(1) 27.1. பார்க்க, அல்பகரா அத்தியாயத்தின் ஆரம்ப வசனம். உம்மீது இறக்கப்பட்ட இந்த வசனங்கள் சந்தேகமற்ற, தெளிவான குர்ஆனின் வசனங்களாகும். இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்ப்பவர் அது நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து இறங்கியதுதான் என்பதை அறிந்துகொள்வார்.
(2) 27.2. இந்த வசனங்கள் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியவையாகவும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டோருக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது.
(3) 27.3. அவர்கள் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள்; தங்களின் செல்வங்களிலிருந்து உரியவர்களுக்கு ஸகாத்தை வழங்குகிறார்கள்; மறுமை நாளில் வழங்கப்படும் கூலியிலும் தண்டனையிலும் உறுதியான நம்பிக்கைகொண்டிருப்பார்கள்.
(4) 27.4. நிச்சயமாக மறுமை நாள் மற்றும் அங்கு கிடைக்கும் கூலி, தண்டனை ஆகியவற்றின் மீது நம்பிக்கைகொள்ளாத நிராகரிப்பாளர்களுக்கு நாம் அவர்களின் தீய செயல்களை அழகாக்கிக் காட்டியுள்ளோம். எனவேஅவற்றை அவர்கள் செய்வதில் நிலைத்திருக்கிறார்கள். சரியானவற்றின் பால் நேர்வழிபெறாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
(5) 27.5. இப்படி வர்ணிக்கப்பட்டவர்களுக்கு இவ்வுலகில் கொலை, சிறை என்ற மோசமான தண்டனை உண்டு. மறுமையில் அவர்கள் மனிதர்களில் அதிகமாக நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள். தங்கள் குடும்பத்தாரையும் நரகில் விழச் செய்து தாமும் தமது குடும்பமும் நஷ்டமடைவார்கள்.
(6) 27.6. -தூதரே!- நிச்சயமாக நீர் உம்மீது இறக்கப்படும் இந்த குர்ஆனை தனது படைத்தல், திட்டம், சட்டம் ஆகியவற்றில் ஞானம் மிக்கவனும் அனைத்தையும் அறிந்தவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறீர். அடியார்களின் நலன்களில் எதுவும் அவனுக்குத் தெரியாமல் மறைவானது அல்ல.
(7) 27.7. -தூதரே!- மூஸா தம் குடும்பத்தாரிடம், “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன். அதை மூட்டியவனிடமிருந்து சரியான பாதைக்கு வழிகாட்டும் ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டுவருகிறேன் அல்லது நீங்கள் குளிர்காயும்பொருட்டு அதிலிருந்து ஏதேனும் நெருப்புக்கொள்ளியை உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்று கூறியதை நினைவுகூர்வீராக.
(8) 27.8. அவர் கண்ட நெருப்பை அடைந்தபோது அல்லாஹ் அவரை அழைத்துக் கூறினான்: “நெருப்பில் உள்ளவர்களும் அதனைச் சுற்றியுள்ள வானவர்களும் பரிசுத்தமாகிவிட்டார்கள். வழிகேடர்கள் வர்ணிக்கும் பொருத்தமற்ற பண்புகளை விட்டும், படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன் தூய்மையானவன்.”
(9) 27.9. அல்லாஹ் அவரிடம் கூறினான்: -“மூஸாவே!- நிச்சயமாக நான்தான் யாவற்றையும் மிகைத்த அல்லாஹ். என்னை யாரும் மிகைக்க முடியாது. நான் படைத்த படைப்பில், அமைத்த விதியில், வழங்கிய சட்டங்களில் ஞானம்மிக்கவன்.
(10) 27.10. உம்முடைய கைத்தடியைப் போடுவீராக. மூஸா அதனைப் போட்டார். நிச்சயமாக அது அசைந்து பாம்பைப்போன்று நகர்ந்து செல்வதைக் கண்டதும் திரும்பிப் பாரக்காமல் ஓட்டமெடுத்துவிட்டார். அப்போது அல்லாஹ் அவருக்குக் கூறினான்: “அதற்குப் பயப்படாதீர். நிச்சயமாக என்னிடத்தில் தூதர்கள் பாம்புக்கோ வேறு எதற்குமோ பயப்படமாட்டார்கள்.”
(11) 27.11. ஆயினும் பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர், அதன் பின்னர் மன்னிப்புக் கோரினால் நிச்சயமாக நான் அவரை மன்னிப்பவனாகவும் அவருக்கு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றேன்.
(12) 27.12. உம்முடைய சட்டையின் பிடரியை சுற்றியுள்ள இடைவெளியில் உமது கையை நுழைப்பீராக. அதன் பின்பு அது வெண்குஷ்டம் இன்றி பனிக்கட்டியைப் போன்று தூய வெண்மையாகத் தோன்றும். ஃபிர்அவ்னிடமும் அவனது சமூகத்திடமும் உம்முடைய நம்பகத்தன்மைக்கு சான்றாக இருக்கின்ற ஒன்பது சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். (அவை: கைத்தடி, பஞ்சம், விளைச்சல் குறைபாடு, வெள்ளம், பேன்கள், வெட்டுக்கிளிகள், தவளைகள், இரத்தம்). நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனுக்கு அடிபணிவதை விட்டும் வெளியேறிய கூட்டமாக இருக்கிறார்கள்.
