39 - ஸூரா அஸ்ஸுமர் ()

|

(1) 39.1. இந்த குர்ஆன் யாவற்றையும் மிகைத்த யாராலும் மிகைக்க முடியாத, படைத்தல், திட்டமிடல், தனது மார்க்கம் ஆகியவற்றில் ஞானம் நிறைந்த அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும். அது வேறொருவரிடமிருந்து இறக்கப்பட்டதல்ல.

(2) 39.2. -தூதரே!- நிச்சயமாக நாம் உம்மீது சத்தியத்தை உள்ளடக்கியுள்ள குர்ஆனை இறக்கியுள்ளோம். அதன் செய்திகள் முழுவதும் உண்மையானவை. அதன் சட்டங்கள் முழுவதும் நீதியானவை. இணைவைப்பிலிருந்து நீங்கியவராக அந்தரங்க சுத்தியோடு அல்லாஹ் ஒருவனையே வணங்குவீராக.

(3) 39.3. இணைவைப்பை விட்டும் நீங்கிய தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வை விடுத்து சிலைகளையும் ஷைத்தான்களையும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டு அவர்களை வணங்குவோர், தாம் அவர்களை வணங்குவதை நியாயப்படுத்த இவ்வாறு கூறுகிறார்கள்: “அந்தஸ்த்தால் எங்களை அல்லாஹ்விடம் நெருக்கிவைக்க வேண்டும், எங்களின் தேவைகளை அவனிடம் கொண்டுசெல்ல வேண்டும், அவனிடம் எங்களுக்காக பரிந்துபேச வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இவர்களை வணங்குகின்றோம்.” நிச்சயமாக அல்லாஹ் அவனை மட்டுமே வணங்கும் நம்பிக்கையாளர்களுக்கும் அவனை நிராகரிக்கும் இணைவைப்பாளர்களுக்குமிடையே அவர்கள் முரண்பட்டுள்ள ஏகத்துவத்தின் விடயத்தில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அல்லாஹ்வுக்கு இணையிருப்பதாக அவன் மீது பொய் கூறுவோருக்கும் அல்லாஹ் அவர்கள் மீது அருட்கொடைகளை மறுப்போருக்கும் அவன் சத்தியத்தின்பால் வழிகாட்ட அருள்புரிய மாட்டான்.

(4) 39.4. அல்லாஹ் ஒரு மகனை ஏற்படுத்த நாடியிருந்தால் தன் படைப்புகளில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுத்து அவனைத் தனது பிள்ளையின் அந்தஸ்த்தில் வைத்திருப்பான். இணைவைப்பாளர்களின் கூறுவதைவிட்டும் அவன் தூய்மையானவன். தன் உள்ளமையிலும் பண்புகளிலும் செயல்களிலும் தனித்தவன். அவற்றில் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவன் படைப்புகள் அனைத்தையும் அடக்கியாள்பவன்.

(5) 39.5. அவன் வானங்களையும் பூமியையும் பாரிய நோக்கத்தோடு படைத்துள்ளான். அநியாயக்காரர்கள் கூறுவதுபோல அவன் வீணாகப் படைக்கவில்லை. அவன் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்கின்றான். பகலை இரவில் பிரவேசிக்கச் செய்கின்றான். ஒன்று வெளிப்பட்டால் மற்றொன்று மறைந்து விடுகிறது. அவன் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்துள்ளான். ஒவ்வொன்றும் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம்வரை இந்த வாழ்க்கை முடியும்வரை சென்று கொண்டிருக்கும். அவன்தான் தன் எதிரிகளைத் தண்டிக்கக்கூடிய அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன்.

(6) 39.6. -மனிதர்களே!- உங்கள் இறைவன் ஆதம் என்ற ஒரே ஆன்மாவிலிருந்து உங்களைப் படைத்துள்ளான். பின்னர் அவரிடமிருந்து அவரது மனைவி ஹவ்வாவைப் படைத்தான். ஒட்டகம், பசுமாடு, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றில் எட்டு வகைகளை உங்களுக்காகப் படைத்துள்ளான். ஒவ்வொரு வகையிலும் அவன் ஆண், பெண் இணைகளைப் படைத்துள்ளான். உங்கள் அன்னையரின் வயிற்றில் வயிறு, கருவறை, நஞ்சுக்கொடி ஆகிய மூன்று இருள்களினுள் உங்களைக் கட்டம் கட்டமாகப் படைத்தான். இவையனைத்தையும் படைப்பது உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான். ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனை வணங்காமல் அவர்களோ படைக்கப்பட்டு அவர்களால் எதையும் படைக்க முடியாதவர்களை வணங்கி எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.

(7) 39.7. -மனிதர்களே!- நீங்கள் உங்கள் இறைவனை நிராகரித்தால் நிச்சயமாக அவன் உங்களின் நம்பிக்கையைவிட்டும் நிச்சயமாக அவன் தேவையற்றவன். உங்களின் நிராகரிப்பால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடப்போவதில்லை. திட்டமாக உங்கள் நிராகரிப்பின் தீங்கு உங்களுக்கே கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை விரும்ப மாட்டான். நிராகரிக்கும்படி அவர்களை ஏவ மாட்டான். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான, தீய காரியங்களை செய்யும்படி கட்டளையிட மாட்டான். நீங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி அவன் மீது நம்பிக்கைகொண்டால் அவன் உங்கள் நன்றியுணர்வை ஏற்றுக் கொள்வான். அதற்காக அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. மாறாக ஒவ்வொருவரும் தான் சம்பாதித்தவற்றிற்குப் பிணையாக உள்ளார்கள். பின்னர் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் மட்டுமே திரும்ப வேண்டும். அவன் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து உங்களுக்கு அறிவிப்பான். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். அவற்றில் இருந்து எதுவும் அவனைவிட்டு மறைய முடியாது.

