25 - ஸூரா அல்புர்கான் ()

|

(1) 25.1. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக்கூடிய குர்ஆனை தம் அடியாரும் தூதருமாகிய முஹம்மதின் மீது இறக்கியவன் மிகவும் நலவுகள் நிறைந்தவன், கண்ணியம் மிக்கவன். அது அவர் மனித, ஜின் இனத்திற்கு தூதராகவும் அல்லாஹ்வின் வேதனையைக்குறித்து எச்சரிக்கை செய்பவராகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

(2) 25.2. வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவன் தனக்கு மகனை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அவனுடைய ஆட்சியதிகாரத்தில் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவன் எல்லாவற்றையும் படைத்து தனது அறிவுக்கும் ஞானத்திற்கும் ஏற்ப ஒவ்வான்றுக்கும் பொருத்தமான அளவை படைப்புக்கு நிர்ணயித்துள்ளான்.

(3) 25.3. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து வேறு வணங்குபவைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். அவை சிறியதையோ பெரியதையோ எதையும் படைக்காது. மாறாக அவையே படைக்கப்பட்டவைதாம். ஒன்றுமே இல்லாமல் இருந்த அவர்களை அல்லாஹ்தான் படைத்தான். அவை தம்மைவிட்டு தீங்கினைத் தடுக்கவோ, தமக்கு பலனை ஏற்படுத்திக்கொள்ளவோ, உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்யவோ, மரணித்தவற்றை உயிர்ப்பிக்கவோ, இறந்தவர்களை அவர்களின் அடக்கஸ்த்தலங்களிலருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பவோ சக்தி பெறாது.

(4) 25.4. அல்லாஹ்வையும் தூதரையும் நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்: “இந்த குர்ஆனை முஹம்மது சுயமாகப் புனைந்துகொண்டு அதனை அபாண்டமாக அல்லாஹ்வின்பால் இணைத்துவிட்டார். இதனைப் புனைவதற்கு வேறு சில மனிதர்களும் அவருக்கு உதவியிருக்கிறார்கள்.” இந்த நிராகரிப்பாளர்கள் அபாண்டமாக இட்டுக் கட்டுகிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கே அன்றி வேறில்லை. மனிதர்கள் மற்றும் ஜின்களால் இதைப்போன்று ஒருபோதும் கொண்டுவர முடியாது.

(5) 25.5. குர்ஆனை நிராகரிக்கும் இவர்கள் கூறுகிறார்கள்: “இது முன்னோர்களின் கட்டுக் கதைகளும் புராணங்களுமாகும். அவற்றை முஹம்மது பிரதிபன்னியுள்ளார். இது காலையிலும் மாலையிலும் அவருக்குப் படித்துக் காட்டப்படுகிறது.

(6) 25.6. -தூதரே!- இந்த பொய்ப்பிப்பவர்களிடம் நீர் கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்தான் குர்ஆனை இறக்கினான். நீங்கள் எண்ணுவது போல புனைந்து கூறப்பட்டதல்ல. அவர்களுக்கு பாவமன்னிப்பில் ஆர்வமூட்டிவனாக பின்பு கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(7) 25.7. தூதரை மறுக்கும் இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “தான் நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதர் என்று எண்ணும் இவருக்கு என்னவாயிற்று? மற்ற மனிதர்கள் உண்பதைப்போலவே இவரும் உண்ணுகிறார். அவர்கள் கடைவீதிகளில் சம்பாதிப்பதற்காக சுற்றுவதைப்போலவே இவரும் சுற்றுகிறார். இவருடன் இவரை உண்மைப்படுத்தும், இவருக்கு உதவி புரிந்து தோழராக இருக்கும் ஒரு வானவரை அல்லாஹ் இறக்கியிருக்கக் கூடாதா?

(8) 25.8. அல்லது வானத்திலிருந்து ஏதேனும் பொக்கிஷம் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதன் பழங்களிலிருந்து இவர் உண்ண வேண்டாமா? அதனால் வாழ்வாதாரம் தேடி கடைவீதிகளில் சுற்றித் திரியாமல் தேவையற்றிருக்கலாம் அல்லவா?” அநியாயக்காரர்கள் கூறுகிறார்கள்: “-நம்பிக்கையாளர்களே!- நீங்கள் ஒரு தூதரைப் பின்பற்றவில்லை. மாறாக சூனியத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு புத்தி பேதலித்த ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்.”

