(1) 72.1. -தூதரே!- நீர் உம் சமூகத்திற்குக் கூறுவீராக: “அல்லாஹ் எனக்குப் பின்வருமாறு வஹி அறிவித்துள்ளான், “நான் குர்ஆன் ஓதியதை ஜின்களில் ஒரு குழுவினர் ‘பத்னு நஹ்லா’ என்ற இடத்தில் வைத்து செவியுற்றார்கள். அவர்கள் தங்கள் சமூகத்தினரிடம் திரும்பிச் சென்றபோது அவர்களிடம் கூறினார்கள்: “தன் தெளிவிலும் உரைநடையிலும் கவர்ச்சிமிக்க ஓதப்படக்கூடிய ஒரு பேச்சை நிச்சயமாக நாங்கள் செவியுற்றோம்.”
(2) 72.2. நாங்கள் செவியுற்ற அந்த பேச்சு (குர்ஆன்) கொள்கை, சொல், செயல் ஆகியவற்றில் சரியானவற்றுக்கு வழிகாட்டுகிறது. எனவே நாங்கள் அதனை நம்புகிறோம். அதனை இறக்கிய எங்கள் இறைவனுக்கு இணையாக நாங்கள் யாரையும் ஆக்க மாட்டோம்.
(3) 72.3. எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்துவிட்டது. அவன் இணைவைப்பாளர்கள் கூறுவதுபோல தனக்கு மனைவியையோ, மகனையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நாம் நிச்சயமாக நம்பிக்கை கொண்டோம்.
(4) 72.4. நிச்சயமாக இப்லீஸ்தான் ‘அல்லாஹ்வுக்கு மனைவி உண்டு, மகன் உண்டு’ என்று அவன் மீது தவறான கருத்தை இணைத்து, இட்டுக்கட்டிக் கூறிக்கொண்டிருந்தான்.
(5) 72.5. இணைவைத்த மனிதர்களோ, ஜின்களோ அல்லாஹ்வுக்கு மனைவி உண்டு, மகன் உண்டு என்று கூறியபோது அவர்கள் பொய் கூற மாட்டார்கள் என்றே நிச்சயமாக நாங்கள் எண்ணியிருந்தோம். எனவேதான் அவர்களை அப்படியே பின்பற்றி அவர்கள் கூறியதையும் உண்மைப்படுத்தினோம்.
(6) 72.6. அறியாமைக் காலத்தில் மனிதர்களில் சில ஆண்கள் ஏதேனும் பயமுறுத்தக்கூடிய இடத்தில் தங்க நேர்ந்தால் ஜின்களிலுள்ள ஆண்களிடம் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூறுவார்: “நான் இந்தப் பள்ளத்தாக்கின் தலைவரிடம் அவர் சமூகத்து மூடர்களின் தீங்குகளிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன்.” இதனால் மனிதர்களிலுள்ள ஆண்கள் ஜின்களிலுள்ள ஆண்களை அதிகம் அஞ்சக்கூடியவர்களாகி விட்டார்கள்.
(7) 72.7. -ஜின்களே!- உங்களில் யாரேனும் மரணித்துவிட்டால் அவர்களை விசாரணைக்காகவும் கூலிகொடுப்பதற்காகவும் அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்ப மாட்டான் என்று நீங்கள் எண்ணியதுபோன்றே மனிதர்களும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
(8) 72.8. நாங்கள் வானத்தின் செய்தியைத் தேடினோம். நாங்கள் திருட்டுத்தனமாக செவியேற்றுக்கொண்டிருந்ததைத் தடுக்கும் பலம்மிக்க காவலாளிகளான வானவர்களாலும் வானத்தை நெருங்கும் ஒவ்வொருவருக்கும் எறியப்படும் தீச்சுவாலைகளாலும் அது நிரம்பியிருப்பதைக் கண்டோம்.
(9) 72.9. இதற்கு முன்னர் நாங்கள் வானத்தில் நிலைகளை அமைத்து அங்கு நடக்கும் வானவர்களின் உரையாடலை செவியேற்று பூமியிலுள்ள ஜோதிடர்களுக்கு அறிவிப்பவர்களாக இருந்தோம். ஆனால் விஷயம் மாறிவிட்டது. இப்போது நம்மில் யார் செவியேற்கிறாரோ அவர் தமக்காக தயார்நிலையிலுள்ள நெருப்பையே கண்டுகொள்வார். அவர் நெருங்கிச் சென்றால் தீப்பந்தம் எரியப்பட்டு அவரை அது அழித்துவிடும்.
