11 - ஸூரா ஹூத் ()

|

(1) 11.1. (الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அல்குர்ஆன் வார்த்தையும் பொருளும் திறமையாக வடிவமைக்கபட்ட வசனங்களையுடைய ஒரு வேதமாகும். அதில் எவ்வித குறைபாட்டையும் நீர் காணமுடியாது. பின்னர் அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதவை, ஏவல், விலக்கல், வாக்குறுதி, எச்சரிக்கை, சம்பவங்கள் ஏனையவை ஆகியன, தனது திட்டமிடலிலும் சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்க, அடியார்களின் நிலமைகளையும் அவர்களுக்கு பலனளிப்பவற்றையும் குறித்து நன்கறிந்த (இறை)வனால் எடுத்துரைக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

(2) 11.2. முஹம்மதின் மீது இறக்கப்பட்ட வசனங்களின் உள்ளடக்கம்: “அல்லாஹ்வுடன் அவனைத் தவிர உள்ளவற்றையும் வணங்குவதை விட்டும் தடுப்பதாகும். -மனிதர்களே!- நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அவனுடைய தண்டனையை உங்களுக்கு அச்சமூட்டுபவனாகவும், நீங்கள் நம்பிக்கை கொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டால் அவனுடைய நற்கூலியைக் கொண்டு உங்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவனாகவும் நான் இருக்கின்றேன்.”

(3) 11.3. -மக்களே!- உங்கள் இறைவனிடம் உங்கள் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருங்கள். அவன் விடயத்தில் நீங்கள் செய்த பாவங்களுக்காக வருத்தப்பட்டு அவன் பக்கம் திரும்புங்கள். இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணைகள் வரை அவன் உங்களை நல்ல முறையில் அனுபவிக்கச் செய்வான். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரிந்த ஒவ்வொருவருக்கும் அவன் குறைவின்றி நிறைவாக தன் அருளை வழங்கிடுவான். நான் என் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததன் மீது நம்பிக்கை கொள்ளாமல் நீங்கள் புறக்கணித்தால் உங்கள் மீது பயங்கரமான நாளான மறுமை நாளின் வேதனையைக் குறித்து அஞ்சுகிறேன்.

(4) 11.4. மக்களே! மறுமை நாளில் நீங்கள் அல்லாஹ் ஒருவனின் பக்கமே திரும்ப வேண்டும். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது. எனவே உங்களை உயிர்ப்பிப்பதும் நீங்கள் மரணித்து உங்களை எழுப்பிய பின் விசாரணை செய்வதும் அவனால் இயலாத காரியமல்ல.

(5) 11.5. அறிந்து கொள்ளுங்கள், இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைப் பற்றிய அறியாமையினால் ஏற்பட்ட தமது உள்ளங்களில் உள்ள அவனைப் பற்றிய சந்தேகத்தை மறைக்க தமது நெஞ்சுகளை வளைக்கிறார்கள். அறிந்துகொள்ளுங்கள், அவர்கள் தங்களின் தலைகளை ஆடைகளால் மறைக்கும் போது அல்லாஹ் அவர்கள் மறைப்பதையும் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான். உள்ளங்களிலுள்ள எண்ணங்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.

(6) 11.6. பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும் எந்த படைப்பினமானாலும் அதற்கு வாழ்வாதாரம் அளிக்கும் பொறுப்பை தானாகவே விரும்பி அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அது பூமியில் தங்குமிடத்தையும் மரணிக்கும் இடத்தையும் அல்லாஹ் அறிவான். படைப்புகள் ஒவ்வொன்றும், அவற்றிற்கான வாழ்வாதாரங்களும் அவை தங்குமிடங்களும் மரணிக்கும் இடங்களும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது.

(7) 11.7. அவன்தான் பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் அவையிரண்டிலும் உள்ளதையும் ஆறு நாட்களில் படைத்தான். அவையிரண்டையும் படைப்பதற்கு முன்னால் அவனுடைய அர்ஷ் நீரின் மீதிருந்தது. -மனிதர்களே!- உங்களில் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் நற்செயல்கள் புரிபவர்கள் யார்? அவனுக்குக் கோபமுண்டாக்கும் தீய செயல்கள் புரிபவர்கள் யார்? என்பதை சோதிப்பதற்காகத்தான் அவற்றைப் படைத்தான். ஒவ்வொருவருக்கும் அவன் தகுந்த கூலியை வழங்கிடுவான். -தூதரே!- “மக்களே, நீங்கள் மரணித்த பிறகு விசாரணை செய்யப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால் அல்லாஹ்வை நிராகரித்து மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்தவர்கள் கூறுவார்கள், “நீர் ஓதிக் காட்டும் குர்ஆன் தெளிவான சூனியமும் அசத்தியமுமாகும்.”

(8) 11.8. இவ்வுலக வாழ்வில் இணைவைப்பாளர்களை விட்டும் அவர்களுக்குரிய வேதனையை குறிப்பிட்ட காலம் வரை நாம் பிற்படுத்தினால், அவசரப்பட்டவர்களாகவும் பரிகாசம் செய்தவர்களாகவும் அவர்கள், “நம்மை விட்டும் வேதனையைத் தடுப்பது எது?” அறிந்துகொள்ளுங்கள், எனக் கூறுவார்கள். அவர்களுக்குரிய வேதனை வருவதற்கு அல்லாஹ்விடம் ஒரு நேரம் உண்டு. அது அவர்களிடம் வரும் நாளில் அவர்களை விட்டும் அதனை அகற்றும் எவரையும் அவர்கள் பெறமாட்டார்கள். அது அவர்கள் மீது நிகழ்ந்தே தீரும். அவர்கள் பரிகாசமாக அவசரப்பட்டுக் கொண்டிருந்த வேதனை அவர்களைச் சூழ்ந்துவிட்டது.

(9) 11.9. நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏதேனும் அருட்கொடையை வழங்கி பின்னர் அந்த அருட்கொடையைப் பறித்துக் கொண்டால் அல்லாஹ்வின் அருளை விட்டும் அவன் மிகவும் நம்பிக்கையிழந்தவனாகவும், அவனுடைய அருட்கொடைகளுக்கு மிகவும் நன்றி கெட்டவனாகவும் ஆகிவிடுகிறான். அந்த அருட்கொடையை அல்லாஹ் அவனிடமிருந்து பறித்துக்கொண்டால் அதனை மறந்து விடுகிறான்.

(10) 11.10. அவனுக்கு ஏற்பட்ட வறுமைக்கும் நோய்க்கும் பிறகு அவனது வாழ்வாதாரத்தில் விசாலத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கினால், “தீங்கு என்னை விட்டு அகன்று விட்டது, துன்பம் என்னை விட்டு நீங்கி விட்டது” என்று கூறுகிறான். அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதில்லை. பெருமிதம் கொள்பவனாகவும் அல்லாஹ் தனக்கு அளித்த அருட்கொடைகளைக் கொண்டு மக்களை அதிகம் அவமதிப்பவனாகவும் பெருமை பேசித் திரிபவனாகவும் இருக்கின்றான்.

(11) 11.11. ஆனால் வெறுப்பானவற்றைத் தாங்கிக்கொண்டு வழிபாடுகளிலும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதிலும் பொறுமையைக் கடைப்பிடித்து, நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர. அவர்களது நிலமை வேறு. விரக்தி, அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறத்தல், மக்களை அவமதித்தல். ஆகிய பண்புகள் அவர்களிடம் காணப்படாது. இந்த பண்புகளை உடையவர்களது பாவங்களுக்கு அவர்களது இறைவனிடம் மன்னிப்பு உண்டு. மறுமையில் அவர்களுக்கு மிகப் பெரும் கூலியும் உண்டு.

(12) 11.12. தூதரே! -அவர்களின் நிராகரிப்பு, பிடிவாதம், சான்றுகளைக் கோருதல் ஆகியவற்றை நீர் எதிர்கொள்வதனால்- அல்லாஹ் உமக்கு அவர்களிடம் எடுத்துரைக்கும்படி கட்டளையிட்டவற்றில் அவர்களுக்குச் செய்வது சிரமமான சிலவற்றை நீர் எடுத்துரைக்காமல் விட்டு விடுவீர் போலும்; “இவர் மீது இவரைச் செல்வந்தராக்கும் ஒரு பொக்கிஷம் இறக்கப்படக் கூடாதா” அல்லது “இவருடன் இவரை உண்மைப்படுத்தும் வானவர் ஒருவர் வந்திருக்கக் கூடாதா” என்று அவர்கள் கூறாமல் இருப்பதற்காக அதனை எடுத்துரைப்பதன் மூலம் உமது உள்ளம் இறுகி விடும் போலும். இதன் காரணமாக உமக்கு அறிவிக்கப்பட்ட எதையும் விட்டு விடாதீர். உமக்கு அல்லாஹ் எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை எடுத்துரைத்து எச்சரிக்கை செய்பவர் மட்டுமே. அவர்கள் கேட்கும் சான்றுகளைக் கொண்டு வருவது உமது பணியல்ல. அல்லாஹ் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

(13) 11.13. “முஹம்மது குர்ஆனை சுயமாகப் புனைந்து கொண்டார். அது அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கப்பட்ட வஹி அல்ல” என்று இணைவைப்பாளர்கள் கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களிடம் சவால் விடுத்தவராகக் கூறுவீராக: “நீங்கள் புனையப்பட்டதாக வாதிடும் குர்ஆனைப் போன்று உண்மையற்ற இந்த குர்ஆனில் உள்ளதைப் போன்ற பத்து அத்தியாயங்களைப் புனைந்து கொண்டு வாருங்கள் பார்க்கலாம். குர்ஆன் புனைந்து கூறப்பட்டது என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்காக உங்களால் உதவிக்கு அழைக்க முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்.