(9) 25.9. -தூதரே!- அவர்கள் உம்மைப்பற்றி எவ்வாறெல்லாம் பொய்யான பண்புகளால் வர்ணிக்கிறார்கள் என்பதை ஆச்சரியமாக பாரும். “சூனியக்காரர் என்றும் சூனியம் செய்யப்பட்டவர் என்றும் பைத்தியக்காரர் என்றும் கூறுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் சத்தியத்தைவிட்டும் வழிதவறி விட்டார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதற்கு சக்திபெற மாட்டார்கள். உமது அமானிதம், நம்பகத் தன்மையில் எவ்வகையிலும் அவர்கள் குறைகாண முடியாது.

(10) 25.10. அல்லாஹ் நலன் நிறைந்தவன். அவன் நாடினால் அவர்கள் உமக்கு ஆலோசனை கூறியதை விட சிறந்தவற்றை உமக்கு அளித்திடுவான். இவ்வுலகில் உமக்காக தோட்டங்களை ஏற்படுத்தி அவற்றின் மாளிகைக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகளை ஓடச் செய்திருப்பான். நீர் அவற்றிலிருந்து பழங்களை உண்டிருக்கலாம். நீர் சொகுசாக வசிப்பதற்காக கோட்டைகளையும் ஏற்படுத்தியிருப்பான்.

(11) 25.11. அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் சத்தியத்தை தேடியோ ஆதாரத்தை வேண்டியோ வெளிப்படவில்லை. மாறாக நடந்தது என்னவெனில் அவர்கள் மறுமை நாளை நிராகரித்துவிட்டனர். மறுமை நாளை மறுப்பவர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் பெரும் நெருப்பைத் தயார்படுத்தி வைத்துள்ளோம்.

(12) 25.12. நிராகரிப்பாளர்கள் கொண்டு வரப்படும் போது அவர்களை தூரத்திலிருந்து நரகம் காணும் போது, அவர்கள் மீதுள்ள அதன் கடும் கோபத்தினால் அதன் கடுமையான கொந்தளிப்பையும் பயங்கரமான இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்.

(13) 25.13. இந்த நிராகரிப்பாளர்கள் அவர்களது கரங்கள் கழுத்துகளுடன் இணைத்து விலங்கிடப்பட்டவர்களாக நரகத்தில் நெருக்கடியான இடத்தில் எறியப்படும்போது அதிலிருந்து விடுபட வேண்டி அழிவை அழைப்பார்கள்.

(14) 25.14. -நிராகரிப்பாளர்களே!- இன்று நீங்கள் ஒரு அழிவை அழைக்காதீர்கள். பல அழிவுகளை அழையுங்கள். உங்களின் கோரிக்கை ஏற்கப்படாது. மாறாக நீங்கள் வேதனை மிக்க தண்டனையில் நிலையாக வீழ்ந்திருப்பீர்கள்.

(15) 25.15. -தூதரே!- நீர் கூறுவீராக: “மேலே வர்ணிக்கப்பட்ட வேதனை உங்களுக்குச் சிறந்ததா? அல்லது நிறுத்தப்படாத நிலையான அருட்கொடைகளை உள்ளடக்கிய சுவனமா? அதைத்தான் நம்பிக்கைகொண்ட, தன்னை அஞ்சக்கூடிய அடியார்களுக்கு கூலியாகவும், மறுமையில் திரும்புமிடமாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

(16) 25.16. அந்த சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பும் இன்பங்கள் உண்டு. இது அல்லாஹ் அளித்த வாக்குறுதியாகும். அவனை அஞ்சக்கூடிய அடியார்கள் அவனிடம் அதனைக் கேட்பார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். தன் வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான்.

(17) 25.17. அல்லாஹ் நிராகரிக்கும் இணைவைப்பாளர்களையும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிய தெய்வங்களையும் ஒன்றுதிரட்டும் நாளில் வணங்கியவர்களைக் கண்டிக்கும் விதமாக வணங்கப்பட்டவர்களிடம் அவன் கேட்பான்: “நீங்கள்தாம் உங்களை வணங்குமாறு கூறி என் அடியார்களை வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாங்களாகவே வழிகெட்டு விட்டார்களா?”

