(1) 57.1. வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் தூய்மையைப் பறைசாற்றுகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைப்பிலும், நிர்ணயத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.
(2) 57.2. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவன் தான் உயிர்ப்பிக்க நாடியவர்களை உயிர்ப்பிக்கிறான், தான் மரணிக்கச் செய்ய நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.
(3) 57.3. அவன் முதலாமவன். அவனுக்கு முன்னால் எதுவும் இல்லை. அவன் இறுதியானவன். அவனுக்குப் பிறகு யாரும் இல்லை. அவன் வெளிப்படையானவன். அவனுக்கு மேல் எதுவும் இல்லை. அவன் மறைவானவன். அவனை விட நெருக்கமான எதுவும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது.
(4) 57.4. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அது ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. அவன் கண்சிமிட்டும் நேரத்தை விட குறுகிய நேரத்தில் அவற்றைப் படைப்பதற்கு சக்தியுடையவன்தான். பின்னர் அவன் அர்ஷின்மீது தன் கண்ணியத்திற்கேற்ப உயர்ந்து விட்டான். பூமியில் நுழையக்கூடிய மழைநீர், விதை, ஏனையவை, அதிலிருந்து வெளிப்படக்கூடிய தாவரங்கள், கனிமங்கள், ஏனையவை, வானத்திலிருந்து இறங்கக்கூடிய மழை, வஹி, ஏனையவை, அதன்பால் ஏறக்கூடிய வானவர்கள், அடியார்களின் செயல்கள் மற்றும் ஆன்மாக்கள் ஆகிய அனைத்தையும் அவன் அறிகிறான். -மனிதர்களே!- நீங்கள் எங்கிருந்த போதிலும் தன் அறிவால் அவன் உங்களுடேனேயே இருக்கின்றான். உங்களின் எந்த விடயமும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நீங்கள் செய்பவற்றை அவன் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(5) 57.5. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவன் பக்கம் மட்டுமே விவகாரங்கள் திரும்புகின்றன. அவன் மறுமை நாளில் படைப்புகள் அனைவரையும் விசாரணை செய்வான். அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(6) 57.6. அவன் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்கிறான். அதனால் இருள் பரவி மக்கள் தூங்கி விடுகிறார்கள். பகலை இரவின்மீது பிரவேசிக்கச் செய்கிறான். அதனால் பிரகாசம் ஏற்பட்டு மக்கள் தங்களின் பணிகளுக்குச் செல்கிறார்கள். அவன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(7) 57.7. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைப் பிரதிநிதிகளாக்கிய செல்வங்களை அவன் உங்களுக்கு அளித்த மார்க்கத்தின்படி அதனைக் கையாளுங்கள், செலவு செய்யுங்கள். உங்களில் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு தங்களின் செல்வங்களை அவனுடைய பாதையில் செலவு செய்தவர்களுக்கு அவனிடத்தில் சுவனம் என்னும் மகத்தான கூலி உண்டு.
(8) 57.8. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ள விடாமல் உங்களைத் தடுப்பது எது? நீங்கள் உங்கள் இறைவனின்மீது நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக தூதர் அவன் பக்கம் உங்களை அழைக்கின்றார். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவன் உங்களை உங்களின் தந்தையரின் முதுகுகளிலிருந்து வெளிப்படுத்திய சமயத்தில் நீங்கள் அவன்மீது நம்பிக்கைகொள்ள வேண்டும் என்று அவன் உங்களிடம் வாக்குறுதியைப் பெற்றுள்ளான்.