(10) 72.10. இந்த கடுமையான காவலுக்கான காரணத்தை, இதனால் பூமியிலுள்ளவர்களுக்கு தீங்கு நாடப்படுகிறதா அல்லது அல்லாஹ் அவர்களுக்கு நன்மை நாடிவிட்டானா என்பதை நாங்கள் அறிய மாட்டோம். வானத்தின் செய்தி எங்களை விட்டும் தடைபட்டுவிட்டது.
(11) 72.11. -ஜின் சமூகமே!- நிச்சயமாக (நாம் குர்ஆனிலிருந்து செவியுற்றபிறகு) நம்மில் அவனை அஞ்சக்கூடிய நல்லவர்களும் இருக்கிறார்கள்; அவனை நிராகரிப்பவர்களும் பாவிகளும் இருக்கிறார்கள். நாங்கள் பல்வேறு வகையினராக, பலவாறான விருப்பங்கள் கொண்டவர்களாக இருக்கின்றோம்.
(12) 72.12. அல்லாஹ் எங்களை ஏதேனும் செய்ய நாடினால் நிச்சயமாக நாங்கள் அவனிடமிருந்து எங்கும் தப்பிவிட முடியாது, அவன் எம்மைச் சூழ்ந்துள்ளதால் தப்பியோடவும் முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொண்டோம்.
(13) 72.13. நாங்கள் நேரான வழியைக் காட்டும் குர்ஆனைச் செவியுற்றபோது அதன்மீது நம்பிக்கைகொண்டோம். தன் இறைவனின்மீது நம்பிக்கைகொள்பவர் தான் செய்த நன்மைகள் குறைக்கப்பட்டுவிடும் என்றோ முந்தைய பாவங்களுடன் இன்னும் பாவங்கள் அதிகரிக்கப்பட்டுவிடும் என்றோ அஞ்சமாட்டார்.
(14) 72.14. எங்களில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்களும் இருக்கிறார்கள். நேரான, சரியான வழியை விட்டும் விலகிய அநியாயக்காரர்களும் இருக்கிறார்கள். யாரெல்லாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல்களில் ஈடுபடுவார்களோ அவர்கள்தாம் நேர்வழியையும் சரியானதையும் நாடியவர்களாவர்.
(15) 72.15. நேரான, சரியான வழியை விட்டும் விலகிய அநியாயக்காரர்கள் நரகத்தின் எரிபொருள்களாக இருப்பார்கள். அவர்களைப் போன்ற மனிதர்களைக் கொண்டே நரகம் எரிக்கப்படுகிறது.
(16) 72.16. நிச்சயமாக ஜின்களில் சிலர் செவிமடுத்ததை அவருக்கு அவன் அறிவித்ததைப் போன்றே பின்வரும் வஹியையும் அல்லாஹ் அறிவிக்கிறான்: “மனிதர்களும் ஜின்களும் இஸ்லாம் என்னும் நேரான வழியில் நிலைத்திருந்து அதன்படி செயல்பட்டால் அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான நீரைப் புகட்டுவான். பலவகையான அருட்கொடைகளில் அவர்களை நீடிக்கச்செய்வோம்.
(17) 72.17. அது அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துகிறார்களா? அல்லது நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களா? என்பதை சோதிப்பதற்காகவேயாகும். யார் குர்ஆனையும் அதிலுள்ள அறிவுரைகளையும் புறக்கணிப்பாரோ இறைவன் அவரை தாங்கமுடியாத கஷ்டமான வேதனையில் பிரவேசிக்கச் செய்வான்.”
(18) 72.18. “நிச்சயமாக பள்ளிவாயில்கள் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். வேறு யாருக்காகவும் அல்ல. எனவே அவற்றில் அல்லாஹ்வுடன் வேறு யாரையும் அழைக்காதீர்கள். அவ்வாறு அழைத்தால் நீங்கள், தமது வணக்கஸ்தலங்களில் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கும் யூதர்களையும் கிருஸ்தவர்களையும் போன்று ஆகிவிடுவீர்கள்.”