(18) 25.18. வணங்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ பரிசுத்தமானவன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னைத் தவிர வேறு இறைநேசர்களை பாதுகாவலர்களை ஏற்படுத்திக்கொள்வது எங்களுக்கு உகந்ததல்ல. நாங்கள் எவ்வாறு உன்னைவிடுத்து எங்களை வணங்குமாறு உன் அடியார்களை அழைத்திருப்போம்? ஆயினும் எங்கள் இறைவா! நீ இந்த இணைவைப்பாளர்களையும் இவர்களின் முன்னோர்களையும் படிப்படியாக தண்டிக்கும்பொருட்டு உலக இன்பங்களை அனுபவிக்கச் செய்தாய். அதனால் அவர்கள் உன்னை மறந்துவிட்டார்கள். உன்னுடன் மற்றவர்களையும் வணங்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் துர்பாக்கியத்தினால் அவர்கள் அழிவுக்குரிய சமூகமாக இருந்தார்கள்.”

(19) 25.19. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கியவர்கள் அவர்களைப் பற்றி நீங்கள் கூறியவற்றில் உங்களைப் பொய்யர்களாக்கிவிட்டார்கள். உங்களால் உங்களை விட்டும் வேதனையை அகற்றவோ உதவிபுரியவோ முடியாது. -நம்பிக்கையாளர்களே!- உங்களில் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பின் மூலம் அநியாயம் செய்கிறாரோ நாம் அவரை மேற்கூறப்பட்டவர்களுக்கு சுவைக்கச் செய்ததைப் போன்று கடுமையான முறையில் வேதனையை சுவைக்கச் செய்வோம்.

(20) 25.20. -தூதரே!- உமக்கு முன்னர் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்கள் உணவு உண்ணக்கூடியவர்களாகவும் கடைவீதிகளில் உலாவக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். நீர் தூதர்களில் புதுமையானவர் அல்ல. -மனிதர்களே!- செல்வம், வறுமை, ஆரோக்கியம், நோய் போன்ற வேறுபாட்டின் காரணமாக உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். நீங்கள் உங்களின் சோதனையில் பொறுமையைக் கடைப்பிடிப்பீர்களா? அல்லாஹ் அதற்காக உங்களுக்குக் கூலி வழங்குவான். பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களையும் கடைப்பிடிக்காதவர்களையும் அவனுக்குக் வழிப்படுபவர்களையும் வழிப்படாதவர்களையும் உம் இறைவன் பார்ப்பவனாக இருக்கின்றான்.

(21) 25.21. நம்முடைய சந்திப்பை நம்பாத, நமது வேதனையை அஞ்சாத நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “முஹம்மதின் நம்பகத்தன்மையைக் எங்களிடம் எடுத்துரைக்கக்கூடிய வானவர்களை எங்களுக்கு அல்லாஹ் இறக்கியிருக்கக் கூடாதா? அல்லது நாங்கள் எங்கள் இறைவனைக் கண்ணால் கண்டு அவரது நம்பகத்தன்மையைக் குறித்து அவன் எங்களுக்கு அறிவிக்கமாட்டானா?” இவர்களின் உள்ளங்களிலுள்ள கர்வம் மிகைத்து நம்பிக்கைகொள்ள விடாமல் இவர்களைத் தடுத்துவிட்டது. தங்களின் இந்த வார்த்தையின் மூலம் இவர்கள் நிராகரிப்பிலும் அநியாயத்திலும் வரம்புமீறிவிட்டார்கள்.

(22) 25.22. மரணிக்கும் போதும், மண்ணறையிலும், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் போதும் விசாரணைக்காக இழுத்துச் செல்லப்படும் போதும், நரகத்தில் நுழையும் போதும் நிராகரிப்பாளர்கள் வானவர்களைக் காணும் நாளில் இவர்களுக்கு முஃமின்களுக்கு உள்ளது போன்று எந்த நற்செய்தியும் இருக்காது. அப்போது வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “உங்களுக்கு நற்செய்தி கூறுவதை அல்லாஹ் தடுத்துவிட்டான்.”

(23) 25.23. உலகில் நிராகரிப்பாளர்கள் செய்த நற்செயல்கள் எந்தளவுக்கு வீணானவை, பயனற்றவை என்றால் அனைத்தையும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாக யன்னலினால் நுழையும் சூரிய கதிரில் காணப்படும் சிதறிய புழுதிகளைப் போல் ஆக்கிவிடுவோம்.

(24) 25.24. அந்த நாளில் சுவனவாசிகளான நம்பிக்கையாளர்கள் இந்த நிராகரிப்பாளர்களை விட சிறந்த தங்குமிடத்தையும் ஓய்விடத்தையும் பெற்றிருப்பார்கள். இது அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்ததனால் அவர்களுக்குக் கிடைத்ததாகும்.