(9) 57.9. உங்களை நிராகரிப்பு, அறியாமை என்னும் இருள்களிலிருந்து வெளியேற்றி ஈமான், அறிவு என்னும் ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக அவனே தன் அடியார் முஹம்மதுமீது தெளிவான சான்றுகளை இறக்குகிறான். நிச்சயமாக அல்லாஹ் தன் தூதரை நேர்வழிகாட்டக்கூடியவராகவும் நற்செய்தி கூறக்கூடியவராகவும் உங்களின்பால் அனுப்பி உங்களோடு மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
(10) 57.10. அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்க விடாமல் உங்களைத் தடுப்பது எது? வானங்கள் மற்றும் பூமிக்கு அவனே சொந்தக்காரனாவான். -நம்பிக்கையாளர்களே!- உங்களில் மக்கா வெற்றிக்கு முன்னரே அல்லாஹ்வின் திருப்தியை நாடி தங்களின் செல்வங்களை செலவு செய்து இஸ்லாத்தின் வெற்றிக்காக நிராகரிப்பாளர்களுடன் போரிட்டவர்களும், மக்கா வெற்றிக்குப் பிறகு செலவு செய்தவர்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர்களும் சமமாகமாட்டார்கள். மக்கா வெற்றிக்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் தங்களின் செல்வங்களை செலவு செய்தவர்களும் போரிட்டவர்களும் அதற்குப் பின் செலவளித்து போரிட்டவர்களை விட அவனிடத்தில் உயர்ந்த படித்தரங்களைப் பெற்றவர்களாவர். அல்லாஹ் இரு பிரிவினருக்கும் சுவனத்தை வாக்களித்துள்ளான். அவன் நீங்கள் செய்யக்கூடியதை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(11) 57.11. யார் தம் செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியை நாடி மனத்திருப்தியுடன் செலவு செய்வார்களோ அவர்களுக்கு அவன் அவர்கள் செலவழித்ததற்குப் பகரமாக பலமடங்கு கூலியை வழங்கிடுவான். அவர்களுக்கு மறுமை நாளில் சுவனம் என்னும் கண்ணியமான கூலியும் உண்டு.
(12) 57.12. நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்களுக்கு முன்னாலும் வலப்புறமும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் நிலையில் நீர் காணும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இன்றைய தினம் உங்களுக்கு சுவனங்களைக் கொண்டு நற்செய்தி உண்டாகட்டும். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அந்தக் கூலியே ஈடிணையற்ற மகத்தான வெற்றியாகும்.
(13) 57.13. நயவஞ்சகம் கொண்ட ஆண்களும் பெண்களும் நம்பிக்கையாளர்களைப் பார்த்து “நம்பிக்கையாளர்களே! உங்களின் ஒளியிலிருந்து பாலத்தைக் கடப்பதற்கு உதவி பெறும் பொருட்டு எங்களுக்காகக் காத்திருங்கள்” என்று கூறும் நாளில் அவர்களிடம் பரிகாசமாகக் கூறப்படும்: “உங்களுக்குப் பின்னால் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் பிரகாசிக்கக்கூடிய ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” அவர்களிடையே ஒரு சுவர் எழுப்பப்படும். அதற்கு ஒரு கதவு இருக்கும். நம்பிக்கையாளர்களின் பக்கத்தில் இருக்கும் அதன் உட்புறத்தில் அருள் இருக்கும். நயவஞ்சகர்களின் பக்கத்தில் இருக்கும் அதன் வெளிப்புறத்தில் வேதனை இருக்கும்.
(14) 57.14. நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களை பின்வருமாறு கூறியவர்களாக அழைப்பார்கள்: “நாங்கள் இஸ்லாத்தை ஏற்று, வழிப்பட்டு உங்களுடன் இருக்கவில்லையா?” அதற்கு நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக. நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். ஆயினும் நயவஞ்சகத்தால் உங்களுக்கு நீங்களே அழிவை ஏற்படுத்தி சோதனைக்குள்ளாகிவிட்டீர்கள். நம்பிக்கையாளர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு உங்களின் நிராகரிப்பை வெளிப்படுத்தலாம் என்று நீங்கள் காத்திருந்தீர்கள். அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வான் என்பதிலும் நீங்கள் மரணித்தபிறகு உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதிலும் சந்தேகம் கொண்டீர்கள். பொய்யான உங்களின் எதிர்பார்ப்புகள் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டன. அந்த நிலையிலேயே நீங்கள் மரணித்தும் விட்டீர்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் ஷைத்தான் உங்களை ஏமாற்றி விட்டான்.”
