30 - ஸூரா அர்ரூம் ()

|

(1) 30.1. (الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

(2) 30.2. பாரசீகர்கள் ரோமானியர்களை வென்றுவிட்டார்கள்,

(3) 30.3. ஷாம் தேசத்தின் பாரசீகத்திற்கு நெருக்கமான பிரதேசத்தில். ரோமானியர்கள் பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்ட பிறகு விரைவில் வெற்றி பெறுவார்கள்.

(4) 30.4. அதன் காலம் மூன்று ஆண்டுகளை விட குறையவும் மாட்டாது, பத்து ஆண்டுகளை விட அதிகரிக்கவும் மாட்டாது. ரோமானியர்கள் வெற்றி பெறுவதற்கு முன்னரும் பின்னரும் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. ரோமானியர்கள் பாரசீகர்களை வெல்லும் நாளில் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

(5) 30.5. அல்லாஹ்வின் உதவி ரோமானியர்களுக்குக் கிடைப்பதால் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏனெனில் ரோமானியர்கள் வேதக்காரர்களாவர். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நாடியோருக்கெதிராக உதவுகிறான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

(6) 30.6. இந்த உதவி அல்லாஹ் அளித்த வாக்குறுதியாகும். தனது அந்த வாக்குறுதிக்கு அவன் மாறுசெய்யமாட்டான். இது நிறைவேறும் போது உதவுவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதியில் நம்பிக்கையாளர்கள் மென்மேலும் உறுதிகொள்கின்றனர். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் தங்களின் நிராகரிப்பினால் இதனை அறிந்துகொள்ள மாட்டார்கள்.

(7) 30.7. அவர்கள் ஈமானையோ, மார்க்க சட்டங்களையோ அறிய மாட்டார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் தங்களின் சம்பாத்தியத்தோடும் சடவாத நாகரீக முன்னேற்றத்துடன் தொடர்புடைய உலக வாழ்வின் வெளிப்படையான விஷயங்களைத்தான். அவர்கள் உண்மையான வாழ்க்கையின் இடமான மறுமையை பொருட்படுத்தாமல் புறக்கணிக்கிறார்கள்.

(8) 30.8. இந்த பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்கள் தங்களை அல்லாஹ் எவ்வாறு படைத்து, செம்மைய்யாக்கியுள்ளான் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு மத்தியிலுள்ளவற்றையும் அவன் உண்மையாகவே படைத்துள்ளான். அவற்றை வீணாகப் படைக்கவில்லை. அந்த இரண்டும் உலகில் நிலைத்திருப்பதற்கு அவன் குறிப்பிட்ட ஒரு தவணையை நிர்ணயித்துள்ளான். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் மறுமை நாளில் தங்களின் இறைவனைச் சந்திப்பதை நிராகரிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் மீண்டும் எழுப்பப்படுவதற்காக தங்கள் இறைவனிடம் விரும்பமான நற்செயல்களால் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில்லை.

(9) 30.9. இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து தங்களுக்கு முன்னர் பொய்ப்பித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இந்த சமூகங்கள் அவர்களைவிட பலம்பெற்றவையாக இருந்தனர். அவர்கள் விவசாயத்திற்காகவும் கட்டடம் கட்டுவதற்காகவும் பூமியைப் பண்படுத்தி அதனை இவர்களைவிட அதிகம் செழிப்பாக்கினார்கள். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதை அறிவிக்கும் தெளிவான சான்றுகளோடு வந்தார்கள். ஆயினும் அவர்கள் பொய்ப்பித்தார்கள். அல்லாஹ் அவர்களை அழித்த போது அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் நிராகரித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.

(10) 30.10. பின்னர் அல்லாஹ்வுக்கு மற்றவர்களை இணையாக்கி தீய செயல்கள் புரிந்தவர்களின் முடிவு மிகவும் தீயதாகவே அமைந்தது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை பொய் எனக்கூறி அவற்றைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்கள்.