(14) 11.14. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அவர்களிடம் வேண்டியதை இயலாமையினால் அவர்களால் கொண்டுவர முடியவில்லையெனில் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள், “நிச்சயமாக குர்ஆன் அல்லாஹ் தன் தூதர் மீது தன் அறிவுடன் இறக்கிய வேதமாகும். அது புனைந்து கூறப்பட்டதல்ல.” அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். தெளிவான இந்த ஆதாரங்களுக்குப் பிறகு அல்லாஹ்வுக்கு நீங்கள் அடிபணிவீர்களா?

(15) 11.15. யார் தம் செயல்களின் மூலம் மறுமையை விரும்பாமல் இவ்வுலகத்தையும் அழியக்கூடிய அதன் இன்பங்களையும் விரும்புவார்களோ நாம் அவர்களின் செயல்களுக்கான கூலியை ஆரோக்கியம், செல்வ வளம், அமைதி போன்ற வடிவில் இவ்வுலகிலேயே வழங்கிவிடுவோம். அவர்களின் செயல்களுக்கான கூலியிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது.

(16) 11.16. இழிவான இந்த நோக்கம் உடையவர்களுக்கு மறுமையில் நரக நெருப்பில் நுழைவதைத் தவிர வேறு எந்தக் கூலியும் இல்லை. அவர்களது செயல்களுக்கான கூலி அவர்களை விட்டும் சென்று விடும். அவர்களது செயல்கள் வீணாகிவிடக் கூடியன. ஏனெனில் ஈமானும் சரியான நோக்கமும் அவைகளுக்கு இருக்கவில்லை. எனவே அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியையும் மறுமையின் வீட்டையும் அதன் மூலம் நாடவில்லை.

(17) 11.17. தம் இறைவனிடமிருந்து ஆதாரத்தைப் பெற்று, அவனிடமிருந்துள்ள சாட்சியான ஜிப்ரீல் அவரைத் தொடரும் முஹம்மது நபியும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் வழிகேட்டில் தடுமாறித் திரியும் நிராகரிப்பாளர்களும் சமமாக மாட்டார்கள். அவரது தூதுக்கு குர்ஆனுக்கு முன் மூஸாவின் மீது மக்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இறக்கப்பட்ட தவ்ராதும் சான்று பகர்கின்றது. முஹம்மதின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் குர்ஆனையும் அவர் மீது இறக்கப்பட்டதையும் உண்மைப்படுத்துகிறார்கள். அதனை நிராகரிக்கும் பிற சமயத்தினர் மறுமைநாளில் நரகத்தையே தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகப் பெறுவார்கள். -தூதரே!- குர்ஆனைக் குறித்தும் அது கூறும் அவர்களுக்கு வாக்களிக்கப்ட்ட இடம் குறித்தும் சந்தேகம் கொண்டு விடாதீர். அது சந்தேகமற்ற உண்மையாகும். மனிதர்களில் பெரும்பாலோர் தெளிவான ஆதாரங்களும் சான்றுகளும் இருந்தும் நம்பிக்கை கொள்வதில்லை.

(18) 11.18. அல்லாஹ்வுக்கு இணை உண்டு, அல்லது மகன் உண்டு என்று இட்டுக்கட்டிக் கூறுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறுயாருமில்லை. அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டுபவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனுக்கு முன்னால் அவர்களின் செயல்களைக் குறித்து விசாரிக்கப்படுவதற்காக நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக வானவர்களும் தூதர்களும் “இவர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டி அவனுக்கு இணை உண்டு, மகன் உண்டு என்று கூறினார்கள் என்று.” சாட்சி கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் விஷயத்தில் பொய்கூறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்ட இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகட்டும்.”

(19) 11.19. அவர்கள் அல்லாஹ்வின் நேரான வழியை விட்டும் மக்களைத் தடுத்தார்கள். அவனுடைய பாதையில் யாரும் செல்லாதிருக்க அதில் கோணல் ஏற்படுவதை நாடினார்கள். அவர்கள் மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரித்து மறுக்கிறார்கள்.

(20) 11.20. இந்த பண்புகளை உடையவர்கள் அல்லாஹ்வின் வேதனை இறங்கினால் அதிலிருந்து இப்பூமியில் எங்கும் விரண்டோட சக்தியற்றவர்களாவர். அல்லாஹ்வின் வேதனையை அவர்களை விட்டும் தடுக்கும் அல்லாஹ்வைத் தவிரவுள்ள எந்த உதவியாளர்களும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு விட்டதனாலும் பிற மக்களையும் அதனை விட்டுத் தடுத்ததனாலும் மறுமை நாளில் அவர்களின் வேதனை இன்னும் அதிகரிப்படும். அவர்கள் இவ்வுலகில் சத்தியத்தையும் நேர்வழியையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்பவர்களாக இருக்கவில்லை; சத்தியத்தை அவர்கள் கடுமையாக புறக்கணித்ததனால் பிரபஞ்சத்தில் காணப்படும் அல்லாஹ்வின் சான்றுகளை பயனளிக்கும் விதத்தில் பார்க்கக்கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.

(21) 11.21. இந்த பண்புகளை உடையவர்கள்தாம் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அழிவிற்கான காரணிகளைத் தேடி தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்களாவர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த பரிந்துரையாளர்கள், இணைத் தெய்வங்கள் யாவும் அவர்களை விட்டும் மறைந்துவிட்டன.

(22) 11.22. நிச்சயமாக மறுமை நாளில் இவர்கள்தாம் நஷ்டமடைந்த வியாபாரிகள். அவர்கள் ஈமானுக்குப் பகரமாக நிராகரிப்பையும் மறுமைக்குப் பகரமாக இவ்வுலகத்தையும் அருளுக்குப் பகரமாக வேதனையையும் ஆக்கிக் கொண்டார்கள்.

(23) 11.23. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் உண்மைப்படுத்தி, நற்செயல்கள் புரிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து அடிபணிந்தவர்கள்தாம் சுவனவாசிகளாவர். அங்கு என்றென்றும் அவர்கள் தங்கியிருப்பார்கள்.

(24) 11.24. நிராகரிப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள் ஆகிய இரு பிரிவினர்களுக்கும் உதாரணம், நிராகரிப்பாளர்கள் எதையும் பார்க்க முடியாத குருடர்களையும் எதையும் செவியேற்க முடியாத செவிடர்களையும் போன்றவர்களாவர். அவர்களால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்கமாட்டார்கள். அவர்களுக்குப் பயனளிக்கும விதத்தில் பார்க்கவும் மாட்டார்கள். நம்பிக்கையாளர்கள் நன்கு செவியேற்கக் கூடியவர்களையும் பார்க்கக் கூடியவர்களையும் போன்றவர்களாவர். இருபிரிவினரும் இந்நிலையில் சமமாவார்களா என்ன? ஒருபோதும் சமமாக மாட்டார்கள். நீங்கள் இதைக் கொண்டு படிப்பினை பெறமாட்டீர்களா?

(25) 11.25. நாம் நூஹை அவருடைய சமூகத்தின்பால் தூதராக அனுப்பினோம். அவர் அவர்களுக்கு கூறினார்: “என் சமூகமே! நான் உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்பவனாவேன்; உங்களுக்கு எந்த தூதைக்கொண்டு நான் அனுப்பப்பட்டுளேனோ அதை உங்களுக்கு நான் தெளிவுபடுத்தக் கூடியவனாவேன்.

(26) 11.26. அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படி நான் உங்களை அழைக்கின்றேன். அவனைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் மீது வேதனை மிக்க நாளின் தண்டனையைக் குறித்து அஞ்சுகிறேன்.

(27) 11.27. அவருடைய சமூகத்தின் நிராகரித்த தலைவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உமது அழைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களை விட உமக்கு எந்த சிறப்பும் இல்லை. ஏனெனில் நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர்தாம். மேலும் எமது பார்வையில் இழிவானவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். நாங்கள் உம்மைப் பின்பற்றுவதற்கு பணத்திலோ பதவியிலோ கண்ணியத்திலோ எவ்வித மேலதிக சிறப்பும் உங்களுக்கு இல்லை. மாறாக உங்களது கூற்றில் நீங்கள் பொய்யர்களே என நாங்கள் கருதுகிறோம்.”

