13 - ஸூரா அர்ரஃத் ()

|

(1) 13.1. (الٓمٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. -தூதரே!- இந்த அத்தியாயத்தின் உயர்ந்த வசனங்களும் அல்லாஹ் உம்மீது இறக்கிய குர்ஆனும் சந்தேகமற்ற உண்மையாகும். அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் கர்வத்தினாலும், பிடிவாதத்தினாலும் இதனை நம்பிக்கை கொள்ளவில்லை.

(2) 13.2. அல்லாஹ்தான் உயர்ந்த வானங்களை நீங்கள் பார்க்கும் தூண்களின்றி படைத்தான். பின்னர் அவன் தன் கண்ணியத்திற்கேற்ப வடிவமோ உவமையோ கற்பிக்காமல் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் தன் படைப்புகளின் பயன்பாட்டிற்காக சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்துள்ளான். சூரியன், சந்திரன் என ஒவ்வொன்றும் அல்லாஹ் அறிந்த குறிப்பிட்ட காலகட்டம் வரை இயங்கிக் கொண்டிருக்கும். வானங்களிலும் பூமியிலும் தான் நாடியபடி அவன் கட்டளையிடுகிறான். நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனின் சந்திப்பை உறுதியாக நம்பி, நற்செயல்களைக் கொண்டு அதற்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக தன் வல்லமையை எடுத்துரைக்கக் கூடிய சான்றுகளை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(3) 13.3. அவனே பூமியை விரித்தான். அது மக்களைக் கொண்டு ஆட்டம் காணாமல் இருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான். மக்களுக்கும் அவர்களின் கால்நடைகளுக்கும் பயிர்களுக்கும் நீர்ப்புகட்டுவதற்காக அதில் ஆறுகளையும் ஏற் படுத்தினான்.ஒவ்வொரு பழவகைகளிலும் உயிரினங்களில் உள்ளதைப் போன்று அவன் ஆண், பெண் என சோடிகளை ஏற்படுத்தியுள்ளான். இரவால் பகலைப் போர்த்துகிறான். பிரகாசமாக இருந்த அது இருட்டாக ஆகிவிடுகிறது. நிச்சயமாக மேற்குறிப்பிட்டவற்றில் அல்லாஹ்வின் படைப்புகளைக் குறித்து சிந்திக்கக் கூடிய மக்களுக்கு ஏராளமான சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. அவர்கள்தாம் இந்த ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு பயனடையக் கூடியவர்களாவர்.

(4) 13.4. பூமியில் அருகருகே பல பகுதிகள் இருக்கின்றன. அதில் திராட்சைத் பயிர்களும் வயல்களும் ஒரே மூலத்திலிருந்து வந்த ஒன்றுபட்ட பேரீச்சை மரங்களும் தனித்தனியான பேரீச்சை மரங்களும் காணப்படுகின்றன. இந்த தோட்டங்கள், பயிர்கள் அனைத்திற்கும் ஒரே வகையான தண்ணீர்தான் பாய்ச்சப்படுகிறது. அருகருகே இருந்தும் ஒரே தண்ணீர் பாய்ச்சப்பட்டாலும் சுவை மற்றும் ஏனைய பயன்பாடுகளில் ஒன்றை விட ஒன்றை சிறப்பித்துள்ளோம். நிச்சயமாக மேற்கூறப்பட்டவற்றில் விளங்கிக்கொள்ளும் மக்களுக்கு சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் இதிலிருந்து படிப்பினை பெறுவார்கள்.

(5) 13.5. -தூதரே!- நீர் ஏதேனும் ஒரு விஷயத்தால் ஆச்சரியப்பட்டால் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரித்து, “நாங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமோ” என்று அவர்கள் கூறும் கூற்றே ஆச்சரியப்படுவதற்குத் தகுதியானதாகும். மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்ற அவனின் வல்லமையை மறுக்கக்கூடிய, தங்கள் இறைவனை நிராகரிக்கக்கூடிய இவர்களின் கழுத்தில் மறுமை நாளில் நெருப்பிலான விலங்குகள் மாட்டப்படும். இவர்கள்தாம் நரகவாசிகளாவர். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அவர்களுக்கு அழிவு ஏற்படாது. வேதனையும் அவர்களை விட்டு நிறுத்தப்படாது.

