45 - ஸூரா அல்ஜாஸியா ()

|

(1) 43.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

(2) 45.2. இது யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட குர்ஆனாகும். அவன் தனது படைப்பிலும் விதியிலும் திட்டமிடலிலும் ஞானம் மிக்கவன்.

(3) 45.3. நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. ஏனெனில் திட்டமாக அவர்கள்தாம் சான்றுகளைக் கொண்டு படிப்பினை பெறுவார்கள்.

(4) 45.4. -மனிதர்களே!- விந்திலிருந்து பின்னர் மாமிசத்திலிருந்து பின்னர் இரத்தக்கட்டிலிருந்து உங்களைப் படைத்திருப்பதிலும் அல்லாஹ் பூமியின் மேற்பரப்பில் பரவச்செய்து நடந்து செல்லும் உயிரினமான படைப்புகளிலும் நிச்சயமாக அல்லாஹ்வே படைப்பாளன் என்பதை உறுதியாக நம்பும் மக்களுக்கு அவன் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.

(5) 45.5. இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் தாவரமற்ற வறண்ட பூமியை முளைக்கச் செய்து உயிர்ப்பிப்பதிலும் நீங்கள் பயனடைவதற்காக காற்றை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புறத்திலிருந்து கொண்டுவந்து மாறிமாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதையும் மீண்டும் எழுப்புவதற்கான அவனுடைய வல்லமையையும் அனைத்துப் பொருட்களின் மீதான அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.

(6) 45.6. -தூதரே!- இவை நாம் உமக்கு சத்தியத்துடன் எடுத்துரைக்கும் சான்றுகளாகும். தன் தூதரின் மீது இறக்கிய அல்லாஹ்வின் செய்தியின் மீதும் சான்றுகளின் மீதும் அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் பிறகு வேறு எந்த செய்தியைத்தான் அவர்கள் நம்பிக்கைகொள்ளப்போகிறார்கள். எந்த சான்றுகளைத்தான் உண்மைப்படுத்தப்போகிறார்கள்?!

(7) 45.7. அதிகம் பாவம் செய்யக்கூடிய ஒவ்வொரு பொய்யனுக்கும் அல்லாஹ்விடமிருந்து அழிவும் வேதனையும்தான்.

(8) 45.8. இந்த நிராகரிப்பாளன் குர்ஆனிலிருந்து அவனிடம் எடுத்துரைக்கப்படும் அல்லாஹ்வின் வசனங்களை செவியுறுகிறான். பின்னர் அவனுக்கு ஓதிக்காட்டப்பட்ட அந்த வசனங்களை அவன் செவியேற்காதவனை போல சத்தியத்தைப் பின்பற்றாமல் தன் மீது கர்வம் கொண்டு தான் இருந்துகொண்டிருக்கும் நிராகரிப்பிலும் பாவங்களிலும் நிலைத்துவிடுகிறான். -தூதரே!- அவனுக்காக மறுமையில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்ற கவலையூட்டும் தகவலைக் கூறிவிடுவீராக.

(9) 45.9. குர்ஆனிலிருந்து ஏதேனும் ஒன்று அவனை அடைந்துவிட்டால் அதனை அவன் பரிகாசமாக எடுத்துக்கொண்டு பரிகாசம் செய்கிறான். இவ்வாறு குர்ஆனைப் பரிகாசம் செய்யும் பண்புகளைப் பெற்றவர்களுக்கு மறுமை நாளில் இழிவுமிக்க வேதனை உண்டு.

(10) 45.10. மறுமையில் அவர்களுக்கு முன்னால் நரக நெருப்பு காத்திருக்கின்றது. அவர்கள் சம்பாதித்த செல்வங்கள் அல்லாஹ்விடம் எதையும் அளிக்கப் போவதில்லை. அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்குவதற்காக ஏற்படுத்திக் கொண்ட சிலைகளும் அவர்களைவிட்டு எதையும் தடுத்துவிடாது. அவர்களுக்கு மறுமை நாளில் கடும் வேதனை உண்டு.

(11) 45.11. நாம் நம்முடைய தூதர் முஹம்மது மீது இறக்கிய இந்த வேதம் சத்தியப் பாதையின்பால் வழிகாட்டுகிறது. இறைவன் தன் தூதர் மீது இறக்கிய வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு வேதனை மிக்க மோசமான தண்டனை உண்டு.