(8) 39.8. நிராகரிப்பாளனை நோய், பண இழப்பு, மூழ்கிவிடுவோம் என்ற பயம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துன்பம் தீண்டிவிட்டால் தன் இறைவனின் பக்கம் மாத்திரம் திரும்பி, தன்னைப் பீடித்த துன்பத்தைப் போக்குமாறு மன்றாடுகிறான். பின்னர் அல்லாஹ் அவனை பீடித்த துன்பத்தைப் போக்கி அவனுக்கு அருட்கொடையை வழங்கினால் அவன் இதற்கு முன்னர் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அல்லாஹ்வை விட்டுவிட்டு அவனுக்கு அவனை விடுத்து வணங்கப்படக்கூடிய இணைகளை ஏற்படுத்துகிறான். அல்லாஹ்விடம் கொண்டு சேர்க்கும் வழியை விட்டும் மற்றவர்களைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறான். -தூதரே!- இந்நிலைமையில் உள்ளவனுக்கு நீர் கூறுவீராக: “உன் நிராகரிப்பினால் உனது எஞ்சிய வாழ்வை அனுபவித்துக் கொள். அது குறைவான காலம்தான். நிச்சயமாக மறுமை நாளில் நீ நரகவாசியாவாய். அதில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பாய்.

(9) 39.9. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு இரவு நேரங்களில் நின்றவாறும் சிரம்பணிந்தவாறும் அவனை வணங்கி மறுமையின் வேதனையை அஞ்சி அவனுடைய அருளை ஆதரவு வைப்பவர் சிறந்தவரா? அல்லது துன்பமான சமயங்களில் அல்லாஹ்வை வணங்கி மகிழ்ச்சியான சமயங்களில் அவனை நிராகரித்து அவனுக்கு இணைகளை ஏற்படுத்தும் நிராகரிப்பாளரா? -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைப் பற்றி அறிந்ததனால் அவன் தங்கள் மீது கடமையாக்கியதை அறிந்தவர்களும் அவற்றில் எதையும் அறியாதவர்களும் சமமாவார்களா? திட்டமாக இந்த இரு பிரிவினருக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நேரான அறிவுடையவர்கள்தாம் அறிந்து கொள்வார்கள்.

(10) 39.10. -தூதரே!- என் மீதும், என் தூதர்கள் மீதும் நம்பிக்கைகொண்ட என் அடியார்களிடம் கூறுவீராக: “உங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உங்களில் இவ்வுலகில் நற்செயல் புரிந்தவர்களுக்கு அதில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் போன்ற நன்மையும் மறுவுலகில் சுவனமும் உண்டு. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. எவ்வதத் தடையுமின்றி அவனை வணங்கும் இடத்தைப் பெறுவதற்காக புலம்பெயர்ந்து செல்லுங்கள். திட்டமாக மறுமை நாளில் பொறுமையாளர்கள் எண்ணிக்கை, அளவின்றி கூலி வழங்கப்படுவார்கள். ஏனெனில் அந்தளவுக்கு அது அதிகமான பலவகையானதாகும்.

(11) 39.11. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வை மட்டுமே வணக்கத்தில் கலப்பற்றதாக வணங்க வேண்டும் என்று அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.

(12) 39.12. இந்த சமூகத்தில் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களில் முதலாமவனாக இருக்க வேண்டும் என அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.”

(13) 39.13. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் மாபெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்.”

(14) 39.14. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வை மட்டுமே வணக்கத்தில் கலப்பற்ற முறையில் வணங்குகின்றேன். அவனுடன் வேறுயாரையும் வணங்க மாட்டேன்.”

(15) 39.15. -இணைவைப்பாளர்களே!- அவனை விடுத்து நீங்கள் விரும்பக்கூடிய சிலைகளை வணங்கிக் கொள்ளுங்கள்.” (இந்தக் கட்டளை அச்சுறுத்துவதற்காகும்) -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக உண்மையில் நஷ்டமடைந்தவர்கள் யாரெனில் தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் இழந்தவர்கள்தாம். அவர்கள் இவர்களைப் பிரிந்து தனியாக சுவனத்திற்குச் சென்றதனாலோ அல்லது இவர்களுடன் நரகத்தில் நுழைந்துவிட்டதனாலோ இவர்களைவிட்டும் பிரிந்துவிட்டதனால் அவர்கள் சந்திக்க முடியாது. ஒருபோதும் சந்தித்துக்கொள்ளமாட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் உண்மையான, சந்தேகமற்ற தெளிவான இழப்பாகும்.

(16) 39.16. அவர்களுக்கு மேலும் கீழும் புகையும் நெருப்பும் வெப்பமும் இருக்கும். மேல குறிப்பிடப்பட்ட இந்த வேதனைகளைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான். என் அடியார்களே! என் கட்டளைகளைச் செயல்படுத்தி தடைகளை விட்டும் விலகி என்னை அஞ்சிக் கொள்ளுங்கள்.

(17) 39.17. சிலை வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அத்தனையையும் விலகி பாவமன்னிப்புக் கோரி அவன்பால் மீண்டவர்களுக்கு மரணிக்கும் வேளையிலும் அடக்கஸ்த்தலத்திலும் மறுமை நாளிலும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி உண்டு. -தூதரே!- என் அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக.