(11) 30.11. அல்லாஹ் படைப்பை முன்மாதிரியின்றி தொடங்குகிறான். பின்னர் அதனை மரணிக்கச் செய்கிறான். பின்னர் அதனை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். பின்னர் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் அவன் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும்.

(12) 30.12. மறுமை நிகழும் நாளில் குற்றவாளிகள் அல்லாஹ்வை நிராகரித்ததற்கு அவர்கள் கூறும் ஆதாரங்கள் அறுபட்டுப்போவதால் அவனது அருளை விட்டும் நம்பிக்கையிழந்து விடுவார்கள். அதிலே அவர்களின் மேலெண்ணம் துண்டிக்கப்பட்டு விடும்.

(13) 30.13. -அவர்கள் உலகில் வணங்கிக் கொண்டிருந்த- இணைதெய்வங்களில், வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு பரிந்துரை செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களும் தங்களின் இணைதெய்வங்களை நிராகரித்துவிடுவார்கள். ஏனெனில் உதவி தேவைப்படும் சமயத்தில் அவை அவர்களைக் கைவிட்டுவிடும். ஏனெனில் அவர்கள் அனைவரும் அழிவில் சமமானவர்களாக இருப்பார்கள்.

(14) 30.14. மறுமை நிகழும் நாளில் மனிதர்கள் கூலி பெறுவதற்காக தாங்கள் உலகில் செய்த செயல்களுக்கேற்ப உயர்ந்தவர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும் பிரிந்துவிடுவார்கள்.

(15) 30.15. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டு அவனுக்கு விருப்பமான நற்செயல்கள் புரிந்தவர்கள், என்றும் முடிவடையாத நிலையான அருட்கொடைகளைப் பெறுவதன் மூலம் சுவனத்தில் சந்தோசமாக இருப்பார்கள்.

(16) 30.16. அல்லாஹ்வையும் நம் தூதர் மீது இறக்கிய நம் வசனங்களையும் மறுமை நாளில் எழுப்படுவதையும் விசாரணையையும் நிராகரித்தவர்கள் வேதனைக்காக கொண்டுவரப்படுவார்கள். அதனோடு அவர்கள் சேர்ந்திருப்பார்கள்.

(17) 30.17. மாலை நேரத்தை அடையும்போதும் மஃரிப் மற்றும் இஷா தொழுகை நேரங்கள், காலை நேரத்தை அடையும்போதும் ஃபஜ்ர் தொழுகை நேரம் ஆகியவற்றில் அல்லாஹ்வை துதிபாடுங்கள்.

(18) 30.18. புகழனைத்தும் அவனுக்கு மட்டுமே உரியது. வானங்களில் வானவர்களும் பூமியில் படைப்புகளும் அவனைப் புகழ்கிறார்கள். மாலை வேளை நுழையும்போதான அஸர் தொழுகையின் போதும் லுஹர் வேளை நுழையும் போதும் அவனை துதிபாடுங்கள்.

(19) 30.19. அவன் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான்; உதாரணமாக, விந்திலிருந்து மனிதனை, முட்டையிலிருந்து குஞ்சை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறான்; உதாரணமாக மனிதனிலிருந்து விந்தையும் கோழியிலிருந்து முட்டையையும் வெளிப்படுத்துகிறான். பூமி வறண்ட பின்னரும் அதில் மழை பொழிந்து விளையச் செய்து அதனை உயிர்ப்பிக்கிறான். பூமியை விளையச் செய்து உயிர்ப்பிக்கப்படுவதைப் போலவே நீங்கள் விசாரணைக்காகவும் கூலி கொடுக்கப்படுவதற்காகவும் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து வெளிப்படுத்தப்படுவீர்கள்.

(20) 30.20. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: -மனிதர்களே!- அவன் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்ததன் மூலம் உங்களையும் அதிலிருந்தே உருவாக்கியமை. பின்னர் நீங்கள் இனப்பெருக்கத்தின் மூலம் பல மனிதர்களாகப் பெருகி விட்டீர்கள். பூமியின் கிழக்கு, மேற்கு என பல திசைகளிலும் பரவி விட்டீர்கள்.

