(1) 49.1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவன் விதித்தவற்றைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்னால் சொல்லாலோ, செயலாலோ முந்தாதீர்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனை விட்டும் தவறாது. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(2) 49.2. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களே! அவனுடைய தூதருடன் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். அவர் முன்னிலையில் நபியின் குரலைவிட உங்களின் குரலை உயர்த்தாதீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் அழைப்பது போன்று அவரை பெயர் கூறி அழைக்கவேண்டாம். மாறாக நபியே! தூதரே! என நளினமான முறையில் அவரை அழையுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்குத் தெரியாமலே உங்கள் செயல்களின் நன்மைகள் வீணாகிவிடும் என்பதை பயந்து கொள்ளுங்கள்.
(3) 49.3. நிச்சயமாக யாரெல்லாம் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தங்களின் குரல்களை தாழ்த்துகிறார்களோ அல்லாஹ் அவர்களை தன்னை அஞ்சுவதற்காக சோதித்து, அதற்காக அவர்களைத் தூய்மைப்படுத்தியுள்ளான். அவர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. அவற்றிற்காக அவர்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். அவர்களுக்கு மறுமை நாளில் மகத்தான கூலியும் உண்டு. அது அல்லாஹ் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வதாகும்.
(4) 49.4. -தூதரே!- நிச்சயமாக உம் மனைவியரின் அறைகளுக்குப் பின்னாலிருந்து உம்மை அழைக்கும் நாட்டுப்புற அரபிகளில் பெரும்பாலானோர் விளங்கிக் கொள்ளாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
(5) 49.5. -தூதரே!- உம் மனைவியரின் அறைகளுக்குப் பின்னாலிருந்து உம்மை அழைக்கும் இவர்கள் நீர் வெளியேறும்வரை உம்மை அழைக்காமல் பொறுமையாக இருந்து நீர் வெளியேறி வந்தவுடன் தாழ்ந்த குரலில் உம்முடன் உரையாடியிருந்தால் அது அவர்களுக்கு அறைகளுக்கப் பின்னால் இருந்து உம்மை அழைப்பதை விட சிறந்ததாக அமைந்திருக்கும். ஏனனில் அதில்தான் கண்ணியம் இருக்கிறது. அவர்களிலும் ஏனையோரிலும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களின் பாவங்களை அறியாமையினால் செய்ததனால் அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(6) 49.6. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களே! பாவி ஒருவன் ஒரு சமூகத்தைக் குறித்து ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால் அந்த செய்தியின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து கொள்ளுங்கள். நீங்கள் -அந்தச் செய்தியை ஆராயாமல் நம்பினால்- உண்மை நிலவரம் தெரியாமல் ஒரு சமூகத்தின்மீது தீங்கிழைத்து விடுவீர்கள் என்ற அச்சமுண்டு என்பதால் அவசரப்பட்டு அதனை உண்மைப்படுத்திவிடாதீர்கள். இல்லையெனில் பின்னர் அவனது செய்தி பொய் என்று தெளிவானவுடன் நீங்கள் செய்த செயலுக்காக வருத்தப்படக்கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள்.
(7) 49.7. -நம்பிக்கையாளர்களே!- நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார். அவருக்கு வஹி இறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். எனவே பொய் கூறுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என அவருக்கு வஹீ வந்துவிடும். அவர் உங்களுக்கு நன்மைதரக்கூடியவற்றை நன்கறிந்தவர். பெரும்பாலான உங்களின் கருத்துகளுக்கு அவர் கீழ்ப்படிந்தால் அவர் உங்களுக்கு விரும்பாத சிரமத்தில் நீங்கள் வீழ்ந்து விடுவீர்கள். ஆயினும் அல்லாஹ் தன் அருளால் உங்களுக்கு நம்பிக்கையை பிரியமாக்கி உங்கள் உள்ளங்களில் அதனை அழகாக்கியுள்ளான். அதனால் நீங்கள் நம்பிக்கைகொண்டுள்ளீர்கள். நிராகரிப்பையும் அவனுக்குக் கட்டுப்படாமல் இருப்பதையும் பாவங்கள் புரிவதையும் அவன் உங்களுக்கு வெறுப்பாக்கி வைத்துள்ளான். இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் நேரான வழியில் செல்லக்கூடியவர்களாவர்.