(6) 13.6. -தூதரே!- இணைவைப்பாளர்கள் தண்டனையை விரைவாகக் கொண்டுவரும்படி உம்மை அவசரப்படுத்துகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு விதித்த அருட்கொடைகளை முழுமையாக அனுபவிக்க முன்னரே அவர்கள் மீது தண்டனை இறங்காமலிருப்பதை தாமதமாகக் கருதுகிறார்கள். அவர்களுக்கு முன்னர் அவர்களைப் போன்று நிராகரித்த சமூகங்களுக்கு தண்டனைகள் ஏற்பட்டுள்ளன. ஏன் அவர்கள் அவற்றைக் கொண்டு படிப்பினை பெறுவதில்லை? -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மக்கள் அநீதி இழைத்த போதிலும் அவர்களை மன்னிக்கக் கூடியவன். எனவே அவர்கள் அவனிடம் தவ்பா செய்து மீள வேண்டும் என்பதற்காக அவர்களை உடனுக்குடன் தண்டிப்பதில்லை. பாவமன்னிப்புக் கோராமல் நிராகரிப்பில் நிலைத்திருப்பவர்களைத் தண்டிப்பதில் அவன் கடுமையானவன்.

(7) 13.7. அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் -பிடிவாதத்திலும் புறக்கணிப்பிலும் நிலைத்தவர்களாகக்- கூறுகிறார்கள்: “மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பட்டது போன்று முஹம்மது மீதும் அவருடைய இறைவனிடமிருந்து ஒரு சான்று இறக்கப்பட வேண்டாமா?” -தூதரே!- நீர் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து மக்களை எச்சரிக்கை செய்யும் ஒரு எச்சரிக்கையாளர்தான். அல்லாஹ் உமக்கு வழங்கிய சான்றுகளைத் தவிர உம்மிடம் எந்த சான்றுகளும் இல்லை. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய ஒரு தூதர் இருக்கின்றார். அதன்படி அவர்களை வழிகாட்டுவார்.

(8) 13.8. ஒவ்வொரு பெண்ணும் தன் வயிற்றில் சுமப்பதையும் அது குறித்து ஒவ்வொன்றையும் அல்லாஹ் அறிகிறான். கர்ப்பப்பைகளில் நிகழும் கூடுதல், குறைவு, ஆரோக்கியம், சுகவீனம் ஆகிய அனைத்தையும் அவன் அறிகிறான். ஒவ்வொன்றும் அவனிடம் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை விட கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.

(9) 13.9. படைப்பினங்களின் புலனுறுப்புக்களுக்கு அப்பாற்பட்ட, புலன்களுக்கு உட்பட்ட ஒவ்வொன்றையும் அவன் அறிந்துள்ளான். அவன் தன் பண்புகளிலும் பெயர்களிலும் செயல்களிலும் மகத்தானவன். உள்ளமையிலும், பண்புகளிலும் தனது அனைத்து படைப்புகளை விடவும் மிக உயர்ந்தவன்.

(10) 13.10. அவன் மறைவானதையும் இரகசியமானதையும் அறிகிறான். -மனிதர்களே!- நீங்கள் வெளிப்படையாகப் பேசினாலும் இரகசியமாகப் பேசினாலும் அவனுக்கு ஒன்றுதான்; இரவின் இருளில் மக்களின் பார்வையை விட்டு மறைந்திருப்பவனும் பகலின் வெளிச்சத்தில் தன் செயல்களால் வெளிப்படையானவனும் அவனுக்கு ஒன்றுதான்.

(11) 13.11. ஒருவருக்குப் பின் ஒருவராக மனிதனிடம் வருகை தரும் வானவர்கள் இருக்கிறார்கள். சிலர் இரவிலும் சிலர் பகலிலும் வருகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு மனிதனை அவனுக்கு நிகழக் கூடாது என எழுதப்பட்டிருக்கும் விதிகளிலிருந்து பாதுகாக்கிறார்கள். மனிதனின் சொற்களையும் செயல்களையும் எழுதுகிறார்கள். ஒரு சமூகம் நன்றி மிக்க தமது நிலையை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ்வும் அவர்களது நல்ல நிலையை அவர்கள் வெறுக்கும் நிலையாக மாற்ற மாட்டான். அவன் ஒரு சமூகத்தை அழிக்க நாடினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. -மனிதர்களே!- உங்களைப் பீடித்திருக்கும் தீங்கினை அகற்றுவதற்கு நீங்கள் ஒதுங்க அவனைத் தவிர உங்களுக்கு வேறு பொறுப்பாளன் இல்லை.