(18) 39.18. அவர்கள் வார்த்தையை காதுகொடுத்துக் கேட்டு அவற்றில் சரியானதையும் தவறானதையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பயனுள்ள சிறந்த வார்த்தையைப் பின்பற்றுகிறார்கள். இந்தப் பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்கள்தாம் அல்லாஹ்வால் நேர்வழிபெற பாக்கியம் பெற்றவர்கள். இவர்கள்தாம் நல்லறிவுடையவர்கள்.

(19) 39.19. -தூதரே!- யார் மீது அவர்கள் நிராகரிப்பில், வழிகேட்டில் நிலைத்திருந்ததனால் வேதனையின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் உம்மால் நேர்வழியளிக்க முடியாது. இந்த பண்புகளை உடையவர்களை உம்மால் நரகத்திலிருந்து விடுவிக்க முடியுமா என்ன?

(20) 39.20. ஆனால் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அடுக்கடுக்காகக் கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதனை அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்துவிட்டான். அவன் தன் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுவதில்லை.

(21) 39.21. நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கி அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச்செய்கிறான் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். பின்னர் அதனை ஊற்றுகளாகவும் ஆறுகளாகவும் ஓடச் செய்கிறான். பின்னர் அந்த நீரைக்கொண்டு பல்வேறு நிறமுடைய பயிர்களை வெளிப்படுத்துகின்றான். பின்னர் பயிர்கள் காய்ந்துவிடுகிறது. -பார்க்கக்கூடியவனே!- பசுமையாக இருந்த பின்னர் அது மஞ்சள் நிறமாகிவிடுவதை நீ காண்கின்றாய். பின்னர் அது காய்ந்த பிறகு சருகுகளாகி நொறுங்கி விடுகிறது. நிச்சயமாக மேலே கூறப்பட்டவைகளிலே உயிரோட்டமான உள்ளமுடையோருக்கு நினைவூட்டல் இருக்கின்றது.

(22) 39.22. அல்லாஹ் யாருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவாக்கி அதன்பால் அவருக்கு வழிகாட்டியதனால் தம் இறைவனிடமிருந்து வந்துள்ள ஞானத்தின் மீது இருப்பவரும், அல்லாஹ்வின் நினைவை விட்டும் இறுகிய இதயத்தைப் பெற்றவரும் சமமாக மாட்டார்கள். வெற்றி நேர்வழி பெற்றவர்களுக்கே. இறை நினைவை விட்டும் இறுகிய இதயமுடையவர்கள் இழப்பையே பெறுவார்கள். அவர்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார்கள்.

(23) 39.23. அல்லாஹ் தன் தூதர் முஹம்மது மீது மிகச்சிறந்த செய்தியான குர்ஆனை இறக்கியுள்ளான். அது உண்மையிலும் அழகிலும் ஒத்திசைவிலும் முரண்பாடின்மையிலும் ஒன்றையொன்று ஒத்திருக்கக்கூடியதாகும். சம்பவங்கள், சட்டங்கள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், சத்தியவாதிகளின் பண்புகள், அசத்தியவாதிகளின் பண்புகள் ஆகியவை அதில் திரும்பத்திரும்ப வந்துள்ளன. அதிலுள்ள எச்சரிக்கைகளைச் செவியுறும்போது தங்கள் இறைவனை அஞ்சக்கூடியவர்களின் தோல்கள் சிலிர்க்கின்றன. பின்னர் அதிலுள்ள சந்தோசங்கள், நற்செய்திகளை செவியுறும்போது அவர்களின் தோலும் உள்ளமும் இலகிவிடுகிறது. மேற்கூறப்பட்ட குர்ஆன் மற்றும் அதன் தாக்கம் என்பவை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு வழி காட்டும் நேர்வழியாகும். அவன் யாரைக் கைவிட்டு, நேர்வழிபெற பாக்கியம் அளிக்கவில்லையோ அவருக்கு வேறு யாரும் வழிகாட்டுபவன் இருக்க முடியாது.

(24) 39.24. யாருக்கு அல்லாஹ் உலகில் நேர்வழிகாட்டி பாக்கியம் அளித்து மறுமையில் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வானோ அவரும் யார் நிராகரித்த நிலையிலேயே மரணித்து அல்லாஹ் அவரை கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் நரகத்தில் பிரவேசிக்கச் செய்துவிடுவானோ அவரும் சமமாவார்களா என்ன? முகங்குப்புற வீழ்ந்து கிடக்கும் அவர் தன் முகத்தால்தான் நரக நெருப்பைத் தடுக்க வேண்டும். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களிடம் இழிவாக கூறப்படும்: “நிராகரித்து, பாவங்கள் புரிந்து நீங்கள் சம்பாதித்த வேதனையை அனுபவியுங்கள். இதுதான் உங்களுக்கான கூலியாகும்.

(25) 39.25. இந்த இணைவைப்பாளர்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்களும் பொய்ப்பித்தன. அவர்கள் வேதனையை உணர்ந்து பாவமன்னிப்புக்கு தயாராக முடியாதளவு திடீரென வேதனை அவர்களிடம் வந்தது.

(26) 39.26. அல்லாஹ் அதன் மூலம் இவ்வுலக வாழ்வில் அவர்களை இழிவுமிக்க வேதனையை அனுபவிக்கச் செய்தான். நிச்சயமாக அவர்களுக்காக காத்திருக்கும் மறுமையின் வேதனையோ மிகக் கடுமையானது. அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

(27) 39.27. நாம் முஹம்மதின் மீது இறக்கிய இந்த குர்ஆனில் அவர்கள் படிப்பினை பெறும் பொருட்டும் சத்தியத்தின்படி செயல்பட்டு அசத்தியத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காகவும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நம்பிக்கை கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் நன்மைக்கும் தீமைக்கும் ஏனையவற்றுக்கும் பலவகையான உதாரணங்களை எடுத்துக் கூறியுள்ளோம்.