(8) 49.8. -உங்களின் உள்ளங்களில் நலவை அழகுபடுத்தி தீமையை வெறுப்பூட்டிய- இந்த ஏற்பாடு நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது சொரிந்த அருளேயாகும். தன் அடியார்களில் தனக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களை அவன் நன்கறிவான். ஆகவே அவர்களுக்குப் பாக்கியம் அளிக்கிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய பொருத்தமான இடத்தில் வைக்கும் ஞானமுடையவன்.
(9) 49.9. -நம்பிக்கையாளர்களே!- நம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் இரு பிரிவினரையும் தமது முரண்பாட்டில் அல்லாஹ்வுடைய மார்க்க தீர்ப்பின் பக்கம் வருமாறு அழைத்து அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள். அவர்களில் ஒரு பிரிவினர் சமாதானத்தை மறுத்து வரம்பு மீறினால் வரம்புமீறிய அந்த பிரிவினருடன் அவர்கள் அல்லாஹ்வுடைய தீர்ப்பின்பால் திரும்பும் வரை போரிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய தீர்ப்பின் பக்கம் திரும்பிவிட்டால் அவர்களிடையே நீதியோடும் நியாயத்தோடும் சமாதானம் செய்து வையுங்கள். அவர்களிடையே நீங்கள் அளிக்கும் தீர்ப்பில் நீதி செலுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் தங்களின் தீர்ப்பில் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.
(10) 49.10. நிச்சயமாக நம்பிக்கையாளர்களே மார்க்க அடிப்படையில் சகோதரர்களாவர். -நம்பிக்கையாளர்களே!- இஸ்லாமிய சகோதரத்துவம் முரண்பட்டுக்கொள்ளும் இரு சகோதரர்களிடையே சமாதானம் செய்து வைப்பதை வேண்டுகிறது. உங்கள்மீது கருணை காட்டப்படும்பொருட்டு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள்.
(11) 49.11. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களில் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்ட சமூகம் அல்லாஹ்விடத்தில் சிறந்த சமூகமாக இருக்கலாம். அல்லாஹ்விடத்தில் பெற்றுள்ள நிலையே கவனத்தில்கொள்ளப்படும். பெண்கள் மற்ற பெண்களை பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்டவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாக இருக்கலாம். உங்கள் சகோதரர்களைக் குறைகூறாதீர்கள். அவர்கள் உங்களைப் போன்றவர்களாவர். நபியவர்களின் வருகைக்கு முன் அன்சாரிகளில் சிலர் செய்துகொண்டிருந்தது போன்று நீங்கள் ஒருவருக்கொருவர் மற்றவர் வெறுக்கும் தீய பட்டப்பெயர் சூட்டி அழைக்க வேண்டாம். உங்களில் அவ்வாறு செய்பவர் பாவியாவார். நம்பிக்கைகொண்ட பிறகு பாவம் செய்வது மோசமான பண்பாகும். இந்த பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோராதவர்கள்தாம் தாம் செய்த பாவங்களின் காரணமாக அழிவின் வழிகளில் தம்மை இட்டுச்சென்று தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களாவர்.