(12) 13.12. -மனிதர்களே!- அவனே உங்களுக்கு மின்னலைக் காட்டுகிறான். இடி முழக்கத்தால் அச்சத்தையும் மழையால் ஆர்வத்தையும் அதன் மூலம் அவன் உங்களுக்கு ஏற்படுத்துகிறான். அவனே அடர்த்தியான மழை நீர் மூலம் கனமான மேகங்களை உருவாக்குகிறான்.

(13) 13.13. இடிமுழக்கம் தன் இறைவனைப் புகழ்வதுடன் அவனது தூய்மையையும் பறைசாற்றுகிறது. வானவர்கள் அச்சத்தினாலும் கண்ணியத்தினாலும் தங்கள் இறைவனைப் புகழ்கிறார்கள். அவன் தான் நாடிய படைப்புகள் மீது பொசுக்கக்கூடிய இடியை அனுப்பி அவற்றை அழித்து விடுகிறான். நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் ஒருவனே என்பதில் தர்க்கம் புரிகிறார்கள். தனக்கு மாறாகச் செயல்பட்டவர்களைத் தண்டிப்பதில் கடுமையானவன். அவன் நாடிய எதனையும் செய்தே தீருவான்.

(14) 13.14. ஏகத்துவம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இதில் எவருக்கும் பங்கு இல்லை. இணைவைப்பாளர்கள் அழைக்கும் சிலைகள் அவர்களை அழைப்போரின் எந்தக் கோரிக்கைக்கும் எந்தப் பதிலையும் அளிக்காது. இதற்கு உதாரணம், தாகித்த மனிதன் தண்ணீரை நோக்கி கையை நீட்டிக் கொண்டு அது தன் வாய்க்குள் சென்றதன் பின் பருக நினைப்பவனை போன்றதாகும். அது ஒருபோதும் அவனுடைய வாய்க்குள் செல்லாது. நிராகரிப்பாளர்கள் சிலைகளை அழைப்பது வீணானதாகவும் சத்தியத்தை விட்டுத் தூரமானதாகவும் இருக்கின்றது. ஏனெனில் நிச்சயமாக அவை பலனை கொண்டுவரவோ தீங்கினை அகற்றவோ சக்தி பெறாது.

(15) 13.15. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் அல்லாஹ்வுக்கே சிரம்பணிந்து கட்டுப்படுகின்றனர். இதில் நம்பிக்கையாளன், நிராகரிப்பாளன் என அனைவரும் சமமானவர்களே. நம்பிக்கையாளன் விரும்பி அவனுக்குக் கட்டுப்படுகின்றான். நம்பிக்கையற்றவனோ நிர்ப்பந்தமாக அவனுக்குக் கட்டுப்படுகின்றான். ஆனால் அவனது இயல்போ விரும்பி அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறே அவனுக்குக் கூறுகிறது. நிழலுள்ள அனைத்துப் படைப்பினங்களின் நிழல்களும் பகலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் அவனுக்கே கட்டுப்படுகின்றன.

(16) 13.16. -தூதரே!- அல்லாஹ்வுடன் மற்றவர்களை வணங்கும் நிராகரிப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? அவையிரண்டையும் நிர்வகிப்பவன் யார்?” -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் அவையிரண்டையும் படைத்தான். அவனே அவையிரண்டையும் நிர்வகிக்கின்றான். நீங்கள் இதனை ஒத்துக் கொள்கிறீர்கள்.” -தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிரவுள்ள இயலாத பாதுகாவலர்களையா நீங்கள் உங்களுக்கு எடுத்துக்கொண்டீர்கள்? அவை தமக்குத்தாமே பலனை கொண்டுவரவோ தம்மை விட்டும் எத்தீங்கையும் அகற்றவோ சக்தி பெறாது. அவ்வாறிருக்கும் போது எவ்வாறு அவை மற்றவர்களுக்குப் பயனளிக்கும்? -தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “அகப் பார்வையற்ற நிராகரிப்பாளனும் பார்வையுடைய நேர்வழி பெற்ற நம்பிக்கையாளனும் சமமாவார்களா? அல்லது நிராகரிப்பு என்னும் இருள்களும் ஈமான் எனும் ஒளியும் சமமாக முடியுமா? அல்லது தமது இணை தெய்வங்களின் படைப்புடன் அல்லாஹ்வின் படைப்பும் கலந்து குழம்பி விடும் அளவுக்கு அல்லாஹ்வைப் போன்று படைக்கும் இணைகளை அல்லாஹ்வுக்கு அவர்கள் ஏற்படுத்தியுள்ளனரா? -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன்; படைப்பில் அவனுக்கு யாதொரு இணையுமில்லை; அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்; அனைவரையும் மிகைத்தவன்.