(25) 25.25. -தூதரே!- வானம் மென்மையான மேகத்தால் பிளந்துவிடும் நாளை நினைவுகூர்வீராக. அந்நாளில் வானவர்கள் அதிகமானவர்கள் என்பதால் மஹ்ஷர் பெருவெளியின்பால் கூட்டம் கூட்டமாக இறக்கப்படுவார்கள்.

(26) 25.26. அந்த நாளில் உண்மையான ஆட்சியதிகாரம் அளவிலாக் கருணையாளனுக்கே உரியதாகும். அந்த நாள் நிராகரிப்பாளர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். ஆனால் நிச்சயமாக அது முஃமின்களுக்கு இலகுவாக இருக்கும்.

(27) 25.27. -தூதரே!- தூதரைப் பின்பற்றாததன் காரணமாக அநியாயக்காரன் வருத்தப்பட்டு தன் கைகளைக் கடித்துக் கொள்ளும் நாளை நினைவுகூர்வீராக. “அந்தோ! தூதர் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததை நான் பின்பற்றியிருக்கக்கூடாதா? அவருடன் சேர்ந்து வெற்றிக்கான பாதையை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே?” என்று அவன் கூறுவான்.

(28) 25.28. கடும் கவலையினால் தனக்குத் தானே அழிவைக் கொண்டு பிரார்த்தனை செய்து, “என் கேடே! நான் அந்த நிராகரிப்பாளனை உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக்கூடாதா?” என்று கூறுவான்:

(29) 25.29. நிராகரித்த அந்த நண்பன் தூதரின் மூலமாக நான் குர்ஆனைப் பெற்றபிறகும் என்னை வழிகெடுத்துவிட்டான். ஷைத்தான் மனிதனுக்கு சதிசெய்யக் கூடியவனாக இருக்கின்றான். மனிதனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அவனை விட்டும் அவன் நீங்கிவிடுவான்.

(30) 25.30. அந்த நாளில் தூதர் தம் சமூகத்தின் நிலைமையைகுறித்து முறையிட்டவராகக் கூறுவார்: “எனது இறைவா! நிச்சயமாக நீ என்னை அனுப்பிய என் சமூகம் நிச்சயமாக இந்த குர்ஆனை விட்டுவிட்டார்கள். இதனைப் புறக்கணித்துவிட்டார்கள்.”

(31) 25.31. -தூதரே!- நீர் உம் சமூகத்தினால் அனுபவித்த தொல்லைகள், உம்முடைய வழியில் ஏற்பட்ட தடை போன்றே உமக்கு முன்னால் வந்த ஒவ்வொரு தூதருக்கும் அவரது சமூகத்திலுள்ள குற்றவாளிகளை எதிரிகளாக ஆக்கினோம். சத்தியத்தின்பால் வழிகாட்டுவதற்கும் உம் எதிரிகளுக்கு எதிராக உமக்கு உதவிபுரியும் உதவியாளனாக ஆகுவதற்கும் உம் இறைவனே போதுமானவன்.

(32) 25.32. அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆன் முஹம்மதின் மீது சிறிது சிறிதாக இறக்கப்படாமல் ஒரேயடியாக இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? ” -தூதரே!- உம் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் இதனைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம். விளங்குவதற்கும் மனனம் செய்வதற்கும் இலகுவாக அமைய வேண்டும் என்பதற்காகவே நாம் இதனை பகுதிபகுதியாக இறக்குகின்றோம்.

(33) 25.33. -தூதரே!- இணைவைப்பாளர்கள் உம்மிடம் எத்தகைய உதாரணத்தை கொண்டுவந்தாலும் நாம் அதற்கு சிறந்த சரியான பதிலையும் சிறந்த விளக்கத்தையும் கொண்டு வருவோம்.

(34) 25.34. மறுமை நாளில் முகங்குப்புற நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுபவர்கள்தாம் மோசமான இடத்தைப் பெற்றவர்களாவர். ஏனெனில் நிச்சயமாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும். மேலும் அவர்கள் சத்தியத்தை விட்டும் மிகத்தூரமான வழியில் உள்ளார்கள். ஏனெனில் அவர்களின் வழி நிராகரிப்பு, வழிகேடு ஆகியவற்றின் வழியாகும்.