(13) 27.13. நாம் மூஸாவைப் பலப்படுத்த வழங்கிய நம்முடைய தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “மூசா கொண்டுவந்த இந்த சான்றுகள் தெளிவான சூனியமாகும்.”
(14) 27.14. அவர்கள் அநியாயம் செய்ததனாலும் சத்தியத்தை ஏற்காமல் கர்வம் கொண்டதனாலும் இந்த அத்தாட்சிகள் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே என்பதை அவர்களது உள்ளங்கள் உறுதியாக அறிந்திருந்தும், அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார்கள். -தூதரே!- நிராகரிப்பினாலும் பாவங்களினாலும் பூமியில் குழப்பம் செய்த நிராகரிப்பாளர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. நாம் அவர்கள் அனைவரையும் அடியோடு அழித்து நிர்மூலமாக்கி விட்டோம்.
(15) 27.15. நாம் தாவூதுக்கும் அவரது மகன் சுலைமானுக்கும் ஞானத்தை வழங்கினோம். அவற்றுள் பறவைகளின் மொழி பற்றிய அறிவும் அடங்கும். தாவூதும் சுலைமானும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாகக் கூறினார்கள்: “நம்பிக்கைகொண்ட தன் அடியார்கள் பலரைவிட கல்வி நபித்துவம் ஆகியவற்றினால் எங்களை சிறப்பித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.”
(16) 27.16. சுலைமான் தூதுத்துவம், ஞானம், ஆட்சியதிகாரம் ஆகியவற்றில் தம் தந்தை தாவூதுக்கு வாரிசானார். அவர் தம்மீதும் தம் தந்தையின் மீதும் அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை எடுத்துரைத்தவராகக் கூறினார்: “மக்களே! அல்லாஹ் எங்களுக்குப் பறவைகளின் சத்தங்களை புரிவதைக் கற்றுத் தந்துள்ளான். தூதர்களுக்கும் அரசர்களுக்கும் அளித்த அனைத்தையும் அவன் எங்களுக்கு வழங்கியுள்ளான். நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு வழங்கிய இவைகளே தெட்டத் தெளிவான அருளாகும்.”
(17) 27.17. சுலைமானுக்காக ஜின்கள், பறவைகள் மற்றும் மனிதர்களிலிருந்து படைகள் திரட்டப்பட்டு அவர்கள் முறையான ஒழுங்கோடு அணிவகுக்கப்படுவார்கள்.
(18) 27.18. அவ்வாறு அவர்கள் வழிநடத்தப்பட்ட நிலையில் அவர்கள் (ஷாமில் உள்ள) எறும்புப் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது எறும்புகளில் ஒரு எறும்பு கூறியது: “எறும்புகளே! சுலைமானும் அவருடைய படையினரும் நீங்கள் இருப்பதை உணராமல் உங்களை அழித்துவிடாமல் இருப்பதற்காக உங்கள் புற்றுகளில் புகுந்து கொள்ளுங்கள்.” நீங்கள் இருப்பதைத் தெரிந்தால் உங்களை மிதிக்கப் போவதில்லை.
(19) 27.19. இந்த எறும்பின் பேச்சை செவியுற்ற சுலைமான் புன்னகைத்தார். அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “என் இறைவா! நீ என்மீதும் என் பெற்றோர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதற்கும் உனக்கு விருப்பமான நற்செயலைச் செய்வதற்கும் எனக்கு அருள்புரிவாயாக. உன் அன்பினால் உன் நல்லடியார்களின் கூட்டத்தில் என்னை சேர்த்தருள்வாயாக.”
(20) 27.20. சுலைமான் பறவைகளை நோட்டமிட்ட பொழுது ஹுத்ஹுத் - கொண்டலாத்திப் பறவையைக் காணவில்லை. அவர் கூறினார்: “நான் ஹூத்ஹூத் பறவையைக் காணவில்லையே! என் பார்வையில் படாமல் சென்றுவிட்டதா? அல்லது அது சமூகமளிக்கவில்லையா?”
(21) 27.21. அது சமூகமளிக்கவில்லை என்பது அறிந்துகொண்ட போது அவர் கூறினார்: “சமூகமளிக்கத் தவறியதற்காக நான் அதற்கு கடும் வேதனை செய்வேன் அல்லது அதனை அறுத்துவிடுவேன் அல்லது அது சமூகமளிக்காமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தும் தெளிவான ஆதாரத்தைக் கொண்டுவர வேண்டும்?”
(22) 27.22. சிறிதுநேரம் ஹூத்ஹூத் பறவை தாமதித்தது. வந்ததும் அவரிடம் கூறியது: “நீங்கள் அறியாத விஷயத்தை நான் அறிந்துள்ளேன். ஸபாவாசிகளிடமிருந்து சந்தேகமற்ற உண்மையான செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்.
(23) 27.23. நிச்சயமாக நான் அவர்களை ஒரு பெண் ஆட்சி செய்வதை கண்டேன். அந்தப் பெண்ணுக்கு பலம், ஆட்சியதிகாரத்திற்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவளிடம் ஒரு மகத்தான அரியணையும் உள்ளது. அதன் மீதிருந்து தன் மக்களின் விவகாரங்களை நிர்வகிக்கிறாள்.