(28) 11.28. நூஹ் அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! என் நம்பகத் தன்மைக்கு சாட்சி கூறி, என்னை உண்மைப்படுத்துவதை உங்கள் மீது கடமையாக்கும் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீது நானிருந்து, அவன் தன் புறத்திலிருந்து எனக்கு தூதுத்துவம், நபித்துவம் என்னும் அருட்கொடையையும் வழங்கியிருக்க, உங்களின் அறியாமையினால் உங்களுக்கு அது மறைக்கப்பட்டதாக இருந்தால் நாம் உங்களை நம்பிக்கைகொள்ளும்படி, உங்களின் உள்ளங்களில் அதனை வலுக்கட்டாயமாக நுழைவித்து கட்டாயப்படுத்தவா முடியும்? நாம் அதற்கு சக்தி பெற்றவர்கள் அல்ல. அல்லாஹ்வே ஈமான் கொள்ளும் பாக்கியத்தை அளிக்கிறான்.”

(29) 11.29. என் சமூகமே! தூதை எடுத்துரைக்கும் பணிக்கு நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நீங்கள் விரட்டி விடுமாறு வேண்டும் நம்பிக்கை கொண்ட ஏழைகளை நான் எனது அவையிலிருந்து விரட்டுபவனல்ல. நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனை சந்திக்கக் கூடியவர்கள். அவர்களின் நம்பிக்கைக்கு அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். ஆனால் நம்பிக்கை கொண்ட ஏழைகளை விரட்டுமாறு கோரும் உங்களை இந்த அழைப்பின் யதார்த்தத்தை புரியாத மக்களாகவே நான் காண்கிறேன்.

(30) 11.30. என் சமூகமே! நம்பிக்கைகொண்ட பாவம் செய்யாத இவர்களை அநியாயமாக நான் விரட்டிவிட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து என்னைக் காப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து, உங்களுக்குப் பயனளிக்கக்கூடியவற்றில் ஈடுபடமாட்டீர்களா?

(31) 11.31. -என் சமூகமே!- நீங்கள் நம்பிக்கை கொண்டால் உங்களுக்கு செலவு செய்யத்தக்க அல்லாஹ்வின் ரிஸ்க் உள்ள அவனது கருவூலங்கள் என்னிடம் உள்ளது என்றும், நான் மறைவானவற்றை அறிவேன் என்றும் நான் ஒரு வானவர் என்றும் நான் உங்களிடம் கூறமாட்டேன். மாறாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் இழிவாகக் கருதும் ஏழைகளுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்களின் எண்ணங்களையும், நிலைகளையும் அல்லாஹ் நன்கறிந்தவன். நான் இவையனைத்தும் என்னிடம் இருப்பதாக வாதிட்டால் தண்டனைக்குரிய அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்.

(32) 11.32. அவர்கள் பிடிவாதத்துடனும் கர்வத்துடனும் கூறினார்கள்: “நூஹே! நீர் எங்களுடன் அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர். நீர் கூறும் விஷயத்தில் உண்மையாளராக இருந்தால் நீர் எங்களை எச்சரிக்கும் வேதனையைக் கொண்டு வாரும்.”

(33) 11.33. நூஹ் அவர்களிடம் கூறினார்: “வேதனையை நான் உங்களிடம் கொண்டுவர முடியாது. அல்லாஹ் நாடினால் அவனே உங்களிடம் வேதனையைக் கொண்டு வருவான். அவன் உங்களைத் தண்டிக்க நாடினால் அவனுடைய தண்டனையிலிருந்து தப்புவதற்கு நீங்கள் ஆற்றல் உள்ளவர்களல்ல.”

(34) 11.34. நேரான பாதையை விட்டு அல்லாஹ் உங்களை வழிகெடுக்க நாடினால், உங்களின் பிடிவாதத்தின் காரணமாக அவன் நேர்வழியை விட்டும் உங்களைக் கைவிட விரும்பினால் என் அறிவுரையும் நினைவூட்டலும் உங்களுக்குப் பயனளிக்காது. அவனே உங்களின் இறைவன். உங்களின் விவகாரங்களுக்கு அவனே அதிபதியாவான். எனவே அவன் நாடினால் உங்களை வழிதவறச் செய்து விடுவான். மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(35) 11.35. நூஹுடைய சமூகத்தின் நிராகரிப்புக்குக் காரணம் அவராகக் கொண்டு வந்த இம்மார்க்கத்தை அல்லாஹ்வின் மீது அவர் புனைகிறார் என்பதேயாகும். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “நான் புனைந்து கூறியிருந்தால் என் குற்றத்தின் தண்டனை என்னையே சாரும். உங்கள் நிராகரிப்பின் பாவத்தில் எதையும் என்னால் சுமக்க முடியாது. நான் அவற்றை விட்டும் நீங்கியவனாவேன்.”

(36) 11.36. அல்லாஹ் நூஹிற்கு வஹி அறிவித்தான்: -“நூஹே!- உம் சமூகத்தில் ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர இனி யாரும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அவர்கள் நீண்ட காலமாக செய்து கொண்டிருந்த நிராகரிப்பு, பரிகாசம் ஆகியவற்றிற்காக -“நூஹே!- நீர் கவலைப்படாதீர்.”

(37) 11.37. நம்முடைய கண்காணிப்பில் வஹியின் மூலம் நாம் கற்றுத் தருவதன்படி ஒரு கப்பலைச் செய்வீராக. நிராகரித்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்காக அவகாசம் அளிக்கும்படி என்னிடம் வேண்டாதீர். நிச்சயமாக நிராகரிப்பில் நிலைத்திருந்ததற்குத் தண்டனையாக வெள்ளத்தில் -சந்தேகம் இல்லாமல்- அவர்களும் மூழ்குபவர்களே.

(38) 11.38. நூஹ் தம் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தினார். கப்பல் கட்ட ஆரம்பித்தார். அவருடைய சமூகத்தின் தலைவர்களும் பெரியவர்களும் - தண்ணீரோ ஆறுகளோ இல்லாத நிலத்தில் கப்பலை செய்து கொண்டிருந்ததற்காக - அவரைக் கடந்து செல்லும் போதெல்லாம் பரிகாசம் செய்தார்கள். அவர்கள் திரும்பத் திரும்ப பரிகாசம் செய்த போது நூஹ் கூறினார்: -“செல்வாக்கு உடையவர்களே!- இன்று நாங்கள் கப்பலைச் செய்யும் போது நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்தால் நீங்கள் மூழ்கப் போவதை நீங்கள் அறியாமலிருப்பதை எண்ணி நாங்களும் பரிகாசம் செய்வோம்.

(39) 11.39. இந்த உலகில் இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும் மறுமை நாளில் துண்டிக்கப்படாத நிரந்தரமான தண்டனை யார் மீது இறங்கும் என்பதையும் நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்.

(40) 11.40. அல்லாஹ் கட்டுமாறு கட்டளையிட்ட கப்பலை நிர்மாணிக்கும் பணியை நூஹ் நிறைவு செய்தார். அவர்களை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்து, வெள்ளம் பெருக்கெடுப்பதை அறிவிக்கும் விதமாக அவர்கள் சமைத்துக் கொண்டிருந்த அடுப்பிலிருந்து நீர் பொங்கியதும். நாம் நூஹிடம் கூறினோம்: “பூமியிலுள்ள எல்லா வகையான உயிரினங்களிலிருந்தும் ஆண் பெண் ஜோடியொன்றை கப்பலில் ஏற்றிக் கொள்வீராக. நம்பிக்கை கொள்ளாததனால் மூழ்குபவர் என ஏற்கனவே முடிவாகி விட்டவர்களைத் தவிர்ந்த உம் குடும்பத்தாரையும் உம் சமூகத்தாரில் நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக் கொள்வீராக. அவர் தம் சமூகத்தாரிடையே நீண்ட காலம் தங்கியிருந்து அவர்களை அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுமாறு அழைத்த போதும் அவர்களிலிருந்து குறைவானவர்களே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

(41) 11.41. நூஹ் நம்பிக்கைகொண்ட தம் குடும்பத்தாரிடமும் சமூகத்தாரிடமும் கூறினார்: “கப்பலில் ஏறிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பெயரால் கப்பல் புறப்படும். அவனுடைய பெயராலே அது நிலைகொண்டு விடும். நிச்சயமாக என் இறைவன் தன் பக்கம் மீளும் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக் கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். நம்பிக்கையாளர்களை அவன் அழிவிலிருந்து காத்ததும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.

(42) 11.42. மலைகளைப் போன்ற மாபெரும் அலையில் மக்களையும் இன்னபிற உயிரினங்களையும் சுமந்து கொண்டு கப்பல் சென்றது. தன் தந்தை மற்றும் சமூகத்தை விட்டும் ஒரு இடத்தில் ஒதுங்கியிருந்த நிராகரிப்பாளனான தனது மகனை நூஹ் தந்தைப் பாசத்தினால் அழைத்தார். “என் மகனே,வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக எங்களுடன் கப்பலில் ஏறிக்கொள். நிராகரிப்பாளர்களுடன் இணைந்து விடாதே. அவ்வாறு இணைந்தால் அவர்களுக்கு நேர்ந்த மூழ்கடிக்கும் அழிவு உன்னையும் பாதிக்கும்.”