(21) 30.21. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: -ஆண்களே!- அவன் உங்களுக்காக உங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்காக அவர்களிடம் உங்களின் மனம் அமைதிபெற வேண்டி உங்கள் இனத்திலிருந்தே உங்களுக்குத் துணைகளை படைத்துள்ளான். உங்களுக்கிடையேயும் அவர்களிடையேயும் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளான். நிச்சயமாக (மேலே) கூறப்பட்டவற்றில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு தெளிவான சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன. ஏனெனில் திட்டமாக அவர்கள்தாம் தங்களின் சிந்தனையைச் செயற்படுத்துவதனால் பயனடைபவர்கள்.

(22) 30.22. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: வானங்களையும் பூமியையும் படைத்ததும், உங்களின் மொழி மற்றும் நிறங்களின் வேற்றுமைகளும். நிச்சயமாக (மேலே) கூறப்பட்டவற்றில் அறிவுடையோருக்கு சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன.

(23) 30.23. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: உங்களின் வேலையின் களைப்பைப் போக்குவதற்காக இரவிலும் பகலிலும் உங்களின் உறக்கம். நீங்கள் உங்கள் இறைவனின்பால் வாழ்வாதாரத்தை தேடிச் செல்வதற்காக பகலை ஏற்படுத்தியுள்ளமையும் அவனுடைய அத்தாட்சியே. நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட இதில் சிந்தித்து ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்கும் மக்களுக்கு சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன.

(24) 30.24. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: அவன் உங்களுக்கு வானத்தில் மின்னலை காண்பிக்கிறான், அதில் இடியின் அச்சத்தையும் மழையின் எதிர்பார்ப்பையும் இணைத்துவைத்துள்ளான். வானத்திலிருந்து மழையை இறக்கி வறண்ட பூமியை அதில் தாவரங்களை முளைக்கச் செய்து உயிர்ப்பிக்கிறான். நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட இதில் விளங்கிக் கொள்ளும் மக்களுக்கு தெளிவான சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் மரணித்ததன் பின் எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகக்கொள்வார்கள்.

(25) 30.25. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய சான்றுகளில் சில: வானம் விழுந்து விடாமல் பூமி தகர்ந்து விடாமல் அவனுடைய கட்டளையால் நிலைத்து நிற்பது. பின்னர் வானவரை சூர் ஊதச் சொல்லி ஓர் அழைப்பைக்கொண்டு அவன் பூமியிலிருந்து உங்களை அழைத்தால் நீங்கள் விசாரணைக்கும் கூலி கொடுக்கப்படுவதற்கும் உங்கள் அடக்கஸ்த்தலங்களிலிருந்து வெளிப்படுத்தப்படுவீர்கள்.

(26) 30.26. வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்தும் படைத்தல், நிர்ணயித்தல், ஆட்சி அதிகாரத்தால் அவனுக்கு மட்டுமே உரியவை. அவை இரண்டிலும் உள்ள அவனுடைய படைப்புகள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கே அடிபணிகின்றன.

(27) 30.27. அவனே முன்மாதிரியின்றி படைப்பைத் தொடங்கினான். பின்னர் அது அழிந்த பிறகு அதனை மீண்டும் உருவாக்குவான். ஆரம்பமாகப் படைப்பதைவிட மீண்டும் படைப்பது இலகுவானது. இரண்டும் அவனுக்கு இலகுவானதுதான். ஏனெனில் அவன் ஏதேனும் ஒன்றை நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். உடனே அது ஆகிவிடும். கண்ணியமான, பூரணத்துவமான பண்புகள் அனைத்திலும் மிக உயர்ந்த வர்ணணை அவனுக்கே உரியது. அவன் யாவற்றையும் மிகைத்தவன்; அவனை யாரும் மிகைக்க முடியாது. படைப்பிலும் திட்டமிடலிலும் ஞானம் மிக்கவன்.