(24) 27.24. அந்தப் பெண்ணும் அவளது சமூகமும் அல்லாஹ்வைவிடுத்து சூரியனுக்குச் சிரம்பணிவதைக் கண்டேன். அவர்கள் செய்யும் இணைவைப்பான காரியங்களையும் பாவங்களையும் ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான். அவன் அவர்களை சத்தியப் பாதையைவிட்டும் திருப்பிவிட்டான். எனவே அவர்கள் நேரான வழியை அடைமுடியவில்லை.
(25) 27.25. வானத்தில் மறைத்திருக்கும் மழையையும் பூமியில் மறைத்திருக்கும் தாவரங்களையும் வெளிப்படுத்துகின்ற, நீங்கள் மறைவாகவும் வெளிப்படையாகவும் செய்பவற்றை அவற்றில் எதுவும் மறையாமல் அறிகின்ற அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே அவர்கள் சிரம்பணியாமல் இருப்பதற்காக அவர்களின் இணைவைப்பான காரியங்களையும் பாவங்களையும் ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான்.
(26) 27.26. அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி.
(27) 27.27. சுலைமான் ஹூத்ஹூத் பறவையிடம் கூறினார்: “நீ உண்மை கூறினாயா அல்லது நீர் பொய்யர்களில் உள்ளவரா? என்பதை நாங்கள் விரைவில் கண்டுகொள்வோம்.”
(28) 27.28. சுலைமான் ஒரு கடிதம் எழுதி அதை ஹூத்ஹூத் பறவையிடம் ஒப்படைத்து அதனிடம் கூறினார்: “என்னுடைய இந்த கடிதத்தை எடுத்துச் சென்று ஸபஊவாசிகளிடம் ஒப்படைத்துவிடு. பின்னர் ஒதுங்கி நின்று அவர்கள் அது சம்மந்தமாக என்ன பதிலளிக்கிறார்கள் என்பதைக் கேள்.”
(29) 27.29. அரசி கடிதத்தைப் பெற்றாள். அவள் கூறினாள்: “மதிப்பிற்குரியவர்களே! நிச்சயமாக எனக்கு கண்ணியமான, சங்கையான கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
(30) 27.30. சுலைமானிடமிருந்து வந்துள்ள இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
(31) 27.31. ஆணவம் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுடன் சூரியனையும் வணங்கும் உங்களின் இணைவைப்பான காரியங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு நான் அழைக்கும் ஓரிறைக்கொள்கையின் பக்கம் அடிபணிந்தவர்களாக என்னிடம் வந்துவிடுங்கள்.”
(32) 27.32. அரசி கூறினாள்: “பிரதானிகளே! என் விஷயத்தில் எனக்கு சரியானதைத் தெளிவுபடுத்துங்கள். நீங்கள் என்னிடம் வந்து உங்களின் கருத்துகளை சொல்லாமல் நான் எந்த விடயத்திற்கும் முடிவையும் எடுப்பதில்லை.”
(33) 27.33. அவளது சமூகத்தின் தலைவர்கள் கூறினார்கள்: “நாம் பெரும் பலம்மிக்கவர்கள்; போர்க்குணம் மிக்கவர்கள். உமது கருத்தே முடிவானது. எங்களுக்கு என்ன கட்டளையிட வேண்டும் என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஆற்றலுள்ளவர்கள்.”
(34) 27.34. அரசி கூறினாள்: “நிச்சயமாக அரசர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் கொலை மற்றும் கொள்ளையின் மூலம் அதனை நாசமாக்கிவிடுவார்கள். அந்த ஊரின் கண்ணியவான்களையும் தலைவர்களையும் இழிவானவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். அரசர்கள் ஓர் ஊரை வெற்றி கொண்டால் அவர்களின் உள்ளங்களில் மரியாதையையும் பயத்தையும் விதைப்பதற்காக எப்போதும் இவ்வாறுதான் செய்வார்கள்.
(35) 27.35. நிச்சயமாக நான் இக்கடிதத்தை எழுதியவருக்கும் அவருடைய சமூகத்திற்கும் ஒரு அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். அதனை அனுப்பிய பிறகு தூதர்கள் என்ன பதிலைக் கொண்டுவரப் போகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.
(36) 27.36. அவளுடைய தூதரும் அவரது உதவியாளர்களும் சுலைமானிடம் அன்பளிப்பைக் சுமந்துகொண்டு வந்தபோது சுலைமான் அதனை மறுத்தவராகக் கூறினார்: “என்னை உங்களைவிட்டுத் திருப்புவதற்காக செல்வங்களைக்கொண்டு நீங்கள் எனக்கு உதவி செய்கிறீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கிய தூதுத்துவமும் ஆட்சியதிகாரமும் செல்வமும் அவன் உங்களுக்கு வழங்கியதைவிடச் சிறந்ததாகும். மாறாக உங்களுக்கு அளிக்கப்படும் உலகின் அற்ப அன்பளிப்புகளைக்கொண்டு நீங்கள்தாம் மகிழ்ச்சியடையக்கூடியவர்கள்.
(37) 27.37. சுலைமான் அவளுடைய தூதரிடம் கூறினார்: “நீர் கொண்டுவந்த அன்பளிப்பைக் எடுத்துக்கொண்டு அவர்களிடம் திரும்பிச் செல்லும். நாங்கள் அவளிடமும் அவளுடைய சமூகத்திடமும் அவர்களால் எதிர்கொள்ள முடியாத அளவுக்குப் படைகளோடு வருவோம். அவர்கள் என்னிடம் அடிபணிந்தவர்களாக வரவில்லையெனில் கண்ணியத்தோடு வாழும் அவர்களை இழிவடைந்தவர்களாகவும் அவமானப்பட்டோராகவும் ஸபஃ நகரில் இருந்து வெளியேற்றுவோம்.”