(28) 39.28. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக இந்த குர்ஆனை எவ்விதக் கோணலும் களங்கமும் நெறிபிறலுமற்ற அரபி மொழியில் அருளியுள்ளோம்.

(29) 39.29. அல்லாஹ் இணைவைப்பாளனுக்கும் ஓரிறைக்கொள்கையைப் பின்பற்றுபவனுக்கும் ஒரு உதாரணம் கூறுகிறான். அடிமையான ஒரு மனிதனுக்கு பல பங்காளிகள் உரிமையாளர்களாக இருக்கின்றார்கள். அவன் அவர்களில் சிலரை திருப்திப்படுத்தினால் சிலர் கோபமடைகிறார்கள். எனவே அவன் தடுமாற்றத்திலும் குழப்பத்திலும் இருக்கின்றான். இன்னொரு மனிதனுக்கு ஒரேயொரு மனிதன் மட்டுமே உரிமையாளனாக இருக்கின்றான். அந்த மனிதன் தன் எஜமானனின் நோக்கத்தை அறிகிறான். எனவே அவன் நிம்மதியாகவும் மனஅமைதி பெற்ற நிலையிலும் இருக்கின்றான். இந்த இரு மனிதர்களும் சமமாக மாட்டார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. மாறாக அவர்களில் பெரும்பாலானோர் அறிந்துகொள்ளமாட்டார்கள். அதனால் அல்லாஹ்வோடு மற்றவர்களை இணையாக ஆக்குகிறார்கள்.

(30) 39.30. -தூதரே!- நிச்சயமாக நீர் மரணிக்கக்கூடியவர்தான். நிச்சயமாக அவர்களும் சந்தேகம் இல்லாமல் மரணிக்கக்கூடியவர்கள்தாம்.

(31) 39.31. பின்னர் -மனிதர்களே!- நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் நீங்கள் கருத்துவேற்றுமை கொண்டவற்றில் உங்கள் இறைவனிடத்தில் தர்க்கம் செய்துகொண்டிருப்பீர்கள். அப்போது அசத்தியவாதிகளில் சத்தியவாதிகள் யார் என்பது தெளிவாகிவிடும்.

(32) 39.32. அவனுக்கு இணை, துணை, பிள்ளை போன்ற அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை அவனுக்கு உண்டெனக் இணைத்துக் கூறுபவனை விட மிகப்பெரிய அநியாயக்காரன் வேறுயாருமில்லை. தூதர் வஹி மூலமாக கொண்டுவந்ததை பொய்ப்பிப்பவனை விட மிகப்பெரிய அநியாயக்காரன் வேறுயாருமில்லை. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பிப்பவர்களின் வசிப்பிடம் நரகத்தில் இல்லையா? ஆம், நிச்சயமாக அதில் அவர்களுக்கு வசிப்பிடங்கள் உள்ளன.

(33) 39.33. தம் சொல்லிலும் செயலிலும் உண்மையைக் கடைபிடித்து, நம்பிய நிலையில் அதனை உண்மைப்படுத்தி, அதனடிப்படையில் செயல்பட்ட நபிமார்களும் ஏனையவர்களுமே உண்மையில் அல்லாஹ்வை அஞ்சியவர்களாவர். அவர்கள் தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கிறார்கள்.

(34) 39.34. அவர்களுக்கு தாங்கள் விரும்புகின்ற நிலையான இன்பங்கள் எல்லாம் அவர்களின் இறைவனிடத்தில் கிடைக்கும். இதுதான் தம்மைப் படைத்தவனுடனும் அவனது அடியார்களுடனும் நல்ல முறையில் செயல்படுவோருக்கு வழங்கப்படும் கூலியாகும்.

(35) 39.35. இது, அவர்கள் தங்களின் இறைவன் பக்கம் திரும்பி அவனிடம் மன்னிப்புக் கோரியதினால் அவர்கள் உலகில் செய்த பாவங்களைப் போக்கி அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் நல்ல முறையில் கூலி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான்.

(36) 39.36. அல்லாஹ் தன் அடியார் முஹம்மதுக்கு அவரின் உலக மற்றும் மறுமை விவகாரங்களிலும் போதுமானவனாகவும் எதிரிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்வனாகவும் இல்லையா? ஆம், நிச்சயமாக அவன் அவருக்குப் போதுமானவன். -தூதரே!- அவர்கள் அறியாமையினால் அல்லாஹ்வை விடுத்து தாங்கள் வணங்கும் சிலைகள் உமக்கு தீங்கிழைக்கும் என உம்மை அச்சுறுத்துகிறார்கள். அல்லாஹ் யாரைக் கைவிட்டு நேர்வழிபெறுவதற்கு உதவி புரியவில்லையோ அவருக்கு நேர்வழிகாட்டி உதவி புரியம் எவரும் இல்லை.

(37) 39.37. அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்ட உதவி புரிகிறானோ அவரை யாராலும் வழிகெடுக்க முடியாது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் யாராலும் மிகைக்க முடியாதவனாகவும் தன்னை நிராகரிப்பவன் மற்றும் தனக்கு மாறுசெய்பவன் ஆகியோரைத் தண்டிப்பவனாகவும் இல்லையா? ஆம், நிச்சயமாக அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும் தண்டிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.