(12) 45.12. -மனிதர்களே!- அல்லாஹ் ஒருவனே உங்களுக்காக கடலை வசப்படுத்தித் தந்தான். அதில் கப்பல்கள் அவனுடைய கட்டளைப்படி செல்வதற்கும் அனுமதிக்கப்பட்ட சம்பாத்தியத்தின் வகைகள் மூலம் அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே அவ்வாறு செய்தான்.

(13) 45.13. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய வானங்களிலுள்ளவற்றையும் மலைகள், மரங்கள், ஆறுகள் போன்ற பூமியிலுள்ளவற்றையும் அவன் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். இவ்வனைத்து அருட்கொடைகளும் அவனது அருளும் உபகாரமுமாகும். நிச்சயமாக உங்களுக்காக இவ்வாறு வசப்படுத்தித் தந்துள்ளதில் அல்லாஹ்வின் சான்றுகளில் சிந்தனை செலுத்தி அவற்றைக் கொண்டு படிப்பினை பெறுவோருக்கு அவன் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.

(14) 45.14. -தூதரே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தியவர்களிடம் நீர் கூறுவீராக: “உங்களுக்குத் தீங்கிழைத்த நிராகரிப்பாளர்களை மன்னித்துவிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் அருளையோ, தண்டனையையோ பொருட்படுத்துவதில்லை. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையைக் கடைப்பிடித்த நம்பிக்கையாளர்கள், வரம்புமீறிய நிராகரிப்பாளர்கள் என ஒவ்வொருவருக்கும் அவர்கள் உலகில் சம்பாதித்த செயல்களுக்கான கூலியை வழங்கிடுவான்.

(15) 45.15. யார் நற்செயல் புரிவாரோ அந்த நற்செயலால் ஏற்படும் பலன் அவரையே சாரும். அவரது செயலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யார் தீய செயல் புரிகின்றாரோ அந்த தீய செயலினால் ஏற்படும் தீய விளைவான தண்டனை அவருக்கே ஏற்படும். அந்த செயலால் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் ஏற்படப் போவதில்லை. நாம் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவதற்காக பின்னர் நீங்கள் அனைவரும் மறுமையில் நம்மிடம் மட்டுமே திரும்ப வேண்டும்.

(16) 45.16. நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு தவ்ராத்தையும் அதன் சட்டங்களைக்கொண்டு மக்களிடையே தீர்ப்பளிப்பதையும் அளித்தோம். இப்ராஹீமின் சந்ததியைச் சார்ந்த அவர்களிலிருந்தே அதிகமான நபிமார்களை ஏற்படுத்தினோம். தூய்மையான பலவற்றிலிருந்து அவர்களுக்கு வாழ்வாதாரமும் அளித்தோம். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அனைவரைவிடவும் அவர்களை சிறப்பித்தோம்.

(17) 45.17. அசத்தியத்திலிருந்து சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் ஆதாரங்களையும் அவர்களுக்கு வழங்கினோம். முஹம்மது தூதராக அனுப்பப்பட்டு ஆதாரங்கள் அவர்களுக்கு எதிராக நிலைநாட்டப்பட்ட பிறகே அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள். பதவி மற்றும் தலைமைத்துவத்தின் மீதுள்ள மோகத்தினால் அவர்களில் சிலர் சிலருக்கு அநீதியிழைத்துக்கொண்டதே இந்த கருத்துவேறுபாட்டின் பக்கம் அவர்களை இட்டுச் சென்றது. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் உலகில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அப்போது யார் சத்தியவாதிகள், யார் அசத்தியவாதிகள் என்பதைத் தெளிபடுத்துவான்.

(18) 45.18. பின்னர் தூதரே! உமக்கு முன்னர் நம்முடைய தூதர்களுக்கு நம்முடைய கட்டளைகளில் இருந்து நாம் ஏவிய ஈமானின் பக்கமும் நற்செயல்களின் பக்கமும் அழைப்பு விடுக்கும் இஸ்லாமிய ஷரீஅத்தில் உம்மை ஆக்கினோம். இந்த மார்க்கத்தைப் பின்பற்றுவீராக. சத்தியத்தை அறியாதவர்களின் மனஇச்சைகளைப் பின்பற்றாதீர். அவர்களின் மனவிருப்பங்கள் சத்தியத்தைவிட்டு வழிகெடுத்துவிடும்.

(19) 45.19. நிச்சயமாக சத்தியத்தை அறியாதவர்களின் மனஇச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எதனையும் உம்மைவிட்டும் அவர்களால் தடுக்க முடியாது. நிச்சயமாக அனைத்து மார்க்கங்களிலுமுள்ள அநியாயக்காரர்கள் நம்பிக்கையாளர்களுக்கு எதிராக ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவனே உதவியாளனாவான்.