(17) 13.17. அசத்தியத்தின் அழிவுக்கும் சத்தியம் நிலைப்பதற்கும் உதாரணமாக வானத்திலிருந்து பொழிந்த மழையை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதன் மூலம் ஓடைகள் சிறிய பெரிய அதன் அளவுக்கேற்ப நிரம்பி வழிகின்றன. வெள்ளம் மேலெழும் நுரைகளை சுமந்து செல்கிறது. மேலும், உருக்கி மனிதர்கள் அலங்காரமாகப் பயன்படுத்தும் நோக்கில் அவர்கள் நெருப்பிலிடும் பெறுமதியான கனிமங்களையும் அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். இரண்டிலும் நுரை மிதக்கின்றது. இவ்விரண்டு உதாரணங்கள் மூலமும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். அசத்தியம் மேலேழும் நுரையையும், கனிமங்களை உருக்கும் போது கழிந்து விடும் துருவையும் போன்றது. சத்தியம் தூய்மையான நீரைப் போன்றது. அது பருகப்படுகிறது. பழங்கள், புற்பூண்டுகள் ஆகியவற்றை முளைப்பிக்கிறது. மேலும் சத்தியம், உருக்கப்பட்ட பிறகு மீதமிருக்கும் மக்கள் பயனடையும் கனிமத்தைப் போன்றதாகும். இந்த இரண்டு உதாரணங்களைக் கூறியது போன்று அசத்தியத்திலிருந்து சத்தியம் தெளிவாக வேண்டும் என்பதற்காக மக்களுக்கு அல்லாஹ் உதாரணங்கள் கூறுகிறான்.

(18) 13.18. தன்னை ஏகத்துவப்படுத்துமாறும் தனக்குக் கட்டுப்படுமாறும் தமது இறைவன் அழைத்ததை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர்களுக்கு சுவனம் என்னும் அழகிய கூலி இருக்கின்றது. அவனை ஓருமைப்படுத்தி அவனுக்குக் கட்டுப்படுமாறு விடுத்த அவனது அழைப்புக்குப் பதிலளிக்காத நிராகரிப்பாளர்களுக்கு பூமி நிறைய செல்வங்கள் இருந்து அதேபோன்று மேலதிகமாகவும் இருந்தாலும் அவர்கள் வேதனையிலிருந்து தப்பிக்க அவை அனைத்தையும் ஈடாகக் கொடுத்து விடுவார்கள். அவனுடைய அழைப்புக்கு பதிலளிக்காதவர்கள் அவர்களின் தீய செயல்களுக்கு முழுமையாக விசாரணை செய்யப்படுவார்கள். அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்களின் விரிப்பும் தங்குமிடமுமான நரகம் மிகவும் மோசமானது.

(19) 13.19. -தூதரே!- உமது இறைவனிடமிருந்து அல்லாஹ் உம்மீது இறக்கியது சந்தேகமற்ற சத்தியமாகும் என்பதை அறிந்த அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட நம்பிக்கையாளனும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத நிராகரிப்பாளனான குருடனும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக ஆரோக்கியமான சிந்தனைகள் உடையோரே இதன் மூலம் அறிவுரை பெற்றுக் கொள்வார்கள், படிப்பினை பெற்றுக்கொள்வார்கள்.

(20) 13.20. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியையும் அவனுடைய அடியார்களிடம் செய்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றுகிறார்கள். அல்லாஹ்விடமோ மற்றவர்களிடமோ செய்த ஒப்பந்தங்களை அவர்கள் முறிப்பதில்லை.

(21) 13.21. அவர்கள்தான் அல்லாஹ் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட உறவுகளுடனும் சேர்ந்து வாழ்கிறார்கள். தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகச் செய்யும் அளவுக்கு அவனை அஞ்சுகிறார்கள். தாங்கள் செய்த ஒவ்வொரு பாவத்துக்கும் அல்லாஹ் கணக்கு தீர்த்து விடுவானோ என்று அவர்கள் பயந்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் எவரிடம் கடுமையாக விசாரணை செய்யப்படுமோ அவர் அழிந்துவிட்டார்.