(38) 39.38. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம், வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று கேட்டால் “அவற்றை அல்லாஹ்தான் படைத்தான்” என்று நிச்சயம் கூறுவார்கள். அவர்கள் வணங்கும் தெய்வங்களின் இயலாமையை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கும் இந்த தெய்வங்களைக்குறித்து எனக்கு கூறுங்கள். அல்லாஹ் எனக்கு தீங்கிழைக்க நாடினால் அவற்றால் என்னைவிட்டு அந்தத் தீங்கினை அகற்ற முடியுமா? அல்லது அவன் என்மீது அருள்புரிய நாடினால் அவற்றால் அவனது அருளை என்னைவிட்டும் தடுக்க முடியுமா?” நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே நான் சார்ந்துள்ளேன். சார்ந்திருப்பவர்கள் அவனை மட்டுமே சார்ந்திருக்கின்றனர்.”

(39) 39.39. -தூதரே!- நீர் கூறுவீராக: “என் சமூகமே! நீங்கள் விரும்புகின்ற இணைவைத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே செயல்பட்டுக்கொண்டிருங்கள். நிச்சயமாக என் இறைவன் எனக்குக் கட்டளையிட்டவாறு அவனை ஒருமைப்படுத்தி அழைத்து வணக்கத்தை அவனுக்கு மாத்திரம் செய்துகொண்டும் இருக்கிறேன். ஒவ்வொரு வழியின் விளைவையும் நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.”

(40) 39.40. இவ்வுலகில் இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும், மறுமையில் என்றும் அழியாத, துண்டிக்கப்படாத நிலையான வேதனை யார் மீது இறங்கும்? என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

(41) 39.41. -தூதரே!- நாம் மனிதர்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காக உம்மீது குர்ஆனை சத்தியத்துடன் இறக்கியுள்ளோம். யாரேனும் நேர்வழியைப் பின்பற்றினால் நேர்வழியின் பயன் அவருக்கே உரியது. அவரது நேர்வழியால் அல்லாஹ்வுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் நிச்சயமாக அவன் அதனை விட்டும் தேவையற்றவன். யாரேனும் வழிகெட்டால் அந்த வழிகேட்டின் தீங்கு அவனுக்கே கிடைக்கும். அவனின் வழிகேட்டால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் இல்லை. நீர் அவர்களை நேர்வழியில் நிர்ப்பந்திப்பதற்கு அவர்களின் பொறுப்பாளி அல்ல. எடுத்துரைக்குமாறு உமக்கு கட்டளையிடப்பட்டதை எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது எந்தப் பொறுப்பும் இல்லை.

(42) 39.42. அல்லாஹ்வே உயிர்களை அவற்றின் தவணை நிறைவடையும்போது கைப்பற்றுகிறான். யாருடைய தவணை நிறைவடையவில்லையோ அவர்களின் உயிர்களை அவர்கள் தூங்கும்போது கைப்பற்றுகிறான். யார் மீது மரணம் விதிக்கப்பட்டு விட்டதோ அவருடைய உயிரை தடுத்து வைத்துக்கொள்கிறான். யார் மீது மரணம் விதிக்கப்படவில்லையோ அவர்களின் உயிர்களை தனது அறிவில் உள்ள குறிப்பிட்ட தவணை வரை திருப்பி அனுப்புகிறான். நிச்சயமாக இவ்வாறு உயிர்களைக் கைப்பற்றுதல், திருப்பி அனுப்புதல், மரணிக்கச்செய்தல், உயிர்கொடுத்தல் ஆகியவற்றில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, இவற்றையெல்லாம் செய்யும் ஆற்றலுடையவன் மரணத்திற்குப் பின் விசாரணைக்காக, கூலி கொடுப்பதற்காக மனிதர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன் என்பதற்கான சான்றுகள் அடங்கியுள்ளன.

(43) 39.43. அல்லாஹ்வை விடுத்து தங்களுக்குப் பயனளிக்கும் என்று இணைவைப்பாளர்கள் ஆதரவு வைக்கும் சிலைகளைப் பரிந்துரை செய்பவர்களாக எடுத்துக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கோ, தமக்கோ எதையும் சொந்தமாக்க முடியாத, எதையும் விளங்கிக்கொள்ள முடியாதவற்றையும் கூட நீங்கள் பரிந்துரை செய்பவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்களா?. ஏனெனில் அவை பேசவோ, செவியேற்கவோ, பார்க்கவோ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ இயலாத ஒன்றையும் கேட்காத சடப்பொருள்களாகும்.”

(44) 39.44. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “பரிந்துரை அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனது அனுமதியின்றி யாரும் அவனிடம் பரிந்துரைசெய்ய முடியாது. அவன் யாரை விரும்புகிறானோ அவருக்குத்தான் பரிந்துரை செய்ய முடியும். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. பின்னர் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் அவனிடமே திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(45) 39.45. அல்லாஹ் மாத்திரம் நினைவுகூறப்பட்டால் மறுமை நாள் மற்றும் அதில் இடம்பெறும் உயிர்கொடுத்து எழுப்பப்படுதல், விசாரணை, கூலி வழங்கப்படல் ஆகிவற்றின் மீது நம்பிக்கைகொள்ளாத இணைவைப்பாளர்களின் உள்ளங்கள் வெறுப்படைகின்றன. அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கக்கூடிய சிலைகள் நினைவுகூறப்பட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

(46) 39.46. -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றி படைத்தவனே! மறைந்திருப்பதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவனே! அவற்றில் எதுவும் உன்னை விட்டும் மறையாது. நீயே மறுமை நாளில் அடியார்களிடையே அவர்கள் உலகில் முரண்பட்டுக்கொண்டிருந்த விஷயங்களில் தீர்ப்பளிக்கின்றாய். அப்போது சத்தியவாதிகளும் அசத்தியவாதிகளும் நற்பாக்கியசாலிகளும் துர்பாக்கியசாலிகளும் தெளிவாகிவிடுவார்கள்.