(35) 25.35. நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அவருக்கு உதவியாளராக இருக்கும்பொருட்டு அவருடைய சகோதரர் ஹாரூனையும் தூதராக ஆக்கினோம்.

(36) 25.36. நாம் அவர்கள் இருவரிடமும் கூறினோம்: “நம்முடைய சான்றுகளை பொய்ப்பித்த ஃபிர்அவ்னின் பக்கமும் அவனது சமூகத்தின் பக்கமும் செல்லுங்கள். நம்முடைய கட்டளையைச் செயல்படுத்துங்கள். தூதர்கள் இருவரும் அவர்களிடம் சென்று ஓரிறைக்கொள்கையின் பக்கம் அவர்களை அழைத்தார்கள். அவர்கள் இருவரையும் அவர்கள் பொய்ப்பித்தார்கள். எனவே நாம் அவர்களை அடியோடு அழித்துவிட்டோம்.

(37) 25.37. நூஹின் சமூகம் அவரைப் புறக்கணித்து தூதர்களை பொய்ப்பித்த போது நாம் அவர்களை மூழ்கடித்து அழித்துவிட்டோம். அவர்களை அழித்ததை நாம் அநியாயக்காரர்களை அடியோடு அழிப்பதற்கு ஆற்றலுடையவர்கள் என்பதற்கான சான்றாக ஆக்கினோம். அநியாயக்காரர்களுக்கு மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தியுள்ளோம்.

(38) 25.38. நாம் ஹூத் உடைய மக்கள் ஆதையும், ஸாலிஹ் உடைய மக்கள் ஸமூதையும் கிணற்றுவாசிகளையும் அழித்துவிட்டோம். இந்த மூன்று சமூகத்துக்கு மத்தியில் பல சமூகங்களையும் நாம் அழித்துள்ளோம்.

(39) 25.39. அழிக்கப்பட்ட ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக முன்னர் வாழ்ந்த சமூகங்கள் அழிக்கப்பட்டதையும் அதன் காரணங்களையும் நாம் எடுத்துக் கூறினோம். ஒவ்வொரு சமூகத்தையும் அவர்களின் நிராகரிப்பினாலும் பிடிவாதத்தினாலும் அடியோடு அழித்துவிட்டோம்.

(40) 25.40. உம் சமூகத்தைச் சேர்ந்த நிராகரிப்பாளர்கள் -ஷாம் தேசத்தை நோக்கிச் செல்லும்- போது ஓரினச் சேர்க்கைக்கு தண்டனையாக அவர்கள் படிப்பினை பெறும்பொருட்டு கல்மழை பொழிவிக்கப்பட்டு அழிக்கப்பட்ட லூத்தின் சமூகம் வாழ்ந்த ஊரைக் கடந்து செல்கிறார்கள். அவர்கள் அந்த ஊரைப் பார்க்காமல் குருடாகிவிட்டார்களா என்ன? இல்லை, மாறாக அவர்கள் விசாரணை செய்யப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை எதிர்பார்க்காதவர்களாக உள்ளார்கள்.

(41) 25.41. -தூதரே!- இந்த நிராகரிப்பாளர்கள் உம்மை சந்தித்தால், “இவரைத்தான் அல்லாஹ் எங்களிடம் தூதராக அனுப்பியுள்ளானா?” என்று கேலியாகவும், மறுத்தவர்களாகவும் கூறி உம்மைப் பரிகாசம் செய்கிறார்கள்.

(42) 25.42. நாம் நம்முடைய கடவுள்களை வணங்குவதில் பொறுமையாக இல்லையெனில் அவற்றை விட்டும் இவர் நம்மை தனது ஆதாரங்களால் வழிகெடுத்திருப்பார் என்றும் கூறுகிறார்கள். மண்ணறையிலும் மறுமை நாளிலும் அவர்கள் வேதனையைக் கண்ணால் காணும்போது யார் வழிகெட்டவர்கள் அவர்களா? அல்லது அவரா? என்பதை அறிந்துகொள்வார்கள்.

(43) 25.43. -தூதரே!- தன் மன இச்சையைக் தன் கடவுளாக்கி அதற்கு வழிபடுபவரை நீர் பார்த்தீரா? அவனை நிராகரிப்பை விட்டும் தடுத்து நம்பிக்கையின்பால் திருப்புவதற்கு நீர் அவனுக்குப் பொறுப்பாளரா என்ன?