(15) 57.15 -நயவஞ்சகர்களே!- இன்றைய தினம் உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கு உங்களிடம் எந்த ஈட்டுத் தொகையும் பெறப்படாது. அல்லாஹ்வை வெளிப்படையாக நிராகரித்தவர்களிடமும் எந்த ஈட்டுத் தொகையும் பெறப்படாது. உங்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் நரகமே சேருமிடமாகும். அது உங்களுக்குத் தகுதியானது. நீங்களும் அதற்குத் தகுதியானவர்கள். அது மிகவும் மோசமான சேருமிடமாகும்.
(16) 57.16. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும் அவன் குர்ஆனில் இறக்கிய வாக்குறுதி மற்றும் எச்சரிக்கையினாலும் உருகுவதற்கும் நிம்மதியடைவதற்குமான நேரம் வரவில்லையா? தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களைப்போன்றும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களைப்போன்றும் அவர்கள் இறுகிய உள்ளங்களைப் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் தூதர்கள் அனுப்பப்படுவதற்குமான இடைவெளி நீண்டுவிட்ட காரணத்தால் அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்களில் அதிகமானோர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் பாவங்கள் புரிபவர்களாகவே இருக்கின்றார்கள்.
(17) 57.17. அறிந்துகொள்ளுங்கள், நிச்சயாமாக அல்லாஹ்தான் வறண்ட பூமியை தாவரங்களால் உயிர்ப்பிக்கச் செய்கிறான். -மனிதர்களே!- நீங்கள் விளங்கிக்கொள்ளும்பொருட்டும் வறண்ட பூமியை உயிர்ப்பித்தவன் நீங்கள் மரணித்ததன் பின்பு மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் உள்ளம் கடினமானதன் பின்பு அதனை மென்மையாக்கவும் ஆற்றலுடையவன் என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டும் அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் ஒருவனே என்பதையும் அறிவிக்கக்கூடிய சான்றுகளையும் ஆதாரங்களையும் நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டோம்.
(18) 57.18. நிச்சயமாக தங்களின் செல்வங்களில் சிலவற்றை சொல்லிக்காட்டாமலும் தொல்லையில்லாமலும் மனத்திருப்தியுடன் தர்மம் செய்யக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் செயல்களுக்கு பல மடங்கு கூலி உண்டு. ஒரு நன்மைக்கு அதைப்போன்று பத்து முதல் எழுநூறு என்று பல மடங்குவரை நன்மை வழங்கப்படும். அத்துடன் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் சுவனம் என்னும் கண்ணியமான கூலியும் உண்டு.
(19) 57.19. அல்லாஹ்வின்மீதும் தூதர்களின் மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்பவர்கள்தாம் அவனிடத்தில் உண்மையாளர்களும் தமது இறைவனிடத்தில் சாட்சியாளர்களுமாவர். அவர்களுக்கு தயார்செய்யப்பட்ட கண்ணியமான கூலியும் உண்டு. மறுமை நாளில் அவர்களுக்கு முன்னாலும் வலப்புறமும் அவர்களின் ஒளி இலங்கிக்கொண்டிருக்கும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து தங்களின் தூதர்மீது இறக்கப்பட்ட வசனங்களை பொய்யெனக் கூறுபவர்கள்தாம் நரகவாசிகளாவர். அவர்கள் மறுமை நாளில் நரகத்தில் நிரந்தமாக வீழ்ந்து கிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது.