(43) 11.43. நூஹின் மகன் அவரிடம் கூறினான்: “நீர் என்னை மூழ்கடிப்பதை விட்டும் என்னைப் பாதுகாப்பதற்காக உயரமான ஒரு மலையில் ஒதுங்கிக் கொள்வேன்.” நூஹ் தம் மகனிடம் கூறினார்: “இன்றைய தினம் அல்லாஹ்வின் தண்டனையான வெள்ளத்தில் மூழ்குவதிலிருந்து அவன் கருணை காட்டியவர்களைத் தவிர யாரும் தப்பமுடியாது.” அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே அவருக்கும் நிராகரித்த அவருடைய மகனுக்குமிடையே ஒரு அலை குறுக்கிட்டது. எனவே அவருடைய மகன் அவனது நிராகரிப்பினால் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டவனாகி விட்டான்.

(44) 11.44. வெள்ளம் முடிந்த பிறகு அல்லாஹ் பூமிக்குக் கட்டளையிட்டான்: “பூமியே! உன் மேற்பரப்பிலுள்ள வெள்ள நீரை உறிஞ்சி விடு.” வானத்திற்குக் கட்டளையிட்டான்: “வானமே! நிறுத்திக்கொள், மழை பொழியாதே.” தண்ணீர் குறைந்து பூமி காய்ந்து விட்டது. அல்லாஹ் நிராகரிப்பாளர்களை அழித்துவிட்டான். கப்பல் ஜுதி மலையின் நின்றது. “நிராகரித்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய சமூகத்துக்கு அழிவு உண்டாகட்டும்” என்று கூறப்பட்டது.

(45) 11.45. நூஹ் தம் இறைவனிடம் உதவிகோரியவராக அவனை அழைத்தார். அவர் கூறினார்: “என் மகனும் நீ காப்பாற்றுவேன் என்று வாக்களித்த என் குடும்பத்தைச் சார்ந்தவன்தானே. உன் வாக்குறுதி உண்மையானது. நீ ஒருபோதும் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படமாட்டாய். நீ தீர்ப்புக் கூறுவோரில் மிக சிறந்த நீதமானவனும் மிகவும் அறிந்தவனுமாவாய்.”

(46) 11.46. அல்லாஹ் நூஹிடம் கூறினான்: “நூஹே! நீர் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்ட உம் மகன் நான் காப்பாற்றுவதாக வாக்களித்த உம் குடும்பத்தைச் சார்ந்தவன் அல்ல. ஏனெனில் அவன் நிராகரிப்பாளன். உம்முடைய கேள்வி உமக்குப் பொருத்தமற்ற கேள்வியாகும். உம் தரத்தில் இருப்பவர்களுக்கு அது உகந்ததல்ல. உமக்கு அறிவில்லாத விஷயங்களைக் குறித்து என்னிடம் கேட்காதீர். நீர் அறிவீனர்களில் ஒருவராக ஆகி என் அறிவுக்கும் நோக்கத்திற்கும் முரணானவற்றைக் கேட்பதை விட்டும் நான் உம்மை எச்சரிக்கிறேன்.”

(47) 11.47. நூஹ் கூறினார்: “என் இறைவா! எனக்கு அறிவில்லாத விஷயங்களை உன்னிடம் கேட்பதை விட்டும் என்னை பாதுகாக்கும்படி நான் உன்னிடம் உதவி தேடுகிறன். நீ என் பாவத்தை மன்னித்து என்மீது கருணை காட்டவில்லையென்றால் மறுமையில் தமது பங்குகளை இழந்து நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாகி விடுவேன்.

(48) 11.48. அல்லாஹ் நூஹிடம் கூறினான்: “நூஹே! கப்பலிலிருந்து நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் உம்மீதும், உமக்குப் பிறகு உருவாகும் உம்முடன் கப்பலில் இருந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள் மீதும் அல்லாஹ் பொழிந்த ஏராளமான அருட்கொடைகளைக் கொண்டும் பூமியில் இறங்குவீராக. அவர்களின் சந்ததிகளிலிருந்து நிராகரிப்பாளர்களும் தோன்றுவார்கள். நாம் இவ்வுலக வாழ்வில் அவர்களை அனுபவிக்கச் செய்வோம். அவர்கள் வாழ்வதற்குத் தேவையானவற்றை வழங்குவோம். பின்னர் மறுமை நாளில் வேதனை மிக்க தண்டனை நம்மிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கும்.

(49) 11.49. நூஹின் இந்த சம்பவம் மறைவான செய்திகளில் உள்ளவையாகும். தூதரே! நீரும் உம் சமூகமும் நாம் உமக்கு அறிவித்த இந்த வஹிக்கு முன்னர் இதனை அறிந்திருக்கவில்லை. நூஹ் பொறுமை செய்தது போல் நீரும் உம் சமூகத்தினரின் தொல்லைகளையும் நிராகரிப்பையும் பொறுத்துக் கொள்வீராக. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பவர்களுக்கே வெற்றி நிச்சயம்.

(50) 11.50. ஆத் சமூகத்தின் பக்கம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். அவர் அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாரையும் இணையாக்காதீர்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் பொய்யர்களாகவே இருக்கின்றீர்கள்.

(51) 11.51. என் சமூகமே! என் இறைவனிடமிருந்து நான் எடுத்துரைக்கும் அழைப்புப் பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி என்னைப் படைத்த அல்லாஹ்விடமே உள்ளது. நீங்கள் இதனை விளங்கிக் கொண்டு நான் உங்களை எதனை நோக்கி அழைக்கிறேனோ அதனை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா?

(52) 11.52. என் சமூகமே! அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். பின்னர் உங்கள் பாவங்களை விட்டு விட்டு அவன் பக்கமே திரும்புங்கள். -பாவங்களில் மிகப் பெரியது இணைவைப்பாகும்.- அதற்கு வெகுமதியாக அல்லாஹ் உங்கள் மீது பெரு மழையைப் பொழியச் செய்வான். அதிகமான பிள்ளைகளையும் செல்வங்களையும் வழங்கி உங்களுடைய மதிப்பை மென்மேலும் அதிகரிப்பான். எனது அழைப்பை புறக்கணித்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் எனது அழைப்பைப் புறக்கணித்ததனாலும் அல்லாஹ்வை நீங்கள் நிராகரித்ததனாலும் நான் கொண்டு வந்ததை பொய்ப்பித்ததனாலும் குற்றவாளிகளாகி விடுவீர்கள்.

(53) 11.53. அவருடைய சமூகத்தார் கூறினார்கள்: “ஹூதே! நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்வதற்கு நீர் எங்களிடம் எந்த தெளிவான சான்றையும் கொண்டுவரவில்லை. ஆதாரமற்ற உம் பேச்சை நம்பி எங்கள் தெய்வங்களை வணங்குவதை விட்டுவிட மாட்டோம். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்ற உமது வாதத்திலும் நாங்கள் உம்மை நம்பப்போவதில்லை.”

(54) 11.54,55. எங்களின் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நீர் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்ததனால் அவற்றுள் சில உம்மைத் தீண்டி பைத்தியமாக்கி விட்டது என்றே நாங்கள் கூறுவோம். ஹூத் கூறினார்: “நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன். நீங்களும் சாட்சி கூறுங்கள், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நான் முற்றிலும் நீங்கி விட்டேன் என்பதற்கு. நீங்களும் என்னைப் பைத்தியமாக்கி விட்டது என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் உங்கள் தெய்வங்களும் சேர்ந்து எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். எனக்கு எந்த அவகாசமும் அளிக்க வேண்டாம்.

(55) 11.54,55. எங்களின் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நீர் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்ததனால் அவற்றுள் சில உம்மைத் தீண்டி பைத்தியமாக்கி விட்டது என்றே நாங்கள் கூறுவோம். ஹூத் கூறினார்: “நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன். நீங்களும் சாட்சி கூறுங்கள், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நான் முற்றிலும் நீங்கி விட்டேன் என்பதற்கு. நீங்களும் என்னைப் பைத்தியமாக்கி விட்டது என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் உங்கள் தெய்வங்களும் சேர்ந்து எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். எனக்கு எந்த அவகாசமும் அளிக்க வேண்டாம்.

(56) 11.56. நான் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து என் விஷயத்தில் முழுமையாக அவனையே சார்ந்துள்ளேன். அவன்தான் என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். இந்த பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து திரியும் ஒவ்வொன்றும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவன் தான் நாடியவாறு அவற்றை மாற்றுகிறான். நிச்சயமாக என் இறைவன் நீதியில் நிலைத்திருப்பவன்.அவன் உங்களை என் மீது சாட்டிவிட மாட்டான். ஏனெனில் நிச்சயமாக நான் சத்தியத்திலும் நீங்கள் அசத்தியத்திலும் இருக்கின்றீர்கள்.