(20) 45.20. நம் தூதர் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் மக்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் அத்தாட்சியாகவும் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் உறுதியாக நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் தம் இறைவன் தம்மைப் பொருந்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதன் மூலம் நேரான வழியின்பால் வழிகாட்டப்படுகிறார்கள். அவன் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து நரகத்தைவிட்டும் தூரமாக்குகிறான்.

(21) 45.21. தங்களின் உறுப்புகளால் நிராகரிப்பிலும் பாவங்களிலும் ஈடுபட்டவர்களை நாம் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிபவர்களைப்போன்று ஆக்கி உலகிலும் மறுமையிலும் அவர்கள் சமமாகிவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவர்களின் இத்தீர்ப்பு மோசமானதாகும்.

(22) 45.22. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஓர் உயர்ந்த நோக்கத்திற்காகப் படைத்துள்ளான். அவன் அவற்றை வீணாகப் படைக்கவில்லை. அது ஒவ்வொருவருக்கும் அவர் சம்பாதித்ததற்கான கூலியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான். நலவுக்கு நன்மையும் அல்லது தீங்கிற்கு தீமையும் உண்டு. அல்லாஹ் அவர்களின் நன்மைகளைக் குறைத்தோ தீமைகளை அதிகரித்தோ அவர்கள் மீது அநீதி இழைத்துவிட மாட்டான்.

(23) 45.23. -தூதரே!- தன் மனஇச்சையைப் பின்பற்றி அதற்கு மாற்றமே செய்யாது வணங்கப்படும் இறைவனைப் போன்று ஆக்கிக் கொண்டவனை நீர் பார்ப்பீராக. அல்லாஹ் தன்னுடைய அறிவின் பிரகாரம் வழிகெடுத்துவிட்டான். ஏனெனில் அவன் வழிகெடுக்கப்படுவதற்குத் தகுதியானவன். அல்லாஹ் அவனுடைய உள்ளத்தில் முத்திரையிட்டுவிட்டான். எனவே அதனால் பயனடையும் வண்ணம் செவியேற்க முடியாது. அல்லாஹ் அவனுடைய பார்வையில் சத்தியத்தைப் பார்ப்பதை விட்டும் தடுக்கும் ஒரு திரையை ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ அவனை யார்தான் சத்தியத்தின்பால் நேர்வழிபெறச் செய்யமுடியும்? மன இச்சையைப் பின்பற்றுவதன் பாதிப்பையும், அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுவதன் பயனையும் நீங்கள் நினைவுகூற மாட்டீர்களா?

(24) 45.24. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நம்முடைய இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. அதற்குப் பிறகு எந்த வாழ்க்கையும் இல்லை. ஒரு தலைமுறை மனிதர்கள் மரணிக்கிறார்கள். அவர்கள் திரும்பி வருவதில்லை. இன்னும் சில தலைமுறைகள் வாழ்கிறார்கள். இரவு, பகல் மாறிமாறி வருவதே நம்மை மரணிக்கச் செய்கின்றது.” மீண்டும் எழுப்பப்படுவதை நிராகரிப்பதற்கு அவர்களிடம் எந்த அறிவும் இல்லை. அவர்கள் யூகம்தான் கொள்கிறார்கள். யூகம் எந்த உறுதியையும் அளிப்பதில்லை.

(25) 45.25. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இணைவைப்பாளர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால் தூதரிடமும் அவருடைய தோழர்களிடமும் “மரணித்ததன் பின்னால் மீண்டும் உயிகொடுத்து எழுப்பப்படுவோம்” என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இறந்துவிட்ட எங்களின் முன்னோர்களை உயிரோடு கொண்டுவாருங்கள்” என்று கூறுவதைத் தவிர அவர்களிடம் வேறு எந்த ஆதாரமும் இருப்பதில்லை.

(26) 45.26. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் உங்களைப் படைத்து உயிர்ப்பிக்கின்றான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்கின்றான். பின்னர் நீங்கள் மரணித்த பிறகு மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். நிச்சயமாக அந்த நாள் வருவதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் இதனை அறியமாட்டார்கள். எனவேதான் நற்செயல்களைக் கொண்டு அந்த நாளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்வதில்லை.