(22) 13.22. அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் அவன் அவர்களுக்கு விதித்த மகிழ்ச்சியான, துன்பமான விஷயங்களிலும் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதிலும் அவனுடைய திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்கிறார்கள்; தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து கடமையான உரிமைகளை நிறைவேற்றுவார்கள். முகஸ்துதியைத் தவிர்க்க மறைமுகமாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரிக்காக வெளிப்படையாகவும் அவற்றிலிருந்து உபரியாகவும் செலவு செய்கிறார்கள்; தங்களுக்கு தீங்கிழைத்தவர்களுக்கு நன்மை செய்து அவர்களின் தீங்கை நன்மையால் எதிர்கொள்கிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் மறுமை நாளில் சிறந்த முடிவைப் பெறுவார்கள்.

(23) 13.23. இந்த சிறந்த முடிவு சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இன்பமுற்றோராக தங்கியிருப்பார்கள். அங்கு அவற்றில் அவர்களின் தந்தையர், தாய்மார்கள், மனைவியர், பிள்ளைகள் ஆகியோரில் நேர்வழியில் நின்றவர்கள் நுழைவதும் அவர்களது இன்பத்தைப் பரிபூரணமாக்கும். வானவர்கள் சுவனத்தின் எல்லா வாயில்கள் வழியாகவும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறிக்கொண்டே அவர்களிடம் வருவார்கள்.

(24) 13.24. “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்” என்று வானவர்கள் அவர்களிடம் வரும் போதெல்லாம் கூறுவார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் அவனுடைய விதியை ஏற்றுக் கொள்வதிலும் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதிலும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததனால் ஆபத்துகளிலிருந்து நீங்கள் தப்பிவிட்டீர்கள் என்பதே அதன் கருத்தாகும். உங்களது இறுதி முடிவான இந்த இறுதி வீடு சிறப்பானதாகி விட்டது.

(25) அவர்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அது உறுதிசெய்யப்பட்ட பின்பும் முறிக்கின்றனர்.அல்லாஹ் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட இரத்த உறவுகளை துண்டித்து வாழ்கின்றனர். அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதன் மூலம் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். இப்படிப்பட்ட அவர்கள்தான் அல்லாஹ்வின் அருளைவிட்டும் விரட்டப்பட்ட துர்பாக்கியவான்கள். அவர்களின் தீய முடிவு நரகமாகும்.

(26) 13.26. அல்லாஹ் தான் நாடியோருக்கு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். தான் நாடிய அடியார்களுக்கு அதனை சுருக்கியும் விடுகிறான். வாழ்வாதாரம் அதிகமாக வழங்கப்படுவது பாக்கியத்தின், இறைநேசத்தின் அடையாளமும் அல்ல. அது குறைவாக வழங்கப்படுவது துர்பாக்கியத்தின் அடையாளமும் அல்ல. நிராகரிப்பாளர்கள் இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு மகிழ்வுற்று அதன் பக்கம் சாய்ந்து அதனைக் கொண்டு நிம்மதி அடைகின்றனர். மறுமையோடு ஒப்பிடும் போது இவ்வுலகம் அழிந்து விடும் அற்ப இன்பமேயன்றி வேறில்லை.

(27) 13.27. அல்லாஹ்வையும் அவனுடைய சான்றுகளையும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்: “நாம் முஹம்மதை நம்புவதற்கு அவரது நம்பகத்தன்மையை எடுத்துரைக்கக்கூடிய ஏதேனும் புலன் ரீதியான ஒரு சான்று அவர் மீது இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? இவ்வாறு கருத்து கூறுபவர்களிடம் -தூதரே- நீர் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் தன் நீதியால் தான் நாடியவர்களை வழிகெடுக்கிறான். பாவமன்னிப்பின் மூலம் தன் பக்கம் திரும்பக்கூடியவர்களுக்கு தன் அருளால் நேர்வழிகாட்டுகிறான். அத்தாட்சிகளை இறக்கினால்தான் நேர்வழி பெறுவோம் எனக் கூற நேர்வழியொன்றும் அவர்களின் அதிகாரத்திற்குட்பட்டதல்ல.

(28) 13.28. அல்லாஹ் நேர்வழிகாட்டிய இவர்கள்தாம் நம்பிக்கையாளர்களாவர். அவனுடைய தூய்மையை பறைசாற்றுவது, அவனைப் புகழ்வது, அவனுடைய வேதத்தை ஓதுவது, அதனைக் கேட்பது போன்ற பல்வேறு வகை திக்ருகளின் மூலம் அவர்களின் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் நினைவால் மாத்திரமே உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. அதுவே அவற்றுக்குப் பொருத்தமானதாகும்.