(38) 27.38. சுலைமான் தம் அவைப் பிரதானிகளிடம் உரையாடியவாறு கேட்டார்: “அவையோரே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னர் அவளது ஆட்சிஅதிகார அரியணையை யார் என்னிடம் கொண்டுவருவார்?”
(39) 27.39. மூர்க்கத்தனமான ஜின் ஒன்று கூறியது: “நீங்கள் தற்போது இருக்கும் உங்களின் அவையிலிருந்து எழுந்திருக்கும் முன்னரே நான் அவளது அரியணையைக் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் அதனைச் சுமப்பதற்குச் சக்தியுடையவனாகவும் அதிலுள்ளவற்றில் எதனையும் குறைத்துவிடாமல் எடுத்துவர முடியுமான நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.
(40) 27.40. எதைக்கொண்டு பிரார்த்தித்தால் அவன் அங்கீகரிப்பானோ அத்தகைய அல்லாஹ்வின் மகத்தான திருநாமத்தை உள்ளடக்கிய வேத அறிவைப் பெற்றிருந்த, கற்றறிந்த நல்ல மனிதர் ஒருவர், “நான் நீங்கள் கண் இமைப்பதற்குள் நான் அதனைக் கொண்டு வந்துவிடுவேன். அல்லாஹ்விடம் நான் பிரார்த்திப்பதன் மூலம் அவன் அதனைக் கொண்டுவந்துவிடுவான் என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான். அவளது அரியணை தமக்கு முன்னால் நிலைபெற்று இருப்பதைக் கண்ட சுலைமான் கூறினார்: “இது என் இறைவனின் அருளாகும். இதன் மூலம் நான் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துகிறேனா அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறேனா என்று அவன் சோதிக்கிறான். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவர் நிச்சயமாக அதன் பயனைத் தானே பெறுகிறார். அல்லாஹ் தேவையற்றவன். அடியார்கள் நன்றிசெலுத்துவதால் அவனுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. யார் அல்லாஹ்வின் அருள்களை மறுத்து அதற்காக அவனுக்கு நன்றி செலுத்தவில்லையோ நிச்சயமாக என் இறைவன் அடியார்களின் நன்றியைவிட்டும் தேவையற்றவன், கொடையாளன். தனது அருள்களை மறுப்பவனுக்கு அவன் அருள்புரிவதும் அவனது கொடைத்தன்மையே.
(41) 27.41. சுலைமான் கூறினார்: “அவள் இருக்கும் ஆட்சி அதிகாரத்தின் அரியணையின் வடிவத்தை மாற்றிவிடுங்கள். அவள் இது தன் அரியணைதான் என்பதை அறிந்துகொள்கிறாளா அல்லது தமது பொருட்களை அடையாளம் காணமுடியாதவர்களில் உள்ளவளா? என்பதைப் பார்ப்போம்.
(42) 27.42. சபாவின் அரசி சுலைமானிடம் வந்தபோது சோதிக்கும்பொருட்டு அவளிடம் கேட்கப்பட்டது: “இது உனது அரியணையைப் போன்றதா?” அவளும் கேள்விக்கேற்ப கூறினாள்: “ஆம். நிச்சயமாக இது அதைப்போன்றுதான் உள்ளது.” இது போன்ற விடயங்களுக்கு அல்லாஹ் ஆற்றலுடையவன் என்பதால் அவளுக்கு முன்னரே இது குறித்து எங்களுக்கு அறிவைத் தந்துவிட்டான். நாங்கள் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, வழிப்பட்டவர்களாக இருக்கின்றோம்.
(43) 27.43. அல்லாஹ்வை விடுத்து தன் சமூகத்தைப் பின்பற்றி அவள் வணங்கிக் கொண்டிருந்தவை ஓரிறைக்கொள்கையைவிட்டும் அவளைத் திருப்பி விட்டிருந்தது. நிச்சயமாக அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவர்களைப் போன்றே அவளும் நிராகரிப்பவளாகவே இருந்தாள்.
(44) 27.44. ‘மாளிகையினுள் நுழையும்’ என்று அவளிடம் கூறப்பட்டது. அதனைக் கண்ட அவள் அதனை நீர்த்தடாகம் என்று எண்ணி அதில் நனைந்து விடும் என்று தன் ஆடையை கெண்டைக் கால்களுக்கு மேல் உயர்த்திவிட்டாள். சுலைமான் அவளிடம், “நிச்சயமாக இது கண்ணாடி மாளிகையாகும்’ என்று கூறினார். அவளை இஸ்லாத்தின்பால் அழைத்தார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டவளாக அவள் கூறினாள்: “என் இறைவா! உன்னுடன் மற்றவர்களையும் வணங்கி நிச்சயமாக எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். சுலைமானும் சேர்ந்து படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுவிட்டேன்.