(28) 30.28. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் உங்களுக்கு உங்களிலிருந்தே ஒரு உதாரணம் கூறுகிறான், “சுதந்திரமான உங்கள் வியாபாரப் பங்காளி, சொத்தில் தனது பங்கைப் பிரித்தெடுப்பதை நீங்கள் அஞ்சுவது போன்று உங்கள் அடிமைகளில் யாராவது உங்களின் செல்வங்களில் உங்களுக்கு சம பங்காளிகளாக இருப்பார்களா? உங்கள் அடிமைகள் இவ்வாறு இருப்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? நிச்சயமாக நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். தன் படைப்புகளிலும் அடிமைகளிலும் யாரும் பங்காளியாகாமல் இருப்பதற்கு மிகத் தகுதியானவன் அல்லாஹ்வே. இவ்வாறு உதாரணங்கள் மூலமாகவும் இன்னபிற விஷயங்களின் மூலமாகவும் நாம் விளங்கிக்கொள்ளும் மக்களுக்கு ஆதாரங்களையும் சான்றுகளையும் பல்வேறு வகையில் தெளிவுபடுத்துகின்றோம். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் அவற்றைக்கொண்டு பயனடைவார்கள்.

(29) 30.29. அவர்களின் வழிகேட்டிற்கான காரணம், ஆதாரங்களின் குறையோ, அதன் தெளிவற்ற தன்மையோ அல்ல. மாறாக தங்களின் மன இச்சையைப் பின்பற்றுவதும் முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதுமே நிச்சயமாக அவர்களின் வழிகேட்டிற்கான மூல காரணமாகும். அல்லாஹ்வுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமைகளை அவர்கள் அறியாமையினால் இவ்வாறு செய்கின்றனர். அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிடுவானோ அவருக்கு யார்தான் நேர்வழி காட்டுவார்? ஒருவராலும் நேர்வழிகாட்ட முடியாது. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களைக் காக்கும் உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

(30) 30.30. -தூதரே!- நீரும் உம்மைப் பின்பற்றியவர்களும் எல்லா மார்க்கங்களையும் விட்டுவிட்டு அல்லாஹ் உமக்கு வழிகாட்டிய மக்களின் இயல்பிலுள்ள மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் திரும்பிவிடுங்கள். அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமுமில்லை. இதுதான் கோணலற்ற நேரான மார்க்கமாகும். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் நிச்சயமாக இதுதான் சத்திய மார்க்கம் என்பதை அறிய மாட்டார்கள்.

(31) 30.31. உங்கள் பாவங்களிலிருந்து மீண்டு அல்லாஹ்விடம் திரும்பிவிடுங்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். இயல்புக்கு முரண்படும் இணைவைப்பாளர்களாக மாறி தமது வணக்கத்தில் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிவிடாதீர்கள்.

(32) 30.32. தங்களின் மார்க்கத்தை மாற்றி, அவற்றின் சிலவற்றின் மீது நம்பிக்கைகொண்டு சிலவற்றை நிராகரித்த இணைவைப்பாளர்களில் ஆகிவிடாதீர்கள். அவர்கள் பல பிரிவுகளாகி விட்டார்கள். ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடம் உள்ள அசத்தியத்தைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். நிச்சயமாக அவர்கள் மாத்திரம்தான் சத்தியத்தில் இருக்கிறார்கள் மற்றவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என்றும் எண்ணிக் கொள்கிறார்கள்.

(33) 30.33. நோயினாலோ, வறுமையினாலோ, வரட்சியினாலோ இணைவைப்பாளர்களை ஏதேனும் துன்பம் தாக்கிவிட்டால் தங்களின் துன்பத்தைப் போக்குமாறு தம் இறைவனிடம் மட்டுமே மன்றாடியவர்களாக பிரார்த்தனை செய்கிறார்கள். பின்பு அவர்களின் மீது அவன் கருணை காட்டி அவர்களின் துன்பத்தைப் போக்கிவிட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் பிரார்த்தனையில் அல்லாஹ்வுக்கு மீண்டும் இணைகளை ஏற்படுத்துவதில் மீண்டு விடுகிறார்கள்.