(29) 13.29. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவன் பக்கம் நெருக்கி வைக்கக்கூடிய நற்செயல்களில் ஈடுபட்ட இவர்களுக்கு மறுமையில் நல்ல வாழ்வு உண்டு. அவர்களுக்கு சுவனம் என்னும் சிறந்த முடிவும் உண்டு.

(30) 13.30. -தூதரே!- நாம் முந்தைய சமூகங்களின் பக்கம் தூதர்களை அனுப்பியது போன்றே உம் சமூகத்தின் பக்கமும், நாம் உமக்கு வஹி மூலம் அறிவிக்கும் குர்ஆனை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக, உம்மை தூதராக அனுப்பினோம், அது உமது நம்பகத்தன்மையை எடுத்துரைக்கப் போதுமானது. ஆயினும் உமது சமூகத்தினர் இந்த அற்புதத்தை அறிந்து கொண்டே நிராகரிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அளவிலாக் கருணையாளனுக்கு இணைகளை ஏற்படுத்தி அவனை நிராகரிக்கிறார்கள். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் யாருக்கு ஏனைய தெய்வங்களை இணைவைத்துக்கொண்டுள்ளீர்களோ அந்தக் கருணையாளன்தான் என் இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்துள்ளேன். அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்.

(31) 13.31. இறைவேதங்களில் ஏதேனும் ஒரு வேதத்தின் பண்புகளில், மலைகளை அதன் இடங்களிலிருந்து நகர்த்தும் அல்லது பூமியைப் பிளந்து ஆறுகளாகவும் ஊற்றுகளாவும் அதனை ஓடச் செய்யும் அல்லது மரணித்தவர்களின் மீது அதனை ஓதுவதனால் அவர்களுக்கு உயிர் வழங்கும் இறைவேதம் ஒன்று இருக்குமானால் அது உமக்கு இறக்கப்பட்ட இந்த அல்குர்ஆன்தான். ஏனெனில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தெளிவான அத்தாட்சியைக் கொண்டதாகும். அவர்கள் பயப்படக்கூடிய உள்ளங்களைப் பெற்றவர்களாக இருந்தால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆயினும் அவர்கள் மறுப்பவர்களாக உள்ளனர். மாறாக அற்புதங்களையும் ஏனையவற்றையும் இறக்கும் முழு அதிகாரமும் அல்லாஹ்விடமே உள்ளது. அல்லாஹ் நாடினால் சான்றுகளை இறக்காமலே மக்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்திடுவான் என்பதை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? ஆயினும் அல்லாஹ் அவ்வாறு நாடவில்லை. தொடரான வேதனை இறங்குவதற்கான அல்லாஹ்வின் வாக்குறுதி வரும் வரை அல்லாஹ்வை நிராகரித்தவர்களை, அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவர்களைத் திடீரெனத் தாக்கும் கடும் வேதனை அவர்களைத் தாக்கிக் கொண்டேயிருக்கும் அல்லது அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் எங்கேனும் ஆபத்து இறங்கிக் கொண்டேயிருக்கும். நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்தவற்றுக்கான குறித்த காலம் வந்து விட்டால் அதனை நிறைவேற்றாமல் விட்டு விடுவதில்லை.

(32) 13.32. நீர், தனது சமூகத்தின் நிராகரிப்பும் பரிகாசத்திற்கும் உள்ளாகிய முதலாவது தூதர் அல்ல. -தூதரே!- உமக்கு முன்னிருந்த சமூகங்களும் தமது தூதர்களை பரிகாசம் செய்து நிராகரித்துள்ளார்கள். தூதர்களை நிராகரித்தவர்கள் நான் அவர்களை அழிக்க மாட்டேன் என்று எண்ணுமளவு அவர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். அவகாசத்தின் பின்னர் பல்வேறு வேதனைகளால் அவர்களைத் தண்டித்தேன். அவர்களுக்கான எனது தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை நீர் பார்த்தீரா? அது கடுமையான வேதனையாக இருந்தது.