(57) 11.57. நான் கொண்டு வந்ததை நீங்கள் புறக்கணித்தால் எடுத்துரைப்பது மட்டுமே என் மீதுள்ள கடமையாகும். அல்லாஹ் எனக்கு எந்த தூதுப் பணியை அளித்து உங்களுக்கு எடுத்துரைக்கும்படி கட்டளையிட்டானோ அதனை நான் உங்களுக்கு முழுமையாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்கு எதிராக ஆதாரம் நிலைபெற்று விட்டது. என் இறைவன் விரைவில் உங்களை அழித்திடுவான். அவன் உங்களின் இடத்தில் வேறொரு சமூகத்தைக் கொண்டு வருவான். நீங்கள் உங்களின் நிராகரிப்பு, புறக்கணிப்பு மூலம் அல்லாஹ்வுக்கு சிறிய, பெரிய எந்த தீங்கையும் அளித்துவிட முடியாது. ஏனெனில் அவன் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன். என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாவான். எனக்கெதிராக நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளிலிருந்து அவனே என்னைப் பாதுகாப்பான்.

(58) 11.58. அவர்களை அழிக்குமாறு அழிவைத் தாங்கிய நம்முடைய கட்டளை அவர்களிடம் வந்த போது நாம் ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் காப்பாற்றினோம். நிராகரித்த அவருடைய சமூகத்தைத் தாக்கிய கடுமையான வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தோம்.

(59) 11.59. இவர்கள் ஆத் சமூகத்தினர். தங்கள் இறைவனின் சான்றுகளை நிராகரித்தார்கள். தங்கள் தூதர் ஹூதிற்கு கட்டுப்பட மறுத்தார்கள். சத்தியத்திற்கு எதிராக கர்வம் கொண்ட சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமலும் அதற்குக் கட்டுப்படாமலும் வரம்பு மீறிய ஒவ்வொருவரின் கட்டளைக்கும் கட்டுப்பட்டார்கள்.

(60) 11.60. இவ்வுலகில் அவர்களை இழிவும் அல்லாஹ்வின் கருணை நீக்கமும் அவர்களைப் பீடித்துக் கொண்டன. அதே போன்று மறுமையிலும் அவர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டு தூரமாக்கப்படுவார்கள். இது அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் ஆகும். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்களை எல்லா வகையான நன்மைகளை விட்டும் தூரமாக்கி தீமைகளோடு நெருக்கமாக்கி விட்டான்.

(61) 11.61. ஸமூத் சமூகத்தின்பால் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனே உங்களின் தந்தை ஆதமை பூமியின் மண்ணிலிருந்து படைத்ததன் மூலம் உங்களை மண்ணிலிருந்து படைத்தான். உங்களை அதில் வசிப்போராக்கினான். எனவே அவனிடமே மன்னிப்பைக் கோருங்கள். பின்பு நற்காரியங்கள் செய்து தீமைகளைத் தவிர்த்து அவனிடமே மீண்டுவாருங்கள். நிச்சயமாக என் இறைவன் அவனை மட்டுமே வணங்கக்கூடியவர்களுக்கு நெருக்கமானவனாகவும் அவனிடம் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.

(62) 11.62. அவருடைய சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “ஸாலிஹே! உமது இந்த அழைப்பிற்கு முன்னால் எங்களிடையே உயர்ந்த அந்தஸ்தை நீர் பெற்றிருந்தீர். நீர் உபதேசம் செய்து, ஆலோசனை வழங்கும் அறிவாளியாக, வருவீர் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். -ஸாலிஹே!- எங்கள் முன்னோர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்று நீர் அழைக்கும் விஷயத்தில் நீர் அல்லாஹ்வின் மீது பொய் கூறுவதாக உம்மைச் சந்தேகிக்கும் அளவுக்கு, நிச்சயமாக நாங்கள் சந்தேகத்தில் இருக்கின்றோம்.”

(63) 11.63. ஸாலிஹ் தம் சமூகத்தாரிடம் மறுத்தவராக கூறினார்: “என் சமூகமே! நான் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீதிருந்து, அவன் எனக்கு தூதுத்துவம் என்னும் அருளையும் வழங்கியிருக்க, அவன் எனக்கு எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை விட்டுவிட்டு அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னை யார்தான் காப்பாற்ற முடியும்? நீங்கள் எனக்கு வழிகேட்டையும் அவனது திருப்பொருத்தத்தை விட்டும் விலகிச் செல்வதையே அதிகரிக்கிறீர்கள்.

(64) 11.64. என் சமூகமே! இது என்னுடைய நம்பகத் தன்மைக்கு சான்றான அல்லாஹ் அனுப்பிய பெண் ஒட்டகமாகும். அல்லாஹ்வின் பூமியில் அதனை மேய விட்டு விடுங்கள். அதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்திவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதனைக் கொன்று சிறிது நேரத்தில் வேதனை உங்களைத் தாக்கி விடும்.

(65) 11.65. நிராகரிப்பில் மிகைத்துச் சென்று அந்த ஒட்டகத்தைக் கொன்றார்கள். ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் ஒட்டகத்தைக் கொன்றதிலிருந்து மூன்று நாட்களுக்கு உங்களது இடத்தில் வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் அல்லாஹ்வின் வேதனை நிச்சயமாக உங்களைத் தாக்கியே தீரும். அதற்குப் பின் வேதனை வருவது நிகழ்ந்தேறும் வாக்குறுதி அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அது பொய்யுமல்ல. மாறாக அது உண்மையான எச்சரிக்கையாகும்.”

(66) 11.66. அவர்களை அழிக்குமாறு நமது நம்முடைய கட்டளை வந்த போது நாம் ஸாலிஹையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் காப்பாற்றினோம். அந்த நாளின் இழிவு, அவமானத்திலிருந்து அவர்களைப் பாதுகாத்தோம். -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் மிகைத்த வல்லமை மிக்கவனாக இருக்கின்றான். அவனை யாராலும் மிகைத்துவிட முடியாது. எனவேதான் அவன் பொய்ப்பித்த சமூகங்களை அழித்து விட்டான்.

(67) 11.67. அழிவை உண்டாக்கும் ஒரு பயங்கர சப்தம் சமூத் கூட்டத்தாரை தாக்கியது. அதன் பயங்கரத்தால் அவர்கள் செத்துமடிந்தார்கள். அவர்களின் முகங்களில் மண் ஒட்டி முகங்குப்புற வீழ்ந்துகிடந்தார்கள்.

(68) 11.68. அவர்கள் தங்களின் ஊர்களில் செல்வச் செழிப்போடு வசிக்காதவர்களைப் போன்று ஆகிவிட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள், ஸமூத் சமூகம் தங்கள் இறைவனை நிராகரித்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

(69) 11.69. வானவர்கள் மனித உருவில் இப்ராஹீமிடம் வந்து அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இஸ்ஹாக் என்னும் மகன் பிறப்பான் என்றும் பின்னர் யஅகூப் என்னும் மகன் பிறப்பான் என்றும் நற்செய்தி கூறினார்கள். வானவர்கள் அவருக்கு சலாம் கூறினார்கள். அவரும் சலாமுக்குப் பதிலளித்து விட்டு, விரைவாகச் சென்று அவர்களை மனிதர்கள் என்று எண்ணி அவர்கள் உண்பதற்காக பொரித்த காளைக்கன்றைக் கொண்டுவந்தார்.

(70) 11.70. அவர்களின் கைகள் காளைக் கன்றின் மாமிசத்தின்பால் செல்லாததையும் அவர்கள் சாப்பிட மறுத்ததையும் இப்ராஹீம் கண்டு ஐயமுற்று அவர் மனதில் அவர்களைக் குறித்த பயத்தை மறைத்துக் கொண்டார். அவருடைய பயத்தை உணர்ந்த வானவர்கள் அவரிடம், “பயப்படாதீர். நாங்கள் லூத்தின் சமூகத்தைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் எம்மை அவர்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.

(71) 11.71. இப்ராஹீமின் மனைவி சாரா நின்று கொண்டிருந்தார். நாம் சாராவுக்கு இஸ்ஹாக் என்னும் மகன் பிறப்பான் என்றும் இஸ்ஹாக்கிற்கு யஅகூப் என்னும் மகன் பிறப்பான் என்ற மகிழ்வூட்டும் நற்செய்தியை கூறினோம். அவள் சிரித்தாள். தாம் செவியுற்றதைக் கொண்டு மகிழச்சியடைந்தாள்.

(72) 11.72. வானவர்கள் சாராவுக்கு நற்செய்தி கூறியபோது ஆச்சரியமாகக் கேட்டாள்: “நான் எவ்வாறு குழந்தை பெறுவேன்? நானோ பிள்ளை பெறுவதை நிராசையடைந்த கிழவியாக இருக்கின்றேன். என் கணவரும் வயது முதிர்ந்தவராக இருக்கின்றாரே?! இந்நிலையில் பிள்ளை பெறுவது வழக்கத்திற்கு மாறான, மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான்.”

(73) 11.73. நற்செய்தியால் ஆச்சரியமடைந்த சாராவிடம் வானவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் விதியை எண்ணியா ஆச்சரியமடைகின்றீர்? உம்மைப்போன்றவர்கள் அல்லாஹ் இதற்கு சக்தியுடையவன் என்பதை அறியாமல் இல்லை. இப்ராஹீமின் குடும்பத்தாரே! உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் பாக்கியமும் இருக்கின்றது. தன் பண்புகளிலும் செயல்களிலும் அல்லாஹ் புகழுக்குரியவன், உயர்ந்த கண்ணியத்திற்குரியவன்.