(45) 27.45. நாம் ஸமூத் சமூகத்தின்பால் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். (அவர் அவர்களிடம்), “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள்” (என்று கூறினார்). ஆனால் அவருடைய அழைப்பிற்குப்பின்னர் அவர்களோ இரு பிரிவினராகி விட்டார்கள். ஒரு பிரிவினர் நம்பிக்கையாளர்கள். மற்றொரு பிரிவினர் நிராகரிப்பாளர்கள். இரு பிரிவினரில் யார் சத்தியத்தில் இருக்கிறார்கள் என்று அவர்கள் தர்க்கிக்கலானார்கள்.
(46) 27.46. ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அருளுக்கு முன்னர் ஏன் வேதனையை வேண்டுகிறீர்கள்? அல்லாஹ் உங்கள்மீது கருணை காட்டும்பொருட்டு நீங்கள் செய்த பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக்கோர வேண்டாமா?”
(47) 27.47. அவருடைய சமூகத்தார் அவரிடம் சத்தியத்தை விட்டுவிட்டு பிடிவாதத்துடன் கூறினார்கள்: “உம்மையும் உம்முடன் இருக்கும் நம்பிக்கையாளர்களையும் நாங்கள் துர்ச்சகுனமாகக் கருதுகிறோம்.” ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “உங்களுக்குத் நேரும் தீங்குகளுக்காக நீங்கள் விரட்டும் பறவை பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. மாறாக உங்களுக்கு வழங்கப்படும் நன்மை மற்றும் உங்களுக்கு நேரும் தீமையைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள்.
(48) 27.48. ஹிஜ்ர் என்ற அந்த நகரத்திலே ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நிராகரிப்பினாலும் பாவங்களினாலும் பூமியில் குழப்பம் செய்து கொண்டிருந்தார்கள். நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்து அவர்கள் சீர்திருத்தம் செய்யவில்லை.
(49) 27.49. அவர்களில் சிலர் சிலரிடம் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கொள்ளுங்கள். நாம் இரவில் சென்று அவரையும் அவருடன் அவருடை குடும்பத்தையும் கொன்றுவிடலாம். பின்னர் அவருடைய பொறுப்பாளரிடம் சென்று, “நாங்கள் ஸாலிஹையும் அவரைப் பின்பற்றியவர்களையும் கொல்லவில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம்” என்று கூறுவோம்.
(50) 27.50. அவர்கள் ஸாலிஹையும் அவரைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களையும் கொலை செய்வதற்கு இரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் காப்பாற்றி அவரின் சமூகத்தின் நிராகரிப்பாளர்களை அழித்துவிட நாம் திட்டம் தீட்டினோம். அவர்கள் இதனைக்குறித்து அறியாமல் இருந்தார்கள்.
(51) 27.51. -தூதரே!- அவர்களின் சூழ்ச்சி என்ன விளைவை ஏற்படுத்தியது? என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. நிச்சயமாக நாம் அவர்கள் அனைவரையும் எங்களின் வேதனையைக்கொண்டு அடியோடு அழித்துவிட்டோம்.
(52) 27.52. இதோ அவர்களின் வீடுகள். அவர்கள் செய்த அக்கிரமத்தினால் ஆளரவமின்றி அடியோடு வீழ்ந்து கிடக்கின்றன. நிச்சயமாக அவர்களின் அநீதியினால் அவர்களுக்கு ஏற்பட்ட வேதனையில் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்கள்தாம் சான்றுகளைக்கொண்டு படிப்பினை பெறுவார்கள்.
(53) 27.53. ஸாலிஹின் சமூகத்தில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களை நாம் காப்பாற்றினோம். அவர்கள் அவனுடைய கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வை அஞ்சக்கூடிய மக்களாக இருந்தார்கள்.
(54) 27.54. -தூதரே!- லூத்தையும் நினைவுகூர்வீராக. அவர் தம் சமூகத்தினரைக் கண்டித்தவராகக் கூறிய பொழுது: “நீங்கள் உங்களின் அவைகளிலேயே வெளிப்படையாக ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டே மோசமான காரியத்தில் -ஓரினச் சேர்க்கையில்- ஈடுபடுகிறீர்களே!?
(55) 27.55. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களிடமா உங்களின் இச்சையைத் தணித்துக் கொள்கிறீர்கள்? ஒழுக்கத்தையோ, குழந்தையையோ நீங்கள் விரும்பவில்லையா?மிருக இச்சையைத் தணித்துக் கொள்வதையே விரும்புகிறீர்கள். மாறாக நீங்கள் உங்கள் மீது கடமையான ஈமானையும் தூய்மையையும் பாவத்தை விட்டு விலகியிருத்தலையும் அறியாத கூட்டமாகவே உள்ளீர்கள்.
(56) 27.56. “லூத்தின் குடும்பத்தினரை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அழுக்குகள், நஜீஸ்களை விட்டும் பரிசுத்தவான்களாம்” என்பதுதான் அவரது சமூகத்தின் பதிலாக இருந்தது. தாங்கள் செய்த மானக்கேடான காரியங்களில் பங்கு பெறாமல் அதனை எதிர்க்கும் லூத்தின் குடும்பத்தினரைப் பரிகசிக்கும் பொருட்டே அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
(57) 27.57. நாம் அவரையும் குடும்பத்தையும் பாதுகாத்தோம். அவரது மனைவியைத் தவிர. அவளும் பின்தங்கி அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருப்பாள் என்று நாம் விதித்துவிட்டோம்.