(34) 30.34. -துன்பத்தை அகற்றுதல் உட்பட- அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் மறுத்து இவ்வுலகில் தங்களிடம் இருக்கின்றவற்றை அனுபவித்தால் நிச்சயமாக விரைவில் மறுமை நாளில் தாங்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தோம் என்பதை தங்களின் கண்களால் கண்டுகொள்வார்கள்.

(35) 30.35. அவர்களிடம் எந்த ஆதாரமும் இன்றி அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு அவர்களைத் தூண்டியது என்ன? அவர்களது இணைவைப்புக்கு ஆதாரமாகக் கொள்ளும் எந்தவொரு வேதத்தையும் ஆதாரமாக நாம் இறக்கி வைக்கவில்லை. அவர்களின் இணைவைப்பைக் கூறும், அவர்களின் இருந்து கொண்டிருக்கும் நிராகரிப்பை சரியென்று ஏற்றுக்கொள்ளும் எந்த வேதமும் அவர்களிடம் இல்லை.

(36) 30.36. ஆரோக்கியம், வசதி போன்ற நமது அருட்கொடைகளில் நாம் ஏதேனும் அருட்கொடையை மனிதர்களுக்கு சுவைக்கச் செய்தால் அவர்கள் பூரிப்படைகிறார்கள்; அதனைக் கொண்டு பெருமையடிக்கிறார்கள். அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக நோய், வறுமை ஆகிய அவர்களைக் கவலையூட்டும் ஏதேனும் துன்பம் அவர்களை வந்தடைந்தால் அல்லாஹ்வின் அருளை விட்டும் விரக்தியடைந்து விடுகிறார்கள். அவர்களைத் தாக்கிய துன்பம் நீங்கிவிடாது என்று நம்பிக்கையிழந்துவிடுகிறார்கள்.

(37) 30.37. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியான் நன்றி செலுத்துகிறானா? நன்றி மறக்கிறானா? என்பதைச் சோதிக்கும் பொருட்டு தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குவதையும், அடியான் பொறுமையாக இருக்கிறானா? கோபப்படுகிறானா? என்பதைச் சோதிக்கும் பொருட்டு தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்துவதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக சிலருக்கு தாராளமாக வழங்கப்படுவதிலும் சிலருக்கு நெருக்கடி அளிக்கப்படுவதிலும் அல்லாஹ்வின் அன்பு , இரக்கம் மீது நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன.

(38) 30.38. -முஸ்லிமே!- உறவினர்களுக்குரிய தகுதியான நல்லுபகாரம், சேர்ந்து நடத்தல் போன்ற உரிமைகளை அளித்துவிடு; தேவையுடையவர்களின் தேவையை நிறைவேற்றுமளவு வழங்கிவிடு; தனது ஊரை விட்டு பயணிக்கும் வழிப்போக்கருக்கும் வழங்கிவிடு. அல்லாஹ்வின் திருப்தியை நாடுபவர்களுக்கு அந்த நற்காரியங்களில் செலவளிப்பது சிறந்ததாகும். இந்த உதவியையும் உரிமைகளையும் வழங்குபவர்கள்தான் தாம் வேண்டும் சுவனத்தைப் பெற்று அவர்கள் அஞ்சும் வேதனையிலிருந்து விடுதலையடைந்து வெற்றி பெறக்கூடியவர்கள்.

(39) 30.39. மனிதர்களில் யாராவது ஒருவருக்கு நீங்கள் அளிக்கும் பணத்தை, அவர் மேலதிகமாகத் திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணத்தில் வழங்கினால் அதன் கூலி அல்லாஹ்விடத்தில் அதிகரிக்காது. மக்களிடம் கூலியையோ, அந்தஸ்த்தையோ விரும்பாமல் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தேவையுடையோருக்கு அவர்களின் தேவை நீங்க கொடுப்பவர்களின் செல்வங்களுக்கு அல்லாஹ்விடத்தில் கூலி பன்மடங்களாக அதிகரிக்கின்றன.