(27) 45.27. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவையிரண்டிலும் அவனைத் தவிர வேறு எதுவும் வணங்கப்படுவதற்குத் தகுதியானவையல்ல. அல்லாஹ் மரணித்தவர்களை விசாரணைக்காகவும் கூலி வழங்குவதற்காகவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் மறுமை நாளில் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கிக்கொண்டிருந்த, சத்தியத்தை அசத்தியமாக்கவும் அசத்தியத்தை சத்தியமாக்கவும் முயற்சி செய்துகொண்டிருந்த அசத்தியவாதிகள் நஷ்டமடைந்து விடுவார்கள்.

(28) 45.28. -தூதரே!- அந்த நாளில் ஒவ்வொரு சமூகமும் தமக்கு நிகழப்போவதை எதிர்பார்த்துக் கொண்டு முழந்தாளிட்டுக் கிடக்கும். ஒவ்வொரு சமூகமும் வானவர்கள் பதிவுசெய்து பாதுகாத்த செயல்பதிவேடுகளை நோக்கி அழைக்கப்படும். -மனிதர்களே!- இன்றைய தினம் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த நன்மை மற்றும் தீமைகளுக்கு கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.

(29) 45.29. இது எமது வானவர்கள் உங்களின் செயல்களைப் பதிவுசெய்த ஏடாகும். உங்களுக்கு எதிராக உண்மையான சாட்சி கூறும். அவற்றை வாசியுங்கள். நிச்சயமாக நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களை பதிவுசெய்யுமாறு நாம் கண்காணிக்கும் வானவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தோம்.

(30) 45.30. நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களை அவர்களின் இறைவன் தன் அருளால் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய இந்த கூலியே தெளிவான வெற்றியாகும். அதற்கு இணையான வேறு வெற்றி இல்லை.

(31) 45.31. அல்லாஹ்வை நிராகரித்தவர்களிடம் அவர்களைப் கண்டிக்கும் விதமாகக் கூறப்படும்: “என் வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்பட்ட வேளை, அவற்றின் மீது கர்வம் கொண்டு, நீங்கள் நிராகரித்து பாவங்கள் புரியும் குற்மிழைக்கும் சமூகமாக இருந்தீர்களல்லவா?!”

(32) 45.32. “நிச்சயமாக அல்லாஹ் -தன் அடியார்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி அவர்களுக்குக் கூலி வழங்குவான் என்று- அவன் அளித்த வாக்குறுதி சந்தேகமற்ற உண்மையாகும். மறுமை நாள் உண்டு என்பது சந்தேகம் இல்லாத உண்மையாகும். எனவே அதற்காக செயல்படுங்கள்” என்று உங்களிடம் கூறப்பட்டால் “மறுமை நாள் என்னவென்பதை நாங்கள் அறிய மாட்டோம். அது ஒருவேளை நிகழலாம் என்ற பலவீனமான எண்ணத்தையே நாங்கள் கொண்டுள்ளோம். அது நிகழும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புவோராக இல்லை” என்று கூறுகிறீர்கள்.

(33) 45.33. அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் பாவங்களின் தீய விளைவுகள் அவர்களுக்கு முன்னால் வெளிப்பட்டு விடும். எச்சரிக்கப்படும் போது அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த வேதனை அவர்கள் மீது இறங்கிவிடும்.

(34) 45.34. அல்லாஹ் அவர்களிடம் கூறினான்: “நீங்கள் இந்த நாளின் சந்திப்பை மறந்து அதற்காக நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்து தயாராகாமல் இருந்ததைப் போன்றே இன்றைய தினம் நரகத்தில் உங்களை விட்டுவிடுவோம். நீங்கள் ஒதுங்கி தங்குகின்ற இடம் நரகமாகும். உங்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தடுக்கும் உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

(35) 45.35. நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனை அல்லாஹ்வின் வசனங்களை நிச்சயமாக நீங்கள் ஏளனமாக பரிகாசம் செய்துகொண்டிருந்ததனாலாகும். உலக இன்பங்களும் இச்சைகளும் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டன. இன்றைய தினம் அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்த நிராகரிப்பாளர்கள் நரகத்திலிருந்து வெளியேற முடியாது. மாறாக அவர்கள் அதில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். நற்செயல் புரிவதற்காக அவர்கள் மீண்டும் உலகின்பால் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்களின் இறைவன் அவர்களைப் பொருந்திக்கொள்ளமாட்டான்.

(36) 45.36. வானங்கள், பூமி மற்றும் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே புகழனைத்தும்.

(37) 45.37. வானங்களிலும் பூமியிலும் கண்ணியம் அவனுக்கே உரியது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைத்த படைப்புகளில், அமைத்த விதிகளில், திட்டங்களில், அவன் இயற்றியவைகளில் ஞானம் மிக்கவன்.