(1) 100.1. வேகமாக மூச்சிறைத்து சத்தத்தை வெளிப்படுத்தி ஓடும் குதிரைகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
(2) 100.2. தன் குளம்புகளால் பாறைகளில் கடுமையாக உரசுவதால் தீப்பொறியை உண்டாக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.
(3) 100.3. அதிகாலை நேரத்தில் எதிரிகளின்மீது தாக்குதல் தொடுக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.
(4) 100.4. அவை தாம் ஓடும்போது புழுதியைக் கிளப்புகின்றன.
(5) 100.5. வீரர்களுடன் அவை எதிரிகளிடையே கூட்டமாக நுழைந்து விடுகின்றன.
(6) 100.6. நிச்சயமாக மனிதன் தன் இறைவன் தன்னிடமிருந்து விரும்பும் நன்மையை தடுத்துக்கொள்ளக் கூடியவனாக இருக்கின்றான்.
(7) 100.7. அவன் நன்மையைத் தடுப்பதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கின்றான். அது தெளிவாக இருப்பதால் அவனால் அதனை மறுக்க முடியாது.
(8) 100.8. நிச்சயமாக அவன் செல்வத்தின் மீதுள்ள மோகத்தினால் அதில் கஞ்சத்தனம் செய்கிறான்.
(9) 100.9. இவ்வுலக வாழ்க்கையில் மயங்கிய இந்த மனிதன், அல்லாஹ் மண்ணறைகளில் உள்ளவர்களை உயிர்கொடுத்து எழுப்பி, பூமியிலிருந்து அவர்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் வெளியேற்றும் போது விஷயம் அவன் எண்ணியது போல் இருக்காது என்பதை அறியவில்லையா?
(10) 100.10. உள்ளங்களிலுள்ள எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இன்னபிற விஷயங்களெல்லாம் வெளிப்படுத்தப்படும் தெளிவாக்கப்படும்.
(11) 100.11. நிச்சயமாக அந்த நாளில் அவர்களின் இறைவன் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். தன் அடியார்களின் விடயம் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அதற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.