(40) 30.40. உங்களைப் படைத்தவனும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவனும் அல்லாஹ் ஒருவனே. பின்னர் உங்களை மரணிக்கச் செய்து மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்கள் இவற்றில் எதையேனும் செய்கின்றனவா? இணைவைப்பாளர்கள் கூறுபவற்றை விட்டும், எண்ணுபவற்றை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

(41) 30.41. மக்கள் செய்த பாவங்களின் காரணமாக நீரிலும் நிலத்திலும் வரட்சி, குறைவான மழை, பல வகையான நோய்கள், தொற்றுநோய்கள் போன்ற சீரழிவு தோன்றிவிட்டது. அவர்கள் திருந்தி அவனிடம் திரும்பும்பொருட்டு அவர்கள் உலக வாழ்வில் செய்த தீய செயல்களின் கூலியைச் சுவைப்பதற்காகவே இது ஏற்படுகிறது.

(42) 30.42. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “பூமியில் சுற்றித் திரிந்து உங்களுக்கு முன்னர் பொய்ப்பித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்களின் முடிவு மோசமானதாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கி அவர்களை வணங்குபவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுக்கு இணைவைத்ததன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

(43) 30.43. -தூதரே!- மறுமை நாள் வருவதற்கு முன்னரே எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமான இஸ்லாத்தின்பால் உம்முகத்தை திருப்பிக் கொள்வீராக. அந்த நாள் வந்துவிட்டால் அதனைத் தடுக்கக்கூடியவர் யாருமில்லை. அந்த நாளில் மக்கள் பலவாறாகப் பிரிந்து விடுவார்கள். ஒரு பிரிவினர் சுவனத்தில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். மற்றொரு பிரிவினர் நரகத்தில் வேதனைக்குள்ளாக்கப்படுவார்கள்.

(44) 30.44. யார் அல்லாஹ்வை நிராகரிப்பாரோ அதனால் கிடைப்பவை -நிரந்தர நரகம்- அவரையே சாரும். எவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக நற்செயல் புரிகிறார்களோ அவர்கள் தங்களுக்காக சுவனத்தில் நுழைவதையும் அதிலுள்ளவற்றை அனுபவிப்பதையும் தயார்படுத்திக் கொள்கிறார்கள். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

(45) 30.45. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவன் விரும்பும் நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு தன் அருள் மற்றும் உபகாரத்திலிருந்து கூலி வழங்குவதற்காக. அவன் தன்னையும் தன் தூதர்களையும் நிராகரிப்பவர்களை விரும்புவதில்லை. மாறாக அவர்களை மிகவும் வெறுக்கிறான். மறுமை நாளில் அவர்களை வேதனைக்குள்ளாக்குவான்.

(46) 30.46. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் ஒன்று, அவன் காற்றை மழை வருவதற்கான நற்செய்தியாக அடியார்களுக்கு அனுப்புவதாகும். -மனிதர்களே!- இது மழையின் பின் ஏற்படும் செழிப்பு, சந்தோசம் என்பவற்றின் மூலம் அவனது அருளை நீங்கள் சுவைக்க வேண்டும் என்பதற்காகவும் கடலில் அவனுடைய நாட்டப்படி கப்பல்கள் செல்ல வேண்டும் என்பதற்காகவும் கடல் வியாபாரத்தின் மூலம் நீங்கள் அவனுடைய அருளை தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான். அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றிசெலுத்துவதன் மூலம் அதனை அவன் உங்களுக்கு அதிகரிக்கலாம்.