(44) 25.44. மாறாக -தூதரே!- ஏகத்துவத்தை ஏற்குமாறும், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுமாறும் நீர் அழைப்பவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்கிறார்கள் அல்லது ஆதாரங்களை விளங்கிக் கொள்கிறார்கள் என்று நீர் எண்ணுகிறீரா? அவர்கள் செவியேற்பதிலும் விளங்கிக் கொள்வதிலும் கால்நடைகளைப் போன்றவர்கள். மாறாக அவற்றை விடவும் வழிகெட்டவர்கள்.

(45) 25.45. -தூதரே!- அல்லாஹ் பூமியின் மீது நிழலை பரப்பும்போது அவனுடைய படைப்பின் அடையாளங்களை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை அசைவற்றதாக ஒரே நிலையில் அவ்வாறே ஆக்கி வைத்திருப்பான். பின்னர் நாம் சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்கியுள்ளோம். நிழலை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்கிறது.

(46) 25.46. பின்னர் சூரியன் உயர்வதற்கேற்ப நாம் நிழலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கைப்பற்றிக் கொள்கின்றோம்.

(47) 25.47. அல்லாஹ் உங்களுக்கு இரவை ஆடையைப் போன்று ஆக்கியுள்ளான். அது உங்களையும் பொருள்களையும் மறைக்கிறது. அவன் தூக்கத்தை உங்களது வேலைகளிலிருந்து உங்களுக்கு ஓய்வாகவும் பகலை உங்களது தொழில்களுக்குப் புறப்படும் நேரமாகவும் ஆக்கியுள்ளான்.

(48) 25.48. அவனே தன் அடியார்களின் மீது தனது அருளான மழையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியதாக காற்றுகளை அனுப்பி வைக்கிறான். நாம் வானத்திலிருந்து தூய்மையான மழை நீரை இறக்கினோம். அதனால் அவர்கள் சுத்தம் செய்கிறார்கள்.

(49) 25.49. இறக்கப்பட்ட அந்த மழை நீரைக் கொண்டு பயிரற்ற வறண்ட பூமியில் பலவகையான தாவரங்களை முளைக்கச் செய்கிறோம். மேலும் பச்சை பசேலென செழிக்கவும் செய்கிறோம். அந்த நீரைக் கொண்டு நாம் படைத்த கால்நடைகளுக்கும் ஏராளமான மனிதர்களுக்கும் நீர் புகட்டுகிறோம்.

(50) 25.50. நாம் குர்ஆனில் அவர்கள் படிப்பினை பெறும்பொருட்டு பலவகையான ஆதாரங்களைத் தெளிவுபடுத்தி விட்டோம். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை நிராகரித்தும், வெறுத்தும் மறுக்கிறார்கள்.

(51) 25.51. நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தூதரை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எச்சரிக்கை செய்யக்கூடியவராக அனுப்பியிருப்போம். ஆயினும் நாம் அதனை நாடவில்லை. நிச்சயமாக நாம் முஹம்மதை மனிதர்கள் அனைவருக்குமே தூதராக அனுப்பியுள்ளோம்.

(52) 25.52. நிராகரிப்பாளர்கள் உம்மிடம் வேண்டும் மார்க்கத்தை விட்டுக் கொடுத்தலுக்கும் அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படியாதீர். இந்த இறக்கப்பட்ட குர்ஆனைக் கொண்டு அவர்களுடன் கடுமையாகப் போராடுவீராக. அல்லாஹ்வின்பால் அழைப்பதில் அவர்களால் ஏற்படும் தொல்லைகளையும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக.

(53) 25.53. அல்லாஹ்வே இரண்டு கடல் நீரையும் ஒன்றிணைத்தான். சுவையானதை உப்பு நீரோடு கலந்தான். அவையிரண்டும் கலக்காமல் இருப்பதற்காக இரண்டிற்குமிடையே ஒரு திரையையும் தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளான்.

(54) 25.54. அவனே ஆண் மற்றும் பெண்ணின் விந்திலிருந்து மனிதனைப் படைத்தான். மனிதப் படைப்பில் இரத்த உறவுகளையும் திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். -தூதரே!- உம் இறைவன் பேராற்றல் உடையவன். எதுவும் அவனுக்கு முடியாதது அல்ல. ஆண் மற்றும் பெண்ணின் விந்திலிருந்து அவன் மனிதனைப் படைத்ததும் அவனுடைய ஆற்றலில் உள்ளடங்கியவைதான்.