(47) 39.47. நிச்சயமாக இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு பூமியில் பெருமதியான செல்வங்கள் அனைத்தும் பலமடங்காக இருந்தாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்ட பிறகு அவர்கள் காணும் கடுமையான வேதனைக்கு ஈடாக அவற்றைக் கொடுத்துவிட விரும்புவார்கள். ஆனால் அவர்களுக்கு அது முடியாத காரியமாகும். ஒருவேளை அவர்களுக்கு முடிந்தாலும் கூட, அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் எதிர்பார்த்து இருக்காத பலவகையான வேதனை அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஏற்படும்.

(48) 39.48. அவர்கள் சம்பாதித்த இணைவைப்பு, பாவங்களின் தீயவிளைவுகள் அவர்களுக்கு முன்னால் வெளிப்பட்டுவிடும். எந்தத் தண்டனையைக்கொண்டு எச்சரிக்கப்படும் போது அவர்கள் உலகில் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அந்த வேதனை அவர்களைச் சூழ்ந்துவிடும்.

(49) 39.49. நிராகரிக்கும் மனிதனுக்கு நோயோ, வறுமையோ, அது போன்றதோ, ஏற்பட்டுவிட்டால் நாம் அவனுக்கு ஏற்பட்ட அத்துன்பத்தைப் போக்குவதற்காக நம்மிடம் அவன் பிரார்த்தனை செய்கிறான். பின்னர் நாம் அவனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற அருட்கொடையை வழங்கினால் “நிச்சயமாக நான் இதற்குத் தகுதியானவன் என்பதனால்தான் அல்லாஹ் எனக்கு இதனை அளித்துள்ளான்” என்று கூறுகிறான். உண்மையில் இது அவனுக்கு சோதனையாகவும் விட்டுப்பிடிப்பதாகவும் இருக்கின்றது. ஆயினும் நிராகரிப்பாளர்களில் பெரும்பாலானோர் இதனை அறிந்துகொள்வதில்லை. அல்லாஹ் தங்களுக்கு அருளியதைக்கொண்டு ஏமாந்து விடுகிறார்கள்.

(50) 39.50. அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நிராகரிப்பாளர்களும் இவ்வாறுதான் கூறினார்கள். அவர்கள் சம்பாதித்த செல்வங்களோ, பதவியோ அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை.

(51) 39.51. அவர்கள் சம்பாதித்த இணைவைப்பு மற்றும் பாவங்களின் தீய விளைவுகள் அவர்களைப் பிடித்துக்கொண்டன. இணைவைத்தும், பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்ட இவர்கள் முன்சென்றவர்களைப் போன்று தாங்கள் சம்பாதித்தவற்றின் தீயவிளைவுகளால் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து தப்பிவிடவோ அவனை வெல்லவோ முடியாது.

(52) 39.52. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர்கள் நன்றி செலுத்துகிறார்களா அல்லது நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களா? என்பதைச் சோதிக்கும்பொருட்டு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான் என்பதையும் தான் நாடியவர்களுக்கு அவர்கள் பொறுமையை மேற்கொள்கிறார்களா அல்லது இறைவிதிக்கு எதிராக கோபம் கொள்கிறார்களா என்பதைச் சோதிக்கும்பொருட்டு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான் என்பதையும் இந்த இணைவைப்பாளர்கள் அறிந்துகொள்ளாமல்தான் தமது அக்கருத்தைக் கூறுகின்றனரா? நிச்சயமாக வாழ்வாதாரம் தாராளமாக வழங்கப்படுவதிலும் அதில் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதிலும் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு அல்லாஹ்வின் திட்டங்களை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. ஏனெனில் அவர்கள்தாம் சான்றுகளைக்கொண்டு பயனடைகிறார்கள். ஆனால் நிராகரிப்பாளர்கள் அவற்றைப் புறக்கணித்தவாறு அவற்றைக் கடந்து செல்கின்றார்கள்.

(53) 39.53. -தூதரே!- அல்லாஹ்வுக்கு இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களின் மீதே வரம்பு மீறிய என் அடியார்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வின் அருளையும் தங்களின் பாவத்துக்கான மன்னிப்பு கிடைப்பதையும் விட்டு நிராசையடைந்து விடாதீர்கள். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுகிறான். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

(54) 39.54. மறுமை நாளின் வேதனை உங்களை அடையும் முன்னரே பாவமன்னிப்பு மற்றும் நற்செயல்களின் மூலம் உங்கள் இறைவனின் பக்கம் திரும்புங்கள். அவனுக்கு அடிபணியுங்கள். தண்டனை இறங்கிய பின்னர், உங்களுக்கு உதவிசெய்து வேதனையிலிருந்து காப்பாற்றக்கூடிய உங்களின் சிலைகளையோ குடும்பத்தினரையோ நீங்கள் பெற்றுக்கொள்ளமாட்டீர்கள்.