(47) 30.47. -தூதரே!- உமக்கு முன்னால் பல தூதர்களை நாம் அவர்களின் சமூகங்களின்பால் அனுப்பியுள்ளோம். அவர்கள் தங்களின் நம்பகத்தன்மையை அறிவிக்கக்கூடிய சான்றுகளோடு அந்த மக்களிடம் வந்தார்கள். ஆயினும் அவர்கள் தூதர்கள் கொண்டுவந்ததை பொய்ப்பித்தார்கள். தீய செயல்கள் புரிந்தோரை நாம் தண்டித்தோம். நம் வேதனையால் அவர்களை அழித்துவிட்டோம். தூதர்களையும் அவர்கள் மீது நம்பிக்கைகொண்டவர்களையும் நாம் அழிவிலிருந்து காப்பாற்றினோம். நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றி உதவி செய்வது நாம் நம் மீது விதித்துக் கொண்ட கடமையாகும்.

(48) 30.48. அல்லாஹ்வே காற்றுகளை இழுத்துவந்து அனுப்புகிறான். அவை மேகங்களைத் தூண்டி நகர்த்தி விடுகின்றன. பின்னர் தான் நாடியவாறு குறைவாகவோ, அதிகமாகவோ வானத்தில் அவற்றைப் பரப்பி துண்டு துண்டாக்கி விடுகிறான். -பார்க்கக்கூடியவரே!- அந்த மேகத்துக்கு மத்தியிலிருந்து மழை பொழிவதை நீ காண்கின்றாய். அவன் தான் நாடிய அடியார்களின் மீது மழை பொழியச் செய்தால் அல்லாஹ்வின் அருளான மழையைக் கொண்டும் அதனைத் தொடர்ந்து தமக்கும் தமது கால்நடைகளுக்கும் தேவையானவற்றை பூமி விளையச் செய்வதைக் கொண்டும் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

(49) 30.49. அல்லாஹ் அவர்களின் மீது மழையை இறக்குவதற்கு முன்னர் அவர்கள் தம்மீது மழை பொழிவதை விட்டும் நிராசையடைந்திருந்தார்கள்.

(50) 30.50. -தூதரே!- அல்லாஹ் தன் அடியார்களின் மீது அருள்புரியும் பொருட்டு பொழிவிக்கும் மழையின் தாக்கத்தினால் ஏற்படும் பயன்களையும் அதன் மூலம் எவ்வாறு அவன் வறண்ட பூமியை பல்வேறு தாவரங்களை முளைக்கச் செய்வதன் மூலம் உயிர்ப்பிக்கிறான் என்பதையும் பார்ப்பீராக. நிச்சயமாக வறண்ட இந்த பூமியை உயிர்ப்பித்தவனே இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனுக்கு முடியாததல்ல.

(51) 30.51. அவர்களுடைய பயிர்களின் மீது நாம் நாசப்படுத்தக்கூடிய காற்றை அனுப்பி அதனால் பச்சைப் பசேலென இருந்த பயிர்கள் மஞ்சள் நிறமாகிப் போவதை அவர்கள் கண்டால் அதன் பிறகு அல்லாஹ்வின் முந்தைய பல அருட்கொடைகளையும் நிராகரித்துவிடுவார்கள்.

(52) 30.52. நிச்சயமாக உம்மால் இறந்தவர்களுக்கு உங்களால் செவியேற்கச் செய்ய முடியாதது போன்று செவிடர்களையும் செவியேற்கச் செய்ய முடியாது. செவிமடுக்காததை உறுதி செய்வதற்காக அவர்கள் உம்மைவிட்டும் தூரமாகிவிட்டார்கள். அதே போன்று புறக்கணிப்பிலும் பயனடையாமையிலும் இவர்களை ஒத்தவர்களுக்கு உம்மால் நேர்வழிகாட்ட முடியாது.

(53) 30.53. நேரான வழியை விட்டும் நெறிபிறழ்ந்துவிட்டவர்களுக்கு உம்மால் நேர்வழியில் செல்ல பாக்கியம் அளிக்க முடியாது. நம்முடைய வசனங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே உம்மால் பயனுள்ள வகையில் செவியேற்கச் செய்ய முடியும். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் நீர் கூறுவதைக்கொண்டு பயனடைவார்கள். அவர்கள் நம்முடைய கட்டளைக்கு அடிபணிந்து அதற்குக் கட்டுப்பட்டவர்கள்.