(20) 57.20. அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை உடல்களுக்கான விளையாட்டும் உள்ளங்களுக்கான வேடிக்கையும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளும் அலங்காரமும் உங்களிடையே அதிகமான செல்வங்களை, குழந்தைகளை, இன்பம், ஆட்சியதிகாரத்தைக்கொண்டும் பெருமையடிப்பதுமாகும். அதற்கு உதாரணம் மழையைப் போன்றதாகும். அதனால் விளையும் பயிர்கள் விவசாயியை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன. பின்னர் அப்படியே இருக்காமல் இந்த பசுமையான பயிர்கள் காய்ந்துவிடுகின்றன. -பார்ப்பவனே!- பசுமையாக இருந்ததன் பின் மஞ்சள் நிறமாகி விடுவதை நீ காண்கின்றாய். பின்னர் அல்லாஹ் அவற்றை குப்பை கூளங்களாக்கி விடுகின்றான். மறுமையில் நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கடுமையான வேதனையும் நம்பிக்கைகொண்ட அல்லாஹ்வின் அடியார்களின் பாவங்களுக்கு மன்னிப்பும் அவனது திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்க்கை நிலையற்ற அழியக்கூடிய பொருளேயன்றி வேறில்லை. யார் மறுமையின் இன்பங்களைவிடுத்து அழியக்கூடிய இவ்வுலக வாழ்வை தேர்ந்தேடுத்துக் கொண்டாரோ அவர்தான் ஏமாற்றத்திற்கும் இழப்பிற்கும் உள்ளானவர் ஆவார்.
(21) 57.21. -மனிதர்களே!- நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும் பாவமன்னிப்புத் தேடுதல் மற்றும் ஏனைய வணக்கங்களான நற்செயல்களின்பால் விரையுங்கள். அதன் மூலம் நீங்கள் வானம் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவனத்தைப் பெறலாம். தன்னையும் தனது தூதரையும் நம்பிக்கைகொள்பவர்களுக்காக இச்சுவனத்தை அல்லாஹ் தயார்படுத்தியுள்ளான். இந்தக் கூலி அல்லாஹ்வின் அருளாகும். அவன் தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களின் மீது மகத்தான அருளுடையவனாவான்.
(22) 57.22. பூமியில் ஏற்படுகின்ற வரட்சியும் மற்றவைகளும் உங்களுக்கு ஏற்படுகின்ற துன்பம் ஒவ்வொன்றும், நாம் படைப்புகளை படைப்பதற்கு முன்னரே லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது.
(23) 57.23. -மனிதர்களே!- இது நீங்கள் இழந்தவற்றை எண்ணி கவலை கொள்ளாமல் இருப்பதற்காகவும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளைக் கொண்டு கர்வம் கொள்ளாமல் சந்தோசமாக இருப்பதற்காகவும்தான். நிச்சயமாக அல்லாஹ் தான் வழங்கியவற்றைக் கொண்டு மக்களிடம் கர்வம்கொள்ளக்கூடிய எவரையும் நேசிப்பதில்லை.
(24) 57.24. கட்டாயமாக செலவழிக்க வேண்டியதை செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து மற்றவர்களையும் கஞ்சத்தனம் செய்யுமாறு ஏவுவபர்கள் நஷ்டமடைபவர்களாவர். யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் புறக்கணிக்கிறாரோ அவர் அவனுக்கு எந்த தீங்கும் இழைத்துவிட முடியாது. நிச்சயமாக அவர் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறார். நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனாவான். அவன் தன் அடியார்களின் அடிபணிதலின்பால் தேவையுடையவன் அல்ல. அவன் எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவனாவான்.
(25) 57.25. நாம் தெளிவான ஆதாரங்கள், சான்றுகளைக்கொண்டு நம் தூதர்களை அனுப்பினோம். மனிதர்கள் நியாயமாக நடந்துகொள்ளும்பொருட்டு அவர்களுடன் வேதங்களையும், தராசையும் இறக்கினோம். நாம் இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான பலம் இருக்கின்றது. அதிலிருந்து ஆயுதங்கள் செய்யப்படுகின்றன. அதில் மக்களுக்கு அவர்களின் பணிகளிலும் தொழில்களிலும் பல பயன்களும் இருக்கின்றன. இது அல்லாஹ்வைக் காணாமல் யார் அவனுக்கு உதவி செய்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.