(74) 11.74. விருந்தினர்கள் உணவை உண்ணாததால் ஏற்பட்ட அச்சம் அவர்கள் வானவர்கள் என்பதை அறிந்த பிறகு நீங்கி, சாராவுக்கு இஸ்ஹாக் என்னும் மகன் பிறப்பான் பின்னர் இஸ்ஹாக்கிற்கு யஅகூப் என்னும் மகன் பிறப்பான் என்ற நற்செய்தியைக் கேட்ட பிறகு அவர் நம்முடைய தூதர்களுடன் லூத்தின் சமூகத்தைக் குறித்து வேதனையைப் பிற்படுத்த வேண்டியும் லூத்தையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டியும் விவாதிக்கத் தொடங்கிவிட்டார்.

(75) 11.75. நிச்சயமாக இப்ராஹீம் நிதானமானவர். தண்டனையைத் தாமதப்படுத்த விரும்புகிறார். அவர் அல்லாஹ்விடம் அதிகம் மன்றாடக்கூடியவராகவும், அதிகம் பிரார்த்தனை செய்யக்கூடியவராகவும், அவன் பக்கமே திரும்பக்கூடியவராகவும் உள்ளார்.

(76) 11.76. வானவர்கள் கூறினார்கள்: “இப்ராஹீமே! லூத்தின் சமூகத்தைக் குறித்து விவாதிப்பதை விட்டு விடுவீராக. உம் இறைவன் அவர்கள் மீது விதித்த வேதனையை நிறைவேற்றுமாறு அவனுடைய கட்டளை வந்து விட்டது. பயங்கர வேதனை லூத்தின் சமூகத்தைத் தாக்கியே தீரும். விவாதமோ பிரார்த்தனையோ அதனைத் தடுத்துவிட முடியாது.

(77) 11.77. வானவர்கள் லூத்திடம் மனித உருவில் வந்த போது அவர்களின் வருகை அவருக்கு கவலையூட்டியது. பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் தங்களின் காம இச்சையைத் தணித்துக் கொள்ளும் தம் சமூகத்தினர் மீது உள்ள அச்சத்தினால் அவருடைய உள்ளம் நெருக்கடிக்குள்ளாகியது. தன் சமூகம் தனது விருந்தினர் மீதும் அத்துமீறிவிடுவார்கள் என்ற எண்ணத்தால் அவர் கூறினார், “இது மிகவும் கடினமான நாளாகும்.”

(78) 11.78. லூத்தின் சமூகத்தார் அவருடைய விருந்தினருடன் மானக்கேடான காரியத்தை செய்ய நாடி அவரிடம் விரைந்து வந்தார்கள். அவர்கள் இதற்கு முன்னர் தங்களின் காம இச்சையைத் தணித்துக் கொள்வதற்காக பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் செல்வதே அவர்களது வழமையாக இருந்தது. லூத் அவர்களைத் தடுத்தவராகவும் விருந்தினருக்கு முன் தன் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தியவராகவும் கூறினார்: “என் சமூகமே! இவர்கள் என் பெண் பிள்ளைகள். எனவே இவர்களை மணமுடித்து உங்களின் இச்சையைத் தணித்துக் கொள்ளுங்கள். மானக்கேடான செயல்களைச் செய்வதைக்காட்டிலும் இவர்களே உங்களுக்குத் தூய்மையானவர்கள். எனவே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். என் விருந்தினர்கள் விஷயத்தில் என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள். -சமூகமே!- உங்களில் இந்த செயலை விட்டும் தடுக்கக்கூடிய நேர்மையான ஒருவரேனும் இல்லையா?

(79) 11.79. அவருடைய சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: -“லூத்தே!- உமது பெண் பிள்ளைகள் மற்றும் எமது சமூகத்துப் பெண்களிடம் எங்களுக்கு எந்த தேவையும் இச்சையும் இல்லை என்பதை நீர் அறிவீர். நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர். எமக்கு ஆண்கள்தான் வேண்டும்.”

(80) 11.80. லூத் கூறினார்: “அந்தோ! உங்களைத் தடுக்கும் அளவுக்கும் எனக்கு பலம் இருக்கக் கூடாதா? அல்லது என்னைப் பாதுகாக்கும் குடும்பம் இருக்கக் கூடாதா? அவ்வாறு இருந்தால் நான் உங்களுக்கும் என் விருந்தினருக்குமிடையே தடையாக ஆகியிருப்பேனே?”

(81) 11.81. வானவர்கள் லூத்திடம் கூறினார்கள்: “லூத்தே! நாங்கள் அல்லாஹ் அனுப்பிய தூதர்களாவோம். உம் சமூகத்தினர் உமக்கு எந்த தீங்கும் இழைத்துவிட முடியாது உம் குடும்பத்தினருடன் இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் இந்த ஊரிலிருந்து வெளியேறிவிடுவீராக. உங்களில் யாரும் பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாது. ஆயினும் உம் மனைவியைத் தவிர அவள் கட்டளைக்கு மாறாக திரும்பிப் பார்ப்பாள். உம் சமூகத்தைத் தாக்கும் அதே வேதனை அவளையும் தாக்கும். அவர்களை அழிக்கும் நேரம் அதிகாலையாகும். அது அருகில்தான் உள்ளது.

(82) 11.82. லூதுடைய சமூகத்தை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்த போது அவர்களின் ஊர்களைத் உயர்த்தி தலைகீழாகப் புரட்டி மாற்றி விட்டோம். வரிசையாக அடுக்கப்பட்ட சுட்ட களிமண் கற்களை அவர்கள் மீது தொடர்ந்து பொழியச் செய்தோம்.

(83) 11.83. அந்த கற்கள் அல்லாஹ்வினால் பிரத்யேக அடையாளமிடப்பட்ட கற்களாகும். அந்த கற்கள் குறைஷிகள் மற்றும் இன்னபிற அநியாயக்காரர்களை விட்டும் தூரமாக இல்லை. மாறாக அது அண்மையிலேயே உள்ளது. அல்லாஹ் அதனை எப்பொழுது அவர்கள் மீது இறக்க நாடுவானோ அப்போது இறங்கி விடும்.

(84) 11.84. மத்யனை நோக்கி அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. மக்களுக்காக நிறுத்தால் அல்லது எடைபோட்டால் நிறுவையையும் அளவையையும் குறைத்து விடாதீர்கள். உங்களுக்கு விசாலமான வாழ்வாதாரமும் அருட்கொடைகளும் வழங்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். பாவங்களின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மாற்றிவிடாதீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் அடையும், சூழ்ந்துகொள்ளும் நாளின் வேதனையை அஞ்சுகிறேன். அதிலிருந்து நீங்கள் எங்கும் தப்பி ஓட முடியாது. ஒதுங்கும் இடத்தை பெற்றுக்கொள்ளவும் முடியாது”

(85) 11.85. சமூகமே! நீங்கள் மற்றவர்களுக்கு அளந்து கொடுத்தால் அல்லது நிறுத்துக் கொடுத்தால் அளவையையும் நிறுவையையும் நியாயமாக முழுமைப்படுத்துங்கள். அளவை நிறுவையில் குறைசெய்தல், ஏமாற்றுதல், மோசடிசெய்தல் ஆகியவற்றினால் மக்களின் உரிமைகளில் எதனையும் குறைத்துவிடாதீர்கள். கொலை மற்றும் இன்னபிற பாவங்களின் மூலம் உலகில் குழப்பம் விளைவிக்காதீர்கள்.

(86) 11.86. மோசடி செய்து, பூமியில் குழப்பம் விளைவித்து பெறும் செல்வத்தைவிட மக்களுக்கு நியாயமாக அளிக்க வேண்டியதை அளித்த பிறகு மிஞ்சியிருக்கும் செல்வமே அதிகம் பயனளிக்கக்கூடியது; பெருகக்கூடியது. நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் மீதமுள்ளதைக் கொண்டு திருப்தியடையுங்கள். நான் உங்களின் செயல்களைக் கணக்கிட்டு உங்களைக் கண்காணிப்பவன் அல்ல. மறைவானதையும் இரகசியமானதையும் அறிந்தவனே உங்களின் கண்காணிப்பாளன் ஆவான்.

(87) 11.87. ஷுஐபின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “ஷுஐபே! நீர் அல்லாஹ்வுக்காக தொழும் தொழுகையா, எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்த சிலைகளை வணங்குவதையும், எங்களின் செல்வங்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும், அவற்றைப் பெருக்குவதையும் நாம் விட்டுவிட வேண்டும் என்று உம்மை சொல்லத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர் அறிவாளியாகவும் விவரம் உள்ளவராகவும் இருக்கின்றீர். இந்த அழைப்பிற்கு முன்னர் உம்மை நாங்கள் அறிவாளியாகத்தானே அறிந்துள்ளோம். உமக்கு என்னவாயிற்று?