(55) 39.55. உங்கள் இறைவன் தன் தூதர் மீது இறக்கியதில் சிறந்ததான குர்ஆனைப் பின்பற்றுங்கள். நீங்கள் பாவமன்னிப்புக்குத் தயாராகுவதற்கு வாய்ப்பின்றி நீங்கள் உணராத விதத்தில் திடீரென வேதனை உங்களை வந்தடையும் முன்னரே அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருங்கள்.

(56) 39.56. இவற்றை நீங்கள் செயல்படுத்துங்கள். மறுமை நாளில் எவரும் பின்வருமாறு கடுமையாக கைசேதப்பட்டு புலம்புவதைத் தவிர்ப்பதற்காக: “நிராகரித்து பாவங்கள் புரிந்து அல்லாஹ்வின் விஷயத்தில் குறைபாடு செய்து, விசுவாசம்கொண்டு வழிபடுபவர்களை பரிகாசம் செய்த ஆத்மாவின் கைசேதமே! நான் னே!”

(57) 39.57. அல்லது விதியை ஆதாரம்காட்டி “ நிச்சயமாக அல்லாஹ் எனக்கு பாக்கியம் அளித்திருந்தால் நான் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களில் ஒருவனாக ஆகியிருப்பேன்” என்று கூறாமல் இருப்பதற்காகவும்.

(58) 39.58. அல்லது வேதனையைக் காணும்போது “நிச்சயமாக மீண்டும் எனக்கு உலகத்திற்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டால் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி நற்செயல் புரிபவர்களில் ஒருவராகி இருப்பேனே!” என்று ஆசைப்பட்டவனாக கூறாமல் இருப்பதற்காக.

(59) 39.59. நீ எண்ணுவது போல் நேர்வழியை விரும்புவதல்ல விடயம். ஏனெனில் என் சான்றுகள் உன்னிடத்தில் வந்தன. நீ அவற்றை மறுத்து கர்வம் கொண்டாய். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் சான்றுகளையும் நிராகரிக்கக்கூடியவர்களில் ஒருவனாக இருந்தாய்.

(60) 39.60. இணையும் பிள்ளையும் அல்லாஹ்வுக்கு இருப்பதாக இணைத்துக்கூறி அவன் மீது பொய்யுரைத்தவர்களின் முகங்கள் மறுமை நாளில் துர்பாக்கியத்தின் அடையாளமாக கறுத்திருப்பதை நீர் காண்பீர். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்பவர்களுக்கு நரகில் ஒரு தங்குமிடம் இல்லையா? ஆம், நிச்சயமாக அதில் அவர்களுக்கு ஒரு தங்குமிடம் இருந்தே தீரும்.

(61) 39.61. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களை அவன் வேதனையிலிருந்து காப்பாற்றி சுவனம் எனும் வெற்றியான இடத்தில் பிரவேசிக்கச் செய்வான். வேதனை அவர்களைத் தீண்டாது. அவர்களுக்குத் தவறிய உலகபாக்கியங்களுக்காக அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

(62) 39.62. அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர வேறு படைப்பாளன் இல்லை. அவன் ஒவ்வொன்றையும் கண்காணிக்கிறான். அவற்றின் காரியங்களை நிர்வகித்து தான் நாடியவாறு செயல்படுத்துகிறான்.

(63) 39.63. வானங்களிலும் பூமியிலும் நன்மைகளுடைய பொக்கிஷங்களின் திறவுகோல்கள்அவனிடமே உள்ளன. அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றை வழங்குகிறான். தான் நாடியவர்களுக்கு வழங்காமல் அவற்றைத் தடுத்துக் கொள்கிறான். அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். ஏனெனில் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் ஈமானைப் பெறாமல் மறுமையில் நிரந்தரமான நரகில் நுழைந்து விட்டார்கள்.

(64) 39.64. -தூதரே!- தங்களின் சிலைகளை வணங்குமாறு கூறி உம்மை வழிகெடுக்க முயலும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “-தமது இறைவனை அறியாதவர்களே!- அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டும் என என்னை ஏவுகிறீர்களா? அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. நான் அவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன்.”

(65) 39.65. -தூதரே!- அல்லாஹ் உமக்கும் உமக்கு முன்வந்த தூதர்களுக்கும் பின்வருமாறு வஹி அறிவித்தான்: “நீர் அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் வணங்கினால் உமது நற்செயல்களின் கூலிகள் வீணாகிவிடும். இவ்வுலகில் உமது மார்க்கத்தை இழந்தும், மறுவுலகில் தண்டனை பெற்றும் நஷ்டமடைந்தவர்களில் ஒருவராகி விடுவீர்.

(66) 39.66. மாறாக அல்லாஹ்வை மட்டுமே வணங்குவீராக. அவனுக்கு யாரையும் இணையாக்காதீர். அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துபவராகி விடுவீராக.”

(67) 39.67. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. அவன் அல்லாத பலவீனமான, எதுவும் செய்ய இயலாத படைப்புகளை அவனுக்கு இணையாக்கி விட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையை உணராமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். அவனுடைய வல்லமையின் வெளிப்பாடுகளில் சிலவைதான்: பூமி அதனுடைய மரங்கள், மலைகள், ஆறுகள், கடல்கள். (அனைத்தும்) மறுமை நாளில் அவனுடைய கைப்பிடியில் இருக்கும். நிச்சயமாக ஏழு வானங்களும் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். இணைவைப்பாளர்கள் கூறுபவற்றை விட்டும் நம்புபவற்றை விட்டும் அவன் தூய்மையானவன்.