(58) 27.58. நாம் அவர்கள் மீது கற்களைப் பொழியச் செய்தோம். அது தண்டனையைக் கொண்டு எச்சரிக்கப்பட்டும் அதற்குப் பதிலளிக்காதவர்களை அழித்துவிடும் மோசமான மழையாக இருந்தது.
(59) 27.59. -தூதரே!- நீர் கூறுவீராக: “அருட்கொடைகளை அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். நபியவர்களின் தோழர்களுக்கு லூத், ஸாலிஹ் ஆகியோரின் சமுதாயத்துக்கு ஏற்பட்ட தண்டனையை விட்டும் அல்லாஹ்வின் பாதுகாப்பு நிலவட்டும். யாரிடம் எல்லாவற்றின் அதிகாரங்களும் உள்ளதோ அந்த வணக்கத்திற்குரிய உண்மையான இறைவனான அல்லாஹ் சிறந்தவனா? அல்லது பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்களா?!
(60) 27.60. அல்லது வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனா? -மனிதர்களே!- அவன் உங்களுக்காக வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் அழகிய தோட்டங்களை முளைக்கச் செய்கின்றான். உங்களால் அந்த தோட்டங்களிலுள்ள மரங்களை முளைக்கச் செய்ய முடியாது. அல்லாஹ்வே அவற்றை முளைக்கச் செய்தான். அல்லாஹ்வுடன் சேர்ந்து வேறு ஏதாவது தெய்வம் இதனைச் செய்ததா? ஒருபோதும் இல்லை. மாறாக அவர்கள் சத்தியத்தைவிட்டும் நெறிபிறழ்ந்துவிட்டார்கள். அநியாயமாக படைப்பாளனை படைப்பினங்களோடு சமமாக்கிவிட்டார்கள்.
(61) 27.61. பூமி அதிலுள்ளவர்களுடன் சேர்ந்து ஆட்டம் காணாதவாறு உங்களுக்காக அதனை உறுதியானதாக ஆக்கியவன் யார்? அதனுள்ளே அவன் ஆறுகளை ஓடச்செய்தான். உறுதியான மலைகளையும் ஏற்படுத்தினான். இரு கடல்களுக்கிடையே அவன் ஒரு திரையை ஏற்படுத்தினான். ஒன்றின் நீர் உப்பாகவும் மற்றொன்றின் நீர் சுவையானதாகவும் இருக்கிறது. ஒன்றோடொன்று கலந்து கெடுத்துவிடாமல் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? இல்லை. அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். அவர்கள் அறிந்திருந்தால் அல்லாஹ்வுக்கு எந்தவொரு படைப்பினத்தையும் இணையாக்கியிருக்கமாட்டார்கள்.
(62) 27.62. துன்பத்திற்குள்ளானவன் தன் துன்பத்தை அகற்றுமாறு பிரார்த்திக்கும்போது அவனுடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பவன் யார்? வறுமை, நோய் மற்றும் மனிதனுக்கு ஏற்படும் ஏனைய சோதனைகளை நீக்கக்கூடியவன் யார்? அவன் பூமியில் உங்களை பரம்பரை பரம்பரையாக பிரதிநிதியாக ஆக்கியவன் யார்? அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? இல்லை. மாறாக நீங்கள் மிகக் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள், உபதேசம் பெறுகிறீர்கள்.
(63) 27.63. தரை மற்றும் கடல் ஆகியவற்றின் இருள்களில் உங்களுக்காக ஏற்படுத்திய நட்சத்திரங்கள், அடையாளங்கள் மூலம் உங்களுக்கு வழிகாட்டுபவன் யார்? தனது அடியார்களுக்கு அன்பாக மழை அண்மையில் பொழிய இருப்பதை நற்செய்தி கூறும் காற்றை அனுப்புவன் யார்? அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? தனது படைப்பினங்களில் அவர்கள் அவனுக்கு இணையாக்குபவற்றை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.
(64) 27.64. கருவறைகளில் கட்டம் கட்டமாக படைக்க ஆரம்பித்து பின்னர் அதனை மரணிக்கச்செய்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புபவன் யார்? தன் புறத்திலிருந்து இறக்கப்படும் மழை மூலம் வானிலிருந்தும் தாவரங்களை முளைக்கச் செய்வதன் மூலம் பூமியிலிருந்தும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நிச்சயமாக நாங்கள்தாம் சத்தியத்தில் இருக்கின்றோம் என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் செய்துகொண்டிருக்கும் இணைவைப்புக்கு ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.”
(65) 27.65. -தூதரே!- நீர் கூறுவீராக: “வானங்களில் இருக்கும் வானவர்களோ பூமியில் இருக்கும் மனிதர்களோ மறைவானவற்றை அறிய மாட்டார்கள். அல்லாஹ் ஒருவனே அதனை அறிவான். அவர்கள் கூலி கொடுக்கப்படுவதற்காக எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதை அல்லாஹ்வைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் அறியமாட்டார்கள்.
(66) 27.66. மறுமை பற்றி அவர்கள் தொடராக தெரிந்து அதனை உறுதியாக அவர்கள் நம்பிவிட்டார்களா? இல்லை, அவர்கள் மறுமையைக்குறித்து சந்தேகத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கிறார்கள். மாறாக, அவர்களின் பார்வைகள் அதனைப் புரிந்துகொள்வதை விட்டும் குருடாகிவிட்டன.