(88) 11.88. ஷுஐப் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: -“சமூகமே!- நான் என் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரத்தையும் அகப்பார்வையையும் பெற்றிருந்து அவன் எனக்கு தூதுத்துவம் என்னும் தூய்மையான அருட்கொடையையும் வழங்கியிருந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை எனக்குக் கூறுங்கள். நான் உங்களை ஒரு விஷயத்தை விட்டும் தடுத்து விட்டு அதற்கு மாறாக செயல்பட விரும்பவில்லை. உங்கள் இறைவனான அல்லாஹ் ஒருவனின் பக்கம் உங்களை அழைப்பதன் மூலம் என்னால் இயன்றவரை நான் உங்களை சீர்திருத்தம் செய்வதையே விரும்புகிறேன். அல்லாஹ்வே அதற்கான பாக்கியம் அளிக்க முடியும். என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே நான் சார்ந்துள்ளேன். அவன் பக்கமே நான் திரும்ப வேண்டும்.

(89) 11.89. சமூகமே! என் மீதுள்ள வெறுப்பு நான் கொண்டுவந்ததை நிராகரிக்கும்படி உங்களைத் தூண்ட வேண்டாம். நூஹின் சமூகம் அல்லது ஹூத் உடைய சமூகம் அல்லது ஸாலிஹ் உடைய சமூகம் ஆகியோர் மீது ஏற்பட்ட வேதனையைப் போன்று உங்கள் மீதும் வேதனை ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். லூத்தின் சமூகம் காலத்திலும் இடத்திலும் உங்களைவிட்டும் தூரமாக இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். எனவே படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள்.

(90) 11.90. உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். உங்கள் பாவங்களிலிருந்து அவன் பக்கமே திரும்புங்கள். என் இறைவன் தன் பக்கம் திரும்பக்கூடியவர்களின் மீது மிகுந்த கருணையாளனாகவும், அன்பானவனாகவும் இருக்கின்றான்.

(91) 11.91. ஷுஐபின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “ஷுஐபே! நீர் கொண்டு வந்தவற்றில் பெரும்பாலானவை எங்களுக்குப் புரிவதில்லை. உமது கண் பார்வையில் ஏற்பட்ட பலவீனம் அல்லது குருட்டுத் தன்மை ஆகியவற்றால் எங்களில் பலவீனமுற்றவராகவே நாங்கள் உம்மைக் காண்கிறோம். உம் குலத்தினர் மட்டும் எங்களின் மார்க்கத்தில் இல்லையென்றால் உம்மைக் கல்லால் அடித்துக் கொன்றிருப்போம். நாங்கள் உம்மைக் கொலை செய்வதை அஞ்சுமளவுக்கு நீர் ஒன்றும் பலமானவரும் அல்ல. உம் குலத்தார் மீதுள்ள கண்ணியத்தினால்தான் நாங்கள் கொல்லாமல் உம்மை விட்டுவைத்துள்ளோம்.

(92) 11.92. ஷுஐப் தனது சமூகத்திடம் கூறினார்: “சமூகமே! உங்கள் இறைவனான அல்லாஹ்வை விட என் குலத்தார்தான் உங்களிடம் கண்ணியமானவர்களா? நீங்கள் அல்லாஹ் அனுப்பிய தூதர் மீது நம்பிக்கை கொள்ளாமல் அவனைப் புறக்கணித்துவிட்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்பவற்றை சூழ்ந்துள்ளான். நீங்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. இவ்வுலகில் உங்களை அழிப்பதன் மூலமும் மறுமையில் வேதனைக்குட்படுத்துவதன் மூலம் அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.”

(93) 11.93. சமூகமே! நீங்கள் விரும்பும் வழியில் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் விரும்பும் வழியில் என்னால் இயன்றதைச் நானும் செய்வேன். இழிவுபடுத்தக்கூடிய வேதனை தண்டனையாக யார்மீது இறங்கும் என்பதையும் நம்மில் யார் தனது கூற்றில் பொய்யர் என்பதையும் நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

(94) 11.94. ஷுஐபுடைய சமுதாயத்தை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்தபோது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் நாம் காப்பாற்றினோம். அவர்களின் சமூகத்திலுள்ள அநியாயக்காரர்களை அழிவை ஏற்படுத்தும் பயங்கர சப்தம் தாக்கியது.உடனே அவர்கள் செத்துமடிந்தார்கள். முகங்குப்புற தமது முகங்களில் மண் ஒட்டுமளவு வீழ்ந்து கிடந்தார்கள்.

(95) 11.95. அவர்கள் இதற்கு முன்னர் அங்கு வசிக்காதவர்களைப்போல் ஆகிவிட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள், ஸமூத் சமூகத்தினர் மீது இறைவனின் கோபத்தை இறக்கி அல்லாஹ்வின் அருளை விட்டு தூரமாக்கப்பட்டது போன்று மத்யன்வாசிகளும் அவனது கோபம் இறங்கி அல்லாஹ்வின் அருளை விட்டு தூரமாக்கப்பட்டு விட்டார்கள்.

(96) 11.96. மூஸாவை அல்லாஹ் ஒருவனே என்பதை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான சான்றுகளையும் அவர் கொண்டு வந்தது உண்மையே என்பதற்கான ஆதாரங்களையும் அளித்து நாம் அனுப்பினோம்.

(97) 11.97. அவரை பிர்அவ்னிடமும் அவன் சமூகத்துப் பெரியவர்களிடமும் அனுப்பினோம். இந்த பெரியவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து பிர்அவ்னின் கட்டளையைப் பின்பற்றினார்கள். பிர்அவ்னின் கட்டளை பின்பற்றதக்களவு நேர்மையானதல்ல.

(98) 11.98. மறுமை நாளில் பிர்அவன் தன் சமூகத்தை வழிநடத்தி தன்னையும் அவர்களையும் நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். அவன் அவர்களைக் கொண்டுபோய் சேர்த்த இடம் மோசமானது.

(99) 11.99. அல்லாஹ் அவர்களை இவ்வுலகில் மூழ்கடித்து அழித்ததுடன் தன் அருளை விட்டும் அவர்களைத் தூரமாக்கி விட்டான். மறுமை நாளிலும் அவர்கள் அவனுடைய அருளை விட்டும் தூரமாக்கப்படுவார்கள். இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களுக்குக் கிடைத்த சாபமும் வேதனையும் மிகவும் மோசமானதாகும்.

(100) 11.100. -தூதரே!- நாம் இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கப்பட்ட சமூகங்களின் அந்த செய்திகளை நாமே உமக்கு அறிவிக்கிறோம் அவற்றுள் சிலவற்றின் அடையாளங்கள் நிலைத்திருக்கின்றன. சிலவற்றின் அடையாளங்கள் எவ்வித தடையமுமின்றி அழிந்து விட்டன.

(101) 11.101. நாம் அவர்களுக்கு அளித்த தண்டனையின் மூலம் அவர்கள் மீது நாம் அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள். -தூதரே- அவர்களை அழிக்குமாறு அல்லாஹ்வின் கட்டளை வந்த போது அவர்கள் மீது இறங்கிய தண்டனையை அவனை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்கள் எதுவும் அவர்களை விட்டும் தடுக்கவில்லை. இந்த தெய்வங்கள் அவர்களுக்கு நஷ்டத்தையும் அழிவையுமே அதிகப்படுத்தின.

(102) 11.102. எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் மறுக்கும் சமூகங்களைப் பிடிக்கும் அல்லாஹ்வின் பிடி அவ்வாறுதான் இருக்கும். நிச்சயமாக அநியாயக்கார ஊர்களை அல்லாஹ் பிடிக்கும் பிடி நோவினை மிக்க பலமான பிடியாகும்.

(103) 11.103. நிச்சயமாக அநியாயக்கார அந்த ஊர்களை அல்லாஹ் கடுமையாகப் பிடித்ததில் மறுமை நாளின் வேதனையை அஞ்சக்கூடியவர்களுக்கு படிப்பினையும் அறிவுரையும் அடங்கியுள்ளன. அந்த நாள் மனிதர்கள் அனைவரையும் விசாரணை செய்வதற்காக அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளாகும். அது மஹ்ஷர்வாசிகள் சமூகமளிக்கும் ஒரு நாளாகும்.

(104) 11.104. சமூகமளிக்கும் அந்த நாளை எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட தவணைக்காகவே நாம் தாமதப்படுத்துகிறோம்.

(105) 11.105. அந்த நாள் வரும் போது எவரும் அவனுடைய அனுமதியின்றி ஆதாரத்துடன் பேசவோ அல்லது பரிந்துரை செய்யவோ முடியாது. அப்போது மனிதர்கள் இரு வகையினராக இருப்பார்கள். (முதல் வகையினர்), நரகத்திற்குச் செல்லும் துர்பாக்கியசாலிகள். (இரண்டாவது வகையினர்), சுவனத்திற்குச் செல்லும் பாக்கியசாலிகள்.

(106) 11.106. நிராகரிப்பினாலும் தீய செயல்களினாலும் துர்பாக்கியம் அடைந்தவர்கள் நரகத்தில் நுழைவார்கள். அதில் அவர்களை பீடிக்கும் சுவாலையின் அகோரம் தாங்க முடியாமல் அவர்களின் சப்தங்களும் மூச்சுகளும் உயர்ந்து விடும்.