(55) 25.55. வழிப்பட்டால் பலனளிக்கவோ, மாறு செய்தால் தீங்களிக்கவோ சக்தியற்ற அல்லாஹ் அல்லாத சிலைகளை நிராகரிப்பாளர்கள் வணங்குகிறார்கள். அல்லாஹ்வுக்கு கோபம் ஏற்படுத்துவதில் நிராகரிப்பாளன் ஷைத்தானைப் பின்பற்றக்கூடியவனாக இருக்கின்றான்.

(56) 25.56. -தூதரே!- அல்லாஹ்வை வழிப்பட்டு நம்பிக்கைகொண்டு நற்செயல் புரியக்கூடியவர்களுக்கு நற்செய்திகூறக்கூடியவராகவும் நிராகரிப்பு மற்றும் பாவங்களின் மூலம் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யக் கூடியவர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடியவராகவுமே நாம் உம்மை அனுப்பியுள்ளோம்.

(57) 25.57. -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும் உங்களில் செலவு செய்து அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புபவர்கள் செய்துகொள்ளட்டும்.”

(58) 25.58. -தூதரே!- உம்முடைய எல்லா விவகாரங்களிலும் நித்திய ஜீவனும் என்றும் நிலைத்திருப்பவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக. அவனைப் புகழ்ந்து போற்றுவீராக. அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிவதற்குப் போதுமானவன். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

(59) 25.59. அவனே வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் தன் கண்ணியத்திற்கேற்ப அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். அவன் அளவிலாக் கருணையாளன்.-தூதரே!- நன்கு அறிந்தவனிடம் அதனைக் கேட்பீராக. அவன்தான் ஒவ்வொரு பொருளையும் அறிந்த அல்லாஹ். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

(60) 25.60. “அளவிலாக் கருணையாளனுக்குச் சிரம்பணியுங்கள்” என்று நிராகரிப்பாளர்களிடம் கூறப்பட்டால், “நாங்கள் அளவிலாக் கருணையாளனுக்குச் சிரம்பணிய மாட்டோம். அளவிலாக் கருணையாளன் என்றால் யார்? நாங்கள் அவனை அறிய மாட்டோம், அவனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். நீர் கூறுபவருக்கெல்லாம் எமக்குத் தெரியாவிட்டாலும் நாங்கள் சிரம்பணிய வேண்டுமா என்ன?” என்று கேட்கிறார்கள். சிரம்பணியுமாறு அவன் அவர்களுக்கு கட்டளையிட்டமை அவர்களை அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதை விட்டும் மென்மேலும் அப்புறப்படுத்திவிட்டது.

(61) 25.61. அவன் பெரும் பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நகரும் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் நிலைகளை ஏற்படுத்தினான். ஒளிரும் சூரியனையும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பைப் பெற்று பூமியை ஒளிரச் செய்யும் சந்திரனையும் வானில் ஏற்படுத்தினான்.

(62) 25.62. அல்லாஹ்வே இரவையும் பகலையும் ஒன்றன்பின் ஒன்றாக வரக்கூடியதாக ஆக்கியுள்ளான். அது அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு படிப்பினை பெற்று நேர்வழியடையவும் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தவும் விரும்புவர்களுக்காகத்தான்.

(63) 25.63. நம்பிக்கைகொண்ட அளவிலாக் கருணையாளனின் அடியார்கள் பூமியில் கண்ணியமாகவும் பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் உரையாடினால் அவர்களைப் போன்று எதிர்கொள்ள மாட்டார்கள். மாறாக அவர்களுடன் அறியாமையுடன் நடந்துகொள்ளாமல் நல்ல வார்த்தையைக் கூறுவார்கள்.

(64) 25.64. அவர்கள் தங்கள் இறைவனுக்குச் சிரம்பணிந்தவர்களாவும் அல்லாஹ்வுக்ககாக நின்று தொழுதவர்களாவும் இரவுகளை கழிப்பார்கள்.

(65) 25.65. அவர்கள் தங்கள் இறைவனிடம் பிரார்த்தித்தவாறு கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரக வேதனையை அகற்றுவாயாக. நிச்சயமாக நரக வேதனை நிராகரித்த நிலையில் மரணித்தவர்களோடு நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளக்கூடியது.

(66) 25.66. நிச்சயமாக அதில் தங்குவோருக்கு அது மோசமான இருப்பிடமாகவும் தங்குமிடமாகவும் இருக்கின்றது.