(12) 49.12. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! காரணம், ஆதாரமற்ற அதிகமான சந்தேகங்களிலிருந்தும் விலகியிருங்கள். சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றது. (உதாரணமாக வெளிரங்கத்தில் நன்நடத்தையுடையவரைப் பற்றி தவறாக எண்ணுதல்) நம்பிக்கையாளர்களின் குறைகளை அவர்களின் பின்னால் சென்று துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் தம் சகோதரனைக் குறித்து அவர் விரும்பாததை பேச வேண்டாம். அவர் வெறுப்பதைப் பேசுவதானது அவர் மரணித்த நிலையில் அவரது மாமிசத்தை உண்பதைப் போன்றதாகும். உங்களில் ஒருவர் இறந்த தம் சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? ஆகவே அதைப்போன்று புறம் பேசுவதை வெறுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(13) 49.13. -மனிதர்களே!- நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்துள்ளோம். உங்களின் தந்தை ஆதம், தாய் ஹவ்வா ஆவார். எனவே உங்களின் பரம்பரை ஒன்றுதான். எனவே நீங்கள் பரம்பரையைக் கூறி ஒருவருக்கொருவர் பெருமையடிக்காதீர்கள். அதன் பின்னர் நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும்பொருட்டு உங்களைப் பரந்துபட்ட பல கோத்திரங்களாக, அதிகமாக மக்களாக ஆக்கியுள்ளோம். அது பெருமையடிப்பதற்காக அல்ல. ஏனெனில் இறையச்சத்தைக் கொண்டே தவிர வேறுபாடு கிடையாது. அதனால்தான் கூறுகிறான்: நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் அவனை அதிகம் அஞ்சக்கூடியவர்தான். நிச்சயமாக அல்லாஹ் உங்களின் நிலைகளை நன்கறிந்தவன். நீங்கள் இருந்துகொண்டிருக்கும் குறை, நிறை ஆகியவற்றைக் குறித்தும் அவன் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(14) 49.14. நாட்டுப்புற மக்களில் சிலர் தூதரிடம் வந்தபோது “நாங்கள் அல்லாஹ்வின்மீதும் அவன் தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டோம்” என்று கூறினார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: “நீங்கள் நம்பிக்கைகொள்ளவில்லை. ஆயினும் நாங்கள் கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள். உங்களின் உள்ளங்களில் இதுவரை நம்பிக்கை நுழையவில்லை. அது நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. -நாட்டுப்புறத்தவர்களே!- நீங்கள் நம்பிக்கைகொள்வதிலும் நற்செயல்கள் புரிவதிலும் தடுக்கப்பட்டவற்றைவிட்டுத் தவிர்ந்திருப்பதிலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டால் உங்களின் செயல்களுக்கான நன்மையில் அவன் எதையும் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(15) 49.15. நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டு தங்களின் நம்பிக்கையில் சந்தேகத்தை கலக்காமல் தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அவனுடைய பாதையில் ஜிஹாது செய்பவர்கள்தாம் உண்மையில் நம்பிக்கையாளர்களாவர். அவற்றில் அவர்கள் எதைக்கொண்டும் கஞ்சத்தனம் செய்யமாட்டார்கள். இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் தங்களின் நம்பிக்கையில் உண்மையானவர்களாவர்.
(16) 49.16. -தூதரே!- இந்த நாட்டுப்புற மக்களிடம் நீர் கூறுவீராக: “உங்களின் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுக்கின்றீர்களா? அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிவான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நீங்கள் உங்களின் மார்க்கத்தை அவனிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
(17) 49.17. -தூதரே!- இந்த நாட்டுப்புற மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை உமக்குச் செய்த கிருபையாக சொல்லிக் காட்டுகிறார்கள். நீர் அவர்களிடம் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைந்ததனால் என்மீது கிருபை பாராட்டாதீர்கள். அதில் பயனிருந்தால் -அது நிகழ்ந்தால்- அது உங்களுக்கே. மாறாக நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம் என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவனை நம்பிக்கை கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்பளித்ததன் மூலம் அல்லாஹ்வே உங்களுக்கு அருள்புரிந்துள்ளான்.
(18) 49.18. நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவான விஷயங்களை அறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நீங்கள் செய்பவற்றை அவன் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அற்றில் நன்மையானவற்றுக்கும் தீமையானவற்றுக்கும் ஏற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.