(67) 27.67. நிராகரிப்பாளர்கள் மறுப்புத் தெரிவித்தவர்களாக கூறுகிறார்கள்: “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகிவிட்டாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா?
(68) 27.68. இதற்கு முன்னர் நாங்களும் எங்கள் முன்னோர்களும் மீண்டும் எழுப்பப்படுவோம் என்று வாக்களிக்கப்பட்டோம். ஆனால் அந்த வாக்குறுதி நிகழ்வதை நாம் காணவில்லை. எங்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட இந்த வாக்குறுதி முன்னோர்கள் தங்களின் புத்தகங்களில் எழுதி வைத்துள்ள அவர்களின் கட்டுக் கதைகளேயாகும்.
(69) 27.69. -தூதரே!- மறுமை நாளை மறுக்கும் இந்த நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “பூமியில் பயணம் செய்து மறுமை நாளை பொய்ப்பித்த குற்றவாளிகளின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அதனை அவர்கள் மறுத்ததால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்.
(70) 27.70. உம்முடைய அழைப்பை இணைவைப்பாளர்கள் புறக்கணிக்கும் காரணத்தால் நீர் கவலை கொள்ளாதீர். அவர்கள் உமக்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகளால் உமது நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு எதிராக உமக்கு உதவி செய்வான்.
(71) 27.71. உம் சமூகத்தில் மறுமை நாளை மறுக்கும் நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “தண்டனை இறங்கும் என்ற உங்களது கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீரும் நம்பிக்கையாளர்களும் எங்களுக்கு எச்சரித்த அவ்வேதனை எப்போது நிகழும்?”
(72) 27.72. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் அவசரமாக வேண்டிய வேதனையின் சில பகுதிகள் உங்களை நெருங்கியருக்கக் கூடும்.”
(73) 27.73. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களின் மீது பேரருள் புரிபவன். அதனால்தான் அவன் அவர்கள் நிராகரிப்பு, பாவங்கள் என்பவற்றைச் செய்துகொண்டிருந்தும் அவர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் விட்டுவிடுகிறான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ் தங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதில்லை.
(74) 27.74. நிச்சயமாக உம் இறைவன் தன் அடியார்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும் வெளிப்படுத்துவதையும் அறிவான். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
(75) 27.75. வானத்திலோ, பூமியிலோ மக்களை விட்டும் மறைவாக இருக்கின்ற ஒவ்வொன்றும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(76) 27.76. நிச்சயமாக முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் இஸ்ராயீலின் மக்கள் முரண்பட்டுக் கொண்டிருந்த பல விஷயங்களை எடுத்துரைக்கிறது. அவர்களின் நெறிபிறழ்வுகளை தெளிவுபடுத்துகிறது.
(77) 27.77. நிச்சயமாக அது (குர்ஆன்) அதன்படி செயல்படும் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது.
(78) 27.78. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மறுமை நாளில் நம்பிக்கைகொண்ட, நிராகரித்த மனிதர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பான். அவன் நம்பிக்கையாளனுக்கு கருணை காட்டுவான். நிராகரிப்பாளனைத் தண்டிப்பான். தன் எதிரிகளைத் தண்டிக்கும் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் நன்கறிந்தவன். சத்தியவாதியும் அசத்தியவாதியும் அவனுக்கு மாறிவிடமாட்டார்கள்.
(79) 27.79. உமது எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக. நிச்சயமாக நீர் தெளிவான சத்தியத்தில் இருக்கின்றீர்.
(80) 27.80. தூதரே ! நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரித்ததனால் உள்ளங்கள் இறந்தவர்களை உம்மால் செவியுறச் செய்ய முடியாது. சத்தியத்தை கேட்க முடியாமல் யாரை அல்லாஹ் செவிடாக்கிவிட்டானோ அவர்கள் உம்மை புறக்கணித்து திரும்பிச் சென்றால் அவர்களுக்கு உமது அழைப்பை உம்மால் செவியுறச் செய்ய முடியாது.
(81) 27.81. சத்தியத்தைவிட்டும் பார்வைகள் குருடானவர்களுக்கு உம்மால் வழிகாட்ட முடியாது. அவர்களுக்காக கவலைப்பட்டு உம்மை நீரே வருத்திக் கொள்ளாதீர். நம்முடைய வசனங்களை நம்புவோருக்கே சத்தியத்தைப் புரியச் செய்ய முடியும். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் ஏவலுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
(82) 27.82. அவர்கள் தொடர்ந்தும் நிராகரிப்பு மற்றும் பாவங்களில் ஈடுபட்டதனால் வேதனை உறுதியாகி, தீயவர்கள் மட்டும் எஞ்சிவிட்டால், மறுமை நாள் நெருங்கும் போது அதன் மிகப் பெரும் அடையாளங்களில் ஒன்றை வெளிப்படுத்துவோம். “நம் தூதரின் மீது இறக்கப்பட்ட வசனங்களை மக்கள் நம்பாமல் இருந்தார்கள்” என அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசும் பூமியிலிருந்து வெளிப்படும் ஒரு விலங்கே அந்த அடையாளமாகும்.
(83) 27.83. -தூதரே!- நாம் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் நம்முடைய வசனங்களை பொய்ப்பித்த தலைவர்களை கூட்டமாக ஒன்றுதிரட்டும் நாளை நினைவுகூர்வீராக. அவர்களில் முன்னோர், பின்னோர் அனைவரும் மீட்டப்பட்டு பின்பு விசாரணைக்காக இழுத்துவரப்படுவார்கள்.