(67) 25.67. அவர்கள் தங்களின் செல்வங்களைச் செலவழித்தால் வீண்விரயம் செய்யும் அளவுக்கு செல்லமாட்டார்கள். செலவளிப்பது கடமையான தனக்கும் ஏனையோருக்கும் செலவளிப்பதில் கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அவர்களின் செலவு அவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நடுநிலையானதாக அமையும்.

(68) 25.68. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை வணங்க மாட்டார்கள். அவன் தடைசெய்த உயிரை அநியாயமாகக் கொல்ல மாட்டார்கள். ஆனால் கொலைகாரன், மதம் மாறியவன், திருமணமான பின் விபச்சாரத்தில் ஈடுபட்டவன் ஆகிய அல்லாஹ் கொலைசெய்யுமாறு அனுமதித்தோரைத் தவிர. மேலும் விபச்சாரம் புரிய மாட்டார்கள். இந்த பெரும் பாவங்களை யார் புரிவாரோ அவர் மறுமை நாளில் தான் செய்த பாவத்திற்கான தண்டனையைப் பெறுவார்.

(69) 25.69. மறுமை நாளில் அவனுக்குப் பன்மடங்கு வேதனையளிக்கப்படும். அவன் இழிவடைந்தவனாக நிரந்தரமாக வேதனையில் வீழ்ந்துகிடப்பான்.

(70) 25.70. ஆயினும் யார் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி நம்பிக்கை கொண்டு பாவமன்னிப்பை உண்மைப்படுத்தும் விதமாக நற்செயல் புரிகிறாரோ அவர்கள் செய்த தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிடுவான். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(71) 25.71. யார் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி அதனை உண்மைப்படுத்தும் விதத்தில் அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகுகிறார்களோ நிச்சயமாக அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பாவமன்னிப்பு கோரிக்கையாகும்.

(72) 25.72. அவர்கள் பாவம் நடைபெறும் இடங்கள், தடைசெய்யப்பட்ட கேளிக்கைகள் போன்ற கெட்டவைகளுக்கு செல்ல மாட்டார்கள். வீணான வார்த்தைகள், செயற்பாடுகள் ஆகியவற்றைக் கடந்துசெல்ல நேரிட்டால் அதில் கலந்துகொள்ளாமல் தூய்மையாக அவற்றைக் கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.

(73) 25.73. அவர்களிடம் செவியேற்கக்கூடிய, பார்க்கக்கூடிய அல்லாஹ்வின் சான்றுகளைக்கொண்டு நினைவூட்டப்பட்டால் அவற்றைச் செவியேற்காத காது செவிடர்களாகவும் காணாத குருடர்களாகவும் இருக்க மாட்டார்கள்.

(74) 25.74. அவர்கள் தங்கள் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்வார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியர்கள் மற்றும் குழந்தைகள் மூலம், தனது இறையச்சம் சத்தியத்தில் உறுதி ஆகியவற்றினால், எங்களுக்கு கண்குளிர்ச்சியை தந்தருள்வாயாக. எங்களை இறையச்சமுடையோருக்கு முன்னுதாரணமான சத்தியத்தின் தலைவர்களாக ஆக்குவாயாக.

(75) 25.75. இந்த பண்புகளை உடையவர்கள் பொறுமையாக இருந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டதனால் உன்னதமான சுவனத்தில் உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌசில் உயர்ந்த அறைகளைப் பெறுவார்கள். வானவர்கள் அவர்களை வாழ்த்து, சலாம் கூறி வரவேற்பார்கள். அவர்கள் அனைத்து வகையான தீங்குகளிலிருந்தும் பாதுகாவல் பெறுவார்கள்.

(76) 25.76. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் சிறந்த தங்குமிடத்தையும் இருப்பிடத்தையும் பெற்றிருப்பார்கள்.

(77) 25.77. -தூதரே!- நிராகரிப்பில் பிடிவாதமாக இருக்கும் நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் உங்கள் வழிபாட்டினால் தனக்கு பயன் கிடைக்கிறது என்பதற்காக உங்களைப் பொருட்படுத்துவதில்லை. பிரார்த்தனையினாலும் வணக்கத்தினாலும் அவனை அழைக்கும் அடியார்கள் இல்லையெனில் அவன் உங்களைப் பொருட்படுத்தியிருக்கமாட்டான். நீங்கள் தூதரை அவர் தன் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததில் பொய்பித்து விட்டீர்கள். பொய்ப்பித்ததற்கான கூலி உங்களுடனே இருக்கும்.