(33) 13.33. அனைத்து படைப்பினங்களின் வாழ்வாதரத்தை பாதுகாப்பவனான, ஒவ்வொரு ஆன்மாவும் செய்யும் செயல்களைக் கண்காணித்து அவற்றிற்கேற்ப கூலி வழங்குபவன் வணங்கப்படத் தகுதியானவனா? அல்லது வணக்கத்திற்குத் தகுதியற்ற இந்த சிலைகளா? நிராகரிப்பாளர்கள் அநியாயமாகவும் அபாண்டமாகவும் அவற்றை அல்லாஹ்வுக்கு இணைகளாக ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் வணங்கும் இணை தெய்வங்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள் அல்லது பூமியில் அல்லாஹ் அறியாத இணைகளை நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லது உண்மையற்ற வெறும் வார்த்தைகளை அவனிடம் கூறுகிறீர்களா? மாறாக ஷைத்தான் நிராகரிப்பாளர்களின் தீய திட்டங்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான். எனவே அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தார்கள். நேர்வழியை விட்டும் அவர்களைத் திருப்பி விட்டான். யாரை அல்லாஹ் நேரான பாதையை விட்டும் வழிதவறச் செய்துவிட்டானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் யாரும் இல்லை.

(34) 13.34. நம்பிக்கையாளர்களின் கரங்களினால் கொலை, கைது செய்யப்படுவதன் மூலம் இவ்வுலகில் அவர்களுக்கு தண்டனை உண்டு. அவர்களுக்காக காத்திருக்கும் மறுமையின் வேதனையோ உலக வேதனையை விட மிகக் கடுமையானது. ஏனெனில் அது கடுமையான முடிவடையாத நிரந்தரமான வேதனையாகும். மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைப் பாதுகாக்கக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

(35) 13.35. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் வாக்களித்த சுவனத்தின் தன்மையானது, அதன் மாளிகைகளுக்கும், மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் பழங்கள் உலகத்தில் இருக்கும் பழங்களை போல் அல்லாமல் என்றும் முடிவடையாதது. அதன் நிழல்கள் நிலையானது, அகன்று விடாதது, குறையாதது. இந்த முடிவு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கே ஆகும். நிராகரிப்பாளர்களின் இறுதி முடிவு நரகமேயாகும். அங்கு நிரந்தரமாக அவர்கள் நுழைவார்கள்.

(36) 13.36. -தூதரே!- நாம் தவ்ராத்தை வழங்கிய யூதர்களும் இன்ஜீலை வழங்கிய கிறிஸ்தவர்களும் உம்மீது இறக்கப்பட்டதைக் கொண்டு அது அவர்களுக்கு இறக்கப்பட்ட சிலவற்றுடன் ஒத்துப் போவதால் மகிழ்ச்சியடைகிறார்கள். யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் சிலர் அவர்களின் மன இச்சையோடு ஒத்துப் போகாத அல்லது திரிபுபடுத்தியாக அவர்களை வர்ணிக்கும் உமக்கு இறக்கப்பட்ட சிலவற்றை நிராகரிக்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு யாரையும் இணையாக்கக் கூடாது என்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவன் பக்கமே நான் அழைக்கின்றேன். வேறு யாரையும் நான் அழைக்க மாட்டேன். அவனிடமே நான் திரும்ப வேண்டும். இதைக் கொண்டுதான் தவ்ராத்தும் இன்ஜீலும் வந்தன.

(37) 13.37. -தூதரே!- முந்தைய வேதங்களை அந்தந்த மக்களின் மொழிகளிலேயே நாம் இறக்கியது போன்று உம்மீதும் குர்ஆனை, சத்தியத்தை தெளிவுபடுத்தக்கூடியதாக அரபி மொழியில் இறக்கினோம். -தூதரே!- அல்லாஹ் உமக்குக் கற்றுக் கொடுத்த தெளிவான அறிவு உம்மிடம் வந்த பின்னரும் தமது மன இச்சைக்கு ஒத்துவராதவற்றை நீக்குமாறு வேதக்காரர்கள் பேரம் பேசுவதில் அவர்களின் மன இச்சையை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றும் பாதுகாவலர்களோ உம் எதிரிகளுக்கு எதிராக உமக்கு உதவக் கூடியவர்களோ யாரும் இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து உம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.