(84) 27.84. தொடர்ந்து அவர்கள் இழுத்துச் செல்லப்படுவார்கள். விசாரணைக்கான இடத்தை வந்தடைந்தவுடன், அல்லாஹ் அவர்களைக் கண்டித்தவாறு கேட்பான்: “நான் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய, என் மார்க்கத்தை உள்ளடக்கிய என் வசனங்களை நீங்கள் மறுத்தீர்களா? அவற்றை நீங்கள் மறுக்க, அவை அசத்தியம் என்பதை நீங்கள் முழுமையாக அறியவுமில்லை. அல்லது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏற்றுக் கொண்டீர்களா அல்லது நிராகரித்தீர்களா?
(85) 27.85. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய அத்தாட்சிகளையும் பொய்ப்பித்து அவர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாக அவர்கள் மீது வேதனை இறங்கியது. அவர்களது இயலாமையினாலும் ஆதாரங்கள் தவறானவை என்பதனாலும் தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களால் எதுவும் பேச முடியாது.
(86) 27.86. மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்கள் நிச்சயமாக தூக்கத்தின் மூலம் அவர்கள் ஓய்வெடுப்பதற்காக இரவையும் தங்களின் பணிகளில் ஈடுபடுவதற்காக பிரகாசமான பகலையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்பதைப் பார்க்கவில்லையா? நிச்சயமாக திரும்பத் திரும்ப இடம்பெறும் இந்த மரணத்திலும் அதன்பின் உயிர்கொடுத்து எழுப்புதலிலும் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.
(87) 27.87. -தூதரே!- சூர் ஊதுவதற்கு பொறுப்பு சாட்டப்பட்ட வானவர் இரண்டாவது சூர் ஊதும் நாளை நினைவுகூர்வீராக. அல்லாஹ் தன் அருளால் அதனை விட்டும் விதிவிலக்குச் செய்தோரைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் பதற்றமடைந்துவிடுவார்கள். அந்நாளில் அவனுடைய படைப்புகள் அனைத்தும் அவனுக்குக் கட்டுப்பட்டவையாக, பணிந்தவையாக அவனிடம் வரும்.
(88) 27.88. அந்த நாளில் நீர் மலைகளைக் கண்டு அவை நகராமல் உறுதியாக இருக்கும் என்று எண்ணுவீர். உண்மையில் அவை மேகத்தைப் போன்று வேகமாக நடந்து செல்லும். அவை அல்லாஹ்வின் படைப்பாகும். அவனே அதனை நடத்திச் செல்கின்றான். நிச்சயமாக நீங்கள் செய்வதை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.
(89) 27.89. நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவாறு மறுமை நாளில் வருபவர்களுக்கு சுவனம் உண்டு. அவர்கள் மறுமை நாளின் திடுக்கத்தை விட்டும் அல்லாஹ்வின் பாதுகாப்பினால் பாதுகாவல் பெற்றிருப்பார்கள்.
(90) 27.90. நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களைக் கொண்டு வருபவர்களுக்கு நரகம்தான் உண்டு. அவர்கள் நரகத்தில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள். கண்டிக்கும் விதமாகவும் இழிவுபடுத்தும் விதமாகவும் அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் உலகில் செய்த நிராகரிப்பான மற்றும் பாவமான செயல்களைத் தவிர வேறு எதற்கும் கூலி கொடுக்கப்படவில்லையே!.
(91) 27.91. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் இந்த நகரத்தை - மக்காவை - கண்ணியப்படுத்திய இறைவனை வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன். இந்த நகரத்தில் இரத்தம் சிந்தப்படக்கூடாது, எவர் மீதும் அநீதி இழைக்கப்படக்கூடாது, இங்குள்ள மரங்கள் வெட்டப்படக்கூடாது, விலங்குகள் வேட்டையாடப்படக்கூடாது. எல்லாவற்றின் ஆட்சியதிகாரமும் அவனுக்கே உரியது. நான் அவனுக்கு வழிப்பட்டு அடிபணிந்தவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்றும் ஏவப்பட்டுள்ளேன்.
(92) 27.92. நான் இந்தக் குர்ஆனை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஏவப்பட்டுள்ளேன். யார் இதனைக்கொண்டு நேர்வழி பெற்று இதன்படி செயல்படுவாரோ அவர் தனக்குத்தான் நேர்வழியை தேடிக் கொண்டார். யார் வழிகெட்டு, அதில் இருப்பவைகளை விட்டும் நெறிபிறழ்ந்து, அதனை மறுத்து, அதன்படி செயல்படவில்லையோ, நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு உங்களை எச்சரிக்கை செய்பவர்களில் ஒருவன்தான். உங்களுக்கு நேர்வழியளிக்கும் அதிகாரம் என் கையில் இல்லை.”
(93) 27.93. -தூதரே!- நீர் கூறுவீராக: “எண்ணற்ற அருட்கொடைகளை அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உங்களிலும் வானத்திலும் பூமியிலும் வாழ்வாதாரத்திலும் விரைவில் தன் சான்றுகளை அவன் காட்டுவான். அப்போது உங்களை சத்தியத்தை ஏற்றுக்கொள்ள நேர்வழிவழிகாட்டும் அறிவைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் செயல்களை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவன் அவற்றை அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.