(26) 57.26. நாம் நூஹையும் இப்ராஹீமையும் தூதர்களாக அனுப்பினோம். அவர்களின் சந்ததிகளில் நபித்துவத்தையும் ஏற்படுத்தினோம்.அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் வழங்கினோம். அவர்கள் இருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நேர்வழியில் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
(27) 57.27. பின்னர் நாம் தூதர்களை தொடர்ந்து அனுப்பினோம். அவர்களின் சமூகங்களின்பால் தொடர்ந்து தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். நாம் அவர்களுக்குப் பின் மர்யமின் மகன் ஈசாவை அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். அவர்மீது நம்பிக்கைகொண்டு அவரைப் பின்பற்றியவர்களின் உள்ளங்களில் நாம் இரக்கத்தையும் கருணையையும் ஏற்படுத்தினோம். அவர்கள் தங்களிடையே அன்பானவர்களாகவும் கருணையாளர்களாகவும் திகழ்ந்தார்கள். தங்களின் மார்க்கத்தில் வரம்பு மீறுவதை அவர்கள் புதிதாக ஏற்படுத்திக் கொண்டார்கள். அல்லாஹ் அனுமதித்த சிலவற்றை - மணமுடிப்பது, இன்பங்களை அனுபவிப்பது போன்றவை - விட்டுவிட்டார்கள். நாம் அவர்களிடம் இவ்வாறு செய்யும்படிக் கூறவில்லை. அவர்கள் மார்க்கத்தில் இல்லாதவற்றை உருவாக்கி தங்களுக்குத் தாங்களே கடமையாக்கிக் கொண்டார்கள். நாம் அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதையே அவர்களிடம் விரும்பினோம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்களில் நம்பிக்கைகொண்டவர்களுக்கு நாம் அவர்களுக்கான கூலியை வழங்கினோம். அவர்களில் பெரும்பாலோர் முஹம்மது கொண்டுவந்ததை நிராகரித்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
(28) 57.28. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். முஹம்மது மீது நம்பிக்கைகொண்டதற்காகவும் முந்தைய தூதர்களின்மீது நம்பிக்கைகொண்டதற்காவும் அவன் உங்களுக்கு இருமடங்கு நன்மையையும் கூலியையும் வழங்குவான். இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு ஒளியை ஏற்படுத்துவான். நீங்கள் அதனைக்கொண்டு நேர்வழி பெறுவீர்கள். அதன் மூலம் மறுமை நாளில் சிராத் என்னும் பாலத்தையும் கடப்பீர்கள். அவன் உங்களை பாவங்களை மன்னித்து மறைத்துவிடுவான். அவற்றிற்காக உங்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். அவன் தன் அடியார்களை மிகவும் மன்னிப்பவனும் அவர்கள் மீது அன்புகாட்டுபவனும் ஆவான்.
(29) 57.29. -நம்பிக்கையாளர்களே!- நாம் உங்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள இரட்டிப்பான நன்மையின் மூலம் நமது மகத்தான அருளை நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டோம். இது வேதம் வழங்கப்பட்ட முன்சென்ற யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் அருளைத் தாம் நாடியவர்களுக்கு வழங்கி நாடியவர்களுக்குத் தடுப்பதற்கு தாங்கள் அல்லாஹ்வின் அருளிலிருந்து எதற்கும் சக்தி பெற்றவர்கள் அல்ல என்பதை அறிந்து, அல்லாஹ்விடமே அருள் உள்ளது, அதனை அவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான், தான் நாடியவர்களுக்கு வழங்காமல் தடுத்துக் கொள்கிறான் என்பதை அறிந்துகொள்வதற்காகவும்தான். அவன் மாபெரும் அருளாளனாவான். தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அதனை வழங்குகிறான்.