(107) 11.107. அவர்கள் அங்கு நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாது. அல்லாஹ் நாடினால் ஓரிறைக் கொள்கையில் நிலைத்திருந்து பாவம் செய்தவர்களைத் தவிர. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்யக்கூடியவன். யாரும் அவனை நிர்ப்பந்திக்க முடியாது.

(108) 11.108. நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்து அல்லாஹ்வின் அருளைப் பெற்ற பாக்கியசாலிகள் வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை சுவனத்தில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். சுவனம் நுழைய முன் விசுவாசிகளிலுள்ள பாவிகளில் நரகம் நுழைய வேண்டும் என அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. நிச்சயமாக சுவனவாசிகளுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் முடிவே இல்லாதது.

(109) 11.109. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்கள் வணங்குவது தீயது என்பதில் சந்தேகம் கொண்டு விடாதீர். அது சரியானது என்பதற்கு அவர்களிடம் மார்க்க ரீதியான, அறிவு பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. தங்கள் முன்னோர்களை குருட்டுத்தனமாக பின்பற்றுவதே அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதற்கான காரணமாகும். நாம் அவர்களுக்கு அளிக்கும் வேதனையின் பங்கை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவோம்.

(110) 11.110. நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். மக்கள் அதில் முரண்பட்டார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் நிராகரித்தார்கள். உடனுக்குடன் அல்லாஹ் தண்டிக்க மாட்டான்; மாறாக மறுமை நாள் வரை ஒரு நோக்கத்தோடு வேதனையைத் தாமதப்படுத்துவான் என்ற அவனுடைய விதி முந்தியிராவிட்டால் இவ்வுலகில் அவர்களுக்குத் தக்க தண்டனையை அவன் வழங்கியிருப்பான். நிச்சயமாக நிராகரிப்பாளர்களான யூதர்களும் இணைவைப்பாளர்களும் குர்ஆனைக் குறித்து கடும் சந்தேகத்திலே உள்ளனர்.

(111) 11.111. -தூதரே!- முரண்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய செயல்களுக்கான கூலியை உம் இறைவன் முழுமையாக வழங்கிடுவான். அவர்கள் நன்மை செய்திருந்தால் அவர்களுக்கு நற்கூலி வழங்கப்படும். தீமை செய்திருந்தால் அதற்கான தண்டனையைப் பெறுவார்கள். அவர்கள் செய்யும் துல்லியமானவற்றையும் அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

(112) 11.112. -தூதரே!- அல்லாஹ் உமக்குக் கட்டளையிட்டபடி நேரான பாதையை பின்பற்றுவதில் உறுதியாக இருப்பீராக. அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்தவற்றிலிருந்து விலகியிருப்பீராக. உம்முடன் தவ்பா செய்த நம்பிக்கை கொண்டவர்களும் நிலைத்திருக்கட்டும். பாவங்கள் புரிந்து வரம்பு மீறிவிடாதீர்கள். நீங்கள் செய்யக்கூடியவற்றை அவன் பார்ப்பவனாக இருக்கின்றான். உங்களின் செயல்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

(113) 11.113. அநியாயக்காரர்களின் பக்கம் அவர்களுக்கு விட்டுக்கொடுத்தோ அவர்களுடன் நட்புகொண்டோ சாய்ந்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் நரக நெருப்பு உங்களைத் தாக்கி விடும். அதிலிருந்து அல்லாஹ்வைத் தவிர உங்களைப் பாதுகாக்கும் பாதுகாவலன் யாரும் இல்லை. பின்னர் உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

(114) 11.114. -தூதரே!- பகலின் ஆரம்பம் முடிவு ஆகிய இரு ஓரங்களிலும் இரவு நேரங்களிலும் தொழுகையை சிறந்த முறையில் நிறைவேற்றுவீராக. நிச்சயமாக நற்செயல்கள் சிறிய பாவங்களைப் போக்கி விடுகின்றன. மேற்கூறப்பட்ட விஷயங்கள் அறிவுரை பெறக்கூடியவர்களுக்கு அறிவுரையாகவும் படிப்பினை பெறக்கூடியவர்களுக்கு படிப்பினையாகவும் இருக்கின்றது.

(115) 11.115. உமக்கு கட்டளையிடப்பட்ட நிலைத்திருத்தல் மற்றும் ஏனையவற்றை நிறைவேற்றுவதிலும் வரம்பு மீறல் அநியாயக்காரர்களின் பக்கம் சாய்தல் ஆகிய தடுக்கப்பட்டவற்றை விட்டுத் தவிர்ந்திருப்பதிலும் பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை ஒருபோதும் வீணாக்குவதில்லை. மாறாக அவர்களின் செயல்களில் சிறந்தவற்றை ஏற்றுக் கொள்கிறான். அவர்கள் செய்தவற்றில் சிறந்தவற்றுக்கான கூலியை அளித்துவிடுகிறான்.

(116) 11.116. உங்களுக்கு முன்னர் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட சமூகங்களிலுள்ள நல்லவர்கள் தங்களின் சமூகங்களை நிராகரிப்பை விட்டும் பாவங்கள் மூலம் பூமியில் குழப்பம் செய்வதை விட்டும் தடுத்திருக்க வேண்டாமா? அவர்களில் குறைவானவர்களே குழப்பம் செய்வதை விட்டும் மக்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அவர்களது அநியாயக்கார சமூகங்களை நாம் அழித்த போது காப்பாற்றினோம். அவர்களின் சமூகங்களிலுள்ள அநியாயக்காரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆடம்பர வாழ்வில் திளைத்திருந்தார்கள். அவர்களது அந்தப் பின்பற்றுதலால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.

(117) 11.117. -தூதரே!- உம் இறைவன் எந்த ஊரையும் அங்கு வசிப்பவர்கள் பூமியில் சீர்திருத்தம் செய்பவர்களாக இருக்கும் நிலையில் அழித்துவிட மாட்டான். நிராகரிப்பு, அநியாயம் மற்றும் பாவங்களின் மூலம் குழப்பம் விளைவிக்கக்கூடியவர்கள் உள்ள ஊர்களையே அவன் அழிக்கிறான்.

(118) 11.118. -தூதரே!- உம் இறைவன் மக்கள் அனைவரையும் சத்தியத்தின் மீது நிலைத்திருக்கும் ஒரு சமூகமாக ஆக்க நாடியிருந்தால் அவன் ஆக்கியிருப்பான். ஆயினும் அவன் அவ்வாறு நாடவில்லை. மன இச்சையைப் பின்பற்றுவதனாலும் அநியாயம் செய்வதனாலும் அவர்கள் எப்போதும் அதில் முரண்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

(119) 11.119. ஆயினும் நேர்வழியை அடைவதற்கு உம் இறைவன் கருணை காட்டியோரைத் தவிர. அவர்கள் அவனை ஒருமைப்படுத்துவதில் முரண்பட மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளைக் கொண்ட இந்த சோதனைக்காகவே அவன் அவர்களைப் படைத்துள்ளான். அவர்களில் துர்பாக்கியசாலிகளும், பாக்கியசாலிகளும் இருக்கிறார்கள். -தூதரே!- மனித, ஜின் இனத்தில் ஷைத்தான்களைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு நான் நரகத்தை நிரப்புவேன் என்று உம் இறைவன் ஆரம்பத்திலே விதித்த அவனுடைய வார்த்தை நிறைவேறி விட்டது.

(120) 11.120. -தூதரே!- உமக்கு முன்னர் வாழ்ந்த தூதர்களின் செய்திகளில் நாம் உமக்கு எடுத்துரைக்கும் ஒவ்வொரு செய்தியையும் உமது உள்ளத்தை சத்தியத்தின் மீது உறுதிப்படுத்தவே கூறுகிறோம். இந்த அத்தியாயத்தில் சந்தேகமற்ற சத்தியமும் நிராகரிப்பாளர்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலைக் கொண்டு பயனடையும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டலும் உம்மிடம் வந்துள்ளது.

(121) 11.121. -தூதரே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாத அவனை ஒருமைப்படுத்தாதவர்களிடம் நீர் கூறுவீராக: “சத்தியத்தைப் புறக்கணித்து அதனை விட்டும் தடுக்கும் உங்களின் வழியில் நீங்கள் செயல்படுங்கள். சத்தியத்தில் உறுதியாக இருந்து அதன்பால் மக்களை அழைத்து அதில் பொறுமையாக இருந்து நாங்களும் எங்களின் வழியில் செயல்படுகிறோம்.

(122) 11.122. எங்கள் மீது இறங்கக் கூடியதை நீங்கள் எதிர்பாருங்கள். உங்கள் மீது இறங்கக் கூடியதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

(123) 11.123. வானங்களிலும் பூமியிலும் மறைவாக இருப்பவற்றின் அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவற்றில் எதுவும் அவனை விட்டும் மறைவதில்லை. மறுமை நாளில் அவன் பக்கமே அனைத்து விவகாரங்களும் திரும்பும். எனவே -தூதரே!- அவனை மட்டுமே வணங்குவீராக. உமது எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்திருப்பீராக. நீங்கள் செய்பவற்றை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவற்றை அவன் நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் கூலி வழங்குவான்.