6) 1.6.நேரான பாதையின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டி அதிலேயே எங்களைச் செலுத்துவாயாக. மேலும், அதில் எங்களை உறுதிப்படுத்தி நேர்வழியில் செல்வதை இன்னும் அதிகரிப்பாயாக. கோணல் இல்லாத தெளிவான பாதையே நேரான பாதை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டுவந்த இஸ்லாம்தான் அந்த நேரான பாதை.
(7) 1.7 அந்த நேர்வழி உன் அடியார்களில் நீ வழிகாட்டி அருள்புரிந்த நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லவர்கள் ஆகியோர் சென்ற வழி. அவர்களே சிறந்த தோழர்கள். சத்தியத்தை அறிந்து அதனைப் பின்பற்றாமல் உன்னுடைய கோபத்திற்கு ஆளான யூதர்களின் வழி அல்ல அது; சத்தியத்தை தேடுவதிலும் அதனை அடைவதிலும் அலட்சியமாக இருந்ததால் அதனை விட்டு வழிதவறிய கிறித்தவர்களின் வழியுமல்ல அது.