(19) 72.19. “அல்லாஹ்வின் அடியார் முஹம்மது ‘பத்னு நஹ்லா’ என்ற இடத்தில் அல்லாஹ்வை வணங்கியவராக நின்றபோது ஜின்கள் அவர் ஓதிய குர்ஆனைச் செவியேற்பதற்காக கடுமையாக நெருங்கிக்கொண்டு கூட்டம்கூட்டமாக நின்றார்கள்.
(20) 72.20. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் என் இறைவனை மாத்திரமே அழைக்கின்றேன். வேறொன்றை வணக்கத்தில் அவனுக்கு இணையாக்கமாட்டேன். அது யாராக இருந்தாலும் சரியே.”
(21) 72.21. நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு விதித்த தீங்கினை அகற்றுவதற்கோ, அவன் உங்களுக்குத் தடுத்த பயன்களை கொண்டுவருவதற்கோ நான் சக்திபெற மாட்டேன்.”
(22) 72.22. நீர் கூறுவீராக: “நான் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அவனிடமிருந்து யாரும் என்னைக் காப்பாற்ற முடியாது. அவனைத்தவிர ஒதுங்கும் வேறு புகலிடத்தையும் நான் பெற முடியாது.”
(23) 72.23. என்னால் முடிந்ததெல்லாம் அவன் எனக்கு இட்ட கட்டளையையும் உங்களின்பால் கொண்டுவந்த தூதுச் செய்தியையும் உங்களிடம் எடுத்துரைக்கிறேன் என்பதுதான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்பவர் நரக நெருப்பை தங்குமிடமாகப் பெறுவார். அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார். அதிலிருந்து அவரால் ஒருபோதும் வெளியேற முடியாது.
(24) 72.24. நிராகரிப்பாளர்கள் தங்களின் நிராகரிப்பிலேயே நிலைத்திருப்பார்கள். உலகில் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையை மறுமை நாளில் காணும் சமயத்தில் யார் பலவீனமான உதவியார்களைப் பெற்றவர்கள்? யார் குறைவான உதவியாளர்களைப் பெற்றவர்கள்? என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
(25) 72.25. -தூதரே!- மீண்டும் எழுப்பப்படுவதை மறுக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கு எச்சரிக்கப்படும் வேதனை சமீபத்தில் உள்ளதா? அல்லது நிச்சயமாக அல்லாஹ் மாத்திரமே அறிந்த ஒரு தவணை இருக்கின்றதா என்பதை நான் அறிய மாட்டேன்.
(26) 72.26. அவனே மறைவானவை அனைத்தையும் அறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் மறைவாக அமைத்த விஷயங்களை யாருக்கும் அறிவிக்கமாட்டான். அவன் மாத்திரமே அதனை பிரத்தியேகமாக அறிந்து வைத்துள்ளான்.
(27) 72.27. ஆயினும் அவன் யாரைத் தூதராக தேர்ந்தெடுத்தானோ அவர்களைத் தவிர. அவர்களுக்கு தான் விரும்பியதைக் கற்றுக்கொடுக்கிறான். தூதரை தவிர மற்றவர்கள் அறிந்துகொள்ளாதவகையில், அவன் தன் தூதரைப் பாதுகாப்பதற்காக அவருக்கு முன்னாலும் பின்னாலும் வானவர்களை பாதுகாவலர்களாக அனுப்புகிறான்.
(28) 72.28. இது தமக்கு முன்னர் வந்த தூதர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த அல்லாஹ்வின் அருளால் அவன் ஏவிய தூதுச் செய்தியை எடுத்துரைத்து விட்டார்கள் என்பதை தூதர் அறிந்துகொள்வதற்காகத்தான். அல்லாஹ் வானவர்கள் மற்றும் தூதர்களிடம் உள்ளவற்றை சூழ்ந்து அறிந்துள்ளான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் ஒவ்வொன்றையும் எண்ணி கணக்கிட்டு வைத்துள்ளான். அவனைவிட்டு எதுவும் மறைவாக இல்லை.