(38) 13.38. -தூதரே!- உமக்கு முன்னரும் நாம் மனிதர்களிலிருந்து பல தூதர்களை அனுப்பியுள்ளோம். தூதர்களில் நீர் ஒன்றும் புதுமையானவர் அல்ல. மற்ற மனிதர்களைப் போன்று அவர்களுக்கும் மனைவியரையும் பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம். மணமுடிக்காத, பிள்ளை பெறாத வானவர்களாக நாம் அவர்களை ஆக்கவில்லை. நீரும் மணமுடித்து, பிள்ளைகள் பெறும் இந்த மனிதத் தூதர்களில் ஒருவரே. பின்னர் எதற்காக நீர் அவ்வாறிருப்பதைப் பார்த்து இணைவைப்பாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்?! அல்லாஹ் அனுமதித்தாலேயன்றி எந்த தூதரும் தன் புறத்திலிருந்து சான்றினைக் கொண்டுவர மாட்டார். அல்லாஹ் விதித்த ஒவ்வொரு விஷயத்திற்கும் அது குறிக்கப்பட்ட ஓர் ஏடு உண்டு. மேலும் முந்தவோ பிந்தவோ செய்யாத ஒரு தவணையும் உண்டு.

(39) 13.39. அல்லாஹ் தான் நீக்குவதற்கு நாடிய நன்மையையோ, அல்லது தீமையையோ அல்லது பாக்கியத்தையோ அல்லது துர்பாக்கியத்தையோ, வேறு ஒன்றையோ நீக்கிவிடுகிறான். அவற்றில் தான் நாடியதை நிலைபெறச் செய்கிறான். அவனிடத்தில் லவ்ஹுல் மஹ்பூல் எனும் ஏடு இருக்கின்றது. அவை அனைத்தின் மூலம் அதுவே. அழித்தலோ அல்லது பதிவதோ அனைத்தும் அதிலுள்ளதற்கு ஒத்து வருபவையே.

(40) 13.40. -நபியே!- உம்மை மரணிக்கச் செய்வதற்கு முன்னரே நாம் அவர்களுக்கு வாக்களித்த வேதனையில் சிலவற்றை உமக்குக் காட்டினாலும் அது எம்மைச் சார்ந்ததே. அல்லது அதற்கு முன்னரே உம்மை மரணிக்கச் செய்துவிட்டாலும் நாம் கட்டளையிட்டதை எடுத்துரைப்பது மட்டுமே உம்மீதுள்ள கடமையாகும். அவர்களுக்குக் கூலி அளிப்பதோ, கணக்கு தீர்ப்பதோ உம்மீது கடமையல்ல. அது நம்மீதுள்ள கடமையாகும்.

(41) 13.41. இஸ்லாத்தை பரவச் செய்து, முஸ்லிம்கள் அவற்றை வெற்றி கொள்வதன் மூலம் நிராகரிக்கும் நிலத்தின் பகுதிகளை குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதை இந்த நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் தன் அடியார்களிடையே தான் நாடியவாறு தீர்ப்பளிக்கிறான். எவராலும் அவனுடைய தீர்ப்பை நீக்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அவன் விசாரணை செய்வதில் விரைவானவன். முன்னோர்கள், பின்னோர்களை ஒரே நாளில் விசாரணை செய்து விடுவான்.

(42) 13.42. முந்தைய சமூக மக்களும் தங்களின் தூதர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தார்கள். தூதர்களுக்கு அவர்கள் செய்த சதியினால் என்ன சாதித்தார்கள்? ஒன்றுமேயில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் திட்டங்கள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த வல்லது. அனைத்து படைப்பினங்களின் செயல்களையும் அவன் அறிந்து வைத்துள்ளான். அவற்றில் எதுவும் அவனை விட்டும் மறையமுடியாது. அச்சமயத்தில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமலிருந்ததனால் தாம் எவ்வளவு பெரும் தவறிழைத்தவர்கள், நம்பிக்கையாளர்கள் எவ்வளவு சரியானவர்களாக இருந்து சுவனத்தையும் நல்ல முடிவையும் கூலியாகப் பெற்றுள்ளார்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

(43) 13.43. நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: -“முஹம்மதே!- நீர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த தூதர் அல்ல என்று.” -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் என் இறைவனிடமிருந்து உங்களிடம் அனுப்பப்பட்டவன் என்பதற்கு உங்களுக்கும் எனக்குமிடையே சாட்சியாக இருப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். எனது வர்ணனை இடம்பெற்றுள்ள இறைவேதங்களின் அறிவு யாரிடம் உள்ளதோ அவர்களும் சாட்சி கூறுவார்கள். நம்பகமானவர் என யாருக்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறானோ நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவருக்கு எந்த தீங்கையும் அளிக்காது.