(54) 30.54. -மனிதர்களே!- அல்லாஹ்வே உங்களை அற்ப நீரிலிருந்து படைத்தான். பின்னர் பலவீனமான உங்களின் சிறுபராயத்தின் பின் ஆண்மைப் பலத்தை அளித்தான். ஆண்மைப் பலத்திற்குப் பிறகு முதுமையின் பலவீனத்தை ஏற்படுத்தினான். அல்லாஹ் தான் நாடிய பலத்தையும் பலவீனத்தையும் படைக்கிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் பேராற்றல் உடையவன். எதுவும் அவனுக்கு இயலாததல்ல.

(55) 30.55. மறுமை நாள் நிகழும்போது குற்றவாளிகள் சத்தியமிட்டுக் கூறுவார்கள், “நாங்கள் அடக்கஸ்த்தலங்களில் ஒரு மணிநேரம்தான் தங்கியிருந்தோம், என்று.” அவர்கள் அடக்கஸ்த்தலங்களில் தங்கியிருந்த காலத்தை அறிவதிலிருந்து திருப்பப்பட்டதைப்போன்றே உலகில் சத்தியத்தைவிட்டும் அவர்கள் திருப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

(56) 30.56. ஞானம் வழங்கப்பட்ட தூதர்களும் வானவர்களும் கூறுவார்கள்: “அல்லாஹ் எழுதி வைத்த அவனுடைய முன்னைய அறிவின்படி அவன் உங்களைப் படைத்த நாளிலிருந்து நீங்கள் மறுத்துக் கொண்டிருந்த மறுமை நாள்வரை தங்கியிருந்தீர்கள். இதுதான் மக்கள் தம் அடக்கஸ்தலங்களிலிருந்து எழுந்துவரும் நாளாகும். ஆயினும் நீங்கள் மறுமை நாள் நிகழப் போகிறது என்பதை அறியாமல் இருந்தீர்கள். எனவேதான் அதனை நிராகரித்துக் கொண்டிருந்தீர்கள்.

(57) 30.57. விசாரணைக்காகவும் கூலி வழங்குவதற்காகவும் அவர்களை அல்லாஹ் எழுப்பும் நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் இட்டுக்கட்டி வைத்திருக்கும் சாக்குப்போக்குகள் எந்தப் பயனையும் அளிக்காது. பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ் விரும்பியபடி மீளுமாறு அவர்கள் கோரப்படவும் மாட்டார்கள். ஏனெனில் அதற்குரிய நேரம் தவறிவிட்டது.

(58) 30.58. நாம் இந்த குர்ஆனில் மனிதர்களின் மீது -அக்கறை கொண்டு- அவர்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியம் தெளிவாவதற்காக எல்லா உதாரணங்களையும் கூறியுள்ளோம். -தூதரே!- நீர் உண்மையாளர் என்பதற்கு ஏதேனும் ஆதாரத்தை அவர்களிடம் கொண்டுவந்தால், “நீர் கொண்டு வந்ததில் நீங்கள் அசத்தியவாதிகளே” என்று அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்.

(59) 30.59. நீர் கொண்டுவந்த ஆதாரத்தை நம்பாத இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டது போன்றே நிச்சயமாக நீர் கொண்டு வந்ததை சத்தியம் என்று அறியாதவர்களின் உள்ளங்களிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.

(60) 30.60. -தூதரே!- உம் சமூகம் உம்மை பொய்ப்பிப்பதை பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. உதவி செய்வதாகவும் அதிகாரத்தை வழங்குவதாகவும் அல்லாஹ் உமக்கு அளித்த வாக்குறுதி சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும். திட்டமாக தாங்கள் எழுப்பப்படுவோம் என்பதை உறுதியாக நம்பாதவர்கள் உம்மை அவசரப்பட்டு, பொறுமையைக் கைவிடுவதன்பால் தள்ளிவிட வேண்டாம்.