(68) 39.68. சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்ட வானவர் சூர் ஊதும் நாளில், வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அனைவரும் மரணித்துவிடுவார்கள். மரணிக்கமாட்டார்கள் என அல்லாஹ் நாடியவர்களைத்தவிர.) பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்காக இரண்டாவது முறையாக வானவர் சூர் ஊதுவார். அப்போது உயிர்பெற்றவர்கள் அனைவரும் அல்லாஹ் தங்களை என்ன செய்யப் போகிறான் என்பதை எதிர்பார்த்து நின்றிருப்பார்கள்.

(69) 39.69. அடியார்களிடையே தீர்ப்பளிக்க கண்ணியமிக்க இறைவன் தோன்றியதால் பூமி பிரகாசிக்கும். மக்களின் செயல் பதிவேடுகள் விரித்து வைக்கப்படும். தூதர்களும் அவர்களுக்காக அவர்களின் சமூகங்களுக்கு எதிராகச் சாட்சி கூறுவதற்கு முஹம்மதின் சமூகமும் கொண்டுவரப்படுவார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவரிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அந்நாளில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது. மனிதனுக்கு தீமைகள் அதிகரிக்கப்படாது. நன்மைகளும் குறைவடையாது.

(70) 39.70. அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் முழுமையாக கூலியை பூரணப்படுத்துவான். அவர் நற்செயல்களைச் செய்தாலும் அல்லது தீய செயல்களைச் செய்தாலும் சரியே. அவர்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். நன்மையோ, தீமையோ அவர்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இன்றைய தினம் அவன் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி கொடுப்பான்.

(71) 39.71. வானவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தவர்களை இழிவடைந்த நிலையில் கூட்டம் கூட்டமாக நரகத்தில் இழுத்து வருவார்கள். அவர்கள் நரகத்தின் அருகில் வந்தவுடன் அவர்களுக்காக நரகத்துக்கு பொறுப்பாக்கப்பட்ட வானவ காவலர்கள் அதன் வாயில்களைத் திறப்பார்கள். வானவர்கள் அவர்களிடம் கண்டிக்கும் தோரணையில் கேட்பார்கள்: “உங்கள் இனத்திலிருந்தே தமக்கு இறக்கப்பட்ட உங்கள் இறைவனின் வசனங்களை எடுத்துரைத்து, கடுமையான வேதனையுடைய மறுமையின் சந்திப்பைக் குறித்து உங்களுக்கு எச்சரிக்கும் தூதர்கள் உங்களிடம் வரவில்லையா?” நிராகரிப்பாளர்கள் தங்களுக்கு எதிராக ஒத்துக் கொண்டவர்களாக கூறுவார்கள்: “ஆம். அவை அனைத்தும் இடம்பெற்றன. ஆயினும் நிராகரிப்பாளர்களின் மீது வேதனையின் வாக்கு உறுதியாகிவிட்டது. நாங்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தோம்.

(72) 39.72. அவர்களை இழிவுபடுத்தும் விதமாக, இறையருளை விட்டும், நரகிலிருந்து வெளியேறுவதை விட்டும் நிராசை ஏற்படுத்தும் விதமாக அவர்களிடம் கூறப்படும்: “நரகத்தின் வாயில்களில் என்றும் நிரந்தரமாக நுழைந்துவிடுங்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் கர்வம் கொண்டவர்களின் தங்குமிடம் எத்துணை மோசமானது!”

(73) 39.73. தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிய நம்பிக்கையாளர்களை கண்ணியப்படுத்தும் விதமாக வானவர்கள் சுவனத்தின்பால் கூட்டம் கூட்டமாக மிருதுவாக அழைத்துவருவார்கள். அவர்கள் அதன் அருகில் வந்தவுடன் அவர்களுக்காக அதன் கதவுகள் திறக்கப்படும். அதற்கு பொறுப்பாக்கப்பட்ட வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “எல்லா வகையான தீங்குகளிலிருந்தும் நீங்கள் வெறுக்கும் ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் உங்களுக்கு பாதுகாப்பு உண்டாகட்டும். உங்களின் உள்ளங்களும் செயல்களும் சிறந்ததாகி விட்டன. சுவனத்தில் என்றென்றும் நிரந்தரமாக தங்கிவிடுங்கள்.

(74) 39.74. நம்பிக்கையாளர்கள் சுவனத்தில் நுழையும் போது கூறுவார்கள்: “தன் தூதர்களின் மூலம் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான் என்று வாக்களித்தான். எங்களை சுவனத்தின் பூமியில் வாரிசுகளாக ஆக்கினான். இங்கு நாங்கள் விரும்பிய இடத்தில் தங்கிக்கொள்வோம். தங்கள் இறைவனின் திருப்தியை நாடி நற்செயல்களில் ஈடுபடுவோரின் கூலி எத்துணை சிறப்பானது!

(75) 39.75. இந்நாளில் வானவர்கள் அர்ஷைச் சூழ்ந்திருப்பார்கள். நிராகரிப்பாளர்கள் கூறும் பொருத்தமற்ற பண்புகளை விட்டும் அல்லாஹ்வை அவர்கள் தூய்மைப்படுத்துவார்கள். அவன் படைப்புகள் அனைத்திற்குமிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பான். கண்ணியத்திற்கு உரியவர்களை கண்ணியப்படுத்துவான். வேதனைக்குரியவர்களை வேதனைக்கு உள்ளாக்குவான். நம்பிக்கைகொண்ட தன் அடியார்களின் மீது அருள்புரிந்து, நிராகரித்த தன் அடியார்களைத் தண்டித்து வழங்கிய தீர்ப்புக்காக படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனக் கூறப்படும்.